கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 10, 2024
பார்வையிட்டோர்: 390 
 
 

(1920களில் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிகாரம் 19-21 | அதிகாரம் 22-24 | அதிகாரம் 25-28

அதிகாரம் 22 – வேம்போ கரும்போ 

இராயப்பேட்டை வைத்தியசாலையில் மிகுந்த நீளமும் அகலமுமான கூடங்கள் பல இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் ருபது அல்லது இருபத்தைந்து இரும்பு கட்டில்கள் வரிசையாகப் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு கட்டிலிலும் வ்வொரு நோயாளி படுத்திருந்தான். நோயாளிகளின் தேவைகளைக் கவனித்து அவர்களுக்குரிய பணிவிடைகளைப் புரியும் பொருட்டு ஒவ்வொரு அறைக்கும் இரண்டிரண்டு மாதர் நியமிக்கப்பட்டிருந்தனர். சென்னை வைத்திய சாலைகளில் அவர்கள் பெரும்பாலும் வெள்ளைக்கார (சட்டைக்கார) வகுப்பைச் சேர்ந்த யௌவன மடந்தையராகவே இருந்தனர். அவர்கள் நிரம்பவும் அழகுவாய்ந்த பக்குவகாலப் பெண்களாக விருந்தமையாலும், முகவசீகரம், அன்பு தளரா முயற்சி, சலியா உழைப்பு, இரக்கம் முதலிய அம்சங்களைத் தோற்றுவித்துத் தமது கடமைகளைச் செய்யவேண்டு மென்பது வைத்தியசாலையின் முறைமை யாதலாலும், சாதாரணமாக உலக நடவடிக்கைகளில், இந்திய மக்களோடு கூடிப்பழகாத வெள்ளைக்கார மாதர், இங்கு அன்பே ப வடிவாகக் காணப்பட்டு, பணி புரிவது முற்றிலும் புதுமையா யிருத்தலினாலும் பிணியாளருக்கு அந்த ஸ்திரீகள் அமுத சஞ்சீவியோ, கந்தருவ மங்கையரோ, காமதேனுவோ, கற்பகத்தருவோ வென்னக் காணப்பட்டு காலத்திற்குரியவாறு உதவி புரிந்து இன்பங் கொடுத்து வந்தனர்; மருந்தினால் குணமடைவோரினும், இத்தகைய அணங்குகளின் மனமார்ந்த உபசரணையினால் குணமடைபவரே பெரும்பாலாரென மதித்தல் வேண்டும். 

இத்தகைய அறையொன்றில் விடிப்பட்டிருந்த வராகசாமி உயிருட னிருக்கிறானோ, அல்லது உயிர் துறந்து விட்டானோ வென்று ஐயுறத் தகுந்த நிலைமையில் கட்டிலொன்றில் படுத்திருந்தான். அவனது உடம்பில் ஏராளமான காயங்கள் நிறைந்திருந்தன. சாம்பசிவம், கனகம்மாள், சாமாவையர் ஆகிய மூவரும் வந்து அவனைப் பார்த்து விட்டுச் சென்றபிறகு, அவன் கட்டிலோடு தனிமையான வேறோர் அறைக்கு நகர்த்தப்பட்டான். அவ்விடத்தில், அவனது முழங்காலில் முறிபட்டுப் போயிருந்த எலும்பு சரியாக வைத்துக் கட்டப் பட்டது. அந்த நிலைமையில் அவனை மேலும் அலட்டுதல் கூடாதென நினைத்த டாக்டர், அவனை அவ்விடத்திலேயே தனிமையில் விடுத்திருந்தார். அவன் கண்களைத் திறவாமலும், அசையாமலும் அவ்வாறே இரவு பகலாய் உணர்வற்றுப் படுத்திருந்தான். அவன் இனி பிழைக்கமாட்டா னென்பதும், பிழைத்தால் அது தெய்வச் செயலென்பதும் பெரிய துரையின் அபிப்பிராயம். பெரியதம்பி மரக்காயரது பங்களாவில் நோய் கொண்டு படுத்திருந்த மேனகா வென்னும் பெண்ணின் கணவனே அவனென்பதை அறிந்த பிறகு டாக்டர் துரைஸானி, அவனிடம் பெரிதும் இரக்கங்கொண்டு அவனது விஷயங்களை மிகுந்த அபிமானத்தோடு பார்த்து வந்தாள். டாக்டர் துரையினிடத்தில் அவனது குடும்ப விஷயங்களை யெல்லாம் கூறி, அவனுக்கு எண்ணிறந்த வசதிகளையும் ஏற்பாடுகளையும் செய்வித்தாள்; மிகவும் விலையுயர்ந்த மருந்துகளைப் பிரயோகிக்கும்படி செய்தாள்; தனிமையிலிருந்த அறையிலேயே அவர்கள் அவனைச் சந்தடியும், சலனமுமின்றி, சுகமாக விடுவித்து வைத்தனர். அவனுக்குரிய பணிவிடைகளைச் செய்யவும், இரவு பகலாய்க் காத்திருந்து மணிக்கு மணி மருந்துகளைச் செலுத்தவும் ஆயத்தமாக ஒரு வெள்ளைக்கார பணிமகள் அவனுக்காகப் பிரத்தியேகமாய் நியமிக்கப்பட்டாள். அவ்வாறு ரண்டு மூன்று நாட்களாயின. கடுமையான ஜுரம் தலைகாட்டியது. இரணங்கள் யாவும் சீழ் கோர்த்துக்கொள்ளும் நிலைமை யடைந்தது, விண் விண்ணென்று தெறித்து பொறுக்கலாற்றா நோவை யுண்டாக்கின. மூளை சிதறிப்போயிருந்தது. அவன் பிதற்ற வாரம்பித்து, “அடி சண்டாளி! துரோகி! தப்பியோடிப் போய்விட்டாயோ! என்மேல் மோட்டார் வண்டியை வேண்டு மென்றே ஏற்றி என்னைக் கொல்ல நினைத்தாயோ! ஆகா! மாயாண்டிப் பிள்ளையின் மயக்கமா! ஒரே அடியில் மண்டையைப் பிளந்திருப்பேனே! திண்டென்ன! தலையணை கலென்ன! அலங்காரமென்ன! என்னைக் கண்டு கண்ணை மூடிக்கொள்ளு கிறாயோ?” என்று கூறுகிறான். பற்களை நற நறவென்று கடித்து ஓசை செய்கிறான். முக்கல், முனகல் முதலிய விகாரக் குறிகள் உண்டாக்கின. உடம்பு சிறிதளவு புரளுகிறது. வெள்ளைக்காரப் பணிப்பெண்ணோ இமை கொட்டாமல் அருகில் உட்கார்ந்திருந்து விலையுயர்ந்த அரிய மருந்துகளை விடாமுயற்சியோடு செலுத்தி, நிமிஷத்திற்கு நிமிஷம் காணப்பட்ட முகமாறுபாடுகளை மிகவும் எச்சரிக்கையாகக் கவனித்தவண்ணம் பெரிதும் கவலை கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். காலையிலும் மாலையிலும் பெரிய டாக்டரும், டாக்டர் துரைஸானியும் வந்து அவனது நிலைமையை நன்றாக ஆராய்ச்சிசெய்து புதிது புதிதான மருந்துகளைத் தயாரிக்கச்செய்து பலவாறு பிரயோகிக்கச் செய்தனர்; சாமாவையர், பெருந்தேவியம்மாள் முதலியோர் எவரும் நாலைந்து நாட்கள் வரையில் அங்கு வரக்கூடாதென்று கட்டளையிட்டனர். அந்தப் பயங்கரமான நிலைமை ஏழெட்டு நாட்கள் வரையில் நீடித்திருந்தது. ஓயாமல் செலுத்தப்படும் திறமையான மருந்துகள் அவனது புண்களைச் சிறுகச்சிறுக ஆற்றிக்கொண்டுவந்தன; உடம்பில் முற்றிலும் ஓய்ந்து போயிருந்த இரத்த ஊற்றையும் ஊக்கிப் பெருக்கின. சீர் குலைந்து கிடந்த மூளையும் அறிவும் சிறிது செவ்வைப்பட்டன. அவனும், தனது உணர்வைப் பெற்று கண்களைத் திறந்து நாற்புறங்களையும் நோக்கினான். மின்சார விளக்கின் வெளிச்சம் பளிச்சென்று பிரகாசித்துக் கண்ணைப் பறித்தது. அதைத் தாங்கமாட்டாமல் அவனது கண்கள் சோர்வடைந்து உடனே மூடிக்கொண்டன. தான் நோய் கொண்டு ஏதோஓர் அறையில் கட்டிலில் படுத்திருப்பதாக அவன் நினைத்தான்; அவ்வாறு சிறிது நேரம் கழிந்தது. தனது நினைவு அப்போது நன்றாக உண்டாயிற்று. தான் கடற்கரையில் மேனகாவைக் கொல்ல முயன்றதும், அப்போது தான் கீழே விழுந்து மோட்டார் வண்டியில் அறைபட்டதும் நினைவிற்கு வந்தன. தனது கட்டிலிற்கருகில் யாரோ ஒருவர் உட்கார்ந் திருப்பதாகவும், அவர் பல நாட்களாக அருகிலிருந்து தனக்கு இன்பமுண்டாக்கி வருவதாகவும் அவனது மனதில் கனவைப்போன்ற ஓர் எண்ணம் உண்டாயிற்று. அத்தகைய பேருபகாரி யாவர் என்பதை அறிய நினைத்து, அவன் தனது கண்களை இன்னொரு முறை திறந்து அவரிருந்த பக்கத்தில் நோக்கினான். கட்டிலினருகில் போடப்பட்டிருந்த நாற்காலி யொன்றில் தொப்பி முதலியவற்றை யணிந்த ஓர் அழகிய வெள்ளைக்கார பெண் மயிலாள் மிகவும் கவலைகொண்ட முகத்தோடு உட்கார்ந்திருக்கக் கண்டான். அந்தப் பெண் அவன் மனதில் எழும் நினைவை வெளியிடாமுன்னரே ஞான திருஷ்டியால் அதையுணர்ந்து அவனுக்குத் தேவையான வற்றைச் செய்ய ஆயத்தமா யிருப்பவளாய்க் காணப்பட்டாள். அவளது முகம் கபடமற்றதும் நிரம்ப வசீகரமானதுமாய்க் காணப்பட்டது. எனினும், பல நாட்களாக இரவு பகல் காத்திருப்பதனால் அவளது முகம் வாட்டமடைந்திருப்பது போலத் தோன்றியது. அவன் தன்னை உற்று நோக்கியதைக் கண்ட அப்பெண்மணி, சுருக்கென எழுந்து கட்டிலிற்கருகில் நெருங்கி நின்று, “என்ன வேண்டும்?” என்று அன்பொழுகக் கேட்டாள். அவளது குரல் அமுதம் சொரியப்படுதலைப்போல செவிகளுக்கு இனிமை யூட்டியது. வராகசாமி உடனே தனது கண்களை மூடிக்கொண்டான். உலகிலுள்ள பெண்கள் யாவரும் கற்பென்பதே அற்ற வஞ்சகரென்று நினைத்து அவன் அருவருப்புற்று அவளது முகத்திலும் விழிப்பது பாபமென உறுதியாக எண்ணி யிருந்தவனாதலின், அவன் தனக்கருகில் பூரண சந்திரோதயம்போலக் காணப்பட்ட கட்டழகியை, கூற்றுவனிலும் கொடியவளென மதித்து தனது கண்களை இறுக மூடிக்கொண்டான். நிற்க, இவன் இந்திய மாதரைக் காட்டிலும், ஐரோப்பிய மாதர் மீது அதிகமான பகைமை கொண்டிருந்தான். ஏனெனில், ஐரோப்பிய மாதர் நாணம், மடம்,அச்சம்,பயிர்ப்பென்னும் பெண் தன்மைகளை விடுத்து அன்னிய மனிதரோடு பழகி நமது தேசத்துப் பெண்களுக்குத் துர் ஆசாரங்களில் ஆசை யுண்டாகும்படி செய்கிறார்களென்ற நினைவைக் கொண்டவனாதலின், அவன் வெள்ளைக்கார மகளிரை விஷத்தினும் கொடியவரென நினைத்து அவர்களின் மீது தீராப்பகைமை கொண்டிருந்தான். ஆதலின், அவளது அன்பு நிறைந்த கேள்வி அவனது மனதின் அமைதியைக் குலைத்துப் புண்படுத்திவிட்டது. அவன் திரும்பவும் களைப்படைந்து கண்களை மூடிக்கொண்டு அயர்ந்தான். அருகில் நின்ற வெள்ளைக்கலை உடுத்திய வெள்ளை மடவன்னம், பஞ்சினும் பூவிதழ்களினும் மிருதுவான தனது கரத்தால் அவனது நெற்றி, கன்னங்கள் முதலியவற்றைத் தடவினாள். ஜுரநோய் கொண்டவன் மார்பில் பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, பன்னீர் முதலியவை கலக்கப்பட்ட சந்தனம் பூசப்படுதலைப்போல அந்த வருடல் அவனை இன்பக் கடலில் ஆழ்த்தியது ஆயினும், தெய்வகானம் போன்ற அவளது தீங்குரலே, மந்திர உச்சாடனம் போல, அவனது பிணியைத் துரத்தியதாயினும், அவனது மனம் மாத்திரம் மிகுந்த ஆத்திரமடைந்தது. “எங்கே போனாலும் பெண் பீடைகள் மனிதரை விடமாட்டேனென்கின்றனவே! இவர்களுக்குப் பயந்து மனிதர் எமலோகத்தில் ஓடி ஒளிந்து கொண்டாலும் இவர்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறதே! சே! சே! என்ன உலகம்! வைத்திய சாலையில் கூடவா இவர்களுடன் கூட இருந்து அழவேண்டும்! ஏன் ஆண்பிள்ளைகளை இங்கு நியமிக்கக் கூடாது? இந்த வேலைக்காரரே மகா காமதுரர்கள். ஒரு நொடியேனும் பெண் பிள்ளைகளை அப்பால் விடுவதில்லை. பெண் பித்துப் பிடித்தவர்கள்! இப்படி நோயாளிக் கருகில் யௌவனப் பெண்களை வைத்தால், அவர்களுடைய பலஹீனமான நிலையில் அவர்களுடைய மனதில் ஸ்திரீ சபலம் ஏற்படுமானால், அவர்களுடைய நோய் அதிகப்படுமன்றி விலகுமா? ஆண்பிள்ளைகளின் பணிவிடைகளிலும் பெண் பிள்ளைகளின் பணிவிடைகள் சிறந்தனவாயினும், பின்னவர் களால் உண்டாகும் தீமையே பெரிய தென்பதை இந்த இங்கிலீஷ் வைத்தியர்கள் உணராது போனதென்ன! நோயாளிகள் எப்படி நாசமாய்ப் போனால் அவர்களுக்கென்ன! தாங்கள் வேலை செய்யும் இடங்களில் கூட பெண்கள் எதிரில் நிற்பது அவர்களுக்குச் சுகமாக இருக்கிறது. அவ்வளவே அவர்களுடைய கோரிக்கை; இந்த வெள்ளைக் காரப் பெண்ணின் துடுக்கையும் துணிவையும் என்னவென்று சொல்வது! நான் இவளைப் பார்த்தவுடன் எனக்கு என்ன தேவை என்று இவள் கேட்டது நியாயமே; அதன் பிறகு நான் கண்களை மூடியதைக் கண்ட இவள் என்னுடைய நெற்றியையும், கன்னங்களையும் தடவிக் கொடுத்ததன் காரணமென்ன? அவ்வாறு செய்யும்படி இவளைக் கேட்டவர் யார்? அது இவளுடைய கடமையி லொன்றோ? இவர்கள் நோயாளிகளிடத்தில் அவ்வளவு அந்தரங்கமான அன்பைக் காட்டுகிறார்களாம்! வேஷக்காரர்கள்! பெண்களே, வெளிப்பகட்டு வடிவம்; அதிலும் வெள்ளைக் காரப் பெண்களோ சாகசத்தில் கைதேர்ந்து முதற்பட்டம் பெற்ற கபட நாடக வேஷங்கள். நான் யாரோ அன்னியன்; என்னை முன்பின் அறியாதவளான இவள், ஆயிரம் வருஷகாலம் பழகியதாய், மனைவி முதலியோரைப்போல வித்தியாசமின்றி அருகில் வந்து தடவிக் கொடுக்கிறாளே! இந்த வைத்திய சாலையில் தினம் ஒவ்வொருவனுக்கு இப்படித் தடவிக் கொடுத்து இவளுடைய அன்பு ஆதாரங்களையெல்லாம் செலவழித்து விட்டு வீட்டுக்குச் செல்வாளாயின் அதன்பிறகு கணவனிடம், இவள் எவ்வளவு அன்பைக் காட்டப்போகிறாள். அவனுடன் சந்தோஷமாக ஒரு வார்த்தை பேசத்தான் இவளுக்குப் பொறுமை இருக்குமா! ஆகா! இவளைப் பெண்டாட்டியாக அடைபவன் வாழ்ந்துபோவான்!” என்று பல்வேறு நினைத்து அந்தப் பெண்ணைத் தன் மனதிற்குள் இகழ்ந்தவண்ணம் அவன் துயிலில் ஆழ்ந்தான். அதன்பிறகு இரண்டொரு நாழிகை நேரம் கழிந்தபின் அவன் விழித்துக்கொண்டு கண்களைத் திறப்பான். ஜெகஜ் ஜோதியைப்போலத் தன்னை விட்டு அகலாமல் அறையிலிருந்த அந்த வெள்ளை மடமயிலை அவன் ஒரு பெருத்த பூச்சாண்டியாக மதித்து அவளைப் பார்க்கவே அஞ்சினான். அவளிருந்த பக்கம் நோக்கவும் அவனது கண்கள் கூசின; உடனே கண்களை மூடுவான்; பழைய நினைவுகள் புற்றிலிருந்து எழும் ஈசல்களைப்போல மனதில் எழுந்தன; தனது மனைவியின் விபச்சாரச் செயல்களும், மாயாண்டிப் பிள்ளையின் காதற் கடிதங்களிலுள்ள சொற்களும் அகக்கண்ணின் முன்னர் தோன்றி நின்று தாண்டவமாடின; அந்த நினைவுகளைத் தாங்கமாட்டாமல் அவன் மயங்கி உணர்வற்று வீழ்ந்து விடுவான்; காம்பொடிப்பட்ட மலரென அவனது சிரம் வாட்டமுற்று தலையணையில் சாய்ந்து கிடக்கும். அந்த மடந்தை மாறிமாறி மருந்துகளையும், பாலையும் செலுத்தி, அயர்வின்றி எப்போதும் மாறுபடா ஆதாரத்தோடு அவனைக் குணப்படுத்த முயன்றுகொண்டிருந்தாள். அவளாற் செலுத்தப் படும் மருந்து அவனது பலஹீனத்தைப் போக்கடித்து அங்கங்களுக்கு வலுவூட்டிக்கொண்டே வந்தது. முதலில் அடிக்கடி உண்டான சோர்வும், உறக்கமும் நெடுநேரம் இடைவிட்டு வரத் தொடங்கின. அவளால் திரும்பிக் கொணரப்படும் நல்ல நிலைமை, அவன் அவளைப் பார்த்த மாத்திரத்தில் கெட்டுப்போய்க்கொண்டிருந்தது. அவளைக் காணும்போதெல்லாம் அவனது மனதில் பழைய நினைவுகளே தோன்றி வதைத்தன. முற்றிலும் வஞ்சகியான தனது மனைவி மேனகா தஞ்சையிலிருந்து தனக்கு அனுப்பிய கடிதத்தை தான் உண்மையென்று நம்பி ஏமாறிப்போனதை நினைத்து நினைத்து தனது மூட மதியை நிந்தித்துக்கொண்டான்; அவள் கல்லால் அடிபட்டு இறவாமல் தப்பி இன்னமும் உலகில் உயிருடன் இருப்பதை நினைத்து ஆத்திரங்கொள்வான். தான் முற்றிலும் குணமடைந்து வெளியிற்போன பின் எப்பாடு பட்டாகிலும் அவளைக் கண்டுபிடித்து அவளைக் கொன்று விட்டு தானும் விஷத்தைத் தின்று மறிப்பதே முடிபென உறுதி செய்து கொண்டான். அவள் உயிருடனிருக்கும் வரையில் தனக்கும், தனது குடும்பத்திற்கும் நீங்காத அவமானமே ம உண்டாகுமென்று நினைத்துத் துடி துடித்தான். அவளைக் கொன்ற பின் தான் உயிர் வாழ்வதில் பயனில்லை யென்று நினைத்தான்; தான் அப்புறம் இன்னொரு பெண்பேயை மணக்க நேருமென்றும், அவளும் மேனகாவைப்போலவே வேசையாயிருப்பாள் என்றும் நினைத்தான். அப்போது கண்கள் தாமாகத் திறந்துகொள்ளும். உடனே எதிரிலிருந்த வெள்ளைக் காரப் பெண்ணின்மீது அவனது திருஷ்டி படும்; அவள் மகாபரிசுத்தமான குணவொழுக்கம் உடையவளைப்போல அன்பேவடிவாக உட்கார்ந்திருப்பதை அவன் காண்பான். அது புண்ணில் மிளகாய் விழுதை அப்புதலைப்போல இருக்கும்; எவ்வளவோ சிறந்த அழகை ஈசுவரன் வளுக்குக் கொடுத்திருந்தாலும், வாசனையில்லாத பொன் மலரைப் போலவும், பணத்திற்காக ஆசைகாட்டும் பரத்தையைப் போலவும், பெண்களுக்குரிய அச்சம்,பயிர்ப்பு முதலிய குணங்களின்றி அன்னியனாகிய என்னிடம் இருக்கிறாளே! இது என்ன ஜென்மமோ!” என்று அவன் பலவாறு நினைப்பதும், சோர்வடைந்து கண்ணை மூடுவதும், துயில்வதும், உணர்வடைவதும், எண்ணிறந்த நினைவுகளினால் வதை படுவதுமாய் மாறிமாறிச் செய்துகொண்டிருந்தான். அவ்வாறு அவனது மனத்திலும் தேகத்திலும் பெருத்த போர் நடந்துகொண்டிருந்தது. மேலும் இரண்டொரு நாட்கள் கழிந்தன. நன்றாகத் திரும்பிப் படுக்கவும், எழுந்திருக்கவும் இன்னம் அவனுக்கு வல்லமை உண்டாகா திருந்தது; உடம்பின் புண்களும் காற்பங்கே ஆறி யிருந்தன. அருகிலிருந்த தாதியைக் காண்பதனால் அவன் தனது குடும்பத்தின் நினைவைப் பெற்றுப் பெற்று மிகவும் தவித்த வண்ணம் படுத்திருந்தான். 

ஆனால், அந்த வெள்ளைக்காரப் பணிப் பெண்ணோ, ஓய்வு துயிலின்றி, இரவு பகலாய் அவனுக்கருகிலேயே இருந்து ஈன்ற தாயினும் சிறந்த அன்னையாய் அமைந்து, அவனுக்குரிய காரியங்களைச் செய்து கைம்மாறு கருதாத பேருதவி புரிந்து வந்தாள்; பல் தேய்த்துவிட்டுப் பால்புகட்டுவது முதல், இடையில் நழுவிப்போகும் வஸ்திரத்தை இருக்கிக் கட்டி உடம்பில் உட்கார்ந்து வதைக்கும் ஈயை ஓட்டுதல் வரையிலுள்ள ஒவ்வொரு காரியத்தையும் சலிப்பின்றி உவப்போடு செய்து வந்தாள். வராகசாமியின் அறிவு தெளிவடைய அடைய, அந்தப்பெண்மணி அவனுக்குச் செய்துவந்த பணிவிடைகளின் அருமை அவனது மனதில் படவாரம்பித்தது.பெண்பாலர் யாவரும் வஞ்சகரென்னும் நினைவு அவன் மனதில் வேரூன்றி இருந்ததாயினும், அந்த வெள்ளைக்காரியின் பணிவிடைகள் மாத்திரம் அவனுக்கு அவசியமானவையாயும் இன்பகரமான வையாயும் தோன்றின. ஆரம்பத்தில், அவளது பணி விடைகளை ஏற்றுக்கொள்ளவே அவன் மனமற்றிருந்தான். அவள் ஐந்து நிமிஷமேனும் தன்னைவிட்டு அப்புறம் போகமாட்டாளா வென்று சுவாமியை வேண்டுவான். அந்த வெறுப்பு படிப்படியாகக் குறைந்து, அவள் அப்போதைக்கப் போது கேட்ட கேள்விக்கு மறுமொழி கூற மனமற்று அவன் மெளனம் சாதித்தான். என்றாலும் அந்த தாதி தனது விஷயத்தில் பெருத்த பாடுபட்டு வருவதை அவன் நாளடைவில் நன்றாக உணர்ந்தான். அவள் சம்பளத்திற்கு வேலை செய்யும் கூலிக்காரியானாலும், தனது வேலையை அவ்வளவு திறமையாகவும் பிறர் மனதைக் கவரும்படியும் செய்வதைக் கண்டு, அவளது விஷயத்தில் ஒருவகையான நல்ல அபிப்பிராயமும், நன்றியறிவும் அவன் கொள்ள ஆரம்பித்தான். தான் அந்த வைத்தியசாலையில் இருக்கப்போகும் இன்னம் சில சொற்ப நாட்களும், அவளுடன் சாதாரணமாக இருந்துவிட்டுப் போவதனால் தனது கொள்கைக்கு எவ்விதமான கெடுதலுமில்லை யென்று அவன் நினைத்தான். தன் விஷயத்தில் எவ்விதமான குற்றமும் செய்யாதவளும், நன்மைகளையே புரிந்து உயிரை மீட்பவளுமான அவளோடு தான்பேசாமலே வருமம் பாராட்டுவது கேவலம் மிருகத்தனமென்றும், நன்றி கெட்டவன் செய்யும் காரிய மென்றும் நினைத்தவனாய், மெல்ல அவளிருந்த பக்கமாகத் திரும்பி அவளது முகத்தை உற்று நோக்கினான். அவன் தன்னோடு ஏதோ விஷயத்தைப் பற்றிப் பேச விரும்புகிறா னென்று கண்ட அந்த வெள்ளை கிள்ளை, “என்ன வேண்டும்?” என்று வினவினாள். 

உடனே வராகசாமி பலஹீனமடைந்த குரலில், ரவிலும் பகலிலும் நீ ஒருத்தியே இங்கே இருக்கிறாயே! உனக்கு ஓய்வு வேண்டாமா? நீ தூங்க வேண்டாமா? பகலுக்கு ஒருத்தி இரவுக்கு ஒருத்தி என்கிற ஏற்பாடு இங்கே கிடையாதா? எங்களைக் குணப்படுத்து முன் நீங்கள் வியாதியாய்ப் படுத்துக்கொள்வீர்கள் போலிருக்கிறதே! இப்படிப்பட்ட பெருத்த அக்கிரமம் நடக்குமோ! இப்படியும் வேலை வாங்குவார்களா!” என்று கூறிவிட்டு அவளது முகத்தை நோக்கினான். தான் கேட்ட கேள்விக்கு அவள் ஏதாகிலும் துடுக்கான விடை தருவாளோவென்று அவன் அஞ்சினான். அதைக் கேட்ட அந்த மங்கை ஒருவாறு கிலேச மடைந்தவளாய், அப்பாலிருந்த ஏதோ வஸ்துவை கவனிப்பவளைப்போல வேறு பக்கத்தைப் பார்த்துக்கொண்டு, “ஏராளமான சம்பளங் களை வாரிக் கொடுத்துவிட்டு எங்களைச் சும்மா உக்கார வைப்பார்களா? இப்படி ஆபத்துக் காலத்தில் இராப்பகலாய் உட்கார்ந்து உபசரணை செய்வதற்காகத் தானே எங்களுக்கு அதிமான சம்பளம் கொடுக்கிறார்கள். நல்ல தேகஸ்திதியிலிருப் பவர்கள் கஷ்டப்படாவிட்டால் நோயாளிகள் எப்படி பிழைப்பார்கள்? ஒருவர் கஷ்டப்பட்டால் தான் இன்னொரு வருக்குச் சுகமுண்டாகும். நாங்கள் இப்படிச் செய்து செய்து பழகியிருக்கிறோம். இது துன்பமாகவே தோன்றவில்லை. முதலில் இது எங்களுடைய கடமை; இரண்டாவது, இது பரோபகாரமான காரியம். பிறர் துன்பப்படுவதைக் கண்டு இரக்கங்கொள்ளாத மனிதர் மனிதராக இருக்கமாட்டார். மூன்றாவது, இந்தக் காரியம் பெண்களுக்கு இயற்கையானது. வீட்டில் புருஷன் குழந்தைகள் முதலியோர் வியாதிப் பட்டிருந்தால், அவர்களுடனிருந்து துன்பம் அநுபவிப்போர் ஸ்திரீகளே. ஆகையால், இது என் மனசுக்கு உகந்த வேலையாகவே இருக்கிறது; இதில் அக்கிரமம் ஒன்றுமில்லை” என்றாள். 

அவள் பேசியது மிக்க இன்பகரமாக இருந்தது. அவள் காரியத்தாலும், பேச்சாலும் புருஷரை ஒரு நொடியில் மயக்கிவிடக் கூடிய மகா தந்திரி என அவன் நினைத்தான். ஆனால், உண்மையில் அவளது குணம் எப்படிப்பட்டதோ என்னும் சந்தேகம் அவனது மனதில் தோன்றியது; அவள்மீது ஒருவகை வெறுப்பும், விருப்பும் ஒருங்கே உதித்து அவன் மனதை வதைத்தன. தான் கேட்ட கேள்விக்கு அவள் துடுக்காக மறுமொழி கூறாமல், பெண் தன்மையோடு பேசியதைப்பற்றி ஒருவகையான திருப்தியும் தோன்றியது. அவன் தனது கண்களை மூடிக்கொண்டு சிறிது மௌனமா யிருந்தான். பிறகு கண்களைத் திறந்து கொண்டு, “நான் இங்கே வந்து எத்தனை நாளாகிறது?” என்று கேட்டான். 

வெள்ளைக்காரி:-பன்னிரண்டு நாட்களாகின்றன என்றாள். 

வராக:- என்னுடைய சொந்தக்காரர்கள் யாராவது இங்கே வந்து என்னைப் பார்த்துப் போகிறார்களா? 

வெள்ளை :- உங்களுடைய அக்காளும், சாமாவையர் என்ற இன்னொரு மனிதரும் அப்போதைக்கப்போது வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இவ்விடத்துக்கு வந்த தினத்துக்கு மறுநாள் உங்களுடைய மாமனாரும், அவருடைய தாயாரும், சாமாவையரும் வந்தார்கள் – என்றாள். 

அதைக் கேட்ட வராகசாமி, அவர்கள் வந்தபோது என்ன நடந்ததென்பதை அறிய ஆவல் கொண்டவனாய், “அவர்கள் வந்து என்ன செய்தார்கள்? அவர்களும் தினம் தினம் வந்து கொண்டிருக்கிறார்களா?” என்றான். 

வெள்ளைக்காரப்பெண், “அவர்கள் அன்றைக்கு மாத்திரந்தான் வந்தார்கள்; இங்கே வந்தவுடன் உங்களுடைய பரிதாபகரமான நிலைமையையும் உடம்பு முற்றிலும் நிறைந்திருந்த புண்களையும் கண்டு இருவரும் விசனித்து அழுதார்கள்; கண்ணீர்விட்டுக் கதறினார்கள்; சாமாவையர் உங்களுடைய சட்டைப் பையிலிருந்த இரண்டு கடிதங்களை எடுத்து அவர்களிடம் கொடுக்க, அவர்கள் அதிலுள்ள விஷயங்களை அறிந்து கொண்டவுடன் மிகவும் ஆத்திரமடைந் தார்கள். அவர்களுக்குப் பதினைந்து நிமிஷம் சாவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது; அது முடிந்து போன தாகையால், அவர்களை உடனே நாங்கள் வெளியிற் போகச் சொல்லி விட்டோம். அதற்கப்புறம் அவர்கள் இன்னம் வரவில்லை” என்று கூறினாள். 

அதைக் கேட்ட வராகசாமி ஒருவகையான அருவருப்பை யடைந்தான்; மேனகாவின் மீது அவன் கொண்ட வெறுப்பு அவர்கள் மீதும் சென்றது. அவர்கள் கெட்டவர்களாகையாலும், தஞ்சையில் சுயேச்சையாக அவர்கள் அவளை நாடகம் பார்க்க விட்டிருந்ததாலும், மேனகா அவ்வாறு ஓடிப்போனா ளென்றும், தங்களுக்குண்டான அவமானத்திற் கெல்லாம் அவர்களே காரணமென்றும் நினைத்து அவன் பெரிதும் ஆத்திரமடைந்தான். அந்தப் பெண்ணிடம் எதைச் சொல்லலாம் எதைச் சொல்லக்கூடாது என்பதை யோசனை செய்யாமல், அவர்களைப்பற்றி அவதூறாகப் பேசத் தொடங்கினான். ‘அவர்களுடைய விசனம் அந்த ஒரு நாளோடு முடிந்து விட்டது போலிருக்கிறது. எல்லாம் பெண்ணுக்காகப் போடும் வேஷம். மாப்பிள்ளையைப் பற்றி மாமனார்களுக்கு அந்தரங்கத்தில் அபிமானம் ஏது? பெண் இருக்கிறாளென்று நினைத்து, அவளுக்காக முதலில் பாசாங்கு செய்தார்கள் போலிருக்கிறது. பெண் போய்விட்டாள் என்பதை அறிந்தவுடன் இனிமேல் மாப்பிள்ளையின் தயவு எதற்கென்று போய்விட்டார்கள். அப்புறம் அவர்கள் ஏன் வருவார்கள்?’ என்று மிகவும் குத்தலாகவும் அதிருப்தியோடும் கூறிக்கொண்டான். அதைக் கேட்ட அந்த வெள்ளைக்காரப் பெண்ணின் முகம் ஒருவகையாக மாறுதல் அடைந்தது. அவள் தனது முகத்தை அப்புறம் திருப்பி வேறு எதையோ கவனிப்பவள்போல இருந்து விட்டு மறுபடியும் முகத்தை அலட்சியமாக அவனது பக்கம் திருப்பி, ‘அவர்களுக்கு என்னென்னவோ ஆபத்துக்கள் வந்து விட்டனவாம். ஆகையால், அவர்கள் உடனே ஊருக்குப் போய்விட்டார் களாம். சாமாவையர் என்பவர், டாக்டர் துரைஸானியம்மாளிடம் சொன்னாராம்?” என்றாள். அதைக் கேட்ட வராகசாமி திகைப்படைந்து, “அவர்களுக்கு என்ன ஆபத்து வந்ததாம்? அந்த விவரத்தை சாமாவையர் சொல்லவில்லையா?” என்று பரிகாசமாகக் கேட்டான். 

வெள்ளை:- எல்லா வற்றையும் சொன்னாராம். அவர்கள் உங்களைப் பார்க்க இங்கே வரும்போது வழியில் போலீஸார் உங்கள் மாமனாரை ஸ்டேஷனுக்குள் அழைத்துப்போய், அவரை தஞ்சை கலெக்டர், வேலையிலிருந்து விலக்கி வைத்திருக்கிறதாக அனுப்பி யிருந்த தந்தி உத்தரவைக் கொடுத்தார்களாம். 

வராக: – (அதிக வியப்படைந்து) என்ன ஆச்சரியம்! ஏன் அவரை வேலையிலிருந்து நீக்கினார்களாம்? 

வெள்ளை:- அவர் ரஜா இல்லாமல் இந்த ஊருக்கு வந்து தம்முடைய பெண்ணை யழைத்துக்கொண்டு போனாராம். அதற்காகவும் இன்னம் ஏதோ காரணத்துக்காகவும் வேலையிலிருந்து நீக்கினார்களாம்-என்றாள். 

அதைக்கேட்ட வராகசாமி மிகவும் ஆச்சரியமடைந்தான். மாமனார் சென்னைக்கு வந்து பெண்ணையழைத்துப் போனாரென்பதே பொய்; அம்மாதிரி தானும், தனது சகோதரிமாரும், சாமாவையரும் நினைத்திருந்தவர்கள். மாயாண்டிப்பிள்ளையின் கடிதங்கள் கிடைத்த பிறகு அந்த எண்ணம் விலகிவிட்டது. அப்படி இருக்க, அவர் சென்னைக்கு வந்தார் என்னும் பொய்யான அவதூறு தஞ்சை கலெக்டருக்கு எப்படி எட்டி யிருக்கும் என்று அவன் யோசித்துப் பார்த்தான்; தான் அனுப்பிய தந்தி ஒருக்கால் கெலெக்டரிடம் போய்ச் சேர்ந்திருக்குமோ வென்று நினைத்தான். வேறு எத்தகைய காரணமும் தோன்றாமையால், விஷயம் அப்படித்தானிருக்க வேண்டு மென்றே அவன் உறுதியாக நினைத்து, இரண்டொரு நிமிஷம் மௌனம் சாதித்தான்; “அப்புறம் ன்னம் என்ன ஆபத்து வந்ததாம்?” என்று கேட்டான். 

வெள்ளை:- அவர்கள் தஞ்சையிலிருந்து புறப்பட்ட அன்று ராத்திரி, அவர்களுடைய வீட்டில் கொள்ளைக்காரர்கள் புகுந்து, சொத்துக்களை யெல்லாம் கொண்டுபோனது மன்றி, உங்களுடைய மாமியாரை மிகவும் முரட்டுத்தனமாக அடித்துப் போய்விட்டார்களாம். அந்தச் செய்தியும் உடனே தந்தியின் மூலமாகக் கிடைத்ததாம். உங்கள் மாமியார் பிழைக்க மாட்டார்களென்றே செய்தியைக் கேட்டு உடனே அவர்கள் போய்விட்டார்களாம் என்றாள். 

அந்த மகா துக்ககரமான விஷயத்தைச் சொல்ல மாட்டாமல், தயாள குணமுள்ள அந்த வெள்ளைக்காரப் பெண் மிகவும் வருந்திக் கூறினாள். அவளது கண்களிலும் கண்ணீர் துளித்தது. அவள் அப்புறம் திரும்பி அதைத் துடைத்துக் கொண்டாள். அந்த விவரத்தைக் கேட்ட வராகசாமியின் மனம் ஒருவாறு கலங்கியது. அறிவும் சோர்வடைந்தது. அவன் உடனே தனது கண்களை மூடிக்கொண்டு கால்நாழிகை நேரம் உறங்கியபின் விழித்துக் கொண்டான். அப்போது அவனுக்கு மருந்தும் பாலும் கொடுக்க வேண்டிய தருணம் வந்தமையால், பணிமகள் மிகவும் அன்போடு மருந்தை உட்செலுத்தினாள். அம்மருந்து வயிற்றைப் புறட்டிய தாகையால், அவன் வாந்தி யெடுக்க முயன்றான். அவள் அனுக்கருகில் கட்டிலில் உட்கார்ந்துகொண்டு, “வாந்தி எடுக்கவேண்டாம். சமாளித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிக்கொண்டு அவனது மார்பைத் தடவிக் கொடுத்தாள். அவள் தனக்கருகில் உட்கார்ந்ததால், அவன் சகிக்கவொண்ணாத ஒரு வகையான கிலேசத்தை அடைந்தான். உடனே வாந்தி சிறிதளவு வெளிப்பட்டது. அந்தப் பெண் சிறிதும் அருவருப்பின்றி அதைத் தனது கையாலேந்தி அப்புறமிருந்த பாத்திரத்தில் போட்டுவிட்டுத் தனது கையைச் சுத்தி செய்துகொண்டு வந்து அவனது வாய் முதலியவற்றைத் தனது பட்டுச் சவுக்கத்தால் துடைத்து அருகில் உட்கார்ந்து மேலும் மார்பைத் தடவிக் கொடுத்தாள். அவனது வாந்தி அவ்வளவோடு ஓய்ந்தது. அந்தப் பெண் கட்டிலை விட்டு எழுந்து எப்போது நாற்காலியில் உட்கார்ந்து கொள்வாளென்று அவன் நினைத்தான். அவள் அருமையான அழகுவாய்ந்த பதினாறு வயது பருவ மடந்தையாக இருந்தாளாயினும், மிகவும் பாக்கியம் பெற்றவனுக்கே கிடைக்கக்கூடிய தெய்வ ரம்பையைப் போல அவள் இருந்தாளாயினும், அவள் அன்னிய மாது என்னும் நினைவினால் அவன் அவளைத் தொடவும் அஞ்சினான். அவள் அன்போடு தனக்குச் செய்த உபசரணைகளைப் பற்றி, அவன் மனதில் நன்றியறிவு சுமந்த தாயினும், அவள் முற்றிலும் நாணமின்றியும், தான் அன்னியப் பெண்ணென்பதை மறந்தும் நடந்துகொள்வதைக் கண்டு, அவளது விஷயத்தில் அவன் இழிவான அபிப்பிராயம் கொண்டான். அவள் செய்ததைப்போல தனது மனைவியான மேனகா அதற்கு முன் உபசரணை செய்ததெல்லாம் உடனே நினைவிற்கு வந்தது. “எல்லாம் வேஷம்! பெண்பிள்ளைகள் இயற்கையிலேயே பாசாங்கு செய்யும் அவதாரங்கள்!” என்று அவன் நினைத்தான். உடனே அவளை நோக்கி, “நான் இனி வாந்தி எடுக்கமாட்டேன். நீ நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளலாம். என்னால் உனக்கு எவ்வளவு சிரமம்!” என்றான். அதைக் கேட்ட மங்கை உடனே எழுந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். சற்று முன் உட்கொண்ட மருந்தினால் வராகசாமி ஒரு விதமான சோர்வையும், சிறிதளவு மயக்கத்தையும் அடைந்து கண்களை மூடிக்கொண்டு அரை நாழிகை நேரம் தூங்கி முன்னிலும் அதிகமாகத் தெளிவடைந்து விழித்துக்கொண்டான். அந்தப் பெண் சுவரில் தீட்டப்பட்ட பதுமைப்போல அசைவின்றி தன்னையே கவனித்த வண்ணம் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அவனது நினைவு தன் மாமனாரின் விஷயங்களிற் சென்றது. அவர்களைப் பற்றி அந்தத் தாதிக்கு இன்னமும் ஏதேனும் விவரம் தெரிந்திருக்கலாம் என்று நினைத்தவனாய், “மாமனாரைப்பற்றி அப்புறம் ஒரு செய்தியும் கிடைக்க வில்லையா?” என்றான் வராகசாமி. 

வெள்ளை:- ஒன்றும் தெரியவில்லை – என்றாள். 

வராகசாமி :- சரி; எப்படியாவது போகட்டும். கெட்டவர் களை சுவாமி எப்படியும் தண்டித்து விடுவார்-என்றான். 

அதைக் கேட்ட வெள்ளைக்காரப் பெண், “நீங்கள் அப்படிச் சொல்வது சரியல்ல; உங்களுடைய மாமனாருக்கு நேர்ந்த விபத்துக்களைக் கேட்ட அன்னியர்களான எங்களுக்கே சகிக்கவில்லையே. நம்முடைய பகைவனுக்கு எவ்விதமான துன்பம் வந்தாலும், நாம் வருத்தப்படுவோமே. அப்படி இருக்க, உங்கள் விஷயத்தில் எவ்விதமான குற்றமும் செய்யாத மாமனார் விஷயத்தில் நீங்கள் இரக்கங்கொள்ளாமல் அதைப் பற்றி திருப்தியடைவது தருமமல்ல” என்றாள். 

வராகசாமி:- நீ சொல்வது உண்மைதான்; பொதுவான தருமமும் அதுதான்; நீ மிகவும் தயாளமான மனதைக் கொண்டவள் என்பது நன்றாகத் தெரிகிறது. ஆனால், அவர்களுடைய ரகசியமான செய்கைகளை நீ அறிந்தால், அவர்கள் மேல் உனக்கு இவ்வளவு இரக்கம் தோன்றாது. அந்த ரகசியங்களை யெல்லாம் வெளிப்படுத்த எனக்கு மனமில்லை. பொதுவாக மனிதரோ, அல்லது வேறு எந்த ஜீவனோ துன்பப்படுவதைக் காணும்போது மனதிளக வேண்டியது அவசியந்தான். ஆனால், குற்றம் செய்தவர்களை நியாயாதிபதி தண்டித்தால், அந்தத் தண்டனை பொருத்தமான தென்று தானே எல்லோரும் மதிக்கிறார்கள். விஷமுள்ள பாம்பு, தேள் முதலிய ஜெந்துக்களை இரக்க மின்றி மனிதர் அடித்துத் துகைய லாக்குகிறார்களே! அவைகள் மரணவேதனை அடையும்போது நம் மனம் வருத்தமடைந்தாலும், அந்தத் தண்டனையை நாம் நியாயமானதென்றே நினைக்கிறோமல்லவா! அதைப்போல, அவர்களும் அவர்களுடைய பெண்ணும் எவ்விதமான மனிதர்கள் என்பது மற்றவர்களைவிட எனக்கு அதிக நன்றாகத் தெரியும் ஆகையால், என் மனம் அப்படி நினைத்தது. மனச் சாட்சியை விலக்க முடியுமா? – என்றான். 

அதைக் கேட்ட அந்த வெள்ளை மடமங்கை ஒருவகையான கிலேசம் அடைந்தாள். அன்னிய மாதாகிய தான், தனக்கு எவ் விதமான சம்பந்தமுமற்ற அவர்களது குடும்ப விஷயங்களைப் பற்றி அதிகமாகப் பேசுவதால், அந்த மனிதருக்கு ஆயாசம் உண்டாகுமோ வென நினைப்பவள் போல அவள் ஒருவகையான நாணமும் சஞ்சலமும் அடைந்தாள். அந்த விஷயத்தில் எவ்விதமான சிரத்தையும் இல்லாதவளைப் போலவும், உலகத்தின் பொது நியாயத்தைப் பேசுகிறவள் போலவும் காட்டிக் கொண்டவளாய், “உலகத்தில் மாமனார் மாமியார்களின் மேல் அதிருப்தியும் ஆத்திரமுங் கொள்ளாத மாப்பிள்ளைகளே இல்லை; நீங்கள் உங்களுடைய மனைவி வீட்டார் மேல் தப்பான அபிப்பிராயம் கொண்டிருப்பதற்குத் தகுந்தாற்போல அவர்களுக்குப் பல துன்பங்கள் வந்து நேர்ந்தன. அதைக்கொண்டு அவர்கள் கெட்டவர்களென்றும், ஆகையால் தண்டிக்கப்பட்டார்க ளென்றும் சொல்வது காகதாலி நியாயமேயாகும். உலகத்தில் குற்றமற்ற மனிதர்களுக்கு ஆபத்துகளும் துன்பங்களும் வருவதில்லையா? அப்படி துன்பப்படுவோர் நியாயமாகவே சிக்ஷிக்கப் படுகிறார்களென்று நாம் நினைப்பது தருமமாகுமா? இப்போது நீங்கள் மோட்டார் வண்டியில் அகப்பட்டுக் கொண்டு பிழைக்கக்கூடாத நிலைமையிலிருந்து பிழைத்தீர் களே! நீங்கள் செய்த ஏதோ குற்றத்துக்கு இது தண்டனையென்று நினைத்து மற்ற ஜனங்கள் சும்மா இருந்து விட்டார்களா? இம்மாதிரி நாம் செய்வதானால், உலகத்தில் துன்பம் அனுபவிக்கும் எவனையும் பிறன் காப்பாற்றவே கூடாது. ஏழைகளுக்குப் பிச்சையிடுவது கூடாது. ஏனெனில், அவர்கள் செய்த குற்றத்திற்காகத் தண்டிக்கப்படுகிறார்கள். ஆகையால், அவர்களுக்கு உதவி செய்வது, கடவுளின் விருப்பத்துக்கு விரோதமான காரியமாகிறது. நீங்கள் பெருத்த வக்கீலென்று சொல்லுகிறார்கள். சட்டங்களையும் நியாயத்தையும் நன்றாக நீங்கள் படித்திருப்பீர்கள். உங்களுக்கு நான் அதிகமாகச் சொல்லக்கூடாது. டாக்டர் துரைஸானியம்மாளிடம் சாமா வையரென்பவர் உங்களிடமிருந்த கடிதங்களின் விவரங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். கடித விஷயமாக நீங்கள் ஆத்திரப்பட்டு, தற்கொலை செய்துகொள்ளப் போய் மோட்டாரில் வீழ்ந்துவிட்டதாகவும் அவர் சொன்னார்; இவைகளைக் கேட்டவர்கள் யாவரும் நீங்கள், விஷயங்கள் பொய்யா, மெய்யா வென்பதை ஆய்ந்தோய்ந்து பாராமல் தற்கொலை செய்துகொள்ள முயன்றதைப்பற்றி உங்கள் மேலே தான் குறை சொன்னார்கள்” என்றாள். 

அதைக் கேட்ட வராகசாமி வியப்பும் அவமானமும் அடைந்து, “கடிதங்களின் ரகசியத்தை எல்லோரிடமும் வெளியிட்டுவிட்டானா அந்த மடையன்! அவனுக்குப் புத்தியே கிடையாது’ என்ற வண்ணம் தனது கைகளால் முகத்தை மூடிக்கொண்டு கால் நாழிகை நேரம் மௌனமா யிருந்தான். அவன் மேனகாவின்மீது கொண்டிருந்த கோபம் பொங்கி யெழுந்தது; அவளால் உண்டான மானக்கேட்டை அறிந்த அந்த வெள்ளைக்காரப் பெண்ணின் முகத்தில் விழிக்கவிருப்பமற்ற வனாய் அவன் சிறிதுநேரம் குன்றிப்போய்க்கிடந்தான். அவனை மீறி ஆத்திரமான சொற்கள் வாயில் தோன்றின. ந்த முட்டாள்கள் எதற்காக இரகசியமான விஷயத்தை விளம்பரப் படுத்துகிறார்கள்? சுத்த மானங்கெட்டவர்கள்! இன்னம் யார் யாரிடம் சொல்லிவிட்டார்களோ தெரியவில்லையே! ஐயோ! இனிமேல் நான் வெளியில் போய் மனிதருடைய முகத்தில் எப்படி விழிப்பேன்! ஆ! கொலை பாதகி! சண்டாளி என்றைக்கும் தீராத அவமானத்தைக் கொணர்ந்து வைத்து விட்டாயே! அடி துஷ்ட முண்டை! பாழாய்ப்போன உன்னுடைய உடம்பு நெருப்பில் வெந்தழியாதோ? நீயேன் சாகிறாய்! இது கெட்டவர்களுக்கல்லவோ காலமா யிருக்கிறது உலகத்தில் சாமி ஏது பூதமேது! இந்த மானக்கேட்டை உண்டாக்கின தேவடியாள் முண்டையான உன் மண்டையை ரே அடியில் கல்லால் உடைத்திருப்பேனே! தப்பித்து கொண்டாயே! கள்ளப் புருஷனோடு உல்லாசமாக வந்த உன்னை ஈசுவரன் தப்புவித்து விட்டான். சொந்தப் புருஷனாகிய நான் வண்டியில் அறைபட்டேன்” என்று பலவாறு தனக்குத்தானே பிரலாபித்து, ஆத்திரமும், அவமானமும் துக்கமும் அடைந்து கண்ணீர் விடுத்தான். அதைக் கண்ட பணிமகளும் இரக்கங்கொண்டு, துடிதுடித்து, தனது ஆசனத்தை விட்டு எழுந்து அவனுக்கருகில் சென்று, “நீங்கள் இப்பட விசனப்பட்டால், குணமடைந்த உடம்பு திரும்பவு கெட்டுப்போய்விடும். டாக்டர் துரையும், துரைஸானியுட என்னைக் கண்டித்து வேலையிலிருந்து நீக்கிவிடுவார்கள். நா இந்த விஷயத்தை உங்களிடம் தெரிவித்திருக்கக் கூடாது என்னுடைய தவறை மன்னித்துக் கொள்ளுங்கள்; சாமாவைய உங்களுடைய ரகசியத்தைப் பலரிடம் சொல்லியிருப்பாரே என்று நீங்கள் சந்தேகப்பட்டு வருந்தவேண்டாம். இந் விஷயத்தை சாமாவையர் முதலில் துரைஸானியிட சொல்லவில்லை. துரைஸானிக்கு இந்தச் சங்கதி வேறு எந்த வகையிலோ தெரிந்து அவரிடம் கேட்க, அவர் அது உண்மைதானென்று ஒப்புக்கொண்டாராம். துரைஸானி இதை மிகவும் ரகசியமாகக் கூறி, உங்களை மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளும்படி சொன்னார்கள். இந்த விஷயம் எங்கள் இருவருக்குமே தெரிந்தது; நாங்கள் இதை வெளியிட மாட்டோம்; அதைப்பற்றி நீங்கள் கொஞ்சமும் கவலை கொள்ளவேண்டாம்; துரைஸானி வந்தால் என்னுடைய உத்தியோகம் போய்விடும். நீங்கள் விசனப்பட வேண்டாம்” என்று கூறி மன்றாடிய வண்ணம் வராகசாமியின் முகம் கண்கள் முதலியவற்றை அன்போடு துடைத்துவிட்டு, ஏதோ ஒரு மருந்தை எடுத்து அவனது வாயில் வைத்து, சிறிது பருகுவித்தாள். அவளது அன்பையும், வேண்டு கோளையும், அவளுக்குத் துன்பம் உண்டாகும் என்பதையும் கருதி வராகசாமி தனது ஆவேசத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டான். 

உடனே அந்த அழகிய மடந்தை ஒருவாறு புன்னகை செய்து, “உங்களைப் பார்த்தால் ஒரு எறும்புக்கும் துன்பஞ் செய்யாத சாதுவைப் போலிருக்கிறதே; நீங்கள் உங்களுடைய மனைவியைக் கொல்லப் போனீர்கள் என்பதைக் கேட்க, எனக்கு நம்பிக்கையே உண்டாகவில்லை. படிக்காத மூடர்கள் செய்யத்தகுந்த காரியத்தை நீங்கள் செய்யத் துணிந்தீர்களா! ஆச்சரியம்! ஆச்சரியம்! அவளைக் கொல்ல நினைத்தீர்களே! கொலை செய்தவனுக்கு விதிக்கப்படும் தண்டனையை அல்லவா அவளுக்கு நீங்கள் விதிக்க நினைத்தீர்கள்! விபச்சார தோஷத்திற்கு உயிரை வாங்குவது மிகவும் கடுமையான தண்டனையாயினும், புருஷனுக்கு அவமானம் உண்டான சமயத்தில், அவர்கள் மனைவியைக் கொல்ல நினைப்பது இயல்பே. அப்படிக் கொன்றாலும் அது குற்றமாகாது; ஆனால், அவள் உண்மையில் விபசாரம் செய்தாள் என்பதை நீங்கள் தெளிவாக அறிந்து கொண்டீர்களா? அல்லது அறிய முயன்றீர்களா? ஏதோ இரண்டு கடிதங்கள் அகப்பட்டன; அவைகளே முடிவான சாட்சிகள், அவைகளை வேதவாக்கிய மாக வைத்துக்கொண்டு கொலை செய்யப் போய்விட்டீர்களே! உங்களுடைய கொடிய எண்ணம் நிறைவேறாதபடி ஈசுவரன் தடுத்ததிலிருந்தே இதில் எதோ சூதிருக்கிறதென்பது உங்களுக்குத் தோன்றவில்லையா? கடிதங்களை எடுத்தீர்களே! அவைகள் உண்மையான அந்த நாடகக்காரனால் எழுதப்பட்ட கடிதங்களா இல்லையா என்பதைத் தெளிவாக நிச்சயித்துக் கொண்டீர்களா? கச்சேரிகளில் எத்தனையோ கொலைக் குற்றங்கள் விசாரணைக்கு வருகின்றனவே; இம்மாதிரியான இரண்டு கடிதங்களின் ஆதாரத்தைக் கொண்டே நியாயாதிபதிகள் தண்டித்ததுண்டா? விரோதிகள் எவரேனும் பொய்யாக இந்த மாதிரி பொய்க் கடிதம் தயாரித்து வைத்திருக்கக் கூடாதா?” என்றாள். 

எதிர்பாராத அவளது சொற்களைக் கேட்ட வராகசாமி, சிறிது மௌனம் சாதித்தான். கடிதம் பொய்க் கடிதமாக இருந்தாலும் இருக்கலாம் என்னும் எண்ணம் அவனது மனதில் தோன்றியது. ஆனால், அது உடனே மின்னலைப்போல மறைந்து போனது. “நீ சொல்வது நியாயந்தான். ஆனால், அவள்மேல் அப்படி அபாண்டமான பழி சுமத்தக்கூடியவர்கள் எங்கள் வீட்டில் ஒருவருமில்லையே! என்னுடைய சகோதரிகள் அவளிடம் மிகவும் பிரியமுள்ளவர்கள். தவிர, அவளுடைய பெட்டியில் இந்தக் கடிதங்கள் இருந்தன. திறவுகோலைத் தாலிச்சரட்டைவிட்டு நீக்காமல் அவளே வைத்திருந்தாள். பெட்டி அவள் வைத்த நிலைமையிலேயே பூட்டப்பட்டிருந்தது. அதை நானே நேரில் உடைத்துக் கடிதத்தை எடுத்தேன். இது ஒன்றையே நாம் முடிவான ருஜுவாகக் கொள்ளலாம்” என்றான். 

வெள்ளை:- (புன்னகை செய்து) நீங்கள் வக்கீல் உத்தி யோகம் செய்பவர்கள். உங்களுடன் நான் வாக்குவாதம் செய்வது அதிகப் பிரசங்கித்தனமாகும்; இருந்தாலும், பெண் பேதையான ஒருத்தியின் மேல் அபாண்டமான குற்றம் சுமத்துவதைக் காண பெண்பிள்ளையான எனக்குச் சகிக்க வில்லை. அதனால் கேட்கிறேன். கோபிக்கக் கூடாது. பெட்டி பூட்டப்பட்டிருந்ததாகச் சொல்லுகிறீர்களே! டிரங்குப் பெட்டியின் பூட்டு உள்பக்கத்தில் இருப்பதல்லவா? ஒருவர் பூட்டை உடைத்து, அதற்குள் கடிதங்களை வைத்துவிட்டுப் பிறகு வேறு பூட்டு அதற்கு போட்டுவித்துப் பூட்டி வைத் திருக்கக்கூடாதா? நீங்கள் உடைத்தபோது இருந்த பூட்டை, அதற்கு முன் எப்போதும் இருந்த பூட்டென்பதை நீங்கள் நிச்சயமாக அறிந்துகொண்டீர்களா? – என்றாள். 

அதைக் கேட்ட வராகசாமி இன்னமும் அதிகமான தடுமாற்றமடைந்து சிறிது யோசனை செய்தான்; “அப்படி உடைத்திருந்தால், அதை என்னுடைய சகோதரிகளே செய்ய வேண்டும். அவர்கள் ஒருநாளும் அப்படிச் செய்ய மாட்டார்கள். அவர்கள் அப்படிச் செய்ய வேண்டிய முகாந்திரமுமில்லை’ என்றான். 

வெள்ளை:- அவர்கள் செய்யவில்லை என்றே வைத்துக் கொள்வோம், அவள் தஞ்சாவூரிலிருந்து இங்கே வருமுன் அவளுடைய தகப்பனார் வீட்டிலுள்ள மனிதர் யாராவது அவள்மேல் பகைமையினால் இப்பொய்க்கடிதம் எழுதி வைத்திருக்கலாமல்லவா? பிறகு புருஷன் அதைப் படித்தால் அவளுக்குத் துன்பம் சம்பவிக்கும் என்னும் கெட்ட நோக்கத்துடன் எவரேனும் வைத்திருந்தாலாகாதா? அங்கே அவளுடைய தாயாருடன் கூடப்பிறந்தவன் ஒருவன் இருப்பதாகவும், அவன் கொள்ளையரைப்பற்றி தந்தியனுப்பிய தாகவும் சாமாவையர் சொன்னாரே! அவனுக்கும் அவளுக்கும் பகைமையிருந்ததனால் ஒருகால் பொய்க் கடிதங்களை அவன் வைத்திருக்கக் கூடாதா? ஆகையால், இந்தக் கடிதங்களை வைத்துக் கொண்டே ஒரு முடிவான தீர்மானம் செய்வது தருமமாகாது. நான் சொல்லுகிறே னென்று நீங்கள் ஆயாசப்படக்கூடாது. நான் வெறும் வாக்குவாதமாகப் பேசுகிறேன்; உங்களுடைய சகோதரிமார் அவள் விஷயத்தில் இப்படிச் செய்ய முகாந்திரமில்லை யென்கிறீர்களே! அவர்கள் அவளுடைய ஆபரணங்களை அபகரித்துக்கொள்ளவோ, அல்லது வேறு எந்தக் கருத்துடனோ அவளைக் கொன்றிருக்கக் கூடாதா? அல்லது அவளைப் பராதீனப்படுத்தியிருக்கக் கூடாதா? 

வராக:- அவளை நான் கடற்கரையில் கண்டுதானே கொல்லப்போனேன்; அவள் பிறரால் கொல்லப்பட்டிருப்பாள் என்னும் சந்தேகம் ஏன் உண்டாகவேண்டும்? அவளுடைய மனதுக்கு விரோதமாக அவள் பராதீனப் படுத்தப்பட்டி ருந்தால், சுயேச்சையாக மோட்டார் வண்டியில் காற்று வாங்க வந்திருக்க மாட்டாளல்லவா? அவள் தப்பித்து என்னிட மல்லவா வந்திருக்க வேண்டும். ஆகையால், அவள் கொல்லப்படவும் இல்லை; பராதீனப்படுத்தவுமில்லை யென்பது தெரிகிறதல்லவா? 

வெள்ளை:- கடற்கரையில் நீங்கள் கண்ட பெண் அவள்தா னென்பதற்கு ருஜுவென்ன? அவளைப்போல உலகத்தில் இன்னொருத்தி இருக்கக்கூடாதா? உங்களுடைய ஆவேசத் திலும், மோட்டார் வண்டியின் விசையிலும் அவள் உங்கள் மனைவியைப் போலக் காணப்பட்டிருக்கலாம். அல்லது அவளாகவே இருந்தாலும், அவள் அன்னியருடைய வசத்திலிருந்து தப்பிவரக்கூடாமல் கட்டாயப்படுத்தப் பட்டிருக்கலாம் அல்லது புருஷனிடம் மறுபடி எப்படி வருகிறது என்கிற அச்சத்தினால் எங்கேயாகிலும் இருக்கலாகாதா? 

வராக:- நீ கேட்பதெல்லாம் சரியான கேள்விகளே; என்றாலும், அவள் என் மனைவி என்பதைப்பற்றி கொஞ்சமும் சந்தேகமே இல்லை. அவளல்ல வென்று சொல்வதற்கில்லை. அவள் அன்னியரால் பாதுகாப்பாக வற்புறுத்தி வைக்கப் பட்டிருக்கலாம். காரியம் அப்படி நடந்திருக்குமானால் அவள் இதுகாறும் அவசியம் களங்கமடைந்திருப்பாள். அப்படித்தான் தேக சுகத்தை இழந்த பெண்ணை எவன் திரும்பவும் அழைத்துக் கொள்வான்? அவள் உயிரோடிருந்து, இன்னமும் எனக்கு அவள் அவமானம் உண்டாக்குவதைக் காட்டிலும் சாவதே நல்லது. 

வெள்ளை:-(புன்சிரிப்போடு) நீங்கள் சொல்லுவது எப்படி ருக்கிறதென்றால், கிணற்றில் விழுந்து தத்தளிக்கும் மனிதரைத் தண்ணீருக்குள் அழுத்திவிடுவதைப் போலிருக் கிறது. உலகத்தில் ஸ்திரீகளுக்கு ஆபத்து அதிகம். ஆண்பிள்ளை களோ பொல்லாதவர்கள். நல்ல அழகான பெண்களைக் கண்டுவிட்டால், யோக்கியர்கள் கூட அயோக்கியர்களாக மாறிவிடுவார்கள். பலவந்தத்தினாலோ, மோசத்தினாலோ உங்களுடைய மனைவியை அவள் மனதுக்கு விரோதமாக பிறர் அபகரித்துக்கொண்டு போயிருந்தால், அவளை மீட்க வேண்டியது, அவளுடைய நாயகனாகிய உங்களுடைய கடமையல்லவா? அவள் அன்னியரால் வஞ்சிக்கப்பட்டது அவளுடைய குற்றமாகுமா? அவளை அப்படியே விட்டுவிடுவது பாவமல்லவா? ன்னமும் அவள் மாசற்ற கற்புடையவளாயிருக்கலாம். நீங்கள் வந்து காப்பாற்று வீர்களென்று அவள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்க லாம். கற்பழிந்து போமாயின் உத்தம ஸ்திரீகள் உயிரை வைத்துக் கொண்டிருக்கவே மாட்டார்கள். உங்களுடைய மனைவி உயிரோடிருப்பதால், அவள் இன்னமும் களங்கமற்றவளா யிருக்கிறாளென்பது நிச்சயமாகத் தெரிகிறது. அவளை மீட்கவேண்டுமே என்பதை நினையாமல் நீங்கள் அவளைக் கொல்லப்போனது நீதியாகுமா? உங்களுடைய ராமாயணத்தில் சீதையை ராமர் கவனிக்காமல் விட்டு விட்டாரா? அவளை மீட்ட பிறகல்லவா, அவளுடைய கற்பு அழிந்ததா இல்லையா என்பதைச் சோதனை செய்து ஏற்றுக் கொண்டார். அதுவல்லவா புருஷ தர்மம். நீங்கள் உங்களுடைய ஸ்திரீகளின் மன உறுதியைப் பற்றி இவ்வளவு கேவலமான அபிப்பிராயங்கொண்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. வெள்ளைக்காரார்களாகிய எங்கள் ஜாதியில் புருஷர் தமது ஸ்திரீகளின் மேல் இவ்வளவு எளிதில் அவநம்பிக்கைப் படமாட்டார்கள். அவர்களுடைய மனதின் உறுதியை ஒருமுறை கண்டு கொள்வார்களானால், அவர்கள் எவ்விடத்துக்குப் போனாலும், அவர்களுடைய மனவுறுதியைப் பற்றி இப்படி சந்தேகப்படமாட்டார்கள். பெண் மக்களுக்கு மன உறுதி யில்லை யென்று நினைத்தீர்களா? உங்களுடைய மனதாகிலும் அழகிய ஸ்திரீகளைக் கண்டால் சலிக்கும். அவர்கள் மனதால் கூட வேறு புருஷரை நினைக்க மாட்டார்களே! – என்றாள். 

அதைக் கேட்ட வராகசாமியின் மனதில், அந்த வெள்ளைக்கார மடந்தை சொல்வது நியாயமான சங்கதி யென்று தோன்றினதாயினும், அவள்மீது ஒருவகையான கோபமும் அவனது மனதில் உண்டாயிற்று.நிச்சயமாக உண்மை யென்று தெரிந்த அந்த விஷயத்தைப்பற்றி, அவள் வெறும் தத்துவம் பேசி, வீண் வாக்குவாதம் செய்கிறாளென்று அவன் நினைத்துக்கொண்டவனாய், “நீ சொல்வதெல்லாம் சரிதான். என் வீட்டிலுள்ள சகோதரிகள் ஒருகாலும் என்னை வஞ்சிக்கக்கூடியவர்களல்ல. ஆகையால், அவர்கள் ஏதேனும் துன்பம் செய்திருப்பார்களென்று நினைக்கவும் முடியாது. அவர்களுடைய பாதுகாப்பில் வீட்டிலிருக்கையில், அன்னியர் அவளை வஞ்சித்து அழைத்துக்கொண்டு போயிருப்பார்கள் என்று நினைப்பதும் அசம்பாவிதம். ஆகையால், அவளே தன் முழு மனதோடு தன்னுடைய முயற்சியினாலேயே போயிருக்கிறாள். அதைப் பற்றி சந்தேகமே இல்லை. ஆகையால், அவளை நாம் மீட்க நியாயமே இல்லை-என்றான். 

அதைக் கேட்ட அந்த வெள்ளைக்காரப் பணிப்பெண் மிகவும் இரக்கமும் விசனமுங்கொண்டு, “ஐயோ பாவம்! சகோதரிகள் வஞ்சம் செய்யமாட்டார்கள். ஆனால், உயிருக்குயிரான மனைவி மாத்திரம் செய்வாளா! ஆம் ஆம் உண்மைதான். அதிக ஆசையை எவர்கள் வைக்கிறார்களோ அவர்கள்மேல் சந்தேகம் கொள்வதே உலக வழக்கந்தானே! அதிருக்கட்டும். நீங்கள் இன்னொரு முக்கியமான விஷயத்தைக் கவனித்தீர்களா? அவள் தஞ்சாவூரில் இருந்தபோது சுயேச்சையாக நாடகம் பார்த்து வந்தாளென்பதும், தனிமையில் ஒரு வீடு வைத்துக்கொண்டு ரகசியமாக அவ்விடத்தில் நாடகக்காரனைச் சந்தித்து வந்தாள் என்பதும் கடிதத்திலிருந்து தெரிகின்றனவே! அங்கிருந்தபடியே நாடகக்காரனோடு பட்டணத்துக்கு ஓடிவந்து ரகசியமான ஓர் இடத்தில் இருப்பது சுலபமா? அல்லது தன்னை அழைத்துக் கொள்ளும்படி உங்களுக்குக் கடிதம் எழுதி, எவ்வளவோ பாடுபட்டு, உங்கள் வீட்டிற்கு வந்தபிறகு போகவேண்டிய காரணமென்ன? உங்கள் வீட்டிலிருந்து தப்பித்துக்கொண்டு போவது கடினமாயிருக்கும் என்பதை அவள் யோசித்திருக்க மாட்டாளா? நாடகக்காரன் மேல் ஆசை வைத்தவள் அப்படியே ஓடிப்போக நினைப்பாளேயன்றி அப்புறம் தன் புருஷனிடம் வர ஒருநாளும் விரும்பமாட்டாள். அப்படிப் பட்டவளுக்குச் சொந்தப்புருஷன் வேப்பங்கா யல்லவா? என்றாள். 

அதைக் கேட்ட வராகசாமி சிந்தனையில் ஆழ்ந்தான். அவனது மனதில் பெருத்த குழப்பம் உண்டாய்விட்டது. மேனகா குற்றவாளி என்ற நினைத்திருந்த அவனது மனஉறுதி. ஒருவாறு தளர ஆரம்பித்தது. ஒருகால் அவள் குற்றமற்றவளா யிருப்பாளோ வென்னும் சந்தேகம் அடிக்கடி அவனது மனதில் தோன்றித் தோன்றி மறைந்தது. சஞ்சலம் குடி கொண்டது. உண்மையில் அவள் எப்படித்தான் மறைந்து போனாளோ, கடிதங்கள் எப்படித்தான் வந்தனவோ வென்று பலவாறு நினைக்க ஆரம்பித்தான். தன்னைக் காட்டிலும் அந்த வெள்ளைக்காரப் பெண் கூரிய பகுத்தறிவைக் கொண்டிருப் பதை நினைத்து அவன் அவளுடன் மேலும் சம்பாஷிக்க விரும்பினான். தனது மனைவி விஷயத்தில் இன்னும் அனுகூலமான சங்கதி எதையேனும் அவள் வெளியிடக்கூடு மென்றும், அதனால், தான் பயனடையலாமென்றும் நினைத்து அவன் ஏதோ பேச ஆரம்பித்தான். 

அந்தச் சமயத்தில் அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. டாக்டர் துரையும், துரைஸானியும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்ட வராகசாமி திடுக்கிட்டுத் தனது கட்டிலில் அமைதியாகப் படுத்துக் கொண்டான். பணிமகள் எழுந்து மரியாதையாக ஒதுங்கி நின்றாள். 

உடனே துரைஸானி கட்டிலிற்கு அருகில் வந்து வராகசாமியின் நாடியைப் பார்த்தாள்; பணிப் பெண்ணின் முகத்தைப் பார்த்தாள். “அடி எமிலி! நல்ல நிலைமையிலிருந்த இவருடைய உடம்பு இப்போது இவ்வளவு படபடப்பா யிருக்கவேண்டிய காரணமென்ன?” என்று அதிகாரமாகக் கேட்டாள். 

எமிலி என்ற பெயர் கொண்ட அந்தப் பணிப்பெண், ‘அதன் காரணம் எனக்குத் தெரியவில்லை’ யென்றாள். 

துரைஸானி :- ஓகோ! உனக்குத் தெரியாதோ ! நீ இவருடன் ஏதோ பேசிக்கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படி இருக்காது; நீ பெருத்த வாயாடி. உன் வாய் ஒரு நிமிஷமும் ஓய்ந்திருக்காது; ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாய்; உன்னை இந்த அறையில் வைத்ததே பிசகு. வேறு எந்த அறைக்காவது உன்னை அனுப்புகிறோம். நான் வ்விடத்தில் அதிக ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னதற்கா கவா நீ இப்படிச் செய்தாய்? இதோ போய் உத்தரவு அனுப்புகிறோம்; வேறு அறைக்குப் போகத் தயாராக இரு – என்று கோபமாகச் சொல்லிவிட்டு துரைஸானி துரையுடன் வெளியிற் சென்றாள். பணிமகள் மிகவும் அவமானம் அடைந்தவளைப்போலக் கீழே குனிந்து கொண்டாள். தமது மனதிற்கு உகந்தவிதமாய் நடந்து கொண்டிருக்கும் அந்த நற்குணவதி போய் விடுவாளோ வென்றும், வேறு எவள் வருவாளோ வென்றும் பலவாறு நினைத்து ஏக்கங்கொண்டு அவன் அந்த மங்கையின் முகத்தை நோக்கினான். 

அதிகாரம் 23 – பாதாள எட்சினி வசியம் 

பதினைந்தாவது அதிகாரத்தின் இறுதியில் நைனா முகம்மது தனது சயன அறையிலிருந்து ஓடிய நூர்ஜஹானைத் துரத்தியபோது உட்புறத்தில் அவளது அக்காள் இருந்ததைக் கண்டு திரும்பிவந்து, மிகவும் அச்சமும் கலக்கம் அடைந்து படுத்திருந்தான் என்பது சொல்லப்பட்டதல்லவா? அவன் அன்றிரவு முற்றிலும் துயிலே கொள்ளாமல் மிகவும் கவலை கொண்டு வருந்திக் கிடந்தான். மேனகாவின் விஷயத்தில் தான் கொண்ட எண்ணம் நிறைவேறாமல் போனது ஒருபுறம் வதைக்க, தனது மனைவி யாவற்றையும் அறிந்துகொண்டு தன்னை அவமானப்படுத்தியது, இன்னொரு புறம் பொறுக்க லாற்றாமல் அல்லல் படுத்த, அவன் அன்றிரவு முற்றிலும் வேதனைக் கடலில் ஆழ்ந்து கிடந்தான். ஆனால், நற்குணவதியான தனது மனைவி தன்மீது கொண்ட அந்தரங்கமான வாஞ்சையினால், தன்னைக் காட்டிக் கொடுக்காமல் எப்படியும் காப்பாற்றி விடுவாளென்னும் ஒரு மூட நினைவு அப்போதைக்கப்போது அவனது மனதில் தோன்றி ஒருவகையான ஆறுதலை உண்டாக்கிக் கொண்டிருந்தது. அவ்வாறே அன்றிரவு கழிந்தது. நூர்ஜஹான் என்ன செய்கிறாள் என்பதையும்,மேனகா தனது வீட்டில் இருக்கிறாளோ அல்லது எங்காகிலும் போய் விட்டாளோ வென்பதையும் அறிந்துகொள்ளும் பொருட்டு நைனா முகம்மது, தனது வேலைக்காரி ஒருத்தியை மெல்ல வரவழைத்து, கேள்விகளைச் சாமர்த்தியமாகக் கேட்கத் தொடங்கினான்.நூர்ஜஹானும், அவளது அக்காளும் தங்களது தகப்பனாரின் பங்களாவிற்கு இரவிலே போய்விட்டார்கள் என்னும் சங்கதியை அவள் தெரிவித்தாள். அதுகாறும் தனது அநுமதியின்றி தகப்பனாரின் வீட்டிற்குப் போகாத தன் மனைவி, அன்று இரவிலேயே போய்விட்டதைக் கேட்க, அவனது மனம் திரும்பவும் கலக்க மடைந்து குழம்பியது; தனது மனைவி தனக்கு எவ்விதமான துன்பமுண்டாக்க மாட்டாளென்பது நிச்சயமாயினும், அவர்களால் விடுவிக்கப்பட்ட மேனகா யாவற்றையும் தனது புருஷனிடம் சொல்ல, அதனால் என்ன துன்பம் நேருமோ வென்னும் அச்சம் தோன்றி, அவனை வதைக்க ஆரம்பித்தது. மேனகாவின் புருஷன் தன்மீது மாஜிஸ்டிரேட்டின் கச்சேரியில் பிராது கொடுப்பானாகில், அதற்குப் பிடிவாரண்டு பிறக்கும் என்பதை நைனாமுகம்மது உணர்ந்தவன். ஆதலின், செய்வதின்னது என்பதை அறியாமல் தத்தளித்தான். அவனது வீட்டில் அவனுக்கு சையது இமாம் என்ற ஒரு வேலைக்காரன் இருந்தான்; நைனா முகம்மதுவுக்குப் புதிய ஆசை நாயகிகளை அமர்த்துவதிலும், அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து திருப்பி அனுப்புவதிலும் தேவையான சௌகரியங்களை யெல்லாம் அவனே செய்பவன். மேனகாவை அழைத்து வந்த இரவில், வீட்டின் கதவைத் திறந்தவன் அவனே; தான் என்ன செய்வது என்பதைப்பற்றி நைனாமுகம்மது அந்த வேலைக்காரனிடம் நெடுநேரம் யோசனை செய்தான். கடைசியில் அவர்களிருவரும் ஒருவகையான முடிவிற்கு வந்தனர். அடுத்த தெருவிலிருந்து சையது இமாமின் வீட்டில் நைனா முகம்மது சில நாட்களுக்கு ஒளிந்துகொண்டிருப்ப தென்றும், ஆனால் அவன் வியாபார நிமித்தம் நாகைப் பட்டணத்திற்குப் போயிருப்பதாக சையது இமாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமென்றும் தீர்மானித்து அப்படியே செய்தனர். ஒரு வாரமாக நைனாமுகம்மது அந்த இடத்தில் ஒளிந்து கொண்டிருந்தான். ஆனால், அவன் நாகைப்பட்டணம் போயிருப்பதாக வேலைக்காரன், குமாஸ் தாக்களிடத்திற்கூடப் பொய் சொல்லிக் கொண்டிருந்தான். ஒருவாரம் சென்றதும் தனது மனவிை தனது வீட்டிற்கு வரவில்லை என்பதை நைனாமுகம்மது உணர்ந்தான். மைலாப்பூர் பங்களாவில் அவர்களின் கருத்து எப்படி இருந்த தென்பதை அறிந்துகொண்டு வர சையது இமாம் எவ்வளவோ பாடுபட்டானாயினும், அது பலிக்காமல் போனது. ஆகையால், இன்னம் எத்தனை நாட்களுக்கு அப்படி மறைந்து கொண்டிருக்க வேண்டுமோ வென்று நைனாமுகம்மது நினைத்துத் தவித்து, சிறைச் சாலையில் வசிப்பவனைப்போல வதைப்பட்டுக்கொண்டிருந்தான். சையது இமாம் நைனா முகம்மதுவின் சாப்பாடு வசதிகளுக்கென்று ஒவ்வொரு நாளும் ஏராளமான பணத்தைப் பிடுங்கி புலால் முதலிய சிறந்த உணவுகளைத் தயாரித்துத் தின்றுவந்ததன்றி பெரும் பொருளையும் அபகரித்து வந்தான். ஆனால், நைனா முகம்மதுவைப் பயமுறுத்தி, தனது வீட்டில் அவன் இன்னும் பல நாட்களிருக்கும்படி செய்ய நினைத்து அதற்குத் தக்கபடி பல புளுகுகளைக் கூறி வந்தான். 

ஒரு நாள் அவன் நைனாமுகம்மதுவுடன் மிகவும் கவலையும் அச்சமும் கொண்டு பேசிக்கொண்டிருந்தான். அப்போது நைனா முகம்மது அவனை நோக்கி, “மாமனாரே போலீசுக்கு எழுதிவிட்டா ரென்றா மந்திரவாதி சொன்னார்? அப்படியானால் நான் தப்பமுடியாது. நூர்ஜஹானும் எனக்கு விரோதமாக சாட்சி சொல்லுவாள்” என்று மிகவும் அச்சங்கொண்டு கூறினான். 

சையது இமாம்:- அந்த மந்திரவாதிகள் அதற்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து உங்களுக்கு எவ்வித ஆபத்தும் வராமல் பாதுகாக்கிறேனென்று சொல்லுகிறாரே! இனிமேல் அதைப் பற்றி கவலைப் படுவதேன்? அவர் மலையாளத்து மந்திரவாதி; மகா கெட்டிக்காரர்; என்னவோ ஆண்டவன் செயலாகத்தான் அவர் நம்முடைய வீடுதேடி வந்தார்- என்றான். 

நைனா:- அவர் மந்திரவாதி என்பதை நீ எப்படி அறிந்து கொண்டாய்? 

சையது :- அவர் தெருவின் வழியாகவே வந்துகொண்டி ருந்தார்; அப்போது வெயிலின் கொடுமை சகிக்க முடியாம லிருந்தது. கால் பொசுங்கிப் போனது. அப்போது தெருவின் வழியாக வெறுங்காலோடு வந்த மந்திரவாதி சூட்டைத் தாங்கமாட்டாமல் தவித்துப்போய், நம்முடைய வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு கொப்பளித்துப் போன தமது காலை எனக்குக் காட்டினார். வீட்டில் தேனிருந்தால் கொஞ்சம் கொப்புளத்தில் தடவுவதற்குக் கொடுக்கும்படி கேட்டார்; நான் கொஞ்சம் தேன் கொடுத்தேன். அதை வாங்கித் தடவிக்கொண்டு கால் நாழிகை நேரம் உட்கார்ந்திருந்தார். பிறகு எழுந்து போகுமுன், தாம் மலையாளத்து மந்திரவாதி யென்றும், அந்த வீட்டு எஜமான் அப்போது ஒரு பெருத்த ஆபத்தில் மாட்டிக்கொண்டு ஒளிந்துகொண்டிருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார். நான் திடுக்கிட்டு அவரை நோக்கி, “என்ன விதமான ஆபத்து என்று கேட்டேன். பெண் விஷயமான ஆபத்தென்றும், அதற்குத் தக்கபடி வேலை செய்யாவிட்டால், எஜமான் சிறைச் சாலைக்குப் போவது நிச்சயமென்று சொல்லிவிட்டு எழுந்து போனார். நான் அவரை விடாமல் தொடர்ந்து போய், அதன் விவரங்களை யெல்லாம் தெரிவிக்கும்படி கேட்டேன். இருபத்தேழில் குறைந்த ஓர் எண்ணைச் சொல்லும்படி கேட்டார்; நான் பத்து என்றேன். அவர்உடனே, “சரி அவருடைய மாமனாரே போலீசுக்கு பிராது எழுதி யனுப்பி விட்டார். இனி தப்பமுடியாது” என்று சொல்லிக் கொண்டே அவசரமாக நடந்தார்.நான் அவரை விடாமல் தொடர்ந்து சென்று, இதற்கு ஏதாவது பரிகாரம் மாந்திரீகத்தின் மூலமாகச் செய்தால், எஜமானரிடம் பெருத்த வெகுமதி வாங்கித் தருவதாகச் சொல்லி வேண்டிக் கொண்டேன். அவர் தமக்கு வெகுமதி வேண்டாமென்றும், ஆனால் தாம் பரோபகாரமாக உதவி செய்வதாகவும், நாகூர் தர்காவுக்கு இரண்டு ஆயிரம் ரூபா கொடுத்துவிட வேண்டுமென்றும் சொன்னார். அப்படியே ஆகட்டு மென்றேன்; உங்களிடம் வரும்படி கேட்டுக் கொண்டேன்; 

இன்று காலையில் வருவதாகச் சொன்னார்; அவரும் வரும் நேரமாகிவிட்டது; உங்ளுடைய வீட்டு வாசலில் காத்திருப்பார். நான் போய் அழைத்துக் கொண்டு வருகிறேன்-என்றான். 

நைனா:- என்னவோ நல்ல காலத்துக்குத்தான் ஆண்டவன் அந்த மகானை அனுப்பியிருக்கிறான். வெயில் சுட்டதென்று நம்முடைய வீட்டில் அவர் உட்கார்ந்ததே ஆண்டவன் செய்த காரியம். நீ சீக்கிரம் போய் அவரை ங்கே அழைத்து வா! – என்றான். 

உடனே சையது இமாம் தன்னுடைய வீட்டை விட்டு வெளியிற் சென்று அங்கப்ப நாயக்கன் தெருவிலுள்ள நைனா முகம்மதுவின் வீட்டை அடைந்தான். அதன் பிறகு அரை நாழிகை நேரம் சென்றது. மந்திரவாதி பிரசன்னமானார். அவரும் முகம்மதியரே; அவருக்குச் சற்றேறக்குறைய இருபத்தைந்து வயதிருக்கலாம். அவர் நன்றாய்ச் சிவந்த மேனியைக் கொண்டிருந்தார்; தலையில் ஒரு குல்லா அணிந்து அதற்குமேல் பெருத்த சீட்டுத் துணித் தலைப்பாகை அணிந்திருந்தார். கருத்தடர்ந்த தாடி பக்கங்களில் செவிகள் வரையிலும், கீழே மார்பு வரையிலும் எட்டி செழுமையா யிருந்தது. இடையில் கைலியும் (லுங்கியும்), அதற்குமேல் காஷாய அங்கியும் அவர் தரித்திருந்ததன்றி, கழுத்தில் ஜெபமணி மாலை, பளிங்குமணி மாலை முதலியவற்றை அணிந்திருந்தார். கண்களில் மைதீட்டிக் கொண்டிருந்தார்; கொளுத்தப்பட்ட ஊதுவர்த்தி யொன்றை வலது காதிற்கும் தலைப்பாகைக்கும் இடையில் சொருகிக்கொண்டிருந்தார். அதிலிருந்து வெளிப்பட்ட புகை பரிமள கந்தத்தை வெகுதூரம் வீசியது. கையில் ஒரு அர்த்த சந்திரக் கவைக் கோலும், ஒரு சிறிய துணி மூட்டையும், சுரைக்குடுக்கையிலிருந்து செதுக்கிச் செய்யப்பட்ட தூக்குச் செம்பொன்றும் ஓர் ஓலைச் சுவடியும் இருந்தன. அந்த மகானைக் கண்ட சையது இமாம் எழுந்து தரையோடு தரையாய்க் குனிந்து சலாம் செய்ய, அவரும் பணிவாக அவனுக்குச் சலாம் செய்தார். உடனே சையது இமாம் அவரை அழைத்துக்கொண்டு அடுத்த தெருவிலிருந்த தனது வீட்டையடைந்து உட்புறத்தில் அவரை அழைத்துச் சென்றான். அந்த மந்திரவாதி அவனோடு பேசாமல் பின் தொடர்ந்து சென்றாராயினும், அவர் ஏதோ மந்திரத்தை ஜெபித்து முணுமுணுத்துக் கொண்டே நடந்தார். அவ்விருவரும் வந்ததைக் கண்ட நைனா முகம்மது விரைவாக எழுந்து மிகவும் பணிவோடு மந்திரவாதிக்குச் சலாம் செய்து, அவரை ஓர் ஆசனத்தில் அமரச்செய்து மரியாதையாக நிற்க, மகான் அவனுக்கு உட்காரும்படி தமது கையசைப்பால் அநுமதி கொடுத்தார். அவ்வாறே அவனும் உட்கார்ந்து கொண்டான். பிறகு மந்திரவாதி சையது இமாமைப் பார்த்து, “நீங்களிருந்த அந்த வீட்டுக் கதவைத் திறந்து போட்டு வந்தீர்களே! அங்கே போக வேண்டாமா?” என்றார். அதைக்கேட்ட வேலைக்காரன் தன்னை மந்திரவாதி அங்கே இருக்க வேண்டாமென்று போகச் சொல்லுவதாக ஊகித்துக்கொண்டு, “ஆம்; நான் போகிறேன்” என்று சொல்லி விட்டு வெளியில் நடந்தான். பிறகு நைனா முகம்மது மந்திரவாதியை நோக்கி, “ஐயா பெரியவரே! தங்களுடைய சொந்த ஊர் எது ? இந்த ஊருக்கு வந்து எத்தனை நாளாகிறது?” என்றான். மந்திரவாதி, ‘நானிருப்பது மலையாள தேசத்தில் திருச்சூர். இங்கே ஒரு பெரிய மனிதர் வீட்டில் ஒரு மாந்திரீக வேலை முடித்துக் கொடுக்க அழைத்து வந்தார்கள். நேற்றுதான் இந்த ஊருக்கு வந்தேன். ரயில் டிக்கெட்டு கூட என்னிடமே இருக்கிறது. டிக்கெட்டு வாங்குகிறவர்கள் என்னிடம் டிக்கெட்டுக் கேட்கவே இல்லை. இதோ பாருங்கள்” என்று தமது சட்டைப் பையிலிருந்த ஒரு டிக்கெட்டை எடுத்துக்கொடுத்தார்; அது திருச்சூரிலிருந்து (எர்னாகுளத்திலிருந்து) சென்னைக்கு இரண்டு நாளைக்கு முன் வாங்கப்பட்ட டிக்கட்டாக விருந்தது. சமீபகாலத்தில் வந்த மனிதராகிய அவர், பல நாட்களுக்கு முன் நிகழ்ந்தவையான தன்னுடைய விஷயங்களை யறிந்து சொல்லுவதால், அவர் உண்மையில் பெருத்த மகானே என்று நைனா முகம்மது நினைத்தவனாய், அவரிடத்தில் பெருத்த மதிப்பையும் மரியாதையும் வைத்துப் பேசத் தொடங்கி, “மகானே எனக்கு வந்துள்ள ஆபத்தை இன்னதென்றறிந்து சொல்லி, அதற்குத் தகுந்த பரிகாரமும் நீங்கள் தேடிச் செய்ய வேண்டும். உங்களுடைய ஆக்கினைப்படி நாகூர் தர்காவுக்கு இரண்டாயிரம் ரூபா இப்போதே காணிக்கை செலுத்தி விடுகிறேன்” என்றான். 

உடனே மந்திரவாதி ஆடம்பரமாக உட்கார்ந்துகொண்டு தமது மூட்டையை அவிழ்த்து, அதிலிருந்த சக்கரம் எழுதப்பட்ட சில பனை ஏடுகளையும் ஒரு மந்திரக் கோலையும் எடுத்து வெளியில் பரப்பினார்; ஓலைச் சுவடிகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைச் சுழற்றி வெறுவெளியில் ஏதோ சக்கரம் போடுவதற்காகக் கையை ஆட்டி, கண்ணை மூடிக்கொண்டு முணுமுணுத்தார். அவ்வாறு கால் நாழிகை நேரம் சென்றது; அவர் உடனே கண்களைத் திறந்து கொண்டு, “அல்லா பெரியவன். ஆண்டவன் பெரியவன். உம்முடைய மாமனார் பிராது எழுதிப் போலீசுக்கு அனுப்பிவிட்டார். நீர் ரகசியமாகக் கொணர்ந்த பெண்ணின் புருஷன் மோட்டார் வண்டியில் அறைப்பட்டு வைத்திய சாலையில் கிடக்கிறான். அவன் இன்னம் இரண்டொரு நாளில் வீட்டுக்கு வரப்போகிறான். இன்னமும் உம்முடைய மாமனார் வீட்டிலிருக்கும் அந்த பிராமணப் பெண்,புருஷன் வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன், போய்ச் சேரப்போகிறாள். அதன் பிறகு போலீசார் கேசை நடத்தப்போகிறார்கள். நீர் நாகைப்பட்டணத்தில் இருப்பதாக நினைத்து உம்மைப் பிடித்து வர போலீசார் அந்த ஊருக்குப் போயிருக்கிறார்கள். உம்முடைய மனைவியும் இனி உம்மிடம் வரமாட்டாள். நீர் துர்நடத்தையுள்ளவரென்று நினைத்து அவர்கள் உம்முடைய உறவு வேண்டாமென்று தள்ளிவிட்டார்கள்” என்றார். 

அதைக் கேட்ட நைனாமுகம்மது வியப்பும் திகைப்பு மடைந்து, அச்சத்தினால் நடுநடுங்கிப்போனான். “மிகுந்த நற்குணமும், என்மேல் கரைகடந்த பிரியமும் கொண்ட என் மனைவி நூர்ஜஹான் கூட இதற்கு இணங்கினாளா? அதை மாத்திரம் என் மனம் நம்பமாட்டேனென்கிறது” என்று கூறினாள். 

மந்திரவாதி:- நீர் நம்பினாலும் சரி; நம்பாவிட்டாலும் சரி; உண்மை அதுதான். பெண்டுகளின் உண்மையான குணம் உமக்குத் தெரியாது. தங்களுடைய புருஷன் விஷயத்தில் அவர்கள் தங்களுடைய உயிரைக்கூடக் கொடுத்துவிடுவார்கள். ஆனால், புருஷன் வேறொத்தியோடு நட்பா யிருப்பதைக் கண்டுவிட்டால், அவர்களுக்குத் தலைபோவதும் தெரியாது. அதன்பிறகு அவர்கள் தாட்சணியம் பார்க்கமாட்டார்கள்; எதற்கும் துணிந்து விடுவார்கள்- என்றார். 

அதைக் கேட்ட நைனா முகம்மது பெரிதும் கலங்கினான். தங்களது வீட்டு ரகசியங்களை யெல்லாம் அவ்வளவு தூரம் உணர்ந்த அந்தப் பெரியவர், தன்னை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற ஏதேனும் வழி தேடுவாரென்று அவன் நினைத்தான். என்றாலும் சந்தேகம் வருத்தியது. அவன் அவரை நோக்கி, மகானே! என்னுடைய மாமனார் என்மேல் பிராது எழுதியதற்கு என்னுடைய சம்சாரம் சம்மதித்தாளா வென்பதே எனக்குப் பெருத்த சந்தேகமாக இருக்கிறது” என்றான். 

அதைக் கேட்ட மந்திரவாதி, “சரி; உமக்கு நான் ப்போதே அதை ருஜுப்படுத்துகிறேன். உம்முடைய மாமனாரின் எழுத்து உமக்கு அடையாளம் தெரியுமா? என்றார். 

நைனாமுகம்மது: தெரியும். 

மந்திர:- சரி; அப்படியானால் இதோ நான் என்னுடைய எட்சினி தேவதையை அழைத்து, உம்முடைய மாமனார் போலீசாருக்கு அனுப்பியுள்ள பிராதை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து எடுத்துக்கொண்டு வரும்படி செய்கிறேன். இதோ பாரும் – என்றார். உடனே அவர் தமது சுவடியை எடுத்துப் பலவாறு சுழற்றி, சக்கரம் போட்டு கண்களை மூடிக்கொண்டு ஆகாயத்தைப்பார்த்து, வீட்டின் உச்சிமேட்டில் தயாராக காத்திருந்த பாதாள எட்சினி தேவதையை அழைத்து ஆக்ஞை செய்தார்; கால் நாழிகை வரையில் முணுமுணுத்து மந்திர உச்சாடனம் செய்தார்; சுவடியின் கட்டை அவிழ்த்து “பூ வென்று ஊதினார். உடனே சுவடியிலிருந்து ஒரு காகித மடிப்பு வந்து எதிரில் விழுந்தது; அந்த அதிசயத்தைக் கண்ட நைனா முகம்மது திகைத்து அசைவற்று உட்கார்ந்து போனான். உடனே மந்திரவாதி காகித மடிப்பை எடுத்துப் பிரித்துப் படித்துப் பார்த்துவிட்டு, நைனாமுகம்மதுவின் கையில் கொடுத்து, “இது யாருடைய எழுத்து என்று பாரும்” என்றார். 

அதை வாங்கிப் பார்த்தவுடனே நைனா முகம்மது பிரமித்து, து என் மாமனாருடைய எழுத்துத்தான்!” என்றான். 

மந்திர- இதுதான் உம்முடைய மாமனாரால் போலீசாருக்கு எழுதி யனுப்பப்பட்ட பிராது; என்னுடைய பாதாள எட்சினி தேவதையை அனுப்பி வரவழைக்கிறேன். இதோ பாரும். போலீஸ் ஆபீஸ் முத்திரை இந்தக் காகிதத்தில் பதிந்திருக்கிறது; இதிலுள்ள விஷயத்தை நீர் படித்துப் பார்க்கலாம் – என்றார். 

ஆச்சரியத்தினால் பிணிக்கப்பட்டுப் போயிருந்த நைனா முகம்மது அந்தக் காகிதத்திலிருந்த போலீஸ் ஆபீஸ் முத்திரையைப் பார்த்தான். பிறகு அதை வாங்கிப் படிக்கத் தொடங்கினான். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது. 

பிராது 

சென்னை துரைத்தனத்தின் நிருவாகசபை 
அங்கத்தினரான கான் பகதூர் பெரியதம்பி 
மரக்காயரிடமிருந்து, 
போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 

ஐயா! திருவல்லிக்கேணி தொளசிங்கப் பெருமாள் கோவில் தெருவிலுள்ள வக்கீல் வராகசாமி ஐய்யங்கார் என்பவருடைய மனைவியான மேனகா என்னும் பெண்ணை, அந்த வக்கீலின் அக்காளான பெருந்தேவியம்மாள் என்பவளும், அவளுடைய வீட்டிற்கு அடுத்த வீட்டிலுள்ள சாமாவையர் என்பவரும், நாடகம் பார்க்கப்போவதாய்க் கூறி வஞ்சித்து அங்கப்ப நாயக்கன் தெருவில் – கதவிலக்கமுள்ள வீட்டிலிருக்கும் நைனா முகம்மது மரக்காயரிடம் ரூ, 10,000-க்கு விற்றனர். அவன் அந்தப் பெண்ணிடம் காமாதுர நோக்கங் கொண்டு அவளைக் கற்பழிக்க முயலுகையில், அவள் கூச்சலிட்டு அங்கே அகப்பட்ட பழம் நறுக்குங் கத்தியால் தன்னைக் குத்திக் கொள்ள முயன்றாள். வீட்டிற்குள்ளிருந்த எனது குமாரத்தியும், மேற் குறிக்கப் பட்ட நைனாமுகம்மது மரக்காயரின் மனைவியுமான நூர்ஜஹான் பீபி அவ்விடத்திற்கு வந்து அந்தப் பெண்ணை விடுவித்து என்னுடைய பங்களாவிற்கு அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறாள். அந்தப்பெண் பெருத்த பயத்தினாலுண்டான அதிர்ச்சியால் ஜுரநோய்கொண்டு என்னுடைய பங்களாவில் இருக்கிறாள். மேற் குறிக்கப்பட்ட மூன்று மனிதரும், இந்தியன் பீனல்கோட் 366-வது பிரிவுப்படி ஒருவருடைய மனைவியை வஞ்சகமாக விபச்சாரத்தின் பொருட்டு அபகரித்துப் போய் விற்றதும் வாங்கியதுமான குற்றத்தைச் செய்திருக்கிறார்கள். (Offence of Kidnapping a married woman for illicit intercourse) இந்த விஷயத்தில் நீர் உடனே தக்க விசாரணைகளைச் செய்து குற்றவாளிகளான மூவரையும் கைதியாக்கி சிறைப்படுத்த வேண்டியது. 

பெரியதம்பி 

என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தை நைனா முகம்மது முற்றிலும் படித்தான். அவனது மனம் மிகவும் குழம்பியது. பயத்தினால் கைகால்கள் நடுங்கின. முகத்தில் பிணக்களை தோன்றியது. அவன் தனது கண்களை நம்பாமல் கடிதத்தை மேலும் இரண்டு முறை படித்தான். எழுத்து தனது மாமனாருடைய எழுத்தே என்பது நிச்சயமாகத் தெரிந்தது. போலீஸ் ஸ்டேஷன் முத்திரையும் அதில் பதிந்திருந்தது. அவர் முதல்தரமான மந்திரவாதி என்று நினைத்து அவன் அப்படியே மயங்கிப்போய் தடை கட்டப்பட்ட நாகப் பாம்பைப்போல அசைவற்று பிரமை கொண்டு விழித்தான். தனது மனைவி எல்லா விஷயங்களையும் தனது தகப்பனாரிடம் சொன்னா ளென்பதும், அவர் தன்னிடம் சிறிதும் தாட்சணிய மின்றி பிராது எழுதியனுப்பிவிட்டாரென்பதும் சந்தேகமறக் கண்ணெதிரில் ருஜுவாய்ப் போயின. அந்த ஆபத்து வேளையில் தான் என்ன செய்வதென்பதை அறிய மாட்டாமல் அவன் விழித்து மந்திரவாதியின் முகத்தை நோக்கி, “இவைகளிலிருந்து நீங்கள் தான் என்னை மீட்க வேண்டும்” என்று கூறி சலாம் செய்து அவரை வேண்டிக் கொண்டான். 

மந்திர:-“ஐயா! இதைப்பற்றி நீர் சிறிதும் கவலைகொள்ள வேண்டாம். இன்று ஒரு பொழுது பொறுத்துக் கொண்டிருந்து நாளைக்குக் காலையில் என்ன நடக்கிறதென்பது பாரும்; நீங்காத விபத்துக்களையெல்லாம் நீங்கவைத்து, பணியாத வர்களைப் பணியச் செய்வேன்; இன்று இரவில் பதினைந்து நாழிகை சமயத்தில் நான் சுடுகாட்டுக்குப் போய் ஜெபித்து காவுகொடுத்து பாதாள எட்சினியை உச்சாடனம் செய்துவிடுகிறேன். நீர் இன்றிரவே உம்முடைய வீட்டுக்குப் போய்ச் சேரும்; நாளைக்குக் காலையில் உம்முடைய மாமனாரும், மனைவியும் உம்மிடம் வந்து உம்முடைய காலில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்பதன்றி, அவர்கள் நீர் சொல்லுவது போல இனி எப்போதும் ஆடுவார்கள். நீர் எத்தனை வைப்பாட்டியை வைத்துக்கொண்டாலும், அவர்கள் அதற்கு அநுசரணையாகவே இருப்பார்கள். தவிர, மகா பதி விரதையைப் போல நடித்த அந்த பார்ப்பாரப் பெண்ணையும் வசியம் செய்து வைக்கிறேன். அவள் இனிமேல் தன்னுடைய வீட்டையும் புருஷனையும் நினைக்காமல் நீயே கதியென்று வந்து உம்மிடம் சேரும்படி செய்துவிடுகிறேன்; போதுமா?” என்றார். அதைக் கேட்ட நைனாமுகம்மது பெரிதும் மகிழ்ச்சி அடைந்தவனாய், எழுந்து மந்திரவாதிக் கெதிரில் மண்டியிட்டு வணங்கி, “மகானே! நீங்கள் இந்தக் காரியங்களைச் செய்வீர்களானால், என்னைப்போன்ற பாக்கியவான் யாரிருக்கப் போகிறான். நீங்கள் என்னிடம் ரூபா பதினாயிரம் கேட்டாலும் தருகிறேன்; உங்களுக்குப் பணம் தேவையில்லை யேனும், நீங்கள் வேறு யாருக்குக் கொடுக்கச் சொன்னாலும் கொடுக்கத் தடையில்லை” என்று கூறி வேண்டினான். 

மந்திர:- இவைகள் எல்லாம் முடிந்து போனதென்றே நீர் நினைத்துக் கொள்ளலாம். எனக்குப் பணமே தேவையில்லை; நாளைக்குக் காரியம் முடிவான பின் மறந்து போகாமல் நாகூர் தர்காவுக்கு இரண்டாயிரம் ரூபாய் அனுப்பிவிடும். தவிர, இந்த ஊரில் பதினாயிரம் பக்கிரிகளுக்கு மூன்று நாட்களுக்கு சாப்பாடு போடும். அதுவே போதும். 

நைனா:- அவசியம் அப்படியே செய்கிறேன். அந்த பிராம்மணப் பெண்ணும் நாளை என்னிடம் வந்து விடுவாளா? 

மந்திர:- ஆகா! அவசியம் வருவாள். அவள் விஷயத்தில் ன்னொரு காரியமும் உமக்குச் செய்து கொடுக்கிறேன். அந்தப் பெண் இனிமேல் உம்மிடமிருப்பதை எவரும் கண்டு பிடிக்க முடியாமல் ஒரு தடைக்கட்டுச் செய்து தகடு தயாரித்துத் தருகிறேன். அதை அவளை நீர் வைத்திருக்கும் வீட்டின் வாசற்படிக்குள் அடித்து வைத்தால், அவள் அந்த வீட்டிலிருப் பதை எவரும் காணமுடியாது. ஒருகால் அந்தத் தகட்டையே யாராகிலும் அபகரித்துக்கொண்டு போய் விட்டாலும், சட்டம் உம்மைத் தொடராதிருக்கும்படி உமக்கு இன்னொரு காரியமும் செய்து வைத்து விட்டுப் போகிறேன்- என்றார். 

அவற்றைக் கேட்ட நைனாமுகம்மது பூரித்துப் புளகாங்கித மடைந்து மெய்மறந்து அளவளாவினான். வணங்காமுடி மன்னரான தனது மாமனாரும், நூர்ஜஹானும் தனது காலில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்பதாகவும், தான் அவர்களை அலட்சியம் செய்வதாகவும் அப்போதே மனதில் பாவித்துக் கொண்டான். மேனகாவை ஒரு தனியான பங்களாவில் வைத்து அவளோடு கொஞ்சிக் குலாவி, சரச சல்லாபம் செய்து இன்புற்று வாழ்வதாக நினைத்து மனக்கோட்டை கட்டினான். “சரி; சட்டமும் தொடராம லிருக்கும்படி என்ன செய்யப் போகிறீர்கள்?” என்றான். 

மந்திர:- அதற்கு உம்மிடத்தில் ஒரு தஸ்தாவேஜு இருக்க வேண்டும். பெருந்தேவியம்மாள் பெண்ணுக்குத் தாயென்றும், சாமாவையர் பெண்ணுக்கு அண்ணனென்றும், பெண் கலியாணம் ஆகாத மைனரென்றும், அந்தப் பெண்ணை சவரட்சணை செய்யமாட்டாமையால் அவர்கள் அவளை உம்மிடம் விற்றுவிட்டதாகவும், அவளை நீர் மகம்மதியப் பெண்ணாக்கி மணந்துகொள்ள அவர்கள் உமக்கு அனுமதி கொடுத்திருப்பதாகவும் ஒரு கடிதம் அவர்களால் எழுதப்பட்டு, உம்மிடம் வந்து சேரவேண்டும். அதை நீர் வைத்துக் கொண்டிருந்தால், சட்டப்படி உம்மீது குற்றம் ஏற்படாது. அந்தப் பெண்ணின் புருஷன் உம்மீது எவ்வித நடவடிக்கையும் எடுத்துக் கொள்ள முடியாது. 

நைனா:- (சிறிது யோசனை செய்து) இது நல்ல யுக்திதான். ஆனால் அவர்கள் அந்த மாதிரி கடிதம் எழுதிக் கொடுக்க மாட்டார்களே! சாமாவையர் ஒரு வேளை எழுதிக் கொடுத்தாலும் கொடுக்கலாம். அந்த அம்மாள் அதற்குச் சம்மதிக்க மாட்டாளே! அதற்கு என்ன தந்திரம் செய்கிறது? 

மந்திர- அதற்கு நான் இருக்கிறேன். கவலைப்பட வேண்டாம். என்னிடத்தில் ஒரு வகையான சொக்குப்பொடி இருக்கிறது. அவர்களிடம் போய் நான் பேசிக்கொண்டே யிருந்து அந்தப் பொடியில் சிறிதளவு காற்றில் வீசினால், நான் சொல்லுவதுபோல அவர்கள் ஆடுவார்கள்; உடனே அந்த மாதிரியான கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு வருகிறேன். எல்லாவற்றிற்கும் நீர் சாமாவையருக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடும். 

நைனா:- அவருக்கு என்ன மாதிரி கடிதம் எழுதுகிறது? 

மந்திர:- “பெண் சம்மதிக்கு மென்று சொல்லிவிட்டுப் போனீர்கள். அறையில் பெண்ணை நீங்கள் விட்டுப்போன பிறகு நான் அங்கே போனேன். என்னைக் கண்டு பெண் நடுநடுங்கி, விஷயம் ஒன்றையும் அறியாதவளைப் போல் நடித்து, தன்னை விட்டு விடும்படி வேண்டினாள். நான் 

ணங்காமையால் அவள் என்னைப் பலவாறு தூஷித்தாள். அவளை நான் பலவந்தமாகப் பிடிக்கப்போனபோது, அவள் எனக்கருகிலும் வராமல் ஓடி ஓடிக் கடைசியில் மாம்பழம் அறுக்கும் கத்தியை எடுத்து அதனால் தன்னைக் குத்திக் கொள்ளப் போனாள். நான் அவளுக்கு அருகிலும் நெருங்காமல் தூரத்தில் நின்று, குத்திக்கொள்ள வேண்டா மென்றும், அவளை நான் வெளியில் அனுப்பிவிடுவதாகவும் சொல்லிவிட்டு வெளியில் போய்விட்டேன். அவளுடைய கூச்சலைக் கேட்ட என் மனைவி உடனே வந்து அவளை அழைத்துக்கொண்டு என்னுடைய மாமனார் வீட்டிற்குப் போய்விட்டாள். இப்போதும் அவள் ஜுரத்தோடு அவ்விடத்திலிருக்கிறாள். அவள் திரும்பவும் உங்கள் வீட்டுக்கு வந்தால், அது உங்களுக்கு அபத்தமாய் முடியும். இந்தக் கடிதத்தைக் கொண்டு வருகிறவர் ஒரு மந்திரவாதி. இவருடைய உதவியால் அந்தப் பெண்ணை வசியம் செய்து திரும்பவும் நான் அழைத்துக் கொள்ளப் போகிறேன். மேல் விவரங்களை இந்த மனிதர் சொல்லுவார்” என்று ஒரு கடிதம் எழுதி என்னிடம் கொடும்; நான் இப்போதே போய் காரியத்தை ஒரு நொடியில் முடித்துக் கொண்டு வருகிறேன் – என்றார். 

அந்த யோசனையைக் கேட்ட நைனா முகம்மது மிகவும் மகிழ்ச்சியடைந்தான். தனக்கு எவ்வகையான துன்பமுமின்றி எல்லா விஷயங்களையும் எளிதில் முடித்துத் தனது துன்பங் களை யெல்லாம் தீர்த்துவைக்கும்படி நல்ல சமயத்தில் அந்த மந்திரவாதி வந்ததைக் குறித்து ஆநந்தங் கொண்டான்; தான் மிகவும் நற்குணமுள்ளவனாதலாலும், பலருக்கு உதவி செய்பவனாதலாலும் ஆண்டவன் தனது ஆபத்தில் அந்த மந்திரவாதியை அனுப்பி உதவி செய்திருக்கிறாரென்று நினைத்துக் கொண்டான்; உடனே எழுந்து அங்கிருந்த காகிதத்தை எடுத்து அவ்வாறே சாமாவையருக்கு ஒரு கடிதம் எழுதி அதை மந்திரவாதியினிடம் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்ட மந்திரவாதி உடனே தனது கண்களை மூடிக்கொண்டு ஞானதிருஷ்டியால் எதையோ பார்த்தார்; “சரி சாமாவையர் இப்போது அவருடைய வீட்டிலேதான் இருக்கிறார்; இன்னம் அரை நாழிகையில் வெளியில் போய்விடுவார்; அதற்குள் நான் அவரிடம் போய்க் காரியத்தை முடிக்கிறேன்; இன்று இரவில், நான் சுடலைக்குப் போய் ஜெபம் செய்யப்போகிறேன்; நாளைக்குக் காலையில் அவர்கள் மூவரும் உம்முடைய வீட்டிக்கு வந்து சேருவார்கள். நானும் அப்போது வந்து சாமாவையரால் கொடுக்கப்பட்ட பத்திரத்தைக் கொணர்ந்து கொடுக்கிறேன்” என்று சொல்லி விட்டு மந்திரவாதி எழுந்து உத்தரவு பெற்றுக் கொண்டு வெளியிற் சென்றார். நைனாமுகம்மது தனது அதிர்ஷ்டத்தை நினைத்து நினைத்து மனக்கிளர்ச்சியும், பூரிப்பும் அடைந்தவனாய் எழுந்து அறையில் உல்லாசமாக உலாவி மேல் நடக்க வேண்டிய ஏற்பாடுகளைப் பற்றி திட்டங்கள் போட்டுக்கொண்டு அன்றைப் பொழுது கழியவேண்டுமே என்று ஆவல் கொண்டு பொழுதைப் போக்கினான். 

அவன் அவ்வாறிருக்க, அந்த வீட்டை விட்டு வெளியில் வந்த மந்திரவாதி, இரண்டு மூன்று வீடுகளுக்கப்பால் சென்று ஒரு திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, தனது பைக்குள்ளிருந்த ஒரு காகிதத்தையும் பென்சிலையும் எடுத்து, சாமாவையர், பெருந்தேவியம்மாள் ஆகிய இருவரும் எழுதிக் கொடுக்க வேண்டிய கடிதத்திற்கு ஒரு நகல் தயாரித்து எடுத்துக் கொண்டு எழுந்து சிறிது தூரம் நடந்து அப்பாற் சென்றார். அங்கு நின்ற குதிரை வண்டி யொன்றைக் கண்டு அதை திருவல்லிக்கேணிக்கு அமர்த்திக்கொண்டு சென்றார். வண்டி பகல் பதினோரு மணிக்கு தொளசிங்கப்பெருமாள் கோவில் தெருவில் உள்ள சாமாவையரது வீட்டு வாசலில் அவரை விட்டுச் சென்றது. மந்திரவாதி அநத் வீட்டின் நடையில் நின்ற வண்ணம், “FIT LO! சாமி!” என்று கூப்பிட்டான். உட்புறத்திலிருந்த சாமாவையரின் மனைவி மீனாக்ஷியம்மாள், “யார் அங்கே?” என்று கேட்டுக் கொண்டு நடைக்கு வந்தாள். 

மந்திரவாதிக்கும் மீனாக்ஷியம்மாளுக்கும் நடந்த சம்பாஷணையை விவரிக்குமுன், சாமாவையரைப்பற்றிய விவரங்கள் யாவற்றையும் கூறுதல் அவசியமாகிறது. திருவாரூரில் தாசி கமலத்தின் வீட்டில் கள்வர்களிடம் அகப்பட்டு, இரவில் தண்டவாளத்தில் கட்டப்பட்ட சாமாவையர், சாக்கு மூட்டைக்குள் உருண்டை வடிவமா யிருந்து ஹடயோகம் செய்துகொண்டிருந்தார். எந்த நிமிஷத்தில் இரயில் வண்டி தம்மீது ஏறுமோ, அருமையாக ஊட்டி வளர்த்த தமது அழகிய தேகம், எந்த நொடியில் சக்கரங்களுக்கு இரையாகுமோ என்று நினைத்து, பெருத்த திகிலும் அச்சமுங் கொண்டு மரணவேதனை அநுபவித்திருந்தார். அவரது வாய்க்குள் பெருத்த துணிப்பந்து வலுவாக நழைந்து கொண்டிருந்தமையால், கன்னம் தொண்டை முதலியவை எப்போது கிழிந்துபோகுமோ வென்னும் நிலைமையில் இருந்தமையால், அவரது முகத்திலிருந்த இரத்தக் குழாய்களும் நரம்புகளும் விண்விண்ணென்று தந்தி மீட்ட ஆரம்பித்தன. மூச்சு ஒழுங்காக உட்சென்று வெளிப்படாமையால் திக்குமுக்காடியது; வயிறு உப்புச மடைந்து வெடிக்கும் நிலைமையை அடைந்தது. ஊற்றுக் கண்களிலிருந்து தண்ணீர் வருதலைப்போல, அவரது தேகத்திலிருந்து வியர்வை வழிந்துகொண்டிருந்தது. அத்தனை துன்பங்களுக்கும் வட்டியாக, அவர் கட்டப்பட்டிருந்த இடத்தில் எறும்புப் பாழிகளிருந்தன; பாசறைக்கு அணிவகுத்துச் செல்லும் படைகளைப்போலச் சென்ற கட்டெறும்புகளின் ஒழுங்கை சாமாவையரது உடம்பு கலைத்தமையால் அவைகள் யாவும் அவர்மீது சினங்கொண்டு, அவரது உடம்பில் மொய்த்துக் கொண்டு கடிக்கவாரம்பித்தன. கயிற்றின் கட்டுகளால், அவரது தேகத்து இரத்த ஓட்டம் ஆங்காங்கு தடைபட்டுப்போயின. அதனால் அநந்தகோடி ஊசிகள் கொண்டு குத்துதல் போன்ற உணர்ச்சி, உடம்பு முற்றிலும் உண்டாயிற்று; அவர் அத்தகைய நரக வேதனையிலிருந்து, இரவு இரண்டு மணி முதல், வதைப்பட்டுத் தவித்திருந்தார். இரயில் வந்து தம்மைக் கொன்று விடுமோ வென்று ஆரம்பத்தில் நினைத்து அதைப்பற்றி பெரிதும் அச்சங்கொண்டிருந்த சாமாவையர் நாழிகை செல்லச் செல்லத் தமது தேகத்தின் நரகவேதனையைப் பொறுக்க மாட்டதவராய் தமது உயிர் உடனே போய்விடுவதே நல்லதென நினைத்தார்; இரயில் சீக்கிரம் வரவில்லையே என்று எண்ணி எண்ணி அதையே ஜெபமாகச் செய்கிறார்; இரயில் போவதன் ஓசையும், இஞ்சின் ஊதிய ஓசையும் அருகில் அடிக்கடி கேட்டன. இதோ ரயில் வந்துவிட்டது. அடுத்த நிமிஷம் தமது நரகவேதனை ஒழிந்து போகுமென்று நினைக் கிறார். அதே நிமிஷத்தில் அதற்கு மாறாக நினைக்கிறார். பூலோகத்தில் சுகங்களையெல்லாம் அநுபவியாமல் தாம் அகாலமரண மடையப்போவதை நினைத்து விசனமடைந்து விம்மி விம்மி அழுகிறார். மனதார அழவும் அவரால் கூடாமற்போனது. அவர் தம்மை விடுவித்துக் கொள்ளக் கூடுமோ வென்று நினைத்து உருள நினைத்தார். மூட்டை தண்டவாளத்தோடு இறுகப் பிணைக்கப்பட்டிருந்தமையால், அவரது தேகம் சிறிதும் அசையவில்லை. “ஐயோ! இந்த ஓயா மரணவேதனையிலிருந்து தத்தளிப்பதை விட உடனே உயிரை விடுவதே நல்லது” என நினைக்கிறார். இரயில் வந்து தம்மீது மோதி தமது உடம்பை ஒரே அடியில் சக்கைசக்கையாகக் கிழித்தெறிந்துவிடாதோ வென்று தபசு செய்கிறார். அடிக்கடி இரயிலின் ஓசை அருகிலுண் டானதேயன்றி அவரது கோரிக்கை நிறை வேறவில்லை; திருவாரூர் நான்கு வண்டிகள் வந்து கூடும் நாற்சந்திப்பு ஆகையாலும், சாமான் வண்டிகள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றப்படவேண்டு மாதலாலும், அருகிலிருந்த ஸ்டேஷனிலிருந்து வண்டிகளின் ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. தஞ்சையிலிருந்து திருவாரூருக்கு இரயில் போகும் பாதையிலேயே தாம் கட்டப்பட்டிருப்பதாக நினைத்தார். ஆனால், அதில் நெடுநேரமாக இரயில் வராமையால், இரவு இரண்டு மணிக்குப் பிறகு அந்தப் பாதையில் வண்டி வருவதில்லையோ வென்று அவர் ஐயமுற்றார். ஆனால், விடியற்காலம் ஐந்துமணிக்கு, திருவாரூரிலிருந்து தஞ்சைக்கு இரயில் போவதென்பதை அவர் நிச்சயமாக அறிவார். அந்த நேரம் வரையில் தாம் இவ்வாறு நரகவேதனை அடைந்திருக்க வேண்டுமே என்று நினைத்து மனமுடைந்தவராய் ஏங்கிக் கிடந்தார். விடியற்காலம் வரும் வண்டியில் தாம் ஒருகால் அரைகுறையாக நசுக்கப்பட்டு, இன்னம் அதிகரித்த சித்தரவதையை அனுபவிக்க நேருமோ வென்னும் சந்தேகமும் அப்போதைக்கப்போது அவரது மனத்தில் எழுந்து வாட்டியது. முதல் நாள் காலையிலிருந்து இரவு ஒருமணி வரையில் தாம் அநுபவித்த சுகங்களையும் தாமிருந்த உன்னத நிலைமையைப் பற்றி எண்ணி எண்ணி அவர் பரிதபித்தார்; வெண்ணெய் திரளும் சமயத்தில் தாழி உடைதலைப்போல, தாம் பங்களாவை வாங்கி அதில் கமலத்தை வைத்துக் கொண்டு மகோன்னத தசையிலிருந்து சுகமநுபவிக்க நினைத்த காலத்தில், கள்வர் தோன்றி தமது எண்ணத்தில் மண்ணைப்போட்டு விட்டதைப்பற்றி நினைத்து நினைத்து அவர் உருகினார்; தமது அதிர்ஷ்டஹீனத்தையும் தம்மையும் மனங் கொண்டமட்டும் தூற்றிக்கொண்டார்; கள்வர் வந்தது கமலத்தின் தூண்டுதலினால் என்பதை அவர் நினைக்கவில்லை. அவர்கள் தற்செயலாக வந்தவர்களென்றே அவர் நினைத்திருந்தார். கொடியவர்களாகிய அக்கள்வர் தம்மை வதைத்ததைப்போல கமலத்தையும் அவளது தாயையும் கட்டிப்போட்டுவிட்டு, அவர்களது சொத்துக்களையெல்லாம் கொண்டுபோயிருப்பார் களென்று நினைத்து, அவர்களது விஷயத்தில் மிகுந்த இரக்கமும் விசனமும் கொண்டார். கண்கொள்ளா வனப்பையும் மனங் கொள்ளாக் காதலையும் கொண்டு இரதி தேவி போலிருந்த அந்தப்பெண்ணின்மீது தாம் கொண்ட விருப்பம் நிறைவேறாமல் போனதை நினைத்து அவர் உருகினார்; விடியற்காலம் ஐந்துமணி சமயம் வரவேண்டுமே என்றும், வந்து விடுமே என்றும் அவர் மாறிமாறி நினைத்து சகிக்க வொண்ணாத் துன்பகரமான நிலைமையிலிருந்தார். விடியற்காலம் ஐந்து மணியும் கழிந்தது. இரயிலோ அவர்மீது ஏறவில்லை. ஆனால், அது சென்ற ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. அன்றைக்கு தமது அதிர்ஷ்டத்தினால், தாமிருந்த பாதை பழுதுபட்டுப்போனதோ வென்றும் நினைத்தார். பொழுது மேன்மேலும் சென்றது; கதிரவனும் குணதிசையில் எழுந்தான்; படிப்படியாக வெயிலும் அவரது உடம்பில் எரிக்கத் தொடங்கியது. பகலின் ஆரவாரமும், மனிதரின் பேச்சுக் குரலும் எங்கும் எழுந்தன. மனிதர் போவது வருவதுமா யிருந்தது, அவர்களது சம்பாஷணையால் புலப்பட்டது. அவர் உடனே கூச்சலிட முயன்றார்; அது பலிக்கவில்லை. அவர் மூட்டையாகக் கட்டப் பட்டுக் கிடந்ததை எவரும் கவனித்ததாகவும் தோன்றவில்லை. அவ்வாறே பகல் பத்து மணி சமயமானது. இரயில் சிப்பந்திகளான யாரோ இரண்டு மனிதர் அவருக்கு மிகவும் அருகில் பேசிய குரல் கேட்டது. 

“அடே கண்ணுச்சாமி! இதென்னடா மூட்டை!” என்று ஒருவன் வியப்போடு கூறியவண்ணம் அருகில் ஓடிவந்தான். 

கண்ணு: ஆமடா கந்தா! இது நேத்து இல்லேடா! யாரோட வேலையோ இது தெரியலடா. 

கந்தன்:- தண்டவாளத்திலே கட்டியிருக்குதுடா! (காலால் மூட்டையைப் புரட்டி) அடேடோ! பொணம்மாதிரி இருக்குதுடா! கொலை நடந்திருக்குதுடா!- 

கண்ணு:- அசையுதுடா! உசிர் இருக்குது. மூட்டையே அவுடா பார்க்கலாம் – என்றான். 

உடனே இருவரும் விரைவாக அந்த மூட்டைக்கருகில் நெருங்கி மிகவும் பாடுபட்டு அதன் கட்டுக்களையும் சாக்கையும் விலக்கினர். அதற்குள் துவண்டு வாடி வதங்கி மூச்சு விட மாட்டாமல் கண்களை மூடிக்கொண்டு அசைவற்று மூர்ச்சித்துக் கிடந்த ஐயரை கோணிப் பையிலிருந்து அவர்கள் உடனே வெளியில் இழுத்துக்போட்டனர்; அவரது வாயிலிருந்த துணிப்பந்தை விலக்கினர்; “அடே யாரோ பெரிய மனுசருடா! உசிர் இருக்குதுடா அடே கந்தா! ஓடிப்போயி தண்ணி கொண்டாடா!” என்றான் கண்ணுச்சாமி. அதைக் கேட்ட கந்தன் ஓட்டமாக ஓடி ஒரு செம்பில் தண்ணீர் கொணர்ந்தான். அந்த அமுத சஞ்சீவி உடனே ஐயரது வாயில் விடப்பட்டது; முகத்திலும் தடவப்பட்டது. அடுத்த நிமிஷத்தில் கைகால்களின் மரப்பு நீங்க ஆரம்பித்தது. மூச்சும் ஒழுங்குபட்டது. உணர்வைப் பெற்ற ஐயர் பிரம்மாநந்தம் அநுபவிப்பவரைப் போலானார். என்றாலும், வாயும் உடம்பும் பச்சைப் புண்ணாயிருந்தமையால், பத்து நிமிஷ நேரம் பேசமாட்டாமலும், அசைய மாட்டாமலும் அவர் அப்படியே தரையில் கிடந்தார்; பிறகு கண்களை மெல்லத் திறந்து அருகிலிருந்து உயிர் கொடுத்த பேருபகாரிகளை நன்றியறிதலோடு நோக்கினார்; நாற்புறங் களையும், தாமிருந்த விடத்தையும் கவனித்துப் பார்த்தார். தாம் அதுவரையில் இரயிலில் அறைபட்டுக் கொல்லப்படாததன் காரணம் என்ன வென்பதை அவர் அப்போதே அறிந்தார். அந்த ஸ்டேஷன் நான்கு ரயில்கள் கூடும் நாற்சந்தி யென்பது முன்னரே கூறப்பட்ட தல்லவா? அந்த ஸ்டேஷனில் இரயில் வண்டிகளும், சாமான் வண்டிகளும் ஒதுக்கப்படுவதற்கு, இருபது முப்பது பாதைகள் அரை அரை பர்லாங்கு தூரத்தில் அமைக்கப்பட்டிருந்தன. தஞ்சைக்கு இரயில் போகும் முக்கியமான பாதை, நெடுந்தூரத்திற்கு அப்பால் இருந்தது; அவரிருந்த பாதை, வண்டி ஒதுக்கப்படும் பாதைகளில் ஒன்று. கள்வர் குடிவெறியில் அதைக் கவனிக்காமல் முதலிலிருந்த பாதையில் அவரைக் கட்டிவிட்டுச் சென்றனர். அந்த உண்மையை அப்போதே கண்டறிந்த சாமாவையர் பெரிதும் சந்தோஷ மடைந்தவராய் மெல்ல வாயைத் திறந்து, “நீங்கள் இன்னும் ஐந்து நிமிஷ நேரம் வராதிருந்தால், என் உயிர் போயிருக்கும். எனக்கு உயிர் கொடுத்த மகா உபகாரிகளான உங்களுக்கு நான் என்ன பதிலுதவி செய்யப்போகிறேன். இந்த ராஜ்ஜியம் என்னுடையதா யிருந்தால், இதை அப்படியே உங்களுக்குக் கொடுத்திருப்பேன்” என்று கூறிய வண்ணம் எழுந்து உட்கார்ந்தார். இன்னமும் உடம்பு சரியான நிலைமைக்கு வராமைாயல், அவர் நன்றாக எழுந்திருக்கக் கூடவில்லை. நிற்க, அவரது இடையில் கோவண மொன்றே யிருந்தமையால் எழுந்திருக்கவும் அவர் வெட்கினார். 

அவர் கூறியதைக் கேட்ட கந்தன், “யார் சாமி இப்படிச் செய்தது? உங்களுடைய ஊர் எது சாமி?” என்றான். 

சாமாவையர், “அப்பா! நானிருப்பது பட்டணம். வர்த்தக விஷயமாக நாகைப்பட்டணத்துக்குப் போகிறவன். ராத்திரி ஒரு மணி வண்டியில் இறங்கி திருவாரூரில் ஒரு சிநேகிதர் வீட்டில் தங்கினேன். அங்கே கொள்ளையர்கள் வந்து, என்னிடமிருந்த பதினாயிரம் ரூபாயையும் எடுத்துக்கொண்டு, என்னைக் கட்டிக்கொண்டு வந்து இங்கே போட்டுவிட்டார்கள். நீங்கள் எனக்கு உயிர் கொடுத்தது பெரிதல்ல. என்னுடைய மானத்தைக் காப்பாற்ற இரண்டு துணிகளும், நாகைப்பட்டணம் போக ஒரு டிக்கட்டும் வாங்கிக் கொடுப்பீர்களானால், நான் அதை மறக்கமாட்டேன். நாகைப்பட்டணம் போனவுடன் அவை களின் கிரயத்தை அனுப்பிவிடுகிறேன்” என்று கூறிக் கெஞ்சி மன்றாடினார். அதைக் கேட்ட கந்தன், “ஐயோ பாவம்! ஐயருடா! பெரிய மனிசரு வந்து மாட்டிக்கிட்டாருடா! நீ நம்ப விசயபுரம் மாணிக்கம்பிள்ளை கடைக்கு ஓடி கடனா ரெண்டு துணி எடுத்துக்கிட்டுவா; நான் டிக்கட்டு வாங்கிக்கிட்டு வாறேன்” என்றான். உடனே இருவரும் தலைதெறிக்க ஓடி மறைந்து போனார்கள். தனிமையில் விடப்பட்ட சாமாவையர் உடனே எண்ணமிடலானார். தாம் அப்படியே நேராக நாகைப் பட்டணம் போகிறதா, அல்லது கமலத்தின் வீட்டுக்குப் போய் அவளது செய்தியை அறிந்துகொண்டு போகிறதா வென்று அவர் யோசனை செய்தார். எப்படியாகிலும் கமலத்தை இன்னொருமுறை தாம் பார்க்காவிட்டால், தமது ஆவல் தீராதென்றும், தமது ஜென்மம் கடைத்தேறாதென்றும் அவர் இன்னமும் நினைத்தார். ஆனால், தாம் அப்போது ஏழ்மை நிலையிலிருந்தமையால், அப்படியே அவளிடம் போனால், மதிப்பு ஏற்படாதென்றும், சென்னைக்குப்போய் பணம் கொண்டுவரவேண்டு மென்றும் முடிவுகட்டிக்கொண்டார். டிக்கெட்டை வாங்கிக்கொண்டு நாகைப்பட்டணம் போய் கப்பல் வியாபாரியிடத்தில், தமது பணம் களவாடப்பட்டதைக் கூறி, சென்னைக்குப் போகச் செலவாகும் பணத்தை அவரிடம் கடனாக வாங்கிக்கொண்டு ஊருக்குப் போக வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார். அதன் பிறகு கால் நாழிகையில் கண்ணுச்சாமியும் கந்தனும் திரும்பி ஓடிவந்து, இரண்டு துணிகளையும் டிக்கட்டையும் அவரிடம் கொடுத்தனர். பரோபகார குணத்தையும் அன்பையுங் கண்ட சாமாவையர், ‘ஆகா! ஏழைகளே ஆபத்துக் காலத்தில் உதவி செய்பவர்கள். பணக்காரர்கள் கல் நெஞ்சர்கள்; அப்பா! உங்களுடைய நல்ல குணத்துக்கு, ஈசுவரன் ஒரு குறைவையும் வைக்கமாட்டான். நான் போய் உடனே பணத்தை அனுப்புகிறேன். எவ்வளவு பணம் அனுப்பவேண்டும்?” என்றார். 

கண்ணுச்சாமி, “எல்லாம் நாலேகால் ரூபா ஆச்சு சாமி!” என்றான். 

சாமாவையர், “சரி; நான் நாகைப்பட்டணம் போனவுடன் தபாலில் ரூ.10 அனுப்புகிறேன். நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியவண்ணம் எழுந்து நின்று துணிகளை வாங்கியணிந்தார். டிக்கட்டை வாங்கிக்கொண்டு ஸ்டேஷனை நோக்கி நடந்தார். அந்த இரண்டு மனிதரும் அவர்மீது இரக்கங்கொண்டு அவரோடு வடவே சென்று அடுத்த இரயில் வருகிற வரையில் அவரோடு காத்திருந்து கும்பிடு போட்டு வழி யனுப்பிவிட்டுத் திரும்பினர். சாமாவையர் மறைந்து போனபின், கந்தன், “ஏண்டா கண்ணுச்சாமி! ஐயரு பணம் அனுப்புகிறேன்னு சொன்னாரே, அவருக்கு நம்ப மேல் விலாசம் தெரியாதே, எப்பிடி அனுப்பப்போறாரு?” என்றான். அதைக் கேட்ட கண்ணுச்சாமிக்கும் அந்த விஷயத்தில் அப்போதுதான் பெருத்த சந்தேகம் உதித்தது; என்றாலும் அவன் தனது தைரியத்தை இழக்கவில்லை. அடே! ஐயரு நல்லவருடா! பணத்தை எப்படியாவது கட்டாயம் அனுப்பு வாருடா! இல்லாமப் போனா நேருலேயாச்சும் வருவாருடா!” என்றான். கந்தசாமியும் அதை நம்பினான். அப்புறம் இருவரும் அதை மறந்து தமது வேலையைக் கவனித்தனர். 

இரயிலில் சென்ற சாமாவையர் நாகைப்பட்டணம் போய், கப்பல் வியாபாரியிடத்தில், தமது பணம் களவாடப்பட்டுப் போனதாகக் கூறி, சென்னைக்குப் போகத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொண்டு, இரயிலேறி னார்கள்; திருவாரூரிலிருந்து நாகைக்குப்போன போது அந்த இரண்டு மனிதரும் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென்னும் நினைவோடுதான் அவர் சொன்னார். ஆனால், நாகைப்பட்டணம் போய் கப்பல் வியாபாரியிடத்தில் தமது சொந்த செலவுக்குப்பணம் கடனாக வாங்கிய போது, அந்த இரண்டு உபகாரிகளுக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்பதை அவர் மறந்து விட்டார் ஆகையால், அவர்களது மேல்விலாசத்தை அறிந்துகொள்ளாமல் வந்து விட்டோமே என்னும் விசனமும் அவருக்கு உண்டாக சந்தர்ப்பம் ஏற்படாமல் போய்விட்டது. அவர் அடுத்த வண்டியில் ஏறி மறுநாள் சென்னைக்கு வந்து ஏழையிலும் பரம ஏழையாகத் தமது வீட்டை யடைந்தார். கடற்கரை பங்களாவில் கமலத்துட னிருந்து சுவர்க்கபோக மநுபவிக்காவிடினும், தமது சொந்த வீட்டையடைந்து மீனாக்ஷி யம்மாளையாகிலும் கண்டு தமது பழைய சுகமான அற்ப சுகத்தையேனும் அடைய மாட்டோமா வென்று அவர் ஏங்கி வந்தவராதலின், அவரது பழைய நிலைமையே அவருக்கு அப்போது பரமபதமாகத் தோன்றியது. என்றாலும், வெட்கம் ஒரு புறம் வதைத்தது; துக்கம் இன்னொரு புறம் வருத்தியது. அழுகை நெஞ்சை அடைத்தது. நெடுநாட் களாக எவ்வளவோ பாடுபட்டு, மூடர்களான பெருந்தேவி யம்மாள் முதலியோரை வஞ்சித்து அபகரித்த பெருத்த பொருள் ஒரு நிமிஷத்தில் கனவைப்போல மறைந்து போனதைப்பற்றி நினைத்து நினைத்து ஐயர் ஓலமிட்டு அழுதவராய், மூடி முக்காடிட்டு ஒரு மூலையில் படுத்தவர் மறுபடி எழுந்திருக்க இரண்டு நாளாயின. அந்த இரண்டு நாட்களுக்கு அவர் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணினார்; புரண்டார்; அழுதார்; கதறினார்; பதறினார்; அவர் பட்ட பாடுகள் அத்தனையும், களவாடப்பட்ட பொருளைத் திருப்ப வல்லமையற்றிருந்தன. அடிக்கடி பெருந்தேவியின் நினைவு அவரது மனதில் தோன்றியது. ‘நானோ பணத்தை எளிதில் அபகரித்து திருடனிடம் கொடுத்தேன். பெருந்தேவி, எத்தனையோ வருஷங்களாகச் சேர்த்துச் சேர்த்து முன்னூறு பவுன்களை இரவு பகலாய் இடுப்பில் கட்டிச் சுமந்தவள்; தவிர பணத்தின்மேல் கொண்ட பேராசையால் தன்னுடைய சொந்த தம்பியின் பெண்டாட்டியை துலுக்கனிடம் விற்றதான கேவலமான காரியம் செய்து பணம் சம்பாதித்தவள்; பணம் போய்விட்ட தென்பதை அவள் கேட்பாளானால், அவள் அதை நம்பவும் மாட்டாள்; உடனே தாடகை, சூர்ப்பனகை வேஷமெடுத்து என்னோடு மடிபிடித்து மல்ல யுத்தத்துக்கு வந்து விடுவாள், தெருவெல்லாம் சிரிக்கும். அதனால் ரகசியமெல்லாம் வெளியாய்விடும். கடைசியில் பெருத்த துன்பமும் ஜெயில் வாசமும் கிடைக்கும்” என்று அவர் நினைத்தார். ஆகையால், அவளை எப்படியாகிலும் வஞ்சித்து விட்டு, அவள் தம்மைக் கண்டுபிடிக்கமுடியாத வேறிடத்திற்குத் தாம் போய்விட வேண்டுமென்று தீர்மானித்தார். “பெருந்தேவியோ பங்களா பங்களா வென்று ஜெபம் செய்து, எப்போது அதற்குப் போவோம் என்று ஆவல் கொண்டிருக்கிறாள். ஆகையால் எப்படியாவது தந்திரம் செய்து அவளை பங்களாவில் குடிவைத்துவிட்டு, வரதாச்சாரியின் பெண்ணையும் வராகசாமிக்கு உடனே கலியாணம் செய்து வைத்து விட்டு சொல்லாமல் இராத்திரியே ஓடிப்போக வேண்டு” மென்று முடிவு செய்து கொண்டார். பங்களாவின் திறவு கோல் அதன் தோட்டக் காரனிடத்திலிருந்தது. சாமாவையர் சாயுபுவின் குமாஸ்தா வென்பதையும், கப்பல்காரருக்கு நட்பானவரென் பதையும், தோட்டக்காரன் அறிந்தவன். ஆகையால், அவர் உடனே அவனிடம் போய், கப்பல்காரரது அநுமதியின்மேல் பங்களாவை ஒருவருக்கு வாடைகைக்கு விட்டிருப்பதாகக் கூறி; திறவுகோலை வாங்கிவந்து பெருந்தேவியிடம் கொடுத்து, அவளை அதில் உடனே குடிவைத்துவிடத் தீர்மானித்தார். தவிர, அவள் பங்களாவின் விக்கிரயப்பத்திரமெங்கே என்று கேட்பவ ளாதலால் அதற்கும் ஏதேனும் தந்திரம் செய்ய வேண்டும் என்று, அதைப்பற்றியும் அவர் இரவு முழுதும் சிந்தனை செய்து ஒருவகையான முடிவிற்கு வந்தார்; அவருக்கு மிகவும் நண்பனான ஓர் ஏழை முகம்மதியன் இருந்தான். அவனிடம் சென்று ரூபாய் நூறு கொடுத்து, ஒரு நாளைக்குக் கப்பல்கார சாயபுவாக நடிக்கும்படி அவர் தூண்டினார். அவன் தனது தரித்திரக் கொடுமையால் அதற்கிணங்கினான். 

ஓர் எழுத்துக் கூலிக்காரனால் விக்கிரயப்பத்திரமும் எழுதி முடிக்கப்பட்டது. மறுநாள் பத்துமணிக்கு ஐயர் நன்றாக உண்டு உடுத்திக் கொண்டு, விஷயங்களை ஒருவாறாக தமது மனைவியிடத்தில் சொல்லிவிட்டு, தாம் சப் ரிஜிஸ்டிரார் கச்சேரிக்குப் போய்விட்டு வருவதாக அவளிடம் சொல்லி விட்டுப் போய்விட்டார். அவ்வாறு அவர் போனபிறகு இரண்டொரு நாழிகை கழிய, நமது மலையாளத்து மந்திரவாதி,சாமாவையரது வீட்டிற்கு வந்து, முற்கூறப் பட்டவாறு அவரை அழைத்தார்; அதைக்கேட்டு, “யார் அங்கே?” என்று கேட்டுக் கொண்டு நடைக் கதவண்டை வந்து பார்த்த மீனாக்ஷியம்மாள், ஒரு முகம்மதியர் நின்றதைக் கண்டாள். ஆஜாநுபாகுவாக உயர்ந்து பெருத்திருந்த அவரது சாரீரம், பெருத்த தலைப்பாகை, அடந்து நீண்ட தாடி, மை தீட்டப்பட்ட கண்கள் முதலியவற்றைக் கண்டு அம்மாள் ஒருவாறு அச்சங் கொண்டவளாய், “என்ன சங்கதி? நீர் யார்?” என்று மெல்லக் கேட்டாள். 

மந்திரவாதி, “ஐயர் இக்கிறாரா?” என்றார். 

அம்மாள், “இல்லை; நீர் யார்?” என்றாள். 

மந்திர:- நான் நைனாமுகம்மது எஜமானிடமிருந்து வந்திருக்கிறேன். அவர் நாலு நாளைக்கு முன் ஐயரை அழைத்து வரும்படி ஒரு ஆளை அனுப்பினாராம்; ஐயர் மைலாப்பூர் பங்களாவை வாங்குவதற்கு நாகைப்பட்டணம் போயிருப்பதாகச் சொன்னீர்களாம். ப்போது ஐயர் வந்து விட்டாரா? பங்களாவை வாங்கிவிட்டாரா? என்பதை அறிந்து வரச்சொல்லி என்னை எஜமான் அனுப்பினார் என்றார். 

அதைக் கேட்ட அம்மாள் யோசனை செய்யாமல் அவசரப்பட்டு, “பணமெல்லாம் ரயிலில் திருட்டுப்போய் விட்டதாம்; பங்களாவை வாங்கவில்லை; வந்து விட்டார்” என்று விசனத்தோடு கூறினாள். 

மந்திரவாதி மிகுந்த வியப்பைக் காட்டி, “என்ன ஆச்சரியம்! திருட்டுப் போய் விட்டதா! எத்தனை ரூபாய் போய் விட்டது?” என்றார். 

மீனாக்ஷி:- பதினாயிரம் ரூபாய் போய் விட்டது.ஐயர் ரயிலில் ஏறி மாயவரத்திலிருந்து திருவாரூருக்குப் போனாராம்; வழியில் கொஞ்சம் தூங்கிவிட்டாராம். யாரோ மூட்டையை எடுத்துக் கொண்டு போய்விட்டார்களாம். 

மந்திர:- அடாடா! அவ்வளவு பணம் போய்விட்டதாக எஜமான் கேட்டால், நிரம்பவும் விசனப்படுவார். இப்போது ஐயர் உள்ளே இருக்கிறாரா? 

மீனாக்ஷி- இல்லை; சப்ரிஜிஸ்டிரார் கச்சேரிக்குப் போயிருக்கிறார்; இன்னம் ஒரு நாழிகையில் வந்துவிடுவார். அப்படித் திண்ணையில் உட்கார்ந்து கொள்ளும். 

மந்திர :- உட்கார எனக்கு நேரமில்லை. சீக்கிரம் வருவாரோ? அதிக நேரம் பிடிக்குமோ? யாருக்காவது சாட்சி சொல்லப் போனாரா? அல்லது வேறு என்ன அலுவலாகப் போனார்? 

மீனாக்ஷி:- பங்களாவை வாங்கும் விஷயமாகத்தான் போயிருக்கிறார்; எனக்கு விவரம் தெரியாது. அவருடைய விசனத்தில் அதிகமாக ஒன்றையும் சொல்லவில்லை. 

மந்திர:- நாகைப்பட்டணத்திலிருந்து கப்பல்கார மரைக்காயரும் வந்திருக்கிறாரா? அல்லது ஐயர் மாத்திரம் திரும்பி வந்தாரா? 

மீனாக்ஷி- வேறு யாரும் வரவில்லை. எல்லாவற்றிற்கும் நீர் திண்ணையில் இருந்தாலுஞ் சரி; வேறு எங்கேயாவது வேலையிலிருந்து போய்விட்டு வந்தாலுஞ் சரி; இன்னம் ஒரு நாழிகைக்குள் ஐயரைக் காணலாம். 

மந்திர-சரி; நான் போய்விட்டு மறுபடியும் வருகிறேன்; ஐயர் வந்தால் இருக்கச் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு வெளியில் நடந்தார். நடந்து நாலைந்து வீடுகளுக்கப்பால் சென்ற மந்திரவாதி சாமாவையருக்கு சப்ரிஜிஸ்டிரார் கச்சேரியில் என்ன வேலை யிருக்கலாமென்று சந்தேகித்தார். பங்களா விஷயமாகப் போயிருக்கிறாரென்றும், ஆனால், கப்பல் வியாபாரி வரவில்லை யென்றும் அம்மாள் சொல்லு கிறாள். கப்பல் வியாபாரி இல்லாமல் பங்களாவை அவர் எப்படி வாங்கக்கூடும் என்று நினைக்க நினைக்க, மந்திர வாதியின் சந்தேகம் வலுத்தது; சாமாவையரது வருகையை எதிர்பார்த்து ஓரிடத்தில் நின்று கொண்டிருப்பதைக்காட்டிலும், அருகிலிருந்த சப்ரிஜிஸ்டிராரின் கச்சேரிக்குப் போய்விட்டு வரலாமென்று தீர்மானித்துக் கொண்டவராய் மந்திரவாதி மேலே நடந்து சென்று ஐந்து நிமிஷத்தில் அந்தக் கச்சேரிக்கு வந்து சேர்ந்தார். அவ்விடத்தில் நூற்றுக்கணக்கில் மனிதர் கூடியிருந்தனர். தம்மைக் கண்டு எவரும் சந்தேகியாதபடி, மந்திரவாதி ஜனத்திரளில் கலந்து மறைந்து கொண்டார். ஒரு மூலையில் சாமாவையரும் பெருந்தேவியம்மாளும் உட்கார்ந் திருந்ததை மந்திரவாதி கண்டு, தம்மை ஐயர் பார்க் காமலிருக்கும்படி வேறு திக்கில் தமது முகத்தைத் திருப்பிய வண்ணம், அவர்களது சம்பாஷணையைக் கவனித்தார். அரை நாழிகை சென்றது. அதுவரையில் வேறு பல பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. அதன் பிறகு சேவகன் வாசற்படியில் நின்று கொண்டு, “கப்பல்கார நூர்முகம்மது மரைக்காயர்” என்று கூவினான்; உடனே சாமாவையர் பெருந்தேவியம்மாள் ஆகிய இருவரும் தடபுடலாக எழுந்தனர். அப்போது கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு முகம்மதியர் உள்ளே நுழைந்தார்; அவருக்குப் பின்னால் சாமாவையரும், இன்னொரு மனிதரும் தொடர்ந்து உட்புறம் சென்றனர். அந்த முகம்மதியர் மிகவும் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்திருந்தார். ஆனால், அவரது உடம்பு மிகவும் இளைத்து சுகவீனத்தைக் காண்பித்தது. தேகம் கருப்பாயும், தசைப் பிடிப்பற்றதாயும், முரடாயும், அநாகரீகமாயும் காணப்பட்டது: அவரது உடைகள் மாத்திரம், அவர் பெரிய மனிதரென்பதைக் காட்டியதன்றி அவரது தோற்றமோ பக்கிரித் தோற்றமாக இருந்தது. அவர் உள்ளே சென்று சப் ரிஜிஸ்டிராருக்கு எதிரில் நின்றவுடன், விசாரணை ஆரம்பமாயிற்று. 

சப்.ரி :- நீர்தான் நூர் முகம்மது மரைக்காயரா? 

முகம்மதிய:- ஆம் நான்தான். 

சப்ரி:- உம்முடைய ஊர் எது? 

முக:- நாகைப்பட்டணம். 

சப்.ரி:- தகப்பனார் பெயரென்ன? 

முக:- கச்சி மொகிதீன் மரைக்காயர். 

சப்.ரி:- உம்முடைய தொழில் என்ன? 

முக:- கப்பல் வியாபாரம். 

சப்.ரி:- மைலாப்பூரிலுள்ள உம்முடைய புராதன பங்களாவை பெருந்தேவியம்மாளுக்கு விற்கிறீரா? 

முக:- ஆம். 

சப்.ரி:- எத்தனை ரூபாய்க்கு? 

முக:- 10,500 ரூபாய்க்கு. 

சப்.ரி:- முழுத்தொகையும் பெற்றுக்கொண்டீரா? 

முக:- ஆம்; வாங்கிக்கொண்டேன். 

சப்.ரி:- பத்திரத்தைப் பதிவு செய்துவிடலாமா? 

முக: ஓ! செய்யலாம். 

சப்.ரி:- சரி; இரண்டு சாட்சிகள் யார் யார்? 

முக:- இதோ ஐயர் ஒருவர்; அதோ செட்டியார் இன்னொருவர். 

என்று பக்கத்தில் நின்ற இருவரையும் சுட்டிக் காட்டினார். செட்டியாருக்கு அந்தக் கச்சேரியில் சாட்சி சொல்வதனாலேயே ஜீவனம் நடந்தது. ஒரு நாளைக்குப் பத்து பத்திரங்களுக்கு சாட்சி சொல்லுவார்; ஒவ்வொரு பத்திரத்திற்கும் நான்கணா எட்டணா வீதம் ஒவ்வொரு நாளைக்கு இரண்டு மூன்று ரூபாய் வரையில் சம்பாதிப்பார். ஆனால், ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய்க்கு நல்ல முதல்தரமானகள்ளாகப்பார்த்துக் குடிப்பார். மாலையில் அவர் வீட்டுக்கு வரும்போது, அவரோடு குடிக்கும் நண்பர்கள் அவரைத் தூக்கிக் கொணர்ந்து வீட்டில் விட்டுப் போவார்கள். அவரை சப் ரிஜிஸ்டிரார் நன்றாக அறிவாராயினும் அவர் அவ்வாறு குடிப்பதை அறியமாட்டார்; ஆனால், அவரைக் காணும்போதெல்லாம், அவரிடம் புரளியாகப் பேசுவார்; என்னவோ ஏழை பிழைத்துப்போகட்டுமென்று, அவருடைய சாட்சியத்தை ஏற்றுவந்தார்; வழக்கப்படி அவரைக்கண்ட சப் ரிஜிஸ்டிரார் நகைத்து, ‘ஓகோ! செட்டியாரே! வாரும்; செட்டியார் இல்லாத பத்திரமுமில்லை; உலகத்தில் அவருக்குத் தெரியாத மனிதருமில்லை; கப்பல்காரர் முதல் பிச்சைக்காரர் வரையில் செட்டியாருக்குத் தெரியும். செட்டியாரே! வாரும் இப்படி ; (சிரித்துக்கொண்டு ) உமக்கு மரக்காயரைத் தெரியுமா? உம்மைக் கேட்கவே வேண்டியதில்லை; நீர் யாரைத் தான் தெரியாதென்று சொன்னீர்கள்? இந்த மரைக்காயரை உமக்கு எப்படி ஐயா! தெரியும்?” என்றார். செட்டியார் பல்லைப் பல்லைக்காட்டிக் கெஞ்சி நயந்து நிர்த்தனம் செய்தவராய், “தெரியும்; அடிக்கடி ஐயர் வீட்டுக்கு வருவார், பார்த்திருக்கிறேன்” என்றார். 

சப் ரிஜிஸ்டிரார்:- சரி; ஒழிந்து போகட்டும். இப்படி வாருங்கள், உங்கள் இரண்டுபேருக்கும் இந்த சாயுபுவைத் தெரியுமா! 

செட்டியார், ஐயர்:- தெரியும் 

சப்ரி:- இவர் கப்பல்கார நூர் முகம்மது மரைக்காயர்தானா? 

செட்டியார், ஐயர் :-தெரியும் 

சப்ரி:- இவர் பங்களாவுக்காக ரூ.10,500 வாங்கிக் கொண்டது தெரியுமா? 

செட்டியார், ஐயர் :- தெரியும் 

சப் ரிஜிஸ்டிரார் சரி; அங்கே சேவகரிடம்போய் கையெழுத்துப் போடுங்கள்; போங்கள் – என்று அனுப்பி விட்டுப் பத்திரத்தில் தமது கையெழுத்தைச் செய்து சேவகனிடம் விசிறிப்போட்டார். பதிவுக்கட்டணம் உடனே வசூலிக்கப்பட்டது. மரைக்காயர், செட்டியார், ஐயர் மூவரும், ஒரு மூலையில் போடப்பட்டிருந்த மேஜைக்கருகில் நின்ற சேவகனிடம் சென்றனர். அவன் பத்திரத்தின் பின்புறத்தில் அவர்களது கையெழுத்து முதலிய விவரங்களை எழுதச் செய்ததன்றி, அவர்களது பெருவிரல் ரேகை அடையாளத் தையும் அழுத்தச் செய்தான். அப்போது சாமாவையர் ஒரு தந்திரம் செய்தார்; தகப்பனார் பெயரையும் போட்டுவிட்டார். அதாவது, மகாலிங்கையர் பிள்ளை சாமாவையர் என்பதற்குப் பதிலாக, சாமாவையர் பிள்ளை மகாலிங்கையர் என்று போட்டு விட்டார். ஏனெனில், பிறகு அந்தப் பொய்ப்பத்திரம் தயாரித்த விஷயமாக ஏதேனும் நேர்ந்தால், சாட்சியாக வந்தவர் தாம் அல்ல வென்று சொல்லிவிட, அந்தத் தந்திரம் செய்தார். அதை எவரும் கவனிக்கவில்லை. கால் நாழிகையில் பத்திரப் பதிவின் சடங்குகள் நிறைவேறின. பத்திரம் பெருந்தேவி யம்மாளிடம் கொடுக்கப்படவேண்டு மென்று மரைக்காயர் எழுதி வைத்தார். அது மறுநாள் காலையில் கொடுக்கப் படுமென்று சப் ரிஜிஸ்டிரார் சொல்ல, அதைக்கேட்டுக் கொண்ட அம்மூவரும் உடனே வெளிப்பட்டனர். அதுகாறும், வெளியில் நின்று, நிகழ்ந்தனவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த பெருந்தேவியம்மாள், தான் பெருத்த பங்களாவிற்கு எஜமானியானதைப்பற்றி நினைத்துப் பெருமகிழ்வும் பெருமையும் பூரிப்பும் அடைந்தாள்; நால்வரும் கச்சேரியின் கட்டிடத்தை விட்டு வெளியிலிருந்த பாட்டைக்கு வந்தனர். அடுத்த பத்திரத்திற்கு சாட்சி சொல்ல, செட்டியார் போகவேண்டி யிருந்ததால், சாமாவையரால் கொடுக்கப்பட்ட எட்டணாவை வாங்கிக்கொண்டு செட்டியார் கச்சேரிக்குள் ஓடினார். மற்ற மூவரும் கால் நடையாக தங்களுடைய ஜாகைகளை நோக்கிச் சென்றனர். 

அதுவரையில் நடந்தவற்றை யெல்லாம் நன்றாகக் கவனித்திருந்த மந்திரவாதியும் அவர்களுக்குப் பின்னால் நடந்தார். வெயிலுக்காக முகத்தை மறைத்துக் கொள்பவரைப் போல, அவர் தமது உருமாலையால் முகத்தை ஒருவாறு மறைத்துக் கொண்டு பின்தொடர்ந்தார். தீர்த்தாரப்ப முதலி தெருவிற்கருகில் அவர்கள் வந்தவுடன், மரைக்காயர், மற்ற இருவரிடத்திலும் விடைபெற்றுக்கொண்டு அந்தத் தெருவிற்குள் நுழைந்தார். சாமாவையரும் பெருந்தேவி யம்மாளும் தமது வீட்டை நோக்கி மேலும் நடந்து சென்றனர். மந்திரவாதியும் தீத்தாரப்பமுதலி தெருவிற்குள் நுழைந்த கப்பல்கார மரைக்காயரைத் தொடர்ந்து சென்றார். அது மிகவும் ஏழைகளான முகம்மதிய ஜனங்கள் வசிக்கும் சிறிய வீடுகளைக் கொண்ட தெரு. அதில் நாலைந்து வீடுகளுக்கப்பாலிருந்த ஒரு சிறிய வீட்டிற்குள் நமது கப்பல் காரர் புகுந்து மறைந்து போனார். மந்திரவாதி தெருவிலேயே கால்நாழிகை நேரம் நின்றபின்னர் அந்த வீட்டின் வாசலில் வந்து நின்று, “பாயி! பாயி!” என்று கூப்பிட்டார். உள்ளே இருந்த மரக்காயர், “யார் அது?” என்று கேட்டுக்கொண்டு வெளியில் வந்து வாசற்படியில் கதவிற்குப் பதிலாக விடப்பட்டிருந்த கோணித் திரைக்கு அப்பாலிருந்து தமது தலையை மாத்திரம் நீட்டினார். அப்போது வெளியில் நின்றவர் ஒரு முகம்மதியர் என்பதை அறிந்தவுடன் அவர் திரைக்கு வெளியில் வந்து, “ என்ன சங்கதி? நீர் யார்?” என்று கேட்டார். அவர் அப்போது கப்பல் வியாபாரியின் உடைகளைக் கழற்றிவிட்டு கறுவாட்டு வியாபாரியின் உடைகளை அணிந்திருந்தமையால், துணியின் நாற்றம் குபீரென்று வீசியது; சீலைப்பேன்கள் துணியின்மேல் உல்லாசமாகத் துள்ளி விளையாடின. அந்தத் துணியில் காற்று நுழையும் பொருட்டு, பலவிடங்களில் வாசற்படிகள், ஜன்னல்கள் முதலியவை நின்றிருந்தன. அரைப்பாகம் கடிபட்ட பன்ரொட்டித் துண்டொன்று அவரது கையிலிருந்தது. சப் ரிஜிஸ்டிரார் கச்சேரிக்கு வந்திருந்த கப்பல்காரர் அவர்தானோ வென்று மந்திரவாதி ஐயமுற்றார். ஆனால், அவர் தமது முகத்தில் எவ்விதமான சலனத்தையும் காட்டாமல், “பாயி! சலாம்! இதுதானே பதினேழாம் நம்பர் வீடு? இதில் ஆதம்சா ராவுத்தர் இருந்தாரே; அவர் உள்ளே இருக்கிறாரா?” என்றார். 

மரைக்காயர்:- (திகைப்பும் கோபமுமடைந்து) இதுதான் பதினேழாம் நம்பர் வீடு? இதில் பத்து வருஷமாக இருக்கிறேன். இங்கே ஆதம்சா என்று எவரும் இல்லையே! 

மந்திர:- அப்படியா! பதினேழாம் நம்பர் வீட்டில் இருப்பதாகச் சொன்னாரே? தங்களுடைய பெயரென்ன பாயி? 

மரைக்காயர்:- இது என்னுடைய வீடு; என் பாட்டனார் காலத்திலிருந்து எங்களுக்குச் சொந்தமானது. கலெக்டர் கச்சேரியில், பச்சா மொகிதீன் என்று என்பேரில் தாக்கலா யிருக்கிறது; சர்ட்டிபிகேட்டு காட்டட்டுமா?- என்று குறும்பாக மொழிந்தார். 

அதைக் கேட்ட மந்திரவாதி மிகவும் நயந்து, “பாயி! கோபித்துக்கொள்ள வேண்டாம்; என்னுடைய சிநேகிதர் நம்பரை தப்பாகச் சொல்லி விட்டார் போலிருக்கிறது. நீங்கள் போய் நாஷ்டா பண்ணுங்கள்; நானும் போகிறேன்; சலாம்’ என்று சொல்லிவிட்டு அப்பால் நடந்தார். மரைக்காயரும் உட்புறம் போய்விட்டார். 

மந்திரவாதி நேராகச் சென்று தொளசிங்கப்பெருமாள் கோவில் தெருவை அடைந்து சாமாவையரது வீட்டிற்கு வந்து முன் போலவே, “அம்மா! அம்மா! ஐயர் வந்துவிட்டாரா?” என்றார். 

சற்று முன் மந்திரவாதி வந்ததை மீனாக்ஷியம்மாள் சொல்ல, முன்னரே அறிந்திருந்த சாமாவையர் உடனே நடைக்கு வந்து மந்திரவாதியைக் கண்டு நடைத்திண்ணையில் உட்காரும்படி அன்போடு அவரை உபசரிக்க, அவர் உடனே உட்கார்ந்துகொண்டார். ஐயரும் ஒரு பக்கத்தில் உட்கார்ந்து அதிலிருந்த மண்திண்டில் சாய்ந்து கொண்டு “நீர் எஜமானிடத்தி லிருந்தா வருகிறீர்?” என்றார். 

மந்திர:-ஆம். 

சாமா:- அவர் நாகைப்பட்டணத்துக்குப் போனதாக சொன்னார்.நானே சமீப காலத்தில் அங்கே போயிருந்தேன். அவர் வரவே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இப்போது எஜமான் எங்கே இருக்கிறார்? இங்கே வந்துவிட்டாரா அல்லது வெளியூரில் இருக்கிறாரா? 

மந்திர:- அவர் நாகப்பட்டணத்துக்கே போகவில்லை. அங்கே போவதாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டார். நான் மலையாளத்தில் இருஞாலக்குடா என்னும் ஊரில் இருப்பவன். நெடு நாளாய் அவருக்கும் எனக்கும் பழக்கமுண்டு. 

சாமா:- அப்படியா! மலையாளத்தில் நீர் வர்த்தகம் செய்பவரா? 

மந்திர:- எனக்கு வர்த்தகம் ஒன்றுமில்லை. நான் மந்திரவாதி. 

சாமா:- ஓகோ! அப்படியா! ஆனால், அவர் இன்னமும் உம்முடைய ஊரில்தான் இருக்கிறாரோ? 

மந்திர:- இல்லை இல்லை; இங்கே வந்து விட்டார்; ஒரு ரகசியமான இடத்தில் இருக்கிறார். 

சாமா:- அவரோடு இன்னம் யார் இருக்கிறார்கள்? 

மந்திர:- ஒருவருமில்லையே! 

சாமா:- ஒரு பெண் இருக்க வேண்டுமே? 

மந்திர:- பெண் ஏன் வருவாள்? நீர்தான் ஐயாயிரம் ரூபாயை வாங்கி கொண்டு, உனக்குச் சோறுபோடும் எஜமானையே ஏமாற்றி விட்டீரே! அவரோடு வரக்கூடிய பெண்ணையா நீர் அனுப்பினீர்? – என்றார். 

அதைக் கேட்ட ஐயர் அச்சமும் திகைப்பும் அடைந்து, “என்ன நடந்தது? பெண் எங்கே போனாள்? அவர் வீட்டில் தானே இருக்கிறாள்?” என்றார். 

மந்திரவாதி, “சங்கதி ஒன்றும் உமக்குத் தெரியாதோ? தோ இந்தக் கடிதத்தைப் படித்துப் பாரும். நீர் அனுப்பிய பெண்ணின் யோக்கியதையும், நீர் செய்த காரியம் எப்படி முடிந்த தென்பதும் தெரியும்” என்று கூறியவண்ணம் ஒரு கடிதத்தைக் கொடுக்க, சாமாவையர் மிகுந்த ஆவலோடு அதை வாங்கினார்; கடிதத்தைப் பிடித்த அவரது கை நடுங்கியது. மனம் கலங்கியது. அந்த ஒரு நொடியும் யுகமாய்த் தோன்றியது. அவர் அதைப் பிரித்துப் படித்தார். உடனே அவரது முகம் மாறுதலடைந்தது; அவர் ஏதோ சொல்ல நினைத்தார்; வாய் குழறியது. ”ஆனால், பெண் தப்பித்துக்கொண்டு போய் விட்டாளா? எஜமானருடைய மாமனார் வீட்டிலா இருக்கிறாள்?” என்றார். 

மந்திர:- ஆம். 

சாமா:-அப்படியானால் விஷயம் வெளியாயிருக்குமே? 

மந்திர:- இதுவரையில் வெளியாகவில்லை; இன்னம் இரண்டொரு நாளில் வெளியாய்விடும். 

சாமா:- வெளியானால்? 

மந்திர:- நீங்கள் மூவரும் காராக்கிரகத்துக்குள் போக வேண்டியதுதான். அடுத்த சங்கதி நீர் சாதாரண காரியமா செய்தீர்? பணத்தை வாங்கிக்கொண்டு முதலாளியைச்சந்தியில் யிழுத்துவிட்டீரே! 

சாமா:- (நடுநடுங்கி) இப்படி நடக்குமென்று நான் நினைக்கவே இல்லை. இப்போது இதற்கு என்ன யோசனை செய்திருக்கிறீர்கள்? எஜமானருக்கு ஆபத்து வராமலிருக்க, என்ன செய்ய வேண்டு மென்றாலும் அதை நான் செய்யத் தடையில்லை. என்னுடைய உயிரைக் கேட்டாலும் கொடுக்கத் தயார்-என்றார். 

உடனே மந்திரவாதி,”இதோ பாரும்; இந்தக் கடிதத்தை நான் எட்சினி தேவதையின் மூலமாக போலீஸ் கச்சேரியிலிருந்து வரவழைத்தேன்” என்று இன்னொரு கடிதத்தை நீட்ட, சாமாவையர் மிகுந்த ஆவலோடு அதை வாங்கிப் படித்து, முன்னிலும் அதிகரித்த பயத்தையும், திகைப்பையும் அடைந்தார். “என்ன இது! எஜமானருடைய மாமனாரே பிராது எழுதி விட்டரே! இதற்கு நாம் என்ன செய்கிறது?” என்றார். அதற்குள் அவரது மனதில் கோடாநு கோடி எண்ணங்கள் தோன்றி மறைந்தன. அது பொய்யோ மெய்யோவென்று சந்தேகித்தார். அதில் போலீஸ் முத்திரை இருந்ததைக் கண்டார். அது உண்மையான பிராதென்றே நினைத்துக் கொண்டார். அது எட்சினி தேவதையினாலேதான் வந்திருக்க வேண்டுமென்று அவர் உறுதியாக நினைத்தார். மந்திரவாதியிடத்தில் அவருக்குப் பெருத்த மதிப்பும்,பயமும், மரியாதையும் ஏற்பட்டன. அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை ஆவலோடு எதிர்பார்த்தார். மந்திரவாதி சிறிது நிதானித்தார்; “இதற்கு இன்று ராத்திரி முழுதும் சுடலையில் பிணத்தின் மேல் உட்கார்ந்துகொண்டு நான் மந்திரம் ஜெபித்து, காவுகொடுத்து எட்சினியை வரவழைத்து வசியம் செய்யப் போகிறேன். இதனால், அவருடைய மாமனாரும், சம்சாரமும் நாளைக்கு அவருடைய வசமாய் விடுவார்கள். மேனகா வென்னும் பிராமணப் பெண்ணும் அவர்மேல் மோகங் கொண்டு அவரிடம் வந்து சேருவாள். அவளை இனிமேல் இந்த ஊரில் வைத்துக்கொள்ளக் கூடாது; அடுத்த கப்பலில் எஜமானர் சிங்கப்பூருக்கு அவளை அழைத்துக் கொண்டுபோய் அங்கே வைத்துவிடுவார். அவர் இனிமேல் இந்த ஊரில் மூன்று மாசமும் சிங்கப்பூரில் மூன்று மாசமும் இருப்பார்; அவளை அவர் கோஷா ஸ்திரீயைப்போல மூடிக்கொண்டு போவாராதலால், அவளை எவரும் கவனிக்கவும் மாட்டார்கள்; ஆனால் தெய்வச் செயலாக, கப்பலிலோ சிங்கப்பூரிலோ அவளை யாராவது ஹிந்துப் பெண்ணென்று கண்டு கொண்டால், எஜமானுக்கு ஆபத்து நேரும்; அதற்காக நானும் அவரும் ஒரு யோசனை செய்து இதோ ஒரு நகல் தயாரித்திருக்கிறோம். அதைப்போல நீர் எழுதி அதில் நீரும், பெருந்தேவியம்மாளும், கையெழுத்திடச் செய்து வாங்கிவரச் சொன்னார். சாதாரணமாக இந்தக் கடிதம் உபயோகப்படப் போகிறதில்லை, இருந்தாலும், முன் னெச்சரிக்கையாக கையில் இருக்க வேண்டியது அவசிய மல்லவா?” என்றார். 

உடனே சாமாவையர் சிறிதும் யோசியாமல் மந்திரவாதி கொடுத்த நகலை வாங்கிப் படித்துவிட்டு, “சரி; இதுதானா பெரிய காரியம்; அப்படியே எழுதித் தருகிறோம். நீர் இங்கே இரும். நான் போய் இதோ வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து அடுத்த வீட்டிற்குச் சென்று நிகழ்ந்த விஷயங்களையெல்லாம் பெருந்தேவியம்மாள், கோமளம் ஆகிய இருவரிடத்திலும் வெளியிட்டு அவர்களை மிகவும் பயமுறுத்த, கடிதம் எழுதிக் கொடுப்பதற்கு அவர்களும் எளிதில் இசைந்தனர். மந்திரவாதி கொடுத்த நகலை சாமாவையர் படித்துக்கொண்டே வர கோமளம் வேறொரு காகிதத்தில் அப்படியே எழுதினாள்; அதில் பெருந்தேவியம்மாள் கையெழுத்துமிட்டாள். அடியில் சாமாவையரும் கையெழுத் திட்டு அதை எடுத்துக்கொண்டு தமது கிரகத்திற்கு வந்து அதை மந்திரவாதியிடம் கொடுத்தார்; மந்திரவாதி அதை வாங்கிப் படித்துப்பார்த்து திருப்தி அடைந்தவராய், அதை மடித்துத் தமது சட்டைப்பையில் வைத்துக்கொண்டார்; சாமாவையருக்கு நைனாமுகம்மது எழுதியனுப்பிய கடிதத்தையும், பெரியதம்பி மரக்காயரின் பிரியாதையும் வாங்கி சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு, “சரி; எஜமான் காத்திருப்பார்; நான் போகிறேன். நாளைக்கு எல்லாக் காரியமும் திருப்தியாய் முடிந்துபோகும். சலாம்’ என்று சொல்லிவிட்டு எழுந்தார். சாமாவையரும் அவருக்கு சலாம் செய்தார். உடனே எழுந்து வெளியிற் சென்ற மந்திரவாதி திரும்பவும் நடைக்கு வந்து, ”ஐயரே! இன்னொரு விஷயம் கேட்டுவரச் சொன்னார்; அதை மறந்துவிட்டேன்” என்றார். 

சாமாவையர் ஆவலோடு, “என்ன விஷயம்?” என்றார். 

மந்திரவாதி,”பெண்ணினுடைய பெட்டியில் நீங்கள் நாடகக் காரன் எழுதியதைப்போல இரண்டு கடிதங்களை எழுதி வைத்தீர்களே, அவைகளை எழுதிய மனிதரை நாம் கடைசி வரையில் நம்பலா மல்லவா? அவர் ஒருவேளை விஷயத்தை வெளியிட்டு விடப் போகிறாறென்று எஜமான் பயப்படுகிறார்; அவர் சொல்லிவிடக் கூடியவரானால் அவருடைய பெயரைச் சொல்லும். இன்று ராத்திரியே மரணமந்திரம் செய்து அவரைக் கொன்றுவிடுகிறேன்” என்றார். அதைக் கேட்ட சாமாவையர், “இல்லை இல்லை; அதைப் பற்றி பயமே வேண்டாம். அதை எழுதியது வேறுயாருமில்லை. என் தம்பிதான் எழுதினான். உயிர் போனாலும் அவன் நிஜத்தைச் சொல்லமாட்டான். எஜமானிடம் தைரியமாகச் சொல்லுங்கள். அவர் எங்கு மறைந்து கொண்டிருக்கிறார்? அவரிடம் நானும் வரலாமா?” என்றார். 

மந்திரவாதி, “அவர் நாளைக்குக் காலையில் தம்முடைய வீட்டுக்கே பகிரங்கமாக வந்துவிடுவார்; நீர் வீட்டுக்கே வந்து பார்க்கலாம்; இன்றைக்கு ஒரு நாள் பொருத்துக் கொள்ளும்” என்று சொல்லிக்கொண்டே வெளியில் போய்விட்டார். விஷயங்கள் யாவும் திருப்திகரமாக நடந்து போனதைப் பற்றி சாமாவையர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, பகற் போஜனம் செய்யும் பொருட்டு வீட்டிற்குள் போய் விட்டார். 

அவரது வீட்டை விட்டு வெளிப்பட்ட மந்திரவாதி கெங்கைகொண்டான் மண்டபத்திற்கு எதிரில் திரும்பிச் சிறிது தூரம் சிங்கராசாரி தெருவில் போய் அங்கிருந்து வெங்கடாசலச் செட்டித் தெருவிற்குள் நுழைந்தார்; அதிலிருந்த பல மாடி வீடுகளைக் கடந்தார். அப்பாலிருந்த ஒரு வீட்டிலேதான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சமய சஞ்சீவி ஐயர் குடியிருந்தார் என்பதை மந்திரவாதி அறிவார். ஆதலின், அந்த வீட்டிற்குள் புகுந்து நடையைத் தாண்டி தாழ்வாரத்தில் நின்றுகொண்டு, ‘சாமி!சாமி!” என்று கூப்பிட்டார். “யார் அது?” என்று குயில் கூவுதலைப் போல ஒரு பெண்ணின் குரல் உட்புறத்தில் கேட்டது. அடுத்த நிமிஷம், தங்கப்பதுமைப்போன்ற வடிவழகினைக்கொண்ட ஒரு யௌவனப் பெண்மணி மந்திரவாதிக்கு எதிரில் பிரசன்னமானாள். அவளுக்குப் பதினெட்டு வயதிருக்கலாம்; தங்கமும், வைரக்கற்களும், பட்டுத்துயிலும், சிவப்பு மேனியும், முல்லையரும்பு போன்ற வெள்ளைப் பற்களும் ஜெகஜ்ஜோதியாய் ஒளிவீச, எதிரில் வந்து காட்சி கொடுத்த அந்த இன்பவடிவைக்கண்ட மந்திரவாதி புன்னகை செய்து, “இன்ஸ்பெக்டர் சாமி இருக்கிறாரா?” என்றார். அதைக் கேட்ட அந்த அம்மாளாகிய சமயசஞ்சீவி ஐயரது மனைவி, அவரை ஏற இறங்க உற்று நோக்கி, “இல்லை; போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார். நீர் யார்?” என்று மிகவும் கம்பீரமாகக் கேட்டாள். மந்திரவாதி அவளிருந்த கூடத்தை நோக்கிப் புன்னகை செய்து நடந்தவண்ணம், “ஐயர் ஸ்டேஷனில் இல்லையே! இப்போது அவர் இங்கேதான் இருக்கிறாரென்று சொன்னார்களே!’ என்றார். அவரது முகத்தில் போக்கிரிக்களையும் புன்னகையும் பிரகாசித்தன. அவரது சொல்லைக் கேட்ட அம்மாள் சிறிது கோபங்கொண்டு அதட்டிய குரலில், “அவர் இங்கே இல்லை ஐயா என்கிறேன். மேலும் மேலும் கேட்கிறீரே; அவரை இங்கே அடுக்குப்பானையில் வைத்திருக்கிறோமோ; போமையா வெளியில்; திறந்த வீட்டில் என்னவோ நுழையும் என்பார்கள்; அதைப்போல கூடத்திற்கு வந்து விட்டீரே; சுத்தப் பட்டிக்காட்டு மனிதரா யிருக்கிறீரே!” என்றாள். அதைக்கேட்ட மந்திரவாதி, அதைக் காதில் வாங்காதவரைப் போல நடித்து மிரண்டு மிரண்டு பார்த்து. இல்லை யம்மணி! கோபித்துக்கொள்ளவேண்டாம்; நான் ஐயரிடத்தில் வேலையாக வரவில்லை. அம்மாளிடத்திலேதான் வேலையாக வந்தேன்; நான் மலையாளத்து மந்திரவாதி” என்றார். 

அதைக்கேட்ட அம்மாள் முன்னிலும் அதிகரித்த ஆத்திர மடைந்து, “இப்போது நீ வீட்டை விட்டு வெளியில் போகிறாயா? அல்லது ஆர்டர்லியைக் கூப்பிட்டு மரியாதை செய்தனுப்பட்டுமா?” என்றாள். 

உடனே மந்திரவாதி நயமாகவும் பணிவாகவும் பேசத் தொடங்கி, “அம்மணியிடம் நல்ல சன்மானம் வாங்கிக் கொண்டு போக வந்திருக்கிறேன். என்னை எந்தச் சேவகன் தள்ளுவான்? அம்மணிக்கு நல்ல தங்கமான குணம்; முன்கோபம் மாத்திரம் கொஞ்சம் அதிகம். ஆனால், வெளுத்த தெல்லாம் பால்; கருத்ததெல்லாம் தண்ணீர்; என்ற எண்ணம். அதை அறிந்து தான் ஐயர் ஸ்டேஷனுக்குப் போவதாகச் சொல்லி ஏமாற்றி விட்டு பட்டப்பகலிலேயே தாசி ஞானாம்பாள் வீட்டுக்குப் போயிருக்கிறார். உங்களுக்கும் ஐயருக்கும் இந்த விஷயத்தில் வருத்தமென்பது எனக்குத் தெரியும்; நான் வசிய மருந்து செய்வதில் மிகவும் கை தேர்ந்தவன். இதோ ஒரு மை தருகிறேன்; அதை நீங்கள் புருவத்தில் தடவிக் கொண்டால் அடுத்த நிமிஷம் ஐயர் உங்களுடைய காலடிக்கு வந்து சரணாகதி அடைவார்; இதை உடனே பரீட்சை செய்து பார்க்கலாம்” என்று மிகவும் உறுதியாகக் கூறினார். ஐயரது நடத்தையைப் பற்றி அம்மாளுக்கு நெடுநாட்களாக சந்தேகமிருந்தது உண்மையாதலால், அவளது கோபம் உடனே தணிந்தது. தனது கணவனை வசியம் செய்து விடவேண்டுமென்று அவள் உடனே நினைத்தாள். “அந்தமை என்னுடைய புருவத்திலிருக்கும் வரையில்தானே அவர் நான் சொன்னபடி கேட்பார். அது கூடாது; அவர் இனிமேல் எப்போதும் நான் சொல்வதையே செய்யவேண்டும். வேறு யாரிடத்திலும் அவர் ஆசை வைக்கக்கூடாது; நான் எழுந்திரு என்றால் எழுந்திருக்க வேண்டும். உட்கார் என்றால் உட்கார வேண்டும்; அப்படிப் பட்ட மருந்திருந்தால் கொடும்; நீர் கேட்கும் பணத்தை உடனே தருகிறேன்” என்றாள். அம்மாள் எளிதில் தமது வசப்பட்டதைக் கண்ட மந்திரவாதி, “மந்திர உச்சாடனம் செய்த ஒரு வேர் என்னிடம் இருக்கிறது. அதை இப்போதே தருகிறேன். தாலிச்சரட்டில் கட்டிக்கொள்ளுங்கள். அடுத்த நிமிஷம் ஐயர் என்ன செய்கிறாரென்று பாருங்கள்! ஆனால், எனக்குப் பணத்தின்மேல் ஆசையில்லை” என்றார். 

அம்மாள்:- அப்படியானால் ஒன்றும் வாங்கிக் கொள்ளாமல் இலவசமாகச் செய்கிறேன் என்கிறீரா? 

மந்திர- கூலியில்லாத வேலையுண்டா அம்மணி? தங்களுக்குத் தெரியாத காரியமா? 

அம்மாள்:- அப்படியானால், என் உடம்பிலுள்ள நகைகளில் எதைக் கேட்டாலும் தருகிறேன். தங்கக் கொலுசு வேண்டுமா? இல்லாவிட்டால், என் காதிலிருக்கும் வைரக் கம்மல் வேண்டுமா? 

மந்திர: நல்ல காரியம் செய்தீர்கள். கம்மல் இரண்டாயிரம் ரூபாய், பெறுமே! உங்களுடைய ஐயரே இன்ஸ்பெக்டர்; அவர் வசியமான பிறகு நான் கம்மலைத் திருடிக் கொண்டு போனதாகச் சொல்லி நகையையும் பிடுங்கிக்கொண்டு என்னையும் ஜெயிலில் போடப் பார்த்தீர்களா? நீங்கள் கம்மலைக் கொடுத்த பின், ஐயர் வந்து அது எங்கே என்று கேட்டால் என்ன சொல்லுவீர்கள்? 

அம்மாள்:- (புன்னகை செய்து) இந்த விஷயங்களில் புருஷரை ஏமாற்ற பெண்டுகளுக்குத் தெரியாதா? எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்வதற்காகக் கழற்றி வைத்தேன். காக்கை எடுத்துக் கொண்டு போய்விட்டதென்று சொல்லி விடுகிறேன். இதற்காக நாலைந்து அடி விழுந்தாலும் ஐந்து நிமிஷத்தில் வலி ஆறிப்போகிறது. காரியம் ஆனால் அதுவே போதும்-என்றாள். 

மந்திர-(புன்னகை செய்து) அம்மாள் பலே தந்திரசாலி! எனக்குக் கம்மலும் வேண்டாம். அதனால் அம்மாளுக்கு அவ்வளவு துன்பமும் வேண்டாம்; என்னை ஆசையோடு கட்டிக்கொண்டு எனக்கு இரண்டு முத்தங்கள் கொடுத்து விடுங்கள்; வேறொன்றும் வேண்டாம்; உடனே நான் ஐயரை வசியம் பண்ணி வைத்து விடுகிறேன் – என்றார். 

எதிர்பாராத அந்த அசங்கியமான சொல்லைக் கேட்ட அம்மாள் கொடிய புலியைப்போலச் சீறி நிமிர்ந்தாள். “அடே தொடப்பக்கட்டை! என்ன சொன்னாய்? வீட்டை விட்டு வெளியில் போகிறாயா? சாணியைக் கரைத்து சந்தனாபிஷேகம் செய்யட்டுமா? அடே! வெளியில் யாரடா ஆர்டர்லி! “என்று உரக்கக் கூவினாள். 

அதைக் கேட்ட மந்திரவாதி சாந்த குணத்தோடு புன்னகை செய்து, “ஆகா! எஜமானி அம்மாளுக்கு எவ்வளவு கோபம் வருகிறது! ஐயரை வசியம் பண்ண அறிந்த எனக்கு அம்மாளை வசியம் பண்ணத் தெரியாதா! இதோபார்; சூ! மந்திரகாளி! அடுத்த நிமிஷம் அம்மாளே ஓடிவந்து என்னைக் கட்டிக் கொண்டு முத்தமிடவேண்டும்” என்ற வண்ணம், தமது தலைப்பாகையை ஒரு கையால் கீழே தள்ளி விட்டார்; இடையிலிருந்த கைலியையும் மேலே இருந்த அங்கியையும் கழற்றிப்போட்டார்; தமது இடையிலிருந்த ஒரு பேனாக்கத்தியால் முகத்திலிருந்த ஒரு கயிற்றை அறுக்க, அவரது நீண்ட தாடி உடனே பறந்து கீழே விழுந்தது. அவன் பைத்தியக்காரனா யிருப்பானோவென்று அதுவரையில் நினைத்திருந்த அந்த யௌவன மாது, திகைப்பும் வியப்பும் அடைந்து அந்த வசிய ஜாலத்தில் ஈடுபட்டு மந்திரவாதியின் மீது உடனே மோகங்கொண்டவளாய் ஓடி வந்து மோகா வேசத்தோடு மந்திரவாதியின் மேல் பாய்ந்து அவரை அணைத்து முத்தமிட்டு, “சபாஷ்! நல்ல மந்திரவாதி! என்னை எவ்வளவு சீக்கிரமாக வசியப் படுத்திவிட்டீர்! முத்தம் முத்தமென்று பைத்தியம் பிடித்தலைகிறீர்? எத்தனை வேண்டுமானாலும் இதோ தருகிறேன்; எடுத்துக் கொள்ளும். அப்படியாவது என் புருஷன் வசியமாகட்டும்” என்று திரும்பவும் அவரை ஆலிங்கனம் செய்து கொள்ள, வேஷங் கலைத்த சமயசஞ்சீவி ஐயர் தமது மனையாட்டியின் சல்லாபங்களில், அகப்பட்டுக்கொண்டு திருட்டுவிழி விழிக்கிறார். 

அதிகாரம் 24 – புண்ணாகச் செய்ததினி போதும் பராபரமே? 

சாம்பசிவத்தைத் தேடி அழைத்து வரும்பொருட்டு ரெங்கராஜு செங்கற்பட்டிற்கு அனுப்பப்பட்டபிறகு, கனகம்மாள் தனது நாட்டுப் பெண் சயனித்திருந்த தொட்டிலிற் கருகில் உட்கார்ந்து கொண்டு இமைகொட்டாமல் உற்று நோக்கி, தங்கம்மாளின் முகமாறுதல்களைக் கவனித்த வண்ணம், தலையில் வைத்த கையும், தடுமாறித் தவித்த மனதுமாய், சித்திரப்பதுமைபோல அசைவற்றிருந்தாள். அவளது சரீரம் சலனமற்று ஜடத்தன்மை அடைந்தவளாய்த் தோன்றினதேனும், அவளது மனதோ, அப்போதே கூண்டிலடைக்கப்பட்ட காட்டுக் கிளியைப்போலத்துடிதுடித்து அண்டபகிரண்டங்களுக் கெல்லாம் அரை நொடியில் சென்று திரும்பியது. ஆலகால விஷத்தைக் கொண்ட கொடிய நாகத்தினால் தீண்டப்பட்டவனது நிலைமை எவ்வாறிருக்குமோ அவ்வாறே அவளது நிலைமையும் இருந்தது. புற்றிலிருந்து கிளம்பும் ஈசலைப்போல, அவளது மனதில் வேதனைகள் ஊற்று நீராய்ப் பெருகிப் பொங்கின. அவள் தங்களது அப்போதைய நிலைமையைப் பற்றி எண்ணமிடலானாள்; மேனகாவைக் கலியாணம் செய்து கொடுத்து அவளைச் சென்னைக்கு அனுப்பிய நாள் முதல் அந்த நிமிஷம் வரையில் அவர்களது குடும்பத்திற்கு நேர்ந்த துன்பங்களெல்லாம் ஒன்றன் பின்னொன்றாக அவளது மனதாகிய அரங்கமேடையில் தோன்றி நடிக்க வாரம்பித்தன. புராதனமாக எவ்வளவோ செல்வத்திலும் செல்வாக்கிலும் இருந்து மானத்தோடு வாழ்ந்துவந்த தாங்கள் பலவிதத்திலும் இழிவடைந்து கடைசியில் மிகவும் அற்பத் தொகையான இருநூறு ரூபாய் இல்லாமையால் படும் பாட்டையும், விலையற்ற மாணிக்க மான தங்களது நாட்டுப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற யோக்கியதையற்றிருப்பதையும், நினைத்து உருகினாள்; சாம்பசிவம் வரும்வரையில், நாட்டுப்பெண்ணின் உயிர் நிற்கவேண்டுமே என்று கவலையுற்று சோர்ந்தாள். கைகளைப் பிசைந்துகொண்டாள்; எவ்விதத்திலாகிலும் சிறிய ஓசையுண்டானால், சாம்பசிவந்தான் வந்துவிட்டாரோ வென்று திடுக்கிட்டுத் திரும்பிநோக்குவாள்; கோவில் களிலுள்ள தெய்வங்களை எல்லாம் மனதால் வணங்கி வாயால் துதித்துக் கைகூப்பி வேண்டினாள்; தங்களது குலதெய்வமான திருப்பதி ஸ்ரீநீவாசப் பெருமாளை நினைத்தாள்; நிமிஷத்திற்கு நிமிஷம், ஒவ்வொரு வகையான புதிய காணிக்கை செலுத்துவதாக பிரார்த்தனை செய்து கொள்வாள்; “ஸ்ரீ நிவாசப் பெருமாளே! வெங்கடாசலபதி! இன்னமும் உன் மனது இறங்கவில்லையா! இந்த ஏழைகள் படும்பாடு உனக்குத் தெரியவில்லையா! ஐயோ எங்களால் சகிக்கக்கூடவில்லையே! போதுமப்பா! தெய்வமே! இனியாகிலும் உன்னுடைய கருணாகடாக்ஷம் எங்களுக்கு உண்டாகாதா! முதலில் இந்த டாக்டருடைய மனசில் புகுந்து என் நாட்டுப்பெண்ணின் உயிரைக் கொடுக்கமாட்டாயா! இவள் பிழைத்தவுடன், அழைத்துவந்து உன் கோவிலில் அங்கப் பிரதக்ஷணம் செய்து வைக்கிறேன். மாவிளக்கேற்றுகிறேன். இவளைப் போல தங்கத்தினால் சிலை செய்து கொண்டுவந்து வைக்கிறேன்; இவளுக்குக் குழந்தை பிறந்தால் அதற்கு உன்னுடைய கோவிலில் முடி இறக்குகிறேன். அப்பா வெங்கடாஜலபதி! ஸ்ரீ நிவாசப் பெருமாளே! அநாதையான எங்களை நீதான் காப்பாற்ற வேண்டும். எங்களுக்கு உன் துணையன்றி வேறு துணையில்லையப்பா! ஏ கிருபாநிதி! தயாநிதி! கருணாநிதி! எவ்விதமான சூதையும் கபடத்தையும் அறியாத என்னுடைய பையனுக்கு எவ்வித ஆபத்துமில்லாமல் கொண்டு வந்து சேர்த்துவிடப்பனே!” என்று பலவாறு வேண்டுதல் செய்து கொண்டாள். தஞ்சைக்கு அருகிலுள்ள மாரியம்மன் கோவிலென்னும் ஊரிலுள்ள வரப்பிரசாதியான மாரியம்மனை நினைத்து வேண்டினாள்; “மாரியம்மாத்தாயே! ஆயிரங் கண்ணுடைய என்னம்மணீ! பரதேவதை என் வீட்டு விளக்கை அவித்துவிடாதே தாயே! உன் கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றி வைக்கிறேன். இவள் பிழைத்தவுடன் உன் கோவில் பெரிய பிரகாரத்தில் அடிப்பிரதக்ஷணம் செய்து வைக்கிறேன்; இந்த ஏழை முகத்தைப் பாரம்மா! எங்கள் இ டரை யெல்லாம் நீக்கிவிடம்மா! கைநிறையப் பவுன்களாகவே காணிக்கை செலுத்துகிறேன்” என்று ஒவ்வொரு தெய்வமாக விளித்து உருக்கமாகப் பிரார்த்தித்துப் பணிந்தவளாய் உட்கார்ந்திருந்தாள். 

அன்றைக்கு முதல்நாளே வருவதாகச் சொன்ன சாம்பசிவம் என்ன காரணத்தினால் அதுகாறும் வரவில்லை யென்று எண்ணமிடலானாள். ஒருகால் பகற்கொள்ளைப் பாக்கம் நீலகண்ட செட்டியார் நமது ஊரில் இல்லையோ; அல்லது பத்திரம் எழுதிப் பதிவு செய்வதில் தாமதமோ; அல்லது பணத்தின் வருகைக்காக எதிர்பார்த்து அந்த ஊரிலேயே இருக்கிறாரோ; சாம்பசிவம் பணத்தை எடுத்து வரும்போது, கள்வர் அவரைக் கொன்றுவிட்டுப் பணத்தைப் பறித்துக் கொண்டிருப்பார்களோ; அல்லது தமது பெருத்த ஆபத்தையும், அவமானத்தையும் பொறுக்க மாட்டாமல் அவர் எங்காகிலும் தற்கொலை செய்துகொண்டாரோ; அல்லது லஞ்சம் வாங்கின குற்றத்திற்காக, தஞ்சை கலெக்டர் துரை, சாம்பசிவத்தை வாரண்டில் பிடித்து சிறைச்சாலையில் அடைத்து விட்டாரோ என்று எண்ணத்தை யெல்லாம் எண்ணி எதையும் நிச்சயமாக அறியமாட்டாமல் குழப்பமடைந்து தணல்மேல் புழுவெனத் தவிக்கிறாள்.பாடகர்கள் பலவகையான சங்கதிகள் போட்டுப் பாடிப்பாடித் திரும்பவும் பல்லவிக்கு வருதலைப்போல ஒவ்வொரு விஷயத்தையும் வெங்கடாசலபதி ஸ்தோத்திரத்தில் கொண்டுபோய் முடிப்பாள். இடையில் மேனகா வராகசாமி ஆகிய இருவரைப்பற்றி நினைவு உண்டாகும். மேனகா உயிரோடிருக்கிறாளோ அல்லது மண்ணுலகைத் துறந்து விட்டாளோ; உயிரோடு இருந்தால், புருஷன் வீட்டிற்கு வந்துவிட்டாளோ, அல்லது வேறு எங்கு தவிக்கிறாளோ என்று பலவாறு நினைத்து நினைத்து ஏங்கினாள். இராயப்பேட்டை வைத்திய சாலைக்குப் போய் வராகசாமியின் நிலையை அறிந்து வரும்படி கிட்டனை அடிக்கடி அனுப்புவாள். வராகசாமி முழங்காலில் ஆபரேஷன் செய்து தனிமையான அறையில் விடப்பட்டிருந்தமையால் அவனைப் பார்க்க அநுமதி கிடைக்கவில்லை யென்பதைத் தெரிவிப்பான் கிட்டன். அதிலிருந்து வராகசாமி உயிரோடு இருக்கிறான் என்பதை யூகித்துக்கொண்டு கனகம்மாள் சிறிது ஆறுதலடை வாள், தொளசிங்கப்பெருமாள் கோவில் தெருவிலிருந்த சாமாவையரிடம் சென்று மேனகாவைப்பற்றிய செய்தி ஏதேனும் கிடைத்ததா வென்பதை அறிந்து வரும்படி கிட்டனை அனுப்புவாள். அவன் அரை நாழிகையில் திரும்பி வந்து, அவளைப்பற்றி எவ்விதமான செய்தியும் கிடைக்க வில்லை யென்பான். 

அதைக் கேட்டவுடன் கனகம்மாள் பழைய பாட்டைத் துவக்குவாள்.”ஐயோ! என் குடும்பம் இப்படியா சீர்குலைந்து போகவேண்டும்! நாங்கள் யார் குடியைக் கெடுத்தோமோ! யார் சொத்தை அபகரித்தோமோ! யாரை அடித்து சித்தரவதை செய்தோமோ! அத்தனை பாவங்களும் ஒன்றாகச் சேர்ந்து வந்து ஒரே காலத்தில் அமுக்கி விட்டனவே! ஐயோ! தெய்வமே! இத்தனை ஆபத்துகளிலிருந்தும் நாங்கள் எப்படி மீளப் போகிறோம்! என் பிள்ளை வரவேண்டுமே; என் மேனகா வரவேண்டுமே; என் தங்கம் பிழைக்கவேண்டுமே; என் வராகசாமி பிழைக்கவேண்டுமே; என் மேனகா புருஷனோடு வாழ வேண்டுமே; போன உத்தியோகமும் மானமும் திரும்ப வேண்டுமே; இத்தனையும் கைகூடுமோ? இத்தனையும் மனித சகாயத்தால் ஆகக்கூடியவைகளோ? ஜெகதீசா! ஜெகத்ரக்ஷகா! ஸ்ரீ நிவாசா! மலைப்பெருமாளே! உன் கிருபை எங்களுக்கு உண்டாகுமோ? உன் கடாக்ஷம் எங்கள் மீது விழுமோ? நாங்கள் செய்த பிழைகளுக்கு இன்னம் தண்டனை முடிவடைய வில்லையோ? அற்பமான ஒரு கொசுவின் தலையில் மலையை வைப்பது போல பரம ஏழைகளாகிய எங்களை ஒரே காலத்தில் இத்தனை இடுக்கண்களும் சேர்ந்து அழுத்துவதை நாங்கள் எப்படிச் சகிப்போம்’ என்று கனகம்மாள் மேன்மேலும் பிரலாபித்து சுவாமியை வேண்டி வேண்டி விசனமே வடிவாய் ஆத்திரமே உருவாய் ஆவலே மயமாய் ஊணுறக்கமின்றி வாடித் தத்தளித்து உருகியிருந்தாள். 

முதல் இரண்டு நாட்களிலும் சவம் போலக் கிடந்த தங்கம்மாள் நன்றாக மூச்சு விடுத்து அப்போதைக்கப்போது முக்கி முனகத் தொடங்கினாள்; அதைக் கண்ட கனகம்மாள், அப்போதுதான் ஒரு வேளை உயிர் நிற்கப்போகிறதோ வென்று நினைத்துப் பெரிதும் அச்சமடைந்து கலங்கி, “தங்கம்! தங்கம்!” என்று மெல்லக் கூப்பிட்டாள். மறுமொழி கிடைக்கவில்லை. கண்ணும் திறக்கப்படவில்லை. கனகம்மாள் கைகளைப் பிசைந்து கொண்டாள். வேண்டுதல்களும், பிரலாபங்களும் முன்னிலும் அதிகரித்தன. தனது நாட்டுப் பெண் இனிப் பிழைக்கமாட்டாள் என்னும் நினைவு அவளது மனதில் தோன்றவே கண்ணீர் இருவிழிகளினின்றும் அருவிபோல வழிந்தது; சொற்கள் விசனத்தினால் திக்கித்திக்கி நடுங்கின. “ஐயோ தெய்வமே! இந்தப் பட்டணத்துச் சந்தியில் மனிதரில்லாமல் இப்படித் தவிக்க வேண்டுமா! ஈசுவரா! இது உன் கூத்தா! எனக்கு நல்ல பிள்ளை வந்து பிறந்தான்! பணமில்லாவிட்டாலும் பெண்டாட்டியையாவது கடைசி காலத்தில் பார்க்கக்கூடாதா! அடாடா! பாவி ஜென்மமே!’ என்று மனமுடைந்து சாம்பசிவத்தைத் தூற்றுவாள். இவ்வாறு அவளிருந்த நிலைமை மிகவும் பயங்கரமாகவும் கண்டோர் மனதிளகிக் கதறச் செய்யத்தக்கதாகவும் பரிதாபமாகவும் இருந்தன. 

மறுநாட்காலையில் மணி எட்டாயிற்று. வில்லியம்ஸ் திரும்பவும் வழக்கம்போல் பிரசன்னமானார். முதல்நாளைப்  போலவே அன்றைக்கும் அவரது வேலைக்காரன் காயங்களைக் கட்டுவதற்குத் தேவையான கருவிகளோடு வந்து சேர்ந்தான். துரையைக் கண்ட கனகம்மாளது மனதில் சிறிது தைரியமுண்டாயிற்று; விரைவாக எழுந்து மரியாதையாக அவரை வரவேற்றாள். அவளும், கிட்டனும் பரிதாபகரமாக நின்ற தோற்றமே ஆயிரம் நாக்குகள் கொண்டு அவரைக் கெஞ்சி மன்றாடி தங்கம்மாளைக் காப்பாற்றும்படி வேண்டுவதுபோல இருந்தது. கல்நெஞ்ச முடைய கிராதகரும் கண்டு இரங்கத் தக்க நிலைமையில் காணப்பட்ட அவர்களை வில்லியம்ஸ் துரை மிகவும் அலட்சியமாகப் பார்த்து, “என்னம்மா! பிள்ளை வந்துவிட்டாரா?” என்று புன்சிரிப் போடு புரளியாகக் கேட்டார். கனகம்மாள் அதற்கு எவ்வாறு மறுமொழி சொல்வதென்பதை உணராமல் இரண்டொரு நிமிஷம் சாதித்தபின், “அவன் வந்திருந்தால், நாங்கள் உடனே உங்களிடம் ஓடி வந்திருக்க மாட்டோமா? ஒரு நிமிஷம் தாமதிப்போமா? அங்கே அவனுக்கு என்ன ஆபத்து நேர்ந்ததோ என்னவோ தெரியவில்லை. அவனைத் தேடிக் கொண்டு போன சேவகனும் வரவில்லை. நீங்கள் தான் எப்படியாகிலும் தயவு செய்யவேண்டும். பெண்ணின் உயிர் போய்விடும்போலிருக் கிறது. எங்கள் மேல் இரக்கங்கொண்டு செய்யுங்கள்” என்று மென்மேலும் கெஞ்சி மன்றாடினாள். அவளது சொற்களைச் செவிகளில் வாங்காதவரைப்போலத் தோன்றிய துரை தங்கம்மாளுக்கருகில் நெருங்கி அவளது நாடியை ஆராய்ந்து பார்த்தார்; புண்களை அலம்பிச் சுத்தி செய்து மருந்து வைத்துக் கட்டச் செய்தார். 

பிறகு துரை கனகம்மாளைப் பார்த்து, “இந்த அம்மாள் பேசினாளா?” என்றார். அவள், “இல்லை” என்றாள். 

டாக்டர்:- கண்ணைத் திறந்தாளா? 

கனகம்மாள்:- இல்லை; ஆனால் அப்போதைக்கப்போது முக்கி முனகினாள். 

டாக்டர்:- சரி; நாமென்ன செய்யலாம். நீங்களோ அலட்சியமாக இருக்கிறீர்கள். தம்முடைய சம்சாரத்தின் ஆபத்தான நிலைமையை உணராமல் புருஷன் இப்படி இருப்பானா! இது ஆச்சரியமாக இருக்கிறது! பணத்தைப் பற்றிக் கூடநான் கவனிக்கவில்லை. பெண்ணுக்குப் போஷக (Guardian)னான புருஷன் பத்திரம் எழுதிக் கொடுக்கு முன் நான் இந்த அபாயகரமான ஆபரேஷனைச் செய்யக் கூடாது. ஆகையால், தயவாகவாவது தருமத்திற்காவது நான் ஆபரேஷன் செய்வதும் பிசகு. இந்த மாதிரியான ஆபரேஷனுக்கு நான் ஐந்நூறு ரூபாய்க்குக் குறையாமல் வாங்குவது வழக்கம். நீங்கள் சிபாரிசு கடிதம் கொண்டு வந்தபடியால், இருநூறு ரூபாய்க்கு ஒப்புக்கொண்டேன். அதுவும் ஒழுங்காக வராவிட்டால் நான் என்ன செய்கிறது? முதலிலேயே ஏழையென்று நீங்கள் சொல்லியிருந்தால், நான் பணம் கேட்டிருக்க மாட்டேன். நீங்கள் ஆசை காட்டி ஏமாற்றுகிறீர்களோ என்று இப்போது நினைக்க வேண்டி யிருக்கிறது. இப்படி அநேகர் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள். 

கனக: ஐயா!அப்படி நினைப்பது சரியல்ல. நாங்கள் அற்ப மனிதரல்ல. இரண்டு நாளைக்கு முன் எங்கள் வீட்டிலிருந்து கொள்ளைக்காரர் இருபதினாயிரம் ‘ரூபாய் கொண்டு போய்விட்டார்கள். இந்தப் பெண்ணின் உடம்பிலிருந்து மாத்திரம் ஐயாயிரம் ரூபாய் பெறும்படியான நகைகளைக் கொண்டு போய்விட்டார்கள். அந்த நகைகளை இவளுக்குப் போடாதிருந்தால் இந்த ஆபத்தே வந்திராது; சொன்னதை பாலியர்கள் கேட்கவில்லை. இப்போது புடவை கூட இரவல் புடவை கட்டும்படி நேர்ந்தது. என் பிள்ளையின் டிப்டி கலெக்டர் உத்தியோகமும் கொள்ளை நடந்த தினத்திலேயே போய்விட்டது. நான்கு நாளைக்கு முன் இவளுடைய பெண் காணாமல் போய்விட்டாள். காணாமல் போன பெண்ணின் புருஷன் மோட்டார் வண்டியில் அகப்பட்டு, இராயப்பேட்டை வைத்தியசாலையில் கிடக்கிறான். எங்களுக்கு இத்தனை ஆபத்துகள் ஒரே காலத்தில் வந்து விட்டன. இந்த ஆபரேஷனுக்கு நாங்கள் பணம் கடனாக வாங்கியே ஆகவேண்டும். எங்களுக்கு ஒரு வீடும் நிலமும் இருக்கின்றன. என் பிள்ளை அவைகளை அடமானம் வைத்துப் பணம் வாங்கிவரப் போயிருக்கிறான். பணந்தான் கிடைக்க வில்லையோ, அல்லது வாங்கிக்கொண்டு வந்த பணத்தை திருடர் வழிப்பறி செய்து கொண்டு போய்விட்டார்களோ என்னவோ தெரியவில்லை; போன சேவகனும் திரும்ப வில்லை. இன்றைக்குள் சேவகனாவது எப்படியும் வந்து விடுவான்; நீங்கள் தயவு செய்யுங்கள். 

டாக்டர்:- (சிறிது கோபங்கொண்டு) பணத்துக்காக மாத்திரம் நான் தாமதிக்கவில்லை யென்று எத்தனை தடவை சொல்லுகிறது. கார்டியன் பத்திரம் எழுதிக் கொடுக்கு முன், நான் ஆபரேஷன் செய்வது கூடவே கூடாது. ஆயிரத்தோரு தரம் சொல்லுகிறேன். 

கனக:- தானாக இவள்சாவதைவிட, இவளைப் பிழைக்கும் பொருட்டு நாம் செய்த முயற்சியால் இவள் சாவதனால் கெடுதல் இல்லை. இந்த விஷயத்தில் என் பிள்ளை உங்கள்மேல் தொடராமலிருக்கும்படி நான் பார்த்துக் கொள்கிறேன். அதற்கு நான் உத்தரவாதி; என் பிள்ளை சற்புத்திரன்; என் சொல்லை ஒரு நாளும் மீறமாட்டான்; பெண்ணுடைய உயிருக்கு ஆபத்து வந்தாலும் வரட்டும்; செய்யுங்கள் – என்றாள். 

துரையின் கோபம் முன்னிலும் அதிகரித்தது. “உன் சொல்படி அவர் கேட்பாரென்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது ஆகையால், இதைப்பற்றி திரும்பத் திரும்பச் சொல்வதில் பயனில்லை. வீணில் என்னை வதைத்தால், நான் இனிமேல் இங்கே வரமாட்டேன். தற்கால சாந்தியாக நான் கொடுத்து வரும் மருந்தையே இப்போதும் கொடுத்து விட்டுப் போகிறேன். உயிரோ போய்க் கொண்டே இருக்கிறது; முக்கால் பாகம் போய்விட்டது. இவள் ஒருகால் கண்ணைத் திறந்து பேசினாலும் பேசுவாள். அதுதான் மரண காலத்தின் அறிகுறி; ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, அதே மருந்தை உட்புறம் செலுத்தி விட்டு, துரை வெளியிற் போக எழுந்தார். 

அப்போது அந்த அறைக்குள் ஒரு தபால்காரன் நுழைந்து, “கனகம்மாள் யார்?” என்றான்; அவள், “நான்தான்” என்றாள். அவன் உடனே ஒரு கடிதத்தை எடுத்துக் நீட்டி, “ஒரு அணா கொடுக்க வேண்டும்; தலை ஒட்டப்படவில்லை” என்றான். உடனே கிட்டன் ஒரு அணாவைக் கொடுத்துவிட்டு, கடிதத்தை வாங்கிக்கொண்டான். தபாற்காரன் வெளியிற் போய் விட்டான். கடிதம் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு துரை சிறிது தயங்கி நின்றார். கிட்டன் கடிதத்தைப் பிரித்தான்; அது பென்சலால் விகாரமாக அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:- 

“நான் பட்டணத்திலிருந்து செங்கல்பட்டுக்கு வந்து பகற் கொள்ளைப்பாக்கத்திற்குப் போய் செட்டியாரைக் கண்டேன். எஜமான் வீட்டையும் நிலத்தையும் அவரிடம் அடமானம் வைத்து ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு முந்திய நாள் சாயுங்காலமே செங்கல்பட்டுக்கு வந்து விட்டதாக செட்டியார் சொன்னார். நான் உடனே செங்கல்பட்டுக்கு வந்தேன்; ரயிலடியிலும், செங்கல்பட்டு, நத்தம் முதலிய ஊர்களிலும் தேடினேன்; பலரிடம் விசாரித்தேன்; எஜமானைப்பற்றி செய்தி ஒன்றும் கிடைக்க வில்லை. போலீசாரிடமும் தெரிவித்தேன்; அவர்கள் ரயிலுக்கு வந்து அங்குள்ள சிப்பந்திகள், வண்டிக்காரர்கள் முதலியோரை விசாரித்தனர். கையில் பெருத்த பணமூட்டையோடு வந்த ஒரு ஐயர் இரவில் அகாலத்தில் வந்து பட்டணம் போக வேண்டு மென்று தவித்ததாகவும் குதிரை வண்டியாவது மோட்டார் வண்டியாவது பட்டணத்துக்கு வருமோவென்று அவர் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் அவர்கள் சொன்னார்கள். தவிர, மூன்றாவது வகுப்பு ஜனங்கள் தங்குமிடத்தில் நாதனில்லாமல் கிடந்த ஒரு துணியையும் ஸ்டேஷன் மாஸ்டர் போலீசாரிடம் ஒப்புவித்தார். அந்தத் துணியை நான் பார்த்தேன். அது நம்முடைய எஜமானரின் அங்கவஸ்திரந்தான். பணத்தோடு நம்முடைய எஜமானரைத் திருடர் தூக்கிக்கொண்டு போயிருப்பார்களோ, அல்லது அவர் திருடரைத் துரத்திக் கொண்டு போய்விட்டாரோ என்று போலீசார் பலவாறு யூகித்து, மேலும், விசாரணை செய்கிறார்கள்; விவரத்தை மறுபடியும் எழுதுகிறேன். இந்தக் கடிதத்தை இராத்திரியில் எழுதினே னாகையால் தபால் தலை ஒட்டாமல் போட்டேன். தங்கம்மாளை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள். ஆபரேஷன் செய்யும்படி டாக்டர் துரையிடம் கேட்டுக் கொள்ளுங்கள். 

இப்படிக்கு சேவகன், ரெங்கராஜு. 

என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தை கிட்டன் படிக்கக் கேட்ட கனகம்மாள் திக்பிரமை கொண்டாள். கிட்டனும் திகைப்படைந்தான். இருவரும் வாய்திறந்து பேச மாட்டாமல் ஊமைகளைப் போலாயினர். வில்லியம்ஸ் துரையின் முகம் மாறுதலடைந்தது. இந்தச் சிகிச்சையில், தமக்கு இருநூறு ரூபாய் கிடைக்குமென்று நம்பி யிருந்தார். தாம் இனிமேல் அங்கிருந்தால் ஆபரேஷனை இலவசமாக செய்யும்படி கனகம்மாள் வற்புறுத்துவாளென்று நினைத்தவ ராய், “சரி; நான் அவசரமாகப் போகவேண்டும். உங்களுடைய காரியங்களும், உங்களுக்கு வரும் ஆபத்துக்களும் வேடிக்கையாக இருக்கின்றன; எப்படியாவது செய்து கொள்ளுங்கள். நான் முடிவாக ஒரு வார்த்தை சொல்லுகிறேன். இந்த அம்மாளின் உயிர் இப்போது போகுமோ அடுத்த நிமிஷத்தில் போகுமோ என்று நினைக்கக்கூடிய நிலைமையிலிருக்கிறது. ஆபரேஷன் செய்வதை இனி ஒரு நிமிஷமும் நிறுத்தக் கூடாது. இந்த அம்மாளின் புருஷனோ காணாமல் போயிருக்கிறார். அவர் வருகிறவரையில் நாம் காத்திருக்க முடியாது. இந்தக் கடிதத்தை நான் ஆதாரமாக வைத்துக் கொள்ளுகிறேன். நீ உத்திரவாதியென்று பத்திரம் எழுதிக் கொடுத்தால் போதுமென்று ஒப்புக்கொள்கிறேன். இதனால் எனக்குத் துன்பம் நேரிட்டாலும் அதற்கு நான் உடன்படுகிறேன். அது ஒன்று தான் என்னால் செய்யக்கூடிய உதவி. அவரிடமிருந்து னி பணம் வராதென்பது இந்தக் கடிதத்திலிருந்து நிச்சயமாகத் தெரிந்துவிட்டது. உங்களுக்கு இந்த ஊரில் யாராவது சிநேகிதர்களாகிலும், பந்துக்களாகிலு மிருந்தால், அவர்களிடம் போய் பணத்தை மாத்திரம் நீங்கள் தயாரித்துக் கொண்டு வந்து விடுங்கள்; உடனே நான் காரியத்தை முடித்துவிடுகிறேன். நான் னிமேல் வேறு எவ்விதமான உதவியையும் செய்யமுடியாது. இ நான் இந்த இடத்துக்கு வேளைக்கு வேளை வந்து கொண்டிருக்க முடியாது; இப்போது நான் எத்தனையோ வேலைகளைக் கெடுத்துக் கொண்டு வருகிறேன். இதுவரையில் எனக்கு உங்களால் செலுத்தப்படவேண்டியது ரூபாய் ஐம்பதுக்கு மேலாகிறது. நான் சொல்லக்கூடியதைச் சொல்லிவிட்டேன்; இனி உங்கள் இச்சைப்படி செய்யுங்கள்” என்று கூறிக் கொண்டே வெளியிற் போய்விட்டார். 

அந்த வில்லியம்ஸ் துரையின் சொற்களைக் கேட்ட கனகம்மாள் எதையும் சொல்லமாட்டாமல் திகைத்து நின்றாள். அதுகாறும் சாம்பசிவம் பத்திரம் எழுதிக் கொடுப்பதே முதன்மையான காரியமென்றும், அதனாலேதான் ஆபரேஷன் செய்யப்படவில்லை யென்றும் சொல்லிவந்த துரை, அப்போது பணத்திற்கு முதன்மை கொடுத்துப் பேசினதைக் கண்டு, மேலே என்ன செய்வதென்பதையறியாமல் மதிமயக்கங்கொண்டு கால் நாழிகை நேரம் வரையில் ஓய்ந்து உட்கார்ந்திருந்தாள்; தங்களுக்கு மேன்மேலும் புதிய துன்பங்கள் வந்துகொண்டே ருப்பதை நினைத்து, தமது கதி கடைசியில் எவ்வாறாகுமோ வென்று ஐயமுற்று மனமாழ்கினாள்; பணத்தோடு காணாமற் போன சாம்பசிவத்தைப் பற்றியே பெரிதும் கவலைக் கொண்டாள். உத்தியோகம்,செல்வம் முதலிய எல்லாம் ஒழியினும், தனது புத்திரன், நாட்டுப்பெண் முதலியோர் உயிருடனிருப்பதே பெரிய பாக்கியமென்று நினைத்த நினைவில் ஈசுவரன் மண்ணைப் போட்டுவிடுவனோ வென்று நினைத்தாள். முறையே சாம்பசிவம், தங்கம்மாள், மேனகா, வராகசாமி ஆகிய நால்வரைப் பற்றியும் நினைத்துக் கவலை கொண்டு கலங்கி வாய் பேசா ஊமையாய் சுவரோடு சுவராக ஒன்றி உட்கார்ந்திருந்தாள். அவளது நிலைமையைக் கண்ட கிட்டன் மிகவும் அச்சங்கொண்டு, “பாட்டி! பாட்டி!உடம்பு என்ன செய்கிறது?” என்று கேட்டான். அவள் சித்தபிரமை கொண்டவளைப் போலக் கண்களை உருட்டி உருட்டி விழித்து மறுமொழி கூறாமலிருப்பாள். கனகம்மாளே முதலில் இறந்து போய்விடுவாளோ வென்று நினைத்துப் பதறுவான் கிட்டன். கனகம்மாள், தங்கம்மாள் இருவரையும் படுக்க வைத்துவிட்டு, தான் என்ன செய்வதென்பதை நினைத்து அவன் பெரிதும் கலக்கமடைந்து தவிப்பான்; அவ்வூரில் சாம்பசிவத்துக்கு அறிமுகமானவர்களிட மெல்லாம் சென்று தங்களது நிலைமையைத் தெரிவித்து, கடனாகப் பணம் கொடுக்கும்படி கேட்டு வெறுங் கையோடு திரும்பினான். பணம் கிடைக்க வில்லை யென்பதைக் கேட்ட கனகம்மாளது மனக்குழப்பம் பெருங் குழப்பமாயிற்று. தங்கம்மாளோ கண்களைத் திறப்பதும் மூடுவதுமா யிருந்தாள்; மூச்சும் அடிக்கடி பெரு மூச்சாக வந்துகொண்டிருந்தது. முகத்திலும் நல்ல களை உண்டாயிற்று. அவளது முகத்தின் மாறுதல்களை கனகம்மாள் ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். அம்மாதிரி யான சின்னங்கள் தோன்றுவது கெடுதலென்று டாக்டர் சொன்னது அவளது நினைவிற்கு வந்தது. தங்கம்மாளின் உயிர் சமீபகாலத்தில் போகப் போகிறதென்று நினைத்தாள்; கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது; அவள் உடனே தனது மார்பில் அடித்துக் கொண்டாள். “ஐயோ! என் பாக்கியமே! நீயும் போகிறாயா? போ ; போ; பாவிகளாகிய நாங்கள் கொடுத்து வைத்தது இவ்வளவு தான்; எல்லாம் போய்விட்டது; இனிமேல் என்ன இருக்கிறது; எல்லோரையும் தின்று விட்டு ஜாம்பவானைப்போல நான் மாத்திரம் ஆயிரங்காலம் ருக்கவேண்டுமா? நானும் கிணற்றில் விழுந்து உயிரை விட்டு விடுகிறேன்; என் குடும்பம் அடியோடு பூண்டற்றுப் போகட்டும்” என்று பலவாறு பிரலாபித்தழுத சமயத்தில் தங்கம்மாள் வாயைத் திறந்து, “தாகமா யிருக்கிறது” என்றாள். அந்தக் குரல் கிணற்றிற்குள்ளிருந்து உண்டானதைப் போலத் தோன்றியது. அவள்தான் பேசினாளோ அல்லது வேறு எவளாகிலும் பேசினாளோ என்னும் சந்தேகம் உண்டாயிற்று. கனகம்மாள் வியப்பும் திகைப்பும் அடைந்தாள்; டாக்டர்துரை, சொன்னது நிஜமாயிற்றென்று நினைத்தாள்; தங்கம்மாளுக்கு மரணகாலம் வந்துவிட்டதென்று எண்ணினாள் என்றாலும் அவளுக்குத் தண்ணீராகிலும் கொடுத்து அவளது கடைசி ஆசையைப் பூர்த்தி செய்வோ மென்று நினைத்தாள்; ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அவளது வாயில் வைத்தாள். தங்கம்மாள் மிகுந்த ஆவலோடு சிறிதளவு தண்ணீர் பருகினாள். அடுத்த நொடியில், அவளது கண்கள் மூடிக்கொண்டன. அவள் அயர்ந்து பிணம்போலானாள். அதைக் கண்ட கனகம்மாள் கோவெனக் கதறியழத் தொடங்கி, “ஐயோ! தங்கமே! கடைசித் தண்ணீர் குடித்து விட்டுப் போகிறாயோ! இனிமேல் கண்ணைத் திறக்க மாட்டாயோ! பாழாய்ப்போன அந்த எமன் உன்னைக் கொண்டுபோகத் துணிந்தானே!’ என்று மேன்மேலும் பெருங்கூச்சலிட்டு ஒப்பாரி வைத்தழுதாள். அதைக் கண்ட கிட்டனும் வாய்விட்டுக் கதறத் தொடங்கினான். அந்த விபரீதக் கூக்குரலைக் கேட்டு வெளியிலிருந்த ஜனங்களும் வந்து கூடி, தங்கம்மாள் பரிதாபகரமாகக் கிடந்ததைக் கண்டு விசனித்து நின்றனர். 

அந்தச் சமயத்தில் ஒரு தபாற் சேவகன் அவளிடத்தில் தோன்றி கனகம்மாள் யாரென்று உரக்கக் கேட்டான்; அதைக் கேட்ட யாவரும் திடுக்கிட்டு அவனது பக்கம் திரும்பினார்கள். கனகம்மாள் கிட்டன் ஆகிய இருவரும் தமது அழுகையைச் சட்டென்று நிறுத்தி அவன் என்ன சொல்லப் போகிறானோ வென்று ஆவலோடு அவனது முகத்தைப் பார்த்தனர். 

அவன், “கனகம்மாள் யார்?” என்று ன்னொரு முறை கேட்க அவள், “நான்தான்” என்றாள். 

அங்கிருந்த ஜனங்கள் யாவருக்கும் அந்த ஒரு நொடியும் ஒரு யுகமாய்த் தோன்றியது. அப்பொழுது தபாற்காரன், ‘உனக்கு முன்னூறு ரூபாய் தந்தி மணியார்டர் வந்திருக்கிறது; கையெழுத்துப் போடத் தெரியுமா?” என்றான். 

கனகம்மாள் தனது செவிகளை நம்பாமல் திகைத்தவளாய், “தெரியும்” என்றாள். அவன் உடனே அவளுக்கருகில் உட்கார்ந்து அவளது கையெழுத்தையும் இரண்டு சாட்சிகளின் கையெழுத்துக்களையும் வாங்கிக்கொண்டு முன்னூறு ரூபாய் எண்ணி அவளிடம் கொடுத்து விட்டு எழுந்து வெளியில் போய்விட்டான். அந்தப் பணம் யாரால் அனுப்பப்பட்ட தென்பதையும் கேட்காமலிருந்த கனகம்மாள் பணத்தை ஒரு பக்கத்தில் போட்டு விட்டு மேலும் அழத்தொடங்கினாள். ”இந்தப்பணம் இரண்டு நாழிகைக்கு முன் வந்திருக்கக் கூடாதா? உயிர் போனபின் எதற்காக வந்ததோ?” என்று கதறியழுதாள். அந்தப் பரிதாபகரமான நிலைமையைக் கண்ட ஜனங்கள் யாவரும் மிகவும் இரங்கி விசனித்து அவ்விடத்தை விட்டுப் போக மனமற்று நின்றனர். அவ்வாறு அரை நாழிகை சென்றது; கூட்டத்திலிருந்த ஒரு பெண்பிள்ளை தங்கம்மாள் கிடந்த தொட்டிலிற்கருகில் நெருங்கி அவளை உற்று நோக்கி; “என்ன அம்மா மூச்சு வருகிறதே! அழுகிறீர்களே!’ என்றாள். அதைக் கேட்ட யாவரும் வியப்படைந்து அருகில் நெருங்கிப் பார்த்தனர். கனகம்மாளும் உற்று நோக்கினாள். மூச்சு மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தது; உடனே கனகம்மாள் விரைவாகக் கிட்டனை அழைத்து இருநூற்றைம்பது ரூபாயை எடுத்துக்கொண்டு ஓடி டாக்டரிடம் கொடுத்து அவரை உடனே அழைத்துக் கொண்டு வரும்படி கூறவே, கிட்டன் அவ்வாறே பணத்தை எடுத்துக் கொண்டு வெளியிற் சென்று ஒரு குதிரை வண்டியில் ஏறிக்கொண்டு காற்றாகப் பறந்து மறைந்து போனான். 

அப்பொழுது தங்கம்மாளுக்கு மூச்சு வருவதும் நிற்பதுமாக இருந்தது.டாக்டர் உடனே வருவாரோ என்றும், அதுவரையில் உயிர் நிற்க வேண்டுமே என்றும் கனகம்மாளும் மற்ற ஜனங்களும் நினைத்துப் பேராவல் கொண்டு நெருப்பின் மேல் கிடக்கும் புழுவெனத்துடித்தனர். அவ்வாறு ஒரு நாழிகை நேரம் கழிந்தது. கிட்டன் ஓடி வந்தான். டாக்டரை எப்போது காண்போமென்று ஆவல் கொண்டிருந்த ஜனங்கள் யாவரும் அவர் வருகிறாரா என்று பார்த்தனர். அவர்காணப்படவில்லை. ஒருகால் அவர் பின்னால் வருவாரோ வென்று நினைத்து யாவரும் கிட்டனது முகத்தை நோக்கினார்கள். அவனது முகம் மிகுந்த சந்தோஷத்தைக் காண்பித்தது. என்றாலும், அந்த ஒரு நிமிஷத்தில் கனகம்மாளின் ஹிருதயம் படீரென்று வெடித்துப் போகும் நிலைமையிலிருந்தது. அவள் கிட்டனது முகத்தைப் பார்த்து, “எங்கே அவர்?” என்றாள். கிட்டன் சந்தோஷத்தோடு, “பாட்டீ ! பயப்படாதே; அக்காள் பிழைத்துக் கொண்டாள்’ என்றான். அதைக் கேட்ட கனகம்மாளுக்கு ஒன்றும் தெளிவாகத் தோன்றவில்லை. அவன் மூடத்தனமாக ஏதோ உளறுவதாக அவள் நினைத்தாள். டாக்டர் வரவில்லை யென்ற ஆத்திரம் ஒரு புறம் பொங்கி எழுந்தது. உடனே அவள், “என்னடா உளறுகிறாய்? டாக்டர் எங்கே?” என்று வினவினாள்.கிட்டன், ”அவர் வரவில்லை. நாம் இந்த ஊருக்கு வந்த அன்றைக்கே டாக்டர் தம்முடைய வீட்டிலேயே ஆபரேஷனைச் செய்து விட்டாராம்; பணம் வரவில்லையே என்ற நினைவினால், உண்மையை நம்மிடம் சொல்லாமல் இதுவரையில் மறைத்து வைத்திருந்தாராம். தங்கம்மாள் எழுந்திருக்காமல் இருப் பதற்கும், உடம்பின் நோயை உணராமல் இருப்பதற்கும் இதுவரையில் ஒரு வகையான மயக்க மருந்தைக் கொடுத்து வைத்திருந்தாராம். அவர் இப்போது இன்னொரு மருந்தை அனுப்பி யிருக்கிறார். அதைக் கொடுத்தால், எல்லாம் சரியாய்ப் போகுமாம்” என்ற கூறியவண்ணம் தமது கையில் வைத்திருந்த ஒரு மருந்தை உடனே தங்கம்மாளின் வாயில் ஊற்றினான். அவன் சொன்ன விநோதமான வரலாற்றைக் கேட்ட கனகம்மாளும் மற்ற ஜனங்களும் அப்படியே திகைத்து வியப்படைந்து கல்லாய்ச் சமைந்து நின்றனர். அவ்வாறு ஐந்து நிமிஷ நேரம் சென்றது. தங்கம்மாளின் முகத்தில் ஒரு வகையான மாறுபாடு தோன்றியது; இரத்த ஓட்டமும் அழகும் திரும்பின. அவள் தூங்கி விழிப்பவளைப்போல தனது கண்களைத்தெளிவாகத் திறந்து கொண்டு, “இது எந்த இடம்?” என்றாள். அடுத்த நிமிஷம் அவள் தனது உடம்பை அப்புறம் இப்புறம் திருப்பி எழுந்து திண்டில் சாய்ந்துகொண்டு நாற்புறங்களையும் வியப்போடு பார்த்துக் கனகம்மாளை நோக்கி, “உங்களுடைய பிள்ளை எங்கே?” என்றாள்.

– தொடரும்…

– மனோரஞ்சிதம் என்னும் இதழில் இந்நாவல் வெளிவந்தது. மேனகா நாவலை ஒட்டி 1935-ம் ஆண்டு மேனகா என்னும் திரைப்படம் எடுக்கப்பட்டது

– மேனகா (நாவல்) – இரண்டாம் பாகம், முதற் பதிப்பு: 2004, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *