(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
அத்தியாயம்-10
மாலை வேலை. இருள் கவிழும் நேரம். வேணுகோபாலசுவாமி ஆலயத்தில் மாலை நேரத்து தீபாராதனை நடந்து கொண்டிருந்தது. பக்தர்கள் கோவில் பிரகாரத்தில் பிரதட்சிணம் செய்து கொண்டிருந்தார்கள். விஜய் கோவில் மண்டபத்துப் படிகள் மீது உட்கார்ந்திருந்தான். வெள்ளை பைஜாமா, ஜிப்பா அணிந்து கொண்டு இடது கையைக் கன்னத்தில் வைத்துக்கொண்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்து போயிருந்தான் பக்தர்கள் எல்லோரும் போய் விட்டதை அவன் கவனிக்கவில்லை.
“என்ன விஜய் தம்பி? ரொம்ப நேரமாய் தனியாய் உட்கார்ந்திருக்கீங்க? இருட்டி விட்டது.” மண்டபத்தில் அணைந்து போயிருந்த பித்தளை விளக்கை எடுத்துப் போக வந்த குருக்கள் கேட்டார்.
திடுக்கிட்ட விஜய், “ஒன்றும் இல்லை” என்று சமாளித்தான். மனதில் அலை பாய்த்து கொண்டிருந்த எண்ணங்கள் அவனை வேறு உலகிற்கு அழைத்துக் சென்றிருந்தன. இருட்டிக்கொண்டு வந்ததை அவன் உணரவில்லை.
“ஆனந்த் தம்பி ஊரில் இல்லையா என்ன? இத்தனை சாவகாசமாய் இங்கே உட்கார்ந்திருக்கீங்க?”
விஜயிடம் யார் பேசினாலும் ஆனந்தின் பிரஸ்தாபனை வராமல் இருக்க முடியாது.
“கோவில் கதவுகளைச் சாத்திக்கொண்டு போகப் போகிறேன்” என்றார் குருக்கள்.
விஜய் தலையை அசைத்தான். அப்படியே உட்கார்ந்திருந்தான். சட்டைப் பையிலிருந்த கடிதத்தை எடுத்தான். இதுவரையில் அந்த கடிதத்தைப் பத்து தடவையாவது படித்திருப்பான். ராதிகா எழுதிய கடிதம் அது.
டியர் விஜய்,
நான், பூஜா, பிரசாத் நலமாக இருக்கிறோம். நீயும் ஆனந்த் மற்றும் தாத்தா நலமாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஹேமா ரூபாய் நான்காயிரத்திற்கு உன் பெயருக்கு டி.டி. எடுத்து அனுப்பியிருக்கிறாள். அவளுடைய செயின் உன்னிடம் இருக்கிறதாம். டி.டி. சேர்ந்ததும், செயினை பார்சல் செய்து அனுப்பச் சொன்னாள். விசாகப்பட்டணத்தில் நர்சிங் ஹோமில் வேலையில் சேர்ந்திருக்கிறாளாம். அந்தக் கடிதத்தை இத்துடன் இணைத்திருக்கிறேன். பூஜா ஆட்களை நன்றாக அடையாளம் கண்டு கொள்கிறாள். மாமா எப்போ வருவார் என்று கேட்கிறாள். பிரசாத் கூட உன்னிடமிருந்து தகவல் வரவே இல்லையே என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ஹைதராபாத் வந்தால் எங்களோடு நான்கைந்து நாட்களாவது தங்கும் விதமாக நேரத்தை ஒதுக்கிக்கொண்டு வர வேண்டும். எல்லோரையும் கேட்டதாகச் சொல்லவும்.
உன் ராதிகா
இன்று மதியம் தபாலில் இந்த கடிதமும், ரூபாய் நான்காயிரத்திற்கு அவன் பெயரில் டி.டி.யும் வந்தன. கடிதத்தைப் படித்த பிறகு என்ன செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. நடந்ததை ராதிகாவுக்கு விவரமாக எழுதி புதிய செயினை வாங்கி அனுப்பி வைக்கலாம் என்று நினைத்தான். பிரசாதுக்கு விஷயம் தெரிந்தால் ரகளை செய்வான் என்று பயந்தான். ஹேமாவின் செயின் தன் மூலமாய்த்தான் தொலைந்து விட்டது. அதற்குப் பதிலாக இரண்டு மடங்கு பணம் தரச் சொன்னாலும் கொடுக்கத் தயாராக இருந்தான். ஆனால் ஹேமா! அவனுக்கு ஏனோ தயக்கமாக இருந்தது. ஹேமா இதை எப்படி எடுத்துக் கொள்வாளோ? பெருமூச்சு ஒன்று அவனையும் அறியாமலேயே வெளியில் வந்தது. ராதிகாவுக்குக் கடிதம் எழுதி வேறு செயின் வாங்கி அனுப்புவதை விட, தானே சுயமாய் நேரில் சென்று, விஷயத்தைச் சொல்லி செயினைக் கொடுத்தால் நன்றாக இருக்குமோ.
விஜய்க்கு இந்த விஷயம் தர்ம சங்கடமாய் இருந்தது. ஹேமாவுக்கே கடிதம் எழுதி விடலாம் என்ற நினைப்பு வந்தாலும் சாத்தியப்படாது என்று தோன்றியது. அன்று கொஞ்சம் கூட தயங்காமல், “நாம் மறுபடியும் சந்தித்துக்கொள்ளப் போவதில்லை” என்று சொல்லிவிட்டான். தன்னுடைய கடினமான வார்த்தைகள் ஹேமாவின் மனதை எந்த அளவுக்குக் காயப்படுத்தி இருக்கும் என்று அவனால் உணர முடிந்தது. ஹேமாவைச் சந்தித்துதான் ஆக வேண்டும்.
அடுத்த வாரம் விசாகப்பட்டணத்தில் ஆனந்தின் நண்பன் மோகனின் திருமணம் நடைபெறப் போகிறது. கல்யாணப் பெண் ராதிகாவுக்கு தூரத்து உறவு ஆக வேண்டும். ஹேமாவும் விசாகப்பட்டிணத்தில் இருக்கிறாள். ஆனால் அந்த திருமணத்திற்குப் போவதற்கு ஆனந்த் சுமுகமாய் இல்லை.
“என்ன இருக்கு இந்தத் திருமணங்களில்? எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும். பட்டுப் புடவைகள், நகைகளை அணிந்து கொண்டு பெண்கள் தங்களுடைய ஸ்டேடஸ்ஸை பறைசாற்றிக் கொள்வார்கள். உங்கள் பையன் என்ன செய்கிறான், பெண் என்ன செய்கிறாள் என்று கதைக்கு உதவாத பேச்சுக்கள்… விலைவாசி உயர்வைப் பற்றி அங்கலாய்த்துக் கொள்வது… எங்கள் காலத்தில் இப்படி இல்லை என்று வாய் வலிக்க அந்தக் காலத்துப் பெருமைகளைப் பீற்றிக் கொள்வது… வயிறு முட்ட மூன்று வேளையும் சாப்பிடுவது… இதுதானே.”
“அனூ! அப்படிச் சொன்னால் எப்படி? மோகன் உன்னை வரச்சொல்லி எத்தனை முறை சொல்லியிருக்கிறான்?”
“என் சார்பில் நீ போய் விட்டு வா.”
“நீயும் வந்தால் நன்றாக இருக்கும்.” விஜய் நயமாகச் சொன்னான். கல்லூரியில் படிக்கும் நாட்களில் மோகனும், ஆனந்தும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். மாணவர்களுக்கு இடையில் நடந்த ரகளையில் மோகன் ஆனந்துக்கு உறுதுணையாக இருந்திருக்கிறான். திருமணத்திற்குப் போகவில்லை என்றால் மோகன் ரொம்ப வருத்தப்படுவான். சில விஷயங்கள் ஆனந்த் மனதில் விழாது. விழுந்தாலும் பொருட்படுத்த மாட்டான். அவன் எப்போதும் மனதிற்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களையே விரும்புவான். முடிந்த வரையில் எங்கேயாவது வெளி ஊர்களுக்குப் போய்க் கொண்டே இருப்பான். கை நிறைய பணம், நண்பர்களின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை. நீச்சலடிப்பது என்றால் ஆனந்துக்கு ரொம்ப விருப்பம். கார் ரேஸ் எங்கே நடந்தாலும் பார்க்கப் போய் விடுவான். எதிராளியை எவ்வளவு சீக்கிரமாய் நண்பனாக்கிக் கொண்டு விடுவானோ, அதே அளவுக்குச் சீக்கிரமாய் சண்டை போட்டுக்கொண்டு எதிரியாகி விடுவான். அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடும். கோபம் வந்தால் எரிமலையைப் போல் வெடிக்கும். துக்கம் வந்தால் நிலநடுக்கம் வந்தது போல் நிலை தடுமாறுவான். விஜய் ஒருவனால்தான் ஆனந்தின் போக்கைக் கட்டுப்படுத்தி நிலைமையைச் சீர்படுத்த முடியும். சில விஷயங்கள் ஆனந்துக்குப் புரியாது. விஜய் சொன்னால் தவிர ஏற்றுக்கொள்ள மாட்டான்.
மோகன் திருமணத்திற்கு ஆனந்த் போனால்தான் நன்றாக இருக்கும் என்று விஜய் வற்புறுத்தி சொன்னதால் ஆனந்த் ஒப்புக்கொண்டான்.
“ஓ.கே. போகிறேன். ஆனால் நீயும் என்னுடன் வர வேண்டும்” என்றான். “நான் எப்படியும் வரப் போகிறேன். அங்கே ராஜலக்ஷ்மி மேடம் இருக்கிறாள். அவளை ஒரு தடவை சந்தித்துப் பேச வேண்டும்” என்றான் விஜய்.
“ராஜலக்ஷ்மி என்றால் பாங்க் மேனேஜராக இங்கே வேலை பார்த்தார்களே. நம் மில்களுக்கு லோன் வாங்கித் தந்தாளே. அவங்கதானே?”
ஆமாம் என்பது போல் தலையை அசைத்தான் விஜய். “இப்போ வைசாக் பிராஞ்சில் மேனேஜராக இருக்கிறாள். ஒரு தடவை அவங்களைச் சந்தித்து லோன் விஷயமாக என்ன அட்வைஸ் தருவாள் என்று கேட்டுக் கொள்கிறேன்.”
“அவங்கதான் வேறு ஊருக்கு மாற்றலாகிப் போய் விட்டார்ளே?”
“பரவாயில்லை. எங்கே லோன் அப்ளை செய்ய வேண்டும் என்று அறிவுரை கேட்டுக் கொள்கிறேன்.”
“அவங்களுக்கு உன்னிடம் அபிமானம் அதிகம் இல்லையா.”
“நன்றாக இருக்கு நீ சொல்வது. அன்புடன் பழகியவர்களை எல்லாம் இப்படிச் சொன்னால் எப்படி?”
ஆனந்த் விஜய்க்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
விஜய் தஸ்தாவேஜுகளைப் படித்துக்கொண்டு இருந்தான்.
“விஜய்!” சீரியஸாக அழைத்தான்.
“என்ன?”
“ஒரு தடவை தலையை உயர்த்தி என் பக்கம் பார்.”
செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு விஜய் ஆனந்த் பக்கம் பார்த்தான்.
“லோன் வாங்குவது, தவணைகள் கட்டுவது, மறுபடியும் கவலைப்படுவது… இதற்கு முடிவே இல்லையா? எதுக்கு இத்தனை பணம்? என்ன செய்து கொள்ளப் போகிறாய்?”
“நாளைக்கே உனக்குத் திருமணமாகி நான்கு குழந்தைகள் பிறந்தால் நமக்குப் பணம் நிறைய தேவைப்படும் இல்லையா?” விஜய் புன்முறுவலுடன் சொன்னான். “நான்சென்ஸ்! நான் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்று ஏற்கனவே உன்னிடம் சொல்லியிருக்கிறேன்.”
“தாத்தா உனக்காகப் பெண்ணைத் தேடிக் கொண்டு இருக்கிறார். இந்த சித்திரையில் உன்னுடைய திருமணத்தை முடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.”
“அவ்வளவு விருப்பம் இருந்தால் அவரையே திருமணம் செய்துகொள்ளச் சொல். எனக்கு இப்போ திருமணம் தேவையில்லை.” ஆனந்த் மறுப்பதுபோல் தோள்களைக் குலுக்கினான்.
“பெரியவங்களை அப்படிச் சொல்லலாமா? தப்பு இல்லையா?”
“அவர்தான் நம்மைவிட அதிகமாய் தவறுகளைச் செய்கிறார். அவரைச் சொன்னால் எந்த தவறும் இல்லை.”
“ஆனந்த்! அனாவசியமாக வாதம் புரிய வேண்டாம். திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ரொம்ப முக்கியம்.” விஜய் நயமாகச் சொன்னான்.
“அப்படியா!” ரொம்ப கவனமாய் கேட்டுக் கொள்வது போல் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டான் ஆனந்த்.
“அனூ! இந்த சித்திரையில் உன் திருமணம் முடிந்து விட வேண்டும். தாத்தாவும், நானும் நல்ல பெண்ணாக தேடிக் கொண்டிருக்கிறோம்.”
“பெண்ணைப் பார்த்துவிட்டு என் தலையில் கட்டப் போகிறீர்களா?”
“அனூ! ப்ளீஸ்…” விஜய் சீரியசாகப் பார்த்தான்.
“ஓ.கே.ஓ.கே. நீ சொன்னது என்ன? ஒவ்வொரு மனிதனுக்கும் திருமணம் ரொம்ப முக்கியம் அப்படித்தானே?”
ஆமாம் என்பது போல் விஜய் பார்த்தான்.
“அப்போ உடனடியாக அந்தக் காரியத்தை நீ தான் செய்ய வேண்டும். என்னைவிட நீ பெரியவன் இல்லையா. தாத்தாவிடம் சொல்கிறேன். இந்த சித்திரையின் உன் திருமணம் முடிந்தால் என்னுடைய கடமை முடிந்து விடும்.” பெரிய மனிதனின் தோரணையில் ஆந்த சொன்னதைக் கேட்டு விஜய்க்குச் சிரிப்பு வந்தது.
“சில்லியாகப் பேசாதே” என்றான்.
ஆனந்த் நாற்காலியை விட்டு எழுந்து கொண்டான். அறையில் நடை பயின்று கொண்டே விஜய் பக்கம் திரும்பி, “நான் சீரியசாகத்தான் சொல்கிறேன் விஜய்! உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். உனக்கு என்னைப் பிடிக்கும். ஓ. கே. ஆஸ்துமா அட்டாக் வந்து திடீரென்று என் மூச்சு நின்று விட்டது என்று வைத்துக்கொள். நீ தனியனாகி விடுவாய் இல்லையா? நான் உயிரோடு இருக்கும்போதே உனக்கு ஒரு நல்ல துணையைத் தேடித் தர வேண்டும்.”
“ஷட்டப் அனூ!” விஜய் கடிந்து கொண்டான்.
ஆனந்த் திடீரென்று விஜய் அருகில் வந்து முழங்காலில் அமர்ந்து கொண்டு விஜயின் கையைப் பற்றிக் கொண்டான். முகத்தை உயர்த்தி விஜயின் கண்களுக்குள் ஆழமாய் பார்த்துக்கொண்டே, “போகட்டும். ஒரு வேலை செய்வோமா?” என்றான்.
“என்ன?”
“நாமிருவரும் நமக்குத் தகுந்த பெண்களுக்காகத் தேடுவோம். யாருக்கு முதலில் கிடைக்கிறாளோ அவளுடன் நிச்சயதார்த்தம் மட்டும் முடிப்போம். இரண்டாவது ஆளுக்கு தகுந்த பெண் கிடைக்கும் வரையில் காத்திருப்போம். கிடைத்ததும் இரண்டு திருமணங்களையும் ஒன்றாக முடிப்போம். என்ன சொல்கிறாய்?”
“இந்த விஷயத்தை இத்துடன் பத்து தடவை சொல்லி விட்டாய்.”
“ஆனால் ஒரு தடவை கூட நீ பதில் சொல்லவில்லை. அதை மறந்து விடாதே.”
“எனக்கு வேலை இருக்கு.” விஜய் எழுந்துகொள்ளப் போனான். ஆனந்த் விஜயை எழுந்துகொள்ள விடவில்லை. “இன்று இதற்குப் பதில் சொல்லித்தான் ஆகணும்.”
“அனூ! ப்ளீஸ்… “விஜய் வேண்டுவது போல் சொன்னான்.
ஆனந்த் விஜயின் முகத்தை ஆழமாய் பார்த்துக்கொண்டு, “எந்தப் பெண்ணாவது உன்னை ரொம்ப விரும்புகிறாள் என்று வைத்துக் கொள்வோம். அப்போ என்ன செய்வாய்?” என்று கேட்டான்.
“எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி விடுவேன்.”
“ஊஹூம். நான் அந்தப் பெண்ணை வாழ்த்தி விட்டு உங்கள் இருவருக்கும் திருமணத்தை முடித்து வைப்பேன். தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக் வரும் அளவுக்குப் பணத்தைச் செலவழித்துக் கிராண்டாகத் திருமணத்தை நடத்துவேன். உங்கள் இருவரையும் ஹனிமூனுக்கு சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பேன். நீங்கள் இருவரும் என் கண் முன்னாடி சந்தோஷமாய் குடித்தனம் நடத்துவீங்க விஜய்! உனக்கு அந்தப் பெண்ணிடம் ரொம்பவும் விருப்பம் ஏற்பட்டு, என்னை அலட்சியம் செய்வாயா?”
“ஆமாம் என்று வைத்துக்கொள்.” ஆனந்தைப் பார்த்துக்கொண்டே சொன்னான் விஜய்.
“என்னைப் பொருட்படுத்தவே மாட்டாயா?” இரட்டிப்பது போல் கேட்டான் ஆனந்த்.
“மாட்டேன்.” விஜய் திடமான குரலில் சொன்னான்.
ஆனந்தின் கைப்பிடிகள் இருகின. “அப்போ நான் என்ன செய்வேன் தெரியுமா?” என்று கேட்டான்.
என்ன செய்வாய் என்பதுபோல் பார்த்தான் விஜய்.
“அந்தப் பெண்ணை உன் கண் முன்னாலேயே கத்தியால் குத்திக் கொன்று விடுவேன்.” கண்முன் அந்த காட்சி நடப்பது போலவே ஆனந்த் தோற்றமளித்தான்.
விஜய் சிரித்தான். “எனக்குத் தெரியும் அனூ! அதான் நான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை.”
“அந்த அப்பாவி பெண் இறந்து போய் விடுவாளே என்றா?”
“இல்லை. நீ ஜெயிலுக்குப் போய் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டாமே என்றுதான்.”
ஆனந்த் விஜயைப் பார்த்தான். விஜய் பேப்பர்களைச் சரி பார்த்துக் கொண்டிருந்தான்.
“விஜய்! அம்மா, அப்பாவின் அன்பு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது.
தாத்தாவின் அன்பு ஏனோ போலியாய், மூச்சு முட்டுவதுபோல் இருக்கும். நீ எனக்கு உயிர் நண்பன் மட்டும் இல்லை. அம்மா, அப்பா, கடவுள் எல்லாமே நீதான். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி விஜய். கடவுளிடம் நான் வேண்டுவது என்ன தெரியுமா? நம்முடைய நட்பைப் புரிந்துகொண்டு, நம் இருவரையும் உயிருக்கு உயிராய் பார்த்துக்கொள்ளும் பெண் விஜய்க்கு மனைவியாக வர வேண்டும் கடவுளே என்று தினமும் பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் இருவருக்கும் மகனாய் என் வாழ்க்கையை நிம்மதியாய் கழித்து விடுவேன். அப்போ உடம்புக்கு வந்தாலும் கவலைப்பட வேண்டியது இல்லை.”
“ஏன் எப்போதும் உடல் நலக்குறைவு பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறாய்? உன் உடல்நிலை நன்றாகத்தானே இருக்கிறது?”
“எனக்கே தெரியவில்லை விஜய். இப்போ நான் ஆரோக்கியமாய் இருப்பது போல் தோன்றினாலும் உடல்நலக்குறைவு ஏற்படுவதற்கு முன் சற்று இடைவெளி விட்டது போல் தோன்றுகிறது. வாழ்க்கை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். மரணம் என்றால் பயம். பிறந்த ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாய், சுகமாய் வாழ வேண்டும். கஷ்டங்கள், துக்கங்கள் என்றால் எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்காது.”
“நாணயத்திற்கு இருபக்கங்கள் இருப்பது போல் மனிதனின் வாழ்க்கையில் கஷ்ட சுகங்களைத் தவிர்க்க முடியாது.”
“அதைக் கண்டுதான் பயப்படுகிறேன் தன்னுடைய வாழ்க்கையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாத மனிதனின் வாழ்க்கை நரகம்தான்.”
“இத்தனைக்கும் நாம் மோகனின் திருமணத்திற்கு போகிறோமா இல்லையா?” “போகிறோம். திருமணத்திற்கு வந்த பெண்களில் உனக்கு சரியான ஜோடி யாராவது இருக்கிறாளா என்று பார்க்கிறேன்.”
“ஷட்டப் அனூ!” விஜய் கடிந்து கொண்டான்.
ஆக மொத்தம் திருமணத்திற்கு இருவரும் சேர்ந்து போவதாக முடிவாகி விட்டது. திருமணம் வைசாகில் நடக்கப் போகிறது. ஹேமா இருப்பதும் அந்த ஊரில்தான்.
ஹேமாவைச் சந்தித்து செயின் விஷயத்தை எப்படிச் சொல்வது என்று விஜய் யோசித்துக் கொண்டிருந்தான். அவன் மனம் அதற்கான வழியைத் தேடிக் கொண்டிருந்தது.
அத்தியாயம்-11
மோகனின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடந்துகொண்டிருந்தன. விஜய், ஆனந்த் திருமணத்தன்று காலையில்தான் போய்ச் சேர்ந்தார்கள். காலை உணவு ஆனதும் ஆனந்த் விஜய் அருகில் வந்தான்.
“விஜய்! நானும், சத்யம், சேஷு எல்லோரும் சேர்ந்து அரக்கு வேலி போவதாக முடிவு செய்திருக்கிறோம். கிளம்புகிறோம்” என்றான்.
“அனூ! திருமணத்திற்காக வந்திருக்கிறோம். இன்று இரவு திருமணம். நீ இப்படி கிளம்பிப் போனால் நன்றாக இருக்காது” என்றான் விஜய்.
ஆனந்த் இரண்டு கைகளையும் ஜோடித்துக் கும்பிடு போட்டான். “விஜய்! என்னை வற்புறுத்தாதே. இப்போதே இங்கே எனக்கு மூச்சு முட்டுகிறது. உறவினர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் என் உயிர் போய்விடும் போல் இருக்கிறது. மோகன் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டான். அப்படி நினைத்துக் கொண்டாலும் ஐ டோன்ட் கேர். திருமண மண்டபத்திற்கு வந்து விட்டேன். அது போதும். உனக்கு ஏதோ வேலைகள் இருப்பதாகச் சொன்னாயே. அவற்றை பார்த்துக்கொள். நான் திரும்பும் வரையில் போய் விடாதே” என்று நீளமாய் லெக்சர் கொடுத்துவிட்டுப் போய் விட்டான். விஜயினால் எதுவும் சொல்ல முடியவில்லை. போகக் கூடாது என்று அழுத்திச் சொல்லியிருந்தால் ஆனந்த் போயிருக்க மாட்டாந்தான். ஆனால் என்ன பிரயோஜனம்? அந்த எரிச்சலை மனதில் வைத்துக்கொண்டு யாருடனாவது சண்டை போடுவான். ஏற்கனவே இது போன்ற அனுபவம் இருந்ததால் விஜய் ஆனந்தைப் போகக்கூடாது என்று வற்புறுத்தவில்லை.
மாலையாகி விட்டது. திருமணம் இரவு பன்னிரண்டு மணிக்கு என்பதால் சாப்பாடு பந்தி முன்னாடியே நடந்து கொண்டிருந்தது. விருந்தாளிகள் வந்து கொண்டிருந்தார்கள்.
“விஜய்! நீயும் இந்த திருமணத்திற்கு வந்திருக்கிறாயா?” ராதிகா அருகில் வந்து கொண்டே கேட்டாள்.
“ஆமாம். நீங்க?”
“கல்யாணப் பெண் பிரசாதுக்குத் தூரத்து உறவு.”
“இது… இது பூஜாதானா?” ராதிகாவின் கையிலிருந்த குழந்தையைப் பார்த்துப் பிரமிப்புடன் கேட்டான்.
“ஆமாம். பூஜா! மாமாவைப் பார்த்தாயா?” ராதிகா பூஜாவை விஜயிடம் கொடுத்தாள்.
பிரசாத் அருகில் வந்தான். “என்ன விஜய்? உன் உடல் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறது. உயிர் எங்கே?” என்று கேட்டான்.
“ஆனந்த் அரகுவேலிக்குப் போயிருக்கிறான்.”
“ஹலோ ராதிகா!” ஹேமா அருகில் வந்தாள்.
“ஹலோ ஹேமா! எப்படி இருக்கீங்க?” பிரசாத் குசலம் விசாரித்தான்.
ஹேமா விஜயைப் பார்க்காததுபோல் இருந்து விட்டாள். விஜய் புன்முறுவலுடன் ஹேமாவிடம் பேச நினைத்து மறுபடியும் நின்று விட்டான்.
“இதோ பூஜா!” ராதிகா மகளைக் காண்பித்தாள்.
“பூஜாவா! நன்றாக வளர்ந்து விட்டாள்.” ஹேமா மகிழ்ச்சியுடன் பார்த்தாள். ராதிகா விஜய் கையிலிருந்து பூஜாவை எடுத்துக்கொண்டு ஹேமாவிடம் கொடுத்தாள்.
“நீங்க மாப்பிளை சார்பில் வந்தீங்களா? இல்லை பெண்ணின் சார்பிலா?” பிரசாத் ஹேமாவிடம் கேட்டான்.
“பெண்ணின் தந்தை அம்மாவின் கொலீக்.” ஹேமா சொன்னாள். “எங்கள் வீட்டுக்கு அவசியம் நீங்கள் வர வேண்டும்”
“கட்டாயம்” என்றாள் ராதிகா.
அதற்குள் யாருடனோ பேசிக்கொண்டு அந்தப் பக்கமாய் நடந்து போய்க் கொண்டிருந்த நடுத்தர வயது கடந்த மாதுவைக் கவனித்த விஜய் பிரசாத்திடம், “ஒரு நிமிடம்” என்று சொல்லிவிட்டு, அவள் அருகில் சென்று, “வணக்கம் மேடம்” என்றான். அந்த மாது அவனைப் பார்த்ததும், “விஜய்! நீயா… நலமாக இருக்கிறாயா?” என்று கேட்டாள்.
“நன்றாக இருக்கிறேன் மேடம்.”
“தாத்தா எப்படி இருக்கிறார்?”
“நலமாக இருக்கிறார்.”
“ஆனந்த்?”
“அவனும் ஓ.கே.”
“என்ன விசேஷம்? புதிதாக நிலம் ஏதாவது வாங்கினீர்களா?”
“சமீபத்தில் தென்னந்தோப்பு வாங்கியிருக்கிறோம். நானே உங்களிடம் வந்து பேச வேண்டும் என்று இருந்தேன். இவர்கள் என்னுடைய நண்பர்கள் பிரசாத், ராதிகா.” ராதிகாவும், பிரசாதும் அந்த அம்மாளுக்கு வணக்கம் தெரிவித்தார்கள்.
ஹேமாவும் அருகில் இருந்தாள்.
“இவங்க பெயர் ஹேமா.” விஜய் ஹேமாவை அறிமுகப்படுத்துவது போல் சொன்னான்.
“ராஜலக்ஷ்மி மேடம் இதற்கு முன் எங்கள் ஊருக்கு அருகில் இருந்த பிராஞ்சில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கு ரொம்பவும் வேண்டியவர்கள்.” மூவருக்கும் பொதுவாகச் சொன்னான்.
“வணக்கம் மேடம்.” ஹேமா கைகளைக் கூப்பிக்கொண்டே சொன்னாள்.
“புத்திர பௌத்ராபிரஸ்து!” ராஜலக்ஷ்மி புன்முறுவலுடன் ஆசீர்வதித்தாள்.
உடனே இருவரும் சேர்ந்து சிரித்து விட்டார்கள்.
பிரசாத்,ராதிகா,விஜய் மூவரும் புரியாதவர்களைப் போல் பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.
ராஜலக்ஷ்மி ஹேமாவின் தோளைச் சுற்றிக் கையைப் போட்டு அருகில் இழுத்துக்கொண்டே, “விஜய்! என் மகளை எனக்கே அறிமுகம் செய்கிறாயா?” என்றாள்.
“அட! இவங்க உன்னுடைய அம்மாவா?” பிரசாத் வியப்புடன் கேட்டான்.
“ரொம்ப சந்தோஷம்.” ராதிகா ஹேமா தனக்குப் பிரசவம் பார்த்த விவரத்தை மளமளவென்று ஒப்பித்தாள்.
“ஹேமா சொல்லியிருக்கிறாள். அது நீங்கதானா? இந்தக் குழந்தைதானே?” ராஜலக்ஷ்மி பூஜாவைத் தூக்கிக் கொண்டாள். தொலைவில் யாரோ அவளை அழைத்தார்கள். ராஜலக்ஷ்மி பூஜாவை ராதிகாவிடம் கொடுத்துக்கொண்டே, “நீங்க கட்டாயம் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும்” என்று போகப் போனவள் விஜய் பக்கம் திரும்பி, “விஜய்! நீயும்” என்றாள்.
“நான் வங்கியில் வந்து பார்க்கிறேன் மேடம்” என்றான்.
“வங்கிக்கு வருவானேன்? நான் இப்போ உங்கள் ஏரியா மேனேஜர் இல்லை. வீட்டுக்குச் சாப்பிட வா. நீங்கள் எல்லோரும் வர வேண்டும்” என்று கிளம்பிப் போனாள். “உலகம் எத்தனை சின்னது பார்த்தீங்களா ஹேமா? ஒருவருக்கொருவர் ரொம்ப தெரிந்தவர்களாகி விட்டோம்.” பிரசாத் சொன்னான்.
“கட்டாயம் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும்.” ஹேமா போகும்போது மறுபடியும் சொன்னாள்.
“வராமல் இருப்போமா? கட்டாயம் வருகிறோம்.” வாக்கு தருவது போல் சொன்னான் பிரசாத்.
ஹேமா விஜய் பக்கம் பார்த்தாள். விஜய் ஹேமாவையே பார்த்துக் கொண்டிருந்தான். ஹேமா சட்டென்று பார்வையைத் திருப்பிக்கொண்டு கையை அசைத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
திருமணம் நடந்து கொண்டிருக்கும் போது ஹேமா தொலைவில் பெண்களின் கும்பலுக்கு நடுவில் நின்று கொண்டு விஜய் பக்கம் ஓரிரு முறை பார்த்தாள். அவள் விஜய் பக்கம் பார்த்த ஒவ்வொரு தடவையும் விஜய் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை உணரமுடிந்தது.
திருமணம் நடந்து கொண்டிருந்தது. ராஜலக்ஷ்மியும், விஜயும் அடுத்தடுத்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். சற்று தொலைவில் நின்றிருந்த ஹேமாவை அருகில் அழைத்துத் தன் பக்கத்தில் காலியாக இருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னாள் ராஜலக்ஷ்மி.
விஜய் பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியவர் ராஜலக்ஷ்மிக்குத் தெரிந்தவர் போலும்.
“என்ன மிஸ்டர் ரங்கநாதன்? வீட்டில் எல்லோரும் சௌக்கியம்தானே? குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்? வியாபாரம் எப்படி இருக்கிறது?” என்று கேட்டுக்கொண்டே விஜய் பக்கம் திரும்பி, “விஜய்! இப்படி வந்து உட்கார்ந்துகொள்” என்று நாற்காலியை விட்டு எழுந்து கொண்டாள். விஜய் எழுந்து போகப் போனான். “இல்லை இல்லை. உட்கார்ந்துகொள். பரவாயில்லை” என்று வற்புறுத்தினாள்.
ஹேமாவும், விஜயும் அருகருகில் அமர்ந்து கொண்டார்கள். ராஜலக்ஷ்மி ரங்கநாதன் பக்கம் திரும்பி அவருடைய குடும்ப சமாச்சாரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
ஹேமா, விஜய் கற்சிலைகளைப் போல் உட்கார்ந்திருந்தார்கள். இருவரும் ஒரு வார்த்தைகூட பேசிக்கொள்ளவில்லை. ரொம்ப கவனமாய் திருமண நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஹால் முழுவதும் சிரிப்பும், கும்மாளமுமாய் சந்தடியாய் இருந்தது. ஹேமா விஜய் இருவரும் இந்த உலகத்திலேயே இருக்கவில்லை. இருவருக்குமிடையே ஆழமான மௌனம்.
ஒருவருக்குப் பக்கத்தில் ஒரு அமர்ந்திருக்கிறோம் என்ற உணர்வு இருவரின் மனங்களிலும் பரிபூரணமாய் நிரம்பியிருந்தது. பூஜா பிறந்த இரவு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் போலவே, இந்த திருமண நிகழ்ச்சியும் இருவருக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை, மகிழ்ச்சியை இருவரும் மௌனமாய் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.
அத்தியாயம்-12
மறுநாள் எல்லோரும் ராஜலக்ஷ்மியின் வீட்டில் சந்தித்துக் கொண்டார்கள்.
“மேடம்! லோன் சாங்க்ஷன் செய்வதற்குத் தேவையான எல்லா பேப்பர்களையும் கொடுத்து விட்டேன். அப்படியிருந்தும் அந்த மானேஜர் பானுமூர்த்தி என்னுடைய பிரபோசலை ஹெட் ஆபீசுக்கு அனுப்பாமல் பெண்டிங்கில் வைத்து விட்டார். போகட்டும் வேறு ஊருக்கு மாற்றலாகிப் போய் விடுவார் என்று எதிர்பார்க்கவும் முடியாது. இப்பொழுதுதான் மாற்றலாகி வந்திருக்கிறார்.” பிரசாத் புலம்பினான்.
“சாதாரணமாய் பானுமூர்த்தி அப்படிச் செய்ய மாட்டானே. நீங்கதான் எங்கேயோ ஏதோ தவறு செய்திருக்க வேண்டும்.”
“நான் எந்த தவறும் செய்யவில்லை. ஒரு எம்.எல்.ஏ. விடமிருந்து போன் மூலமாய் சிபாரிசு செய்ய வைத்தேன். அவ்வளவுதான்.”
“அதுதான் விஷயம். பானுமூர்த்திக்கு சிபாரிசு என்றால் சுத்தமாகப் பிடிக்காது. பேப்பர்கள் எல்லாம் சரியாக இருந்தால் தாமதம் செய்யாமல் ஹெட் ஆபீசுக்கு அனுப்பி விடுவான்.”
“அடக் கடவுளே! அப்போ என்னுடைய பிரபோசல் விஷயம் அவ்வளவுதானா?” பிரசாத் சொன்னான்.
“பானுமூர்த்தி டிரைனிங்கிற்காக இந்த ஊருக்கு வரப் போகிறான். நீங்கள் தெரியாமல் செய்துவிட்ட தவறு இது என்று சொல்லிப் பார்க்கிறேன். வேலை முடிந்து விடும் என்று உறுதி மொழி தர முடியாது. அந்த நேரம் அவனுடைய மூட் சரியாக இருந்தால் காரியம் நடக்கலாம். கட்டாயம் நான் முயற்சி செய்கிறேன்.”
“ரொம்ப தாங்க்ஸ் மேடம். இந்த நாட்டில் யாருடன் எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ புரியவில்லை. சிபாரிசு இல்லை என்றால் சில இடங்களில் வேலையே ஆகாது. நம்மை கால்தூசுக்குச் சமமாய் பார்ப்பார்கள். சிபாரிசு செய்ய வைத்தாலோ ஸ்ட்ரிக்ட் ஆக இருக்கும் சில அதிகாரிகள் இதோ… இப்படி நம்மை அழ வைத்து விடுவார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு விரக்திதான் வருகிறது. அதான் விஜயிடம் எனக்கு இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கிக் கொடுத்தால் உழுது சாகுபடி செய்து எப்படியோ பிழைத்துக்கொள்வேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்றான் பிரசாத்.
“அங்கே மட்டும் பாலிடிக்ஸ் இல்லையா? அறுப்பு நடக்கும் நேரத்தில் வெளியூரிலிருந்து கூலி ஆட்களை வரவழைத்துக் கொள்ளலாம் என்றால் உள்ளூர் ஆட்கள் சம்மதிக்க மாட்டார்கள். இவர்களும் நேரத்திற்கு வர மாட்டார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை. என்ன விஜய்? நான் சொல்வது சரிதானே?” சிரித்துக்கொண்டே சொன்னாள் ராஜலக்ஷ்மி.
அன்று இரவு ராஜலக்ஷ்மி வீட்டில் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். வங்கிகளில் இருக்கும் அரசியலை பற்றி, நாட்டின் பொருளாதார சீர்கேட்டைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்ததில் இரண்டு மணி நேரம் எப்படி கழிந்ததென்றே தெரியவில்லை. விஜய், பிரசாத் ராதிகா சேர்ந்து வந்திருந்தார்கள்.
ராஜலக்ஷ்மியின் வீடு ரொம்ப நேர்த்தியாய், அழகாக இருந்தது.
“இந்த டெகரேஷன், நீட்நெஸ் எல்லாம் ஹேமாவுடையதுதான். எனக்கு அதில் பங்கு இல்லை. எடுத்த பொருளை அந்தந்த இடத்தில் வைக்கவில்லை என்றால் ஹேமா சும்மாயிருக்க மாட்டாள். எங்கள் வீட்டு ஹிட்லர் அவள்தான்” என்றாள் ராஜலக்ஷ்மி. “மம்மி!” ஹேமா போய்க் கோபத்துடன் பார்த்தாள். “ஓ.கே. ஓ.கே.’ ராஜலக்ஷ்மி சிரித்து விட்டாள்.
அதற்குள் பூஜா விழித்துக்கொண்டு அழத் தொடங்கினாள். ராதிகா எழுந்துகொள்ளப் போனாள். ஏற்கனவே உண்டு முடித்துவிட்ட விஜய் அவளைத் தடுத்துவிட்டுக் கையை அலம்பிக்கொண்டு பூஜாவைத் தூக்கிக் கொண்டான்.
அதற்குள் போன் ஒலித்தது.
ஹேமா போய் எடுத்தாள். “மம்மி! உங்களுக்குத்தான்” என்று குரல் கொடுத்தாள். ராஜலக்ஷ்மி போய் ரிசீவரை எடுத்துக் கொண்டாள்.
விஜயினால் பூஜாவைச் சாமாதானப் படுத்த முடியவில்லை. சின்னக் குழந்தையைச் சரியாகத் தூக்கவும் அவனுக்குத் தெரியவில்லை. ஹேமா அருகில் சென்று பூஜாவைக் கையில் எடுத்துக்கொண்டாள்.
ராதிகா, பிரசாத் உணர்வு மேஜையருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ராஜலக்ஷ்மி போனில் பேசிக் கொண்டிருந்தாள். விஜய் ஹேமா அவர்களுக்குச் சற்று தொலைவில் இருந்தார்கள்.
“நான்… நான் உங்களுடன் பேச வேண்டும்” என்றான் விஜய்.
ஹேமா புருவங்களை உயர்த்தி வியப்புடன் பார்த்தாள்.
“நான்… செயினைக் கொண்டு வந்திருக்கிறேன்.”
ஹேமாவின் முகத்தில் ஏமாற்றம் வெளிப்படையாய் தெரிந்தது. தோள்களை அலட்சியமாகக் குலுக்கிக்கொண்டு, “கொடுத்து விடுங்கள்” என்று கையை நீட்டினாள். “ஊஹும். உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும். பிறகு தருகிறேன்.” “ஹேமா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ப்ளீஸ்!” என்றான்.
ஹேமா அவனுடைய குரலையே கேட்டுக் கொண்டிருந்தாள். மந்திர ஸ்தாயில் ஒலித்துக்கொண்டிருந்த அவன் குரல் கேட்பதற்கு இனிமையாய் இருந்தது. அவன் அப்படிப் பேசும்போது அருகில் காலடியில் அமர்ந்துகொண்டு அவன் முழங்காலில் கன்னத்தை வைத்துக்கொண்டு, கண்களை மூடிய நிலையில் இன்னும் இன்னும் கேட்க வேண்டும் போல் இருந்தது.
சாதாரணமாய் அழகாய் இருப்பவர்கள்தான் மற்றவர்களால் சுலபமாக ஈர்க்கப்படுவார்கள். ஆனால் விஜய் விஷயம் வேறு. அவனுடைய தனித்தன்மை, கம்பீரமாய் ஒலிக்கும் அந்தக் குரல் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் முக்கியமான அம்சங்கள். இந்த விஷயம் அவளுக்குக் கர்ஃப்யூ நாள் அன்றே புரிந்து விட்டது. அன்று முற்றிலும் பயந்து போயிருந்த சூழ்நிலையில் அவனுடன் நெருக்கமாய் இருந்த அந்த உணர்வு! அந்த நினைவுகளை அவளை ஒவ்வொரு இரவும் துரத்திக்கொண்டுதான் இருந்தன. அந்த நினைவுகள் அவனிடம் அன்பை, விருப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்தன.
விஜயை அவள் அதற்குப் பிறகு மறுபடியும் பார்க்கவில்லை. பேசவில்லை. குறைந்தபட்சம் மரியாதைக்காகக் கூட ஒரு வாழ்த்து மடலோ, கடிதமோ அனுப்பவில்லை. வேண்டுமென்றே ரொம்ப நாட்கள் வரை செயினுக்காக பணத்தை அனுப்பாமல் தாமதம் செய்தாள். அவனும் செயினை அனுப்பவில்லை. ஹேமாவின் மனதில் ஏதோ ஆசை துளிர் விட்டுக் கொண்டிருந்தது. பிறகு டி.டி. எடுத்து ராதிகாவுக்கு அனுப்பினாள்.
ஹேமாவால் சஸ்பென்ஸை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. செயினாவது திரும்பி வரவேண்டும். ஆனால் அவள் எதிர்பார்க்காதது நடந்தது. இரண்டுமே திரும்பி வரவில்லை. விஜய் மனதில் என்ன இருக்கிறதென்று ஹேமாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவள் மனதில் அவனிடம் ஏற்பட்ட அன்பும், அபிமானமும் கொஞ்சம் கூடக் குறையவில்லை. செயின் விஷயம் ரொம்ப சின்னதாகத் தோன்றியது.
விஜய் என்றால் தனக்கு ரொம்ப பிடிக்கும். அவனுடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள முடிந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதைவிட தன்னைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க மாட்டார்கள் என்ற உணர்வுதான் மேலோங்கியது.
அவன் இருக்கும் கிராமத்திற்கு நேராகப் போய் அவனைச் சந்தித்தால் என்ன என்று கூட சிலசமயம் அவளுக்குத் தோன்றியது உண்டு.
விஜய் எங்கேயோ நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கிறான் என்று அவளுக்குத் தோன்றவில்லை. தன் அருகிலேயே இருப்பது போன்ற உணர்வு.
ஹேமாவுக்குத் தன்னுடைய நிலை என்னவென்று புரிபடவில்லை. “நினவு வேறு எங்கேயோ இருப்பது போல் நடந்துகொள்கிறாயே… ஏன்?” என்று தாய் கேட்டபோது அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
தாயிடம் விஜய் பற்றி அதிகமாகச் சொல்லவில்லை. ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிய இளைஞன் என்று சொன்னதுடன் நிறுத்திக் கொண்டாள். அவனைப் பற்றி தாயிடம் அடிக்கடி பிரஸ்தாபிப்பதை அவள் விரும்பவில்லை. ஏன் என்றால் எத்தனை கஷ்டமானதாக இருந்தாலும் சரி, எதையும் பொருட்படுத்தாமல் மகளின் விருப்பத்தை நிறைவேற்ற துடிக்கும் தாய், இந்த விஷயம் தெரிந்தால் நேராக விஜய் இருக்கும் கிராமத்திற்குச் சென்று தீட்சிதரிடம் பேசி முடித்துவிட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பாள்.
நாள் முழுவதும் விஜய் பற்றியே யோசித்துக் கொண்டிருந்த ஹேமாவுக்கு விஜய் ஏற்கனவே தாய்க்கு நன்றாகத் தெரிந்தவனாக இருப்பது, தாய் அவனையும் டின்னருக்கு அழைத்தது, அவனும் மறுக்காமல் வீட்டுக்கு வந்தது… எல்லாமாய் சேர்ந்து அவளுடைய மகிழ்ச்சியைக் கட்டுக்கு அடங்காமல் செய்து விட்டன. தோகை விரித்தாடும் மயிலைப் போல் அவள் மனம் முழுவதும் உற்சாகம் நிரம்பியிருந்தது.
“நாமிருவரும் மறுபடியும் சந்தித்துக் கொள்ளப் போவதில்லை” என்று கொஞ்சம்கூட தயக்கமில்லாமல் சொன்ன பெரிய மனிதன், தான் அழைக்காமலேயே தன்னுடைய வீட்டுக்கு வந்ததோடு, தன் கையால் பரிமாறிய உணவையும் சாப்பிட்டிருக்கிறான்.
“பூஜாவைப் பார்க்கும்போது உங்களுக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லையா?” குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டாள்.
விஜய் பூஜாவைப் பார்த்தான். அவன் பார்வை மறுபடியும் ஹேமாவின் மீது படிந்தது. அன்று இரவு ஏற்பட்ட அனுபவம் அவன் கண்களில் அலையைப் போல்
முன்னால் வர முயன்றது. மௌனத்திரையின் பின்னால் மறைந்து விட்டது.
அந்த நிமிடம் ஹேமாவுக்குத் தோன்றியது. ‘இவன் எங்கள் எல்லோரையும் போல் இல்லை. மனதில் என்ன இருக்கிறதென்று எதிராளிக்குத் தெரியாத விதமாய் நடந்து கொள்வது இவனுக்குக் கைவந்த கலை. மனதை எப்போதும் கம்பீரம் என்ற திரையினால் மூடி மறைத்து விடுகிறான்.’
“என்ன விஜய்! அங்கேயே நின்று விட்டாய்… வா… வந்து உட்கார்ந்து கொள்.” ராஜலக்ஷ்மி அழைத்தாள்.
“இனி நாங்கள் கிளம்புகிறோம்” என்றான் பிரசாத்.
ராதிகா குழந்தையைத் தூக்கிக்கொண்டாள்.
“பிரசாத்! நாம் மறுபடியும் சந்திப்போம். உங்களுடைய லோன் விஷயமாகப் பானுமூர்த்தியிடம் பேசுகிறேன்” என்றாள் ராஜலக்ஷ்மி.
“தாங்க்யூ மேடம்.” பிரசாத் சொன்னான்.
“நீங்களும் ஹேமாவும் ஹைதராபாத்துக்கு வந்தால் கட்டாயம் எங்கள் வீட்டுக்கு வரவேண்டும்” ராதிகா சொன்னாள்.
“விஜய்! நாங்கள் ராதிகாவின் சித்தப்பா வீட்டுக்குப் போகப் போகிறோம். நீ…?” பிரசாத் கேட்டான்.
“விஜய் இன்னும் கொஞ்ச நேரம் இருப்பான். அவனை நாங்க டிராப் செய்கிறோம்” என்றாள் ராஜலக்ஷ்மி.
பிரசாத், ராதிகா கிளம்பிப் போய் விட்டார்கள்.
“வா விஜய்… வந்து உட்கார்ந்து கொள்.” ராஜலக்ஷ்மி சொன்னாள்.
விஜய் வந்து உட்கார்ந்து கொண்டான்.
“இன்று எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஹேமாவைக் காப்பாற்றியவன் நீதான் என்று கனவில் கூட நான் நினைக்கவில்லை. நான் என்ன செய்தாலும் இந்த நன்றிக்கடனைத் தீர்த்துக்கொள்ள முடியாது. தாத்தா எப்படி இருக்கிறார்? நிலம் ஏதாவது வாங்கினீர்களா?” அன்பு ததும்பும் குரலில் கேட்டாள் ராஜலக்ஷ்மி.
விஜய் தனக்கு ஏற்பட்ட பிரச்னையைப் பற்றிச் சொன்னான். அந்த அம்மாளும் கவனமாகக் கேட்டுக் கொண்டாள்.
“எனக்குத் தெரிந்த விஜயசாமுண்டேஸ்வரி கோ- ஆபரேடிவ் அர்பன் வங்கி இருக்கிறது. அங்கே அப்ளிகேஷனைக் கொடு. அது தனியார் வங்கி… நீயும் மாதாந்திர தவணைகளை நேரத்திற்குள் கட்டி விடுவாய் என்பதால் பிரச்னை எதுவும் இருக்காது. பெனால்டீயுடன் தவணையைச் செலுத்துவதற்கு ஒரு மாதத்தைவிட அதிக அவகாசம் தர மாட்டார்கள். நேராக வந்து சொத்தை ஜப்தி செய்து விடுவார்கள்.”
“அந்த பிரச்னையே வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் மேடம்” என்றான் விஜய்.
“உன்னைப்பற்றி எனக்குத் தெரியாதா. நான் உங்க ஊர் வங்கியில் பிராஞ்ச் மேனேஜராக இருந்த போது எடுத்துக்கொண்ட லோனுக்குக் காலம் தாழ்த்தாமல் தவணைகளைக் கச்சிதமாக செலுத்தி வந்தவன்தானே. உன் விஷயத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அந்த வங்கி மேனேஜர் நாராயண சுவாமிக்கு அறிமுகக் கடிதம் ஒன்று எழுதி தருகிறேன். போனதும் அபிளிகேஷனை போட்டு விடு. இது மட்டுமே இல்லை. வேறு எந்த உதவி தேவையாக இருந்தாலும் தயங்காமல் என்னிடம் கேள்.” ராஜலக்ஷ்மி மேஜை அருகில் சென்று கடிதத்தை எழுதிக் கொடுத்தாள்.
“தாங்க்யூ மேடம்” என்றான் விஜய்.
“ஊஹும். அப்படிச் சொல்லாதே. நான் எத்தனை செய்தாலும் குறைச்சல்தான். ஹேமாவுக்கு நீ செய்த உதவிக்கு இந்த ஜென்மத்தில் என்னால் ஈடு செய்ய முடியாது.” அவள் கண்கள் பனித்தன.
விஜய் கிளம்புவதற்காக எழுந்து கொண்டான்.
“அப்ளிகேஷனைப் போட்டதும் எனக்கும் ஒரு காப்பியைத் தபாலில் அனுப்பிவிடு.”
“அப்படியே செய்கிறேன் மேடம்.”
“விஜய் கிளம்பும்போது ராஜலக்ஷ்மி கடியாரத்தைப் பார்த்துவிட்டு, “இரவு 10:30 மணி ஆகிவிட்டது. ஹேமா இப்போ நைட் ட்யூட்டிக்காக நர்சிங்ஹோமுக்கு எப்படியும் போகப் போகிறாள். உன்னை வழியில் டாக்ஸி ஸ்டாண்டின் இறக்கி விடச் சொல்கிறேன். என்ன ஹேமா?”
“ஓ.கே. மம்மி” என்றாள் ஹேமா.
ஹேமா கார் சாவியை எடுத்து வந்தாள்.
“குட் நைட் மம்மி” என்றாள்.
“போய் வருகிறேன் மேடம்.” விஜய் கைகளைக் கூப்பி வணங்கினான்.
ஹேமா கராஜிலிருந்து காரை வெளியில் எடுத்தாள். விஜய் பின்னால் இருந்த கதவைத் திறக்கப் போனான். அவனுடன் பேசிக்கொண்டே வழியனுப்ப வந்த ராஜலக்ஷ்மி முன் பக்க கதவைத் திறந்து கொண்டே, “முன்னால் உட்கார்ந்து கொள் விஜய்” என்றாள். விஜய் உட்கார்ந்து கொண்டதும் கார் நகர்ந்தது.
– தொடரும்…
– மௌனராகம் (நாவல்), தெலுங்கு: யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில்: கௌரி கிருபானந்தன்