(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
அத்தியாயம்-13
நிலவின் ஒளியில் ஊர் முழுவதும் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தது. வானத்தில் மேகங்கள் நிலாவோடு கண்ணா மூச்சி விளையாடிக் கொண்டிருந்தன. ஹேமா டிரைவ் செய்து கொண்டிருந்த கார் கடற்கரைச் சாலையில் வேகமாய் போய்க் கொண்டிருந்தது. கார் கிளம்பியதிலிருந்து ஹேமா, விஜய் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. விஜய் பேசினால் தவிர தானாகப் பேசக் கூடாது என்று ஹேமா முடிவு செய்திருந்தாள். விஜய் ஏதோ நினைவில் வெளியில் பார்த்துக்கொண்டு இருந்தான். அரிதாகக் கிடைத்த தனிமை! விஜய் எதையும் பொருட்படுத்தாதவன் போல் அப்படி மௌனமாய் இருந்தது ஹேமாவின் மனதிற்கு வேதனையை அளித்தது. பேச வேண்டும் என்று சொன்ன பெரிய மனிதனை அரை மணி நேரமாய் இந்த உலகிலேயே இல்லாததுபோல் உட்கார்ந்திருக்கிறான். அவன் மனதில் என்னதான் இருக்கிறது? என்ன செய்வதென்று ஹேமாவுக்குப் புரியவில்லை.
கார் சாலை ஓரமாய் நின்றது. தொலைவில் ஆங்காங்கே சில கார்கள் பார்க் செய்யப்பட்டு இருந்தன. காரின் பானெட் மீது நிலவின் ஒளி பிரதிபலித்துக் கொண்டிருந்தது. மேகக்கூட்டம் ஒன்று நிலவின் ஒளியைத் துரத்திக் கொண்டிருந்தது. தொலைவிலிருந்து வரும் கடல் அலைகளின் ஓசை சூழ்நிலையின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருதது.
கார் நின்றதும் விஜய் திடுக்கிட்டவன் போல் பார்த்தான். “இதென்ன? கார் இங்கே நிற்கிறது?” என்றான்.
“நீங்க என்னுடன் பேச வேண்டும் என்று சொன்னீர்களே?” என்றாள்.
அவன் ஒரு நிமிடம் மௌனமாய் இருந்தான்.
ஹேமாவும் இருபங்கு மௌனத்துடன் பானெட் மீது பிரதிபலித்துக் கொண்டிருந்த நிலா வெளிச்சத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் சட்டைப் பையிலிருந்து பாக்கெட்டை எடுத்தான்.
ஹேமா தலையைத் திருப்பி விஜய் பக்கம் பார்க்கா விட்டாலும் ஏதோ நகைப்பெட்டியை நகத்தால் நெம்பி திறப்பதை உணர முடிந்தது.
விஜயின் உள்ளங்கை ஹேமாவின் முன்னால் நீண்டது. ஹேமா பார்வையைத் தாழ்த்திக்கொண்டு பார்த்தாள். அவன் உள்ளங்கையின் நடுவில் திறந்த வாக்கில் சின்ன நகைப்பெட்டி இருந்தது. அதில் செயின் பளபளத்துக் கொண்டிருந்தது.
ஹேமா பார்த்துக்கொண்டே இருந்தாள். அவன் எதுவும் பேசவில்லை.
“என்ன இது?” கேட்டாள்.
“செயின்.”
“என்னுடைய செயினை என்னிடம் தந்துவிடப் போகிறீர்கள். இத்துடன் நம்முடைய அறிமுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாற்போலதானா?” என்றாள். அவன் இப்படி மௌனமாய் திருப்பித் தருவது அவளுக்கு ஏனோ பிடிக்கவில்லை.
“செயினை தருகிறேன். ஆனால் இது உன்னுடைய செயினில்லை.” அவனுடைய குரல் கொஞ்சம் கூட தடுமாற்றமில்லாமல் தெளிவாய் ஒலித்தது.
ஹேமா அவன் பக்கம் திரும்பி புரியாதவள் போல் பார்த்தாள்.
“செயின் என்னுடையது இல்லையா?” வியப்புடன் கேட்டாள்.
இல்லை என்பது போல் தலையை அசைத்ஹான்.
“வேடிக்கையாக இருக்கிறதே.” ஹேமா அவன் கையிலிருந்த நகையை எடுத்துக்கொண்டு பார்த்தாள். நிஜம்தான். அது அவளுடையது இல்லை. அதைவிட நீளமாக, புதிய மெருகுடன் ஜொலித்துக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியாய் உள்ளே வந்த நிலவின் ஒளி செயினை முத்தமிட்டு விலகியது.
“ஆமாம். இது வேறே செயின்தான்.” அவனுடைய முகத்தை ஆழமாய் பார்த்துக்கொண்டே சொன்னாள்.
‘ஆமாம்.” அவன் சாலையைப் பார்த்துக்கொண்டே பதில் சொன்னான்.
“புதுசா?”
“ஆமாம்.”
“எனக்காக வாங்கினீர்களா?” ஹேமாவின் மனதில் மகிழ்ச்சி அலையைப்போல் பொங்கியது.
“ஆமாம்.”
“எதற்காக?” மனதில் இருந்த மகிழ்ச்சி அவள் கண்களில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
அவன் உடனே அதில் சொல்லவில்லை.
ஹேமா அவனையே பிரமிப்பு கலந்த மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் தலையைத் திருப்பி ஹேமாவின் முகத்தை ஆழமாக நோக்கினான். “சொல்லுங்கள் விஜய்! என்ன இது?”
“சாரி.”
“எதற்கு?”
“உன்னுடைய செயின் தொலைந்து போய் விட்டது. ரொம்ப துரதிர்ஷ்டம்! அதற்குப் பதிலாக இதைக் கொடுக்கிறேன்.”
ஹேமாவுக்கு அவன் சொன்னது புரியவில்லை. “என்னது?” என்றாள்.
“இதுவும் கிட்டத்தட்ட அதே டிசைன்தான். எவ்வளவு முயற்சி செய்தாலும் அதே டிசைன் உள்ள செயின் கிடைக்கவில்லை.”
“என்னுடைய செயின் என்னவாச்சு?”
“தொலைந்து விட்டது. எப்படி தொலைந்தது என்று மட்டும் கேட்காதே. நான் வேண்டுமென்று தொலைக்கவில்லை.” தாழ்ந்த குரலில் சொன்னான்.
ஹேமாவுக்கு லேசாக விஷயம் புரியத் தொடங்கியது. “அந்த செயின் தொலைந்து விட்டதற்காக இதைத் தருகிறீர்களா?” என்றாள்.
“ஆமாம். தவறாக நினைத்துக்கொள்ளாதே. இப்படி நடந்ததற்கு நான் ரொம்ப…” பாதியிலேயே நிறுத்தி விட்டான். அவன் குரலில் வேதனை, இயலாமை, பச்சாதாபம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.
ஹேமா அந்த செயினை ஒரு நிமிடம் ஆழ்ந்து நோக்கினாள். அடுத்த நிமிடம் உடலில் இருக்கும் சக்தியெல்லாம் திரட்டிக்கொண்டு அந்த நகையை வெளியில் வீசி எறிந்தாள்.
அக்னிக் குழம்பைப் போல் குரல் வளையத்திலிருந்து வெளியேறத் துடித்துக் கொண்டிருந்த துக்கத்தைக் கட்டுப்படுத்த மூச்சை உள்ளே அடக்க முயன்றாள். ஆனால் சாத்தியப்படவில்லை. ஏமாற்றம்! எதிர்பாராத போது யாரோ பின் முதுகில் கத்தியால் குத்திய வேதனை! தன்னால் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லையே என்ற இயலாமை! துக்கம் தொண்டையை அடைக்க உள்ளங்கையால் கழுத்தின் மீது பலமாக அழுத்திக் கொண்டாள்.
ஹேமாவின் மனதில் அலை போல் எழும்பிய உணர்வுகளை விஜயினால் புரிந்துகொள்ள முடிந்தது.
அவன் எதுவும் சொல்லவில்லை. ஒரு நிமிடம் சலனமற்று அப்படியே உட்கார்ந்திருந்தான். பிறகு கார் கதவைத் திறந்துகொண்டு இறங்கினான்.
நிலா வெளிச்சத்தில் மணலில் செயினுக்காக தேடினான். ஹேமாவுக்குக் காரை ஸ்டார்ட் செய்து உடனே அந்த இடத்தை விட்டுப் போய் விட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் போக முடியவில்லை. கை கால்கள் செயல்களை மறந்து விட்டதுபோல் சலனமற்று இருந்தன. சக்தியைத் திரட்டிக்கொள்ள முயன்றாள்.
விஜய்க்கு செயின் கிடைத்துவிட்டது. செயினில் ஒட்டிக் கொண்ட மணலைத் தட்டிவிட்டு சட்டைப் பையில் வைத்துக்கொண்டே வந்தான். அதற்கு முன்பே ஹேமா காரை ஸ்டார்ட் செய்து விட்டாள். அவன் கை நீண்டு வந்து ஹேமாவின் கையைப் பற்றிக் காரை நிறுத்தியது.
ஹேமா அவன் கையை வேகமாய் தள்ளி விட்டாள்.
“ப்ளீஸ்!” அவன் குரலில் இயலாமை, வேதனை மறைமுகமாக வெளிப்பட்டன.
ஹேமா ஆவேசமாக சொன்னாள். “நீங்க செயினை கொடுக்காமல் இருந்திருந்தாலும் பரவாயில்லை. என்னிடம் இந்த விஷயத்தைச் சொல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.”
“சொல்ல வேண்டியது என்னுடைய கடமை என்று நினைத்தேன்” என்றான். “எனக்கு நகை முக்கியமில்லை!” ஹேமாவின் குரல் கோபமாக ஒலித்தது.
ஒரு நிமிடம் மௌனம். “எனக்குத் தெரியும்” என்றான்.
“உங்களுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் இப்படி இன்னொரு செயினை கொடுத்துவிட்டுக் கடமை முடிந்தது என்பதுபோல் நடந்து கொண்டிருக்க மாட்டீர்கள். அன்று நாம் இனி எப்பொழுதும் சந்தித்துக் கொள்ளப் போவதில்லை என்றும் சொல்லியிருக்க மாட்டீர்கள்.”
அவன் பேசவில்லை. மறுக்கவில்லை. அவளைத் தேற்றுவதற்கு முயற்சி செய்யவில்லை. ஹேமாவுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. இப்பொழுது கூட அவன் தன் மனதில் இருப்பதைப் புரிந்து கொண்டதுபோல் பேசவில்லையே. அதே மௌனம். அந்த மௌனம் எதிராளிக்குக் கடினமான தண்டனையாக இருக்குமென்று அவன் உணர்ந்துகொள்ளவில்லை.
திடீரென்று ஹேமா சொல்லத் தொடங்கினாள். “நம்முடைய அறிமுகத்தை என்னால் மறக்க முடியவில்லை. உங்களை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. எதனால் என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. அதைப்பற்றி நான் யோசிக்கவும் இல்லை. சின்ன வயதிலிருந்தே என்னுடைய விருப்பு வெறுப்புகளை வெளிப்படையாக, எந்த தயக்கமும் இல்லாமல் சொல்லும் பழக்கம் எனக்கு இருக்கிறது. என்னுடைய அம்மா என்னை வளர்த்த விதம் அப்படி. நான் உங்களுடன் என்ன பேசுகிறேன் என்று நன்றாக உணர்ந்துதான் பேசுகிறேன். நீங்கள் உங்கள் வாயால் சொன்னால் கேட்டு நான் மகிழ்ச்சி அடைய வேண்டிய வார்த்தைகளை நான் உங்களிடம் சொல்கிறேன். உணர்ச்சி வசப்பட்டு நான் எதுவும் சொல்லவில்லை. எனக்குத் தெரியும். நான் சாதாரணமான பெண் இல்லை. படித்திருக்கிறேன். டாக்டராக வேலை பார்க்கிறேன். மனிதர்களின் விருப்பு வெறுப்புகளை, அவர்களுடைய நடவடிக்கைகளை என்னால் புரிந்துகொள்ள முடியும். என்னிடம் உங்களுக்கு வெறுப்பு இல்லை என்று புரிந்து கொண்டேன். உங்கள் மனதில் இருப்பதை அந்த கடவுளே வந்தால்கூட சொல்ல வைக்க முடியாது என்றும் புரிந்து கொண்டேன். என்னால் உங்களை மறக்கவே முடியவில்லை. அன்று கர்ஃப்யூ இருந்த இரவு… பூஜா பிறந்த சமயம்… அதன்பிறகு உங்களுக்கு அடிபட்டு ஜுரம் வந்தது… இவைதான் அடிக்கடி நினைவுக்கு வருகின்றன. உங்களை எனக்கு எப்பொழுதிலிருந்தோ தெரியும் என்பது போல் தோன்றுகிறது. இத்தனை நாள் நான் உங்களை விட்டுத் தொலைவாக எதற்காக இருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை.”
மடை திறந்தது போல் சொல்லிக் கொண்டிருந்த ஹேமா திடீரென்று நிறுத்தினாள். இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு, “ஓ… காட்! நான் எவ்வளவு முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறேன். சீ… சீ…” ஹேமா திடீரென்று கார் கதவைத் திறந்து கொண்டு வேகமாகத் தொலைவுக்குப் போய் விட்டாள்.
விஜய் கற்சிலையாக உட்கார்ந்திருந்தான். அவன் தாடை எலும்பு முறுக்கேறிக் கொண்டது. அவனையும் அறியாமல் பெருமூச்சு ஒன்று வெளியில் வந்தது.
அவன் ஒரு முடிவுக்கு வந்தவன்போல் காரை விட்டு இறங்கினான். கார் கதவைச் சாத்திவிட்டு அப்படியே நின்றான். மேகங்கள் ஜெயித்து விட்டதுபோல் நிலா வெளிச்சம் எங்கும் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்தது.
ஹேமா தொலைவில் கடற்கரையில் கற்பாறை ஒன்றின்மீது முழங்காலில் முகத்தைப் புதைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
இரண்டு நிமிடங்கள் கழிந்தன. ஹேமாவின் தலைமீது கை ஒன்று படிந்தது. தலையை உயர்த்திப் பார்த்தாள்.
எதிரே நிலா வெளிச்சத்தில் விஜய்!
ஹேமா விருட்டென்று அவன் கையைத் தள்ளிவிடப் போனாள். அவன் தன் கையை அசைய விடவில்லை.
“ஹேமா!” முதல் முறையாக அவன் அவள் பெயரைச் சொல்லி அழைத்தான். “வீட்டுக்குப் போகலாம் வா.” நயமாக அழைத்தான்.
“நான் வரவில்லை. நீங்க போங்க.” தலையைக் குனிந்து கொண்டாள். “ப்ளீஸ்!” அவன் குரலில் வேண்டுகோள் இருந்தது.
“ஐ ஹேட் மை செல்ஃப். சீ சீ!” ஹேமாவின் குரலில் அபிமானமும், துக்கமும் போட்டியிட்டன.
அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.
“மை காட்! நான்… நான்…” அவள் குரலில் சுயகௌரவம் வெள்ளம்போல் பொங்கிக்கொண்டு வந்தது.
விஜய் ஹேமாவின் தலையை தன் அருகில் இழுத்துக் கொண்டான்.
ஹேமா அவனிடமிருந்து விடுபடுவதற்காகப் போராடிக் கொண்டிருந்தாள். “கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் சொல்லி விட்டேன்.” ஹேமா இன்னும் ஏதோ சொல்லப் போனாள். விஜய் சுட்டு விரலை உதட்டின் மீது வைத்துத் தடுத்தான்.
“உன்னால் மனிதர்களை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். அப்படித்தானே. உனக்குத் தெரிந்த விஷயத்தை நான் மறுபடியும் சொல்லத்தான் வேண்டுமா?” விஜய் கைகள் ஹேமாவின் தோள்களைச் சுற்றிப் படிந்தன. ஹேமாவின் முகம் அவன் மார்பில் பட்டுக் கொண்டிருந்தது. இருவரும் மௌனமாய் ஒரே சிலையைப் போல் இருந்து விட்டார்கள். அவன் வாயால் சொல்லாத உணர்வுகள் எல்லாம் அவன் ஸ்பரிசத்தின் மூலமாய் அவளுடைய இதயத்திற்குள் பிரவகித்துக் கொண்டிருந்தன. அவன் தன்னுடையவன் என்று அவளுக்குப் புரிந்து விட்டது. அவனுடைய அணைப்பில் எல்லையில்லாத மகிழ்ச்சி… சுகம்… திருப்தி. இந்த உலகில் வேறு எந்த சந்தோஷமும் இந்த அபூர்வமான மகிழ்ச்சிக்கு ஈடாகாது. அதனால்தான் என்னவோ பெண்ணாகப் பிறந்தவள் தான் விரும்பியவனுக்காக வாழ்க்கையில் எதையும் விட்டுக் கொடுப்பாள். அந்த நெருக்கத்திலும் அவனிடம் ஏதோ மதிப்பும், கம்பீரமும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. அது பிறவிலேயே ஏற்பட்ட பண்பு! ஹேமா ரொம்ப விருப்பமாய் அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
“என்னால் இனி உங்களை விட்டு இருக்க முடியாது.” ஹேமா தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்லிவிட்டாள்.
“என்னைப் போன்றவனை விரும்பினால் கஷ்டங்களை விலை கொடுத்து வாங்குவது போலதான். உனக்கு விருப்பமான வாழ்க்கையை என்னால் கொடுக்க முடியுமா?” சந்தேகத்தை வெளிப்படுத்தினான்.
“என்னுடைய அம்மாவிடம் கேளுங்கள். சொல்வாள். நான் ரொம்ப அல்ப சந்தோஷி.”
ஹேமாவுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவன் மனதில் இருந்த மௌனச் சுவரை இடித்து விட்டாள்.
விஜய் வெளிப்படையாகப் பேசுகிறான். தன் மனதில் இருப்பதை ஒப்புக்கொண்டு விட்டான்.
“விஜய்! இனியும் என்னைத் தொலைவில் இரு என்று சொல்லி விடாதே. உன் அருகில் இருந்தால் எத்தனை கஷ்டங்களை வேண்டுமானாலும் என்னால் எதிர்கொள்ள முடியும். உன்னை விட்டுப் பிரிந்திருக்கும் இந்த வேதனை உலகத்தில் எல்லா வேதனைகளை விட பெரியது. அம்மாவிடம் பேசு. நம் விருப்பத்தை மறுக்க மாட்டாள். அம்மாவுக்கு உன்னிடம் மதிப்பும் மரியாதையும் அதிகம். நான் உன்னுடையவள். இனிமேல் உன் பிரச்சனைகளும் என்னைச் சேர்ந்தவை.”
ஹேமா இப்படி சொன்னதும் விஜய் இருகரங்களால் அவள் முகத்தை ஏந்திக் கொண்டான். நிலா வெளிச்சத்தில் ஹேமாவின் முகம் மகிழ்ச்சியால் ஒளி வீசிக் கொண்டிருந்தது. அவன் ஹேமாவின் கண்களுக்குள் ஊடுருவுவது போல் பார்த்தான். அவள் மனதில் இருப்பதைக் கண்ணாடியைப் போல் அந்த கண்கள் பிரதிபலித்துக் கொண்டிருந்தன.
அவன் ஹேமாவை மேலும் இறுக அணைத்துக்கொண்டான். “ஹேமா!” அவன் குரல் கம்பீரமாய் ஒலித்தது.
“ஊம்.”
“நாம் திருமணம் செய்து கொள்வதற்குக் கொஞ்சம் நாள் ஆகும்.”
“சரி.”
“அது வரையில் நம்முடைய அறிமுகம் யாருக்கும் வெளியில் தெரிய வேண்டாம்.”
“அப்படியே.”
“நான் அருகில் இல்லா விட்டால், கண்ணில் தென்படாவிட்டால் கோபப்படக் கூடாது.”
“ஊஹும். கோபப்பட மாட்டேன்.”
அவன் இதழ்கள் அவள் நெற்றியில் மென்மையாகப் பதிந்தன.
ஹேமா திடீரென்று அவன் கழுத்தைச் சுற்றிலும் கைகளை மாலையாகப் போட்டுக்கொண்டு முகத்தை உயர்த்தினாள்.
சற்று நேரம் கழித்து கார் கடற்கரைச் சாலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தது.
விஜய் டிரைவ் செய்து ஒன்டிருந்தான். ஹேமா பக்கத்தில் அமர்ந்திருந்தாள். விஜயின் கை ஹேமாவின் கையைப் பற்றியிருந்தது.
ஹேமா அடிக்கடி கழுத்தில் இருந்த செயினை கையால் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள். நடு நடுவில் விஜயைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
விஜயும் தலையைத் திருப்பிப் பார்த்தான். அவனுக்குப் புரிந்தது. கடவுள் தன்பால் கருணைகாட்டி மென்மையான ஒரு இதயத்தை தனக்கு வரமாகக் கொடுத்திருக்கிறார். தான் இத்தனை அதிர்ஷ்டகாரன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. ஆனால்… ஆனால் துரதிர்ஷ்டம் தன்னை விட வில்லை. விஜய் பெருமூச்சு விடுத்தான்.
அத்தியாயம்-14
“விஜய்!” பின்னாலிருந்து யாரோ அழைக்கும் குரல் கேட்டது.
அறையில் மேஜையருகில் உட்கார்ந்து கொண்டு வங்கிக்கு வேண்டிய செக்குகளை எழுதிக் கொண்டிருந்த விஜய் தலையைத் திருப்பிப் பார்த்தான். எதிரே தீட்சிதர் நின்றிருந்தார். விஜய் எழுதிக் கொண்டிருந்ததை நிறுத்தி விட்டான். பேனாவை மூடி விட்டு எழுந்து நின்று கொண்டான்.
தீட்சிதர் உள்ளே வந்தார்.
“என்ன செக் அது?” மேஜை மீது இருந்த செக் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டார்.
“வங்கிக்கு அனுப்ப வேண்டிய தவணைக்கான செக்.”
உள்ளே வந்தவர் கட்டில் மீது அமர்ந்து கொண்டார். தோளிலிருந்து நழுவப்போன அங்கவஸ்திரத்தைச் சரியாக போட்டுக்கொண்டே, “உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டுமென்று வந்தேன்” என்றார்.
விஜய் உட்கார்ந்து கொண்டான். அவன் முகம் எப்பொழுதும் போலவே கம்பீரமாய் இருந்தது.
“எனக்கும் வயதாகி விட்டது. ஆனந்தைப் பார்த்தால் உடல்நலம் சரியில்லாதவன்.
விஜய் கேட்டுக் கொண்டிருந்தான்.
“இந்த வீட்டு விவகாரங்களைப் பார்த்துக் கொள்வதற்காக ஒரு மேனேஜரைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.”
விஜய் பேசவில்லை. அவன் முகத்தில் கம்பீரம் கொஞ்சம்கூட குறையவில்லை. கையிலிருந்த பேனாவை மேஜை மீது செக் புத்தகத்தின் பக்கத்தில் வைத்து விட்டான்.
அவர் விஜய் முகத்தையே கவனமாய் பரிசீலித்துக் கொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்தது போல் திடுக்கிடலோ, கோபமோ, வியப்போ எதுவும் அந்த முகத்தில் தென்படவில்லை.
“பதினெட்டு வருடங்களாக நீ எனக்கு இந்த வீட்டுப் பொறுப்புகளில், முக்கியமாக ஆனந்த் விஷயத்தில் ரொம்ப உறுதுணையாக இருந்து வந்தாய். ஆனந்த் பெரியவனாகி விட்டான். நீயும் ஒரு நிலைக்கு வந்து விட்டாய். என்னால் முடிந்த வரையில் உன்னை நன்றாகவே கவனித்து வந்தேன். எம்.ஏ. வரையில் படிப்பு சொல்லிக் கொடுத்தேன். இத்தனை நாள் உணவுக்கும், உடைக்கும் குறையில்லாமல் பார்த்துக் கொண்டேன்.”
இந்தச் சொற்களைக் கேட்டதும் விஜய்க்கு விஷத்தை விழுங்குவது போல் வேதனை ஏற்பட்டது.
தீட்சிதர் சமயம் பார்த்து நடுநடுவில் இந்த வார்த்தையை நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பார்.
“உன்னைப்பற்றிய என் கடமை முடிந்தது. அதே போல் இந்த வீட்டைப் பொறுத்த வரையிலும், ஆனந்த் பொறுத்த வரையிலும் உன் கடமை முடிந்து விட்டது. நீ மட்டும் எத்தனை நாட்களுக்கு இந்த வீட்டுக்காக உன் வாழ்க்கையைத் தாரை வார்ப்பாய்? உன் வாழ்க்கையை நீ பார்த்துக்கொள்ள வேண்டும். ஏதோ பெரியவன் என்ற முறையில் நான் இருப்பதால் இன்னி வரையில் ஓடிவிட்டது. நாளைக்கு ஆனந்துக்குத் திருமணம் ஆகிவிட்டால் ஏதாவது பிரச்னைகள் வரலாம். அதனால் முன்னாடியே…” அவர் ஒரு நிமிடம் நிறுத்தினார்.
விஜய் காத்திருந்தான்.
“நீயும் ஒரு வழியைப் பார்த்துக்கொள்வது நல்லது. என்ன சொல்கிறாய்?”
“ஆனந்திடம் ஒரு முறை பேசிவிட்டு…” விஜய் சொல்லிக் கொண்டிருந்தபோதே அவர் விருட்டென்று எழுந்தார்.
“அதோ… அந்த வார்த்தைதான் எனக்குப் பிடிப்பதில்லை. நீ இல்லாவிட்டால் தான் உயிரோடு இருக்க முடியாது என்ற அளவுக்கு ஆனந்த் மீது உன் பாதிப்பை ஏற்படுத்தி விட்டாய். ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிடம் கேட்டுக்கொண்டுதான் செய்ய வேண்டும் என்று சொல்வான். நீ இல்லாமல் இருக்க முடியாது என்பான். விஷயம் தெரிந்தால் உன்னை வாசற்படியைத் தாண்ட விடமாட்டான்.”
அவர் வாயிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த சொற்கள் இடிமுழக்கம் போல் ஒலித்துக் கொண்டிருந்தன. நழுவப் போன அங்கவஸ்திரத்தை வேகமாய் மேலே இழுத்துக்கொண்டு, “இதில் ஆனந்தின் பிரஸ்தாபனையே இல்லை. உன்னை இந்த வீட்டிலிருந்து போகச் சொல்வதும் ஆனந்தின் நலத்திற்காகத்தான். நீ நிஜமாகவே ஆனந்தின் நலனை விரும்புகிறவனாக இருந்தால் மறுபேச்சு பேசாமல் போய் விடுவாய். ஆனந்தைப் பொறுத்தவரையில் நீயாகப் போய் விட்டது போல் இருக்க வேண்டும். உன் விருப்பத்தை அவன் கனவில்கூட மறுக்க மாட்டான். ஏதாவது வேலையைத் தேடிக்கொள். போய் விடு. உன்னைக் கையெடுத்துக் கும்பிடுகிறேன். இந்த வீட்டிலிருந்து, ஆனந்தின் வாழ்க்கையிலிருந்து போய்விடு.” அருகில் வந்து கைகளைக் கூப்பினார். “ஆனந்துக்கு உன்னிடமிருந்து விடுதலை கொடு. நான் எத்தனை வேதனைப் படுகிறேன் என்று அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். ஆனந்துக்காக எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், அவனுக்குப் பக்கத்தில் இருக்கும் உன்னைத்தான் கேட்கிறார்கள். இதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை.”
அவர் கண்கள் சிவந்து விட்டன. சுட்டு விரலை உயர்த்தி விஜய் பக்கம் நீட்டினார். “அன்று நாதியத்தவன் என்றும், ஆனந்துக்குத் துணையாக இருப்பாய் என்றும் ஆசைப்பட்டு உன்னை அழைத்து வந்தேன். இன்று ஆனந்துக்கு உயிராக மாறிவிட்டு, அதிகாரம் முழுவதும் உன் கையில் எடுத்துக்கொண்டு விட்டாய். தான் எதை இழந்துகொண்டிருக்கிறோம் என்று அந்தப் பைத்தியக்காரனுக்குப் புரியவில்லை.” அவர் அங்கவஸ்திரத்தை எடுத்துவிட்டு மார்பில் படார் படாரென்று அறைந்து கொண்டார்.
“அது வரையில் கூட பரவாயில்லை. ஆனால் பயங்கரமான எதிர்காலம் என் கண்களுக்கு முன்னால் தென்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனந்துக்காக நான் கஷ்டப்பட்டு தேடி நல்ல பெண்ணாகத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து வைத்தால் அந்தப் பெண்கூட விட்டில்பூச்சியைப் போல் உன்பால் ஈர்க்கப்பட்டு விடுவாள். நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது. எப்படிப் போவாயோ எனக்குத் தெரியாது. போய் விடு… உடனே போய்விடு. ஆனந்தின் திருமணம் நடப்பதற்கு முன்பே நீ இந்த வீட்டிலிருந்து போய்விட வேண்டும். நேற்று இரவிலிருந்து எனக்குத் தூக்கமே இல்லை. தண்ணீர் கூட குடிக்கப் பிடிக்கவில்லை. ஆனந்த் என்ன சொல்கிறான் தெரியுமா? அவன் திருமணம் செய்து கொள்ள மாட்டானாம். உனக்கும், உன்ன மனைவிக்கும் தான் ஒரு மகனாய் வாழ்க்கையைக் கழித்து விடுவானாம். உன்னை மட்டுமே இல்லை. உனக்கு மனைவியாக வரப் போகிறவள். அவள் யாராக இருந்தாலும் சரி அவனுக்குப் பிடிக்குமாம். என்னை வாயைத் திறக்கக் கூடாது என்று சொல்கிறான். இனி அவனுக்காக எந்தப் பெண்ணையும் பார்க்க வேண்டாம் என்று சொல்கிறான். நீ அவனை விட்டுவிட்டுத் தொலைவாகப் போய் விட்டால் ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து ஆனந்துக்குத் திருமணம் முடிப்பேன். அவனும் மற்றவர்களைப் போல் மனைவி, மக்களுடன் சந்தோஷமாய் வாழ்க்கை நடத்துவான். இப்போ அவனுக்கு உன்னைப் பற்றிய யோசனைதான். எங்கே உனக்கு அநியாயம் நடந்து விடுமோ என்று கவலைப்பட்டுக்கொண்டே இருக்கிறான்.
நீ ரொம்ப புத்திசாலி. நட்பு என்ற பெயரில் அவனைப் பைத்தியக்காரனாக ஆக்கி விட்டாய். அவனிடம் அன்பாக இருப்பதுபோல் நடித்துக்கொண்டே இந்த வீட்டின் அதிகாரத்தை உன் கைப்பிடியில் வைத்துக் கொண்டு விட்டாய். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். நீ போய் விடு. அதுவும் கூடிய சீக்கிரத்தில். உன் வெளியேற்றம் ரொம்ப இயற்கையாக இருக்க வேண்டும். நான் இப்படிச் சொன்னேன் என்று ஆனந்திடம் சொன்னாயோ… என் பிணத்தைத்தான் பார்ப்பாய். அன்று உன்னை அழைத்து வந்தபோது நீ இப்படி பூதமாய் மாறி என் முதுகில் ஏறி என்னையே பிடுங்கி தின்பாய் என்று நினைக்கவில்லை. இனிமேலாவது என்னைப் பிடித்த சனி விலக வேண்டும். எல்லோரின் கண்களுக்கு ஆனந்த் ஆனந்த் போல், என்னுடைய பேரனாகத் தென்பட வேண்டும். உன்னுடைய நிழலாக இல்லை!!”
அவர் வேகமாய் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
அத்தியாயம்-15
அறையிலிருந்த நிசப்தம் விஜயின் முகத்தைப் பார்த்து நடுங்கிக் கொண்டிருப்பது போல் இருந்தது. காற்றுகூட அவனைப் பிரியத்துடன் தொட நினைத்து பயந்து போய் கதவு அருகிலேயே நின்று விட்டது. விஜயின் கைகள் மேஜையின் விளிம்பைப் பலமாக பற்றிக்கொண்டன. ஆயிரம் கசையடிகளை மௌனமாக தாங்கிக்கொண்டதுபோல் அவன் முகத்தில் வேதனை பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
தான் இந்த வீட்டை விட்டுப் போய்விட வேண்டும். அது அவர் தனக்கு விதித்த தண்டனை. குழந்தைத்தனம் மாறாத, நிர்மலமான ஆனந்தின் முகம் அவன் கண்கள் முன் நிழலாடியது.
“விஜய்! என்னை விட்டுப் போகப் போகிறாயா?” என்று கேட்பது போல் இருந்தது.
விஜய் பெருமூச்சு விடுத்தான். இந்த வெளியேற்றத்தைத் தவிர்க்க முடியாது. தீட்சிதரின் மனதில் இருக்கும் பயம் புரிந்த பிறகு இந்த சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடாது என்று தோன்றது. விஜய் உட்கார்ந்துகொண்டு தலையைப் பிடித்துக் கொண்டான். நெற்றிப்பொட்டில் நரம்புகள் துடித்துக் கொண்டிருந்தன. தன்னால் போய் விட முடியும். ஆனால் ஆனந்துக்குப் புரியாது. அது போன்ற யோசனையே அவனுக்கு வராது. தீட்சிதர் எத்தனையோ முறை அவமானப் படுத்துவது போல் பேசியிருக்கிறார். ஆனால் இன்று… இன்று ஆனந்துக்கு மனைவியாக வரப் போகிறவளை, யாரென்று கூடத் தெரியாத அந்த அப்பாவியையும் தன்னையும் இணைத்து…
விஜய் கண்களை மூடிக் கொண்டான். பற்களால் கீழ் உதட்டை அழுத்திக் கொண்டான். அவனால் இந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
திடீரென்று அவனுக்கு ஹேமாவிடம் போய் விட வேண்டும் போல் தோன்றியது. அவள் மடியில் தலையைச் சாய்த்துக் கண்களை மூடிக் கொண்டாலாவது இந்த நரகத்திலிருந்து விடுதலை கிடைக்காதா?
விஜய் கண்களைத் திறந்து சரியாக உட்கார்ந்து கொண்டான். தான் எவ்வளவு தவறாக யோசித்துக் கொண்டிருந்தோம்? ஆனந்தால் இதைத் தாங்க முடியுமா? ஊஹூம்… இந்தப் பிரச்னையைத் தான்தான் தீர்க்க வேண்டும். ஏதாவது வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும். ஹேமா தன் வாழ்க்கையில் நுழைந்து விட்டாள் என்று ஆனந்திடம் சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் தான் இப்போ வெளியேறி விட்டால் அதற்குக் காரணம் ஹேமாதான் என்று முடிவு கட்டி விடுவான். நேராக ஹேமாவின் வீட்டுக்குப் போய் அவளை அவமானப்படுத்துவதுபோல் பேசி விடுவான். ஹேமாவை இந்தக் கஷ்டங்களிலிருந்து தொலைவாக வைக்க வேண்டும். தன்னை நேசிப்பவர்களை அவமானப்படுத்தும் உரிமை தனக்கு இல்லை. விஜய்க்கு ஒரு விஷயம் மட்டும் நன்றாகப் புரிந்தது. தன்னால் இப்போதைக்கு ஹேமாவைத் திருமணம் செய்து கொள்ள முடியாது.
காலிங்பெல் ஒலித்தது. நர்சிங்ஹோமுக்குப் போவதற்காக ஏற்கனவே தாமதமாகி விட்டதென்று மளமளவென்று தாயாகிக் கொண்டிருந்த ஹேமா வாசற்கதவைத் திறந்தாள்.
எதிரே விஜய்!
“ஓஹ்!” ஹேமாவின் கண்கள் மகிழ்ச்சியால் மின்னின.
“பிசியா?” விஜய் கேட்டான்.
“நோ…” என்று சொல்லிக்கொண்டே வழியை விட்டு விலகினாள். விஜய் உள்ளே வந்தான்.
“கொஞ்சம்நேரம் நான் உட்கார்ந்து கொள்ளலாமா? ரொம்ப நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன்.”
“நோ… நோ…” மகிழ்ச்சியின் மிகுதியில் உரத்தக் குரலில் சொன்னாள் ஹேமா. “கொஞ்ச நேரமா? ஒரு மாதத்திற்குப் பிறகு சந்தித்துக் கொள்கிறோம். எனக்கு நிறைய பேச வேண்டும். ஒரு நிமிடம்… இதோ வந்து விடுகிறேன்.” சொல்லிக்கொண்டே போன் அருகில் ஓடினாள்.
டயல் செய்து, “சுகுணா! என்னால் ட்யூட்டிக்கு வர முடியாது. இன்று ஒரு நாள் மட்டும் என் ட்யூட்டியை நீயே பார்த்துக்கொள். ஓ.கே. தானே” என்று போனை வைத்து விட்டாள்.
விஜய் பிரீப்கேஸைத் திறந்து கவரை எடுத்துக் கொடுத்தான். “இதை அம்மாவிடம் கொடுக்க வேண்டும். வங்கியின் டிரஸ்ட் மெம்பர் கொடுத்து அனுப்பினார்” என்றான்.
“அம்மா இல்லை. உறவினர் வீட்டு திருமணத்திற்காகப் பெங்களூர் சென்றிருக்கிறாள்.” ஹேமா சொன்னாள்.
“லோன் சாங்க்ஷன் ஆகிவிட்டது. நிலத்தை வாங்கி விட்டேன்.” விஜய் சொன்னான்.
“அந்த வேலையில் பிசியாக இருந்ததால் ஒரு முறை கூட என்னைப் பற்றிய நினைவு உங்களுக்கு வரவில்லை. அப்படித்தானே?” என்றாள்.
இல்லை என்பது போல் விஜய் தலையை அசைத்தான்.
ஹேமா எழுந்து போய் வாசற்கதவைச் சாத்திவிட்டு வந்தாள்.
“விஜய்!!” திடீரென்று சோபாவின் அருகில் அவன் காலடியில் முழங்காலில் அமர்ந்து கொண்டாள். அவன் கையை இரு கரங்களால் பற்றிக்கொண்டே சொன்னாள்.
“விஜய்! நேராக ஊருக்கு வந்து உன்னைச் சந்திக்க வேண்டுமென்றும், போனாவது செய்ய வேண்டும் என்றும் எத்தனையோ முறை தோன்றினாலும், உனக்கு ஏதாவது இடைஞ்சல் ஏற்படுமோ என்று கட்டுப்படுத்திக் கொண்டேன். அது எனக்கு எவ்வளவு வேதனையாக இருந்தது தெரியுமா?” சொல்லிக்கொண்டே அவன் மடியில் முகத்தை புதைத்துக் கொண்டாள். “அம்மாவிடம் சொல்லி விட வேண்டும் என்றும், அம்மாவே போய் உங்கள் வீட்டில் பேசினால் நன்றாக இருக்குமென்றும் நினைத்தேன். ஆனால் உன்னிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு மேற்கொண்டு செயல்படுவதுதான் மரியாதை என்று தோன்றியது” என்றவள் அவன் இடுப்பைச் சுற்றிக் கைகளைப் பிணைத்துக் கொண்டாள். “விஜய்! அம்மா நாளைக்கு வந்து விடுவாள். அவள் வரும் வரை நான் உன்னை போக விட மாட்டேன்.”
விஜய் கண்களை மூடிக்கொண்டான். அவனுக்கு ஏனோ நிம்மதியாக இருந்தது. மனதில் எங்கேயோ ஆழமாகப் பட்ட காயத்திற்கு ஹேமாவின் சொற்கள் மருந்து தடவியது போல் இருந்தன. தீட்சிதர் கடுமையாக எச்சரித்து விட்டுப் போன இந்த பதினைந்து நாட்களுக்குள் அவன் மனதளவில் ரொம்ப களைத்துப் போயிருந்தான். ஹேமாவின் நெருக்கம் அவனுடைய களைப்பைப் போக்குவதுபோல் இருந்தது. தன்னுடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம், மதிப்பு இருப்பது போல் தோன்றியது.
“ஹேமா!” ஹேமாவின் தலை மீது கையை வைத்து கோதிக் கொண்டிருந்தவன் திடீரென்று நின்று விட்டான். தான் வந்த காரியம் என்ன? செய்கிற காரியம் என்ன? இது வரையில் அவன் கஷ்டப்பட்டு ஏற்படுத்திக்கொண்ட சுய கட்டுப்பாடுகள் எல்லாம் ஹேமாவின் விஷயத்தில் மாயமாய் மறைந்து போவானேன்?
அவன் நிமிர்ந்து சரியாக உட்கார்ந்து கொண்டான். மெதுவாகத் தன் இடுப்பைச் சுற்றிப் பின்னியிருந்த ஹேமாவின் கைகளை விடுவித்தான். அவள் கைகளைப் பற்றி எழுப்பினான். ஹேமா எழுந்து சோபாவில் அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
மறு நிமிடம் அவள் தலை அவன் தோள் மீது சாய்ந்தது. “விஜய்!” உள்ளங்கையை அவன் முன்னாள் நீட்டினாள். “என்னை ஒரு முறை நன்றாக கிள்ளு. நீ வந்தது கனவுபோல் தோன்றுகிறது. இந்த ஒரு மாதமாய் உனக்காக ரொம்ப எதிர்பார்த்தேன். எவ்வளவு எதிர்பார்த்தேன் என்றால் இனி நீ வரமாட்டாய் என்று முடிவு செய்து விட்டேன். உனக்கு வேறு பெண்ணுடன் ஏதோ பலமான காரணங்கள் இருப்பதால் திருமணம் நடந்து முடிந்திருக்கும் என்று கூட நினைத்தேன்.”
விஜயின் இதழ்களில் புன்முறுவல் மலர்ந்தது.
“எனக்கு எதுவும் தோன்றவில்லை. நர்சிங்ஹோம் போகக் கூட பிடிக்கவில்லை. ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டேன். வீட்டில் இருந்தால் பொழுது போகவில்லை. வெளியில் போனாலும் மனதிற்கு அமைதி கிடைக்கவில்லை. சினேகிதிகள் வந்தால் அவர்களுடன் கலகலப்பாக பழக பிடிக்கவில்லை. ஒரு நாளும் எனக்கு இப்படித் தோன்றியதில்லை. ஒரு நாள் உறக்கம் வராமல் கட்டில்மீது அமர்ந்திருந்தேன். அம்மா வந்தாள். “என்ன ஆச்சு பேபி? ரெஸ்ட்லெஸ்ஸாக இருக்கிறாய்?” என்று கேட்டாள்.
“ஒரு பிரண்டை பார்க்க வேண்டும்போல் இருக்கிறது” என்றேன். “இவ்வளவுதானா… போய் விட்டு வாயேன்” என்றாள்.
“நானா?”
“யாரென்று சொல்லு. காரை அனுப்பி வரவழைக்கிறேன்” என்றாள்.
அது நீதான் என்று சொல்லிவிட வேண்டுமென்று நாக்கின் நுனி வரை வந்த வார்த்தையைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். இந்த விஷயத்தை நீ தான் அம்மாவிடம் சொல்ல வேண்டும். அந்த மகிழ்ச்சியே வேறு. நான் ரொம்ப மாறிப்போய் விட்டேன். இதுவரையில் அம்மாவிடம் எல்லாவற்றையும் சொல்லி விடுவேன் மகிழ்ச்சியாக இருந்தாலும் துக்கமாக இருந்தாலும் அம்மாவுடன் பகிர்ந்துகொள்வதுதான் என் வழக்கம். ஆனால் இப்போ அப்படி தோன்றுவதில்லை. சந்தோஷமாக இருந்தாலும் வேதனையாக இருந்தாலும் உன்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.” ஹேமா தன் சுட்டு விரலால் அவன் மார்ப்பைச் சுட்டிக் காட்டினாள்.
விஜய் அந்த கையைப் பற்றிக்கொண்டு மார்போடு இணைத்துக் கொண்டான். “என்ன விஜய்? எதைப்பற்றி யோசிக்கிறாய்?” ஹேமா கேட்டாள்.
“நான் எவ்வளவு துரதிர்ஷ்டசாலி என்று.”
“ஏன் இப்படிச் சொல்கிறாய்?”
“மனப்பூர்வமாக நேசிக்கும் பெண்ணை உடனே திருமணம் செய்துகொண்டு கையோடு அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்பதால்.”
ஹேமாவின் முகம் மலர்ந்தது. அவன் தோளில் மறுபடியும் தலையைச் சாய்த்துக் கொண்டாள்.
ஒரு நிமிடம் இருவரும் அடுத்தவரின் ஸ்பரிசத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவத்தில் உணருவதுபோல் அப்படியே இருந்து விட்டார்கள்.
அதற்குள் போன் ஒலித்தது. ஹேமா அவனை விட்டு விலக மனம் இல்லாமலேயே எழுந்து போனாள்.
ரிசீவரை எடுத்து, “மம்மி இல்லை. நாளை வருவாள். விஷயத்தைச் சொல்லுங்கள். நோட் செய்து கொள்கிறேன். அம்மா வந்ததும் உங்களுக்கு போன் செய்யச் சொல்கிறேன்” என்றவள் மறுமுனையில் சொல்லப்பட்ட தகவலை நோட் செய்து கொண்டு போனை வைத்து விட்டாள்.
“சாரி, காபி கலந்து தருகிறேன்.” சமையலறை பக்கம் போகப் போனாள். “ஹேமா! வேண்டாம்.” மறுப்பது போல் சொன்னான்.
“சமைக்கவே இல்லை. சமையல்கார அம்மாள் இன்று விடுமுறை. எங்கேயாவது வெளியில் போய் சாப்பிடுவோமா?”
அவன் தலையை அசைத்தான்.
பத்து நிமிடங்கள் கழித்து இருவரும் கிளம்பினார்கள். குன்று மீது இருந்த ‘ராக் காஸல்’ ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்தார்கள்.
சாப்பிடும் போது ஹேமா தன்னுடைய எதிர்கால திட்டங்களைப் பற்றிச் சொன்னாள்.
“என்னுடைய கிளாஸ்மேட் உஷாவும் நானும் சேர்ந்து இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்குள் சொந்தமாக ஒரு நர்சிங்ஹோம் நிறுவ வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தோம். அப்போ நான் திருமணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால் இப்போ என்னுடைய எண்ணங்கள் மாறிவிட்டன. யாராக இருந்தாலும் தன்னுடைய தொழிலைப்பற்றி ப்ளான் செய்யும் போது திருமணத்திற்குப் பிறகா முன்னாடியா என்று யோசிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் திருமணம், குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அதிகம். அதனால் கூடிய சீக்கிரத்தில் நாமிருவரும் திருமணம் செய்து கொண்டால்…”
ஹேமா படித்த பெண். தன்னைப் பற்றியும், தன் எதிர்காலத்தைப் பற்றியும் திடமான அபிப்பிராயங்களை வைத்திருப்பவள். வெளிப்படையாகப் பேசிக் கொண்டிருந்தாள்.
இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள். பேரர் ஐஸ்க்ரீமை கொண்டு வந்து இருவருக்கும் முன்னால் வைத்தான்.
“ஹேமா!” விஜய் அழைத்தான்.
“ஊம்.”
“நான் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும்.”
அவன் ஐஸ்க்ரீமை ஸபூனால் எடுத்து சாப்பிடப் போனான். ஸ்பூனை உதட்டிற்கு அருகில் கொண்டு போகும் போது ஹேமா அவன் கையைப் பற்றி தடுத்து நிறுத்தி தன் உதட்டருகில் கொண்டு வந்தாள். தன்னுடைய ஸ்பூனால் ஐஸ்க்ரீமை எடுத்து அவனுக்கு ஊட்டினாள்.
“என்ன விஷயம்?” என்றாள்.
“நம்முடைய திருமணம் இப்போதைக்கு நடைபெற முடியாது.”
“எதனால்?”
அவனால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.
“எனக்குத் தெரியும்” என்றாள்.
அவன் கேள்விக்குறியுடன் பார்த்தான்.
“ஆனந்தின் திருமணம் முடிந்தால் தவிர நம் திருமணம் நடைபெற வாய்ப்பு இல்லை. அப்படித்தானே!”
“ஆனந்தைப் பற்றி உனக்கு…”
“ராதிகா சொல்லியிருக்கிறாள். எனக்கு முழுவதுமாகத் தெரியாவிட்டாலும் ஓரளவுக்கு விஷயம் தெரியும். ஆனந்த் உங்களுடைய நெருங்கிய நண்பன். அவனும் உங்களிடம் உயிர் வைத்திருக்கிறான்.”
விஜய் எளிதாக மூச்சை விட்டுக் கொண்டான். ஹேமாவுக்கு விலாவாரியாகச் சொல்ல வேண்டிய தேவையில்லை.
“திருமணத்தைத் தள்ளிப் போடுவதில் எனக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் நம்முடைய எங்கேஜ்மென்ட் முடிந்து விட வேண்டும். நாம் அடிக்கடி சந்தித்துக் கொள்வது உலகத்தாரின் பார்வையில் வேறு விதமான எண்ணங்களுக்கு இடம் அளிக்கக் கூடாது.’
சாப்பிட்டு முடித்ததும் இருவரும் பார்க்கில் உட்கார்ந்து கொண்டார்கள்.
மரத்தின் கீழே பழுத்த இலைகள் உதிர்ந்து கிடந்தன. சின்னக் குழந்தைகள் காய்ந்த இலைகள் மீது ஓடி அவை சலசலப்பதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தார்கள்.
“விஜய்!” ஹேமா அழைத்தாள்.
அவன் திரும்பிப் பார்த்தான்.
ஹேமா சின்னக் குழந்தைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள். “உனக்குக் குழந்தைகள் என்றால் பிடிக்குமா?” தாழ்ந்த குரலில் கேட்டாள்.
“ரொம்ப…” அவனும் குரலைத் தாழ்த்தி பதில் சொன்னான்.
“அந்தக் குழந்தை ரொம்ப அழகாக இருக்கிறாள் இல்லையா?” என்றாள். “ஆமாம்.”
ஹேமாவின் கை அவன் கை மீது படிந்தது. அந்த தொடுகை அவனுக்கு உயிர் தருவது போல், இந்த உலகில் இருக்கும் வேதனைகளை எல்லாம் சகித்துக்கொள்ளும் சக்தியைத் தருவது போல் இருந்தது. ஆனால் ஹேமாவின் கையைத் தன் கையில் எடுத்துக் கொள்ளாமல் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.
“நான் இன்று இரவு கிளம்புகிறேன்.” விஜய் சொன்னான்.
“ரயில் எத்தனை மணிக்கு? எப்போ கிளம்பணும்?” பதற்றத்துடன் கேட்டாள். “இன்னும் சரியாக அரைமணியில். 6:30 மணிக்கு ரயில் இருக்கிறது.” ஹேமா கடியாரத்தைப் பார்த்தாள். “நேரமாகி விட்டது” என்றாள்.
“பரவாயில்லை. இருபது நிமிடங்களில் ரயில் நிலையத்திற்குப் போய் விட முடியும்.”
“இன்று போய்த்தான் ஆக வேண்டுமா?’
“வேறு வழியில்லை.”
“அப்போ கிளம்பு. உன்னை ஸ்டேஷனில் இறக்கிவிட்டுப் போகிறேன்” என்றாள். “நானே போய் விடுவேன்.”
“ப்ளீஸ்! வேண்டாமென்று மறுக்காதே. நீ இந்த ஊரில் இருக்கும் குறைவான நேரத்தில் உன்னுடனே இருக்கும் வாய்ப்பு எனக்குக் கொடு.”
அவனால் மறுக்க முடியவில்லை.
ஹேமா விஜயை ரயில் நிலையத்தில் இறக்கி விட்டாள். பிளாட்பாரத்தின் மீது ரயில் புறப்படத் தயாராக இருந்தது. விஜய் ரயிலில் ஏறப் போனவன் திரும்பி ஹேமாவின் பக்கம் பார்த்தான்.
“போய் வருகிறேன் ஹேமா!” அவன் கண்கள் ஹேமாவின் முகத்தையே அபூர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தன.
“மறுபடியும் எப்போ வருகிறாய்?”
அவன் சட்டைப் பையிலிருந்து கவரை எடுத்துக் கொடுத்தான். “இதைப் படி.”
ஹேமா சந்தோஷமாக வாங்கிக் கொண்டாள்.
“அம்மாவை எப்போ சந்திக்கப் போகிறாய்?” என்று கேட்டாள்.
ரயில் நகர்ந்து கொண்டிருந்தது.
விஜய் ஹேமாவின் கையைப் பற்றி அழுத்தினான்.
“என்ன?” என்றாள் ஹேமா.
விஜய் ஹேமாவின் கையை விட்டு விட்டான். சட்டென்று நகரும் ரயிலில் ஏறிக்கொண்டான்.
“சீக்கிரமாய் வந்து விடு.” நகரும் ரயிலுக்குச் சமமாய் நடையை எட்டிப் போட்டுக்கொண்டே சொன்னாள்.
“விஜய்!” என்று கையை நீட்டினாள். விஜயும் கையை நீட்டினான். ஹேமா அந்தக் கையைப் பிடித்துக் கொண்டாள்.
ரயில் வேகத்தை எட்டியது. ஹேமா கையை விட்டு விட்டாள். விஜய் ஹேமாவை, ஹேமா விஜயைக் கண் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.
ரயில் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது.
விஜய் ஜன்னல் அருகில் உட்கார்ந்து கொண்டு வெளியில் பார்த்துக் கொண்டிருந்தான். மரங்கள், மின்சாரக் கம்பங்கள் எல்லாம் வேகமாய் பின்னோக்கிப் போய்க் கொண்டிருந்தன.
விஜய் பெருமூச்சு விட்டான். தான் கொடுத்த கடிதத்தை ஹேமா உடனே படிப்பாள் என்று அவனுக்குத் தெரியும். கடிதத்தைக் கொடுத்ததும் ஹேமாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி நினைவுக்கு வந்தபோது அவனுக்கு வேதனையாக இருந்தது. அந்தக் கடிதத்தைக் கொடுப்பதற்காகத்தான் அவன் அந்த ஊருக்கு வந்தான். ஹேமாவிடம் சுயமாகச் சொல்ல வேண்டும் என்று முயற்சி செய்தான். சாத்தியப்படவில்லை. நன்றாக யோசித்து கடிதம் எழுதினான். கடிதத்தில் தன் மனதில் இருப்பதை விவரமாக எழுதி விட்டான். தன் கடமையைச் செய்து விட்டான். கடிதத்தில் அவன் எழுதிய வரிகள் அவன் கண்முன்னே தோன்றின.
டியர் ஹேமா,
இந்த கடிதத்தைச் சுயமாய் உன்னிடம் தருவதற்காகத் தான் வந்தேன். தபாலில் அனுப்பும் தெரியம் எனக்கு இல்லாமல் போய் விட்டது. ஹேமா! நம் திருமணம் எந்த சூழ்நிலையிலும் நடைபெற வாய்ப்பு இல்லை. வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க முடிவு செய்து விட்டேன். காரணம் என்னவென்று கேட்காதே. என்னுடைய இந்த முடிவுக்கு யாரும் பொறுப்பு இல்லை. தயவு செய்து இந்த விஷயத்தில் மேற்கொண்டு எந்த பேச்சும் வேண்டாம். உன்னை எவ்வளவு வேதனைப் படுத்துகிறேன் என்று எனக்குத் தெரியும். அதான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. எனக்குக் கடிதம் எழுதுவதோ, போன் செய்வதோ, என்னைப்பற்றி நினைப்பதோ கூடாது. எனக்கு விருப்பம் இல்லை. நம்முடைய அறிமுகம் இத்துடன் முடிந்து விட்டது.
விஜய்
விஜய் பெருமூச்சு விட்டான். தன்னுடைய கடமையை நிறைவேற்றி விட்டான். தனக்கு ஹேமா என்றால் ரொம்ப பிடிக்கும். ஹேமாவைத் தன்னுடைய பிரச்னைகளுடன் இணைப்பதில் அவனுக்கு விருப்பமில்லை.
அவள் எதிர்பார்த்த வாழ்க்கையைத் தன்னால் தர முடியாது. ஹேமா தன்னை முழுவதுமாகக் கணவனுக்கு அர்பணித்துக் கொள்வாள். ஆனால் தன்னால் அப்படி முடியாது. வீட்டை விட்டு வெளியேறி விடவேண்டும் என்று தீட்சிதர் சொல்லிவிட்டார். போகாமல் இருக்க முடியாது. இதன் விளைவு ஆனந்த் மீது எப்படியிருக்குமோ? எப்படி இருந்தாலும் தான் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். தன்னால் இனி அந்த வீட்டில் இருக்க முடியாது. ஒவ்வொரு நிமிடமும் தீட்சிதர் தன் பார்வையால் அவனுடைய ஒவ்வொரு அசைவையும் வேட்டையாடிக் கொண்டிருந்தார். ஆனந்தை எப்படி சம்மதிக்க வைப்பது என்பதுதான் இப்போ முக்கியமான பிரச்னை. எத்தனை பெரிய துரதிர்ஷ்டம் தன்னுடையது? தேவதை போன்ற தாய்! அவன் சிறுவயதில் இருக்கும் போதே தூக்குப் போட்டுக்கொண்டு அவனைத் தனியனாக்கி விட்டாள். மகனைப் பற்றி யோசிக்கவே இல்லை. பத்து வயது சிறுவன் தன் மனிதர்கள் என்று யாருமே இல்லாமல், பணமும் இல்லாமல் இந்த உலகில் வாழ்வதற்கு எத்தனை கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று அவள் யோசிக்கவேயில்லை.
விஜய்க்கு அவளிடம் கோபம் வரவில்லை. வாழ்க்கையிடம் அவளுக்கு இந்த அளவுக்கு விரக்தி ஏற்பட காரணமாக இருந்த கஷ்டங்களை நினைத்தால் இரக்கம்தான் ஏற்படும். அவள் மட்டும் இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் பொறுமையாக இருந்திருந்தால் பொறுப்பை தன்னுடைய கைகளில் எடுத்துக் கொண்டிருப்பான். இப்போ பெரியவன் ஆன பிறகு ஆனந்தின் நட்பைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் இருக்கிறான். தன்னை மனதார நேசித்த ஹேமாவைச் சொந்தமாக்கிக்கொள்ள தன்னால் முடியவில்லை. தான் செய்த தவறு என்ன? கடவுள் தன் வாழ்க்கையில் மட்டும் அடிக்கடி இப்படி துயரத்தை நிரப்புவானேன்? விஜயின் தனிமை ஆயிரம் மடங்காகி விட்டது போல் இருந்தது.
அவன் கண்களுக்கு முன் மறுபடியும் அதே காட்சி…
தாயின் பிணத்தின் அருகில் பத்து வயது சிறுவன் இரவு முழுவதும் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். வெளியில் ஹோவென்று மழை பெய்து கொண்டிருந்தது. தூரத்து உறவினர்களுக்குத் தகவல் போயிருக்கிறது. அவர்கள் மனம் இறங்கி, அந்த மழையில் எரிச்சல் அடையாமல் வர வேண்டும். அவர்களின் வருகைக்காக காத்திருந்தான். எதிரே அன்பே உருவான தாயின் உடல். எங்கும் கற்பூரத்தின் நெடி. அந்த குளிர்ச்சி, கற்பூர நெடி மரணத்தின் தொடுகையைப் போல் இருந்தது. மழைக்கு மின்சாரம் போய் விட்டது. எழுந்து போகப் போனவன் தாயின் கால் பட்டு குப்புற விழுந்தான். சுவாமி அறையில் இருந்த பித்தளை விளக்கில் தாய் முதல் நாள் ஊற்றியிருந்த எண்ணெய் இருந்தது. திரியைப் போட்டு விளக்கை ஏற்றி அதைக் கொண்டு வந்து தாயின் தலைமாட்டில் வைத்தான். மழை இன்னும் வேகமாய் பெய்து கொண்டிருந்தது.
நள்ளிரவில், தாயின் பிணத்தை அப்படி பார்க்கும்போது அவன் கண்களிலிருந்து கண்ணீர் மடை திறந்த வெள்ளமாய் பெருகிக் கொண்டிருந்தது. அந்த பயங்கரமான தனிமை, பதினெட்டு வருடங்கள் கழிந்த பிறகும், வாழ்க்கையைத் தன் வசத்தில் எடுத்துக்கொண்ட பிறகும் தன்னைத் துரத்திக் கொண்டிருக்கிறது.
ரயில் வேகமாய் போய்க் கொண்டிருந்தது. விஜயின் கண்களுக்கு முன்னால் கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்த ஹேமாவின் முகம் தென்பட்டது.
தன்னுடைய வாழ்க்கையில் விடியல் ஏற்படப் போகும் சமயம். தானே கதவை இழுத்துச் சாத்தி விட்டான். இருட்டில் மறுபடியும் தனிமையுடன் போராட வேண்டிய நிலைமை. பிரியாத நிழலைப் போல் தன்னை இந்த தனிமை விடாமல் துரத்தி வருகிறது. இதுதான் தன்னுடைய வாழ்க்கை. அவனுக்குப் புரிந்து விட்டது. சிலருக்கு இன்று கஷ்டங்கள் இருக்கலாம். நாளைக்காவது நன்றாக இருக்காதா… கஷ்டங்கள் தீர்ந்து சுகமாக இருக்க மாட்டோமா என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் தனக்கு? நாளை இன்னும் எத்தனை கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டுமோ என்ற பயம்! சிலருடைய வாழ்க்கை இப்படித்தான்.
ரயில் போய்க் கொண்டிருந்தது. ஹேமாவை விட்டுத் தொலைவாக, சாசுவதமாக தன்னை அழைத்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தது. ஹேமாவை இனி எப்பொழுதும் சந்திக்க மாட்டான் சந்தித்தாலும் முன்பின் அறியாதவர்களைப் போல் இருப்பார்கள். பொறுமையாக இருந்ததற்கு, கஷ்டப்பட்டு வாழ வேண்டும் என்று கொள்கையைக் கடைப்பிடித்து வந்த தனக்கு விதி அளித்த பரிசு இது. கடவுள் கொடுத்த தீர்ப்பை அவன் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். விருப்பம் இருக்கா இல்லையா என்ற பிரஸ்தாபனையே இங்கு இல்லை. வேதனைப்பட்டுக்கொண்டு இருப்பதா…. இல்லை இது இவ்வளவுதான் என்று மனதைத் தேற்றிக்கொண்டு தைரியமாக வாழ்க்கையைத் தொடருவதா… இரண்டே வழிகள். விஜய் எப்போதும் இரண்டாவது வழியைத்தான் தேர்ந்து எடுப்பான். இப்பொழுதும் அதைத்தான் பின்பற்றினான்.
“விஜய்! விஜய்!” ஆனந்த் ஆஸ்பத்திரி படுக்கையில் படுத்துக்கொண்டு தூக்கத்திலேயே அழைத்துக் கொண்டிருந்தான். அவன் பக்கத்திலேயே நாற்காலியில் அமர்ந்திருந்த விஜய், “அனூ! அனூ!” என்று அவன் தலைமீது கையை வைத்துக்கொண்டே அழைத்தான்.
ஆனந்த் விஜயின் கையைப் பலமாகப் பற்றிக் கொண்டான்.
“என்னை விட்டுப் போகாதே விஜய்!” ஆனந்த் புலம்பினான்.
“எங்கேயும் போக மாட்டேன்.”
“எனக்குத் தெரியும் உனக்குத் தொல்லை தருகிறேன் என்று. நான் சீக்கிரமாகச் செத்துப் போனால் நன்றாக இருக்கும்.’
“அனூ! தூங்கு.” விஜய் ஆனந்தின் தலையைக் கோதிக்கொண்டே சொன்னான். “அனாவசியமான எண்ணங்களை உன் மனதில் வர விடாதே அனூ.’
ஆனந்த் தூக்க மயக்கத்திலே கண்களைத் திறந்தான் விஜயின் கையைப் பற்றிக்கொண்டு நெற்றி மீது வைத்துக் கொண்டான். “கடவுள் எனக்கு நல்ல உடல் வலிமையைத் தரயில்லை. அடடா! தவறு செய்து விட்டோமே என்று பச்சாத்தாபப்பட்டு உன்னைப் போன்ற நண்பனை எனக்குத் துணையாகக் கொடுத்திருக்கிறார். அப்படித்தானே! நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி இல்லையா.”
“தூங்கு அனூ!” விஜயின் குரல் கனிவுடன் ஒலித்தது.
“தூக்கம் வரவில்லை. பயமாக இருக்கிறது.” “பயமா? எதற்கு?’
“தூங்கிவிட்டால் மறுபடியும் விழிப்பே வராதோ என்று.”
“வேண்டாத யோசனை என்றால் இதுதான்.”
“அடிக்கடி எனக்கு இந்தப் பயம் வந்து கொண்டுதான் இருக்கிறது.”
“அனூ! ரிலாக்ஸ்! ஜஸ்ட் ரிலாக்ஸ்…” விஜய் குரல் மென்மையாய் ஒலித்தது. கதவு மீது யாரோ விரலால் தட்டிய சத்தம் கேட்டது.
ஆனந்த் விஜய் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். நர்ஸ் உள்ளே வந்தாள்.
“டாக்டர் வந்து கொண்டிருக்கிறாள்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஹேமா உள்ளே வந்தாள்.
“ஹௌ ஆர் யூ மிஸ்டர் ஆனந்த்?” கேட்டுக்கொண்டே அருகில் வந்தாள். விஜய் எழுந்து நாற்காலியை உட்கார்ந்து கொள்வதற்கு வசதியாக நகர்த்தினான்.
ஹேமா உட்காரவில்லை. ஆனந்தின் கையைப் பற்றிக்கொண்டு நாடியைப் பரிசீலித்தாள். ஸ்டெதஸ்கோப்பை மார்பின் மீது வைத்து பரிசோதித்தாள். ஆனந்த் ஹேமாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஹேமா அவனிடம், “பலவீனம் இன்னும் குறைய வில்லை. இப்போ ஒரு இஞ்செக்ஷன் தரச் சொல்கிறேன். கொஞ்சம் தெம்பு வரும்” என்றாள்.
“எங்க விஜய்.” கட்டில் கால்மாட்டில் கைகளைப் பின்னல் கட்டிக்கொண்டு
மௌனமாக நின்று கொண்டிருந்த விஜயைக் காண்பித்துக்கொண்டே சொன்னான் ஆனந்த்.
ஹேமா விஜய் பக்கம் பார்த்தாள்.
விஜய் மரியாதை நிமித்தம் புன்முறுவல் செய்தான்.
“குட் நைட் மிஸ்டர் ஆனந்த்!” ஹேமா போகும் போது சொன்னாள்.
“குட் நைட் டாக்டர்!” ஆனந்த் சொன்னான். நர்ஸ் அவனுக்கு இஞ்சனைக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“டாக்டர்!” ஹேமா வாசல் படியைத் தாண்டும் போது ஆனந்த் அழைத்தான். “யெஸ்!” ஹேமா திரும்பிப் பார்த்தாள்.
“மே ஐ நோ யுவர் நேம் ப்ளீஸ்?” ஆனந்த் கேட்டான்.
“ஹேமா…” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள்.
மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்த நர்சிடம், “சிஸ்டர்! அந்த மாத்திரைகளை நாளைக்குப் போட்டுக் கொள்கிறேன்” என்றான் ஆனந்த்.
“நாளைக்கா! உங்களுக்கு ஹேமா மேடம் பற்றித் தெரியாதா? சொன்ன பேச்சைக் கேட்காத நோயாளியை உடனே வீட்டுக்கு அனுப்பி விடுவாள்.”
“அப்படியா!” உடனே ஆனந்த் மறுபேச்சு பேசாமல் மாத்திரைகளைப் போட்டுக்கொண்டான்.
நர்ஸ் போய் விட்டாள்.
“என் கண்களுக்கு டாக்டர் ஹேமா தேவதை போல் தென்படுகிறாள்.” ஆனந்த் சொன்னான்.
“தூங்கு அனூ.” விஜய் நயமான குரலில் சொன்னான்.
பத்து நிமிடங்கள் கழித்து ஆனந்த் உறங்கி விட்டான்.
விஜய் ஜன்னல் அருகில் உட்கார்ந்து புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான். கௌண்டர் அருகில் இருந்த ஹேமா நோயாளி சீரியஸாக இருப்பதாகவும், உடனே வரச் சொல்லி யாருடனோ சொல்லிக் கொண்டிருந்தாள். சற்று நேரம் கழித்து விஜய் இருந்த அறையின் வாசல் வழியாய் நோயாளியை ஸ்ட்ரெச்சரில் அழைத்துப் போய்க் கொண்டிருந்தார்கள். ஹேமாவும் அவர்களுடன் சேர்ந்து விரைவாக நடந்து போய் விட்டாள். விஜய் பெரிய விளக்கை அணைத்து விட்டு விடிவிளக்கைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து கொண்டான். ஜன்னல் வழியாய் வானத்தில் நட்சத்திரங்கள் தென்பட்டன. விடியற்காலை வேளையில் மெலிதாகக் காற்று சில்லென்று வீசிக் கொண்டிருந்தது. அந்தக் காற்று அவன் முகத்தில் பட்டு களைப்பை போக்குவது போல் இருந்தது. மனதில் பதிந்திருந்த ஹேமாவின் முகத்தை அழித்து விட்டு அந்த இடத்தை சூனியத்தால் நிரப்புவதற்கு அவன் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
– தொடரும்…
– மௌனராகம் (நாவல்), தெலுங்கு: யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில்: கௌரி கிருபானந்தன்