கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2023
பார்வையிட்டோர்: 2,940 
 
 

பாலா அமைதியாக ஆப்பிஸ் நாட்காலியில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டு இருந்தாள், என்ன மேடம் வீட்டுக்கு போகும் எண்ணம்  இல்லையா என்று கேட்டப்படி திரு அருகில் வந்து உடகார்ந்தான், இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு, நீ போவது என்றால் போ என்றாள் அவள்,அது எப்படி போக முடியும், நீ முடித்து விட்டு வா,அது மட்டும் நான் வெளியில் உட்கார்ந்து ஒரு தம்மை இழுக்கிறேன் என்றான் அவன், உன்னை திருத்த முடியாது, ஏதாவது செய்து தொலை என்று அவள் வேலையை பார்த்தாள், திரு சிரித்துக் கொண்டே வெளியில் எழுந்து போய் சிகரெட்டை பற்ற வைத்தான், அப்போது அங்கு வந்த முரளி, என்னடா தனியாக தம் அடிக்கிற இன்னும் வீட்டுக்கு போகாமல் என்றான், இல்லை பாலா வருவாள் அதற்காக காத்துக் கொண்டு இருக்கேன் என்றான் திரு, உனக்கு கொஞ்சமும் அறிவு இல்லை, வீட்டில் உன் மனைவி கலை காத்துக் கொண்டு இருப்பாள், நீ இவளுக்காக இங்கு உடகார்ந்து இருக்க என்றான் கடுகடுப்பாக, பாலா தனியாக போகனும்  நாங்கள் எப்போதும் சேர்ந்து போய் பழக்கமாகி விட்டது என்றான் திரு.

இது எல்லாம் இனி சரிவராது, ஒருத்தி உனக்காக வீட்டில் காத்துக் கொண்டு இருப்பது உனக்கு தெரியவில்லை, இவள் தனியாக போவது தான் உனக்கு பிரச்சினை, இது எல்லாம் அவ்வளவு நல்லதிற்கு இல்லை என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே, பாலா வேலையை முடித்து விட்டு வந்தாள், என்ன முரளி இன்னும் வீட்டுக்கு போகாமல் திருவிடம் அரட்டை என்றாள், புதிதாக திருமணம் முடித்தவனே இன்னும் வீட்டுக்கு போகாமல் உடகார்ந்து இருக்கான் என்றதும் பாலாவின் முகம் சற்றென்று மாறியது, நான் ஏதும் திருவை பிடித்து வைத்துக் கொள்ளவில்லை, அவனை போக தான் சொன்னேன் என்றாள் கொஞ்சம் சூடாகவே, சரி சரி விடு போகலாம் என்று திரு பாலாவை அழைத்தான், சரி மச்சான் நான் புறப்படுறேன் என்று முரளி சென்று விட்டான், இருவரும் நடந்துப் போய் பொது பேரூந்தில் ஏறி உட்கார்ந்தார்கள்,பாலா அமைதியாக இருந்தாள், திரு ஏன் அமைதியாக உட்கார்ந்து இருக்க என்றான், ஒன்றும் இல்லை என்றாள் அவள், பொய் சொல்லாதே உன் முகம் சரியில்லை என்றான், என்னால் உனக்கு எதுவும் பிரச்சினையா? என்றாள் பாலா இல்லை அப்படி எதுவும் இல்லை என்றான் திரு, ஏன் திடீரென்று இப்படியொரு கேள்வி என்றான், இல்லை ஏதோ உன்னை நான் பிடித்து வைத்திருப்பது போல் முரளி கதைத்தது எனக்கு கஷ்டமாக இருந்தது என்றாள் அவள், நான் என்ன சின்ன பிள்ளையா நீ என்னை பிடித்து வைத்துக் கொள்வதற்கு என்றான் திரு, அவள் அமைதியாக இருந்தாள்.

பாலா, திரு ஒரே தெருவில் பல ஆண்டுகளாக இருக்கின்றார்கள், சிறு வயதில் இருந்தே ஒன்றாக படித்தவர்கள், ஒரே காலேஜ்,தற்போது ஒரே இடத்தில் வேலை, இருவரும் நல்ல நண்பர்கள், திரு குடும்பத்தில் அவன் ஒரே பையன், பாலா குடும்பத்தில் மூன்று பெண் குழந்தைகள் இரண்டாவதாக பிறந்தவள் பாலா, அக்கா திருமணம் செய்து சென்று விட்டாள்,பாலாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் பொழுது, அவளின் தங்கை அவள் காதலித்த பையனோடு வீட்டை விட்டு சென்று விட்டாள், இதனால் பாலாவின் திருமணம் தடைப்பட்டு கொண்டே போனது,திருவிற்கு அவர்கள் வீட்டில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்து விட்டார்கள், அவனுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம் தான் ஆகப் போகின்றது, பாலா தன் நண்பனின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தாள், தற்போது ஏனோ திருவிடம் அதிகமான நெருக்கத்தை ஏற்படுத்திக்க வேண்டும் என்று அவள் உள் மனது சொல்கின்றது,இவ்வளவு நாட்கள் எதுவும் தெரியவில்லை,தற்போது திரு நம்மை விட்டு ஒதுங்கி விடுவான் என்ற பயமும், நம்மை விட அவன் மனைவி மீது அன்பு செலுத்துவான் என்ற பொறாமையும் கொஞ்சம் எட்டி பார்த்தது,நண்பனாக தானே பழகினோம், பிறகு ஏன் எனக்குள் இப்படியொரு கெட்ட எண்ணம் என்று அவளே தனக்குள் கேட்டு கொள்வாள்,அவர்கள் இறங்கும் இடம் வந்தது இருவரும் இறங்கி நடந்தார்கள்,கலை எப்படி இருக்கின்றாள் என்றாள் பாலா

அவள் சந்தோஷமாக இருக்கின்றாள்,நம் வீட்டில் பெண் குழந்தைகள் இல்லாத குறையை அவள் தீர்த்து வைக்கின்றாள்,அம்மா அப்பா எப்போதும் அவளுடன் நன்றாக இருக்கின்றார்கள், அப்பா மகளை போல் பார்த்துக் கொள்கின்றார் என்றான் திரு,நல்ல மருமகள் என்று சொல் என்றாள் அவள்,எனக்கும் நல்ல மனைவி என்றதும் பாலாவிற்கு சுருக்கென்றது,கேட்க்க சந்தோஷமாக இருக்கின்றது என்று உதட்டளவில் சொன்னாலும் மனதில் பாரமாக இருந்தது, சரி வீடு வந்து விட்டது என்று கூறி பாலா அவள் வீட்டுக்கு சென்று விட்டாள்,திரு அவள் வீட்டை கடந்து அவன் வீட்டுகுச் சென்றான்,அப்பா தான் கதவை திறந்தார் என்னடா இவ்வளவு லேட் என்றார், இல்லை அப்பா பாலாவிற்கு வேலை அதனால் எனக்கும் லேட் ஆகிவிட்டது என்றான்,கலை இவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டு இருந்தாள்,நான் தான் போய் படுக்கச் சொன்னேன் என்றார் அப்பா,குளித்து விட்டு வா தோசை ஊற்றி வைக்கிறேன் என்றார் அப்பா,சரியென்று திரு அறைக்குள் சென்றான், கலை தூங்கி விட்டாள், பக்கத்து அறையில் அம்மாவின் இருமல் சத்தம் கேட்டது,மெதுவாக எட்டிப் பார்த்தான் அம்மா இன்னும் தூங்கவில்லை,இரண்டு நாட்களாக உடம்பிற்கு முடியவில்லை அவர்களுக்கு,குளித்து விட்டு போய் சாப்பிட்டான்,இன்னும் அம்மாவிற்கு இருமல் என்றான் அப்பாவிடம்,ஆமாடா இன்னும் சரியாக மாட்டேங்குது,கலை சுக்கு காப்பி எல்லாம் போட்டு கொடுத்தாள் என்றார் அப்பா,அவன் சாப்பிடும் மட்டும் சிறிது நேரம்  திருவிடம் ஆபிஸ் விடயம் எல்லாம் கேட்டு தெரிந்துக் கொண்டார்,என்னடா பாலாவிற்கு இன்னும் எந்த வரனும் அமைய மாட்டேங்குது என்றார்,ஆமாம் அப்பா அவள் தங்கை ஓடி போனதிற்கு இவள் என்ன பன்னுவாள் பாவம் என்றான் திரு,இரண்டு நாட்களுக்கு முன்பு பாலா அப்பாவை கண்டப் போது அவரும் அதையே தான் கூறி கவலைப் பட்டார், நானும் இரண்டு மூன்று இடத்தில் சொல்லி வைத்திருக்கேன் பாப்போம் என்றார் அவர்

அடுத்த நாள் பாலாவும்,திருவும் சேர்ந்து தான் வேலைக்குப் போனார்கள்,என்னடா கண் எல்லாம் சிவந்திருக்கு இரவு ஒழுங்கான தூக்கம் இல்லையோ என்று வழமையாக கேட்ப்பது போல் தான் அவள் கேட்டாள்,புதிதாக திருமணம் ஆகியவனிடம் கேட்க்கும் கேள்வி என்றான் திரு,அவன் அப்படி சொன்னதும் அவளுக்கு என்னமோ போல் ஆகிவிட்டது,அதன் பிறகு அவள் ஆபிஸ் கதைகளை கதைப்பதற்கு ஆரம்பித்தாள்,இருவரும் அங்கு நடக்கும் வில்லத்தனமான அரசியல் ஆபிஸ் வேலைகளை அலசினார்கள்,அப்போது தான் திரு நான் அடுத்த ஒரு வாரம் லீவு போடனும் என்றதும்,எதற்கு என்றாள் பாலா,கலை ஊருக்கு போய் வரனும்,திருமணம் முடித்து இன்னும் கலை சொந்தகங்கள் யாரையும் போய் பார்க்கவில்லை அவர்களும் எப்போது விருந்திற்கு வருவீர்கள் என்று எந்த நாளும் கேட்டு தொல்லை பன்னுறாங்கள் போய் வந்து விட்டால் அந்த பிரச்சினை இல்லை என்றான் திரு,எப்போது போய் திரும்ப எப்போது ஆபிஸ் வருவ என்றாள் பாலா,இந்த சனி கிழமை போய் வருகின்ற சனி இல்லை என்றால் ஞாயிறு வந்து விடுவோம் என்றான்,அப்படியா! என்றாள் அவள்,இன்று புதன் ஆகிவிட்டது ஏன் எனக்கு இதை முன்பே சொல்லவில்லை என்றாள் அவள், நாங்களே இன்று காலையில் தான் கதைத்து முடிவு எடுத்தோம் என்றான் திரு

அடுத்த இரண்டு நாட்களும் வேகமாக போய் விட்டது வெள்ளியன்று திருவோடு ஒன்றாக தான் வேலை முடிந்து வந்தாள் பாலா,கவனமாக போய் வாருங்கள் என்றெல்லாம் கூறி சந்தோஷமாக தான் வீட்டுக்கு வந்தாள்,அதன் பிறகு அவள் மனம் வெறிச்சோடி இருப்பது போல் உணர்ந்தாள்,திங்கள் அன்று வேலைக்கும் போகும் போது அதை நன்றாகவே உணர்ந்தாள்,அவளுக்கு யாருமே இல்லாத ஓர் உணர்வு ஏற்பட்டது,எப்போதுமே திருவின் அருகில் இருந்து பழக்கப் பட்டுப் போனவள்,இந்தப் பிரிவு அவளுக்கு கஷ்டமாக இருந்தது முதல் தடவையாக,இதற்கு முதல் திரு தனியாக வெளியூர் எல்லாம் போய் வந்தப் போது அதுவெல்லாம் பெரிதாக தெரியவில்லை பாலாவிற்கு,இப்போது கலையுடன் போய் இருப்பது அவளுக்கு தாங்க முடியவில்லை,திருவை அவள் அபகரித்துக் கொண்டாள் என்று நினைக்கத் தோன்றியது,ஏன் எனக்கு கலை மீது பொறாமை வருகிறது என்று நினைக்கும் போது அதுவும் கவலையாக இருந்தது,திருவை விட்டு கொடுத்து விட்டோமோ,நானே திருமணம் செய்து இருக்களாம் என்று அவள் உள் மனது சொன்னதை கேட்டு திடுக்கிட்டாள்,இது என்ன நினைப்பு,இத்தனை காலமாக அவனை நான் நண்பனாக தானே பார்த்தேன்,இப்போது மட்டும் அவனை எப்படி….அவளுக்கே அது குழப்பமாக இருந்தது

ஆபிஸ் முடிந்து தனியாக புறப்பட்டாள் பாலா,எப்போதும் திரு வருவான் இந்த வாரமே அவன் இல்லை என்று நினைக்கும் போது கண்கலங்கியது,சரி ஒரு வாரத்தில் வந்து விடுவான் என்று நினைத்துக் கொண்டே வேகமாக நடந்நாள், வீட்டுக்கு சென்ற பிறகும் திரு நினைவாகவே இருந்தது,பாலாவின் அம்மா சாப்பிட அழைத்தாள், வந்து அமர்ந்தாள் என்னடி முகம் ஒரு மாதிரி இருக்கு,திரு இன்று வந்திருக்க மாட்டானே,ஊருக்கு போய் இருப்பதாக அவன் அம்மாவை கண்டப் போது சொன்னார்கள் என்றாள், ஆமாம் அவன் ஊருக்கு போய் இருக்கான் என்றாள்,அதற்கு நீ ஏன்டி இப்படி இருக்க என்றாள் அம்மா,அது எல்லாம் ஒன்றும் இல்லை அம்மா,அவன் அவன் மனைவியுடன் போய் இருக்கான்,அதில் எனக்கென்ன வருத்தம் என்று அம்மாவிடம் வாய் மட்டும் சொன்னாலும்,மனதில் ஏக்கமாக இருந்தது, ஏதோ பெயருக்கு கொஞ்சத்தை சாப்பிட்டு முடித்து விட்டு அறைக்கு வந்து படுத்துவிட்டாள் பாலா, அடுத்த நாள் வேலைக்குப் போவதற்கு வெறுப்பாக இருந்தது,திருவின் வேலைகளையும் தான் செய்து வைப்பதாக சொன்னவளுக்கு, தற்போது தனது வேலைகளை செய்யவே கஷ்ட்டமாக இருப்பது போல் உணர்ந்தாள்

கட்டாயம் ஆபிஸ் போக வேண்டும் என்பதற்காக புறப்பட்டு போனாள்,அதற்கு அடுத்த நாள் வேலைக்கு போகவில்லை,வீட்டில் இருக்கவும் பிடிக்கவில்லை, திருவின் வீட்டுக்கு போய் வருவதாக அம்மாவிடம் சொன்னாள் பாலா,வீட்டுத் தோட்டத்தில் கத்தரிக்காய் காய்ச்சி இருக்கு பறித்துக் கொண்டுப் போய் கொடு என்றாள் அம்மா,சரியென்று கத்தரிக்காவை பறித்து ஒரு பைக்குள் போட்டுக் கொண்டு புறப்பட்டாள்,திருவின் வீட்டு கதவை தட்டினாள் திருவின் அப்பா தான் கதவை திறந்தார்,எப்படியம்மா இருக்க,இன்று வேலைக்கு போகவில்லை, லீவா என்றார், ஆமாம் அங்கிள் இன்று வேலைக்குப் போகவில்லை திருவும் இல்லை போவதற்கு எரிச்சலாக இருந்தது போகவில்லை என்றாள் அவள்,ஆன்டி கிச்சனில் வேலை போய் பாரு என்றார்,அவள் கிச்சனுக்குள் நுழைந்தாள் எப்படி ஆன்டி இருக்கீங்கள் என்றாள் பாலா,வாம்மா இந்த பக்கமே ஆளை காணவில்லை என்றாள் அவள், இல்லை ஆன்டி கொஞ்சம் வேலை அதனால் தான் நேரம் கிடைக்க மாட்டேங்கிறது, இன்று ஆபிஸ் லீவே போட்டு விட்டு வந்து இருக்கேன் என்றாள் பாலா,ஆமாம்மா திரு இல்லை என்றதும் நீ போய் இருக்க மாட்ட என்றாள் அவள்,ஆமாம் ஆன்டி அவன் இல்லை என்றால் ஆபிஸ் போகவே பிடிக்க மாட்டேங்குது என்றாள் பாலா,நாளைக்கு கட்டி போற இடத்தில் இப்படி எதுவும் உளறி வைக்காதே, உன்னை உதைப்பான் உன் புருஷன் என்றாள் அவள்,அது அப்போது பார்ப்போம் ஆன்டி என்று சிரித்தாள் அவள்

சரி நீ போய் திருவின் திருமண ஆல்பம் வந்திருக்கு பாரு, நான் காப்பி போட்டு எடுத்துட்டு வாரேன் அவன் அறையில் தான் இருக்கு என்றாள்,பாலா மெதுவாக திருவின் அறைக்குள் நுழைந்தாள் அவர்களின் திருமண படம் சுவரில் தொங்கியது,திரு சிரித்துக் கொண்டு அழகாக இருந்தான்,தன்னையறியாமல் பெருமூச்சி வந்தது,ஆல்பத்தை கையில் எடுத்து ஒவ்வொரு படமாக பார்த்தாள் கலையும் அழகாக தான் இருந்தாள்,பாலாவுடன் திரு நிற்கும் படங்களை பார்க்கும் போது இவன் எனக்கு சரியான ஜோடியாக இருக்கான் கலையை விட நான் இவனுக்கு சரியான ஜோடி என்று நினைக்கத் தோன்றியது,அப்போது ஆன்டி காப்பியுடன் உள்ளே நுழைந்தாள், எப்படியம்மா இருக்கு ஆல்பம் என்றாள் காப்பியை அவளிடம் நீட்டியப் படி, நன்றாக இருக்கு ஆன்டி,நானும் திருவும் தேடிப் பிடித்து தான் இந்த போட்டோகிரப்பரை தேர்ந்து எடுத்தோம் என்றாள்,கலை எந்த பிரச்சினையும் இல்லாத பொண்ணு,கொஞ்சம் அப்பாவித் தனம்,திருவை நன்றாக கவனித்துக் கொள்கின்றாள் என்றாள் அவள்,சந்தோஷம் ஆன்டி என்றாள் பாலா,அப்போது அங்கே வந்த திரு அப்பா நம்மையும் நன்றாக கவனித்துக் கொள்கின்றாள் அருமையான மருமகள் என்றார், காப்பியை குடித்து முடித்தப் பிறகு,புறப்பட்டு விட்டாள் பாலா, இரும்மா சமையல் பன்னுறேன் சாப்பிட்டு போகலாம் என்றாள் ஆன்டி,இல்லை ஆன்டி வேண்டாம் வீட்டில் இருந்து கொஞ்சம் ஆபிஸ் வேலை பாக்கனும், இன்று போகவும் இல்லை என்றாள் பாலா,சரியென்று வழியனுப்பி வைத்தார்கள்

ஏனோ மனதிற்கு பாரம் மாதிரி இருந்தது,நான் மருமகளாக வந்திருக்க வேண்டிய வீடு,கலை கொடுத்து வைத்தவள்,திருவிடம் எந்த கெட்ட பழக்கமும் இல்லை,தனியாக வளர்ந்தவன் என்று கூற முடியாது,அவ்வளவு விட்டுக் கொடுக்து போவான்,எப்போதும் கலகலப்பாக இருப்பான்,எவ்வளவு தான் பிரச்சினை என்றாலும் கலகலப்பாகவே சமாளித்து விடுவான், மற்றவர்களுக்கு உதவி செய்யனும் என்ற மனப்போக்கு அவனுடையது,இத்தனை வருடங்களாக பாலாவிற்கு திருவை தெரியும்,காதல் என்று எந்த வலையிலும் சிக்கியது இல்லை, பாலாவிடம் அவ்வளவு மரியாதையாக நடந்து இருக்கான்,அதனால் தான் அவளுக்கு அவன் மீது அப்படியொரு மரியாதை இது நாள் மட்டும்,தற்போது தான் நான் அநாவசியமாக அவன் மீது ஆசைப் படுகிறேன்,இது நல்லதிற்கு இல்லை என்று தனக்கு தானே நினைத்துக் கொண்டு அந்த வாரமே ஓட்டி விட்டாள்,திங்கள் அன்று திருவை பாலா கண்டப் போது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது

என்ன ஒரு வாரத்தில் இளைத்துப் போய்விட்ட என்றான் திரு,நீ தான் உன் மாமியார் சாப்பாட்டில் கொலுத்துப் போய் இருக்க என்றாள் பாலா,அது என்னமோ உண்மை தான்  ஒரு வாரமாக சாப்பாடு போட்டு போட்டு அதுவே வேண்டாம் என்று போய் விட்டது என்றான் அவன்,வீட்டுக்கு போய் இருந்தப் போது ஆல்பம் பாத்ததாக அம்மா சொன்னார்கள்,எப்படி இருக்கு, நான் இன்னும் ஒழுஙாகாக பாக்கவில்லை, நாங்கள் ஊருக்கு போனப் பிறகு தான் ஆல்பம் வந்து இருக்கு,நேற்று மேலோட்டமாக பார்த்தேன் என்றான்,போட்டோ எல்லாம் நன்றாக இருந்தது என்றாள்,அப்ப உன் திருமணத்திற்கும் அவர்களையே புக் பன்னி விடலாம் என்றான் திரு,அது நடக்கும் போது பார்க்கலாம் என்றால் அவள்,ஏன் இவ்வளவு சளிப்பு என்றான் அவன், அவள் அமைதியாக இருந்தாள், பக்கத்தில் இருந்த உன்னை தவர விட்டுட்டேன் என்ற நினைப்பு வந்து போனது, என்ன அமைதியாக இருக்க எதுவும் பிரச்சினையா என்றான் திரு,இல்லை அப்படி எதுவும் இல்லை என்றாள் அவசரமாக பாலா,இருவரும் ஆபிஸ் போய் அமர்ந்தார்கள் பகல் லன்ஞ் மட்டும் நிமிர முடியாத வேலை

கேன்டீன் போய் சாப்பிட உட்கார்ந்தார்கள்,அப்போது முரளியும் வந்தான், எப்ப மச்சான் வந்த,போன வாரம் இரண்டு நாட்கள் பாலா ஆபிஸ் வரவில்லை, நீ இல்லை என்றால் இந்த மேடம் வேலைக்கு கூட சரியாக வருவதில்லை என்றான் அவன்,இவன் வேறு எரிகின்ற விளக்கில் எண்ணெய் ஊத்துகின்ற மாதிரி என்று மனதில் முரளியை திட்டிக் கொண்டே அப்படி எதுவும் இல்லை,உடம்பிற்கு அவ்வளவு நன்றாக இல்லை, அதனால் லீவு போட்டேன் என்று சமாளித்தாள்,நீ திரு இல்லை என்று வராமல் இருந்து விட்டு,கதை சொல்லாதே என்றான் முரளி,அவளுக்கு முகம் சிவந்துப் போனது, சரிடா அவளைப் பற்றி தான் உனக்கு தெரியுமே,என் பின்னுக்கே திரிகின்றவள் என்று சிரித்தான் திரு,அதுவெல்லாம் முன்புடா தற்போது நீ கலை புருஷன் என்றதும் சூடாகி விட்டது பாலாவிற்கு, திரு எனக்கு முன்பு இருந்தே நண்பன், கலை இப்போது வந்தவள் என்றாள் படபடப்பாக,உன்னை விட அவளுக்கு தானே உரிமை கூட என்றான் முரளி,அவள் முகம் வாடியது,இதை கவனித்த திரு,நீ பேசாமல் இருடா என்று முரளியை அதட்டினான்,மூவரும் சாப்பிட தொடங்கினார்கள் பாலா அவசரமாக சாப்பிட்டு அந்த இடத்தை விட்டு எழுந்துப் போய் விட்டாள், என்னடா இவள் இப்படி இருக்கின்றாள் என்றான் முரளி, அவள் சின்னதில் இருந்தே என்னிடம் பழகியவள், கலை வந்தப் பிறகு,அதை அவளுக்கு ஏற்றுக் கொள்ள கஷ்டமாக இருக்கு என்று நினைக்கிறேன் என்றான் திரு

இல்லை இது சரி வராது,பாலா உன்னை கட்டி இருக்கனும்,அவ்வளவு உரிமை கொண்டாட கலைக்கு தான் இனி உன் மீது முழு உரிமையும், இவள் இடையில் புகுந்து, உன் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விடாமல் என்று கூறிக் கொண்டு இருக்கும் போது பாலா தன் கைத் தொலைப் பேசியை மறந்து வைத்து விட்டுப் போய் இருப்பதை அப்போது தான் இருவரும் கவனித்தார்கள்,அவள் வந்து எடுத்துக் கொண்டு,முரளியிடம் என்னாள் திருவிற்கு எந்தப் பிரச்சினையும் வராது, என்று பட்டென்று கூறி விட்டுப் போய் விட்டாள் இதை சற்றும் எதிர் பார்காகாத திருவிற்கு என்னமோ போல் இருந்தது,என்னடா மச்சான் என்றான் முரளியிடம்..இதுவும் நல்லது தான் மச்சான்,உன் நன்மைக்காக தான் சொல்கின்றேன், அவள் உன்னிடம் இருந்து ஒதுங்குவது நல்லது என்றான்,நான் என்ன அவள் காதலனா, இல்லையே நண்பன் என்றான் திரு சூடாக,இவ்வளவு நாட்கள் நானும் அப்படி தான் நினைத்தேன்,ஆனால் பாலா மனதில் தற்போது அப்படி இல்லை,உன்னை திருமணம் செய்து இருக்கலாம் என்று தற்போது அவள் கவலைப் படுகின்றதுப் போல் எனக்கு இருக்கு என்றான் அவன்,என்னடா நீ இப்படி கல்லை தூக்கிப் போடுற, உனக்கு எப்படி தெரியும் என்றான் திரு,அன்று அவள் மேஜை மீது ஒரு காகிதத்தில் ஆட் வரைந்து உன் பெயரையும் அவள் பெயரையும் எழுதி இருந்தாள்,ஐ மிஸ் யூ என்று எழுதியிருந்தது,நான் பார்த்ததை அவள் கவனிக்கவில்லை, என்னை கண்டதும் அந்த காகிதத்தை மெதுவாக மறைத்து விட்டாள் என்றான் முரளி

திருவிற்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை, என்னடா இது புது குழப்பம் என்றான் முரளியிடம், நீங்கள் இருவரும் எவ்வளவு தான் நண்பர்களாக பழகி இருந்தாலும் அவளுக்கு உன்னை விட்டுக் கொடுக்க முடியவில்லை,தன்னை விட கலை மீது அன்பு செலுத்தி விடுவ, அவளுக்கு தானே இனி முழு உரிமையும் என்று பாலா நினைக்கும் போது உன்னை திருமணம் செய்து இருந்தால்,நீ அவளுக்கு முழுமையாக கிடைத்திருப்ப என்ற ஏக்கம் அவள் மனதில் வர ஆரம்பித்து விட்டது,அது நல்லது இல்லை மச்சான், அந்த கோபம் கலை மீது திரும்பும்,இது எதுவும் அறியாத அந்த பொண்ணு என்னடா பாவம் பன்னியது,உன்னையே நம்பி உனக்கு கழுத்தை நீட்டியவள், பாலா உன்னை தன்னோடு மட்டுமே அன்பாக இருக்க வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டாள்,அது பல வில்லத் தனமான செயல்களை செய்ய வைக்கும்,அது இயற்கை தான் மச்சான்,அன்புக்கு அவ்வளவு சக்தி இருக்கு,பார்த்து நடந்துக் கொள் என்று கூறி விட்டு அவன் சென்று விட்டான்

திரு சற்று நேரம் அமைதியாக உட்கார்ந்து இருந்தான்,நான் பாலாவை எப்போதும் அப்படி நினைத்தது இல்லை,அவளுக்கு மட்டும் ஏன் இப்படி நினைப்பு வந்தது,முரளி பொய் சொல்கின்றான்,அவனுக்கு நான் பாலாவிடம் அன்பாக இருப்பது பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டே எழுந்து உள்ளே போனான்,பாலாவை காணவில்லை,பக்கத்தில் கேட்டான்,அவள் லீவு போட்டு விட்டு போய் இருப்பதாக சொன்னார்கள்,அதுவே அவனுக்கு ஆச்சிரியமாக இருந்தது,அவனிடம் முதல் தடவையாக சொல்லாமல் போய் இருக்காள்,மெதுவாக எழுந்துப் போய் அவள் மேஜையை ஆராய்ந்தான்,எதுவும் இல்லை,குப்பை வாலியில் இரண்டு காகிதம் சுருட்டி போடப் பட்டிருந்தது,எடுத்துப் பார்த்தான், ஐ லவ் யூ,ஐ மிஸ் யூ என்று எழுதி இன்னும் நிறைய எழுதி பேனாவில் கிறுக்கி இருந்தாள்,அது எதுவும் வாசிக்க முடியவில்லை,இது இன்று எழுதியிருக்க வேண்டும்,ஆபிஸ் கூட்டும் பையன் மாலையில் குப்பைகளை கொட்டி விட்டு தான் போவான்

திருவிற்கு முரளி சொன்னது உண்மை என்று தெரிந்தது, சரி அவளிடம் பேசி புரிய வைக்கலாம் என்று நினைத்தைக் கொண்டு இருந்தான், அதற்கு அவள் சந்தர்ப்பம் கொடுக்கவே இல்லை,திருவிடம் எதுவும் சொல்லவில்லை, வேரொரு ஊருக்கு தனது வேலையை மாற்றிக் கொண்டாள்,இந்த ஊரில் இருந்தால் எனக்கு திருமணமே ஆகாது என்று கூறி பெற்றோர்களை சம்மதிக்க வைத்துவிட்டாள், அவர்களுக்கும் அது நியாயமாக பட்டது, அவர்கள் வாழ்ந்த சொந்த வீட்டை வாடகைக்கு கொடுத்து விட்டு, மகள் வேலை செய்ய போகும் ஊரில் வாடகைக்கு வீட்டை தேடிக் கொண்டார்கள், திரு குடும்பத்திற்கே அது கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது,ஒரே வாரத்தில் பல மாற்றங்கள்,கடைசியாக பாலா ஆபிஸ் வந்தப் போதும், திரு அவளிடம் ஆயிரம் கேள்விகள் கேட்க்க நினைத்தான், எதுவும் கேட்ப்பதற்கு சந்தர்ப்பம் அமையவில்லை, இருவரும் மௌனமாகவே இருந்து விட்டார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *