(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இன்றுடன் ஒரு வருஷம் ஆகப்போகிறது. சுந்தரப்பையர் தம்முடைய பாந்தவ்யத்தை ஒட்டி இன்று ஏதேனும் சடங்குகள் செய்வார். ஆனால் என்னைப் பொறுத்த வரையில், என் ஆருயிர் நண்பன் கைலாசத்தின் வெகு விசித்திரமான வாழ்க்கையைப்பற்றி இதை எழுதி வெளி யிடுவதைத் தவிர வேறு எதுவும் எனக்கு இன்பம் அளிக் காது. மனத்தத்துவ ஆராய்ச்சிக்காரர்களுக்கும் டாக்டர் களுக்கும் இது நல்ல அறிவு விருந்தாகும். உங்களுக்கு எப்படியோ? ஆனால் என் கடமையைச் செலுத்துவதில் உங்கள் விருப்பையோ வெறுப்பையோ நான் ஏன் லட்சியம் செய்ய வேண்டும்?
கைலாசமும் நானும் சேர்ந்தாற்போல் பி. ஏ. பட்டம் பெற்றுக் கலாசாலையை விட்டு வெளியேறியவர்கள். அவன் அதிருஷ்டம் வெகு சீக்கிரமாகக் கோயம்புத்தூர்ப் பள்ளிக்கூடத்தில் ஒரு வேலை கிடைத்துவிட்டது. நான் ஊரிலேயே சௌக்கியமாகச் சாப்பிட்டுக்கொண் டிருந்தேன். அவன் ஊரை விட்டுப் போன ஒரு மாதம் வரையில் எனக்குக் கடிதங்கள் எழுதி வந்தான். பிறகு எங்களுக்குள் சுமார் ஆறு மாதம்வரையில் கடிதப் போக்குவரத்தே இல்லை.
ஒரு நாள் காலையில் பொழுது போக்குக்காகத் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். தபால்காரன் ஒரு கவரைக் கொடுத்துவிட்டுப் போனான். உறையின் மேலிருந்த எழுத்து, கைலாசத்தினுடையது. இவ்வளவு மாதங்கள் கழித்து வந்த தபாலைப் பார்த்ததும் எனக்குச் சந்தோஷம். உறையை உடைத்துக் கடிதத்தைப் படித்தேன்.
கோயம்புத்தூர்,
21-3-’33.
ஆருயிர் நண்பா,
இவ்விடம் க்ஷேமம், அவ்விடம் சேமம் என்று மூடத் தபால்கள் எழுதாததற்கு நீ கோபிக்கமாட்டாய் என்று நம்புகிறேன். நமது நட்பு இதைப்போன்ற தொடர்புகளை யெல்லாம் தாண்டி நிற்கிறது என்ற தைரியம். நீ அப்படி நினைக்காவிட்டால் இவ்வளவு நாள் எழுதாதவற்றையெல் லாம் இதோ சேர்த்துவைத்து எழுதியிருக்கிறேன். சமா தானமாயிற்றா? நமக்கிடையில் கிடந்த மௌனத்தை இந்தக் கடிதம் கலைக்கும்; குளத்தில் கல்லைப் போட்டதுபோல் உன் மனத்தில் அலைகளை உண்டாக்கும். அவற்றிலிருந்து என் மனத்தில் எவ்வளவு கோடி மடங்கு கிளர்ச்சி ஏற்பட் டிருக்க வேண்டுமென்று நீயே எளிதில் அறிவாய். நேற்று என் வாழ்க்கையில் ஒரு பெரிய அதிசயம் ஏற்பட்டிருக் கிறது. கண்டறியாத இன்பத்தை நான் அநுபவித்திருக் கிறேன். இன்பத்தைப் பகிர்ந்து கொடுப்பது மனித சுபாவம்; நட்புக்கு நுரையீரல். அதிலும் நம்முடைய நட்போ தெய்விகமானது; ஒரு நுரையீரலுக்கும் மற்றொன்றுக்கும் உள்ளது போன்ற ஜீவ்ய சம்பந்தம். உன்னிடம் சொல்லாமல் எப்படி இருப்பேன் ?
நேற்று இரவு ஏதோ படித்துக்கொண் டிருந்தேன். படிப்பு முடிந்ததும் படுக்கை போட்டேன். எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேனோ அறியேன். திடீரென்று விழித் தெழுந்ததும் கண்ணில் பட்டது என் அருகில் உட்கார்ந் திருந்த ஒரு பெண்ணின் உருவம். எப்படியென்று சொல்லக்கூடவில்லை – இருட்டில்கூட அவளுடைய கண் கள் சீமைச் சாராயம்போல் மயக்கின; என் நினைவை அழித்தன. அவள் வாடாமல்லிகை வர்ணத்தில் ஒரு பட் டுச் சேலை அணிந்திருந்தாள். அவள் இந்த மண்ணுலகத் துப் பெண்ணல்ல. ஒரு கணம் என்னை இமைகொட்டாமல் பார்த்தாள். பிறகு, வா வா என்று என்று ஜாடை காட்டினாள். புண்ணியம் இருந்தால் முடவனுக்கும் கொம்புத்தேன் கிடைக்கும்.
என்னைக் கூப்பிட்டதும் எனக்குத் தலைகால் தெரிய வில்லை. வாசற் கதவைத் திறந்துகொண்டு போய்விட்டேன். தெருக்கள் வழியாக நானும் அவளுமாகக் கைகோத்துக் கொண்டு இன்ப மயக்கத்தில் சென்றோம். எங்கள் மயக்கத் துடன் பூர்ணசந்திரனுடைய தூய போதையும் கலந்திருந் தது. ஆகையால் என்ன பேசினோம் அல்லது பேசினோமா என்ற விஷயம் ஒன்றுமே ஞாபகம் இல்லை.
கடைசியாகச் சேர்ந்த இடம் இந்த ஊர்க் காடு. ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் நின்று, “காதலா! இது கான் நமது விடுதி” என்றாள். அந்த ஆலமரத்தின் விழுது களில் ஒரு பலகை ஊஞ்சல்போல் கட்டியிருந்தது. “அன்பா!உட்கார்” என்று கா துகுளிரச் சொல்லித் தானும் பக்கத்தில் அமர்ந்தாள். அப்போதுதான், “உன் பெய ரைக் கேட்க மறந்துவிட்டேனே!” என்றேன்.
“என் பெயர் மோகினி. உண்மையாய், உட்பொரு ளாய், தத்துவமாய்ப் பார்த்தால், உலகில் உள்ளோரின் அந்தரங்க ஆசைகளைப் பூர்த்தி செய்யும் ஆதர்சம்; உலகின் அவாக்களைத் தூண்டும் அங்குசம் ; தெய்வ வெறி” என்றாள்.
“எனக்கு உபந்நியாசங்கள் வேண்டாம். நீ எனக்கு வெறும் மோகினியாக இருந்தால் போதும்; உனக்கு நூற்றெட்டு நமஸ்காரம்” என்றேன்.
“நல்ல பேச்சுப் பேசுகிறாய்; கைகொடு” என்று கையைக் குலுக்கினாள்.
இப்படியெல்லாம் ஊஞ்சலில் உட்கார்ந்து ஏதேதோ பேசிக்கொண் டிருந்தபோது, பின்பக்கத்தினின்று ஒரு பெருங்காற்றுக் கிளம்பிற்று. ஊஞ்சல் ஆடவே மோகினி யின் தலைமயிர் அவிழ்ந்து இடுப்புவரையில் விழுந்தது. ஒவ்வொரு சமயம், காற்றின் வேகத்தில் சந்திரனை மறைக்கும் கருமேகங்கள்போல் தலைமயிர் அவள் முகத்தை மறைத்தது. அடடா! அந்த அழகே அழகு! காற்று ஓய்ந்ததும் காதற்கனல் வீசிற்று. உன்னிடம் சொல்ல வெட்கம் என்ன? ஒருவரை ஒருவர் தழுவி முத்தமிட்டோம். அவளுடைய தலைமயிர் பாம்புகள்போல் என் முகத்தின் மீதும் தோள்களின் மீதும் விழுந்தன. அவளுடைய கண்களை – சந்திரனில்லா த இரவுகளில் தெரியும் கடலே போன்ற அவ்வாழ்ந்த கண்களைப் பார்த்தேன். அழகைக் கொள்ளையடிக்க முயன்றேன். அழகை மாத்திரம் வாரி எடுக்க முடிந்தால், ஆ! இப்படி இருப்பேனா!
ஊஞ்சல் முடிந்தது; “கிளியே! ஒரு பாட்டு” என்றேன்.
“எப்போதென்று காத்திருக்கிறேனே. இதோ நீ பாடும் தோரணையில் பாடுகிறேன், கேள்” என்றாள். எவ்வளவு ஆணித்தரமாகப் பாட்டு என் மனத்தில் பதிந்திருக்கிறது!
“காதலில் ஒன்றுபட்டுக்
கருத்தில் நாம் ஏகமாகிச்
சாதலை வெல்வோமடீ – கிளியே
சாசுவத மாவோமடீ.
மரங்கள் வெளியிடையே
காற்றின் சதங்கையொலி
பரந்த ஒளிப்பாவையைக்-கிளியே
போற்றிப் புகழுதுபார்!”
இப்படிச் சில அடிகள் பாடுவதற்குள் மோகினி கீதம் இசைப்பதே மறந்து போயிற்று. அக்காட்டில் – மர நிழலில் – வான வெளியில் – மதுர நிலவில் -எங்கும் காதலின் குரல்! காதலின் தீங்குரல்! அந்தத் தீஞ்சுவைக் குரலின் தேன்மடை வாயானான் பூர்ண சந்திரன். அந்த இன்னிசையின் அலை பரவி உலகைப் பரவசமாக்கிற்று. சில செடிகொடிகளின் மொட்டுக்கள் காதலின் புது வியப்பில் பூத்தன. மருதோன்றிப் பூவின் மணமும், பன்னீர்ப்பூவின் லாகிரியும், காட்டுப் புஷ்பங்களின் வாசனையும் காற்றில் மிதந்து வந்தன.
“ஒரு ராகம் பாடு” என்று மெய்ம்மறந்து கெஞ்சினேன்.
“ஒரு பாட்டுப் போதாதோ?” என்று எடுத்தாள் மோகன ராகத்தை. அவள் பாடியது, அந்த ராகத்தில் தூங்கிக் கிடக்கும் அவ்வளவு ரஞ்சனையும் பிரமிக்கும்படி எழுந்தது. நமது படு உலகின் வெறும் பேச்சுக்களுக்கு அப் பால், நமது அற்பர்களின் சிறு விதிகளுக்கும் ‘பூச்சாண்டி’ களுக்கும் அப்பால், வளர்தல், குறைதல், நிறைதல், மூத் தல் முதலிய ஜீவாவஸ்தைகளுக்கும் அப்பால் உள்ள சாவாக் காதலை, தெவிட்டா இன்பத்தை அப்பாட்டில் கண்டேன்; லயமடைந்தேன். ஆகா! என்ன பாக்கியம் எனக்கு! மோகினியும் மோகனமும்!
அந்தச் சோக மதுரத்தில் அப்படியே கண்ணயர்ந்து விட்டேன் போலும்! ஏனெனில் காலையில் விழித்தெழுந்த போது என் பழைய மெத்தையிலேதான் படுத்திருந் தேன். வெகு வியப்பாக இருந்தது. வீட்டை விட்டுப் போனதென்னவோ வாஸ்தவம். மோகினியைப் பார்த்து, மோகன ராகத்தைக் கேட்டு மகிழ்ந்ததென்னவோ வாஸ் தவம். வீட்டுக்குத் திரும்பி வந்தது எப்படி? அதுதான் புரியவில்லை.
இன்று எழுந்திருந்தது முதல், நண்பா, எனக்கு இருப்புக்கொள்ளவில்லை; ஒன்றிலும் ருசியில்லை. அருவி யின் கரையில் போய் உட்கார்ந்து, கூழாங்கற்களைப் பொறுக்கி ஜலத்தில் எறிந்தவண்ணமே பொழுதைப் போக்கினேன். தெளிவான அருவி ஜலத்தை மர நிழல் ஒரு புறத்தில் பாழ்படுத்துவதையும் மற்றொரு புறத்தில் வனப்புறச் செய்வதையும் பார்த்தேன். இயற்கைத் தேவி கூடவா என் மன நிலைமையைச் சித்திரித்துக் காட்ட வேண்டும் ?
சூரியன் உச்சிக்கு ஏறிய பிறகு கடனைத் தொலைக்க வேண்டுமே என்று குளித்தது போலவும் சாப்பிட்டது போலவும் பாவனை செய்தேன்.
மோகினியை ஒரு நிமிஷங்கூட மறக்க முடியவில்லை. இன்றிரவு தரிசனம் கிடைக்குமா என்ற ஏக்கம். இந்தத் தவிப்பை ஒருவாறு சாந்தப்படுத்துவதற்காகவே இதை எழுதத் தொடங்கினேன் என்றுகூடச் சொல்லலாம். இரண்டு மணிக்குத் தொடங்கிய காகிதம் இப்போது ஐந்து மணிக்குத்தான் முடிகிறது. மௌனமாகத் திகைத்து உட்கார்ந்திருந்த நிமிஷங்கள் எவ்வளவு! வானத் ‘தின் நீலக்கூரையைப் பார்த்தவண்ணம் போனபொழுது எத்தனை!
நண்பா! நான் தன்னியன். பரம திருப்தி அடைந்திருக்கிறேன்… இல்லை; பரம அதிருப்தி அடைந்திருக்கிறேன். மோகினி மனம் வைத்தால்தான் பிழைப்பேன்.
நண்பன்,
கைலாசம்.
கடிதத்தைப் படித்ததும் எனக்குச் சந்தேகம் உண்டாகிவிட்டது. ‘கைலாசத்துக்குச் சித்தக் கோளாறா ? அல்லது உண்மையில் ஏதேனும் திவ்வியப் பெண்ணைச் சந்தித்தானா? மோகினி என்றால் நோயல்லவா?’ என்று பலவாறு எண்ணினேன். நண்பன் கடிதத்தில் சொல்லிய படி என் மனம் பிரமாதமாக அலைபட்டது. கடிதத்தைத் திருப்பித் திருப்பிப் படித்தேன். படித்ததுதான் மிச்சம். அன்றைத் தினம் பாக்கிப் பொழுதை எப்படியோ தள்ளினேன்.
மறுநாளும் தபால்காரன் ஒரு கவர் கொடுத்து விட்டுப் போனான். என் நண்பன் எழுத்து! ‘இன்னும் என்ன!’ என்று அவசரமாக உறையைக் ‘கோணா மாணா’ என்று கிழித்தேன்.
கோயம்புத்தூர்,
22-3-’33.
ஆருயிர் நண்பா,
மறுபடியும் மோகினியைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேன்.
நேற்று முன்னிரவிலேயே படுக்கை போட்டுவிட்டேன். இரவு பன்னிரண்டு மணி இருக்கலாமோ என்னவோ? முந்திய இரவின் இன்ப நாடகம் தொடங்கிற்று. வீட்டை விட்டு ஊஞ்சலை அடைந்தோம். “பகல் என்பதே இல்லாமல் செய்யக்கூடிய தந்திரம் உனக்குத் தெரியாதா?” என்று கேட்டேன்.
“சை! இவ்வளவுதானா? பகல் இரவு என்கிறாயே! உன் மையலில் அகப்பட்ட எனக்கு இரண்டுமே தெரிய வில்லை…உங்களுக்கெல்லாம் ஒன்றிலும் தீவிரமென்பது இல்லைபோலும்!” என்று பதில் சொன்னாள்.
அவள் சொன்னதில் ஒரு பேருண்மை பதிந்து கிடக்கிறதல்லவா? தீவிரமென்பது மட்டும் இருந்துவிட்டால் இவ்வுலகை ஒரே இரவில் கவிழ்த்துக் கோணல்களைச் சீர் செய்து விடமாட்டோமா? சாவையும் அடிமைத்தனத்தை யும் கொடுமைகளையும் பகற்கொள்ளைகளையும் வியாதிகளையும் பொசுக்கி நீடூழி இன்புற்ற வாழ்க்கையை ஆணித்தரமாக மண்மீது அமைத்துவிட மாட்டோமா? ஹூம்! உலகை ஒழுங்குபடுத்தும் திட்டம் போகட்டும்! மேலே சொல்லுகிறேன்.
அப்பால் பேச்சு நடுவில், “இங்கிருந்து நான் வீடு சென்றது எப்படி?” என்று கேட்டேன்.
“என் மோகனராகத்தைப் பரவசமாகப் பாடி முடித்த பிறகு உன்னைப் பார்த்தேன். நீ தூங்கிப் போயிருந்தாய். உன்னை எழுப்பிக் கைலாகு கொடுத்து மெதுவாக வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். ஞாபக மில்லையா உனக்கு? காதலின் மயக்கம் போலும்!” என்று விளக்கினாள் மோகினி.
நண்பா, காதலன் காதலி விஷயத்தை உலகோர் இழிவுபடுத்தி யிருக்கும் நிலைமையில் அதைப்பற்றி நான் மூடத்தனமாக விஸ்தரிப்பேன் என்று எதிர்பார்க்காதே. காதல் மூடக்காரியந்தானே என்று பதில் சொல்லாதே. விவரிக்க நான் முயன்றாலும் காதலின் சைதன்யத்தை வார்த்தைகளால் வலைபோட்டுப் பிடிக்க இயலாது. சல்லடையில் எவ்வளவு ஜலம் தேங்கும்? ஆகையால் காடுத்து வைத்த மகாராஜன் என்று என்னைப்பற்றி நினை. இன்றோடு வாழ்நாட்கள் முடிந்தாலும் அதிருப்தி அடைய மாட்டேன். வாழ்க்கை பூர்ணமாகிவிட்டது. கடவுளின் திருவுளம்!
கைலாசம்.
இதைப் படித்ததும், காளிதாசனுடைய நாக்கில் காளிதேவி பீஜாக்ஷரத்தால் எழுதினாள் என்ற கதையின் உண்மை தெரிந்தது. இலக்கியத்தில் அதிகம் படிக்காத என் நண்பன் இவ்வாறெல்லாம் எழுதுவதென்றால் சௌந்தரிய லஹரியில் குளித்துத்தான் இருக்க வேண்டும். அழகுத் தெய்வம் அகத்தினுள் அடி வைத்துச் சென்றால், மனத்திலும் வாக்கிலும் விரலிலும் சிருஷ்டி கற்பனை யும் சௌந்தரியத் தீயும் நர்த்தனம் செய்யாவா? பேனா, உளி, ஓவியச் சலாகை, இசைக் கருவி ஏதானாலும் சரி; அவள் புகழைப்பற்றித்தான் பேசும். சந்தேகமென்ன? அவளுடைய திவ்விய சாயலைக் காவியத்திலும் ஓவியத்தி லும் சிற்பத்திலும் சங்கீதத்திலும் அண்டத்திலும் பிண்டத்திலும் பிரகிருதியிலும் ஈசுவராதிகளிலும் கண்டு நாம் புளகாங்கிதம் அடையவில்லையா? ‘கால் கட்டை விரல் வனப்பையே பார்த்து மயங்குகிறோமே, நேரே சல்லாபம் செய்த கைலாசம் எப்படித்தான் பேசமாட்டான்!’ என்று எண்ணினேன். ஒவ்வொரு நாளும் இதைப் போன்ற கடிதம் படிக்கும் பாக்கியம் ஏற்பட்டால் இலக்கியத்தின் சிகரங்களைக் கண்டது போலத்தான்! ‘இன்னும் தபாலில் எழுதியிருக்கக் கூடாதா?’ என்று ஏங்கினேன்.
எனவே கடிதத்தை எதிர்பார்த்துக்கொண்டு மறுநாள் தபாலாபீசுக்கே போய்விட்டேன். தபால் இல்லை. அடுத்த நாள் போனேன். அன்றும் இல்லை. அதற்கடுத்த நாளும் அப்படியே. விளையாட்டுப்போல் பத்து நாட்கள் ஆயின. மனது உடைந்து போய்விட்டது. நண்பனுக்கு ஒரு தபால் எழுதிப் போட்டேன். அதற்குப் பத்து நாள் கழித்து ஒரு பதில் கிடைத்தது. நான்கே வரிகள்.
கோயம்புத்தூர்,
10-4-’33.
ஆருயிர் நண்பா,
மூன்று வாரமாக இன்ப நாடகம் ஓயவில்லை. இரண் டற்ற சௌந்தரியத்தில் ஒடுக்கம். தேனின் பிரதாபத் தைப் பற்றிச் சொல்லக்கூடுமா? கேட்டுத்தான் என்ன பயன்? ஒருவேளை இதெல்லாம் வெறும் பிதற்றல் என்று அலுப்பும் சலிப்பும் படுவாயோ என்று தான் சும்மா இருந்தேன். மன்னிக்கவேண்டும்.
கைலாசம்.
இந்தக் கடிதத்தின் தொனி எனக்குப் பிடிக்கவில்லை. என்னை அகாரணமாகக் குற்றம் சாட்டியதுபோல் கைலா சம் எழுதியதால் அவன்மீது கொஞ்சம் மனத்தாங்கல் ஏற்பட்டது.
அதற்குப் பிறகு பத்து நாள் வரையில் யாதொரு தகவலும் இல்லை. அப்பால் ஒரு கடிதம் வந்தது. ஆனால் கைலாசத்தின் எழுத்தல்ல; நண்பனுடைய தாய்மாமன் சுந்தரப்பையர் எழுதியிருந்தார். அதில் என்னுடைய நண்பனுக்கு ஒரு மாதமாகச் சித்தஸ்வாதீனம் இல்லை என்றும், ஒரு வாரமாகப் பிரஞ்ஞையற்றுப் படுத்த படுக்கையாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
என் நண்பன் மீதிருந்த சொற்பக் கோபமும் பறந்து விட்டது. தாங்கொணாத் துக்கம் பிறந்தது. மறுநாள் கோயம்புத்தூருக்குக் கிளம்பிவிட்டேன்.
நான் சுந்தரப்பையர் வீட்டுக்குப் போனபோது முற்றத்தின் ஓரத்தில் அவர் கவலையுடன் உட்கார்ந்திருந் தார்.”வா அப்பா” என்று வரவேற்றார். அதற்குப் பிறகு பத்து நிமிஷம் வரையில் நாங்கள் இருவரும் பேசவில்லை. அவ்வளவு சங்கடம் நெஞ்சில் குமுறிக்கொண் டிருந்தது. “பிறகு அவன் எங்கே?” என்றேன். காம்ரா உள்ளைச் சுட்டிக் காட்டினார். எழுந்திருந்து போய்ப் பார்த்தேன்.
ஒரு நாடாக் கட்டிலின்மீது அவன் படுத்திருந்தான். பெரிய கற்பாறைபோலத் தொங்கும் நெற்றியும், எழில் கொண்ட கண்களை எடுத்துக் காட்டும் மூக்கும், சுருட்டை சுருட்டையாகக் கறுப்புத் திராக்ஷை போன்ற தலைமயிரும், சதைப்பற்றுக் கரைந்த உடலும் நெருப்பில் பாதிக்குமேல் எரிந்து போன வீணை ஒன்றை ஞாபகம் மூட்டின. கவி ஒளியேனும் அறிவின் ஒளியேனும் வீசக்கூடும் என்று கருதப்படாத முகத்தில் அப்போது கவியின் களை பூர்ண மாகத் தேங்கியிருந்தது.கண்கள் மூடியிருந்தன.
சற்று நேரம் மௌனமாக உட்கார்ந்தேன். சுந்தரப் பையரும் சந்தடி செய்யாமல் என் அருகில் வந்து உட்கார்ந்தார்.
திடீரென்று கைலாசம் கண் விழித்தான். தலையணை மீதிருந்த தலையை நிமிர்த்திச் சுற்று முற்றும் பார்த்தான். “மோகினி! மோகினி!” என்று இருமுறை கூவினான். ஆ! தங்கக் கம்பிபோல் எப்படி இழைந்தது அவன் குரல்! காம்ரா உள்ளின் எதிரொலி, “மோகினி” என்று பதில் அளித்தது. மறுபடியும் “மோகினி!” என்றான்.
மாமனுக்குத் தாங்கவில்லை. “மோகினியாவதடா குழந்தாய்! நானல்லவா ?… இதோ உன் உயிர்த் தோழன் சந்துரு. தெரியவில்லையா?” என்றார்.
பதில் இல்லை. கைலாசம் கீரைத்தண்டுபோல் தலையைத் துவளப்போட்டான். கண்களை மறுபடியும் மூடிக்கொண் டான். எங்களுக்கெல்லாம் பிரஞ்ஞையற்று இருந்தவன் பேசவாவது பேசினானே என்ற தேறுதல் ஒருபுறம்; பொருத்தமில்லாமல் அரற்றினானே என்ற திகில் ஒரு புறம். பிரமை பிடித்தவர்போல் பின்னும் சில நிமி ஷங்கள் உட்கார்ந்திருந்தோம். அவன் தெளியும் வழியாக இல்லை.
அறையை விட்டு வெளியே வந்து உட்கார்ந்தோம். கைலாசம் எனக்கு எழுதிய கடிதங்களெல்லாம் வரி தவறா மல் நினைவுக்கு வந்தன. ‘இவனுடைய தற்போதைய நிலைமைக்குக் கடிதங்களில் கண்ட விஷயங்கள் காரணமா சூசனையா?’ என்ற கேள்வி உள்ளத்தில் பிறந்தது. ஒரு வேளை கடிதங்களில் காணாத விஷயம் ஏதேனும் இருக் குமோ என்று நினைத்து, மாமனை விசாரித்தேன். அவர் சொன்னார்.
சென்ற ஒரு மாத காலமாக இவனுக்கு ஊண், உறக்கத்தில் அசிரத்தை ஏற்பட்டிருப்பதைக் கவனித்தேன். கலங்கும் உள்ளத்தை இவன் முகத்தில் கண்டேன்.
என் தமக்கை இறந்துபோன போதும், அவளுக்குப் பிறகு என் அத்திம்பேர் இறந்துபோன போதும் கைலாசத்தைக் காப்பாற்றி வருவேன் என்று கையடித்துச் சத்தியம் செய்துகொடுத்தவன் நானல்லவா? அந்த வாக்குத் தத்தத்தைத் தெய்வ சாட்சியாக நிறைவேற்றி வருகையில் இவனுக்கு என்ன குறை இருக்கக்கூடும் என்று நான் யோசித்து யோசித்துப் பார்த்தேன்; ஒன்றும் விளங்க வில்லை.
இப்படி இருக்கும்போது ஒரு நாள் இரவில் தெருப் புறத்தில் யாரோ சண்டை போட்டார்கள், போய்ப் பார்த்ததில் விசேஷம் ஒன்றும் இல்லை. ஐந்தாறு வேலை யாட்கள் போதை மயக்கத்தில் கொஞ்சம் உச்சஸ்தாயியில் பேசிக்கொண்டிருந்தனர். சரிதானென்று திரும்பிக் கதவைத் தாழிட்டுக்கொண்டு உள்ளே வந்தபோது இவனைப் படுக்கையில் காணவில்லை. ஒருவேளை கோவலன் நாடகம் பார்க்கப் போயிருக்கக் கூடுமென நினைத்தேன். மறுநாள் இரவில் – பன்னிரண்டு மணி இருக்கலாம் கொல்லையில் பசுமாடு கத்தக் காரணம் என்னவென்று போய்ப் பார்த்துவிட்டுத் திரும்பிக் கூடத்துக்கு வந்தபோது இவனைப் படுக்கையில் காணவில்லை. ‘இது என்னடா! ஒரு நாள் ஆயிற்று; இரண்டு நாள் ஆயிற்று. ஒருவருட னும் சொல்லாமல் போய்விடுகிறானே’ என்று வருத்த மடைந்தேன். ‘பிரம்மசாரி நீதி தவறிவிட்டானோ?’ என்று கூடச் சம்சயித்தேன். இருந்தாலும், அவனை நேருக்கு நேர் கேட்க என் மனம் இடந்தரவில்லை. ஒற்றன்போல் கண்டறிவோமென்று திடம் கொண்டேன்.
பத்து நாளைக்கு முந்தி வழக்கம்போல் தூங்கியவன் திடீரென்று எழுந்து யாருடனோ பேசிக்கொண்டே போவதுபோல் வெளியே போய்விட்டான். அவனைத் தடுக்க என் நா எழவில்லை. இது என்ன பைத்தியக்காரன் செயலாக இருக்கிறதே என்று று நினைத்துக்கொண்டே தயங்கித் தயங்கி விடாமல் பின் தொடர்ந்தேன்.
கடைசியாகக் கைலாசம் நமது ஊர்க் காட்டை அடைந்து ஓர் ஆலமரத்தின் கீழ் ஊஞ்சலில் அமர்ந்தான். மாந்தோப்பில் ஆண் குயிலும் பெண் குயிலும் இசைந்து கத்தும் இன்ப ஏக்கத்தின் தொனியுடன் சரஸப் பேச்சுக்கள் பேசிக்கொண்டிருந்தான். ஆனால், பக்கத்தில் பெண் உருவம் யாதொன்றும் காணவில்லை. எனக்கு எப்படி இருக்கும்? யோசித்துப்பார்! நான் பார்ப்பது கனவா அல்லது கைலாசம் பித்தனா என்ற ஐயம் பிறந்தது. அடுத்தாற் போல் மனத்தில் பயம் எழுந்தது. நாக்குழற, ‘கைலாசம்’ என்று இருமுறை கூவினேன். அவன் திடுக்கிட்டு ஊஞ்சலி னின்றும் தொப்பென்று கீழே விழுந்து மூர்ச்சையானான். ஓடிப்போய் அருவி ஜலத்தைக் கொணர்ந்து அவன் முகத்தில் அடித்தேன். கைலாசம் கண் திறந்தான். ஆள் குறிப்பு மட்டும் உணரவில்லை. பிறகு மெதுவாகக் கையைப் பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தேன். அன்றிரவு கைலாசம் என்னுடன் மற்றொரு நிழல்போல் நடந்துவந்த காட்சி என் உயிருள்ள வரையில் மறக்காது. ஆ! அவன் படுக்கை யண்டை எவ்வளவு திகிலுடன் அன்றிரவு விழித்திருந்தேன்!
மறுநாள் காலை டாக்டரைக் கூப்பிட்டனுப்பிக் கைலாசத்தை அவர் வசம் ஒப்பித்தேன். டாக்டருக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏதோ மனவியாதிபோல் இருக்கிறது என்றார்.
அவனை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்ததுமுதல் இப்போது ஏதோ மோகினி என்றானே, இதைத் தவிர, இது வரையில் ஒரு பேச்சுக்கூடப் பேசவில்லை. என்ன செய்யலாம், சந்துரு?
இந்த வரலாற்றைக் கேட்ட என் பிராணன் துடித்தது. பிரயோசனம்?
அன்று முழுவதும், கைக்கு எட்டாத தூரத்தில் வைத்திருக்கும் பழத்துக்கு முன்பு, குழந்தைகள் நின்று கொண்டு பார்த்துப் பார்த்து ஏங்குவதுபோல் நான் கைலாசத்தின் படுக்கையண்டை உட்கார்ந்திருந்தேன். திரிகரண சுத்தியாக, ‘ஈசா! கைலாசத்துக்குப் பிரக்ஞையைக் கொடு’ என்று பிரார்த்தித்து மன்றாடினேன்.
மறுநாள் கடவுள் என் பிரார்த்தனைக்கு இரங்கினார். நான் கேட்டதைக் கொடுத்தார். ஆ! அவர் எவ்வளவு கணக்காளி! சுக்குச் செட்டி! மோசக்காரர் என்று இப்போது நினைக்கிறேன்.
ஆனால், அப்போது என்ன தெரியும்? கைலாசத்துக் குப் பிரக்ஞை வந்ததைப்பற்றி நாங்கள் கடவுளை வாயார வாழ்த்தினோம்.
நண்பன் என்னைப் பார்த்தான். வீட்டு க்ஷேமலாபங் களைப்பற்றி விசாரித்தான். அவனுடைய பேச்சுக் கணீரென்று இயற்கையாக இருந்தது. முகத்தில் நோயின் குறியைக் காணவில்லை. மறுபடியும் கடவுளின் கருணையை நினைத்துப் போற்றினேன்.
அன்றைத்தினம் சாயங்காலம் டாக்டர் வந்தார். கைலாசத்தைப் பரிசோதித்தார்; ‘நாடிகளெல்லாம் இன்று கணீரென்று பேசுகின்றன.எனக்கு நிரம்பச் சந்தோஷம். நீங்கள் செய்த பூஜாபலன்” என்று ஆறுதலளிக்கும் பேச் சைக் காதில் போட்டார். அப்பாடா! என்றேன். சுந்தரப் பையரின் கண்களில் நீர் அரும்பிற்று.
டாக்டர் வந்துவிட்டுப்போன அடியோடு கைலாசம் என்னை அழைத்துக் கட்டிலை வெளியே முற்றத்தின் ஓரத் தில் எடுத்துப் போடச் சொன்னான். கட்டிலை எடுத்துப் போட்டதும், மெதுவாக நடந்து வந்து அதில் சாய்ந்து சிரமபரிகாரம் செய்துகொண்டான்.
அன்று பௌர்ணமி. வானம் முழுவதும் ஓர் எல்லை யற்ற பால்குளமாக அமைந்திருந்தது. எட்டாக் கையில் தெரியும் மலைத்தொடர்கள் அந்தக் குளத்தின் கரைபோல் எழுந்தன. குளத்தில் மிதந்தது ஒரு பொன் தாமரை. ஏக்ஷத் திரங்களெல்லாம் புளிய இலைபோல் ஒளியின்றி இருந்தன. இளம் தென்றல் ஒன்று தன் பூங்கைகளால் மரங்களையும் மலர்களையும் மலைகளையும் குளங்களையும் ஒளியையும் வெளியையும் தழுவிச் சென்றது; முற்றத்தின் ஓரத்தில் படுத்திருந்த கைலாசத்தின் முகத்தையும் தடவிச் சென்றது.
நானும் சுந்தரப்பையரும் சந்தி செய்துகொண் டிருந் தோம். இருந்தாற்போல் இருந்து அமாவாசை இருட்டில் ‘அவுட்’ வாணம் விட்டதுபோல் கைலாசத்தின் குரல், “சாந்தமெங்கும் ததும்பி நிற்க ” என்றது. நாங்கள் திடுக் கிட்டு அப்படியே டம்ளரைக் கீழே வைத்தோம். அவனைப் பார்த்தோம். அவனுடைய கண்கள் குத்தலிட்டிருந்தன. ஏதோ ஓர் உலகத்தில் லயித்த தோற்றம்! நாங்கள் கவனித் ததை அவன் சட்டை செய்யவில்லை. அவன் பாட்டுக்குப் பாடினான்:
“சாந்தமெங்கும் ததும்பி நிற்க
என்றன் காதலியே!- இம்
மனக்கடலில் புயலெழும்பிக்
கப்ப லுடைவதேன்?
தென்றல் வந்து மெல்லவீச
என்றன் காதலியே!- இத்
தென்னங்கீற்று வாள்களைப் போல்
உணர்வைத் துணிப்பதேன்?
உன்றன்முக பிம்பம்வந்து
என்முன் நிலவிட இம்
மெய்ம்மறந்த மனமெழுந்து
ஏங்கி மாய்வதேன்?
காக்கையொன்று நாளென் றெண்ணி
என்றன் காதலியே!- இவ்
வெள்ளை இரவில் வாயைத்திறந்து
அன்பை அழைப்பதேன்?”
திடீரென்று பாட்டு நின்றது. கைலாசத்தின் கண் களில் உலகு தோன்றிய நாளாய் உள்ள ஏக்கங்களும் பிரி வாற்றாமையும் சோகங்களும் ஒருங்கே சேர்ந்து பொங்கி வழிந்தன. சுந்தரப்பையரின் கண்களில் நீர் வடிந்தது. பாவம்! ஜன்னி பிறந்த பிறகு அடைக்கலம் கடவுள் தானே!
என் மனத்தில் விசித்திரமான முரண்பட்ட உணர்ச்சி கள்! யாப்பு லக்ஷணமில்லாத காதற்பாட்டில் இவ்வளவு நுண்ணிய காவ்ய பாவம் பொருந்தி இருக்கிறதே என்ற ஆச்சரியம் ஓர்பால்; தாங்கொணாத் துயரம் ஓர்பால்; எவ்வளவு எளிய மெட்டு என்ற மகிழ்ச்சி வேறு ஓர்பால்.
நேரம் சென்றது. அப்படியே பிரமையின் உருவச் சிலைபோல் உட்கார்ந்திருந்தோம்.
எங்கிருந்தோ வந்து காற்றுப் பிசாசுகள் சண்ட வலி யுடன் உலகைத் தாக்கின. கருங்குரங்குக் கூட்டம்போல் நீருண்ட மேகங்கள் வானை வந்து மூடின. பூர்ணசந்திரன் ருந்த இடம் தெரியவில்லை.குடிகாரன்போல் இரண் டொரு இடி தட்டுத் தடுமாறிச் சென்றது. மின்னல் சவுக்கடி அடித்தது.
மழை வருமோ என்று பயந்து முற்றத்தின் ஓரத்தி லிருந்த கட்டிலை அப்படியே காம்ரா உள்ளில் கொண்டு போய்ச் சேர்த்தோம். ஆச்சரியப்படும்படி கைலாசம் கட்டிலை விட்டு வெளியே முற்றத்தின் ஓரத்தில் வந்து நின்றான். அவனுக்கு உள்ளே இருக்க இஷ்டமில்லை என்பது வெளிப்படை. எங்களுக்குப் பிடிவாதம் செய்ய மனம் வரவில்லை. மறுபடியும் கட்டிலை வெளியே கொணர்ந்து சுவரோரத்தில் போட்டோம். நண்பன் ‘சிவனே’ என்று அதில் படுத்துக்கொண்டான்.
எங்களுக்குத் திகில். இரவு நல்லபடியாகக் கழிய வேண்டுமே என்ற பிரார்த்தனை. நாங்கள் கட்டிலண்டை விழித்திருந்தோம்.
ஜோவென்று மழை பிடித்துக்கொண்டது. மறுநாள் அதிகாலை வரையில் பொழிந்தது. இரவு முழுவதும் கைலா சம் மழையைப் பார்த்துப் புன்னகை புரிந்தான்; மின்னலைப் பார்த்துச் சிரித்தான்.
நான்காம் ஜாமம். சுந்தரப்பையர் தரையில் தூங்கிக் கொண்டிருந்தார். நான் விழித்துக்கொண்டு தான் இருந்தேன். அவ்வளவு உஷாராயிருந்துங்கூடத் தூக்கம் முண்டிற்று ; சவத்தின் தலைபோல் என் தலை ஒரு பக்கமாகச் சாய ஆரம்பித்தது. முகத்தை ஜலத்தால் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். என்ன ஆயிற்றோ தெரியவில்லை! மறுபடி திடுக்கிட்டுக் கண் விழித்தபோது மழையின் ஓசை கேட்கவில்லை. மேகங்கள் கலைந்து கொண் டிருந்தன. நாடாக் கட்டில் காலியாக இருந்தது. என் மனம் எப்படி இருந்திருக்கும்? மாமனை எழுப்பாமல் கைலா சத்தை வீட்டில் தேடினேன். பிறகு அவரை எழுப்பி இருவருமாகத் தேடினோம். பலனில்லை. பளிச்சென்று என் மனத்தில் ஓர் எண்ணம் பிறந்தது. அவரிடம் சொன்னேன்.
உடனே இருவருமாகக் கிளம்பி ஆலமரத்தண்டை போய்ச் சேர்ந்தோம். ஈரத் தரைமீது கைலாசம் படுத்துக் கிடந்தான். கண்கள் மூடி இருந்தன. இரண்டு கையிலும் இரண்டு தாமரை. எங்கே சம்பாதித்தானோ? வாயும் ஒரு தாமரை. முகத்தில் கனிந்த சாந்தம்.
எங்கள் நெஞ்சம் அடைத்தது.
கிழக்கில் பொழுது கவலையின்றி விடிந்துகொண் டிருந்தது. ஆனால் எங்களுக்கு மட்டும் விடியவில்லை!
இன்றுடன் சரியாக ஒரு வருஷம் ஆகிறது.
– மோகினி (சிறு கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1951, கலைமகள் காரியாலயம், சென்னை.