கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 9, 2019
பார்வையிட்டோர்: 8,084 
 

காற்று, மழை, மேகம், கடல், மலை, நதி, வயல் . . .என்று அழகான தரிசனங்களைச் சுமந்தபடி மென்மை யான மனிதமனங்களுடன் பின்னிப்பிணைந்து, நனைந்து நாளெல்லாம் முக்குளித்து எழுதுகின்றேன்!

ஆயினும், திரும்பத் திரும்ப ஒன்றுவிடாமல் என்னால் சரியாகப் புரிய வைக்க முடியவில்லை!

“வா, என்னோடு சேர்ந்து நின்று சில உயரங்களை, சில உன்னதங்களைத் தரிசித்துப் பார்” என்று சொல்கிற தைரியம் இப்போ என்னிடமிருந்து தப்பித்துப்போக விடுகிறது! எப்பவும் இரண்டு கண்கள் நெருப்புத்துகள் களை என்னில் படரவிட்டபடி நகருகின்றன!

பூமித்தரையை முகர்ந்து, பரவி, எழுந்து, நெளிந்து, வளைந்து, அலையலையாக நகர்ந்து திரியும் ஆழிப் பெருக்கின் அழகில் மயங்கித் திளைக்கும் மிகச்சிறுகணங்கள்கூட மூர்க்கத்தனமாக என்னிடமிருந்து பிடுங்கியெடுபட்டு விடுகின்றன!

“இப்படித்தான் நீ நகரவேண்டும் .. .” என்று கோடுகளிட்ட மாயப்பலகையன்று எச்சரிக்கையுடன் என் முன்னால் நாட்டப்பட்டுள்ளது. அதுதான் என் வாழ்வுக்குரிய வழிகாட்டி! அதனால் நானேதும் வலிகொள் கிறேனா இல்லையா என்பது பற்றியெல்லாம் எவருக்குமே பிரச்சனையில்லை!

வாழ்விற்கொரு வரையறையிட்டுப் போடப்பட்டிருக்கும் விலங்குகளை என்னால் உடைக்கமுடியுமான பலமிருந்தும், ஏதோ ஒன்று உறுத்திப் பார்த்தபடி என்னை வெட்டவெளியில் நிறுத்தி வைத்திருக்கிறது!

அதற்காக, வாழ்வுக்கு வரைபடமிட்டுத் தந்த வாழ்க்கைத் துணைவன் அவ்வளவு மோசமானவன் என்று என்னால் வார்த்தைகளை வடிவாகத் தொகுத்து வெளியேற்றும் பலம் இன்னும் வந்து சேரவில்லை!

என்றோ ஒருநாள் என்னுள் படிந்துபோன தூய காதல் உணர்வொன்றின் நிழல் என்னைப் பேசாப்பொருளாக நெகிழவைக்கிறது!

என்னில் சரிபாதியானவனைக் காதலிக்கிறேன் என்பதை விட, “காதலித்தேன்” என்பது சத்திய சுத்தமாயிருக்கும்!

“வானம் எத்தனை உண்மையானதோ அத்தனை உண்மையாக அவன் என்னைக் காதலிக்கிறான் அல்லது நேசிக்கிறான் அல்லது ஆசைப்படுகிறான் அல்லது எல்லாமாகவும் அவஸ்தைப்படுகிறான்! அப்படித்தான் நம்புகிறேன்.

ஆனாலும் மண்ணின் தொடர்பிலிருந்து சில கணங்கள் விடுபட்டு, வானத்து வெளியில் உல்லாசமாகக் கைகட்டி நின்றபடி, காற்றில் மிதக்கும் பூமியை ரசித்துமகிழும் சுகங்களெல்லாம் என்னால் திருட்டுத்தனமாகத்தான் பெயர்த் தெடுக்கப்படுகின்றன.

என்னுள் ஆக்ரோஷமாகப் புகுந்து, என் நரம்புகளைக் கிளறி, தீயைப் பரப்பிவிட்டு, எரிந்து, சுருண்டு, நான் தலைகுப்புற விழுகிற வேளைகளை ஆவலுடன் காத்திருந்து, அக்கணத்தில் அவன் என்னை அதிகமாகக் காதல் செககிறானாம்!

என் சின்னச் சின்ன சந்தோஷங்களெல்லாம் பறிபோகிறகணங்கள்தான் அவனால் காதலிக்கப்படுகின்றனவென்றால் – அக்கணங்களிற்காகவே நான் காத்திருக்கலாமே என்று காற்று என் காதுகளிற்குள் பரிகாசம் செககிறது!

ஆயினும் – வாழ்க்கை என்னவோ அழகாகத்தான் இருக்கிறது! லண்டன் பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் பெயர் தெரியாத பெரியபெரிய மரங்களைப் போல, வாசனையேது மற்ற வண்ணப் பூக்களைப்போல, மொழிமறந்த உதடுகள் தரும் கவர்ச்சிப் புன்னகையைப்போல, வாழ்க்கை அழகாகவே தான் இருக்கிறது!

“நலம்தானே?” என்று கேட்டால் பதில் கூறி முகம் மலர முடியாத அவஸ்தை மட்டும் பின்னிப்பிணைந்து அழுத்துகிறது!

சின்ன வயதில் – முற்றத்து வேப்பமரத்துக் கிளைகளில் தொங்கிய பின்னலிட்ட கயிற்று ஊஞ்சலில், ஏகாந்தமாக ஆடிக்களிக்கிற பொழுதுகள் தான் அடிக்கடி என்னுள் அலைமோதிக்கொண்டேயிருக்கிறது.

ஊஞ்சலைப் பின்னே இழுத்தபடி கால் பாதங்களைத் தரையில் உந்தி, காற்றைக்கிழித்தபடி முன்னே பறக்க …ஊஞ்சல் உல்லாசமாக முன்னும் பின்னும் அசைந்துகொண்டேயிருக்கும்!

வேப்பங்கிளைகள் ஒன்றுடனொன்று உரசப் பூக்கள் வாசனையைத் தெளித்தபடி .. . வெள்ளை மணலில் விட்டு விட்டுச் சிதறும்!

காற்றின் தழுவலோடு … கனவுகளும் நினைவுகளும் கலந்துகலந்து, மலரத் தொடங்கும்.

பகலில் பார்க்கமுடியாத நட்சத்திரங்கள் பற்றியும், திரள்திரளாக முடங்கிக்கிடக்கும் முகிற்கூட்டங்கள் பற்றியும், முதன்முதலாக நீல் ஆம்ஸ்ரோங் கால்பதித்து வந்த சந்திர மண்டலம் பற்றியும் வேப்பமரக் கிளைகளைப் பிரித்தபடி வந்து, வெள்ளைமணற்பரப்பில் நெருப்புக்கோளமிடும் சூரியக் கதிர்கள் பற்றியும், யாரின் உதவியையும் எதிர்பாராமல் இயங்கியபடியே இருக்கும் பூமியைப்பற்றியும், மனித ஜீவ அவதாரங்கள் பற்றியும், மூப்பும் பிணியும் சித்தார்த்தரைப் புத்தராக்கியதுபற்றியும், இன்னுமின்னும் என்னென்னவோ சிகரங்களையெல்லாம் தரிசித்து, மீண்டும் சிறு குழந்தையாக முற்றத்து வளவில், முளைத்து நிற்கும் மூக்குத்திப்பூண்டின் அழகில் மெகமறந்து போகக்கிடக்கும் பொழுதுகள்கூட .. .இப்பவும் என்னுள் மெல்லிய காற்றென நினைவுகளைச் சீண்டிவிட்டுப் போகிறது!

ஊஞ்சல் அசைந்து .. . அசைந்து ஒருவழியாக ஓகந்து விடும் – அது தெரியாமல் ஒகயாரமான நினைவுகளில் மிதந்து கொண்டேயிருப்பேன்!

அம்மா சொல்வாள், “முற்றத்தில் காயவைத்த ஊறுகாயை, ஒடியல் சரங்களைக் கோழியும் காகமும் தட்டிவிடாமல் கவனித்தபடி, ஆறாம் வாகப்பாட்டை அக்குவேறு ஆணி வேறாகப் பாடமாக்கு .. .” என்று.

என் ஏகாந்தமும் எண்ணற்ற கற்பனைகளும் எத்தனை நாள் அம்மாவை ஏமாற்றிவிட்டிருக்கும்! ஏமாற்றத்தின் உச்சத் தில் பொங்கியெழும் சினத்தைக் கண்களிற்குள் புதைத்து, அவை சுருசுருவென்று சிவந்துவர, ஐந்தறிவு ஜீவன்களையெல்லாம் வாயால் இழுத்துவைத்துச் சரமாரியாகக் கொட்டுவாள்!

மண்ணில் விழுந்த ஒடியல் சரங்களையும் கோழி தட்டிவிட்ட ஊறுகாக ஜாடிகளையும் ‘ணங் ணங்’ கென்று மண்ணில் தேய இழுத்து நிமிர்த்தி, சீர்ப்படுத்தியவாறே கீச்சுக் குரலில் பொரிந்து தள்ளுவாள். என் முதுகில் விழவேண்டிய ஒவ்வொரு அடியும் பற்களை நெரித்துக்கொண்டு வெளியேறிக் காற்றில் கரைவதும், அவளின் கண்களிற்குள் புகுந்து கரணமடிப்பதுமாக இருக்கும்!

எனக்குக் கவலை வரும்! அம்மா என்னைத் திட்டுகிறாளே என்ற கவலையைவிட அம்மா படுகிற அவஸ்தையில் இரக்கம் வரும்!

திடுமென்று வானத்திலிருந்து பொத்தென்று விழுந்துவிட்ட வேதனையோடு திராணியில்லாமல் மௌனித்துப்போகக் கிடப்பேன்! கண்கள் குளமாகி விடும்! உதடுகள் இறுகிச் சுருண்டுபோகவிடும்! கண்ணீர்த் தழும்பலினூடாக அம்மா இரட்டை இரட்டையாக அசைந்துகொண்டிருப்பாள். முன்னால் தெரியும் மரங்களெல்லாம் அங்குமிங்குமாக
நெளிந்தபடி நகரும்.

அம்மாவின் பரபரப்பு அடங்குகிறபோதே திட்டலும் ஓகந்துவிடும். பரிதாபமாக என்னை ஓரக்கண்ணால் பார்ப்பாள். கடைக்கண்வழியாகக் கருணை பொங்கித் ததும்பும்!

அக்கணமே என் மனமெல்லாம் ‘புசுபுசு’வென்று பஞ்சாகி மிதக்கத் தொடங்கிவிடும்!

அம்மா அழைப்பாள், மிகவும் அன்பாக அழைப்பாள். குறுகுறுக்கும் என் கண்களின் ஆழத்தில் தேங்கிக் கிடக்கும் சாந்த வெள்ளத்தில் லயித்தபடி, மெதுவாகப் புன்னகைப்பாள். அரிசிப்பொரியும் தேங்காகச் சொட்டும் அள்ளித் தருவாள்! எனக்குச் சந்தோஷத்தில் அழுகை வரும்! “அம்மா பாவம் .. .” என்ற உணர்வு நெஞ்சினுள் வரிகள் வரிகளாக விரியும்! அம்மாவைக் கட்டிப்பிடிக்கவேண்டுமென்று கைகள் முறு முறுக்கும்! ஏதோவொன்று பொங்கிப்பிரவகித்து, என் இதயத்தை நனைப்பதுபோலிருக்கும்! ஆயினும் மௌனமாக அரிசிப்பொரியைக் கொறித்தபடி இருப்பேன்.

எல்லோரும் மும்முரமான விளையாட்டில் வேலியோரம் கிடக்கும் வெள்ளை மணற்கும்பியைச் சிதறடித்துக்கொண்டு ஓடித்திரிவார்கள். சின்னண்ணாவின் பிடிவாதக் குரல் உச்சஸ் தாயியில் சுவர்களைத் துளைத்துக்கொண்டு வந்து காதுகளை அறைந்தவண்ணமிருக்கும்.

மணற்கும்பி தன்னந்தனியாக, நிசப்தமாக இருக்கிற வேளைகள்தான் எப்பவும் எனக்கு இனிமையாக இருப்பதுண்டு! அதனை அளைந்து, குடைந்து, விரல்களினால் வாரிக்குவித்துக் கோடிட்டு, படம் போட்டு, உருண்டு, தவழ்ந்து, துள்ளி, விழுந்து நானும் அதுவுமாகக் கலந்து மகிழ்கிற தருணங்கள் எப்போதாவது எனக்குக் கிடைப்பதுண்டு! அத்தருணங்களிற்காகவே காத்திருப்பதுபோல அம்மாவும் மணற்கும்பியைச் சுற்றச்சுற்றி வந்தபடி அலுவல் பார்த்துக் கொண்டு திரிவாள். மணற்கும்பியில் சரிந்து வானத்தைப் பார்க்கிறபோது அம்மாவைத் தொட்டுக்கொண்டு இனிமை யான கனவுகள் விரியும்!

அம்மா சமைக்கும்போது கிளம்பும் கறிகளின் வாசனையும் தாளிதமும் என் மூக்கைப் பிடுங்கி இழுத்துக்கொண்டு போக அடுப்பங்கரையில் நிறுத்திவிடும்!

அவள் மெல்லிய புன்னகையோடு என்னைத் திரும்பிப் பார்க்கிற கணங்களிலெல்லாம் அடுப்பொளியில் அவள் மூக்குத்தி பளீரென்று மின்னலடிக்கும்! அந்த ஒளியோடு கலந்துவரும் அவளின் அழகான புன்னகைக்கு ஈடாக இவ்வுலகில் எதுவும் இருந்துவிடாது என்று என் மனம் அகங்காரப்படும்!

காசிப்பிள்ளை வந்து அரிசி இடிக்கும்போது, அம்மா முற்றத்தில் அடுப்புமூட்டி மாவறுத்துக்கொண்டிருப்பாள். விளாசி எரியும் தீக்கங்குகளின் வெப்பத்தில் அம்மாவின் முகம் சிவப்பாகி, வியர்வை கொட்டும். நான் அம்மாவையும், அடுப்பிலிருந்து கிளம்பும் நெருப்பின் ஒளியையும் மாறிமாறிப் பார்த்தபடி அருகில் தவம் கிடப்பேன்.

அம்மா கத்துவாள்; தள்ளிப்போகும்படி திட்டுவாள். ஆயினும் அசைய மாட்டேன்; அப்படியே மண்ணில் அமர்ந்து விடுவேன். என் சுருள் முடியில் மாத்துகள்கள் பறந்து வந்து படிந்துகொள்ளும்.

பின்பு மாலையில், அம்மா இழுத்துவைத்து என் தலைக்குக் குளிக்க வைப்பாள். திட்டித்திட்டி முதுகு தேகத்துக் கழுவி விடுவாள். ஒவ்வொரு திட்டல் வரியும் காரசாரமில்லாமல் வழமையான பாடல்போல் மெட்டுக்கட்டிய பல்லவிபோல் வந்துகொண்டிருக்கும். அதன் இனிமையில் ஏகாந்தமாகப் புலன்களை எங்கோ பறக்கவிட்டபடி குளித்துக்கொண்டிருப்
பேன்.

அம்மா திட்ட, என் மனம் சுட்டதாக எனக்கு எப்பவும் ஞாபகமில்லை! ஆனால் மனம் சுடுகிறபோதெல்லாம் அம்மாவின் மெல்லிய நிழல் ஒன்று வந்து என்னைத் தழுவாமல் சென்றதுமில்லை!

என்றோ ஒருநாள், அக்கினியின் தீக்கங்குகள் முகத்தில் செம்மையுடன் படர, நிலம் நோக்கிய விழிகளுடன் அம்மியில் கால்பதிக்க, மெட்டியன்று என் விரலிடுக்கினூடாகப் புகுந்துகொண்ட கணத்தில்தான் அம்மாவின் நினைவுகளை அடியோடு தொலைத்தேனா என்பது இப்பவும் என் தேடல் தான்!

ஏதோவொரு பந்தத்தில், முரட்டுத்தனமான நம்பிக்கையில், என்னுடையவற்றையெல்லாம் ஏகாந்தமாகச் சுலபமாகத் துறந்துபோன சேதிகள் அந்தமில்லாத அந்த வானிற்குத் தெரியும்; என்னைச் சுமந்து திரிகின்ற காற்றிற்குத் தெரியும்!

வேதனையும் கசப்பும் நிறைந்த, கண்ணீர் முட்டி வழிகிற போதெல்லாம், என்னில் ஒட்டிக்கிடக்கும் இன்னோர் பாதியைப் பிடுங்கியெடுக்கப் பிரயத்தனப்படுகிறேன்!

இப்போதான் என் முகவரியின் முதல் வரியை முழுமையாகப் படிக்கத் தொடங்கியிருக்கும் என்னவன், பிரியமான என் சிந்தனைக்குள்ளிருந்து எனைப் பிடுங்கியெடுத்து நேசிக்கும் பெருமகன், எனக்காக இன்னோர் உலகைத் தேடிப்பிடித்துவந்து பரிசளிக்கப் போகின்றானாம்!

இனிமையான இந்த வேடிக்கையில், நான் இயல்பான என் சிறகுகளை ஒடித்துவிட்டு, அவன் விரும்பும் ஒரு சிறகைக் கடன் வாங்கிக் கட்டிக்கொண்டு அந்தரத்தில் பறந்து திரிந்து விட்டு, அவனின் அழகான கால்களிற்குள் வந்து விழுந்துவிட வேண்டும்!

ரசம் நிறைந்த அந்தக் கணங்களிருந்து நகர விளைகிற வேளைகளிலெல்லாம், என் மூச்சுக்காற்று என் முகத்திற்கே திரும்பி வந்து அறைகிறது!

என் சுவாசத்திற்காகத் தன் மூச்சுக்காற்றையே தந்துவிட முயல்பவன், நசிந்துகொண்டிருக்கும் என் இதயத்தை மட்டும் இன்னும் தன் அழகான விரல்களினின்று விட்டபாடில்லை!

என்னை என்போலவே, இனிமையான அமைதியான பாதையில் பறக்கவிட்ட என் அன்னையை எண்ணி இதயம் இப்பவும் யாசகம் செககிறது!

நீண்டு பரந்த நீலவானத்தின் அடியில் காற்று நிறைந்த சுதந்திரவெளியில், சிறகுகள் உடைந்து துடித்துக்கொண்டிருக்கும் அழகுப் பறவைகளை நான் எப்பவும் பரிதாபத்துடன் பார்த்தபடி கிடக்கிறேன்!

என்னிலிருந்து விரியும் பார்வைகளினூடாக வந்து விழும் பிம்பம், “உன்னால் முடியும்… உன்னால் முடியும்.. .” என்று ஒரு உற்சாகச் சேதியை உச்சாடனம் செககிறது!

விழுந்துகிடப்பனவற்றையெல்லாம் உசுப்பிவிட, என்னொருவளின் ஒற்றைக் குரலுக்குச் சக்தியுண்டு என்ற நம்பிக்கையோடு நான் கூவத் தொடங்குகிறேன்!

(கண்ணில் தெரியுது வானம் – இங்கிலாந்திலிருந்து வெளியாகிய உலகளாவிய தமிழ்ப் படைப்புகள் தொகுப்பில் 2001இல் பிரசுரமானது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *