(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம்-4
விஜய் எறிய ரயில் காலையில் எட்டு மணிகெல்லாம் ஹைதராபாத் போயிருக்க வேண்டியது. மாணவர்கள் ரிசர்வேஷனுக்கு எதிராக மறியல் போராட்டம் நடத்தியதால் பதினான்கு மணி நேரம் தாமதமாக சிகிந்திராபாத் ஸ்டேஷனை அடைந்தது. ரயில் நிலையத்தில் ஒரே ரகளையாக இருந்தது. மறியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த மாணவர்களுக்கு இடையில் ரவுடிக் கும்பல் ஒன்று ஊடுருவி, இஷ்டம் வந்தது போல் கொள்ளையடிக்கத் தொடங்கியது. எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் அராஜகம்! மக்கள் கலவரத்தால் பெருமளவில் பாதிக்கப் பட்டார்கள்.
ரயில் பிளாட்பாரத்தில் சரியாக நிற்கும் முன்பே பயணிகள் தங்களுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு பயத்துடன், பதற்றத்துடன் இறங்கிக் கொண்டிருந்தார்கள். பார்த்துக் கொண்டிருந்தபோதே பிளாட்பாரத்தில் நின்றிருந்த காபி, டீ வண்டியை யாரோ கொளுத்தி விட்டதில் தீ கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. எரிந்து கொண்டிருந்த வண்டியைச் சுற்றி அரக்கர்களைப் போல் குதித்துக் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்த ரவுடிக் கும்பல் ரயில் வந்து நின்றதும், பயணிகளின் கைகளிலிருந்து பொருட்களைப் பிடுங்கிக் கொள்ள முயன்றது. போலீசாரால் நிலைமையைச் சமாளிக்க முடியவில்லை. பயணிகளை விரைவாக அந்த இடத்தை விட்டுப் போகச் சொல்லித் துரத்திக் கொண்டிருந்தார்கள். மக்கள் வேக வேகமாய் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
விஜய் கையில் ப்ரீப்கேஸை எடுத்துக்கொண்டு மக்கள் கும்பலுக்கு இடையில் புகுந்து வெளியே வந்து கொண்டிருந்தான். வெளியில் ரகளை இன்னும் அதிகமாக இருந்தது. கற்களை விட்டெரிந்ததில் கண்ணாடி கதவுகள் உடைந்திருந்தன. தனக்காக ஸ்டேஷனுக்குக் காரை எடுத்து வருவதாகச் சொன்ன பிரசாத்தின் ஜாடையே காணும். அவனைத் தேடவும் நேரமில்லை. அங்கிருந்த ஓரிரண்டு டாக்ஸிகளும் பயணிகளை ஏற்றிக்கொண்டு போய் விட்டன. ஆட்டோ ஒன்று எரிந்து கொண்டிருந்தது. ஆட்டோ டிரைவர் மார்பில் அடித்துக்கொண்டு, ரவுடிக் கும்பலை கட்டுபடுத்த முடியாமல் போன போலீசாரை வசைபாடிக் கொண்டிருந்தான்.
நிலைமை மேலும் மோசமாகிக் கொண்டிருந்தது. பெண்கள், குழந்தைகளின் கத்தல்கள் ரயில் நிலையம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. பிளாட்பாரத்தில் பயணிகளின் பொருட்கள் சிதறிக் கிடந்தன. நின்றிருந்த டாக்ஸி ஒன்று கிளம்பப் போனபோது விஜய் கையை உறதி, “டாக்ஸி!” என்று குரல் கொடுத்து நிற்கச் சொல்லி கையால் ஜாடை காட்டினான். வழியில் இருந்த பொருட்களைத் தாண்டிக்கொண்டு டாக்ஸியை நோக்கி வேகமாய் அவன் போய்க் கொண்டிருந்தபோது ஓட்டமும் நடையுமாய் அவனுடனேயே வந்து கொண்டிருந்த இளம் பெண் ஒருத்தி, கனமான சூட்கேஸையும் சுமந்துகொண்டு வேகமாய் ஓடமுடியாமல் கீழே விழுந்து விட்டாள்.
கீழே விழுந்து விட்ட பெண்ணைப் பார்த்ததும் குடிகார கும்பல் ஒன்று வாய்க்கு வந்தபடி உளறிக்கொண்டு மற்ற ரவுடிக்களையும் வரச் சொல்லிக் கூப்பாடு போட்டுக்கொண்டே அந்தப் பெண்ணை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆபத்தை உணர்ந்த விஜய் சட்டென்று குனிந்து அந்தப் பெண்ணின் கையைப் பற்றி எழுப்பி மற்றொரு கையில் சூட்கேஸை எடுத்துக்கொண்டான். கால் சுளுக்கிக்கொண்டு விட்டதால் அந்தப் பெண்ணால் வேகமாக நடக்க முடியவில்லை. விஜய் அவள் இடுப்பைச் சுற்றிலும் கையைப் போட்டு டாக்ஸி பக்கம் அவளை இழுத்துக்கொண்டு போனான்.
“உட்காருங்க சார் சீக்கிரம்!” டாக்ஸிகாரன் அவசரப் படுத்தினான். ஏற்கனவே டாக்ஸியில் அமர்ந்திருந்த பயணிகள், “உனக்குப் புத்தியிருக்கா. வண்டியை உடனே எடு” என்று டிரைவரைப் பார்த்துக் கூச்சலிட்டார்கள். அவன் அவர்களை லட்சியம் செய்யவில்லை. விஜய் சூட்கேசை டாக்ஸியில் முன்சீட்டில் அமர்ந்திருந்த பெரியவரின் மடியில் வீசிப் போட்டான். அந்தப் பெண்ணை உள்ளே தள்ளி தானும் ஏறிக்கொண்டு கதவைச் சாத்தும்போதே டாக்ஸி வேகமாய் போகத் தொடங்கியது. சாலை முழுவதும் கண்ணாடித் துண்டுகள். டாக்ஸியில் இருந்த பயணிகள், “முதலில் எங்களை இறக்கி விடு” என்று கத்திக் கொண்டிருந்தார்கள்.
“நீங்க சொன்ன ரூட்களில் போக முடியாது. சுற்று வழியில்தான் போக வேண்டியிருக்கும்.” டாக்ஸி டிரைவர் சொன்னான்.
எதிரே வந்த டாக்ஸி டிரைவர் ஒருவன், “அந்தப் பக்கம் போகாதே அண்ணாத்தே! ஜவுளிக்கடையை எரித்து விட்டார்கள். வெடிகுண்டுகளை வீசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று எச்சரித்துவிட்டுப் போனான்.
வீட்டுக்குச் சரியாகப் போய்ச் சேருவோமோ இல்லையோ என்று எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
எதிரே சற்று தொலைவில் திறந்த ஜீப் ஒன்றில் ரவுடிக் கும்பல் வருவதைக் கவனித்துவிட்ட விஜய் டாக்ஸி டிரைவரைப் பக்கத்துச் சந்தில் போகச் சொல்லி எச்சரித்தான் டாக்ஸி வேகமாய் பக்கத்துச் சந்தில் நுழைந்தது.
தெரு முழுவதும் ஆளரவமற்று இருந்தது. காற்றுக்கூட உள்ளே நுழையக் கூடாது என்பதுபோல் எல்லா வீடுகளின் ஜன்னல்கள், கதவுகள் சாத்தியிருந்தன.
அந்தக் குறுகலான சந்தில் சற்று தூரம் போவதற்குள் டயர் பஞ்சராகி டாக்ஸி நின்றுவிட்டது.
“எல்லோரும் இறங்கி வேகமாய் ஓடுங்கள். ரவுடிகள் இந்தப் பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள்.” டாக்ஸி டிரைவர் டாக்ஸியை விட்டு இறங்கி ஓடிக்கொண்டே எச்சரித்தான். மற்ற பயணிகளும் இறங்கி அவனைப் பின்பற்றி ஓடத் தொடங்கினார்கள்.
விஜய் டாக்ஸியை விட்டு இறங்கினான். அந்தப் பெண் கால்வலியால் துடித்துக்கொண்டே இறங்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
தொலைவில் வந்து கொண்டிருந்த குடிகாரன் ஒருவன் கையிலிருந்த பாட்டிலை விஜயை நோக்கி வீசினான். விஜய் சட்டென்று அந்தப் பெண்ணின் இரு தோள்களையும் பலமாகப் பற்றி வெளியில் இழுத்தான். நிற்க முடியாமல் அவள் தடுமாறியபோது, அவள் தோளைச் சுற்றிக் கையைப் போட்டு அப்படியே பக்கத்துச் சந்தில் இழுத்துக்கொண்டு போனான். எதிரே தென்பட்ட வீட்டுக் கதவைப் படபடவென்று தட்டினான்.
அந்தப் பெண் இதழ்களை அழுத்தி வேதனையை பொறுத்துக்கொள்ள முயன்றாள்.
“கதவைத் திறங்க ப்ளீஸ்!” விஜய் குரல் கொடுத்துக்கொண்டே மறுபடியும் கதவைத் தட்டினான். கதவுகள் கொஞ்சமாய் திறந்து கொண்டன. பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுவனொருவன் அப்பாவியாய், முகம் நிறைய மகிழ்ச்சியுடன், “அம்மா! போலீஸ்காரங்க வந்திருக்காங்க” என்று கதவைத் திறக்க முற்பட்டான்.
“அட பைத்தியக்காரா…” பின்னாலிருந்து ஓடி வந்த பெரியவர் ஒருவர் வேகமாக வந்து கதவைச் சாத்தப் போனார். விஜய் சட்டென்று காலை உள்ளே வைத்து விட்டுக் கதவைப் பலமாகப் பிடித்துக்கொண்டு மூட முடியாமல் செய்து விட்டான்.
“யார் நீ? யார் நீங்க?” பெரியவர் பயத்துடன் கத்திக் கொண்டிருந்தபோதே விஜய் அவரைத் தள்ளிக்கொண்டு அந்தப் பெண்ணையும் உள்ளே இழுத்துவிட்டுக் கதவைச் சாத்தினான்.
“என்னங்க? என்ன ஆச்சு?” பின்னாலிருந்து வந்த அம்மாள் பெரியவரின் மனைவியாக இருக்க வேண்டும்.
“அந்தப் பைத்தியக்காரனை அறையில் வைத்துக் கதவைத் தாழ் போடச் சொன்னால் கேட்டால்தானே?” கையை உயர்த்தி அவர் அந்த அம்மாளை அடிக்கப் போனபோது விஜய் அவருடைய கையைப் பற்றித் தடுத்து விட்டான்.
கணவன் மனைவி இருவரும் விஜயை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
விஜய் தாழ்ந்த குரலில் சொன்னான். “பயப்படாதீங்க. எங்களால் உங்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்கிறோம். நிலைமை கொஞ்சம் சரியானதும் போய் விடுகிறோம்.”
நயமான குரலில் அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே வெளியில் கத்தல்களும், கூச்சல்களும் கேட்டன. வீட்டுக்காரர் சட்டென்று எரிந்து கொண்டிருந்த விடிவிளக்கைக் கூட அணைத்துவிட்டார்.
“நாம் உள்ளே போய் விடலாம் வா” அவர் தன் மனைவியை மகனை அழைத்துக்கொண்டு உள்ளே போய் கதவைத் தாழ் போட்டுக்கொண்டு விட்டார்.
எங்கும் அடர்த்தியான இருள்.
தெருவில் ஜீப்பில் உலா வந்து கொண்டிருந்த ரவுடிக் கும்பலின் கூக்குரல்கள் மேலும் நெருக்கமாய் ஒலித்துக் கொண்டிருந்தன. பாட்டில் ஒன்று வாசற்கதவில் மோதி, சிலீரென்று உடைந்த சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்திற்குப் பயந்து நடுங்கிய அந்தப் பெண், அவன் தோளைப் பலமாகப் பற்றிக் கொண்டாள். அவன் தயக்கத்துடன் கொஞ்சம் விலகப் போனான்.
அந்தப் பெண் அவனை நகர விடவில்லை. ஒரு நிமிடம் கழித்து அவளுடைய பயத்தைப் புரிந்து கொண்டவனைப் போல் அவன் நகர முயற்சி செய்யாமல் அப்படியே நின்றிருந்தான்.
இருளில் நிசப்தமாய் இருந்த அந்தச் சூழ்நிலையில் ஒருவர் விடும் மூச்சுக்காற்று மற்றொருவர் மேல் பட்டுக்கொண்டிருந்தது. எதிராளியின் இதயத் துடிப்பை நன்றாக உணர முடிந்தது.
ரவுடிக் கும்பல் எதிர் வீட்டுக் கதவை உடைத்து விட்டிருக்க வேண்டும். அந்த வீட்டில் இருப்பவர் கத்தி கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார். பெண்களின் அழுகை குரல் பெரிதாகக் கேட்டது. பெண் ஒருத்தி, “அப்பா… அப்பா…” என்று பயத்துடன் அலறிக் கொண்டிருந்தாள். ரவுடிகள் அரக்கர்களைப் போல் உரத்தக் குரலில் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணின் கத்தல்கள், அலறல்கள் தெரு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தன.
விஜய் வேகமாய்ப் போய் வாசற்கதவைத் திறக்கப் போனான். அந்தப் பெண் பயத்துடன் அவனை விடவில்லை. அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக்கொண்டு பலமாகப் பற்றிக்கொண்டாள். கோபத்தினால், ஆவேசத்தினால் அவனுடைய மூச்சுக்காற்று பலமாக வந்து கொண்டிருந்தது.
“என்னை இந்த நிலைமையில் தனியாக விட்டுவிட்டுப் போகாதீர்கள். என்னால் ஓட முடியாது… ப்ளீஸ்.” வேண்டுவது போல் சொன்னாள்.
அவன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அவளுடைய இயலாமையைப் புரிந்து கொண்டவன் போல் அவள் தலையை மெதுவாய் வருடிக் கொடுத்தான்.
வெளியில் ரவுடி கும்பல் கதவை இடித்து திறக்க முயன்று கொண்டிருந்தது. பாட்டில்கள் உடையும் சத்தம்…
அறையில் இருவரும் மூச்சை இறுகப் பிடித்துக்கொண்டு அடுத்து வரப் போகும் ஆபத்தை நோக்கிக் காத்திருந்தார்கள்.
திடீரென்று ஜன்னல் இடுக்கு வழியாய் பளீரென்று வெளிச்சம் தெரிந்தது எதையோ கொளுத்தியிருக்க வேண்டும். படீர் படீர் என்று சிதறிக்கொண்டு ஏதோ எரியும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது அவன் மார்பில் ஆழமாய் முகத்தைப் புதைத்துக்கொண்டிருந்த அந்தப் பெண் பயத்துடன் லேசாகத் தலையை உயர்த்தி அவன் முகத்தைப் பார்த்தாள். எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் வெளிச்சம் அறையில் விட்டு விட்டுப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அவள் இதழ்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.
அவன் அந்தப் பெண்ணின் முகத்தைக் கூர்ந்து நோக்கினான். இருவரின் நிழல்களும் சுவற்றின் மீது பெரிதாக விழுந்தன. அந்தப் பெண்ணின் கண்களில் தெரிந்த பயத்தை பதற்றத்தைப் புரிந்து கொண்ட விஜய் அவளை மேலும் மார்போடு அணைத்துக் கொண்டான்.
போலீஸ் வேன் வரும் சைரன் ஒலி கேட்டது. வாசற்கதவை இடித்துக் கொண்டிருந்த சத்தம் நின்று விட்டது. யாரோ ஓடிக் கொண்டிருந்தார்கள்.
போலீஸ் வேன் எதிர் வீட்டின் முன்னால் நின்றது. எதிர் வீட்டுக்காரருக்கு கத்திக் கத்தித் தொண்டை அடைத்து விட்டது போலும். உடைந்த குரலில் போலீசாரைத் திட்டிக் கொண்டிருந்தார். :”என்ன போலீஸ்காரங்க நீங்க? எங்களுக்குப் பாதுகாப்பு எங்கே இருக்கிறது? என் கண் முன்னாலேயே பதினைந்து வயது கூட நிரம்பாத என் மகளை அந்த அரக்கர்கள்…” மேற்கொண்டு சொல்ல முடியாமல் ஹோவென்று கதறினார். பெண்கள் உச்சஸ்தாயில் அழுது கொண்டிருந்தார்கள். போலீசார் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முயன்று கொண்டிருந்தார்.
அந்தப் பெண் மெதுவாக விஜய் கைகளிலிருந்து விடுபட்டு சரியாய் நின்று கொண்டாள்.
வெளியில் எரிந்து கொண்டிருந்த தீ அணைந்து விட்டது. போலீசார் போய் விட்டார்கள். அறையில் மறுபடியும் இருள் பரவியது. அவளால் சரியாக நிற்க முடியவில்லை என்பதை உணர்ந்துகொண்ட விஜய் அவள் கையைப் பிடித்துக் கொண்டு அங்கே இருந்த நாற்காலியில் உட்கார வைத்தான்.
அறை முழுவதும் நிசப்தம் நிலவியிருந்தது.
“எனக்கு… எனக்கு… தாகமாக இருக்கு” என்றாள் அந்தப் பெண்.
விஜய் பேசவில்லை.
“நாக்கு வரண்டு போகிறது.” அந்தப் பெண்ணின் குரலில் வேண்டுகோள் வெளிப்பட்டது.
சற்றுமுன் தெரிந்த வெளிச்சத்தில் விஜய் சுவிட்ச் இருந்த இடத்தைக் கவனித்திருந்தான் இருட்டில் நடந்து போய் சுவிட்சைப் போட்டான். அறையில் விடிவிளக்கு வெளிச்சம் பரவியது.
“ரொம்ப… ரொம்ப தாகமாய் இருக்கிறது.” அந்தப் பெண்ணின் நெற்றி முழுவதும் வியர்வை அரும்பியிருந்தது. வேதனை அவள் முகத்தில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. “ப்ளீஸ்!” என்றாள்.
வீட்டுக்கு உரியவர்கள் உள்ளே அறையில் கதவைச் சாத்திக்கொண்டு இருந்தார்கள். கூப்பிட்டாலும் வருவார்கள் என்று தோன்றவில்லை.
விஜய் உள்ளே போய் தேடினான். சமையல் அறை தென்பட்டது. பானையில் தண்ணீர் இருந்தது. டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். வேக வேகமாய் தண்ணீரைப் பருகினாள். தண்ணீர் குடித்த பிறகு கொஞ்சம் உயிர் வந்தது போல் உணர்ந்தாள்.
“தாங்க்யூ!” டம்ளரை கீழே வைத்துக்கொண்டே சொன்னாள். விஜய் பக்கத்திலேயே இருந்த ஸ்டூல் மீது உட்கார்ந்து கொண்டான். தெருவில் நாய்கள் குறைக்கத் தொடங்கின. வேகமாய் யாரோ நடந்து போவதுபோல் சத்தம் கேட்டது.
“விளக்கை அணைத்து விடுங்கள்” என்றாள்.
“பரவாயில்லை.” தைரியம் சொல்வது போல் சொன்னான்.
“ப்ளீஸ்!”
விஜய் விளக்கை அணைத்து விட்டான். தெருவில் நாய்கள் குறைக்கும் சத்தம் காற்றில் தேய்ந்து மறைந்து விட்டது.
ஜன்னல் கண்ணாடியின் மீது நிலவின் வெளிச்சம் விழுந்தது. நிசப்தமாய் இருந்த அறையில் சிறைப்பட்டு விட்டதுபோல் இருவரும் அமர்ந்திருந்தார்கள்.
சற்று நேரம் கழித்து அந்தப் பெண் கேட்டாள். “மணி என்ன இருக்கும்?”
“நாலரை மணி.” அவன் வாட்சைப் பார்த்துக்கொண்டே சொன்னான்.
அவள் நாற்காலியின் பின்னால் சாய்ந்து கொண்டாள். “ரொம்ப தாங்க்ஸ். கிளம்பும் முன் இப்படிப்பட்ட ஆபத்து வரும் என்று கனவில் கூட நினைக்க வில்லை. இப்படி நடந்தது என்று தெரிந்தால் என்னுடைய அம்மா தன்னுடைய தேகத்தையே செருப்பாக தைத்து உங்களுக்குத் தர வேண்டுமென்று துடிப்பாள். கடவுளே அனுப்பி வைத்தது போல் உதவி செய்திருக்கீங்க. உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்.”
அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. அந்தப் பெண்ணும் இருந்ததால்தான் இப்படி முன்பின் தெரியாவதவர்களின் வீட்டில் வலுக்கட்டாயமாக நுழைந்து தங்கியிருக்கிறான். தனியாக இருந்தால் இந்நேரத்திற்கு இந்த சூழ்நிலையை விட்டு வெளியேறும் வழிகளைத் தேடியிருப்பான்.
“என் பெயர் ஹேமா. உங்கள் பெயர்?” அந்தப் பெண் கேட்டாள்.
“விஜய்.”
“அப்படியா!”
அவள் குரலில் தெரிந்த உற்சாகம், ஆச்சரியம் ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை.
மறுபடியும் நிசப்தம் நிலவியது. அந்தப் பெண் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்று புரியவில்லை. விஜய் மனதில் ஆயிரம் எண்ணங்கள் கடல் அலைகளை போல் மோதிக் கொண்டிருந்தன. பிரசாத் வீட்டுக்கு ஆனந்த் நிச்சயமாக போன் செய்திருப்பான். பிரசாத் வீட்டுக்குப் போனதும் போன் செய்வதாய் விஜய் ஆனந்திடம் சொல்லியிருந்தான். முதலில் ஆனந்தும் வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் ஆனந்தின் நண்பன் சுதீரும், இன்னும் இரண்டு பேரும் வந்து விட்டதால் ஆனந்த் பயணத்தை கைவிட்டான். அவர்கள் நால்வரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் ஊர் எல்லையில் குன்றின் மீது இருக்கும் தோட்டத்திற்கு பிக்னிக் போவதாக முடிவு செய்தார்கள். ஆனந்துக்கு இது போல் வெளியில் சுற்றுவது என்றால் ரொம்பவும் பிடிக்கும். விஜய் அப்படியில்லை. கையில் ஏதாவது புத்தகம் இருந்தால் போதும். அறையில் தனிமையில். மெலிதாகப் பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தால் மனதிற்கு நிம்மதியாக இருக்கும்.
“ஓ மை காட்!” திடீரென்று அந்தப் பெண் சொன்னாள்.
“என்ன ஆச்சு?”
“என்னுடைய சூட்கேஸ் டாக்ஸியிலேயே தங்கி விட்டது.”
“என்னுடைய ப்ரீப்கேசும் டாக்ஸியில் தங்கி விட்டது. எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.”
“துணிமணிகள், நகைகள் போனாலும் பரவாயில்லை. என்னுடைய சான்றிதழ்கள்!” பதற்றத்துடன் சொன்னாள்.
“என் ப்ரீப்கேஸில் முக்கியமான தஸ்தாவேஜுகள், பணமும் இருந்தது.”
“அப்போ தொலைந்து விட்டாற்போல்தானா?”
“சொல்ல முடியாது. நடுத்தெருவில் டாக்ஸியில் விட்டு விட்டோம்” என்றான்.
“மை காட்!!” அந்தப் பெண் தலையில் கையை வைத்துக் கொண்டாள். அவன் பெருமூச்செறிந்தான்.
எங்கேயோ கோழி கூவும் சத்தம் கேட்டது.
அத்தியாயம்-5
விடியும் நேரம்…
விஜய் எழுந்து போய் படுக்கை அறையின் கதவைத் தட்டினான். வீட்டுக்காரர் லேசாகக் கதவைத் திறந்து, “என்ன?” என்று கேட்டார்.
“நாங்கள் போய் வருகிறோம். கதவைத் தாழ்போட்டுக் கொள்ளுங்கள். நேற்று இரவு எங்களுக்குத் தங்குவதற்கு இடம் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. உங்களுக்குச் சிரமம் கொடுத்ததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.” நயமான குரலில் சொன்னான் விஜய்.
வீட்டுக்காரர் விஜயைத் தலை முதல் கால் வரை ஆராய்வது போல் பார்த்தார். இளைஞனாக இருந்தாலும் பெரிய மனித தோரணையில் அவன் பேசியது, மரியாதையுடன் பழகியது எல்லாம் சேர்ந்து அவருக்கு அவன்மீது நம்பிக்கையை ஏற்படுத்தின. கதவுகளை முழுவதுமாக திறந்தார். அவர் மனைவி முன்னாடியே விழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
“இதோ பாரு. அவங்க கிளம்பறாங்களாம். இனி வெளியில் வா. குளியலுக்கு வெந்நீரைப் போடு. ஜபம் செய்து கொள்ள வேண்டும்.” மனைவியை நோக்கி ஆணைகளைப் பிறப்பித்தார்.
எஜமானின் ஆணைகளுக்குக் கீழ்படியும் அடிமையைப் போல் அந்த அம்மாள் அறையை விட்டு வெளியில் வந்தாள். நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஹேமா அந்த அம்மாளைப் பார்த்து, “வணக்கம் மாமி” என்றாள். அந்த அம்மாள் ஹேமாவைப் பார்த்தும் பார்க்காதது போல் நேராகச் சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
வீட்டுக்காரர் ரேடியோவை ஆன் செய்தார். தடை உத்தரவு போடப்பட்ட ஏரியாக்களைக் குறிப்பிட்டுச் சொல்வதுடன், சில இடங்களில் இரண்டு மணி நேரம் தடையிலிருந்து விலக்கு அளிப்பதாகவும் ரேடியோவில் அறிவிப்பு வந்தது. நகரத்தில் நடந்த ரகளைகள், லூட்டிகள் பற்றி விவரமாகச் சொல்லிவிட்டு நிலைமை இப்பொழுது கட்டுக்குள் இருப்பதாகவும் செய்தியாளர் அறிவித்துக் கொண்டிருந்தார்.
“பெரிதாகச் சொல்ல வந்து விட்டார்கள். நிலைமை கட்டுக்குள் இருந்தால் இத்தனை இடங்களில் தடை உத்தரவு போடுவானேன்? மக்களின் காதுகளில் நன்றாகப் பூவைச் சுற்றுகிறார்கள்.” எரிச்சலுடன் சொன்னார் வீட்டுக்காரர்.
“அடடா! மலக்பேட் ஏரியாவில் கர்ஃப்யூ இருக்கிறது. நான் எப்படி போக முடியும்?” ஹேமா கவலையுடன் சொன்னாள்.
“நான் ஜூப்ளி ஹில்சுக்குப் போகணும். அந்த ஏரியாவில் கர்ஃப்யூ இல்லைதான். நான் போவதற்கு எந்தப் பிரச்னையும் இருக்காது.” விஜய் நினைத்துக் கொண்டான்.
விஜய் எழுந்து தெருப் பக்கம் போகப் போனான்.
“நீங்க போறீங்களா?” ஹேமா கேட்டாள். போகப் போனவன் நின்று திரும்பிப் பார்த்தான்.
“எப்படி போகப் போறீங்க?” என்று கேட்டாள்.
“வெளியில் போய்ப் பார்த்தால்தான் புரியும். டாக்ஸி, ஆட்டோ ஏதாவது கிடைக்குமா என்று பார்த்து விட்டு வருகிறேன்.
“பஞ்சாரா ஹில்ஸில் எங்க உறவினருக்குத் தெரிந்த பிரெண்ட்ஸ் இருக்கிறார்கள். என்னை அங்கே இறக்கி விட்டுப் போகிறீர்களா ப்ளீஸ்!”
அவன் தலையை அசைத்துவிட்டுக் கிளம்பினான்.
கால் மணி நேரம் கழித்து அவன் திரும்பி வந்த போது ஹேமா அந்தத் தம்பதியருடன் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தாள். விஜயைப் பார்த்ததும் அவர், “வாப்பா… வா” என்று வரவேற்றுவிட்டு உள்ளே எட்டிப் பார்த்து, “இதோ… அந்தப் பையனும் வந்து விட்டான். காபி எடுத்துக்கொண்டு வா” என்று மனைவிக்குக் குரல் கொடுத்தார்.
அந்த அம்மாள் காபி கொண்டு வந்துக் கொடுத்தாள்.
“வண்டி ஏதாவது கிடைத்ததா?” ஹேமா ஆர்வத்துடன் கேட்டாள்.
“ஆட்டோ, டாக்ஸி எதுவும் கண்ணில் படவில்லை” என்றான்.
“இப்போ என்ன செய்வது?” என்றாள் ஹேமா.
“அதுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.” வீட்டுக்கார அம்மாள் கொடுத்த காபி கோப்பையைப் பெற்றுக்கொண்டே, “தாங்க்யூ மாமி” என்றான்.
ஹேமா அவர்களுடைய வீட்டு விஷயங்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள். விஜய் கொல்லைப்புறக் கதவில் சாய்ந்துகொண்டு காபியைப் பருகிக் கொண்டிருந்தான். அவன் பார்வை கிணற்றுக்குப் பக்கத்திலிருந்த தகர ஷெட்ட்டில் பிளாஸ்டிக் கவர் போர்த்தியிருந்த மோட்டார் சைக்கிள் மீது பட்டது.
ஒரு நிமிடம் கழித்து விஜய் தயக்கத்தை உதறிவிட்டு கேட்டான். “இந்த மோட்டார் சைக்கிளைக் கொஞ்சம் இரவல் கொடுத்தால், மறுபடியும் பத்திரமாக கொண்டு தருகிறேன்.”
வீட்டுக்காரரின் நெற்றி சுருங்கியது. “அது… அது எங்களுடைய மாப்பிள்ளையோடது.”
“அந்த கடன்காரனை இன்னும் நம்ப மாப்பிளை என்று எதற்காகச் சொல்றீங்க? அந்தப் பாவி நம் மகளைத் துன்புறுத்தி வீட்டுக்கு அனுப்பி விட்டதால், வேதனை தாங்க முடியாமல் அவள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதை அதற்குள் மறந்து விட்டீர்களா?” வீட்டுக்கார அம்மாள் அழுது கொண்டே சொன்னாள்.
“நீ வாயை மூடிக்கொண்டு உள்ளே போ.” வீட்டுக்காரர் மனைவியை அதட்டினார்.
புடவைத் தலைப்பை வாயில் அடைத்துக்கொண்டு அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டே அந்த அம்மாள் உள்ளே போய் விட்டாள்.
ஒரு நிமிடம் அங்கே நிசப்தம் நிலவியது. என்ன பேசுவதென்று தெரியாதது போல் எல்லோரும் மௌனமாக இருந்தார்கள்.
“உங்களுடைய மோட்டார் சைக்கிளைப் பத்திரமாகத் திருப்பிக் கொண்டு வந்து தந்து விடுகிறோம்.” ஹேமா வேண்டுவது போல் சொன்னாள்.
வீட்டுக்காரர் பதில் சொல்லவில்லை.
ஹேமா காதில் போட்டுக்கொண்டிருந்த வைரத்தோடு, கை வளையல்கள், செயின், மோதிரம் முதலியவற்றைக் கழற்றி அவர் எதிரில் வைத்தாள். “ப்ளீஸ்! இவற்றை உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள். இவற்றுக்காகவாவது நாங்கள் கட்டாயம் திரும்பி வருவோம். மறுக்காதீர்கள்” என்றாள்.
அவர் நகைகளைக் கவனமாகப் பார்த்தார். ஹேமாவின் வைரத்தோடு மட்டுமே பல ஆயிரங்கள் பெரும். அந்த பழைய மோட்டார் சைக்கிளின் விலை அந்த நகைகளின் விலையில் பாதி கூட இருக்காது.
விஜய் வாட்சைப் பார்த்துக் கொண்டான். கர்ஃப்யூவுக்கு விலக்கு அளித்த நேரம் குறைந்து கொண்டே வந்தது.
“நான் மறுபடியும் முயற்சி செய்து பார்க்கிறேன்.” விஜய் வெளியில் போகப் போனான்.
ஹேமா தடுத்து விட்டாள். “நீங்க வெளியில் போனால் எனக்கு ரொம்பக் கவலையாக இருக்கிறது. நீங்க திரும்பி வரவில்லை என்றால் எனக்கு ரொம்பக் கஷ்டம்” என்றாள்.
“நான் கட்டாயம் திரும்பி வருவேன்” என்றான்.
ஹேமா அவன் முகத்தை ஆழமாய் பார்த்தாள். நல்லதனமும், பண்பும் நிறைந்த கண்கள் அவை.
“நாமிருவரும் சேர்ந்தே போகலாம். கொஞ்சம் இருங்க.” ஹேமா ஐந்து நிமிடங்களில் மோட்டார் சைக்கிளை இரவல் கொடுப்பதற்கு அந்தத் தம்பதியரைச் சம்மதிக்க வைத்தாள்.
விஜய் மோட்டார் சைக்கிளை வெளியில் எடுத்தான். வீட்டுக்காரர் என்ன நினைத்துக் கொண்டாரோ என்னவோ. ஹேமாவின் நகைகளைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.
“பரவாயில்லை. வைத்துக்கொள்ளுங்கள்” என்றாள் ஹேமா.
“வேண்டாம் அம்மா. மோட்டார் சைக்கிள் என்னுடைய மாப்பிள்ளையோடதுதான். சக்திக்கும் மீறி சீர்வரிசைகளைச் செய்து பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தேன். ஒரே மகள் என்பதால் ரொம்ப அபூர்வமாக வளர்த்தோம். மாப்பிள்ளைக்கு இல்லாத கெட்ட பழக்கம் இல்லை. என் மகளை அடித்து ஹிம்சித்து பிறந்த வீட்டுக்கு அனுப்பி விட்டான். வேறு ஒரு பெண்ணுடன் குடித்தனம் நடத்தி வந்தான். அந்த வேதனை தாங்க முடியாமல் என் மகள் இரண்டு மாதங்களுக்கு முன் அதோ அந்தக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். என் மாப்பிள்ளை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு விட்டான். நான் போய் சீர்வரிசையாகத் தந்த பொருட்களைத் திருப்பித் தரச் சொல்லி சண்டை போட்டதில், இந்த மோட்டார் சைக்கிளை என் முகத்தில் விட்டெறிந்து விட்டு, மற்றவை பிறகு என்றான். ஆசையாய் வளர்த்த மகளே போய் விட்டாள். இந்த மோட்டார் சைக்கிள் எந்த மூலைக்கு? ஆபத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு உபயோகப் பட்டால் எங்களுக்குச் சந்தோஷம்தான்.”
ஹேமா விஜய் தங்களையும் அறியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
பத்து நிமிடங்கள் கழித்து ஹேமா பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டதும் விஜய் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
ஹேமா வீட்டுக்கார தம்பதியிடம் விடைபெற்றுக் கொண்டான். “போய் வருகிறேன். மறுபடியும் கட்டாயம் வருகிறேன். உங்கள் மகனை நல்ல டாக்டரிடம் காண்பிக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றாள்.
எதிர் வீட்டில் போலீசார் இருந்தார்கள். ஏதோ கேள்விகளைக் கேட்டு பதில்களை எழுதிக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் காட்சியைப் பார்த்ததும் விஜய் ஹேமாவின் மனங்கள் பாரமாகி விட்டன. முதல் நாள் இரவு நடந்த நிகழ்ச்சி அந்த வீட்டின் தலையெழுத்தையே மாற்றி விட்டிருந்தது. மனிதனின் மனதில் மறைந்திருக்கும் ராட்சஸ குணம் அடுத்தவரின் வாழ்க்கையை நிமிட நேரத்தில் எரித்துச் சாம்பலாக்க வல்லது என்ற உண்மை நிரூபிக்கப்பட்டு விட்டது. அந்தக் கசப்பு அனுபவம் இருவரின் மனதிலும் சாசுவதமாக பதிந்து விட்டது.
“நமக்குத் தங்க இடம் கொடுத்த வீட்டுக்காரத் தம்பதிகளின் வாழ்க்கையும் சோகமானதுதான். இருந்த ஒரே மகள் போய் விட்டாள். மகனோ மூளை சரியில்லாதவன். கடைசி வரை அவனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுடையதுதான்.” ஹேமா சொன்னாள். இருவருக்கும் இடையே மறுபடியும் மௌனம் நிலவியது.
சாலைகள் பெரும்பாலும் நிர்மானுஷ்யமாய் இருந்தன. மோட்டார் சைக்கிள் வேகமாய் போய்க் கொண்டிருந்தது. எப்போ எந்த விதமான ஆபத்து வருமோ என்று இருவரும் பயந்து கொண்டே இருந்தார்கள். இரவு நடந்த மாரணஹோமத்திற்கு அடையாளமாய் ஆங்காங்கே எரிந்து போன கடைகள்… உடைந்த பாட்டில்கள்… சாலை முழுவதும் சிதறிக் கிடந்தன. மோட்டார் சைக்கிள் பஞ்ஜாரா ஹில்ஸில் ஹேமா சொன்ன வீட்டின் முன்னால் வந்து நின்றது. மெயின் கேட் பூட்டியிருந்தது. விஜய் காலிங் பெல்லை அழுத்தினான். பின்னாலிருந்து அவுட் ஹவுஸ் கதவைத் திறந்து கொண்டு வேலையாள் ஒருவன் ஓடி வந்தான். கேட்டைத் திறக்காமலேயே, “யார் நீங்க?” என்று பயந்து கொண்டே கேட்டான்.
ஹேமா தான் இன்னாரென்று சொல்லிவிட்டு கதவைத் திறக்கச் சொன்னாள். வேலைக்காரன் ஒப்புக்கொள்ள வில்லை. “அய்யாவும், அம்மாவும் ஊரில் இல்லை. நீங்கள் யாரென்று எங்களுக்குத் தெரியாது” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டான்.
ஹேமா இயலாமையுடன் பார்த்தாள். கர்ஃப்யூ மறுபடியும் அமலுக்கு வரப் போவதாக அறிவித்துக்கொண்டே போலீஸ் வேன் ஒன்று சாலையில் போய்க் கொண்டிருந்தது. யோசிப்பதற்கு நேரமில்லை. விஜய் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
எங்கே போகிறோம் என்று ஹேமா கேட்கவில்லை. அவள் மனம் முழுவதும் குழப்பமாக இருந்தது.
கால்மணி நேரம் கழித்து மோட்டார் சைக்கிள் ஜூபிலி ஹில்ஸில் ஒரு வீட்டின் முன்னால் வந்து நின்றது. வீடு பெரிதாக, நவீனமாய் இருந்தது. விஜயைப் பார்த்ததும் வேலைக்காரன் ஓடிவந்து, “நமஸ்தே சாப்” என்று சொல்லிக்கொண்டே கேட்டைத் திறந்தான். மோட்டார் சைக்கிள் போர்டிகோவில் வந்து நின்றது. வேலைக்காரன் கொல்லைப்புறமாய் உள்ளே போய் வாசல் கதவைத் திறந்தான்.
நடக்க முடியாமல் மெதுவாய் பாதத்தை ஊன்றி நடந்து வந்து கொண்டிருந்த
ஹேமாவின் கையைப் பிடித்துக்கொண்டு விஜய் உள்ளே அழைத்து வந்தான்.
உள்ளே படுக்கை அறையில் இருந்த ராதிகா எழுந்து வந்தாள். நிறைமாத கர்ப்பிணி என்று பார்க்கும்போதே தெரிந்தது.
“வந்து விட்டாயா விஜய்! நேற்று இரவு இவர் சென்னையிலிருந்து போன் செய்து நீ வந்து விட்டாயா என்று விசாரித்தார்” என்றாள் ராதிகா.
“பிரசாத் ஊரில் இல்லையா?”
“சென்னைக்குப் போயிருக்கிறார். நேற்று இரவே வந்திருக்க வேண்டியது, ப்ளேன் ரொம்ப தாமதமாகி விட்டதாம். இங்கே ரகளையாய் இருக்கிறது என்று கேள்விப் பட்டதும் ரொம்ப கவலைப்பட்டார். இன்று இரவு கட்டாயம் வந்து விடுவதாகச் சொன்னார்.” விஜய் ஹேமாவை அறிமுகப்படுத்தி வைத்தான். முதல் நாள் நடந்தவற்றைச் சுருக்கமாகத் தெரிவித்தான்.
ராதிகா ஹேமாவின் கையை ஆதரவுடன் பற்றிக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றாள்.
“மருமகன் என்ன சொல்கிறான்?” விஜய் ராதிகாவைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.
“மாமாவைச் சீக்கிரமாய் பார்க்கணும் என்று துடித்துக் கொண்டிருக்கிறான்.” ராதிகா புன்முறுவலுடன் சொன்னாள்.
ஒரு மணி நேரம் கழித்து விஜய் குளித்துவிட்டு தலையைத் துவட்டிக் கொண்டே வரும்போது ஹேமா குளியலை முடித்துவிட்டு ராதிகாவின் நைட்டியை அணிந்து கொண்டு உணவு மேஜை முன்னால் அமர்ந்திருந்தாள்.
ராதிகா டிபனைத் தட்டுகளில் பரிமாறிக்கொண்டே, “விஜய்! என் சித்தி நாத்தனாரின் மகள் வசந்தா இருக்கிறாள் இல்லையா. ஹேமாவும் அவளும் ஒன்றாகப் படிக்கிறார்களாம்” என்றாள்.
ஹேமாவும் ராதிகாவும் வசந்தாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அதற்குள் போன் மணி ஒலித்தது. ராதிகா போனை எடுத்தாள். “ஹலோ ஆனந்த்! சௌக்கியமா… ஆமாம்… விஜய் இப்பொழுதுதான் வந்தான். இதோ அவனையே பேசச் சொல்கிறேன். ஒரு நிமிடம்” என்று சொல்லிவிட்டு விஜயிடம் போனை தந்தாள்.
“ஹலோ அனூ! ஆமாம். ரயில் ரொம்ப தாமதமாகி விட்டது. இங்கே ரகளை அதிகமாய் இருக்கிறது. நேற்று இரவு பிரசாத் வீட்டுக்கு வர முடியவில்லை. ஆபத்து எதுவும் இல்லை. கவலைப்படாதே. பிரசாத் இன்று இரவு வந்து விடுவான். நான் வீட்டுக்கு வரும் முன் உனக்குப் போன்….” விஜய் சொல்லிக் கொண்டிருந்தபோதே போன் டெட் ஆகிவிட்டது.
ராதிகா பெருமூச்சு விட்டாள். “பக்கத்துச் சாலையில் என் பிரெண்ட் வீட்டிலும் நேற்று முதல் போன் வேலை செய்யவில்லையாம். அந்த லைனை யாரோ வேண்டுமென்றே துண்டித்து விட்டார்களாம். போன் இல்லை என்றால் ஏதோ காட்டுக்குள் இருப்பதுபோல் பயமாக இருக்கும்” என்றாள்.
“ஹேமாவுக்கு கால்வலிக்காக இந்த மாத்திரைகள் வேண்டுமாம்.” ராதிகா வேலைக்காரனை அனுப்ப முற்பட்டபோது, விஜய் தான் போவதாகச் சொல்லிவிட்டுப் போனான். கால்மணி நேரம் கழித்து மாத்திரைகளை வாங்கி வந்தான். ஹேமா மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு உறங்கி விட்டாள். நன்றாக இருட்டி விட்டது.
விஜய், ராதிகா ரேடியோவில் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஹேமா எழுந்து வந்தாள். கால்வலி குறைந்திருப்பது போல் முகம் தெளிவாக இருந்தது. மாடிப்படியிலிருந்து இறங்கி வந்தாள். செய்திகளில் நகரத்தில் நிலைமை முதல் நாளை விட மோசமாக இருப்பதாகவும், நகரம் முழுவதும் தடை உத்தரவு போட்டிருப்பதாகவும் அறிவித்தார்கள்.
“அவர் வேறு ஊரில் இல்லை. நல்ல வேளை. நீங்களாவது வந்தீங்க. இல்லையென்றால் பயத்தினாலேயே செத்திருப்பேன்.” ராதிகா சொன்னாள்.
மறுநாள் காலையில் எட்டு மணியிலிருந்து பத்து மணி வரை தடை உத்தரவுக்கு விலக்கு அளித்திருந்தார்கள். விஜய் மோட்டார் சைக்கிளைத் திருப்பிக் கொடுப்பதற்காகக் கிளம்பினான்.
“அவ்வளவு அவசரமாய்த் திருப்பிக் கொடுத்துதான் ஆகணுமா? பிறகு கொடுத்தால் போச்சு” என்றாள் ராதிகா.
“நானும் அதைத்தான் சொல்கிறேன்.” ஹேமா சொன்னாள்.
“வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்யப் போகிறேன்?” விஜய் மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்துகொண்டே சொன்னான்.
பத்து மணி தாண்டி விட்டது. விஜய் இன்னும் வரவில்லை. ராதிகா கடியாரத்தையே பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். “சொன்னால் கேட்டால்தானே! இந்தப் போன் வேறு இப்பொழுதுதான் டெட் ஆக வேண்டுமா?” என்றாள்.
ராதிகாவின் முகம் சோர்வாக, வாடிப்போய் இருந்தது.
ஹேமா ராதிகாவின் முகத்தைக் கவனமாகப் பார்த்துக்கொண்டே, “நர்சிங் ஹோம் அருகில் இருக்கிறதா?” என்று கேட்டாள்.
“நான் கன்சல்ட் செய்யும் டாக்டரின் கிளினிக் கொஞ்சம் தொலைவுதான்” என்றாள் ராதிகா. “எந்த ஏரியா?”
ராதிகா சொன்னதும், “அது கர்ஃப்யூ இருக்கும் ஏரியாவாச்சே. விஜய் வந்ததும் நர்சிங்ஹோமுக்கு போய் விடலாம்” என்றாள் ஹேமா.
“இன்னும் ஒரு வாரம் டைம் இருக்கிறதென்று டாக்டர் சொல்லியிருக்கிறாள். அதான் அவர் தைரியமாக சென்னைக்குக் கிளம்பினார். போன வாரமே அம்மா வந்திருக்க வேண்டியது. அண்ணாவுக்கு ஆக்சிடென்ட் ஆகி ஆஸ்பத்திரியில் இருப்பதால் அவளாலும் வர முடியவில்லை. உள்ளூரிலேயே நாத்தனார் இருக்கிறாள். அவர்கள் நாகார்ஜுனசாகருக்குப் போயிருக்கிறார்கள். இந்த ரகளையினால் அவர்களாலும் வர முடியவில்லை.”
மாலையாகி விட்டது. விஜய் வந்தான். அவன் இடது கையில் கத்தியால் குத்திய காயம் இருந்தது. சோர்ந்து போன முகத்துடன் உள்ளே வந்தான்.
“என்ன ஆச்சு?” ராதிகா பதற்றத்துடன் கேட்டாள்.
“திரும்பி வரும்போது வழியில் கலவரம் நடந்துகொண்டிருந்தது. தப்பித்துக்கொண்டு வரும்போது யாரோ கத்தியால் குத்தி விட்டார்கள்.”
“அடடா! டாக்டரிடம் போவதற்கும் வழியில்லையே. இப்போ என்ன செய்வது?” ராதிகா கவலைப் பட்டாள்.
“முதலில் அவரை இப்படி உட்காரச் சொல்லுங்கள்.” ஹேமா சொன்னாள். ராதிகா வலுக்கட்டாயமாக விஜயை நாற்காலியில் உட்காரச் செய்தாள். ஹேமா விஜயின் காயத்தைச் சுத்தப்படுத்தி மருந்து போட்டு கட்டுப்போட்டு விட்டாள்.
ராதிகா பழச்சாற்றை எடுத்து வந்தாள். “முதலில் இதைக் குடி. காலையில் சாப்பிடாமலேயே போய் விட்டாய். போக வேண்டாமென்று சொன்னாலும் கேட்கவில்லை. நிமிடத்தில் எல்லாவற்றையும் சுட வைக்கிறேன். சாப்பிடலாம் வா” என்று சமையல் அறைக்குள் சென்றாள்.
ஹேமாவும் விஜயும் உணவு மேஜையின் முன்னால் எதிரெதிரில் அமர்ந்திருந்தார்கள்.
விஜய் ஹேமாவின் நகைகளை எடுத்து உணவு மேஜையின் மீது வைத்தான்.
“நீங்கள் கிளம்பிப் போன பிறகு எனக்குத் தோன்றியது. நகைகளுக்காகத்தான் நீங்க முக்கியமாய் போயிருப்பீங்க என்று. அப்படி போனதால்தான் உங்களுக்கு இந்தக் காயம் ஏற்பட்டு விட்டது.’
“அவர்களுடைய மோட்டார் சைக்கிள் அவர்களிடம் கொடுத்தாகி விட்டது. உங்களுடைய நகைகளும் உங்களிடம் வந்து விட்டன.” விஜயின் குரல் பொறுப்பு விட்டது என்பதுபோல் ஒலித்தது.
ஹேமா தோடுகளை அணிந்துகொண்டு செயினை கழுத்தில் போட்டுக் கொண்டாள். சமையல் அறைக்குள் சென்ற ராதிகா வெகுநேரம் ஆகியும் வெளியில்
வராததைக் கண்டு ஹேமா உள்ளே போனாள். ராதிகா சமையல் அறை மேடைமீது சாய்ந்துகொண்டு நின்றிருந்தாள்.
“நர்சிங்ஹோமுக்குப் போய் விடலாமா?” ஹேமா அருகில் வந்து கொண்டே கேட்டாள்.
“எப்படி போவது? போன் வேலை செய்யவில்லை. ஆம்புலன்ஸை வரவழைக்க முடியாது. எங்களுடைய காரை நாத்தனார் நாகார்ஜுன சாகர் எடுத்துக்கொண்டு போயிருக்கிறாள்.’
விஜய் உணவு மேஜை அருகில் உட்கார்ந்து கொண்டு டி.வி.யில் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
ஹேமா ராதிகாவுகாகக் கையை நீட்டினாள். ராதிகா சற்று நேரம் அந்தக் கையைப் பற்றிக்கொண்டு பிறகு மெதுவாக விட்டுவிட்டாள். “இப்போ பரவாயில்லை. காலையில் பார்த்துக் கொள்ளலாம்.” சமாளிப்பது போல் சொன்னாள் ராதிகா.
ஹேமா ராதிகாவை அழைத்துக்கொண்டு வந்து நாற்காலியில் உட்கார வைத்தாள். கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகு ராதிகா சாதாரணமாக இருந்தாள். இரவு ஆகி விட்டது.
ஹேமா கொடுத்த தூக்க மாத்திரையினால் விஜய் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
திடீரென்று யாரோ தோளைப் பிடித்து உலுக்குவதுபோல் இருந்தது. கண்களைத் திறந்தான்.
“விஜய்! சீக்கிரமாய் எழுந்து கொள்ளுங்கள். அர்ஜென்ட்!”
“என்ன ஆச்சு?” கேட்டுக்கொண்டே எழுந்துகொள்ள முயற்சி செய்தான். அவன் கண்கள் தூக்கக் கலக்கத்தில் மறுபடியும் மூடிக் கொண்டன. உடல் தள்ளாடியது. படுக்கையில் சரியப் போனவனை ஹேமா இரண்டு கைகளாலேயும் பிடித்து உட்கார வைத்தாள். கண்களைத் திறந்து பார்த்தான். அவனால் ஹேமாவை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. குழப்பமாய் பார்த்துக்கொண்டே, “எக்ஸ்க்யூஸ் மி” என்றான்.
“விஜய்! சீக்கிரமாய் வாங்க. ராதிகாவுக்கு இடுப்பு வலி எடுத்து விட்டது. க்விக்!” ஹேமா அவனைக் கட்டிலை விட்டு இழுக்க முயன்றாள்.
விஜய்க்கு விழிப்பு வந்து விட்டது. ஆனால் உடல் ஒத்துழைக்க மறுத்தது. டைனிங் ஹால் வரையில் வந்தவன் இனி நடக்க முடியாயதனைப்போல் அங்கேயே நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு உணவு மேஜையின் மீது தலையைச் சாய்த்துக் கொண்டான்.
யாரோ அவன் முகவாயை கையால் உயர்த்தினார்கள். திடீரென்று சில்லென்று தண்ணீர் அவன் முகத்தின் மீது விழுந்தது. மயக்கம் சற்று தெளிந்தது. கண்களைத் திறந்தான். எதிரே ஹேமா நைட்டியில் இருந்தாள். அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் நினைவுக்கு வரத் தொடங்கியது.
“விஜய்! ப்ளீஸ்… விழித்துக் கொள்ளுங்கள்.” ஹேமா அவன் தோள்களைப் பற்றி உலுக்கினாள். விஜய் முகத்தில் இருந்த தண்ணீர் துளிகளைக் கையால் துடைத்துக் கொண்டான்.
“சீக்கிரமாய் வாங்க.”
“எங்கே?” என்று கேட்டான். “ராதிகாவின் அறைக்கு.”
“ஏன்? என்ன ஆச்சு?” அவனுக்கு முழுவதுமாக விழிப்பு வந்து விட்டது. “ராதிகாவுக்கு இடுப்பு வலி கண்டிருக்கிறது.”
“ஆஸ்பத்திரிக்கு எப்படி அழைத்துக்கொண்டு போவது? காரும் இல்லை. போனும் வேலை செய்யவில்லை.” அவன் முகத்தில் பதற்றம் தென்பட்டது.
“முதலில் ஸ்டவ் மீது வெண்ணீர் வைத்திருக்கிறேன். எடுத்துக்கொண்டு வாங்க.” ராதிகாவின் அறைக்கு விரைந்தாள் ஹேமா.
விஜய்க்குத் தூக்கக்கலக்கம் போய் விட்டது. உடல் மட்டும் இன்னும் சுவாதீனத்திற்கு வர மறுத்தது. சமையல் அறைக்குள் போனான். ஸ்டவ் மீது இருந்த வென்னீர் பாத்திரத்தை துணியால் பிடித்துக்கொண்டு ராதிகாவின் அறைக்குச் சென்றான். அங்கே தென்பட்ட காட்சியைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டு திரும்பப் போனான்.
“விஜய்! உள்ளே வாங்க.”
விஜய் உள்ளே வரவில்லை.
“உங்களைத்தான் விஜய். தயக்கங்களுக்கு இது நேரமில்லை. இந்தப் பக்கமாய் வந்து ராதிகாவைக் கொஞ்சம் அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். ராதிகா! குழத்தை வெளியில் வரப் போகிறது. நீ மூச்சை ஆழமாய் விட்டு குழந்தையை வெளியில் தள்ள முயற்சி செய்ய வேண்டும், க்விக்…” ஹேமா ராதிகாவுக்குத் தைரியம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
ராதிகா பற்களால் இதழ்களை அழுத்தி முயற்சி செய்து கொண்டிருந்தாள். விஜய் ராதிகாவின் கைகளைப் பலமாகப் பற்றியிருந்தான். ராதிகாவின் முகத்தில் வியர்வை அரும்பியது. வேதனையால் துடித்துக் கொண்டிருந்தாள். அந்தக் காட்சியைப் பார்க்கும்போது விஜய் கண்களில் நீர் நிரம்பி விட்டது.
திடீரென்று குழந்தை வீலென்று அலறிய சத்தம் கேட்டது.
“பெண் குழந்தை!” என்றாள் ஹேமா.
ராதிகாவின் வேதனை சற்று குறைந்தது. பத்து நிமிடங்கள் கழித்து ஹேமா டவலை கொண்டு வந்து ராதிகாவின் முகத்தில் படிந்திருந்த வியர்வையைத் துடைக்கச் சொல்லி விஜயிடம் சொன்னாள். விஜய் டவலால் ராதிகாவின் முகத்தை ஒற்றி எடுத்தான்.
“தாங்க்ஸ் விஜய். நீ ஹேமாவை அழைத்து வந்திருக்க வில்லை என்றால்…” ராதிகா ஏதோ சொல்ல முயன்றாள்.
“ஜஸ்ட் ரிலாக்ஸ் ராதிகா. அப்புறமாய் பேசிக் கொள்ளலாம்” என்றாள் ஹேமா. விஜய் பக்கம் திரும்பி, “விஜய்! எனக்கு இரண்டு டவல்ஸ் கொண்டு வாங்க. அவசரம்.” குழந்தையைக் குளிபாட்டிக்கொண்டே சொன்னாள். குழந்தையின் அழுகைக் குரல் அந்த நிசப்தத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
“டவல்ஸ் அந்த பீரோவில் இருக்கு.” ராதிகா சொன்னாள்.
விஜய் பீரோவிலிருந்து டவல்ஸ் எடுத்து வந்து ஹேமாவிடம் கொடுத்தான். அப்பொழுதுதான் பிறந்த குழந்தையை ஹேமா பாந்தமாய் பிடித்துக்கொண்டு துடைத்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்க்கும்போது விஜய்க்குப் பிரமிப்பு கலந்த வியப்பு ஏற்பட்டது.
ஹேமா டவலால் குழந்தையைத் துடைத்துவிட்டு மற்றொரு டவலை குழந்தை சுற்றிலும் போர்த்திவிட்டு ராதிகாவின் அருகில் வந்து குழந்தையைக் காண்பித்தாள்.
ராதிகாவின் கண்கள் மகிழ்ச்சியால் மின்னிக் கொண்டிருந்தன. “டாடி இல்லாத சமயமாய் பார்த்து வந்து விட்டாள் இந்த உலகிற்கு. அதோ… மாமாவைப் பார்த்தாயா… ராதிகா சொன்னாள்.
ஹேமா குழந்தையைக் கொண்டு வந்து விஜயிடம் காண்பித்தாள். விஜய் அந்த சின்னக் குழந்தையின் முகத்தையும், குழந்தையைத் தூக்கிக் கொண்டிருந்த ஹேமாவையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனதில் அந்தக் காட்சி ஆழமாய் பதிந்து விட்டது.
ராதிகாவின் பக்கத்தில் குழந்தையைப் படுக்க வைத்துக்கொண்டே, “விஜய்! ராதிகாவுக்குச் சூடாக ஒரு கப் பாலாவது, காபியாவது கொடுக்க வேண்டும்.” ஹேமா சொன்னாள்.
விஜய் ராதிகா பக்கம் பார்த்தான்.
“காபியே குடிக்கிறேன். சமையல் அறையில் பால், டிகாஷன் எல்லாம் இருக்கு” என்றாள் ராதிகா.
விஜய் போகும்போது ராதிகா அழைத்தாள். விஜய் திரும்பிப் பார்த்தான். “ஹேமாவுக்கும்” என்றாள் ராதிகா. பத்து நிமிடங்கள் கழித்து விஜய் காபி கலந்து எடுத்து வரும்போது ஹேமா அந்த இடத்தையெல்லாம் சுத்தம் செய்துவிட்டு பாத்ரூமில் சென்று
முகம், கைகளை அலம்பிக்கொண்டு டவலால் முகத்தைத் துடைத்துக்கொண்டே வந்தாள். ஹேமா ராதிகாவை மெதுவாக எழுப்பி உட்கார வைத்தாள். விஜய் காபி கோப்பையை ராதிகாவிடம் கொடுத்து விட்டு ஹேமாவுக்கும் கொடுத்தான்.
“தாங்க்யூ” என்றாள் ஹேமா. ராதிகாவைப் பார்த்து விட்டு, “நார்மல் டெலிவரி என்பதால் நிலைமையைச் சமாளிக்க முடிந்தது. ஏதாவது காம்ப்ளிகேஷன் வந்திருந்தால் இந்த நள்ளிரவு வேளையில் சிரமமாகியிருக்கும். நான் டெலிவரி அட்டென்ட் செய்து நாளாகி விட்டது. முதலில் நானும் பயந்தேன்” என்றாள்.
ராதிகா குழந்தையை அபூர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஹேமா நாற்காலியில் அமர்ந்துகொண்டு காபியை ஒரு வாய் பருகினாள். “ஓ.. ரொம்ப நன்றாக காபி கலந்திருக்கீங்க. உங்களுக்கு இந்த வேலையெல்லாம் தெரியுமா?” வியப்புடன் கேட்டாள்.
“ஆனந்துக்காக ஸ்பெஷலாக காபி கலக்க கற்றுக் கொண்டான்.” ராதிகா சொன்னாள்.
“யாரந்த அதிர்ஷ்டசாலி? தம்பியா?” ஹேமா கேட்டாள்.
“இல்லை.”
“கஸின் பிரதரா?” ஆர்வத்துடன் கேட்டாள்.
“ஊஹும்” என்றாள் ராதிகா.
“என்ன உறவு?” ஹேமா கேட்டாள்.
ராதிகா விஜய் பக்கம் பார்த்தாள். அவன் எதுவும் சொல்லவில்லை. குழந்தையையே மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன ஆவான் என்று கேட்டால் ரொம்ப நெருக்கமானவன். இருவருக்கும் இடையே உறவுமுறை எதுவும் இல்லை. ஒன்றாக வளர்ந்தார்கள். நண்பர்கள் என்று சொல்லலாம். விஜய்க்கு ஆனந்த் என்றால் உயிர்.” ராதிகா விவரமாகச் சொன்னாள்.
“ஓ… அப்படியா!” என்றாள் ஹேமா.
கால்மணி நேரம் கழித்து ராதிகா உறங்கி விட்டாள். விஜய் எழுந்து வெளியில் வந்தான். ஹேமாவும் பின்னாலேயே வந்தாள்.
“ராதிகாவுக்கு இந்த இஞ்செக்ஷன்களை உடனே போட்டாகணும் விஜய்” என்றாள்.
விஜய் திரும்பிப் பார்த்தான். அவன் கண்களுக்கு இதுவரையில் ஹேமா அழகான பெண்ணைப் போல்தான் தென்பட்டாள். ஆனால் இந்த நிமிடம் தங்கத்திற்கு மெருகேற்றியது போல் அவளுடைய புத்திசாலித்தனம் அந்த அழகை மேலும் அதிகப்படுத்திக் காட்டுவது போல் இருந்தது. ஹேமா துணிச்சலுடன், தைரியமாய்
மளமளவென்று செயல்பட்டுத் தாயை சேயை வேறாக்கியது அவனுக்குப் பிரமிப்பைத் தந்தது.
அவளிடமிருந்து மருந்து சீட்டை எடுத்துக்கொண்டான். செருப்பு போட்டுக்கொண்டு புறப்பட்டுக் கொண்டிருந்தான்.
“அருகில் மருந்துக் கடை இருக்கா?” ஹேமா கேட்டாள்.
“கொஞ்சம் தொலைவு போகணும்” என்றான்.
“ரொம்ப தூரம் போகணும் என்றால்… இந்த இருட்டு வேளையில்…” தயங்கிக்கொண்டே சொன்னாள்.
“பரவாயில்லை.” கதவைத் திறந்துகொண்டு வெளியில் போகப் போனவன் அவள் பக்கம் திரும்பினான்.
“கதவைச் சாத்தி தாழ் போட்டுக் கொள்ளுங்கள்.” எச்சரித்துவிட்டுக் கிளம்பினான்.
அரைமணியானது… ஒரு மணி நேரமும் ஆகிவிட்டது.
கதவு சத்தப்படுத்தும் ஓசை கேட்டது.
“யாரு?” என்றாள் ஹேமா.
“நான்தான்” என்றான் விஜய்.
ஹேமா கதவைத் திறந்து அவன் உள்ளே வந்ததும் கதவைச் சாத்திவிட்டாள். ஹேமாவின் முகத்தில் தென்பட்ட பதற்றத்தைக் கவனித்தான் விஜய்.
“என்ன ஆச்சு? ராதிகாவும், குழந்தையும் சாதாரணமாக இருக்கிறார்கள் இல்லையா?” ஹேமாவின் முகத்தில் தென்பட்ட பதற்றம் அவனுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
“அவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். உங்களைப் பற்றித்தான் நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். இஞ்செக்ஷன்ஸ் முக்கியம்தான் என்றாலும் உங்களுடைய நலனும் முக்கியம் இல்லையா? நீங்க திரும்பி வரும் வரையில் ஒரு நிமிடம் ஒரு யுகமாய் தோன்றியது. உங்களுக்கு ஏதாவது ஆகியிருந்தால் அந்த வேதனை என்னை வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கும்.”
ஒரே மூச்சில் அவள் சொன்னதைக் கேட்டு விஜய் வியப்புடன் பார்த்தான்.
“கவலைப்படுவானேன் என்று நினைக்கிறீர்களா? நான் தானே உங்களை வெளியில் அனுப்பினேன்?” என்றாள் ஹேமா. அவன் மௌனமாய் இஞ்செக்ஷன் பாட்டில்களைக் கொடுக்கப் போனான். ஹேமா அவன் இரு கைகளையும் பற்றிக்கொண்டு, “தாங்க் காட்!” என்றாள். கவலையும், பயமும் தீர்ந்துவிட்ட மகிழ்ச்சியில் என்ன செய்கிறோம் என்று அவளுக்கே புரியவில்லை போலும். ஹேமா இஞ்செக்ஷன் பாட்டில்கள் எடுத்துக்கொண்டு ராதிகாவின் அறைக்குள் சென்றாள்.
விஜய் தன்னுடைய கைகளைப் பார்த்துக் கொண்டான்.
ஹேமா கைகளை விட்டுவிட்ட போதும் அவளுடைய ஸ்பரிசம் இன்னும் கைகளில் இருப்பது போலவே தோன்றியது.
தன்னைப் பற்றி ஆனந்தைத் தவிர வேறு யாரும் கவலைப்பட்டு அவனுக்குப் பழக்கம் இல்லை.
அவன் கட்டில் வந்து அமர்ந்து கொண்டான். அவன் கண்களுக்கு முன்னால் ஹேமாவின் உருவம் நிழலாடியது. மெதுவாக தன்னையும் அறியாமல் உறங்கி விட்டான்.
அத்தியாயம்-6
மறுநாள் மாலை..
பிரசாத் வந்து விட்டான். ராதிகாவுக்கு நார்மல் டெலிவரி ஆகி மகள் பிறந்த செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தான். கர்ஃப்யூ இன்னும் முழுவதுமாக நீங்கவில்லை.
“தாங்க்ஸ் ஹேமா. உங்களுடைய நன்றிக் கடனை இந்த ஜென்மத்தில் என்னால் தீர்த்துக்கொள்ள முடியாது.” இரண்டு கைகளையும் ஜோடித்துக்கொண்டே சொன்னான் பிரசாத்.
“அந்த தாங்க்ஸ் ஏதோ விஜய்க்கே சொல்லுங்கள். நான் இங்கு வருவதற்கு அவன்தானே காரணம்” என்றாள் ஹேமா.
“விஜய் எங்களைச் சேர்ந்தவன்” என்றான் பிரசாத்.
“ஹேமாவும் இப்போ நம் மனுஷியாகி விட்டாள்.” ராதிகா சொன்னாள்.
கையில் பட்ட காயத்தினால் விஜய்க்கு நன்றாக ஜூரம் வந்து விட்டது. ஹேமா அவனை ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொல்லி எச்சரித்தாள்.
பிரசாதுக்கு சமையலறை சமாச்சாரங்கள் எதுவும் தெரியாது. மகளை பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தானே தவிர மற்ற விஷயங்களைக் கவனிக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை. எல்லோரையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஹேமாவின் மீது விழுந்தது.
ஜுரம் தீவிரமாய் இருந்ததால் விஜய் கட்டில் மீது தூங்கிக் கொண்டிருந்தான். கையில் சுருக்கென்று ஏதோ குத்தியது போல் இருக்கவும் கண்களைத் திறந்து பார்த்தான். எதிரே ஹேமாவின் முகம் புன்முறுவலுடன் தென்பட்டது.
“சாரி… விழிப்பு வந்து விட்டதா? ரொம்ப நிதானமாய் கவனமாக இன்ஜெக்ஷன் போட்டேன்” என்றாள். அவள் கையில் சிரிஞ்ச் இருந்தது.
“எப்படி இருக்கு விஜய்?” பிரசாத் கேட்டான்.
“எனக்கென்ன? நான் நன்றாகத்தான் இருக்கிறேன்” என்றான் விஜய்.
“நன்றாகத்தான் இருக்கிறாய். ஆனால் ஜுரம்தான் கொஞ்சம் அதிகமாய் இருக்கு. கம்ப்ளீட் ரெஸ்ட் எடுத்துக்கொள்.” பிரசாத் சொன்னான்.
“ஆனந்துக்குப் போன் பண்ணனும்.” விஜயின் குரல் தெளிவில்லாமல் ஒலித்தது.
“எல்லா போனும் டெட். நீ இங்கே இருக்கிறாய் என்று ஆனந்துக்குத் தெரியும் இல்லையா… கவலைப்பட மாட்டான்” என்றான் பிரசாத்.
“நான்… நான் உடனே ஊருக்குப் போக வேண்டும்.”
“ஊருக்குப் போக வேண்டுமா? ஜுரம் குறையும் வரை உன்னை எங்கேயும் போக விட மாட்டோம்.” பிரசாத் தீர்மானமாகச் சொல்லிவிட்டான்.
விஜய் இந்த அளவுக்குப் புலம்பும் அந்த ஆனந்த் எங்கே இருக்கிறான் என்று ராதிகாவிடம் கேட்டாள் ஹேமா.
ராதிகா சுருக்கமாக விஜய் பற்றிச் சொன்னாள். தாய் தற்கொலை செய்துகொண்ட பிறகு அனாதையாகி விட்ட அவனை தீட்சிதர் அழைத்து வந்தது. ஆனந்தும் அவனும் ஒன்றாக வளர்ந்தது, வயது ஆக ஆக ஆனந்த் விஜய் உயிர் நண்பர்களாக மாறியது, விஜய் ஆனந்தை உயிருக்கும் மேலாக நினைப்பது… எல்லாம் விவரமாகச் சொன்னாள்.
இரவாகி விட்டது. ஹேமா அறைக்குள் வந்து விஜயை வலுக்கட்டாயமாக எழுப்பினாள். முதுகிற்குப் பின்னால் தலையணையை வைத்து கட்டில் மீதே உட்காரச் செய்தாள். விஜய்க்கு விழிப்பு வந்து விட்டது. எதிரே ஹேமா கட்டில் மீது அமர்ந்து கிண்ணத்தில் ஜவ்வரிசி கஞ்சியை ஸ்பூனால் கலந்து கொண்டிருந்தாள்.
“எனக்கு வேண்டாம்.” விஜய் தலையை குறுக்கே அசைத்தான்.
“ப்ளீஸ்… காலையிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை. ஜூரம் இப்போ கொஞ்சம் பரவாயில்லை.” சொல்லிக்கொண்டே ஸ்பூனால் கஞ்சியை எடுத்து வாயருகில் கொண்டு போனாள். அவன் தயக்கத்துடன் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டான். அவனுக்கு ரொம்ப சங்கடமாக இருந்தது. இது போன்ற உபசாரங்களை மற்றவர்களுக்குச் செய்துதான் அவனுக்குப் பழக்கமே தவிர மற்றவர்கள் அவனுக்குச் செய்தது இல்லை. ஆனால் விஜயின் தயக்கத்தை, சங்கோஜத்தை ஹேமா கொஞ்சம் கூடப் பொருட்படுத்தவில்லை. விஜய் ஹேமாவின் கையில் இருந்த கிண்ணத்தை எடுத்துக்கொண்டு மெதுவாக குடிக்கத் தொடங்கினான். அவன் முகத்தில் ஜுரத்தின் களைப்பு தெரிந்தது. ஹேமா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஹேமாவின் கண்களுக்கு விஜய் பண்பு நிறைந்தவனாய், தனித்தன்மை வாய்ந்தவனாய் தென்பட்டான்.
ஹேமாவுக்கு முதல்முறையாய் விஜயைச் சந்தித்தது நினைவுக்கு வந்தது. அன்று இரவு தானும் அவனும் தனிமையில் இருக்க நேர்ந்த போது அவன் எல்லை மீறாமல் மரியாதையுடன் நடந்து கொண்டதை நினைவு கூர்ந்தாள். பெண்களிடம் மரியாதையும் இருப்பதால்தான் அவனால் நிலைதடுமாறாமல் இருக்க முடிந்தது. அவனுடைய தனித்தன்மை புரிய புரிய ஹேமாவுக்கு அவனிடம் அன்பும் மரியாதையும் ஏற்படத் தொடங்கின.
விஜய்! அவளுக்கு ரொம்ப விருப்பமான பெயர். தனக்குக் கணவனாக வரப் போகிறவனின் பெயர் விஜய் என்று இல்லாவிட்டால் விஜய் என்று மாற்றி விடுவதாக சிநேகிதிகளுடன் பந்தயம் கட்டியது நினைவுக்கு வந்தது.
வேறு வழியில்லாததால் விஜயும், ஹேமாவும் பிரசாத் வீட்டிலேயே இரண்டு நாட்கள் தங்கியிருந்தார்கள். பிராத் கலகலவென்று பேசும் சுபாவம் படைத்தவன் என்பதால் இரண்டு நாட்களும் ஜாலியாகப் பொழுது போய் விட்டது. விஜயின் காயமும் அறிக்கொண்டு வந்தது. ஹேமா கட்டை பிரித்து விட்டுப் பாண்டேஜ் போட்டு விட்டாள். காயம் சீக்கிரமாக ஆறி வருவதைக் கண்டு, “ஹெல்தியான உடம்பு!” என்று விஜயைப் பாராட்டினாள்.
அன்று ஹேமா சமையல் செய்தாள். ராதிகாவும் சாப்பிட உட்கார்ந்து கொண்டாள். பிரசாத் கத்திரிக்காய் கறியை ருசி பார்த்து விட்டு, “ராதிகா மட்டும்தான் நன்றாகச் சமைப்பாள் என்று பெருமைப்பட்டுக் கொண்டு இருந்தேன். அவளைவிட நன்றாக சமைப்பவர்கள் இருக்கிறார்கள் என்று இப்பொழுதுதான் புரிகிறது” என்றான்.
“எங்க அம்மா என்னைவிட நன்றாகச் சமைப்பாள்.” ஹேமா புன்முறுவலுடன் சொன்னாள்.
“இன்னும் கொஞ்சம் போட்டுக்கொள்.” ராதிகா விஜயிடம் சொன்னாள். “போதும்.” விஜய் தடுத்தான்.
“ஆனந்துக்குத் துணையாக, சொன்ன நேரத்திற்குள் போகவில்லையே என்று விஜய் வருத்தப்படுகிறான் போலும். உனக்குத்தான் தெரியுமே ராதிகா. ஆனந்த் சாப்பிட்டால்தான் விஜய்க்கு வயிறு நிரம்பும். ஆனந்த் மூச்சை எடுத்துக் கொண்டால்தான் விஜய் உயிர் வாழ முடியும். நட்பு என்றால் இவர்களுடையதுதான். அதிர்ஷ்டம் என்றால் ஆனந்தோடதுதான்.” கிண்டல் செய்வதுபோல் சொன்னான் பிரசாத்.
ஆனந்த் பற்றி பிரசாத் அப்படிக் கிண்டலாகப் பேசியது தனக்குப் பிடிக்கவில்லை என்பதுபோல் விஜய் மௌனமாய் இருந்து விட்டான்.
ஹேமா ஆர்வத்துடன் விஜய் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. இது போன்ற சொற்களைக் கேட்டுக்கேட்டுப் பழகிபோனாற்போல் அவன் முகத்தில் வெறுமை தென்பட்டது.
டி.வி. செய்திகளில் மதியம் மூன்று மணிக்கு மேல் கர்ஃப்யூ உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தார்கள்.
“அப்பாடா!” ஹேமா நிம்மதியாக மூச்சை விட்டுக் கொண்டாள். “நான் கிளம்புகிறேன்” என்றாள்.
“இன்னும் இரண்டு நாட்களாவது இருங்கள்.” பிரசாத் வேண்டுகோள் விடுத்தான்.
“ஆமாம் ஹேமா. இரண்டு நாட்கள் எல்லோரும் சேர்ந்து ஜாலியாக இருக்கலாம்.” ராதிகா வற்புறுத்தினாள்.
“இல்லை… இல்லை. அங்கே அம்மா ரொம்பக் கவலைப்படுவாள்.” ஹேமா சொன்னாள்.
பிரசாத் ஹேமாவை காரில் இறக்கிவிட்டு வரச்சொல்லி விஜயிடம் சொன்னான். கிளம்பும் போது ராதிகா ஹேமாவை ஒரு நிமிடம் நாற்காலியில் வந்து உட்காரச் சொன்னாள்.
“எதுக்கு?” கேட்டுக்கொண்டே ஹேமா வந்து உட்கார்ந்து கொண்டாள்.
“விஜய்! நீயும் வந்து உட்கார்ந்து கொள்.” பிரசாத் அழைத்தான்.
விஜய் தொலைவிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.
“அங்கே இல்லை. இங்கே வந்து உட்கார்ந்துகொள்.” ஹேமா பக்கத்தில் இருந்த நாற்காலியைக் காண்பித்தான் பிரசாத்.
“வா… விஜய்.” ராதிகாவும் அழைத்தாள்.
விஜய் புரியாதவனைப் போல் பார்த்துவிட்டு வந்து உட்கார்ந்து கொண்டான். ராதிகா புதிய உடைகளைக் குழந்தையின் கையால் தொடச் செய்து ஹேமாவிடம் கொடுக்கப் போனாள்.
“இதென்னது!” மறுப்பது போல் எழுந்து கொண்டாள் ஹேமா. ராதிகா ஹேமாவை எழுந்துகொள்ள விடவில்லை. தோள்களை அழுத்தி உட்கார வைத்தாள்.
“ஹேமா! ப்ளீஸ்! மறுக்காதே. ஏதோ எங்களுடைய சந்தோஷத்திற்காக.”
“ஆமாம் ஹேமா. மறுக்காதீங்க. நீங்க வாங்கிக்கொண்டால்தான் எங்களுக்குத் திருப்தியும், சந்தோஷமும்.” பிரசாதும் வற்புறுத்தினான்.
பிரசாத் விஜயிடம் புதிய உடைகளைக் கொடுத்தான்.
“என்ன பிரசாத்? உனக்கு மூளை கலங்கிவிட்டதா?” விஜய் நாற்காலியிலிருந்து எழுந்து கொண்டான்.
பிரசாத் விஜயை பலவந்தமாய் உட்கார வைத்துக்கொண்டே, “விஜய்! இன்று வரை நான் எதற்காகவும் உன்னைக் கட்டாயப் படுத்தியதில்லை. இன்று நாங்கள் கொடுப்பதை மறுக்காதே. உனக்குக் காணிக்கை தருவதாக நினைக்காதே. எங்களுடைய சந்தோஷத்திற்காக…”
“விஜய்! நீ மறுத்தால் ஹேமாவும் எடுத்துக்கொள்ள மாட்டாள். நீ எடுத்துக்கொண்டுதான் ஆகணும்.” ராதிகா சொன்னாள்.
“நான் எடுத்துக்கொள்ளப் போவதில்லை” என்றாள் ஹேமா.
“ஹேமா! வேண்டாம் என்று சொல்லாதே. குழந்தையின் கையால் கொடுக்கச் செய்திருக்கிறேன்.” ராதிகா சொன்னாள்.
ஹேமா ராதிகாவின் முகத்தை ஆழமாய் பார்த்தாள். அவளுக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இல்லை. ஆனால் ராதிகா முகத்தில் தெரிந்த வேண்டுகோளை அவளால் மறுக்கவும் முடியவில்லை. போகும்போது அவர்களுக்கு வேதனை தருவதிலும் அவளுக்கு விருப்பமில்லை.
தான் எடுத்துகொள்ளா விட்டால் ஹேமாவும் எடுத்தக்கொள்ள மாட்டாள் என்று ராதிகா சொன்னபோது விஜய்க்கு ராதிகாவின் மனம் புரிந்தது. ராதிகாவின் மனதை நோகடிப்பதில் அவனுக்கும் விருப்பம் இல்லை. இதுபோன்ற மரியாதைகளை ஏற்றுக்கொள்வது அவனுக்குப் பழக்கமும் இல்லை.
ஏற்றுக்கொள்வதா மறுப்பதா என்ற டைலமாவில் விஜய் இருக்கும்போதே பிரசாத் அவன் கைகளில் புதிய உடைகளை வைத்து விட்டான். இருவரின் கைகளில் அட்சதையைக் கொடுத்துக் குழந்தையின் தலையில் போடச் சொன்னான். இருவரும் அப்படியே செய்தார்கள்.
ஹேமா கிளம்பும் போது ராதிகா பிரசாத் அவளை மறுபடியும் வரச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார்கள். ஹேமா தன்னுடைய முகவரியை விஜயிடம் கொடுத்து, அவனுடைய முகவரியை எழுதிக் கொண்டாள். கார் கிளம்பியது.
சாலையில் நிறைய இடங்களில் எரிந்துபோன கடைகள், கார்கள், ஆட்டோக்கள் தென்பட்டன.
விஜய் டிரைவ் செய்து கொண்டிருந்தான். ஹேமா பக்கத்தில் அமர்ந்திருந்தாள். “கை காயம் ஆறிய பிறகு கடிதம் எழுதுவீர்களா?” ஹேமா கேட்டாள்.
அவன் பதில் எதுவும் சொல்லவில்லை.
“ராதிகாவும், பிரசாதும் என்னை மறுபடியும் வீட்டுக்கு வரச்சொல்லி அத்தனை தடவை சொன்னார்கள். நீங்க பேச்சுவாக்கில் கூட என்னை உங்கள் ஊருக்கு வரச்சொல்லி ஒரு தடவைக் கூட சொல்லவே இல்லையே?”
அவன் மௌனமாய் இருந்தான்.
“வைசாக் வந்தால் எங்க வீட்டுக்குக் கட்டாயம் வாங்க. எங்க அம்மா உங்களைப் பார்த்தால் ரொம்ப சந்தோஷப்படுவாள்.”
அதற்கும் அவன் பதில் சொல்லவில்லை.
அவன் மௌனமாய் இருப்பதைக் கவனித்த ஹேமா தலையைத் திருப்பி அவன் பக்கம் பார்த்தாள். ஆரோக்கியமாய் பக்கவாட்டில் தென்பட்ட அவன் முகம் ரொம்ப அழகாய் எதிராளியைக் கவர்ந்திழுப்பதுபோல் தென்பட்டது. அவன் முகத்தில் அழகைவிட தனித்தன்மை கொடுத்த கம்பீரம் அதிகமாய் இருந்தது. பொய்யாகக் கோபத்தை வரவழைத்துக்கொண்டு ஏதோ சொல்ல நினைத்த ஹேமா எதுவும் சொல்ல முடியாமல் நின்று விட்டாள். அவனைப் பார்க்கும்போது நட்புணர்வு ஏதோ தோன்றியது. அவனுடன் ஏதாவது பேச வேண்டும் என்பதைவிட, அவன் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது.
“நீங்க அழைத்தாலும், அழைக்கா விட்டாலும் நான் உங்கள் வீட்டுக்கு வரப் போகிறேன்” என்றாள்.
அவன் இதழ்கள் இறுக்கமாய் இருந்தன.
“எதுக்காக என்று தெரியுமா?”
தெரியாது என்பதுபோல் தலையை அசைத்தான்.
“ராதிகாவும், பிரசாதும் உங்க ஆனந்த் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள். அந்த ஆனந்த் எப்படி இருப்பான் என்று பார்க்கணும். எனக்கு ரொம்ப துடிப்பாய் இருக்கிறது.” ஹேமா சொன்னாள்.
விஜய் முகம் பிரசன்னமாய் இருந்தது.
“நான் வந்து ஆனந்திடம் என்ன சொல்லப் போகிறேன் தெரியுமா?”
அவன் புன்முறுவலுடன் சாலையைப் பார்த்துக்கொண்டே டிரைவ் செய்து கொண்டிருந்தான்.
“என்ன செய்யப் போகிறேன் என்று சொல்லட்டும்மா?” இரட்டிப்பது போல் கேட்டாள் ஹேமா.
அவன் கேட்க தயாராக இருப்பதுபோல் பார்த்துக் கொண்டிருந்தான். மலக்பேட் நெருங்கிக் கொண்டிருந்தது. வீடு அருகில் வரப் போகிறது.
“இந்தப் பக்கம் பாருங்க.” ஹேமா சொன்னாள். விஜய் திரும்பவில்லை. “இந்தப் பக்கம் திரும்பி என்னைப் பாருங்க.” ஹேமா பிடிவாதம் பிடிப்பது போல் சொன்னாள்.
விஜய் தலையைத் திருப்பி ஹேமாவின் பக்கம் பார்த்தான். ஹேமா தன்னுடைய பிடிவாதம் ஜெயித்ததற்குப் புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் வெற்றியின் பெருமிதத்தில் மின்னிக் கொண்டிருந்தன.
அந்த நிமிடம் அவள் முகம் ரொம்ப மனோகரமாய் இருந்தது. விஜயினால் அவள் முகத்திலிருந்து பார்வையை விலக்கிக்கொள்ள முடியவில்லை.
ஹேமாவும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பார்வையின் அணைப்பில் அவன் இதயம் சிறைப்பட்டு விட்டது போல் இருந்தது.
ஒரு நிமிடம் ஹேமாவும் பேசவில்லை. பிறகு சுட்டு விரலை உயர்த்தி எச்சரிப்பதுபோல், “ஆனந்திடம் நான் என்ன சொல்லப் போகிறேன் தெரியுமா?” என்றாள்.
சுய உணர்வு அற்றவனைப் போல் விஜய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“விஜய் என்றால் உன் ஒருவனுக்குத்தான் பிடிக்கும் என்று இல்லை. உன்னைவிட அதிகமாய் அவனை விரும்புகிறவர்கள் உனக்குப் போட்டியாக இருக்கிறார்கள் என்று சொல்வேன்.” ஹேமா சொல்லிக் கொண்டிருந்தாள்.
சைக்கிள் ஒன்று குறுக்கே வந்ததில் சட்டென்று பிரேக்கைப் போட்டான். கார் குலுக்கலுடன் நின்றது. சாதரணமாய் பேசிக் கொண்டிருந்த ஹேமா விஜயின் தோளில் இடித்துக் கொண்டாள்.
“ஐ யாம் சாரி.” விஜய் சொன்னான்.
“சாரி.” எதிர்பாராமல் அவன்மீது இடித்ததற்கு ஹேமாவும் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். விஜயின் தோளில் இடித்ததில் ஹேமாவின் பல் அழுத்தி கீழ் உதட்டில் காயம் ஏற்பட்டது.
“இரத்தம் வருகிறது.” விஜய் சட்டைப் பையிலிருந்து கைக்குட்டையை எடுத்துக் கொடுத்தான்.
ஹேமா சரியாக உட்கார்ந்து கொண்டே கைக்குட்டையால் உதட்டின் மீது ஒற்றிக்கொண்டாள். வீடு வந்து விட்டது. கார் வீட்டின் முன் நின்ற பிறகும் ஹேமா இறங்கவில்லை. இருவரும் ஒரு நிமிடம் மௌனமாய் இருந்தார்கள்.
“எனக்குத் தெரியும் நீங்க என்ன நினைக்கிறீங்க என்று. நான் கொஞ்சம் அதிகமாய் பேசி விட்டேன் இல்லையா?” என்றாள் ஹேமா.
அவன் மறுக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை. அவன் மௌனமே பதில் தருவது போல் இருந்தது. அவன் முகத்தில் ஆழமான கம்பீரத்தைத் தவிர வேறு எந்த உணர்ச்சியும் இருக்கவில்லை.
“உள்ளே வாங்க” என்றாள்.
அவன் அசையவில்லை.
“உள்ளே வாங்க. நான் எங்கே இருந்தேனோ, யாருடன் இருந்தேனோ, சித்திக்குத் தெரிந்தால் அவள் மனதுக்கு நிம்மதியாக இருக்கும்.”
அவன் இறங்கி அவளைப் பின் தொடர்ந்து உள்ளே வந்தான்.
காலிங்பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்த அம்மாள் ஹேமாவைப் பார்த்ததும் வியப்பும், மகிழ்ச்சியும் ஒன்றாக சேர இரண்டு கைகளையும் நீட்டி அவளை அணைத்துக் கொண்டாள். “ஹேமா! நீ எங்கே இருக்கிறாயோ, எப்படி இருக்கிறாயோ என்று கவலைபட்டுக் கொண்டிருதேன். உன் அம்மா போன் செய்தாள். போனில் அவளால் சரியாக பேசக்கூட முடியவில்லை. ஒரே அழுகை.”
“நான் நன்றாகத்தான் இருக்கிறேன் சித்தி. பாதுகாப்பாய்தான் இருந்தேன். இவர்தான் விஜய். என்னைக் காப்பாற்றியவர்” என்று விஜயுடன் ராதிகா வீட்டுக்குப் போன விவரங்களைச் சொன்னாள். ஹேமாவின் சித்தி விஜய்க்கு பலமுறை நன்றியைத் தெரிவித்து விட்டாள். வேண்டாமென்று மறுத்தபோதும் காபி கலந்து எடுத்து வந்தாள். சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டுமென்று வற்புறுத்தினாள்.
விஜய் சற்று நேரம் கழித்துக் கிளம்பினான். ஹேமா அவனை வழி அனுப்புவதற்காக வாசல்வரை வந்தாள். இரவாகி விட்டிருந்தது.
“மறுபடியும் நாம் சந்தித்துக் கொள்கிறோமா?” ஹேமா கேட்டாள். போகப்போன விஜய் நின்றான். ஒரு நிமிடம் கழித்துத் திரும்பினான்.
ஹேமா அவன் வாயிலிருந்து வரப்போகும் பதிலுக்காக ஆர்வத்துடன் காத்திருந்தாள்.
அவன் ஹேமாவின் முகத்தை ஆழமாய் பார்த்துக்கொண்டே, “ஊஹும். நாம் மறுபடியும் சந்தித்துக்கொள்ளப் போவதில்லை.” தயக்கமில்லாமல் சொல்லிவிட்டு மளமளவென்று காரை நோக்கி நடந்து போனான். காரை ஸ்டார்ட் செய்துவிட்டுக் கிளம்பும் முன் தன்னையும் அறியாமல் திரும்பிப் பார்த்தான். ஹால் ட்யூப்லைட்டின் வெளிச்சம் வராண்டாவில் விழுந்து கொண்டிருந்தது. அந்த ஒளியில் ஹேமா கற்சிலையைப் போல் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.
அவள் முகத்தில் தென்பட்ட உணர்வுகள் அவனுக்குப் புரிந்தன. இன்னதென்று புரியாத வேதனையைத் தாங்கிக்கொள்ள முயற்சி செய்வதுபோல் அவன் தாடை எலும்பு முறுக்கேறியது. மென்மையான கரம் ஒன்று நட்புடன் முன்னால் நீண்டு அவன் கையைப் பற்றிக்கொள்ள துடித்துக் கொண்டிருந்தது. அந்தக் கையைப் பற்றிக்கொள்ளும் நிலையில் அவன் இருக்கவில்லை. வாழ்க்கையில் அவனுக்கு அந்த சுதந்திரம் இல்லை. அதான் மனதைக் கல்லாக்கிக்கொண்டு அந்த நட்பை அலட்சியபடுத்துவது போல் நடந்து கொண்டான். இதுநாள் வரை அவன் தான் எடுத்த முடிவுகளை நினைத்து வேதனைப்பட்டது இல்லை. முதல் முறையாக அவன் மனம் கடிவாளம் அறுந்த குதிரையைப் போல் தடுமாறிக் கொண்டிருந்தது. ஹேமாவுடன் அவனுடைய அறிமுகம் ரொம்ப குறைவு. ஆனால் அவளுடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் அவனுக்கு விலை மதிக்க முடியாத பொக்கிஷம் போல் தோன்றியது. அந்த நினைவுகளைத் தன் இதயத்தில் பத்திரமாகப் பூட்டிப் பாதுகாக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். தன்னுடைய வாழ்க்கையில் எந்த ஒரு பெண்ணுக்கும் இடமிருக்க முடியாது. இந்த விஷயம் அவனுக்கு முன்னாடியே புரிந்து விட்டது. அவனுக்குப் பதினெட்டு வயது இருக்கும் போது கோயில் குருக்களின் மகள் சுமா அவனை விரும்பினாள். ஆனந்த் விஷயத்தில் அவள் சண்டை போட்ட போதே அவன் இந்த முடிவுக்கு வந்து விட்டான். ஆனந்துக்கும் தனக்கும் இருக்கும் நட்பு யாருக்கும் புரியாது. எல்லோரும் ஆனந்துக்காக தான் வாழ்க்கையைத் தாரை வார்த்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். தாய் இறந்த பிறகு தனியனாகி விட்ட தன்னை மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்தது ஆனந்தின் நட்புதான். சோர்ந்து விட்ட தன் மனதுக்கு ஆறுதலாக இருந்தது ஆனந்தின் களங்கமற்ற நட்புதான். இது யாருக்கும் புரியாது.
ஆனந்தை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சின்ன வயது முதல் விஜயிடம் சொல்லி வந்த தீட்சிதர் இன்று ஆனந்தை விட்டுத் தொலைவாகப் போய் விட வேண்டும் என்று மறைமுகமாகச் சொல்லி வருகிறார். ஆனந்துக்கு நல்லது நடக்கும் என்றால் அவனை விட்டு தொலைவாகப் போவதற்கு விஜய் தயாராகத்தான் இருந்தான். அது அவனுக்கு வேதனை தந்தாலும் ஆனந்துக்காக அதைப் பொறுத்துக்கொள்ளவும் தயாராக இருந்தான். ஆனால் விஜயின் பிரிவைத் தாங்கிக்கொள்ளும் நிலையில் ஆனந்த் இல்லை. அதிலும் ஆனந்தின் உடல் நலமும் கொஞ்சம் சுமார்தான். சின்ன வேதனை வந்தாலும் வேர் அறுந்த மரம் போல் அப்படியே சாய்ந்து விடுவான். உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை சில சமயம் வந்திருக்கிறது. தான் அந்த வீட்டில் தங்கியிருப்பதில் தீட்சிதருக்குக் கொஞ்சம்கூட விருப்பம் இல்லை என்று விஜய்க்கு நன்றாகவே தெரியும், ஆனால் ஆனந்துக்குத்தான் இந்த விஷயம் புரியவில்லை. புரியும் விதமாக சொல்லிவிடலாம் என்றாலோ அடுத்த நிமிடம் ஆனந்த் தாத்தாவைக் கொல்லவும் தயங்க மாட்டான். விஜயின் தாடை எலும்பு மறுபடியும் முறுக்கேறியது. கத்தியின் முனையில் வாழ்ந்து கொண்டிருப்பவன் ஒரு பெண்ணை தன்னுடைய வாழ்க்கையில் எப்படி வரவேற்க முடியும்? இந்தக் கசப்பு உண்மையைப் புரிந்து கொண்டதால்தான் விஜய் ஹேமாவிடம் எந்த தயக்கமும் இல்லாமல் மறுபடியும் சந்திக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டான்.
– தொடரும்…
– மௌனராகம் (நாவல்), தெலுங்கு: யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில்: கௌரி கிருபானந்தன்.