(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27
அத்தியாயம்-25
“யாரு? இந்த போட்டோக்களை எடுத்தது யாரு? இப்படி கீழ்த்தரமாக எழுதியவன் யாரு? யாரந்த ஆசிரியர்? என்னைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்? அவன் கையை ஒடித்து விடுகிறேன். அவர்களைக் கொன்றால் தவிர எனக்கு அமைதி கிடைக்காது. விஜய்! விடு என்னை. வெடி குண்டு போட்டு அவன் அலுவலகத்தை நாசமாக்கினால் தவிர எனக்குத் தூக்கம் வராது.”
ஆனந்த் புஸு புஸுவென்று மூச்சை விட்டுக்கொண்டு விஜயின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்று கொண்டிருந்தான். ஆனந்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அவனை அமைதிப்படுத்த விஜய் செய்து கொண்டிருந்தான்.
மேஜைமீது “செய்திகள்” என்ற நாளேடு பிரித்த நிலையில் இருந்தது. அதில் முதல் பக்கத்தில் நர்சிங்ஹோம் திறப்பு விழா நடந்த அன்று ஆனந்த் விஜயை அணைத்துக் கொண்டிருந்த புகைப்படம் பிரசுரமாகி இருந்தது. அதன் கீழே, ‘ஐ லவ் யூ’ என்று எழுதியிருந்தது. பக்கத்திலேயே பெரிய எழுத்துக்களில், “டாக்டர் ஹேமாவின் திருமணத்திற்குத் தடை! ஆனந்த் விஜயின் உடைமையா?” என்ற தலைப்பும், அதன் கீழே விரிவான செய்தியும் பிரசுரமாகி இருந்தன.
அந்த எழுத்துக்களைப் பார்க்கப் பார்க்க விஜய்க்குக் கோபம் அதிகரித்துக் கொண்டிருந்தது. மனதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான்.
“அனூ! கோபப்பட்டு பிரயோஜனம் இல்லை. என் பேச்சை கேள். அமைதியாக இரு” என்றான் விஜய்.
“அமைதியாக இருக்கணுமா! இந்த ஜெனம்த்தில் என்னால் மறுபடியும் அமைதியாக இருக்க முடியுமா? ச்சீ! ச்சீ! இப்படி கீழ்தரமாக எழுதுவதற்கு எப்படித் தோன்றியது? விஜய்! இந்த மனிதர்களின் பொறாமைக்கு ஒரு எல்லையே இல்லையா?”
நாளேட்டில் பிரசுரமாகி இருந்ததைச் சுட்டிக்காட்டிக் கொண்டே சொன்னான். “இதைப் படித்த பிறகு என்னால் உயிரோடு இருக்க முடியுமா? நண்பனை அணைத்துக்கொண்டால், இருவரும் லெஸ்பியன்கள் என்று எழுதி விடுவார்களா. ச்சீ… ச்சீ… இனி இந்த உலகம் என்னைச் சந்தேகமாய் பார்க்காதா? அந்தப் பார்வையை என்னால் தாங்க முடியுமா? என்னால் தெருவில் பழையபடி நடமாட முடியுமா? நண்பர்களுக்கு என் முகம் காண்பிக்க முடியுமா?
யாரு விஜய்? இப்படி செய்தது யார்? நம் இருவர் மீது இந்த அளவுக்குத் துவேஷம் யாருக்கு இருக்க முடியும்? நம்முடைய நட்பை இப்படிக் கொலை செய்ய முயற்சி செய்தது யார்?”
“ஆனந்த்! நம்மைப் பிடிக்காதவர்கள்… யாரோ ஏதோ உளறினால் என்ன ஆகிவிடும்? வேலை வெட்டி இல்லாதவர்கள், மனநிலை வக்கரித்துப் போனவர்கள் அற்பத்தனமாக மகிழ்ச்சியைத் தேடிக்கொண்டால் நாம் என்ன செய்ய முடியும்? வாழ்க்கையில் திடமான மனதுடன் செயல்பட வேண்டிய நேரம் இது. என் பேச்சை கேள்.” விஜய் நயமாகச் சொல்லிக்கொண்டே ஆனந்தின் தோளில் கையைப் பதிக்கப் போனான்.
எப்போதும் இல்லாத விதமாக ஆனந்த் விஜயின் கைகளை, யாராவது பார்த்து விடுவார்களோ என்று பயந்து விட்டதுபோல் தள்ளி விட்டான். “வேண்டாம் விஜய். என்னைத் தொடாதே. என் மனதை இவர்கள் களங்கப் படுத்தி விட்டார்கள். உன்னுடைய ஸ்பரிசம் எனக்கு விஷம் போல் தோன்றுகிறது. நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்? எதற்காக என்மீது இப்படி சேற்றை வாரி இறைத்திருக்கிறார்கள்? என்னை உயிருக்கும் மேலாகப் பார்த்துக்கொள்ளும் உன்னை நடுத்தெருவுக்கு இழுத்திருக்கிறார்கள். என்னால் இனி உயிரோடு இருக்க முடியாது. நேற்று ஹேமா சொன்ன செய்தியிலேயே எனக்குப் பாதி உயிர் போய் விட்டது.’
ஆனந்த் கட்டில் மீது விழுந்து தலையணையில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தான். அந்த அழுகையில் அவனுடைய இயலாமை, வேதனை வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.
விஜய் அவனைச் சமாதானப் படுத்துவதற்காக அருகில் சென்று, “அனூ!” என்று தலைமீது கையை வைத்தான். ஆனந்த் அந்த கையைத் தள்ளிவிட்டான். சட்டென்று கட்டில்மீது ஒரு மூலையில் ஒதுங்கிக்கொண்டு “என்னிடம் இனி எதுவும் சொல்லாதே. சாவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை அப்பொழுதுதான் இந்தப் பழி என்னை விட்டு விலகும்.” ஆனந்தின் அழுகை மடை திறந்த வெள்ளமாய் பொங்கி வந்தது. தீட்சிதர் அந்த அறையிலேயே நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
இரத்தம் முழுவதும் வற்றி விட்டது போல் அவர் முகம் வெளிறிப்போய் இருந்தது. அவர் கையில் நியூஸ் பேப்பர் இருந்தது. அதில் ஆனந்த் விஜயை அணைத்துக் கொண்டிருக்கும் போட்டோ, சின்ன வயதில் எப்போதோ விஜயின் மடியில் ஆனந்த் தலையை வைத்துக்கொண்டு படுத்திருக்கும் போட்டோ பிரசுரமாகி இருந்தன.
“இது நிச்சயமாக அந்த ஹரியின் வேலைதான். அவன்தான் நம் வீட்டு ஆல்பத்திலிருந்து இந்த போட்டோவைத் திருடியிருப்பான். அவனைத் தவிர வேறு யாருக்கும் வாய்ப்பு இல்லை. துணிச்சலும் இருக்காது. ஆனந்த்! நான் அப்போதே நினைத்துக் கொண்டேன். விஜய் விஷயத்தில் நீ ஹரியை நிறைய தடவை அவமானப்படுத்தி இருக்கிறாய். நர்சிங்ஹோம் மேனேஜ்மெண்ட் கமிட்டியில் அவன் பெயர் இல்லாமல் செய்து விட்டாய். ஹரி ஏதோ விதமாய் உன்மீது பழி தீர்த்துக் கொள்வான் என்று நினைத்தேன். ஆனால் இப்படி செய்வான் என்று நினைக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் நீ தான். நீ ஹரியை நம்முடன் இருக்க விட்டிருந்தால் இந்தப் பிரச்னையே வந்திருக்காது. இப்போ விஷயம் எந்த அளவுக்குப் போய் விட்டது பார்.” தலையில் அடித்துக்கொண்டே சொன்னார் தீட்சிதர்.
தலையணையில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்த ஆனந்த் சட்டென்று தலையை உயர்த்தி அவர் பக்கம் பார்த்தான். அடுத்த நிமிடம் தலையணையை இரு கைகளாலும் எடுத்து தரையில் வீசி எறிந்தான். கீழே குதித்து ஒரே எட்டில் தீட்சிதர் அருகில் வந்தான்.
“தாத்தா! இதற்கெல்லாம் காரணம் நீதான். நீயே தான். விஜய் மீது இருக்கும் பகைமையினால் ஹரிக்கு ஆதரவு கொடுத்தாய். வீட்டு அதிகாரம் முழுவதும் அவனிடம் ஒப்படைக்க வேண்டுமென்று நினைத்தாய். அவனை இரையாகப் பயன்படுத்தி விஜய் மீது பழியைத் தீர்த்துக்கொள்ளப் பார்த்தாய். ஆனால் உன் இலக்கு தவறி விட்டது. அவன் என்னைப் பழி வாங்கிவிட்டான். என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டான். இதற்கெல்லாம் நீதான் காரணம். சின்ன வயதில் கொள்ளிக் கட்டையால் உன் முதுகைச் சுட்டேன். அன்றே உன் தலைக்குக் கொள்ளி வைத்திருக்க வேண்டும். என்னைப் பிடித்த சனி நீதான்.”
ஆனந்தின் கைகளுக்கு மிருகபலம் வந்து விட்டது. கண்கள் நெருப்பை உமிழ்ந்தன. “விஜய் பற்றிய ரகசியத்தை மறைத்து வைத்து துரோகம் செய்து விட்டாய். அது எனக்கு நீ செய்த துரோகம். உன்னைக் கொன்றால்தான் என் மனதுக்கு அமைதி கிடைக்கும்.”
ஆனந்த் இரு கைகளால் தீட்சிதரின் கழுத்தை நெறித்துக்கொண்டு இருந்தான் விழிகள் பிதுங்க தீட்சிதர் துடித்துக் கொண்டிருந்தார். விஜய் சட்டென்று இருவரையும் பிரித்தான்.
“நீங்க இங்கிருந்து போய் விடுங்கள்.” தீட்சிதரிடம் சொன்னான் விஜய்.
“அசல் இதற்கெல்லாம் காரணகர்த்தா நீதான்.” தீட்சிதர் விஜய்மீது எரிந்து விழுந்தார்.
“வாயை மூடு கிழட்டுப் பிணமே!” ஆனந்த் கத்திக்கொண்டே முழங்காலை உயர்த்தி தீட்சிதரின் வயிற்றில் உதை கொடுக்கப் போனபோது விஜய் ஆனந்தின் இடுப்பைச் சுற்றிலும் கையைப் போட்டு பக்கத்தில் இழுத்த்தான்.
“அந்தக் கிழவனை இப்போதே கொன்று விடுகிறேன்” என்று கத்திக் கொண்டிருந்த ஆனந்தை விஜய் கட்டில் பக்கம் வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போனான்.
“நடுவில் நான் என்ன செய்து விட்டேன்?” தீட்சிதரும் கோபமாய் கத்தினார். “நீங்க முதலில் அறையை விட்டு வெளியில் போய் விடுங்கள்.” விஜய் உரத்தக் குரலில் சொன்னான்.
“போகாதே… நில்!” ஆனந்த் விஜயின் கையிலிருந்து விடுவித்துக்கொள்ள துடித்துக் கொண்டிருந்தான்.
பேரனின் ஆவேசத்தைப் பார்க்கும்போது தீட்சிதருக்குப் பயமாக இருந்தது. அறையை விட்டு வெளியேறினார்.
ஆனந்த் விஜயின் பிடியிலிருந்து விடுபட்டு ஒரே எட்டில் தீட்சிதரைத் தொடர்ந்து வாசற் கதவை நோக்கி ஓடப் போனான். ஆனால் விஜய் ஒரே பாய்ச்சலில் ஆனந்த் அருகில் சென்று பிடித்துக் கொண்டான்.
“விடு… விடு என்னை.” ஆனந்த் வெறி பிடித்தவன் போல் கத்திக் கொண்டிருந்தான். அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. விஜய் கையை நீட்டி ஆனந்தின் கன்னத்தில் இழுத்து ஒரு அறை விட்டான்.
அதிர்ச்சி அடைந்தவன் போல் ஆனந்த் நின்று விட்டான். மூளை மரத்துவிட்டது போல் சிலையாகி விட்டான்.
“விஜய்! நீ… நீதானா என்னை அடித்தது?” சுட்டு விரலை உயர்த்திக் காண்பித்துக்கொண்டே நம்ப முடியாதவன் போல் கேட்டான்.
“அனூ! வெறிப் பிடித்தவன் போல் நடந்து கொள்கிறாய். ஐ யாம் சாரி.” விஜய் அருகில் போகப் போனான்.
ஆனந்த் பின்னால் ஒரு அடி வைத்தான். அவன் கண்களில் விஜய் இதுவரை பார்த்திராத நம்பிக்கையின்மை, வெறுப்பு தென்பட்டன. அதைப் பார்க்கும்போது விஜய்க்கு யாரோ கத்தியால் குத்தியதுபோல் வேதனை ஏற்பட்டது. விஜய் கண்களில் நீர் சுழன்றது. அவனுக்குப் புரிந்துவிட்டது. அந்தப் பேப்பரில் வெளியாகியிருந்த போட்டோக்களால், கீழ்த்தரமான செய்திகளால் ஆனந்த் நிலைகுலைந்து விட்டான். அவனால் இந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
“அனூ! உனக்கு சுய உணர்வு வருவதற்காகத்தான் உன்னை அடித்தேன். அதைவிட வேறு எதுவும் இல்லை.” விஜய் நயமாக எடுத்துச் சொல்ல முயன்றான்.
“என் அருகில் வராதே விஜய். நீ என்னைவிட பலசாலி என்று எனக்குத் தெரியும். உன்னை இப்போதே எச்சரிக்கிறேன். நீ… நீ… என்னைக் கையை நீட்டி அடிப்பாயா? நீ என்னுடைய நண்பன்தானா? இல்லவே இல்லை.”
“அனூ! ப்ளீஸ்!”
“நிறுத்து. அந்தப் பெயருடன் என்னை அழைக்காதே. அந்த அனூ செத்துப் போய் விட்டான்.” ஆனந்த் கையில் மேஜைமீது இருந்த கண்ணாடி தம்ளர், சற்று முன் மருந்து சாப்பிடுவதற்காக எடுத்து வந்தது தட்டுபட்டது. அவன் அதை எடுத்துக் கொண்டான்.
“இனிமேல் நான் உன்னுடைய நண்பன் இல்லை… இல்லை.”
“அனூ! அப்படிச் சொல்லாதே. உன்னைவிட வேறு யாரும் எனக்கு முக்கியம் இல்லை.”
“பொய்!” ஆனந்த் கத்தினான். கையிலிருந்த கண்ணாடித் தம்ளரை வேகமாக மேஜையின் விளிம்பில் மோதினான். சிலிங்க் என்ற சத்தத்துடன் தம்ளர் உடைந்து, கீழே கண்ணாடித் துண்டுகள் சிதறின.
ஆனந்தின் நடவடிக்கை விஜய்க்குக் கலவரத்தை ஏற்படுத்தியது. வேதனையும், கோபமும் அவனைச் சுழல்காற்றுபோல் சூழ்ந்திருந்தன. நல்லது கெட்டது யோசிக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை. அதுபோன்ற நேரத்தில் அவன் எப்படி நடந்து கொள்வான் என்று யாராலும் சொல்ல முடியாது.
விஜய் ஆனந்தின் அருகில் போக முயன்றான்.
“விஜய்! அருகில் வந்தால்… உன்னைக் கொன்று விடுவேன்.” கையில் பாதியாய் உடைந்த கண்ணாடித் தம்ளரைக் காண்பித்துக்கொண்டே சொன்னான்.
“அனூ! அதைக் கீழே போட்டு விடு. உனக்கு மூளை கலங்கி விட்டதா?’ விஜய் பற்களை அழுத்தி, வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்ட அமைதியுடன் கேட்டான்.
“ஆமாம். மூளை கலங்கி விட்டது. இன்று இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பே. விஜய்! தாத்தா தான் என்னை ஏமாற்றி இருக்கிறார் என்று நினைத்தேன். நீ கூட என்னை ஏமாற்றி விட்டாய்.” ஆனந்தின் இதழ்களில் விரக்தியான புன்முறுவல் ஒன்று நெளிந்தது. “என் வாழ்க்கையில் முக்கியமானவர்கள், என்னைச் சேர்ந்தவர்கள் என்று உங்கள் இருவரையும் நம்பினேன். நீங்கள் இருவரும் என்னை ஏமாற்றி விட்டீர்கள். என்னை முட்டாளாக்கினீர்கள். சீ… சீ… இந்த உலகில் நியாயமே இல்லை. எல்லோருமே சுயநலம் பிடித்தவர்கள்தான். எவ்வளவு மோசம்! விஜய்! நீ கூட சுயநலம் பிடித்தவன்தான். நம்பியவர்களை எதற்காக இப்படி ஏமாற்றுகிறீர்கள்? உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியில் ஒன்று பேசுபவர்களைக் கண்டால் எனக்கு வெறுப்பு. மனித உறவுகள் இவ்வளவு குழப்பமாய் இருப்பானேன்? நேர்மை, நல்லதனம் இவை இரண்டும் இருந்தால் சக மனிதனுடன் எவ்வளவு சந்தோஷமாக வாழ்க்கை நடத்த முடியும்? மனித உறவுகள் இவ்வளவு பலவீனமாய் இருப்பதற்குக் காரணம் யார்? எதிராளியை ஏமாற்றுவதால் உங்களுக்குக் கிடைக்கும் லாபம்தான் என்ன? முழுவதுமாக நம்பியவர்களை ஏமாற்றும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்? என்ன விஜய்? எப்படி இருக்குமென்று நீயாவது சொல்லேன்.”
ஆனந்த் புருவங்களை உயர்த்தி இரட்டிப்பதுபோல் கேட்டான். “எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா? பாவப்பட்ட இந்த உலகில் நான் எதற்காக வாழ வேண்டும்? என்னை ஏமாற்றியவர்களுடன் எதற்காக இருக்கவேண்டும்? என்னால் பழைய ஆனந்தாக உங்களுடன் பழக முடியாது”
ஆனந்த் திடீரென்று உடைந்த கண்ணாடி தம்ளரால் வயிற்றில் பலமாகக் குத்திக்கொண்டான். ஆபத்தை உணர்ந்து விஜய் அருகில் வந்து தடுப்பதற்குள் நாலைந்து முறை குத்திக்கொண்டு விட்டான். விஜய் பலவந்தமாய் அவன் கையிலிருந்து உடைந்த கண்ணாடி தம்ளரைப் பிடுங்கி எறிந்தான். கண்ணாடித் துண்டு கீறியத்தில் விஜயின் கையிலிருந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது.
ஆனந்தின் உடைகள் நனைத்துக்கொண்டே இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது.
“விஜய்! ஹேமா என்றால் உனக்குப் பிடிக்கும் என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை? என்ன எதற்காக ஏமாற்றினாய்? உனக்கு விருப்பமானதை நான் என்றாவது மறுத்திருக்கிறேனா? அதுதான் எனக்கும் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்திருக்கிறேனா?” ஆனந்த் கேட்டான்.
விஜய் இதழ்களை இறுக்கித் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றான். அவன் கண்களிளிருந்து கண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது.
“தாத்தா உன்னுடைய சொத்துக்குச் சம்பந்தப்பட்ட கேசில் ஜெயித்து எல்லாம் என்னுடையதுதான் என்று சொல்லி என்னைப் பணக்காரனாக்கினார். ஹேமா என்னை கூண்டில் நிற்க வைத்துக் கேள்வி கேட்டாள். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. நான் உன்னை ஏமாற்றவில்லை. என்னை நம்பு விஜய்.”
“அனூ!” விஜய் ஆனந்தைத் தூக்கி தோளில் சாய்த்துக் கொண்டான்.
ஆம்புலன்ஸ் அனுப்பச் சொல்லி ஹேமாவுக்கு போன் செய்தான்.
அத்தியாயம்-26
முப்பத்தி ஆறு மணி நேரமாய் சாவுடன் போராடிக் கொண்டிருந்த ஆனந்தின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஹேமா தீவிரமாய் முயற்சி செய்து கொண்டிருந்தாள். அன்று விஜய் போன் செய்ததும் ஹேமா ஆம்புலன்ஸுடேன் இன்னொரு டாக்டரையும் அழைத்துக்கொண்டு வந்தாள். உடனே முதலுதவியை அளித்துவிட்டு நர்சிங்ஹோமில் சேர்த்தாள்.
முப்பத்தாறு மணி நேரமாய் ஹேமா கொஞ்சம் கூடத் தூங்காமல் ராப்பகலாய் ஆனந்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தாள். அனுபவம் மிகுந்த டாக்டர்கள் வந்து சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்கள். இருபத்தி நான்கு மணி நேரம் தாண்டிய பிறகுதான் சொல்ல முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தார்கள். ஒரு நாள் முடிந்த பிறகும் ஆனந்தின் நிலைமையில் முன்னேற்றம் தெரியவில்லை. மேலும் மோசமாகிக் கொண்டு வந்தது.
அழுது கொண்டிருந்த தீட்சிதரை ராஜலக்ஷ்மி தேற்றிக் கொண்டிருந்தாள். வலுக்கட்டாயமாக அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துப் போனாள். விஜய் மட்டும் ஆனந்தின் கட்டிலை விட்டு நகரவே இல்லை. செதுக்கி வைத்த சிலையைப்போல் அப்படியே உட்கார்ந்திருந்தான். ஹேமாவுக்கு அவன் முகத்தில் ஒரே ஒரு உணர்வுதான் தென்பட்டது. வேதனை!
ஆனந்தை ஆஸ்பத்திரியில் சேர்க்கும்போது அவனுக்கு லேசாக நினைவு இருந்தது. விஜயின் கையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டான். “விஜய்! என்னை விட்டுப் போகாதே. போக மாட்டாய் இல்லையா?” பலவீனமான குரலில் வேண்டுகோள் விடுப்பது போல் கேட்டான். அவன் கண்களில் வேதனை பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
மளுக்கென்று கண்களிலிருந்து வெளியேறப் போன கண்ணீரை விஜய் கட்டுப்படுத்திக் கொண்டான். சுற்றிலும் டாக்டர்கள், தீட்சிதர், ஹேமா, ராஜலக்ஷ்மி, ஹரிச்சந்திரா எல்லோரும் இருந்தார்கள். எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே விஜய் குனிந்து ஆனந்தின் நெற்றியின் மீது முத்தம் பதித்தான். அமைதி அடைந்து விட்டதுபோல் ஆனந்தின் முகம் தெளிவாகி விட்டது. விஜயின் கையைப் பற்றிக்கொண்டு கன்னத்தில் வைத்துக்கொண்டே சொன்னான். “என் ஆருயிர் நண்பன் நீதான் விஜய். நான்… நான் இறந்து போனால் நீதான் எனக்குக் கொள்ளி வைக்க வேண்டும். தாத்தா வேண்டாம். இது என்னுடைய கடைசி விருப்பம்.”
விஜய் சட்டென்று ஆனந்தின் வாயைப் பொத்தினான். “அனூ! அதிகமாகப் பேசாதே. ஓய்வு எடுத்துக்கொள். ரிலாக்ஸ்ட் ஆக இரு. நல்ல பையன் இல்லையா. சொன்ன பேச்சைக் கேள்.” விஜயின் குரல் மந்திரஸ்தாயில், நயமாக ஒலித்தது.
ஆனந்த் விஜயின் கையை மேலும் பலமாகப் பற்றிக் கொண்டான். “ஹாஸ்பிடலுக்கு வருவது இதுதான் கடைசி தடவை. இனி உனக்குக் கஷ்டத்தைத் தர மாட்டேன்.”
டாக்டர் கொடுத்த இஞ்செக்ஷனால் ஆனந்துக்கு நினைவு தப்பி விட்டது. ஆனந்தை இன்டென்சிவ் கேர் யூனிட்டில் வைத்த பிறகு எவ்வொரு நிமிடமும் விஜயின் மனம் எரிமலையைப் போல் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
நள்ளிரவு தாண்டி விட்டது.
ஆனந்த் நினைவு இல்லாமல் கட்டிலில் கிடந்தான். விஜய் பக்கத்து நாற்காலியில் அமர்ந்து கொண்டு, ஆனந்தின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தான். கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவன் ஒரு நிமிடம் கூட அந்த இடத்தை விட்டு நகரவில்லை. ஹேமா ஆனந்தைப் பரிசோதனை செய்வதற்காக வந்தாள். காயத்திற்குப் புதிதாகக் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தாள். விஜய் தலையை உயர்த்தி ஹேமாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ஹேமா வேலையை முடித்துவிட்டு சட்டென்று அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டாள். பத்து நிமிடங்கள் கழித்து ஆனந்தை ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார்கள்.
ஒரு மணி நேரம் கழித்து ஹேமா வெளியில் வந்தாள்.
விஜய் அதே இடத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தான்.
“குட் நைட் ஹேமா!” ஆபரேஷன் செய்வதற்காக வந்திருந்த ஸ்பெஷலிஸ்ட் கிளம்பினார்.
“குட் நைட் திவாகர்.” ஹேமா வாசல் வரை சென்று அவருக்கு விடை கொடுத்து விட்டுத் திரும்பி வந்தாள்.
“விஜய்! இப்படி வா. ஒரு நிமிஷம்.” தன்னுடைய அறைக்குள் சென்றாள். விஜய் ஹேமாவைப் பின்பற்றி அவளுடைய அறைக்குள் சென்றான். “உட்கார்ந்து கொள்” என்றாள்.
விஜய் உட்கார்ந்துகொள்ள வில்லை.
“உட்கார்ந்து கொள் விஜய்.”
விஜய் உட்கார்ந்து கொண்டான்.
ஹேமா அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். விஜய் ஹேமாவின் கண்களுக்குள் எதையோ தேடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஆனந்த் பிழைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் ரொம்ப குறைவு. அவனுக்கு ஏற்பட்ட காயங்கள் ரொம்ப ஆழமானவை என்பதோடு, அவன் ஏற்கனவே பயன்படுத்தி வந்த ட்ரக்ஸினால் நிறைய காம்ப்ளிகேஷன்ஸ் வந்து விட்டன. மருந்துகளுக்கு அவனுடைய உடல் சரியாக ரெஸ்பாண்ட் செய்யவில்லை. இன்று இரவு தாண்டுவது கஷ்டம் என்று டாக்டர் திவாகர் சொன்னார்.”
விஜய் நாற்காலியிலிருந்து எழுந்து ஜன்னல் அருகில் சென்று நின்று கொண்டான்.
“விஜய்!” மென்மையான குரலில் அழைத்தாள்.
அவன் பேசவில்லை. பின்பக்கமாய் கட்டியிருந்த அவன் கைப்பிடிகள் இறுகின. “விஜய்! இந்தச் சமயத்தில்தான் நீ தைரியமாக இருக்க வேண்டும்” என்றாள்.
விஜய் அருகில் சென்று அவனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டுமென்று ஹேமாவின் மனம் துடித்துக் கொண்டிருந்தது. அவனுடைய் மனநிலையை, உணர்வுகளை ஹேமாவால் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆனால் விஜய் முகத்தில் தென்பட்ட கம்பீரம் அவனை யாரும் நெருங்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. அந்தத் தனிமையை அவன் மட்டும்தான் அனுபவிக்க வேண்டும். யாரும் அவனுக்குத் துணையாக இருக்க முடியாது.
“விஜய்!” அழைத்தாள்.
விஜய் இந்த பக்கம் திரும்பினான். அவன் கண்கள் வேதனையை, தனிமையைப் பிரதிபலித்தன. ஹேமாவின் கண்களுக்குள் ஆழமாய் பார்த்து விட்டுப் பிறகு தாழ்வான குரலில் கேட்டான்.
“ஹேமா! நான் உன்னை விரும்புகிறேன் என்று ஆனந்திடம் சொன்னது யாரு?” ஹேமாவின் பார்வை தாழ்ந்து விட்டது.
அவன் பதிலுக்காக காத்திருந்தான். அந்த நிமிடம் ஹேமாவுக்கு ரொம்ப பயமாக இருந்தது. விஜய் தனக்குக் கிடைப்பதும், கிடைக்காமல் போவதும் தான் அளிக்கப் போகும் பதிலில்தான் இருக்கிறது என்று புரிந்து விட்டது.
“சொல்லு ஹேமா! நாமிருவரும் ஒருவரை ஒருவர் நேசித்த விஷயம் நம் இருவரை தவிர வேறு யாருக்கும் தெரியாது.” ஹேமாவைத் தலை முதல் கால்வரை பரிசீலித்துக்கொண்டே கேட்டான்.
“விஜய்!” ஹேமா தலையை உயர்த்திப் பார்த்தாள். அவளுக்குத் தைரியம் வந்து விட்டது. அவன் மீது அவளுக்கு இருந்த நேர்மையான காதல் பதில் சொல்லும் துணிச்சலை அவளுக்குத் தந்தது.
“ஆமாம் விஜய். நான்தான் சொன்னேன்.”
“இந்த பிரஸ்தாபனை வர வேண்டிய அவசியம் என்ன வந்தது?”
“சொல்கிறேன் விஜய். ஆனந்த் அதிர்ச்சி அடைந்த விஷயம் வேறு ஒன்று இருக்கிறது. லாயர் ஹரிச்சந்திரா சகோதரியின் மருமகள், கிழவி ஒருத்தியை கிளையிண்டாக அழைத்து வந்தாள். தீட்சிதர் தனக்கு மாதா மாதம் அனுப்ப வேண்டிய பணத்தை ஐந்தாறு வருடங்களாய் அனுப்பவில்லை என்றும், அவர் மீது வழக்கு போட வேண்டுமென்றும் சொன்னாள். தீட்சிதரின் பெயரைக் கேட்டதும் ஹரிச்சந்திராவுக்கு அந்தக் கேஸில் ஆர்வம் வந்தது. தீட்சிதர் எதற்காக அவளுக்குப் பணம் கொடுக்க வேண்டமென்று தூண்டி துருவி விசாரித்தார். உண்மை விஷயம் வெளியில் வந்தது. அந்த க்ளையிண்டின் பெயர் அனசூயா. உன் தாத்தாவுக்குச் சகோதரி. உன் அப்பாவுடைய சொந்த அத்தை. உங்க தாத்தாவுக்கு உன்னுடைய அப்பா ஒரே மகன். தாத்தாவை எதிர்த்து உன்னுடைய அம்மாவைக் காதல் திருமணம் செய்து கொண்டார். அந்தக் கோபத்தில் அவர் மகனை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. மகனுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ளவும் இல்லை நீ பிறந்த பிறகு உன்னுடைய அப்பாவும், அம்மாவும் உன்னைக் கொண்டு போய் தாத்தாவிடம் காட்டினார்களாம். அப்படியும் அவருடைய மனம் மாறவில்லை. ஆனால் போகப் போக அவர் மனம் இளகி விட்டது. உங்கள் வீட்டுக்கு வரவில்லை என்றாலும் உனக்காகப் பொம்மைகளை, உடைகளை அனுப்பி வைத்தாராம். அனசூயாம்மாதான் கொண்டு வந்து தருவார்களாம்.
உன்னுடைய அப்பா விபத்து ஒன்றில் இறந்து போய் விட்டார். மருமகளையும் பேரனையும் அழைத்துப் போக உன் தாத்தா வந்தபோது உன்னுடைய அம்மா ரோஷத்தினால் மறுத்து விட்டாள். பிறகு நோய்வாய்பட்டு தாத்தா இறந்து போகும் முன் சொத்து முழுவதும் உனக்குச் சேர வேண்டுமென்றும், மாதம் இருநூறுரூபாய் அனசூயாவுக்கு அவள் உயிருடன் இருக்கும் வரை தர வேண்டுமென்று உயிலை எழுதி இருந்தாராம். தாத்தாவுக்குத் தம்பி ஒருத்தர் இருந்திருக்கிறார். அவருடைய மகன் அந்த சொத்துக்கு உண்மையான வாரிசு தான்தான் என்று கோர்ட்டில் கேஸ் போட்டாராம். அனசூயா தீட்சிதருக்கு தூரத்து உறவு. உன் அம்மா இறந்து போன பிறகு அனசூயாவுடன் அந்த உறவினரின் வீட்டில்தான் தங்கியிருக்கிறாய். உனக்கும் நினைவு இருந்திருக்க வேண்டும். தீட்சிதர் ஏதோ வேலையாய் அந்த உறவினர் வீட்டுக்குப் போனபோது அனசூயா தனக்கு வந்த கஷ்டத்தை அவரிடம் சொல்லி அழுதாளாம். தாத்தாவின் உயிலை அவர் கையில் கொடுத்து விட்டுக் கேஸ் விவரங்களையும் சொல்லியிருக்கிறாள். தீட்சிதர் அவளுக்கு மாதா மாதம் இருநூறு ரூபாய் அனுப்புதாகச் சொல்லிவிட்டு உன்னைத் தன்னுடன் அழைத்துப் போனாராம். பிறகு நல்ல லாயரை அமர்த்தி உன் கேசை ஜெயித்து விட்டார். சொத்து முழுவதும் உனக்கு வந்து விட்டது. பிறகு தீட்சிதர் ஊரில் இருந்த வீட்டை விற்றுவிட்டுத், அந்தப் பணத்துடன் இங்கே பெரிய வீடாகக் கட்டிக் கொண்டார். தோட்டம், நிலம் எல்லாம் வாங்கினார். உன் தாயாரின் நகைகளை விற்று விட்டு அந்தப் பணத்தை ஆனந்த் பெயரில் வங்கியில் போட்டு வைத்தார். ரொம்ப நாள் வரை அனசூயாவுக்கு மாதம் இரு நூறு ரூபாயை அனுப்பி வைத்தவர் பிறகு நிறுத்தி விட்டார். அனசூயாவிடம் உன் பெற்றோரின் திருமண போட்டோவுடன், நீயும் உன் தாத்தாவும் சேர்ந்து இருக்கும் போட்டோவும் இருக்கிறது.
முக்கியமான விஷயம் பேச வேண்டும், உடனே வரச்சொல்லி ஹரிச்சந்திரா அம்மாவுக்கு போன் செய்தார். அம்மாவை இறக்கிவிட நானும் போனேன். நானும் அம்மாவும் கிளம்புபோது யதேச்சையாக ஆனந்த் வந்தான். ஹரிச்சந்திரா மூன்று பேரையும் ஒன்றாக உட்கார வைத்து எல்லா விவரங்களையும் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜுகளையும் காண்பித்தார். இந்தச் சொத்து முழுவதும் உன்னுடையது. உன் சொத்தை விற்று அந்தப் பணத்திலேயே தோட்டம், நிலம் வாங்கி உன் உழைப்பினால் அதைப் பத்து மடங்காக்கி விட்டார் தீட்சிதர். ஆனந்தை ஒரு ராஜாவாக, உன்னை வேலைக்காரனுக்குச் சமமாய் வளர்த்தார். ஹரிச்சந்திரா ஆனந்திடம் எல்லாவற்றையும் சொல்லி விட்டார். அதுவே அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிறகு நர்சிங்ஹோம் திறப்பு விழா அன்று நாமிருவரும் உன் அறையில் பேசிக் கொண்டதை ஆனந்த் கேட்டானாம். பிறகு அம்மாவை வங்கியில் இறக்கிவிட்டு வீட்டுக்கு வரும்போது ஆனந்த் என்னிடம் கேட்டான். “ஹேமா! நீ படித்தவள். டாக்டராக இருக்கிறாய். சராசரி பெண்ணைப் போல் கோழையாய் பெரியவர்களின் விருப்பத்திற்கு எதற்காக தலைவணங்குகிறாய்?” என்று நேராகக் கேட்டுவிட்டான்.
“நான் பெரியவர்களுக்குத் தலைவணங்கவில்லை. விஜய் முன்னால் தலை வணங்கினேன். தான் திருமணம் செய்து கொண்டால் உன்னிடம் இப்போ இருக்கும் சுதந்திரம் இருக்காதோ என்று விஜய் நினைக்கிறான். மனைவியாக வருபவள் புதிதாகப் பிரச்சனைகளை உருவாக்கக் கூடும் என்று பயப்படுகிறான். விஜய்க்கு என்னை மிகவும் பிடிக்கும். அப்படியிருந்தும் அவன் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. நான் உனக்கு மனைவியாக வேண்டும் என்று விரும்புகிறான். அதான் அவன் வாயைத் திறக்கவில்லை. என்னையும் திறக்க அனுமதிக்க வில்லை. அவனுக்கு மிகவும் விருப்பமான தோட்டத்தை விற்று நர்சிங்ஹோமாக மாற்றுவதற்குக்கூட சம்மதித்து விட்டான். எல்லாம் உனக்காகத்தான் ஆனந்த். என்னால் உன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று அம்மாவிடம் நான் எத்தனையோ முறை சொல்லி விட்டேன். அம்மா என்னுடைய விருப்பத்தைப் பொருட்படுத்த மறுக்கிறாள். இந்த சமுதாயத்தில் முதலில் பணம், அந்தஸ்து இவற்றுக்குத்தான் மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும், பிறகுதான் சுயவிருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றும் அம்மா சொல்கிறாள். ஆனந்த்! விஜய்க்கு நடந்த அநியாயம் சாதாரணமானதா? உன் தாத்தா அவனுடைய சொத்தை அபகரித்துவிட்டு நாதியற்றவனாக அவனை உங்கள் வீட்டில் வளர்த்தார்” என்று சொன்னேன்.
ஆவேசமடைந்த நிலையில் நான் ஆனந்திடம் சற்று கோபமாகப் பேசியது உண்மைதான். அந்த நிமிடமே நேராக தீட்சிதரிடம் போய் அவரை உண்டு இல்லை என்று கேட்டுவிட வேண்டுமென்று கூடத் தோன்றியது. ஆனால் உன்னைப் பற்றிய நினைவு வந்ததும் பின்வாங்கினேன். அது மட்டுமே இல்லை. ஆனந்தையும் மிரட்டினேன். நீ இப்போ போய் உன் தாத்தாவிடம் இதைப் பற்றிக் கேட்டு ரகளை செய்தாயோ… அதன் பாதிப்பு விஜய் மீது கட்டாயம் இருக்கும். நர்சிங்ஹோம் இல்லை என்றாகி விடும். ஆனந்த்! விஜயை நான் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. இந்த நர்சிங்ஹோம் மூலமாய் அவனுக்கு அருகில் இருக்கும் வாய்ப்பைக் கெடுத்து விடாதே. நீயும், உன் தாத்தாவும் இப்போதாவது விஜயை நிம்மதியாக வாழ விடுங்கள். அதுவே போதும்” என்றேன்.
ஆனந்த் கற்சிலையாகி விட்டான்.
“என்னை மன்னித்து விடு ஆனந்த். இந்தப் பெரியவர்கள் என் பேச்சை பொருட்படுத்த மறுக்கிறார்கள். விஜயும் வாயைத் திறந்து எதையும் சொல்ல மாட்டேன் என்கிறான். நம் இருவரின் திருமணம் நடைபெறக் கூடாது என்றால் இந்த விஷயங்களை உன்னிடம் சொல்லி விடுவது ஒன்றுதான் வழி என்று தோன்றியது. என்ன செய்வாயோ… எப்படிச் செய்வாயோ உன் இஷ்டம். எல்லாம் உன் கையில்தான் இருக்கிறது.” கைகளை ஜோடித்துக்கொண்டே சொன்னேன்.
ஆனந்த் என் கைகளைப் பிடித்துக்கொண்டான். நீர் நிறைந்த விழிகளுடன், “ஹேமா! எனக்கு மிகவும் விருப்பமான நீங்கள் இருவரும் என் காரணமாகத் தனித்தனியாக இருக்க விட மாட்டேன். அப்படி நடந்தால் எனக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது” என்றான்.
“பைத்தியக்காரத்தனமாய் யோசிக்காதே ஆனந்த். உன்மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. நடந்தவற்றில் உன் பொறுப்பு கொஞ்சம் கூட இல்லை. தனி மனிதனாய் உன்மீது மதிப்பும் அபிமானமும் வைத்திருக்கிறேன். ஆனந்த்! என் பேச்சைக் கேள். நான் சொன்ன விதமாக நடந்து கொண்டால் உன் உடல் நலம் நன்றாக இருக்கும். நாமிருவரும் டாக்டர் பேஷண்ட் மட்டுமே இல்லை. நல்ல நண்பர்களும் கூட” என்றேன், “தாங்க்ஸ் ஹேமா” என்றான்.
“சொத்து விஷயமாக தாத்தாவுடன் சண்டை போட மாட்டாயே?’ என்று கேட்டேன். “ஊஹும். இப்போ எதுவும் செய்ய மாட்டேன். முதலில் உங்கள் இருவரின் திருமணத்தை முடிக்க வேண்டும். பிறகு அவரை ஒரு கை பார்க்கிறேன்” என்றான்.
எனக்கு வாக்கு கொடுத்தான். இதற்குள் பேப்பரில் இந்த மாதிரி கீழ்த்தரமான செய்திகள். இது நிச்சயமாக ஹரியில் வேலைதான் என்று அம்மா சொல்கிறாள். அம்மாவால் அலுவலத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியவில்லை. நர்சிங்ஹோம் நிர்வாகம் முழுவதும் தன் கைக்கு வந்து விடுமென்று ஹரி ரொம்ப எதிர்பார்ப்புடன் இருந்தான் அது நடக்காமல் ஆனந்த் தடுத்து விட்டான் என்று இந்த விதமாய் பழி தீர்த்துக்கொண்டான்.”
“விஜய்!” ஹேமா அழைத்தாள்.
விஜய் நாற்காலியில் அமர்ந்துகொண்டு மேஜைமீது முழங்கைகளை ஊன்றி முகத்தைக் கைகளில் புதைத்திருந்தான். அவன் தோள்கள் அதிர்ந்து கொண்டிருந்தன.
“விஜய்!” ஹேமா நாற்காலியிலிருந்து எழுந்து அவன் அருகில் சென்றாள். விஜயின் தோள்கள் குலுங்குவதைப் பார்த்தபோது ஹேமாவுக்குப் பயமாக இருந்தது. விஜய் அழுது கொண்டிருந்தான்.
உலகத்தின் எட்டாவது அதிசயத்தைக் காண்பதுபோல் பார்த்தாள் ஹேமா.
“விஜய்!” பயந்துகொண்டே அழைத்தாள். விஜய் சட்டைப் பையிலிருந்து கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டான். தன்னைத் தானே சமாளித்துக்கொண்டு தலை நிமிர்ந்து பார்க்க முயன்றான். சாத்தியப்படவில்லை.
“ஹரிச்சந்திரா என்னை அழைத்து நேரில் இந்த விஷயத்தை ஏன் சொல்லவில்லை? இது என்னுடைய சொந்த விஷயம் இல்லையா? நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஆனந்தைக் கொன்று விட்டீர்கள். ஆமாம்! ஆனந்தைக் கொன்றது நீங்கள்தான். யாருக்கு வேண்டும் இந்த சொத்து? சொத்து யாருடைய பெயரில் இருந்தாலும் எங்கள் இருவருக்கும் ஒன்றுதான். எனக்கு ஏதோ நன்மையைச் செய்வதாக எண்ணிக்கொண்டு பயங்கரமான தீங்கை இழைத்து விட்டிருக்கிறீர்கள். வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அபூர்வமான, விலை மதிப்பற்ற நட்பை பொசுக்கி விட்டீர்கள். தீட்சிதர், ஹரிச்சந்திரா, ஹரி, உன்னுடைய அம்மா எல்லோருமே இதற்கு உடந்தை. அவர்கள் மட்டுமே இல்லை. நீ… நீயும் ஆனந்தைக் கொலை செய்ய உன் பங்கிற்கு அஸ்திரத்தைப் பயன்படுத்தியிருக்கிறாய். நான் உன்னை விரும்புகிறேன் என்று ஆனந்திடம் எதற்காகச் சொன்னாய்? நீ என்னை நேசித்தது உண்மையாக இருந்தாலும் அது இன்னொருவருக்கு வேதனையைத் தருவதாக இருக்கக் கூடாது. இந்த சின்ன விஷயம் உனக்குப் புரியவில்லையா ஹேமா.”
“விஜய்! இப்போ எனக்குப் புரிகிறது. ஐ யாம் சாரி, ரியல்லி சாரி.”
“உன்னுடைய மன்னிப்புகள், பச்சாத்தாபங்கள் ஆனந்தின் உயிரை எனக்கு மீட்டுத் தர முடியுமா? நோ… தவறு உன்னுடையது இல்லை. என்னுடையது. ஒரு பெண்ணை நான் நேசித்தது என்னுடைய சுயநலம்தான். நான் செய்த தவறுக்கு மன்னிப்பே கிடையாது. ஆனந்தை என்னால் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. ஐ ஹேட் மை செல்ப்.”
“விஜய்!” ஹேமா முழங்காலில் சரிந்து உட்கார்ந்து கொண்டாள். அவன் கை மீது தன் கையைப் பதித்தாள்.
ஆனந்த் உடலுக்கு ஏற்பட்ட காயங்களை விட விஜயின் மனதிற்கு ஏற்பட்ட காயம் தீவிரமாய் இருப்பதுபோல் தோன்றியது. எல்லோருமாகச் சேர்ந்து அவன் மனத்தைக் கொன்று விட்டது போல் இருந்தது. அதில் முதல் குற்றவாளி தான்தான். அன்று ஆனந்திடம் பேசும்போது, சொத்து முழுவதும் விஜய்க்குச் சொந்தம் என்று தெரிந்த பிறகு, அவன் வீட்டிலேயே அவன் தாழ்த்தப்பட்டு வளர்ந்த சூழ்நிலையை நினைத்து அவளுக்கு ஆவேசம் வந்து விட்டது. எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்று இப்போ புரிகிறது. நாம் நேசிப்பவர்களின் மனதை காயப்படுத்துவதை விட பெரிய தவறு வேறு என்ன இருக்க முடியும்? ஹேமாவால் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. விஜயின் மடியில் தலையைச் சாய்த்துக்கொண்டே சொன்னாள்.
“விஜய்! என்னை மன்னித்து விடு. நீ சொன்னது நிஜம்தான். இந்த மன்னிப்புகளால் ஆனந்தின் உயிரை மீட்க முடியாது. ஆனால் இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. நான் செய்தது தவறுதான். அதற்கு நீ எந்த தண்டனையைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள்.” ஹேமா அழுதுகொண்டே கைகளைக் கூப்பினாள்.
விஜய் வியப்புடன் ஹேமாவையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் கண்களிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த கண்ணீர் அவன் மனதை இளக வைத்துக் கொண்டிருந்தது.
ஹேமா சொன்னாள். “என்னை நீ வெறுக்காதே. அதை மட்டும் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. அதைவிட இறந்து போவதே மேல். சொல்லு விஜய். என்னை வெறுத்து ஒதுக்க மாட்டாய் இல்லையா? ஆனந்தைக் காப்பாற்றுவதற்காக என் உயிரையும் பணயமாக வைத்து முயற்சி செய்து வருகிறேன். அதில் உனக்கு எந்த சந்தேகமும் இல்லையே?”
“ஹேமா!!” விஜய் சட்டென்று ஹேமாவின் தலைமீது கையை வைத்தான். “எதற்காக இப்படி பைத்தியம்போல் பேசுகிறாய்?” கடிந்து கொண்டான்.
“உனக்குத் தெரியாது விஜய். எதிராளி மீது நம்பிக்கை போய் விட்டால் அது எந்த அளவுக்கு மனதை பாதிக்குமென்று ஊகிக்க முடியாது.”
“ஹேமா! ஹேமா!” விஜய் குனிந்து ஹேமாவின் தலையை மார்ப்போடு அணைத்துக்கொண்டான்.
யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்டது. விஜய் ஹேமாவை விடுவித்தான். ஹேமா கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து நின்று கொண்டாள்.
நர்ஸ் வாசற்படியில் நின்று கொண்டு, “டாக்டர்! புது பேஷன்ட். ஆக்சிடென்ட் கேஸ்” என்றாள்.
“இதோ வந்து விட்டேன்.”
ஹேமா நர்ஸுடன் விரைந்தாள்.
நள்ளிரவு ஆகும் போது தீட்சிதர் வீட்டுக்கு வந்தார். ராஜலக்ஷ்மியின் டிரைவர் அவரை காரில் அழைத்து வந்து வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றான். ராஜலக்ஷ்மி அவரை ஆனந்த் இருந்த நர்சிங்ஹோமிலிருந்து தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். அங்கே போன பிறகு லாயர் ஹரிச்சந்திராவும், ராஜலக்ஷ்மியும் தீட்சிதரிடம் சொத்துக்குச் சொந்தக்காரன் விஜய்தான் என்று தங்களுக்குத் தெரிந்து விட்டது என்றும், இத்தனை நாள் எதற்காக விஜய்க்கு அநியாயம் செய்தீர்கள் என்றும் கேட்டார்கள். சொத்தை விஜயிடம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஹரிச்சந்திரா கச்சிதமாகச் சொல்லிவிட்டார்.
“நல்ல வேளை. நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. எங்களுடைய அதிர்ஷ்டம்தான்” என்றாள் ராஜலக்ஷ்மி.
சொத்து முழுவதையும் விஜயிடம் ஒப்படைத்து விடுவதாக தீட்சிதர் சொன்னார். வீட்டுக்குப் போவதாக அவர் சொன்னதும் ராஜலக்ஷ்மி அவரை அனுப்பி வைத்தாள்.
தீட்சிதர் பூட்டைத் திறந்துகொண்டு வீட்டினுள் நுழைந்தார். லக்ஷ்மிக்கு மூட்டுவலி அதிகமாக இருந்ததால் வைத்தியம் பார்த்துக்கொள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தாள். குப்பன் தெரிந்தவர்களின் திருமணத்திற்குப் போயிருந்தான். வீட்டில் யாரும் இருக்கவில்லை.
ஆனந்த் பிழைத்துக்கொள்வது கஷ்டம் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்.
ஆனந்துக்காக இத்தனை வருடங்களாகக் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த சொத்து இது. நியாய நியாயத்தைப் பற்றி அவர் என்றுமே யோசித்ததில்லை. இந்தச் சொத்து அவனுக்குக் கிடைக்கப் போவதில்லை. அவனுடைய வாழ்க்கை பாதியிலேயே முடிந்து விடப் போகிறது. சின்ன வயதிலிருந்து ஆனந்திடம் தனக்கு இவ்வளவு அன்பு ஏன்? இந்த உலகில் இருக்கும் சுகங்களை எல்லாம் தன் பேரன் அனுபவிக்க வேண்டும் என்ற தவிப்பு எதற்கு? எப்போதும் அவனைப் பற்றியே யோசித்துக்கொண்டு அவன் மகிழ்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் தன்னைக் கண்டால் அவனுக்குக் கொஞ்சம் கூட லட்சியம் இல்லை. அவன் மதிப்பு, அன்பு எல்லாமே விஜய்க்குத்தான் சொந்தம். சின்ன வயதிலிருந்தே ஆனந்த் தன்னை வெறுத்து ஒதுக்கி வந்தான். இது என்ன நியாயம்? தான் செய்த தவறுதான் என்ன? சொத்தை அன்றே விஜயிடம் ஒப்படைத்து இருந்தால் அவன் இந்த வீட்டில் இருந்திருப்பானா? அப்போதே வெளியில் போயிருப்பான். ஆனந்த் இதயம் அன்றே சுக்கு நூறாகியிருக்கும். தான் விஜயை ஏமாற்றியது ஆனந்துக்காகத்தானே! ஆனந்தின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்காக தான் பாடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவன் தன்னைப் புழுவைவிட கேவலமாக மதிப்பானேன்? ஆனந்திடம் வைத்திருந்த அளவு கடந்த அன்பால் செய்யக் கூடாத தவறை அவர் செய்து விட்டது உண்மைதான். ஆனால் என்ன பிரயோஜனம்?
அவர் கண்முன்னாலேயே ஆனந்த் இறந்து விடப் போகிறான். இந்த பயங்கரமான உண்மையை அவரால் தாங்க முடியவில்லை. அதைவிட கொடிய உண்மை என்னவென்றால் சொத்து முழுவதையும் விஜயிடம் ஒப்படைத்து விட வேண்டும். நாளையிலிருந்து விஜய் போடும் பிச்சையில்தான் அவர் வாழ்ந்தாக வேண்டும். ஆனந்தே இல்லை என்றாகி விட்ட பிறகு இந்தச் சொத்து மட்டும் ஏன் இருக்க வேண்டும்? விஜய்க்கு இந்தச் சொத்து போகக் கூடாது. இத்தனை நாள் ஒரு வேலைக்காரனை போல் அவனை நடத்தி வந்தார். நாதியற்றவன் என்றும், தான் போடும் பிச்சையில்தான் வாழ்கிறான் என்றும் அவனை எடுத்தெறிந்து பேசியிருக்கிறார். ஆனந்த் விஜயை எவ்வளவு விருப்பப் பட்டாலும் ஆனந்தும் அவனும் ஒன்றாகி விடமுடியாது என்று அடிக்கடி நினைவுப் படுத்தியும் வந்தார். வீட்டிலிருந்து வெளியேறச் சொல்லி மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆணையிட்டார். ஆனந்தை விஜயிடமிருந்து பிரிக்க வேண்டுமென்று நினைத்தார். கடவுள் ஆனந்தையே அவரிடமிருந்து சாசுவதமாகப் பறித்துக்கொள்ளப் போகிறான். அவரால் இந்த வேதனையைத் தாங்க முடியவில்லை.
ஹேமாவுக்கும் ஆனந்துக்கும் திருமணம் நடக்கும் என்று அவர் கனவு கண்டார். நர்சிங்ஹோம் திறப்பு விழா நடந்த அன்று ஆனந்தின் எதிர்காலம் அவர் கண்களுக்கு அழகான மாளிகையைப் போல் தென்பட்டது. இன்று அது சீட்டு மாளிகையைப் போல் தரையில் சரிந்து விட்டது.
தீட்சிதர் படியேறி ஆனந்தின் அறைக்கு வந்தார். பேரனின் கட்டில், துணிமணிகள், மேஜை, டி.வி., டேப்ரிகார்டர் எல்லாவற்றையும் நீர் நிறைந்த விழிகளால் பார்த்தார். ஆனந்த் உடைந்த கண்ணாடி தம்ளரால் வயிற்றில் குத்திக் கொண்ட போது தரையில் சிந்தியிருந்த இரத்தம் காய்ந்து போய் கறையாய் இருந்தது. லக்ஷ்மி, குப்பன் இல்லாததால் அந்த இடம் சுத்தம் செய்யப்படாமல் இருந்தது. தீட்சிதர் குனிந்து அந்தக் கறையை விரலால் தொட்டுப் பார்த்தார். பொங்கி வந்த துக்கத்தை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஹோவென்று கதறி விட்டார். “உன்னைவிட முன்னால் போக வேண்டியவன். இன்னும் திடமாய் நடமாடிக் கொண்டு இருக்கிறேன். இன்னும் எத்தனை கொடுமைகளை அனுபவிக்க வேண்டுமென்று அந்த கடவுள் முடிவு செய்திருக்கிறாரோ தெரியவில்லை” என்று புலம்பினார். நாட்டை இழந்து விட்ட ராஜாவின் சோகம் அவர் கண்களில் தென்பட்டது. வீடு முழுவதையும் சுற்றிப் பார்த்தார். விஜயின் அறைக்கு வந்தார். அங்கே மேஜைமீது விஜய் தன் தாயுடன் சேர்ந்து இருந்த போட்டோ தென்பட்டது. அதை வெறுப்புடன் பார்த்தார். அவர் கண்கள் துவேஷத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன.
அந்த போட்டோவை எடுத்து ஜன்னல் வழியாய் வெளியில் வீசி எறிந்தார்.
“அன்று உன்னை என் வீட்டுக்கு அழைத்து வரும்போது என் விரலால் நானே என்னுடைய கண்ணை குத்திக்கொள்ளப் போகிறேன் என்று ஊகிக்கவில்லை.”
தீட்சிதர் பாரமாக மூச்சு விட்டுக்கொண்டே தடுமாறும் நடையுடன் கீழே இறங்கி வந்தார். நேராக ஸ்டோர் ரூமுக்குப் போனார். கிராமம் முழுவதும் கிரோசினை சப்ளை செய்வது அவர்தான். விற்றது போக மீதி டின்கள் ஸ்டோர் ரூமில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. ஒரு டின்னை எடுத்து வந்து மாடியில் விஜய் அறை முழுவதும் தெளித்தார். விஜயின் உடைகள், புத்தகங்கள் எல்லாவற்றின் மீதும் கிரோசினை ஊற்றினார். பிறகு தீக்குச்சியைக் கொளுத்தி அதன் மீது போட்டார். நெருப்பு பற்றிக்கொண்டு திகுதிகுவென்று எரியத் தொடங்கியது. பெட்டியைத் திறந்து விஜயின் சர்டிபிகேட்ஸ் ஒவ்வொன்றாகக் கிழித்து நெருப்பில் போட்டுக் கொண்டிருந்தார். அறையை விட்டு வெளியேறுவதற்காகத் திரும்பினார். அறை முழுவதும் நெருப்பு பரவியிருந்தது. ஆபத்தைப் புரிந்துகொண்டு நெருப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இங்கேயும் அங்கேயும் ஓடினார். ஆயிரம் கைகளை நீட்டி வரவேற்பதுபோல் நெருப்பு எல்லா பக்கங்களிலிருந்தும் அவரை நெருங்கிக் கொண்டிருந்தது. மூளை மரத்துப் போய் விட்டது போல் இருந்தது. ஆபத்து வந்தாலோ, பயமாக இருந்தாலோ விஜயை அழைப்பது அவருடைய வழக்கம். இப்போதும் தன்னை அறியாமல் குரலை உயர்த்தி, “விஜய்! விஜய்! எங்கே இருக்கிறாய்? சீக்கிரமாக வந்து என்னைக் காப்பாற்று” என்று கத்தத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாய் அவர் குரல் தேய்ந்து கடைசியில் அடங்கி விட்டது. வீட்டின் மேல் பகுதியில் பிடித்துக்கொண்ட நெருப்பு தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பதுபோல் எல்லா இடங்களிலும் பரவிக் கொண்டிருந்தது.
அத்தியாயம்-27
விடியற்காலை வேளை.
விஜய் அதே நாற்காலியில் அமர்ந்து மௌனமாய் காத்திருந்தான். அறையிலிருந்த சுவற்றுக் கடியாரத்தில் நகர்ந்து கொண்டிருந்த முட்கள் மரண தேவதையின் வருகையைப் பறைச்சாற்றுவது போல் தோன்றியது. ஹேமா ஆனந்தின் அருகிலேயே இருந்தாள். பெரிய பெரிய டாக்டர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்கள். நர்ஸ்கள் பம்பரமாய் அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருந்தார்கள். நேரம் போய்க் கொண்டிருந்தது.
விஜய் மனதை இரும்புபோல் திடமாக்கிக் கொண்டு காத்திருந்தான். நன்றாக விடிந்து விட்டது. விஜய் எழுந்து ஜன்னல் அருகில் போய் நின்று கொண்டான். அதற்குள் ஹேமா வந்தாள். காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.
ஹேமாவின் முகம் களைப்பினால் வாடிப் போயிருந்தது.
“விஜய்!” ஹேமா கையை நீட்டினாள். அவள் கண்களிலிருந்து வெளியேறிய கண்ணீர் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தது.
விஜய் ஹேமாவின் அருகில் வந்தான். அவள் கண்களுக்குள் எதையோ தேடுவதுபோல் ஆழமாய் பார்த்தான். ஹேமாவின் இதழ்கள் உச்சரிக்கப் போகும் பயங்கரமான உண்மையைக் கேட்பதற்காக அவன் செவிகள் காத்திருந்தன.
“விஜய்! ஆனந்த் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டான். மருந்துகள் வேலை செய்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வருகிறான். இனி பயப்படத் தேவையில்லை என்று டாக்டர் சொல்லிவிட்டார்.”
விஜயின் கைகள் சட்டென்று ஹேமாவின் தோள்களை அழுத்தமாய் பற்றிக் கொண்டன.
“என்ன?” என்றான்.
“ஆனந்த் பிழைத்துக்கொண்டு விட்டான். ஆபத்து நீங்கி விட்டது.”
“ஹேமா! நிஜமாகவா? நீ சொல்வது உண்மைதானா?’ விஜய் நம்ப முடியாதவனைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நான்… நான் மிகவும் அர்திர்ஷ்டசாலி இல்லையா.” சொல்லும்போதே ஹேமாவுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. “ஆனந்துக்கு ஏதாவது ஆகியிருந்தால் இந்த ஜென்மத்தில் என் முகத்தை நீ பார்த்திருக்க மாட்டாய். எனக்குத் தெரியும்.”
“ஹேமா!” விஜய் சட்டென்று ஹேமாவை அணைத்துக்கொள்ளப் போனான்.
ஆனால் அதற்குள் ஹேமாவுக்கு நினைவு தப்பிவிட்டது. வாடிப்போன கீரைத் தண்டாய் அவன் கைகளில் சரிந்து விட்டாள்.
“ஹேமா! ஹேமா!” கன்னத்தில் லேசாகத் தட்டிக்கொண்டே அழைத்தான். சட்டென்று பக்கத்தில் கூஜாவில் இருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்தான். ஹேமா கண்களைத் திறந்தாள்.
“என்ன நடந்தது?” என்று கேட்டாள்.
விஜய் ஹேமாவை நாற்காலியில் உட்கார வைத்தான். வேகமாய் காண்டீனுக்குப் போய் சூடாகக் காபியை எடுத்து வந்தான்.
ஹேமா மேஜைமீது தலையைச் சாய்த்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
“ஹேமா!” விஜய் ஹேமாவை வலுக்கட்டாயமாக எழுப்பி உட்கார வைத்துக் காபியைக் குடிக்கச் செய்தான்.
ஹேமாவுக்கு விழிப்பு வந்து விட்டது.
“ரொம்ப களைத்துப் போய் விட்டாய் ஹேமா. ரெஸ்ட் எடுத்துக்கொள்” என்றான். பத்து நிமிடங்கள் கழித்து இருவரும் ஆனந்த் இருக்கும் இடத்திற்குச் சென்றார்கள்.
ஆழமான உறக்கத்தில் இருப்பதுபோல் ஆனந்தின் மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது.
“ஆனந்த்! ஆனந்த்!” ஹேமா அழைத்தாள்.
“வேண்டாம். எழுப்பாதே.” விஜய் தடுத்தான்.
“பரவாயில்லை. ஆனந்த்!” ஹேமா குரலை உயர்த்தி அழைத்தாள்.
ஆனந்த் கண்களைத் திறந்து மூடினான்.
“யாரு வந்திருக்கிறார்களோ பாரு.” ஹேமா விஜயை முன்னால் போகச் சொன்னாள்.
விஜய் அருகில் சென்று, “அனூ!” என்று அழைத்தான்.
ஆனந்த் கண்களைத் திறந்து பார்த்தான். கையை மெதுவாக உயர்த்தினான். விஜய் கட்டுப் போட்டிருந்த தன்னுடைய வலது கையால் ஆனந்தின் கையைப் பிடித்துக் கொண்டான்.
ஆனந்தின் விழிகளில் நீர் சுழன்றது. “எங்கேயும் போய் விடாதே.” காய்ந்து போன உதடுகளுடன் சொன்னான் ஆனந்த்.
விஜய் ஆனந்தின் கண்ணீரைத் துடைத்தான். ஆனந்த் மறுபடியும் மயக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.
அதற்குள் நர்ஸ் வந்து விஜய்க்கு போன் வந்திருப்பதாகத் தெரிவித்தாள். ஹேமா போனில் பேசிவிட்டு வேகமாகத் திரும்பி வந்தாள். “விஜய்! ஒரு நிமிடம் இப்படி வா” என்று அழைத்தாள். விஜய் ஆனந்தின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஹேமா விஜயின் கையைப் பற்றி வெளியே இழுத்து வந்தாள்.
“விஜய்! ரொம்ப பேட் நியூஸ்! உங்கள் வீட்டுக்கு நெருப்பு பிடித்துக்கொண்டு விட்டதாம்.”
விஜய் திடுக்கிட்டுப் பார்த்தான்.
தீட்சிதரின் காரியங்கள் முடிந்து விட்டன. வீட்டு மாடி பகுதியில் திடீரென்று தீப்பிடித்துக் கொண்டு விட்டதாகவும், அந்த சமயத்தில் தீட்சிதர் வீட்டிலேயே இருந்ததால் நெருப்பில் சிக்கிக்கொண்டு இறந்து போய் விட்டதாகவும் எல்லோரும் நினைத்துக் கொண்டார்கள். அன்று காலையில் செய்தி தெரிந்ததும் விஜய் அந்த இடத்திற்கு விரைந்து சேர்ந்தான். ஏற்கனவே தீ அணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைக்க முயன்று கொண்டிருந்தன. வீட்டில் இருக்கும் பொருட்கள் எல்லாமே தீக்கு இரையாகி விட்டன. மாடியில் விஜயின் அறையில் தீட்சிதரின் உடல் கரிக்கட்டையைப் போல் தரையில் கிடந்தது. ஆனந்துக்கு இந்தச் செய்தியைத் தெரிவிக்கவில்லை. விஜய் தானே சுயமாய் தீட்சிதரின் தகன காரியங்களை நிறைவேற்றினான். எட்டாவது நாளன்று ஆனந்தின் நிலைமை கொஞ்சம் சீரடைந்து தெம்பாக இருந்தான். தீட்சிதர் இறந்த செய்தியை விஜய் சொல்ல முடியாமல் எப்படியோ தெரிவித்தான்.
ஆனந்த் தன் கைகளைப் பார்த்துக்கொண்டே, “விஜய்! இந்தக் கைகளுக்குக் கொலை செய்த பாவம் வேண்டாமென்று கடவுள் நினைத்து விட்டார் போலும். அவர் உனக்குச் செய்த துரோகத்தைப் பற்றி ஹரிச்சந்திரா மூலமாய் தெரிந்த அன்றே என்னைப் பொறுத்தவரை அவர் இறந்து விட்டார்” என்றான்.
பத்து நாட்கள் கழித்து ஆனந்த் வீட்டுக்கு வந்தான். நர்சிங்ஹோம் அருகிலேயே விஜய் வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டான். ஆனந்தை வீல்சேரில் உட்கார வைத்து, தீட்சிதரின் பத்தாவது நாள், பதிமூன்றாவது நாள் காரியங்களைத் தானே செய்தான். ஆனந்தை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் எடை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருந்தது. கன்னங்கள் உப்பி, சதை தொங்கிக் கொண்டிருந்தது. கண்கள் உள்ளே போய் கோடுகள் போல் தென்பட்டன. நீர் கொண்டு விட்டது போல் உடம்பு முழுவதும் ஊதியிருந்தது.
விஜய் ஆனந்தின் அறையை அழகாக, நேர்த்தியாக எல்லா வசதிகளையும் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்தான். ஆனந்துக்கு நிலைக்கண்ணாடி என்றால் ரொம்ப பிடிக்கும். விலை உயர்ந்த டிரஸ்ஸிங் டேபிளை வரவழைத்திருந்தான். வீல்சேரில் அமர்ந்திருந்த ஆனந்த் நிலைக்கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டான். அவனால் நம்பவே முடியவில்லை. கண்ணாடியில் தெரியும் விகாரமான உருவம் தன்னுடையதுதானா? பானை வயிறும், பலூன் போல் ஊதியிருக்கும் உடலும்… அவனால் அந்த கோரமான உருவத்தைக் காண சகிக்கவில்லை. கடவுள் தன்னை ஏமாற்றி விட்டார். வாழ்க்கையிடம் அலாதியான பிடிப்பையும், அழகை ஆராதிக்கும் மனதையும் கொடுத்து, இன்று தன்னை இப்படி விகாரமாக மாற்றி விட்டார். தன்னால் நாற்காலியிலிருந்து எழுந்துகொள்ள முடியாது. பக்கத்தில் இருந்த பிளவர் வேஸை எடுத்து எடுத்துக் கண்ணாடியை நோக்கி வீசினான். சிலீர் என்ற சத்தத்துடன் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. விரிசலடைந்த கண்ணாடியில் அவன் முகம் மேலும் பயங்கரமாக தென்பட்டது. இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு அழத் தொடங்கினான்.
ஆனந்தை டிஸ்சார்ஜ் செய்யும் போதே டாக்டர்கள் சொல்லியிருந்தார்கள். அவன் முழுவதுமாகக் குணமாக வில்லை என்றும், அவன் வாழப் போவது இரண்டு வாரமா இல்லை இரண்டு மாதமா என்று சொல்ல முடியாது என்று எச்சரித்து அனுப்பினார்கள். அவன் எழுந்து நடக்கக் கூடாது. ஆவேசப்படக் கூடாது. சத்தமாகச் சிரிக்கக் கூடாது என்று சொன்னார்கள்.
“சத்தமாகச் சிரிக்கக் கூடாதா! நடக்கக் கூடாதா? அப்படி என்றால் என்னுடைய பாதி உயிர் போய் விட்டது போல்தான்” என்றான் ஆனந்த்.
தீட்சிதர் இறந்துபோன இருபத்தோராவது நாள் விஜய், ஹேமாவின் திருமணம் வீட்டிலேயே எளிமையான முறையில் ஆனந்தின் முன்னிலையில் நடந்தது. திருமணம் முடிந்ததும் தம்பதிகள் இருவரும் ஆனந்த் அருகில் வந்தார்கள். ஆனந்த் களைப்புடன் வீல்சேரில் அமர்ந்திருந்தான்.
“கங்கிராடஜுலேஷன்ஸ்!” ஆனந்த் மனப்பூர்வமாக வாழ்த்திக்கொண்டே சட்டைப் பையிலிருந்து வைர மோதிரத்தை எடுத்து விஜயிடம் கொடுத்தான்.
“இந்த மோதிரத்தை தாத்தா ஹேமாவுக்குப் பிறந்த நாளன்று கொடுத்தார். தாத்தா இறந்த பிறகு ராஜலக்ஷ்மி மேடம் இதை எனக்குத் திருப்பி அனுப்பி விட்டாள். விஜய்! ஹேமாவின் விரலில் இந்த மோதிரத்தை என்னுடைய பரிசாகப் போட்டு விடு” என்றான்.
“அனூ! இது…”
“ஹேமாவின் விரலில் போட்டு விடு விஜய்.” ஆனந்த் மற்றொரு முறை சொன்னான்.
மறுபேச்சு பேசாமல் விஜய் ஹேமாவின் விரலில் மோதிரத்தை அணிவித்தான்.
“தாங்க்யூ.” ஹேமா ஆனந்தின் கையில் மென்மையாக முத்தம் பதித்தாள்.
ஆனந்த் விஜயை அருகில் வரச் சொன்னான். “இதோ உன்னுடைய காகிதங்கள்” என்றான்.
“இது என்ன?’ விஜய் கேட்டான்.
“தோட்டத்துக்குச் சம்பத்தப்பட்ட தஸ்தாவேஜுகள். உண்மையில் தோட்டத்தை வாங்குவதற்காக வந்தவர் யாரோ இல்லை. என் நண்பனின் சித்தப்பா. ஹேமா கிராமத்தில் அவள் பெயரில் இருந்த வீட்டை விற்றுப் பணத்தை ஏற்பாடு செய்தாள். என் பெயரில் தாத்தா வங்கியில் போட்டிருந்த பணத்தை டிரா செய்தேன். ஹேமாவும் நானு உன்னைத் திடீரென்று ஆச்சரியப்பட வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். விஜய்! நீ உயிருக்கும் மேலாக நேசிக்கும் தோட்டத்தை விற்பதற்கு நான் சம்மதிப்பேனா? விற்பதாகத் தாத்தா முடிவு செய்தாலும் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பேன் என்று எப்படி நினைத்து விட்டாய்?”
“அனூ!” விஜய் ஆனந்தின் கையைப் பற்றிக் கொண்டான். “ஹேமாவோ, நானோ உன்னைப் பற்றி ஒரு நாளும் தவறாக நினைத்தது இல்லை” என்றான்.
“இது ஹேமாவின் யோசனைதான் தோட்டத்திற்காக நீ படும்பாட்டை நினைக்கும்போது உன்னை அதிலிருந்து மீட்க வேண்டுமென்று ரொம்ப நாளாகவே நினைத்திருந்தேன். அதான் இந்த திட்டத்தில் ஹேமாவுடன் ஒத்துழைத்தேன். விஜய்! ஹேமாவுக்கு, எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும். முதலில் ஹேமா தான் உன்னை விரும்புவதாகச் சொன்னபோது ரொம்ப பொறாமையாக இருந்தது. என்னிடமிருந்து ஹேமா உன்னைக் கொள்ளையடித்து விட்டதுபோல் வேதனை ஏற்பட்டது. ஆனால் ஹேமாவை நீ விரும்புகிறாய் என்று தெரிந்தபோது ஹேமாவிடம் எனக்கு அபிமானம் அதிகமாகி விட்டது. விஜய்! ஹேமாவுக்கு நன்றி சொல்லட்டுமா?’ ஆனந்த் கேட்டான்.
விஜய் ஹேமாவின் பக்கம் திரும்பினான். அவன் கண்களில் லேசான ஈரம் பளபளத்தது. விஜயின் ஒரு கை ஹேமாவை, மற்றொரு கை ஆனந்தைப் பற்றி இருந்தது பேச முடியாமல் குரல் அடைத்துக்கொண்டு விட்டது.
அதற்குள் ராஜலக்ஷ்மி விருந்தாளிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்று ஹேமாவை, விஜயை அழைத்துச் சென்றாள்.
தொலைவில் மாலையும் கழுத்துமாக ஜோடியாக தென்பட்டுக் கொண்டிருந்த விஜய், ஹேமாவைப் பார்க்கும்போது ஆனந்தின் கண்களுக்கு நிறைவாக, மனதிற்குத் திருப்தியாக இருந்தது.
அவன் மிகவும் களைத்துப் போயிருந்தான் வானத்து பறவையைப் போல் சுதந்திரமாக இருப்பதை விரும்பும் அவனுக்கு இந்த உடல் ஒரு சிறைசாலையைப் போல் தோன்றியது. மரண தேவதை தன்காக வெகு அருகில் காத்திருப்பது அவனுக்குத் தெரியும். ஆனால் அவன் பயப்படவில்லை. தைரியமாக இருந்தான். அவன் எப்போதும் யாருக்கும் தலை குனிந்ததில்லை. இன்று சாவுக்கும் பயப்படவில்லை. “பிரியமான தேவதையே! தாமதம் உன்னுடையதுதான். நான் தயாராகத்தான் இருக்கிறேன்.” கண்களை மூடிக்கொண்டே நினைத்துக் கொண்டான்.
ஹால் காலியாகி விட்டது. வந்த விருந்தாளிகள் எல்லோரும் போய் விட்டார்கள். ராஜலக்ஷ்மியும், ஹரிச்சந்திராவும் கூட கிளம்பினார்கள்.
ஹேமா, விஜய் அவர்களை வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தார்கள். “விஜய்!” ஹேமா அழைத்தாள்.
“ஊம்.” விஜய் ஹேமாவின் பக்கம் பார்த்தான்.
“நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது கனவா இல்லை நினைவா என்று சந்தேகம் வருகிறது. என்னால் நம்பவே முடியவில்லை” என்றாள்.
விஜய் ஹேமாவையே பார்த்துக் கொண்டிருந்தான். மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சி முகத்திலும் பிரதிபலித்தது. ஹேமாவின் முகம் இதற்கு முன் எப்போதும் பார்த்திராத அழகுடன் மிளிர்ந்து கொண்டிருந்தது.
விஜய் ஹேமாவின் கழுத்தில் மஞ்சள் சரட்டில் கோர்த்திருந்த திருமாங்கலங்களை உள்ளங்கையில் ஏந்திக்கொண்டே சொன்னான். “ஹேமா! என்னாலும் நம்ப முடியவில்லை. எந்த விதமான ஆர்வமும் இல்லாமல் கழிந்து கொண்டிருந்த என்னுடைய வாழ்க்கையில் உன் வருகை சந்தடி ஏற்படுத்தியது. புயலை உண்டாக்கியது. வெள்ளமாகப் பொங்கி வந்து என்னை மூழ்கடித்து விட்டது. கடைசியில் அழகான ஒரு கரைக்கு என் வாழ்க்கைப் படகைக் கொண்டு வந்து சேர்த்து விட்டது.”
ஹேமா பிரமிப்பு கலந்த வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். விஜய் தன் மனதில் இருப்பதை ஆனந்தைப் போல், மம்மியைப் போல் வெளிப்படையாகச் சொல்கிறான். அவன் இதழ்களில் மலர்ந்த புன்முறுவல் அவனுடைய அழகை இருமடங்காக எடுத்துக் காட்டியது. ஹேமா சுற்றிலும் பார்த்தாள். யாரும் இருக்கவில்லை. விஜயின் கழுத்தைச் சுற்றிக் கைகளை மாலையாகப் போட்டாள்.
“விஜய்! இப்போ சொல்லு” என்றாள்.
“என்ன சொல்லணும்?”
“இத்தனை நாளாய் நான் உன் வாயால் எதை கேட்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்தேனோ… அதை.”
விஜய் புன்முறுவலுடன் ஹேமாவை அருகில் இழுத்துக் கொண்டான். “தனியாகச் சொல்லத்தான் வேண்டுமா ஹேமா.” அவன் இதழ்கள் ஹேமாவின் நெற்றிமீது பதிந்தன. “கர்ப்ஃயூ அன்று இரவே மனதளவில் உன்னுடையவனாகி விட்டேன் ஹேமா” என்றான்.
தான் விரும்பியது நிறைவேறிவிட்ட திருப்தியில், மகிழ்ச்சியுடன் அவன் மார்பில் தலையைச் சாய்த்துக் கண்களை மூடிக் கொண்டாள்.
அதற்குள் தொலைவிலிருந்து, “டாக்டரம்மா! சீக்கிரமாய் வாங்க.” லக்ஷ்மி உரத்தக் குரலில், பதற்றமாய் கத்தியது கேட்டது.
ஹேமா, விஜய் இருவரும் ஹாலுக்கு விரைந்தார்கள்.
“ஆனந்த் தம்பியை பாருங்கம்மா. எனக்குப் பயமாக இருக்கிறது.” லக்ஷ்மி
அழுதுகொண்டே சொன்னாள்.
ஆனந்தின் தலை ஒரு பக்கமாய் சாய்ந்திருந்தது. ஹேமா அவன் கையைப் பிடித்து நாடியைப் பரிசீலித்தாள்.
விஜய்க்குப் புரிந்து விட்டது.
அவன் இதழ்களை இறுக்கிக் கண்களிலிருந்து வெளியேறப் போன கண்ணீரைக் கட்டுப்படுத்தினான். ஆனந்த் அவனுக்குப் போட்ட நிபந்தனை அது!
வீல்சேரில் இருந்த ஆனந்தின் உடலை இருகரங்களிலும் தூக்கிக்கொண்டு அவனுடைய கட்டிலில் படுக்க வைத்தான். அருகிலேயே உட்கார்ந்து கொண்டு சில்லென்று இருந்த ஆனந்தின் கையைத் தன் இரு கரங்களாலும் பற்றிக்கொண்டு அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான்.
எத்தனை எத்தனை நினைவுகள்!
தாத்தாவை அழ வைப்பதற்க்கா உயிர் போய் விட்டதுபோல் மூச்சை அடக்கி கட்டையாய் படுத்துக் கிடந்தது நாடகமாடி இருக்கிறான்.
சின்ன வயதில் தோட்டத்திற்குப் போனால் ஆனந்த் திடீரென்று காணமல் போய் விடுவான். வேண்டுமென்றே ஒளிந்து கொள்வான். தான் கவலைப்பட்டுக் கொண்டு, “ஆனந்த்! ஆனந்த்!” என்று தொண்டை வரள கத்தும்போது எந்த செடி மறைவிலிருந்தோ கலகலவென்று நகைத்துக்கொண்டே வெளியில் வருவான். அந்த நேரத்தில்கூட தனக்கு ஆனந்த் மீது கோபம் வந்ததில்லை. ஆஸ்துமா அட்டாக் வந்து மூச்சுத் திணறி தன்னை அழைக்க முடியாமல் திண்டாடவில்லை என்று நிம்மதிதான் அடைந்திருக்கிறான். ஆனந்த்! பெயருக்கு ஏற்றாற்போல் தன் மனதில் இருக்கும் மகிழ்ச்சியை எதிராளிக்கும் பகிர்ந்து கொடுத்துச் சந்தோஷப்படும் குணம்.
ஹேமா விஜய் அருகில் வந்தாள். ஆனந்தில் முடிவு தொலைவில் இல்லை என்று தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் திடீரென்று இப்படி வந்து விடும் என்று எதிர்பார்க்கவில்லை.
ஆனந்தின் உடலையே பார்த்துக் கொண்டிருந்த விஜயின் தோள் மீது கையைப் பதித்தாள்.
விஜய் மனதில் ஏற்பட்ட வெறுமை ஹேமாவுக்கு நன்றாகவே புரிந்தது.
ஆனந்த்… விஜய்… இந்த இருவரின் நட்பு ரொம்ப அபூர்வமானது. எத்தனை பேருக்கு இந்த நட்பு பொறாமையை ஏற்படுத்தியிருக்கிறது! தங்களுக்கு கிடைக்காத அதிர்ஷ்டம் ஏதோ அந்த இருவருக்கும் சொந்தம் என்ற உணர்வு. அவ்வளவு நேர்மையாய், அன்பும் மதிப்பும் கலந்த உணர்வுடன் ஒருத்தருக்கு ஒருத்தராய் வாழ்வது என்பது மிகவும் அரிது.
அவ்விருவரின் நட்பில் விரிசலை ஏற்படுத்த வேண்டுமென்று நிறைய பேர் முயற்சி செய்தார்கள். தீட்சிதர் வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்து கொண்டுதான் இருந்தார். கடைசியில் தோல்வியைத் தழுவினார்.
ஹேமா இரண்டு கைகளாலும் விஜயின் தலையை மார்பில் சாய்த்துக் கொண்டாள்.
“ஹேமா!” விஜயின் குரலில் துக்கம் வெளிப்பட்டது. அழுகையைக் கட்டுப்படுத்திக்கொள்ள அவன் செய்யும் முயற்சிகள் வியர்த்தமாகிக் கொண்டிருந்தன.
விஜயின் தலையை ஹேமா வருடிக் கொண்டே, “விஜய்! வாழ்க்கை ரொம்ப விசித்திரமானது. இது நமக்கு எப்போ எந்தப் பரிசு தரப் போகிறதோ யாருக்கும் தெரியாது. மறுபடியும் எப்போ திடீரென்று நமக்குப் பிரியமானதைப் பறித்துக்கொண்டு போகப் போகிறதோ அதுவும் நமக்குத் தெரியாது. கண்ணுக்கத் தெரியாத அந்த சக்தியின் முன்னால் தலைகுனிந்து நிற்பதுதான் நம் கடமை!” என்றாள்.
“ஹேமா!” விஜய் மனைவியின் இடுப்பைச் சுற்றிலும் கைகளை இணைத்தான். ஹேமாவின் ஸ்பரிசம் அவனுக்குத் தைரியத்தை அளித்துக் கொண்டிருந்தது.
ஆனந்தின் இழப்பை அது ஏற்படுத்திய வெறுமையைத் தீர்க்கக் கூடியது ஹேமாவின் அருகாமை ஒன்றுதான் என்று புரிந்தது. ஹேமாவின் இடுப்பைச் சுற்றியிருந்த அவன் கைகள் மேலும் இறுகின. கண்களை மூடிக்கொண்டு அவள் மார்பில் தலையைச் சாய்த்துக் கொண்டான். ஹேமாவின் கண்களிலிருந்தும் கண்ணீர் வெள்ளமாய் பெருகிக் கொண்டிருந்தது.
நிறைவு அடைந்தது.
– மௌனராகம் (நாவல்), தெலுங்கு: யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில்: கௌரி கிருபானந்தன்