யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 10,091 
 
 

புத்தகம் இல்லாத ரயில் பயணத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. வேலை விஷயமாக மும்பை கிளம்பவேண்டும் என்பதால் பழைய புத்தகம் ஏதேனும் வாங்கலாமென்று திருவல்லிக்கேணி சென்றேன். அங்கே ஒரு பழைய புத்தக கடையில்தான் அந்த டைரியை முதன்முதலாய் பார்த்தேன். முதல் நான்கைந்து பக்கங்கள் கிழிந்த நிலையில் புத்தகமொன்றின் கீழ் கசங்கிய நிலையில் இருந்தது. ஏதோ ஒரு ஆர்வத்தில் எடுத்து பிரித்தேன். முத்துமுத்தான கையெழுத்து அந்த டைரியை நிரப்பியிருந்தன. எழுத்துப்பிழைகள் அதிகமாய் தென்பட்டது.பத்து ரூபாய்கொடுத்து வாங்கி வந்துவிட்டேன்.

தாதர் எக்ஸ்பிரஸ் மும்பை நோக்கி கிளம்ப ஆரம்பித்தவுடன் டைரியை திறந்தேன். டைரிக்கு சொந்தமானவரின் பெயர் இல்லாத நிலையில் ஐந்தாவது பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். உடனே புரிந்துபோனது இது சிறுமி ஒருத்தியின் டைரியென்று. ஏழு வருடங்களுக்கு முன்புள்ள டைரி. ஜனவரி ஆறுவரை கிழிந்துவிட்டதால், ஜனவரி ஏழாம் தேதியிலிருந்து ஆரம்பித்தேன்

ஜனவரி 7:
“இன்னைக்கு என்னோட பன்னிரெண்டாவது பிறந்தநாள். ராத்திரி ரயில்ல நான் மும்பை போகனும்னு அம்மா சொன்னா. இனிமே நான் அங்கதான் வேலை பார்க்க போறேன்னும் சொன்னா. சொல்றப்போ ஏன் அழுதான்னு தெரியலை. நெத்தியில ஒரு முத்தம் கொடுத்துட்டு இறுக்கி கட்டி பிடிச்சுக்கிட்டா. ராத்திரி எட்டு மணிக்கு ஒரு அண்ணன் வந்து என்னை கூட்டிக்கிட்டு போனான். சந்தோஷமாக டாட்டா காட்டினேன் அம்மா முந்தானையில முகத்த பொத்திகிட்டு அழுதா”

ஜனவரி 9:
“மும்பை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஸ்டேசன்ல இருந்து வீட்டுக்கு எங்களை கூட்டிப்போக காரை அனுப்பி இருந்தாரு முதலாளி. காருல ஏறினவுடன் சாப்பிட பச்சைக்கலர் ஆப்பிள் தந்தாரு டிரைவரு. அவ்வளவு ருசியான ஆப்பிளை நான் சாப்பிட்டதேயில்லை.
அரைமணிநேரத்துல வீட்டுக்கு போய் சேர்ந்தோம். முதலாளி செவப்பா உயரமா இருந்தாரு. அவரைத் தவிர வீட்டுல வேறு யாருமில்ல. இவ்வளவு பெரிய பங்களாவை எங்க கிராமத்தில் நான் பார்த்ததே இல்ல. எனக்கு வீடு ரொம்ப பிடிச்சிருக்கு”

ஜனவரி 10:
“இன்னைக்கு காலையில எழுந்திருச்சவுடன் குளிச்சிட்டு வீட்டை துடைச்சிட்டிருந்தேன். மேல் மாடியிலிருந்து முதலாளி கூப்பிட்டாரு. அவர் ரூமுக்கு போனவுடன் என்னை இறுக்கி கட்டிபிடிச்சுகிட்டு முத்தமிட ஆரம்பிச்சாரு. எனக்கு ஒண்ணும் புரியலை. நிறைய முத்தம் கொடுத்துட்டு நிறைய சாக்லெட் தந்தாரு. எனக்கு ஏன் முத்தம் தந்தாருன்னு தெரியலை. சாக்லெட் நிறைய தந்த முதலாளியை ரொம்ப பிடிச்சிருக்கு”

ரயிலில் எல்லோரும் உறங்கிவிட்டார்கள். மிடில் பெர்த்தில் படுத்துக்கொண்டு டைரிக்குள் ஆழ்ந்திருந்தேன் நான்.

ஜனவரி 11:

“இன்னைக்கும் அவரு ரூமுக்கு என்னை கூப்பிட்டார். நிறைய சாக்லெட் கிடைக்கும்னு நினைச்சுக்கிட்டே ஓடினேன். அவரோட இடதுகையில ஊசி குத்திக்கிட்டு ஏதோ உளறினார். என்னை இழுத்து என் ட்ரெஸ்ஸை கழற்ற சொன்னார். எதுக்கு அப்படி சொன்னாருன்னு புரியாம ட்ரெஸ்ஸை கழற்றினேன். ஏசி குளிரில் என் உடம்பு நடுங்க ஆரம்பிச்சிருச்சி.
அவர் ரூமை விட்டு வெளியே வரும்போது உடம்பு வலி தாங்க முடியல. வலி மறக்க நிறைய சாக்லெட் சாப்பிட்டேன். ஏன் அப்படி செஞ்சாருன்னுதான் புரியலை”
டைரியை படித்துக்கொண்டிருந்த எனக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தது. மெதுவாய் அடுத்த பக்கத்தை புரட்டினேன்.

ஜனவரி 12:

“இன்னைக்கு என்னை மாதிரி நாலு சின்னப்பொண்ணுங்க வந்தாங்க. அவங்களும் என்கூடதான் இருப்பாங்கன்னு சொன்னாரு முதலாளி. எனக்கு சாக்லெட் கிடைக்கறது குறைஞ்சு போச்சு”

பிப்ரவரி 10:

“இங்க வந்து ஒரு மாசம் ஓடிருச்சு. ஒருவாரத்தில் வர்றேன்னு சொன்ன அம்மாவும் வரலை. எனக்கு அம்மாவை பார்க்கணும் போல இருக்கு. அம்மாவோட மடியில படுக்கணும். இந்த ஒரு மாசத்துல இருவதுக்கும் மேற்பட்ட பொண்ணுங்களை வேலைக்கு வச்சுக்கிட்டாரு முதலாளி. எனக்கு ஒரு ப்ரெண்ட் கிடைச்சிருக்கா. அவளும் கிராமத்திலிருந்துதான் வந்தாளாம். பெயர் திவ்யா. திவ்யாவிற்கு அம்மா கிடையாதாம்.
அவளோட அப்பா இங்கே வந்து விட்டுட்டு போய்ட்டாரு. இப்போ இராத்திரி அடிக்கடி தூக்கம் கெடுகிறது. தினமும் நாலு அஞ்சு பேர் வர்றாங்க. உடம்பு வலி உயிர்போகுது”

பிப்ரவரி 20:

“அம்மா நீ எப்போம்மா வருவே? உனக்கு எழுதின லெட்டருக்கு ஏன் பதில் போடலை? எனக்கு அழுகையா வருதும்மா… ஒரு வாரமா காய்ச்சல். திவ்யா மட்டும் பக்கத்துலேயே உட்கார்ந்திருப்பா. யாருமே கவனிக்க இல்லம்மா.. நீ வருவியா மாட்டியா?”

ரயிலைவிட வேகமாய் தடதடத்தது என் இதயம். அதற்கு மேல் வாசிக்க முடியாமல் மூடிவைத்துவிட்டு, படுக்கையிலிருந்து இறங்கி அருகிலிருந்த கதவை திறந்து சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டேன். மீண்டும் படுக்கைக்கு வந்து டைரியை திறந்தேன்.

மார்ச் 12:
“இரண்டு நாளா நான் சாப்பிடலை. திவ்யா செத்துப்போயிட்டா. பாவாடையெல்லாம் ரத்தமா இருந்துச்சு. முதலாளி கொஞ்சம் கூட கவலப்படல. இரண்டு பேரு வந்து தூக்கிட்டு போயிட்டாங்க. எனக்கு பயமா இருக்கு. முருகா முருகான்னு நூத்தியெட்டு தடவ எழுதுனப்பறம் கொஞ்சம் பயம் இல்லாம இருக்கேன்”

மார்ச் 12ம் தேதிக்கு பின்னர் டைரி வெறுமையாய் இருந்தது. எந்த ஒரு பக்கத்திலும் எதுவும் எழுதப்படவில்லை. மும்பையில் வல்லுறவுக்கு ஈடுபடுத்தப்பட்ட ஒரு சிறுமியின் டைரி சென்னையில் எனக்கு கிடைத்திருக்கிறது.

அப்படியெனில் அந்த நரகத்திலிருந்து தப்பித்து சென்னை சென்றிருப்பாளோ? இப்போது உயிருடன் இருப்பாளா? ரொம்ப நேரம் ஏதேதோ யோசித்துக்கொண்டிருந்தேன். பின்னிரவில் உறங்கிவிட்டேன்.

மறுநாள் இரவு மும்பையை அடைந்தது ரயில். இரு நாட்கள் அலுவலகப்பணிகளை முடித்துவிட்டு மீண்டும் சென்னை வந்தடைந்தேன். மனசுக்குள் அந்தச்சிறுமியின் கதறல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. ஏழு வருடங்களுக்கு முன்பு சிதைந்துபோன அந்தச் சிறுமியின் நினைவு இரண்டு வாரங்களுக்கு என் மனசுக்குள் சுற்றிக்கொண்டிருந்தது.

நின்றால், நடந்தால் அச்சிறுமியின் நிழல் முகம் நினைவுத் திரையிலாடிக்கொண்டேயிருந்தது.

அலுவலகத்தில் திடீரென்று என்னை ஜான்ஸியில் உள்ள க்ளையின்ட் ஆபிஸுக்கு டெபுடேஷனில் அனுப்ப முடிவெடுத்தார்கள்.அரைமனதாக சம்மதித்தேன்.
சென்னையிலிருந்து தில்லிக்கு விமானத்திலும், தில்லியிலிருந்து ஜான்ஸிக்கு இரயிலும் செல்ல முடிவாகியது. பயணம் என்பது எனக்கு எப்போதுமே உவப்பானது, எத்தனை எத்தனை மனிதர்கள், எத்தனைவித வாழ்க்கை முறைகள், பார்க்க பார்க்க அதிசயமாக இருக்கும் எனக்கு. பம்பாய் பயணத்தின் போது படித்த அச்சிறுமியின் ஞாபகம் இன்னும் மறக்க முடியாததாக இருந்தது.

தில்லி பனிக் காற்று மூச்சையடைத்தது. சென்னையின் டிசம்பர் குளிருக்கே நடுங்கிப் போவேன், நல்ல வேளை மப்ளர் ஜெர்கின் எல்லாம் எடுத்துவந்திருந்தேன். ரயில் நிலையத்தில் புத்தகங்கள் வாங்கி கொண்டு என் கோச்சினைத் தேடி பெட்டி படுக்கைகளை வைத்துவிட்டு என் சீட்டில் அசதியுடன் அமர்ந்தேன். கையில் இந்தியா டுடே. அசிரத்தையாக அதை புரட்டிக் கொண்டிருந்த போது இருவது வயது மதிக்கத் தக்க இளம் பெண் என் இருக்கைக்கு நேர் எதிரில் வந்து அமர்ந்தாள். நெற்றி வகிட்டில் குங்குமம் இருந்தது. லட்சணமாக இருந்தாள். தமிழ்நாட்டுப் பெண் என்று பார்த்ததும் தெரிந்தது. அவள் சீட்டில் அமர்ந்து ஜன்னலில் கணவனிடம் பிரியாவிடை கொடுத்துக் கொண்டிருந்தாள்.

ரயில் மெல்ல நகர்ந்தது.அதனுடன் அவனும் கொஞ்ச தூரம் நடந்து வந்தான். அவர்கள் மராத்தியில் பேசிக்கொண்டார்கள். அவன் கண் பார்வையில் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள். பின் அந்த கம்பார்மெண்டை ஒரு நோட்டம் விட்டாள். என் முகத்தில் அவள் விழி ஒரிருரு நிமிடம் அதிகமாக நிலைபெற்று பின் மாறியது. நான் புத்தகம் வாசிப்பது போல பாசாங்கு செய்து கொண்டு அவளை கவனித்துக் கொண்டிருந்தேன். பிறன் மனை நோக்காத பெரும் குணத்தான் தான் ஆயினும் அழகான ஒரு தமிழ்ப்பெண் எதிரில் இருக்க எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

அவள் சற்று நேரத்தில் கைப்பையிலிருந்து ஒரு டைரியை எடுத்தாள். ரயிலின் ஆட்டத்திற்கெல்லாம் சளைத்தவள் இல்லை போலும். கோணல் மாணலாக ஏதோ எழுத ஆரம்பித்தாள். எட்டிப் பார்ப்பது நாகரிகமற்ற செயல் என்பதால் அமைதியாக இருந்தேன்.

அவள் கைப்பையில் டைரியை வைத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள். அதன் பின் அப்பர் பெர்த்தில் ஏறி கைப்பையை தலையணையாக வைத்து படுத்து தூங்கியே விட்டாள். எனக்கு லோயர் பெர்த். அடிக்கடி மேலே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ரயில் சட்டென்று ஒரு இடத்தில் குலுங்கி நின்றது. யாவரும் நல்ல உறக்கத்தில், இவளின் பையிலிருந்து நழுவி ஏதோ கீழே விழுந்தது. அதை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள் அவள். சட்டென்று குனிந்து அதை கையில் எடுத்தேன். அவளின் டைரி! என்ன இது என் வாழ்க்கையில் டைரி அடிக்கடி குறிக்கிடுகிறதே,இது என்ன இடியை என் தலையில் இறக்கப் போகிறதோ பேசாமல் அதை அவள் பையில் வைத்துவிடலாம என்று நினைத்தேன். அவள் விழித்துக் கொண்டால் என்ன நினைப்பாள், திருடன் என்று கத்துவாள். சே என்ன தர்ம சங்க்டம. எல்லாவற்றையும் மீறீய ஆர்வத்தில் டைரியை கைகள் நடுங்க அந்த மெல்லிய விளக்கொளியில் வாசிக்கத் தொடங்கினேன்.

அவள் இன்றைய தேதியில் தன் கணவர் மிஸ்ராவை பிரிந்து வேலை நிமித்தமாக போவதைப் பற்றி எழுதியிருந்தாள். முந்தைய பக்கங்கள் எல்லாவற்றிலும் அழகுத் தமிழில் அவள் கணவன் புராணம் தான். சில அந்தரங்கமானவற்றைக் கூட எழுதியிருந்தாள்.ஒரு பக்கத்தை வாசித்த போது என் இதயம் துடிப்பதை ஒரு நொடி நிறுத்திக் கொண்டது. அவள் பம்பாய் சிவப்பு விளக்கு பகுதியில்ருந்து மீட்டு எடுக்கப்பட்ட பெண்.

அவமானத்தின் கறை படிந்த தன் வாழ்வை எப்படி சமன் செய்வது எனத் தெரியாமல் சிறு வயதில் அரைகுறையாக கிறுக்கிக் கொண்டிருந்த ஓவிய முயற்சிக்கு உயிர் கொடுக்க மிஸ்ராவிடம் மாணவியாக சேர்ந்ததும், அவர் இவளின் அன்பாலும் திறமையாலும் ஈர்க்கப்பட்டு மனைவியானதையும் விரிவாக எழுதியிருந்தாள். எழுதும்போதும் கண்ணீர் சிந்தியிருக்க வேண்டும்.சில எழுத்துக்கள் அழிந்திருந்தது.

வாழ்க்கையெனும் ஓவியம் அவளை சிதைத்து அலங்கோலமாக்கிவிட்டு பின் அழகாக்கியும் பார்த்துவிட்டது. அழகு அலங்கோலம் இவையெல்லாம் அவரவர் மனப்பான்மை.

மேலும் அந்த டைரியை என்னால் வாசிக்க முடியவில்லை. அச்சிறுமியின் டைரியும் இந்த யுவதியும் ஒருவரே தானா? அல்லது இருவரின் வாழ்க்கை சூழல் ஒரே விதத்தில் இருக்கின்றதா? இருவரும் தமிழ்ப்பெண்கள் என்பதைத் தவிர வேறு ஒரு குறிப்பும் என்னிடம் இல்லை.

அந்தக் குழந்தைக் கையெழுத்திற்கும் இந்த முதிர்ந்த எழுத்திற்கும் உண்டான வித்யாசங்களை கண்டறியும் திறன் எனக்கில்லை.எப்படியோ மனம் கனத்துக் கிடந்த நான் புதிதாய் எதோ ஒன்று எனக்குள் உட்புகுந்தது போன்ற ஆசுவாசத்துடன் கண்கள் மூடி உறங்க ஆரம்பித்தேன். கனவில் கைகோர்த்து சென்றனர் சிறுமி ஒருத்தியும்,இளம்பெண் ஒருத்தியும்.

எங்கும் நிற்காமல் அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தது ரயில்.

– மே 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *