மைக்கேல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 18, 2012
பார்வையிட்டோர்: 8,829 
 

வாழ்க்கையில் சந்திக்கும் அனைவரது முகமும் நமக்கு நினைவில் இருப்பதில்லை. ஆனால், நெருக்கமான நட்போ, உறவோ இல்லாத நிலையிலும் சிலரது முகம் எந்தக் காரணமும் இல்லாமல் அடிக்கடி ஞாபகத்தில் வந்துகொண்டே இருக்கும். எனக்கு அப்படி மறக்கமுடியாத முகம் மைக்கேலின் முகம். ‘‘பாக்க றவன் எல்லோருமே கொஞ்ச தொலவு போயிட்டுத் திரும்பிப் பாக்குறான். இது இன்னா, மனுஷனா கொரங்கா… அதுக்குத்தான பாக்குறாங்க..?’’ என்று பேசியதுதான் அவனுடைய முத்திரை. டக்கென்று என் மனசில் அவனுக்கு ஒரு இடம் தயாரானது.

நான் கிளினிக் ஆரம்பித்த புதிது; அவ்வளவாகக் கூட்டம் இராது. எனவே, வெளியே தெரியக்கூடாத நோய்களுடன் வருவார்கள் பலர். நெடுஞ்சாலையை ஒட்டிய உணவு விடுதிக்கு அருகே கிளினிக் இருந்ததும் இன்னொரு காரணம். இப்படித்தான் மைக் கேலின் அறிமுகம் தொடங்கியது.

‘‘எவ்வளவு நாளா இருக்குது இது?’’

‘‘ரொம்ப நாளா..! அப்பப்ப வரும், போயிரும்!’’

இரண்டு முறை வந்து ஊசிகள் போட்டுக்கொண்டான். மூன்றாவது முறை… ரத்தச்சோதனை செய்யச்சொல்லி அனுப்பி னேன். இடத்தைச் சொன்னேன். அதற்கடுத்த முறை, ‘‘சும்மா இதே வேலையா போச்சே உனக்கு! பேசாம ஒரு கல்யாணம் பண்ணிக்கிறதுதானே?’’ என்றேன்.

ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தான். அவனுடன் வந்தவன், ‘‘சார் கேக்குறாருல்ல, சொல்லேண்டா!’’ என்றதும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள்.

‘‘சொல்லுப்பா… ஏன் சிரிக்கிறே?’’

‘‘நான் சொல்றேன் சார். கல்யாணம் பண்ணிக்கினான். ஆனா, சம்சாரம் வுட்டுட்டுப் போயிட்டுது. ரெண்டு பசங்க வேற சார். இவனோட பேஜார் தாங்காமதான் அது பூட்டுது!’’

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, மைக்கேல் சொன்னான்… ‘‘அதுக்கு எல்லோரையும் போல நானும் ஆபீஸ் போணும். வூட்டுக்கு வரச்சொல்ல பூ வாங்கியாரணும். சினிமாவுக்கு இட்டுனு போணும். நான் இன்னா கலெக்டரு உத்தியோகமா பாக்குறன்? கிளீனரு, சார்..!’’

‘‘சரிப்பா! விஷயத்தை எடுத்துச்சொல்லி மனைவிக்குப் புரிய வைக்கிறதுதானே?’’

‘‘அட, போ சார்! எங்க கேக்குது அது?’’

‘‘கேக்க-லைன்னா, அப்படியே விட்டுர் றதா? போய்க் கூட்டிட்டு வா! இனிமே யோக்கியமா இருப்பேன்னு சொல்லு!’’

‘‘ஐய… இன்னா சார் நீ? அதெல்லாம்வேலைக் காவாது சார்!’’

ஆனால், அடுத்த முறை நம்பமுடியாத ஓர் அழகான பெண்ணோடு வந்தான் மைக்கேல். ‘‘சார், சொன்னியே… இட்டாந்துட்டேன்!’’

அந்தப் பெண்ணை உட்காரச் சொன் னேன். ‘‘பழசெல்லாம் மறந்துரும்மா! மைக்கேல் ரொம்பக் கெட்டிக்காரன். இனிமே ஒழுங்கா இருப்பான். அதுக்கு நான் பொறுப்பு’’ என் றேன்.

‘‘எனக்கு நம்பிக்கை இல்லை. எப்பப் பார்த் தாலும் பொய், பித்தலாட்டம். சே!’’ எனச் சலித்துக்கொண்டாள். அவளுக்குப் பல் வரிசை மிக நேர்த்தியாக இருந்தது.

‘‘ஊரச் சுத்திக் கடன் சார்… அவனுங்களப் பாத்து பயந்து ஓடுறதுக்கே இதுக்கு நேரம் சரியா இருக்கு!’’

‘‘ஏம்ப்பா… உனக்கு வர்ற பணம் பூரா எங்கே போவுது?’’

புன்சிரிப்போடு மனைவியின் பின்னே மறைந்தபடி, குடிப்பதுபோல் ஜாடை காட்டினான்.

‘‘பசங்க வேற இருக்குது. இனிமே, ஒழுங்கா இருக்கணும். சரியா?’’ என்று புத்தி சொல்லி அனுப்பினேன்.

சில மாதங்கள் சென்று ஒருநாள்… என் மோட்டார் சைக்கிள் செயின் அறுந்து போகவே, மெக்கானிக் ஷெட்டில் உட்கார்ந் திருந்தேன். அருகிலிருந்த டீக்கடையில், டீயை உறிஞ்சியபடி நின்றிருந்தான் மைக்கேல். அப்போது, அவன் பக்கத்தில் வந்து நின்றது ஒரு ஆட்டோ. அதிலிருந்து மூன்று பேர் இறங்கினார்கள். ஒருவன் மைக்கேலின் காலரைப் பிடித்து உலுக்கி, ‘‘எனக்கே வேல காட்டுறியா! வட்டி எங்கடா பேமானி?’’ என்றபோது, மைக்கேல் திணறினான். என்னை அவன் கவனிக்கவில்லை.

‘‘வூட்ல செலவாயிட்டுதுண்ணா..!’’

‘‘உனக்கின்னாடா வூடு? பிளாட்பாரத்துல வுழுந்து கிடக்கிற நாயி நீ!’’

‘‘அய்ய… இல்லண்ணா! பசங்க இஸ்கோல் பீஸ், அரிசி, கொடக்கூலி… அதான், கோச்சிக் காதண்ணா!’’

‘‘இன்னா செய்வியோ, ஏது செய்வியோ… மாசமானா வட்டி துட்டு வந்துரணும்னு எத்தினி ட்ரிப் உன்னாண்ட சொல்லிக்கீ றேன்? மனுஷன்னா மானம், ரோஷம் இருக்கணும்டா. சோறு திங்கிறியா, வேறு எதுனா திங்கிறியா? உனுக்கெல்லாம் என்னடா குடும்பம் வேண்டிக்கிடக்குது?’’

‘‘அண்ணே, மைக்கேல் சம்சாரத்தைப் பார்த்திருக்கிறியா… சூப்பரா இருக்கும்!’’ என்று இன்னொருவன் சொல்ல, மீண்டும் அந்த முரடன் மைக்கேலின் சட்டையைப் பிடித்து, ‘‘வட்டி குடுக்க முடியாதவன் பொண்டாட்டியை அனுப்பறதுதானடா?’’ என்றான். அடுத்து, மைக்கேல் சொன்னது என்னை அதிர வைத்தது.

‘‘அட, இன்னாண்ணா நீ? உனுக்கில்லாத-தாண்ணா? இட்டுனு போண்ணா!’’

திகைத்த வட்டிக்காரன், ‘தூத்தெறி!’ எனக் காரித் துப்பிவிட்டுப் போய்விட்டான்.

அதன்பின், ஐந்தாறு மாதங்களுக்கு மைக்கேலைக் காண வில்லை. அவனுடைய நண்பன் ஒருமுறை ஜுரம் என்று வந்தபோது, அவனிடம் விசாரித்தேன்.

‘‘எங்க போனான்னு தெரியல சார்! ஆனா, அவனுக்கு இப்ப டைம் சரியில்லை…’’ என்றான்.

‘‘ஏம்ப்பா, கடன் தொல்லையா?’’

‘‘அதுன்னாலும் பெட்டரு சார்..! கந்து வட்டிக்காரனுங்க ஒதிக்கிறதோட வுட்டுருவானுங்க. நம்ப ஒயின்ஷாப் பாபு இல்ல சார்… அவன் தம்பி சம்சாரத்த இட்டுனு போயிருக்கான்! ஒரு புள்ள வேற இருக்கு… அதப் போயி…’’

‘‘இவனோட எப்படி அது போச்சு?’’

‘‘அதான் சார் அதிசயம். ஒண்ணில்லே, ரெண்டில்லே… நெறைய பொம்பளைங்களோட சகவாசம் வெச்சிருக்கான். அதுங்களும் எப்படி இவன்ட்ட மடங்குதுங்கன்னு புரிய மாட்டேங்குது!’’

‘‘போலீஸ் கேஸாகலையா?’’

‘‘இதுக்கெல்லாம் போலீஸ் எதுக்கு சார்? அவனுங்களே தேடிட்டு இருக்கானுங்க. மாட்டுனா… மவனே, பீஸ் பீஸா ஆக்கிரு வானுங்க! இனிமே அவன் மெட்ராஸ் எல்லைகுள்ளயே வர முடியாது, சார்!’’

எனக்கென்னவோ, வாழ்க்கையில் மைக்கேலுக்கு இருந்த ஆர்வமும், அவனுடைய யதார்த்தமான நகைச்சுவையும் சேர்ந்து அவன் பேரில் ஒரு அனுதாபத்தை உண்டாக்கியது. அதனால், அவனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று கவலைப்பட் டேன்.

ஒரு மாதம் போயிருக்கும்… திடீரென ஒருநாள், ‘‘சௌக்கியமா சார்?’’ என்ற குரல். திரும்பினேன். மைக்கேல்!

‘‘இன்னா சார் அப்பிடிப் பாக்குற?’’

இந்தக் குரங்கு மூஞ்சியை நம்பி தன் கணவனை, அதுவும் பணபலமும் ஆள்பலமும் நிறைந்தவனை விட்டுவிட்டு, ஒரு வயதுக் குழந்தையோடு ஒருத்தி ஓடி வருகிறாள் என்பதை என்னால் கற்பனை-கூடச் செய்யமுடியவில்லை.

‘‘எங்கடா போனே?’’

‘‘அது ஒண்ணியும் இல்ல சார்! இந்த ஒயின்ஷாப்காரன், ஒரு டுபாக்கூர் பார்ட்டி! கட்ன பொண்டாட்டிய கண் கலங்காம வெச்சுக் காப்பாத்த வாணாம்..? சொம்மானா மொரட்டுறது, ஒதிக்கிறது… நான் ஏம்மா அளுவுறன்னன். அவ்ளதான்… வா, போவலாம்னு கௌம்பிடுச்சி! போயிட்டோம்’’

‘‘சரி, இப்ப ஏன் திரும்பி வந்தே? அவங்க கையில மாட்டுனா செத்துருவே!’’

‘‘அதெல்லாம் சொம்மாப்போச்சு சார்! அவனாண்ட நானே போன் போட்டு சொல்லிட்டேன்..!’’

‘‘என்னானு?’’

‘‘நீ என்னிய என்ன வோணா செய். நானு ஒரு பிளாட்பாரம் கேஸ§. ஆனா, அண்ணி உத்தமி! அத்த ஒண்ணியும் பண்ணிடாதேன்னேன். ‘இன்னாடா சொல்ற நாயே?’ன்னாரு. ‘மதுர, நாகர் கோவில், கன்னியாகுமரின்னு சுத்து னோம். ஒவ்வொரு எடத்துலயும் ரூம்பு உள்ளாற அண்ணி புள்ளியோட படுத்துக் கும். நான் உங்க வூட்டு வாசல்ல கட்டுற நாயி மாதிரி, வெளில காவலுக்குப் படுத் துனு இருப்பேன். ராத்திரி பகலா ஒவ்வொரு கோயிலா போயி… அங்கப் பிரச்னமோ இன்னாவோ சொல்வாங்களே, தரையில உருண் டுட்டே வந்து கும்புடறது… அத்தப் பண்ணிக் களச்சுப் போயிருக்குது. நீ நல்லா இருக்கணும்னு வேண்டிக்குச்சுன்னு பீலா வுட்டேன். அவ்ளதான்… ஆப் ஆயிட்டாரு!’’

அடுத்த மூன்று ஆண்டுகளில்… திருமணம், மேல்படிப்பு என என் வாழ்விலும் பல மாற்றங்கள்.

ஒரு நாள் காலை… மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்… எதிரே மைக்கேல்! வீல் சேரில் அழைத்து வந்துகொண்டு இருந்தார்கள். ‘‘என்ன மைக்கேல்? என்ன உடம்புக்கு?’’ என்றேன்.

‘‘அது ஒண்ணியும் இல்ல சார்! சிநேகிதக்காரன் ஒருத்தனுக்கு கிட்னி குடுக்கப் போறன், சார்!’’

‘‘யாருப்பா அது?’’

‘‘உனுக்குக்கூடத் தெரியும் சார்… நம்ம சாராயக் கடை பாபு வோட தம்பி!’’

‘‘அவன் ஒய்ஃபைத்தான நீ..?’’

‘‘அட, அத்தப் போயி கவனம் வச்சிருக்குறியே!’’ எனச் சிரித்தவன், ‘‘பாவம் சார்! எத்தினி வேணாலும் துட்டு தர்றேன்னான். அப்பக் கூட ஆளு கெடைக்கல. அப்புறம்தான் நான் தரேன்னு சொன்னேன். அவனுக்குன்னு ஒரு பேமிலி இருக்குது சார். எனுக்கு? அதான், துட்டுகூட வேணாண்ட்டேன்!’’

சிரித்த முகத்தோடு விடைபெற்றுச் சென்ற அவனை, இன்று வரை என்னால் மறக்கமுடியவில்லை.

– 30th மே 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *