கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 26, 2024
பார்வையிட்டோர்: 1,823 
 
 

(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27

அத்தியாயம்-22

ராஜலக்ஷ்மியின் பிரச்னைக்குச் சுலபமாகத் தீர்வு கிடைத்து விட்டது. லாயர் ஹரிச்சந்திராவிடம் தீட்சிதரும், ராஜலக்ஷ்மியும் போனார்கள். லாயர் சொன்னபடி செயல்படுவதாக முன்னாடியே தீர்மானித்து இருந்தார்கள். தீட்சிதரும் சம்மதம் தெரிவித்தார்.

லாயர் ஹரிச்சந்திரா இருவருக்கும் பொதுவாக யோசனை வழங்கினார்.

ஆனந்த் ஹேமாவின் திருமணத்திற்கு இப்போதே அவசரப்பட வேண்டாம். ஹேமா சற்று அவகாசம் தேவை என்று சொல்கிறாள்.

நர்சிங்ஹோமுக்காகத் தேவைப்படும் பணம் ஐம்பது லட்சம் முழுவதும் தீட்சிதரே தராமல் ராஜலக்ஷ்மியும், தீட்சிதரும் ஆளுக்குப் பத்து லட்சம் கொடுக்க வேண்டுமென்றும், மீதிப் பணத்தை லோன் மூலமாய் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் யோசனை சொன்னார். ஆஸ்பத்திரியை நிர்வகிப்பதற்கு ஒரு கமிட்டியை ஏற்படுத்த வேண்டும். அதில் ராஜலக்ஷ்மி, தீட்சிதர், ஹேமா, ஆனந்த் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

“இன்னொரு நபர் வேண்டும்” என்றார் லாயர்.

தீட்சிதர் ஹரியின் பெயரைச் சொன்னார்.

லோன் எடுத்துக் கொள்வதற்குப் பதில் தானும் ஹரியும் பார்ன்ட்னர்களாக சேர்ந்து ஆளுக்கு இருபது லட்சம் தருவதாகத் தீட்சிதர் சொன்னார். பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தார்கள். எந்தக் காரணத்தினாலாவது, எந்த உறுப்பினருக்காவது ஆஸ்பத்திரியின் மேனேஜ்மென்ட் பிடிக்கவில்லை என்றால், அவர்கள் தங்களுடைய முதலீட்டைத் திரும்ப பெற்றுக்கொண்டு கமிட்டியிலிருந்து விலகிக் கொள்ளலாம்.

அடுத்த ஞாயிறு அன்று தீட்சிதர் வீட்டில் இதற்கான அக்ரிமெண்டில் கையெழுத்துப் போட வேண்டுமென்று முடிவு செய்தார்கள்.

“அன்றே தோட்டத்தை விற்பதற்கான அக்ரிமெண்டை ஏற்பாடு செய்கிறேன். அதையும் உங்கள் கையாலேயே முடித்து விடலாம்.” லாயரிடம் சொன்னார் தீட்சிதர். விஷயம் சுமுகமாக முடிந்ததற்கு ராஜலக்ஷ்மியும் மகிழ்ச்சி அடைந்தாள்.

ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டது.

தீட்சிதர் வீடு சந்தடியாய் இருந்தது. தோட்டத்தை வாங்குபவர்களும் வந்திருந்தார்கள். லாயர் ஹரிச்சந்திரா வந்து விட்டார். ராஜலக்ஷ்மியும், ஹேமாவும் காலையிலேயே வந்து விட்டார்கள். விஜய், ஆனந்த் வீட்டிலேயே இருந்தார்கள். ஆனந்த் ஜலதோஷத்தினால் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்ததைக் கவனித்த ஹேமா மருந்தை எழுதிக் கொடுத்தாள். விருந்தாளிகளைக் கவனிக்கும் பொறுப்பு தன் மீதுதான் இருப்பதுபோல் ஹரி பரபரப்புடன் அலைந்து கொண்டிருந்தான். நர்சிங்ஹோம் நிர்வாக கமிட்டியில் தன்னையும் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளப் போவதாய் தீட்சிதர் சொன்னபோது ஹரி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

“தாத்தா! என்னையும் உங்கள் வீட்டு நபராக ஏற்றுக்கொண்டதற்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை” என்று சொன்னவன் தடாலென்று அவருடைய கால்களில் விழுந்து வணங்கினான்.

“நர்சிங்ஹோம் யோசனை சொன்னது நீதானே?” என்றார் தீட்சிதர்.

ஆனந்த் உள் அறையில் ஹரிச்சந்திராவுடன் பேசிக் கொண்டிருந்தான்.

“நான்சென்ஸ்! விஜய் இல்லாமல் நர்சிங்ஹோமா? லாயர் சார்! எங்கள் தாத்தாவுக்கு மூளை கலங்கிப்போய் விட்டது. நான் சொன்னதுபோல் எழுதுங்கள். கமிட்டி பிரசிடெண்ட் ராஜலக்ஷ்மி, வைஸ் பிரசிடெண்ட் தாத்தா. ட்ரெஷரர் விஜய், ஆர்கனைஸிங் கோ ஆர்ட்டினேட்டர் டாக்டர் ஹேமா, நான் அட்வைசர். யாரும் என்னுடைய அறிவுரையைப் பொருட்படுத்தப் போவதில்லை. அதனால் எனக்கு எந்தப் பொறுப்பும் இருக்காது.”

“தாத்தா ஒப்புக்கொள்வாரோ மாட்டாரோ?”

“நான் ஒப்புக்கொள்வேனா இல்லையா என்றுதான் அவர் யோசிக்க வேண்டும். நிர்வாக அதிகாரம் முழுவதும் விஜயின் கையில்தான் இருக்க வேண்டும். விஜய் கஷ்டப்பட்டு முன்னுக்குக் கொண்டு வந்த தோட்டத்தை நர்சிங்ஹோமாக நாங்கள் மாற்றிக் கொள்கிறோம். தோட்டத்தின் நிர்வாகம் விஜயின் கைகளில் இருந்தது போலவே நர்சிங்ஹோமின் நிர்வாகமும் விஜயிடம்தான் இருக்க வேண்டும். நான் சொன்னது நடக்காது என்றால் இந்த நர்சிங்ஹோமும் இருக்காது. தோட்டத்தை விற்கப் போவதும் இல்லை.” ஆனந்த் தீர்மானமாகச் சொல்லிவிட்டான்.

ஹரிச்சந்திரா தீட்சிதரிடம் பேசினார். தோட்டத்தின் நிர்வாகம் விஜய் பார்த்துக்கொண்டு வந்ததால், சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிராமத்து மக்களுக்கு இடையில் இந்த வீடு செழிப்பாக மாறியதற்குக் காரணம் விஜய்தான் என்ற நம்பிக்கை ஆழமாகப் பதிந்து விட்டது. அதைப் போக்குவதற்காகத்தான் தீட்சிதர் இந்த நர்சிங்ஹோம் யோசனைக்கு ஒப்புக்கொண்டார். ஆனால் ஆனந்த் எதையும் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை. பதினெட்டு வருடங்களாய் அவர் இதற்காகத்தான் பாடுபட்டுக் கொண்டு இருந்தார். ஆனந்த் விஜயை இந்த வீட்டிலிருந்து நகர விட மாட்டான். தன்னால் அவனை வெளியேற்றவும் முடியாது.

தீட்சிதர் ஆனந்த் கொடுத்த எச்சரிக்கைப் போன்ற அறிவிப்பை கேட்டார். ராஜலக்ஷ்மியின் முன்னால் இதையெல்லாம் வெளிப்படுத்துவது சரியில்லை. ஆனந்த் தன்னை லட்சியப்படுத்தவில்லை என்று தெரிந்தால் அந்த அம்மாள் தன்னை குறைவாக மதிப்பிடலாம்.

“அது என்னுடைய யோசனைதான். விஜயை மறுபடியும் பொறுப்புகளில் சிக்க வைக்க வேண்டாமென்று நான் அப்படி சொன்னேன். ஆனந்தின் விருப்பம் போலவே நடக்கட்டும்” என்றார் தீட்சிதர்.

தோட்டத்தை வாங்கப் போகிறவர்களும் வந்திருந்தார்கள். ஹரிச்சந்திரா ஒப்பந்த பத்திரத்தை எழுத முற்பட்டபோது, தோட்டத்தை முன்னுக்குக் கொண்டு வந்த விஜய்க்குக்கூட இந்த விற்பனையில் எந்த ஆட்சேபணை இல்லையென்றும், தன்னுடைய முன்னிலையில்தான் ஒப்பந்தம் நடக்கிறது என்றும் எழுதி அதில் கையெழுத்துப் போட வேண்டுமென்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்.

“தோட்டம் ஆனந்தின் பெயரில் இருக்கிறது. அவன் கையெழுத்துப் போட்டால் போதும்” என்றார் தீட்சிதர்.

“தாத்தா! விஜயும் கையெழுத்துப் போடட்டும். தோட்டம் என் பெயரில் இருந்தால்தான் என்ன? கஷ்டப்பட்டு உழைத்து அதை முன்னுக்குக் கொண்டு வந்தது விஜய்தானே. விஜய் கையெழுத்துப் போட்டால் உனக்குத்தான் நல்லது. இனி ஒரு நாளும் அவன் இந்த விஷயத்தில் உன்னைக் கேள்வி கேட்க முடியாது. லாயர் உன் நல்லதிற்கு சொன்னால் புரியாதா உனக்கு?’ என்றான் ஆனந்த்.

விஜய் அக்ரிமெண்டை எழுதினான்.

எல்லோரும் கையெழுத்துப் போட்டார்கள். கையெழுத்துப் போட்ட பிறகு விஜய் ஆழமாய் மூச்சு எடுத்துக் கொண்டதை ஹேமா கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். அவன் முகத்தில் இருந்த கம்பீரம் மட்டும் குறையவே இல்லை.

நர்சிங்ஹோமின் நிர்வாகமும் விஜயிடம்தான் இருக்க வேண்டும். நான் சொன்னது நடக்காது என்றால் இந்த நர்சிங்ஹோமும் இருக்காது. தோட்டத்தை விற்கப் போவதும் இல்லை.” ஆனந்த் தீர்மானமாகச் சொல்லிவிட்டான்.

ஹரிச்சந்திரா தீட்சிதரிடம் பேசினார். தோட்டத்தின் நிர்வாகம் விஜய் பார்த்துக்கொண்டு வந்ததால், சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிராமத்து மக்களுக்கு இடையில் இந்த வீடு செழிப்பாக மாறியதற்குக் காரணம் விஜய்தான் என்ற நம்பிக்கை ஆழமாகப் பதிந்து விட்டது. அதைப் போக்குவதற்காகத்தான் தீட்சிதர் இந்த நர்சிங்ஹோம் யோசனைக்கு ஒப்புக்கொண்டார். ஆனால் ஆனந்த் எதையும் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை. பதினெட்டு வருடங்களாய் அவர் இதற்காகத்தான் பாடுபட்டுக் கொண்டு இருந்தார். ஆனந்த் விஜயை இந்த வீட்டிலிருந்து நகர விட மாட்டான். தன்னால் அவனை வெளியேற்றவும் முடியாது.

தீட்சிதர் ஆனந்த் கொடுத்த எச்சரிக்கைப் போன்ற அறிவிப்பை கேட்டார். ராஜலக்ஷ்மியின் முன்னால் இதையெல்லாம் வெளிப்படுத்துவது சரியில்லை. ஆனந்த் தன்னை லட்சியப்படுத்தவில்லை என்று தெரிந்தால் அந்த அம்மாள் தன்னை குறைவாக மதிப்பிடலாம்.

“அது என்னுடைய யோசனைதான். விஜயை மறுபடியும் பொறுப்புகளில் சிக்க வைக்க வேண்டாமென்று நான் அப்படி சொன்னேன். ஆனந்தின் விருப்பம் போலவே நடக்கட்டும்” என்றார் தீட்சிதர்.

தோட்டத்தை வாங்கப் போகிறவர்களும் வந்திருந்தார்கள். ஹரிச்சந்திரா ஒப்பந்த பத்திரத்தை எழுத முற்பட்டபோது, தோட்டத்தை முன்னுக்குக் கொண்டு வந்த விஜய்க்குக்கூட இந்த விற்பனையில் எந்த ஆட்சேபணை இல்லையென்றும், தன்னுடைய முன்னிலையில்தான் ஒப்பந்தம் நடக்கிறது என்றும் எழுதி அதில் கையெழுத்துப் போட வேண்டுமென்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்.

“தோட்டம் ஆனந்தின் பெயரில் இருக்கிறது. அவன் கையெழுத்துப் போட்டால் போதும்” என்றார் தீட்சிதர்.

“தாத்தா! விஜயும் கையெழுத்துப் போடட்டும். தோட்டம் என் பெயரில் இருந்தால்தான் என்ன? கஷ்டப்பட்டு உழைத்து அதை முன்னுக்குக் கொண்டு வந்தது விஜய்தானே. விஜய் கையெழுத்துப் போட்டால் உனக்குத்தான் நல்லது. இனி ஒரு நாளும் அவன் இந்த விஷயத்தில் உன்னைக் கேள்வி கேட்க முடியாது. லாயர் உன் நல்லதிற்கு சொன்னால் புரியாதா உனக்கு?’ என்றான் ஆனந்த்.

விஜய் அக்ரிமெண்டை எழுதினான்.

எல்லோரும் கையெழுத்துப் போட்டார்கள். கையெழுத்துப் போட்ட பிறகு விஜய் ஆழமாய் மூச்சு எடுத்துக் கொண்டதை ஹேமா கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். அவன் முகத்தில் இருந்த கம்பீரம் மட்டும் குறையவே இல்லை.

தோட்டத்தை வாங்கியதற்கான பணத்தையும், செக்கையும் ஆனந்திடம் கொடுக்கப் போனபோது ஆனந்த் விஜய் பக்கம் சுட்டி காட்டினான். அவர்கள் விஜயிடம் கொடுத்தார்கள். விஜய் அதை தீட்சிதரிடம் கொடுத்தான்.

நர்சிங்ஹோம் சம்பந்தப்பட்ட ஒப்பந்த பத்திரம் தயாராகி விட்டது. எல்லோரும் அதில் கையெழுத்து போட வேண்டும்.

விஜய் ஆனந்திடம் சொன்னான். “அனூ! எனக்கு இண்டரெஸ்ட் இல்லை. இந்த நர்சிங்ஹோம் விஷயத்தில் என்னை விட்டு விடு ப்ளீஸ்.”

“விஜய! உனக்கு விருப்பம் இல்லையென்றால் நர்சிங்ஹோம் பிரபோசலையே விட்டு விடுவோம்.”

விஜய் பேசவில்லை.

“சொல்லு விஜய். நீ இல்லாமல் நானோ, நான் இல்லாமல் நீயோ எங்கேயாவது இருந்திருக்கிறோமா?”

“இருக்க வேண்டும். எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது.’

“லாயர் சார்! இந்த அக்ரிமெண்ட் கேன்சல்!” ஆனந்த் தீர்மானமாகச் சொல்லிவ்ட்டான்.

ஹேமா அந்த இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். விஜய் நாற்காலியின் கையைப் பிடித்துக்கொண்டு ஏதோ யோசிப்பதுபோல் நின்றிருந்தான். அவன் அடிமனதில் புதையுண்டு கிடந்த வேதனை ஏதோ கம்பீரம் என்ற முக்காட்டை விலக்கிக்கொண்டு வெளியில் வர துடித்துக் கொண்டிருந்தது.

தீட்சிதரும், ராஜலக்ஷ்மியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“விஜய்! என்ன இது? ஆனந்த் இவ்வளவு சொல்லும் போது கேட்டால்தான் என்ன? ஹேமாவின் எதிர்காலத்தை நாசமாக்குவாயா?” ஹரி இடைபுகுந்து சொன்னான்.

“ஷட்டப்! இது எங்கள் இருவருக்கும் சம்பந்தப்பட்டது. நீ எதற்காக மூக்கை நுழைக்கிறாய்?” ஆனந்த் கண்களை உருட்டி விழித்தான். ஹரி ரொம்ப அவமானமாய் உணர்ந்தான். ஏதோ சொல்லப் போனவன் தீட்சிதர் ஜாடை காட்டியதைக் கவனித்து நின்று விட்டான்.

“விஜய்! உனக்கு இதில் ஆட்சேபணை என்ன?” ராஜலக்ஷ்மி எரிச்சலுடன் கேட்டான். ஆனந்தின் போக்கு அந்த அம்மாளுக்குப் புரிபடவில்லை. விஜய் இல்லை என்றால் அடிகூட எடுத்து வைக்க மாட்டான்போல் இருக்கிறது. விஜய் என்றால் அவளுக்கு அபிமானம் இல்லாமல் இல்லை. ஆனால் அது ஓரளவுக்குத்தான் ஹேமாவின் எதிர்காலத்திற்கு அவன் தடையாக இருந்தால் அதை சகித்துக்கொள்ளும் அளவுக்குப் பெருந்தன்மை அவளிடம் இல்லை.

“என்ன செய்ய வேண்டுமோ சொல்லுங்கள்.” ஹரிச்சந்திரா கேட்டார்.

ஹேமா அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அமைதியாக விஜய் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள். ஹேமா தாயுடன் சேர்ந்து வந்தாலும் இங்கு நடக்கும் நிகழ்ச்சியில் தனக்குக் கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லாதது போலவே இருந்தாள்.

“அக்ரிமெண்டை எழுதுங்கள்.” விஜய் லாயரிடம் சொன்னான்.

அக்ரிமெண்ட் எழுதி முடித்ததும் எல்லோரும் கையெழுத்துப் போட்டார்கள். மானேஜிங் கமிட்டியிலிருந்து தன்னை நீக்கி விட்டார்கள் என்று ஹரிக்கு அப்பொழுதுதான் புரிந்தது.

“தாத்தா! சற்று முன் தோட்டத்திற்காகக் கொடுத்த செக்கையும், பணத்தையும் விஜயிடம் கொடுங்கள்” என்றான் ஆனந்த்.

“இப்பொழுதே எதற்கு?” என்றார் அவர்.

“இன்றைக்கு நல்லநாள் என்று ராஜலக்ஷ்மி மேடம் சொன்னார்கள் இல்லையா. கமிட்டியின் டிரஷரர் விஜய். டிரஷரர் அவர்களிடம் நர்சிங்ஹோம் சம்பந்தப்பட்ட பணத்தை ஒப்படைத்து விடு,”

தீட்சிதரின் முகம் வெளிறிப்போய் விட்டது. எல்லோரும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அவர் இரும்புப் பெட்டியைத் திறந்து பணத்தையும், செக்கையும் எடுத்து விஜய் கையில் கொடுத்தார்.

ஹேமா உள்ளே போய் லக்ஷ்மியிடம் கேட்டு ஒரு தட்டில் மைசூர்பாக் துண்டங்களை எடுத்து வந்து முதலில் ஆனந்திடம் கொடுத்தாள். ஆனந்த் விஜயிடம் கொடுக்கச் சொன்னான். ஹேமா விஜய் அருகில் சென்றாள். ஸ்வீட் கொடுத்துக்கொண்டே, “ஹார்டியஸ்ட் கங்கிராஜுலேஷன்ஸ்! ஐ விஷ் ஆல் தி பெஸ்ட் இன் தி வர்ல்ட்” என்றாள்.

விஜய் ஹேமாவைப் பார்த்தான். ஆனால் தாங்க்ஸ் சொல்லவில்லை.

ஹேமாவின் கண்கள் மகிழ்ச்சியால் மின்னிக் கொண்டிருட்ன்கன. ஆனந்திடம் ஸ்வீட்டைக் கொடுத்துக்கொண்டே, “ஆனந்த்! உன் பிரண்டுக்குக் கொஞ்சம் கூட மரியாதையே தெரியவில்லை. நான் பெஸ்ட் விஷஸ் சொன்னால் தாங்க்ஸ் சொல்லவில்லை.” புகார் செய்வதுபோல் சொன்னாள்.

ஆனந்த் விஜய் பக்கம் சங்கடமாய் பார்த்தான். பிறகு புன்முறுவலுடன், “அவன் சார்ப்பில் நானே தாங்க்ஸ் சொல்லி விடுகிறேன். எங்க விஜயை குற்றம் சொல்லாதே. தோட்டத்தை விற்று விட்ட வேதனையில் இருக்கிறான்” என்றான்.

“வேதனையா? எதற்கு? இத்தனை நாள் தோட்டமாக இருந்த சொத்து இன்று நர்சிங்ஹோமாக மாறப் போகிறது. அவ்வளவுதானே! யாராவது வற்புறுத்தினார்களா என்ன? அவனும் சம்மதித்த பிறகுதானே ஒப்பந்தம் செய்யப்பட்டது?”

“ஹேமா! ஒரு விதமாக இதுவும் வற்புறுத்தல்தான். அதுவும் நான்தான் ரொம்ப வற்புறுத்தினேன். பல வருடங்களாய் விஜய் ராப்பகல் பாராமல் அந்த தொட்டதிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறான். மழை, வெய்யில் எதையும் போருட்படுத்த மாட்டான். தோட்டதிற்காக சிரமப்படும் போது பசி, தாகம் கூட இருக்காது அவனுக்கு. அந்த கஷ்டத்திலிருந்து அவனை எப்படி மீட்கலாம் என்று வழியைத் தேடிக் கொண்டிருந்த எனக்கு உங்க நர்சிங்’ஹோம் தங்கமான வாய்ப்பாகத் தோன்றியது. தோட்டத்தை விற்று விடலாம் என்று நான் வற்புறுத்தினேன். என்ன செய்வது? சிலசமயம் அவர்களுடைய நன்மைக்காக வேதனை தருவதைத் தவிர்க்க முடியாது.”

ஹேமா விஜய் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள். உணர்வுகளை மறைத்துக் கொள்வதுபோல் அவன் முகம் கடின சிலையைப் போல் இருந்தது. அக்ரிமெண்டுக்கு சம்பந்தப்பட்ட காகிதங்களின் நகலை ராஜலக்ஷ்மியிடம் கொடுத்தார்.

ஹேமா எல்லோருக்கும் இனிப்பை வழங்கினாள்.

ஹரியைக் காணவில்லை.

“ஹரி எங்கே?” என்று கேட்டாள்.

“சற்றுமுன் மோட்டார் சைக்கிளில் எங்கேயோ கிளம்பிப் போனான்.” என்றார் ஹரிச்சந்திரா.

இதைக் கேட்டதும் தீட்சிதரும், ராஜலக்ஷ்மியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

ஹேமா தாயின் அருகில் அமர்ந்து கொண்டாள். மகிழ்ச்சியாக இருக்கும்போது தாயின் கையை தன்னுடைய இரண்டு கைகளிலும் எடுத்துக் கொள்வது அவள் வழக்கம். இப்பொழுதும் அதேபோல் செய்தாள்.

“சந்தோஷம்தானே ஹேமா!” ராஜலக்ஷ்மி கேட்டாள்.

“ரொம்ப… தாங்க்ஸ் மம்மி.”

மகிழ்ச்சியின் மிகுதியில் ஒளிவீசிக் கொண்டிருந்த மகளின் முகத்தைப் பார்க்கும்போது ராஜலக்ஷ்மிக்கு திருப்தியாக இருந்தது,

அத்தியாயம்-23

ராஜலக்ஷ்மி, ஹரிச்சந்திரா, தீட்சிதர், ஆனந்த் எல்லோருமாய் சேர்ந்து அங்கிருந்து பத்து கிலோ மீட்டார் தொலைவில் இருக்கும் கிராமத்திற்கு வந்திருக்கும் காஞ்சி பெரியவரைத் தரிசனம் செய்துகொள்ள சென்றிருந்தார்கள். அவர்களை அழைத்துச் செல்லும்படி ஆனந்த் விஜயிடம் கேட்டபோது தனக்கு வேறு வேலை இருப்பதாகச் சொல்லி வெளியில் போய் விட்டான்.

“இன்னிக்கு விஜயை வற்புறுத்த வேண்டாம். வாங்க… நானே அழைத்துச் செல்கிறேன்” என்றான் ஆனந்த்.

“நான் வரமாட்டேன். இது போன்ற விஷயங்களில் எனக்கு அவ்வளவாக நாட்டமில்லை.” ஹேமா சொன்னாள்.

“ஹேமா சின்ன வயதிலிருந்தே இப்படித்தான்” என்றாள் ராஜலக்ஷ்மி.

அவர்கள் கிளம்பிப் போய்விட்டார்கள். ஹேமா லக்ஷ்மியிடம் உட்கார்ந்து கொண்டு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தாள். சில சமையல் குறிப்புகளை அவளிடம் கேட்டுக்கொண்டாள்.

“இந்த சமையல் எல்லாம் ஆனந்த் தம்பிக்கு ரொம்ப பிடிக்கும்” என்றாள் லக்ஷ்மி.

“விஜய்க்கு எது பிடிக்கும்?” ஆர்வத்துடன் கேட்டாள்.

“அய்யோ ராமா! பதினெட்டு வருடங்களாய் ஆனந்தையும், விஜயையும் இந்தக் கையால்தான் வளர்த்தேன். அவன் ஒரு நாள் கூட இது நன்றாக இருக்கு என்று அதிகமாய் சாப்பிட்டதோ, இது நன்றாக இல்லை என்று தட்டில் மிச்சம் வைத்து விட்டுப் போனதோ கிடையாது. ஆனந்த் தம்பிதான் அப்படி செய்வான்” என்றாள்.

“விஜய் தோட்டத்திற்கு எத்தனை மணிக்குப் போவான்?”

“காலையில் ஆறுமணிக்கே போய் விடுவான். தான் முன்னாடி போகாவிட்டால் வேலையாட்கள் தாமதமாக வருவார்கள் என்பான்.” லக்ஷ்மி இரவு சமையலுக்காக வெண்டைக்காயை நறுக்கிக் கொண்டிருந்தாள். இளசாக தளதளவென்று இருந்த வேண்டைக்ககாயை ஹேமா கையில் எடுத்துக் கொண்டாள்.

“உங்க தோட்டத்தில் விளைந்ததா?”

“ஆமாம். தினமும் சமையலுக்கு வேண்டிய கறிகாய் புதுசாக தோட்டத்திலிருந்து வந்து விடும்.”

“விஜய் காலையில் கிளம்புபோதே காபி, டிபனை கொடுத்து விடுவாயா?”

“ஊஹூம். நான் அவ்வளவு சீக்கிரமாக எழுந்துகொள்ள மாட்டேன். விஜய் தம்பிதான் விடியற்காலையிலேயே எழுந்து கொள்வான். எழுந்ததும் கீழே வந்து டிகாஷனை இறக்கி பாலை காய்ச்சி வைப்பான். குளித்து முடித்து காபி மலந்து குடித்துவிட்டு எனக்கும் கலந்து தருவான். மூட்டு வலியால் அவதிப் படுகிறேன் இல்லையா? காலை வேளையில் சுடச்சுட காபி உள்ளே போனால்தான் சுறுசுறுப்பாக இருக்கும். சின்ன வயதிலிருந்தே அப்படித்தான். எனக்கு ஜுரம் வந்தால் பெரிய அய்யாவோ, ஆனந்த் தம்பியோ பொருட்படுத்தியதில்லை. விஜய் தம்பிதான் எனக்கு ஜவ்வரிசி கஞ்சி செய்து கொடுப்பான். போர்வையைப் போர்த்திக்கொண்டு சமையல் அறை வாசற்படியில் உட்கார்ந்து கொண்டு சமையல் எப்படி செய்வது என்று சொல்லித் தருவேன். ஒரு தடவை சொன்னால் போதும். மறக்கவே மாட்டான்.”

“ஆனந்தும், விஜயும் சண்டை போட்டுக் கொண்டதே இல்லையா?”

“சண்டையா! ஒருநாளும் இல்லை. சூரியன் மேற்கில் உதிப்பான் என்பது எவ்வளவு பொய்யோ, அவர்கள் சண்டை போட்டுக் கொள்வதும் அப்படித்தான். இருவரையும் பார்த்தால் ராம லக்ஷ்மணர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். உண்மையைச் சொல்கிறேன் தாயே. இந்த வீட்டில் ஆனந்த் இருந்ததால் விஜயால் இருக்க முடிந்தது. விஜய் இருந்ததால்தான் நானும், குப்பனும் இருக்க முடிந்தது. விஜய் இல்லையென்றால் தீட்சிதரின் முன் கோபத்திற்கு எப்போதோ இந்த வீட்டை விட்டுப் போயிருப்போம்.”

“போகட்டும். இத்தனை நாட்கள் எப்படியோ சமாளித்து விட்டீர்கள். குழந்தை குட்டி வேறு இல்லை உங்களுக்கு. பிற்காலத்தில் விஜய் உங்களை நன்றாகவே பார்த்துக் கொள்வான்.” ஹேமா எழுந்துகொண்டே சொன்னாள்.

ஹேமாவுக்கு பொழுது போகவில்லை. புத்தகங்களைப் புரட்டினாள். டி.வி.யைப் போட்டு அணைத்தாள். மெதுவாக ஒவ்வொரு படியாய் ஏறி மாடியில் விஜய் அறைக்குள் நுழையப் போனாள்.

சட்டென்று வாசற்படியிலேயே நின்று விட்டாள். அறையில் விஜய் ஈசிச்சேரில் உட்கார்ந்திருந்தான். முழங்கையை நெற்றியின் மீது வைத்துக் கண்களை மூடியிருந்தான். அவன் உட்கார்ந்திருந்த விதத்தைப் பார்க்கும் போது ஹேமாவுக்கு உள்ளே காலடி எடுத்து வைக்கும் தைரியம் இருக்கவில்லை. ஒரு நிமிடம் தயங்கினாள். பிறகு துணிச்சலை வரவழைத்துக்கொண்டு உள்ளே போனாள்.

விஜய் அருகில் சென்று அவன் நெற்றிமீது கையை வைத்தாள்.

அவன் திடுக்கிட்டுக் கண்களைத் திறந்தான். ஹேமாவைப் புரிந்து கொண்டது போல் பார்த்தான். மறு நிமிடம் புரிந்து கொள்ளாதது போல் யோசனையில் மூழ்கி விட்டான்.

“விஜய்!” மென்மையான குரலில் அழைத்தாள். விஜயிடமிருந்து பதில் இல்லை. ஹேமாவுக்குப் பயமாக இருந்தது.

ஒரு மனிதன் வாயை விட்டு அழுதால் நம்மால் தேற்ற முடியும். மிகப் பிரியமானதேதோ கண்களுக்கு முன்னால் எரிந்து சாம்பலாகும் போது எதையும் செய்ய முடியாத இயலாமை அவன் கண்களில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் சூனியத்தைத் தவிர வேறு எதுவும் தென்படாதபோது மனிதனுக்கு ஏற்படும் தனிமையின் வேதனை!

“விஜய்! ஆர் யூ ஆல் ரைட்?” ஹேமா கேட்டாள்.

சுய உணர்வு பெற்றவனைப் போல் விழித்தான் விஜய். எதிரில் ஹேமா நிற்கிறாள் என்று புரிந்தது. நெற்றியின் மீது இருந்த ஹேமாவின் கையை நகர்த்திவிட்டு எழுந்து கொண்டான். நெற்றிப்பொட்டை விரல்களால் அழுத்திக் கொண்டான்.

“தலையை வலிக்கிறதா?” ஹேமா கேட்டாள்.

“இல்லை.”

“ஏதோ வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு வெளியில் போயிருந்தாயே. வீட்டுக்குத் திரும்பி எப்போ வந்தாய்?” ஹேமா வியப்புடன் கேட்டாள்.

விஜய் பதில் சொல்லவில்லை. நாற்காலியிலிருந்து எழுந்து போய் ஜன்னல் வழியாக வெளியில் பார்த்துக்கொண்டு நின்றான்.

“காபி கலந்து எடுத்து வருகிறேன். மாத்திரையைப் போட்டுக் கொள்.” “வேண்டாம்.”

“தலைவலி குறையும்.”

“பரவாயில்லை.”

ஹேமா அரகில் வந்தாள். “விஜய்!” என்று அழைத்தாள்.

“கீழே போ ஹேமா.’

“ஒரே ஒரு கேள்விக்குப் பதில் சொல்லு. தோட்டத்தை விற்று விட்டார்களே என்று வேதனையாக இருக்கிறதா?”

அவன் மௌனமாய் இருந்தான்.

“அந்தத் தோட்டத்தை விட்டுக் கொடுப்பது அவ்வளவு கஷ்டம் என்று தெரிந்தும் வாயைத் திறக்காமல் ஏன் இருந்தாய்? அவர்கள் கஷ்டப்படுத்தினால் மௌனமாகச் சகித்துக் கொள்வானேன்? ஏதாவது கேட்டால் ஆனந்துக்காக என்பாய். உன் மனதில் இருப்பதை ஆனந்துக்குச் சொல்லாமல் ஏமாற்றி வருகிறாய். இதுதான் உண்மையான நட்பின் இலக்கணமா?”

“ஹேமா! ப்ளீஸ் கீழே போய் விடு.”

“பெரிய தோட்டம்! போனால் போகட்டும். சனி விட்டது என்று…’

விஜய் சரேலென்று ஹேமாவின் பக்கம் திரும்பினான். அவன் கண்களில் தென்பட்ட கோபத்தைப் பார்த்து ஹேமா வியப்படைந்தாள். கைப்பிடிகளை இறுக்கிக்கொண்டு கோபத்தை, வேதனையைக் கட்டுப்படுத்திக் கொண்டான் விஜய். அவன் தாடை எலும்பு இறுகியது, “உனக்கு எதுவும் தெரியாது. தெரியாதவற்றைப் பற்றி நீ பேசாதே. ப்ளீஸ் போய் விடு.”

“போய் விடுகிறேன். போகும்முன் உன்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போகிறேன். உன் வேதனை என்னவென்று உன்னவிட எனக்கு நன்றாகத் தெரியும். உனக்கு எது பிடிக்கும் என்றுகூட எனக்குத் தெரியும். இன்று எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. விஜய்! இனி என்னைத் தொலைவாக இரு என்று உன்னால் சொல்ல முடியாது. ஹாஸ்பிடல் விஷயமாக நான் அடிக்கடி உன்னைச் சந்தித்துப் பேச வேண்டியிருக்கும். மாட்டேன் என்று உன்னால் சொல்ல முடியாது. புரிகிறதா? அதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.’

கீழே கார் வந்து நின்ற சத்தம் கேட்டது. ஹேமா சட்டென்று அறையை விட்டு வெளியேறப் போய் திரும்பிப் பார்த்தாள்.

தனிமையே சிலையாய் உருவானதுபோல் விஜய் நின்றிருந்தான். ஹேமா அவனருகில் ஓடி வந்தாள். அவனை இருக்க அணைத்துக்கொண்டு, தோளில் தலையைச் சாய்த்துக் கொண்டாள். “நானும் மற்றவர்களைப் போல் உனக்கு வேதனையைத் தருகிறேன் இல்லையா. என்ன செய்யட்டும்? எப்படி இருக்க வேண்டுமென்று நினைக்கிறேனோ அப்படி இருக்க என்னால் முடியவில்லை. விஜய்! எல்லாம் நம்முடைய நல்லதிற்குத்தான்” என்றாள்.

படிகளில் ஆனந்தின் குரல் கேட்டது.

விஜய் ஹேமாவின் அணைப்பிலிருந்து மெதுவாகத் தன்னை விடுவித்துக் கொண்டான்.

ஹேமா விஜய் தாயின் போட்டோ அருகில் போய் நின்று கொண்டாள். ஆனந்த் உள்ளே வந்தான்.

“ஹேமா! இங்கே இருக்கிறாயா? விஜய் வீட்டுக்கு வந்து விட்டான் இல்லையா? அங்கே எனக்குப் பொழுதே போகவில்லை. ரொம்ப போர் அடித்தது. விஜய் வீட்டுக்கு வந்தானோ இல்லையோ என்று அதே கவலைதான்” என்றவன் விஜய் அருகில் சென்று, “என்ன விஜய்? என்னவோ போல் இருக்கிறாய்? உடல்நலம் சரியாக இல்லையா?” நெற்றியின் மீது கையை வைத்தான். “டாக்டரம்மாவே எதிரில் இருக்கிறாள். பரிசோதனை செய்து பார்க்கச் சொன்னால் போச்சு. ஹேமா! ஒரு தடவை விஜயை டெஸ்ட் செய்து விடு. ஜுரம் வந்தது போல் உடம்பு சூடாக இருக்கு” என்றான்.

“அனூ! நான் நன்றாகத்தான் இருக்கிறேன்” என்றான் விஜய்.

“இந்த போட்டோ நன்றாக இருக்கிறது. அப்போ விஜயின் வயது எவ்வளவு?’ ஹேமா கேட்டாள்.

“விஜய் பற்றி எது தெரிந்துகொள்ள வேண்டுமானாலும் என்னிடம் கேள். நான் சொல்கிறேன். விஜய்க்கு அப்போ இரண்டு வயது.” ஆனந்த் சொன்னான்.

லக்ஷ்மி மூவருக்கும் காபி கொண்டு வந்தாள்.

ஆனந்த் காபியைக் குடித்துக்கொண்டே சொன்னான். “காஞ்சி பெரியவர் நர்சிங்ஹோமுக்கு முகூர்த்தம் குறித்து தந்தார்கள். இந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி நல்ல நாளாம். அன்று திறப்பு விழாவை வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.”

அரைமணி கழித்து ராஜலக்ஷ்மி, ஹரிச்சந்திரா, ஹேமா கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

விஜய் கீழே இறங்கி வரவில்லை. ஆனந்தும், தீட்சிதரும் விடை கொடுத்தார்கள்.

கார் கிளம்பும்போது ஹேமா மாடி ஜன்னல் பக்கம் பார்த்தாள். ஜன்னல் காலியாக இருந்தது. விஜய் தென்படவில்லை.

அத்தியாயம்-24

நர்சிங்ஹோம் திறப்பு விழா எளிமையான முறையில் நடந்தது. அனுபவம் மிகுந்த டாக்டர்களை ஹேமா தன்னுடைய சக ஊழியர்களாக எடுத்துக் கொண்டாள். எல்லா ஏற்பாடுகளும் கச்சிதமாக, சிறப்பாக இருந்தன. ஹேமாவுக்குத் தெரிந்த டாக்டர்கள் எல்லோரும் அவளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். இத்தனை சின்ன வயதிலேயே நல்ல எதிர்காலம் அமைவது அவளுடைய அதிர்ஷ்டம் மற்றும் திறமை என்று பாராட்டினார்கள். ராஜலக்ஷ்மியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தன்னுடைய வருங்கால மருமகன் என்று ஆனந்தை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினாள்.

தீட்சிதருக்கு தான் செய்த பூஜைகளுக்குப் பலன் கிடைத்து விட்டதுபோல் மகிழ்ச்சியாக இருந்தது. எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாக, சின்ன குறைகூட இல்லாமல் செய்து முடித்த விஜய் விருந்தாளிகள் வரும்போது தொலைவாக நின்று கொண்டிருந்தான். அதைப் பார்த்த ஆனந்த் விஜயின் கையைப் பிடித்து அழைத்து வந்தான். இத்தனை குறைவான நேரத்திற்குள், இந்த நர்சிங்ஹோம் சகலவிதமான சௌகரியங்களுடன் தொடங்குவதற்கு விஜயின் உழைப்புதான் காரணம் என்று எல்லோருக்கும் முன்னால் சொல்லிவிட்டு, “ஐ லவ் ஹிம்” என்று அணைத்துக் கொண்டான். போட்டோ கிராபர்கள் பளிச் பளிச் என்று பிளாஷ்கள் மின்ன போட்டோக்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள். டின்னர் முடியும்போது ஹேமா ஐஸ்க்ரீம் கப்பைக் கொண்டு வந்து விஜயிடம் கொடுத்தாள்.

“தாங்க்யூ” என்று சொன்னாள். அவன் மௌனமாக ஐஸ்க்ரீம் கப்பைப் பெற்றுக்கொண்டான்.

“விஜய்! நான்… ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்” என்றாள்.

அவன் ஹேமாவின் முகத்தில் தென்பட்டுக் கொண்டிருந்த மகிழ்ச்சியைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

“நரிசிங்ஹோமைப் பார்க்கும்போது தோட்டத்தை இழந்த வேதனை குறைந்து விட்டதா?’ ஹேமா கேட்டாள்.

“ஊஹும்.” அவன் மறுப்பது போல் தலையை அசைத்தான். “அதற்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. தோட்டத்தை இழப்பதால் என் வாழ்க்கையில் ஏற்பட்ட வெறுமையை யாரும் தீர்த்துவிட முடியாது. காலை வேளையில் செடிகளுக்கு நடுவில் சுற்றி வரும்போது இளம் பச்சை நிறத்தில் துளிர்த்துக் கொண்டிருக்கும் இலைகளை, மொட்டுகளை, மலர்களை, காய்களை பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி எனக்கு வேறு எதிலும் கிடைக்காது.”

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஹேமா புன்முறுவலுடன் சொன்னாள். “விஜய்! நமக்கு ஒரு விஷயத்தில் எப்போ விருப்பம் ஏற்படும் சொல்லு? சில நாட்கள் கஷ்டப்பட்டு உயிரைக் கொடுத்து அதை முன்னுக்குக் கொண்டு வரும்போது தானே! அதன் வளர்ச்சியைக் காணும் போது மகிழ்ச்சி ஏற்படுவது இயற்கை. சில நாட்கள் போனால் இந்த நர்சிங்ஹோமும் உனக்கு விருப்பமானதாக மாறிவிடும். இங்கே நோயாளிகளைக் குணமாக்கி அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தருவோம்.”

அதற்குள் ஆனந்த் அங்கே வந்தான். “என்ன? என்னை தனியாக விட்டுவிட்டுப் பேசிக்கொண்டு இருக்கிறீர்களே?” என்றான்.

“விழா ஏற்பாடுகள் நன்றாக இருப்பதாக எல்லோரும் பாராட்டினார்கள். அதான் விஜய்க்கு நன்றியைத் தெரிவிக்கிறேன்.” ஹேமா சொன்னாள்.

“ஹேமா சொன்னது உண்மைதான் விஜய்.”

“விஜய்க்கு ஸ்வீட் கொடுங்கள் ஆனந்த்” என்றாள் ஹேமா.

ஆனந்த் ஐஸ்க்ரீமை ஸ்பூனால் எடுத்து விஜயின் வாயருகில் கொண்டு போனான். வேண்டாமென்று மறுத்துக்கொண்டே விஜய் ஓரடி பின்னால் வைத்தான். ஆனந்த் விஜயின் கழுத்தைச் சுற்றிக் கையைப் போட்டு வலுக்கட்டாயமாக ஐஸ்க்ரீமை ஊட்டி விட்டான். பளிச் பளிச்சென்று காமெராக்கள் மின்னின.

“இந்த போட்டோ கிராபர்களுக்கு வேறு வேலையே இல்லையா? நம்மையே போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.” ஆனந்த் எரிச்சலுடன் சொன்னான்.

விழா முடிந்து விட்டது. ராஜலக்ஷ்மியும், தீட்சிதரும் கிளம்பி விட்டார்கள். ஹேமா ஒவ்வொரு அறையாகச் சுற்றி வந்து கொண்டிருந்தாள்.

இத்தனை நாள் இனியதொரு கனவாய் இதயத்தினுள் மலர்ந்திருந்த மாளிகை இன்று கண்களுக்கு எதிரே நிஜமாய் வீற்றிருக்கிறது. லட்சியத்தை அடைவதற்கான பாதை அவள் கணக்ளுக்குத் தெளிவாகத் தென்பட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றியது.

ஹேமா ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தாள். அவளால் தன்னுடைய அதிர்ஷ்டத்தை நம்ப முடியவில்லை. தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் நோயாளிகளுக்கு அர்பணித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள்.

“டிரஷரர்” என்று எழுதியிருந்த அறைக்குள் நுழைந்தாள். விசாலமான மேஜை. பைல்களை வைப்பதற்காக அலமாரி, பீரோ எல்லாமே இருந்தன. ஹேமா விஜய்க்காக சுழலும் நாற்காலியைத் தேர்ந்தெடுத்து வாங்கியிருந்தாள். மேஜைமீது போன், ரைட்டிங் பேட், கால்குலேட்டர் வைக்கப் பட்டிருந்தன.

ஹேமா நாற்காலியில் அமர்ந்து கொண்டு மெதுவாக அப்படியும் இப்படியுமாக சுழன்றாள்.

அதற்குள் வாசற் கதவு அருகில் அரவம் கேட்டது. விஜய் உள்ளே வந்தான்.

பைல்களை, விசிட்டர்ஸ் கையெழுத்துப் போட்ட ரிஜிஸ்டரை எடுத்து வந்த விஜய் அவற்றை மேஜைமீது வைத்தான்.

“விஜய்!” ஹேமா அழைத்தாள்.

“ஊம்.”

ஹேமா நாற்காலியிலிருந்து எழுந்து கொண்டாள். நாற்காலியைச் சுட்டிக் காண்பித்துக்கொண்டே ஒரு தடவை இந்த நாற்காலியில் உட்கார்ந்து கொள்” என்றாள்.

விஜய் பதில் சொல்லவில்லை. பைல்களை அலமாரியில் வைத்துப் பூட்டிக் கொண்டிருந்தான்.

“ப்ளீஸ்!” என்றாள்.

“ஊஹும்.”

“எதனால்?”

“நான் இங்கே இருக்கப் போவதில்லை. எனக்கு வேலை கிடைத்து விட்டது ஹேமா. பெங்களூருக்குப் போகப் போகிறேன்.”

ஹேமா வியப்புடன் பார்த்தாள். “நிஜமாகவா? ஆனந்த் உன்னைப் போக விடுவானா?”

“இப்போ அந்த நிலைமை இல்லை. ஆனந்துக்கு நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்கள். வேண்டுமென்றால் ஆனந்த் பெங்களூருக்கு வந்து சில நாட்கள் என்னுடன் தங்கி விட்டு வருவான்.”

“ஆனந்த் சம்மதம் கொடுத்து விட்டானா?”

“ஒரு விஷயம் நிச்சயமாக நடக்க வேண்டும் என்று நான் விரும்பினால் ஆனந்த் அதை மறுக்க மாட்டான்.”

“திடீரென்று இந்த முடிவுக்கு வர காரணம்?” வருத்தமும், துக்கமும் ஹேமாவின் குரலில் வெளிப்பட்டன.

“என்னுடையது இல்லாத உலகத்தில் என்னால் வாழ முடியாது.”

“என்னைப் பற்றி யோசித்தாயா?”

“உன்னைப்பற்றி உன்னால் நன்றாக யோசிக்க முடியும், வாழ்க்கையில் உனக்கென்று ஒரு லட்சியம் இருக்கிறது. அதற்காகக் கடினமாக உழைப்பாய். அதைப் பற்றியே யோசிப்பாய். நர்சிங்ஹோம் என்பது உன் வாழ்நாளின் கனவு. அதை உன்னால் அடைய முடிந்தது” விஜய் பெருமூச்சு விட்டான். “நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி ஹேமா.”

“விஜய்! நீ இந்த நர்சிங்ஹோமுக்கு ட்ரஷரர்.”

“நான் வேண்டாமென்று மறுக்கும் பொறுப்புகளை என்மீது யாராலும் திணிக்க முடியாது.”

“ஆனந்தை விட்டுவிட்டுப் போகிறாயா? உன்னால் போக முடியுமா?’

“போக முடியும் என்ற தைரியம் இப்பொழுதுதான் ஏற்பட்டது. ஏன் என்றால் ஆனந்தின் வருங்கால மனைவி நீ. அவனை நிச்சயமாகப் பொறுப்பாக, கவனமாகப் பாதுகாத்துக் கொள்வாய் என்று தெரியும்.”

“நான் ஆனந்துடன் பழகுவது உன் அருகில் இருப்பதற்காகத்தான் என்று ஏற்கனவே உன்னிடம் சொல்லியிருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். நான் ஆனந்தைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.”

“இந்த நர்சிங்ஹோம் உருவானதற்குக் காரணமே ஆனந்த்தான். சுயநலம் பிடித்த பெண்ணாக நீ இருக்க மாட்டாய் என்று நம்புகிறேன். ஆனந்த் உன்னை விரும்புகிறான். அவன் விருப்பத்தை மறுத்து அவன் வாழ்க்கையை வேதனை மயமாக்கி விடாதே. ஹேமா! நம்மை நம்பியவர்களை ஒரு நாளும் பின் முதுதில் கத்தியால் குத்தக்கூடாது. என்னால் நிச்சயமாக அப்படி நடந்துகொள்ள முடியாது. குட் நைட் ஹேமா. விஷ் யூ ஆல் தி பெஸ்ட்!”

விஜய் வெளியில் வந்து விட்டான். ஒரு நிமிடம் நின்றான். மறுபடியும் உள்ளே போய் ஹேமாவிடம் ஏதாவது பேச வேண்டும் என்று தோன்றியது. உடனே கட்டுப்படுத்திக் கொண்டான். நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் நினைவுக்கு வந்ததும், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டுப் போய் விட்டான்.

ஐந்து நிமிடங்கள் கழித்து ஆனந்த் ஹேமா இருந்த அறைக்கு கதவைத் திறந்து கொண்டு வந்தான். ஹேமா மேஜைமீது தலையைச் சாய்த்துக்கொண்டு விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்தாள். ஆனந்த் ஒரு நிமிடம் அப்படியே பார்த்தான். ஏதோ சொல்வதற்காக வாயைத் திறக்கப் போனவன், மனதை மாற்றிக்கொண்டு மௌனமாய் அந்த அறையை விட்டு வெளியேறி விட்டான்.

– தொடரும்…

– மௌனராகம் (நாவல்), தெலுங்கு: யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில்: கௌரி கிருபானந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *