கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 24, 2024
பார்வையிட்டோர்: 2,088 
 
 

(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

அத்தியாயம்-19

ஹேமாவின் பிறந்தநாள் விழா நன்றாக நடந்தது. நிறையப்பேர் வந்திருந்தார்கள். எல்லோரையும் தன் வீட்டுக்கு அழைக்க வேண்டுமென்று நினைத்திருந்ததாகவும், அதற்கு இன்றுதான் சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் ராஜலக்ஷ்மி சொன்னாள். ராஜலக்ஷ்மியின் உறவினர்கள், சக ஊழியர்கள், ஹேமாவின் கிளாஸ் மேட்ஸ், கோ டாக்டர்ஸ்… எல்லோரும் வந்திருந்தார்கள். ஹேமாவின் நண்பர்கள் சிலர் பாட்டுபாடி டான்ஸ் செய்தார்கள். ராஜலக்ஷ்மியின் சக ஊழியர்களில் ஒருவர் மிமிக்ரி செய்து எல்லோரையும் சிரிக்க வைத்தார்கள். ஹால் முழுவதும் சிரிப்பும், கும்மாளமுமாய் அதிர்ந்து கொண்டிருந்தது. உணவு பொருட்களும் ரொம்பவும் உயர்தரமாக, ருசியாக இருந்தன, பஃபே முறை என்பதால் அவரவர்கள் தங்களுக்கு வேண்டியதைத் தட்டில் பரிமாறிக்கொண்டு கும்பல் கும்பலாய் நின்றுகொண்டு, உட்கார்ந்துகொண்டு, பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் கலகலவென்று பேசிக் கொண்டு இருந்ததில் பதினோரு மணி ஆனதே தெரியவில்லை.

தீட்சிதருக்கு அங்கு வந்த மக்களைப் பார்க்கப் பார்க்க உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளமாய் பொங்கியது. ஆண் துணை இல்லாத குடும்பம். தாய், மகள் இருவரும் சம்பாதிப்பவர்கள். அவர்களிடம் நூறு ரூபாய் கொடுத்தால் அது ஆயிரம் ரூபாயாக விருத்தியாகும் என்பது உறுதி. எப்படியாவது ஹேமாவை ஆனந்துக்கு மனம் முடிக்க வேண்டுமென்று அவருக்குத் திடமாய் தோன்றிவிட்டது. திரிவேணி சங்கமமாய் அழகு, குணம், படிப்பு ஒன்றாக இணைந்து உருவெடுத்தது போல் ஆனந்தின் பக்கத்தில் ஹேமா அமர்ந்திருக்கும் அந்தக் காட்சி பார்க்கும்போது தன்னுடைய பூஜைகளை ஏற்றுக்கொண்டு சாட்சாத் லக்ஷ்மி தேவியே பிரத்யட்சமாகி விட்டதுபோல் தோன்றியது. விஜயை அவர் ஒரு கண்ணால் கவனித்துக்கொண்டுதான் இருந்தார். விஜய் எங்கேயோ தொலைவில் மக்களுக்கு நடுவில் இருந்தான். ஹரி புதிதாக உயர்ந்து விட்ட ஹோதாவைப் பறைசாற்றிக் கொள்ளும் வகையில் அலட்டலுடன் பேசிக் கொண்டிருந்தான்.

அன்று மாலை ஆனந்தும், மற்றவர்களும் வந்திருக்கிறார்கள் என்று தாய் வந்து அழைத்தபோது, அடுத்த அறையில் சிநேகிதிகளுடன் பேசிக் கொண்டிருந்த ஹேமா நிதானமாக ஒரு நிமிடம் கழித்து வெளியில் வந்தாள்.

தீட்சிதரும், ஹரியும் முன்னால் நுழைந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் ஆனந்தும், விஜயும் உள்ளே வந்தார்கள்.

ஹேமா விஜயைப் பார்த்து ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டாள். வெள்ளை நிற பனாரஸ் பட்டுப் புடவையில் மெலிதான ஜரிகை பார்டரும், ரோஸ் நிற நூலில் ஜரிகையும் கலந்து வேலைப்பாடு நிறைந்திருந்த தலைப்பும், பொருத்தமான பிளவுசும் அணிந்து, கழுத்தில் மெலிதான முத்து மாலையுடன் நின்றிருந்த ஹேமா, இமயமலையின் மானசரோவரத்திலிருந்து பறந்து வந்த அன்னப்பறவையைப் போல் இருந்தாள்.

“ஹலோ ஆனந்த்!” ஹேமா வரவற்பதுபோல் சொன்னாள்.

“மெனி ஹாபி ரிடர்ன்ஸ் ஆஃப்தி டே!” பொக்கேவைக் கொடுத்துக்கொண்டே சொன்னான் ஆனந்த்.

“தாங்க்யூ!” என்றவள் தீட்சிதர் பக்கம் திரும்பி, “வணக்கம் தாத்தா! நலமாக இருக்கிறீர்களா?” என்று குசலம் விசாரித்தாள்.

“சௌபாக்கியவதி பவ!” அவர் ஹேமாவின் தலைமீது கையை வைத்து ஆசீர்வதித்தார். சில்க் ஜிப்பாவின் பையிலிருந்த சிவப்பு அட்டைப் பெட்டியை எடுத்து, “பிறந்த நாளுக்காக ஆனந்த் சார்பிலும், என்னுடைய சார்பிலும் இந்த சின்ன பரிசு” என்று கொடுக்கப் போனார்.

“நோ பிரசென்டேஷன்ஸ்…” ஹேமா மறுத்தாள்.

“இல்லை… ஏதோ என்னுடைய சந்தோஷத்திற்காகக் கொண்டு வந்தேன். வேண்டாமென்று சொல்லி இந்த கிழவனுக்கு வேதனையை அளிக்காதே” என்று அவர் சொல்லும்போது ஹேமாவால் அவரை எதுவும் சொல்ல முடியவில்லை. அதைப் பெற்றுக்கொண்டு, “மம்மி! பிரசன்டேஷன்ஸ் எதுவும் வேண்டாமென்று நீயாவது சொல்லு.” தாயின் கையில் கொடுத்து விட்டாள்.

“ஹேமா! கொடுக்க முடிந்தவர்கள் கொடுக்கும்போது எடுத்துக்கொள்ள வேண்டும். என்னைப் போன்ற ஏழையால் எதுவும் கொடுக்க முடியாது.” என்றான் ஹரி.

சிநேகிதி யாரோ அழைத்ததும் ஹேமா அந்த இடத்தை விட்டுச் சென்றாள். “விஜய்! என்ன இது? என்ன ஆச்சு உனக்கு? ஹேமாவை விஷ் செய்யவில்லையே? ஏன்?” ஆனந்த் கேட்டான்.

விஜய் பதில் சொல்லவில்லை.

ஹேமா சிநேகிதிகளுடன் பேசிக்கொண்டே தொலைவிலிருந்து விஜயைக் கவனித்துக் கொண்டிருந்தாள். விஜய் சற்று இளைத்து விட்டதுபோல் தென்பட்டான். அவன் முகத்தில் புன்முறுவலும், கம்பீரமும் அப்படியே இருந்தன.

ஹேமாவின் சிநேகிதி ரூபா வந்தாள். தொலைவின் நினிருந்த விஜயைப் பார்த்துக்கொண்டே, “அந்த ஹேண்ட்சம் கை யாரு ஹேமா?” என்று கேட்டாள்.

“எங்களுக்குத் தெரிந்தவன்தான்.” புன்முறுவலுடன் சொன்னாள் ஹேமா. “என்ன? யாரோடும் சேராமல் தனியாக உட்கார்ந்திருக்கிறானே?”

“அவன் அப்படித்தான்” என்றாள் ஹேமா.

“நான் போய் ஒரு பிடி பிடிக்கட்டுமா?”

“தோற்றுப் போய் விடுவாய். அனாவசியமாய் முயற்சி செய்யாதே.” எச்சரிப்பது போல் சொன்னாள் ஹேமா.

“நானா? தோற்பதா? ஹும்!” என்று பெருமை பொங்க ஒரு பார்வையை வீசிவிட்டு விஜய் அருகில் சென்றாள்.

தொலைவிலிருந்து ஹேமா இருவரையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். விஜய் ரூபாவுடன் மரியாதைக்காக இரண்டு வார்த்தைகளைப் பேசிவிட்டு, பக்கத்தில் கிடந்த நாளேட்டை எடுத்துக்கொண்டு சீரியசாகப் படிப்பதில் மூழ்கி விட்டான்.

ரூபா திரும்பி வந்தாள். “நீ சொன்னது உண்மைதான். அதோ வசந்தாவும், லக்ஷ்மியும் அவன் அருகில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.” சுட்டிக்காட்டினாள். ஹேமா, ரூபா இருவரும் அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ரூபாவிடம் பேசியது போலவே அவர்களுடன் இரண்டு வார்த்தைகளைப் பேசிவிட்டுப் பேப்பரில் முகத்தைப் புதைத்துக் கொண்டான். ஆனந்த் யாருடனோ பேசி முடித்துவிட்டு விஜய் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டான். வசந்தாவும், லக்ஷ்மியும் அவனுடன் பேசத் தொடங்கினார்கள். ரூபாவும் போய் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். சிரிப்பும், பேச்சுமாய் அந்த இடம் அதிர்ந்து கொண்டிருந்தது. ஹேமாவும் போய் அவர்களுடன் சேர்ந்து உட்காந்து கொண்டாள். பத்து நிமிடங்கள் கழித்து ஹேமா விஜய் இருந்த பக்கம் பார்த்தாள். விஜயும், ராஜலக்ஷ்மியும் ஒரு பக்கமாய் உட்கார்ந்து கொண்டு சீரியசாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள். ‘இந்த இருவரும் ஒன்றுதான். எங்கே இருந்தாலும் சீரியசாகப் பேசிக் கொண்டிருப்பார்கள்.’ நினைத்துக்கொண்டாள் ஹேமா. பதினோரு மணியாகி விட்டது. பெரும்பாலான விருந்தாளிகள் சென்று விட்டார்கள்.

ஹேமா மாடி அறையில் நகைகளைக் கழட்டிக் கொண்டிருந்தாள்.

ராஜலக்ஷ்மி வந்தாள்.

“ஹேமா! விஜய் உன்னிடம் தனியாக ஏதோ பேச வேண்டுமாம். இங்கே வரச் சொல்லட்டுமா?”

“என்னுடனா?” என்றாள்.

“ஆமாம்.”

“இந்த நேரத்தில் என்ன பேசப் போகிறான்?” ஹேமா கேட்டாள்.

“விஜய் வெட்டியாகப் பேசும் ஆள் இல்லை. ஏதோ முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும். கேட்டுத்தான் பாரேன்.” ராஜலக்ஷ்மி போய் விட்டாள்.

ஹேமா நகைகளை டிரஸ்ஸிங் டேபிள் மீது வைத்தாள்.

‘என்ன பேசப் போகிறான்?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அவனருகில் செல்ல வேண்டுமென்றும், பேச வேண்டுமென்றும் அவள் மனம் துடியாய் துடித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் அப்படிச் செய்யவில்லை. அவன் மரியாதைக்காகக் கூட தன்னிடம் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கவில்லை. அவன் வருவான் என்று அவள் கனவில் கூட நினைக்கவில்லை. விஜயைத் தனியாக அழைக்காவிட்டாலும் அவன் சுயமாய் வந்ததே ஒரு விசேஷம். மேலும் தன்னுடன் பேச வேண்டுமென்று தன் தாயாரிடம் சொன்னது அதைவிட பெரிய விசேஷம். அவன் சொல்ல நினைத்த விஷயம் என்னவாக இருக்கும்? தீட்சிதரும், ஆனந்தும் கிளம்பிப் போய் ஒரு மணி நேரம் ஆன பிறகும் அவன் இங்கே தங்கிவிட்ட காரணம் என்ன? யோசித்துக் கொண்டிருந்த ஹேமாவுக்குப் பின்னாலிருந்து காலடிச் சத்தம் கேட்டது.

ஹேமா திரும்பவில்லை.

“ஹேமா!” என்று அழைக்கும் குரல் கேட்டது.

ஹேமா திரும்பிப் பார்த்தாள். எதிரே வாசற்படியில் விஜய்!

“ஒரு நிமிஷம் பேச வேண்டும்.” அவன் கேட்டான்.

ஹேமா நாற்காலியை நகர்த்தினாள். உள்ளே வரச் சொல்லி ஹேமா தன்னை அழைப்பாளோ என்று அவன் ஒரு நிமிடம் காத்திருந்தான். ஹேமா அழைக்கவில்லை. அவனே உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டான். ஹேமா டிரஸ்ஸிங் டேபிள் மீது சாய்ந்து கொண்டு அவன் வாயிலிருந்து வரப் போகும் வார்த்தைகளுக்காகக் காத்திருந்தாள்.

“ஹேமா!”

ஹேமா தலையைத் திருப்பிக்கொண்டு வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

விஜய் ஒரு நிமிடம் நின்றான். பிறகு சொன்னான். “நான் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டுமென்று வந்திருக்கிறேன்.”

ஹேமா பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.

“அம்மாவிடம் பேசிவிட்டேன். இந்த விஷயத்தில் உன் முடிவுதான் தன்னுடைய முடிவு என்று சொல்லி விட்டார்கள்.”

ஹேமா கேட்டுக் கொண்டிருந்தாள்.

“தீட்சிதர் ஆனந்துக்கும் உனக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்.”

ஹேமா திடுக்கிட்டுத் தலையை உயர்த்தி அவன் பக்கம் பார்த்தாள்.

ஹேமாவின் கண்களுக்குள் ஆழமாய் பார்த்துக்கொண்டே கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் சொன்னான். “ஆனந்துக்கும் உனக்கும் மணம் முடித்து தோட்டத்தை விற்றுவிட்டு உனக்கு நர்சிங்ஹோம் கட்டி தருவாராம்,”

ஹேமாவின் கண்கள் பெரிதாயின. மூக்கின் நுனி அதிர்ந்து கொண்டிருந்தது.

“ஆனந்தின் உடல் நலமும் இப்போ நன்றாக இருக்கிறது. ஆஸ்துமாவைத் தவிர அவனுக்கு வேறு எந்த பிராப்ளமும் இல்லை. ஆஸ்துமா ஒரு நோய் இல்லை என்று மெடிகல் ஜர்னல்கள் சொல்கின்றன. ஆனந்த் ரொம்ப நல்லவன், புரிந்துகொள்ள முடிந்தால்…”

“ஸ்டாப்பிட்!” ஹேமா உரத்தக் குரலில் கத்தினாள். “விஜய்! நீ…” ஹேமா அவனருகில் வந்தாள். சுட்டு விரலைக் காட்டிக்கொண்டே, “நீ … நீதானா இப்படிச் சொன்னது…” கூண்டில் நிற்க வைத்துக் கேட்பது போல் கேட்டாள். அந்தக் கண்களில் தென்பட்ட சிவப்புக் கோடுகள் அவள் இதயத்தின் ஜுவாலையைப் போல் இருந்தன.

“ஹேமா!”

“ஆனந்த்… நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? செய்து கொண்டால் உனக்கு… உனக்குச் சந்தோஷமாக இருக்குமா?’ இரட்டிப்பது போல் கேட்டாள்.

“என்னைவிட சந்தோஷப்படக் கூடியவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஆனந்தைப் புரிந்து கொண்டால் அவனை நேசிக்காமல் யாராலும் இருக்க முடியாது.”

“நான் உன்னைப் பற்றிக் கேட்கிறேன். ஆனந்தை நான் கல்யாணம் செய்து கொண்டால் உனக்கு மகிழ்ச்சியாக இருக்குமா?”

விஜய் தலையை அசைத்தான்.

“ஏன்? எதனால் அந்த சந்தோஷம்?”

“ஆனந்த் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னுடைய உயிர் நண்பன். உண்மையிலேயே…” அவன் மேலும் ஏதோ சொல்லப் போனான். அவன் கன்னத்தில் பளாரென்று அறை விழுந்தது.

“ஐ ஹேட் யூ! இந்த அளவுக்கு எனக்கு யார் மீதும் வெறுப்பு ஏற்பட்டதில்லை.” ஹேமா மறுபடியும் கையை உயர்த்தப் போகும்போது விஜய் பலமாகப் பற்றிக்கொண்டு தடுத்து விட்டான்.

“என் மனதில் இருப்பது யார் என்று தெரிந்தும், யாருக்கு நான் சொந்தமாக வேண்டுமென்று நினைக்கிறேன் என்று தெரிந்தும்… நீ இந்தப் பேச்சுவார்த்தை நடத்த வந்திருக்கிறாயா? உன்னைக் காதலித்த பெண்ணை நீயே இன்னொருவனிடம் போகச் சொல்லிச் சொன்னால் அதற்குப் பெயர் என்ன தெரியுமா? விபச்சாரம்! என்னை வேசியாக இருக்கச் சொல்கிறாயா?”

“ஹேமா! ப்ளீஸ்!”

ஹேமா இரண்டு கைகளாலும் அவன் தலைமுடியைப் பற்றிக்கொண்டாள். கோபத்தால், ஆவேசத்தால் அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

“ஹேமா! ப்ளீஸ்.” அவன் தடுக்க முயன்று கொண்டிருந்தான். ஹேமா சுழல்காற்று போல் அவனைச் சுற்றிக்கொண்டு கைப்பிடிகளை இறுக்கி அவனைக் குத்தப் போனாள்.

விஜய் ஹேமாவை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து கட்டில்மீது உட்கார வைத்தான். படிகள் மீது யாரோ வந்து கொண்டிருந்த பேச்சுக் குரல் கேட்டது. விஜய் சட்டென்று எழுந்து போய் கதவைச் சாத்தினான். பிறகு கலைந்து போன தலைமுடியை விரல்களால் சரி செய்து கொண்டே கதவின் மீது சாய்ந்து கொண்டு ஒரு நிமிடம் அப்படியே நின்று கொண்டான்.

“நான் உன்னை வெறுக்கிறேன். என்னை இப்படி அவமானப்படுத்துவதற்கு உனக்கு எவ்வளவு தைரியம்? நீ எனக்குக் கொடுக்கும் பிறந்தநாள் பரிசு இதுதானா?”

ஹேமா தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

விஜய் அருகில் வந்தான். “ஹேமா!” ஏதோ சொல்லப் போனான்.

“போய் விடு. இந்த இடத்தை விட்டு உடனே போய் விடு. இனி ஒரு நாளும் என் கண்ணில் படாதே. அசல் நான் உன்னை என் பிறந்தநாளுக்கு அழைக்கவேயில்லை. அழையாத விருந்தாளியாய் வந்துவிட்டு என்னை அவமானப் படுத்துவானேன்? இனி ஜென்மத்தில் உன் முகத்தை எனக்குக் காண்பிக்காதே.”

விஜய் ஒரு நிமிடம் அப்படியே நின்றான்.

பிறகு கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தான். அடுத்த நிமிடம் அந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.

அத்தியாயம்-20

இரவு ஏழுமணி.

பனிக்காலம் ஆனதால் சீக்கிரமாகவே இருட்டி விட்டது. கோவில் மண்டபத்தில் குருக்கள் ஏற்றியிருந்த விளக்கில் எண்ணெய் தீர்ந்து விட்டது போலும். வேகமாய் வீசிக்கொண்டிருந்த குளிர்ந்த காற்றுக்குப் படபடத்துக் கொண்டிருந்தது.

விஜய் மண்டபத்திலிருந்த தூண் மீது சாய்ந்து கொண்டு படிமீது உட்கார்ந்திருந்தான். அவன் தோளைச் சுற்றி சால்வை போர்த்தியிருந்தது. ஏதோ ஆழமான யோசனையில் மூழ்கியிருப்பது போல் தென்பட்டான்.

‘ஐ ஹேட் யூ!’ ஹேமா சொன்ன வார்த்தைகள் அவன் மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன. அவன் இதழ்களில் வருத்தம் கலந்த புன்னகை ஒன்று மலர்ந்தது. அவனுக்கு வேண்டியதும் அதுதான்.

ஹேமாவின் பிறந்தநாள் முடிந்து இருபது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனந்த் ஹேமா அடிக்கடி சந்தித்துக்கொண்டு தான் இருந்தார்கள். ஆனந்த் ஹேமாவைச் சந்தித்த போதெல்லாம் இரட்டித்த உற்சாகத்துடன் அவர்களுக்கு நடுவில் நடந்த உரையாடலை ஒன்றுகூட விடாமல் அப்படியே விஜயிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தான்.

தீட்சிதர் தோட்டத்தை விற்கப் போவதாய் தெரிந்த போது ஊரில் எல்லோரும் வியப்படைந்து விட்டார்கள். அவர்களால் நம்ப முடியவில்லை. “எதற்காக விற்கப் போகிறார்கள்? நீ எப்படி சும்மாயிருக்கிறாய்?” என்று விஜயிடம் கேட்டார்கள். தோட்டத்திற்காகப் பாடுபட்டு உழைக்கும்போது எல்லாம் உனக்குத்தான் என்று சொன்ன தீட்சிதர் இப்போ அந்தப் பேச்சையே எடுக்கவில்லை.

கோவில் கதவைத் திறந்து கொண்டு யாரோ பெண்கள் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.

விஜய் மறுபடியும் யோசனையில் ஆழ்ந்து விட்டான், தோட்டத்தை விற்பது என்றால் தன் உடலில் ஒரு பகுதியை வெட்டுவது போலதான். இது தெரிந்தும் தீட்சிதர் பொருட்படுத்தவில்லை. போகட்டும்! தோட்டத்தை விற்று விடுவதால் தனக்கு எதுவும் நேர்ந்து விடாது. தன் உடலில் இன்னும் தெம்பும் திடமும் நிறையவே இருக்கின்றன. இரண்டு வருடங்கள் கஷ்டபட்டால் மறுபடியும் தன்னால் ஒரு தோட்டத்தை உருவாக்க முடியும். வாழ்க்கையில் எதன் மீதும் பற்றுதல் வைக்கக் கூடாது என்று தோன்றியது. முக்கியமானதேதோ தன்னிடமிருந்து கொள்ளையடிக்கப் பட்டுவிட்டது போன்ற உணர்வு. மறுபடியும் அந்த அளவுக்கு உழைப்பதற்கு உடம்பிலும், உள்ளத்திலும் உற்சாகம் இருக்கவில்லை. வாழ்க்கையில் தான் விரும்பியது தனக்குக் கிடைக்காது. விதி தனக்குக் கொடுத்ததை மௌனமாய் ஏற்றுக் கொள்வதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை. ஏனோ விரக்தியாய் இருந்தது.

நிலவின் ஒளியைப் பார்க்காத வரையில் இருளைத் தாங்கிக் கொள்ள முடியும். நிலவே தன் வாழ்க்கையில் நுழையப் போகும்போது தானே கதவைச் சாத்திக்கொண்டு விட்டான். இன்று இந்த இருள் இன்னும் கருப்பாய், விகாரமாய் தோன்ற தொடங்கியது.

இத்தனை நாளாய் பொறுமை என்று நினைத்தது இன்று இயலாமையாய் தோன்றியது.

விஜய் விரல்களால் நெற்றிப்பொட்டை அழுத்திக்கொண்டான். அவன் காதுகளில் ஹேமா அன்று ஆவேசமாய், கோபமாய் சொன்ன வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டிருந்தன. “உன்னைக் காதலித்த பெண்ணை நீயே இன்னொருவனிடம் போகச் சொன்னால் அதற்குப் பெயர் என்ன தெரியுமா? விபச்சாரம்!”

அவன் தாடை எலும்பு இறுகியது. கீழ் உதட்டைப் பற்களால் அழுத்திக் கொண்டான். அந்தச் சொற்கள் கூர்மையான ஆயுதம் போல் அவன் உள்ளத்தை அறுத்துக் கொண்டிருந்தன. ஒரு பக்கம் தீட்சிதர். இன்னொரு பக்கம் ஆனந்த். இருவருக்கும் நடுவில் வாயைத் திறக்க முடியாத தன்னுடைய இயலாமை. எப்போதும் இல்லாத விதமாய் தன்னுடைய இயலாமையைக் கண்டு தன்மீதே அவனுக்கு எரிச்சல் ஏற்பட்டது. இதன் முடிவு எங்கே என்று தெரியவில்லை.

மண்டபத்தின் படிகளில் யாரோ பெண்மணி ஏறி வந்து கொண்டிருந்தாள். புடவையில் சலசலப்புடன் மெலிதான நறுமணம் காற்றுடன் மிதந்து வந்தது.

விஜய் சரியாக உட்கார்ந்து கொண்டான்.

எதிரே ஹேமா நின்றிருந்தாள்

அவன் குழப்பத்துடன் பார்த்தான். ஹேமா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனையும் அறியாமல் அவன் கண்களில் மகிழ்ச்சி பொங்கி வந்தது. ஆனால் உடனே மாயமாய் மறைந்து விட்டது. இனம் புரியாத வேதனை ஏதோ வேதனை அவன் அடிமனதில் அலைக்கழித்துக் கொண்டிருப்பதை, சக்தியைத் திரட்டிக்கொண்டு அவன் உடல் அந்த வலியைத் தாங்கிக் கொண்டிருப்பதை அந்த கண்களில் உணர முடிந்தது.

“விஜய்!” ஹேமா அழைத்தாள்.

அவன் எழுந்துகொள்ளப் போகும்போது கையை நீட்டி தடுத்தாள்.

“நான் உன்னுடன் பேசத்தான் வந்திருக்கிறேன்.” ஹேமா அதே படியில் சற்று தள்ளி உட்கார்ந்து கொண்டாள்.

“ஹரி வரும்போது கூட வந்தேன். ஆனந்த் வீட்டில் இல்லை. தாத்தா ஏதோ வேலையாய் கர்ணம் மாமா வீட்டுக்குப் போயிருக்கிறாராம். ஹரி போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். நான் லக்ஷ்மியைத் துணையாக அழைத்துக்கொண்டு கோவிலுக்கு வந்தேன். நீ ஊரில் இல்லையென்றே நினைத்தேன்.”

விஜய் கேட்டுக் கொண்டிருந்தான்.

“விஜய்! ஐ யாம் சரி. என் பிறந்த நாளன்று நான் ரொம்ப சிறுபிள்ளைத் தனமாய் நடந்து கொண்டேன். ஆவேசமடைந்து உன்னை வாய்க்கு வந்தபடி பேசினேன். அவமானப்படுத்தினேன். பிறகு ரொம்ப வருத்தப்பட்டேன். என்மீதே எனக்குக் கோபம் வந்தது.”

விஜய் கேட்டுக் கொண்டிருந்தான். ஹேமாவின் பேச்சைக் கேட்க கேட்க அவன் மனதில் கொந்தளித்துக் கொண்டிருந்த எரிமலை ஏதோ அணைந்து விட்டது போல் அமைதி குடியேறிக் கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாய் ஹேமா இப்படி வந்தது… அருகில் அமர்ந்துகொண்டு பேசியது அவன் வேதனையைக் குறைத்துக் கொண்டிருந்தது. அவனுள் புதிதாக சக்தி ஏதோ பிறப்பதுபோல் தோன்றியது. ஹேமாவுக்கும் தனக்கும் இருக்கும் நட்பு சாசுவதமாக அறுந்து போகவில்லை. ஹேமா தன்னுடன் பேசுவதை விரும்புகிறாள்.

“உனக்குத் தெரியுமா? தாத்தா தோட்டத்தை விற்கப் பொகிறாராமே?”

தெரியும் என்பதுபோல் விஜய் தலையை அசைத்தான்.

“எனக்குத் தெரிந்தவரையில் அந்தத் தோட்டம் என்றால் உனக்கு உயிர். அதை விற்பதற்கு எப்படி நீ சம்மதம் தெரிவித்தாய்?”

அவன் பேசவில்லை.

“சொல்லு விஜய். பேசு… உன் மௌனத்தால் என்னைக் கொல்லாதே. சொல்லு. எதற்காகச் சம்மதித்தாய்?’

“அது அவர்களுடைய சொத்து. வேண்டாமென்று சொல்வதற்கு எனக்கு அதிகாரம் கிடையாது.” விஜய் பதில் சொன்னான்.

“அதிகாரம்… இல்லையா? பதினைந்து வருடங்களாய் அந்தத் தோட்டத்தை முன்னுக்குக் கொண்டு வருவதற்காக அத்தனை பாடுபட்ட உனக்கு அதிகாரம் இல்லையா? நேற்று வந்த ஹரி எல்லா விஷயங்களிலும் தலையை நுழைத்து முடிவு செய்து வருகிறான். இப்போ தோட்டத்தை விற்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?”

“நர்சிங்ஹோம் கட்டப் போகிறார்களாம்.”

“அதுதான் ஏன் என்று கேட்கிறேன்? அசல் இந்த யோசனை முதலில் யாருடைய மூளைக்கு வந்தது? அது இப்போ என் அம்மாவின் மூளையிலும் ஏறிவிட்டது. எப்போதும் ஒரு சிநேகிதியாய் என் விருப்பு வெறுப்புகளை மதித்து வந்த அம்மா இந்த விஷயத்தில் ஒரு தாயாக என்னை அடக்கி ஆளுவதற்கு முயற்சி செய்கிறாள்.”

விஜய் கேட்டுக் கொண்டானே தவிர எந்த கருத்தும் வெளியிடவில்லை.

ஹேமா ஆவேசத்தை அடக்கிக்கொண்டே சொன்னாள். “எனக்கு… எனக்கு உன் மீதுதான் கோபம் வருகிறது. இதற்கெல்லாம் காரணம் நீதான். நீ ஏன் வாயைத் திறக்க மறுக்கிறாய்? உன் மனதில் இருப்பதை வெளிப்படையாக எதிராளிக்குச் சொல்லத் தயங்குவானேன்? அவர்கள் உன்னைக் கொள்ளை அடிக்கும் விதமாக நடந்து கொள்ளும் போது ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தையில் உன் எதிர்ப்பை ஏன் தெரிவிக்கக் கூடாது? எதனால் இந்த அடிமைத்தனம்? உன் வாழ்க்கையை அவர்கள் விலை கொடுத்து வாங்கி விட்டார்களா? வெளி உலகத்தில் நீ காண்பிக்கும் சாமர்த்தியம், திறமை எல்லாம் இவர்களிடம் வரும்போது பிரயோஜனமில்லாமல் போவானேன்?”

விஜய் வாயைத் திறக்கவில்லை.

“விஜய்! எதற்காக இப்படி கை கால்களைக் கட்டிப் போட்டிருப்பதுபோல் நடந்து கொள்கிறாய்? உங்களுக்கு நடுவில் இருக்கும் அந்தப் பந்தம்தான் என்ன? அவர்களுடைய சுயநலம் எனக்குப் புரிகிறது. உன் மௌனம்தான் கொஞ்சம் கூட புரியவில்லை.”

ஹேமா சற்று நிறுத்தி பெரிதாக மூச்சை எடுத்துக்கொண்டாள். “எனக்குத் தெரியும், நீ என்னைவிட்டுத் தொலைவாகப் போனதற்குக் காரணம். இவர்களுக்குப் பதில் சொல்ல முடியாததால் என்று. விஜய்! உன்னைப் பற்றிக் பற்றிக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாதவர்களுக்காக நம் வாழ்க்கையை ஏன் பணயம் வைக்கிறாய்? என்னை எவ்வளவு வேதனைப் படுத்துகிறாய் என்று உனக்குப் புரியவில்லையா?” ஹேமாவின் குரல் கம்மியது.

விஜய் சட்டென்று எழுந்து கொண்டு போகப் போனான்.

ஹேமா அவன் கையைப் பற்றி இழுத்து உட்கார வைத்தாள். தன்னைத் தானே

சமாளித்துக்கொண்டு, “உட்கார்ந்து கொள். எத்தனை திடமாக முடிவு செய்து வைத்திருந்தாலும் நம் விஷயத்தைப் பற்றிப் பேச்சை எடுக்காமல் என்னால் இருக்க முடியவில்லை. நான் உன்னிடம் ஆனந்த் பற்றி ஒரு முக்கியமான விஷயம் பேசுவதற்காக வந்திருக்கிறேன். சமீப காலமாய் ஆனந்தின் உடல்நலம் நன்றாகத்தான் இருக்கிறது. லேசாக பூசியும் இருக்கிறான். பழைய போட்டோக்களைப் பார்க்கும்போது எனக்கே வித்தியாசம் தெரிகிறது. ரொம்ப சுறுசுறுப்பாகத் தென்படுகிறான். இதுவரையில் அவன் இந்த அளவுக்கு உற்சாகமாக இருந்தது இல்லை என்று தாத்தாவும் சொன்னார். நீ கவனித்தாயா?”

கவனித்தேன் என்பதுபோல் விஜய் தலையை அசைத்தான்.

“இது உண்மையான ஆரோக்கியம் இல்லை. செயற்கையானது. ஆனந்த் ட்ரக் ஏதோ எடுத்துக் கொள்கிறான். அது மனிதனை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். புதிதாக சக்தி வந்தது போல் தோன்றும் எடை கூடுவதோடு முகமும் பிரகாசமாக இருக்கும். உடல் நிறமும் மெருகேறியது போல் தென்படும். ஆனால் போகப் போக இந்த மருந்து வேலை செய்யாது. அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். நீண்ட நாட்கள் பயன்படுத்துவதால் கிட்னி பாதிக்கப்படும். இதயம் பலவீனமாகி விடும். அது ஒரு விஷ வளையம். அந்த சிலந்தி கூட்டிற்குள் சிக்கிக் கொண்டு விட்டால் வெளியேறுவது ரொம்ப கஷ்டம். இந்த மருந்தை அரசாங்கம் தடை செய்திருக்கிறது. ஆனால் பிளாக் மார்க்கெட்டில் இதன் விற்பனை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனந்த் இந்த டிரக்கை யார் மூலமாய் வாங்குகிறான் என்று தெரிந்துகொள்ள வேண்டும். ஆனந்த் இந்த மருந்துக்கு ஏற்கனவே அடிமையாகி விட்டிருப்பான் என்று தோன்றுகிறது.”

விஜய் ஹேமாவின் பக்கம் திரும்பிக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“ஆனந்தின் இந்தப் பழக்கத்தை நிறுத்துவதற்காக என்னால் ஆன முயற்சியை நானும் செய்கிறேன். ஆனந்த் என்றால் எனக்கும் பிடிக்கும். களங்கமற்ற மனம் அவனுடையது. அவனிடம் ஒரே ஒரு பலவீனம் இருக்கிறது. தான் எப்போதும் அழகாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பான். தன்னுடைய மஞ்சள் நிற மேனியைக் கண்டு பெருமிதம் கொள்ளும் குணம். ஆனால் எதிராளிக்குத் தீங்கு நினைக்கும் கீழ்த்தரமான எண்ணம் அவனுக்குக் கிடையாது. முக்கியமாக உன்னை உயிருக்கும் மேலாக விரும்புகிறான்.”

ஹேமா சற்று நிறுத்திவிட்டு மீண்டும் சொன்னான்.

“எந்த ஆனந்துக்காக நீ என்னைத் தொலைவில் வைத்திருக்கிறாயோ, அதே ஆனந்த் மூலமாய் நான் அந்த வீட்டிற்குள் நுழைந்திருக்கிறேன். வேடிக்கையாக இல்லை? நான் உன்னை விரும்புகிறேன் என்று ஆனந்த் புரிந்துகொள்ளும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். இதன் நடுவில் தாத்தாவும், அம்மாவும் வேறுவிதமாக யோசித்து வருகிறார்கள். இந்த நர்சிங்ஹோம் பிரஸ்தாபனை அம்மாவை ஈர்த்து விட்டது. ஆனந்தின் மகிழ்ச்சிக்காகத் தாத்தா எதை வேண்டுமானாலும் செய்வார் என்று அம்மாவுக்கு நன்றாகவே புரிந்து விட்டது. என் பிறந்த நாள் அன்று அவர் உயர்ந்த வைர மோதிரத்தைப் பரிசாகக் கொடுத்தார். அதைத் திருப்பி அனுப்பி விடச் சொல்லி அம்மாவிடம் நான் சொல்லி விட்டேன். ஆனால் அம்மா கேட்க மறுக்கிறாள். ‘அவசரப்படாதே பேபி. நன்றாக யோசித்துக் கொள்’ என்று சொல்கிறாள். மோதிரத்தைத் திருப்பி அனுப்பவில்லை என்றால் திருமணத்திற்கு நாங்கள் சம்மதித்து விட்டதாக தாத்தா நினைத்துக் கொள்வார். விஜய்! இத்தனை நேரமாய் நான் இத்தனை விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஒன்றுக்காவது பதில் சொல்லியிருகிறாயா? எதைப் பற்றியாவது உன் அபிப்பிராயத்தை வெளியிட்டு இருக்கிறாயா?” ஹேமா கேட்டாள்.

விஜயின் கைகள் மண்டபத்தில் விரிசல் விழுந்த இடத்தில் முளைத்திருந்த புற்களைப் பிடுங்கிக் கொண்டிருந்தன. ஏதோ யோசனையில் மூழ்கியிருந்தான். அவன் வாயைத் திறந்து எதையும் சொல்லாவிட்டாலும் அந்த மௌனமே அவளுக்குப் பதில் சொல்வதுபோல் இருந்தது. என்ன சொல்ல முடியும்? அவனுக்கு எல்லா விஷயங்களும் தெரியும். தன்னுடைய உடலில் உயிர் இருக்கும்வரை ஆனந்துக்கு வேதனை தரும் வேலையை விஜய் செய்ய மாட்டான். ஆனந்துக்காக எத்தனை கஷ்டங்களை வேண்டுமானாலும் கடினச் சிலையைப் போல் தாங்கிக்கொள்வான். விஜயை வெறுக்க வேண்டுமென்றும், அவனுடைய அலட்சியப் போக்கிற்குக் கோபித்துக்கொள்ள வேண்டுமென்றும் ஹேமா திடமாக முடிவு செய்து கொண்டாலும், அவனுடைய மறுபக்கம் புரிந்தபோது தவறு செய்யாதவனைத் தண்டிப்பது அநியாயம் என்று அவள் மனமே அவளுக்கு எதிராகப் போர்க்கொடியை உயர்த்தியது.

யாரையாவது உண்மையாகக் காதலித்தால் அந்தக் காதலில் சுயநலம் இருக்கக் கூடாது. விஜய் தன்னை விரும்புகிறான். ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏதோ ஒன்று தன்னை நெருங்க முடியாமல் அவனைத் தடுத்துக் கொண்டிருந்தது.

ஹேமாவுக்குப் புதிதாகப் பிரச்னை ஒன்று கிளம்பியிருந்தது. தீட்சிதர் தனக்கும் ஆனந்துக்கும் திருமண பிரஸ்தாபனை கொண்டு வந்ததோடு தன்னுடைய தாய்க்கு நர்சிங்ஹோமை இரையாக வைத்து தூண்டில் போட்டிருக்கிறார். மகளின் எதிர்காலத்தின் லட்சியம் நர்சிங்ஹோம் அமைப்பதுதான் என்று அந்த தாய் திடமாய் நம்பியிருந்தாள். ஆனந்த் ஆரோக்கியமாய், அழகாக இருக்கிறான். முக்கியமாக நல்லவன். தாத்தாவின் ஆதரவு வேறு இருக்கிறது. எந்த விதமான பொறுப்புகளும் இல்லாதவன். ஆனந்துக்கு ஹேமாவை ரொம்ப பிடித்திருக்கிறதென்று ஹரி தினமும் ராஜலக்ஷ்மியிடம் பாடம் போல் ஒப்பித்துக் கொண்டிருந்தான். இந்தப் பிரச்னையை எதிர்கொள்வதில் திடீரென்று தான் தனித்து விடப்பட்டதுபோல் ஹேமாவுக்குத் தோன்றியது. தன்னை நேசித்த விஜய் தனக்கு உறுதுணையாக நிற்க மறுக்கிறான். இதுநாள் வரை ஒரு சிநேகிதியைப் போல் தன்னுடைய பிரச்னைகளைக் கேட்டு தீர்வு சொல்லும் தாய் இன்று தீட்சிதர் பக்கம் சேர்ந்துகொண்டு அவர் சொல்வதுதான் சரி என்கிறாள். இந்தப் போராட்டத்தை அவள் தனியாக எதிர்கொள்ள வேண்டியதுதான்.

ஹேமா விஜயை சற்று கோபத்துடன் பார்த்தாள். பிறகு அவனை அழ வைப்பதற்காக, “அந்த ஆனந்தையே திருமணம் செய்துகொண்டு உன்மீது பகை சாதித்தால் என்ன என்று கூடத் தோன்றுகிறது” என்றாள்.

“அதைவிட மகிழ்ச்சியான விஷயம் எனக்கு வேறு இருக்க முடியாது” என்றான் விஜய்.

ஹேமா தோற்றுப் போய் விட்டதுபோல் பார்த்தாள். “மகிழ்ச்சியா? எதற்கு?”

“உன்னைப் போன்ற திறமைசாலி, நல்ல குணம் கொண்ட பெண் ஆனந்துக்கு மனைவியாக வந்தால் அவனைப்பற்றி இனி எனக்கு எந்தப் பயமும் இருக்காது. எந்தக் கவலையும் இல்லாமல் கிளம்பி விடுவேன்.”

“எங்கே?”

விஜய் பேசவில்லை. ஹேமாவுக்கு அவனுடைய சுபாவம் நன்றாகப் புரிந்து விட்டது. எதிராளிக்கு தான் புரிய வேண்டுமென்பதை விட புரியாமல் இருப்பதற்காகத்தான் அவன் முயற்சி செய்வான். அவன் மனதில் இருக்கும் எண்ணங்கள் அவனுக்கு மட்டுமே சொந்தம். எதிராளிக்கும் தனக்கும் நடுவில் மௌனம் என்ற இடைவெளியை ஏற்படுத்தி யாரும் அவனை நெருங்காமல் கவனமாக இருப்பான்.

ஹேமா ஆழமாய் மூச்சு விடுத்துக்கொண்டே சொன்னாள். “அதாவது என்னை விட ஆனந்தின் நலம்தான் உனக்கு முக்கியம். அப்படித்தானே. தாங்க்ஸ் விஜய்… இந்த விஷயத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதற்கு ஆனந்தும் நீயும் கிட்டத்தட்ட சமவயத்தில் இருப்பவர்கள். ஆனந்தைப் பார்த்துக் கொள்வதற்குப் பெரும்துணையாக அவனுடைய தாத்தா இருக்கிறார். நீ எதற்கு அவனை இப்படி நிழலைப் போல் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறாய்?”

“…”

“பதில் சொல்லு விஜய்.”

“…”

“ப்ளீஸ்!”

“நீங்கள் எல்லோரும் இப்பொழுதுதான் என் வாழ்க்கையில் வந்திருக்கிறீர்கள். இந்த உலகில் எனக்கு என்று ஒரு இடம் இல்லாதபோது ஆனந்தின் நட்பு எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. முக்கியமாய் நானும் ஒரு மனிதனாக வாழ்வதற்குப் பற்றுகோலாக இருந்தது. இது யாருக்கும் புரியாது. ஆனந்த்தான் எனக்குத் துணையாக இருக்கிறான். உடலைப் பொறுத்தவரை அவன் பலவீனமாக இருக்கலாம். ஆனால் தேவைப்பட்டால் எனக்காக இந்த உலகத்துடன் மட்டுமே இல்லை, அவனுடைய தாத்தாவுடன் சண்டை போடுவதற்குக் கூட அவன் தயங்க மாட்டான். எல்லோரும் நான் ஆனந்துக்கு உறுதுணையாக இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆனந்திடமிருந்துதான் எனக்கு அந்த சக்தி கிடைத்திருகிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனந்தின் மகிழ்ச்சிதான் எனக்கு முக்கியம். ஹேமா! உன் மனதில் இருப்பது என்னவென்று எனக்குத் தெரியும். வாழ்க்கையில் எனக்குச் சில தடைகள் இருக்கின்றன. அவற்றை மீறிக்கொண்டு என்னால் வாழ முடியாது. நீ தனித்தன்மை படைத்தவள். சுதந்திரமாய் இருப்பவள். எனக்காக உன் சுதந்திரத்தை, தனித்தன்மையை விட்டுக் கொடுக்கச் சொல்வது கொஞ்சம் கூட நியாயம் இல்லை. ஒரு முறை என் மனம் என் வசத்தில் இருக்கவில்லை. சுயநலம் என் கண்களை மறைத்து விட்டது. உன்னைத் திருமணம் செய்து கொண்டு எனக்கு என்று ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் அது எவ்வளவு தவறான யோசனை என்று எனக்கே புரிந்து விட்டது. உன்னைத் திருமணம் செய்து கொண்டு ஆனந்துக்கு வேதனையைத் தருவதை விட ஆனந்துக்கு அருகில் இருந்து உனக்கு வேதனையைத் தருவதுதான் உத்தமம் என்று தோன்றியது.”

“எனக்கு… எனக்கு வேதனை தருவது உனக்குச் சங்கடமாக, கஷ்டமாக இல்லையா?” தாழ்ந்த குரலில் கேட்டாள் ஹேமா.

“ஊஹும். வேதனை ஏற்பட்டால் என்ன விட்டுத் தொலைவாகப் போய்விடுவாய். இந்தப் புதைகுழியிலிருந்து விடுபடுவாய். நான் வேண்டுவதும் அதுதான்.” நிதானமான குரலில் சொன்னான் விஜய்.

ஹேமாவின் கண்களில் நீர் சுழன்றது. “விஜய்! உன்னை முழுவதுமாகப் புரிந்துகொள்ளும் போது உன்மீது விருப்பம் இன்னும் அதிகமாகிக்கொண்டே போகிறது. நம் இருவருக்கும் நடுவில் இருக்கும் இடைவெளி கூட புரிகிறது. விஜய்! நாமிருவரும் திருமணம் செய்து கொள்ளா விட்டாலும் சிநேகிதர்களாக இருக்கலாம் இல்லையா. நான் அந்த முடிவுக்குத்தான் வந்திருக்கிறேன். ஒருவரை நாம் மனப்பூர்வமாக நேசித்தால், அவர்களிடம்தான் நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்றால்… ஹூ கேர்ஸ் ஃபர் தி மேரேஜ்? திருமணம் செய்து கொள்ளாமலேயே நட்பை மட்டும் தொடர்ந்து கொண்டு ஒருவருக்காக ஒருவர் மௌன பந்தத்தில் கட்டுப்பட்டு வாழும் ஜோடிகள் எனக்குத் தெரியும். எனக்கு ஒன்று மட்டும் புரிகிறது விஜய். ஆனந்துக்கு நான் நெருக்கமானவளாக இருந்தால், உனக்கு அருகில் இருப்பதுபோல்தான். அதனால்தான் இந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கிறேன். அம்மாவையும், தாத்தாவையும் எதிர்கொள்ள வேண்டுமென்றால் ஆனந்துடன் நட்பாக இருப்பது ஒன்றுதான் வழி. விஜய்! நான் சொல்வது உனக்குப் புரிகிறது இல்லையா?” ஹேமா கேட்டாள்.

கிளம்புவதற்காக எழுந்து கொண்ட விஜய் ஹேமாவின் காலடியில் கீழ் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டான். ஹேமா பக்கம் திரும்பி அவள் கண்களுக்குள் எதையோ தேடுவதுபோல் பார்த்தான். ஹேமா கண் இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரையும் நிலா மௌனமாய் கவனித்துக் கொண்டிருந்தது.

விஜயின் குரல் மென்மையாக ஒலித்தது. “ஹேமா! எனக்குப் புரிகிறது. ஆனால்… வேண்டாம். இந்த வேலையை நீ செய்யாதே. பிறகு ரொம்ப வேதனைப்பட வேண்டியிருக்கும். ஆனந்த் பற்றி உனக்கு முழுவதுமாகத் தெரியாது. அவன் நல்லவனாக இருப்பது ஓரளவுக்குத்தான். அவனுக்கு ஏமாற்றம் ஏற்பட்டால் அடிபட்ட புலியாகி விடுவான். நல்லது கெட்டதைப் பார்க்க மாட்டான். உன்னை நான் காப்பாற்ற முடியாத சூழ்நிலையை உருவாக்கி விடாதே. அதை என்னால் தாங்க முடியாது.”

ஹேமா நிலவொளியில் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் கண்களில் தன்னைப் பற்றிய கடமை உணர்வு தெரிந்தது. பண்பு நிறைந்த இந்த மனிதனுக்காக எத்தனை ஜென்மங்கள் வேண்டுமானாலும் தன்னால் காத்திருக்க முடியும்.

“இனி கிளம்புவோமா. நேரமாகி விட்டது.” விஜய் எழுந்துகொண்டே சொன்னான்.

ஹேமா கையை நீட்டினாள்.

அவனையும் அறியாமல் அவன் கை நீண்டு வந்து மறுபடியும் பின்னால் போகப் போனது.

ஹேமா சட்டென்று விஜயின் கையைப் பற்றிக்கொண்டு எழுந்தாள். இருவரும் நிலா வெளிச்சத்தில் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

விஜய் ஹேமாவின் கையை விடுவித்துக்கொள்ளவில்லை. கடைசி படியை இறங்கும்போது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மனதில் ஏதோ நிறைவு ஏற்பட்டது போல் இருவரின் முகமும் ஒளி வீசிக் கொண்டிருந்தன. ஹேமாவும் விஜயும் வீட்டுக்கு வந்தபோது தீட்சிதர் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு ஹாலில் வேக வேகமாய் நடைபெயின்று கொண்டிருந்தார்.

“தாத்தா! நீங்க வந்து விட்டீர்களா?” ஹேமா விசாரித்தாள். “ஹாஸ்பிடலில் இன்னிக்கு எனக்கு ட்யூட்டி இல்லை. எனக்குப் பொழுதே போகவில்லை. ஹரியோடு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டேன். ஆனந்த் இல்லை. நீங்களும் இருக்கவில்லை. லக்ஷ்மி கோவிலுக்குப் போகிறேன் என்றதும் அவளுடன் கோவிலுக்குப் போய் விட்டேன். அங்கே விஜய் தென்பட்டான்” என்றாள்.

“லக்ஷ்மி எல்லா விவரங்களையும் சொல்லி விட்டாள்” என்றார் தீட்சிதர். தேன் தடவியது போல் புன்முறுவல் மலர்ந்த இதழ்களுடன் ஹேமாவுடன் பேசிக் கொண்டிருந்தாலும், அவருடைய பார்வை கத்தியைப் போல் கூர்மையாய் விஜயைப் பார்த்துக் கொண்டிருந்தன.

ஹேமாவும், விஜயும் சேர்ந்து வருவதைப் பார்த்தபோது அவர் இதயத்தில் யாரோ தீ மூட்டியது போல் இருந்தது.

அதற்குள் ஆனந்த் வந்தான்.

“ஹேமா! எப்போ வந்தாய்?” ஹேமாவைப் பார்த்ததும் அருகில் சென்றான். “ரொம்ப நேரமாகி விட்டது.”

“ரொம்ப நேரமாகி விட்டதா?” ஆனந்த் நொந்து கொள்வதுபோல் பார்த்தான். விஜயைப் பார்த்து, “விஜய்! ஹேமாவைத் தனியாக விட்டு விட்டாயா?” தோட்டதிற்காவது அழைத்துச் சென்றிருக்கக் கூடாதா?” என்று கேட்டான்.

“லக்ஷ்மி! ஹேமாவுக்கு சாப்பிட ஏதாவது கொடுத்தாயா?” லக்ஷ்மியை விரட்டினான்.

விஜய் ஆனந்தையே பார்த்துக் கொண்டிருந்தான். இதுவரையில் எப்பொழுதும் காணாத உற்சாகமும், மகிழ்ச்சியும் ஆனந்திடம் தென்பட்டுக் கொண்டிருந்தன. அவனால் ரொம்ப நேரம் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. சேர்ந்தாற்போல் ஒரு இடத்தில் அவனால் உட்கார்ந்து கொள்ள முடியவில்லை. பரபரவென்று அலைந்து கொண்டிருந்தான். பார்ப்பவர்களின் கண்களுக்கு அது இளமையின் துள்ளல்போல் தெரியும்.

ஹேமாவுக்குப் பிடிக்குமென்று எண்ணெய் கத்தரிக்காய் கறியைத் தயாரிக்கச் சொல்லி ஆனந்த் லக்ஷ்மியிடம் ஆணையிட்டான்.

ஒரு மணி நேரம் கழித்து எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து கொண்டார்கள். ஆனந்த் விருப்பபட்டான் என்று டின்னர் செட், டைனிங் டேபிள் எல்லாம் எப்பொழுதோ வாங்கியிருந்தார் தீட்சிதர். ஆனந்த் சுயமாய் உணவு மேஜை மீது எல்லாவற்றையும் எடுத்து வைத்தான். உதவிக்கு வரப்போன விஜயை, “ஹேமாவுடன் பேசிக் கொண்டிரு” என்று பிடித்துத் தள்ளி விட்டான். ஹரி வழக்கம்போல் மிடுக்காக அங்கேயும் இங்கேயும் சுற்றிக் கொண்டிருந்தான். நடுநடுவில் தீட்சிதரிடம் சென்று விஜய் பற்றி ஏதாவது கோள் மூட்டிக் கொண்டு அவருக்குத் திருப்தி ஏற்படும் விதமாக நடந்து கொண்டிருந்தான்.

எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து கொண்டார்கள்.

தீட்சிதரையும் வரச் சொன்னான் ஆனந்த். “நான் எதுக்கு ஆனந்த்? ஏதோ கொஞ்சம் பலகாரம் சாபிடுகிறவன். விஜய்க்கும் இப்போ பசியாக இல்லையோ என்னவோ. தோட்டத்திற்குச் சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜுகளை எடுக்கச் சொல்லியிருக்கிறேன். ஹரி, நீ, ஹேமா மூவரும் சேர்ந்து சாப்பிடுங்கள்” என்றார்.

விஜய் தஸ்தாவேஜுகள் வைத்திருந்த அலமாரி பக்கம் போகப் போனான்.

ஆனந்த் அவனைத் தடுத்துக்கொண்டே, “அதெல்லாம் ஒன்றும் நடக்காது. எல்லோரும் சேர்ந்து ஜாலியாகப் பேசிக்கொண்டே சாப்பிடலாம். விஜய்! இப்படி வா. லக்ஷ்மி! தாத்தாவுக்குப் பலகாரத்தை எடுத்துக்கொண்டு வா” என்றான்.

ஹேமாவுக்குப் பக்கத்தில் விஜயை உட்காரவைத்து எதிர்பக்கம் அமர்ந்து கொண்டான் ஆனந்த். சாப்பிடும்போது ஆனந்த் ஹேமாவுக்கு வற்புறுத்தி மேலும் மேலும் பரிமாறச் செய்தான். ஹேமா விஜயின் தட்டில் பொரியல், கூட்டு, சாம்பார் முதலியவற்றை அதிகமாகப் பரிமாறினாள்.

“உன்னுடைய நண்பன் பேசவே மாட்டானா ஆனந்த்?” திடீரென்று ஹேமா கேட்டாள்.

“அவன் பேச வேண்டியதையும் சேர்த்து நானே பேசி விடுகிறேன் இல்லையா. அதான்.” ஆனந்த் பதிலளித்தான்.

“உங்களுடைய நட்பை பார்க்கும்போது எனக்குப் பொறாமையாக இருக்கிறது. இப்படி ஒருவரை ஒருவர் உயிருக்கும் மேலாக நேசிப்பவர்களை நான் பார்த்ததே இல்லை.”

“நீ நினைக்கும் அளவுக்கு ஒற்றுமை ஒன்றும் இல்லை. எங்களுக்கு நடுவில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.” ஆனந்த் சொன்னான்.

“கருத்து வேறுபாடா?” ஹேமா வியப்புடன் பார்த்தாள்.

“ஆமாம். விஜயைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தி வருகிறேன். என் பேச்சைக் கேட்க மறுக்கிறான்.”

“ஆசாரி மாமா சொன்ன சம்பந்தம் ஒன்று ரெடியாக இருக்கு.” ஹரி சொன்னான்.

“விஜய் மட்டும் ஊம் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும். நாளைக்கே நிச்சயதார்த்தம் முடிந்து விடும். பெண் நன்றாகப் படித்திருக்கிறாள். ஒரே பெண். தந்தை பெரிய இன்ஜினியர். சொத்தும் நிறைய இருக்கிறது. அவர்கள் விஜயை வீட்டோடு மாப்பிள்ளையாக வரச் சொல்லிக் கேட்கிறார்கள்” என்றார் தீட்சிதர்.

ஹேமா கடைக்கண்ணால் விஜய் பக்கம் பார்த்தாள்.

விஜய் கர்ம சிரத்தையாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“தாத்தா! உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்? உனக்கு விருப்பமான பெண்ணை விஜய் செய்துகொள்ள மாட்டான். விஜய் விருப்பப்பட்ட பெண்ணை நீ ஏற்றுக்கொண்டு மறுபேச்சு பேசாமல் திருமணத்தை முடிக்க வேண்டும்.”

“ஏதோ ஒன்று. விஜய் சீக்கிரமாய் முடிவு செய்வது நல்லது. அவரார்களுக்கு மனைவி, மக்கள், வீடு வாசல், சொந்த சம்பாத்தியம் என்று இருப்பது நல்லது” என்றான் ஹரி.

ஹேமாவுக்குத் தயிரைப் பரிமாறிக் கொண்டிருந்த ஆனந்த் சட்டென்று திரும்பி ஹரியின் பக்கம் பார்த்தான். அவன் கண்கள் அக்னியைப் போல் ஜொலித்துக் கொண்டிருந்தன.

“ஹரி! திருமணத்தைத் தவிர விஜய்க்கு வீடுவாசல், சொந்த சம்பாத்தியம் எல்லாமே இருக்கின்றன. அப்படிப் பார்த்தால் நீ சொன்ன அறிவுரை எனக்கும் பொருந்தும். விஜய் உழைத்துச் சம்பாதிப்பதை உட்கார்ந்து சாப்பிடுகிறேன் என்று என்னைக் குத்திக் காண்பிக்கிறாயா?”

“அய்யய்யோ! அப்படியெல்லாம் என்றுமில்லை ஆனந்த்!” ஹரி இடக்கையால் கன்னத்தில் போட்டுக் கொண்டான்.

“இனி ஒரு நாளும் இது போன்ற தேவையற்ற அறிவுரைகளை வழங்காதே. பேசுவதற்கு முன்பு யாரோடு பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்று நினைவில் வைத்துக்கொண்டு பேசு.”

“ஹரி இப்போ எதுவும் சொல்லி விடவில்லை ஆனந்த்.” தீட்சிதர் சமாளிக்க முயன்றார்.

ஹேமா ஆனந்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். விஜயை யாராவது ஏதாவது சொன்னால் ஆனந்த் பொறுத்துக்கொள்ள மாட்டான் புரிந்தது.

சாப்பாடு முடிந்ததும் தீட்சிதர் ஹேமாவை இறக்கி விட்டு வரச்சொல்லி ஆனந்திடம் சொன்னார். ஹரியையும் கூடப் போகச் சொன்னார். ஆனந்த் காரின் சாவியை எடுத்து வந்து பேப்பரைப் பார்த்துக்கொண்டிருந்த விஜயின் கைகளில் வைத்தான். “வா விஜய்! இருவருமாகச் சேர்ந்து போய் ஹேமாவை இறக்கி விட்டு வருவோம்” என்றான்.

“பகல் முழுவதும் வேலை செய்து விஜய் களைத்துப் போயிருப்பான். கொஞ்சம் ஒய்வு எடுத்துக் கொள்ளட்டும்” என்றார் தீட்சிதர்.

“விஜய்க்கு எப்போ ரெஸ்ட் கொடுக்க வேண்டுமென்று எனக்கு நன்றாகத் தெரியும் தாத்தா. வேண்டுமானால் நீ ஓய்வு எடுத்துக்கொள். வா ஹேமா” என்றான் ஆனந்த்.

விஜய் காரை கேரேஜிலிருந்து வெளியில் எடுத்தான். டிரைவிங் சீட்டிலிருந்து இறங்கப் போனவனை ஆனந்த் தடுத்தான்.

“ஹேமா! வாங்க” என்று விஜய் பக்கத்தில் அமரச் சொன்னான்.

ஹேமா வந்து உட்கார்ந்து கொண்டாள்.

“குண்டும் குழியுமாய் இருக்கும் இந்தச் சாலையில் என்னைவிட விஜய் நன்றாக டிரைவ் செய்வான். நான் காரை ஓட்டினால், வீட்டுக்குப் போனதும் நீங்க உடல் வலிக்கு மருந்தை சாப்பிட வேண்டியிருக்கும்” என்று சொல்லிக்கொண்டே ஹேமாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். அவனுக்கு இடம் கொடுப்பதற்காக ஹேமா மேலும் விஜய் பக்கம் நகர்ந்து கொண்டாள்.

கார் கிளம்புபோது ஆனந்தும், ஹேமாவும் தீட்சிதரைப் பார்த்துக் கையை அசைத்தார்கள். பின் சீட்டில் உட்கார்ந்திருந்த ஹரி, “தாத்தா! நான் காலையில் பஸ்ஸில் வந்து விடுகிறேன். நேராகத் தோட்டத்திற்கு போய் விடுகிறேன்” என்று விடைபெற்றுக் கொண்டான்.

அவரும் சரி என்பதுபோல் தலையை அசைத்தார்.

கார் கிளம்பி விட்டது. தீட்சிதரின் கண்களுக்கு முன்னால் விஜயின் தோளில் இடித்துக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக ஹேமா உட்கார்ந்திருக்கும் காட்சி நிழலாடியது. முட்கள் மீது உட்கார்ந்திருப்பது போல் இருந்தது அவருக்கு. ஆனந்தைத் தேடி வந்தவர்கள் விஜயைப் பார்த்ததும் அவனை மாப்பிள்ளையாக்கிக் கொள்ள நினைத்தது நினைவுக்கு வந்தது. ஹேமா விஷயத்திலும் அப்படி நடக்கப் போகிறதோ என்ற அச்சம் தோன்றியது. இந்த முறை அவர் பிடிவாதமாக இருந்தார். ஹேமா ஆனந்தின் மனைவி ஆவதை யாராலும் தடுக்க முடியாது. தேவைப்பட்டால் எதை செய்யவும் அவர் தயாராக இருந்தார்.

அத்தியாயம்-21

இரண்டு மாதங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன.

ராஜலக்ஷ்மியின் சித்தப்பா, ப்ளூ ஸ்டார் ஹோட்டல் முதலாளியான ராகவன் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போய் விட்டார். அவருடைய மகன்கள் ஏற்கனவே அமெரிக்காவில் செட்டில் ஆகியிருந்தார்கள். தனியாக இருக்கும் தாயைத் தங்களுடன் அழைத்துப் போக விரும்புவதால் ஹோட்டலை விற்று விடலாம் என்று முடிவு செய்து நாளேடுகளில் விளம்பரம் செய்தார்கள். ராஜலக்ஷ்மியும், தீட்சிதரும் அந்த ஹோட்டலைப் பார்த்து விட்டு வந்தார்கள். நர்சிஹோமாக மாற்றுவதற்கு ஏற்ற கட்டடம் என்று தீர்மானித்து அதை வாங்க வேண்டுமென்று முடிவு செய்தார்கள். இரண்டு லட்ச ரூபாய்கள் குறைவாகக் கொடுத்தாலும் மொத்த பணத்தைக் காஷ் ஆக கொடுக்க வேண்டுமென்று ஹோட்டலை விற்பவர்கள் சொல்லி விட்டார்கள். ராஜலக்ஷ்மி தன்னால் பதினைந்து லட்சம் வரை தர முடியும் என்றும் மீதி முப்பத்தி ஐந்து லட்சத்தை ஏற்பாடு செய்து தரச்சொல்லி தீட்சிதரிடம் கேட்டுக் கொண்டாள். முழு பணத்தை தானே தருவதாகவும், ஹேமாவுக்கும் ஆனந்துக்கும் நிச்சியதார்தத்தை முடித்து விடச் சொல்லி தீட்சிதர் சொன்னார். ராஜலக்ஷ்மி ஹேமாவை வற்புறுத்துவது போல் சொன்னாள்.

“ஹேமா! ஆனந்திடம் எனக்கு எந்தக் குறையும் தென்படவில்லை. உங்கள் இருவரின் ஜோடி பொருத்தமும் நன்றாகத்தான் இருக்கிறது. நீ கொஞ்சம் கவனமாக இருந்தால் அவனுடைய ஆஸ்துமாவும் கண்ட்ரோலில் இருக்கும். திருமணம் ஆன பிறகு இதைவிட பெரிய நோய் ஏதாவது வந்தால் நம்மால் என்ன செய்ய முடியும்?’ நர்சிங்ஹோம் என்பது உன் வாழ்க்கையின் லட்சியம். இத்தனை சின்ன வயதில் நல்ல எதிர்காலம் அமைகிறது என்றால் அது உன்னுடைய அதிர்ஷ்டம்தான். நான் நிச்சயதார்த்ததிற்கு நாள் பார்க்கட்டுமா?’

“மம்மி! எனக்குக் கொஞ்சம் அவகாசம் வேண்டும்.” மெடிகல் ஜர்னலைப் படித்துக் கொண்டிருந்த ஹேமா தலையைத் திருப்பாமலேயே சொன்னாள். ராஜலக்ஷ்மி வந்து ஹேமாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். மகளின் கைகளிலிருந்து புத்தகத்தைப் பிடுங்கி மேஜைமீது போட்டு விட்டு, “பேபி! உன்னை எப்போதும் எந்த விஷயத்திலும் வற்புறுத்தியதில்லை. அப்படித்தானே?” என்றாள்.

“ஆமாம். தாங்க்ஸ் மம்மி” என்றாள்.ஹேமா.

ராஜலக்ஷ்மி சீரியஸாகப் பார்த்துக்கொண்டே, “ஆனந்த் விஷயத்தில் உன்னைக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கச் சொல்கிறேன். நல்ல எதிர்காலம் அமைய வேண்டுமென்றால் சின்ன விருப்பங்களைத் தியாகம் செய்துதான் ஆக வேண்டும்” என்றாள்.

“ஆமாம் மம்மி. அத்தனை பெரிய அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டுமென்றால் இந்த சின்ன உயிரைத் தியாகம் செய்ய வேண்டும். அப்படித்தானே.” குறும்பாகப் பார்த்துக்கொண்டே சொன்னாள்.

ராஜலக்ஷ்மியால் பதில் சொல்ல முடியவில்லை. “பேபி! என் பேச்சை நீ மறுக்கக் கூடாது.”

“நான் நன்றாக யோசித்துதான் சொல்கிறேன். மம்மி! நர்சிங்ஹோமை நிறுவுவது என்னுடைய வாழ்க்கையின் லட்சியம். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் மற்றவர்கள் கொடுக்கும் பிச்சையில் அது உருவாகக் கூடாது. என்னுடைய சொந்த முயற்சியால் அந்தக் கனவு நிறைவேற வேண்டும்.”

“அப்படிப் பார்த்தால் அதுவும் உன்னுடையதுதான். தீட்சிதர் சொத்தையும், ஆனந்தையும் உன்னிடம் ஒப்படைப்பதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறார்.

“மம்மி! எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. ஆனந்தை நான் திருமணம் செய்து கொள்வது அவனுக்கு மனைவியாக இருப்பதற்காகவா இல்லை அவனுடைய சொத்தைக் காவல் காப்பதற்காகவா?”

“ஹேமா! விதண்டாவாதம் செய்து உரையாடலைத் திசை திருப்பி விடுகிறாய்.” “உன்னால் பதில் சொல்ல முடியாதபோது இப்படித்தான் கோபித்துக் கொள்வாய்” என்றாள் ஹேமா.

ராஜலக்ஷ்மியால் பதில் சொல்ல முடியவில்லை.

“நர்சிங்ஹோம் நிறுவுவதில் உனக்கு விருப்பம் இருக்க இல்லையா?”

“அவர்களுடைய பணத்தில் வேண்டாம்.”

“போகட்டும். ஆனந்தின் திருமணம்?”

“ஆனந்தைத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று என் பிறந்தநாள் அன்றே சொல்லி விட்டேன் நீ தான் வைர மோதிரத்தைத் திருப்பிக் கொடுக்காமல் இருக்கிறாய்.”

“திருமணம் செய்து கொள்ளாமல் இப்படியே இருந்து விடப் போகிறாயா?” ராஜலக்ஷ்மி கோபமாகச் சொன்னாள்.

“தேரியாது. இப்போ நான் அந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இல்லை.”

“பேபி! அம்மா சொன்ன பேச்சை நீ கேட்டுத்தான் ஆகவேண்டும்.” குரலை உயர்த்தினாள் ராஜலக்ஷ்மி.

ஹேமா தோள்களைக் குலுக்கிக் கொண்டாள். “எந்த விஷயத்திலும் சொந்தமாக யோசித்து முடிவு செய்ய வேண்டும் என்று சின்ன வயதிலிருந்து சொல்லிக் கொடுத்தது நீதான்.” ஹேமா அங்கிருந்து போய் விட்டாள்.

ராஜலக்ஷ்மி தலையைப் பிடித்துக் கொண்டாள். ஹேமாவுக்காக அந்த அம்மாள் நிறைய வரன்களைப் பார்த்தாள். டாக்டர்கள்… லாயர்கள்… வயாபரத்தில் கொடி கட்டி பறந்துகொண்டு இருப்பவர்கள்… பெரிய பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்… ஆனால் ஹேமாவுக்கு ஆனந்த் கணவனாக வந்தால் அவளுக்கு முழு சுதந்திரம் இருக்கும். முக்கியமாக ஆனந்துக்குப் பின்னால் இருக்கும் சொத்து! ஹேமாவின் எதிர்காலம் தங்க தாம்பாளத்தில் வைத்ததுபோல் இருக்கும். ஹேமாவுக்கு இது புரியவில்லை. இந்த வயதில் இது சகஜம்தான். ராஜலக்ஷ்மி யோசித்தாள். நிச்சயதார்த்தத்தைச் சில மாதங்கள் தள்ளிப் போட முடிந்தால் நன்றாக இருக்கும். தீட்சிதருக்கு நயமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அது ஒன்றும் கஷ்டமாகத் தோன்றவில்லை. ஹேமாவை மருமகளாக்கிக் கொள்ள வேண்டுமென்று அவர் ரொம்ப தீவிரமாக இருக்கிறார். ராஜலக்ஷ்மி தன்னுடைய மைத்துனரும், லாயரும் ஆன ஹரிச்சந்திராவுக்குப் போன் செய்தாள்.

“சின்ன பிரச்னை. நேரில் வந்து பேசிக் கொள்கிறேன்.” ராஜலக்ஷ்மி சொன்னாள்.

– தொடரும்…

– மௌனராகம் (நாவல்), தெலுங்கு: யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில்: கௌரி கிருபானந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *