கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 14, 2015
பார்வையிட்டோர்: 18,418 
 
 

அந்த இடத்துக்கு அவர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஏன் வந்து சேர்ந்தார்கள் என்பதும் சரியாகத் தெரியவில்லை. எதனிடம் இருந்தோ தப்பித்து வந்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் எதற்குப் போய்ச் சேர்ந்தேன், எப்படிப் போய்ச் சேர்ந்தேன் என்பதற்கும் அதே காரணம்தான். எதனிடம் இருந்தோ தப்பித்துக்கொள்ள…

”இந்த ஊர்ல தங்க, ஒரு இடம் கிடைக்குமா?” என்றதற்கு ஒரு கணம், அங்கிருந்த ஒரே டீக்கடையில் நெடுநேரம் மௌனம் நிலவியது.

கடைசியாக ”ஏன் இங்கே தங்கணும்?” என்றார் ஒருவர் சற்றே விரோதமாக.

நான் தயங்கி, ”நான் ஒரு எழுத்துக்காரன்” என்றேன்.

யாரும் பேசாது இருந்தார்கள். நெய்யாறு புழையின் ஈரக் காற்று ஒரு மாதிரி இரும்பு வீச்சத்துடன் மேலே மோதியது. தூரத்தில் ரட்ரட்டென்ற சத்தத்துடன் சிறிய இன்ஜின் பொருத்திய படகுகளில் மாணவிகள் சீருடைகளுடன் வந்துகொண்டு இருந்தனர். நான் டீயை வைத்துவிட்டு எழுந்தேன்.

”அந்த சிறீதரன் வீட்டு மாடியைக் கேட்கலாம்!” என்று ஒருவர் சொன்னார்.

”பாவம்… அவ கைச்செலவுக்கு ஆகும்.”

‘யாமினி போட்டோ ஸ்டுடியோ’வின் மாடியில் நான் இப்படித்தான் குடிவந்து சேர்ந்தேன்.

யாமினி, அந்த வீட்டின் பெண் குழந்தை. சிறீதரன், அவளின் அப்பா இல்லை என்று பின்னால் தெரிந்தது. உண்மையில் நான் தங்க நேர்ந்ததுதான் ஸ்டுடியோ. ஆனால், அது எப்போதாவது அதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தரும்படி இருந்தது. அந்த ஊரில் யார் புகைப்படம் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்?

இரட்டை மரக்கால்களில் கவட்டையை விரித்து நிற்கும் விநோதப் பூச்சி போல பழைய கேமிரா ஒன்று. அதன் மீது தூசு படிந்த ஒரு கறுப்புப் போர்வை. பின்னால் கிச்சன்போல் இருந்த அறையைத்தான் இருட்டு அறையாக சிறீதரன் உபயோகப்படுத்த உத்தேசித்து இருந்தான் என்பது தெரிந்தது. மரத்தளம் முழுவதும், சிந்திக்கிடந்த டெவலப்பரின் கறைகள். ஜன்னலை இறுகப் பூட்டிவைத்திருக்க, நான் அதைத் திறக்க முயன்றபோது யாமினி, ”பூச்சி வரும் அங்கிள்…” என்றாள்.

யாமினிக்கு லேசாகப் பூனைக் கண்கள். சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழுந்தது. ஆனால், போஷாக்குக் குறையின் காரணமாக ஒட்டிய கன்னங்கள். சிறுத்து நீண்ட கைகள். அவள் எப்போதும் அணிந்திருக்கும் பினஃபோரில் நூல்கள் பிய்ந்து காற்றில் அலைந்துகொண்டு இருந்தன. உற்றுக் கவனித்தால் அவள் உடல் எப்போதும் மெலிதாக நடுங்கிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

யாமினியின் அம்மா பெயரை நான் ஒருபோதும் அறிந்தது இல்லை. அவள் எனக்கு மட்டுமல்ல, நாட்டுக்காரர்களுக்கும் ‘யாமினியம்மா’தான். அவள் முதலில் நான் தங்கிக்கொள்ள அனுமதி அளிக்கவில்லை. ”முடியாது” என்று சொல்லிவிட்டு முற்றத்தைப் பெருக்க ஆரம்பித்துவிட்டாள். அவள் தலைமுடியில் எண்ணெய்ப்பசையே இல்லை என்பதைக் கவனித்தேன். காய்ச்சலில் விழுந்தவள்போல் இருந்தாள். ஆனால், அழகி என்பது அவள் நகரும்போது தெரிந்தது. குனியும்போது, சட்டென்று நினைவு வந்தாற்போல் முண்டின் மீது துண்டை இழுத்துக்கொண்டாள். அப்போது அவள் முகத்தில் செம்மை படர்ந்தது.

”முடியாதுனு பறஞ்சதல்லோ?” – அவள், என் கண்களைப் பார்க்கவே இல்லை என்பதைக் கவனித்தேன். அவற்றை என்னைப் பார்க்க வைத்துவிட்டால், ஒருவேளை அவள் சம்மதித்து விடலாம் என்று தோன்றியது. யாமினிதான் நிமிர்ந்து கண்கள் கூச என்னைப் பார்த்தாள். நான் அவளைப் பார்த்தபடி ”பணம் தர்றேன்” என்றேன்.

அவள் கையில் பெருக்குமாறுடன் கொஞ்ச நேரம் அப்படியே தூரப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். பிறகு மெல்லிய குரலில், ”எத்தனை தரும்?”

சிறீதரன் எப்போது வருவான் போவான் என்று யாருக்கும் தெரியவில்லை. அவன் ஒரு குடிகாரன் என்று டீக்கடைக்காரர் சொன்னார்.

”இந்தக் குட்டி அவன்கிட்டே எப்படியோ மாட்டிக்கிட்டுது” என்றார்.

”வட கேரளத்துல எங்கோ நல்ல தரவாட்டுக் குட்டினு தோணுது. வர்றப்போ ஒரு சூரியப் பிரபை போல இங்கே வந்தா. பின்னே தொடங்குச்சு அடியும் பிடியும்…”

பிறகு, அவர் என்னைக் கூர்ந்து பார்த்து ”பின்னே ஒரு காரியம். தனிச்சப் பொண்ணுனு உங்க பாண்டித்தனத்தைக் காட்ட வேண்டா.அப்படி சேட்டை பண்ணின இவிடத்து சட்டாம்பி ஒருத்தனைக் கைக்கத்தியால அறுத்து எறிஞ்சிட்டா!”

யாமினி, நெட்டாவில் இருந்த கிறிஸ்துவப் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தாள். புழுதி ஒரு போர்வைபோல கிடக்கும் சாலையில் ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் நடந்து போய்வருவாள். கேரளத்துக்கும் தமிழகத்துக்கும் நடுவே சட்டவிரோதமாக மரம், மணல் பிற விஷயங்களைக் கடத்தும் லாரிகள் பிசாசுத் தனமாக விரையும் பாதை அது. மழை பெய்யும் தினங்களில் அந்தச் சாலை வெள்ளத்தில் மிதக்கும். கேரளம், தமிழகம் இரண்டாலும் கைவிடப்பட்ட ஒரு முனை.

எனக்கு இரவுச் சாப்பாடு ஒரு பிரச்னையாக இருந்தது. டீக்கடை நாயரிடம் காலை தோசை சாப்பிடுவேன். சிலநேரம் புட்டும் பயறும். மதியம் நெட்டாவில் ரப்பர் வாரிய ஆபீஸுக்கு எதிரே ஒரு கடையில் சோறும் ஆற்று மீனும் கிடைக்கும். இரவு என்பது அந்த இடத்தில் தனித்து இருப்பவருக்கான இடம் அல்ல. நெடுமங்காடு ரோடு வரை சில நேரம் போகவேண்டியிருக்கும்.

ஒருநாள் அப்படிப் போய்விட்டு, ஒரு லாரியில் நடு இரவில் திரும்பிவந்தேன். மாடிப்படியில் கால் வைத்ததும் கீழே விளக்கு போடப்பட்டது.

”ஆரு?’

நான் தயங்கி, ”நான்தான் சாப்பிட நெடுமங்காடு ரோடு வரைக்குப் போய்வந்தேன்!”

வெளிச்சம், சற்று நேரம் மௌனமாக இருந்தது. பிறகு அணைக்கப்பட்டது.

மறுநாள் காலையில், நான் எழுந்து வெளியில் போனபோது வாசலில் யாமினியின் அம்மா கொடியில் துணிகளை உலர்த்திக்கொண்டி ருந்தாள். அவளைக் கடக்கும்போது முகம் பார்க்காமல், ”இனி ராத்திரி வெளியே போ வேண்டாம்” என்றாள்.

”சக்கரம் கொடுத்தா, கொஞ்சம் கஞ்சியும் கிழங்கும் பப்படமும் வைப்பேன்…”

அவ்விதமே அது முடிவாயிற்று. ஆனால், இதில் ஒரு சிரமம் இருந்தது. எனக்கு மாலையில் நிறைய நேரம் இருந்தது. ”மலைப் பகுதிகளில் இரவுகள் மிக நீளமானவை. துணையாக மதுவோ, மங்கையோ இல்லாதவருக்கு, அது பாவியின் நரகம்போல நீண்டுகொண்டே போகும்” என்று டீக்கடைக்காரர் சொன்னார்.தவிரவும் பல நேரங்களில் மின்சாரம் இருக்காது.

நான், மாடியின் வெளி வராண்டாவில் ஒரு உடைந்த நாற்காலியைப் போட்டுக்கொண்டு, தூரத்தில் புழையில் அலையும் வெளிச்சப் புள்ளிகளைப் பார்த்தவண்ணமே இருப்பேன். கீழே அவ்வப்போது யாமினி படிக்கும் சத்தம் அல்லது பாதரசத் திட்டுகள் போல அவள் அம்மா சிந்தும் சிறுசிறு பாத்திரச் சத்தங்கள் கேட்டபடியே இருக்கும்.

ஒருநாள் யாமினியின் அம்மா பாடினாள். நான் அந்தப் பாட்டைக் கேட்டது இல்லை. அது ஓர் இடைக்கால மலையாளச் சினிமாப் பாட்டு.

”அ ராத்திரி மாஞ்சு போயி…
ஒரு ரத்த சோகமாய்..” – அப்போது அவள் குரல் எப்படி நடுங்கியது என்று நான் நினைத்துக்கொண்டேன்.

”ஆயிரம் கினாக்களும் போயி மறைஞ்சு…”

எம்.டி.வாசுதேவன் நாயரின் கதையில் ஹரிஹரன் இயக்கத்தில் வந்த ஒரு படம். நான் அந்தப் படத்தை திரிச்சூரில் ஒரு தியேட்டரில் பார்த்தேன். அந்தப் படத்தை என்னுடன் பார்த்த பெண் தூக்கு மாட்டி, பிறகு செத்துப்போனாள். எனக்குச் சட்டென்று அந்தப் பாடலைக் கேட்டதும் படத்தில் நடித்த நடிகையின் முகம் நினைவுக்கு வந்தது. மிக அழகான பெண். அவளே பின்னால், நீலப் படங்களில் எல்லாம் நடிக்க நேர்ந்தது ஒரு துயரம். ஒரு சாயலில் யாமினியின் அம்மாவுக்கு அந்த நடிகையின் சாயல் இருக்கிறதாக எனக்கொரு மயக்கம் தோன்றியது.

பாட்டு முடிந்ததும், சட்டென்று அந்த இடத்தை ஒரு பெரிய மௌனம் சூழ்ந்துகொண்டது. அதைத் தாங்க முடியாதது போல இரவுப் பூச்சிகள் கூட்டமாக இரைய ஆரம்பித்தன. பின்னர் அவையும் நின்று தொலைவில் நீர் தளும்பும் ஓசை மட்டும் ‘மெதுக் மெதுக்’ என்று கேட்டுக்கொண்டிருந்தது. நான் அவ்விதமே தூங்கிவிட்டேன்.

மறுநாள் ஏனோ என்னால் எழுந்திருக்க முடியவில்லை. கீழே யாமினி பள்ளி கிளம்பும் சத்தம் கேட்டது. பிறகு நிசப்தம். சற்று நேரத்தில் யாமினியின் அம்மா வீட்டுக்குள் நடமாடும் சத்தம், நதியில் துடுப்பு போடும் சத்தம் போல கேட்டது. அவள் வீடு ஒரு சிறிய நதி. அதனுள் இங்கும் அங்கும் அலையும் படகு அவள் என்று நான் நினைத்தேன். சற்று நேரம் கழித்து அவள் உடலை ஆடைகள் உரசும் சத்தம். அவளது இறுகிய தொடைகள் அவள் உடுத்தியிருக்கும் ஒற்றை வேஷ்டிக்குள் நகரும் சத்தம் என்றும் தோன்றிற்று. புன்னகைத்துக் கொண்டேன்.

அவள் 10 மணிக்கு மேல் பக்கத்தில் இருக்கும் அண்டி ஆபீஸுக்கு வேலைக்குப் போவாள். 2 மணிக்கு வருவாள். நான் நாளை அந்த அண்டி ஆபீஸில் வேலை கேட்டுப் போகலாம் என்று நினைத்தேன். பகலில் சும்மா இருப்பது இரவில் துயரத்தை அதிகரிக்கிறது. ஆனால், நாளை. இன்று போக முடியாது. ஏனோ உடல் ரொம்ப வலிக்கிறது.

விழித்தபோது, வெயில் வீட்டின் மறுபக்கத்துக்கு வந்திருந்தது. யாரோ வாசலில் கதவுக்கு அப்பால் நிற்பதுபோல் இருந்தது. மூச்சுக் காற்று; நிழல்; நான் படுக்கையில் இருந்தவாறே அதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். என் பிரமை என நினைத்துக் கண் மூடப் போகும்போது, ”என்னாச்சு… புறத்தப் போகலியா?” – யாமினி யின் அம்மா!

”கொஞ்சம் பனிபோல இருக்கு. ராத்திரி ரொம்ப நேரம் பனியில உட்கார்ந்திருந்தது…”

”இது விஷப் பனியாக்கும். உட்காரக் கூடாது!”

”நேத்து நீங்க பாடினீங்க..?” என்றேன் நான்.

நிழல் அசையாது இருந்தது. பிறகு ஒன்றும் பேசாமல் கீழே போனது. கொஞ்ச நேரம் கல்போல இறுகிய மௌனம். ஒரு ஈ, ஈஈஈஈஈவென்று கத்திக் கத்தி அதை உடைக்க முயன்று தோற்றுப்போய்விட்டது.

மீண்டும் விழித்தபோது என் அருகில் யாமினி நின்றிருந்தாள்.

”அங்கிள் இதைச் சாப்பிடுங்க!”

அவள் கையில் பாத்திரம் நிறைய சூடு கஞ்சியும் மரவள்ளிக்கிழங்கு பப்படமும் இருந்தன. ”இதைக் குடிச்சப்புறம் கட்டன் சாயா தரலாம்னு அம்மா சொன்னா…”

நான் அவள் கன்னத்தை வருடி, ”உங்க அம்மா பேர் என்ன?’

அவள் கன்னத்தில் நண்டுகள் ஆற்று மணலில் உருவாக்குவது போல குழிகள் தோன்ற,

”அம்மாவோட பேரு… அம்மாதன்னே..!” என்று சிரித்தாள்.

எனக்கு மூன்று நாட்கள் காய்ச்சல் இருந்தது. இரண்டாவது நாள் கஞ்சியோடு வருகையில் யாமினி, ”அம்மா, உங்ககிட்டே கொஞ்சம் காசு கேட்டா…” என்றாள். நான் 100 ரூபாய் எடுத்துக் கொடுத்தேன்.

காய்ச்சல் கழிந்து இறங்கிய அன்று யாமினியம்மா வழக்கம்போல துணி உலர்த்திக்கொண்டுஇருந்தாள். நான் நின்று, ”தேங்க்ஸ்…” என்றேன். அவள் கேட்காததுபோல தொடர்ந்து துணியை விரித்துக்கொண்டிருந்தாள்.

பிறகு தயங்கி, ”உங்க அண்டி ஆபீஸ்ல எனக்கு எதுவும் வேலை கிடைக்குமா?’

அவள் பேசவில்லை.

அன்று இரவு யாமினி கஞ்சியுடன் மேலே ஏறி வந்தாள். வந்தவள், ”அங்கிள் நீங்க கதை எழுதறவரா?” என்று கேட்டாள்.

அப்படித்தான் யாமினிக்கு நான் கதை சொல்ல ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் அவளுக்குச் சொல்ல ஆரம்பித்த கதை, எனக்கு நானே சொல்லக்கூடியதாகவும் ஆகிப்போனது; பின்னர் யாமினியின் அம்மாவுக்கும். நான் சொல்லும் கதைகளை அவளது அம்மாவும் கூர்ந்து கேட்கிறாள் என்பதை நான் மெள்ளப் பின்னர் உணர்ந்தேன். பாதியில் உறங்கிவிடும் யாமினியைத் தூக்கிக்கொண்டு போய்விடும்போது எல்லாம், அவளிடம் இருந்து ஒரு நீண்ட பெருமூச்சை கதவின் பின்னால் இருந்து உணர்ந்திருக்கிறேன்.

ஒருதடவை யாமினி, ”நீங்க நேத்திய கதையை முடிக்க வேணாம்னு அம்மா சொல்லச் சொன்னா. அது ரொம்ப அழுகையா இருக்காம்!” – அது ஆலிவர் ட்விஸ்ட்டின் கதை.

யாமினிக்குப் புராணக் கதைகளைப் பிடித்திருந்தது. நிறைய ராட்சஸர்கள் வரும் கதை. ஆனால், அவர்களை அழிக்கக் கூடாது; புத்திசொல்லி விட்டுவிடவேண்டும் என்று ஒருநாள் சொன்னாள்.

”அப்பாவை ‘ராட்சஸன்’ என்று அம்மா சொல்வா…”

அவள் ‘அப்பா’ என்று யாரைச் சொல்கிறாள் என்று எனக்குக் குழப்பமாக இருந்தது; கேட்கவில்லை.

எனக்கு அண்டி ஆபீஸில் வேலை கிடைத்தது; யாமினியின் அம்மா சொல்லித்தான். கணக்கு வேலை. ஒவ்வொருத்தர் தொலி உரிக்கிற அண்டிப் பருப்புகளின் அளவையும் கணக்கு வைக்கிற வேலை. பெரிய வேலை இல்லை; பெரிய சம்பளம் இல்லை. ஆனால், ஒரு வேலை. வேலை இல்லாவிடில் நம் உடல் துருப்பிடிக்கிற ஓசை நமக்கே கேட்கிறது.

ஒரு சனிக்கிழமை யாமினியை அழைத்துக் கொண்டு நான் நெடுமங்காடு போனேன். ஓணம் நெருங்கி வந்துகொண்டிருந்தது. அவளது பினஃபோர்கள் முற்றிலும் தூர்ந்துபோய்விட்டன. அவளுக்கு சில செட் பாவாடைச் சட்டைகளும் பின்னர் யோசித்து யாமினியின் அம்மாவுக்கு ஒரு கசவுப் புடைவையும் வாங்கினேன். தங்கக் கரையிட்ட அந்தப் புடைவையில், தலைக்கு நன்றாக எண்ணெய்ப் பூசி, நெற்றிக்கு ஒரு சந்தனக் குறியும் அணிந்து வந்தால், அவள் மிக அழகாக இருப்பாள் எனத் தோன்றியது.

”இது அம்மைக்கு” என்று யாமினியிடம் சொல்லிக் கொடுத்தேன். அன்று இரவு மிக ஆழமாக உறங்கினேன். உண்மையில் நெடுநாட்களுக்குப் பிறகு நான் எனது சொந்தத் துயரங்களை எல்லாம் மறந்து, முகத்தில் புன்னகை ஒரு வண்டல் போலத் தேங்கத் தூங்கிய இரவு அது. ஆனால், எல்லாம் காலை வரும் வரைதான்!

காலை கதவைத் திறக்கும்போது கதவையொட்டி நான் கொடுத்த புடைவைப் பொதி இருந்தது. நான் மிகச் சோர்வையும் தன்னிரக்கத்தையும் உணர்ந்தேன். திடீரென்று நான் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்றொரு கேள்வி எழுந்தது. இந்த இடத்தைவிட்டுப் போய்விடவேண்டும் என்று தோன்றிவிட்டது. இன்று இரவு நான் இங்குத் தங்கக் கூடாது. அன்று நான் கீழே இறங்கி வரவில்லை; வேலைக்குப் போகவும் இல்லை. மாடியில் இருந்து யாமினியின் அம்மா வழக்கம்போல வேலைக்குப் போவதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அவள் மேல் ஏனோ கடும் சினம் எழுந்தது. முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

பிறகு, தோள் பையை எடுத்து எனது துணிகளை அதில் அடைத்தேன். சில நூறு ரூபாய்களை ஒரு பேப்பரில் சுற்றி அவள் வீட்டுக் கதவின் கீழ் வைத்துத் தள்ளினேன். ஒரு கணம் ‘போகிறேன்…’ என்று ஒரு குறிப்பு எழுதிவைக்க யோசித்துத் தவிர்த்தேன். எதற்கு? அவள் அதைப் பொருட்படுத்தப் போவதே இல்லை. பையை எடுத்துக்கொண்டு ஆலமரங்கள் ஊடே வெயில் தூண்கள் போல இறங்கும் சாலையில் நடந்தேன். அங்கே போனால் அருமனைக்கு பஸ் கிடைக்கும்.

மனம் வெகு மௌனமாக இருந்தது. அதே சமயம் புறத்தே எதையும் கவனிக்கவும் இல்லை. ரொம்ப ஆழ இறங்கிவிட்ட கிணற்று நீர் போலாகிவிட்டது போதம். ஆகவே, என் முன்னால் தட்டென்று வந்து நின்ற மோட்டார் சைக்கிளை முதலில் நான் கவனிக்கவில்லை. அதன் பின்னால் இருந்து ஒரு கன்னியாஸ்திரி வேகமாகக் குதித்தாள். நான் அவள் கால்களைக் கவனித்தேன். அவள் காலெல்லாம் ஏன் சேறாக இருக்கிறது?

”நிங்கள்தன்னே யாமினியொட அச்சன்?”

நான் அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், ”ஏன்?’ என்றேன்

”ஒரு சிறிய பிரஸ்னம். யாமினிக்கு ஒரு ஆக்சிடெண்ட் ஆயி” என்றாள் அவள்.

நான் அஞ்சியது நிகழ்ந்துவிட்டது. யாமினி, ஒரு லாரிக்குள் விழுந்துவிட்டாள். துரத்தி வரும் தாசில்தாரிடம் இருந்து பறந்து வந்த ஒரு மணல் லாரி, அவள் கால் மீது ஏறிவிட்டது.

பாதிரியாரின் காரில் நாங்கள் அவளை காரக்கோணம் மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டுபோனோம். அவள் முற்றிலும் மயங்கி இருந்தாள். அவளது அம்மாவின் மடியில் தூங்குவதுபோல கிடந்த அவளை யாராவது கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள். அவள் எதற்கும் பதில் சொல்லவே இல்லை. அவள் வலது கால் இருந்த இடம் ரத்தச் சகதியாக இருந்தது. அதன் மீது போத்தியிருந்த துணி சிவந்துகொண்டே இருந்தது. அவள், நான் வாங்கிக்கொடுத்த புதிய பினஃபோரில் இருந்தாள்.

வளர்த்த எதுவும் இல்லை. அவள் காரக்கோணம் போவதற்கு முன்பே அதிக ரத்தச் சேதம் காரணமாக இறந்துபோனாள். அவளை வீட்டுக்கு அதே காரில் திரும்பக் கொண்டுவந்து, சற்று தூரத்தில் ரப்பர் மரங்களிடையே எரித்தோம். அந்தச் சிறிய ஊரின் மொத்த ஆணும் பெண்ணும், அந்த மாலை அங்கு இருந்தார்கள். எல்லோரும் யாமினியின் அம்மாவிடம் பேசிக்கொண்டே இருந்தார்கள். அவள் யாரிடமும் பேசவே இல்லை. அவள் கண்களைப் பார்த்தால் பயமாக இருந்தது.

”நீ அவளைக் கொஞ்சம் கவனிச்சுக்கணும்…” என்றார் டீக்கடைக்காரர்.

அன்று இரவு முழுவதும் தொலைவில் யாமினியின் உடல் பொலிந்து பொலிந்து எரிந்து அணைவதைப் பார்த்தபடியே, அவள் வீட்டின் முன்னால் அமர்ந்திருந்தேன். எரிபூச்சிகள், ஒரு பெரிய மேகம் போல எழுந்து வீட்டின் மீது இங்கும் அங்கும் அலைந்துகொண்டு இருந்தன. நான் அப்படியொரு காட்சியை முன்பு கண்டதே இல்லை. வீட்டின் உள்ளே எந்தச் சத்தமும் இல்லை. ஒருமுறை எழுந்து கதவுக்கு அருகில் போய் காதை வைத்துக் கேட்டேன். தள்ளிப் பார்த்தேன். இடைவெளி வழியாகக் கண்ணை இடுக்கிப் பார்த்தேன்.

உள்ளே நடு அறையில் யாமினியின் அம்மா அமர்ந்திருந்தாள். மேலே தொங்கும் ஒற்றை பல்பின் வெளிச்சம் அவள் தலை மேலே, ஒரு தங்க வட்டம் போல சிதறிக்கொண்டிருந்தது. அவள் எதையோ படித்துக்கொண்டிருந்தாள். எதைப் படிக்கிறாள்? நான் திரும்பி வந்து நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். சட்டென்று எனக்கு விளங்கியது. அது யாமினியின் பாடப்புத்தகம்.

நான் இன்னவென்று தெரியாத பதற்றத்துடன் அங்கேயே வெகுநேரம் கால்கள் நடுங்க அமர்ந்திருந்தேன். ஒருகட்டத்தில் சட்டென்று தாங்க முடியாது உடைந்துவிட்டது போல போதம் இளகியது. ‘இனி என்ன?’ என்பது போன்ற ஒரு சோர்வு எழுந்து மனதை மூடியது.

எத்தனை மணிக்கு மாடிக்கு ஏறிப் போனேன்? எப்போது தூங்கினேன்? எதனால் விழித்தேன்?… என்பது தெரியாது. மார்பில் எதுவோ கனமான ஓர் உணர்வு. யாமினியின் அம்மா! அவள் கண்ணீர் என் மார்பின் மீது அருவியாகச் சொட்டிக்கொண்டிருந்தன. அவள் உடல் முழுவதும் வெட்டி வெட்டி அதிர்ந்துகொண்டே இருந்தன. அவள் முதுகு, பாம்பின் படம் போல சுருங்கி விரிந்து சுருங்கி விரிந்துகொண்டிருந்தது. நான் அவள் முகத்தை நிமிர்த்த அவள் நீண்ட ஒரு கேவலுடன் என்னைக் கட்டிக்கொண்டாள்.

”எண்டப் பொன்னு மோள் யாமினியே” என்றவள் பெருங்குரல் எடுத்து அழத் தொடங்கினாள்!

– மார்ச் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *