யாரென்று அறியாமல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 6,428 
 
 

மருத்துவமனையில் நடுவில் தடுப்பு மட்டும் போட்டு இரு புற வாசலுடன், கட்டில் போடப்பட்டிருந்தது. ஒரு கட்டிலில் நீண்ட நாள் நோயாளியாய் நடமாட முடியாமல் படுத்திருந்த பாஸ்கரன் மருந்தின் வேகத்தில் கண்ணயர்ந்து கொண்டிருந்தவர், தடுப்பை தாண்டி பக்கத்து கட்டிலின் அருகே சத்தம் கேட்டு விழித்து பார்த்தார்.

யாரையோ கொண்டு வந்து படுக்க வைக்கும் சத்தம் கேட்டது, வலியால் அழுகும் சத்தம் கேட்டதும், பாஸ்கரன் நோயாளியாய் வந்திருப்பவன் சிறுவனாய் இருக்க வேண்டும், என்று முடிவு செய்தார்.

“எல்லாம் சரியாகிவிடும்” குரல் பெண்மையாய் ஒலித்ததை வைத்து அது அந்த சிறுவனின் அம்மாவாய் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ஆண் குரல் ஒன்று ஒலித்தது. அம்மா உங்க பையனை கொண்டு வந்து சேர்த்துட்டோம், இனி உங்க பாடு என்று சொல்வதும், ரொம்ப நன்றிங்க ஐயா, என்று அந்த பெண் சொல்வதும் கேட்டது. அப்புறம் ஏதோ பாத்து கொடுங்க என்று ஆணின் குரலும், ஐயா நாங்க ரொம்ப ஏழைங்க, இவங்க அப்பா கூட இல்லை, மெல்லிய விசும்பலுடன் சொல்வது, சரிம்மா, நாங்களும் ஏழைங்க தான், அதுதான் கேட்டேன், கொஞ்சம் நிசப்தம் பின் சரி ‘வர்றோம்” என்ற ஆணின் குரல் கேட்டு பின் அமைதி ஆனது.

அந்த சிறுவனின் வேதனை முனகல் மட்டும் கேட்டது. அம்மா,,அம்மா கொஞ்சம் பொறுத்துக்க ராசா, அம்மா போய் உனக்கு ஏதாவது வாங்கியாரேன் அம்மா சொல்வது கேட்டது.

இவர் படுத்துக்கொண்டே மெல்லிய குரலில் நீ எங்கேயும் போகாதம்மா, கொஞ்ச நேரத்துல அவங்களே பன்னும் டீயும் கொண்டு வந்து தருவாங்க.

அந்த பக்கம் இருந்து திடீரென்று குரல் கேட்டதும், பையனின் வேதனை அனத்தல் கூட சற்று நின்றது. ரொம்ப நன்றிங்க, அந்த பெண் இவரின் குரலுக்கு மதிப்பளித்து பதிலளித்தாள்.

சற்று நேரம் அமைதி !.. ஐயா உங்க வீட்டுல இருந்து யாரும் வரலியா? அங்கிருந்து அந்த பெண்ணின் கேள்விக்கு இவர் மெல்லிய சிரிப்புடன் ஒருத்தரும் இல்லையம்மா, எல்லோரும் போயிட்டாங்க. இந்த பதிலால் அவள் அவரின் நிலைமையை அறிந்து கொள்ள முடியாமல் மெளனமாகிவிட்டாள். அதற்குள் கச முச என்ற சத்தம் “பெட் நம்பர் 303” இந்தாங்கம்மா, ஏதோ கொடுப்பதும் நன்றிங்க ஐயா, இந்த பெண்ணின் குரலும் கேட்டது. இந்த பெண்ணின் இங்கிருந்து போவதற்குள் ஆயிரம் தடவையாவது நன்றி சொல்லிவிடுவாள் என்று நினைத்துக்கொண்டார் பாஸ்கரன்.

ஒரு மணி நேரம் ஓடியிருக்கும், பக்கத்தில் டாக்டரின் குரல் கேட்ட்து.

எல்லாம் சரியாயிடும் தம்பி, கவலைப்படாதே. இந்த வாசல் வழியாக அடுத்து இந்த வார்டுக்குள் வருவார். நான் வந்த பொழுது இதே வார்த்தையைத்தான் சொன்னார், பெருமூச்சு விட்டு டாக்டரின் வருகையை எதிர்பார்த்து தயாரானார் பாஸ்கரன். எப்படியிருக்கீங்க? வழக்கமான பழகிய குரலில் கேட்டு கொண்டே வந்தார் டாக்டர். அப்படியேதான் இருக்கேன் டாக்டர், இவரின் விட்டேத்தியான குரலை உணர்ந்த டாக்டர் கொஞ்ச கொஞ்சமாகத்தான் சரியாகும், மனசை தெம்பா வச்சுங்குங்க சொல்லிவிட்டு சென்று விட்டார்.

அந்த பக்கமிருந்து அந்த பெண்ணின் குரல் கேட்டது. உங்களுக்கு என்ன உடம்புக்கு? அவர் மெல்லிய குரலில் எல்லாம் நானே செஞ்சுகிட்ட வேலைதாம்மா, இந்த ஆஸ்பத்திரி, நோய் எல்லாம், இவரின் இந்த பதிலாலும் அவளுக்கு இவருக்கு என்ன நோய் என்று புரியவில்லை.மறுபடியும் மெளனம்.

இந்த மெளனம் இவருக்கு போரடித்தது, ஏதோ பேச வேண்டும் என்று தோன்றியதால் உன் பையனுக்கு என்னம்மா உடம்புக்கு? அவள் பெருமூச்சுடன் யாராவது கேட்க மாட்டார்களா? என்று தவித்திருந்த்து போல அதை ஏய்யா கேடகறீங்க நான் கோயில் வாசல்ல பூ வித்துகிட்டிருக்கறவ,இவனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிச்சுட்டு அப்பத்தான் கடையில உக்காருறேன் யாரோ ஓடி வந்து சொல்றாங்க, உன் பையனை வண்டிக்காரன் ஒருத்தன் இடிச்சுட்டு நிக்காம போயிட்டான்னு. நான் எல்லாத்தையுகம் விட்டுட்டு ஓடுனேன். கால்ல நல்லா அடிபட்டு கிடந்தான். அவங்களை இவங்களை கெஞ்சி கூத்தாடி கவர்மெண்ட் ஆசுபத்திரிக்கு தூக்கிட்டு வந்தேன்.எக்ஸ்ரே எல்லாம் எடுத்து பாத்து காலுல கட்டு போட்டுட்டு பத்து நாள் படுக்கையில இருக்கட்டும்னுட்டாங்க. என் பொழப்பும் போச்சு, சொல்லிவிட்டு மூக்கை இழுத்து உறிஞ்சினாள்.

சற்று நேரம் மெளனம், இவனோட அப்பா, கேட்டவுடன் அந்த பெண் ஆங்கார குரலுடன் அந்த ஆளை எதுக்கய்யா ஞாபகப்படுத்தறீங்க, அவன் யார் கூடயோ போயிட்டான்.

இப்பொழுது இவர் மெளனமானார். அவள் அவரிடமிருந்து எந்த பதிலும் வராத்தால் தனக்குத்தானே அந்த ஆளு இந்த பையனை கை குழந்தையிலே விட்டுட்டு போனான், பதினஞ்சு வருசம் இந்த பையனை வளத்தறதுக்கு நான் பட்ட பாடு, இப்ப வந்து ஆசுபத்திரியில போட்டு என உசிரும் இப்படி அல்லாடுதே. மீண்டும் அழுகையுடன் புலம்பலை ஆரம்பித்து விட்டாள்.

அவரிடமிருந்து மீண்டும் எந்த பதிலும் வராத்தால் அவர் தூங்கி விட்டாரோ என்று கருதி கொஞ்சம் அமைதியாயிருந்தாள்.

இரண்டு நாட்கள் ஒடியிருந்தன. இப்பொழுது அந்த பையனின் வேதனை குரல் குறைந்திருந்தது. இடையில் இரண்டு மூன்று முறை எக்ஸ்ரே, மற்றும் எதற்கோ அவனை கொண்டு சென்று வந்தார்கள். சத்தத்தை வைத்தே ஊகித்துக்கொண்டார் பாஸ்கரன்.

பையன் இப்பொழுது அவன் அம்மாவிடம் பேசுவது கேட்டது. நான் பாத்துக்கறேன், நீ வேணா கடைக்கு போய்க்கோ, அவள் எப்படிடா போக முடியும் என்று மூக்க்கை சிந்துவதும், சும்மா அழுகாதே, இப்பத்தான் நான் நல்லா இருக்கேனே, பக்கத்துல அவர் எனக்கு பேச்சு துணைக்கு இருக்காரே,அப்புறம் என்ன பயம், போய்ட்டு வா. பையனின் குரலில் ஒரு தைரியம்தெரிந்தது. பரவாயில்லை பிழைத்துக்கொள்வான், பாஸ்கரின் மனம் நினைத்துக்கொண்டது.

ஐயா அந்த பெண்ணின் குரல் இவரின் சிந்தனையை கலைத்தது.என் புள்ளைய தனியா விட்டுட்டு போறேன், கொஞ்சம் பாத்துங்குங்க ஐயா,சொல்வது கேட்டது. இவருக்கு சிரிப்பு வந்தது. எழவே முடியாத ஒருவனை காப்பாளனாக இருக்க சொல்கிறாள், மனதுக்குள் நினைத்துக்கொண்டவர்,சரிம்மா, உன் பையந்தான் சொல்றானே, தைரியமா போய்ட்டு வா, சொல்லிவிட்டு களைப்பால் கண்ணை மூடிக்கொண்டார். அதன் பின் அமைதி.

ஒரு வாரம் ஓடி விட்டது. பையன் இப்பொழுது காலையில் ஐயா என்று குரல் கொடுப்பான், இவர் என்ன தம்பி என்று கேட்பார். ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு அமைதியாகி விடுவான். அவர் இருக்கிறாரா இல்லையா என்று நிச்சயம் செய்து கொள்கிறான் என்பதை இவர் யூகித்துக்கொள்வார். மாலையில் இவன் அம்மா வந்தால் மட்டும் ஐயா என்று கூப்பிட்டு அங்கிருந்தே அன்று கோயிலருகில் நடந்தவைகளை சொல்ல ஆரம்பிப்பாள்.இவர் உம்..கொட்டிக்கொண்டே இருப்பார். ஒரு கட்ட்த்தில் அவளும் களைப்பால் தூங்கி விடுவாள்.இவருக்கு தூக்கம் வராது, அவரின் உடலின் உள் வேதனைகளால் அங்கும் இங்கும் புரண்டு படுப்பார்.

டாக்டரின் குரல் கேட்டது. நல்லாயிடுச்சுப்பா, நாளை கட்டை எடுத்துடலாம், சொல்வது இவருக்கு கேட்டது.அந்தம்மா ‘நன்றிங்க ஐயா’ என்று சொல்வதும் கேட்டது.

இரவு அதிசயமாய் அந்த பையன் பேசினான். ஐயா, நாளை கட்டு அவுத்தவுடனே உங்களைத்தான் வந்து பாக்கணும்னு இருக்கேன். “வந்து பாருப்பா”,என்று சொன்னவர் மெல்ல கண்ணை மூடினார்.

இரவில் இவரால் தூங்க முடியவில்லை, உடல் வலியால் துடிக்க ஆரம்பித்தார். அங்கிருந்த நர்ஸ் ஓடி வந்தவள் இவரின் நிலைமை பார்த்து பெரிய டாக்டரை கூப்பிட விரைந்தாள்.

மறு நாள் இந்த பையனின் கட்டுக்களை அவிழ்த்து, மறுபடியும் ஒரு எக்ஸ்ரே எடுத்து பார்த்து டாக்டர் வந்து நன்றாகிவிட்டது என்றுசொன்னார். நீங்கள் போகலாம் என்று சொன்னவுடன், அவன் படுத்திருந்த கட்டிலுக்கு வந்தவன் ஐயா என்று கூப்பிட்டான். அந்த பக்கம் அமைதியாய் இருக்க மீண்டும் கூப்பிட்டு பார்த்தான். அவனின் அம்மாவும் “ஐயா” என்று கூப்பிட்டாள்.பதிலில்லை.

மாலை ஆகிவிட்டது, அவர்களை வீட்டுக்கு அனுப்ப. அதற்குள் அம்மாவும்,பையனும் அடுத்த வாசல் வழியாக அவர் படுத்திருந்த படுக்கைக்கு சென்று ‘சொல்லிவிட்டு’ போகலாம் என்று பார்த்த பொழுது அந்த கட்டிலில் ஒரு பெண் படுத்திருந்தாள்.

யோசனையுடன் அவர்கள் அங்கிருந்த நர்ஸை கேட்டனர். அவருக்கு இராத்திரி ரொம்ப முடியாம கொண்டு போகும்போதே இறந்துட்டாரு. காலையில யாரோ வந்து பாடிய வாங்கிட்டு போயிட்டாங்க. சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

அம்மாவும், பிள்ளயும் அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தனர்.இறந்தவர் தன் பிறப்புக்கு காரணமானவர் என்று தெரியாமல் மகனும்,தன்னை மணந்து விட்டு ஓடிப்போனவர்தான் அவர் என்று அறியாத அவனின் தாயும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *