(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம்-7
மூன்று நாட்களுக்குப் பிறகு நகர வாழ்க்கை பழைய நிலைக்குத் திரும்பியது. பிரசாத் வற்புறுத்தியதால் விஜய் தங்கி விட்டான். மாழ்பழ ஏற்றுமதி காண்ட்ராக்டும் சாதமாக முடிந்தது.
“ரொம்ப நல்ல டீல். இது மட்டும் நீடித்தால் இன்னும் இரண்டு வருடங்களில் நீ வியாபாரத்தை மேலும் முன்னுக்குக் கொண்டு வர முடியும்” என்றான் பிரசாத்.
உணவு வேளை. எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். “என்னுடைய சித்தியின் மகள் உமா பி.இ. முடித்து விட்டாள். விஜய்க்கு அவளைப் பார்க்கலாம் என்ற எண்ணம் எனக்கு.” ராதிகா சொன்னாள்.
“விஜய்! நீ என்ன சொல்கிறாய்? வெறும் நட்புடன் இருந்த நம் பந்தத்தை உறவாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நானும் ராதிகாவும் விரும்புகிறோம். ராதிகாவின் சித்தப்பாவுக்கு செராமிக் டைல்ஸ் ஃபாக்டரி இருக்கிறது. மகன் வெளிநாட்டில் இருக்கிறான். இந்தியாவுக்கு வரமாட்டான். உமா பெயரிலேயே நிறைய சொத்து இருக்கிறது. சொந்தமாக வியாபாரம் செய்ய வேண்டும் என்றாலும் அவர் நிச்சயமாக கை கொடுப்பார்.”
“விஜய்! உமா ரொம்ப அழகாகவும் இருப்பாள். படிப்பும் இருக்கிறது. முக்கியமாக உங்கள் இருவருக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கும். ஒரு தடவை உமாவை பார்த்துவிட்டு வரலாம்.” ராதிகா உற்சாகத்துடன் சொன்னாள்.
“நான் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை.” விஜய் சொன்னான். “நிஜமாகவா! ஏன்?” ராதிகா கேட்டாள்.
“நான் அப்படி முடிவு செய்திருக்கிறேன்.” விஜய் சொன்னான்.
“அதாவது இப்போதைக்குத் திருமணம் பற்றிப் பேச்சு எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறாயா?” பிரசாத் கேட்டான்.
“ஊஹும். திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை.” நிதானமாகச் சாப்பிட்டுக்கொண்டே உணர்ச்சியற்ற முகத்துடன் சொன்னான் விஜய்.
“எதனால்?” ராதிகா கேட்டாள்.
“நான் சொல்கிறேன் ராதிகா. விஜய் திருமணம் செய்துகொள்ள மாட்டான். முதலில் ஆனந்துக்குத் திருமணம் நடக்க வேண்டும். ஆனந்த் மனைவி மக்களுடன் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்த பிறகு விஜய் திருமணம் பற்றி யோசிப்பானோ என்னவோ. என்ன விஜய்? நான் சொன்னது சரிதானே. அப்பொழுது கூட விஜய் திருமணம் பற்றி யோசிக்க மாட்டானாய் இருக்கும். ஏன் என்றால் ஆனந்தின் குடும்பம் பெரிதாக ஆக விஜயின் பொறுப்புகளும் அதிகரிக்கும். அப்போ நம்மைப் போன்ற நண்பர்களைக் கூட விஜய் பொருட்படுத்த மாட்டான்.”
திடீரென்று உரையாடல் சீரியஸாக மாறிவிட்டது. பிரசாத் முகத்தில் வேதனை வெளிப்படையாக தெரிந்தது. “விஜய்! சில சமயம் நான் முட்டாள்தனமாக யோசிக்கிறேன். உன் சுபாவம் தெரிந்த பிறகும் தேவையில்லாத அறிவுரைகளை வழங்க முற்படுவேன். இதுவரையில் ஆனந்த் உனக்காக எதையாவது விட்டுக் கொடுத்திருக்கிறானா? நீயானால் அவனுக்காக எதையும் துறக்கத் தயாராக இருக்கிறாய். எங்களைப் போன்ற நண்பர்களையும் விலக்கி வைத்து விடுகிறாய். உண்மையைச் சொல். சுரேஷ் ஆனந்தை விமரிசிப்பது போல் பேசினான் என்றுதானே அவனுடைய நட்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாய். நான் உன்னுடைய நண்பன் விஜய். எங்கள் எல்லோரையும் போல் நீ சுகமாக, சந்தோஷமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். எதற்காக இந்த பலவீனம்? ஆனந்திடம் உனக்கு இவ்வளவு கமிட்மென்ட் ஏன்?”
விஜய் சாப்பிட்டு முடித்து விட்டான். நாப்கின்னால் உதடுகளை ஒற்றிக் கொண்டான். அவன் முகம் சீரியஸாக இருந்தது. நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான்.
ராதிகா நிலைமையை உணர்ந்து கொண்டாள். நிறுத்துக் கொள்ளுங்கள் என்பதுபோல் கணவரின் கைமீது மெதுவாகத் தட்டினாள்.
“விஜய்! நாங்கள் சொல்வது உன்னுடைய நலனை வெண்டிதான். வேறு விதமாக நினைத்துக் கொள்ளாதே” ராதிகா சொன்னாள்.
“எனக்குத் தெரியும்.” விஜய் நாற்காலியிலிருந்து எழுந்து கொண்டே சொன்னான்.
“ஐ ஹேட் தட் ஃபெலோ ஆனந்த். அவன் போனால் தவிர உனக்கு விடிவு காலம் வராது.” பிரசாத் சொன்னான்.
போகப்போன விஜய் சரேலென்று திரும்பினான். அவன் கண்களில் கோபம் கணகணவென்று அக்னியைப் போல் ஜொலித்துக்கொண்டிருந்தது. விஜய் பிரசாதைக் கை நீட்டி அடித்து விடப் போகிறான் என்று ராதிகா பயந்து விட்டாள். சட்டென்று எழுந்து வந்து விஜயின் கையைப் பற்றிக் கொண்டாள்.
“சாரி விஜய்! ரியல்லி வெரி சாரி. பிரசாத் பற்றி உனக்குத் தெரியாதா. முன்பின் யோசிக்காமல் மனதில் பட்டதை வெளியில் சொல்லி விடுவார்” என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள். கணவன் பக்கம் திரும்பி. “என்ன பேசுகிறோம் என்று புரிந்துதான் பேசுகிறீர்களா? ஒரு நண்பனுக்கு விருப்பமான நபரைப் பற்றி இப்படித்தான் பேசுவார்களா? உங்களுக்கு ஆனந்த் என்றால் பொறாமை! விஜய் ஆனந்திடம் பழகும் அளவுக்கு நெருக்கமாக, நட்புடன் உங்களுடன் பழகவில்லை என்று போட்டி மனப்பான்மை!”
“ஷட்டப்!” பிரசாத் கத்திக்கொண்டே எழுந்தான். “எனக்கு… எனக்குப் பொறாமையா?” மனைவியின் அருகில் வந்தான். “நண்பர்கள் என்றால் நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக சொல்லும் துணிச்சல் இருக்க வேண்டும். அது நம்முடைய கடமை. இத்தனை வருடங்களாய் அவனுடன் பழகியிருக்கிறோம். ஒரு நாளாவது அவன் சந்தோஷமாய் தனக்காக வாழ்ந்திருக்கிறானா? ஆனந்துக்காக எத்தனை விஷயங்களை ஒதுக்கி இருக்கிறான் தெரியுமா? ஆனந்துடன் அவனுடைய நட்பு ஆழமானதாகவே இருக்கட்டும். ஆனந்த் அவனுடைய உயிருக்கும் மேலானவனாகவே இருக்கலாம். ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. தன்னுடைய வாழ்க்கையைப் பணயமாக வைக்க வேண்டிய அவசியம்தான் என்ன? அந்த நிலம், ஃபாக்டரிக்கள் அவற்றுக்காக அவ்வளவு கஷ்டப்பட்டு உழைப்பானேன்?”
விஜய் ஆவேசமாய் மூச்சு விட்டுக் கொன்ன்டிருந்தான். வீட்டை விட்டு வெளியேறப் போனான். ராதிகா அவன் கையைப் பலமாகப் பற்றிக் கொண்டாள்.
அதற்குள் குழந்தை தூக்கத்திலிருந்து எழுந்து அழத் தொடங்கினாள். பிரசாத் போய் குழந்தையைத் தூக்கிக் கொண்டான். குழந்தை பிறந்தபோது விஜய் செய்த உதவி நினைவுக்கு வந்ததும் பிரசாதின் ஆவேசம் குறைந்தது. ராதிகா குழந்தை மீது சத்தியம் செய்து விஜயைப் போகாமல் தடுத்து விட்டாள்.
விஜய் நாற்காலியில் சிலையாய் உட்கார்ந்திருந்தான்.
பிரசாத் குழந்தையைத் தூக்கிக்கொண்டு விஜய் அருகில் வந்தான். அவன் முகத்தில் பச்சாத்தாபம் தெரிந்தது. “சாரி விஜய்! ஆவேசம் வந்தால் என்னால் வார்த்தைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என்று உனக்குத் தெரியும். நீ என்னுடைய நண்பன். நீ நன்றாக வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். அதைவிட எனக்கு வேறு எண்ணம் எதுவும் இல்லை.”
விஜய் எதுவும் பேசவில்லை.
“உனக்கு எடுத்துச் சொல்லும் அதிகாரம் எனக்கு இருக்கு என்று நினைத்ததால் அப்படி பேசினேன்.”
“ஆனந்த் விஷயத்தில் விமரிசனம் செய்யும் அதிகாரம் யாருக்கும் இல்லை” என்றான் விஜய்.
கத்தியைப் போல் கூர்மையாக இருந்த அந்தப் பதில் பிரசாதின் மனத்தைக் காயப்படுத்தி விட்டதென்று அவன் முகமே பறைச்சாற்றியது.
“ஓ.கே. ஓ.கே. இனி ஒரு நாளும் இந்தப் பேச்சை எடுக்க மாட்டேன். சரிதானா.” பிரசாத் சொன்னான்.
அதற்குள் போன் மணி ஒலித்தது. ராதிகா போனை எடுத்தாள். உடனே கணவரை அழைத்து, “காவல் நிலையத்திலிருந்து பிரதீப். உங்களிடம் பேச வேண்டுமாம்” என்றாள்.
பிரசாத் ரிசீவரை எடுத்துக் கொண்டான். மறுமுனையிலிருந்து சொல்லப்பட்ட செய்தியைக் கேட்டதும் அவன் முகம் மலர்ந்தது.
“நிஜமாகவா! ரொம்ப சந்தோஷம் பிரதீப். நாங்கள் இப்போதே கிளம்பி வருகிறோம். ஆமாம்… அந்தப் பெண்ணின் பெயர் ஹேமா. டாக்டராக இருக்கிறாள். அவளுடைய மருத்துவச் சான்றிதழ்கள், சில நகைகள், விலை உயர்ந்த புடவைகள் அந்தப் பெட்டியில் இருந்தன. உடனே வருகிறோம். நீ அங்கேதான் இருப்பாய் இல்லையா.” ரிசீவரை வைத்துவிட்டு விஜய் பக்கம் திரும்பினான். “விஜய்! உன்னுடைய ப்ரீப்கேசும், ஹேமாவின் சூட்கேசும் கிடைத்து விட்டதாம். பிரதீப்பிடம் சொல்லியிருந்தேன். நீ நினைத்தது உண்மையாகி விட்டது. டாக்ஸிக்காரன்தான் அவற்றை எடுத்திருக்கிறான். இரண்டடிகளைக் கொடுத்தும் உண்மையைச் சொல்லி விட்டான். காவல் நிலையத்திற்கு வந்து பொருட்களை அடையாளம் காட்டி எடுத்துப் போகச் சொல்கிறான்.”
“அப்படியா… காணாமல் போன பொருட்கள் திரும்ப கிடைத்தது விசேஷம்தான்.” ராதிகா மகிழ்ச்சியுடன் சொன்னாள்.
“பிரதீப் இந்தக் கேஸில் கவனம் எடுத்துக்கொண்டதால், இவ்வளவு சீக்கிரமாய் விவகாரம் முடிந்தது. வா விஜய்… போகலாம்” என்றான் பிரசாத். கிளம்பப் போனவன் நின்று, “ஹேமாவுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டுமே. ஊரில் இருக்கிறாளோ… போய் விட்டாளோ?” என்றான்.
“ஊரில்தான் இருக்கிறாள்.” ராதிகா சொன்னாள்.
“அப்போ போன் செய்துவிடு.”
ராதிகா போன் செய்தபோது ஹேமாவின் சித்தி எடுத்தாள். “ஹேமா ஏதோ வேலையாய் வெளியில் போயிருக்கிறாள். அரை மணியில் திரும்புவாள். அவள் வந்ததும் உனக்குப் போன் செய்யச் சொல்கிறேன்” என்று சொன்னாள் அந்த அம்மாள்.
விஜய், பிரசாத் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். மறுபடியும் போன் வந்தது. ராதிகா போனை எடுத்து கணவரை அழைத்து, “உங்களுக்குத்தான். சக்கிரவர்த்தி கூப்பிடுகிறார்” என்றாள்.
பிரசாத் போன் எடுத்துப் பேசினான். ரிசீவரை வைத்துவிட்டு, “விஜய்! சக்கிரவர்த்தியுடன் அர்ஜெண்டாக ஏர்போர்ட் போக வேண்டும். காவல் நிலையத்திற்கு உன்னுடன் வர முடியாது. போகும்போது என்னை சுதர்சனம் வீட்டில் இறக்கி விடு” என்றான்.
அத்தியாயம்-8
விஜய் காவல் நிலையத்திற்குச் சென்ற போது பிரதீப் இருந்தான். ப்ரீப்கேஸில் இருந்த தஸ்தாவேஜுகள், பணம் பற்றிய விவரங்கள் விஜய் சொன்னான். தஸ்தாவேஜுகள் எல்லாம் சரியாக இருந்தன. பணம் மட்டும் ஆயிரம் ரூபாய் குறைந்திருந்தது. டாக்ஸிக்காரன் ஹேமாவின் நகைகளை நான்காயிரத்திற்கு அடகு வைத்திருந்தான். நகைகளை மீட்க பிரதீப், விஜய் டாக்ஸிக்காரனையும் அழைத்துச் சென்றார்கள். விஜய் மார்வாடியிடம் பணத்தைக் கொடுத்து விட்டு நகைகளை மீட்டான்.
“சர்டிபிகேட்ஸை பார்த்துக்கொள். எல்லாம் சரியாக இருக்கு இல்லையா?” பிரதீப் கேட்டான்.
ஹேமா ஜெனரல் பிஜிஷியன். எல்லாம் மருத்துவப் படிப்புக்குச் சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள். இரண்டு மூன்று ஆஸ்பத்திரிகளில் வேலை பார்த்ததற்கான சான்றிதழ்கள். இருவரும் காவல் நிலையத்திற்குத் திரும்பி வந்தார்கள். விஜய் தன்னுடைய பொருட்களைப் பெற்றுக்கொண்டதற்கு அத்தாட்சியாக கையெழுத்திட்டான். விஜய்க்காகச் சாட்சி கையெழுத்துப் போட்டவர்களையே ஹேமாவுக்குச் சம்பந்தப்பட்ட பேப்பர்களிலேயும் கையெழுத்துப் போடச் செய்தார்கள்.
“அந்தப் பெண்ணும் சில பேப்பர்களில் கையெழுத்துப் போட வேண்டியிருக்கும்.” பிரதீப் சொன்னான்.
“ராதிகா போன் செய்து தகவலை தெரிவித்து விட்டாள். கட்டாயம் அவள் வருவாள்.” விஜய் சொல்லிக் கொண்டிருந்தபோதே…
“எக்ஸ்கியூஸ் மி!” வாசலில் குரல் கேட்டது. பிரதீப் தலையை உயர்த்திப் பார்த்தான்.
“மிஸ்டர் பிரதீப் என்பது…” அந்தக் குரலைக் கேட்டதும் விஜய் திரும்பிப் பார்த்தான். ஹேமாவும் விஜயைப் பார்த்தாள். ஆனால் அடுத்த நிமிடம் அறிமுகம் இல்லாதவனைப் பார்த்தது போல் பார்த்துவிட்டுப் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.
“ராதிகா போன் செய்து சொன்னாள், என்னுடைய சூட்கேஸ் கிடைத்து விட்டது என்று பிரசாத் சொன்னாராம். என் பெயர் ஹேமா.” வாசலிலேயே நின்று கொண்டு சொன்னாள்.
“வாங்க… வாங்க. விஜயும் நானும் இப்பொழுதுதான் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.” பிரதீப் சொன்னான்.
பிரதீப் ஹேமாவை உட்காரச் சொல்லிவிட்டு சூட்கேசில் இருந்த பொருட்களின் விவரங்களைக் கேட்டான். ஹேமா சொன்னாள்.
“எல்லா பொருட்களும் சரியாக இருக்கு. உங்க பட்டுப் புடவைகள் மட்டும் காணும். நகைகளை அடகு வைத்திருந்தான். விஜய் பணம் கொடுத்து உங்கள் நகைகளை மீட்டுவிட்டான். விஜய்க்கு நீங்க நான்காயிரம் தர வேண்டியிருக்கும். நாற்பதாயிரம் நஷ்டமாக வேண்டிய இடத்தில் நான்காயிரம் மட்டும்தான் போச்சு என்று திருப்திபட்டுக் கொள்ள வேண்டியதுதான்” என்றான் பிரதீப்.
ஹேமா சர்டிபிகேட்ஸை சரி பார்த்து விட்டு அவற்றை மார்போடு அணைத்துக் கொண்டாள்.
“ஓ காட்! இவைதான் எனக்கு முக்கியம்” என்றாள். “சர்டிபிகேட்ஸ் தொலைந்து போனால் டூப்ளிகேட் வாங்கிக் கொள்ளலாம்தான். இருந்தாலும் ஒரிஜினல் சர்டிபிகேட்ஸ் தொலைந்து போனால் மனதிற்குக் கஷ்டமாக இருக்கும் இல்லையா. சென்டிமென்ட்!” என்றாள்.
புரிந்துகொண்டது போல் பிரதீப் புன்முறுவல் செய்தான். கால் மணி நேரம் கழித்து ஹேமா பிரதீப்க்கு நன்றியைத் தெரிவித்து விட்டு எழுந்து கொண்டாள்.
“பிரசாத் ரிப்போர்ட் கொடுத்து நீங்களும் முயற்சி செய்ததில் கையை விட்டுப் போன பொருள் மறுபடியும் கிடைத்து விட்டது. தாங்க் காட்!” என்றாள்.
போகப் போனவள் ஒரு நிமிடம் நின்றாள். கழுத்தில் இருந்த செயினை எடுத்து விஜய்க்கு எதிரே மேஜை மீது வைத்தாள்.
“தற்போது என்னிடம் பணம் அவ்வளவு இல்லை. உங்கள் பணத்தைக் கொடுத்து விட்டு, பிறகு இதை எடுத்துக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாய் அந்த இடத்தை விட்டுப் போய் விட்டாள்.
ஹேமா காவல் நிலையத்தில் இருந்த அரைமணி நேரமும் விஜய் பக்கம் பார்க்கவில்லை. ஒரு வார்த்தைகூட பெசவில்லை. விஜயும் அவள் பக்கம் பார்க்கவில்லை.
பத்து நிமிடங்கள் கழித்து விஜய் பிரதீபிடம் விடைபெற்றுக்கொண்டு ப்ரீப்கேஸை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.
அவன் காரில் வரும்போது சற்று தூரத்தில் சாலையோரத்தில் ஹேமா சூட்கேஸைக் கையில் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள். ஆட்டோவுக்காகக் கையை நீட்டினாள். ஆட்டோ வந்து அவள் அருகில் வந்து நின்றது. தான் போக வேண்டிய இடத்தைச் சொல்லியிருக்க வேண்டும். ஆட்டோக்காரன் மறுத்துவிட்டுப் போய் விட்டான். ஹேமா ஆட்டோவுக்காகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
விஜய் காரின் வேகத்தைக் குறைத்தான். புருவங்களை உயர்த்தி ஒரு நிமிடம் யோசித்தான். பிறகு மெதுவாகக் காரை ஹேமாவின் அருகில் கொண்டு போய் நிறுத்தினான். ஹேமா அவனைப் பார்த்தாள். ஆனால் புன்னகை செய்யவில்லை. புதியவனைப் பார்ப்பது போல் அலட்சியமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டு ஆட்டோவுக்காகப் பார்க்கத் தொடங்கினாள்.
விஜய் கார் கதவைத் திறந்து, “வாங்க… ட்ராப் செய்கிறேன்” என்றான். “நோ… தாங்க்ஸ்.” அவன் பக்கம் பார்க்காமலேயே சொன்னான்.
விஜய் ஹேமாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். அவள் முகத்தில் கோபத்தைவிட வேதனைதான் அதிகமாக இருந்தது. விஜய் இறங்கி வந்து ஹேமா கீழே வைத்திருந்த சூட்கேஸை எடுத்துக் கொண்டான்.
“வேண்டாம். எனக்கு விருப்பம் இல்லை” என்றாள்.
“வாங்க.” விஜய் சூட்கேஸை எடுத்துக்கொண்டு காரின் பின் சீட்டில் வைத்தான். “என்னால் போக முடியும்.” குரலை உயர்த்திச் சொன்னாள். அவன் தலையைத் திருப்பிப் பார்த்தான்.
“நான் வரமாட்டேன். சூட்கேஸை கொடுத்து விடுங்கள்.” கச்சிதமாகச் சொல்வது போல் சொன்னாள்.
சற்று தொலைவில் இருந்த பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த கல்லூரி மாணவர்கள் இந்த ரகளையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் விசில் அடித்தான்.
விஜய் பொறுமையாக ஹேமாவுக்காகக் காத்திருந்தான்.
ஹேமா நடுரோடில் ரகளை செய்வதில் விருப்பமில்லாதது போல் வலுக்கட்டாயமாக வந்து காரில் ஏறிக் கொண்டாள்.
விஜய் சாலையையே கவனமாகப் பார்த்துக்கொண்டு காரைச் செலுத்திக் கொண்டிருந்தான். ஹேமா முகத்தைத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
“இப்படி வருவது எனக்கு பிடிக்கவில்லை. நாமிருவரும் எப்பொழுதும் சந்தித்துக்கொள்ளக் கூடாது” என்றாள்.
அவன் பதில் சொல்லவில்லை.
“யாராவது உங்கள் மீது அதிகாரம் செலுத்தினால் நீங்கள் சும்மா இருப்பீங்களா?” என்று கேட்டாள்.
அவன் பதில் பேச வில்லை.
“நடுரோடில் சண்டை போடுவது உசிதமில்லை என்று வந்தேனே தவிர, உங்களுக்குப் பயந்து இல்லை” என்றாள்.
அதற்கும் அவன் பதில் சொல்லவில்லை. ஹேமாவும் பேசவில்லை. அவனைவிட இரட்டிப்பு பிடிவாதமாய் தன்னால் இருக்க முடியும் என்பதுபோல் மௌனமாக இருந்து விட்டாள். இருவரும் ஒரு வார்த்தைக் கூட பேசிக்கொள்ளவில்லை.
அருகருகில் அமர்ந்திருந்த அந்த இருவரும் வேதனையை, மகிழ்ச்சியை மௌனமாய் பகிர்ந்துகொள்வது போல் இருந்தார்கள். அந்த மௌனமே ஆயிரம் எண்ணங்களை வெளிப்படுத்துவது போல் தோன்றியது. வீடு நெருங்கிக் கொண்டிருந்தது. விஜய் சட்டைப் பையிலிருந்து செயினை எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு ஹேமாவின் பக்கம் பார்த்தான்.
“என்ன இது?” புரியாதவள் போல் கேட்டாள்.
அவன் எதுவும் சொல்லவில்லை. ஆனால் நீட்டியிருந்த அவன் கை அந்த செயினை எடுத்துக்கொள்ளச் சொல்வதுபோல் இருந்தது.
“நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். பணத்தை மனியார்டர் செய்த பிறகு அனுப்புங்கள்” என்றவள் பிறகு அந்த செயினுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் முகத்தைத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்து கொண்டாள். வீட்டின் முன் கார் நின்றதும் ஹேமா கதவைத் திறந்துகொண்டு இறங்கப் போனவள் நின்று, “தாங்க்யூ” என்றாள்.
விஜய் ஹேமாவின் மடியிலிருந்த பேக்கை எடுத்து ஜிப்பை திறந்து செயினை உள்ளே போட்டுவிட்டு ஜிப்பை மூடி, பழைய இடத்திலேயே வைத்து விட்டான். இறங்கும் மும்மரத்தில் இருந்த ஹேமா புரிந்து கொள்வதற்குள் இது நடந்து முடிந்து விட்டது.
ஹேமா கண்களை உருட்டி விழித்தாள்.
“எனக்கு வேண்டாமென்று சொன்னேனே. இப்போ என்னிடம் அவ்வளவு பணம் இல்லை.” ஹேமா பேக்கை கார் சீட் மீதே வைத்துவிட்டு இறங்கினாள். விஜய் அந்தப் பக்கமாய் இறங்கி ஹேமாவின் சூட்கேஸை எடுத்துக் கொண்டிருந்தான். அதற்குள் ஹேமாவின் சித்தப்பா வெளியிலிருந்து ஸ்கூட்டரில் வந்தார்.
“விஜய் என்பது நீங்கதானே. நமஸ்காரம்… வாங்க வாங்க. ஹேமாவின் சூட்கேஸ் கிடைத்து விட்டதாமே. சற்று முன் என் மனைவி தகவல் தெரிவித்தாள். தொலைந்து போன பொருள் மறுபடியும் கிடைத்தது எங்களுடைய அதிர்ஷ்டம்தான்.
அதிலும் முக்கியமாக ஹேமாவின் சர்டிபிகேட்ஸ், நகைகள். வாங்க… உள்ளே வாங்க: என்று சொல்லிக்கொண்டே விஜய் கையிலிருந்து சூட்கேசை எடுத்துக் கொண்டார்.
“அவருக்கு அவசரமான வேலை இருக்கிறதாம் சித்தப்பா. இன்னொரு தடவை எப்பொழுதாவது வருவார். இப்போ உடனே போகணும்.”
“நீ சொல்வதும் சரிதான். விஜய் தம்பி! இத்தனை தூரம் வந்திருக்கீங்க. ஒரு கப் காபியாவது…”
“சித்தப்பா! நான்தான் சொன்னேனே, அவருக்கு அவசரமான வேலை இருக்குன்னு.” உரத்தக் குரலில் சொல்லிவிட்டு ஹேமா உள்ளே போய் விட்டாள்.
“ரொம்ப நேரம் ஆகாது தம்பி.” வேண்டுகோள் விடுப்பது போல் பார்த்தார் அவர். “வாங்க… ஒரு நிமிடம் உள்ளே வந்து விட்டுப் போகிறேன்” என்றான் விஜய். “ஹேமா காரில் பேக்கை மறந்து விட்டாள். இந்தாங்க” என்று அவரிடம் பேக்கைக் கொடுத்தான்.
“ஹேமா! சீக்கிரமாய் காபி கலந்து எடுத்து வாம்மா.” உள்பக்கம் பார்த்து குரல் கொடுத்தார். பிறகு விஜய் பக்கம் திரும்பி. “உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ. எங்க ஹேமா ரொம்ப நன்றாகக் காபி கலப்பாள்.” பெருமை பொங்கும் குரலில் சொன்னார்.
ஹேமா வரும் ஜாடை தெரியவில்லை.
“என்ன ஹேமா? ஆச்சா?” சித்தப்பா உள் பக்கம் திரும்பிக் குரல் கொடுத்தார். “இல்லை சித்தப்பா.” உள்ளே இருந்து பதில் வந்தது.
“சீக்கிரமாய் கலந்து கொண்டு வாம்மா. வேணும்னா நான் உள்ளே வந்து எடுத்துப் போகிறேன்.”
“நான் காபி கலக்கவே இல்லை சித்தப்பா. நேரமில்லைன்னு சொல்றவங்களை வலுக்கட்டாயமாக உள்ளே அழைப்பானேன்?” கடிந்து கொள்வது போல் சொன்னாள் ஹேமா.
“நீ சொல்வதும் சரிதான். இருந்தாலும் ஏதோ மரியாதைக்காவது… ஒரு நிமிஷம்.” அவரே பிரிஜ்ஜிலிருந்து பழச்சாற்றைக் கலந்து டம்ளரில் எடுத்துக் கொண்டு போனார்.
“இதோ… உன் பேக்கை காரில் மறந்து விட்டாயாம்.” சூட்கேசில் இருந்த பொருட்களை சரிபார்த்துக் கொண்டிருந்த ஹேமாவிடம் வந்து கொடுத்து விட்டுப் போனார். ஹேமாவின் சித்தப்பா கலகலவென்று பேசும் சுபாவம் படைத்தவர். பத்து நிமிடங்கள் விடாமல் பேசிக் கொண்டிருந்தார். விஜய் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
நடுவில் ஹேமா ஒரு தடவை ஹாலுக்கு வந்தாள். ஏதோ சொல்லப் போனவள் நின்று விட்டாள். வாசல் வரை சென்று விட்டு மறுபடியும் வேகமாய் உள்ளே போய் விட்டாள். விஜய் எழுந்து கொண்டான். ஹேமா தன்னிடம் பேசக் கூட விரும்பவில்லை என்று அவனுக்குப் புரிந்தது.
வாசற்படியைத் தாண்டும் போது அவன் மனதில் வெறுமை ஏதோ பரவுவது போல் இருந்தது. ஒரு நிமிடம் உள்ளே போய் ஹேமா இருந்த அறையின் வாசல் வரை சென்று, “போய் வருகிறேன்” என்று அவளிடமிருந்து விடைபெற்றுக்கொள்ள வேண்டுமென்று அவன் மனம் துடித்தது. ஆனால் ஏதோ ஒரு சக்தி அவனைத் தடுத்து நிறுத்தியது. வலுக்கட்டாயமாக சக்தியைத் திரட்டிக்கொண்டு வெளியில் வந்து காரில் உட்கார்ந்து கொண்டான். காரை ரிவர்ஸ் செய்து திருப்பும்போது தன்னையும் அறியாமல் பார்த்தான். வராண்டா காலியாக இருந்தது. அவன் பெருமூச்சு விட்டான்.
ஹேமா இப்படி நடந்து கொண்டதில் அவனுக்குக் கோபம் வரவில்லை. ஹேமாவை மறக்க முடியாத தன்னுடைய இயலாமையை நினைக்கும்போது அவன் மீதே அவனுக்குக் கோபம் வந்தது.
“மறுபடியும் நாம் சந்தித்துக்கொள்ளப் போவதில்லை” என்று அவ்வளவு கச்சிதமாய் சொன்ன பிறகு அந்தப் பெண்ணை மறுபடியும் பார்க்க வேண்டும் என்று தோன்றியதற்கு…
காவல் நிலையத்தில் ஹேமாவைப் பார்த்ததும் தன் மனதில் ஆனந்த பைரவி ராகம் ஒலித்ததற்கு…
எல்லாவற்றையும் விட அந்த வார்த்தை சொன்னதன் மூலமாய் ஹேமாவின் மனதைக் காயப்படுத்தி விட்டோம் என்று தெரிந்தும் மனிப்புக் கேட்டுக்கொள்ள முடியாமல் போனதற்கு…
தன் மீதே கோபம் வந்தது.
விஜய் கீழ் உதட்டைப் பற்களால் அழுத்திக் கொண்டான். எதிரே சைக்கிள் ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக்கைப் போட்டான். மறுபடியும் காரை ஸ்டார்ட் செய்யப் போனபோதும் டாஷ் போர்டில் சிக்கிக்கொண்டு வெள்ளை காகிதம் ஒன்று கண்ணில் பட்டது. அவன் புருவங்கள் உயர்ந்தன. ஒரு கையால் டிரைவ் செய்து கொண்டே மறுகையால் டாஷ்போர்ட்டைத் திறந்து பார்த்தான். மடித்து வைத்த காகிதத்தில் ஹேமாவின் செயின் பளபளத்துக் கொண்டிருந்தது. அவன் கண்கள் வியப்பால் விரிந்தன. மடங்கியிருந்த காகிதத்தைச் சரி செய்து படித்தான்.
“வாழ்க்கையில் எப்பொழுதும் சந்தித்துக் கொள்ள முடியாத நபரிடம் கடன் வைத்துக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை.”
ஹேமாவின் கையெழுத்து அழகாய், முத்துக் கோர்த்தது போல் இருந்தது. அந்தக் கையெழுத்தில் அவள் மன உறுதி, தைரியம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அவன் மனதை சூழ்ந்திருந்த ஏமாற்றங்கள் சிதறிப்போகத் தொடங்கின. ஹேமாவை மறுபடியும் பார்க்க முடியும்! அந்த வாய்ப்பு முழுவதுமாக அற்றுப் போய் விடவில்லை. விஜய் செயினையும், கடிதத்தையும் பையில் வைத்துக் கொண்டான். சற்று முன் விரக்தியாகப் பற்று இல்லாதது போல் தென்பட்ட உலகம் இப்போ வண்ணமயமாய், ஆர்வம் நிறைந்ததாய் தோன்றியது. காரைச் செலுத்திக்கொண்டே இடது கையால் சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். உள்ளங்கையில் பட்ட செயினின் ஸ்பரிசம் தான் செய்த தவறை சரிசெய்து கொள்வதற்கு வாய்ப்பு தருவது போல் இருந்தது.
அத்தியாயம்-9
நான்கு வாரங்கள் கழிந்தன. விஜய் ஹேமாவைப் பற்றி நினைக்கவில்லை. ஆனால் ராதிகா ஹேமாவைப் பற்றி கடிதங்களில் அடிக்கடி எழுதிக் கொண்டுதான் இருந்தாள். விஜயின் பெட்டியில் ஹேமாவின் செயின் அப்படியே இறந்தது. ஹேமா பணத்தை அனுப்பவும் இல்லை. விஜய் செயினைத் திருப்பித் தரவும் இல்லை. என்றாவது ஒருநாள் தானே சுயமாய் ஹேமாவிடம் கொடுக்க வேண்டும் என்று விஜய் முடிவு செய்திருந்தான். மாம்பழத் தோட்டத்திற்கு அடுத்தாற்போல் இருந்த பத்து ஏக்கர் தென்னந்தோப்பு விலைக்கு வந்தது. விஜய் அதை வாங்குவதற்கான ஏற்பாடுகளில் மூழ்கியிருந்தான். தீட்சிதர் இது போன்ற விவகாரங்களில் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு விஜய்க்கு அதிகாரம் வழங்கியிருந்தார்.
தென்னந்தோப்பு வாங்கப் போவதாய் விஜய் வந்து சொன்னபோது தீட்சிதர் உள்ளூர் சந்தோஷப் பட்டாலும் வெளியில் பட்டும் படாதது போல், “என்னவோப்பா விஜய்! எல்லாம் உன் இஷ்டம். நீ எது செய்தாலும் ஆனந்தின் நலனை உத்தேசித்துதான் செய்வாய் என்று எனக்குத் தெரியும். சொத்து அபிவிருத்தியானால் ஆனந்த் பணக்காரன் ஆவான். ஆனந்த் பணக்காரன் ஆனால் நீயும் பணக்காரன் ஆனாற்போல் தான். நல்ல பெண்ணாகப் பார்த்து இந்த சித்திரையில் ஆனந்தின் திருமணத்தை முடித்து விட வேண்டும்” என்றார்.
ஒவ்வொரு சமயம் அவர் சொல்வதைக் கேட்கும் பொழுது விஜய்க்கு தான் அனாவசியமாய் அந்தப் பெரியவரை தவறாக நினைக்கிறோமோ என்ற சந்தேகம் வரும்.
விஜய் தோப்பு வாங்கும் விஷயமாய் தஸ்தாவேஜுகளை தயார் செய்வதில் பிசியாக இருந்தான். அக்ரிமென்ட் எழுதுவதற்காக ஸ்டாம்பு பேப்பர்களை எடுத்துக் கொள்வதற்காகத் தன்னுடைய அறைக்கு வந்தான்.
ஆனந்த் நிலைக்கண்ணாடியின் முன்னால் நின்று கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“விஜய்! இங்கே வாயேன்.”
காகிதங்களை எடுத்துக்கொண்டு வேகமாய் திரும்பப் போன விஜயை அழைத்தான்.
“அனூ! ரொம்ப அவசரமான வேலையில் இருக்கிறேன். பிறகு வருகிறேன்.”
விஜய் படியைத் தாண்டப் போனான்.
“நோ!” ஆனந்த் கத்தினான். “போகாதே விஜய். வேலை எப்போதும் இருப்பதுதான். நீ முதலில் இங்கே வா.” கண்ணாடியில் பார்த்துக்கொண்டே சொன்னான்.
அவன் வார்த்தையை மீறிப்போனால் அதன் பிறகு நடக்கப் போகும் ரகளை என்னவென்று விஜய்க்கு நன்றாகவே தெரியும். இந்த விஷயத்தில் அவனுக்கு பதினெட்டு வருடங்கள் அனுபவம் இருந்தது. ஆனந்துக்குக் கோபம் வந்தால் சாப்பிட மாட்டான். தண்ணீர்கூட குடிக்க மாட்டான். வெறும் தரையில் படுத்துக் கொள்வான். ஆஸ்துமா அட்டாக் வந்து மூச்சு சரியாக விட முடியாமல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பான்.
விஜய் விருப்பம் இல்லாமலேயே திரும்பி வந்தான். “என்ன விஷயம்? சீக்கிரமாய் சொல்லு. ஹாலில் பெரிய மனிதர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று அவசரப் படுத்தினான்.
“யார் பெரிய மனிதர்கள்? அவர்களா? என்னைப் பொறுத்தவரை நீதான் இந்த உலகத்திலேயே பெரிய மனிதன். அதனால் உனக்காகத்தான் அவர்கள் காத்திருக்க வேண்டும்.”
“சரி சரி. சீக்கிரமாகச் சொல்லு.” கையிலிருந்த காகிதங்களைச் சரிபார்த்துக்கொண்டே சொன்னான்.
“இதோ… என்னைச் சரியாக பார்.” ஆனந்த் விஜய் பக்கம் திரும்பி மகிழ்ச்சியுடன் சொன்னான்.
“என்ன விஷயம்?” காகிதங்களைச் சரி பார்த்துக்கொண்டே நிமிர்ந்து பார்த்த விஜய் கற்சிலையாகி விட்டான்.
ஆனந்தின் கழுத்தில் ஹேமாவின் செயின் மின்னிக் கொண்டிருந்தது.
“எப்படி இருக்கு விஜய்? ரொம்ப நன்றாக இருக்கிறது இல்லையா. எப்போ வாங்கினாய்? டிசைன் ரொம்ப நன்றாக இருக்கிறது.” ஆனந்த் செயினை விரலால் தொட்டுப் பார்த்துக் கொண்டான். “தாங்க்ஸ் விஜய்! நீ எப்போதும் இந்த மாதிரிதான். எதிர்பாராமல் ஏதாவது பரிசு பொருட்களைக் கொண்டு வந்து என்னை வியப்பில் ஆழ்த்துவாய். இந்த வாட்சும், மோதிரமும் அப்படி கொடுத்ததுதானே.”
ஆனந்த் அருகில் வந்தான். “உன்னுடைய வொயிட் ஷர்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை அணிந்து கொண்டு ரமாவின் பிறந்த நாள் விழாவுக்குப் போகணும் என்று நினைத்திருந்தேன். ஷர்ட்காக உன் பெட்டியில் தேடியபோது கவரில் பத்திரமாக வைத்திருந்த செயின் கண்ணில் பட்டது. ரொம்ப பிடித்திருந்தது. உடனே போட்டுக்கொண்டு விட்டேன். நன்றாக இருக்கிறதா? சொல்லு.” மறுபடியும் கேட்டான்.
அநூ! அந்த செயின் வேறு ஒருத்தருடையது என்றும். அதை எடுத்து மறுபடியும் உள்ளே வைத்து விடு என்றும் ஆனந்திடம் விஜய் சொல்லப் போனான். அதற்குள் ஆனந்தின் நண்பர்கள் கிரி, சதீஷ் வந்து விட்டார்கள். ஆனந்த் அவர்களைப் பார்த்ததும், ‘இதோ… நான் தயாராகத்தான் இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, விஜய் பக்கம் திரும்பி, “விஜய்! இந்த அக்ரிமென்ட் விவகாரத்தில் மூழ்கி வர மாட்டேன் என்று சொல்லிவிட்டாய். நண்பர்கள் எல்லோரும் பார்ட்டியில் சந்தித்துக்கொள்ளப் போகிறோம். வருகிறேன்” என்று கிளம்பிப்போனான். வாசற்படியைத் தாண்டப் போன ஆனந்த் திரும்பி விஜய் அருகில் வந்தான். விஜயை இறுக அணைத்துக்கொண்டு, “ஐயாம் ஹேப்பி விஜய்! ஐ லைக் திஸ் செயின். தாங்க்யூ” என்று சொல்லிவிட்டுப் போனான். ஒரு மகன் தன்னுடைய தந்தையை அணைத்துக்கொள்வது போல் ஆனந்த் தன்னை அணைத்துக்கொண்டது கண்டு விஜயினால் எதுவும் சொல்ல முடியவில்லை. கீழே இருந்து, “விஜய்!” என்று ஆனந்த் குரல் கொடுத்தான். திடுக்கிட்ட விஜய் பால்கனியில் வந்து பார்த்தான்
டாப்லெஸ் ஜீப்பில் டிரைவிங் சீட்டில் அமர்ந்து கொண்டிருந்த ஆனந்த் விஜயைப் பார்த்துக் கையை உயர்த்தி அசைத்தான்.வெய்யில் பட்டு அவன் கழுத்திலிருந்த செயின் மின்னியது. விஜய் மூளை கலங்கியவனைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“விஜய்!” தீட்சிதர் கத்துவது கேட்டது. விஜய் காகிதங்களை எடுத்துக்கொண்டு கீழே ஓடினான்.
தோப்பின் விலையில் பதினைந்தாயிரமாவது குறைக்க வேண்டும் என்று தீட்சிதர் சொன்னதால் பேச்சு வார்த்தைகள் ரொம்ப நேரம் நீடித்தன. அக்ரிமென்ட் முடிக்கும் போது இரவு ஒன்பது மணியாகி விட்டது. வேலை முடிந்த பிறகு எல்லோரும் கிளம்பிப் போனார்கள். தீட்சிதர் இரவில் பலகாரத்தைச் சாப்பிட்டு விட்டுச் சீக்கிரமாய் உறங்கி விடுவார். ஆனந்த் வீட்டுக்கு வரப் போவதாகப் போன் செய்தான்.
விஜய் காத்திருந்தான். இரவு பதினோரு மணியாகி விட்டது. ஊர் முழுவதும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது ஆனந்த் போன் செய்து ரொம்ப நேரமாகி விட்டது. விஜய் ஹாலில் நடை பயின்று கொண்டிருந்தான். கிளம்புவதற்குத் தாமதமானால் ஆனந்த் மறுபடியும் போன் செய்வானே? விஜய் மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன.
ஆனந்தும் தன் வயதை ஒத்தவன்தான். அவனுடைய நல்லது கெட்டதை அவனே பார்த்துக்கொள்ள முடியும் என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக்கொள்ள நினைத்தான் விஜய். இப்பொழுதும் அதே நினைப்புதான். ஆனால் மனதில் வேண்டாத யோசனைகள் கடல் அலைகளைப் போல் கொந்தளித்துக் கொண்டிருந்தன.
நிசப்தம் நிறைந்த அந்த நேரத்தில் மாட்டு வண்டி ஏதோ வருவதுபோல் சத்தம் கேட்டது. விஜய் வராண்டாவின் விளக்கைப் போட்டு விட்டுப் பால்கனிக்கு வந்து எட்டிப் பார்த்தான் இரட்டை மாட்டு வண்டி ஒன்று ஆனந்தின் ஜீப்பை இழுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தது. விஜய் கிடுகிடுவென்று படியிறங்கி வந்தான்.
ஆனந்தின் ஜீப் மரத்தில் மோதியிருந்ததாம். அவனுக்கு நினைவு இருக்கவில்லை. குடி மயக்கத்தில் இருந்தான்.
“நாங்கள் வயலிலிருந்து திரும்பி வரும்போது மரத்தில் ஜீப் மோதியிருந்ததைப் பார்த்தோம் சாமி. அருகில் போய்ப் பார்த்தால் தீட்சிதரின் பேரன் என்று அடையாளம் தெரிந்தது. தம்பிக்கு சுயநினைவு இல்லை. ஜீப்பை வண்டியில் கட்டி இழுத்துக்கொண்டு வந்தோம்” என்று வண்டியுடன் வந்த உழவர்கள் சொன்னார்கள்.
விஜய் ஆனந்தைக் கவனமாகப் பார்த்தான். பெரிதாக அடி எதுவும் படவில்லை. தோளில் லேசாக சிராய்த்து இருந்தது. விஜய் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துவிட்டுப் பணத்தைக் கொடுத்து அனுப்பி விட்டான். ஆனந்தை இரு கரங்களாலேயும் தூக்கிக்கொண்டு மாடி அறைக்கு வந்து கட்டில்மீது படுக்க வைத்தான். ஆனந்தின் கழுத்தில் செயின், விரலில் மோதிரம், ரிஸ்ட் வாட்ச் எதுவும் இருக்கவில்லை. கால்களில் போட்டிருந்த விலை உயர்ந்த செருப்பைக் கூட யாரோ திருடி விட்டிருந்தார்கள்.
விஜய் கற்சிலையாக அப்படியே நின்று விட்டான்.
– தொடரும்…
– மௌனராகம் (நாவல்), தெலுங்கு: யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில்: கௌரி கிருபானந்தன்.