கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 10,988 
 

விறுவிறுவென அந்த யானை காடுகளுள் மரங்களைப் புறந்தள்ளிவிட்டு நடந்தது. கீழே விழும் மரக்கொப்புகளின் ஒலிகளுள் நகர்கிறது துண்டாய் விழும் வெளிச்சம். யானையின் பிளிறல்கள் எதிரொலிக்கும் திசைகளை என்றும் கண்டது இல்லை நகரங்கள். சரசரவென நகர்ந்தபடி யானை கம்பீரமாகக் காட்டை புறந்தள்ளி முன்னேறுகிறது. இவளுக்குள் யானையின் ஒலி கேட்க, இவள் திடுமென எழுந்து உட்கார்ந்து இருந்தாள். வெயில் மெள்ள யானையின் துதிக்கையாக ஜன்னலுக்குள் எட்டிப் பார்த்தபடி இருந்தது.

செந்தில் வந்திருப்பான். அறைக்கு வெளியே ஒரு பிரளயமே உருவாகி இருக்கும். வைத்தீஸ்வரி, ‘காலையிலேயே எந்திரிச்சிரு கலை’ன்னு ராத்திரி 58 தடவையாவது சொல்லி இருப்பாள். என்றைக்கு எல்லாம் யானை கனவில் வருகிறதோ, அன்றைக்கு எல்லாம் இப்படி எழுந்திரிக்கத் தாமதமாகிவிடுகிறது. காலில் நேற்று குத்திய பீங்கான், இப்போது வலித்தது. ஏதோ ஒருவாக்கில் குத்தித் தொலைத்துவிட்டது.

நெம்பி எடுத்தும் கையில் ஊக்கின் நுனி குத்திற்றே தவிர, இவளால் அதை வாகாக எடுக்க முடியவில்லை. சந்திரா இன்று செந்திலைப் பார்க்க வந்தால், எடுத்துவிடச் சொல்லலாம். வைத்தீஸ்வரிக்கு போன மாதம் உடமுள் குத்தியபோது ஹால் சோபாவில் உட்காரவைத்து ராமன்தான் எடுத்துவிட்டான். ராமன் பள்ளிக்கூடம் படிக்கும்போது இவளுக்கும் காலில் தைத்த முள்ளை எடுத்துவிட்டு இருக்கிறான். இப்போது எடுத்துவிட்டால் வைத்தீஸ்வரி கத்துவாள்.

”அண்ணனா லட்சணமா நடந்துக்கிறீங்களா? அவளுக்குத்தான் அறிவு கிடையாது. உங்களுக்குமா இல்ல? வயசாயிட்டாப் போறுமா? பெரிய ‘பாசமலர்’ சிவாஜி – சாவித்திரி!” – ‘பாசமலர்’ சிவாஜி என அவள் அடிக்கடி ராமனைச் சொல்லுவாள். அப்போது எல்லாம் அவள் வார்த்தைகளில் அழுத்தம் கொடுக்கிறபடியால் ஜிவாஜி எனக் கேட்கும். இவளுக்கு அந்த உச்சரிப்பு சிரிப்பைத் தந்தபடியால் ஒரு முறை சிரித்துவிட்டாள்.

”ஆமாங்கடியம்மா… அத்து வந்ததுக்கலாம் சிரிக்கிற மாதிரி வெச்சிட்டான் அந்தக் கடவுள். என் நேரம்… வாச்சவனும் சரி இல்ல!” என ஒருநாள் பூராவும் புராணம் பாடினாள்.

”எதுக்கு கலை சிரிச்சே?” என ராமன் கேட்டான். ”ஒண்ணுமில்லண்ணா… மைனி ஜிவாஜின்னு சொன்னாளா… அதான்” என லேசான கிசுகிசுப்பான குரலில் சொல்ல, ராமனும் குனிந்து சிரித்தான். ”சரி… சரி, மனசுல வெச்சுக்காத” என்றான் மெள்ள. என்னமோ மனசு நனைந்து சட்டெனக் கண்ணில் நீர் வந்தது இவளுக்கு.

அன்றைக்கு ராத்திரி கனவில் யானை வந்தது. எப்பவுமே காடுகளோடே பழக்கமான யானை, நகரின் பெருவீதிகளில் விலாசம் தேடி அலைந்தது. ‘கலைவாணி’ என்று இவளின் வீடு இருக்கும் பெருந் தெருவில் நின்று தும்பிக்கை உயர்த்திப் பெயர் சொல்லி அலறியது. நீண்ட நாட்கள் யாருமே பெயர் சொல்லி அழைக்காததால், யானை தன் பெயர் சொல்லி அலறியது சந்தோஷமாக இருந்தது. இவள் பதறி அடித்துக்கொண்டு கதவைத் திறந்தாள். ”நான்தான் கலை!” என்று யானையை நோக்கிக் கத்தியபடியே போனாள்.

யானை இவளை நோக்கி, ”உன்னைத்தான் தேடி வந்தேன் கலை” என்றது. ”இன்னொரு முறை என் பெயரைச் சத்தமாகக் கூப்பிடேன்” என்றாள் இவள். ”உன்னைப் போல் பெயர் மறந்த பெண்களை பேர் சொல்லிக் கூப்பிட வேண்டியது என் கடமை” என்றது யானை. அப்படியே யானையை இரு கைகளாலும் அள்ளிக்கொள்வது போல் கைகளை இவள் விரித்தாள்.

எத்தனை வருடம் ஆயிற்று. என்றைக்கு சரவணன் செத்தானோ அன்றே கவிந்துகொண்டது தனிமை. அப்போது எல்லாம் ராமன் வீட்டுக்கு வந்தால், மைனி மீன் குழம்பு வைப்பாள். ‘அவள் வைக்கும் மீன் குழம்புக்கு தோட்டத்தையே அடகுவைக்கலாம்’ என சரவணன் சொன்னதில் அவளுக்கு ஏகப் பெருமை. இன்று மீன் குழம்பு வைக்கும்போது அதைச் சொல்லிக்கொள்வாளே தவிர, மீன் தலையைத் தவிர இவளுக்கு ஒரு துண்டும் இல்லாத மாதிரி கவனம் எடுத்துக்கொள்வாள். அதற்காகவே மீன் துண்டுகளைத் தனியாக எடுத்துக்கொண்டு அவர்களின் படுக்கை அறைக்குக் கொண்டுபோய்விடுவாள். ராமனுக்கும் அது தெரியாமல் இருக்காது.

ஒருமுறை, ”நான் வேற வீடு பாத்துக்கவாண்ணா?” என்று கேட்டபோது, ”ஏன்? அங்க எல்லாம் சுமுகமா இருக்காது. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” எனக் கெஞ்சுகிற மாதிரி சொன்னான்.

சரவணன் போட்டோவில்கூட மங்கிப் போனான். இருந்தபோதும் பெரிதாக ஏதும் இருவருள் இழை விடவில்லை. சரியாக ஆறு மாதங்கள். அப்போதும் அவன் அம்மாவுக்குப் பணிந்து ராத்திரி அவனிடம், ”எங்கம்மா வீட்டுல எவ்ளோ பயம் இல்லாம இருக்கலாம் தெரியுமா? ஆசையா ஒரு முறுக்கு எடுத்துச் சாப்பிடணும் னாக்கூட உங்கம்மா ஏதும் சொல்லுமோன்னு இருக்கு” என்றாள். அவன் ஏதோ பெரிய ஹாஸ்யம் கேட்ட மாதிரி விழுந்து விழுந்து சிரித்தான். அந்நியமாகிப்போன உணர்வுகளோடு ஒரு வீட்டில் உலா வருவதில் அவனுக்கு என்ன ஹாஸ்யம் இருக்க முடியும் என்று தெரியவில்லை.

‘கடவுள் ஏன் மனிதர்களை உருவாக்குகிறார்? ஏன் சிலரை மட்டும் சந்தோஷங்களுக்குத் தத்துக் கொடுக்கிறார்’ என்று சமயங்களில் புரியவில்லை இவளுக்கு. ‘கணவனை இழந்தாயா… யாரையாச்சும் அண்டி இரு’ என்று எழுதப்படாத விதியை யார் இயற்றியது என்று தெரியவில்லை. இறந்த பிறகு அவரைத் தேடிப் போய்ப் பேச வேண்டும். அப்போது, ‘மரணத்தின் மர்மம் போகவும் மிஞ்சி இருக்கும் வாழ்வின் புதிர்களை அவர் அனுபவித்திருக்கிறாரா’ என்று கேட்க வேண்டும்.

அந்தச் சமயம் லேசாகத் தூறல் போட்டபடி ஈரத்தோடு கூடின வாசம் சுற்றிலும் இருந்தால் நன்றாக இருக்கும்.

இவள் மேல் ஒற்றைத் துளி விழுந்தாற் போல் கதவு தட்டப்பட்டது. அவசரமாகக் கதவைத் திறந்தபோது வைத்தீஸ்வரி நின்றிருந்தாள். அடுப் பில் இருந்து விழுந்த கங்கு கண்ணில் மினுங்கினாற் போல் இருந்தது. ”எந்திரிக்கலயா?”

”கொஞ்சம் தலைவலி.”

”செந்தில் வரான்னு சொன்னேன்ல. அப்பா வந்திருக்கார். காபி சீனி இல்லாமக் குடு.” பாக்கியம் பெற்றவர்களுக்கே அப்பா நீண்ட நாள் ஆயுளோடு இருக்கிறார்கள்.

இவள் வெளியே வந்து ”வாங்க மாமா” என்றாள். ஏனோ இவளின் அப்பா ஞாபகம் வந்தது. அவர் இருந்தால் தனி வீட்டில் இருக்கலாம். அப்படித்தான் இருப்போம் என்ற நம்பிக்கையில் அம்மா கூட்டி வந்தாள். மூன்றாவது மாசமே, ஹார்ட் அட்டாக். போகும்போது ராமனிடம் ”கலையைப் பாத்துக்கோ” என சினிமாவில் வருவது மாதிரி ஏதும் சொல்லாமல் செத்துப் போனாள்.

”நல்லாருக்கியா?” என்றார் வைத்தீஸ்வரியின் அப்பா. மைனியின் அம்மா போன பிறகு ஓர் இறகு மாதிரி ஆகிப்போயிருந்தார்.

ராமன் கல்யாணத்தோடு இவருக்கு தேஜஸ் அதிகம் இருந்தது. கல்யாணப் பத்திரிகையை இவர், இவர் சித்தி வீட்டில் வைக்கப் போனபோது ஏதோ குடும்பத் தகராறில் அவர் ‘போ… வீட்டுக்குள்ள வராத’ எனச் சொல்லிவிட்டார். ”எனக்குத் தெரியாதா இவளைப் பத்தி?” என அவர் கத்தியது இன்னும் யானையின் கம்பீரக் குரல் காற்றுவெளியை நிறைத்த மாதிரி இருந்தது. அவர் மனைவி இறந்ததற்கு அந்த சித்தி வந்தாள். வாசலிலேயே நின்றிருந்த அவளைப் பார்த்து ”உள்ள வர்றதுக்கு முன்னால மனசைக் கேளு. உள்ள காலடி எடுத்துவைக்கத் தகுதி இருக்கான்னு?” என்றார். அவள் உடனே அழுதபடி கிளம்பினதைப் பார்த்து ”காலமடா சாமி” என்றார்.

இப்போது அந்த தேஜஸ் குறைந்து இருந்தது. தளர்ச்சி போகவும் முகத்தில் அயராத சோர்வு இருந்தது.

”செந்தில் எப்ப வருவான்?” என்றார்.

”ஃப்ளைட் எப்பன்னு தெரியலையே… ‘காபி குடிக்கீங்களா?”

”சரிம்மா… இளைச்சாப்ல ஆயிட்டே” என்றவர், ”என்ன வாழ்க்கைம்மா..? அவ போன பிறகுதான் தெரியுது அவளோட அருமை எல்லாம். இப்ப மனசுல நினைச்சு என்ன? ஒருவாட்டி நீயாச்சும் கிராமத்துக்கு வந்துட்டுப் போம்மா!” என்றார்.

”சரி மாமா” என்றபடி உள்ளே போனாள். கிராமத்தில் எதிர்த்த வீட்டில் வயதான நபர் ஒருவர் இருப்பார். அவர் வீட்டுக் கதவு திறந்து யாரும் பார்த்தது இல்லை. அவர் எப்போது பால் வாங்குவார்? எப்போது ஜன்னல் வழியிலான வெளிச்சத்தை அவர் தீண்டி இருப்பார் என்று யாரும் அவதானித்தது இல்லை. அவரின் தோற்றம் குறித்தும் சிறு பிராயத்தில் நிறைய அனுமானங்கள் இருந்தன. அவருக்காகத் துணிகளை வெளுக்கப் போன வண்ணானுக்குக்கூட அவர் கதவுக்குப் பின்னால் இருந்துதான் துணிகளைத் துவைக்கப் போடுவார் என்றெல்லாம் கதைகள் உலவினது உண்டு. அதில் எது எல்லாம் உண்மை… எது எல்லாம் பொய் என்று அவரைத் தவிர, தெரிந்தவர் வேறு யாராக இருக்க முடியும்? சரவணனிடம் இதுபற்றிப் பேசியபோது அவன் சிரித்தபடி, ”உனக்குன்னு எப்படித்தேன் இப்படில்லாம் மனிதர்கள் அறிமுகமாறாங்களோ?” எனச் சொன்னதாலேயே, பம்பாயில் இருந்து வந்து, கிராமத்தில் அரை நிர்வாணமாக அலைந்தவனைப்பற்றிச் சொல்லாமலே போனாள்.

அவனுக்கு என்று எந்தப் பெயரும் இல்லை. அவனும் பெரிதாக எதைப்பற்றியும் கவலைப்பட்டதும் இல்லை. யாரோ போட்டுவிட்ட ஜட்டியுடன் காலம் பூராவும் அவன் அலைந்து இருக்கிறான். சடை விழுந்த முடியும், அழுக்கான, குளிக்காத தோற்றமும் சிறு குழந்தைகளை மருளவைத்தது.

காலில் பீங்கான் துண்டு நறுக் என்றது. காபியை ரசித்துக் குடித்தபடி வைத்தீஸ்வரியின் அப்பா ஜன்னல் பக்கம் வெயிலில் விழும் பிம்பங்களைப் பார்த்தபடி இருந்தார்.

”இந்தவாட்டி செந்தில் வந்தா, அவனைக் கல்யாணம் பண்ணிவைக்காம ஈஸ்வரி விடமாட்டா” என்றார், வானத்தைப் பார்த்தபடி.

வனங்களின் அடர்த்தியில் ஓடி வந்த யானையின் துதிக்கைக்குள் ஒரு குழந்தை மாதிரி செந்தில் பொதிந்துகிடந்தான். உலகத்தின் அத்தனை சக்தியும் தனக்குள் வந்தாற் போல் யானையின் ஓட்டத்தில் ஒரு பெருமிதம் இருந்தது. அதைவிடவும் பெருமிதத்துடன் செந்தில் ஆளுக்கு ஒரு பரிசுடன் வந்திருந்தான். ”என்ன தாத்தா, எங்கூட அமெரிக்கா வர்றியா?” என்று ஈஸ்வரியின் அப்பாவைப் பார்த்துக் கேட்டான். ”புடவைலாம் வேணுமா அத்தை… இந்த அலாரம் பாருங்க. என்னாலதான் இனிமே காலைல விழிக்கப் போறீங்க.”

அந்த அலாரத்தில் ஒரு யானையின் துதிக்கையில் கடிகாரம் இருந்தது. பெருஞ்சத்தத்துடனான பிளிறலுடன், ‘மணி அஞ்சாயிருச்சு’ என்று ஆங்கிலத்தில் சொன்னது. மிரட்சி அடையும் கண்களோடு இவள் அதை வெறித்தாள். கனவை ஒட்டுக் கேட்டு வந்தானா என்று தோன்றிற்று.

சாப்பிடும்போது, ”எப்படா பொண்ணு பாக்கப் போகலாம்” என ஈஸ்வரி கேட்டாள்.

”கல்யாணம் பண்ணிக்க நினைச்சாதானே, பொண்ணு பாக்கப் போணும். எனக்கு இப்ப அந்த மாதிரி ஏதும் எண்ணம் இல்ல” என்றான். ஈஸ்வரி மேலும் ஏதோ பேச, ராமன் கண்களைக் காட்டினான். செந்திலுக்குத் தனிமையின் வலி தெரிந்து இருக்க முடியாது என்று இவளுக்குத் தோன்றியது.

இவள் அறைக்குப் போய் யானை அலாரத்தைத் தொட்டுப் பார்த்தாள். திண்ணமாக இருந்தது. உள்ளே ஒரு தாளில்… ‘அன்புள்ள அத்தை. எல்லாவற்றையும் வெற்றிகொள்ள முடியும். மௌனத்தை… சப்தத்தால், வெறுப்பை… அன்பால், இடைவெளிகளை… பாலங்களால், என் தனிமையை… உங்கள் நினைவுகளால்!’ என்று செந்தில் எழுதி இருந்தான்.

யானைகள் காடுகளைவிட்டு நகரங்களில் குடிகொள்ள ஆரம்பித்தன, இவளின் கனவுகளில்!

– செப்டம்பர், 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *