யார் பைத்தியம்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 7,177 
 

மீனாம்பாளிடமிருந்து பெற்றவளும், உறவினரில் விதவையான வேறு சிலரும் கூடி அழுது, கதறித்தாலி வாங்கப்பட்டது.

கனகலிங்கம் இறந்து இன்றோடு பதினைந்து நாட்கள் காற்றாகப் பறந்துவிட்டன.

அடுத்து என்ன? மீனாம்பாள் அந்த வீட்டிலேயே மாமியாருடன் இருப்பதா, அல்லது தனி வீட்டில் இருப்பதா? என்ற பிரச்னை.
அதற்குக் காரணம் அவளுக்கென்று ஒரு வாரிசு இல்லாதது தான்!
பல லட்சத்துக்குச் சொந்தமான கனகலிங்கத்திற்கு வாயில்லாப்பூச்சியும், இயல்பிலேயே மென்மையும் ஆன மீனாம்பாளை அவரது விதவைத் தாயார் தான் போய்ப் பார்த்து முடித்து வைத்தாள்.

கணவர் இறந்த பின்னர் தன் ஒரே வாரிசான கனகலிங்கத்தின் மீது எல்லையற்ற பாசத்தைக் கொட்டி வளர்த்தாள் பார்வதி. பிள்ளைக்குத் திருமண வயது வந்ததும் ஊர் வாய்க்காகத்தான் திருமணம் செய்து வைத்தாளே தவிர மனப்பூர்வமாக அல்ல, அப்படி ஒரு முட்டாள்தனமான அன்பு பிள்ளையிடம்.

கனகலிங்கமும் தாள் சொல்லைத் தட்டாத பிள்ளையாக இருந்தான். திருமணத்தன்று பலர் முன்னிலையில் மனைவியின் கையைப்பிடித்து அரசாணிக் காலைச் சுற்றியதுதான். அதைத் தவிர சாகும் வரை மனைவியை ஏறிட்டு பார்க்கக் கூட இல்லை.

கடைசி நேரத்தில் அவன் மனம் கனிந்து விடக் கூடும் என்று பயந்தோ என்னவோ ஆஸ்பத்திரியில்…. அந்த கடைசி நேரத்தில் கூட மனைவியை அனுமதிக்கவில்லை பார்வதி.

மீனாம்பாளின் வாழ்க்கைக் கச்சேரி பார்வதி இல்லாமல் இருந்திருந்தால் ஒருக்கால் களைகட்டியிருக்குமோ என்னவோ? பார்வதியின் பிள்ளைப் பாசத்தால் சுருதியில் பேதம் ஏற்பட்டது. ராகத்தில் சோகம் கலந்தது. கீர்த்தனையில் கீறல் விழுந்தது. பல்லவியில் தொல்லை ஏற்பட்டது.

மீனாம்பாள் அந்த வீட்டில் சம்பளம் இல்லாத ஒரு வேலைக் காரியாகத் தான் வாழ்ந்தாள்.

கனகலிங்கம் வெளியே போனதும் பார்வதி மீனாம்பாளின் பிறந்த வீட்டைப் பற்றிக் கேலி பேசுவாள், அவளை வாயில் வந்தபடி திட்டுவாள். இது வாடிக்கை.

பொறுத்துப் பொறுத்துப் பார்க்கும் மீனாம்பாள் சில நேரங்களில் ஆத்திரமுற்று எதிர்க்க, பார்வதி பெரிதாகச் சப்தமிட்டு அழுது, ஊரையே கூட்டி விடுவாள். அக்கம்பக்கத்தார் ஓடி வந்து விசாரிக்கையில் மருமகள் தன்னை அடித்து விட்டதாகப் பொய் சொல்லி நம்பவைப்பாள்.

பிள்ளை வந்ததும் அக்கம் பக்கத்தாரை சாட்சிக்கு அழைத்து மருமகள் அடித்ததை ஊர்ஜிதம் செய்வாள். நாளடைவில் இது உறவினர்களிடையேயும் பரவியதால் மீனாம்பாள் பைத்தியமாகப் பேசப்பட்டாள்.

ஆனால் இத்தனை கொடுமைகளுக்கும் மீனாம்பாள் எதிர்த்தோ, பதிலோ சொல்வதில்லை. பொறுமையோடு சிரித்துக் கொள்வாள்.
தாயாருடன் சேர்ந்து கொண்டு கனகலிங்கமும் மீனாம்பாளைப் பைத்தியம் என்றே அழைப்பார். தனக்குக் கோபம் வரும் நேரம் கணவர் இல்லாத போது மாமியாரிடம் பாய்வாள் மீனாம்பாள்.
இத்தனையும் வீட்டுக்குள் தான். வெளியில் மாமியாராவது அவளை பைத்தியம் என்னை இங்கே அடித்தாள் அங்கே அடித்தாள் என்று சொல்வாள். ஆனால் மீனாம்பாளோ மாமியாரைப் பற்றியோ, தன் கணவரைப் பற்றியோ ஒரு வார்த்தை கூட வித்தியாசமாகவோ, குறைவாகவோ சொல்வதில்லை. எத்தனை உயர்ந்த குணம்!
கனகலிங்கத்தின் காரியமெல்லாம் முடிந்து விட்டது. இனிமேலும் இந்த வீட்டி ல் மாமியாரும், மருமகளும் இருப்பது இயலாத காரியம், பெற்றவளும் உடன் பிறப்புகளும் மீனாம்பாளிடம் ரகசியமாக ஊருக்கு அழைத்த போது “நல்லாயிருக்கு என் மாமியார் பாவம் அவங்க எப்படி தனியா இருப்பாங்க” என்று சொல்லியதைக் கேட்டு அவர்களுக்கு அவளிடமிருந்த மதிப்பு கூடியது. பிள்ளையும் இல்லாததால் மாமியார் அதிகம் கொடுமைசெய்வாள் என்று பயந்த அவர்கள் வீட்டை இரண்டாகத் தடுத்து இருவரையும் இருக்கச் சொல்ல வேண்டியதுதான் என்று பெண் வீட்டார் உறுதி செய்து கொள்ள கனகலிங்கத்தின் ஒன்றுவிட்ட பெரியப்பா எருக்கு முளைத்தது போல் முளைத்து-

“கனகலிங்கம் தன் சொத்துகளுக்கு உயில் எழுதி வைத்திருக்கிறான்” என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட,

“உயிலா!?” மீனாம்பாள் உட்பட எல்லோரும் திகைப்பும், வியப்பும் அடைய உயிலின் சாராம்சம் படிக்கப்பட்டது.

சொத்தின் பெரும் பகுதியை தன் வழிச் சொந்தங்களுக்கும், தாயாருக்கும் எழுதி வைத்துவிட்டு ஒரு சிறு தொகையை டெப்பாசிட் செய்து அதன் வட்டியை மட்டும் மீனாம்பாளுக்கு கொடுக்கும்படியும், மீனாம்பாள் ஒரு மனநோய்க்காரி என்பதனால் அந்தப் பைத்தியத்திடம் இரக்கம் காட்டப்பட்டிருப்பதாகவும் பெரிய மனது பண்ணி எழுதப்பட்டிருந்தது.

மீனாம்பாளுக்கு மட்டும் இது கணவரால் எழுதப்படவில்லை என்பது புரிந்தது. ஏனெனில் அவரின் சொத்து முழுவதற்கும் உயிலில் கணக்குக் காட்டப்படவில்லை. அவரின் சொத்தையே குறைத்துக் காட்டியிருந்தது. அவளுக்குத் தெரியும், ஒரு நல்ல சாப்பாடு கூட வீட்டில் சமைத்ததில்லை. கடைக்குப்போய் சாமான்கள் வாங்கினால் நுhறு, இருநுhறு என்றுதான் கனகலிங்கம் வாங்கி வருவார்.
மனைவிக்குப் புடவை, துணிமணிகளுக்குக் கூட அவர் செலவழித்தது இல்லை. பிறந்த வீட்டிலிருந்து வருஷத்திற்கு வேண்டிய துணிமணிகள் வந்துவிடும். சஷ்டி அப்த பூர்த்திக்குக் கனகலிங்கத்தின் உறவினரால் மீனாம்பாளுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பட்டுப்புடவைகள் கூடக் கடையில்தான் விழாவிற்குப் பிறகு விலைக்குப் போடப்பட்டன.

உயிலின் வாசகங்கள் கனகலிங்கத்தின் உறவினரால் போலியாகத் தயாரிக்கப்பட்டது என்பது புரிந்தும் மீனாம்பாள் மனதுக்குள்ளேயே மனம் புழுங்கினாள். இந்த நிலையிலும் அவள் அமைதியாகவே இருந்தாள்.

ஆனால், மீனாம்பாளின் உடன் பிறப்புக்களும், தாயும் திகைத்து “இது அநியாயம், இந்த உயில் செல்லாது. இவருக்குத் தான் வாரிசு இல்லையே, மனைவிக்குப்பாதி தாய்க்குப் பாதி எழுதி வைக்கவேண்டியதுதானே! அதை விடுத்து ஏன் இப்படியொரு கொடுமையைச் செஞ்சுட்டுப் போகணும்?” என்று ஆளுக்கு ஆள் விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

பெற்றதாயோ “உன்னைப் பைத்தியம்னே உயிலில் எழுதிவிட்டாங்கடி” என்று கதறி அழுதபோது கூட மீனாம்பாள் நிலைகுலையவில்லை. வழக்கமான சிரிப்புடன் ஏற்றுக்கொண்டாள். இறுதியாக அவளின் உடன்பிறப்புக்ள் தங்கள் சகோதரிக்கு இழைக்கப்பட்ட அநீதி கண்டு கொதித்தெழுந்ததின் விளைவு, கோர்ட்டில் கனகலிங்கத்தின் சொத்துத்கள் தாயாருக்கும், மீனாம்பாளுக்குமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டன.

பொய் உயில் தயாரித்தவர்களும், சாட்சிக் கையெழுத்திட்டவர்களும் வெட்கங்கெட்டுப்போய் ஊரார் முன் தலைகுனிந்தார்கள்.
துhரநின்று “பைத்தியத்திற்கு கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பாரு” என்று கனகலிங்கத்தின் உறவினர்கள் ஏமாந்த வெறியில் கூறினார்கள்.
மீனாம்பாள் எல்லோரையும் ஒருமுறை நோட்டம் விட்டாள். பிறகு அமைதியாக “ஒரு நிமிஷம் எல்லோரும் நல்லா கேட்டுக்குங்க. என்னை இந்த வீட்டிலே பதினைந்து வயசிலே கொண்டு வந்து விட்டாங்க. இந்த முப்பத்தைந்து வருஷத்திலே ஒருநாள் நிம்மதியா வாழ்ந்திருப்பேனா என்றால் இல்லை. செத்துப்போனவங்களைப் பத்தி சொல்லக்கூடாது தான், இத்தனை வருஷத்திலே என் கணவரிடமிருந்து ஒரு அன்புப் பார்வை, ஆறுதலான பேச்சு அதைக் கூட நான் கேட்டதில்லே இந்த வீட்டிலே. சதாசர்வகாலமும் என்னைக் கொடுமைப்படுத்திப் பிள்ளைக்கு நேராக என்னைப் போகக் கூடாதுன்னு தடுத்து, என்னை பைத்தியம்னு பலபேர் நம்ப வைக்கும்படியான பொய்க் கதைகளைக் கூறிய மாமியாரையும் தாயின் அன்புக்கு அடிமையாகி என்னை சதா ஊருக்குப் போகச் சொல்லிய கணவரையும் மீறி நான் இந்த வீட்டிலே இருந்தேன் என்றால் அது என்றாவது என் பொறுமை வெல்லும் நல்லது நடக்கும்னு நம்பியதுதான் காரணம். எல்லாத் தமிழ்ப் பெண்களையும் போலக் கல்லானாலும் கணவனுன்னு நினைச்சுக்கிட்டு அந்தக்கல்லானவர்களோடு வாழ்ந்துகிட்டு இருந்தேன். பாறையிலே ஈரப்பசை இருக்குமா? புகுந்த வீட்டின் அன்புக்காகவும், பாசத்துக்காகவும் ஏங்கின எனக்குப் பைத்தியம்னு பேர் கட்டினாங்க. அதை ஆமோதிக்க வைக்க சில கூலிப்பட்டாளங்கள், துணை செய்தன.
வசதியாக இருக்கும் பெரிய மனிதர்களும் இந்த உயில் எழுத உடந்தையாக இருந்தார்களே, அவர்களுக்கு ஒரு கேள்வி. ஒரு விதவையோட பணத்துக்குப் பேயா அடிச்சிக்கிட்டீங்களே இது எந்த வகையில் சேர்த்தி? என் கணவர் வாழ்ந்த காலத்திலே புண்ணியத்தை செய்யலே, பாவத்தைத்தான் செஞ்சிக்கிட்டு இருந்தார். ஆனாலும் என் கழுத்தில் தாலி கட்டியவர். அவர் நல்லது, கெட்டதிலே எனக்கும் பங்கு உண்டு. அவர் அறியாமல் செய்த பாவத்துக்குப் பரிகாரமா இந்தச் சொத்துக்களை அனாதை விடுதிக்கும், விதவைகள் நல்வாழ்விற்குமா எழுதி வைக்கப் போகிறேன். இதிலே சல்லிக் காசை நான் தொடமாட்டேன். எந்த ஒரு பெண்ணும் கணவனிடத்திலே அன்பைத்தான் எதிர்பார்ப்பாளே தவிரப் பணத்தை அல்ல. வாழவேண்டிய காலத்திலே வாழ முடியாதவ இந்த வயதான காலத்திலே இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்?

படிப்பும், அறிவும், ஆற்றலும் மட்டும் இருந்தால் வாழ்க்கை வெற்றி பெற்றுவிடும் என்று என் கணவரைப் போலச் சிலர் நினைக்கிறார்கள்.
சத்தியமும், நேர்மையும், நீதியும் அறச்சிந்தனையும் பாபத்திற்கு அஞ்சும் போக்கும், தெய்வ அருளும் இல்லையென்றால், எத்தனை “பணம் இருந்தாலும், எத்தனை படிப்பு இருந்தாலும் மனிதனின் வாழ்க்கை வெற்றி பெறுவதில்லை. என் வாழ்க்கை மற்றவர்களுக்குப் பாடமாகட்டும்.”

நீண்ட பிரசங்கமே செய்துவிட்டாள் மீனாம்பாள். ஒரு நல்ல காரியத்தைச் செய்துவிட்ட திருப்தியில் ஊஞ்சலில் அமர்ந்து கம்பீரமாக ஆடினாள்.

உடன்பிறப்புகள் திகைப்பும், வியப்புமாக நிற்க கனகலிங்கத்தின் உறவினர்கள் “பைத்தியம் என்பது சரியாகத்தானே இருக்கிறது” என்று இப்பொழுதும் முணுமுணுக்க-

“ஆமாம், அன்புக்காகவும், பாசத்துக்காகவும் வாழ்க்கையையும் வீணாக்கிக்கிட்டு, இப்ப பணத்தையும் வேண்டாம்னு சொல்லிட்டுப் போற நான் உங்க பார்வைக்குப் பைத்தியம் தான்”.

மிக, மிக உயர்ந்து போன பண்புகளின் இதய விலாசத்தையா பைத்தியம் என்கிறார்கள்! விந்தைதான்!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *