தமிழ்த் திரையில்… முதல் நாவல்
புராணக் கதைகளும், இதிகாசக் கதைகளும், ராஜா ராணிக் கதைகளும் படமாக எடுக்கப்பட்ட தமிழ்த் திரையின் தொடக்க காலத்தில்…. முதன் முதலாக நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் மேனகா.
அந்நாளின் புகழ் பூத்த எழுத்தாளர் வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவல் இது.
திரைப்படமாக எடுக்கப்படுவதற்கு முன்பு மேனகா நாவல், நாடகமாகவும் வடிவமைக்கப்பட்டு பல தடவை மேடையேறி புகழ் பெற்றது. அப்போது, நடிகர் எம்.கே.ராதாவின் தந்தையார் எம். கந்தசாமி முதலி யார், மேனகா நாடகத்திற்கு வசனம் எழுதினார் (டி.கே.சண்முகம் சகோதரர்கள்தான் இந்நாடகத்தைத் தயாரித்து வழங்கியவர்கள்).
1935-இல் மேனகா நாவலைப் படமாக்கிய பொழுது அதில் டி.கே.பகவதி, டி.கே.சண்முகம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே.சங்கரன், எஸ்.வி.சகஸ்ரநாமம், கே.ஆர்.ராமசாமி, டனை.சிவதாணு ஆகியோர் நடித்தனர். இவர்கள் அனைவருக்கும் இதுவே முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தி. எம்.எஸ்.விஜயா, கே.டி.ருக்மணி ஆகியோரும் நடித்த இப்படத்தை இராஜா சாண்டோ இயக்கினார். பாரதியாரின் பாடல் முதன் முதலாக ஒலித்த படம் என்ற வரலாற்றுப் பெருமையும் மேனகா படத்தையே சேருகிறது.
நன்றி – பதிப்புத் தொழில் உலகம், ஜூலை 2004
முதல் பாகம்
அதிகாரம் 1-3 | அதிகாரம் 4-6
அதிகாரம்-1 – சாம்பசிவ ஐயங்கார்
“புத்தியில்லாதவனுக்குச் சுகமில்லை; என்ன செய்கிறது குட்டிச் சுவரைப்போல வயதான ஒரு கிழம் சொல்லுகிறதே, அதைக் கேட்கவேண்டுமே என்கிற மதிப்பு கொஞ்சமாவது இருந்தால் இந்த கஷ்டமெல்லாம் ஏன் உண்டாகிறது?” என்று எள்ளும் கொள்ளும் வெடிக்கத் தகுந்த கடுகடுத்த முகத்தோடு கனகம்மாள் தனக்குத்தானே மொழிந்து கொண்டு சமையலறையிலிருந்து கூடத்து அறைக்குச் சென்றாள்.
கூடத்தில் போடப்பட்டிருந்த சாய்மான நாற்காலியில் சாய்ந்து தமக்கெதிரில் இருந்த சிறிய மேஜையின் மீது கால்களை நீட்டி விட்டிருந்த டிப்டி கலெக்டர் சாம்பசிவ ஐயங்கார் தமது இடக்கரத்தால் நெற்றியைப் புதைத்துக் கண்களை மூடியவண்ணம் அசைவற்றிருந்தார். அவருடைய அன்னை கனகம்மாள் அப்போதைக் கப்போது கொடுத்த கூர்மையான சொல்லம்புகள் அவருடைய செவிகளுக்குள் நுழைந்து துளைத்தனவாயினும் அவர் உணர்வு பெறாமற் சும்மா விருப்பதே சுக மென்றிருந்தார்.
குறிப்பு:- சாம்பசிவ ஐயங்கார். மேனகா என்பவை உண்மைப் பெயர்களை மறைக்கும் பொருட்டு வைக்கப்பட்ட கற்பனைப் பெயர்கள்.
நார்மடிப் புடவையும், நரைத்த சிகையும், துளசி மணி மாலையும், இளமை வடிவமும், பூனைக் கண்ணும், பொக்கைப் பல்லும், வெள்ளிச் செம்பும், தொள்ளைக்காதும் பளபளவென மின்னத் திரும்பி வந்த கனகம்மாள், “ஒரு தரமா! இரண்டு தரமா! கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப் போல் இலட்சந்தரம் படித்துப் படித்துச் சொன்னேன். பிள்ளைக்கும் பெண்ணுக்கும் பொருத்த மிருக்கிறதா இல்லையா வென்று பார்த்து கலியாணத்தைச் செய்யச்சொன்னேன்; அது காதில் நுழையாமல் போய்விட்டது” என்று கூறிக்கொண்டே திரும்ப வும் சமையலறைக்குள் சென்றாள்.
வீட்டில் மனைவியிடம் கோபத்தையும் ஆத்திரத்தையும் காட்டி, குண்டுச்சட்டியிற் குதிரை யோட்டி, வெளியில் யாவரிடத்திலும் இனிமையே வடிவாய் யாவருக்கும் நல்லவராய் ஒழுகி வரும் எத்தனையோ மனிதரை உலகம் கண்டிருக்கிறது. ஆனால், தஞ்சையின் டிப்டி கலெக்டரான நமது சாம்பசிவ ஐயங்காரோ ஊருக்கெல்லாம் பெருத்த புலி, வீட்டிற்கு மாத்திரம் எலி; பிறரைக் கெடுக்க வேண்டுமென்னும் பொல்லா மனதுடையவ ரன்றாயினும், அவர் தமது முன் கோபத்தாலும், அவசரபுத்தியாலும் தமக்குக் கீழிருந்த தாசில்தார்கள், ரிவின்யூ இன்ஸ்பெக்டர்கள், குமாஸ்தாக்கள், கிராம அதிகாரிகள், சேவகர்கள் முதலியோர் யாவரையும் திட்டி விடுவார். சேவகர் முதலிய சிப்பந்திகளை அடிப்பதும் வழக்கமாக வைத்திருந்தார். ஒருநாள் அவர் சுற்றுப் பிரயாணம் சென்று வல்லமென்னும் ஊரில் ஒரு சாவடியில் தங்கினார். காலையில் வெளியிற் சென்று தமது அலுவல்களை முடித்து விட்டு பகற் பன்னிரண்டு மணிக்கு சாவடிக்கு வந்து போஜனம் முடித்தார். சாதாரண ஜனங்கள் தமக்கு ஒழிந்த காலத்திலும், தாம் இன்புற்றிருக்கும் காலத்திலும் தமது குழந்தைகளை யெடுத்துக் கட்டியணைத்து முத்தமிட்டு சீராட்டிப் பாராட்டி, அவற்றின் மழலை மொழிகளைக் கேட்டு அவற்றுடன் கொஞ்சி குலாவுதல் வழக்கமன்றோ ; அவ்வாறு புது நாகரீகத்திற் பழகிய அதிகாரிகள் ஒழிந்த வேளையில், தமது பைசைக் (Bicycle) கிலுக்கு முகந்துடைத்து எண்ணெய் தடவி சீவிச் சிங்காரித்து பொட்டிட்டு மையிட்டுக் காற்றாகிய பால் புகட்டி அதனால் ஆத்ம திருப்தியடைதல் பெரும்பான்மையும் காணப்படுகிறது. நமது சாம்பசிவ ஐயங்காரும் அவர்களில் ஒருவராதலால், போஜனத்தின் பிறகு தமது இயற்கையின் படி இரட்டைச் சக்கர வண்டியின் இடத்திற் சென்றவர், அவ்வண்டியாகிய குழந்தைக்கு அன்று ஒரு நோய் கண்டிருந்ததை அறிந்தார். அவர் வெளியிற் சென்றிருந்த தருணத்தில் அவருடைய சமையற்காரன் மாதவன் அதில் முரட்டாட்டமாக ஏறி நெடுந்தூரம் சென்று அதை ஒடித்து வைத்திருந்தான். அதைக்கண்ட சாம்பசிவம் தமது நெற்றிக்கண்ணைத் திறந்தார். வசை மாரியைச் சொரிந்தார்; பிரம்பைக் கையிலெடுத்தார்; எதிரில் நடுநடுங்கி நின்ற டபேதார் ரெங்கராஜுவின் மீது சீறிப் பாய்ந்தார். “நாயே! நீ இங்கே எதற்காக இருக்கிறாய்? உன்னுடைய டாலி டவாலிகளைக் கழற்றிக் கீழே வைத்துவிடு; என் முன்னால் நில்லாதே; ஓடிப்போ கழுதை; உனக்கு எதற்காகச் சம்பளம் கொடுத்துப் பிண்டமும் கொட்டி வீட்டில் உட்காரவைத்திருக்கிறது?” என்று தாறுமாறாய்த் திட்டினார். அவருக்கு முன்னர் வந்திருந்த டிப்டி கலெக்டர்களிடத்தில் அத்தகைய அவமதிப்பை பெற்றறியாத ரெங்கராஜு வின் முகம் சினத்தினால் சிவக்க, இரத்தம் தெறித்தது. அவன் தன்னை அடக்கிக்கொண்டு, “இல்லெ சாமி! சமையக்கார ஐயரு ஏறிக்கிட்டுப் போனாரு; எனக்குச் சங்கதி தெரியாதுங்க!” என்று பணிவாக மொழிந்தான். பெருஞ் சீற்றத்தினால் தமது மதியை இழந்த நமது ருத்ர மூர்த்தி, “அந்தப்பயல் இதைத் தொடும்போது யாருக்கு சிறைத்துக்கொண்டு இருந்தாய்? போக்கிரி நாயே! குற்றத்தைச் செய்து விட்டு எதிர்த்துப் பேசுகிறாயா?” என்று பிரம்பை ஓங்கி அவனை இரண்டு அடிகள் அடித்து விட்டார். மானியும் முரட்டு மனிதனுமாகிய ரெங்கராஜு உடனே தன்னை மறந்தான். அவரது கையிலிருந்த பிரம்பைப் பிடுங்கிக் கொண்டு வட்டியும் முதலுமாக அடியைத் திருப்பிக்கொடுத்து அவருடைய கோபம் தணியும்படி செய்து விட்டான். அதன் பிறகு ரெங்கராஜு பல நாட்கள் வரையில் தன் வேலை போய்விட்ட தென்றே நினைத்து வெற்றிலைப் பாக்குக் கடை வைக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தான். ஆனால் டிப்டி கலெக்டரோ சிறிதும் களங்கமற்ற இருதயம் உடையவராதலால், அந்த நிகழ்ச்சியை அன்றோடு மறந்து விட்டார். அவனைத் தமது வீட்டைவிட்டு மாற்றாமலே வழக்கப்படி அன்பையும், கோபத்தையும் மாறிமாறிக் காட்டி வந்தார். இத்தகைய குணமுடையவர் தமது — வீட்டில் மாத்திரம் அடங்கி ஒடுங்கி அன்னையின் மனதிற்கு விரோதமின்றி நடந்து வந்தார்.
முற் கூறப்பெற்றவாறு கோபத்தோடு சமையலறைக்குள் சென்ற கனகம்மாள் திரும்பவும் வெளியில் வந்தவள், “ஜாதகத்தை நன்றாக பாரடா பாரடாவென்று தலையிலடித்துக் கொண்டேன்; ஏதோ காக்கை, குருவி கத்துகிறதென்று நினைத்தானே யொழியக் கொஞ்சமாயினும் அதைக் காதில் வாங்கினானா?” என்றாள்.
அதைக் கேட்ட சாம்பசிவ ஐயங்கார் பொறுமையாக, “ஆமாம்; வெள்ளைக்காரர்க-ளெல்லாரும் ஜாதகம் பார்த்துத்தான் கலியாணம் செய்கிறார்களோ? அவர்களில் ஸ்திரீ புருஷர் சண்டையில்லாமல் அன்போடு ஒற்றுமையாய் வாழவில்லையா? அதெல்லாம் பைத்தியந்தான். நொண்டி வழியால் முயல் போய்விட்டதாக்கும்” என்று மெதுவாக முணுமுணுத்தார்.
கனகம் :- வெள்ளைக்காரனைப் பார்த்துப் பார்த்துத்தானே அநியாயமாய் நம்முடைய தேசமே நாசமாய்ப் போய் விட்டது. ஆனால் அது அவனுடைய குற்றமன்று; உங்களுடையது. நாம் அவனுடைய வழக்கத்தைப் பின்பற்றினால், முற்றிலும் அதையே செய்தல் வேண்டும். இல்லையாகில், நம்முடைய பழக்கவழக்கத்தை விடக்கூடாது; வெள்ளைக்காரன் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதில்லை; ஆகையால்; அதை நீங்களும் செய்ய முயலுகிறீர்கள்; ஆனால் அவர்கள் பக்குவமடைந்த பெண்ணையும், பிள்ளையையும் ஒருவரோடு ஒருவர் ஐந்தாறு மாதகாலம் பழகும்படி விடுத்து அவர்களுடைய மனமும், குணமும் பொருந்துகின்றனவா வென்று பார்க்கிறார்களே! அப்படி ஏன் நீங்கள் செய்கிறதில்லை? உங்களுடைய காரியமே எப்போதும் பாதிக்கிணற்றைத் தாண்டுவதுதானே. நாம் பாலிய விவாகம் செய்வது நலமென்று வைத்திருக்கிறோம்; பெண்ணும் பிள்ளையும் ஒற்றுமையாய் வாழ்வார்களா வென்பதை அப்போது அனுபவத்தில் அறிய முடியாதாகையால் ஜாதகத்தின் மூலமாக அறிய முயல்கிறோம். அவர்களுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை கிடையாது; பெண்களையும் பக்குவமடைந்த பிறகே மணம் செய்விக்கிறார்கள். ஆகையால், கைப்புண்ணிற்குக் கண்ணாடி எதற்கு? ஏட்டின் மூலமாய் அறிதலை விட அனுபவத்திலேயே விடுத்துப் பார்த்து விடுகிறார்கள். அதுவும் நல்ல ஏற்பாடுதானே; இல்லற வாழ்க்கை என்பது கணவன், மனைவி யென்னும் இரண்டு மாடுகளால் ஒற்றுமையாக இழுத்து நடத்தப்படும் வண்டி யல்லவா? நம்மிடமுள்ள மாடும் நாம் புதிதாய்க் கொள்ளப்போகும் மாடும் ஒருமணப்பட்டு உழைக்கின்றனவா என்பதை அறிய நாம் அவற்றை வண்டியிற் பூட்டிப் பார்ப்பதில்லையோ? மனமொத்து வாழ்வதற் குரிய காரியமல்லவா? நாம் நம்முடைய பெண்ணின் மீது ஆண் காற்று வீசுதல் கூடாதென நினைக்கிறோம். வெள்ளைக்காரர்கள் நீடித்த பெருத்த லாபத்தைக் கருதி அற்பக் கேட்டைப் பொருட்படுத்தவில்லை; ஒரு பெண் தனக்குக் கணவனாக வரிக்கப்படும் மனிதனோடு சொற்பகாலம் ஒருமித்துப் பழகுவதினால் என்ன கெடுதி சம்பவிக்கப் போகிறது? அவள் ஒருவனிடம் திருப்தியாக நடக்கத் தவறினும், அவனிடத்திற் கற்ற பாடத்தை இன்னொருவரிடத்தி லாயினும் ஒழுங்காக ஒப்புவிப்பா ளன்றோ ? அவர்கள் காரியவாதிகள். நீங்களோ இரண்டிலும் சேராமல் அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் சேர்த்துக்கொண்டு திரிசங்குவின் சுவர்க்கத்திலிருக்கிறீர்கள். சாக்குலே கொஞ்சம், பேக்குலே கொஞ்சம் என்றவனுடைய அறியாமைக்கும் – உங்களுடைய அறியா மைக்கும் வித்தியாசமில்லை. நாங்கள் சொன்னால் உங்களுக் கெல்லாம் மூக்கின் மேல் கோபம் வந்துவிடும். நீங்கள் எல்லாமறிந்த மேதாவிகள்; நாங்கள் இங்கிலீஷ் பாஷை படித்தறியாத முட்டாள்கள். பழைய மூட நம்பிக்கைகளை விடாத பட்டவர்த்தனம்; கர்நாடகம். புது நாடகமாடும் உங்களுக்கெல்லாம் இவ்வித உபத்திரவங்கள் வருவதேன்? ஆனால் உங்களுக்கென்ன வருத்தம்? நீங்கள் செய்யும் விஷப்பரிட்சையினால் ஒன்றையுமறியாத பேதைப் பெண்கள் வதைப்பட்டு அழிகிறார்கள் – என்றாள்.
குறிப்பு – ஒருநாள் கன்னட பாஷை பேசும் பிராமணர்கள் சிலர் தங்களுக்கு மாத்திரம் ஒரு விருந்து செய்து கொண்டார்களாம். கன்னட பாஷை யறியாத ஒரு தமிழன் அவர்களைப் போல வேஷம் போட்டுக் கொண்டு போஜனத்திற்கு உட்கார்ந்தானாம்; வாழைக்காய் கறியும், பாவற்காய் கறியும் கொணர்ந்து பரிமாறியவன் தமிழனுக்குக் கொஞ்சம் பரிமாறி விட்டு “சாக்கா?””பேக்கா?” என்றான். அவை “போதுமா?””வேண்டுமா?’ என்ற அர்த்தத்தைக் கொண்ட கன்னட மொழிகள். அவற்றை அறியான் தமிழன், அவையிரண்டும் இரண்டு கறிகளை முறையே குறித்தன வென்று நினைத்த தமிழன், “சாக்குல கொஞ்சம் பேக்குல கொஞ்சம் ” என்றானாம். உடனே அவனை பிடித்து உதைத்து வெளிப்படுத்தினார்கள் என்று ஒரு வரலாறு உண்டு.
சாம்பசிவ ஐயங்கார் சிறிது கோபங்கொண்டார். எனினும் அதைக் காட்டாமல், “அம்மா! என்ன பைத்தியம் இது! எல்லாம் அவரவர்களுடைய தலைவிதிப்படிதானே நடக்கும். நம்மாற் செய்யக்கூடிய தென்ன இருக்கிறது? ஆயிரம் முறை ஜாதகத்தைப் பார்த்தோ அல்லது அநுபோகத்தில் விடுத்தோ கலியாணம் செய்தாலும் வீட்டுக்கு வீடு வாசலுண்டு; கணவனுக்கும், மனைவிக்கும் சண்டையில்லாத வீடேது. ஒரு வீட்டில் சொற்ப சண்டை இருந்தால் இன்னொரு வீட்டிற் பெருத்த பூசலா யிருக்கிறது. ஏழைக் குடும்பங்களில் புருஷன் வழக்கத்திற்கு மாறாக சிறிது தாமதமாய் வீட்டிற்கு வந்தால், அவன் வேறு எந்த ஸ்திரீயோடு பேசி விட்டு வந்தானோ வென்று நினைத்து அவன் மனைவி எரிச்சலும் பொறாமையும் கொண்டு அவனுக்குச் சாப்பாடு போடாமல் கோபித்துக் கொண்டு குப்புறப் படுத்து விடுகிறாள். பெரிய மனிதர் வீட்டிலோ தான் இல்லாத காலத்தில் தன் மனைவி பரிசாரகனோடு திருட்டு நட்புக் கொண்டாளோ வென்று கணவன் ஐயுறுகிறான். இப்படி தக்க முகாந்தரம் இன்றி ஒருவருக்கொருவர் சண்டை யிடுதலும் ஒருவர் மீதொருவர் வெறுப்பைக் கொள்ளுதலும் மனித இயற்கை; என்றாலும் இவன் செய்த காரியத்தைப்போல இந்த உலகத்தில் எவனும் செய்யத்துணிய மாட்டான்; இந்த முட்டாள் என்னை எவ்வளவு அவமதித்து நினைத்த விதம் வைது அவமானப் படுத்தினான் தெரியுமா? இப்படிச் செய்தவன் பெண்ணுக்கு என்ன தீங்கைத்தான் செய்யமாட்டான்! அண்டை வீட்டுக்காரர்கள் என்னைக்கண்டவுடன் கண்ணீர் விட்டு அழாத குறையாக இவன் படுத்திவைத்த பாட்டையெல்லாம் சொன்னார்கள். அடடா! என்ன துரதிருஷ்டம்! நமக்கிருப்பது ஒரே பெண் குழந்தை யென்று அதன் மேல் நமது ஆசையை யெல்லாம் வைத்து, கிளியை வளர்ப்பதைப் போல எவ்வளவோ அருமையாக வளர்த்து இங்கிதம் அறியாத எருமைக்கடா வினிடத்திற் கொண்டு போய்த் தள்ளினோமே! நம்முடைய புத்தியில் ஆயிரம் தரம் செருப்பால் அடித்துக் கொண்டாலும் அது நம்முடைய மடமைக்கும் போதாது” என்றார்.
கனகம் :- ஆமடா அப்பா! கலியாணத்திற்குப் பெண்ணிருப்பதாகப் பத்திரிகையில் விளம்பரம் செய்து புருஷனைத் தேடிப் பிடித்தாயல்லவா! அதற்குத் தக்க மரியாதையை நீ பெறவேண்டாமா? இந்தமாதிரி அதிசயத்தை எங்கள் அப்பன், பாட்டன் காலத்தில் கேட்டதேயில்லை. இது பெருத்த கூத்தாகத்தான் இருக்கிறது. இந்த உபாயத்தை நீங்கள் எவரிடத்திற் கற்றுக் கொண்டீர்களோ! உங்கள் குருவாகிய வெள்ளைக்காரர்கள் கூட இப்படிப் பத்திரிகையில் விளம்பரம் செய்வதில்லையாமே? வியாபாரத்திற்குப் பெண்ணிருக் கிறதென்று எழுத உங்களுக்கு வெட்கம், மானம் முதலியவை கூடவா இல்லாமற் போகவேண்டும்! சாமான்களை விலைக்குக் கொள்வதைப் போல வியாபாரம் செய்தால் இம்மாதிரியான துன்பந்தான் சம்பவிக்கும். இப்படிக் கலியாணம் செய்வதைவிட மாப்பிள்ளையை வி. பி. தபாலில் அனுப்பும்படி விளம்பரம் செய்வீர்களானால், அது இன்னம் சுலபமா யிருக்கும். தங்கமான பெண்ணை முன்பின் கண்டும் கேட்டு மறியாத ஒரு பைத்தியத்தினிடம் கொண்டுபோய்த் தள்ளி அவளை மீளாத வேதனைக்கு ஆளாக்கினீர்கள். இரண்டு கெட்ட முண்டைகளும் நாசமாய்ப் போக; என் வயிறெரிகிற மாதிரி அவர்களுடைய வயிறு எப்போது எரியுமோ? இராவணன் குடியைக் கெடுக்க ஒரு சூர்ப்பனகை வந்தாள்; இந்தப் பைத்தியத்தின் குடியைக் கெடுக்க இரண்டு சூர்ப்பனகைகள் வந்திருக்கிறார்கள். அவர்கள் இருக்கிற வரையில் அந்தக் குடும்பம் உருப்படப்போகிறதில்லை. நம்முடைய குழந்தையும் சுகப்படப் போகிறதில்லை என்றாள்.
சாம்பசிவஐயங்கார்:- இனிமேல் என் உயிர் போனாலும் பெண்ணை அங்கே அனுப்ப மாட்டேன். இரண்டு புலிகளின் நடுவில் ஒருமான் அகப்பட்டுக் கொண்டு விடுபட வழியறி யாமல் வருந்துவதைப் போல அந்தத் துஷ்டர்களிடம் இவளிருந்து ஒருநாள் வாழ முடியாது. இவள் இனி இங்கேயே இருந்து விடட்டும், பாலியத்திலேயே விதவையாய்ப் போனதாக நினைத்துக் கொள்வோம்; பெண்கள் சுகப்படும் பொருட்டு புருஷன் வீட்டுக்குப் போவது வழக்கம். துன்பங்கள் அனுபவிக்க யார் அனுப்புவார்கள்? கலியாணத்துக்கு மூவாயிரம் ரூபா கொடுத்தோம். சாந்தி முகூர்த்தத்திற்கு இரண்டாயிரம் ரூபா பெறுமானமுடைய சிறப்புகளைச் செய்தோம். நான் ஒன்றும் செய்யவில்லை என்று நாத்திமார் இருவரும் தூஷிப்பதும் இடித்திடித்துப் பேசுவதும் கணக்கு வழக்கில்லையாம். ஒரு பிடி அரிசியெடுத்து பிச்சைக்காரனுக்குக் போட்டுவிட்டாளாம்; அரைப்படி அரிசியைப் போட்டுவிட்டா ளென்று அவர்கள் அந்தப் பைத்தியத்துக்குச் சொல்லிக் கொடுத்தார்களாம். அந்த முழுமுட்டாள் இரும்புக் கரண்டிக் காம்பைப் பழுக்கக் காயவைத்துக் கையிற் சுட்டுவிட்டானாம். இதைக் கேட்டவுடன் என் மனம் பட்டபாட்டை என்னவென்று சொல்வேன் ! மானத்துக்கு அஞ்சிப் பேசாமல் வந்துவிட்டேன்.
கனகம் :- ஆகா! பொறுமையில் பூமாதேவி என்றே நம்முடைய குழந்தை மேனகாவை மதிக்க வேண்டும். இத்தனை அக்கிரமங்கள் நடந்திருந்தும், இவள் தன் புருஷன் மீதும், நாத்திமார்களின் மீதும் எவ்வித குறையும் சொல்ல வில்லையே! சூடுபட்ட தழும்பைக் கண்ட போது எனக்கு சந்தேகம் உதித்தது; என்ன வென்றேன். நெருப்புத்தணல் தவறுதலாகக் கையில் விழுந்து விட்டதாகச் சொன்னாளே மேனகா! ஆகா! இவளுடைய நற்குணமும், பெருமையுமே அவர்களை அவசியம் அடித்துவிடும். கொலை செய்யக்கூட அஞ்சமாட்டார்கள் பாதகர்கள். நகைகளை யெல்லாம் பறித்து அடகு வைத்து வாயிற் போட்டுக்கொண்டு குழந்தையை பிறந்த மேனியாக விட்டது போதாதென்று, இப்படி அடித்தும், சுட்டும், வைதும் உபத்திரவிப்பார்களோ! நம்முடைய பெண்ணுக்காகத்தானே நாம் இவ்வளவு பொருளை வாரிக்கொடுத்தோம். நம்முடைய பொன் மாத்திரம் விருப்பமாயிருக்கிறதோ? பிறர் தேடும் பொருளில் இப்படிப் பேராசை கொண்டலையும் நாய்களுக்கு வெட்கமென்ன? மானமென்ன? பௌரஷமென்ன? ஆணவமென்ன? அடடா! அவர்கள் வீடு குட்டிச் சுவராய்த்தான் போய்விடும் – என்றாள்.
சாம்ப – என்னைக் கண்டவுடன் அந்தப் பைத்தியம், “ஏனடா இங்கே வந்தாய்? அயோக்கியப் பயலே!” என்றும், ”உள்ளே நுழைந்தால் காலை ஒடித்து விடுவே”னென்றும் என்னுடைய சேவகர்களுக்கு எதிற் சொன்ன வார்த்தையை நான் மறப்பேனா! – என்றார்.
சமையலறையிலிருந்த கனகம்மாள் ஆத்திரப் பெருக்கில் தன் கையிலிருந்த பெருத்த கீரைத்தண்டைக்கையிற் பிடித்த வண்ணமே டிப்டி கலெக்டருக்கெதிரில் தோன்றின காட்சி, அந்தக் கதாயுதத்தால் அவரை அடிக்க வந்ததைப்போல் இருந்தது. அம்மாள் ஆத்திரத்தோடு கையை நீட்டி, ”உனக்கு தெரியா தப்பா! அந்த முண்டைகள் மருந்து போட்டு விட்டார்களடா! கலியாணத்திற்குப் பின் இவ்வளவு காலமாக அவன் இப்படியா இருந்தான்! வரவர அவர்களுடைய துர்போதனையும், மருந்தும் ஏறிவிட்டன வப்பா! அவன் இதைத்தானா செய்வான்? இன்னமும் ஆயிரம் செய்வான். அவன் மேற் குற்றமில்லை. எறும்பூறக் கல்லும் குழிந்து போகாதா! ஓயாமற் போதித்துப் போதித்து மனதில் விஷத்தை ஊட்டிக் கொண்டே வந்தால், கரையாத மனதும் கரைந்து போகாதா?” என்றாள்.
சாம்பசிவ ஐயங்கார், “அவன் கடைசியில் என்ன செய்தான் தெரியுமா? நான் பெண்ணை அழைத்துப் போக வேண்டு மென்று அவனிடத்திற் சொன்னேன். உடனே அவன் செருப்பை எடுத்துக்கொண்டு என்னை அடிக்க வந்தான். நல்ல வேளையாக நம்முடைய சேவக ரெங்கராஜு அவனைத் தடுத்து மறைத்துக் கொண்டான். இல்லாவிட்டால், மிகவும் அவமானம் நேரிட்டிருக்கும்” என்றார்.
கனகம்மாள் விசனத்தோடு , “சரிதான்; மாமனாருக்குத் தகுந்த மாப்பிள்ளைதான். உனக்குக் கீழிருப்பவரை அடிக்காதே, வையாதே யென்று நான் எத்தனை தடவைகளில் சொல்லித் தலையில் அடித்துக் கொண்டும் நீ கேளாமற் செய்கிறா யல்லவா, அது வீணாய்ப் போகுமா? நமக்குக் கண்ணுக்குக் கண்ணான குழந்தைமேல், உன் பாபமூட்டை வந்திறங்கி விட்டதாக்கும். உம்; எல்லாம் தலைவிதியப்பா! காசைக் கொடுத்துத் தேளைக் கொட்ட விட்டுக் கொண்டதைப் போலப் பணத்தையும் கொட்டி, அருமையாய் வளர்த்த தங்கத்தையும் தாரை வார்த்தோம். என்ன செய்கிறது? பாத்திரமறிந்து பிச்சையிட வேண்டும். அந்த துஷ்ட முண்டைகளால் உபத்திரவம் உண்டாகு மென்பது எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும். முன் பின் தெரியாத இடத்தி லெல்லாம் சம்பந்தம் செய்து கொண்டால் அது இப்படித்தான் முடியும். போனது போகட்டும்; நம்முடைய குழந்தையை அழைத்துக்கொண்டு வந்தாயே , அதுவே போதும், அவள் இங்கேயே இருக்கட்டும். நல்ல காலம் வராமற் போகாது. அவனுக்கு எப்போது நல்ல புத்தி வரப்போகிறதோ , பார்க்கலாம்” என்ற வண்ணம் தன் ஆத்திரத்தை அடக்க வல்லமை அற்றவளாய்க் கண்ணுங் கண்ணீருமாய்க் கனகம்மாள் கீரைத்தண்டோடு சமையலறைக் குள் சென்றாள். துயரமே வடிவமாய் உட்கார்ந்திருந்த சாம்பசிவ ஐயங்கார், மேன்மாடியில் எவரோ விரலை மெதுவாய்ச் சொடுக்கித் தமக்குச் சைகை காட்டியதையுணர்ந்து மேலே நிமிர்ந்து பார்த்தார். அழகே வடிவாய்த் தோன்றிய பொற்கொடி போன்ற ஒரு பெண்மணி அங்கிருந்த வண்ணம் தன் சிரத்தை மாத்திரம் ஒரு பலகணியின் வழியாக நீட்டினாள். அவளுடைய கண்கள் அவரை வருந்தி அழைத்தன.
“சற்றே பருத்த தனமே குலுங்கத் தரளவடந்
துற்றே யசையக் குழையூசலாடத் துவர் கொள் செவ்வாய்
நற்றே னொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே.”
என்னத் தோன்றிய அம் முகத்தை நோக்கிய டிப்டி கலெக்டரின் துயரமும், முக வாட்டமும் பறந்து போயின; இன்ப மயமானார். பத்தரை மாற்றுப் பைம்பொன்னைப் பழித்த அப் பூங்கொடியின் மேனி நிறத்தை அவளால் உடுத்தப் பெற்ற மேகவருணப் பட்டாடையும் இடையை அலங்கரித்த தங்க ஒட்டியாணமும் ஆயிர மடங்கு வனப்பித்தன. வயிரக் கம்மல், வயிர மூக்குப் பொட்டு முதலிய உயர்தர இழைகள் அவளது வதனத்திற் சுடர்விட் டெரித்தன; கறுஞ் சாந்துத் திலகமே கண் கொள்ளாச் சிங்காரமாய்க் காண்போர் மனதிற் காமத் தீயை வளர்த்தது. அவளுக்கு முப்பது வயது நிரம்பியதாயினும், அவளது தோற்றம் அவளுக்கு வயது பதினேழேயென்று பொய்யுரைத்துப் பிரமாணம் செய்தது. அதிக உயரமும் குறுகலு மின்றி நடுத்தர உயரத்தையும், மிக்க பருமனும் மெலிவு மின்றி உருட்சி திரட்சியைக் கொண்ட உன்னத மேனியையும் பெற்றிருந்த அவளிடத்தில் பக்குவ காலத்து யௌவன மடமயிலார்க்கு உரிய விவரித்தற்கரிய வசீகரத் தன்மையும், காண்போர் கண்ணையும் மனத்தையும் ஒருங்கே கவரும் அன்றலர்ந்த அரவிந்தத்தின் தள தளப்பும், மென்மையும் மற்றெல்லா நலன்களும் கொள்ளையாய்ப் பொலிந்தன. யாதொரு மகவையும் பெறாத புதிய சோபனப் பெண்ணைப் போல ஒளிர்ந்து அஞ்சுகம் போலக் கொஞ்சும் அவ் வஞ்சிக்குத் தங்கம்மாள் என்று பெயர் சூட்டியது எத்தகைய பொருத்தம்! கொடிய குணத்தையும் கடிய மனதையுங் கொண்ட கரடி, புலி, சிங்கம் முதலிய விலங்குகளும் தம் பேடுகளைக் கண்டால் அடங்கி ஒடுங்கித் தமது செருக்கை யிழந்து அவைகளின் காலடியில் வீழ்ந்து அவைகளை நாவினால் நக்கிக் கொடுத்து நைந்திளகு மென்றால், யாவர்மீதும் கோபங்கொள்ளும் சாம்பசிவ ஐயங்கார் அழகுக் குவியலாய்க் காணப்பட்ட தம் மனையாட்டியைக் கண்டு வெண்ணெயைப்போல் இளகி இன்பமாய் நின்றது விந்தையாமோ? மேன்மாடியி லிருந்த காந்தம் டிப்டி கலெக்டரின் சிகையைப் பிடித்து உலுக்கி மேலே இழுத்தது. அடுத்த நொடியில் அவர் மேலே சென்று அந்த வடிவழகியின் பக்கத்திற் பல்லிளித்து நின்றார்.
அதிகாரம் 2 – இராகு, கேது, சனீசுவரன்
சென்னை, திருவல்லிக்கேணித் தொளசிங்கப்பெருமாள் கோவில் தெருவிலுள்ள ஒரு சிறிய இல்லத்தின் கூடத்தில் ஊஞ்சல் பலகையின் மீது குதூகலமாக ஒரு யௌவன விதவை உட்கார்ந்து ஆடிக்கொண்டிருந்தாள். அவளுக்குச் சற்றேறக் குறைய பதினெட்டு வயதிருக்கலாம். அவளுடைய சிரத்தின் உரோமமும், ஆபரணங்களும் விலக்கப்படாமலிருந்தன. அவளுடைய கண்களும், கன்னங்களும் குழிந்திருந்தமை யாலும், மனத்தின் வனப்பும், மஞ்சளின் வனப்பும் இல்லாமை யாலும் அவள் போய்க்கொண்டவளைப் போல காணப் பட்டாள். தசைப் பற்றுத் துரும்பு போலிருந்த அவளுடைய மேனி, அவள் சூனியக்காரியோ வென்னும் ஐயத்தை உண்டாக்கியது. மண்வெட்டியின் இலையைப் போலிருந்த அவளுடைய பற்களைத் திறந்து அவள் அப்போதைக்கப்போது நகைத்தபோது, இளைக்காதிருந்த பற்களும், சுருங்கிப் போயிருந்த முகமும் முரணி விவகாரத் தோற்றத்தை யுண்டாக்கின. அவள் சிவப்புத் தோலும், வஞ்சக நெஞ்சமும், பொறாமைச் சொற்களும், அற்பபுத்தியும் பெற்றவள். விசனமும், மகிழ்வும், அழுகையும், நகைப்பும், கோபமும், அன்பும், பகைமையும், பட்சமும் அவளுக்கு நினைத்தா லுண்டாகும்; நினைத்தால் மறையும்.
அவளுக் கெதிர்ச்சுவரின் ஓரத்தில் உட்கார்ந்து இன்னொரு விதவை அப்பளம் செய்து கொண்டிருந்தாள். வஞ்சனையின்றி வளர்ந்த ஒதியங்கட்டையைப்போலக் காணப்பட்ட அவள், மொட்டையடித்து முக்காடிட்டிருந்தாள் ஆயினும் முப்பது வருஷங்களையே கண்டவளாயிருந்தாள். யானை இடுப்பும், பானை வயிறும், குறுகிய தலையும், பெருகிய காதும், கிளியின் மூக்கும், ஒளியில்லா பல்லும், உருண்ட கன்னமும், திரண்ட உதடும், குறும்பைத் தலையும், திரும்பாக் கழுத்தும் பெற்ற அந்த அம்மாள் தனது குட்டைக்கைகளும், மொட்டை தலையும் குலுங்கக் குலுங்க அதிவிரைவாக அப்பளம் செய்த காட்சி அற்புதமாயிருந்தது. அவளும் மகிழ்வே வடிவமாய்க் கூச்சலிட்டு நகைத்து ஊஞ்சலிலிருந்த தன் தங்கை கோமளத்தோடு உரையாடிக் கொண்டிருந்தாள்.
கோமளம் :- ஏனடி அக்காள்! வரவர உன் கை தேறி விட்டதே! இப்போது செய்துவைத்த அப்பளம் நம்முடைய வராகசாமியினுடைய சாந்தி முகூர்த்தத்தில் டிப்டி கலெக்டர் அகத்தில் (வீட்டில்) பொறித்த அப்பளத்தைப் போலிருக்கிறதே! – என்று கூறி நகைத்துப் பரிகாசம் செய்தாள். அதைக் கேட்ட பெருந்தேவியம்மாள், “நன்றாயிருக்கிறது! அந்த பிணங்களுக்கு மானம் வெட்கம் ஒன்றுமில்லை; பணம் ஒன்றுதான் பிரதானம்; அந்தச் சபிண்டிக்கு டிப்டி கலெக்டர் உத்யோகம் என்ன வேண்டியிருக்கிறது! ஆண், பெண் அடங்கலும் நித்திய தரித்திரம். அவர்களுடைய முகத்தில் விழித்தாலும்,
அவர்களுடைய தரித்திரம் ஒட்டிக்கொள்ளும்” என்றாள்.
கோமளம் :- ஏனடி அக்காள்! அப்படிச் சொல்லுகிறாய்? அவனுடைய அகமுடையாள் தங்கம்மாள். தாயார் கனகம்மாள் (கனகம் என்றால் தங்கம்) இரண்டு தங்க மலைக ளிருக்க, டிப்டி கலெக்டரை தரித்திர மென்கிறாயே! – என்றாள்.
பெருந்தேவி:- (நகைத்து) ஆமாம். குடிக்கக் கூழில்லாதவள் சம்பூரண லட்சுமி யம்மாளென்று பெயர் வைத்திருப்பதைப் போலிருக்கிறது. நம்முடைய வராகசாமிக்கு சோபன முகூர்த்தத்தின் போது டிப்டி கலெக்டர் இரண்டாயிரம் ரூபா கொடுத்தானே; அதற்குப் பதிலாக தங்கத்தையாவது; கனகத்தையாவது சீராக அழைத்து வந்திருக்கலாமே. டிப்டி கலெக்டரும் இரண்டாயிரம் ரூபா லாபமாவதை நினைத்து இருவரில் ஒருத்தியை சந்தோஷமாக அனுப்பி யிருப்பானே.
கோமளம் :- நம்முடைய வராகசாமியா ஏமாறுகிறவன். அவன் தங்கம்மாளைத்தான் கேட்டிருப்பான் – என்று கைகொட்டி நகைத்து ஊஞ்சலை விசையாக ஆட்டினாள்.
பெருந்தேவி சிறிது வெறுப்போடு, “ஆமாம்; சின்ன பீடை வந்து குடும்பம் நடத்தித்தான் குப்பை கொட்டி விட்டாளே. பெரிய பீடை வந்துவிட்டால் அக்காள் வாசந்தான். வீட்டுக்கு மூதேவி பெத்தம்மாள் வேறு தேவையில்லை” என்றாள்.
கோமளம்:- இந்தப் பெண்ணை வாலையும், தலையையும் கிள்ளிவிட்டு எப்படித்தான் வளர்த்தார்களோ! சுத்த மந்தியா யிருக்குமோ! பெண்ணாய்ப் பிறந்தவள் பாம்பைப் போலப் பரபரப்பாய்க் காரியங்களைச் செய்து கொண்டு எள்ளென் பதற்குள் எண்ணெயாய் நின்றாலல்லவா சந்தோஷமா யிருக்கும்! சோம்பேறிப் பிணம்; நன்றாக ஒன்றரைப்படி யரிசிப் பிண்டத்தை ஒரே வாயி லடித்துக்கொண்டு, ஒரு கவளி வெற்றிலையைப் போட்டுக்கொண்டு , மெத்தையை விட்டுக் கீழே இறங்காமற் சாய்ந்து ஹார்மோனியம் வாசித்துக் கொண்டு ஓயாமல் அவனோடு தனியாக விளையாடிக் கொண்டிருந்தால் அது போதாதோ? பெரிய மனிதர்களின் வீட்டுப் பெண்களுக்கு இவ்வளவு தான் தெரியும்; அந்த துப்பட்டிக் கலையக்கட்டரும் அதைத்தான் கற்றுக் கொடுத்திருப்பான்.
பெருந்தேவி :- அந்த மொட்டச்சி வளர்த்த முண்டை என்னடி செய்வாள்! தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால் பெண்ணை வீட்டிற் பார்க்க வேண்டுவதில்லை. வீட்டிலிருக்கிற தாய் பாட்டி முதலியோரின் நடத்தை எப்படி இருக்கிறது? தங்கத்தின் யோக்கியதையை நான் பார்க்கவில்லையோ? சாந்தி முகூர்த்தத்தின் போது அவ்வளவு கூட்டத்திலே, அகமுடையான் வந்து காலடியில் நிற்கும் போது, காலை நீட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்த தடிச் சிறுக்கிதானே அவள். அந்த குட்டையில் ஊறிய மட்டை எப்படி இருக்கும்!- என்றாள்.
அப்போது வாசற் கதவை யாரோ இடித்து, “பெருந்தேவி பெருந்தேவி!” என்று அழைத்த ஓசை உண்டாயிற்று. சந்தோஷத்தால் முக மலர்ச்சி பெற்ற பெருந்தேவி, “அடி! சாமா வந்திருக்கிறான்; கதவைத் திற!” என்றாள். உடனே கோமளம் எழுந்து குதித்துக் கொண்டோடி வாயிற் கதவைத் திறந்து விட, அடுத்த வீட்டுச்சாமா ஐயர் ஆடியசைந்து ஆடம்பரமாக உள்ளே நுழைந்தார். முதுகிலும், கழுத்திலும், கைகளிலும், மார்பிலும் வாசனை சந்தனத்தை ஏராளமாய்ப் பூசிக் கொண்டு, வாயில் தாம்பூலம், புகையிலை முதலியவற்றின் அழகு வழியப் புன் முறுவல் செய்தவராய்க் கூடத்திற்கு வந்தார். வாயிற் கதவைத் தாளிடாமற் சாத்திவிட்டுக் கோமளமும் அவரைத் தொடர்ந்து உள்ளே வந்தாள். அவர் இருபத்தாறு அன்றி இருபத்தேழு வயதடைந்தவர். அவர் நிலவளமுள்ள இடத்தில் உண்டான உருளைக் கிழங்கைப் போல உருண்டு திரண்ட சிவந்த மேனியைக் கொண்டிருந்தார். அவருடைய சுருட்டைத் தலை மயிரின் ஷோக்கு முடிச்சு ஒரு தேங்காயளவிருந்தது. அவர் மிக்க வசீகரமான தோற்றத்தையும் எப்போதும் நகைப்பை யன்றி வேறொன்றையும் அறியாத வதனத்தையும் கொண்டிருந்தார். அவருடைய கழுத்தில் தங்கக்கொடியும், தங்க முகப்பு வைத்த ஒற்றை உருத்திராட்சமும், காதில் வெள்ளைக் கடுக்கனும் இருந்தன. இடையில் துல்லியமான மல் துணியும், கழுத்திற் புதுச் சேரிப் பட்டு உருமாலையும் அணிந்திருந்தார். அவர் பெருந்தேவியம்மாளைப் பார்த்து புன்னகை புரிந்த வண்ணம் தோன்றி ஊஞ்சற் பலகையில் அமர்ந்தார்.
பின்னால் வந்த கோமளம், “அடி அக்காள் ! இதோ சாமாவைப் பாரடி, ஊரிலே கலியாணம், மார்பிலே சந்தனம் ” என்று கூறிய வண்ணம் சற்று தூரத்தில் தரையில் உட்கார்ந்தாள்.
தாம்பூலம் நிறைந்த வாயை நன்றாகத் திறந்து பேச மாட்டாமல் சாமாவையர் வாயை மூடியவாறே , “அழி! பெருந்தேவி! நல்ல வழன் வந்திழுக்கிழது ; ஒழே பெண்; ழெண்டு லெட்சம் ழுபாய்க்கிச் சொத்திழுக்கிழது, நல்ல சுயமாசாழிகள்; கலியாணம் செய்கிழாயா?” என்று வார்த்தைகளை வழவழ கொழகொழவென்று வெண்டைக் காய்ப் பச்சடியாக்கிப் பெருந்தேவிக்குப் பரிமாறினார். வாயைத் திறக்க மாட்டாமையால், “அடி”யென்பது “அழி”யாயிற்று. மற்றச் சொற்களிலுள்ள “ர”கரங்களெல்லாம் “ழ”கரங்களாயின. அது சரியான தமிழில், “அடி பெருந்தேவி! நல்ல வரன் வந்திருக்கிறது; ஒரே பெண்; இரண்டு லெட்சம் ரூபாய்க்குச் சொத்திருக்கிறது. நல்ல சுயம் ஆசாரிகள்; கலியாணம் செய்கிறாயா?” என்று ஆனது.
அதைக் கேட்ட கோமளம் குதித்தெழுந்து, “ஏனடா சாமா! பெண் சிவப்போ , கருப்போ ? என்ன வயசு? அகத்துக் காரிய மெல்லாம் செய்யுமா? பெண்ணுக்குத் தாயார் சண்டைக் காரியா?” என்றாள்.
சாமா:- பெண் மாநிறந்தான். வயது பன்னிரெண்டாகிறது. மூக்கும் முழியும் பலே சொகுசா யிருக்கிறது. வீட்டிற்கு வந்து ஆறு மாசத்திற் பிள்ளையைப் பெற்று விடும். அவர்கள் தங்கமான மனிதர்கள்.
கோமளம் :- அடே சாமா! நீ எப்போதும் உன் குறும்பை விடுறதில்லையே! நாளைக்கு உன் தம்பிக்கு பொண்டாட்டி வரும்போது, கையில் குழந்தையோடேயே வரப்போகிறாள் போலிருக்கிறது.
பெருந்தேவி:- (சிறிது) அடே சாமா! இது இருக்கட்டும் அவர்கள் எந்த ஊரடா?
சாமா:- அவர்கள் கும்பகோணத்துக் கடுத்த கோடாலிக் கருப்பூர்; பி.எல். பரிட்சை தேறிய பிள்ளைக்குத் தான் பெண்ணைக் கொடுப்பார்களாம். கையில் ரொக்கமாகப் பதினாயிரம் ரூபா கொடுக்கப் போகிறார்கள். அதற்கு மேல் சீர் சிறப்புகள் எப்படி இருக்குமோ நீயே பார்த்துக்கொள். நம்முடைய வராகசாமிக்கு இந்தப் பெண் அகப்பட்டு விட்டால், நம்முடைய கலி நீங்கிப் போகும், குட்டுப் பட்டாலும் மோதிரக் கையாற் குட்டுப்பட வேண்டும். இது வல்லவா சம்பந்தம்! பெண்ணின் தகப்பனார் அந்த ஊருக்கே அதிபதி ; கோடீசுவரர்; ஒரே பெண் – என்றார்.
பெண்டிர் இருவரும் வியப்படைந்து வாயைப் பிளந்தனர்.
கோமளம் :- (பெருமகிழ்ச்சி காட்டி) பெண்ணின் பெயரென்னடா- என்றாள்.
சாமா:- பங்கஜவல்லியாம்.
பெருந்தேவி :- (சந்தோசத்தோடு) நல்ல அழகான பெயர். மேனகா வாம் மேனகா! பீனிகாதான். தொடைப்பக்கட்டை பீடை நம்மைவிட்டு ஒழிந்து போனது நல்லதுதான். இதையே முடித்து விடுவோம்; இந்த ஊருக்கு இப்போது அவர்களில் யாராயினும் வந்திருக்கிறார்களா?
சாமா:- பெண்ணுக்கு அம்மான் வந்திருக்கிறார். அவரை இங்கே இன்று ராத்திரி அழைத்து வருகிறேன். அதற்குள் உன் தம்பி வராகசாமியும் கச்சேரியிலிருந்து வரட்டும்; அவனுடைய அபிப்பிராயத்தைக் கேட்போம்.
பெருந்தேவி :- அவன் என்ன சொல்லப் போகிறான்? நாம் பார்த்து எவளைக் கலியாணம் செய்து வைத்தாலும் அது அவனுக்குத் திருப்திதான். இப்போது முதலில் பதினாயிரம் ரூபா வருகிறது. ஒரே பெண் ; பின்பு ஆஸ்தி முழுவதும் வந்து சேர்ந்து விடும். இந்த சம்பந்தம் கசக்குமோ! அவன் என்ன ஆட்சேபனை சொல்லப் போகிறான். நீ எதைப் பற்றியும் யோசனை செய்ய வேண்டாம்; இதையே முடித்துவிடப்பா. இந்த ஆனி மாசத்துக்குள் முகூர்த்தம் வைத்து விடு.
சாமா:- ஆகா! எவ்வளவு சுருக்கு! கலியாண மென்றால் உங்கள் வீட்டுக் கிள்ளுக்கீரைபோலிருக்கிறது. இதில் பல இடைஞ்சல்கள் இருக்கின்றன. பெண்ணுக்கு அம்மான் என்னைக் கேட்ட முதற் கேள்வி என்ன தெரியுமா? உங்களுக்குச் சொந்தத்தில் வீடிருக்கிறதா’ வென்று கேட்டார்.
பெருந்தேவி:- (ஆவலோடு) இருக்கிறதென்று சொல்லுகிறதுதானே.
சாமா:- ஆம்; அப்படித்தான் சொன்னேன். சொல்லுவது மாத்திரம் போதுமா? வீடு வேண்டாமா? நாம் அவர்களுக்கு எல்லா விஷயத்திலும் சரி சமானமாக இல்லாமற் போனாலும் ஒரு வீடாவது நமக்கு அவசியம் இருக்கத்தான் வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம்; வராகசாமிக்கு முன்னொரு கலியாணம் ஆயிருக்கிற தென்பதும், அந்தப் பெண் உயிரோடு இருக்கிறாள் என்பதும் அவர்களுக்குத் தெரிந்தால், அவர்கள் பெண்ணைக் கொடுக்கமாட்டார்களே; அதற்கு என்ன யோசனை சொல்லுகிறாய்?
கோமளம் :- அது இவர்களுக்கு எப்படித் தெரியப் போகிறது? கேள்வியுண்டானால் இல்லையென்று சொல்லி விட்டாற் போகிறது.
சாமா:- (கலகலவென்று சிரித்து) கோமளத்தின் புத்தி உலக்கைக் கொழுந்துதான். முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? அதெல்லாம் பலியாது; கலியாணம் முடிவானபின் இரகசியம் வெளியானாற் கவலையில்லை ; அதற்கு முன் வெளியானாற் குடி கெட்டுப் போகும். கலியாணம் நின்று போய்விடும்.
பெருந்தேவி :- ஊருக்கெல்லாம் வாந்தி பேதி வருகிறது; இந்தப் பீடைக்கு வரமாட்டே னென்கிறதே; இங்கே இருந்து போய் ஒரு வருஷமாய்விட்டது. நானாயிருந்தால் இந்தமாதிரி அவமானப்பட நேர்ந்தால், உடனே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு உயிரை விட்டிருப்பேன். புருஷன் தள்ளி விட்டானென்று ஊர் முழுவதும் ஏளனஞ் செய்வதைக் கேட்டு எந்த மானங்கெட்ட நாய்தான் உயிரை வைத்திருக்கும்.
சாமா – அவளைத் தொலைப்பதற்கு வழி முதலிலேயே சொன்னேன். நீங்கள் கவனிக்கவில்லை. தப்பித்துக் கொண்டு போய்விட்டாள். இப்போது என்ன செய்கிறது?
பெருந்தேவி :- ஆமடா சாமா! அது நல்ல யோசனைதான். அதைச் செய்திருந்தால் இப்போது காரியம் நன்றா யிருக்கும்.
கோமளம் :- என்ன யோசனை? எனக்குச் சொல்ல வில்லையே; விஷத்தைக் கொடுத்துக் கொன்று விடுகிறதோ?
சாமா:- சேச்சே! இல்லை இல்லை. அதெல்லாம் வம்பாய் முடியும். நம்முடைய தலைக்கு வந்து சேரும்.
பெருந்தேவி:- கோமளம்! அது உனக்குத் தெரியாது. சாமாவுக்கும் எனக்குந்தான் தெரியும்.
கோமளம் :- (முகத்தைச் சுளித்துக் கொண்டு) எனக்குச் சொல்லப் படாதோ? சாமா மாத்திரந்தான் உனக்கு உறவாக்கும்?
பெருந்தேவி :- அது வராகசாமிக்குத் தெரிந்தால் குடி கெட்டுப் போகும்; மண்டையை உடைத்து விடுவான். நீ குழந்தை புத்தியினால் அவனிடம் சொல்லி விடுவாயோ வென்று பயந்து சொல்லாமலிருந்தோம். வேறொன்று மில்லை; நம்முடைய சாமாவின் முதலாளி நைனா முகம்மது மரக்காய னிருக்கிறானே; அவன் தன் தம்பியை இங்கே வேலை பார்க்க வைத்துவிட்டு சிங்கப்பூரிலுள்ள தன் வியாபாரத்தைப் பார்த்துக் கொள்ளப் போகிறானாம். அவன் மாமிசம் சாப்பிடுவதில்லையாம். மரக்கறி போஜனமே செய்பவனாம். அவனுக்குப் பிராமணருடைய போஜனத்தில் மிகவும் ஆசையாம். ஆகையால், சமையலுக்காக அவனுக்கொரு பிராமண ஸ்திரீ வேண்டுமாம். நல்ல அழகான சிறு பெண்ணாயிருந்தால் ரூபா. 5,000 ரொக்கமாகத் தருகிறே னென்று சாமா விடத்தில் தெரிவித்தானாம்; நம்முடைய மேனகாவை ரகசியமாய்க் கொண்டு போய்த் தள்ளிவிட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு வந்துவிட்டால் அந்தச் சனியனும் நம்மைவிட்டுத் தொலைந்து போகும்; அதனால் பெருத்த சொத்தும் கிடைத்துவிடும்; இதைத்தான் சாமா என்னிடம் சொன்னான். ஆனால் எனக்கு மனமில்லை; இப்படி வேறொருவனிடம் கொண்டு போய்த் தள்ளுவதைவிட விஷத்தைக் கொடுத்துக் கொன்றுவிடுவது நல்லதென்று நான் சொல்லி விட்டேன்.
கோமளம் :- அவள் துலுக்கனுக்கு நன்றாய்ப் பொங்கிப் போடுவாளே! ஒருநாளும் அவள் அதற்கு இணங்கமாட்டாள்.
சாமா:- நிஜந்தான். அவள் எங்கேயாவது கிணற்றிலோ கடலிலோ விழுந்து உயிரையாவது விட்டு விடுவாளேயன்றி அவனுக்கு ஒருநாளும் சமைத்துப் போடமாட்டாள். அந்தக் கவலை நமக்கெதற்கு? மரக்காயனிடம் நாம் பணத்தைக் கறந்து கொண்டு வந்து விடுவோம். அவள் அவனிடத்தில் உயிரை விட்டு விடட்டுமே! நாம் அவளைக் கொன்றோமென்பது இல்லாமல் போகுமல்லவா?
பெருந்தேவி :- ஆமடா சாமா! நீ சொல்வது நல்ல யோசனைதான். அவளை நாம் கொல்லுவதேன்? பாவம்! துலுக்கனிடத்தில் அகப்பட்டுக் கொண்டால் அவள் தானே உயிரை மாய்த்துக்கொள்ளுகிறாள்; அப்படியே முடித்து விடப்பா!
கோமளம் :- அவன் ஒரு வருஷத்திற்கு முன் சொல்லி யிருக்கிறான் போலிருக்கிறது. இப்போது வேறு யாரையாவது ஏற்பாடு செய்து விட்டானோ என்னவோ?
சாமா:- இல்லை இல்லை, நேற்றுகூட அவன் சொன்னான்.
பெருந்தேவி:- டிப்டி கலெக்டர்கூடப் பெண்ணை அழைத்துக் கொள்ளும்படி, தஞ்சாவூருக்கு போன ரெங்காசாரியார் மூலமாயும், சடகோபாசாரியார் மூலமாயும் சொல்லி யனுப்பினானே. நாம் இராஜி யாவதைப்போல பாசாங்கு செய்து பெண்ணை அழைத்து வந்து ஏழெட்டு நாட்கள் வைத்திருந்து பணத்தை வாங்கிக் கொண்டு தந்திரமாக அவளைத் தொலைத்துவிட்டு ஒன்றையும் அறியாதவரைப் போலிருந்து விடுவோமே. இது இரண்டாங் கலியாணத்துக்கு நிரம்பவும் அநுகூலமாயும் போகுமல்லவா?
கோமளம் :- மரக்காயன் சிங்கப்பூருக்குப் போகுமுன் அவள் அவனிடம் இருப்பதை யாராவது கண்டுவிட்டால் என்ன செய்கிறது?
சாமா:- அவனுடைய வீடு பெருத்த அரண்மனையைப் போலிருக்கிறது. அதற்குள் போய்விட்டால், பிறகு வெளியில் வழியே தெரியாது. கோஷாக்கள் இருப்பதால் உட்புறத்தில் எவரும் போகக்கூடாது; அந்த மாளிகைக்குள் எத்தனையோ மறைவான இடங்களும், ரகசியமான வழிகளும் இருக்கின்றன. அதற்குள் யார் இருக்கிறார்கள் என்பதை அவன் ஒருவன் அறிவானேயன்றி, மற்றவருக்கு ஒன்றுமே தெரியாது. அதைப்பற்றிக் கவலையில்லை.
பெருந்தேவி :- வராகசாமிக்கு அவள் மேலிருக்கும் வெறுப்பை மாற்றி, அவளைத் திரும்ப அழைத்துக் கொள்வதற்கு அவன் இணங்கும்படிச் செய்யவேண்டும். அதுவரையிற் கறுப்பூர் சங்கதியை நாம் சொல்லக்கூடாது. பெண்ணின் அம்மானிடம் நாங்கள் இன்னம் பதினைந்து நாட்களில் கறுப்பூருக்கே வருவதாய்ச் சொல்லி அனுப்பிவை- என்றாள்.
அப்போது எவனோ வாசற்கதவை இடித்து, “போஸ்டு போஸ்டு” என்று உரக்கக் கூவினான். கோமளம் குதித்துக் கொண்டோடி ஒரு கடிதத்தை வாங்கிக்கொண்டு திரும்பி வந்தாள். அது வராகசாமி ஐயங்காருக்கு எழுதப்பட்டிருந்தது. அதன் உறையை மெதுவாக திறந்து கொண்டே வந்த கோமளம், ”அடி மேனகா தன் அகமுடையானுக்கு எழுதியிருக்காளடி! ஒரு வருஷமா யில்லாமல் இப்போது புருஷனுக்கு என்ன எழுதியிருப்பாள்?” என்றாள். உடனே பெருந்தேவி தன் வேலையை நிறுத்திவிட்டு, “அடி! சீக்கிரம் வாசி, வராகசாமி வந்து விடுவான்” என்று துரிதப்படுத்த, கோமளம் உடனே கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்.
அதிகாரம் 3 – பழைய குருடி! கதவைத் திற(வ)டி!
“குழந்தை ஒரு வருஷமாக அநாதையைப் போலக் கிடப்பது, கண்ணில் பட்டால் தானே. தன் கச்சேரிப் பெருமையும், தான் தீர்மானம் எழுதுகிற பெருமையும், எஜமானியம்மாளோடு சர்க்கியூட் (சுற்றுப் பிரயாணம்) போகிற பெருமையும், தான் அலங்காரம் செய்து கொள்ளும் பெருமையும், தன் பைசைகிளின் பெருமையுமே பெருமை; குழந்தை செத்தாலென்ன! வாழ்ந்தாலென்ன! இது பூலோகமோ கைலாசமோ என்றிருக்கிறது. இவ்விதமான கடின மனசுக் காரருக்கெல்லாம் பெண் ஏன் வந்து பிறக்கிறது? அவள் வயசுக் காலத்திலே நல்லதைப் பொல்லாததை அனுபவித்து புருஷனோடு சுகமா யிருக்கவேண்டு மென்னும் நினைவே இராதோ? நெஞ்சிற் கொஞ்சமும் இரக்கமற்ற பாவிகளப்பா! முகத்தில் விழித்தாலும் பாவம் வந்து சேரும் ” என்று டிப்டி கலெக்டருடைய செவியிற்படும் வண்ணம் கனகம்மாள் தனக்குத் தானே மொழிந்து கொண்டாள்.
ஒரு வருஷத்திற்கு முன் மேனகா சென்னையிலிருந்து வந்த போது, அவள் புக்ககத்தில் பட்ட பாடுகளையெல்லாம் சொல்லக் கேட்டதனால் கனகம்மாள் பெரிதும் ஆத்திரமும், அச்சமும், வெறுப்பும் அடைந்தவளாய் அவளை இனிக்கணவன் வீட்டிற்கு அனுப்பக் கூடாதென்னும் உறுதியைக் கொண்டாள். அவளைக் கீழே விடாமல் அவளுக்குத் தேவையானவற்றைத் தானே செய்து கண்ணை இமைகள் காப்பதைப் போல அவளை மேன் மாடியிலேயே வைத்துப் பாதுகாக்கத் தொடங்கினாள்; அவள் இன்ன விடத்திலிருக்க வேண்டும், இன்ன படுக்கையில் சயனிக்க வேண்டும், இன்ன பாத்திரத்தில் பருக வேண்டும், இன்ன புஸ்தகங்களைப் படிக்க வேண்டும், இன்ன காரியஞ் செய்ய வேண்டும் என்ற ஏற்பாடுகளைச் செய்து விட்டாள். ஆனால் அவளைக் கண்ணால் காணும்போதெல்லாம் கனகம்மாளுக்கு விசனம் வந்து விடும்; கண்ணீர் விட்டழுதவளாய், ” என்னடியம்மா செய்கிறது! பாவிகளாகிய எங்கள் வயிற்றில் நீ வந்து பிறந்தாய். நாங்கள் நல்ல பூஜை செய்ய வில்லை. உன்னோடு பிறந்தவர்க ளெல்லாம் குண்டு குண்டாய்க் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு புருஷன் வீட்டில் வாழ்ந்து எவ்வளவோ சீராக இருந்து அதிகாரங்கள் செய்து வரவில்லை? எங்கெங்கோ கிடந்தவர்களெல்லாம் இப்போது எப்படியோ தலை கால் தெரியாமல் பெருமை யடித்துக் கொள்கிறார்கள். உன் தலை யெழுத்து இப்படியா யிருக்க வேண்டும்! உன்னை நல்ல நிலைமையில் பார்க்க இந்தக் கண்கள் கொடுத்து வைக்க வில்லை ” என்பாள். குடிகாரன் மனதில் அவன் குடிக்கும் போது எந்த நினைவுண்டாகிறதோ அதே நினைவே அன்று முழுதும் இருப்பது போலக் கனகம்மாளுக்கு மேனகாவின் நினைவே ஓயா நினைவா இருந்தது. மேனகா அழுதால் கனகம்மாள் அவளைக் காட்டிலும் அதிகமாக அழுவாள். முன்னவள் நகைத்தால் பின்னவளும் அப்படியே செய்வாள். இவ்வாறு கனகம்மாள் மேனகா விஷயத்தில் அசலுக்குச் சரியான நகலாகயிருந்தாள்.
டிப்டி கலெக்டரோ தம்முடைய புத்திரி விதவையாய்ப் போய்விட்டதாக மதித்து அவளுக்குத் தேவையான புண்ணிய சரிதங்களை ஏராளமாக வாங்கி அவளுடைய அறையில் நிறைத்து அதனால் சுவர்க்கத்திற்குப் போகும் வழியை அவளுக்குக் காட்டிவிட்டதாயும் அவளை இவ்வுலக விஷயங்களிலிருந்து மாற்றி அந்த வழியில் திருப்பி விட்டதாயும் நினைத்துக் கொண்டார். மேனகாவின் உபயோகத்திற்காக இரண்டு நார்மடிப் புடவைகளை உடனே அனுப்பும்படி அவர் அம்மாபேட்டை கிராம முன்சீப்புக்குத் தாக்கீது அனுப்பிவிட்டார்; அவள் ஜெபம் செய்யத் துளசி மணி மாலை ஒன்று வாங்கினார்; அவள் மடியாகப் படுத்துக்கொள்ள வேண்டு மென்னும் கருத்துத்தோடு , இரண்டு மான் தோல்கள் வேண்டு மென்று மருங்காபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலை முழுங்கி மகாதேவ ஐயருக்குச் செய்தி அனுப்பி விட்டார்;
அவளுடைய பலகாரத்திற்குத் தேவையான புழுங்கலரிசி, பச்சைப் பயறு, வெல்லம் முதலியவைகளில் அவ்வாறு மூட்டைகள் அனுப்பும் படி தலைகாஞ்சபட்டி ரிவின்யூ இன்ஸ்பெக்டர் தாண்டவராய பிள்ளையிடம் ஆளை அனுப்பினார்; இவைகளால் எவ்விதக் குறைவு மின்றி நல்ல நிலையில் தமது புத்திரியைத் தாம் வைத்துத் தம்முடைய கடைமையை முற்றிலும் நிறைவேற்றிவிட்டதாகவும், தமது புத்திரி சந்துஷ்டியான பதவியிலிருக்கிறாள் என்றும் நினைத்துக்கொண்டார்; அப்போதே தம்முடைய சிரமீதிருந்த பளுவான மூட்டையைக் கீழே போட்டவரைப் போல இன்புற்றார்; இனி தமது உத்தியோகத்தை வீட்டின் கவலையின்றிப் பார்க்கலாமென்று நினைத்துத் தமது புத்திசாலித் தனத்தைப் பற்றித் தாமே பெருமை பாராட்டிக் கொண்டார்; இனி, தமது மனையாட்டியும் தாமும் எத்தகைய இடையூறு மின்றிக் கொஞ்சிக் குலாவி யிருக்கலா மென்றெண்ணி அளவளாவினார்; இனிப் பெண்ணின் நிமித்தம் சீமந்தம், பிள்ளைப்பேறு, மருமகப்பிள்ளையை வணங்குதல் முதலிய அநாவசியமான உபத்திரவங்களுக்கு ஆளாகாமல் தாம் தப்பித்து விட்டதாய் நினைத்து மகிழ்ந்தார். பொல்லாக் குணமுடைய மருமகப்பிள்ளையைப் பெற்று, விடுபடும் வழியறியாமல் கண் கலங்க வருந்தும் பெற்றோருக்கு நமது டிப்டி கலெக்டர் எத்தகைய குறுக்கு வழியைக் காண்பித்தார்! மருமகப்பிள்ளை ஏதாவது துன்பம் கொடுத்தால் உடனே அவரைக் கொன்று விடுதலே காரிய மென்று காட்டுகிறார். எப்படி கொல்லுகிறது? தமது புத்திரியை விதவையாக்கி வீட்டில் வைத்துக்கொள்ளுதலே அவளுடைய கணவனைக் கொன்றுதலைப் போலாகுமல்லவா? ஆனால் இந்தத் தந்திரம் இவருடைய மூளையைத் தவிர, வேறு எவருடைய மூளைக்கும் தோன்றியதே பெருத்த விந்தை.
இவ்வாறு சில மாதங்கள் கழிந்தன. டிப்டி கலெக்டரு டைய காரியங்க ளெல்லாம் பெண்ணின் கவலையின்றி நடைபெற்று வந்தன. எஜமானரும், எஜமானியம்மாளும் சுற்றுப்பிரயாணம் போவதும், அவருடைய பைசைக்கிளுக்கு ஆசார உபசாரங்கள் நடப்பதும், கோர்ட் குமாஸ்தா கோபாலையர் எஜமானனிடம் நடுநடுங்கிப் பல்லிளித்து நிற்பதும் , ஆர்டர்லி அண்ணாமலை பிராது மனுக் கூப்பிடு வதும், போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்பல நாடார் பொய்க் கேஸ் கொண்டு வருவதும், கண்டாகோட்டை கணக்கன் மகளைச் சுண்டாகோட்டை ஜெமீன்தார் கற்பழித்துக் கச்சேரிக்கு வருவதும், பஞ்சாங்கம் குப்புசாமி ஐயருடைய பசுமாட்டை நஞ்சாப்பட்டிக் காளிங்கராயன் பிடிப்பதும், வல்லம் கிராம முன்சீப்பு செல்லப்பையர் டிப்டி கலெக்டருக்கு வாழைத்தாறுகளை அனுப்புவதும், கெங்கா ரெட்டி என்னும் சேவகன் பங்காவை இழுத்துக் கொண்டே தூங்கி விழுவதும், பட்டாமணியம், சட்டைநாதபிள்ளை சர்க்கார் பணத்தை வட்டிக்குக் கொடுப்பதும், தாலுகா குமாஸ்தா தங்கவேலுப் பிள்ளை தொட்டி தலையாரிகளை ஆட்டி வைப்பதும், அவர் மனைவி உண்ணாமுலையம்மாள், ” எண்ணிக்கொள்” என்று ஒன்பது மாதத்திற்கொரு பிள்ளையை ஒழுங்காய்ப் பெறுவதும், தாசில்தார் தாந்தோனிராயர் பருப்பு சாம்பாரில் நீந்தி தினம் தெப்ப உற்சவம் செய்வதும், கோடி வீட்டுக் குப்பம்மாள் தெருளுவதும், ஊளைமூக்குச்சுப்பனுக்கு உபநயனம் நடத்துவ தும், சப்பைக்கால் கந்தனுக்கு சாந்தி கலியாணம் நடத்துவதும், உளருவாய் ஜானகிக்கு ஊர்வலம் நடத்துவதும், எதிர்வீட்டு நாகம்மாள் எமலோகம் போகிறதும், பிரிந்தோர் கூடுவதும், கூடினோர் பிரிவதும் ஒழுங்காய் நடைபெற்று வந்தன.
ஆனால் கணவன் உயிருடன் இருக்கையிலேயே, விதவையாக்கப்பட்ட பூங்கொடியான மேனகா தன்னுடைய நாயகனை விடுத்து வந்த பிறகு பைத்தியங் கொண்டவளைப் போலக் காணப்பட்டாள். உண்பதை விடுத்தாள்; துயில்வதை ஒழித்தாள்; நல்லுடைகளை வெறுத்தாள்; நகைகளை அகற்றினாள்; அழகே வடிவாகக் காணப்பட்ட தனது அளகபாரத்திற்கு எண்ணெயு மிடாமல் சடையாய்ச் செய்து விட்டாள்; நகையற்ற முகத்தையும், மகிழ்வற்ற மனதையும் கொண்டவளாய்த் தன் சிந்தையை ஓயாமல் வேறிடத்தில் வைத்தவளாய் வாடி வதங்கித் துரும்பாய் மெலிந்தாள்.
”துயிலெனக்கண்களிமைத்தலு முகிழ்த்தலுந் துறந்தாள்
வெயிலிடைத்தந்த விளக்கென வொளியிலா மெய்யாள்
மயிலிற்குயின் மழலையாண் மானிளம் பேடை
அயிலெயிற்றுவெம் புலிக்குழாத் தகப்பட்ட தன்னாள்.”
என்றபடி துவண்டு இரண்டொரு மாதத்தில் எழுந்திருக்கும் திறனற்றவளாய் அயர்ந்து தள்ளாடினாள். அவளுடைய எண்சாண் உடம்பும் ஒரு சானாய்க் குன்றியது. ஹார்மோனியம் முதலிய வாத்தியங்களின் இன்னொலி அண்டை வீடுகளிலிருந்து தோன்றி அவளுடைய செவியில் மோதினால், ஆயிரம் தேள்கள் அவளது தேகத்தில் ஒரே காலத்தில் கொட்டுதலைப்போல வதைப்பட்டாள். மஞ்சள், மலர்கள் முதலிய மங்கலச் சின்னங்களை அறவே ஒழித்தாள். தனது உடம்பை ஒரு சிறிதும் கவனிக்காமலும், பிறர் மொழிவதற்கு மறுமொழி கூறாமலும்,
“விழுதல் விம்முதல் மெய்யுற வெதும்புதல் வெருவல்
எழுத லேங்குத லிங்குத லினியனை யெண்ணித்
தொழுதல் சோருத லுறங்குதறுயருழந் துயிர்த்தல்
அழுத லன்றிமற் றயலொன்று செய்குவ தறியாள்.”
என்ற வண்ணம் ஓயாமல் அழுதலையே அலுவலாய்ச் செய்து கொண்டிருந்தாள். தன்னுடைய சொந்த இடமாகிய தண்ணீரை விடுத்து வெளியேற்றப்பட்ட மீன் குஞ்சு தரையில் கிடந்து அசைவற்று செயலற்று உயிரை அணுவணுவாய்ப் போக்கி அழிவதைப் போலத் தன் கணவனுடைய இடத்தை விடுத்து வந்த பிறகு அவளுக்கு உலகமே உயிரற்றுப் பாழ்த்து இருளடைந்து போனதாய்த் தோன்றியது. பெண்மக்களுக்குக் கணவனைப் பகைமை காரணமாக விடுத்துப் பிரிதலைக் காட்டிலும் கொடிய விபத்தும், துயரும் வேறு உண்டோ ? கூரிய புத்தியையும் கவரிமானினும் அதிகரித்த மானத்தையும் கொண்ட அன்னப் பேடாகிய மேனகா வேடன் அம்பால் அடிபட்டுக் கிடக்கும் பறவைகளைப்போலப் புண்பெற்ற மனத்தோடு சோர்ந்து கிடந்தாள்.
ஆரம்பத்தில் அந்த நிலைமையை நோக்கிய கனகம்மாள், மேனகா தன் கணவன் வீட்டில் தனக்கு நேர்ந்த துன்பங்களை யெண்ணி அவ்வாறு வருந்துகிறாள் என நினைத்தாள். ஆனால் சொற்ப காலத்தில் அவ்வெண்ணம் தவறென உறுதியாயிற்று. அவள் தனது நாதன் மீது கொண்ட ஆசையாலும்; அவனது பிரிவாற்றாமையாலும் அவ்வாறு அலமருகின்றாள் என்பதைக் கண்டாள். அத்தகைய நிலைமையில் அவளைத் தமது வீட்டிலேயே எவ்வாறு வைத்துக் கொள்வ தென்பதைப் பற்றிப் பன்னாட்கள் யோசனை செய்தாள்; அவளைத் தன்னால் இயன்றவரை தேற்றி, அவளுக்குரிய தேவைகளைச் செய்து அவளைக் களிப்பிக்க முயன்றாள். அவள் அவற்றைச் சிறிதும் கவனித்தாளன்று. இரவுகளிற் பாட்டியின் அண்டையில் படுத்திருக்கும் மேனகா தனது துயிலில் கணவனைப் பற்றிப் பிதற்றியதையும், திடுக்கிட் டெழுந்து அவனை நினைத்து அழுததையுங் கண்ட கனகம்மாளுக்கு அப்போதே உண்மை நிச்சயமானது. கனகம்மாளினது மனதும் உடனே மாறியது. வராகசாமியின் மீது அவள் அது வரையில் கொண்டிருந்த வெறுப்பு விலக, அவன் மாத்திரம் நற்குணமுடையவனாய் அவளுடைய அகக்கண்ணிற்குத் தோன்றினான். எப்பாடு பட்டாயினும் அவளைக் கணவனிடம் கொண்டு போய் விடுதலே ஒழுங்கென அவள் நினைத்தாள்; சாம்பசிவ ஐயங்காரிடம் உண்மையைத் தெரிவித்தாள். அவருடைய உத்தியோக மகோத்சவத்தில் அந்த மொழி அவருடைய செவியில் ஏறவில்லை. அம்மாள் வேளைக்கு வேளை மத்தளம் தாளத்தோடு அதே பாட்டாய் பாடி அவருடைய செவிகளைத் துளைக்க ஆரம்பித்தாள். அவள் தம்மை எவ்வளவு கொத்தினாலும், தம் மருமகப் பிள்ளையிடம் பெற்ற மரியாதை அவருக்கல்லவோ தெரியும்! அவர் அதை அவ்வளவாக சட்டை செய்யாமல் இருந்தார்.
அவளுடைய உபத்திரவங்கள் ஒன்றுக்குப் பத்தாய்ப் பெருகின. அவள் ஈட்டி, சூலம், அம்பு, தோமரம், முதலிய ஆயுதங்களை தூரத்திலிருந்தே எறிந்து முதலில் யுத்தம் செய்தாள். பிறகு வாயுவாஸ்திரம், அக்கினி யாஸ்திரம், வருணாஸ்திரம் முதலியவற்றைக் கொண்டு போர் செய்தாள்; கடைசியாக அருகில் நெருங்கி முஸ்டியுத்தம் புரியத்தொடங்கினாள். அவர் என்ன செய்வார்? சென்னை யிலிருந்து வந்த சில மனிதரிடம், மத்தியஸ்தம் செய்யும்படி அவர் அரைமனதோடு தெரிவிக்க, அவர்கள் அதற்கு இணங்கிச் சென்றனர். பிறகு சென்னையி லிருந்து இரண்டொரு கடிதங்கள் வந்தன; அதனால் பயனுண்டாகாததைக் கண்ட கனகம்மாள் இந்த அதிகாரத் தொடக்கத்தில் கூறியவிதம் கடுஞ் சொற்களை உபயோகித்தாள். “ஒரு நாளா? இரண்டு நாளா? குழந்தை வந்து ஒரு வருஷமாகி விட்டது. இதெல்லாம் என் கண் செய்த பாவம்! இதை யெல்லாம் பார்க்கும்படி அந்தப் பாழுந் தெய்வம் செய்து விட்டதே! யாருக்கு யார் என்ன விருக்கிறது? பிள்ளையாம் பிள்ளை! அணிப்பிள்ளை தென்னம்பிள்ளை!” என்று மூச்சு விடாமலும், முற்றுப் புள்ளி வைக்காமலும் கனகம்மாள் பக்கம் பக்கமாய்ப் பேசிக் கொண்டே இருந்தாள். வழக்கத்திற்கு மாறாகச் சிறிது கோபம் கொண்ட புத்திர சிகாமணி, “நான் என்ன செய்வேன்? அந்தப் பைத்தியத்தின் காலைப் பிடித்துக் கொள்ளச் சொல்லுகிறாயோ? நானும் பல மனிதர் மூலமாய்ச் சொல்லி அனுப்பினேன். அந்த பிரபு அதை காதில் வாங்கினாலென்றோ? என்னுடைய சேவகன் அவனை அன்னியருக்கு எதிரில் பிடித்துக் கொண்டானாம். அதனால் மோசம் வந்துவிட்டதாம்” என்றார்.
கனகம் :- அவன் உன்னை அடிக்க வந்தபோது சேவகன் அவனைப் பிடித்துக் கொள்ளவில்லையாமே, நீ பெண்ணை அழைத்தபோது வராகசாமி குறுக்கில் வந்து மறித்தானாம்; அப்போதே சேவகன்பிடித்துக் கொண்டானாம். அப்படி யல்லவோ அவன் சொல்லுகிறான்.
சாம்ப :- அதெல்லாம் முழுப்புளுகு.
கனகம் :- என்ன இருந்தாலும் அவன் நம்முடைய குழந்தையின் புருஷன். அவனைச் சேவகன் பிடித்துக் கொள்ளுவதென்றால், அது அவமானமாகத்தானே இருக்கும். அதைப்பற்றி நம்முடைய மேனகாவே வருத்தப் படுகிறாளே. அவனுக்கு எப்படி இராது! போனது போகட்டும்; அவன்தான் வீண் பிடிவாதம் செய்கிறான்; நாமும் அப்படியே செய்தால் யாருக்கு நஷ்டம்? வாழையாடினாலும், வாழைக்குச் சேதம், முள்ளாடினாலும் வாழைக்குச் சேதம். இதனால் நமக்குத்தான் துன்பமெல்லாம். அழுத கண்ணும், சிந்திய மூக்கு மாய்ப் பெண்ணை நாம் எத்தனை நாளைக்கு வைத்திருக்க முடியும்? ஏதாவது அவமானம் வந்துவிட்டால் பிறகு நமக்குத்தானே தலைகுனிவு.
சாம்ப:- அதற்காக என்ன செய்யச் சொல்லுகிறாய்? என்னால் ஒன்றும் ஆகாது.
கனகம் :- நன்றாயிருக்கிறது! நாம் எப்படியாவது நயந்து தான் போகவேண்டும். நாம் பெண்ணைக் கொடுத்தவர்கள்; அவனுடைய கை மேலதான்; நமது கை ஒருபடி இறக்கந்தான். இன்னம் ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். அடகு வைத்த நகைகளையும் மீட்டுக் கொடுக்க வேண்டும்; ஒரு நகைகூட இல்லாமல் பெண் மரம்போல இருக்கிறாளே; என்ன செய்கிறது?
சாம்ப:- அந்த துஷ்ட முண்டைகளிடம் இவள் போனால் துன்பந்தான் சம்பவிக்கும். இனி சுகமாய் வாழப்போகிற தில்லை. முறிந்து போன பால் நல்ல பாலாகுமோ? ஒரு நாளுமில்லை.
கனகம் :- (ஆத்திரத்தோடு) சரிதான்; வாழமாட்டாள் வாழமாட்டா ளென்று மங்களம் பாடிக்கொண்டே இரு; அதுதான் உங்களுடைய ஆசை போலிருக்கிறது. நீங்கள் இரண்டு பேரும் சுகமா யிருங்கள். அது மூத்த தாரத்தின் குழந்தை! அது எப்படியாவது அழிந்து நாறிப் போகட்டும். உனக்குப் பணச் செலவு செய்வதென்றால் ஒன்றும் தேவையில்லை. நீ ஒன்றிற்கும் உன் கையை அறுத்துக் கொள்ள வேண்டுவதில்லை. என்னுடைய மஞ்சற்காணியை இன்றைக்கு விற்றாகிலும் ஐயாயிரம் ரூபா கிடைக்கும். அதை விற்றுப் பெண்ணை அனுப்பிவிடு. இல்லாவிட்டால், அவள் இம்மாதிரி கஷ்டப்பட நான் இனி ஒரு க்ஷணமும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்; பேசாமல் எங்கேயாவது தலையில் துணியைப் போட்டுக்கொண்டு போய்விடுகிறேன். எனக்கு பிள்ளையு மில்லை , குட்டியுமில்லை யென்று சொல்லிவிட்டுப் போய் விடுகிறேன் – என்றாள். அழுகை மேலிட்டு அவளுடைய நெஞ்சை அடைத்தது. உதடு முதலியவை படபடவென்று துடித்தன. கண்களில் கண்ணீர் வழிந்தது. அவள் யாவற்றையும் துறந்து வீட்டை விடுத்து அப்போதே போவதற்குத் தயாரா யிருப்பவளாகத் தோன்றினாள். தம் அன்னை அதற்கு முன் அவ்வளவு வருந்தியதைப் பார்த்தறியாத சாம்பசிவையங்கார் ஒருவாறு பணிவை அடைந்தார்.
சாம்ப:- அம்மா! அந்த எருமை மாட்டினிடம் நான் இனி போக மாட்டேன். நீதான் போக வேண்டும். அவன் கேட்கிற பணத்தைத் தொலைத்து விடுகிறேன். நீயே கொடுத்து விடு –
என்றார்.
கனகம் :- எல்லாவற்றிற்கும் அந்த அடுத்த வீட்டு சாமா இருக்கானே, அவனுக்கு ஒரு கடுதாசி எழுதியனுப்பு; என்ன சொல்லுகிறான் பார்க்கலாம். ரூ.2000ம் கொடுப்பதாயும், அடகு வைத்திருக்கும் நகைகளை மீட்டுத் தருவதாயும், இனி பெண்ணை அன்போடு நடத்த வேண்டு மென்றும் எழுது.
சாம்ப:- சரி; நான் சம்பாதிக்கிறது அவனுக்குக் கொடுக்கத்தான் சரியாப் போகும். பெண்ணை அடித்தாற் பணம் வந்து விடும் என்று கண்டவன், பணத் தேவை உண்டான போதெல்லாம் அடித்துக் கொண்டுதான் இருப்பான்; நானும் பணத்தைச் செலுத்தி கொண்டேதான் இருக்க வேண்டும். பெண்ணை அடிப்பதில் அவர்களுக்கு இயற்கையிலேயே சந்தோஷம் அதிகம்; இன்னம் அது கஜானாவில் செக் மாற்றுவதைப் போலானால் பிறகு அடிப்பதுதான் வக்கீல் உத்தியோகமாகச் செய்வான். சரி! அப்படியே ஆகட்டும். கடிதம் எழுதுகிறேன்- என்று காகிதத்தையும், இறகையும் கையில் எடுத்தார்.
– தொடரும்…
– மேனகா (நாவல்) – முதல் பாகம், முதற் பதிப்பு: 2004, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.