யார் தவறு?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 4, 2024
பார்வையிட்டோர்: 1,284 
 
 

“என் தவறுதான். இரவு நான் அவ்வளவு கோபம் பட்டுருக்கவே கூடாது. எட் லீஸ்ட் நிவேதா எதற்காக அங்க வந்தானு கேட்டுருக்கனும்.” கவின் தலையில் கையை வைத்தபடியே நாற்காலியில் அமர்ந்தான். தன் அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால் பிள்ளைகளுடன் நிவேதா தன் அப்பாவை காணச் சென்றிருந்தாள். திடீரென அந்த நடு இரவில் “என்னங்க இது, என்ன நடக்குது இங்க?” பயந்து விரிந்த கண்களுடன் கையில் ஒரு பூ தொட்டியைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். நிவேதாவின் உடல் அதிர்ந்த நிலையில் அவளின் உடம்பிலிருந்து வியர்வை சொட்டுச் சொட்டுட்டாக வழிந்தது. “நிவேதா! நான் சொல்லுறத பொறுமையா கேளு. எதுவும் பேசாம இங்கிருந்து போ. நான் வந்து பேசுறேன்”. அவளின் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு அவளை தள்ள முயன்றேன். இரண்டு நாட்கள் தன் அப்பா வீட்டில் தங்கி வருவதாகச் சொன்ன அவள் ஏன் இரவு வீட்டுக்கு வந்தாள் என்பது கூட தெரியவில்லை. வீட்டில் நடந்த சம்பவத்தைக் கவினின் மனைவியாகிய நிவேதாக்குத் தெரியவரும் என்பதை அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவன் உடலே படபடத்தது.

“முடியாது, நீ முதல்ல இங்க என்ன நடக்குதுனு சொல்லு? என்ன ஆச்சி இவங்களுக்கு” கேள்விகளால் கவினைச் சுட்டெரித்துக் கொண்டிருந்தாள். ஏதாவது சொல்லி அவளை இங்கிருந்து அனுப்பிவிடலாம் என்று நினைத்து முடிப்பதற்குள்; “நான் போலீஸிக்கு கால் பண்ணப் போறேன்” கோபத்தில் அவள் கத்தி முடித்தாள். கவினுக்குப் பயமும் கோபமும் அதிகரித்தது. “இந்த விஷயம் மட்டும் வெளிய போனா என்னோட நிலையை யோசிச்சி பாரு. நாம் சேர்த்து வச்ச மானம் மாரியாத எல்லாமே போயிடும். என் மேல மக்களுக்கு இருக்கிற நம்பிக்கையே போயிடும். முக்கியமா இவன் ஒரு குற்றவாளி, அதான் இவனுக்கு இந்த நிலை” பேசிக்கொண்டே மெல்ல அவள் அருகில் நடந்து எதிர்பார்க்காதச் சமயத்தில் அவள் கையில் இருந்த பூ தொட்டியைப் பிடுங்கினான். அந்த அதிர்ச்சியிலிருந்து அவள் மீள்வதற்குள், தலையில் அடித்து அவளைக் கட்டிப் போட்டான்.


அப்பா இல்லாதக் குடும்பம். தொழிற்சாலையில் வேலை செய்யும் மாதவி, கவினின் அம்மா என்று சொல்வதை விட குள்ள மாதவி என்று கூப்பிடுவர்கள் அதிகம். காலையில் பள்ளிக்குப் போகும் போது பார்க்கும் அந்த முகத்தை அதோடு இரவு உணவு அருந்தும் மேசையில் தான் பார்ப்பான், அதுவும் அரை தூக்கத்தில். அவள் கண்கள் எல்லாம் சிவந்து, உடம்பு வலியோடு வீட்டு வேலையைச் செய்து கொண்டிருப்பாள். வாரம் ஏழு நாளும் வேலை செய்யும் அவளிடம் உட்காந்து சரியாகப் பேசக் கூட நேரம் இருக்காத நிலையில் தன்னுடைய ஆசை, கனவு, கஷ்டம் எதுவுமே கவின் பகிர்ந்துகிட்டது கிடையாது. தன் அம்மாவுக்கு ஒரு தூணாக இருந்து, வளர்ந்து பெரியவனாக ஆனதும் தன் அம்மா நிம்மதியாகச் சிரமம் படாமல் வாழனும் என்பதுதான் அவனின் கனவாக இருந்தது. மாதவிக்கு இரண்டு மகன்கள்; ஒருவன் கவின் மற்றொருவன் நவீன். அவர்கள் இருவருமே நன்றாகப் படிப்பார்கள், பள்ளியில் எப்பொதும் சிறந்த மாணவர்களாக இருப்பார்கள். “குடும்ப கஷ்டத்திலையும் இப்படி நல்ல படிக்கிற கவின், நவீன பார்த்து கத்துக்குங்க” என்று ஆசிரியர்கள் புலம்பாத நாளே இல்லை.

சிறு வயது முதல் நடிகர் ரஜினிகாந்த் நடித்த மூன்று முகம் படம் கவினுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நாளில் இரண்டு முறையாவது அந்த படத்தைப் பார்த்துவிடுவான். அந்த திரைப்படத்தின் மீது அவனுக்குக் கொண்ட விருப்பமே காவல்துறை அதிகாரியாக ஆக வேண்டும் என்ற இலட்சியத்தை விதைத்தது. மதியம் அவன் நண்பர்கள் ஓடி ஆடி விளையாடும் வேளையில் அவன் மட்டும் தனியாக ‘மசல் எக்ஸ்சர்சைஸ்’ செய்துகொண்டிருப்பான். காவல் அதிகாரியாக ஆக வேண்டும் என்பதற்காகவே தன் உடலை வலிமைபடுத்தி வைத்திருந்தான். ஆனால் நவீன் அப்படி இல்லை. கவினைப் போலவே அவனும் படிப்பில் கெட்டிக்காரன் இருந்தாலும், அவனுக்கு எதிர்கால ஆசை ஒன்று கிடையாது. ஒருமுறை மருத்துவர், மறுமுறை ஆசிரியர் இல்லையேல் காவல் அதிகாரி என்று அடிக்கிக் கொண்டே போவான்.

கவினை பொறுத்தவரை காவல்துறை தொழில் நவீனுக்கும் மிகப் பொருத்தமானதுதான். ஏனெனில் அவன் மிக தைரியமானவன், ஆனால் முன் கோபக்காரன். கவினுக்கு ஒரு பிரச்சனை வரும் போது அவன் துணிந்து பேசுவான். பல முறை அம்மாவிடம் சண்டையிட்டு கவினைக் காப்பாற்றியுள்ளான். யாராக இருந்தாலும் சரி, தவறு என்று முகத்திற்கு நேரகாகத் தைரியமாகக் கூறிவிடுவான். பள்ளியில் கடமை மாணவனாக இருந்தாலும் சண்டைகள் வரும் போது அதை விளக்கி விடமாட்டான். இவனே ஒரு கைபார்த்துவிடுவான். இதனால் அவனைச் சுற்றி இருக்கும் அனைவரும் கவினை விட நவீன் ஒரு காவல்துறை அதிகரியாகுவதற்கு அதிக தகுதியுடையவன் என்று கூறுவர். அண்ணன் தம்பி இருவரும், எப்பொதுமே ஒருவருக்கொருவர் துணையாக இருப்பார்கள்; இருந்தார்கள். அம்மா அவர்களிடையில் வராமல் இருந்திருந்தால் அவர்கள் இன்னும் அன்பாகவே இருந்திருப்பார்கள் .

நவீன் கவினைவிட ஒரு வயது சிறியவன் ஆனால் இந்த அம்மாக்கள் எல்லோரும் தன்னுடையக் கடைக்குட்டி மேலேதான் அதிகப் பாசமாக இருப்பார்கள். மாதவியும் அப்படித்தான். நவீன் தவறு செய்தாலும் அம்மா அதை பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் கவின் ஒரு சிறு தவறுயிலைத்தாலும் அவனுக்கு திட்டும் கூடவே அடியும் விழும். “அம்மாதானே பரவாயில்ல” பல முறை சகித்துக் கொண்டு கவின் உறங்கியது உண்டு. சமயங்களில் நவீன் செய்த தவறுக்கு “ஒரு அண்ணன்னாக நீ சரியா இருந்தா அவனும் சரியாதான் இருப்பான்.” அவள் புலம்புவது இன்று நேற்று இல்லை. கவினுக்குச் சலித்துவிட்டது. இதை எல்லாம் கூட கவின் பொறுத்துக் கொள்வான். ஆனால் அவர்கள் இருவரையும் ஒப்பிட்டுப் பேசும் போது மட்டும் கவின் வேறொருவனைப் போல் உணர்வான்.

தேர்வில் நவீன் கவினைவிட அதிகப் புள்ளிகள் பெற்றதற்காக “அவன் கண்டிப்பா இந்த குடும்பத்த காப்பாத்திருவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று ஒவ்வொரு முறையும் சொல்லுவாள். அவனைப் புகழும் போது நவீனுக்குள் கேட்கும் கேள்வி “அப்போ இந்தனை நாளா நான் செய்ததுக் கெல்லாம் மதிப்பே இல்லையா?”. விளையாட்டு போட்டி, குணம், தனித்திறமை, தோற்றம் இவ்வாறு எல்லாவற்றிலும் அம்மா நவீனையும் கவினையும் ஒப்பிட்டுத்தான் பேசுவார். இதனாலே, கவினுக்குச் சமயங்களில் நவீனைப் பார்க்க வெறுப்பாக இருக்கும். இருந்ததாலும் அவன் தன் தம்பி என்பதால் அவன் மீது பொறாமை கொண்டதில்லை. அவன் வெற்றியில் அவனுக்கும் மகிழ்ச்சித்தான். “டேய் கவின் உன்னை போய் கடையில ஜமா வாங்க அனுப்பினாங்க பாரு, என்னை சொல்லுனும், இதுக்குதான் நவீனை நான் எது இருந்தாலும் செய்ய சொல்லுறது” என்றாள் மாதவி.

கண்களை உருட்டிப் பார்த்தால் “தெரிதுல மா! அப்புறம் ஏன் அவனை அனுப்புறீங்க, அவன் தான் கொஞ்சம் கோளாறு ஆச்சே” நவீனும் சில சமயங்களில் தன்னை பெருமைபடுத்தி விளையாட்டிற்காகப் பேசுவான். ஆனால் கவினோ அதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்வதில்லை. இவ்வாறு சிறு விஷயங்களுக்குக் கூட அம்மாவின் ஒப்பிடுகள் அதிகரித்துக் கொண்டே போவதால் கவினின் மனக்கவலையும் தாழ்வு மனப்பான்மையும் அதிகரித்தது. நவீன் செய்யும் ஒவ்வொரு விசயங்களிளையும் தன்னை ஒப்பிடத் தொடங்கினான்.

வருடங்கள் கடந்து கல்லூரி பருவங்கள் முடிந்து புலாபோலில் (PUSAT LATIHAN POLIS) காலடி எடுத்து வைத்தான் கவின். அங்கு பயிற்சி மேற்கொள்ளும் வரை கவின் பல இன்னல்களைச் சந்திக்க நேரிட்டது. சரியான தூக்கம், உணவு, நல்ல நண்பர்கள் இல்லாமல் தவித்தான். அங்கு அவனைச் சுற்றியுள்ள மற்ற நண்பர்கள் தன்னை விட வலிமையாகவும் திறமையாகவும் இருப்பதைக் கண்டு தன்னுடன் ஒப்பிட்டு வருத்திக் கொள்வான் கவின். இந்த சமயத்தில் நவீன் ஒரு சிறு வணிகம் செய்துக்கொண்டிருந்தான். வீட்டின் அருகே அவன் அம்மாவின் பண உதவியைக் கொண்டு கைத்தொலைப்பேசி, கணினி, மடிக்கணினி போன்றவற்றை சரி செய்வான். அதிலிருந்து நல்ல வருமானம் வந்தது. கவின் இன்னும் பயிற்சியில் இருந்த போது நவீன் சம்பாரித்து அம்மாவை நன்றாகக் கவனித்துக் கொள்வதைப் பார்க்கும் போது கவினுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அதே சமயத்தில் தன் தம்பியைப் போல அம்மாவை மகிழ்ச்சிபடுத்த முடியுமா என்ற தயக்கமும் பயமும் கவினை சூழ்ந்தது.

ஆறு மாதம் கழித்து, கவின் ஒரு காவல் அதிகாரியாகப் பதவிப் பெற்றான். “நீ போலீஸ் ஆனதை நினைச்சு எனக்கு ரொம்பே பெருமையா இருக்கு அய்யா. எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு நீ வந்த. உன்ன பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு” கலங்கியக் கண்களுடன் அம்மா புகழ்ந்து கவினைக் கட்டித் தழுவியது அன்றுதான் முதலும் இறுதியும். இந்த பெருமையெல்லாம் கவினுக்கு மட்டுமே பெரும் மகிழ்ச்சியைக் கொடுப்பதை உணர்ந்தான். நவீன் வணிக்கத்துறையில் பெரும் சாதனைப் புரிந்தான். சிறு வணிகத்தில் தொடங்கிய அவனது பயணம் புதிதாக ஒரு இணையத்தளத்தைச் சுயமாக உருவாக்கி மலேசியா முழுவதும் பயன்படுத்தக்கூடியதாக அமைந்தது. ஒரு மாதம் மட்டுமே லட்சங்கள் அவன் வங்கியில் வந்து குவிந்தது. “நான் வெளிய அலைந்து திரிந்து இந்த நாட்டு மக்களுக்காக சேவை செய்து பாதுக்காப்பதை விட, நீ சம்பாரிக்கும் பணத்திற்காகவே தனி மரியாதையும் புகழும் உன்னை வந்து சேருதுடா” நவீனை பார்க்கும் போதெல்லாம் அவன் தோளைத் தட்டுவான். “தாங்க்ஸ் டா கவின். உண்மை தான், இப்போ இந்த வசதியான வாழ்கைகே நான் தான் காரணம்” நவீன் சிரித்துக் கொண்டே பதிலளிப்பான்.

மதியம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் “மா, நம்ம நவீன் புதுசா ஒரு கம்பனி ஓபன் பண்ண போறான். மலேசியாவிலே பெரிய சீஇஒ (CEO) ஆக போறான், அப்படியே எனக்கும் அடுத்த மாசம் பதவி உயர்த்தப் போறாங்கலா மா” . கவின் அம்மாவிற்காகக் காப்பியைக் கலக்கிக் கொண்டிருந்தான். “நான் சொன்னேன்ல நவீன் கண்டிப்பா இந்த குடும்பத்த காப்பாத்திருவான்னு. நம்ம தலையெழுத்தையே மாத்திட்டான். பேசாம கவின், நீயும் உன் தம்பியோட சேர்ந்து பிசினஸ் செஞ்சா என்ன. ஆனா பரவால உனக்கு என்ன பிடிக்கிறதோ அதையே நீ பண்ணு.” இதை கேட்கும் போது அம்மா கவினின் வெற்றியைப் பொருட்படுத்தவே இல்லை என்பதை உணர்ந்தான்.

“மா என்ன இருந்தா லென்ன, உங்களுக்கு நவீன் மேலதான் அதிகம் பாசம், மரியாதை, பெருமை எல்லாம்” கவின் நக்கலாகச் சிரித்துக் கொண்டே காப்பியை அம்மாவிடம் கொடுத்தான்.

“அப்படிலாம் ஒன்னும் இல்ல, நீ நவீனுக்கு கால் பண்ணியா? இரண்டு நாளா மெசேஜ் மட்டும்தான் பண்ணான்.”

“காலையிலதான் கால் பண்ணேன், வேலை இருக்குனு பட்டுன்னு கால் கட் பண்ணிட்டான்; என்னமோ அவன் மட்டும் தான் வேலையா இருக்குற மாதிரி. நான் டெய்லி எவ்வளவு கேஸ் ஹாண்டல் பண்ணுறேன், ஆனா என்னிக்காவது உங்களுக்குக் கால் பண்ணாம இருந்துருக்கேனா? இதுல முக்காவாசி நாளு ஹோட்டல் தான் தங்குவான். அவனை பார்த்தே ரொம்ப நாள் ஆச்சி”

கவின் அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தான்.

“நீ வேற, அவன் வேற டா” அம்மா தொலைகாட்சியில் நாடகத்தைப் பார்த்தக் கொண்டிருந்தாள். அந்த சமயத்தில் கவினுக்கு தன் நண்பர்களிடமிருந்து அழைப்பு வந்தது “அப்ப பங்காட் உயர போற, ஓடர் போட ஆரம்பிச்சிருவியே. அதை விடு! கேள்விப் பட்டேன், உன் தம்பி புதுசா கம்பனி தொறக்க போறான. ஹ்ம்ம் நீ பங்காட் உயர்ந்த என்ன, உயராலனா என்ன, உன் தம்பி பெரியப் பணக்காரனா இருக்கான். நாங்க அப்படியா” இப்படி தன்னுடன் பணிப்புரியும் மற்ற காவல் அதிகாரி நண்பர்களும் நவீனை புகழ்ந்து பேசி கவினைச் சங்கடப்பட வைத்தனர். கவினின் மன அழுத்தம் அதிகரித்தது. தன் வாழ்வில் உயர்ந்துக் கொண்டே போனாலும் திருப்தியற்ற நிலையில் இருந்தான். எதுவும் பேசாமல் கவலையில் அமர்ந்து தன் தம்பியின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு கொண்டிருந்தான்.

வானம் இருள் சூழ்ந்து நிலா வெளிச்சத்தில் வண்டுகள் ரிங்காரமிடும் நேரம், திடீரென்று வீட்டிற்கு வந்தான் நவீன். “வா நவீன் என்ன சொல்லாம வந்துருக்க.” அம்மா சிரித்தக் கொண்டே உள்ளே அழைத்தார். “இல்ல மா, எல்லாரும் எப்படி இருக்கிங்க?” நவீன் அம்மாவைக் கட்டியணைத்தான். “நாங்க நல்லாத்தான் இருக்கோம். நீ எப்படி இருக்கடா. வா வா உற்காரு” அம்மா அவன் கையைப் பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமரவைத்தார். “இரு போய் காப்பி கலக்கி எடுத்துட்டுவரேன், டையடா இருப்ப” அம்மா சமையலறைக்கு விரைந்து சென்றாள். “நான் வீட்டுக்கு வரும் போது நல்லா நாடகத்த உட்காந்து பார்த்துக்கிட்டு, என்னை பார்த்தவுடனே ஓடுறத பார்த்தியா”. கவின் நவீனைப் பார்த்து கேட்டான். அம்மாவும் நவீனும் இருவருமே கவின் அங்கு இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் நவீனின் புதிய கம்பனியைப் பற்றி அதிக நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். தன்னை பற்றி ஒன்றுமே விசாரிக்காதத் தன் தம்பியின் மீது கடும் கோபத்தில் இருந்தான் கவின்.

“டே கவின் பேசாம நீ போலிஸ் வேலைய விட்டுரு. அதுக்கு பதிலா என் கூட சேர்த்து பிசினெஸ் செய். வாழ்க்கையில பெரிய ஆளா ஆயிருவ.” நவீன் தன் கால்களை ஆட்டிக்கொண்டே கவினைப் பார்த்துப் பேசினான். “தேவையில்ல இப்பயும் நான் பெரிய ஆளுதான். நீ ஓவரா பண்ணாத” கவின் வெடுக் என்று பேசி முகத்தைச் சுளித்தான். “இப்போ நீயா இப்படி பேசுற, போலிஸ் பவர்லாம் வெளிய வரைக்கும் தான், வீட்டுக்கு வந்தா நீ அடங்கு. போலிஸ் ஆ இருந்தாலும், என்ன மாதிரி பணக்காரனைப் பார்த்து சல்யூட் தான அடிச்சிட்டு இருக்க” நவீனும் பதிலுக்குக் கோபத்தில் திமிராகப் பதிலளித்தான். “நானே கடுப்புல இருக்கேன், பேசாம போயிரு நவீன்”.

“நான் ஏன் போகணும், இது அம்மாவுக்கு நான் வாங்கி கொடுத்த வீடு. வேணும்னா நீ போய் உன்னோடு கோட்ரஸ்ல உக்காரு. அப்படியே வீட்ட வீட்டு போனாலும் என்கிட்ட இருக்கிற பணத்துக்கு நான் இப்பவே ஒரு வீட்டை வாங்கி அதுல தங்குவன். நான் ஒன்னும் உன்னை மாதிரி பிச்சக்காரன் இல்ல.” நவீன் விரலை நீட்டி கவினைப் பார்த்துக் கத்தி முடித்தான். “டே!” கவின் கோபத்தில் எழுந்து நவீனின் சட்டையைப் பிடித்து கையை ஓங்கினான். தன் உடன் பிறந்தவனே இப்படி சொல்லும் போது பொறுமையை இழந்தான் கவின். அந்த சமயம் அம்மா பட்டென எழுந்து இருவருக்கும் இடையில் வந்து சண்டையை விளக்கிவிட்டார். “இரண்டு பேரும் ஏன்டா சின்ன பிள்ள மாதிரி அடிச்சிக்கிறிங்க. உன்னோட அண்ணனே அடிப்பியடா நீ.” அம்மாவின் குரல் அதிர்ந்த நிலையில் “அவன் சும்மாதா இருந்தா நீதான் தேவையில்லாம உன் கடுப்ப அவன் மேல காட்டி அவன் தூண்டிவிட்ட, உண்ண விட வயசுல சின்….” அம்மா சொல்லி முடிப்பதற்குள் அருகிலிருந்த கிளாஸ் குவளையை எடுத்து அவள் தலையில் ஓங்கி அடித்தான் கவின். “மா!” நவீன் கவினை நெஞ்சிலையே உதைத்து அவனை அடிக்க நோக்கி வந்த அந்த தருணத்தில், தன் பாக்கெட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்து குறிப்பார்த்து அவன் நெற்றியில் சுட்டான். சிறிது நேரம் அப்படியே நாற்காலியில் அமர்ந்திருந்தான்.


“என்னங்க” எனும் குரல் கவின் செவிகளில் ஒலித்தது. நிவேதா ஒன்றும் புரியாமல் கட்டிப் போட்ட கயிரிலிருந்து தப்பிக்க முயன்று கொண்டே அழுதுக் கொண்டிருந்தாள். “ஏன் இப்படி பண்ணிங்க.. உங்களுக்கு என்ன கிறுக்கா?” கதறி அழுதாள் நிவேதா. “அது அவங்க தப்பு. ஒரு சாதாரண போலிஸ் அப்படி அவங்க சொன்ன அந்த வார்த்தை தான் என் கோபத்தை தூண்டி அவங்கள கொல்லா முடிவு பண்ணது. ஒவ்வொரு முறையும் அவங்க என்னை சாதாரண போலிஸ்; நவீன விட சம்பளம் குறைவுனு ஒப்பிட்டு பேசும் போதெல்லாம் எனக்கு அவங்கள கொல்லணும்னுதான் தோணும். நானும் எவ்வளவுதான் பொறுத்து போறது. பெரிய இவ மாதிரி திமிரா பேசுனா. கொம்பேர் பண்ணி கொம்பேர் பண்ணி நான் இத்தன நாளா செத்து கிட்டு இருந்தேன். இப்போ அவங்க சாகட்டும்.

“இப்போ என்ன பண்ண போறே. இதலாம் யாருகாவது தெரிஞ்சா?” நிவேதா பயத்துடன் கேட்டாள். “இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்தவரில் இனி நான் மட்டும்தான் இருக்கப் போகிறேன், பிறகு எதற்கு விளக்கம்.” கவின் நிவேதாவைப் பார்த்து துப்பாக்கியை நீட்டினான். அப்போது அவளின் தந்தையின் அழைப்பு வந்தது “என்ன மா மாப்பிள கிட்ட சொல்லிடியா. எப்போ வீட்டுக்கு வருவ? நாங்க எல்லாம் காத்திருக்கோம்.” கவின் அதை கேட்டு குழப்பத்தில் தன் குடும்பத்தினரைப் பார்த்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *