ரகசியக் கடிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2024
பார்வையிட்டோர்: 429 
 
 

டாக்டர் அருங்குணம் வைத்தியத் தொழிலில் ஈடுபட்டு முப்பது வருஷங்களுக்கு மேலாகிவிட்டன.

அருங்குணம் இதற்குள்ளாக எவ்வளவோ கேஸுகளைப் பார்த்திருக்கிறார். எத்தனையோ வியாதியஸ்தர்களைக் கண்டிருக்கிறார். எத்தனையோ புதுப்புது வியாதிகளுக்கு மருந்து கொடுத்திருக்கிறார். எத்தனையோ பேர்களை மோட்ச லோகத்துக்கும் அனுப்பி யிருக்கிறார்! ஆனாலும் அன்று காலையில் வந்த அதிசயமான கேஸைப்போல் அவர் முன்பின் கண்டதில்லை. அருங்குணம் அன்று படுக்கையை விட்டு எழுந்திருக்கு முன்பே யாரோ வாசலில் கதவைத் ’தடார், தடீர்’ என்று தட்டும் சத்தம் கேட்டது. வேறொரு டாக்டராயிருந்தால் அப்படிக் கதவைத் தட்டியவருடைய மண்டையைப் பிளந்து உடனே கட்டுப் போட்டும் அனுப்பியிருப்பார். ஆனால் அருங்குணத்தின் அருமையான குணங்களில் பொறுமைக் குணம் தலை தூக்கி நின்றது. நிதானமாக எழுந்து போய் வாசல் கதவைத் திறந்தார். வெளியே ஒரு இளம் வாலிபன் நின்று கொண்டிருந்தான். அவன் முகத்திலே பரபரப்பும் பீதியும் காணப்பட்டன. பார்த்தால் வியாதிக்காரனைப் போல் தோன்றவில்லை. ஆனால் முழங்கை வரை கட்டுப் போட்டுக் கழுத்திலே சேர்த்துக் கட்டி வைத்திருந்தான்.

பார்வைக்கு லட்சணமாயும் பெருந்தன்மையாகவும் செல்வந்தர் வீட்டுப் பிள்ளையைப் போலும் காணப்பட்டான்.

“யாரப்பா நீ?” என்று கேட்டார் டாக்டர்.

“டாக்டர்! இதோ பாருங்கள் ! என் ஊர் பேர் முதலிய விவரங்களைச் சொல்லுவதற்கு முன்னால் என் வியாதியைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். அதற்குச் சிகிச்சை செய்த பிறகு என் விவரங்களைச் சாவகாசமாகச் சொல்லிக் கொள்ளலாம். இந்த வலது கையிலே மணிக்கட்டுக்கு மேல் எப்போதும் நெருப்பு மாதிரி எரிகிறது. ஆனால் அது என்ன வியாதி என்று மட்டும் தெரியவில்லை. தூங்கி ஒரு வாரம் ஆகிறது; அவஸ்தை பிராணாவஸ்தையா யிருக்கிறது. நிமிஷத்துக்கு நிமிஷம் வலி அதிகமாகிக்கொண்டே போகிறது. இன்னும் அரை மணி நேரத்துக்குள் ஆபரேஷன் செய்யாவிட்டால் என் பாடு ஆபத்தாய் முடியும். தாங்கள் தயவு செய்து உடனே இதைக் கவனிக்க வேண் டும்” என்று பதறினான் வாலிபன்.

டாக்டர் சற்றுத் தயங்கிவிட்டு வாலிபன் கையிலிருந்த கட்டை அவிழ்க்கலானார்.

“டாக்டர் ஸார்! கட்டைப் பிரித்தீர்களானால் ஆச்சரியமாயிருக்கும். காயம் ஒன்றும் கண்ணுக்குப் புலப்படாது” என்று கூறினான் வாலிபன்.

கட்டைப் பிரித்துப் பார்த்தபோது வாலிபன் சொன்னபடி காயம், அடி ஒன்றையுமே காணோம். “எங்கே வலிக்கிறது?” என்று கேட்டார் டாக்டர்.

“மணிக்கட்டுக்கு மேலே!” என்று சொல்லி இடது கை ஆள் காட்டி விரலால் வலிக்கும் இடத் தைச் சுட்டிக் காட்டினான்.

டாக்டர் அழுத்திப் பார்த்தார். வாலிபன் “ஐயோ!” என்று அலறினான்.

“ஒன்றும் தெரியவில்லையே; இடது கையைப் போலத்தானே இருக்கிறது? நரம்பிலும் கோளாறு இல்லை” என்று சொல்லிவிட்டு ‘டெம்பரேச’ரைப் பார்த்தார். ‘நார்மலி’ல் தான் இருந்தது.

ஆனால், வாலிபன் மட்டும் துடித்துக் கொண்டிருந்தான்.

அருங்குணம், பையனுக்கு மூளைக் கோளாறு ஏதாவது இருக்குமோ என்று சந்தேகித்தார்.

இதற்குள் வாலிபன் , “ஸார்! என்னைப் பைத்தியக்காரன் என்று எண்ணாதீர்கள். என்னால் வாஸ்தவமாகவே வலியைப் பொறுக்க முடியவில்லை. எனக்கு வலி இருப்பது உண்மைதான். சட்டென்று ஆபரேஷன் செய்துவிடுங்கள் டாக்டர்!” என்று பல்லைக் கடித்துக் கொண்டு குமுறினான்.

“வியாதி இன்னதென்று பிடிபடாமல் ஆபரேஷன் செய்தால் என்னை யாராவது பைத்தியம் ” என்று சொல்லுவார்கள்; தயவு செய்து தாங்கள் போய் வாருங்கள்!” என்று கூறினார் டாக்டர்.

வாலிபன் சட்டைப் பையிலிருந்து பச்சை நோட்டுகளாக ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து டாக்டரிடம் நீட்டினான்.

அவன் அந்த இடத்தை விட்டுப் போவதாயிருந்தால் டாக்டரே அவனுக்கு ஐந்நூறு ரூபாய் கொடுப்பதற்குத் தயாராக இருந்தார். வாலிபன் விடுவதாயில்லை. அருங்குணம் வேறு வழியின்றி அவன் சொன்ன இடத்தில் ஆபரேஷன் செய்து முடித்தார்.

”இப்போது வலி எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

வாலிபன் போன உயிர் திரும்பி வந்ததுபோல் முகமலர்ச்சியுடன், “வலி அடியோடு போய்விட்டது, டாக்டர்!” என்றான். டாக்டரால் நம்ப முடியவில்லை. இந்த மாதிரி அபூர்வக் கேஸை அவர் தமது ஆயுளில் பார்த்ததில்லை.

ஒரு வாரம் சென்றது. மறுபடியும் அந்த வாலிபன் டாக்டரைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தான்.

“இப்போது எப்படி இருக்கிறது. வலி?” என்று கேட்டார் டாக்டர்.

“மறுபடியும் அதே இடத்தில் முன்னைவிட அதிகமாய் வலிக்கிறது. எனவே, இப்போது தாங்கள் செய்ய வேண்டியது இன்னொரு ஆபரேஷன் தான். முன் தடவை மேலோடு செய்து விட்டீர்கள். அதனால் தான் வலி புனர்ஜன்மம் எடுத்து விட்டது. இந்தத் தடவை ஆழச் செய்து விடுங்கள். குணமாகி விடும்” என்றான்.

வியாதியஸ்தனே தனக்கு ஆபரேஷன் செய்யும் முறை சொல்லிக் கொடுப்பது அருங்குணத் துக்கு அவ்வளவாகப் பிடிக்க வில்லை. இருந்தாலும் கோபம் கொள்ளாமல் ‘ஆகட்டும்’ என்று சொல்லி இரண்டாம் முறையாக ஆபரேஷன் செய்து அனுப்பினார்.

டாக்டரிடம் இந்தத் தடவை வாலிபன் விடை பெற்றுக்கொண்டு போகும் போது சந்தோஷமாகச் செல்ல வில்லை; அவன் முகத்திலே ஆழ்ந்த சோகம் காணப்பட்டது.
டாக்டர் இந்த அபூர்வ அதிசய வியாதியைப் பற்றிப் பல டாக்டர்களிடம் பிரஸ்தாபித்து விவரம் கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பதில் சொன்னார்கள். ஆனால், ஒருவராலும் நிச்சய மாக இன்னதென்று நிர்ணயித்துக் கூற முடிய வில்லை. அந்த விதத்தில் அருங்குணத்துக்குத் திருப்தி தான். தன்னைவிட எந்த டாக்டரும் கெட்டிக்காரன் அல்ல என்று ஏற்பட்டதல்லவா?

ஒரு மாதம் சென்றது; வாலிபன் திரும்பி வரவில்லை. பல மாதங்கள் கழிந்தன; வாலிபன் வரவே யில்லை. ஆனால், ஒரு நாள் அவனுக்குப் பதிலாக அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

சுவரின் மீது ‘ரகசியம்’ என்று சிவப்பு மசியில் எழுதியிருந்தது. அருங்குணம் கவரைப் பிரித்துப் படித்தார். அந்த ரகசியக் கடிதம் வருமாறு:

அன்புள்ள டாக்டர் அவர்களுக்கு,
இந்தக் கடிதம் ரொம்பவும் ரகசியமானது. இதை நான் எழுதுவதற்கு முக்கிய காரணம் நம் இரண்டு பேருடைய கவலையும் தீரவேண்டும் என்பது தான். என் நூதன வியாதியின் மூலகாரணத்தைத் தாங்கள் தெரிந்து கொண்டால் தங்களுடைய கவலை தீர்ந்து போகும். இரண்டாவதாக வெகு காலமாக என்னுடைய ஹிருதய அந்தரங்கத்தில் அமுங்கிக் கிடந்த ஓர் இரசியத்தை யாரிடமாவது வெளிப் படுத்தவில்லை என்றால் என் மண்டை வெடித்து விடும் போல் தோன்றுகிறது. ஆகையால் தங்களிடமே அதைச் சொல்லி விடுகிறேன்.

ஆறு மாதத்துக்கு முன்னால் நான் ரொம்பவும் குதூகலமான வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தேன். என்னை விட உற்சாக புருஷனைத் தாங்கள் அப்போது கண்டிருக்க முடியாது. செல்வத்தில் பிறந்தவனாதலால் எனக்கு எந்தவிதமான குறையும் இருக்க வில்லை. ஒரு வருஷத்துக்கு முன்னால் எனக்குக் கலியாணம் ஆயிற்று. அது காதல் மணம். மெடிகல் காலேஜில் வாசித்துக் கொண்டிருந்த ஓர் அழகிய பெண்ணை நான் காதலித்துக் கலியாணம் செய்து கொண்டேன். காதல் என்றால் பரஸ்பரக் காதல் தான். அவளுடன் மற்றொரு பெண்ணும் காலேஜில் வாசித்துக் கொண் டிருந்தாள். இவளும் அவளும் அத்யந்த சிநேகம் பூண்டு இணை பிரியாமல் இருந்து வந்தார்கள். காலேஜுக்குப் போகும்போதும் வரும்போதும் இருவரும் சேர்ந்து தான் போவார்கள் ; வருவார்கள். நான் அவளைக் கலியாணம் செய்து கொண்ட பிறகும்’ கூட அவர்களுடைய சிநேகம் குறையவில்லை.

ஆறு மாத காலம் எங்களுடைய வாழ்க்கை மிகவும் இன்பகரமாக நடந்தது. அந்த இன்பம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போயிற்று. சமய சந்தர்ப்ப மறிந்து பிரியமான வார்த்தைகள் பேசி மேலும் மேலும் வாழ்க்கைக்கு மெருகு கொடுத்தாள். அவளுடைய குணத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதே யில்லை. கள்ளங் கபடமற்ற இளங் குழந்தை உள்ளம் படைத்தவளாயிருந்தாள். எனக்காக உயிர்த் தியாகமும் செய்யச் சித்தமா யிருந்தாள். அவளுக்கு உற்றார் உறவினர் யாரும் கிடையாது. இந்தப் பரந்த உலகத்தில் காலேஜில் வாசிக்கும் அவளுடைய தோழியும் நானும் தான் அவளுக்குக் கதி.

நிஷ்கபடமான அவளிடம் சந்தேகத்துக்குரிய ஒரு விஷயமும் இருந்தது. அது வேறு ஒன்றுமில்லை ; அடிக்கடி அவள் தன் பெட்டிக்குள்ளே எதையோ வைப்பதும், பிறகு அதைப் பத்திரமாகப் பூட்டிச் சாவியைத் தானே வைத்துக் கொள்ளுவதும் தான் அது. எனக்கு இது மிகவும் ஆச்சரியமா யிருந்தது. ” அப்படி என்னதான் இரகசிய மிருக்கும்?” என்று அறிந்து கொள்ள என் மனம் துடித்தது.

ஒரு நாள் அவள் தன் சிநேகிதியைப் பார்க்கச் சென்றிருந்த போது வாசல் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு அந்தப் பெட்டியைத் திறக்கப் பல மாறு சாவிகள் போட்டுப் பார்த்தேன். பெட்டி திறந்து கொண்டது. துணிமணிகளுக் கெல்லாம் கீழே பரப்பப்பட்டிருந்த காகிதத்துக்கும் அடியில் அந்த இரகசியும் அகப்பட்டது. பத்துப் பதினைந்து கடிதங்களை ஒரு உறையில் போட்டு ரிப்பன் ஒன்றினால் கட்டி வைத்திருந்தது. அவற்றைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு கடிதமும் ஒவ்வொரு தோரணையில் ஆரம்பித்திருந்தது. எல்லாம் காதல் கடிதங்கள் ! இரகசியக் கடிதங்கள் ! ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டு வரும்போது என் இருதயம் விம்மி வெடித்து விடும் போல் இருந்தது. தலையிலே யாரோ நெருப்பை அள்ளிப் போடுவது போலும் இருந்தது. எல்லாவற்றையும் படித்து முடித்ததும் அப்படியே பத்திரமாகக் கட்டிப் பழையபடியே வைத்துப் பூட்டி விட்டேன். சாயந்திரம் அவள் திரும்பி வந்தாள்.

என் இருதயத்திலே. பொங்கிக் கொண்டிருந்த கோபம் கட்டுங் கடங்காமல் – நெருப் பத்தணலாக மாறி. வெளியே வந்து விடும்போல் இருக்குது. அவ்வளவையும் அடக்கிக் கொண்டேன். அந்தக் கப்படக்காரி, மோசக்காரி ஒன்றுமே அறியாதவள் போல் பச்சைக் குழந்தை மாதிரி கொஞ்சிப் பேசினாள். நானும் என் அந்தரங்கத்தில் குமுறிக் கொண்டிருந்த புயலை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். இரவு சாப்பிட்டு முடிந்ததும் ஏதோ படிப்பதைப் போல் பாவனை செய்து கொண்டிருந்தேன். அவள் படுக்கையில் வந்து படுத்துக் கண்ணயர்ந்தாள். எங்கிருந்தோ வந்த தைரியத்தையும் வலிவையும் உபயோகித்து அவள் மென்னியைப் பிடித்து அப்படியே திருகி விட்டேன். அப்போது கூட அவள் வாயைத் திறக்கவில்லை. என்னைப் பரிதாபமாக ஒரு பார்வை பார்த்து விட்டு ஏதோ சொல்ல வாயெடுத்தாள். இதற்குள் அவளுடைய ஜீவன் போய்விட்டது. அவளுடைய தேகத்திலிருந்து தெறித்த ஒரு துளி இரத்தம் என் தை மீது விழுந்தது. இது நடந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டன. அவளுக்கு உற்றார் உறவினர் ஒருவருமே கிடையாதாகையால் அவள் மரணத்தைப் பற்றி யாருமே கவலை கொள்ளவில்லை.

இந்தச் சம்பவம் நடந்த சமயம் அவளுடைய தோழி ஊருக்குப் போயிருந்தாள். ஆறு மாதம் கழித்துச் சமீபத்தில் தான் திரும்பி வந்தாள். என் மனைவி ஏதோ வியாதி காரணமாக இறந்து போனதாக அவளிடம் கூறி விட்டேன். அவள் அடைந்த வருத்தம் கொஞ்ச நஞ்சமில்லை. சிறிது நேரம் அழுது புலம்பிய பிறகு ஒரு அதிர் வெடியைத் தூக்கி என் தலை மீது போட்டாள்.

”தங்களிடம் ஒரு ரகசியம் கூற வேண்டும்” என்று ஆரம்பித்தாள் . ” என்ன?’ என்று ஆவலுடன் கேட்டேன்.

“தங்கள் மனைவியிடம் நான் சில இரகசியக் கடிதங்களைக் கொடுத்து அவளைப் பத்திரமாக வைத்திருக்கும்படிச் சொல்லியிருந்தேன். அவள் என் அந்தரங்கத் தோழியானதால் அவளிடம் கொடுத்து வைத்தேன். அதெல்லாம் எனக்கு வந்த காதல் கடிதங்கள். என் புருஷனுக்குத் தெரிந்தால் விபரீதமாக முடியும் என்று நினைத்து அவளிடம் கொடுத்து வைத்தேன். அவற்றைத் தயவு செய்து என்னிடம் திருப்பிக் கொடுத்து விட வேண்டும்” என்றாள்.

என் தலை பம்பரத்தைப் போல் சுழன்றது. இத்தகைய ஒரு பேரிடி என் தலையில் விழும் என்று நான் சொப்பனத்திலும் கருதவில்லை.

டாக்டர் ! அன்று முதல் நான் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்ச மல்ல.

இந்த விஷயத்தை என் மனைவியின் சிநேகிதியிடமிருந்து கேள்விப்பட்டது முதல் எனக்கு இந்த வியாதி ஆரம்பமாயிற்று. என் மனைவியின் தேகத்திலிருந்து தெறித்த ஒரு துளி ரத்தம், என் கை மீது பட்டதென்று சொன்னேனல்லவா? அந்த ரத்தத் துளிபட்ட இடத்தில் தான் வலி தாங்காமல் பிராணாவஸ்தைப் படுகிறேன். இதுதான் என்னுடைய வியா திக்கு மூலகாரணம். உண்மையில் இந்த வியாதி இன்னும் சொஸ்த மாகவில்லை. இது ஆபரேஷனுக்குச் சொஸ்தமாகக் கூடிய வியாதியுமில்லை. மனப் பிராக்தியின் காரணமாக நீடித்து நிலைத்து விட்ட அபூர்வ வியாதி இது. இதைப் பற்றி வர்ணிக்க என்னால் இயலவில்லை. சில சமயம் சில பேருக்கு நெற்றிக் கண் இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு புருவங்களுக்கு மிடையே ஒரு விசித்திரமான வேதனை தோன்றும். அந்த இடத்தில் ஏதோ செய்யும். இதை வியாதி என்று சொல்ல முடியுமா? அந்த மாதிரி ஒரு விசித்திரமான, இனம் கண்டு பிடிக்க இயலாத வியாதிதான் என்னுடையதும். டாக்டர்! எனக்கு நானே அறியாமையினாலும் ஆத்திரத்தினாலும் ஏற்படுத்திக் கொண்ட இந்த அவஸ்தைக்குப் பரிகாரம் உண்டு. அது, ஒன்றுமறியாத அந்த இளம் பெண் இருக்குமிடத்தை நானும் அடைவது தான். அங்கே போய் அவளிடம் மன்னிப்புக் கேட் டுக் கொள்வதுதான். அதற்குப் பிறகுதான் என் மனம் நிம்மதி அடையும். வியாதியும் சொஸ்தமாகும். ஆத்மாவும் சாந்தியடையும். டாக்டர்! தாங்கள் செய்த உதவிக்கு ரொம்ப ரொம்ப வந்தனங்கள். விடை பெற்றுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
…………..

– வத்ஸலையின் வாழ்க்கை, முதற் பதிப்பு: 1949, வாடாமலர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *