(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21
அத்தியாயம்-16
நான்கு நாட்கள் கழித்து…
ஆனந்த் அன்றுதான் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகப் போகிறான். தீட்சிதரும், ஹரியும் அறையில் இருந்தார்கள். விஜய் போய் பில்லை செட்டில் செய்து விட்டு வந்தான்.
“கிளம்புவோமா?” விஜய் கேட்டான்.
“ஒரு நிமிடம்” என்றார் தீட்சிதர்.
“தாத்தா! டாக்டர் ஹேமாவிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போகலாம்.” ஆனந்த் சொன்னான்.
“எனக்கும் அதுதான் மரியாதை என்று தோன்றுகிறது” என்றார் தீட்சிதர். பிறகு விஜய் பக்கம் திரும்பி, “விஜய்! டாக்டர் ஹேமா எங்கே இருக்கிறாள் என்று பார்த்து விட்டு ஒருமுறை இங்கே வரச் சொல்லி சொல்லு.” ஆணையிடுவது போல் சொன்னார்.
“டாக்டரை அப்படி அழைப்பது மரியாதையாக இருக்காதோ என்னவோ.” விஜய் சொன்னான்.
“நன்றாகச் சொன்னாய் போ ஹேமா இங்கே டாக்டராக இருப்பது உண்மைதான் என்றாலும் என்னுடைய தங்கையும் கூட. ஆனந்த் என்னுடைய நண்பன். நான் போய் அழைத்து வருகிறேன்.” சொல்லிக்கொண்டே ஹரி வெளியில் சென்றான்.
பத்து நிமிடங்களுக்குள் ஹேமா வந்தாள்.
“ஹலோ ஆனந்த்! ஃபீலிங் பெட்டர்?” ஆனந்தைக் குசலம் விசாரித்துக்கொண்டே நேராக அவனருகில் சென்றாள்.
“தாங்க்யூ டாக்டர்.” ஆதரவுடன் ஒலித்த ஹேமாவின் குரலைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தான் ஆனந்த்.
“நேரம் தவறாமல் மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.” சுட்டு விரலை உயர்த்தி மிரட்டுவது போல் சொன்னாள்.
“அதோ எங்கள் விஜய்! நான் மருந்தைச் சாப்பிடவில்லை என்றால் சும்மா இருப்பானா?” என்றான்.
“அம்மா ஹேமா! ஒரு தடவை வந்து உங்க அம்மாவைப் பார்க்க வேண்டும். ஹரியை அழைத்துக்கொண்டு வருகிறேன்.” தீட்சிதர் சொன்னார். ஆனந்தின் கையைப் பிடித்துக்கொண்டு நாடியைப் பரிசீலித்துக் கொண்டிருந்த ஹேமாவைப் பார்க்கும்போது அவர் கண்களுக்கு நிறைவாக இருந்தது.
“ஓ… கட்டாயம் வாங்க” என்றாள் ஹேமா.
“டாக்டர்! நீங்களும் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும். எங்களுக்குத் தோட்டம் ஒன்று இருக்கிறது. அதைப் பார்த்தால் தவிர விஜய் பற்றி உங்களுக்குப் புரியாது.’
“அப்படியா!” ஹேமா விஜய் பக்கம் பார்த்தாள்.
விஜய் ஆனந்தின் மருந்துகளைக் கவனமாகப் பரிசீலித்துக் கொண்டிருந்தான். தீட்சிதருக்கு ஆனந்த் இப்படி விஜய் பற்றிச் சொல்லி ஹேமாவின் கவனத்தை அவன் பக்கம் திருப்பியது பிடிக்கவில்லை.
“நீயும் கட்டாயம் ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வர வேண்டும். ஹரி! ஹேமாவையும், அம்மாவையும் அழைத்துக்கொண்டு வருவது உன் பொறுப்பு” என்றார்.
“அப்படியே செய்கிறேன் தாத்தா. எனக்கும் அந்தத் தோட்டம் என்றால் ரொம்ப பிடிக்கும். ஹேமா! நீ ஒரு தடவை பார்த்தால் விடவே மாட்டாய். எத்தனை விதமான மலர்கள் இருக்கும் தெரியுமா?” ஹரி சொன்னான்.
ஹேமா ஆனந்த் போட்டுக்கொள்ள வேண்டிய மருந்துகளைப் பற்றி, எடுத்துக்கொள்ள வேண்டிய ஜாக்கிரதைகளைப் பற்றி மற்றொருமுறை சொன்னாள். “போய் வருகிறோம் டாக்டர்” என்றான் ஆனந்த்.
“ஊஹும். ஆஸ்பத்திரியை விட்டு வெளியில் போகும் போது அப்படிச் சொல்லக் கூடாது. போகிறோம் என்று சொல்ல வேண்டும்”. ஹேமா புன்முறுவலுடன் சொன்னாள்.
“சரியாகச் சொன்னாய் அம்மா” என்றார் தீட்சிதர். “இதோ பாரும்மா. உன்னைப் பார்த்த வேளை ரொம்ப யோகமான வேளையாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனந்தின் உடல் நல விஷயத்தில் இப்போ எனக்குக் கொஞ்சம் தைரியம் வந்து விட்டது. நமக்குத் தெரிந்த பெண் டாக்டராக, அதுவும் இவ்வளவு அருகில் இருக்கிறாள் என்றால் மனதிற்கு கொஞ்சம் தெம்புதானே. ஆனந்துக்குத் திடீர் திடீர் என்று இந்த நோய் உயிருக்கு ஆபத்தாகி விடும் அளவுக்குக் கொண்டு போய் விடுகிறது. நான் அம்மாவை வந்து பார்க்கிறேன். ஹரியை அழைத்துக்கொண் வருகிறேன். ஹரி இப்போ உன்னுடைய அண்ணன் மட்டுமே இல்லை. எங்களுடைய மேனேஜரும் கூட” என்றார்.
“தாத்தா!” என்றான் ஆனந்த்.
“ஆமாண்டா கண்ணா! விஜய்க்குக் கொஞ்சம் கூட ஓய்வு இல்லாமல் எப்போதும் வேலைதான். விஜய்க்கு ஒத்தாசையாக யாராவது இருந்தால் தேவலை என்று நீயும் ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டிருந்தாய் இல்லையா. ஹரியும் வேலைக்காகத் தேடி வருகிறான். எல்லா வேலைகளும் தெரியும். மோட்டார் சைக்கிள் ஒட்டுவான். மில்லுக்கும், தோட்டத்திற்கும் தினமும் போய் வருவான். நம் மனிதர்களைச் சேர்ந்த பையன். அவனுக்கு நல்ல வேலை கிடைக்கும் வரை நாம் உதவி செய்தது போல் இருக்கும். நம் விஜய்க்கும் ஓய்வு கிடைத்தாற்போல் இருக்கும்.”
“ஆமாம் ஆனந்த். நானும் தாத்தாவும் நேற்றுதான் இந்த முடிவுக்கு வந்தோம்,” ஹரி மகிழ்ச்சியுடன் சொன்னான்.
“விஜய்க்குத் தெரியுமா?” ஆனந்த் கேட்டான்.
“விஜய்க்குத் தெரியாமல் நம் வீட்டில் துரும்பாவது அசையுமா அனூ. முதலில் விஜயிடம்தான் சொன்னேன். ஹரி நம்பிக்கையானவன் எனக்கும் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் என்று சொன்னான்.”
தீட்சிதர் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று யோசிப்பது போல் ஆனந்த் விஜய் பக்கம் பார்த்தான். விஜய் பில்களை மடித்துச் சட்டைப் பயில் வைத்துக் கொண்டிருந்தான்.
அதற்குள் ஹேமா, “எங்க ஹரி உங்களைப் போன்ற பெரியவர்களின் கீழே இருந்தால் நல்லதுதான். எங்க சித்தி ரொம்ப சந்தோஷப்படுவாள்.” மகிழ்ச்சியுடன் சொன்னாள்.
ஹேமா இப்படிச் சொன்னதும் ஆனந்தின் முகம் மலர்ந்தது.
“டாக்டர்! நீங்க எப்போ எங்க வீட்டுக்கு வரப் போறீங்க? சொல்லுங்க” என்றான் ஆனந்த்.
“ஹரி எப்போ அழைத்து வருகிறானோ அப்போ” என்றார் தீட்சிதர்.
ஹேமா புன்முறுவலுடன், “இந்த நர்சிங்ஹோம் நடத்துகிற ரமாதேவி என்பவள் என்னுடைய சிநேகிதியின் தாய். அவள் இப்போ வெளிநாட்டுக்குப் போயிருக்கிறாள். அடுத்த வாரம் வருவாள். அதுவரையில் இந்த ஆஸ்பத்திரியைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு என்னுடையது. எப்போ வருகிறேன் என்று முன்கூட்டியே தகவல் தெரிவிக்கிறேன்.” ஹேமா சொன்னாள்.
விஜய் தலையை உயர்த்தவில்லை. அவர்களுடைய உரையாடலுடன் தனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல் ஆனந்தின் பொருட்களைப் பேக்கில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தான்.
“வருகிறேன்.” ஹேமா எல்லோருக்கும் பொதுவாகச் சொல்லி விட்டு விஜய் பக்கம் திரும்பி மௌனமாக நின்றாள்.
ஆனந்த் சொன்னான். “விஜய்! டாக்டர் ஹேமா கிளம்புகிறாள்.”
விஜய் தலையை உயர்த்தினான்.
“வருகிறேன்.” ஹேமா தெளிவில்லாமல் சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடந்தாள். தீட்சிதர் அவளை வழியனுப்புவது போல் கூட நடந்தார்.
“விஜய்!” ஆனந்த் அழைத்தான். விஜய் அருகில் வந்தான்.
ஆனந்த் விஜய் பக்கம் பார்த்து முகவாயைச் சுட்டிக் காட்டிக்கொண்டே, “ஷேவ்
செய்து கொள்ளாததால் கரடியைப் போல் தென்படுகிறேனா என்ன?” என்று கேட்டான்.
“இல்லை.” விஜய் சொன்னான்.
“ஹேமாவைப் பார்க்கும்போது தேவதைப் போல் இருக்கிறாள் இல்லையா?” ஆனந்த் கேட்டான்.
விஜய் பதில் பேசவில்லை.
“தாத்தா ஹரியை மேனேஜராக வைத்துக் கொண்டிருக்கிறாராமே?”
விஜய் ஆமாம் என்பது போல் தலையை அசைத்தான்.
“ஒருமுறை இங்கே வா.” ஆனந்த் அழைத்தான்.
விஜய் மேலும் அருகில் வந்தான். ஆனந்த் தலையை விஜயின் வயிற்றின் மீது சாய்த்துக்கொண்டு கண்களை மூடிக் கொண்டான். “என் தலை மீது உன் கையை வைத்துக்கொள்.” வேண்டுவது போல் சொன்னான் ஆனந்த். விஜய் அப்படியே செய்தான்.
“விஜய்! இப்போ நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா? புதிதாக மறுபடியும் பிறவி எடுத்து இந்த உலகில் காலடி எடுத்து வைத்ததுபோல் தோன்றுகிறது. எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு நித்யமும் நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் எங்களைப் போன்றவர்களின் வேதனை புரியாதோ என்னவோ? ஒவ்வொரு முறையும் ஆஸ்பத்திரியை விட்டு வெளியில் வரும்போது எனக்கு இந்த உலகம் நூறு மடங்கு அழகாகத் தெரியும். இப்போ… இப்போ ஆயிரம் மடங்கு அழகாக இருப்பது போல் தோன்றுகிறது. விஜய்! நான் மட்டும் ஏன் இப்படி உடல் நலம் சரியில்லாதவனாய் இருக்கிறேன்? ஒரேதிரியாய் உயிர் போனாலும் பரவாயில்லை. இந்த நரகத்தை, வேதனையை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை.”
விஜய் ஆனந்தின் தலை மீது கையை வைத்தான். அந்த நிமிடம் ஆனந்த் அவன் கண்களுக்கு ஒரு குழந்தையைப் போல் தோன்றினான்.
“அனூ! கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான வேதனையைத் தருவார். வேதனையே இல்லாத வாழ்க்கை இருக்காது.”
அதற்குள் தீட்சிதரும் ஹரியும் வந்தார்கள்.
விஜய் ஆனந்தின் தலையைக் கோதிக் கொண்டிருக்கும் காட்சி அவர்கள் கண்ணில் பட்டது. தீட்சிதர் பற்களை இறுக கடித்துக்கொண்டு தாழ்ந்த குரலில், “ஹரி! பார்த்தாயா. என்னவோ எல்லோரையும் விட தான் ஒருத்தன்தான் ஆனந்துக்கு நெருக்கமானவன் என்பதுபோல் நடந்து கொள்கிறான்” என்றார்.
“புரிந்து விட்டது தாத்தா! நீங்க நிச்சிந்தையாக இருங்கள். கல்லூரியில் படிக்கும்போது இதைவிட ஆழமான நட்பு இருந்தவர்களையே பிரித்திருக்கிறேன். மானேஜர் பதவியில் என்னை உட்கார வைத்து சாட்டையை என் கையில் கொடுத்து விட்டீர்கள் இல்லையா. இனி விஜய்க்கு நான் யாரென்று புரிய வைக்கிறேன்.” ஹரி சொன்னான்.
அத்தியாயம்-17
“வணக்கம் அம்மா” என்றார் தீட்சிதர்.
“வாங்க வாங்க. உங்களைப் போன்ற பெரியவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. ஹேமா உங்களைப் பற்றியும் ஆனந்தின் உடல்நலக் குறைவு பற்றியும் சொல்லி இருக்கிறாள்.” ராஜலக்ஷ்மி தீட்சிதரை வரவேற்றுக் கொண்டே சொன்னாள்.
தீட்சிதருடன் ஹரியும் வந்திருந்தாள். அவர்களுக்குப் பின்னால் வந்த டிரைவர் பழக்கூடை, ஸ்வீட் பாக்கெட்டுகளைக் கொண்டு வந்து மேஜைமீது வைத்து விட்டுப் பணிவுடன் பின்னால் திரும்பிப் போய் விட்டான்.
“பெரியம்மா! உங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்று கடந்த பத்து நாட்களாக நினைத்து வருகிறோம். இந்த மில், தோட்டம் சம்பந்தப்பட்ட வேலைகளால் ஒரு நிமிடம் கூட ஒய்வு கிடைக்கவில்லை.” உட்கார்ந்து கொண்டே சொன்னான் ஹரி. ஹரியின் தோரணை ரொம்பவே மாறி இருந்தது. விலை உயர்ந்த ஆடைகளை உடுத்தியிருந்தான். பெரிய பதவியில் இருப்பது போல் அவன் பேச்சில் மிடுக்கு வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
தீட்சிதர் ஜரிகை வேஷ்டி, அங்கவஸ்திரம், பட்டு ஜிப்பா அணிந்திருந்தார். நெற்றியில் வீபூதி பட்டை, அதற்கு நடுவின் இருந்த குங்குமப்பொட்டு அவரை பக்திமானாகப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
“மகள் வீட்டில் இல்லையா?” சோபாவில் உட்கார்ந்துகொண்டே கேட்டார். “இருக்கிறாள். குளித்து விட்டு இப்பொழுதுதான் வந்தாள்” என்றவள், “ஹேமா! தீட்சிதர் மாமா வந்திருக்கிறார்.” உள்பக்கம் பார்த்துவிட்டுக் குரல் கொடுத்தாள்.
“இதோ வந்து விட்டேன் மம்மி.” ஹேமா படுக்கை அறையிலிருந்து பதில் சொன்னாள்.
தீட்சிதர் வீடு முழுவதும் பரிசீலிப்பது போல் பார்த்தார். அவருக்குத் திருப்தியாக இருந்தது. வீட்டில் ஆண் துணை இல்லாவிட்டாலும், கணவர் இறந்து போய் பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டாலும், ராஜலக்ஷ்மி குடும்பக் கௌரவத்தைப் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறாள். வங்கியில் அதிகாரியாய் அவளுக்கு நல்ல பெயர் இருக்கிறது. ஒரே மகள் ஹேமாவும் படிப்பு, அழகு, குணம் எல்லாவற்றிலும் ஒன்றோடு ஒன்று போட்டி போடும் விதமாக வைரமாய் ஜொலித்துக் கொண்டிருக்கிறாள்.
ஹேமா வந்தாள்.
“வணக்கம். சௌக்கியமாக இருக்கிறீர்களா?” என்று கேட்டாள்.
“வாம்மா. உட்கார்ந்து கொள்.” அன்புடன் சொன்னார்.
ஹேமா அவர் உட்கார்ந்திருந்த சோபாவின் மறுமுனையில் அமர்ந்து
கொண்டாள்.
“ஆனந்த் எப்படி இருக்கிறான்?” ஹேமா கேட்டாள்.
“நன்றாக இருக்கிறான். உன் கையில் அமிர்தம் ஏதோ இருக்க வேண்டும். கொஞ்சம் தேறி இருக்கிறான். இவ்வளவு ஆரோக்கியமாய் இதற்கு முன் அவனை நான் பார்த்ததில்லை.”
“நீங்க ரொம்பதான் புகழறீங்க. எல்லோரும் கொடுக்கும் மருந்துகளைத்தான் நானும் கொடுத்தேன்” என்றாள் ஹேமா.
“இல்லை ஹேமா. ஆனந்த் இப்போ ரொம்ப நன்றாக இருக்கிறான்.” ஹரி சொன்னான்.
“மிகைப்படுத்தி சொல்வதாய் நினைக்காவிட்டால் எங்க ஹேமாவின் கைராசி ரொம்ப நல்லது என்று எல்லோரும் சொல்வார்கள்” என்றாள் ராஜலக்ஷ்மி.
“பார்த்தாயா. உங்க அம்மாவே சொல்லி விட்டாள்” என்றார் தீட்சிதர்.
“நான் நம்ப மாட்டேன்” ஹேமா சோபாவிலிருந்து எழுந்து கொண்டே சொன்னாள். “மம்மி! நீ பேசிக் கொண்டிரு. நான் ஒரு நோயாளியைப் பார்க்கப் போக வேண்டும். கிளம்புகிறேன்.”
“வந்தவர்களுக்கு என்ன வேண்டுமோ கேள் பேபி. காபி சாப்பிடுகிறீர்களா? இல்லை டிபன் சாப்பிடலாமா?” என்று தீட்சிதர் பக்கம் திரும்பி கேட்டாள்.
“எங்கள் வீட்டு நிர்வாகம் முழுவதும் ஹேமாவுடையதுதான். உணவு மேஜையருகில் வரும்வரை அன்று என்ன சமையல் என்று எனக்குத் தெரியாது. விருந்தாளிகள் வந்தால் அவர்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அவளுடையது தான்.” மகளை பெருமை பொங்க பார்த்துக் கொண்டே சொன்னாள் ராஜலக்ஷ்மி.
“மம்மி! புகழ்வதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளேன்.” ஹேமா வேண்டுகோள் விடுத்தாள்.
“இல்லாததை ஒன்றும் உங்க அம்மா சொல்லிவிட வில்லையே?” என்றார் தீட்சிதர்.
“என்ன சாப்பிடுகிறீர்கள்? காபி, டீ, பால், மோர்… ஏதாவது”
“காபி குடிக்கிறேன், ஆனால் ஒரு நிபந்தனை.” தீட்சிதர் சொன்னார். சொல்லுங்கள் என்பது போல் பார்த்தாள்.
“ஆனந்த் என்னை அழைப்பது போல் நீயும் என்னை தாத்தா என்று அழைக்க வேண்டும்.”
ஹேமா ராஜலக்ஷ்மியின் பக்கம் பார்த்தாள்.
ராஜலக்ஷ்மி முறுவலுடன், “ஆனந்தைப் போல் ஒருமையில் பேசும் அளவுக்கு நெருக்கம் இல்லை. பெரியவர்களை அப்படி பேசுவதும் நன்றாக இருக்காது. தாத்தா என்று அழைத்தாலும் பன்மையில் விளிப்பதுதான் மரியாதை” என்றாள்.
“அம்மாடியோவ்! எங்க தாத்தாவை என்னைத் தவிர வேறு யாரும் அப்படி கூப்பிடக் கூடாது என்று ஆனந்த் என்னுடன் சண்டைக்கு வந்தால்?” ஹேமா பயந்து விட்டது போல் நடித்தாள்.
ஹேமா இப்படிச் சொன்னதும் தீட்சிதர் சிரித்து விட்டார். “அப்படி எதுவும் நடக்காது. சின்ன வயதிலிருந்து தனியாக வளர்ந்து விட்டான். வேறு யாராவது அவனுடைய தாத்தாவை அப்படி அழைத்தால் விருப்பப்பட மாட்டானோ என்னவோ. ஆனால் நீ அவனுடைய டாக்டர். நீ அழைத்தால் சந்தோஷப்படுவான்.”
“அப்படி என்றால் ஓ.கே. உங்களுக்குக் காபி கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள்.
“விஜய் எப்படி இருக்கிறான்?” ராஜலக்ஷ்மி கேட்டாள்.
“இரண்டு நாட்களுக்கு முன் தோட்டத்தில் வேலையை முடித்துக்கொண்டு வருபோது காலில் கண்ணாடித் துண்டு குத்தி விட்டது. காயம் கொஞ்சம் ஆழம்தான்.’
சமையலறை பக்கம் போய்க் கொண்டிருந்த ஹேமா சட்டென்று நின்று விட்டாள். பின்னால் திரும்ப நினைத்துக் கட்டுப்படுத்திக் கொண்டாள். தீட்சிதரும் ராஜலக்ஷ்மியும் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஹேமா காபி கலந்து எடுத்து வந்தாள்.
தீட்சிதர் காபி கோப்பையை எடுத்துக்கொண்டு டீபாய் மீது வைத்து விட்டு, “ஒரு நிமிடம் இப்படி சோபாவின் உட்கார்ந்துகொள் அம்மா” என்றார்.
ஹேமா உட்கார்ந்து கொண்டாள்.
தீட்சிதர் ஒரு பாக்கெட்டை எடுத்து ஹேமாவின் கைகளில் வைத்தார்.
“என்ன இது?” ஹேமா எடுத்துகொள்ள வில்லை. சந்தேகமாய் பார்த்தாள்.
“பெரிதாக ஒன்றுமில்லை. ஆனந்த் ஆஸ்பத்திரியிலிருந்து நல்லபடியாகத் திரும்பி வந்தான். எல்லாம் உன் கைராசிதான். அன்று அவனைச் சேர்க்கும்போது பிழைப்பான் என்று நான் நினைக்கவில்லை. என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்ளும் வகையில் சின்ன அன்பளிப்பு.”
“அன்பளிப்பு எதுவும் வேண்டாம். என்னுடைய ட்யூட்டியை நான் செய்தேன்” என்றாள் ஹேமா.
“இந்த ஃபார்மாலிடீஸ் எல்லாம் எதற்கு?” ராஜலக்ஷ்மி சொன்னாள்.
“அப்படி இல்லை பெரியம்மா. வயதில் பெரியவர். மனப்பூர்வமாய் தருகிறார். எடுத்துக் கொண்டால்தான் நன்றாக இருக்கும். மறுக்காதீர்கள்.” ஹரி வற்புறுத்தினான்.
அந்தப் புடவை ஹேமா எடுத்துக்கொள்ள வில்லை என்றால் சிக்கலாகி விடும். கடையில் பேரம் பேசி மூன்னூறு ரூபாய் குறைத்துப் புடவையை வாங்கியிருக்கிறான். அந்த விஷயத்தைத் தீட்சிதரிடம் சொல்லாமல் அந்த பணத்தை அமுக்கி விட்டான். ஹேமா புடவையை வாங்கிக்கொள்ளவில்லை என்றால் புடவையைக் கடையில் திருப்பி தரச் சொல்வார் தீட்சிதர். அந்த முன்னூறு ரூபாய் எப்பொழுதோ செலவழிந்து போய் விட்டது.
ஹரியும் சேர்ந்து வற்புறுத்தியதால் ராஜலக்ஷ்மியால் மறுக்க முடியவில்லை. “புடவை, பழம், ஸ்வீட்ஸ் இதெல்லாம் என்ன? நிறைய செலவு செய்திருக்கீங்களே?” என்றாள் ராஜலக்ஷ்மி.
“ஏதோ என்னுடைய திருப்திக்காக” என்றார் தீட்சிதர்.
ஹேமா காபி கோப்பையை எடுத்து அவரிடம் கொடுத்தாள்.
“நீங்க கட்டாயம் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும்” என்றார் தீட்சிதர்.
“கட்டாயம் வருகிறோம்” என்றாள் ராஜலக்ஷ்மி.
“எப்போ வருகிறீர்கள் என்று சொல்லுங்கள். ஆனந்தை ஹேமா பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் நான் சொன்னது பொய் இல்லை என்று புரிந்து கொள்வாள். அவனை இன்னிக்கு என்னுடன் வரச் சொல்லிச் சொன்னேன். பெண்களுடன் அவன் அதிகமாகப் பழகியது கிடையாது. கூச்சம் அதிகம்” என்றார் தீட்சிதர்.
“நாளை மறுநாள் விடுமுறைதானே பெரியம்மா. வாங்களேன்.” ஹரி சொன்னான்.
“நான் இப்போ விடுமுறையில் தான் இருக்கிறேன்” என்றாள் ராஜலக்ஷ்மி. “நாளை மாலை எனக்கு ஃப்ரீதான் மம்மி.” ஹேமா சொன்னாள்.
“அப்போ நாளை மாலை வருகிறோம்.” ராஜலக்ஷ்மி சொன்னாள்.
“நாளைக்கு வந்தால் தோட்டத்திற்குப் போய்ப் பார்க்கலாம். மலை போல் பறித்து வைத்திருக்கும் பூக்களை ஆட்கள் மாலையாகத் தொடுத்துக் கொண்டிருக்கும் காட்சி பார்க்கவே நன்றாக இருக்கும்” என்றான் ஹரி.
ஹரியும், தீட்சிதரும் விடைபெற்றுக் கொள்வதற்காக எழுந்து கொண்டார்கள். ஹேமா மாத்திரைகளைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
“என்னம்மா இது?” என்றார்.
“விஜய்! அதான் உங்க விஜய்க்கு காலில் கண்ணாடி குத்தி விட்டது என்று சொன்னீர்களே. என்னிடம் சாம்பிள் ஆக வந்த மாத்திரைகளைத் தருகிறேன்” என்றாள்.
“அப்படியா… ரொம்ப பெரிய மனசு உனக்கு. நல்லா இருக்கணும். சீக்கிரமே கல்யாண பிராப்திரஸ்து.”
“உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதம்தான் முக்கியம். எங்க ஹேமாவுக்கு நல்ல வரன் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.” ராஜலக்ஷ்மி சொன்னாள்.
“நிச்சயமாகச் சொல்கிறேன். உங்க ஹேமாவுக்கு என்ன குறைச்சல்? சாட்சாத் மகாலக்ஷ்மியைப் போல் இருக்கிறாள். எந்தப் பையன் கொடுத்து வைத்திருக்கிறானோ.” எழுந்து கொண்டே சொன்னார் தீட்சிதர்.
காரில் வரும்போது தீட்சிதர் ஜிப்பா பையிலிருந்து ஹேமா விஜய்க்காகக் கொடுத்த மாத்திரைகளை எடுத்து ஜன்னல் வழியாக வெளியில் வீசி எறிந்தார். முன் சீட்டில் உட்கார்ந்து டிரைவருடன் பேசிக் கொண்டிருந்த ஹரி இதைக் கவனிக்கவில்லை.
“ஹரி! நாளை மாலை நாலுமணிக்கு காரை எடுத்துக் கொண்டு போய் உன் பெரியம்மாவையும் ஹேமாவையும் அழைத்துக்கொண்டு வா” என்று சொன்னார்.
“கட்டாயம். காரில் கொஞ்சம் ரிப்பேர் இருக்கிறது என்று டிரைவர் சொல்கிறான்” என்ற ஹரி டிரைவர் பக்கம் திரும்பி, “எவ்வளவு செலவாகும்?” என்று கேட்டான்.
“ஐநூறு வரையில் ஆகலாம் சார். திறந்து பார்த்தால்தான் சொல்ல முடியும்.” பதில் சொன்னான் டிரைவர்.
“அவ்வளவு எதுக்கு? எனக்குத் தெரிந்த மெக்கானிக் இருக்கிறான். முந்நூறு ரூபாய்க்குள் வேலையை முடித்துத் தருவான்” என்றான் ஹரி.
தீட்சிதர் ரூபாயை எடுத்துக் கொடுத்தார். “காலையிலேயே காரைச் சரி செய்து வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
“அப்படியே செய்கிறேன்.” பணிவாகச் சொன்னான் ஹரி. ஹரியின் அறிவுரையை ஏற்றுக்கொண்டு சமீபத்தில்தான் டிரைவரை அமர்த்தி இருந்தார் தீட்சிதர்.
“எல்லாவற்றுக்கும் விஜய்தான் வரவேண்டும் என்றால் எப்படி முடியும்? டிரைவர் என்று ஒருத்தன் இருந்தால் மற்ற வேலைகளுக்கும் நமக்கு உதவியாக இருப்பான்” என்று ஹரி சொன்னபோது தீட்சிதருக்கும் சரி என்று பட்டது.
“சம்பளம் எவ்வளவு தர வேண்டியிருக்கும்?”
“ரொம்ப ஒன்றும் தர வேண்டியதில்லை. எனக்குத் தெரிந்த பையன் ஒருத்தன் இருக்கிறான். நான் பேசிக் கொள்கிறேன்”. ஹரி சொன்னான்.
டிரைவரை ஏற்பாடு செய்து கொண்ட பிறகு விஜய் கையில் கார் கிடைக்காதவாறு சாமர்த்தியமாகச் செயல்பட்டார் தீட்சிதர். ஆனந்த் நண்பர்களுடன் சுற்றும் ஜீப் ரிப்பேராகி கராஜில் கிடந்தது.
விஜய் கைக்குக் கார் தராமல் ஹரியை அங்கேயும் இங்கேயும் காரில் அனுப்புவது தீட்சிதருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவர் முன்னாடியே ஹரியிடம்
சொன்னார். “உங்க பெரியம்மாவிடம் என்ன சொல்வாயோ, எப்படி சொல்வாயோ எனக்குத் தெரியாது. ஆனந்தின் திருமணம் ஹேமாவுடன் நடக்கும் விதமாகச் செய்ய வேண்டும். எனக்கு ஹேமாவைப் பிடித்திருக்கிறது. ஆனந்துக்கும் அவளை ரொம்ப பிடித்திருக்கிறது. உங்கள் பெரியம்மா சொன்னால் ஹேமா ஒப்புக் கொள்வாள் இல்லையா.”
“கட்டாயம் ஒப்புக்கொள்வாள்.”
“உங்கள் பெரியம்மாவுக்கு ஆனந்தைப் பிடிக்கும் என்றுதான் நினைக்கிறேன்.”
“நிச்சயமாகப் பிடிக்கும். சொத்தும், நல்ல சம்பிரதாயமும் இருக்கிற வரன்தான் வேண்டுமென்று பெரியம்மா எதிர்பார்க்கிறாள். அந்த இரண்டும் உங்களிடம் தாராளமாக இருக்கிறது. ஆனந்தும் இப்போ கொஞ்சம் உடல் தேறி பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறான். உங்களுக்கு அந்தச் சந்தேகமே வேண்டாம்” என்றான் ஹரி.
ஆனந்த் அறையில் கூண்டில் அடைபட்ட புலியைப் போல் நடைபயின்று கொண்டிருந்தான். கோபமும், வேதனையும் அவன் முகத்தில் பிரதிபலித்துக் கொண்டிருந்தன.
இரவு பத்து மணி ஆகிவிட்டது.
படிகளில் சத்தம் கேட்டது.
ஆனந்த் வாசற்படி அருகில் சென்றான்.
விஜய் தலையைக் குனிந்துகொண்டு ரெயிலிங்கை பிடித்துக்கொண்டு மெதுவாகப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தான்.
ஆனந்த் நிலைப்படியில் கதவில் சாய்ந்து கொண்டு கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான்.
அருகில் வந்த பிறகு விஜய் தலையை உயர்த்திப் பார்த்தான்.
“அனூ! நீ இன்னும் உறங்கவில்லையா?” புன்முறுவலுடன் கேட்டான்.
“நீ… நீ எங்கே போயிருந்தாய்? முதலில் அதைச் சொல்லு.”
“டவுனுக்கு.”
“டவுனுக்குப் போயிருந்தாயா? கொஞ்சமாவது என்னைப் பற்றிய நினைவு இருந்தால் இப்படிச் செய்திருப்பாயா?”
“என்ன நடந்தது?” விஜய் கண்களில் பதற்றம் தென்பட்டது.
“என்ன நடந்தது?” ஆனந்த் விஜய் கேட்ட அதே தொனியைப் பின்பற்றினான். “எதுவும் தெரியாததுபோல் கேட்கிறாயே? நிஜமாகவே உனக்குத் தெரியாதா?”
“என்ன ஆச்சு அனூ?”
“என்ன ஆச்சு என்று என்னையே விசாரிக்கிறாயா? இன்னிக்கு நம் வீட்டுக்கு விருந்தாளிகள் வருகிறார்கள் என்று உனக்குத் தெரியும் இல்லையா?”
“தெரியும்.”
“தெரிந்த பிறகும் டவுனுக்குப் போயிருக்கிறாய். அப்படி என்ன அவசர வேலை?”
“கோபாலன் மாமாவுக்கும் அவருடைய மகன்களுக்கும் சொத்து விவகாரத்தில் ஏதோ தகராறு. லாயரை அறிமுகப்படுத்தி வைக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டதால் நம் லாயரிடம் அழைத்துச் சென்றேன்.”
“ஏன்? அவர்களுடைய வீடு பற்றிக்கொண்டு எரிகிறதா? இன்னிக்குத்தான் உனக்கு நேரம் கிடைத்ததா? வீட்டுக்கு கெஸ்டுகள் வருகிறார்கள் என்று சொல்லியிருந்தேனே?”
விஜய் பதில் பேசவில்லை.
“ராஜலக்ஷ்மி மேடமும், ஹேமாவும் வருகிறார்கள் என்று சொல்லியிருந்தேன். இதோ வருகிறேன் என்று சொன்ன பெரிய மனிதன் வருகிற ஜாடையே காணும். கோபாலன் மாமா வீட்டுக்கு ஆளை அனுப்பினால் டவுனுக்குப் போயிருப்பதாக அவருடைய மனைவி சொன்னாளாம். கால்வலி முழுவதுமாக குறையாத நிலையில் போகா விட்டால்தான் என்ன?”
“நான் இருப்பது அவ்வளவு முக்கியம் என்று நினைக்கவில்லை.” விஜய் தாழ்ந்த குரலில் சொன்னான்.
“முக்கியம்… இல்லையா? எனக்கு விருப்பமானவர்கள் வீட்டுக்கு வரும்போது என்னுடன் சேர்ந்து என் பக்கத்தில் இருப்பது உனக்கு முக்கியமாகத் தோன்றவில்லையா? விஜய்! என்ன ஆச்சு உனக்கு? புதிதாக பேசுகிறாய்?”
“நான் அத்தனை தூரத்திற்கு யோசிக்கவில்லை.”
“விஜய்! போய் விடு. இனி என்னிடம் எதுவும் சொல்லாதே.” ஆனந்த் கத்தினான்.
விஜய் எப்பொழுதும் போல் ஆனந்தைச் சமாதானப் படுத்த முயற்சி செய்யவில்லை. ஆழமாய் பெருமூச்சு விட்டுப் பின்னால் திரும்பினான். நிதானமாக படிகளில் இறங்கி போய்க் கொண்டிருந்தான். அந்தச் செயலில் கோபமோ, அவமானமோ எதுவும் இல்லை. ஸ்திரமான முடிவுக்கு வந்தவனைப் போல் நிதானமாக இறங்கி போய்க் கொண்டிருந்தான்.
“விஜய்!!” ஆனந்த் குரலை உயர்த்தி அழைத்தான்.
விஜய் நின்று திரும்பிப் பார்த்தான்.
ஆனந்த் சொன்னான். “இன்றுடன் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”
சரி என்பது போல் பார்த்துவிட்டு விஜய் படியிறங்கப் போனான்.
ஆனந்த் நாளே எட்டில் வேகமாய் இறங்கி விஜய் அருகில் சென்று அவனைப் பலமாகப் பிடித்துக் கொண்டான்.
“நிஜமாகவே போய் விடுவாயா?”
விஜய் பதில் சொல்லவில்லை.
“சொல்லு விஜய். நிஜமாகவே போய் விடுவாயா?”
விஜய் முகத்தில் தென்படும் மௌனமே அவன் கேள்விக்குப் பதில் சொல்வது போல் இருந்தது.
ஆனந்த் விஜயின் கையைப் பலமாகப் பற்றிக்கொண்டு தன் அறைக்கு இழுத்து வந்து நாற்காலியில் வலுக்கட்டாயமாக உட்கார வைத்தான்.
“உன்னுடைய உத்தேசம்தான் என்ன?” ஆனந்த் கேட்டான்.
“ஒன்றுமில்லை.”
“இன்னிக்கு ஹேமாவும், ராஜலக்ஷ்மி மேடமும் நம் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.”
“வரப் போகிறார்கள் என்று தெரியும்.”
“வீட்டுக்கு விருந்தாளிகள் வரும்போது நீ இப்படி போனது மரியாதைதானா? நீ இல்லாவிட்டால் கொஞ்சம் கூட நன்றாக இல்லை. ராஜலக்ஷ்மி மேடமும் உன்னைக் காணுமே என்று கேட்டார்கள். எனக்கும் தாத்தாவுக்கும் அவர்களுடன் உரையாடத் தெரியவில்லை. நானும் ஹரியும் அவர்களைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றோம். நீ அந்தத் தோட்டத்தை எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறாய் என்று விலாவாரியாகச் சொன்னேன். ஹேமா உன் கால் வலிக்காக மருந்துகளைக் கொடுத்து அனுப்பினாளாம். நம் தாத்தா ஞாபக மறதியாய் அதை அங்கேயே வைத்துவிட்டு வந்து விட்டேன் என்று சொன்னார்.”
“நான் மருந்து போட்டுக்கொண்டு விட்டேன்.” விஜய் வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டே சொன்னான். அவன் முகத்தில் களைப்பு வெளிப்படையாய் தெரிந்தது. வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்ட பொறுமை கண்களில் தென்பட்டது.
ஆனந்த் விஜயைப் பார்த்து இருகரங்களையும் ஜோடித்துக்கொண்டே சொன்னான். “தயவு செய்து என்னைக் கொல்லாதே விஜய். சமீபகாலமே நீ வித்தியாசமாக நடந்து கொள்கிறாய். டிரைவரை வைத்துக் கொள்ளுங்கள் என்று தாத்தாவிடம் சொன்னாயாம். ஒவ்வொன்றாய் எல்லாவற்றையும் ஒதுக்கிக் கொண்டு இருக்கிறாய். உன் போக்கைப் பார்த்தால் கடைசியில் என்னை விடுவித்துக் கொள்வதற்கு இது முன்னுரையோ என்று தோன்றுகிறது.”
விஜய் பதில் பேசவில்லை.
ஆனந்த் அப்பொழுதுதான் கவனமாகப் பார்த்தான்.
“விஜய்! ஏன் என்னவோ போல் இருக்கிறாய்? உடம்பு சரியாக இல்லையா?” பதற்றத்துடன் கேட்டான்.
“நன்றாகத்தான் இருக்கிறேன்.”
“இல்லை விஜய். இதற்கு முன்பு நான் உன்னை இப்படி பார்த்ததே இல்லை.” ஆனந்த் சின்னக் குழந்தையைப் போல் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான். “சாரி… நான் ஒரு முட்டாள். காரணமே இல்லாமல் உன்மீது கோபம் கொள்கிறேன். ஹேமா வந்திருந்தாள். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பக்கத்தில் நீ இல்லாததால் அந்த சந்தோஷம் பாதியாகி விட்டது போல் தோன்றியது.”
“ஆனந்த்! உனக்கு எத்தனையோ முறை சொல்லி இருக்கிறேன். நீ தானாக மனிதர்களுடன் பழக கற்றுக்கொள்ள வேண்டுமென்று. நான் எப்போதும் இருக்க மாட்டேன் இல்லையா?”
“இல்லாமல் எங்கே போவாய்?”
“எது வேண்டுமானாலும் நடக்கலாம். நாளைக்கே நான் இறந்து போகலாம்.” விஜய் சொல்லும்போதே ஆனந்த் சட்டென்று வாயைப் பொத்தி விட்டான்.
“அப்படிச் சொல்லாதே விஜய். ப்ளீஸ்! சாவு வந்து நம் இருவரையும் பிரிக்கும் என்றால் அது முதலில் எனக்குத்தான் நிகழ வேண்டும். உன் மடியில் தலையை வைத்துக்கொண்டு நிம்மதியாக என் கடைசி மூச்சுப் பிரிய வேண்டும்.”
விஜய் பேசவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
ஆனந்த் விஜயின் முகவாயைப் பற்றித் தன் பக்கம் திருப்பினான்.
“பார்த்தாயா விஜய். நான் எவ்வளவு சுயநலக்காரனாய் இருக்கிறேன் என்று. என்னுடைய மகிழ்ச்சியைத்தான் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ எவ்வளவு வேதனைப்படுவாய் என்று கொஞ்சம்கூட யோசிக்கவில்லை. சாரி விஜய். நான் இப்போ சந்தோஷமாய் இருக்கிறேன். என்னுடைய சந்தோஷம் உனக்கு முக்கியம்தானே. அதனால் இனி அந்த டாபிக்கை விட்டு விடுவோம். ஹேமாவுக்கு உன் அறையைக் காண்பித்தேன். உங்க அம்மாவின் போட்டோவையும் காண்பித்தேன்.”
“எதற்காகக் காண்பித்தாய்?” விஜய் உடனே கேட்டான்.
“உன்னுடைய பிரஸ்தாபனை வராமல் என்னால் பேச முடியுமா? டின்னர் முடிந்த பிறகு தாத்தா, ராஜலக்ஷ்மி மேடம், ஹரி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். தாத்தா என்னை ஹேமாவுக்கு மாடியைச் சுற்றிக் காண்பிக்கச் சொன்னார். உன் அறைக்கு அழைத்துப் போனது, மேஜைமீது நீயும் உன் அம்மாவும் சேர்ந்து இருக்கிற போட்டோவை அவள் பார்த்தது எல்லாம் சகஜமாய் நடந்து விட்டது. இதோ இந்த இடத்தில்தான்
இருவரும் இரண்டு மணி நேரம் உட்கார்ந்திருந்தோம். நம்முடைய சின்ன வயதில் நடந்த நிகழ்ச்சிகள், எனக்காக ஸ்கூலில் நீ அடி வாங்கியது, எனக்கு ஜுரம் வந்தால் தாத்தா உனக்குச் சாப்பாடு போடாமல் உன்னைப் பட்டினி போட்டது, தாத்தாவுக்கு இப்போ ஏனோ உன்னைப் பிடிக்காமல் போனது… எல்லாவற்றையும் சொல்லி விட்டேன்.”
“யூ ஆர் எ ஃபூல். வீட்டு விஷயங்களை இப்படி யாராவது வெளியில் சொல்வார்களா?” விஜய் பற்களைக் கடித்துக்கொண்டே சொன்னான்.
ஆனந்த் நாற்காலியில் பின்னால் சாய்த்து கொண்டு சிரித்தான். “ஏனோ தெரியவில்லை. ஹேமாவின் கண்களில் ஏதோ மந்திர சக்தி இருக்கிறது. எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். நீயும் இருந்திருந்தால் மூவரும் சேர்ந்து ஜாலியாகப் பேசிக்கொண்டு இருந்திருப்போம். நாம் எப்படியும் அவர்கள் வீட்டுக்கு போகப் போகிறோம். திங்கள்கிழமை ஹேமாவுக்குப் பிறந்தநாளாம். ராஜலக்ஷ்மி மேடம் சொன்னாள்.” ஆனந்த் திடீரென்று எழுந்து போய் நிலைக் கண்ணாடியின் முன் நின்றான். தன்னுடைய உருவத்தைக் கவனமாய் பார்த்துக்கொண்டே, “விஜய்! என்னுடைய உடல்நலம் இப்போ நன்றாகத்தானே இருக்கிறது” என்று கேட்டான். ஷர்ட்டின் நுனியை இழுத்துப் பார்த்தான். “கொஞ்சம் பூசியிருக்கிறேன். ஷர்ட் சின்னதாகி விட்டது. ஐ யாம் ஹேப்பி. பருமனாகி விட்டேன் என்றால் ஏன் ஆக மாட்டேன்?” என்றான்.
“குட் நைட் அனூ!”
“ஓ.கே. குட் நைட்! நன்றாக ஓய்வு எடுத்துக்கொள்.” கண்ணாடியில் பார்த்துக்கொண்டே சொன்னான் ஆனந்த்.
விஜய் தன்னுடைய அறைக்கு வந்தான்.
அவனுடைய களைப்பு இரு மடங்காகி விட்டது போல் இருந்தது. அறைக்குள் வந்ததும் தாயின் போட்டோவை ஒரு முறை பார்த்தான். ஷர்ட்டைக் கழற்றி ஹேங்கரில் மாட்டி விட்டுக் கட்டில்மீது அமர்ந்து கொண்டான். தலையணைக்கு அருகில் சின்ன பாக்கெட் ஒன்று இருந்தது. எடுத்துப் பார்த்தான். அதில் மருந்துகள் இருந்தன.
ஒரு காகிதத்தில் எந்த மருந்துகள் எந்த வேளைக்குப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பு எழுதி கீழே ஹேமா என்ற கையெழுத்து இருந்தது.
விஜய்க்குக் கால் ரொம்ப வலித்தது. பின்னால் நகர்ந்து தலையணையில் தலையைச் சாய்த்துக் கொண்டான். காகிதத்தில் ஹேமாவின் கையெழுத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ரொம்ப உயர்ந்த மனம் ஹேமாவுக்கு. தன்னை மன்னித்து விட்டாள். கண்கள் ஈரமாவதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஜன்னல் வழியாக வீசிக் கொண்டிருந்த குளிர்ந்த காற்று களைத்துப் போயிருந்த அவனுடைய உடலுக்கு இதம் தருவது போல் இருந்தது.
தீட்சிதர் முதல் நாளே விஜயை அழைத்து ஹேமாவும், அவளுடைய தாயும் மறுநாள் சாப்பிட வரப் போவதாகவும், அப்பொழுது விஜய் வீட்டில் இல்லாமல் வேறு எங்கேயாது போய் விட வேண்டுமென்றும் ஆணையிடுவது போல் சொன்னார்.
“ஆனந்த் ஹேமாவுடன் தனிமையில் இருக்க வேண்டும். நீ இருந்தால் ஆனந்த் உன்னை விட மாட்டான். ஹேமா ஆனத்தின் வருங்கால மனைவி. ஹேமாவும் ஆனந்தும் தனியாகப் பேசிக்கொள்ள வாய்ப்பு தர வேண்டும். உனக்கு இது கஷ்டமாக இருந்தாலும், ஆனந்துக்காக இதை செய்துதான் ஆக வேண்டும்.”
காலையிலேயே விஜய் வேலை இருப்பதாகச் சொல்லி லாயர் வீட்டுக்குப் போனான். அவர் இன்று டவுனுக்குப் போகப் போகிறார் என்று ஏற்கனவே அவனுக்குத் தெரியும். அவருடனேயே டவுனுக்குப் போய் விட்டான். அவன் மனம் முழுவதும் வேதனையும், துக்கமும் நிரம்பியிருந்தன. எத்தனை நாட்கள் இப்படி கண்ணாமூச்சி விளையாடுவது? ஆனந்திடம் வெளிப்படையாகப் பேசிய பிறகு இந்த இடத்தை விட்டுப் போய் விடுவதுதான் சிறந்தது. ஆனால் ஆனந்துக்குத் தீட்சிதர் மீது கோபம் வந்தால்? சின்ன வயதில் ஒரு முறை தீட்சிதர் தன்னை அநியாயமாக அடித்து விட்டார் என்று தெரிந்தபோது ஆனந்த் அடுப்பிலிருந்து எரியும் கொள்ளிக் கட்டையை எடுத்து தீட்சிதரின் முதுகில் வைத்து விட்டான். விஜய்க்குத் தீட்சிதரிடம் எந்த பயமும் இல்லை. ஆனந்திடம் இருக்கும் இந்த ஆவேசம்தான் அவனைப் பின் வாங்க வைக்கிறது. தனக்கும் ஆனந்துக்கும் நடுவில் யாராவது வந்தால் அவன் சகித்துக்கொள்ள மாட்டான். முன்பின் யோசிக்காமல் எரிமலையிலிருந்து பொங்கி வரும் அக்னிக்குழம்பைப் போல் எதிராளியை எரித்துச் சாம்பலாக்கி விடுவான். விஜய் பெருமூச்சு விடுத்தான். ஹேமாவை இந்த வீட்டுக்கு வரவழைத்து அந்தக் கடவுள் தன பொறுமையை மேலும் சோதிக்கிறார்.
அத்தியாயம்-18
அன்றுதான் ஹேமாவின் பிறந்தநாள். முதல் நாளே ஆனந்த் ஹேமாவுக்குப் பிறந்தநாள் பரிசு வாங்குவதற்குக் கடைக்கடையாய் ஏறி இறங்க வைத்து விஜயை ரொம்பவும் அலைக்கழித்து விட்டான்.
“ஹேமா சாதாரணமான சாதாரணமான பெண் இல்லை. பரிசு பொருள் ரொம்ப வித்தியாசமானதாக இருக்க வேண்டும். என்ன கொடுத்தால் நன்றாக இருக்கும்?” ஆனந்த் விஜயிடம் கேட்டான்.
“என்ன வாங்கலாம்?” யோசிப்பதுபோல் பார்த்தான் விஜய். உண்மையில் அவன் எதையும் யோசிக்கவில்லை. ஆனந்த் பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும். சின்ன வயதிலிருந்தே அவன் அப்படித்தான். அவனால் சுயமாக ஒரு முடிவுக்கு வரமுடியாது. எதிராளி சொன்னது பிடிக்காது. கடைசியில் அவசர அவசரமாக ஏதோ ஒரு முடிவு செய்து விடுவான். இப்பொழுதும் அதுதான் நடக்கப் போகிறது.
“விஜய்! எனக்கும் ஹேமாவுக்கும் திருமணம் செய்து வைக்கலாமென்று தாத்தாவும், ராஜலக்ஷி மேடமும் பேசி வருகிறார்கள். நானும் அதற்கு ஆட்சேபணை எதுவும் சொல்லவில்லை. மை காட்! நான் இவ்வளவு கொடுத்து வைத்தவனா! நீ எனக்கு நண்பனாக கிடைத்ததே பெரிய அதிர்ஷ்டமாக நினைத்து வருகிறேன். ஹேமா எனக்கு மனைவியாக வந்தால்? விஜய்! என் அதிர்ஷ்டத்தை உன்னால் நம்ப முடிகிறதா?”
நம்புகிறேன் என்பது போல் பார்த்தான் விஜய்.
“விஜய்! ஹேமாவைப் பற்றி உன் அபிப்பிராயம் என்ன? நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ முடியுமா? என்னை பொறுத்த வரையில் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று தோன்றுகிறது. தாத்தாவுக்கு என்னுடைய முடிவு சொல்ல வேண்டும். என்ன சொல்லட்டும்?”
“இந்த விஷயத்தில் நீ சுயமாக முடிவு செய்ய வேண்டும்” என்றான் விஜய்.
“நான் எந்த விஷயத்திலாவது உன் அறிவுரை இல்லாமல் முடிவு செய்திருக்கிறேனா? விஜய்! முதலில் ஹேமாவின் மனதில் என்ன இருக்கிறதென்று தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு வேலை செய்கிறாயா? ‘எங்க விஜய் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டுமாம்’ என்று ஹேமாவிடம் சொல்லி விடுகிறேன். நீங்க இருவரும் சேர்ந்து ஏதாவது ஹோட்டலுக்கு டின்னருக்குப் போய் வாருங்கள்.”
“வேண்டாம். நடக்காத காரியம்.”
“ஏன் நடக்காது? நீ பேசவில்லை என்றால் எப்படி? ஹேமாவிடம் பேசினால்தான் உனக்கும் புரியும். விஜய்! இந்த விஷயத்தில் நான் உன்னைத் தவிர வேறு யாரையும் நம்ப மாட்டேன். ஹேமாவுடன் பேசிய பிறகு, அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நீ சொன்னால் நான் தாத்தாவுக்குக் க்ரீன் சிக்னல் தருகிறேன்.”
“அனூ! தயவு செய்து என்னை இதில் இழுக்காதே. தாத்தா சொல்வதைக் கேள்.”
“நானா!” ஆனந்த் விஜயின் தோள்களைப் பலமாகப் பற்றிக் குலுக்கினான். “இப்படிப் பேசுவது நீதானா? அந்தக் கிழவர் எவ்வளவு சுயநலம் பிடித்தவர் என்று மறந்து விட்டாயா? பணத்திற்காக அவர் எதையும் செய்வார். ஹேமாவை அவருக்குப் பிடித்திருக்கிறது என்றால் அதற்கான காரணம் உனக்குப் புரியவில்லையா? ஹேமா இந்த வீட்டுக்கு மருமகளாக வந்தால் தங்கச் சுரங்கமே இந்த வீட்டுக்குக் கிடைத்தது போல்தான். ஹேமாவுக்குச் சொத்து நிறைய இருக்கிறது. அதோடு டாக்டர் என்பதால் நல்ல வருமானமும் இருக்கும். ஹரி தாத்தாவிடம் சொல்லியிருக்கிறான்.’
“அதில் தவறு என்ன இருக்கிறது? அனூ! யாராக இருந்தாலும் உயர்வான இடத்திலிருந்து சம்பந்தம் வர வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.”
“நாம் மட்டும் நினைத்துக் கொண்டால் போறாது. அடுத்தவர்களுக்கும் நம்மைப் பிடிக்க வேண்டும். ஹேமாவும் சின்னக் குழந்தையொன்றும் இல்லை. அவள் மனதில் வேறு யாராவது இருக்கலாம் இல்லையா. யாரும் இல்லையென்றால் நான் அதிர்ஷ்டசாலிதான். என்ன விஜய்? பேசவே மாட்டேன் என்கிறாய்? உன் கவனம் இங்கே இல்லையா என்ன?”
“அப்படி ஒன்றும் இல்லை அனூ.”
“நீ பேசி முடித்த பிறகு நானும் ஹேமாவுடன் ஒரு தடவை பேசி அசல் விஷயத்தைச் சொல்லி விடுகிறேன்.”
“என்ன விஷயம்?”
“நீ எனக்கு எவ்வளவு முக்கியமானவன் என்று சொல்லப் போகிறேன். என்னைவிட அதிகமாய் உன்னை மதிக்க வேண்டும் என்றும், அன்பாக பழக வேண்டும் என்று சொல்லப் போகிறேன்.”
“ஷட்டப் அனூ!”
“உண்மையாகத்தான் சொல்கிறேன். உன்னிடம் அன்பாக இருக்க வேண்டுமென்று சொல்லப் போகிறேன். சொந்த அண்ணனை விட அதிகமாய், உடன்பிறப்பாய் எண்ண வேண்டுமென்று சொல்லப் போகிறேன்.”
விஜய் தலையைத் திருப்பிக்கொண்டு ஜன்னல் வழியாய் வெளியில் பார்க்கத் தொடங்கினான்.
“இதோ பார் விஜய்! இன்று மாலை நாம் ஹேமா வீட்டுக்குப் போக வேண்டும். நீ மட்டும் என்னிடம் சொல்லாமல் எங்கேயாவது போனாயோ தெரியும் சேதி. ரொம்ப பொல்லாதவனாகி விடுவேன். அப்புறமாய் என்னைக் குற்றம் சொல்லக் கூடாது. ஆமாம்…” மிரட்டுவது போல் சொன்னான் ஆனந்த்.
விஜய் ஆனந்த் பக்கம் பார்த்தான். அந்தப் பார்வை எப்போதும் இல்லாத விதமாய் வேதனையை, கோபத்தை அடக்கியிருப்பது போல் தென்பட்டது.
ஆனந்த் அருகில் வந்தான். விஜயின் தோளில் கையைப் பதித்துக்கொண்டே, “ஐ யாம் சாரி விஜய். என்னுடைய பிடிவாத குணத்தால் சில சமயம் உன் உயிரை எடுத்து விடுகிறேன் இல்லையா?” என்றான்.
மாலையாகி விட்டது.
பார்ட்டீக்கு விஜய் எந்த உடைகளைப் போட்டுக்கொள்ள வேண்டுமென்று ஆனந்த் செலக்ட் செய்தான்.
“அவ்வளவு விலை உயர்ந்த உடைகள் இப்போ வேண்டாம்.” விஜய் மறுத்தான். “இப்போ இல்லாவிட்டால் எப்போ போட்டுக்கொள்ளப் போகிறாய்? நான் சொன்னதற்கு மறுப்பு சொல்லாதே.”
ஆனந்த் டிரெஸ் செய்து கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டது. “விஜய்! நான் நன்றாக இருக்கிறேனா?” ஆனந்த் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.
“நன்றாக இருக்கிறாய்.”
“இப்படி மொட்டையாகச் சொன்னால் எப்படி? விவரமாகச் சொல்லு.” “ஆரோக்கியமாய் இருக்கிறாய். உடல் எடை கூடியிருக்கிறது. உடைகளும் பொருத்தமாக இருக்கின்றன.”
“தாங்க்யூ.” திருப்தியாகச் சொன்னான் ஆனந்த்.
ஆனந்த் விஜய் இருவரும் தயாராகி படியில் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். தீட்சிதரும், ஹரியும் கீழே ஹாலில் அவர்களுக்காகக் காத்திருந்தார்கள்.
“அனூ! விஜயின் பாடு தேவலை. உரிமை இருப்பவனை விட இரவல்காரந்தான் சுகப்படுவானாம்.” ஹரி சொன்னான்,
தீட்சிதர் விஜயைப் பார்த்ததும் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டார். ஆனந்துக்காக நண்பர்கள் வந்திருந்தார்கள்.
“விஜய்! இப்போதே அவர்களுடன் பேசிவிட்டு அனுப்பி விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு முன் அறைக்குப் போனான். ஹரி வந்தவர்களுக்குக் காபி ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காகச் சமையல் அறை பக்கம் போனான்.
தீட்சிதர் விஜயைப் பார்த்து, “விஜய்! ஒரு முறை இப்படி வா” என்று தன்னுடைய அறையை நோக்கிப் போனார்.
விஜய் அவரைப் பின்பற்றிச் சென்றான்.
“உட்கார்ந்துகொள்” என்றார்.
விஜய் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.
தீட்சிதர் ஜிப்பாவின் ஜெபியிலிருந்து சின்ன நகைப்பெட்டியை எடுத்து திறந்து விஜய் கையில் கொடுத்தார்.
“வைர மோதிரம்! ஹேமாவுக்காக வாங்கினேன். எப்படி இருக்கு?” என்று கேட்டார்.
“நன்றாக இருக்கிறது.”
“நாம் இப்போ அவர்களுடைய வீட்டுக்குப் போகிறோம் இல்லையா. உன் மீது ஒரு பொறுப்பை சுமத்தப் போகிறேன். தன் மகள் ஹேமாவை ஆனந்துக்குக் கொடுப்பதில் ராஜலக்ஷ்மி அம்மாளுக்கு விருப்பம்தானம். ஹரி சொல்கிறான். எனக்கும் அந்த அம்மாளுக்கும் நடுவில் இந்த பிரஸ்தாபனையை யாராவது எடுக்க வேண்டும். எனக்கு உன்னைவிட முக்கியமானவர்கள் யாரும் இல்லை. இன்று மாலை பார்ட்டீ நடக்கும்போது ராஜலக்ஷ்மி ஆமாளிடம் திருமண பிரஸ்தாபனையை கொண்டு வர வேண்டுமென்று நான் நினைத்திருப்பதாக சொல்லு. தோட்டத்தை விற்று விட்டு நர்சிங்ஹோம் கட்டி ஹேமாவுக்குத் தர நினைத்திருப்பதாகவும் சொல்லு.”
இந்த வார்த்தையைக் கேட்டதும் விஜய் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான்.
“தோட்டத்தை விற்கப் போகிறீர்களா?” தன்னையும் அறியாமல் கேட்டு விட்டான்.
“ஆமாம். எனக்கோ வயதாகி விட்டது. ஆனந்தால் தோட்டத்தைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ள முடியாது. அதை விற்று விட்டு நர்சிங்ஹோம் ஒன்று கட்டி ஹேமாவிடம் ஒப்படைத்தால் ஆனந்தும் ஹேமாவும் அதைக் கவனித்துக் கொள்வார்கள். ஹரி எப்படியும் அவர்களுக்குத் துணையாக இருப்பான். என்ன சொல்கிறாய்?”
விஜய் கீழ் உதட்டைப் பற்களால் அழுத்திக் கொண்டான்.
“இது ஹரி சொன்ன யோசனைதான். சின்னவனாக இருந்தாலும் முன்யோசனை அதிகம். நர்சிங்ஹோம் ஆனந்த் பெயரில் இருக்கும். விற்பதற்கு உரிமை இல்லாத வகையில் உயில் எழுதி வைக்கிறேன். இத்தனை நாள் தோட்டமாக இருந்த சொத்து நர்சிங்ஹோமாக உருமாறும். அவ்வளவுதான். இதில் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை.”
விஜய் மௌனமாய் இருந்து விட்டான். அவன் இதயத்தில் பெரும் புயல் வீசிக் கொண்டிருந்தது. அவன் பத்து வருடங்களாக உயிரைக் கொடுத்து ராப்பகலாய் உழைத்து வளர்த்த தோட்டம் அது. கண்களுக்கு முன் இடிந்து போவது போல் இருந்தது. மிகவும் பிரியமான ஒன்று சமூலமாய் நாசமாகிக் கொண்டிருக்கும்போது ஏற்படும் வேதனை!
எவ்வளவு கட்டுப்படுத்திக் கொண்டாலும் அவன் முகத்தில் வேதனையில் நிழல் படிவதைத் தடுக்க முடியவில்லை.
தீட்சிதர் விஜயின் முகத்தைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். விஜய் முகத்தில் தென்பட்ட வேதனை அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. மனிதனைக் கத்தியால் குத்தி அந்தக் குருதியைப் பார்த்து மகிழ்ந்து போகும் பைசாச குணம். விஜயை இந்த மாதிரி வீழ்த்தியது அவருக்குப் பெருமையாக இருந்தது.
தீட்சிதர் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்த வைர மோதிரத்தை வெளியில் எடுத்துக் காண்பித்தார். “ஹேமாவுக்குப் பிறந்தநாள் பரிசாக இதை கொடுக்கப் போகிறேன். அளவு சரியாக இருக்கும் இல்லையா?” என்று கேட்டார்.
விஜய் தலையை அசைத்தான்.
“விஜய்!” ஆனந்த் அழைக்கும் குரல் கேட்டது.
தீட்சிதர் உடனே சொன்னார். “இந்த விஷயங்கள் எதுவும் ஆனந்துக்குத் தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. நீ நிஜமாகவே ஆனந்தின் நலனை வேண்டுபவனாக இருந்தால் ராஜலக்ஷ்மி அம்மாளிடம் பேசி இந்த இடம் முடிகிற விதமாய் பார். உன்மீது மதிப்பு வைத்து இந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறேன். என்னால் அந்த அம்மாளிடம் நேராகப் பேச முடியாது என்றோ இல்லை உன்னை விட்டால் வேறு ஆள் கிடையாது என்றோ நினைத்து விடாதே.”
விஜய் பதில் பேசவில்லை.
ஆனந்த் உள்ளே வந்தான். இருவரின் முகங்களையும் மாறி மாறிப் பார்த்தான்.
ஓரடி முன்னால் வைத்து விஜய் பக்கம் திரும்பி, “என்ன விஜய்? இங்கே ஏதோ ரகசியமாய் பேச்சு வார்த்தை நடப்பதுபோல் தெரிகிறதே?” என்றான்.
“அப்படி எதுவும் இல்லை” என்றான் விஜய்.
“எதுவும் இல்லையென்று சொல்வானேன் விஜய்? இன்று இல்லா விட்டாலும் நாளைக்காவது ஆனந்திடம் சொல்லித்தானே ஆகணும். ஆனந்த்! விஜய் எனக்கு ஒரு நல்ல ஐடியா சொன்னான். தோட்டத்தை விற்றுவிட்டு நர்சிங் ஹோம் ஒன்று கட்டினால் நன்றாக இருக்கும் என்று.”
“என்ன? தோட்டத்தை விற்பதா?” ஆனந்த் சரேலென்று விஜய் பக்கம் திரும்பினான். அருகில் சென்று, “நீதானா இந்த வார்த்தையைச் சொன்னது?” விஜயின் தோள்கள் மீது கைகளைப் பதித்து கண்களுக்குள் ஊடுருவது போல் பார்த்தான். “நீ என்மீது உயிரை வைத்திருப்பதுபோல் அந்தத் தோட்டத்தின் மீதும் உயிரை வைத்திருக்கிறாயே விஜய்! அதை விற்று விடப் போகிறீர்களா?”
“முழுவதுமாகக் கேள் ஆனந்த். வேலையாட்களுடன் நம்மால் மாரடிக்க முடியவில்லை. விஜய்க்கும் ரெஸ்ட் வேண்டும் இல்லையா? விஜய் சொன்ன ஐடியா எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. தோட்டத்திற்குப் பதிலாக நர்சிங்ஹோம் இருக்கும். ஹேமா போன்றவர்களின் கைகளில் அதை ஒப்படைத்தால் எல்லோருக்கும் லாபம்தான். சொத்து அபிவிருத்தியானது போலவும் இருக்கும். எல்லோருக்கும் நிம்மதி கிடைக்கும். வருமானமும் பெருகும். விஜய் எப்போதும்போல் தோட்டத்திற்கு பதிலாக நர்சிங்ஹோமை மேல் பார்வை பார்த்துக் கொண்டிருப்பான்.”
பின்னாலிருந்து சமாதானப்படுத்துவது போல் தாத்தா சொல்வதைக் கேட்க கேட்க ஆனந்தின் முகத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த கோபம் மாயமாய் மறைந்து விட்டது. அவன் கண்களில் பிரமிப்பும், மகிழ்ச்சியும் போட்டியிட்டன.
விஜயின் கையை இரண்டு கைகளாலும் பற்றிக்கொண்டான். “வண்டர்ஃபுல் ஐடியா! என் ஆருயிர் நண்பன் நீ தான். உனக்கு மட்டும் எப்படி இவ்வளவு நல்ல ஐடியாக்கள் வரும்?” என்று சொல்லிக்கொண்டே விஜயை எழுப்பி விட்டான்.
தீட்சிதர் பக்கம் திரும்பினான். “ஓ.கே. தாத்தா! விஜய் சொன்ன பிரபோசலை நானும் ஒப்புக்கொள்கிறேன்.” விஜயின் கையைத் தன் கையுடன் இணைத்து உயரே தூக்கிக்கொண்டே சொன்னான்.
“எனக்குத் தெரியும் ஆனந்த். விஜய் சொன்ன பேச்சை ஒரு நாளும் நீ தட்ட மாட்டாய் என்று.” வெற்றி பெருமிதத்துடன் விஜய் பக்கம் பார்த்துக்கொண்டே சொன்னார் தீட்சிதர்.
விஜய் எப்போதும் போல் கற்சிலையாய் மௌனமாய் இருந்து விட்டான்.
– தொடரும்…
– மௌனராகம் (நாவல்), தெலுங்கு: யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில்: கௌரி கிருபானந்தன்