கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 5,047 
 
 

வாலிப வயதின் கனவுகள் நிறைந்த ‘மனக்காதல் ஆயின் விஸ்வாமித்திரர் மனிதர்களின் மத்தியில் வாழ்வதை விடுத்து கொடிய கானகத்தை நாடி வந்திருக்க வேண்டியதில்லை. ஆயிரம் மோகினிகளின் மத்தியிலேயே கனவு கண்டபடி காலத்தைக் கடத்தி விட்டிருக்கலாம். ஆனால் அவர் வாலிபப் பருவத்தைக் கடந்து பல்லாண்டுகளாய் விட்டன. அவரை வருத்தியது இளமையின் மனக்காதல் அன்று. நடுத்தர வயதின் மனக்கலப்பற்ற கொடிய உடல் வேட்கை. தசையின் பிடுங்கள்…

சகலத்தையும் துறந்த சர்வவேத விற்பன்னரும் மகாமேதையுமான அவரால் பெண்ணாசை ஒன்றை மட்டும் துறக்க முடியவில்லை. மலரின் இருதயத்திற்குள் கிடந்து குடையும் புழுப்போல் அந்த ஒரே தாபம் எதற்கும் கலங்காத அவருடைய திடசித்தத்தை நிலைகுலையச் செய்து கொண்டிருந்தது. நியம நிஷ்டைகள், காடு நாடுகளில் நீண்ட கால்நடைப் பிரயாணம் முதலியன சிறிதும் பிரயோசனப் படவில்லை . உடலில் அவ்வளவுக்கெவ்வளவு மனத்தில் இன்ப நினைவு அதிகரித்தது.

வேட்கையைத் திருப்தி செய்து மனத்திற்கு அமைதி தேடிக் கொள்ளலாம் என்றால், அது பகைவனுக்கு அடிபணிந்து இறைஞ்சுவது போல் தோன்றியது. மன்னர் மன்னவனாகிய அவருக்கு எதற்கும் அடிபணிந்து போவதென்பது சாத்தியமாகவில்லை. வெற்றி அல்லது மரணம் ! இந்தத் தீர்மானமே அவரை அரும் கானககத்திற்கு இழுத்துச் சென்றது. அங்கு , காமத்திற்கு நிலைக்களனாகிய தசையுடன் வருந்தத் தவம் இயற்றலானார்.

விஸ்வாமித்திரரின் தவத்தை அறிந்த தேவேந்திரன் அயர்ந்து போய்விட்டான். ஒரு சமயம் காமதேனுவைத் தனதாக்கிக் கொள்ள முயன்ற மானிடன், காமதேனு வாசம் செய்யும் தேவுலகையே கவர்ந்து கொள்வதற்குச் செய்யும் பிரயத்தனம்தானோ இத்தவம் என்று அங்கலாய்த்தான். கௌதமர் கொடுத்த கொடிய தண்டனையின் நினைவு அவன் மனத்தில் இன்றும் பச்சையாகவே இருந்ததனால், முனிவர்கள் என்றாலே அவனுக்குப் பெரும் பீதி…ஆதலால் பொறி மூண்டு ஜுவாலை ஆவதற்கு முன் அதை அவித்துவிட வேண்டும் என்று அவன் சங்கல்பம் செய்து கொண்டான்.

தவத்தை அழிப்பதற்கு நாரீமோகத்தை விடச் சிறந்த படை வேறொன்றில்லை என்ற உண்மையை, காமத்தையே தன் வாழ்வின் ஒரு லட்சியமாக் கொண்டு சுவைத்த காமுகனாகிய தேவராஜனுக்கு அறிவுறுத்த அமைச்சர் வேண்டியிருக்கவில்லை.

வெளிக்கு ரிஷி பத்தினியே போன்ற தண்மையான சுபாவத்திற்குள் வடவைத் தீபோன்ற காமத்தை மறைத்து வைத்திருப்பவளான மேனகையாலேதான் இந்த நுட்பமான பணி நிறைவேற வேண்டும் என்று நினைத்தான்.

மேனகை, வெளிக்குச் சிறிது அலட்சியமும் அலுப்பும் காட்டியே இந்திரனுடைய கட்டளையை ஏற்றுக் கொண்டாளாயினும், அந்தரங்கமாக அவள் மனம், பரபரப்படைந்தது. போகப் பித்தர்களான தேவர்களை வீழ்த்துவது போல் மானிடர்களை அவ்வளவு இலகுவில் மோகவலையில் வீழ்த்த முடியாதென்பதை அவள் அறிந்திருந்தாள். மேனாள் , ஊர்வசி முசுகுந்தச் சக்கரவர்த்தி என்ற மானிடனிடம் பட்ட அவஸ்தையெல்லாம் ஊர்வசியே சொல்ல அவள் கேட்டிருந்தாள். நீறு பூத்த நெருப்புப்போல் கிடந்த அவனுடைய ஆசையப் பூரணமாக சுடர்விடச் செய்வதற்கு ஊர்வசி, தன் பெண்சக்தி முழுவதையுமே பிரயோகிக்க வேண்டியிருந்தது … ஆனால், ஈற்றில் அவனிடத்தில் அவள் கண்ட கொள்ளை இன்பத்தின் நினைவு அவனைப் பிரிந்து பல காலத்திற்குப் பிறகும் அவள் மனத்தை விட்டு அகன்றதில்லை . அது ஒரு தனி அனுபவம். ஒரு பூரனா வாழ்வு…

அது ஊர்வசியின் அனுபவம். மேனகை இன்னும் மானிடர்களை அறிந்ததில்லை. இந்த விஸ்வாமித்திரன் எப்படிப்பட்டவனோ என்று அவள் அதிசயித்தாள். அச்சமும் வினோத பாவமும் கலந்த ஒரு இன்ப உணர்ச்சி அவள் மனத்தில் குடிகொண்டது. ஆயிரம் அமரர்களின் பொது மகளான அவளுக்குப் புது மணப்பெண்ணின் மனத்தில் தோற்றுவதுபோல் சிறிது நாணம்கூட ஏற்பட்டது.

இரவு முழுவதும் தாரகைகள் நடமாடியதனால் செம்பஞ்சுக் குழம்பு தோய்ந்திருந்த வான் அரங்கைத் துடைத்துச் சுத்தம் செய்வான் போல் அருணத்தோட்டி கீழ்த்திசையில் எழுந்தான். வைகறையோடு ஆற்றங் கரைக்குப் போன விஸ்வாமித்திரர் நீராடிய பிறகு வழியோரம் மலர் பறித்தபடி ஆச்சிரமத்தை நோக்கி கம்பீரமாக நடந்து கொண்டிருந்தார். சான்றோர். உள்ளம் போல் சலனமற்று ஆழமாகப் பாய்ந்து கொண்டிருந்த மகாநதி அவர் மனத்திற்குச் சிறிது அமைதியைக் கொடுத்திருந்தது. விலக்கப்பட்ட கனியை நோக்கிச் சதா தாவிக் குதிக்கும் மனக் குரங்கைத் தடுத்து வைத்திருந்த பிணைப்பைக் கொஞ்சம் தளர்த்திவிடவும் முடிந்தது. வேத மந்திரங்களின் மாதுர்ய வசனங்கள் அவர் கண்டத்தில் எழுந்தன…

தீடீரென்று அவருக்குப் பின் புறத்தே குயில் ஒன்று நீளக்குரல் எழுப்பியது. விஸ்வாமித்திரர் அதைக் கவனிக்காமல் மேலும் நடந்தார். குயில் மீண்டும் உச்சதொனியில் அவசரமாகக் கூவியது. அது தன்னையே அழைப்பது போல் அவர் மனதில் ஒரு சபலம் தட்டவே தன்னை மறந்து பின்புறமாகத் திரும்பி நோக்கினார்…… பூத்துக் குலுங்கும் ஒரு மகிழின்கீழ் வெண்பட்டணிந்து, கருங்கூந்தல் தோளிற்புரள, தெய்வமயன் கடைந்து நிறுத்திவிட்ட தந்தப் பாவைபோல் மேனகை நின்றாள். அவள் இதழ்க் கடையில் ஓர் இள முறுவல்; கண்களிலே ஒரு தாபம்; ஒரு அழைப்பு… விஸ்வாமித்திரருடைய மனம் கல்லாய்ச் சமைந்துபோக, உடல் அவள் நின்றிருந்த திக்கை நோக்கி அடி எடுத்து வைத்தது. அதற்குள் மேனகை மறைந்து போய்விட்டாள்.

முதல் உன்னிப்பில், அவளை அழைப்பதற்கு எடுத்த குரல் அவர் தொண்டையிலேயே அடங்கிப் போய்விட்டது. முன்வைத்த காலைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டார்……

யார் இவள்?

அவரை இரவுபகல் வருத்தும் கொடிய வேதனையின் உருவெளித் தோற்றமோ இது! அவர் மனத்தில் தோன்றியிருந்த உற்சாகமும் அமைதியும் கணப்பொழுதில் மறைந்து போயின. நெஞ்சை வக்கிரமாக்கிக் கொண்டு பிரளய ருத்திரன் போல் ஆசிரமத்தை நோக்கி நடந்தார்…

பறித்த மலர்கள் அன்று பாத்திரத்திலேயே கிடந்தன.

விஸ்வாமித்திரர், தன் மன ஓட்டத்தை வேறு வழியில் திருப்பி விடுவதற்கு எவ்வளவோ பிரயத்தனம் செய்து பார்த்தார். வேத மந்திரங்களை வாய்விட்டுப் பாடினார். வாழ்வின் நிலையாமையை நினைவு கூர்ந்தார். பிரபஞ்சத்தில் கண்கண்ட விந்து டுபத்தையும் கண்காணா நாத ரூபத்தையும் மனத்தில் இருத்த முயன்றார். ‘நானே கடவுள் நானே பிரம்மம்…எல்லா எண்ணத் தொடர்களும் ஈற்றில் “பெண்” என்ற நினைப்பில் முற்றுப்புள்ளி போட்டு நின்றன. ஆ!’ சதையும் நிணமும் என்பும் மயிரும் கொண்ட பெண் உரு!’ என்று மனதில் அருவருப்பை ஏற்படுத்த முயன்றார். ஏதும் பயன் இல்லை.

அவர் உடல் அனல்போற் கொதித்தது…

அந்தி மயங்கும் வேளை விஸ்வாமித்திரர் பர்ணசாலை வாசலில் அமர்ந்து ஒரு ஸ்லோகத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். லேசாக ஊதிக்கொண்டிருந்தார். காற்றில் மாலை மலர்களின் வாசனை ‘கம்’ என்று பரவியது. உதிர்ந்த சருகுகள் கலகலத்தன. விஸ்வாமித்திரர் ஆழ்ந்த பெருமூச்சுடன் தலை நிமிர்ந்தார். எதிரிலே முற்றத்தில் வளைந்த பூங்கொம்பர் ஒன்றைப் பற்றியபடி மேனகை முறுவல் பூத்து நின்றாள். அவளுடைய கருங்கூந்தல் ஸ்நானம் செய்து உலரவிட்டதுபோல் காற்றில் பறந்தது. உடலை மலர்மாலைகளால் அலங்கரித்திருந்தாள். இந்தக் காட்சி விஸ்வாமித்திரருக்கு முதலில் ரெளத்திரகாரமான கோபத்தையே உண்டாக் கியது. அவரை வருத்திய மன்மத தாபம் அதை எதிர்த்துப் போராட முடியாதால் அவர் உள்ளத்தில் தோன்றியிருந்த சுயவெறுப்பு, தன்னுடைய தவலட்சியம் தவறிப் போனதனால் ஏற்பட்ட ஏமாற்றம் ஆகிய எல்லாம் அந்தக் கணத்தில் தாங்க முடியாத கோபமாக உருவெடுத்தன. உடல் படபடக்க எழுந்து நின்றார். “யாரடி நீ? கிராதகி!” என்று வனம் அதிரும்படி அவர் குரல் எழுந்தது.

மேனகை அயர்ந்து போய்விட்டாள். முறுவல் செய்த அவள் உதடுகள் நடுங்க ஆரம்பித்தன. நெருப்புச் சிதறும் விஸ்வாமித்திரருடைய எதிர்நோக்கின் முன் அவள் நயனங்கள் தாழ்ந்தன. ஆனால் அவருடைய ருத்ரரூபமும் பரந்த தோள்களும் அவளை மிகவும் வசீகரித்தன. ‘இதோ கடைசியாக ஆண்மைசிந்தும் ஒரு ஆடவன்!’ என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

சபித்தாலும் சபிக்கட்டும் என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு மறுபடி இதழ்களில் புன்னகையையும் முகத்தில் மந்தகாசத்தையும் வருவித்து ”சுவாமி நான் மேனகை!” என்றாள்.

“மேனகையா? – தேவதாசி! உனக்கு இங்கே என்ன வேலை?”

அவருடைய குரலில் முன்னிருந்த கோபம் இல்லை. அவளிடத்தில் தோன்றிய அச்சக் குறிகள் அவர் மனத்தைக் கொஞ்சம் இளக்கிவிட்டிருந்தன. அதை உணர்ந்து கொண்ட மேனகை, அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாள். நாட்டிய மேதையான அவள் இடை அசைவிலும், கழுத்தசைவிலும் தோன்றிய நிகரில்லா அழகு அவர் மனதை வருத்தியது.

“தங்களுடைய தவமேன்மையை அறிந்து தங்களுக்குப் பாதசேவை செய்யலாமென வந்தேன்”

“கிட்டவராதே , கிட்டவராதே!” என்று பதறினார் விஸ்வாமித்திரர். அவருடைய குரலிலே கோபம் இல்லை. அதற்குப் பதிலாக கொஞ்சும் பாவம் தான் சிறிது புலப்பட்டது.

வெற்றி தனதென்பதை மேனகை நிச்சயமாக அறிந்து கொண்டாள். “தாங்கள் என்னை நிராகரித்தால்…” என்று சொல்லி முன் வைத்த காலை அதே சிருங்கார ரஸம் செறிந்த அங்க அசைவுகளுடன் பின்னுக்கு எடுத்துக் கொண்டாள். “ஆகா, தூண்டில் மீன்!” என்று நினைத்தாள்.

அதன்பிறகு அவளுக்கு வெகு சுலபமாகவே வெற்றி கிட்டியது. கடைசியில், விஸ்வாமித்திரரே அவளைக் குறை இரக்கும்படியாய் விட்டது…

கன்னிப்பெண், தன் காதற்கனவுகளை மெழுகிய தரையில் கோலமாக வரைந்துவிட்டது போல், பால்நிலவு மர இலைகளினூடே செறிந்து ஆச்சிரம முன்றில் எங்கணும் சிதறிக்கிடந்தது. விஸ்வாமித்திரருடைய மடியில் தலை சாய்த்து மேனகை படுத்திருந்தாள்.

“ஸ்வாமி, உண்மையான தேவபோகம் இன்றே எனக்குக் கிட்டியது. இது என்றும் நிலைத்திருக்க வேண்டுமே…”

“மேனகா, சுவர்க்கம் என்று எங்கெல்லாமோ தேடியலைந்தேன். உடலை வருத்தினேன்…இன்று என் கனவுகளின் சாற்றைப் பிழிந்து சமைத்தது போன்ற எழிலுடன் நீ எங்கிருந்தோ வந்தாய், சுவர்க்கத்தைச் சுமந்துகொண்டு! இனிநான் வேறு சுவர்க்கம் வேண்டேன்…”

அன்றிரவு அப்படிக் கழிந்தது.

வசந்தகாலம் புரண்டு அருங்கோடையாக மாறியது. கானகத்தில் புற்கள் கருகி. மரங்களின் பசிய இலைகள் உதிர்ந்து சருகுகளாய்க் கலகலத்தன. முதலில் விஸ்வாமித்திரருக்கு சுவர்க்கத்திலும் உயர்ந்ததாகத் தோன்றிய வேட்கையும் அதன் திருப்தியும் நாளடைவில், உண்பதும் உறங்குவதும் போல் சாதாரண மிருக அனுபவமாய் மாறியது …. மேனகை ஆயிரம் அணங்குகளின் குண பேதங்களை ஒருங்கே தன்னுள் கொண்டவளாய், நாளொரு தோற்றமும் பொழுதொரு வினோதமும் காட்டும் ஜகன்மோகன ஸரஸகாம வல்லியாகத் திகழ்ந்தாலும் விஸ்வாமித்திரருடைய மனத்தில் கொஞ்சம் அலுப்புப்படர ஆரம்பித்தது. அவளுடைய பாட்டும் கூத்தும் கூட அவருக்குப் பயனற்ற வெறும் பொம்மலாட்டமாகவே தோன்றின. அவளுடைய வாழ்க்கை முழுவதுமே காம இன்பம் ஒன்றையே சுற்றி வட்டமிடுவதுபோல் அவருக்குத் தோன்றியது. மனத்திற்கு, காம நுகர்ச்சிக்கு மேம்பட்ட , அப்பாற்பட்ட வேறு ஒரு தனிவாழ்வு உண்டு என்பதை அவளால் உணர்ந்து கொள்ளவே முடியவில்லை.

உதறித் தள்ளிவிட்டு வந்த பந்தங்கள் மீண்டும் தன்னைப் பிணிப்பதை அறிந்து விஸ்வாமித்திரர் கவலையில் ஆழ்ந்தார்.

இதன் மத்தியில் ஒருநாள், மேனகை, தான் கர்ப்பம் உற்றிருப்பதாக அவருக்கு அறிவித்தாள். அவர் அதைக் கேட்டுப் பெரு மகிழ்ச்சி அடைவாரென்பதே அவள் எண்ணம். தன்பிடியிலிருந்து சிறிது சிறிதாக நழுவிச் செல்லும் அவரை இச்செய்தி மறுபடி தன்பால் இழுத்துவிடுமென்று அவள் கருதினாள்.

விஸ்வாமித்திரர் வாய் திறந்து ஒரு பதிலும் சொல்லவில்லை. தன் தோளை அணைத்திருந்த அவள் கையை மெல்ல நகர்த்திவிட்டு, ஆற்றங் கரையை நோக்கி நடந்தார்….’பெண் மோகம் என்ற சிறையில் அடைபட்டுப் பரிதவிக்கும் துறவியின் மனத்திற்குப் புத்திர பாக்கியம் என்ற இரட்டைத் தாழ்ப்பாள்! ஐயோ வல்வினையே!…என்று அவர்மனம் செயலறியாது ஓலமிட்டது. ஆண்மை குலைந்தது…

மாரிகாலம் ஆனபடியால் ஆறு கரைபுரண்டு நுரை சிதறிப் பாய்ந்து கொண்டிருந்தது. அதன் உன்மத்த கதி அவர் மனத்தை மேலும் கலக்கியது. மண்ணவரையும் விண்ணவரையும் நடுங்கவைத்த அவருடைய தபோபலம் இப்பொழுது எங்கே? வேத வாக்கியங்களைப் பிறப்பித்த அவருடைய பரந்த கல்வியும் மனப் பண்பும் எங்கே?. ஆற்றங்கரையிலேயே மனம் இடிந்து போய் இரவையும் குளிரையும் பொருட்படுத்தாது விஸ்வாமித்திரர் உட்கார்ந்து விட்டார்.

வைகறை யாமம் கழித்து ஆச்சிரமத்தை அடைந்த பொழுது மேனகை அவர் விட்டு வந்த இடத்திலேயே பாயலும் இன்றி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் கன்னங்களில் கண்ணீர் வடிந்து உறைந்து வரி செய்திருந்தது…

திடீரென்று அவர் மனத்தில் அவள்பால் சொல்லொண்ணாத அன்பும் இரக்கமும் ஏற்பட்டன.

அவள் தலையை அன்பாக வருடி “மேனகா, என் குழந்தாய்!” என்றார். அவள் விழித்து அத்தியந்த ஆவலுடன் அவர் மார்பை அணைத்துக் கொண்டு சிறு குழந்தை போல் தேம்பித் தேம்பி அழுதாள்…

இரு தினங்கள் கழிந்ததும், அவர் மனத்தில் மறுபடி வைரம் ஏறியது. தன் இளகிய நெஞ்சத்திற்காகத் தன்னையே கடிந்துகொண்டார்…… ராஜத் துறவியின் லட்சியத்துக்குக் குறுக்கே வந்து மென்மையைக் காட்டி மருட்டுவதற்கு இவள் யார் ? மேனகையை அணுகாமல் ஏகாக்ர சிந்தையுடன் ஆற்றங்கரையிலே அதிகமான காலத்தைத் தனிமையில் கழித்து வரத் தலப்பட்டார்.

ஒரு நாள் உதயகாலத்தில் மேனகை சொன்னாள் “ஸ்வாமி இன்று என் உடலில் வேதனை காணுகிறது இன்று ஒரு பொழுதிற்காவது தாங்கள் மனமிரங்கி ஆச்சிரமத்தில் தங்கக்கூடாதா?”

விஸ்வாமித்திரர் பதில் கூறாமல் தன் இளகும் மனத்தை இரும்பாக்கிக் கொண்டு ஆற்றங்கரையை நோக்கிப் புறப்பட்டார். பகல் முழுவதும் அங்கேயே போக்கினார். பொழுது மரங்களின் புறத்தே சாய்ந்தது. வானத்தில் செவ்வரி படர்ந்தது…

திடீரென்று ஆச்சிரமம் இருந்த திக்கில் இருந்து மேனகை தலைவிரி கோலமாய் அலங்கோலமான ஆடைகளுடன் கையில் ஒரு குழந்தையை ஏந்திக் கொண்டு அவரை நோக்கி ஓடி வந்தாள். தாய்மையும் நாணமும் பொங்கும் முகத்துடன் “இதோ உங்கள் – எங்கள் புத்ரி!” என்று கூறி அவர் அமர்ந்திருந்த கல்லின் முன் மண்டியிட்டு, குழந்தையை அவர்பால் இரு கைகளாலும் நீட்டினாள்…

பகைவனைக் கண்டு படம் விரிக்கும் சர்ப்பம் போல் விஸ்வாமித்திரர் சீறி எழுந்தார்.”எட்டநில்! பாவி! துரோகி! இந்தப் பாவசின்னத்தை என் கண்ணினால் கூடப் பார்க்க மாட்டேன்.!”

இந்த வரவேற்பை அவள் ஒரு அளவிற்கு எதிர்பார்த்தே இருந்தாள். எனினும், அவள் தாயுள்ளம் மிகவேதனைப்பட்டு நின்றது. விஸ்வாமித்திரருடைய உள்ளத்தைக் கொஞ்சம் குத்திச் சித்திரவதை செய்ய வேண்டும் போல் அவளுக்குத் தோன்றியது. அவள் சொன்னாள் “தவவேடம் புனைந்த காமுகனே! தேனே, மானே, காமினி என்று நச்சி என் உடலை விழைந்தபொழுது இந்த நைஷ்டிகம் எங்கே போயிற்று? ஆண்மகன் – பேடி! மானிடர்கள் எல்லோருமே இப்படி இருந்துவிட்டால் பூவுலகம் கடைத்தேறியபடி தான்…”

விஸ்வாமித்திரருக்குக் கோபம் வரவில்லை! மேனகைபால் இரக்கமே ஏற்பட்டது. கையில் ஏந்திய சிசுவுடன் நிராதரவாய் அவள் நின்ற நிலை அவர் மனத்தை உருக்கியது. அனர் சொன்னார். “மேனகா என் வாழ்வின் லட்சியங்களை நீ அறியமாட்டாய். நான் துறவி. ராஜ போகங்களையே வேண்டாமென்று ஒதுக்கித் தள்ளியவன், விதிவசத்தால் மனம் பலவீனம் அடைந்த சமயம் இக்கதிக்கு ஆளானேன். ஆனால் உன் நிலைமைக்காக மிகமிக வருந்துகிறேன். இனிமேல் நான் வாழமுடியாது. பெண்ணே எனக்கும் உனக்கும் இடையில் ஏழ்கடலும் ஈரேழு லோகங்களும் அல்லவா நிற்கின்றன…”.

மேனகை இவ்வார்த்தைகளைக் கேட்டுத் துடித்தெழுந்தாள். குழந்தையை விஸ்வாமித்திரரின் காலடியில் கிடத்திவிட்டு ”எனக்கு என்ன வந்தது. உங்கள் குழந்தையைத் தாலாட்டி பாலூட்டி வளர்க்க வேண்டும் என்று? நான் மானிடப் பெண் அல்லவே; நான் தேவமகள். இன்பமும் கலையுமே என் வாழ்வின் லட்சியங்கள். நான் போகிறேன். ஆனால், ஸவாமி! தங்கள் அன்பை அது சொற்ப காலத்தியதாயினும் என்றும் மறவேன். தாங்கள் என்னை எப்பொழுதாகிலும் நினைத்துக் கொண்டால் அப்பொழுது வந்து தங்களுக்கு இன்பமூட்டுவது என் பாக்கியம்” என்று கூறி மறைந்து விட்டாள்.

விஸ்வாமித்திரர் நிலத்தில் கிடந்த குழந்தையைக் கூர்ந்து கவனித்தார். தேஜோமயமான பெண் குழந்தை. அதை மௌனமாக ஆசீர்வதித்துவிட்டுத் தன்தண்டு கமண்டலங்களைக் கையில் எடுத்துக்கொண்டு வடதிசை நோக்கிப் புறப்பட்டார்.

பசும்புற்றரையில் கிடந்த குழந்தை கைகளையும் கால்களையும் உதைத்து வீறிட்டு அலறியது…

– மறுமலர்ச்சிக்கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1997, ஈழத்து இலக்கியப் புனைகதைத் துறையின் மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிறுகதைகள் இருபத்தியைந்து 1946 – 1948, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான் சு. குணராசா, வெளியீடு: கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அனமச்சு, திருகோணமலை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *