கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 8,035 
 
 

வீடு ஒரே களேபரமாக இருந்தது.

அதனை முறையாக ஒழுங்கு படுத்த நினைத்தபோது சரஸ்வதிக்கு மலைப்பாகவும். ஆயாசமாகவும் இருந்தது. கிரகப்பிரவேசம் முடிந்து புதிய வீட்டிற்கு குடியேறி இன்றுடன் நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இன்னமும் எல்லாமே போட்டது போட்டபடி கிடக்கிறது.

பெங்களூரின் ஒதுக்குப் புறத்தில் புதிதாக முளைத்திருந்த பாலாஜி லே அவுட்டில் இவர்கள் வீடு ஒன்றுதான் முழுதாக கட்டி முடிக்கப்பட்டு கிரகப்பிரவேசமும் நடந்தது.

அக்கம் பக்கம் வேறு வீடுகளே இல்லை.

சற்று தூரத்தில் ஒரேயொரு பச்சை நிற கட்டிடம் மட்டும் தனியாக நின்றிருந்தது.

வெளியே வெயில் உக்கிரமாகத் தகித்துக் கொண்டிருந்தது.

கணவன் தன்னுடன் இருந்து ஒழுங்கு படுத்துவார் என்ற நம்பிக்கையில்தான், இந்தப் புதிய வீட்டிற்கு குடியேற ஒப்புக் கொண்டாள் சரஸ்வதி. ஆனால், வீட்டிற்கு வந்த முதல் நாளே அவருக்கு அவர் வேலை செய்யும் விமானப் படையிலிருந்து ‘அவசரம் உடனே பறப்பட்டு வரவும்’ என தந்தி வர உடனே டில்லிக்குப் பறந்து அங்கிருந்து லே சென்று விட்டார். ஒரே மகன் நியூஜெர்ஸி, அமெரிக்காவில் இருக்கிறான்.

வெளியே யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. முதலில் வீட்டிற்கு ஒரு காலிங் பெல் பொருத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

மறுபடியும் கதவைத் தட்டும் சத்தம். சரஸ்வதிக்கு பயம் தொற்றிக் கொண்டது. இந்தப் பட்டப் பகலில் எவனாவது தன்னை கொலை செய்து போட்டாலும் கேட்க ஆளில்லை என்பதை நினைத்தபோது உடம்பு வியர்த்தது.

கதவின் அருகில் சென்று மிக ஜாக்கிரதையுடன் லேசாகத் திறந்து எட்டிப் பார்த்தாள். அங்கே ஒரு ஆழகிய இளைஞன் நின்றிருந்தான். மிகவும் நேர்த்தியாக உடையணிந்து டை கட்டியிருந்தான். அமெரிக்காவில் இருக்கும் அவள் மகனை நினைவு படுத்தினான்.

மரியாதை கலந்த புன்னகையுடன், “மேடம், நான் ஒரு சேல்ஸ்மேன், குடி தண்ணீரை சுத்தம் செய்யும் கருவி ஒன்றை புதிதாக அறிமுகப் படுத்தியுள்ளோம். உங்க வீட்டுக் குழாயில் பொருத்திக் கொள்ளலாம்… விலை இரண்டாயிரம் ரூபாய்தான்” என்றான்.

சரஸ்வதி “இப்போதைக்கு எதுவும் வேண்டாம், எனக்கு நிறைய வேலையிருக்கு.” என்றாள்.

நிலைமையைப் புரிந்து கொண்டவன், “சரி மேடம், நான் அப்புறம் வரேன்.” என்று சொல்லிவிட்டு வெளியே நின்றிருந்த தன் மோட்டார் பைக்கை உதைத்துக் கிளம்பிச் சென்று விட்டான்.

மறுநாள் அதே நேரம் அதே இளைஞன் மறுபடியும் வந்தான்.

சரஸ்வதி எரிச்சலுடன், “நானே இன்னமும் செட்டில் ஆகலை, தண்ணீர் சுத்தம் செய்கிற கருவிக்கு இப்போதைக்கு அவசரம் ஒன்றுமில்லை, என்னைத் தொந்திரவு பண்ணாதீங்க..ப்ளீஸ்” அவன் பதிலை எதிர் பாராது கதவை அடித்துச் சாத்தினாள். சற்று நேரத்தில் அவன் பைக்கில் கிளம்பிச் செல்லும் சத்தம் கேட்டது.

அவன் சென்ற பிறகு மனசு அடித்துக் கொண்டது. ‘நான் அவனிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டேனோ? பாவம் என் பிள்ளை மாதிரிதானே அவனும்… இந்த பதை பதைக்கிற வெய்யிலில் இரண்டு நாட்களாக என்னைப் பார்க்க தொடர்ந்து வருகிறானே? இந்த இரண்டாயிரம் ரூபாய் கருவியை விற்பனை செய்ய, சிட்டியிலிருந்து மெனக்கிட்டு இவ்வளவு தூரம் வருகிறானே… இதை என்னிடம் விற்றால் அவனுக்கு இருநூறு ரூபாய் கிடைக்குமா? ஐயோ பாவம் அவன்” என்று அந்த இளைஞனுக்காக மிகவும் இரக்கப் பட்டாள்.

நான்கு நாட்கள் கடந்தன. வீடு ஒரு வழியாக ஒழுங்கு முறைக்கு வரலாயிற்று.

அன்று மதிய நேரம்…

கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. சரஸ்வதி மிகவும் எச்சரிக்கையுடன் கதவைத் திறக்க, வெளியே அந்த இளைஞன் புன்னகைத்தபடி நின்றிருந்தான்.

இந்த முறை சரஸ்வதி குரலில் அன்புடன், “உள்ள வாங்க, இன்னைக்கு நீங்க இன்ஸ்டால் பண்ணலாம்” வீட்டின் கதவை அகலத் திறந்தாள்.
உள்ளே வந்தவன், “உஸ்..அப்பாடா” என்று தன் ஹெல்மெட்டை கழற்றி வரவேற்பறையில் வைத்தான்.

சரஸ்வதி அவனை சமையலறைக்கு அழைத்துச் சென்றாள்.

அங்கிருந்த குழாய்களின் அளவுகளை எடுத்துக் கொண்டவன் வெளியே சென்று தன பைக்கிலிருந்து சில உபகரணங்களை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தான். தண்ணீர் சுத்தம் செய்யும் கருவியை மிகப் பாந்தமாகப் பொருத்திவிட்டு, தண்ணீர் நன்றாக வருகிறாதா என்பதை உறுதி செய்து கொண்டான். பிறகு வரவேற்பறையில் சென்று அமர்ந்தான்.

“மேடம் இன்ஸ்டாலேஷன் முடிந்தது, இந்தாங்க உங்க பேப்பர்ஸ்.”

கியாரண்டி கார்டையும், கருவியைப் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகத்தையும் கொடுத்தான். சரஸ்வதி அவனிடம் இரண்டாயிரம் பணமாக கொடுத்தாள். பணம் பெற்றுக் கொண்டதற்கு ரசீது கொடுத்தான்.

ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

அவனைத் தொடர்ந்து வெளியே வந்த சரஸ்வதி, “சிட்டியிலிருந்து இவ்வளவு தூரம் எனக்காக சிரமப்பட்டு வெய்யிலில் வந்த உங்களது பொறுமையும், விடா முயற்சியும்தான் இதை வாங்க என்னைத் தூண்டியது.” என்றாள்.

பைக்கில் ஏறி அமர்ந்தபடியே சொன்னான். “இதுல சிரமம் என்னங்க இருக்கு? எப்படியிருந்தாலும் தினமும் என்னுடைய வீட்டிற்கு நான் கண்டிப்பாக வந்தாகணும்… சேல்ஸ் கால்ஸ் எல்லாம் முடித்துவிட்டு வீட்டுக்கு போற வழியில அப்படியே உங்களையும் பார்த்துடுவேன்…அவ்வளவுதான்.”

“எங்க இருக்கு உங்க வீடு?”

கை நீட்டிக் காண்பித்தான்.

“அதோ அந்த பச்சை நிறக் கட்டிடம்.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *