மைமூன் ஆச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 4, 2021
பார்வையிட்டோர்: 3,873 
 
 

(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மைமுன் ஆச்சியை அறியாதவர்கள் யாரும் எங்கள் கிராமத்தில், இருக்க முடியாது. எனது உம்மம்மா அத்தனை பிரசித்தம். இந்தப் பிரபலத்தின் ஆதார சுருதியே அவளது மனித நேயம்தான் என்பதை என்னால் அறுதியிட்டுக் கூறமுடியும். யாருக்கு சுகக்கேடு, யார் வீட்டில் ஜனாஸா, எங்கெல்லாம் கலியாண வீடு, அத்தனை இடங்களுக்கும் திடீர் பிரசன்னம் தந்து ஒரு விசைக் கருவியாக, சுழன்று இயங்குவாள். நோய் கண்டவருக்கு மூலிகை வைத்தியம் பார்ப்பதில் மிகக் கெட்டிக்காரி. நோயினால் உழன்று சங்கடப்பட்ட பலர், இவரது சிகிச்சையினால் தேறியிருக்கிறார்கள்.

எங்களூர் எம்.பி.பி.எஸ். டாக்டரை விட, இவளது கைராசியின் மகத்துவம் குறித்து ஊர் விதந்து பேசுவதுண்டு. அத்துறையில் அதீத நுட்பம் நிறைந்தவள். உம்மம்மாவின் வாப்பா, அந்நாட்களில் கீர்த்தி பெற்ற நாட்டு வைத்தியராகத் திகழ்ந்தாராம். அந்தப் பரம்பரை ஞானம் இவளையும் ஒட்டிக்கொண்டிருக்கலாம். இவளைப் பொறுத்த மட்டில் எல்லா சேவைகளும் இலவசம்தான்.

இந்தக் கைங்கரியங்களுக்காக யாரிடமும் வெகுமதி பெறுவதைத் தவிர்ப்பாள். தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதில், மிக உறுதியானவள். இதனால், இவள் பால் எல்லோருக்கும் நேசங் கலந்த ஒரு ஈடுபாடு. இத்தனைக்கும் வாழ்வில் பெரிய வசதிகள் எதனையும் பெற்றவள் இல்லை.

பிறர் மீது கருணை கொண்டவர்கள், தம் சுய முன்னேற்றங் களை கோட்டைவிட்டவர்கள் தான். மைமூன் ஆச்சியும் இந்த ரகத்தைச் சேர்ந்தவள். எவருக்காவது துன்பமென்றால், இவளது கால்கள் ஒரு இடத்தில் தரித்து நிற்காது. உம்மம்மாவுக்கு இப்போது ஒரு எழுபது வயதிருக்கலாம்.

மெல்லிய தேகம், மேனியெங்கும் தசைச் சுருக்கங்கள் தென்பட்ட போதிலும் பார்வை, கேள்வி ஞானங்களில் பிசகு இல்லை. கடினமான வேலைகளைக் கூட திறமையாகச் செய்யும் உடல் ஆரோக்கியமுண்டு. உம்மம்மாவின் கணவர் சுல்தான் அப்பா, கண்ணை மூடி பத்தாண்டுகள், உருண்டு போய்விட்டன. அவர் ஒரு அரச ஊழியராகப் பல காலம் சேவை புரிந்து, மரணித்த பின் – மாதந்தோறும் பென்சன் பணம், உம்மம்மாவின் கைக்கு வந்து சேரும்.

வியாபாரிகளை இணைத்துக் கொண்டு பெரிய மாதச் சீட்டு போட்டுவருவதால், இவளது கையில் எப்போதும் பணம் புரளும். பண விடயத்தில் கடைப்பிடிக்கும் அதீத நேர்மை காரணமாக, சீட்டு விவகாரம் நீண்ட காலங்களாக நிலைத்து வருகிறது.

ரம்ழான் மாத நோன்புக் காலம் துவங்கிவிட்டால், இவளது காட்டில் பிரமாதமாக மழை பெய்யும். உறவினர், ஊரார், அறிந்தவரென்று எல்லா வள்ளல் மனங்களும் உம்மம்மாவுக்கு வாரிக் கொடுப்பதில் அதீத திருப்தி கொள்ளும். எவ்வளவுதான் மறுத்த போதும், அவர்கள் முந்திக் கொண்டு, ஸக்காத் வழங்குவார்கள். ரம்ழான் மாதம் முடிய, இவளது திறைசேரி ஐந்து இலக்கங்களால் நிறைந்து வழியும். ஊதாரிச் செலவுகள் என்று எதனையும் செய்துவிடமாட்டாள்.

அவலப்படுவோருக்கு மனமிரங்கி உதவிகள் புரிவாள். அதன் மூலம் ஆன்ம திருப்தியடைவாள். தன் கணவர் சுல்தான் அப்பாவின் மீது, அதிகமான வாஞ்சை கொண்டவள். அவரது நல்லியல்புகளை அடிக்கடி நினைவு கூர்ந்து. ஆற்றாமைப் படுவாள்.

“அந்த நல்ல மனிசனுக்கு அல்லாஹ் நாயன், சொர்க்கத்தைக் கொடுக்கோணும்” என்று சேலைத் தலைப்பை இழுத்து தலையிலிட்டவாறு, உருகிப் பிரார்த்திப்பாள். எழுபது வயதாகியும், அவளிடம் முனைப்பு பெற்றிருந்த, அசாத்திய துணிச்சல் கண்டு நான் அதிசயித்ததுண்டு. எங்கள் தெருவிலேயே காலைக் கருக்கல் ஒளிபாய்ச்சு முன்னே, முதலில் எழுந்து முற்றத்தைப் பெருக்கிவிட்டு, வீட்டு வேலைகளைச் செய்பவள் மைமுன் ஆச்சிதான். மற்றவர்களின் கண்விழிப்புக்கு சூரிய ஒளி உறைக்க வேண்டும். இவள் நோய் நொடியென்று, ஒரு நாளில் கூட சுருண்டு படுத்ததை நான் பார்த்ததில்லை. ஐவேளைத் தொழுகையை, ஒரு போதும் தவறவிட்டதில்லை.

பக்கத்து வீட்டு பரீதா தாத்தா ஒரு நாள் கேட்டாள், “ஆச்சி ஒங்களுக்கு எத்தனையேன் வயசு?”

“எனக்கிப்ப ஒரு அறுவது வயதெண்டாலும் இரிக்கும் புள்ள.”

“அதெப்படி உம்மம்மா! இப்ப எங்கட உம்மாவுக்கே ஐம்பது பிந்தி. அப்ப நீங்க ஒங்கட மகள், பத்து வயசிலேயா பெத்தீங்க?”

எனது சிலேடையை ரசித்து பரீதா தாத்தா உடல் குலுங்கச் சிரித்தாள். உடனே உம்மம்மாவுக்கு சட்டென கோபம் பொத்துக் கொண்டு வரும். “அடே! போடா இங்கயீந்து. பெரிய மனிசர் பேசச் செல்ல, வருவான் அரப்படிக்க.”

உம்மம்மாவை அடிக்கடி சீண்டிப் பார்ப்பது, எனது வழக்கமான பொழுதுபோக்கு. உம்மம்மாவுக்கு மூக்கு நுனியில் கோபம் பொத்துக் கொண்டு வரும். காரசாரமாக எல்லோரையும் உரத்த தொனியில் திட்டித் தீர்ப்பாள். சில நிமிடங்களில் அக்னி தணிந்து இயல்பு நிலைக்கு வந்துவிடும். கோழி மிதிச்சு குஞ்சு சாகாது, என்று பழமொழி கூறி, சமரசம் செய்வாள். யாரும் தன் கருத்துக்கு எதிர்மறையாக பேசக்கூடாது என்பதில் விட்டுக் கொடுக்காத பிடிவாதம். தன் பக்கமே நியாயமிருப்பதான சூளுரைப்பு (மூப்பில் திளைத்துப் போன, எல்லா முதியோரினதும் யதார்த்த நிலையும் இதுதான்).

சிறு வயது தொட்டு என் மீது அபார வாஞ்சை காட்டி வருகிறாள். இவள் கூறும் பழங்காலக் கதைகளை, ரசித்து அசை போடுவதில் எனக்கு அலாதிப் பிரியம். மேலுதட்டில் ரோமம் கறுக்கத் துவங்கிய இந்த யௌவனப் பருவத்திலும், நான் அவளுடைய கணிப்பில், சிறுபிள்ளைதான். மடியிலிட்டு என் தலையை வாஞ்சையோடு தடவிக் கொடுப்பதில் தான் எத்தனை சுகம். உம்மம்மாவின் பாசவிகசிப்பில் நான் கரைந்து போவேன்.

இவள் பெற்ற வாரிசுகள் ஆறு. இரு ஆண்கள், நான்கு பெண்கள், பேரப்பிள்ளைகள் ஒரு டசின் தேறும். எல்லோரிடத்திலும் பாசமும், கருணையும், இருந்த போதும் என் உம்மாவின் மீது தான், மேலதிகப் பற்று. மூத்த பிள்ளை , என்பதினாலோ தெரியவில்லை. தாய்க்கும் மகளுக்குமிடையில், அபூர்வமாக மனமுறிவுகள் ஏற்படுவதுண்டு. பலத்த வாக்குத் தர்க்கங்கள் கிளர்ந்தெழும். எண்ணெயில் இட்ட கடுகாகப் படபடத்து, உம்மம்மா சில வேளைகளில் வெளிநடப்பு செய்வதுண்டு.

இந்த இராஜரீக உறவின் முறிவை, இவளால் இரண்டு நாட்களுக்குக் கூட – தாக்குப் பிடிக்க இயலாது போய்விடும். மூன்றாம் நாள் காலையில் மீண்டும் வீட்டை நோக்கிய பிரவேசம் நிகழும். எதுவும் நடக்காததைப் போன்ற தணிந்த சுபாவம் தலை காட்டும். பிறகு எல்லோர் மீதும் அன்பினை ஊற்றுச் சுரப்பாய் வர்ஷிப்பாள். உம்மம்மாவின் அடிமனம் மென்மை கொண்டது. அதைப் புரிந்து கொள்ள இயலாதவருக்கு, அவள் ஒரு கேள்விக் குறியே!

எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. நான் மனம் கலங்கிப் போன சம்பவமது.

ஓ.எல் பரீட்சை எழுதக் கிளம்புகிறேன். அன்று என் பரீட்சை செலவிற்கு கொடுத்தனுப்ப ஒருவரிடமும் காசு இருக்கவில்லை . நேரம் ஆக, ஆக ஆற்றாமையால் என் விழிகள் கசிகின்றன. உம்மா பக்கத்து வீடுகளில், காசு புரட்ட எடுத்த முயற்சிகள் சாத்தியமற்றுப் போயின. இறுதியில் உம்மம்மாதான் பணம் தந்து பரீட்சைக்கு அனுப்பி வைத்தாள்.

“ஏண்ட பேரனுக்கு நான் ஒதவி செய்யாமல் போவேனா? இவளுகள், என்ன செய்யப் போறெண்டு பாக்கத்தான் பேசாம ஈந்த” என்று என தலையை வருடி தேறுதல் சொன்னாள். அவளின் ஆசியினால் பரீட்சையில் சிறப்பாக சித்தியெய்தினேன். எங்கள் குடும்பம் பெரியது.

அடிக்கடி வறுமை கோரமாய் தாக்கும். அது போன்ற சந்தர்ப்பங்களில், எல்லோருடைய கஜானாக்களும் காலியா விருக்கும். சமயலறையும், வீடும் வெறிச்சோடிப் போயிருக்கும். இத்தருணங்களில் உம்மம்மாதான் கைகொடுத்து உதவுவாள். கடைக்குப் போய் அரிசி, சீனி, காய்கறியென்று வாங்கிக் கொடுப்பாள்.

உம்மம்மா மகாத்மியம் பற்றி நிறையவே கூறிவிட்டேன். அதி முக்கிய விடயம் பற்றி, இதுவரை கூறாமல் விட்டுவிட்டேனே! எங்கள் இல்லத்தில் ஒரு பழங்காலத் தேக்கமரப் பெட்டி ஒன்று உண்டு. அதன் தனி ஆளுமை மைமுன் ஆச்சியினுடையதுதான். எத்தருணத்திலும், யாரும் அதைத் திறக்கவோ, உரிமை கோரவோ அனுமதிக்கமாட்டாள். சாவிக்கொத்து பத்திரமாக அவள் இடுப்பில் இருக்கும்.

அந்தக் கருங்காலிப் பெட்டகம் அவளது தீவிர கண்காணிப்பிலேயே இருந்தது. எல்லோரும் உறங்கிய பின், பாதி ராத்திரியில் எழுந்து, திறப்பதும், மூடுவதுமாக ஓசை, சன்னமாக எங்கள் காதுகளில் விழும். இச்செயல்களினால் உம்மம்மாவின் கருங்காலிப் பெட்டி பற்றிய சந்தேகமொன்று, எல்லோருக்கும் இருந்தது. அது பற்றிய தீவிர விமர்சனங்கள் கிழவியின் காதுகளில் விழாவண்ணம் ஒலிக்கும்.

அன்று அவளது பெட்டிச் சாவி காணாமல் போய்விட்டது. பத்திரகாளியாக உருமாறி, வீட்டை இரண்டாக்கி ரகளை பண்ணி, வீட்டாரைத் திட்டித் தீர்த்தாள். திறப்பை யாரும் கண்டெடுத்து மறைத்து வைத்துள்ளனரோ என்ற சந்தேகமும் வலுத்திருந்தது.

“ஏண்ட சாவிக் கொத்த, களவெடுத்தவங்களுக்கு நான் நல்ல வேலை செய்வேன்” என்று கோபாவேசமாக சூளுரைத்தாள். எதையோ பெறுமதியான பொருளொன்றை இழந்துவிட்டதைப் போன்று, முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டிருந்தாள்.

இப்படித்தான் ஒரு நாள், சாவிக் கொத்தை தொலைத்து விட்டு, ரகளை பண்ணிக்கொண்டு இருக்கும் போது, கிணற்றடியில் நான் எதேச்சையாக கண்டெடுத்து வந்து கையில் கொடுத்தேன். மகிழ்ச்சி தாளவில்லை அவளுக்கு. இச்சம்பவங்களினால், பெட்டகம் குறித்த சந்தேகமும், மர்மமும் எங்களுக்குள் வலுத்துக் கொண்டே வந்தது. ஊகங்களும் பரவலாய் எழுந்தன. அதனுள், நிறைய காசு சேர்த்து வைத்திருக்கலாம், அடமானம் பிடித்த காணி உறுதிகள் கூட இருக்கலாம். நிறையத் தங்க நகைகள் சேர்த்து வைத்திருக்கலாம். இல்லையென்றால் புதையல் காப்பதைப் போன்று, கிழவி, இப்படியேன் அலட்டிக்கொள்ள வேண்டும்?

இவ்வாறாக கிழவியின் பெட்டகம் பற்றிய அலசல்கள் உள்ளுக்குள் தொடர்கின்றன. ஒரு நாளைக்கு பெட்டியைத் திறந்து பார்க்க வேண்டுமென்ற ஆவல் எல்லோருக்கும் இருந்தது. சரிதான், பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதே, பிரச்சினை.

வாப்பா சொன்னார். “சொத்துப் பத்து இருந்தாக்கா, அவருக்குப் பொறகு நாங்கதானே அனுபவிக்கப் போறோம். என்னத்துக்குகேன் பதரோணும்.” ஒரு நாள் ஒழுச் செய்ய கிணற்றடிக்குப் போன உம்மம்மா கால் வழுக்கி, கிணற்றடியில் விழுந்துவிட்டாள். உடலெங்கும் பலமான காயங்கள். இடது காலில் எலும்பு முறிந்துவிட்டது. எங்களால் திடீர் அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள இயலவில்லை. நடக்க இயலாது வேதனை யோடு பல மாதங்கள் படுக்கையில் கிடந்தாள். தொடர்ந்து மருத்துவம் செய்தும், அவளால் பழைய நிலைமைக்குத் திரும்ப இயலவில்லை .

பம்பரமாகச் சுழன்று, மற்றவர்களுக்கு வைத்தியம் பார்த்த மைமுன் ஆச்சி, பாயில் முடங்கிப் போனது குறித்து ஊர் மிகவும் விசனித்தது. நெஞ்சுவலியும், சுவாசமுட்டும் அடிக்கடி அவளை துன்பத்திலாழ்த்தின. நோய் பார்க்க வருவோரின் தொகை விசாலித்துக் கொண்டிருந்தது. மைமுன் ஆச்சியைப் பற்றிய கவலை, எல்லோரையும் வருந்த வைத்தது. எனது உம்மா அவளை விழுந்துவிழுந்து உபசரித்தாள்.

ஒரு நாள் விடியல் சுபஹில், எங்கள் உம்மம்மாவின் சரித்திரம் அமைதியாக முடிந்து போனது. ஏராளமானோர் மையத்து வீட்டை ஆக்கிரமித்தனர். அவளின் சிறந்த குண இயல்புகளை பலரும் புகழ்ந்தனர். பெண்கள் துயரம் தாளாது கதறியழுதனர். மைமுன் ஆச்சியின் ஏழாம் கத்தம் முடிந்ததும் குடும்பத்தார் கூடி, ஏகமனதாக ஒரு தீர்வினை எடுத்தார்கள். பெட்டியைத் திறந்து பார்த்துவிடுவது என்ற தீர்வே அது.

தேர்தல் முடிவுகளைச் செவிமடுக்க வானொலிப் பெட்டிக்கருகே காத்திருக்கும் வாக்காளரின் ஆர்வம் எங்களில் குடிகொண்டது.

பெட்டி திறக்கப்பட்டு, கூடவே ஆச்சரியமும் காத்திருந்தது. பெட்டிக்குள் பெறுமதியான பொருட்கள் இருக்குமென அங்கலாய்த்தவர்கள் வாய்மூடி மௌனிகளாயினர். பெட்டிக்குள் பழைய புதிய ஆடைகளும், தஸ்பீஹ் , பிரார்த்தனை மாலைகளும், சிதறிக் கிடந்தன. புதையல் கண்டெடுக்க விழைந்தவர்களின் முகங்களில் கருமை படர்ந்த சலிப்பு. சல்லடை போட்டுத் தேடியும், பெட்டிக்குள் இருந்து எதனையும் கண்டெடுக்க இயலவில்லை.

அந்தப் பெட்டகத்தினுள் கைக்கடக்கமான சிறிய தகரப் பெட்டியொன்று இருந்தது. இப்போது பரவலான உற்சாகம். இந்தச் சிறிய பெட்டிக்குள் பணம், நகை கூடுதலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் திடீரென நிர்மூலமானது. வெள்ளைப் புகைப்படம் ஒன்று மட்டுமே இருந்தது. ஒரு அழகான இளைஞன் புகைப்படத்தில் புன்முறுவல் பூத்தவாறு காட்சி கொடுத்தான்.

எல்லோர் முகங்களிலும் ஆச்சரியக் குறி. இந்தப் புகைப்படத்தைப் போய், உம்மம்மா பெரிய சொத்தாய் நினைத்து ஏன் பாதுகாத்தாள்? அந்தப் புகைப்படம் நிச்சயமாக அவள் கணவர் சுல்தான் அப்பாவின் சாயலிலும் இல்லை. அவளது பிள்ளைகள் ஒருவரினதும் உருவத்திலும் இல்லை. அப்படியானால் இவன் யார்?

கேள்விக் கணைகள் அனைவரையும் துளைக்க வாரம்பித்தன. இந்தச் சிக்கலைத் தீர்க்க எவராலும் இயல வில்லை. நான் தீர்க்கமாக யோசித்துவிட்டுச் சொன்னேன்.

“இந்த நொடியை அவிழ்க்க, நாங்க இறந்த காலத்திற்கு போனாலும் முடியாது. உம்மம்மாவின் இளமைக் காலங்களை அறிய, அப்போது நாங்கள் யாரும் உயிர் தரித்திருக்கவில்லை. இது பற்றித் தகவல் தரக்கூடிய ஒருவர் மட்டும் தான் தற்போது உயிருடன் இருக்கின்றார். உம்மம்மாவின் சகோதரர் ரசீத் அப்பா. அவரும் இப்போது நோயிலும், மூப்பிலும் மாமி வீட்டில் அல்லாடிக் கொண்டிருக்கிறார். அவரிடம் இந்தப் படத்தை காட்டி கேட்பதுதான் சரி”. ரசீத் அப்பா படத்தை துருவித் துருவி பார்த்துவிட்டு கூறத் தொடங்கினார்.

“அந்த இளைஞன் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளையாம். மைமுன் ஆச்சியின் இளமைக் கால அழகில் லயித்து அவளைத் திருமணம் செய்ய விரும்பினானாம். ஏழை வீட்டில் திருமணம் செய்ய அவனது தந்தை தடையாக இருந்தாராம். இவர்கள் சிநேகம் ஊரில் கசியவாரம்பித்ததும், மைமுன் ஆச்சியின் வாப்பா அவசரமாக சுல்தான் அப்பாவுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இதைச் சகித்துக் கொள்ளவியலாத அந்த இளைஞன் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டான். அவனது புகைப்படம் தான் இது.”

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தினை, ரசீது அப்பா நினைவு கூர்ந்து விளக்கினார். ஒரு நல்ல தாயாக தாரமாக, பாட்டியாக வாழ்ந்து விட்ட மைமுன்ஆச்சி, மனசாட்சிக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாள் என்பதை இது துல்லியமாக்குகிறது.

உம்மம்மா என்ற புத்தகத்தை என்னால் விமர்சசிக்க முடியவில்லை. எங்கள் நெஞ்சங்களில் நிறைந்து வாழ்ந்து மறைந்துவிட்ட உம்மம்மா, ஒரு புரியாத புதிர்.

– ஜூன் 2003 – நிஜங்களின் வலி சிறுகதைத் தொகுப்பு , மீரா பதிப்பகம், முதற்பதிப்பு: 23.05.2005

மு. பஷீரின் மைமுன் ஆச்சி, வழமையான இவரது வித்தியாசமான நடை, இக்கதைக்கு மெருகு சேர்க்கிறது. மைமுன் ஆச்சி பாத்திரம் சிறப்பாக வார்க்கப்பட்டிருக்கிறது. கலை உணர்வோடு செல்லும் அழகான கதை வார்ப்பு. – பிரகலாத ஆனந்த் மல்லிகை ஆண்டு மலர், 2004

பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் - 12 May 2013 மு.பஷீரின் ‘இது நித்தியம்’ என்ற சிறுகதைத் தொகுதி அவரது நாலாவது சிறுகதைத் தொகுதியாக அவரது சொந்த கல்ஒழுவைக் கிராமத்தில் வெளியிடப்படுவது இலக்கிய உலகுக்கும் கல்ஒழுவைக் கிராமத்திற்கும் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாகும். ஏற்கனவே மீறல்கள் (1996), தலைமுறை இடைவெளி (2003), நிஜங்களின் வலி (2005) என்று ஒரு சீரான இடைவெளியில் அவரது தொகுப்புக்கள் வெளிவந்து 4வது வெளியீடாக ‘இது நித்தியம்’…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *