கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 12, 2024
பார்வையிட்டோர்: 2,752 
 
 

(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம்-1

இயற்கை அன்னையில் மடியில் அமைதியாக உறங்கும் குழந்தையைப் போல் இருந்தது அந்தக் கிராமம். சூரியன் அஸ்தமிக்கப் போகும் நேரம் ஊருக்கு வெளியில் இருக்கும் காட்டுக்கு மேய்ச்சலுக்காகப் போன பசுக்களின் கூட்டம் வீடு திரும்பிக் கொண்டிருந்தது. அவற்றின் குளம்புகளால் எழும்பிய தூசி உயரே கிளம்பி பனிமூட்டம் போல் பரவிக் கொண்டிருந்தது. மாலை வெயிலின் சூரியக் கிரணங்கள் மரக் கிளைகளின் வழியாக ஊடுருவி தரையை முத்தமிட்டு விடைபெற்றுக் கொண்டிருந்தன. ஊர்க் கோடியில் இருக்கும் பொதுக் கிணற்றிலிருந்து பெண்கள் குடங்களில் தண்ணீர் சுமந்து சென்று கொண்டிருதார்கள். அவர்கள் பேசிக் கொள்ளும் செய்திகளைக் கேட்டுத் தலையசைப்பது போல் ஆலமரத்துக் கிளைகள் காற்றுக்கு அசைந்து கொண்டிருந்தன.

மண்சாலையில் ஜட்கா வண்டி ஒன்று ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தது. கழுத்தில் ஜரிகை அங்கவஸ்திரம், நெற்றியில் வீபூதிப்பட்டையுடன் சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவருடன் ஒல்லியாய், உயரமாய், போஷாக்குக் குறைவாய் பத்து வயது பையனொருவன் வயதுக்கு மீறிய கம்பீரத்துடன் தென்பட்டான்.

ஜட்கா வண்டி ஊருக்கு ஆரம்பத்தில் இருந்த மசூதியைத் தாண்டும்போது, எதிரே மடக்கிய குடையைத் தோள் மீது வைத்துக்கொண்டு வந்து கொண்டிருந்த உழவன் ஒருவன், “வணக்கம் சாமி” என்று தலையைக் குனிந்து மரியாதையைச் செலுத்திவிட்டு, வண்டியுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினான்.

இந்த மரியாதைகள் எல்லாம் பழக்கப்பட்டவர் போல் அவர் தலையை அசைத்தார்.

“சாமி! பையன் யாரு?” உழவன் கேட்டான்.

“தூரத்துச் சொந்தம் ராமய்யா! பையனுடைய அத்தை சாகும் முன் என் கையில் ஒப்படைத்தாள்.”

“அம்மா அப்பா இல்லீங்களா?”

“அது ஒரு தனிக் கதை. பிறகு சொல்கிறேன். எங்க ஆனந்த் தனியாக இருக்கிறான் இல்லையா. அவனுக்குத் துணையாக இருப்பான் என்று அழைத்து வந்தேன்.”

“நல்ல காரியம் செய்தீங்க சாமி! புண்ணியம் புருஷார்த்தம் இரண்டு சேர்ந்து வரும். நீங்க எந்தக் காரியம் செய்தாலும் நன்றாக யோசித்துதான் செய்வீங்க. மருமகளும் மகனும் இறந்துபோய் ஒரு வருடத்துக்கு மேல் ஆகியிருக்காதா?’

தீட்சிதரின் முகத்தில் வேதனையின் நிழல்கள் படிந்தன. ஆமாம் என்பது போல் தலையை அசைத்தார். வண்டி ஊருக்கு நடுவில் இருக்கும் வேணுகோபால சுவாமி கோவில் வழியாகப் போய்க் கொண்டிருந்தது. மாலை மாலை தீபாராதனை நடந்து கொண்டிருப்பதற்கு அறிகுறியாய் கோவில் மணி அடிக்கும் ஓசை கேட்டது. தீட்சிதர் கைகளை உயர்த்தி ஜோடித்துக்கொண்டே, “விஜய்! கடவுளை வேண்டிக்கொள்!” என்றார்.

பையனும் கண்களை மூடிக்கொண்டு இரு கைகளையும் கூப்பினான். வண்டி பொது நூலகத்தைத் தாண்டிக் கொண்டிருந்தது. நூலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி வழியாய் ரேடியோவிலிருந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

“நூலகம்” என்ற பெயர்ப் பலகையைப் பார்த்ததும் விஜய் ஆர்வத்துடன் குனிந்து எட்டிப் பார்த்த்தான்.

வண்டி தெருமுனையில் திரும்பிப் பழங்காலத்து ஓட்டு வீட்டின் முன்னால் வந்து நின்றது.

வீடு சில இடங்களில் ஓடுகள் சரிந்து, பழுதடைந்த நிலையில் இருந்தது.

வண்டி வந்து நின்ற சத்தம் கேட்டதும் மாட்டுக்கு வைக்கோலை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்த குப்பன், “லக்ஷ்மி! அய்யா வந்தாச்சு!” என்று உரத்தக் குரலில் சொல்லிக்கொண்டே வண்டியருகில் ஓடி வந்தான்.

தீட்சிதர் வண்டியை விட்டு இறங்கும்போது குப்பன் அவர் கையிலிருந்த குடையை, பையைப் பவ்யமாக பெற்றுக் கொண்டான்.

“விஜய்! வீடு வந்து விட்டது. இறங்கு” என்றார் தீட்சிதர்.

விஜய் இறங்கினான்.

அதற்குள் கொஞ்சம் பூசிய உடல்வாகுடன், நடுத்தர வயதைத் தாண்டிய பெண்மணியைப் போல் தோற்றமளித்த லக்ஷ்மி வாளியில் தண்ணீரைக் கொண்டு வந்து திண்ணை மீது வைத்தாள்.

தீட்சிதர் செருப்பு கழட்டிவிட்டு வந்ததும் சொம்பு நிறைய நீரை மொண்டு பணிவுடன் நீட்டினாள்.

தீட்சிதர் கால்களை அலம்பிக்கொண்டே, “ஆனந்த் எங்கே?” என்று கேட்டார். “காலையிலிருந்து கண்ணுக்குட்டிக்குச் சமமாய் ஓடிக் கொண்டிருந்தான். உடம்பு லேசாக கததன்னு இருக்கவும், கட்டாயப்படுத்தித் தூங்கச் செய்தேன்.”

“ஜூரம் அதிகமாய் இருக்கா?” துண்டால் கைகால்களைத் துடைத்துக்கொண்டே கேட்டார்.

“இல்லை இல்லை. லேசாக கதகதன்னு இருக்கு. அவ்வளவுதான்.” சொல்லிக்கொண்டே லக்ஷ்மி இன்னொரு தடவை சொம்பில் நீரை மொண்டு விஜயிடம் நீட்டப் போனாள்.

“ஹூம்!” தீட்சிதரின் குரல் உறுமுவது போல் ஒலித்தது. லக்ஷ்மி நடுங்கிக்கொண்டே அவர் பக்கம் பார்த்தாள். விஜய் தொலைவில் இருந்த கன்னுக்குட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தான். தீட்சிதர் கண்ணாலேயே கிணற்றுப் பக்கம் ஜாடை காட்டினார்.

லக்ஷ்மிக்குப் புரிந்து விட்டது. சொம்பை வாளியிலேயே நழுவ விட்டாள். விஜய் பக்கம் திரும்பி, “தம்பி! அங்கே கிணற்றுக்கு அருகில் வாளியும் கயிறும் இருக்கும். தண்ணீரை சேந்திக்கொண்டு கால் கையை அலம்பிக் கொண்டு வா” என்றாள்.

விஜய் கிணற்றை நோக்கி நடந்தான்.

தீட்சிதர் வேஷ்டியின் நுனியைக் கையில் பிடித்துக்கொண்டே வேக வேகமாய் ஆனந்த் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தார். அவரைப் பின் தொடர்ந்து விஜயும் உள்ளே வந்தான்.

அறையின் நடுவில் இருந்த கட்டில் மீது உறங்கிக் கொண்டிருந்த சிறுவனுக்கு எட்டு வயதுக்கு மேல் இருக்காது. இளம் மஞ்சள் போன்று பசுமை நிற மேனி… அழகான முகம்… தளிர் உடல்.

தீட்சிதர் சிறுவனின் நெற்றியின் மீது கையை வைத்தார்.

“ஜுரம் அதிகமாய்த்தான் இருக்கிறது. லக்ஷ்மி! குப்பனைப் போய் டாக்டர் சர்மாவை அழைத்துக்கொண்டு வரச் சொல்லு.” ஆணையிடுவது போல் சொன்னார்.

தாத்தாவின் குரலைக் கேட்டதும் ஆனந்த் கண்களைத் திறந்தான்.

“தாத்தா!” அவரை பார்த்ததும் மகிழ்ச்சியுடன் கைகளை உயர்த்தி அவருடைய கழுத்தில் மாலையாகப் போட்டான். “எங்கே போனாய் தாத்தா! எனக்கு ரொம்ப பயமாக இருந்தது.” மழலை மாறாத குரலில் சொன்னான்.

அவர் கட்டிலில் அமர்ந்து கொண்டு ஆனந்தின் தலையை மடியில் வைத்துக்கொண்டார். குனிந்து அவனுடைய நெற்றியில் முத்தம் பதித்துக் கொண்டே, “உனக்காகத்தான் போனேன் கண்ணா. நீ தனியாக இருக்கிறாய் இல்லையா… உனக்காக ஒரு நல்ல நண்பனை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறேன். இரண்டு பேரும் சேர்ந்து நன்றாக விளையாடலாம். இதோ பார்… இவன்தான் விஜய்! உன்னுடைய நண்பன். உனக்காகத்தான் வந்திருக்கிறான். எப்போதும் உன்னோடேயே இருப்பான்.” நயமான குரலில் சொன்னார் தீட்சிதர்.

ஆனந்த் தாத்தாவின் மடியிலிருந்து தலையைத் திருப்பிப் பார்த்தான். எதிரே விஜய் நின்றிருந்தான்.

ஆனந்தின் இதழ்களில் புன்முறுவல் மலர்ந்தது.

சீரியஸாக பார்த்துக் கொண்டிருந்த விஜய் தன்னை அறியாமலேயே புன்முறுவல் செய்தான்.

“இன்றிலிருந்து நீங்கள் இருவரும் ஒன்று.” தீட்சிதர் விஜயின் கையைப் பற்றி ஆனந்தின் கையுடன் இணைத்தார்.

லக்ஷ்மி அறைக்குள் எட்டிப் பார்த்தாள். “அய்யா! உங்களைப் பார்க்க சுவாமிநாத அய்யர் வந்திருக்கிறார்” என்றாள்.

தீட்சிதர் ஆனந்தைக் கவனமாகக் கட்டிலில் படுக்க வைத்தார். “இதோ பார். போய் விட்டு உடனே வந்து விடுகிறேன் கண்ணா!” அன்பு ததும்பும் குரலில் பேரனிடம் சொன்னவர் விஜய் பக்கம் திரும்பி “விஜய்! ஆனந்திடம் பேசிக் கொண்டிரு” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினார். அவருடைய குரலில் தென்பட்ட நயம் ஆனந்துக்கு மட்டுமே சொந்தம் என்பது போல் இருந்தது. விஜயிடம் அவர் பேசிய தோரணை வேலைக்காரனிடம் ஆணையிடுவது போல் இருந்தது.

கால் மணி நேரம் கழித்து தீட்சிதர் டாக்டர் சர்மாவுடன் ஆனந்தின் அறைக்குள் வந்தார். விஜய் கட்டில் மீது அமர்ந்து கொண்டு ஆனந்திடம் கதை ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். ஆனந்த் வாய் விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தான்.

டாக்டர் ஆனந்தின் நாடியைப் பரிசீலித்து விட்டு ஜுரம் அதிகமாய் இல்லை என்றும், இரவு பால்சாதம் கொடுக்கலாம் என்றும் சொன்னார். விஜயைப் பார்த்து, “இந்தப் பையன் யாரு?” என்று கேட்டார்.

“தூரத்துச் சொந்தம். அனாதையாகி விட்டான். ஆனந்துக்குத் துணையாக இருப்பான் என்று அழைத்துக்கொண்டு வந்தேன்.”

“நல்ல காரியம் செய்தீங்க. குழந்தைகளுக்கு அவங்க வயதுக்குத் தகுந்த துணை எப்போதும் இருக்க வேண்டும். தம்பி! உன் பெயர் என்ன?” டாக்டர் கேட்டார்.

“விஜய்” கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டே சொன்னான்.

“பெரியவர்களிடம் பேசும்போது பணிவாகப் பதில் சொல்லணும்.”

எச்சரிப்பது போல் சொன்னார் தீட்சிதர்.

விஜய் முகம் சீரியஸாக மாறியது. பணிவாகப் பதில் சொல்வது என்றால் எப்படி என்று தெரியவில்லை. கைகளை முன்னால் கட்டிக்கொண்டு நின்றான். டாக்டர் போகும்போது ஆனந்தின் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு நகர்ந்தார். விஜயைத் தாண்டப் போனவர் ஒரு நிமிடம் நின்று அவன் தோளை நட்புடன் தட்டிவிட்டுப் போனார்.

“உங்கள் கேஸ் விஷயம் ஏதாவது தெரிந்ததா?” அறையை விட்டு வெளியில் வரும்போது டாக்டர் கேட்டார்.

“நாளைக்கு வாய்தா இருக்கிறது.”

“ஏற்கனவே பணம் நிறைய செலவு செய்திருக்கிறீர்கள் போல் தெரிகிறது.”

“நிறைய…” பெருமூச்சு விட்டுக்கொண்டே சொன்னார் தீட்சிதர். “இந்த வீட்டைப் பார்த்தீர்களா? வெள்ளையடிக்க வசதியில்லை. மழை பெய்தால் ஒழுகாத இடம் பாக்கியில்லை. ஓட்டை உடைசல்களை ரிப்பேர் செய்ய வழியில்லை.”

“என்ன செய்வது? எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருக்காது இல்லையா.” ஆதரவுடன் சொல்லிவிட்டு டாக்டர் கிளம்பினார்.

தீட்சிதர் டாக்டரை வழியனுப்பி விட்டு உள்ளே வந்தார்.

“லக்ஷ்மி! இதோ பார். விஜய் சற்று முன்னால் ஆனந்தின் கட்டில் மீது அமர்ந்து இருந்தான். இன்னொரு தடவை அப்படி நடக்கக் கூடாது. ஆனந்திற்குத் துணையாக இருப்பதற்காக விஜயை அழைத்து வந்தேன். அந்த விஷயத்தை நீ மறந்து போகக் கூடாது விஜயும் அந்த விஷயத்தை மறக்காமல் பார்த்துக்கொள்வது உன் பொறுப்பு. புரிந்ததா?” கடைசி வார்த்தையைச் சற்று அழுத்திச் சொன்னார்.

லக்ஷ்மி பயந்து கொண்டே புரிந்தது என்பதற்கு அடையாளமாய் தலையை அசைத்தாள்.

அரை மணி கழித்து லக்ஷ்மி ஆனந்துக்கு வெள்ளித் தட்டிலேயும், விஜய்க்கு பீங்கான் தட்டிலேயும் உணவைக் கொண்டு வந்தாள்.

“விஜய்! நீ இங்கே உட்கார்ந்து கொண்டு சாப்பிடு” என்று கட்டில் அருகில் தரையைச் சுட்டிக் காட்டினாள். கட்டில்மீது அமர்ந்துகொண்டு ஆனந்துக்கு ஊட்டிவிடத் தொடங்கினாள்.

விஜய் எதையுமே பொருட்படுத்தவில்லை. பசியுடன் காத்திருந்தவன் போல் தலையைக் குனிந்து கொண்டு வேக வேகமாய் சாப்பிடத் தொடங்கினான். வயிறு நிறையச் சாப்பிடும் போது ஏனோ நிம்மதியாக உணர்ந்தான்.

“தட்டை அலம்பி வைத்துவிட்டு, ஓரமாய் கவிழ்த்து விடு.” லக்ஷ்மி சொன்னாள். விஜய் தலையை அசைத்தான்.

“ஒரு பருக்கைக் கூட தரையில் சிந்தக் கூடாது.” மிரட்டினாள்.

விஜய் தட்டை உயர்த்திக் காண்பித்தான். ஒரு பருக்கைக்கூட கீழே சிந்தவில்லை.

வீடு முழுவதும் நிசப்தமாக இருந்தது. நள்ளிரவு நெருங்கும் நேரம்.

“தாத்தா! தாத்தா!” ஆனந்த் தூக்கக் கலக்கத்தில் அழுதுகொண்டே அழைத்தான்.

கட்டி அருகில் பாய்மீது உறங்கிக் கொண்டிருந்த விஜய் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து கொண்டான்.

அதற்குள் பக்கத்து அறையில் தஸ்தாவேஜுகளைப் படித்துக் கொண்டிருந்த தீட்சிதர் சட்டென்று ஓடி வந்து ஆனந்தை மார்போடு அணைத்துக் கொண்டார்.

“என்ன கண்ணா? என்ன ஆச்சு?” அனுசரணையாய் கேட்டார்.

“எனக்குப் பயமாக இருக்கு தாத்தா.”

“நான்தான் வந்து விட்டேனே. இனி நீ பயப்படத் தேவையில்லை கண்ணா.”

“நீ மறுபடியும் ஊருக்குப் போய் விடுவாய்.”

“போக மாட்டேன். அப்படியே போனாலும்… இதோ இந்த விஜய் உன்னோடுதான் இருப்பான். உனக்கு எந்த பயமும் இல்லை.”

“நான் உன் பக்கத்திலேயேதான் படுத்துக்கொள்வேன்.” ஆனந்த் பிடிவாதம் பிடித்தான்.

“நான் இன்னும் தூங்கப் போகவே இல்லை ராஜா. கேஸ் விஷயமாய் தஸ்தாவேஜுகளைப் படித்துக் கொண்டிருந்தேன். சரி சரி. வா.” தீட்சிதர் ஆனந்தைத் தோளில் தூக்கிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினார். பாய் மீது விழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த விஜயிடம் ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை.

விஜய் அப்படியே பாய்மீது உட்கார்ந்திருந்தான்.

பக்கத்து அறையில் தீட்சிதர் ஆனந்துக்குக் கதையைச் சொல்லி தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.

தனியாக இருப்பது என்றால் விஜய்க்கும் பயம்தான். அதிலு இரவு நேரத்தில் தனியாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அந்தப் பயம் இன்னும் அதிகமாகி விடும். முழங்கால்களைச் சுற்றிக் கைகளைக் கட்டிக்கொண்டு தலையைச் சாய்த்துக் கண்களை மூடிக்கொண்டான். இரவு நேரத்தில் விழிப்பு வந்தால் போதும் அவன் கண் முன்னால் ஒரு காட்சி திரும்பத் திரும்ப நிழலாடிக் கொண்டிருக்கும். இப்பொழுதும் அதே காட்சி…

மின் விசிறியில் தொங்கிக் கொண்டிருந்த அவன் தாயின் பிணம்… அப்படியும் இப்படியுமாய் ஊசலாடிக் கொண்டிருந்த காட்சி!

தொண்டைக் குழியை விட்டு வெளியேறப் போன கத்தலை யாரோ வந்து பொத்தியது போல் அவனே வாயைப் பொத்திக்கொண்டு குரல் வெளியே வராமல் அடக்கி விட்டான்.

அவன் உள் மனதில் ஏதோ பயம்! வேதனை! இயலாமை! இந்த மூன்றும் சேர்ந்து அழுகையாய் மாறி வெளியேறத் துடித்துக் கொண்டிருந்தது. இதழ்களை இறுக்கி பிடிவாதமாய் அழுகைச் சத்தம் வெளியே வராமல் தடுத்துக் கொண்டிருந்தான். கண்ணிலிருந்து இரட்டிப்பு வேகத்துடன் வெளியேறிக் கொண்டிருந்த கண்ணீர் கன்னங்கள் மீது வழிந்து நனைந்துக் கொண்டிருந்தது.

“அம்மா! அம்மா! நீ எங்கே இருக்கிறாய்? எனக்கு பயமாக இருக்கிறது.”

அவன் மனம் வேதனையால் தவித்துக் கொண்டிருந்தது. அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்வது சிரமமாக இருந்தது/ தீட்சிதர் வரும் காலடிச் சத்தம் கேட்டது. விஜய் சட்டென்று கண்களைத் துடைத்துக்கொண்டு பாய் மீது சுவற்றுப் பக்கம் திரும்பி படுத்துக் கொண்டான்.

தீட்சிதர் உள்ளே வந்து தூங்கிக் கொண்டிருந்த ஆனந்தை உறக்கம் கலையாதவாறு மெதுவாய் கட்டில் மீது படுக்க வைத்தார். போர்வையைக் கழுத்து வரை போர்த்திவிட்டு, ஆனந்தின் தலையைக் கோதிவிட்டு, நெற்றியின் மீது பட்டும் படாமல் முத்தம் பதித்தார். “கடவுள் உன் அம்மா அப்பாவைக் கொண்டு போய் விட்டாலும், உன் தாத்தாவுக்கு நீண்ட ஆயுளை கொடுத்திருக்கிறார் கண்ணா. நான் உயிரோடு இருக்கும் வரை உனக்கு எந்தக் குறையும் வர விடமாட்டேன்.” தீட்சிதர் முணுமுணுப்பது போல் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினார்.

அறையில் மறுபடியும் நிசப்தம் நிலவியது.

விஜய் இந்தப் பக்கம் திரும்பி கட்டில் அருகில் மேலும் நகர்ந்து கொண்டான். உறக்கத்தில் ஆனந்த் புரண்டு படுத்ததில் அவன் கை கட்டிலை விட்டுக் கீழே தொங்கியது.

விஜய் எழுந்து கொண்டான். மெதுவாக அந்தக் கையைப் பற்றிக்கொண்டான். ‘நான் உன்னுடைய நண்பன் இல்லையா!’ அந்த ஸ்பரிசம் அவன் மனதுக்குத் தெரியம் அளிப்பது போல் இருந்தது. ஆனந்தைப் பார்க்கப் பார்க்க அவன் மனதில் மகிழ்ச்சியான உணர்வு ஒன்று பரவிக் கொண்டிருந்தது.

அதற்குள் லக்ஷ்மி கொட்டாவி விட்டுக்கொண்டே பாயை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தாள்.

விஜய் சட்டென்று நகர்ந்து பாயில் வந்து படுத்துக்கொண்டான். விஜயிடம் அசைவு தெரிந்ததைக் கவனித்த லக்ஷ்மி, “என்ன தம்பி? இன்னும் தூங்கவில்லையா?” என்று கேட்டாள்.

இல்லை என்பது போல் தலையை அசைத்தான் விஜய்.

“தூங்கு… தூங்கு. காலையில் சீக்கிரமாக எழுந்து கொள்ளணும். பெரிய அய்யா சொல்ற வேலைகளை முடிக்கணும். ஆனந்த் தம்பியுடன் விளையாடணும். இந்த வீட்டில் இருக்கணும்னா சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. சொன்ன வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்றால் தோலை உரித்து ஆணியில் மாட்டி விடுவார் பெரிய அய்யா. புரிந்ததா?”

விஜய் எல்லாவற்றுக்கும் தலையை அசைத்தான்.

“ஒரு பையனுடன் காலம் தள்ள முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் போது இன்னொரு கழுதையை கொண்டு வந்து என் தலையில் கட்டியிருக்கிறார். எல்லாம் போறாத நேரம்தான்.” முணுமுணுத்துக் கொண்டே படுத்துக்கொண்டாள். ஐந்தாவது நிமிடம் குறட்டை விட்டுக்கொண்டு தூங்கி விட்டாள்.

விஜய்க்கு உறக்கம் வரவில்லை. ஒரு பக்கம் பயங்கரமாக குறட்டை விட்டுக் கொண்டிருந்த லக்ஷ்மி. இன்னொரு பக்கம் ஆனந்த். இந்த இருவரையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தது. அது வரையில் குடிகொண்டிருந்த பயம் போய் விட்டது.

பௌர்ணமி முடிந்த மூன்றாவது நாள், நிலவின் ஒளி ஜன்னல் வழியாக வந்து அவன் வயிற்றின் மீது விழுந்து கொண்டிருந்தது. விஜய் வயிற்றின் மீது கைகளை வைத்துக்கொண்டு, நிலவின் ஒளியில் கைகளைப் பார்த்துக் கொண்டான். அந்தக் காட்சி அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்னும் கீழே நகர்ந்து நிலா வெளிச்சம் சரியாக முகத்தின் மீது விழுமாறு படுத்துக் கொண்டான்.

தாய் சோப் தயாரிக்கும் பேக்டரியில் வேலை பார்த்துவிட்டு, இரவு வேளையில் வீடு திரும்பும்போது, பஸ் ஸ்டாப் அருகில் அவளுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தது… தாய் பஸ்ஸை விட்டு இறங்கியதும் அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்கு நடந்து வந்தது… எல்லாமே நினைவுக்கு வரத் தொடங்கின. அந்த எண்ணங்கள் அவன் மகிழ்ச்சியை மேலும் அதிகரித்தன.

அத்தியாயம்-2

பதினெட்டு வருடங்கள் கழித்து…

“விஜய்! விஜய்!” கொல்லைப்புரமாய் இருந்த ஓடு வேய்ந்த சமையல் அறையின் வாசலுக்கு வெளியில் நின்று கொண்டிருந்த லக்ஷ்மி குரல் கொடுத்தாள். வயதின் தளர்ச்சி அவள் முகத்திலும், உடலிலும் வெளிப்படையாய் தெரிந்தது. சமையல் அறைக்குப் பக்கத்திலேயே இருந்த பூஜை அறையிலிருந்து தீட்சிதர் பூஜை செய்து கொண்டிருப்பதற்கு அடையாளமாய் மணியோசை கேட்டது. ஓட்டு வீட்டுக்குச் சற்று இடைவெளிவிட்டு நவீன முறையில் கட்டப்பட்ட இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று இருந்தது. அதன் பால்கனியில் உயரமாய், பலமாய், ஆரோக்கியமாய் தென்பட்ட இளைஞன் ஒருவன் எட்டிப் பார்த்தான்.

“என்ன?” என்று கேட்டான். அவன் குரல் ஒருவிதமான ராஜஸத்துடன், ஆண்மையுடன் கம்பீரமாய் ஒலித்தது.

“இதோ… காபி, டிபனை ட்ரேயில் எடுத்து வைத்திருக்கிறேன். காலையில் கொண்டு போனபோது ஆனந்த் தம்பி அரைமணி நேரம் கழித்து கொண்டுவரச் சொல்லி திருப்பி அனுப்பி விட்டான். என்னால் மறுபடியும் படியேறி இறங்க முடியாது. கால் மூட்டுவலி பிராணன் போகிறது. இடுப்பு விட்டுப் போகிறது.”

“நானே வருகிறேன்.” விஜய் கிடுகிடுவென்று படிகளில் இறங்கி லக்ஷ்மியை நோக்கி வந்தான்.

அதற்குள் குள்ளமாய், பூசிய உடல்வாகுடன் நடுவயது கடந்த ஒரு நபர் அங்கே வந்தார்.

“என்னப்பா விஜய்? நன்றாக இருக்கிறாயா?” குசலம் விசாரித்தார்.

“வாங்கோ மாமா!” மரியாதையுடன் வரவேற்று இருக்கையைக் காண்பித்தான்.

“தாத்தா இல்லையா?” உட்கார்ந்துகொண்டே கேட்டார் ஆசாரி.

“பூஜையில் இருக்கிறார். முடியும் நேரம்தான். வந்து விடுவார். உட்கார்ந்து கொள்ளுங்கள்.” சொல்லிக்கொண்டே விஜய் லக்ஷ்மி கையிலிருந்த ட்ரேயை எடுத்துக் கொண்டான்.

“ஆனந்த் தம்பி டிபனுக்கு அடையைப் பண்ணச் சொல்லியிருந்தான். பெரிய அய்யாவோ எண்ணெய்ப் பண்டம் கூடாது என்பார். அவர் வார்த்தையை மீறிச் செய்தால் அய்யா என்னை வீட்டை விட்டுத் துரத்தி விடுவார். செய்யவில்லை என்றாலோ ஆனந்த் தம்பி என்னை உயிருடன் விட்டு வைக்க மாட்டான். நான் ஏதாவது ஆற்றையோ குளத்தையோ தேடித் போக வேண்டியதுதான்.” லக்ஷ்மியின் குரல் அழுகையாய் வெளிவந்தது.

விஜய் லக்ஷ்மிக்குத் தைரியம் சொல்வது போல் லேசாக முதுகில் தட்டிக் கொடுத்தான். “கவலைப்பட தேவையில்லை. ஆனந்த் இன்னிக்கு இட்லி சாப்பிடுவான். சரிதானா?” நயமான குரலில் சொன்னான்.

“என்னவோப்பா! ஆனந்த் தம்பி வீட்டுக்கு வந்தால் போதும். என் நெஞ்சு திக்கு திக்குன்னு அடித்துக் கொள்ளும். நீ இருப்பதால்தான் நானும் குப்பனும் இத்தனை வருடங்களாய் இந்த வீட்டில் இருந்து வருகிறோம்.”

“சரி… சரி.” விஜய் ட்ரேயை எடுத்துக்கொண்டு கிளபினான். “தாத்தா இப்போ வந்து விடுவார். மேஜை மீது தமிழ் பேப்பர் இருக்கு.” ஆசாரியிடம் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அவர் விஜய் சென்ற திசையைப் பார்த்துக்கொண்டே லக்ஷ்மியிடம், “நீ சொன்னது முற்றிலும் உண்மை லக்ஷ்மி. விஜயின் பொறுமையை எத்தனை பாராட்டினாலும் தகும். இந்த தாத்தா பேரனுக்கு இடையில் இத்தனை வருடங்களாக எப்படிச் சமாளித்து வருகிறானோ அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம். இந்தக் கதையெல்லாம் இனி நடக்காது. விஜய்க்கு திருமணமாகி மனைவி என்று ஒருத்தி வந்து விட்டால் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாளா? போன வாரம் ஒரு பெண்ணின் ஜாதகத்தை கொண்டு வந்தேன் பாரு. இன்ஜினியர் வீட்டு சம்பந்தம். ஒரே பெண். அவங்க வந்தது ஆனந்துக்காகத்தான் என்றாலும் விஜயைப் பார்த்த பிறகு மனதை மாற்றிக் கொண்டு விட்டார்கள். விஜய்க்கு என்றால் தங்களுடைய பெண்ணை கொடுக்கச் சம்மதம் என்று தகவல் அனுப்பி இருக்கிறார்கள். இந்த மாதிரி நடப்பது இது மூன்றாவது தடவை.’

“சத்தமாகச் சொல்லாதீங்க சுவாமி! பெரிய அய்யாவின் காதுகளில் விழுந்து வைக்கப் போகிறது.” லக்ஷ்மி பெரிதாக கும்பிடு ஒன்று போட்டுவிட்டுப் போய் விட்டாள்.

ஆசாரி பேப்பரைக் கையில் எடுத்துக்கொண்டே வீட்டை முழுவதும் கவனமாய் பார்த்தார். “அதிர்ஷ்டம் என்றால் இதுதான். பதினெட்டு வருடங்களுக்கு முன் ஓடுகள் சரிந்து சிதிலமடைந்த நிலையில் இருந்த வீட்டுக்குள் அதிர்ஷ்ட லக்ஷ்மி காலடி எடுத்து வைத்து விட்டாள். அந்த கோர்ட் கேஸ் ஏதோ ஜெயித்தது இவர்களுடைய அதிர்ஷ்டம்தான். சிலருடைய ஜாதக விசேஷம். எப்போதுமே சுக்ர தசைதான்.” மனதிலேயே நினைத்துக் கொண்டவராய் பேப்பரைப் படிக்கத் தொடங்கினார்.

விஜய் ட்ரேயை எடுத்துக்கொண்டு மாடிக்குப் போன போது ஆனந்த் குளித்து முடித்துவிட்டு ஈரத்தலையைத் துவட்டிக்கொண்டே பாத்ரூமிலிருந்து வெளியில் வந்தான். மஞ்சள் நிற மேனி பளபளவென்று மின்னிக் கொண்டிருந்தது. கண்கள் நிர்மலமாய், களங்கமில்லாமல் இருந்தன. வாழ்க்கையில் என்றுமே யாரையுமே ஏமாற்றாத முகம் அது. எப்போதும் உற்சாகமாய் இருப்பதையே விரும்பும் மனப்பான்மை படைத்தவன் என்பதைப் பறைச்காற்றும் சிவந்த இதழ்கள். உற்சாகத்துடன் விசிலடித்துக்கொண்டே நிலைக்கண்ணாடியை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தான். நடுவில் நின்று, “ஹாச்… ஹாச்…” என்று வரிசையாய் ஐந்தாறு தும்மல்களைப் போட்டான்.

அந்தத் தும்மல்களுக்கு அவன் முகம் முழுவதும் செக்கச் சிவந்து விட்டது.

“பாழும் ஜலதோஷம்! இதுக்கும் எனக்கும் எத்தனை ஜென்ம பகையோ! வந்தால் லேசில் போகாது சனியன்.”

“நேற்று இரவு உடம்பு சரியில்லை என்று சொன்னவன் இப்போ தலைக்குக் குளிப்பானேனே?” விஜய் ட்ரேயை மேஜைமீது வைத்துவிட்டு ஜேபியிலிருந்து வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்து ஆனந்திடம் கொடுத்தான்.

ஆனந்த் டிரெஸ்ஸிங் டேபிள் அருகில் சென்றான். கண்ணாடி முன்னால் நின்று ஒரு நிமிடம் தன்னுடைய உருவத் தோற்றத்தைப் பார்த்துக் கொண்டான். அவன் கண்களில் மகிழ்ச்சி பொங்கியது.

ஷர்ட்டை எடுத்து மாட்டிக்கொள்ளும் போது லூசாக இருப்பது போல் தோன்றியது.

“விஜய்!” என்று ஷர்ட்டை வீசியெறிந்தான். “விஜட்!” சீரியஸாக அழைத்தான்.

ட்ரேயிலிருந்த தட்டுகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்த விஜய்

தலையை உயர்த்தாமலேயே, “ஊம்” என்றான். ஆனந்த் அடிக்கடி இப்படி அழைப்பதும், விஜய் பதில் கொடுப்பதும் அவர்களுக்குள் பழக்கமான விஷயமாக இருந்தது. ஆனந்த் விஜய் பக்கம் திரும்பி தன்னை முழுவதுமாக ஒரு தடவை பார்த்துக்கொண்டே சொன்னான்.

“நான் உன்னைவிட அதிகமாகச் சாப்பிடுகிறேன். பழரசம் அது இது என்று குடிப்பதில் எந்தக் குறைச்சலும் இல்லை. போறாத குறைக்கு விட்டமின் மாத்திரைகள் வேறு. அப்படியும் என்னுடைய எடை ஏறவே மாட்டேங்கிறது. ஏன்?”

“நீ முதலில் சாப்பிட வா அனூ! டிபன் ஆறிப்போய் விடும்.” எச்சரிப்பது போல் சொன்னான் விஜய்.

ஆனந்த் உடைகளை மாற்றிக்கொண்டு, தலையை வாரிக்கொண்டு கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தை விட முடியாதவன் போல் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சாப்பிட வந்தான்.

தட்டில் இட்லியைப் பார்த்ததும், “இட்லியா! இந்தக் கிழவிக்கு வர வர மூளை கலங்கிப் போய் விட்டது. ஒன்றைச் சொன்னால் வேறு ஒன்றைச் செய்கிறாள். இப்படியே போனால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறது. அவளை வேலையிலிருந்து அனுப்பி விடச் சொல்லி இப்பொழுதே போய் தாத்தாவிடம் சொல்கிறேன்.” சொல்லும்போதே ஆனந்தின் முகம் கோபத்தால் சிவந்து விட்டது. அவன் நாற்காலியை விட்டு எழுந்து கொள்ளப் போகும்போது விஜய் கையைப் பிடித்து நிறுத்தினான்.

“வீட்டிலிருந்து வெளியேற்றணும் என்றால் அவளை இல்லை என்னைத்தான் அனுப்ப வேண்டியிருக்கும்.” என்றான் விஜய்.

“உன்னையா! எதுக்கு?”

“இட்லியைச் செய்யச் சொன்னது நான்தான். உனக்கு ப்ளூ ஜுரம் வந்து நான்கு நாட்கள் கூட ஆகவில்லை. டாக்டர் சர்மா எண்ணெய்ப் பொருட்களைச் சேர்க்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.”

“அவர் ஒருத்தர்… உன் உயிரை எடுப்பதற்கு! கொஞ்சம் தும்மினால் போதும். பத்து நாட்கள் பத்தியம் போட்டுக் கொன்று விடுவார். ஹூம்! நீ சொன்னாய் இல்லையா. ஓ.கே. இட்லியைச் சாப்பிடுகிறேன்.” ஆனந்த் முகத்தில் கோபம் மறைந்து அந்த இடத்தில் புன்முறுவல் குடிகொண்டது.

“எனக்கு எது நல்லது என்று யோசிக்கும் நண்பன் இருப்பது என் அதிர்ஷ்டம் இல்லையா.” ஆனந்த் சொன்னான்.

“அனூ! நான் உன்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்லணும்.” ஆனந்த் சரியாகச் சாப்பிடுகிறானா இல்லையா என்று கவனமாகப் பார்த்துக்கொண்டே விஜய் சொன்னான்.

“முதலில் என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லு. நாம் அரக்கு வேலி போவதற்குத் தாத்தா பணம் தருகிறாரா இல்லையா?” ஆனந்த் கேட்டான்.

“நான் வரப் போவதில்லை.”

“ஏன்?”

“எனக்கு வேலை இருக்கிறது.”

“ஓ.கே. எனக்கும் வேலை இருக்கிறது. நானும் போகப் போவதில்லை. பிரோகிராம் கான்சல்.” ஆனந்த் தீர்மானமாகச் சொல்லிவிட்டான்.

“நீ போய்விட்டு வா.” விஜய் சொன்னான்.

“நீ இல்லாமலா?”

“அனூ! எத்தனை நாட்களுக்கு இப்படியே நடக்கும்? இதற்கு முன்னால் என்றால் குழந்தைகளாக இருந்தோம். சேர்ந்து படித்தோம். எங்கு போனாலும் ஒன்றாகப் போய் வந்தோம். இனி மேல் அப்படி நடந்துகொள்ள முடியாது.”

“ஏன் முடியாது?” ஆவேசமாய்க் கேட்டவன், நெற்றியைச் சுளித்தான். “வரவர கிழவிக்கு மறதி அதிகமாகி விட்டது. சட்னியில் இரண்டு தடவை உப்பை போட்டு விட்டாள் போலிருக்கிறது. விஜய்! நீ ஏன் எப்போதும் லக்ஷ்மியை, குப்பனை சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறாய்?” எரிச்சலுடன் கேட்டான்.

“சின்ன வயதிலிருந்து நம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள் என்பதால்.”

“அப்போ அவர்களுக்காக ஏதாவது ஏற்பாடு செய்து விடு. வேறு ஆட்களை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்.”

“ஆனந்த்! நான் சொல்வதைக் கவனமாய் கேட்டுக்கொள்.”

“கேட்கிறேன் சொல்லு.” ஆனந்த் இட்லியை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு நாற்காலியில் பின்னாடி சாய்ந்துகொண்டு கைகளைக் கட்டிக்கொண்டான். விஜய்க்குச் சிரிப்பு வந்தது. ஆனால் சிரிக்கவில்லை.

“நீ ஹரி மற்றவர்களுடன் சேர்ந்து அரக்கு வேலிக்கு போய் விட்டு வா.”

“நீ வருவதும் வராமல் இருப்பதும் எப்படி உன் விருப்பமோ, அதே போல் போவதா வேண்டாமா என்று முடிவு செய்தவதும் என் விருப்பம். நான் முடிவு செய்து விட்டேன். நான் போகப் போவதில்லை.”

“ஒவ்வொரு விஷயத்தையும் என்னுடன் முடிச்சுப் போடக் கூடாது என்றுதான் சொல்கிறேன்.” சொன்னான் விஜய்.

“நான் முடிச்சு போடுகிறேனா? ஆமாம்… நானும் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். சமீப காலமாய் அடிக்கடி இந்த மாதிரி வித்தியாசமாய் ஏதேதோ பேசுகிறாய். அசல் விஷயம் என்ன? முதலில் சொல்லு.” ஆனந்த் டிபன் தட்டைப் பக்கத்தில் நகர்த்தி விட்டான்.

“நீ டிபனை முழுவதுமாகச் சாப்பிடு.”

“நான் சாப்பிட மாட்டேன். முதலில் விஷயத்தைச் சொல்லு.” பிடிவாதம் பிடிப்பது போல் சொன்னான் ஆனந்த்.

விஜய் ஆழமாய் மூச்சை எடுத்துக் கொண்டான்.

அதற்குள் கீழே இருந்து, “விஜய்! விஜய்!” தீட்சிதர் அழைக்கும் குரல் கேட்டது.

“இதோ வந்து விட்டேன்.” விஜய் போகும்போது ஆனந்த் தடுத்து நிறுத்தி விட்டான்.

“தாத்தா எப்போதும் இப்படித்தான் அழைத்துக் கொண்டே இருப்பார். நீ போகாதே” என்றான்.

“இரு அனூ! ஏதாவது வேலை இருந்திருக்கும்.” விஜய் கையை விடுவித்துக்கொண்டு வேக வேகமாய் போய் விட்டான்.

ஆனந்த் டேப் ரிக்கார்டரை இயக்கி விட்டுப் பாட்டு கேட்டுக்கொண்டே இட்லியைச் சாப்பிடத் தொடங்கினான்.

விஜய் படியிறங்கி கீழே வந்தான். தீட்சிதர் விஜய் கையில் நோட்டுக் கற்றைகளை கொடுத்துக் கொண்டே, “இதோ விஜய்! ஆசாரி மாமா வீட்டை அடமானம் வைத்து வாங்கிய கடனில் கடைசி தவணை கொடுத்து விட்டார். இத்துடன் கடன் முழுவதுமாகத் தீர்ந்து விட்டது. இரும்புப் பெட்டியில் வீட்டுச் சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜுகள் இருக்கும். கொண்டு வந்து கொடு” என்று இடுப்பில் சொருகியிருந்த சாவிக்கொத்தை எடுத்து விஜயிடம் கொடுத்தார்.

“சரி.” விஜய் சாவிக்கொத்தை எடுத்துக்கொண்டு உள்ளே போனான்.

“அய்யா! போன வாரம் நான் கொண்டு வந்த இன்ஜினியர் வீட்டுப் பெண்ணுக்கு ஆனந்துக்குப் பதிலாக விஜய் மாப்பிள்ளையாக வந்தால் ஒப்புக் கொள்வார்களாம். ஒரே ஒரு பெண். விஜயை அவர்களுக்கு ரொம்பப் பிடித்து விட்டதாம்.” ஆசாரி சொல்லி முடித்தார்.

இதைக் கேட்டதும் தீட்சிதரின் முகத்தில் கோபம் அலை போல் பொங்கி உடனே அடங்கி விட்டது.

“போகட்டும் விடுங்க. உலகத்தில் வேறு பெண்ணே இல்லாமல் போய் விட்டாளா என்ன? வேறு இடத்தைப் பாருங்கள். ஆனந்தின் படிப்பு முடிந்து விட்டது. இந்த சித்திரையில் அவன் திருமணத்தை முடித்து விடலாம் என்று நினைக்கிறேன்.”

“நல்லதுதான். எங்களுக்கும் விருந்து சாப்பாடு கிடைக்கும் இல்லையா!” ஆசாரி மட்டையிலிருந்து மூக்குப் பொடியை எடுத்து உறிஞ்சிக் கொண்டே வீட்டை முழுவதும் பார்வையிட்டார். “நீங்களும் பதினெட்டு வருடங்களுக்கு முன்பு இருந்த தீட்சிதரா என்ன? ஏனோ தானோ என்று சாதாரண சம்பந்தம் பண்ணிக் கொள்வதற்கு. இந்த வீடு, இருபது ஏக்கர் தென்னந்தோப்பு, ரைஸ் மில்லு, பெட்டி நிறைய பணம், சாட்சாத் லக்ஷ்மி தேவி உங்களுக்கு மாலையிட்டு விட்டாள்.”

“சொன்னேனே. கோர்ட் கேஸ் ஒன்றில் ஜெயித்தேன் என்று.’

“ஆமாம் அதைத்தான் சொல்கிறேன். அதிர்ஷ்டம் என்றால் உங்களுடையதுதான்.”

“அதிர்ஷ்டம் என்னுடையது இல்லை. எங்க ஆனந்தோடது.”

“உண்மைதான். இருந்தாலும் ‘மாடு வந்த வேளை மருமகள் வந்த வேளை” என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். விஜய் உங்கள் வீட்டுக்கு வந்த வருஷம்தானே…”

“நல்ல பெண்ணாகப் பார்த்துச் சொல்லச் சொன்னால்…”

“இருங்க… இருங்க… அந்த பாயிண்டுக்குத்தான் வருகிறேன். இந்தச் சொத்து முழுவதும் ஆனந்துக்குத்தானா, இல்லை இதில் விஜய்க்கும் ஏதாவது கொஞ்சம்…”

“ஆசாரி! ஏற்கனவே உங்களிடம் ஆயிரம் தடவை சொல்லியிருக்கிறேன். விஜய் ஆனந்துக்குத் துணையாக இருப்பதற்காக அழைத்து வரப்பட்ட பையன் என்று. எங்களுக்கும் அவனுக்கும் எந்த உறவும் இல்லை. இந்த விஷயம் விஜய்க்கும் தெரியும்.”

“தெரியும் சுவாமி… தெரியும். நீங்கள் எங்களை மறந்து போக விட்டால்தானே. உள்ளூர் மக்களுக்கு இந்த விஷயம் நன்றாகவே தெரியும். வேற்று மனிதர்கள் வந்தால் விஜய் உங்களுடைய சொந்த பேரன்தான் என்று நினைத்துக் கொள்வார்கள். அந்த அளவுக்கு விஜய் உங்களுடைய வேலைகளை நன்றாகப் பார்த்துக் கொள்கிறான்.”

“அதனால் என்ன? ஆனந்தின் உடல்நலம் கொஞ்சம் சரி இல்லை. அதான்…”

“அதுவும் சரிதான். இருந்தாலும் விஜய்க்குச் சாமர்த்தியம் கொஞ்சம் அதிகம்தான்.”

அதற்குள் விஜய் தஸ்தாவேஜுகளுடன் அங்கே வந்தான். அவன் கையில் ஒரு காகிதமும், பேனாவும் இருந்தன. காகிதத்தில் ஏற்கனவே கணக்கு ஏதோ போட்டிருந்தது.

“நீங்க 480 ரூபாய் அதிகமாகக் கொடுத்திருக்கீங்க” என்று சொல்லிக்கொண்டே ஆசாரியிடம் அதற்கு முன் அவர் பணம் கொடுத்த விவரங்களைத் தேதி வாரியாகச் சுட்டிக் காட்டினான்.

“நீ சொன்ன பிறகு மறுபேச்சு இருக்க முடியுமா? மில்லிலும் எல்லோரும் இதே வார்த்தைதான். கணக்கு விஷயத்தில் விஜய் கச்சிதம் என்று, தீர்க்காயுஷ்மான்பவ… புத்திர பௌத்ராபி சித்திரஸ்து…” மனப்பூர்வமாக வாழ்த்தினார். விஜய் கொடுத்த பணத்தை எண்ணிக்கொண்டே, “விஜய்! உனக்காக ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்கு. பெண் ரொம்ப அழகாக லட்சணமாக இருப்பாள். அப்பா இன்ஜினியர். ஒரே மகள். உன்னை மருமகனாய் ஆக்கிக்கொள்ள வேண்டுமென்று அவர் ரொம்ப விருப்பபடுகிறார்.” சொல்லி முடித்தார் ஆசாரி.

தீட்சிதரின் இதழ்கள் இறுகின.

“தாங்க்ஸ். நான் இப்போ திருமணம் செய்து கொள்வதாக இல்லை.” விஜய் புன்முறுவலுடன் பதில் சொன்னான்.

“விஜய்! விஜய்!” ஆனந்த் சுழல்காற்று போல் வேகமாய் படிகளில் இறங்கி வந்தான். அவன் கையில் சில காகிதங்கள் இருந்தன.

“விஜய்! இதெல்லாம் என்ன? எங்களை இப்படி முதுகில் குத்தியது நீதானா?” ஆனந்த் ரொம்ப ஆவேசமாக இருந்தான். அவன் இதழ்கள் துடித்துக் கொண்டிருந்தன.

“என்ன ஆச்சு அனூ?” தீட்சிதர் பதற்றத்துடன் கேட்டார்.

ஆசாரி எண்ணிக் கொண்டிருந்த பணத்தை அப்படியே விட்டுவிட்டுக் காணக் கிடைக்காத காட்சியைப் பார்ப்பது போல் விஜயை, ஆனந்தை மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

விஜய் கொஞ்சம்கூட தடுமாறாமல் பேப்பரில் இருந்த கணக்கை மற்றொரு முறை சரி பார்த்துக் கொண்டிருந்தான்.

“உனக்கு எவ்வாவு துணிச்சல்? எனக்கே துரோகம் செய்ய நினைக்கிறாயா?” ஆனந்த் விஜயின் காலரைப் பிடிக்கப் போனான்.

விஜய் பேசவில்லை. குனிந்த தலையை நிமிரவும் இல்லை.

தீட்சிதர் சட்டென்று எழுந்து வந்தார். “ஆனந்த்! என்னவாச்சு கண்ணா?” ஆனந்தின் கையைப் பிடித்துக்கொண்டே கேட்டார்.

“என்ன ஆச்சுன்னு நிதானமாக கேட்கிறீங்களா? இந்தப் பெரிய மனிதன் ஹைதராபாத்தில் லெக்சரர் வேலைக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கிறான் எப்போ இன்டர்வ்யூவுக்குப் போய் விட்டு வந்தானோ தெரியவில்லை. வேலை கிடைத்து விட்டது. இதோ ஆர்டர்.” கையில் இருந்த காகிதத்தை முகத்திற்கு நேராக ஆட்டிக் காண்பித்தான் ஆனந்த்

“என்ன? நிஜமாகவா?” தீட்சிதர் ஆச்சரியமாகப் பார்த்தார். “விஜய்! ஆனந்த் சொல்வது உண்மையா? நீ இந்த வீட்டைவிட்டுப் போய் விட வேண்டும் என்று நினைக்கிறாயா?” தீட்சிதரின் குரல் போலியான கோபத்துடன் ஒலித்தது.

ஆசாரிக்கு விஷயம் புரிந்தது. “என்ன தீட்சிதர் அவர்களே? புதிதாக கேட்கிறீர்களே? இதில் விஜய் செய்த தவறு என்ன இருக்கிறது? வயதுக்கு வந்த பையன். அவன் வாழ்க்கையை அவன் பார்த்துக் கொள்கிறான். இதில் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது? நீங்க அவனுக்கு ஆனந்துக்குச் சமமாய் சொத்தில் பங்கு ஏதாவது தரப் போகிறீர்களா என்ன?”

“ஷட்டப் யூ ஓல்ட் மேன்! கெட் அவுட்!” ஆனந்த் வேகமாய் வந்து தோள்களைப் பற்றி ஆசாரியை நாற்காலியிலிருந்து எழுப்பி தரதரவென்று இழுத்துக்கொண்டு போய் வெளியில் தள்ளி வாசற்கதவைச் சாத்தினான்.

ஆனந்தின் கத்தலைக் கேட்டு லக்ஷ்மியும், குப்பனும் கதவுக்குப் பின்னால் மறைந்து கொண்டு பயத்துடன் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஆனந்த் நேராக விஜய் அருகில் சென்றான். “அந்த ஓல்ட் ஃபாக்ஸ் உளறியது எல்லாம் உண்மைதானா? தாத்தா சொத்தில் உனக்குப் பங்கு கொடுக்க போவதில்லையா? ஒருத்தர் கொடுப்பதாவது? அந்த நிலம், தென்னந்தோப்பு, ரைஸ்மில் எல்லாமே உன்னுடைய சொந்த முயற்சியில்தானே இந்த அளவுக்கு வளர்ந்திருக்கின்றன! இப்பொழுதே தாத்தாவைக் கையெழுத்தைப் போடச் சொல்கிறேன். உன்னை என்னிடமிருந்து பிரிக்கும் இந்தப் பணம் எனக்கு வேண்டவே வேண்டாம். நன்றாக கேட்டுக்கொள். நீயே முழுவதுமாக எடுத்துக்கொள். தாத்தா! இதோ பேனாவும் பேப்பரும். முதலில் எழுதி கையெழுத்துப் போடு.” ஆனந்த் பேப்பரையும் பேனாவையும் கொண்டு வந்து தாத்தாவிடம் கொடுத்தான்.

“அது இல்லை ஆனந்த்!” தீட்சிதர் ஏதோ சொல்லப் போனார்.

“முதலில் எழுதிக் கையெழுத்துப் போடு தாத்தா! ஊம்…” ஆனந்த் மிரட்டுவது போல் தாத்தாவின் தோளில் கையைப் பதித்தான்.

பேரனின் உருட்டல் மிரட்டல்களுக்கு அவர் பயந்து விட்டார். ஆனந்த் வாயிலிருந்து ஒரு வார்த்தை வந்தால் அது உடனே நடந்தாக வேண்டும். சின்ன வயதிலிருந்து இந்தக் கெட்ட பழக்கத்தை ஊக்குவித்தது அவர்தான். ஆனந்துக்கு அளவுக்கு மீறிச் செல்லம் கொடுத்து வளர்த்ததற்கு அவன் பெரியவன் ஆன பிறகு இவ்வளவு பெரிய அபராதம் செலுத்த வேண்டி வரும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

விருப்பமில்லா விட்டாலும், வேறு வழியில்லாத நிலையில் தீட்சிதர் காகிதத்தில் எழுதத் தொடங்கினார்.

விஜய் அவர் கையிலிருந்த காகிதத்தை எடுத்துக் கொண்டான். ஆனந்த் அதைப் பிடுங்கிக்கொண்டு மறுபடியும் தாத்தாவிடம் கொடுத்தான்.

“ஆனந்த்! நீ கொஞ்சம் அதிகமாக உணர்ச்சிவசப் படுகிறாய்.” ஆனந்தை அதட்டுவது போல் சொன்னான் விஜய்.

சின்ன வயதிலிருந்தே இப்படித்தான். தீட்சிதருக்கும், ஆனந்துக்கும் நடுவில் சண்டை சச்சரவு ஏதாவது வந்தால் அது தீரும் வரை விஜய்குத்தான் தலை வேதனை. முடிந்த வரையில் அது போன்ற சூழ்நிலை வராமல் பார்த்துக் கொள்வான்.

“உணர்ச்சிவசப் படுவது நீயா இல்லை நானா?” ஆனந்த் கோபமாக கேட்டான். வீட்டைச் சுட்டிக்காட்டிக் கொண்டே, “இங்கே இந்த வீட்டில் இத்தனை பணம் கொட்டிக் கிடக்கிறபோது யாருமே இல்லாத அநாதை போல் நீ எங்கேயோ போய் யாருக்குக் கீழேயோ வேலை செய்து பிழைக்கத்தான் வேண்டுமா? அதைப் பார்த்துக்கொண்டு நான் சும்மா இருப்பதா?”

“வேலை பார்க்கிறவர்கள் எல்லோரும் அனாதைகளா?”

“வேண்டும் என்பவர்களை, இருக்கிற சொத்தை விட்டுவிட்டு வெளியே போகிறவர்களை அனாதைகள் என்றுதான் சொல்வேன், முதலில் என் கேள்விக்கு நேராகப் பதில் சொல்லு. எங்களை விட்டுத் தொலைவுக்குப் போக வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா?”

“இல்லை:.” விஜய் கச்சிதமாகப் பதில் சொன்னான்.

“பின்னே? தாத்தா ஏதாவது சொன்னாரா?” ஆனந்த் தீட்சிதர் பக்கம் சந்தேகமாய்ப் பார்த்தான்.

“நானா!” தீட்சிதர் அதிர்ச்சி அடைந்தவர் போல் பார்த்தார். “நான் என்ன சொல்லிவிட்டேன்?”

“உண்மையைச் சொல்லு தாத்தா! ஒன்றுமே சொல்லவில்லையா?” ஆனந்த் குரலை உயர்த்தினான்.

“தாத்தா என்னை ஒன்றுமே சொல்லவில்லை.” விஜய் தீட்சிதர் அருகில் சென்று அவர் சார்பில் பதில் சொல்வது போல் சொன்னான்.

“அப்போ… என்னதான் நடந்தது? இந்த யோசனை உனக்கு எப்படி வந்தது?” ஆனந்துக்குக் கோபத்தில் பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது.

“என்னிக்காவது ஒருநாள் நான் சுதந்திரமாக வாழ்ந்துதானே ஆகணும்!”

“சுதந்திரமாய் வாழணுமா! அப்படீன்னா… இப்போ சிறையில் இருக்கிறாயா? ஆல்ரைட்… அதைப்பற்றி இப்போ வாதம் வேண்டாம். உனக்கு அது போன்ற எண்ணம் இருந்தால் அதை நான் மறுக்கவில்லை. ஆனால் சுதந்திரத்தைத் தேடி எங்கேயோ போவானேன்? ஒரே ஒரு வார்த்தை என்னிடம் சொல்லியிருக்கலாமே. நான் ஒரு முட்டாள் என்றும், எதையும் புரிந்து கொள்ள முடியாதவன் என்றும் உனக்குத் தெரியும் இல்லையா. மாடி முழுவதும் நீயே எடுத்துக்கொள். அங்கேயே தங்கிக்கொள். நாங்கள் யாரும் அந்த இடத்தில் காலடி வைக்க மாட்டோம். தாத்தா! இந்த வேளையிலிருந்து நம்முடைய சாப்பாடு கீழேதான். படுத்துக்கொள்வதும் இரும்புப் பெட்டி இருக்கும் அறையில்தான் விஜயை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது. அவனாக கூப்பிட்டால் போய் பேசுவோம்.”

“ஆனந்த்!” விஜய் தடுப்பது போல் அழைத்தான்.

“இப்போ சொல்லு. உயிர் போகிற விஷயம் ஏதாவது இருந்தால் நாங்க உன்னுடன் பேசலாமா இல்லை அதுவும் வேண்டாமா? வருடக் கணக்காக எங்கள் முகத்தைப் பார்த்துப் பார்த்து உனக்குச் சலிப்பு வந்து விட்டதா?”

“ஆனந்த்! நான் சொல்வதைக் கேள்.”

“மாட்டேன்… கேட்கமாட்டேன். ஒவ்வொரு விஷயத்தையும் அது எவ்வளவு சின்னதாக இருந்தாலும் சரி, நான் உன்னிடம் சொல்லாமல் செய்திருக்கிறேனா? சொல்லும் முன் அது உனக்குப் பிடிக்குமா இல்லையா என்று ஆயிரம் தடவை யோசிப்பேன். உன்னுடைய அறிவுரையைக் கேட்டுக் கொள்வேன். நீ வேண்டாமென்று சொன்னால் மறுபேச்சு பேசாமல் விட்டு விடுவேன். ஆனால் நீ அப்படி இல்லை. எப்பொழுதும் உன் மனதில் இருப்பதை வெளியில் சொல்ல மாட்டாய். இத்தனை வருடங்கள் கழிந்து விட்டன. என்னுடைய உயிர் நண்பன் நீதான் என்று நான் நினைத்து வருகிறேன். நீ மட்டும் எனக்குத் துணைக்காகத் தாத்தாவினால் அழைத்து வரப் பட்டவன் என்பதுபோல் சில சமயம் நடந்து கொள்கிறாய். இதோ இந்த வேலை விஷயம்கூட அப்படித்தான். எனக்குத் தெரியும் நான் உன்னைக் குற்றம் காணக் கூடாது என்று இந்த விதமாகச் செயல்படுகிறாய். தவறு முழுவதும் என்மீதுதான். என்னுடைய நட்பு பற்றி ஆழமான நம்பிக்கையை உன் மனதில் ஏற்படுத்த முடியாமல் போய்விட்டேன். நான் உயிருடன் இருப்பதே வேஸ்ட். உன்னைப் போன்ற நல்ல நண்பனைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத எனக்கு உயிருடன் இருக்கும் தகுதி இல்லை.” ஆனந்த் சுவற்றில் வேகமாய் மோதிக்கொள்ளத் தொடங்கினான்.

“ஆனந்த்! ஆனந்த்! என்னப்பா இது?” தீட்சிதர் வந்து தடுக்கப் போனார். ஆனந்தின் கைகளை அவரைப் பலமாய் பக்கத்திற்குத் தள்ளி விட்டன.

“நீ இந்த விஷயத்தில் தலையிடாதே தாத்தா. முதலில் இந்த இடத்தை விட்டுப் போய் விடு. இல்லா விட்டால்…” கைப்பிடிகளை இறுக்கி, தொண்டை நரம்புகள் புடைக்கக் கத்தினான் ஆனந்த். அவன் கண்கள் சிவந்து விட்டன. கன்னங்கள் மீது கண்ணீர் வழியத் தொடங்கியது. விஜயினால் இனிமேல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அதுவரையில் எப்படியாவது இந்த நிலைமையை எதிர்கொண்டு தீர்வு காணவேண்டுமென்று திடமான முடிவுடன் இருந்தான். ஆனந்தின் பிடிவாதத்தை முன்கூட்டியே ஊகித்தவன் போல் மௌனமாய், கம்பீரத்துடன் தாக்குப்பிடிக்க முயற்சி செய்தான்.

ஆனால் ஆனந்தைப் பார்த்த பிறகு அவன் செய்து வைத்திருந்த முடிவு காற்றில் பறந்து விட்டது. எப்போதும் தன்னுடைய எதிர்காலத்தைவிட ஆனந்த்தான் முக்கியம் என்று தோன்றியது.

இரண்டடி முன்னால் வைத்து ஆனந்த் அருகில் வந்தான். “ஆனந்த்!” என்று அழைத்தான்.

“என்னை யாரும் கூப்பிடத் தேவையில்லை. ஆனந்த் இறந்து போய் விட்டான்.” “ப்ளீஸ் ஆனந்த்.”

“நீ உடனே இங்கிருந்து போய் விடு. சுதந்திரமான வாழ்க்கை உனக்காக மாலையோடு காத்திருக்கிறது.” ஆனந்த் கத்தினான்.

விஜய் அந்தக் கத்தலைப் பொருட்படுத்தவில்லை. மேலும் அருகில் வந்தான். “ஆனந்த்!” என்று அழைத்தான்.

“நோ… யாரும் என் முகத்தைப் பார்க்கத் தேவையில்லை. இந்தப் பிறவியில் உனக்கு அந்த வேதனை இருக்காது.”

ஆனந்த் ஆவேசத்துடன் சுவற்றில் தலையை மோதிக் கொண்டிருந்தான். அந்த நிமிடத்தில் அவன் சொன்னதில் அணுவளவும் பொய் இல்லை என்றும், சொன்னபடி நிச்சமாய் செய்வான் என்றும் விஜய்க்குப் புரிந்தது.

விஜய் ஆனந்தின் இரண்டு தோள்களிலும் கைகளைப் பதித்து வலுக்கட்டாயமாக தன் பக்கம் திருப்பிக் கொண்டான்.

“சாரி அனூ! இனி ஒரு நாளும் இதுபோல் செய்ய மாட்டேன். சரி தானா!” என்றான்.

ஆனந்த் அமைதியடையவில்லை. அவனுடைய கோபம் கட்டுக்கு அடங்காமல் காட்டாற்று வெள்ளம் போல் பொங்கிக் கொண்டிருந்தது. அதன் தாக்குதலைத் தாங்க முடியாமல் அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

“ப்ளீஸ் ஆனந்த்!” விஜய் வேண்டுவது போல் சொன்னான்.

“இங்கே யாரும் யாருக்காகவும் வலுக்கட்டாயமாக இருக்க வேண்டியதில்லை.” ஆனந்தின் கோபம் இன்னும் குறையவில்லை. வீம்பு பிடிப்பது போல் சொன்னான்.

“சிலசமயம் தவறுதலாக வேண்டாத யோசனைகளை எனக்கு வந்து விடும். இனி ஒரு நாளும் இப்படி நடந்துகொள்ள மாட்டேன்.”

“இப்போ இப்படித்தான் சொல்வாய். மறுபடியும் என்னுடைய உயிரை எடுக்க ஏதாவது பிரச்னை வரும்.”

“வராது. வரவும் விட மாட்டேன். நான் எங்கேயும் போக மாட்டேன்” என்றான் விஜய்.

“நான் நம்ப மாட்டேன்.”

“பிராமிஸ்!”

“நிஜமாகவா?”

“நிஜம்தான். பிராமிஸ்.”

ஆனந்த் விஜயின் கையைத் தன் தலைமீது வைத்துக் கொண்டான்.

“எங்கேயும் போக மாட்டேன். தவறிப் போய்க் கூட அதுபோன்ற யோசனைகளை வரவிடமாட்டேன். சரிதானா!” வாக்கு தருவது போல் சொன்னான் விஜய்.

“நீ எனக்கு வாக்கு கொடுத்து விட்டாய். தவறினால் என் தலை இரண்டாக உடைந்து விடும். எப்படி உடையும் என்று உனக்கு நான் தனியாய்ச் சொல்ல வேண்டியதில்லை. என்னைப்பற்றித் தெரியும் இல்லையா?” இரட்டிப்பது போல் கேட்டான்.

“தெரியும்.” விஜய் ஆனந்த் முதுகில் தடவிக் கொடுத்தான்.

கத்தி ரகளை செய்ததில் ஆனந்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டான். அவனுக்கு ஆஸ்துமா அட்டாக் தீவிரமாக வந்து விட்டது.

“குப்பண்ணா! ஓடு… ஓடிப்போய் டாக்டர் சர்மாவை அழைத்துக்கொண்டு வா.” தீட்சிதர் பதற்றத்துடன் கத்தினார்.

விஜய் கிடுகிடுவென்று மாடிக்குப் போய் நிமிடத்தில் இன்ஹேலரை எடுத்துக்கொண்டு வந்து ஆனந்தின் மூக்கின் அருகில் வைத்தான், மூச்சுக்காற்று சீரடைந்தது போல் தோன்றினாலும் மறுபடியும் திணறல் தொடங்கியது.

“விஜய்! ஐ யாம் கோயிங் டு டை. என்னை உன் கைகளில் எடுத்துக்கொள்.” பலவீனமான குரலில் வேண்டுவது போல் கேட்டான்.

விஜய் ஆனந்தைக் கைகளில் எடுத்துக் கொண்டான்.

“அனூ! ரிலாக்ஸ் ப்ளீஸ்.”

“அனூ! அனூ!” தீட்சிதர் ஆனந்தின் தலையை வருடிக் கொடுத்தார். பார்வை தடுமாற ஆனந்த், “விஜய்! என்னை விட்டுவிட்டுப் போகாதே” என்றான். மூச்சுத் திணறலுக்கு இடையில் அந்த வார்த்தைகள் கண்ணாடி மீது பரவிய பனியைப் போல் தெளிவில்லாமல் ஒலித்தன. விஜய் ஆனந்தை இரண்டு கைகளில் அப்படியே தூக்கிக்கொண்டு படுக்கையறைக்குள் போனான்.

கால்மணி நேரத்தில் டாக்டர் சர்மா வந்தார். ஆனந்தின் நிலைமையைக் கவனித்து, “முந்தின நாள் குளத்தில் நீச்சலடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த போதே இப்படி ஏதாவது ஆகும் என்று எதிர்பார்த்தேன்” என்று சொல்லிக்கொண்டே ஊசியைப் போட்டார். ஆனந்த் மெதுவாக மயக்கத்தில் ஆழ்ந்தான். மூச்சுத் திணறல் இன்னும் குறையவில்லை என்பதற்கு அறிகுறியாய் உடல் தூக்கித் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தது. சர்மா ஆனந்தின் மார்பில் ஸ்டெத்தை வைத்து பரிசோதனை செய்து விட்டு, “விஜய்! ஆனந்தை உடனே ஹாஸ்பிடலில் சேர்த்தால் நல்லது என்று தோன்றுகிறது. அட்டாக் கொஞ்சம் தீவிரமாய் இருக்கிறது” என்றார்.

விஜய் தலையை அசைத்தான்.

“நான் கடிதம் எழுதி தருகிறேன். என்னால் இப்போது உங்களுடன் வர முடியாது. அர்ஜென்ட் கேஸ் ஒன்று இருக்கிறது. நீயும், தாத்தாவும் கூட போங்கோ. அருணா நர்சிங் ஹோமில் எல்லோரும் நமக்குத் தெரிந்தவர்கள்தான். நான் போன் செய்கிறேன்.”

“டாக்டர்! ஒன்றரை மணி நேர பயணத்தை ஆனந்த் தாங்குவானா?”

“பரவாயில்லை. இன்னும் நேரம் கடத்தாமல் புறபட்டால் நல்லது.”

“நான் ஷெட்டிலிருந்து காரை வெளியில் எடுக்கிறேன்.” விஜய் வேகமாகப் போனான்.

சர்மா ஆனந்தின் நாடியைப் பரிசீலித்தார். ஐந்தாவது நிமிடம் விஜய் ஆனந்தை காரின் பின்சீட்டில் படுக்க வைத்தான். தீட்சிதர் மடியில் தலையணையை வைத்துக்கொண்டு ஆனந்தின் தலையைத் தாங்கிக் கொண்டார். விஜய் காரைச் செலுத்தப் போனான்.

“விஜய்! பணத்தை எடுத்துக் கொண்டாயா?” தீட்சிதர் பதற்றத்துடன் கேட்டார்.

விஜய் தலையை அசைத்தான். மழையில் சாலை முழுவதும் குண்டும் குழியுமாய் இருந்தது. விஜய் ஆனந்துக்கு அசௌகரியம் ஏற்படாத விதமாய் கவனமாய்க் காரை செலுத்திக் கொண்டிருந்தான்.

“விஜய்! என் அருகிலேயே இரு. என்னை விட்டுப் போகாதே.” ஆனந்தின் இதழ்கள் தெளிவில்லாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

“ஒரு நிமிடம் பொறுத்துக்கொள். நான் உன் அருகிலேயேதான் இருக்கிறேன் அனூ!” நயமான குரலில் சொன்னான் விஜய்.

தீட்சிதருக்கு விஷத்தை விழுங்கியது போல் இருந்தது. தன் மடியில் தலையை வைத்துக்கொண்டு படுத்திருந்த ஆனந்த் தன்னை அழைக்காமல், விஜயை அழைத்தது நரகத்திற்குச் சமமான உணர்வை ஏற்படுத்தியது. அவர் விஜயையே தீவிரமாய் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் பார்வைக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் இந்நேரம் விஜய் எரிந்து சாம்பலாகி இருப்பான்.

அத்தியாயம்-3

விஜய் செலுத்திக் கொண்டிருந்த கார் அருணா நர்சிங்ஹோம் முன்னால் வந்து நின்றது. ஹாஸ்பிடல் கட்டடம் சமீபத்தில் கட்டியிருப்பதுபோல் புதுசாய் தென்பட்டது. ஏற்கனவே டாக்டர் சர்மா போன் செய்து சொல்லியிருந்ததால் கார் வந்து நின்றதும் வாசலுக்கு ஸ்ட்ரெச்சரை எடுத்து வந்து ஆனந்தை அதன் மீது படுக்க வைத்து உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஆக்சிஜன் ட்யூப் பொருத்துவது, தேவையான ஊசிகளைப் போடுவது அடுத்தடுத்ததாக நடந்து முடிந்து விட்டன. அரைமணி நேரம் கழித்து ஆனந்தின் மூச்சு கொஞ்சம் சீரானது.

விஜய் பக்கத்திலேயே நாற்காலியில் அமர்ந்து இருந்தான். ஆனந்தின் கை அவன் கையைப் பலமாக பற்றி இருந்தது. ஆனந்தின் முகம் சோர்ந்து போய், களைப்புடன் தென்பட்டது. ஒரு பக்கமாய் ஒருக்களித்து படுத்திருந்தான். தீட்சிதர் அருகில் வந்தார்.

விஜய் நாற்காலியிலிருந்து மெதுவாய் எழுந்து ஆனந்தின் பிடியிலிருந்த தன் கையை விடுவித்துக்கொண்டு தீட்சிதரின் கையில் ஆனந்தின் கையை வைத்துவிட்டு நகர்ந்து கொண்டான். தீட்சிதர் பேரனின் கையை அழுத்தமாய் பிடித்துக் கொண்டார். ஆனந்தின் தலையை அன்புடன் வருடிக் கொடுத்தார். அவரையும் அறியாமல் அவர் கண்களிலிருந்து கண்ணீர் வெளியேறியது. ஆனந்த் பெரியவனாகி விட்டான். படிப்பும் முடிந்து விட்டது. நல்ல பெண்ணாகப் பார்த்து அவனை ஒரு கிருகஸ்தனாக்க வேண்டும் என்று அவர் துடித்துக் கொண்டிருந்தார். ஆனந்தின் பதினெட்டாவது வயதிலிருந்து அவனுடைய உடல் நிலைமை சில சமயம் உயிருக்கும் ஆபத்தாகி விடும் அளவுக்கு மோசமாகி அவர் காலடியிலிருந்து நிலத்தை நழுவச் செய்து கொண்டிருந்தது. நல்ல பெண்ணாக, சாமர்த்தியம் மிகுந்த பெண்ணாக பார்க்க வேண்டும். தைரியம், பிடிவாதம் மிகுந்த, அன்பு நிறைந்த குணவதிக்காகத் தீட்சிதர் வலை வீசி தேடிக் கொண்டிருந்தார். பல ஜாதகங்கள் வந்து கொண்டுதான் இருந்தன. எதுவும் சரிபட்டு வரவில்லை.

அதற்குள், “நமஸ்காரம் தாத்தா! என்ன? ஆனந்துக்கு என்னவாகி விட்டது?” என்ற குரல் கேட்டது.

தீட்சிதர் தலையைத் திருப்பிப் பார்த்தார். ஹரிகிருஷ்ணா எதிரே நின்றிருந்தான். “ஆனந்துக்கு என்னவாகி விட்டது?” பதற்றத்துடன் கேட்டான்.

“ஷ்!” மெதுவாய்ப் பேசு என்பதுபோல் தீட்சிதர் உதட்டின் மீது விரலை வைத்து எச்சரித்தார்.

“நான்கு நாட்களுக்கு முன்பு சந்தித்தேன். அரக்கு வேலி போகலாம் வா என்றான். அப்போ நன்றாகத்தானே இருந்தான்?” ஹரி குரலைத் தாழ்த்திக்கொண்டே கேட்டான்.

“ஆஸ்துமா அட்டாக் கொஞ்சம் தீவிரமாய் வந்து விட்டது” என்றார் தீட்சிதர்.

“அடடா! பாவம் சின்ன வயதிலிருந்து அவனை இந்த ஆஸ்துமா படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் இருந்தால் ஆனந்த் எவ்வளவு உற்சாகமாக இருப்பான் தெரியுமா? விஜய் எங்கே?” ஹரி கேட்டான். ஆனந்த், விஜய் ஒருவரை விட்டு ஒருவர் இருக்க மாட்டார்கள். இருவரையும் இணைந்து கல்லூரியில் ‘விஜயானந்த்’ என்று நிக்நேம் வைத்திருந்தார்கள்.

“இதுவரையில் இங்கேதானே இருந்தான்.” விஜய்க்காக தீட்சிதர் சுற்றும் முறும் பார்த்தார். அதற்குள் ட்யூட்டி டாக்டர் ஆனந்தைப் பரிசோதிப்பதற்காக வந்தாள்.

ஹரியைப் பார்த்ததும், “ஹரி! நீ எங்கே இந்தப் பக்கம்? அதிசயமாய் இருக்கு” என்றாள்.

“அட ஹேமா! நீதானா… இன்னிக்கு ட்யூட்டியில் நீதான் இருக்கிறாயா. நல்லதாகி விட்டது. ஹேமா! இவங்க எனக்கு ரொம்ப வேண்டியவர்கள். ஆனந்த் என்னுடைய கிளாஸ்மேட். இவர் ஆனந்தின் தாத்தா… தீட்சிதர்” என்று அறிமுகபடுத்தியவன் தீட்சிதர் பக்கம் திரும்பி, “தாத்தா! இவள் பெயர் ஹேமா. என்னுடைய பெரியம்மாவின் மகள். அவளுக்கு அண்ணன் தம்பி கிடையாது. எனக்கு அக்கா தங்கைகள் கிடையாது. எங்க சித்தப்பா… ஹேமாவின் தந்தை இப்போ உயிருடன் இல்லை. ஹேமா சின்ன வயதில் எங்கள் வீட்டில்தான் வளர்ந்தாள்” என்றான்.

ஹேமா புன்முறுவலுடன் வணக்கம் தெரிவித்தாள்.

தீட்சிதர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கண்களுக்கு ஹேமா தேஜஸ் நிறைந்த பெண்ணாகத் தென்பட்டாள். பிறவிலேயே ஏற்பட்ட பண்பு, புத்திசாலித்தனம், அமைதி கலந்த சுபாவம் எல்லாம் கலந்து அவள் முகத்தின் ஒளியை மேலும் அதிகரித்துக் கொண்டிருந்தன.

ஹேமா அருகில் சென்று ஆனந்தின் மார்பின் மீது ஸ்டெதஸ்கோப்பை வைத்து பரிசோதனை செய்து கொண்டிருந்தாள்.

ஆனந்த் தூக்கக் கலக்கத்திலேயே கண்களைத் திறந்தான்.

“எப்படி இருக்கீங்க?” ஹேமா புன்முறுவலுடன் ஆனந்திடம் கேட்டாள். “%60601.”

“குட்.” ஹேமா மெடிகல் சார்ட்டை பார்த்துக் கொண்டிருந்தாள்.

தீட்சிதரால் ஹேமாவின் முகத்தை விட்டுப் பார்வையைத் திருப்பிக் கொள்ள முடியவில்லை. இத்தனை வருடங்களாய் அவர் வேண்டிக் கொண்டதற்குப் பலன் கிடைத்து விட்டது போல் இருந்தது. ஆனந்துக்கு எப்படிப்பட்ட பெண் மனைவியாக வரவேண்டும் என்று அவர் ஊகித்திருந்தாரோ அதற்கு உருவத் தோற்றம் கொடுப்பதுபோல் ஹேமா இருந்தாள்.

“லங்க்ஸில் ரொம்ப கஞ்ஜெஷன் இருக்கிறது. எக்ஸரே எடுத்துப் பார்த்த பிறகு மற்ற டெஸ்டுகளைச் செய்ய வேண்டும்.” ஹேமா நோட் எழுதிக் கொண்டே சொன்னாள்.

“எங்கள் ஹேமா இருக்கிறாள். ஆனந்தை கவனமாகப் பார்த்துக் கொள்வாள். நீங்கள் கவலைப்படாதீர்கள் தாத்தா.” தெரியம் அளிப்பது போல் சொன்னான் ஹரி.

“நீ ஊரிலிருந்து எப்போ வந்தாய்?” ஹேமா ஹரியிடம் கேட்டாள்.

“காலையில்தான். நண்பனின் திருமணத்திற்காக வந்தேன். எங்க லெக்சரர் ராவின் மனைவிக்கு மைல்டாக ஸ்ட்ரோக் வந்திருக்கிறது. இந்த ஆஸ்பத்திரியில்தான் அட்மிட் ஆகியிருக்கிறாள் என்று தெரிந்தது. அதான் பார்க்க வந்தேன்.”

“நோயாளியின் பெயர் லக்ஷ்மிதானே.”

“ஆமாம்.”

“மைல்ட் ஸ்ட்ரோக் இல்லை. சிவியர் ஆகத்தான் வந்திருக்கிறது.” ஹேமா சொல்லிக் கொண்டிருக்கும்போதே நர்ஸ் அங்கே வந்தாள்.

நோயாளிக்கு விழிப்பு வந்ததும் செய்ய வேண்டிய டெஸ்டுகளைப் பற்றி நர்ஸிடம் சொல்லிவிட்டு ஹேமா அங்கிருந்து கிளம்ப முற்படும்போது தீட்சிதர் சொன்னார்.

“ரொம்ப சந்தோஷம் அம்மா. ஆஸ்பத்திரி என்றாலே எனக்குப் பயம் அதிகம். தெரிந்த பெண் நீ இருப்பதால் கொஞ்சம் தைரியமாக இருக்கிறது. ஹரி ஆனந்துக்கு கிளாஸ்மேட் மட்டுமே இல்லை. தூரத்து உறவினனும் கூட. அந்த வழியில் பார்த்தால் நீயும் எங்களுக்கு உறவுதான்.”

ஹேமாவின் இதழ்களில் புன்முறுவல் மலர்ந்தது. “இது ஹாஸ்பிடல். இங்கே டாக்டர்களுக்கு நோயாளிகள் எல்லோரும் உறவினர்கள் போல்தான். நீங்க கொஞ்சம் கூட பயப்படத் தேவையில்லை. ஹரி! வீட்டுக்கு வருகிறாய் இல்லையா?” என்றாள்.

“அம்மாடியோவ்! வீட்டுக்கு வராமல் இருப்பதாவது! பெரியம்மாவும், நீயும் ஒன்றும் நினைத்துக்கொள்ளா விட்டாலும் அங்கே அம்மா என்னுடைய கால்களை ஒடித்துப் போட்டு விட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பாள்.” பயப்படுவது போல் பார்த்தான். “அம்மா உனக்காக ஒரு பெண்ணைப் பார்த்து வைத்திருக்கிறாள்.” அவள் கண்களில் மின்னிய குறும்பு பார்ப்பவர்களை ஈர்ப்பது போல் இருந்தது.

ஹரிகிருஷ்ணா இருகைகளையும் கூப்பி பெரிதாக கும்பிடு ஒன்று போட்டான். “ஹேமா! இந்த ஆபத்திலிருந்து என்னை நீதான் காப்பாற்றணும்.’

“வீட்டுக்கு வா! பேசுவோம். இன்று எனக்கு நைட் ட்யூட்டி இருக்கிறது.”

“நான் நண்பர்களுடன் பேசிவிட்டு வருவதற்கு எப்படியும் இரவு ஒருமணி ஆகி விடும். நீ வீட்டுக்கு வந்த பிறகு என்னை எழுப்பச் சொல்லிப் பெரியம்மாவிடம் சொல்லி வைக்கிறேன்” என்றான்.

“சரி, பார்ப்போம்.” ஹரியிடம் சொன்னவள் தீட்சிதர் பக்கம் திரும்பி, “பேரனைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்” என்று சொன்னாள். அதே நேரத்திற்கு விஜய் பிளாஸ்கில் காபி, வாழைப்பழங்கள் முதலியவற்றைக் கையில் எடுத்துக்கொண்டு உள்ளே வரப் போனான்.

தீட்சிதர் பக்கம் திரும்பி விடைபெற்றுக்கொண்டே அறையைத் தாண்ட போன ஹேமா விஜய் மீது மோதிக்கொள்ளப் போய் எப்படியோ சமாளித்துக் கொண்டாள்.

“ஐ யாம் சாரி.” விஜய் சற்று நகர்ந்து வழியை விட்டான்.

அந்தக் குரலைக் கேட்டதும் ஹேமா தலையை உயர்த்தி அவன் பக்கம் பார்த்தாள். அவளால் தூக்கத்தில் கூட அந்தக் குரலை அடையாளம் காண முடியும்.

“விஜய்! இவங்க டாக்டர் ஹேமா. நம் ஹரிகிருஷனாவின் தங்கை. இன்னிக்கு இரவு ட்யூட்டி அவளுடையது தானாம்.” தீட்சிதர் விஜய் மீது இருந்த கோபத்தைத் தற்காலிகமாய் மறந்து விட்டு ஹேமாவைப் பற்றி விஜயிடம் சொன்னார்.

விஜய் ஹேமாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஹேமா! இவன் பெயர் விஜய். ஆனந்தின் நண்பன்.” ஹரி ஒருவருக்கொருவரை அறிமுகப்படுத்தி வைத்தான்.

“ஹலோ!” என்றாள் ஹேமா தெளிவில்லாமல்.

அவளுடைய முதுகு குறுக்கே இருந்ததால் தீட்சிதருக்கு விஜயின் முகத்தில் ஏற்பட்ட மாறுதல் தெரிய வாய்ப்பு இல்லை. விஜய் கண்களில் எதிர்பாராத மகிழ்ச்சி பிரதிபலிக்கப் போய் உடனே கம்மீரம் திரையாய் படிந்து அந்த மகிழ்ச்சியை மறைத்து விட்டது.

“என்ன விஜய்? எப்படி இருக்கிறாய்?” ஹரிகிருஷ்ணா அருகில் வந்தான்.

“வருகிறேன்.” பொதுவாகச் சொல்லிவிட்டு ஹேமா கிளம்பிப் போனாள். சற்று தூரம் போன பிறகு கழுத்தை மட்டும் லேசாகத் திருப்பிப் பார்த்தாள்.

விஜய் அவள் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் முகத்தில் ஹேமாவுக்குத் தேவையான பதில் கிடைத்து விட்டது போல் இருந்தது. அவள் மனம் மயில் இறகைபோல் இலேசாகி விட்டது.

“நன்றாக இருக்கிறாயா விஜய்?” ஹரி கேட்டுக் கொண்டிருந்தான்.

“நலம்தான்.” விஜய் உள்ளே வந்தான். தீட்சிதரிடம் வாழைப் பழங்களைக் கொடுத்தான்.

“ஊஹும். எனக்குச் சாப்பிடணும் போல் இல்லை.” தீட்சிதர் மறுத்தார்.

“கொஞ்சமாவது சாப்பிடணும். காலையிலிருந்து நீங்க எதுவும் சாப்பிடவில்லை.” விஜய் வாழைப்பழத்தைப் பாதிவரையில் உரித்து அவரிடம் கொடுத்தான்.

“என்ன… ரஸ்தாளியா…” ஹரி விஜய் கையிலிருந்து இரண்டு பழங்களை எடுத்துக்கொண்டு மளமளவென்று சாப்பிட்டு விட்டான்.

“உட்கார்ந்து கொள் ஹரி! காபி குடித்துவிட்டுப் போகலாம். உங்க ஹேமாவைப் பார்த்த பிறகு என் மனதுக்கு நிம்மதியாகி விட்டது என்ன இருந்தாலும் நம் மனிதர்கள் என்று யாராவது இருந்தால் தைரியமாக இருக்கும் இல்லையா.” தீட்சிதர் சொன்னார்.

“ஆமாமாம். எங்க ஹேமாவைப் பார்த்தால் கோழைகளுக்குக் கூடத் தைரியம் வந்து விடும்.” ஹரி சொன்னான்.

விஜய் பிளாஸ்கிலிருந்து காபியை டம்ளரில் ஊற்றி தீட்சிதரிடம் கொடுத்துக் கொண்டே, “சர்மா அங்கிள் போன் செய்தார். குப்பன் வந்தானாம். சுவாமிநாத அய்யர் நம் வீட்டில் உங்களுக்காகக் காத்திருக்கிறாராம். இன்று அக்ரிமெண்டில் கையெழுத்துப் போடுவதாக இருந்தது இல்லையா. பணத்தையும் கொண்டு வந்திருப்பதாகச் சொல்லச் சொன்னாராம்” என்றான்.

“அடடா! மறந்தே போய் விட்டேன். இந்த நேரத்தில் பஸ் வேறு இருக்காதே. எப்படி போவது?” தீட்சிதர் கவலையுடன் சொன்னார்.

“என்னுடைய டூ வீலர் இருக்கிறது. உங்களுக்கு அர்ஜெண்டாக போகவேண்டும் என்றால் நான் ட்ராப் செய்கிறேன். வாங்க” என்றான் ஹரி.

“பெரிய கவலை விட்டது. மகராஜனாய் இருக்கணும் நீ.” ஆசீர்வாதம் செய்தார் தீட்சிதர்.

“உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைத்தால் என் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் சேர்ந்து வரும்.” குனிந்து கைகளை ஜோடித்தான் ஹரி.

தீட்சிதர் ஹரிகிருஷ்ணாவுடன் போய் விட்டார்.

விஜய் ஆனந்த் அருகில் கட்டில் மீது அமர்ந்து கொண்டான். ஆனந்தின் மூச்சு சீராக வந்து கொண்டிருப்பதைக் கண்டு அவனுக்கு நிம்மதியாக இருந்தது. சின்ன வயதிலிருந்தே அப்படித்தான். ஆனந்துக்கு அடிக்கடி ஆஸ்துமா அட்டாக் வந்து அவனைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது. அவனுக்கு அலர்ஜி அதிகமாக இருப்பதால் எப்போ அட்டாக் வருமோ யாருக்கும் தெரியாது. ஆஸ்துமா அட்டாக் வந்தால் போதும். மூச்சு கிடைக்காமல் ஆனந்த் திணறுவான். மருந்துகளைக் கொடுத்து உடனே அதைக் குறைத்தாலும் போர்க்களத்தில் போர் புரிந்த சிப்பாயைப் போல் களைத்துப் போய் சோர்வடைந்து விடுவான். விஜய் மனம் முழுவதும் ஆனந்த் பற்றிய நினைவுகள்தான். அல்லும் பகலும் உயிர் நண்பனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பான். ஆனந்தின் உடல் நலத்தில் விஜய் எப்போதும் கவனமாய் இருப்பான். அவனையும் மீறி சில சமயம் இப்படி நடந்து விடுகிறது.

விஜயின் கண்கள் ஆனந்தையே பார்த்துக் கொண்டிருந்தன. அங்கே ஆனந்தின் முகத்திற்குப் பதிலாக புன்னகை புரிந்து கொண்டிருந்த ஹேமாவின் முகம் தென்பட்டது, அவனால் பார்வையைத் திருப்பிக்கொள்ள முடியவில்லை. ஹேமாவின் புன்முறுவல் நிலவின் கதிர்களைப்ப் போல் அவன் இதயத்தைத் துளைத்துக்கொண்டு அடிமனதைத் தோட முயன்று கொண்டிருந்தது. அவனுடைய தாடை எலும்பு இறுகியது. வலுக்கட்டாயமாக ஹேமாவின் நினைவுகளைப் புறக்கணிக்க முயற்சி செய்தான். தன்னுடைய வாழ்க்கை ஆனந்துக்காக மட்டும்தான். தன் வாழ்க்கையின் மீது தனக்குக்கூட அதிகாரமோ உரிமையோ கிடையாது. விஜய் ஆனந்தின் கையைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். அவனுக்குத் திருப்தியாக இருந்தது. யாராக இருந்தாலும் வாழ்க்கையில் சந்தோஷம் தரக் கூடிய விஷயம் கிடைத்தபோது அதில் திருப்தி அடைய வேண்டும். தன்னுடைய வாழ்க்கையில் ஆனந்தின் நட்பு கிடைத்தது கடவுள் கொடுத்த வரம். அதைவிடத் தனக்கு வேறு எதுவும் தேவையில்லை.

“நிஜமாகவே தேவையில்லையா?” அவன் உள் மனதில் ஏதோ ஒரு மூலையில் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஹேமாவின் நினைவுகள் மல்லிகைப் பூச்சரத்தின் நறுமணத்தைப் போல் அவனை சூழ்ந்துகொள்ள முயன்றன. அதிலிருந்து தப்பித்துக்கொள்ள அவன் முயற்சி செய்து கொண்டிருந்தான்.

வாசற்கதவு மீது யாரோ ‘டக் டக்’ என்று விரல்களால் சத்தப் படுத்தினார்கள். விஜய் திரும்பிப் பார்த்தான்.

வாசற்படியருகில் நர்ஸ் நின்றிருந்தாள்.

“மிஸ்டர் விஜய்!”

“யெஸ்!”

“உங்களுக்குப் போன்.” சொல்லிவிட்டு நர்ஸ் போய் விட்டாள்.

விஜய் போய் போன் எடுத்துக்கொண்டான். வராண்டாவில் மாலை நேரத்து வெளிச்சம் குறைத்து மெள்ள மெள்ளமாய் இருள் பரவிக் கொண்டிருந்தது. விளக்குகள் எரிந்தன.

“ஹலோ!” என்றான் விஜய்.

மறுமுனையிலிருந்து எந்தக் குரலும் கேட்கவில்லை.

“ஹலோ!” மறுபடியும் சொன்னான்.

“விஜய்!” மறுமுனையிலிருந்து குரல் கேட்டது.

அந்தக் குரலைக் கேட்டதும் விஜய் மௌனமாய் இருந்து விட்டான்.

இருவருக்கும் இடையே மௌனம்.

“விஜய்!” ஹேமா அழைத்தாள்.

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவன் பலமாக மூச்சை இழுத்துக்கொண்டது மறுமுனையிலிருந்த ஹேமாவால் உணர முடிந்தது.

“விஜய்! நான்தான்.” ஹேமா சொன்னாள்.

“…”

“ப்ளீஸ்… ஏதாவது பேசு.”

“…”

“எதிர்பாராமல் உன்னை இங்கே சந்தித்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. உனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறதா?”

இந்த முறையும் மௌனம்தான் பதிலாக வந்தது.

“ஒரே வார்த்தையில் பதில் சொல்லு. மகிழ்ச்சியாக இருக்கா இல்லையா?”

“ஊம்.” தன்னையும் அறியாமல் சொல்லிவிட்டான்.

ஹேமா ஒரு நிமிடம் தயங்கினாள். “தாங்க்யூ விஜய். குறைந்தபட்சம் உண்மையை ஒப்புக் கொண்டதற்கு.” ஹேமாவின் குரல் தழுதழுத்தது. அவன் ஏதாவது சொல்வானோ என்று ஒரு நிமிடம் காத்திருந்தாள். பிறகு, “வைத்து விடட்டுமா?” என்று கேட்டுக்கொண்டே போனை வைத்துவிட்டாள்.

விஜயும் போனை வைத்து விட்டான். ஆனால் உடனே அந்த இடத்தை விட்டு நகர மனம் வராதவன்போல் முழங்கையை கௌண்டர் மீது வைத்துக்கொண்டு அங்கேயே நின்றிருந்தான்.

ஹேமாவின் அறிமுகத்தைத் துண்டித்துக் கொண்டாற்போல்தான் என்று இத்தனை நாளாய் நினைத்திருந்தான். ஆனால் இந்த நிமிடம் அவனுக்குப் புரிந்தது, அந்த அறிமுகம் அப்படியே இருக்கிறது என்று. எப்போதுமே அறுந்து போகாத பலமான பிணைப்பு அது என்று அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது. காதலித்த பெண்ணுக்கு மனப்பூர்வமாக வாழ்க்கையை அர்ப்பணம் செய்து கொள்ள முடியாதபோது அந்தப் பெண்ணை விட்டு விலகிப் போய் விடுவதுதானே நியாயம்!

விஜய் ஆனந்தின் அறைக்கு வந்தான்.

ஆனந்த் ஆழமான உறக்கத்தில் இருந்தான். காலையில் ஆனந்தின் தலைமீது கையை வைத்து தான் கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்தது. ஆழமாய் பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

“ஆனந்த்! என்னுடைய வாழ்க்கையில் உன்னைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை” என்று நினைத்துக் கொண்டான்.

ஆனந்த் நல்ல தேக நிலை படைத்தவனாக, உலக விவகாரங்களைப் புரிந்துகொண்டு மற்றவர்களைப் போல் இருந்திருந்தால் விஜய் அவனுடைய வாழ்க்கையை விட்டு விலகிப் போயிருப்பானோ என்னவோ.

ஒருநாளும் அவன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்தது இல்லை. பெண்களைப் பற்றி யோசித்ததும் இல்லை.

ஆனால் எதிர்பாராத விதமாய் ஹேமா அவனுடைய வாழ்க்கையில் நுழைந்து விட்டாள். வாழ்நாள் முழுவதும் மறந்து போக முடியாத அளவுக்கு நினைவுகளை அவள் மனம் முழுவதும் நிரப்பிவிட்டாள். அந்த நினைவுகள் அவன் மனதைச் சிலசமயம் அறத்தால் அறுப்பது போன்ற வேதனையை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. தன்னால் அவளைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியாதபோது, அவளுடன் அறிமுகமே ஆகாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருதிருக்கும்!

ஆறு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் பிரசாத் போன் செய்து மாம்பழங்களை ஏற்றுமதி செய்யும் காண்ட்ராக்ட் விஷயமாகப் பேச வேண்டும் என்று வரச் சொன்னதால் ஹைதராபாதுக்குப் போயிருந்தான் விஜய்.

– தொடரும்…

– மௌனராகம் (நாவல்), தெலுங்கு: யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில்: கௌரி கிருபானந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *