கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 10, 2024
பார்வையிட்டோர்: 594 
 
 

(1920களில் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிகாரம் 17(தொடர்ச்சி…)-18 | அதிகாரம் 19-21 | அதிகாரம் 22-24

அதிகாரம் 19 – மலையாள பகவதி 

அந்த வண்டியில் ஏறுமுன் அப்பெண்பாவை பல வண்டிகளை ஆராய்ந்துகொண்டே வந்தாள். தான் தனிமையாகச் செல்லுவதால் அவள் வெற்று வண்டி யில் ஏற் அஞ்சினாள். மனிதர் இருந்த வண்டிகளில் பார்வைக்கு அருவருப்பை உண்டாக்காத, திருப்திகரமான சகாப்பிரயாணி எந்த வண்டியில் இருக்கிறான் என்று ஆராய்ந்து சாமா வையரைக் கண்ணுற்றாள்.உடனே அவளது மனதில், அந்த வண்டியிலேயே ஏற வேண்டு மென்னும் ஒரு விருப்பம் உண்டானது. நமது சாமாவையரது தோற்றத்தை வருணித்துச் சொல்வது மிகையல்லவா! அவர் ஆண்பாலார் பெண்பாலார். ஆகிய இருதிறத்தாரும் கண்டு, முதல் பார்வையிலேயே மோகம் கொள்ளத் தகுந்த சுந்தரவடிவினர். உருண்டு, திரண்டு, மன்மதகாரமான சிவந்த மேனியின் தளதளப்பும், பரந்த வட்டவடிவமான வதனமும், வெள்ளைக் கடுக்கனும், ஜரிகை வஸ்திரங்களும் பட்டு உருமாலையும், தங்கக்கொடியில் தொங்கிய ஒற்றை உருத்திராட்சமும், மோதிரங்களும் ஒன்று கூடி கம்பீரத் தோற்றத்தையும் பெரிய மனிதத்தன்மையையும் உண்டாக்கி, காண்போரை வசீகரித்தன. அவரைக் கண்டு உள்ளூற மகிழ்ச்சிகொண்ட கமலம், வண்டி புறப்பட்டபின் மிகவும் நாணத்தைக் காண்பித்து, கடைசியாக விடை பெற்றுக்கொள்ள வெளியில் நீட்டிய தனது சிரத்தை உட்புறம் இழுத்துக்கொள்ளாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள். அவளது கரத்தில் வெற்றிலை பாக்கு நிறைந்த பையூர் பிரம்புச் சாயப்பெட்டியொன்றிருந்தது. அவள்கதவிற்கருகில் உட்கார்ந் திருந்தாள். சாமாவையர் அவளுக்கு எதிர்ப்புறப் பலகையின் கடைசியில் உட்கார்ந்து சாய்ந்துகொண்டு, அவளிருந்த கதவு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தார். முதலில் சாமாவையர், அந்தப்பெண்ணும் அவளுடன் வந்த மனிதனும் ஏறப்போவதாக நினைத்து, ஒருவாறு அருவருப்புற்றிருந்தார். ஆனால், பெண் மாத்திரம் தனிமையில் தம்முடன் திருவாரூர் வரையில் வருகிறாள் என்பதை உணர, அவரது மனம் பெருங்களிப் படைந்து, இனிமையே வடிவாகத் தோன்றிய அப்பெண்ணழகி அந்த இரவில் தம்முடன் இருப்பதைப்பற்றி ஆநந்தங் கொண்டார். 

மேல் நிகழவிருக்கும் சம்பவங்களைக் கூறப்போகுமுன், அந்தப் பெண்ணின் வயது, தோற்றம் முதலிய விவரங்களைச் சிறிதளவு விளக்குவது அவசியமாகிறது. அவளது வயது பதினாறு அல்லது பதினேழு என்று மதிக்கலாம். நல்ல பக்குவ காலத்தின் எழிலும் ஒளியும் இனிமையும் ஒன்றாக விகசித்து விரிந்து உன்னத நிலையிலிருந்து கண்டோர் கண்களையும் மனதையும் கொள்ளைகொண்டன. நடுத்தரமான உயரமும் பருமனும் கொண்ட அவளது மேனி பத்தரைமாற்றுப் பைம்பொன்னோ, எலுமிச்சைப் பழமோ தந்தமோ வென்று ஐயுறும் அழகிய நிறத்தை உடையதாயிருந்தது. நகம் முதல் சிகம் வரையிலுள்ள ஒவ்வொரு அங்கமும் அச்சில் கடைந்து பொருத்தப்பட்டதைப்போல அற்புதமாயும், இலட்சணப் பழுதின்றியும், குற்றங்கூறுதற் கிடமின்றியும் அமைந்திருந்தது. நீலம் பச்சை முதலிய பலவிதமான நிறங்களையும், நீரோட்டத்தையும் சொரியும் சில நட்சத்திரங்களைப்போல அவளது வதனத்தில் வசீகரமும் களையும் ஜிலுஜிலென்று வீசின. தந்தத் தகட்டைப்போலிருந்த நெற்றியும், கறுத்ததடர்ந்த புருவ விற்களும், பெருத்த சுத்தமான நீலோற் பல விழிகளும், மாதுளம்பூவின் செவ்விய நிறத்தைக் கொண்டு தேன்கசிந்த தீங்கனிப்போலப் பிளவுபட்ட அதரங்களும் நல்முத்தின் பதிப்பைப்போல வொளிர்ந்த பற்களும் ஒன்றுகூடி, அது முகமோ, அல்லது காண்போர் மதியை மயக்கி, மனதை வதைத்து பித்தமுறச்செய்யும் மந்திர உச்சாடனச் சக்கரமோ, மன்மதவேளின் பாணங்களது அணிவகுப்போ வெனத் தோன்றியது. நெற்றியின் உச்சியில் தொடங்கி வளைந்து வளைந்து பாலத்தின் கண்களைப்போல இரு புறங்களிலும் அற்புதமான வேலைப்பாடு தோன்ற இயற்கையில் சென்றிருந்த கருங்கூந்தலின் கற்றையை வாரிப் பின்னலிட்டு, தேருருளையோ அல்லது திண்டோவெனத் தோன்ற வளைந்து, ரோஜா, மல்லிகை முதலிய மலர்களால் அதை அலங்கரித்தாள். இருபுருவ விற்களி னிடையிலிருந்த திலகமண்டலத்தில் மூன்றாம் பிறை தவழ்ந்ததைப்போல ஜவ்வாதினால் கீற்றிட்டு, இரண்டு விற்களையும் ஒன்றாய்ச் சேர்த்திருந்தாள். கயல் மீனிலும் அதிகரித்த சுறுசுறுப்பும் பிறழ்ச்சியும் கொண்ட கண்களில் கரிய மை தீட்டப்பட்டிருந்தது. செவிகளிலிருந்த வைரக் கம்மல்களும், அவற்றைக் கேசத்தோடு இணைத்த வைரமாட்டல்களும் ‘சுடர் விட்டெரிந்தன. கரை காணாது கடல்களில் தவிக்கும் கப்பல்களை தீப ஸ்தம்பத்திலுள்ள பெருஞ்ஜோதி கைகாட்டி அழைப்பதுபோல அவளது நாசியின்மீதிருந்த ஒற்றை வைரக்கல் தனது கிரணக் கற்றைகளான கரங்களை விரித்து, அண்டுவோர்க் கெல்லாம் அபயஸ்தம் காட்டி யழைத்தது. ரோஜாப்பூவை பச்சையான தழ்கள் மறைத்திருப்பதைப்போல அவள் தனது மேனியில் ஜரிகைப் புட்டாக்கள் அணிந்திருந்தாள். இடையிலிருந்த தங்க ஒட்டியாணம் அவளது தேக அமைப்பை ஆயிரம் மடங்கு கு வனப்பித்துக் காட்டியது. உச்சி முதல் உள்ளங்கால் வரையில் இயற்கையழகும் செயற்கையழகும் ஒன்றுபட்டிழைந்து ஜ்வலிக்க, அவள் அப்படியே மணப்பந்தலில் உட்கார ஆயத்தமாக வந்துள்ள புதிய சோபனப் பெண்ணைப்போல யௌவனமும், புதுமையும், கட்டழகும் நிருத்தனம் செய்ய, நவரத்தினங்களை மலர்களாய் ஏந்திய பூங்கொம்பைப்போல அவளிடம் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பென்னும் பெண் குணம் பொலிந்தனவாயினும், அக்குணங்கள் காண்போர் மனதைச் சின்னாபின்னமாக்கிச் சீர்குலைத்து, அவரது நினைவை அவள்மீது திருப்பினவன்றி அமைதியுண்டாக்க வில்லை. அவள் இயற்கையில் நாணமுடையவளா யிருந்தா ளேனும், அவளது கூரிய கண்கள் கபடமாக அங்கு மிங்கும் கடைக்கணித்து அண்டையில் இருந்தோரைப் பற்றி விவரங்களை விரைவில் கிரகித்தன. ஆதலின், அந்த நாணம் குடும்ப ஸ்திரீகளின் களங்கமற்ற நாணமாகத் தோன்றவில்லை. அவள் தன் வலது கையின் மணிக்கட்டில் ஒருசிறிய கடிகாரத்தைக் கட்டிக்கொண்டிருந்தது அவள் புது நாகரீக மறிந்த பெண்ணென்பதைக் காட்டியது. அன்னிய மனிதருக்கருகிலிருந்தலால் பயிர்ப்பைக் காட்டும் பதிவிரதா ஸ்திரீகளைவிட அதிகமாக அவள் மேனியின் நெளிப்பையும், அமைதி யின்மையையும் காட்டி உடைகளையும் ஆபரணங்களையும் நொடிக்கு நூறுமுறை சீர்திருத்திக் கொண்டாள். 

அவள் அறிந்தோ அறியாமலோ தொடுத்த அத்தனை பசுமரத் அம்புகளும் விலக்கவொண்ணாவகையில் தாணிபோல் சாமாவையரது உள்ளத்திற் பதிந்து ஊடுருவிச் சென்றன. ஆதலின், அவரது பாடு தொல்லையாய் முடிந்தது. முதலில் அவள் தனிமையில் தம்முடன் வரப்போவதாக உணர்ந்தவுடனே அவரது மனதில் ஒருவித இன்பமும், அமரிக்கையின்மையும், லஜ்ஜையும் சுரந்தன. அவளோடு வந்த மனிதன் அவளைத் தமது பாதுகாப்பில் ஒப்புவித்த பிறகோ, அவரது மநோவேதனை மலையாக வளர்ந்து அனர்த்தம் செய்யத் தொடங்கியது. சகிக்கவொண்ணாத ஒருவகை இன்பமும், துன்பமும் ஒருங்கே எழுந்து, அவரது மனதைப் புண்படுத்த ஆரம்பித்தன. அவள் யாவளோ வென்பதை முதலில் அறிய அவரது மனம் பதறியது; அவளது அதிகரித்த நாணத்தைக் கண்டு, அவள் குடும்ப ஸ்திரீயே யென்று நினைத்துக்கொண்டார். மாணிக்கக் கட்டியோ, கற்கண்டுக் கட்டியோவெனத் தோன்றிய அந்தக் கந்தருவ மங்கை வேறு எவனுக்காயினும் தன்னை அர்ப்பணம் செய்து விட்டவளோ வென்பதை யறிய, அவளது கழுத்தில் தாலி இருக்கிறதோ வென்று உற்று நோக்கினார். காசுமாலை, வைர அட்டிகை, கடியாரச் சங்கிலி முதலியவை அவளது அழகிய மார்பில் காணப்பட்டனவன்றி, மாங்கலியம் காணப்படவில்லை. 

அவள் திருவாரூருக்குச் செல்பவளென்பதையும், அவளது பெயர் கமலமென்பதையும் சந்தேகமற உணர்ந்தார். அந்த ஊர் அவளது பிறந்தவிடமோ அல்லது புகுந்தவிடமோ என்பதே அவரது சந்தேகமாய் வதைத்தது. கோடீசுவரனது செல்வப் புதல்வியைப் போலக்காணப்பட்ட அந்த யௌவன மின்னாள் நடு இரவில் தனியாகப் பிரயாணம் செய்யத் துணிந்ததே அவருக்குப் பெருத்த விந்தையாக இருந்தது. பாலியப் பருவத்தினரான சாமாவையர் என்ன செய்வார்? ஏதோ பெருத்த விபத்தில் அகப்பட்டவரைப்போலத் தமது மதியை இழந்து தவிக்கிறார். தீயின்மேல் வெண்ணெயென உருகி உட்கார்ந்து போனார். அவளது ஒவ்வொரு அங்கத்தையும் பார்த்து அதன் அழகிலேயே ஈடுபட்டு, தேனில் வீழ்ந்த ஈயைப்போலத் திகைத்து வாயைப்பிளந்து அசைவற்று உட்கார்ந்து ஏங்கினார். அவள் வெளிப்புரத்தில் விட்டிருந்த தனது முகத்தை எப்போது உட்புறம் வாங்கித் திரும்புவாளோ வென்றும், அதை எப்போது கண்ணாரக் கண்டு மனதார உண்டு களிக்கலாமோ வென்றும் ஆவல் கொண்டு பதறினார். அதுகாறும் பொன்னாசையில் நெடுந்தூரஞ் சென்றிருந்த அவரது மனதை அந்தப் பெண்ணாசையில் மிகுந்த உரத்தோடு தாக்கித் திரும்பியது. அந்த அதிர்ச்சியினால் அவரது மனவுரமும் தரித்திரக் குணமும் சிதறிப்போயின. உள்ளமும் உடம்பும் நெகிழ்வடைந்து, தயாள குணமும் கண்ணிய புத்தியும் உண்டாயின. அவள் திருவாரூரில் இறங்கிப்போவதற்குள் அவளுடன் ஒரு சொல்லாயினும் பேசாவிடில் தமது ஜென்மம் கடைத்தேறாதென வெண்ணினார். தம்மை புலியோ கரடியோ வென்று நினைத்து அஞ்சி, பிடிவாதமாய் தனது முகத்தை வெளியில் வைத்துக் கொண்டிருந்த அந்த மங்கையுடன் தாம் எதைக் குறித்துப் பேசுவது என்பதையும் எப்படிப் பேசுவது என்பதையும் அறியாதவராய் மிகவும் தத்தளித்தார். அவரது மனோவேதனையை ஒரு சிறிதும் அறியாத துஷ்ட ரயில்வண்டி கிடுகிடு குடு குடு கிலு கிலு குலு குலுவென்று தாளம், மத்தளம், கஞ்சிரா முதலிய வாத்தியங்களின் முழக்கங்களைச் செய்து காண்டு ஓடி திருவாரூருக்கும் அதற்குமுள்ள இடைத் தூரத்தைக் குறைத்துக்கொண்டே யிருந்தது. அவர்களிருந்த ரயில் வண்டி ஒரு கட்டிலைப்போலவும், நீல நிறத்தைக் கொண்ட களங்கமற்ற ஆகாயப் பரப்பு, அக்கட்டிலின் மேல் விரித்த அஸ்மான கிரிபோலவும் காணப்பட்டன. ஆகாயத்தில் அதிவேகமாக யோடிய சந்திரன் சாமவையரைப் பார்த்து, “ஓய்! ஐயரே! நீ நினைக்கும் திருட்டு நினைவை நான் நன்றாக அறிந்துகொண்டேன். இதோ ஓடிப்போய் இந்த விஷயத்தை உம்முடைய மனைவி மீனாட்சியம்மாளிடம் சொல்லி விடுகிறேன். பாரும்” என்ற கூறி, அவரை மிரட்டுவதைப்போல இருந்தது. ரயில் வண்டியிலிருந்த மற்ற யாவருக்கும் அந்தக் குளிர்மாமதி இனிமையையும்; சுகத்தையும் குளிர்ச்சியையும், அமுதத் துளிகளையும் வாரி வாரி வழங்கினதாயினும், என்ன காரணத்தினாலோ சாமாவையர் ஒருவரிடம் மாத்திரம் வருமம் பாராட்டி, அவர்மீது நெருப்பு மழை பொழிந்து அவரது தேகத்தைச் சுட்டெரித்தது. நிலவு பகலைப் போலவும் பாலைப்போலவும் எங்கும் தவழ்ந்தது. இரு புறங்களிலும் செழித்து வளர்ந்திருந்த நெற்பயிர், ஒவ்வொரு படி நெல்லைக் கொண்ட கதிர்களைச் சுமந்து தென்றற் காற்றிலசைந்து ஒலித்துக் கீழே சாய்ந்தது. “சாமாவையரே! உம்மைப் பார்க்கவும் கண் கூசுகிறதே!” என்று ஓலமிட்டு வெட்கத்தினால் தலையைக் கீழே தாழ்த்திக் கொள்வதுபோ லிருந்தது. இடையிடையே தோன்றிய தென்னஞ்சோலைகளிலும், மாஞ்சோலைகளிலும், குயில் முதலிய பறவைகளும் ஏனைய ஜெந்துகளும் இயக்க மொடுங்கியவையாய் உணர்வற்று துறவிகளைப்போலப் பரம்பொருளி லீடுபட்டு, மெல்ல வீசிய தென்றலால் தாலாட்டப்பட்டு சிற்றாறுகள், நீரோடைகள் முதலியவற்றி லுண்டான சங்கீத வொலியால் மயங்கி அநந்தத் துயிலில் ஆழ்ந்திருந்தன வாயினும் சாமாவையரது வருகையால் திடுக்கிட்டு விழித்து அவரது நடத்தையைக் கண்டு பொறாமல் சிலும்பின. தென்னந் தோப்புகள் இளநீர்க் குலைகளால் அலங்கரிக்கப்பட்ட கலியாணப் பந்தலைப்போலவிருந்தன. அருகிலிருந்த வாழைத் தோட்டங்களில் இரதங்களின் கீழ் அழகிய தாதியர் சாமரையைத் தாங்கி நிற்றலைப்போல அகன்ற இலைப்பரப்பின் கீழ் வாழை மரங்கள் பழத்தாறுகளையும் பெருத்த பூக்களையும் தாங்கி நின்ற காட்சி, சாமாவையரையும் கமலத்தையும் ஊர்வலமாக அழைத்துச் செல்ல, வரிசைகளுடன் கலியாணப் பந்தலுக் கருகில் நிற்கும் இரதக் கோலத்தைப் போல விருந்தது. பெருத்த தேன் இறால்களைக் கொண்ட கரும்புப் பயிர், ஈட்டி கேடயம் முதலிய படைகள் ஊர்வலத்திற்கு அணி வகுக்கப்பட்டு நிற்றலைப்போல இருந்தது.இடை யிடையே தோன்றிய நந்தவனங்களிலும் பங்களாக்களிலும் இருந்தெழுந்த பூக்களின் நறுமனங்களையும், மகரந்தப் பொடியையும், தண்ணீர்த் திவலைகளையும் தென்றல் சுமந்து, வண்டிக்குள் புகுந்து ஒவ்வொருவருக்கும் ஊர்வலத்தின் பொருட்டு பன்னீர் தெளித்து வாசனை யூட்டித் தாம்பூலம் கொடுப்பது போல இருந்தது. இத்தகைய இனிய பொருட்களின் காட்சியிலும், எண்ணிறந்த இன்பங்களின் பெருக்கிலும் ஆழ்ந்து, ரயில் வண்டியிற் என்ற ஏனைய ஜனங்கள் யாவரும் துயிலாகிய கள்ளையுண்டு, மயங்கி பிரம்மாநந்த நிலை யடைந்து அசைந்தாடி பக்கத்திலிருந்த பலகைகளிலும் ஒருவர் மீதொருவர் மோதிக்கொண்டனர். நமது இரத்த கலப்பு (Blood Relations ) சந்ததியாரான மூட்டை பூச்சிகள் சாமாவையர் வந்த வைபவத்தைக் குறித்துப் பெருத்த விருந்துண்டு கொண்டிருந்தன. ஆனால் நமது கமலாவோ, மூன்று நாட்கள் ஒரே மூச்சாகத் துயின்று அப்போதே விழித்தவள் போல சிறிதும் கலக்கமும் அயர்வு மின்றித் தனது கண்களை நன்றாக விழித்துக்கொண்டு தன் மனதை ஏதோ ஒரு நினைவில் செலுத்தியிருந்தாள். அன்றிரவில் தனக்குக் கிடைக்கப்போகும் பெரும் பாக்கியத்தைப்பற்றி அவள் கனவில் நினையாதவளா யும், தனது மன்மதபாணங்கள் சாமாவையரது மனதில் எவ்வித மான அநர்த்தங்களை விளைவித்தன வென்பதை உள்ளவாறு உணராதவளாயும் உட்கார்ந்திருந்தாள். சாமாவையர் மாத்திரம் விவரிக்கவொண்ணாத ஏதோ ஒருவித சங்கடமடைந்தவராய் அவ்வளவு இரமணீயமான காட்சியினிடையில் பெருத்த வேதனை யடைந்தவரா யிருந்தனர். 

அந்த நிலைமையில் வண்டி அடுத்த ஊரை அடைந்து நின்றது. அப்போது மணி பதினொன்றாதலால், ஒருவரும் வண்டியில் ஏறவில்லை. ஸ்டேஷன் மாஸ்டர் போர்ட்டர் முதலியோர் கண்களை மூடித் துயின்றுகொண்டே தமது வேலைகளைச் செய்தனர். ஆனால், அவ்வூரில் முதல்தரமான நல்ல பெங்களுர் கமலாப்பழம் விற்றது. வண்டியிலிருந்து கமலாக்கனிக் கருகில் செல்லவேண்டுமென்னும் நினைவைக் கொண்ட சாமாவையர் வெளியில் விற்கப்பட்ட கமலாப் பழத்தை வாங்க வெண்ணினார். ”அடே கமலா! இங்கே கொண்டுவா” என்று சொல்லிக்கொண்டே எழுந்து வாசற் கதவண்டை ஓடிவந்தார். அந்தப் பெண் உடனே தனது கால்களை மேலே வாங்கிக் கொண்டு அவருக்கு நெடுந்தூரத்திற்கு அப்பால் மரியாதையாக விலகிக்கொண்டு சாய்மானப் பலகையோடு ஒட்டிக் கொண்டாள் என்றாலும் அவள் மீது கமழ்ந்த மல்லிகை, ரோஜா, முதலிய அரிய மலர்களின் நறுமணமும், ஜவ்வாது கூந்தல் தைலம் முதலியவற்றின் பரிமள கந்தமும் ஒன்று கூடி அவரது நாசியில் புகுந்து, அவரைப் பரவசப்படுத்தி இன்பக்கடலி லாழ்த்தின. தாம் அவ்வளவு நெருக்கமாக அவளிடம் நின்றதைப்பற்றி அவர் ஒருவகை லஜ்ஜை அடைந்தார். அவளுடைய புதிய பட்டுப்புடவை சரசரவென்று ஓசை செய்ததும், கையில் அணியப்பட்டிருந்த பம்பாய் வளையல்கள் கலகலவென்று ஒலித்ததும் சங்கீத ஓசையைப்போல அவர் மனதில் பாய்ந்து இன்பமும் துன்பமும் உண்டாக்கின. அவள் மீதிருந்த குற்றமற்ற ஒவ்வொரு சிறிய பொருள்கூட, அவளுடன் சேர்ந்து கொண்டு அவர் கமலாப்பழக்காரனை அமர்த்தலாக அழைத்து, “அடே என்னடா விலை?” என்றார். அவன், “சாமீ! இது குடகு கிச்சலிப்பழம் ஒரு அணா” என்றான். சாமாவையர், “அடே! எனக்கு ஒரு டஜன் பழம் வேண்டும். என்ன விலை சொல்லுகிறாய்?” என்று ஆடம்பரமாகக் கேட்டார். அவன் அதுவரையில் டஜன் கணக்கில் விற்றவனல்லன். அவன் தூக்கத்திலும் இருந்தமையால் கணக்கு சரியாக விளங்க வில்லை.”எடுத்துக்கொள் சாமி! சகாயமாய்த் தருகிறேன். ஒரு ரூபாய்க்குக் குறையாது; ரயில் புறப்பட்டுவிடும். சீக்கிரம் ஆகட்டும்” என்றான். சாமாவையருடைய நினைவு முற்றிலும் பக்கத்தில் சுவர்ண விக்கிரகம்போல இன்பமே வடிவாய் உட்கார்ந்திருந்த உயிர்க்கமலாக் கனியின் மீது சென்றிருந்த மையால், அவர் மனது கணக்கில் செல்லவில்லை. சில்லரை கேட்டுக்கொண்டு, அவனிடம் அதிகமாக பேச்சை வளர்த்திக் கொண்டிருக்கவும் அவருக்குப் பொறுக்கவில்லை. அவன் முழு ரூபாயாகக் கேட்டதைப் பற்றி மகிழ்வடைந்தவராய் உடனே பன்னிரண்டு பழங்களை வாங்கி, அந்தப் பெண்ணிருந்த இடத்திற்கு எதிர்ப்புற பலகையில் அழகாய்ப் பரப்பினார். தாம் பணக்காரர் என்பதைக்காட்டிக்கொள்ள நினைத்தவராய், அவர் பலகையில் உட்கார்ந்துகொண்டு ரயில்பையைத் தமக்கருகில் இழுத்து அதைத் திறந்து உள்ளே இருந்த பளுவான மூட்டையைத் தூக்காமாட்டால் தூக்கி,”அப்பாடா எவ்வளவு கனம்!” என்று வாய்விட்டுக் கூறிக்கொண்டே பக்கத்தில் வைத்து அதை அவிழ்த்து, அதிலிருந்து ஒரு ரூபாயையெடுத்து கதவண்டை சென்று பழக்காரனிடம் கொடுத்தார். அதற்குள் அந்த அழகிய மங்கை தனது கடைக்கண் பார்வையை அவரது பணமூட்டையில் செலுத்தினாள். அங்கு ஏராளமான பவுன் குவியலும், நோட்டுகளும், ரூபாய்களும் இருக்கக் கண்ட பெண்மணி பெருந்திகைப்பும் வியப்பும் அடைந்து, அந்தமனிதர் யாரோ லட்சப்பிரபு வென்று தீர்மானித்துக் கொண்டாள். அவர் பழக்காரனிடம் ஏமாறிப்போனதை அவள் அறிந்தவளாயினும், அதை அவரிடம் தெரிவிக்க அஞ்சி மௌனம் சாதித்தாள். பணமூட்டையைத் தான் பார்த்ததாகக் காட்டிக் கொள்ளக் கூடா தென்று நினைத்து அவள் தனது முகத்தை வேறுபுறத்தில் திருப்பிக்கொண்டாள். அப்போது தனது ஆசனத்தில் ஒழுங்காக அமர்ந்து கால்களை முன்போலக் கீழே தொங்கவிட்டிருந்தாள். பணத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்பிய சாமாவையருடைய வஸ்திரமும் அந்த பெண்பாவை யின் பட்டுத் துயிலும் உராய்ந்து யோக க்ஷேமம் விசாரித்துக் கொண்டன. அதைக் கண்ட சாமாவையரது தேகம் பரவச மனடந்தது; மெல்ல ஆடியசைந்து அழகுநடை நடந்துவந்து தமது பணமூட்டைக் கருகில் உட்கார்ந்து அதை அதிகமாகப் பரப்பிக்காட்டிய பிறகு அதைக் கட்டிப் பைக்குள் வைத்த பின்னர் உல்லாசமாகச் சாய்ந்துகொண்டார். ஒரு பழத்தை எடுத்துத் தோலை உரிக்கத் தொடங்கியவராய் அந்தப் பெண்மணியுடன் எப்படிப் பேசுவதென்பதைப் பற்றிச் சிந்தனை புரிந்தார். துணிந்து தாமே அவளுடன் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை யென்று உறுதி செய்துகொண்டார். 

“ஏனம்மா! திருவாரூருக்கு வண்டி எவ்வளவு மணிக்குப் போகிறது?” என்று மிகுந்த அன்பையும் பட்சத்தையும் புகுத்திக் கேட்டுவிட்டு அவள் முகத்திலுண்டாகும் மாறுதல்களை நன்றாகக் கவனித்தார். அந்தத் தாக்கலை எதிர்பார்க்காத மங்கை சிறிது திகைப்பும் நாணமுமடைந்து தனது முகத்தை அப்புறம் திருப்பினாள்.ஆனால், அவர் அவளோடு பேசியதைப்பற்றி அவள் ஆயாசமடைந்ததாகத் தோன்றவில்லை; ஒருவகை இன்பமுற்றதாகவே தோன்றியது. அப்புறம் திரும்பிய வண்ணம், தனது அழகிய வாயைத் திறந்து கிளி கொஞ்சுதலைப்போல மொழிந்து, “ஒரு மணிக்குப் போகிறது” என்றாள். அது வீணையின் ஒலியைப்போல விருந்ததன்றி மென்மேலும் பேசும்படி சாமாவையரைத் தூண்டியதாக இருந்தது. தம்முடன் உரையாட அவளுக்கு விருப்ப முண்டென யூகித்துக் கொண்ட சாமாவையர் அதிகரித்த உற்சாகமும், ஆவேசமும், அவளுடன் நெருங்கிப்பழக வேண்டுமென்னும் ஆவலும் கொண்டார். தமது ஆசனத்தை விட்டு அவள் பக்கமாக அரைச்சாண் நகர்ந்து உட்கார்ந்த வண்ணம், “திருவாரூர் ஸ்டேஷனுக்கும் உங்கள் வீட்டிற்கும் எவ்வளவு தூரமிருக்கும்? நடுராத்திரியில் நீ தனியாக ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்குப் போகவேண்டுமோ? வழியில் திருடரின் பயமுண்டோ?” என்று அவளுடைய விஷயத்தில் அந்தரங்க மான அபிமானத்தைக் கொண்டவராய்க் கேட்டார். 

அவ்வணங்கு முன்னிலும் அதிகரித்த குலுக்குத் தளுக்கு நாணம் முதலியவற்றைக் காட்டி, “எங்கள் வீடு கமலாலயம் தெற்குவீதியிலிருக்கிறது. குதிரை வண்டிகள் ஏராளமாய்ப் போகும்; பயமில்லை” என்று முன்னிலும் அதிகரித்த இனிமை, வசீகரம், மகிழ்வு முதலியவற்றைக் காட்டி மறுமொழி கூறினாள். அவளது சொல்லழகும், அபிநயத்தினழகும் அவர் மனதைக் கொள்ளைகொண்டன. மிகவும் மதிமயக்கமும், மோகவெறியுங் கொண்டார். எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணித் தவித்தார். அவரது மனது பல இனிமையான கணவுகளைக் கண்டு இன்பக்கோட்டை கட்டிக் கொண்டி ருந்தது. யாவரும் தூங்கிய அந்த இராக்காலத்தில் கமலாப்பழம் விற்கப்பட்டதும், அதை தாம் வாங்கியதும் தெய்வத்தின் செயலாகத் தமக்கு ஏற்பட்டன வென்றும், அந்த உயிர்க்கமலாக் கனியைத் தாம் பெறுவதற்கு, அது சகுனமென்றும் நினைத்து அளவளாவியிருந்தார். அப்போது பலகையிலிருந்த ஒரு மூட்டைப்பூச்சி, மாம்பழத்தைப்போல விருந்த அவரது தேகத்தில் வாயை வைத்து ஒரு வாய் இரசம் உறிஞ்சியது. அது, “ஐயரே! சின்னக் கமலாவை வாங்கியதில் ஏமாறிப்போய் நான்கணா இழந்தீர். பெரிய கமலாவினால் எவ்வளவு ஏமாறுவீரோ! ஜாக்கிரதை; இது நல்ல சகுனமல்ல, அபசகுனம்’ என்று அவரை எச்சரிப்பதைப்போல விருந்தது. சாமாவையர் புன்னகை செய்தவராய் எழுந்து கீழே பார்த்து, “அப்பாடா! எவ்வளவு சுகமாக மூட்டைப் பூச்சி கடிக்கிறது? இந்த எஸ்.ஐ.ஆர். வண்டியே எப்போதும் மூட்டை பூச்சிக்கு பேர்போனது” என்று சொல்லிவிட்டு இன்னும் ஒரு முழம் அவள் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்து கொண்டார். அவள் அப்புறம் திரும்பிய முகத்தோடு, ‘ஆம், ஜனங்கள் தூங்கிவிட்டதால் இறங்க வேண்டிய இடம் தெரியாதல்லவா? அதற்காக கம்பெனியார் இவைகளை நியமித்திருக்கிறார்கள். இவைகளுக்கு நாம் சாப்பாடு போடவேண்டாமா?” என்று தனது நகைப்பை யடக்கிக் கொண்டே கூறினாள். அதைக்கேட்ட சாமாவையர் பெரிதும் மகிழ்வடைந்து விழுந்து விழுந்து சிரித்தார். இரண்டு நிமிஷம் மௌனமாக இருந்தார்; பிறகு ”ஏனம்மா! இப்படி ராத்திரி காலத்தில் நீ துணைக்காக இன்னும் வேறு மனிதரை அழைத்துக்கொண்டு வரக்கூடாதா! இப்படித் தனிமையில் வரலாமா?” என்று உண்மையான உருக்கத்தோடு கேட்டார். உடனே அம்மடந்தை, “திடீரென்று புறப்பட்டு திருவாரூர் போகவேண்டியிருந்தது. சரியானதுணை கிடைக்கவில்லை. அதனாலேதான், நான் வேறு வண்டிகளில் ஏற மன மில்லாமல் இங்கு வந்தேன்; தக்க மனிதரிருக்கும் இடமாகப் பார்த்து ஏறிவிட்டால் பயமில்லை யென்று தனிமையில் வந்தேன்” என்றாள். 

தகாத மனிதராகிய தம்மை, அவள் தக்க மனிதரென்று மதித்திருப்பதாக வெளியிட்டதை யுணர்ந்த ஐயர் பூரித்துப் புளகாங்கிதம் எய்தினார். குனிந்து தமது மார்பையும் உடைகளையும் பார்த்துக் கொண்டார். முதலில், அவளுடன் பேச்சுக்கொடுப்பதே கடினமாய்த் தோன்றியது. ஐந்து நிமிஷத்தில் அவளுடன் மிகவும் நெருங்கிய பழக்கம். ஏற்பட்டுப்போனதை நினைத்து உற்சாகமடைந்து, தாம் பிரிவதற்குள் அந்த நட்பு பழுத்துப் பலனைத் தருமென்று உறுதியாக நினைத்து உவகை கொண்டார். மேலும் உரையாடத் தொடங்கி,”இப்போது உன்னைக் கொணர்ந்து ஏற்றிவிட்டவர் யார்?’ என்ற வண்ணம் அவள் பக்கம் நகர்ந்தார். “அவர் என்னுடைய மாமன்” என்றாள் பெண்ணரசி. 

ஒவ்வொரு கேள்விக்குப் பின்னும் வால்வைப்பது போல ஐயரவர்கள் நகர்ந்து கொண்டே தனக்கருகில் வந்ததை, அந்த ன்பவல்லி உணர்ந்தா ளாயினும், அதைக் கவனியா தவளைப் போலிருந்தாள். 

ஆனால், சாமாவையர், அவளுக்குத் தெரியாமல் தாம் சாமர்த்தியமாக நகர்ந்து வருவதாக நினைத்து தம்மைத்தாமே புகழ்ந்துகொண்டவராய், “ஏனம்மா! திருவாரூர் உன்னுடைய சொந்த ஊரா?” என்றார். 

“ஆம்;அதுதான் என்னுடைய தாய்வீடு” என்று இனிமை யாக விடையளித்தாள் மடமங்கை. சில நிமிஷங்களுக்கு முன்பே சாமாவையர் கமலாப்பழத்தோலை உரித்துவிட்டார். அதை அவளுக்கு முதலில் நிவேதனம் செய்யவேண்டுமென்பது அவருடைய விருப்பம். அதன் பொருட்டு அவளிடம் நெருங்கிப் பல கேள்விகளைக் கேட்டு, வழிசெய்து கொண்டார். பிறகு, “ஆகா! வண்டியிலிருப்பது எவ்வளவு வெப்பமா யிருக்கிறது! தாகம் அதிகமாக உண்டாகிறது. உனக்கு எப்படி இருக்கிறது? வியர்க்கவில்லையா?” என்றார். 

“ஆம், ஆம், நிரம்பவும் புழுக்கமாகத்தானிருக்கிறது. வெயில் காலமல்லவா?” என்றாள் மங்கை. 

அவள் தமது மனதிற்கு உகந்தவிதம் விநயமாய்ப் பேசுவதைக் கண்ட சாமாவையர், மிகுந்த மகிழ்வையும், துணிவையும் அடைந்தார். அவளுடன் நெடுங்காலம் பழகிய நண்பரைப்போல தயக்கமின்றி தமது கரத்தை அவளுக்கருகில் நீட்டி, “இந்தா! இந்தப் பழத்தைச் சாப்பிடு; தாகத்திற்கு நல்லது” என்று தோல் உரிக்கப்பட்ட ஒரு பழத்தைக் கொடுக்க, அவள் மிகவும் நாணமும், லஜ்ஜையும் அடைந்தவள் போலக் காட்டித்தனது உடம்பை நெளித்துக் கொண்டவளாய்த் தயங்கி, “இல்லை; வேண்டாம், வேண்டாம்” என்று அரைமனதோடு கூறினாள். ஆனால், அவள் தனக்கு உறுதியாக வேண்டாமென்று சொல்வதாகத் தோன்றவில்லை. பழத்திற் கருகிலிருந்த தனது கையையும் அவள் அப்புறம் இழுத்துக்கொள்ளவில்லை. சாமாவையர், “பாதகமில்லை யம்மா! வாங்கிக்கொள். எல்லோருக்கும் கொடுக்கலாமென்று தானே இத்தனை பழங்கள் வாங்கினேன்” என்று அன்போடு வற்புறுத்திய வண்ணம் பழத்தை அவளுடைய கையில் வைத்தார். “எனக்கு அவ்வளவு தாகமில்லை. நீங்கள் சாப்பிடுங்கள்” என்று லஜ்ஜையோடு மொழிந்தவளாய் பழத்தை தன் கையால் பிடித்துக் கொண்டாள். அப்போது அவள் மிகுந்த இன்பமுந்துன்பமு மடைந்தாளென்பது அவளது அழகிய முகத்தில் நன்றாகத் தெரிந்தது. அதைக் கண்ட சாமாவையருடைய மனது எண்ணாததை யெல்லாம் எண்ணியது. தேகம் ஆவேசத்தால் துடி துடித்தது. எவ்வித இடையூறுமின்றி தமது எண்ணம் நிறைவேறிக்கொண்டே வருவதையும், அந்தப் பெண்ணுடைய நட்பு முற்றிக் கொண்டே வருவதையும் கண்ட சாமாவையர், தாம் சுவர்க்கலோகத்திலிருப்பதாக நினைத்துக் கொண்டார். அவளுக்கெதிரில் கதவண்டையிலேயே உட்கார்ந்து கொண்டார். பெண்மணி முதலிற் காட்டிய நாணமும் குறைந்து போனமையால், அவளும் காலைக் கீழே விடுத்துக்கொண்டு உட்கார்ந்தாள். எதிரில் உட்கார்ந்திருந்த சாமாவையர் இன்னம் ஏழெட்டு பழங்களை வாரி, அவளுக்கருகில் பலகையில் போட்டுவிட்டு நயமாக “சாப்பிடம்மா! வெட்கப்படாதே!” என்று கூறியவாறு தாமும் ஒரு பழத்தை எடுத்துத் தோலை உரித்துவிட்டு சுளைகளை வாயிற் போட்டுக் கொண்டு அவளை மேன் மேலும் ஊக்கினார். அவள் தனது முகத்தை வண்டிக்கு வெளியில் விடுத்து, சுளைகளைக் தின்ன ஆரம்பபித்தாள். ஆனால், வாயில் போட்டுக் கொண்டதும், மென்றதும், விழுங்கியதும் வெளியில் தெரியாமல் அவ்வளவு மறைவா கக் காரியத்தை நடத்தினாள். இரண்டொரு நிமிஷத்தில் பழம் தீர்ந்துபோன தாகையால், உட்புறம் சிரத்தை வாங்கிக் கொண்டாள். அதற்குள் சாமாவையர் மூன்று பழங்களை ஒழித்துவிட்டார். உட்புறம் திரும்பிய பெண்ணைப் பார்த்து, ‘பழம் ருசியாக விருக்கிறது. இன்னொன்று சாப்பிடு” என்று தனது கையிலிருந்த பழத்தை நீட்ட, அவள், “வேண்டாம் வேண்டாம்; அப்புறம் ஆகட்டும்; இன்னம் நாம் நெடுந்தூரம் போக வேண்டும்” என்று உறுதியாகக் கூறி மறுக்க, அவள் திரும்பவும் எடுத்துக் கொள்வதாக வாக்களித்ததை உத்தேசித்து, சாமாவையர், மேலும், அவளை வற்புறுத்தாமல் தமது கையை இழுத்துக்கொண்டார். பழத்தைப் பற்றிய உபசரணை அவ்வளவோடு நின்றது. 

பிறகு ஐயர் திடீரென்று எதைக் குறித்தோ நினைத்துக் கொண்டவரைப்போல, தமது பையைத் திறந்து தடபுடலாக அதன் உட்புறமெல்லாம் சோதனைசெய்தார். அங்கு பார்த்தார்; அங்கு பார்த்தார். அவர் எதைத் தேடுகிறாரென்பதை அறிந்து கொள்ளும் எண்ணத்துடன் பெண்மணியும் அவர் செய்ததைக் கடைக்கண்ணால் உற்று நோக்கியவாறிருந்தாள். அடுத்த நிமிஷம் அவர், “பைத்தியக்காரன்; முக்கியமான சாமானை வைக்க மறந்துவிட்டான். வேலைக்காரப் பயல்களெல்லாம் முட்டாள்கள்; வெற்றிலைப் பெட்டியை வைக்க மறந்து போக வேண்டாமென்று ஆயிரந்தரம் சொன்னேன். அதை வைக்க மறந்தே போய்விட்டான்” என்று தமக்குத் தாமே கூறிக்கொண்டு அதிருப்தியாகப் பையைப் பூட்டினார். அதைக் கேட்ட மடந்தை தனக்கருகிலிருந்த அழகிய வெற்றிலைப் பெட்டியை எடுத்து அவரிருந்த பலகையில் மெல்ல வைத்து, “இதில் நிறைய வெற்றிலை இருக்கிறது. போட்டுக் நேரத்தில் ஐந்து வருஷம் பழகினவரைப்போலாயினர். அந்த நிலைமையில் வண்டி அடுத்த ஊரில் வந்து நின்றது. எப்போது புறப்படுமென்னும் ஆவலினால் சாமாவையரது மனம் துடித்தது. மங்கையும் ஒருவகையான அமரிக்கையின்மையைக் காட்டி, “இந்த முள்ளிக்காய் ஸ்டேஷனில் வண்டி இவ்வளவு நேரம் நிற்கிறதே!” என்று கூறி நெடுமூச் செறிந்தாள். தமது மனநிலைமையைப் போலவே அந்த மோகனாங்கியின் நிலைமையும் இருத்தலைக்கண்ட ஐயர் இன்பக்கனவு கண்டு மனக்கோட்டை கட்டினார். “இந்த எஸ்.ஐ.ஆர் வண்டியே இப்படித்தான்; சுத்தப் பிணம். இதற்கு ஏற்படும் ஸ்டேஷன் மாஸ்டர்களும் தூங்கு மூஞ்சிகள். ஓட்டுகிறவர்களோ அன்றாடங்காய்ச்சிகள்” என்று சரமாரியாகத் திட்ட ஆரம்பித்தார். 

அவரது மனம் குளிரும்படி வண்டி உடனே நகர்ந்தது. ”அப்பாடா! அது புறப்பட்டதையா!” என்று குதூகலத்தைக் காட்டினார் ஐயர். 

சென்ற சில நிமிஷங்களாக ஐயரின் பாதங்கள் அவளது பாதங்களை நோக்கி நகர்ந்து மெல்லப் பிரயாணம் செய்து கொண்டே யிருந்தன. அந்த நிலைமையில் அவர் அவளிடம் சம்பாஷணையை வளர்த்துக் கொண்டிருந்தவர் வண்டி புறப்பட்ட பின்னர், “ஏனம்மா! நீ இப்போது எந்த ஊரிலிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். “நான் கொறநாட்டிலிருந்து வருகிறேன்” என்றாள் தையல். “கொறநாடு தான் உன்னுடைய புருஷன் வீடோ?” என்று ஐயர் நயமாகக் கேட்க, அம்மாள் சிறிது நாணித் தயங்கி, “இல்லை அது மாமன் வீடு; எனக்கு இன்னம் கலியாண மாகவில்லை” என்றாள். அந்த நல்ல செய்தியைக் கேட்ட ஐயருக்குப் பேருவகையால் அங்கம் பூரித்தது; அவரது பாதங்கள் இன்னம் சிறிது தூரம் முன்னுக்குச் சென்றன. “உன்னுடைய பெயரென்ன அம்மா? ஆம் ஆம்; நான் மறந்துவிட்டேன். கமலமென்று உன்னுடைய மாமன் சொன்னதை மறந்துவிட்டேன்” என்றார். அதுவே குதபகாலம். ஏனெனில் அவரது வலது பாதத்தின் விரல்கள் அந்த வடிவழகியின் மிருதுவான விரல்களை முத்தமிட்டு அவைகளோடு உறவாடின. ஆகா! இமைப்பொழுதில் மின்சார சக்தி பரவுதலைப் போல அவரது பாதத்தின் வழியாக ஆநந்த வெள்ளம் பரவி அவரது சிகையை உலுக்கியது. மயிர் பொடித்தது. தேகம் பரவச மடைந்தது. தாம் ஜென்ம மெடுத்த நாள் முதல் அதுவரையில் தாம் அத்தகைய இணையற்ற சுகத்தை அடைந்ததே இல்லையென்று ஐயர் நினைத்து அளவளாவினார். தமது கால் தீண்டியது குறித்து அந்தப் பூங்கோதையின் முகத்தில் கோபக்குறி உண்டானதோ வென்பதை அறிய வெண்ணி அவளது வதனத்தை அவர் உற்று நோக்கினார். அது காறும் ஜ்வலித்துவந்த மகிழ்ச்சியே அப்போதும் மாறுபடாமல் தாண்டவ மாடியது. முகம் முன்னிலும் அதிகமாக நெகிழ்ந்து உருக்கத்தைக் காண்பித்தது. அதைக் கண்ட ஐயரது மனதில் பெரிதும் துணிவுண்டாயிற்று. என்றாலும், விவரிக்க இயலாத அச்சம் ஒரு புறம் அவரைப் பின்புறம் இழுத்துக்கொண்டே இருந்தது. தேகமோ கட்டினில் நில்லாமல் தடுமாறியது. அதற்குமேல் என்னவிதமாக மொழிவதென்பதை யறியாமல் அவர் தயங்கினார். அவளது விஷயத்தில் தாம் கொண்டுள்ள எண்ணத்தை இனி வெளிப்படையாகக் கூறுவதைத் தவிர, சொல்வதற்கு வேறொன்றும் இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை. அவள் குடும்ப ஸ்திரீயா அல்லது தாசியா என்னும் சந்தேகம் எழுந்து அவரை உலப்ப வாரம்பித்தது. ஆனால், அதை அவளிடம் கேட்கவும் அஞ்சினார். அவள் தாசியாயிருந்தால், இன்னமும் தாராளமாகவும், சிறிதும் நாணமின்றியும் இருப்பதன்றி தான் தாசி என்பதை நன்றாகக் காட்டிகொள்வாள். கலியாண மாகாத குடும்ப ஸ்திரீயா யிருந்தால், அவள் தனிமையில் வந்திருக்க மாட்டாள். அன்னியப் புருஷனோடு இரவில் அவ்வாறு பழகியுமிருக்க மாட்டாள். ஆகையால், அவர் எவ்வித முடிவிற்கும் வர மாட்டாமல் தவிர்த்தார். ஒருகால் அவள் குடும்ப ஸ்திரீயில் வேசையோ என்று சந்தேகித்தார். திரும்பவும் கேள்வி கேட்கத் தொடங்கினார். ‘ஏனம்மா! இந்த வண்டி திருவாரூர் போனவுடன் அங்கிருந்து நாகைப்பட்டணத்துக்கு வேறே வண்டி புறப்படுகிறதா?” என்றார். 

அந்தப் பெண், “இல்லை. இந்த வண்டி ஒரு மணிக்குத் திருவாரூர் போகிறது. அங்கிருந்து விடியற்காலம் ஐந்து மணிக்குத்தான் நாகைப்பட்டணத்திற்கு வேறே வண்டி புறப்படுகிறது” என்றாள். 

அதைக் கேட்ட ஐயர் பெரிதும் துன்பமடைந்த வரைப்போல நடித்து, “அப்படியானால் நான் விடியற்காலம் ஐந்து மணி வரையில் கண் விழித்துக் கொண்டு ரயிலடியிலே தான் உட்கார்ந்திருக்க வேண்டும். அடாடா! பெருந் துன்பமா யிருக்கிறதே! இந்தச் சங்கதி முன்னமே தெரிந்திருந்தால் பகல் வண்டியி லாகிலும் வந்திருக்கலாமே; கையில் பணமூட்டை யிருக்கிறது. ஸ்டேஷனில் திருடர் பயமிருந்தாலும் இருக்கும்” என்றார். 

அவர் அவ்வாறு பேசியபோது அவரது கால் விரல்களும் சுறுசுறுப்பாக ஊமை ஜாடைகள் காட்டி அவளது விரல்களுடன் தந்தி பேசின. பெண் தனது காலை இழுக்காமல் அப்படியே வைத்துக்கொண்டு, “ஆம் ரயிலடியில் திருடர் பயமும் அதிகம்; மூட்டை பூச்சிக் கடியும் அதிகம். படுக்கவும் சுகமான இடமில்லை. தங்களுக்கு விருப்பமானால், எங்கள் வீட்டுக்கு வரலாம்; ஐந்து மணி வரையில் வசதியாகவும், பத்திரமாகவும் படுத்துவிட்டு ரயிலுக்கு வரலாம்; என்னுடைய தாயார் சரியான காலத்தில் தங்களை எழுப்பி விடுவாள்” என்றாள். எத்தனை யுகம் தவம் செய்தாலும் காணக்கிடைக்காத உன்னதமான அழகையுடைய அந்த மங்கை தம்மோடு அவ்வளவு பட்சமாக பேசியதையும், தனது வீட்டிற்கு வரும்படி அழைத்ததையும் காண, அவர் தம்மைப்போன்ற பாக்கியவான் இவ்வுலகில் வேறு எவனும் இருக்க மாட்டானென்று நினைத்து, நேரில் பரமபதம் அடைந்தவரைப்போலானார். அந்த மின்னாள் தமது அழகைக் கண்டு தம்மீது மோகங்கொண்டிருக்கிறாள் என்றும் நினைத்து விட்டார்; உடனே அவளது கையைப் பிடித்துக் கொள்ளலாமா வென்றும், அப்படியே பாய்ந்து கட்டிப்பிடித்து அவளை ஆலிங்கனஞ் செய்து கொள்ளலாமோ வென்றும் நினைத்துத் துடித்தார். ஒருகால் அவள் கூச்சலிடுவாளோ வென்றும் அஞ்சினார். அவள் தம்மை வீட்டிற்கு வரும்படி அழைத்தது சாதாரணமான பரோபகாரச் சிந்தையினால் இருக்குமோ வென்று நினைத்தார். ஆனால், தமது கால் அவள் காலில் படுவதை யறிந்தும் அவள் அதை இழுத்துக்கொள்ளாம லிருந்ததே அவருக்கு ஒரு விதமான துணிவை உண்டாக்கியது. உடனே ஐயர் புன்சிரிப்போடு, “யார் இப்படி உதவி செய்யப் போகிறார்கள்! நீ சொன்னபடியே உன்னுடைய வீட்டுக்கே வருகிறேன். உங்கள் வீட்டில் வேறு யார் இருக்கிறார்கள்?” என்றார். 

கமலம் புன்னகை தவழ்ந்த முகத்தோடு,”என் தாயார் மாத்திரம் இருக்கிறாள். வேறு ஒருவருமில்லை. நீங்கள் சுகமாக இருந்து வரலாம்” என்று கூறி நெடுமூச் செறிந்தாள்; அவளுடைய மார்பு விம்மித் தணிந்தது. 

அப்போது ஏராளமான மூட்டைப் பூச்சிகள் கடித்து வருத்தின வாகையால், அவர் எழுந்து நின்று கீழே குனிந்து பலகையைப் பார்த்தார். அப்போது அவளது பட்டுச்சேலை அவர்மீது வருடியது அவருக்குப் பிரம்மாநந்த மாயிருந்தது. பிறகு அவர் உட்கார்ந்து கொண்டு, “இந்த மூட்டைப் பூச்சிகள் என்னை மாத்திரம் கடிக்கின்றனவே” என்று உற்சாகத்தோடு பரிகாசமாகக் கூறினார். அவள் அதற்குப் பின் வாங்கியவளன்று; 

“பெரிய மனிதர் இருக்கு மிடத்தை நாடி நான் இந்த வண்டியில் ஏறியதைப் போல் மூட்டைப் பூச்சிகளும் பெரிய மனிதர்களையே நாடுகின்றன; அது நியாயந்தானே.அங்கே அவ்வளவு உபத்திரவமாயிருந்தால் இந்தப் பலகையில் உட்கார்ந்து கொள்ளலாமே” என்றாள். அதைக் கேட்ட ஐயர் அவளுக் கருகில் உட்காருவதை விட எதிரில் உட்கார்ந் திருப்பதே அநுகூலமானதென்று நினைத்துக் கொண்டு, “இல்லை இல்லை. நான் அந்தப் பக்கம் வந்தால் என்னை நாடிவரும் மூட்டை பூச்சிகள் உன்மேலும் திரும்பும்; துன்பமெல்லாம் எனக்கு இருக்கட்டும்” என்று சூரத் தனமாகப் பேசிக் கொண்டே முன்போல அவளுக்கெதிரில் உட்கார்ந்தார். அப்போது அடுத்த ஸ்டேஷன் நெருங்கியது. ஆனால், அதன் கைகாட்டி மரம் இறக்கப் படாமையால் வண்டி ஒரு சோலைக்குள் நின்று விட்டது. இஞ்சின் ஊதிக் கூச்சல் செய்து தூங்கிக் கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டரையும், போர்ட்டரையும் தட்டி எழுப்பியது. “வண்டி ஏன் நின்று விட்டது?” என்று கேட்டுக்கொண்டே கமலம் எழுந்து நின்று குனிந்து தலையைக் கதவிற்கு வெளியில் நீட்டி ஸ்டேஷன் பக்கமாகப் பார்த்தாள். சாமாவையர் தமது ஆசனத்தில் உட்கார்ந்திருந்தபடியே தமது தலையை ஜன்னல் வெளியில் நீட்டி அவரும் ஸ்டேஷன் பக்கம் பார்த்தார். கமலத்தின் தலைப் பின்னலுருக்கருகில் ஐயரது நாசியிருந்தது. அங்கிருந்துண்டான பரிமளகந்தம் ஆநந்தத்தை உண்டாக்கியது. அவரது முழங்கால்களில் அவளது கால்கள் பட்டன. அந்த வகையான இன்பத்திலும் ஈடுபட்டு அவர் மெய்மறந்திருந்த தருணத்தில், கைகாட்டி மரம் இறக்கப்பட்டது. வண்டி ஊதியது. ‘சரி; வண்டி புறப்படப் போகிறது” என்று சொல்லிக்கொண்டு கமலம் தனது சிரத்தை உட் புறத்தில் வாங்கிக் கொண்டாள். அப்போது வண்டி சடக்கென்று புறப்பட்டது; திரும்பி தன்னிடத்தில் உட்கார முயன்ற கமலம் அந்த விசையினால் தள்ளிவிடப்பட்டு சாமாவையரது மார்பின் மீது படேரென்று விழுந்தாள். அதனால், அவருடைய விரல்கள் பலகையில் நசுங்கின. அதனால் வலி உண்டாயிற்று; அவளது இனிய மேனி தம்மீது பதிந்த இன்பத்தில் அவர் அதைக் கவனிக்க வில்லை. அவள் கீழே விழுந்து விடாமல் பிடித்துக் கொள்பவரைப் போல பட்சமாக அப்படியே அவளை இருகைகளாலும் இறுகப் பிடித்துக் கொண்ட வண்ணம், “அடாடா! மூடப் பயல்கள் இப்படித்தானா வண்டியை விசையாக சொடுக்கி இழுக்கிறது!” என்று சொல்லி அதிக உருக்கமான குரலில், “ஏன் கமலா! எங்கேயாவது அடிபட்டதா?” என்று அன்போடு கேட்க, அவள் நாணம் அடைந்தவளைப்போலப் பாசாங்கு செய்து அவரது அணைப்பிலிருந்து விடுபட முயன்றாள். அவர் அவளை விடாமல், “கையில் காயம்பட்டதா? நெற்றியில் அடிபட்டதா?’ என்று கூறி, அவளது கை நெற்றி முதலிய இடங்களைத் தமது வலது கையால் தடவிக் கொடுத்த வண்ணம். இடதுகையால் அவளை இறுகப் பிடித்தார். அவள் முன்னிலும் அதிகமாகத் தத்தளித்து, “விடுங்கள்; விடுங்கள்!ஸ்டேஷன் வந்துவிட்டது, யாராகிலும் பார்க்கப்போகிறார்கள். அப்புறம் ஆகட்டும், இப்போது விட்டுவிடுங்கள்’ என்று கெஞ்சினாள். அதற்குள் வண்டி ஸ்டேஷனை அடைந்தது. சாமாவையர் மிகவும் துணிந்து அவளுடைய கன்னத்தில் ஒரு முத்தமிட்டு அவளை அவளது இடத்தில் உட்கார வைத்தார். அப்போது “பூந்தோட்டம்! பூந்தோட்டம்” என்று போர்ட்டர் அந்த ஊரின் பெயரைச் சொல்லி, தூக்கத்தில் அழுதுகொண்டே வந்ததைக் கண்ட சாமாவையர் சிறிது சாந்தமடைந்து தமது இடத்தில் உட்கார்ந்தார். என்றாலும் அப்போது அவரது மனம் பட்டபாட்டை என்னவென்று விவரிப்பது; அவரது மனோநிலைமையை வருணிப்பதைவிட யூகித்துக் கொள்வதே நல்லது. எவருக்கும் கிடைக்காத ஒப்புயர்வற்ற அந்த இன்பத்தைத் தாம் அநுபவித்திருந்த சமயத்தில் அந்த ஸ்டேஷன் வந்து கெடுத்து விட்டதைக் குறித்து ஆத்திர மடைந்து தவித்தார். அங்கிருந்து வண்டி எப்போது புறப்படும் புறப்படும் என்று ஆவல்கொண்டு துடித்தார். அன்றிரவு தமது வெற்றி நிச்சயமென்று மனப்பால் குடித்தார். வண்டி நின்ற அந்த இரண்டொரு நிமிஷங்களும் நெருப்புத் தணல் மீதிருந்தவரைப் போலத் தத்தளித்தார். கிடடாத பாக்கிய மெல்லாம் தமக்குக் கிட்டுவதால் அப்போது தமக்குச் சுக்கிர தசையாகவே இருக்க வேண்டுமென்று நினைத்தார். சில நாட்களுக்குள் பதினாயிரம் ரூபாய் கிடைத்ததும், இப்போழுது தெய்வரம்பை போன்ற ஒரு பெண் பாவை வந்து வாய்த்ததும், தமக்கு வேண்டு மென்றே ஈசுவரனால் அளிக்கப்பட்ட அதிர்ஷ்டமென்று நினைத்து அளவளாவினார். அந்தப் பூங்கோதையின் நட்பு தமக்குக் கிடைக்கப் போவதைக் குறித்துப் பேரின்பமும், வண்டி நின்றதைக் குறித்துப் பெருந்துன்பமும் அடைந்தார். அவளிடம் தாம் அடையப்போகும் பேரின்பச் சுகத்தை மனதால் பாவித்து அதிலீடுபட்டு இன்பமாய் ஆத்திரமே வடிவாய் உட்கார்ந் திருந்தார்.வாய் பாட்டுப் பாடியது. கை தாளம் போட்டது. கால்கள் ஆட்டம் போட்டன. இமை கொட்டாமல் அவளது முகத்தையும், மேனியையும் ஏற இறங்கப் பார்த்துப் புன்னகை மழையால் அவற்றை அபிஷேகம் செய்தார். தாம் வாங்கும் பங்களாவில் அவளை வைத்துவிடவும், தமது ஆயுட் காலம் முழுதையும் அவளுக்கு அடிமையாயிருந்து கழிக்கவும் உறுதி செய்து கொண்டார். வண்டி புறப்பட்டவுடன் அவளைத் தூக்கி மடியில் உட்கார வைத்துக்கொண்டு கொஞ்சிக் குலாவ நினைத்து, முற்றிலும் பித்த முற்றவரா யிருந்தார். 

அந்த வடிவழகியோ தனது முகத்தில் எத்தகைய மாறு பாட்டையும் காட்டாமல் தமது சிரத்தைக் கீழே கவித்துக் கொண்டு ஒன்றையும் அறியாத நற்குணவதியைப் போலவும் சித்திரப்பாவை போலவும் உட்கார்ந்திருந்தாள். 

வண்டி புறப்பட ஆயத்தமாகி ஊதியது. மணியும் அடிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் ஒரு பிரயாணி ஓடி வந்து சாமாவையரிருந்த வண்டியின் கதவை விசையாகத் திறந்தான். அந்த மனிதனுக்கு வயது இருபத்தைந்திருக்கலாம். அவனும் சுந்தர புருஷனாகக் காணப்பட்டான். அவனும் அந்த வண்டிக்குள்ளிருந்த காந்தத்தினால் கவரப்பட்டே, அதில் ஏற உறுதி செய்து கொண்டு கதவைத் திறந்தான். திரிசங் சுவர்க்கத்திலிருந்த சாமாவையர், தமக்கு அவனால் நேரும் விபத்தை உணர்ந்து திடுக்கிட்டவராய் வண்டியின் கதவை உறுதியாகப் பிடித்துக்கொண்டு, “ஐயா! அடுத்த வண்டி காலியா யிருக்கிறது. தயவு செய்து அதில் ஏறிக்கொள்ளும். நாங்கள் இரவில் நெடுந்தூரம் போகிறவர்கள்; இருவரும் இரண்டு பலகைகளிலும் படுத்துக் கொள்ள வேண்டும் என்றார். வந்தவன் ஆத்திரத்தோடு,”சரிதானையா! கதவை விடும். வண்டி போய்விடும்போலிருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே கதவை வேகமாய் வெளியில் இழுத்தான். 

அவன் ஏறுவதைப் பலவந்தமாகத் தடுத்துவிட நினைத்த சாமாவையர் உடனே வேகமா யெழுந்து தமது முழு பலத்தையும் உபயோகித்து கதவை உள்ளே இழுத்துப் பிடித்துக்கொண்டு ஓங்கிய குரலில், “இங்கே பெண்பிள்ளை தனிமையில் இருக்கிறாள் என்று சொல்லுகிறேன். என்ன ஐயா முரட்டுத்தனம் செய்கிறீர்? நீர் இங்கே ஏறக்கூடாது. ஏராளமான நகைகளும் பணமும் இருக்கின்றன. ஏதாவது காணாமற்போனால் நீர் உத்திரவாதி யாவீரா? போமையா அடுத்த வண்டிக்கு என்று அதட்டிக் குரல் செய்து, அவனது மார்பில் கையைக் கொடுத்து முரட்டுத் தனமாகத் தள்ளினார். கீழே விழ விருந்த அந்த மனிதன் சிறிது தத்தளித்து ஒருவாறு சமாளித்துக் கொண்டு வீராவேச மடைந்து திரும்பவும் பாய்ந்தான். அதைக் கண்ட பெண் முதலிடத்திலிருந்து, கடைசிக்கு நகர்ந்துவிட்டாள். வந்த மனிதன், “அடே! என்னைக் கீழே தள்ளி விடுகிறாயா! இது உன் பாட்டன் வீட்டு வண்டியா? ஏறாதே என்று சொல்ல நீயா எஜமான்? இதிலேதான் நான் ஏறுவேன்.வா ஒரு கை பார்க்கலாம்; ஆகா! அவ்வளவா!” என்ற கூக்குரலிட்டுப் பாய்ந்து சாமாவையரது கழுத்தில் கையைக் கொடுத்து உள்ளே தள்ளினான். ஐயர் அவனை வெளியில் தள்ளினார். இருவரும் ஒருவரையொருவர் நாயே என்றும், கழுதையே என்றும், வேறு பலவிதமாகவும் அருச்சனை செய்து கொண்டனர். அதனால் அங்கு பெருத்த ஆரவாரம் உண்டாயிற்று. அடுத்த நிமிஷத்தில் ஸ்டேஷன் மாஸ்டர், கார்டு, மற்றவர் முதலிய பலர் கூடிக் குறிக்கிட்டு அவர்களது சண்டையை விலக்கி, வெளியிலிருந்த மனிதனை சாமாவையரி ருந்த வண்டிக்குள் ஏற்றிவிட்டு கதவைச் சாத்திற் தாளிட்டுக் கொண்டு சென்றனர். உடனே வண்டி புறப்பட்டது. 

சாமாவையர் பதறுகிறார்; அவரது தேகம் வெடவெட வென்று ஆடுகிறது. தமது மனக்கோட்டையை ஒரு நிமிஷத்தில் இடித்து, தாம் அநுபவிக்க இருந்த இன்பதைப் போக்கடித்த அந்த துன்மார்க்கனைக் கசக்கிச் சாறுபிழிந்து ஊதி விட நினைத்து வாயில் வந்த விதம் திட்ட ஆரம்பித்தார். அவர் கூறியதற்கு ஒன்றிற்குப் பத்தாக அந்த மனிதன் திருப்பி மறுமொழி கொடுக்க, இருவரும் வாய்ச்சண்டையிலிருந்து கைச்சண்டைக்கு ஆயத்தமாய் முஷ்டிப் பிரயோகம் செய்யத் தொடங்கினார். வண்டியும் ஸ்டேஷனை விட்டு நெடுந் தூரம் வந்து விட்டது; அவர்களை விலக்குவோர் எவருமில்லை. அதைக் கண்ட கமலம் பெரிதும் அச்சங்கொண்டவளாய் சண்டையை விலக்க நினைத்து சாமாவையரைப் பார்த்து, “போனது போகட்டும்; உட்காருங்கள். கொஞ்சமும் மரியாதை பாராமல் அவ்வளவு பிடிவாதம் செய்து நுழைந்த மனிதரோடு சண்டையைச் செய்வதில் என்ன பலன்? விட்டுவிடுங்கள். நாம் ஒரு ராத்திரி விழித்துக்கொண்டிருப்பதனால் செத்தா போய்விடுவோம்; இப்படி வந்துவிடுங்கள்” என்று அழுத்தமாகக் கூறி அழைக்க, ஐயர் உடனே பெட்டிப் பாம்புபோல அடங்கிப் போய் அவளிருந்த கடைசி இடத்திற்கு எதிரில் சந்தோஷமாக உட்கார்ந்து கொண்டார். வந்த மனிதன் இரண்டொரு நிமிஷ நேரம் ஏதோ வாய்க்குள் முணுமுணுத்து விட்டுப் பிறகு மௌனமாக இருந்தான். சாமாவையரும் சாந்தமாக இருப்பவரைப்போலக் காணப்படினும், அவரது மனம் ஆத்திரத்தால் கொதித்தது. அந்தப் படுபாவி வராதிருந்தால் அந்நேரம் தாம் எவ்வளவு சுகமநுபவித் திருக்கலாமென்று நினைத்து அவனை அப்படியே வாரி வெளியில் எறிந்துவிட நினைத்தார். ஆனால், தாம் தூக்கி எறிகிற வரையில் அவன் சும்மா இருக்கவேண்டுமே என்னும் கவலையும் வதைத்தது. இவ்வாறு அவர் நெடுந்தூரம் வரையில் கோபத்தைப் பாராட்டிக் கொண்டே வந்து கடைசியில் ஒருவகையான முடிவிற்கு வந்தார். அவன் அநேகமாய் அடுத்த ஊரில் இறங்கிவிடுவானென்றும், அதன் பிறகு தாம் இன்ப முறலாமென்றும் நினைத்து அமரிக்கை யடைந்து அடுத்த ஊரின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார். அவனிருக்கையில் அந்தப் பெண்ணோடு கொஞ்சிக் குலாவிப் பேச மனமற்றவரா யிருந்தார். அடுத்த ஸ்டேஷனும் வந்தது. ஆனால், அந்த மனிதன் இறங்கவில்லை. சாமாவையரது மனம் ஏங்கித் தவித்தது. அவன் எந்த ஊர் வரையில் வருவான் என்பதை அறிந்து கொள்ளவும் வழி இல்லை! என்ன செய்வார்! தமது மனதைப் புண்ணாக்கி வதைத்தவராய் நெருப்பின்மீது இருப்பவரைப் போலத் தத்தளித்திருந்தார். ஒருகால் அந்த மனிதன் அடுத்த ஊரில் இறங்குவானென்று எண்ணி, மிகவும் பாடுபட்டு அடுத்த ஊர்வரையில் பொருத்திருந்தார். அங்கும் அவன் இறங்க வில்லை. மிகுந்த விசனத்தில் ஆழ்ந்து குரங்கைப் பறிகொடுத்த ஆண்டியைப் போல ஏங்கி உட்கார்ந்து விட்டார். “அடுத்த ஊரில் இறங்குவான் அடுத்த ஊரில் இறங்குவான்” என்னும் நம்பிக்கையே உறுதியாகப் பிடித்துக் கொண்டு காத்திருந்தார்; 

அவ்வாறு பல ஊர்கள் சென்றன. அவரது ஆசையும் நிராசையானது; கடைசியில் மனமுடைந்தவராய் கமலத்தை அழைத்துக் கொண்டு, கீழிறங்கி வேறு வண்டியில் ஏறிக்கொள்ள நினைத்து, அவளை நோக்கி, “நாம் வேறே வண்டிக்குப் போகலாமா?” என்று தாழ்ந்த குரலில் ரகசியமாகக் கேட்க அவள், “திருவாரூர் வந்துவிட்டது. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். நம்முடைய வீட்டுக்கே போய்விடுவோம்” என்று இரகசியமாக மறுமொழி கூறினாள். அதற்குமேல் எதையும் சொல்ல அறியாமல் சாமாவையர் ஓய்ந்து கண்மூடிக்கோட்டானைப் போல உட்கார்ந்திருந்தார். கமலம் தனது தாயிடத்தில் அச்சங்கொண்டவளாகத் தோன்றவில்லை. அன்னிய மனிதராகிய தம்மை, அவளறிய, வீட்டில் படுக்க வைத்து உபசரிப்பதென்றால், கமலம் தாசியாகத்தான் இருக்கவேண்டு மென்று அவர் நினைத்தார். அவளோடு இரண்டு மூன்று நாட்கள் உல்லாசமாக இருந்துவிட்டு, அவள் தம்மோடு வர விரும்புவாளாகில், அவளையும் அழைத்துக்கொண்டு சென்னைக்குப் போகத் தீர்மானித்துக் கொண்டார். எப்போது திருவாரூர் வரும் வருமென்று வழிபார்த்துக் கண்களும் மனதும் புண்ணாயின; மேனி பசத்தது; அவர் நரகவேதனை யடைந்தவராய் உட்கார்ந்திருந்தார். 

ஆயிரங்காத தூரத்திற்கப்பால் இருப்பதாய்த் தோன்றிய திருவாரூரும் வந்தது. சனியன் பிடித்ததைப்போல் அது வரையில் அவர்களுக்கருகில் உட்கார்ந்திருந்த மனிதனும் இறங்கிச் சென்றான். எவ்விடத்திலோ மறைந்து கிடந்த சந்தோஷமும் சாமாவையரது வதனத்தில் தோன்றி நடனம் செய்தது. பழைய உற்சாகமும், மோகாவேசமும், ஒன்றிற்கு நூறுமடங்காய்ப் பெருகி யெழுந்து சாமாவையரது மனத்திலும் தேகத்திலும் மிகுந்த சுறுசுறுப்பையும், துடிதுடிப்பையும் உண்டாக்கின. கமலத்தின் முகமும் கமலத்தைப் போலவே மலர்ந்து இனிமையையும், குளிர்ச்சியையும், மகிழ்ச்சியையும், புன்னகையையும் சொரிந்து, ஐயரது மனதில் புதிய நம்பிக்கையையும் பெருங்களிப்பையும் அடங்கா மோகத் தையும் கிளப்பின. 

இருவரும் வண்டியை விடுத்துக் கீழிறங்கினார்கள். ஐயர் தமது பணப்பையை ஒரு கையிலும், கமலத்தின் பெட்டியை மற்றொரு கையிலும் எடுத்துக்கொண்டார். அவளையே தோள் மீது தூக்கிக் கொள்ளவும் அவருக்கு விருப்பமே! ஆனால், பெண்ணரசி அதற்கு இணங்கமாட்டா ளென்று நினைத்து, அதைப் பிரரேபிக்காமல் விடுத்தார். அவர் பெட்டியை எடுத்த போதே, அவள், “வேண்டாம் ; வேண்டாம்; கூலியாளை அமர்த்தலாம்” என்றாள். “இது எவ்வளவு பெரிது! இதற்காகக் கூலியாள் பார்த்துக்கொண்டு இங்கே உட்கர்ந்திருப்பதேன். வா போகலாம்” என்று அதை எடுத்துக் கொண்டு புறப்பட, அவளும் மயில் அடி பெயர்த்து வைப்பது போல நடந்து அவரைத் தொடர்ந்தார். 

“அவருக்கு அவளே இணை, அவளுக்கு அவரே இணை” என்று கூறத்தகுந்தவாறு இருவரும் மணப்பந்தலில் அமரப்போகும் சதிபதிகளைப் போல அழகு நடை நடந்து மனமதனும் இரதியும் உலாவிப் பவனி வருவதைப்போலச் சென்று ஸ்டேஷனை விடுத்து வெளியேறினர். வெளியில் குதிரை வண்டிகள் பல ஆயத்தமாக நின்றன. வண்டிக்காரர்கள், வருவோரின் மூட்டைகளையும், பெட்டிகளையும் பிடுங்க ஆரம்பித்தனர். ஒருவன் சாமாவையரது கையிலிருந்த பெட்டியைப் பிடுங்கிக் கொண்டுபோய் தனது வண்டியில் வைத்துவிட்டு, “எஜமானே! இந்த வண்டியில் ஏறுங்கள். இதோ இருக்கிறது” என்று ஐயரையும், அம்மாளையும் உபசரித்து அழைத்துச் செல்ல, அவர்கள் அதில் ஏறிக் கொண்டனர்; வண்டி புறப்பட்டது; சிறிது தூரத்திற்கப்பால் கடைத்தெரு வந்தது. சாமாவையர் வண்டியை அவ்விடத்தில் நிறுத்தச் செய்து ஐந்து ரூபாயை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி கடைகளில் புகுந்து மிட்டாய்கள், பட்சணங்கள், தாம்பூலம், வாசனைத் திரவியங்கள் முதலியவற்றை வாங்கிவந்து வண்டியில் நிரப்பினார். உடனே வண்டி புறப்பட்டு ஒரு மயிலுக்கப்பால் இருந்த அவளுடைய வீட்டை நோக்கிச் சென்றது. வண்டியில் விளக்கிருந்தமையாலும், வண்டிக்காரன் அருகிலிருந்த மையாலும், சாமாவையர் வண்டியில் எவ்வித விஷமமும் செய்யாமல், வீட்டின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார். 

சில நிமிஷங்களில் வண்டி அவளது வீட்டின் வாசலில் வந்து நின்றது. ஐயரும், அம்மாளும் கீழே இறங்கினார்கள். கமலம் உடனே கதவை இடிக்க, சிறிது நேரத்தில் ஒரு கிழவி கதவைத் திறந்தாள். கமலம் வண்டிக்காரனைப் பார்த்து, “அடே சாமானை உள்ளே கொண்டு போய் வை” என்றாள். அவன் அப்படியே செய்துவிட்டுத் தனது கூலியைப் பெற்றுக்கொண்டு சென்றான்.உடனே மங்கை, “வாருங்கள் உள்ளே போகலாம்’ என்று மரியாதையாக உபசரித்து உட்புறம் அழைத்துச் சென்றாள்.மிகவும் ஆடம்பரமாக வந்திருந்த ஐயரவர்களைக் கண்டவுடன் கிழவியின் தூக்கமும் கலக்கமும் பறந்தன. அவள் இரகசியமாகப் பெண்ணைக் கடைக்கணித்தாள். பெண் தனது கண் சிமிட்டலால் தந்தி பேசினாள். உடனே கிழவியும் மிகுந்த வணக்கமும், அன்பும், மகிழ்ச்சியும் காட்டி, அந்த வரவேற்பில் கமலத்தோடு கலந்துகொண்டு, “சுவாமி! உள்ளே வாருங்கள்” என்று அழைத்தாள். அவளது அன்பைக் கண்டு பெரிதும் உவகை கொண்ட சாமாவையர் மகாராஜன் உலாவ எழுந்த தைப்போல ஆடி அசைந்து பொன்னடி பெயர்த்து உட்புறத்தில் நுழைந்தார். 

மூவரும் கூடத்திற்குச் சென்றனர்; அந்த வீடு மிகவும் வசதியான பெருத்த மச்சுவீடு; கூடம், தாழ்வாரம், முற்றம் முதலியவை அகன்றும், சுத்தமாகவும் இருந்தன. கூடத்தில் நாற்காலிகள், விசிப்பலகை, ஊஞ்சற்பலகை முதலியவை கிடந்தன. சுவரில் அழகிய படங்கள், மணியடிக்கும் பெருத்த கடியாரம், மான் தலைகள் முதலியவை காணப்பட்டன. கமலம் ஒரு சாய்வான நாற்காலியைக் காட்டி அதில் உட்காரும்படி அந்தரங்க அன்போடு சாமாவையரை வேண்ட, அவரும் களிப்படைந்து அதில் அமர்ந்து சுகமாகச் சாய்ந்துகொண்டார். கிழவி கண்ணாடி விளக்கை சுவரில் மாட்டிவிட்டு உட்புறம் சென்றாள். உடனே கமலம், “இதோ வந்துவிட்டேன்” என்று சாமாவையரிடம் கூறிவிட்டு உட்புறம் நுழைந்தாள். தாயும் மகளும் இரண்டாம் கட்டிற்குள் ஒரு தனிமையான இடத்திற்குச் சென்றனர். அங்கு தாயினிடம் மகள், நடந்த விவகாரங்களை யெல்லாம் ஒளியாமல் கூற, அவள் பெரிதும் சந்தோஷ மடைந்தவளராய், “அப்படியானால் பவுன்களும், ரூபாயும் எவ்வளவிருக்கும்?” என்றாள். கிழவி சிறிது யோசனை செய்து, “இதுவும் நம்முடைய பாக்கியந்தான்! ஸ்ரீதேவி நம்முடைய வீட்டைத் தேடி வந்திருக்கிறாள். ஆளைப் பார்க்கையில் டம்பாச்சாரியைப்போல விருக்கிறது. இந்த விஷயங்களில் நன்றாக அடிபட்டவனாகத்தான் இருக்க வேண்டும். இவன் எளிதில் ஏமாற மாட்டான். அதிருக்கட்டும்; நாம் தாசித் தொழில் செய்கிறவர்கள் என்பதைச் சொன்னாயா?’ என்றாள். 

கமலம்:- இல்லை; இல்லை. குடும்ப ஸ்திரீ போலவும் அவருடைய அழகைக் கண்டு மோகித்தவள் போலவும் நடித்து அழைத்து வந்தேன்; மனிதனும் அப்படியே சொக்கிப்போய் வந்திருக்கிறான். நாம் எவ்வளவு கேட்டாலும் கொடுக்கத் தடையில்லை. 

கிழவி:- அடிபோ பைத்தியமே! இந்தத் தொழிலில் இந்த மாதிரி தவித்த எத்தனையோ ஆள்களை நாம் பார்த்தாகி விட்டது; முதல் ஆவேசத்தில் இப்படித்தான் தாராளமாக இருப்பார்கள்; பொழுதுவிடிந்தால் புது மனிதராக மாறிப்போய்விடுவார்கள். நீ தாசி என்பதை இவன் அறிந்தால் 20ரூபா அல்லது 25 – ரூபா கொடுப்பான். அல்லது குடும்ப ஸ்திரீ என்று பாசாங்கு செய்தால் ரூபா 100 – அல்லது 200 – க்கு மேல் பெயராது. அதனால் நம்முடைய தரித்திரம் விடிந்து போகாது. குட்டுப்பட்டால் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும். மூட்டையை அப்படியே அடித்து விட்டால், ஆயிசுக் காலமெல்லாம் சுகப்பட்டுப் போகலாம். 

கமலம்:- (சிறிது அச்சமடைந்து) அது எப்படி முடியும்? நாம் வீணாக ஜெயிலுக்குத்தான் போய்ச் சேரவேண்டும்; ஏதோ வந்ததைக் காப்பாற்றுவோம்; நாமென்ன கொடுத்தா வைத்தோம்; அவனை நான் நன்றாக மயக்கி, அவன் இங்கேயே நாலைந்து நாள்களாகிலும் இருக்கும்படிச் செய்து ஆ யிரம் ரூபாய் வரையில் பிடுங்கிக் கொண்டு அனுப்பி விடுகிறேன். 

கிழவி:- முட்டாளே போ; உனக்கு என்ன தெரியும்? சின்னப்பயலைக்கண்டால் சிறுக்கிக்கும் ஆசைதான் என்பதைப் போல உனக்கும் கொஞ்சம் சபலம் உண்டாகிறதோ? பதில் பேசாமல் நான் சொல்வதைச் செய். நம்முடைய கலியே நீங்கிப்போகும். போய் அவன் சந்தோஷமடையும்படி பேசிக்கொண்டிரு. நான் பால் வாங்கிக்கொண்டு வரப்போன தாகச் சொல்லிவை. நான் கொல்லை வழியாக நம்முடைய கள்ளு குடிக்கி வீரபத்திரனிடம் போய் இதற்குத் தகுந்த ஏற்பாடுகளுடன் சீக்கிரம் வருகிறேன். 

கமலம்:- ( சிறிது யோசனை செய்து) சரி; உன்னுடைய ஷ்டம்போலச் செய்; நான் அவனிடம் போகிறேன் என்றாள். 

உடனே கிழவி ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கொல்லைப் பக்கமாக வெளியிற் போய்விட்டாள். கொல்லைக் கதவைச் சாத்தித் தாளிடாமல் வைத்துவிட்டு, கமலம் மிகவும் விரைவாகவும் அதிக உற்சாகத்தோடும் குதித்துக்கொண்டு ஓடிவந்து சாமாவையரை யடைந்து தனது அழகிய பல் வரிசைகள் வெளியில் தோன்றப் புன்னகை செய்து, “தங்களுக்கு போஜனம் ஆனதோ இல்லையோ?” என்று அன்போடு கேட்டாள். அவளது தோற்றம் நடையுடை பாவனை சொற்கள் முதலியவை சாமாவையரது மார்பில் ஆயிரம் மன்மத பாணங்களை ஒரேகாலத்திற் சொருகி அவர் மனதை மயக்கின. தேன் குடித்த நரியைப் போலிருந்த சாமாவையர் புன்னகை செய்து, “போஜனம் ஆய்விட்டது. வயிற்றில் பசியில்லை. மனப் பசிதான் பற்றி எரிகிறது” என்றார். 

அதைக் கேட்ட அந்த மோகனவல்லி கலகலவென்று நகைத்து மகிழ்வே உருவாய் மாறி, ”அதற்குத் தகுந்த வைத்தியன் நானிருக்கிறேன். மருந்து செய்கிறேன்; பயப்படவேண்டாம்’ என்று சொல்லியவாறு, அவர் வாங்கியிருந்த மிட்டாயி, பட்சணம், தாம்பூலம் முதலியவற்றை சாயத் தட்டுகளில் எடுத்து ஒழுங்காக வைத்து அதை ஒரு கையிலும், விளக்கை மற்றொரு கையிலும் எடுத்துக் கொண்டு, “வாருங்கள்; படுக்கை யறைக்குப் போவோம்” என்றாள். சுவர்க்க வாசலுக்கு அருகிலிருந்து அதற்குள் நுழையப் போகும் நிலைமையிலிருந்த சாமாவையர் மிகவும் துடிப்பாக எழுந்து அவளுடன் சென்றார். அவ்விருவரும் இரண்டோர் அறை களைக் கடந்து, மிகவும் அழகாக அமைக்கப் பட்டிருந்த அவளது சயன அறையை அடைந்தனர். அவ்வறை, வீட்டின் நடுப்பாகத்திலிருந்தது. அதன் ஒரு புறத்தில் உன்னதமான வில்வைத்த விலையுயர்ந்த பித்தளைக் கட்டிலொன் றிருந்தது. அதன் மேல் பிரமாண்டமான மெத்தை, திண்டுகள், தலையணைகள், கொசுவலை, அஸ்மானகிரி முதலியவை நிறைந்திருந்தன. தின்பண்டம், தாம்பூலம் முதலியவை வைப்பதற்கு கட்டிலுக்கருகில் ஒரு மேஜை கிடந்தது. இன்னொரு புறத்தில் இரண்டு நாற்காலிகளும், ஒரு சோபாவும் இருந்தன. கட்டிலினருகில் சுவரில் ஒரு பெருத்த நிலைக்கண்ணாடி மாட்டப் பட்டிருந்தது. எங்கும் படங்களும், பதுமைகளும் நிறைந்து கண்ணைக் கவர்ந்தன. தான் கொணர்ந்த பொருட்களை மேஜைமீது வைத்த கமலம் ஐயரைப் பார்த்து, “இதுதான் என்னுடைய வைத்தியசாலை; மருந்து கொடுக்கிறேன். இப்படிக் கட்டிலின்மேல் அமருங்கள்” என்று கூற, அவர் பிரம்மாநந்தம் அடைந்தவராய்க் கட்டிலின்மேல் உட்கார்ந்தார். அது வில் வைக்கப்பட்ட கட்டிலாகையால், மகாகனம் பொருந்திய ஐயரவர்கள் ரப்பர் பந்தைப் போலத் தணிந்து தணிந்து உயர்ந்தார். அப்போது கமலம், “என்னுடைய தாயார் பால்வாங்க அடுத்த வீட்டிற்குப் போயிருக்கிறாள். சீக்கிரம் வந்துவிடுவாள். அதுவரையில் இந்தக் காரியம் ஆகட்டும்” என்று சொல்லி விட்டு அருகிலிருந்த மிட்டாயி பட்சணங்கள் முதலியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அவரது வாயில் அன்போடு ஊட்ட ஆரம்பித்தாள். அதைக் கண்டு ஆனந்தபரவச மடைந்த ஐயர் அவளை அருகில் அணைத்துக் கொண்டே பலகாரங்களைத் தின்ன ஆரம்பித்தார். அவள் எதையும் உட் கொள்ளா திருந்ததைக் காண அவருக்குச் சகிக்கவில்லை. உடனே அவரும் சிலவற்றை எடுத்து அவளது வாயில் ழுத்து போட முயல, அவள், “எனக்கு வேண்டாம். உங்களுடனிருப்பதே எனக்கு மிட்டாயிக்கும் அதிகமான இனிப்பைத் தருகிறது. நான் இப்போது அடைந்து கொண்டிருக்கும் பிரம்மானந்த சுகத்திற்கு இந்த மிட்டாயின் ருசி உறைபோடக் காணுமா? நீங்கள் என் கட்டிக்கரும்பல்லவா! அத்தனையும் முத்து அதிமதுரக் கற்கண்டல்லவா!” என்று கூறி மிகுந்த மோகாவேசத்தோடு அவரைக் கட்டி அணைத்து முத்தமிட்டாள். சாமாவையர் பேரின்ப சாகரத்தில் மிதக்க ஆரம்பித்தார். அப்போது கமலம், “அதிருக்கட்டும்; நாம் இவ்வளவு அந்தரங்க நண்பர்களாகி விட்டோமே. நீங்கள் யாரென்பதை நானும் அறிந்து கொள்ளவில்லை. நான் யாரென்பதை நீங்களும் கேட்கவில்லையே. இது வேடிக்கையல்லவா. இதுதான் உண்மையான காதல்; இதைத்தான் கண்டதும் காதலென்று கவிகள் வருணிப்பது இருக்கட்டும். இப்போதாவது விவரத்தை அறிந்து கொள்வோம். தங்களுடைய ஊர் எது? தங்களுடைய திருநாமம் என்ன? இவற்றையெல்லாம் சொல்லலாமா?” என்றாள். 

சாமா:- ஆகா! அவசியம் சொல்லுகிறேன். நான் சென்னப் பட்டணத்தில் ஒரு பெருத்த வியாபாரி; என் பெயர் சாமாவையர் என்பார்கள். 

கமலம்:- தாங்கள் பெருத்த வியாபாரியாகத்தான் இருக்க வேண்டும் என்பதை நான் பார்வையிலேயே அறிந்து கொண்டேன். அதெல்லாம் இருக்கட்டும். இன்னொன்று கேட்கிறேன்; உண்மையைச் சொல்லுவீர்களா? – என்று குழந்தையைப்போலக் கொஞ்சினாள். 

சாமா:- ஆகா! நீ எதைக் கேட்டாலும், அதை அவசியம் உள்ளபடி சொல்லுகிறேன். 

கமலம்:- தங்களுக்குக் கலியாணம் ஆய்விட்டதா?… என்று மிகவும் இழுத்துக் கொஞ்சிக் கேட்டாள். 

சாமாவையர் சிறிது தடுமாற்ற மடைந்தாராயினும், துணிவுகொண்டு, ‘கலியாணம் ஆனாலென்ன? அதைப்பற்றி நமக்கென்ன கவலை? தாலி கட்டுகிறவ ளெல்லாம் ஆசைநாயகி ஆய்விடுவாளா? இப்போது எனக்கு மனைவியா யிருப்பவள் சமையல் செய்துபோட உபயோகப்படுகிறாள். உண்மையான ஆசையோடு புருஷன் பெண்ஜாதியாக இருந்து சந்தோஷமடையத் தகுந்த மனைவியை நான் இன்னம் கலியாணம் செய்து கொள்ளவில்லை. அந்தப் பாக்கியம் இன்று தான் கிடைக்கப் போகிறது” என்றார். 

கமலம்:- “அது இன்றைக்கு மாத்திரந்தானா அல்லது எப்போதும் நீடித்திருக்குமா ? கையிலோ நாகைப் பட்டணத்துக்கு டிக்கட்டு இருக்கிறது; விடியற்காலம் ஐந்து மணிக்கு இதெல்லாம் பழைய கதையாகிவிடும். நமது நட்பு ஒரு ராத்திரியோடு மறைந்து போகும் கனவாயிருந்தால், அதற்கு என்னுடைய தாயார் சம்மதிக்கமாட்டாள். எத்தனையோ பெரிய மனிதருடைய பிள்ளைகளுக்கு என்னைக் கட்டிக் கொடுக்கும்படி கேட்டார்கள். ஆனால், அவர்கள் ஒருவர் மேலும் என் மனம் செல்லவில்லை. ன்று தாங்கள் என் புத்தியையும் கெடுத்து இப்படி பைத்தியம் பிடிக்கச் செய்துவிட்டீர்கள். இனி உங்களை விட்டுப் பிரிந்து நான் ஒரு நிமிஷமும் உயிரை வைத்துக் கொண்டிருக்க முடியாது; நீங்கள் இப்படி விடியற்காலம் போய் விடுவீர்கள் என்பதை உணர்ந்திருந்தால், தங்கள் முகத்தையே நான் பார்த்திருக்க மாட்டேன்” என்று கூறினாள். அப்போது தண்ணீர்க் குழாய் திறக்கப்பட்டவாறு அவளது இரு கண்களிலும் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. நெடுமூச்செறிந்து தேம்பித்தேம்பியழ ஆரம்பித்தாள். அதைக் கண்ட சாமாவையரது தேகம் பதறிப்போனது. தமது முழு அன்பையும் காட்டி அவளை அருகில் இழுத்து இருகைகளாலும் அணைத்து, தமது வஸ்திரத்தால் அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டு, “கமலம்! பயப்படாதே; உன்னை நான் இன்றோடு விட்டுவிடுவே னென்று நினைக்காதே; உன் தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறேன், இனி நீயே என் எஜமானி; என்னுடைய செல்வத்தை உன்னிடம் ஒப்புவித்து விடுகிறேன். நீயும் நானும் எப்போதும் இணைபிரியாதிருந்தே நம்முடைய நாட்களை நாம் சுகமாய்க் கழிக்கவேண்டும். நாகைப்பட்டணத்தில் இருக்கும் ஒரு கப்பல் வியாபாரிக்கு பட்டணத்தில் ஒரு பங்களாவிருக்கிறது; அதை நான் விலைக்கு வாங்கப் போகிறேன்; நாளையதினம் தஸ்தாவேஜை முடித்துவிடுவதாக எழுதியிருந்தேன்; அதை முடித்துக்கொண்டு இங்கே வந்துவிடுகிறேன். எத்தனை நாள் நீ இங்கிருக்கச் சொன்னாலும் இருக்கிறேன். போகும்போது, நீயும், உன் தாயாரும் என்னோடு கூடவே வந்துவிடுங்கள்; என் உயிர்போகும் வரையில் நான் உன்னை விடுவதில்லை. இது நிச்சயம்; இது சத்தியம்” என்று உறுதியாகவும் உருக்கமாகவும் கூறினார். அதற்குள், “கமலம்! கமலம்! விளக்கெங்கே?” என்று கிழவி பேசிய சப்தம் உண்டானது. கமலம் சுறுசுறுப்பாக விலகி, “சரி! அம்மாள் பால் கொண்டுவந்திருக்கிறாள். கூடத்திலிருந்த ஒரே விளக்கை நாம் எடுத்து வந்துவிட்டோம்; அவள் இருளில் இருக்கிறாள்.நமக்கு இனி விளக்கு வேண்டாம். பாலை வாங்கிக்கொண்டு ஒரே முடிவாக வந்துவிடுகிறேன். நேரமாய்விட்டது” என்று சொல்லிவிட்டு, அருகிலிருந்த விளக்கை எடுத்துக் கொண்டு வெளியில் போய்விட்டாள். சாமாவையர் இருந்த அறையை இருள் மூடிக்கொண்டது. அவர் இன்பக் கனவு கண்டு இளகி உருகி ஆநந்த சாகரத்தில் ஆழ்ந்து தமக்குத்தாமே இணையென உட்கார்ந்திருந்தார். திடீரென்று தமக்கு உண்டான பெருத்த அதிர்ஷ்டத்தை நினைத்து விம்மித மடைந்தார். இன்னம் சில நாட்களில், தாமும் அந்த மடமயிலாளும் சென்னைக் கடற்கரை பங்களாவில் இரதியும் மதனும்போல சுகவாரிதியி லாடித் திளைத்திருக்கலாம் என்று நினைத்தார். இன்னம் இரண்டொரு நிமிஷத்தில் அந்தக் காமக்களஞ்சியமாகிய கட்டழகி தமது ஆலிங்கனத்திற்கு வந்துவிடுவாளென்று நினைத்து மனோரதிய மான சுவர்க்கத்தில் கொலுவீற்றிருந்தார். அவரது மனதின் ஆசைகள் அப்போதே உச்சநிலையில் இருந்தன. அவள் தம்மீது கொண்ட ஒப்புயர்வற்ற மையலை எவருக்கும் கிடைக்காத பெரும் பேறாக எண்ணி இன்பமயமாக விருந்தார். 

அப்போது கமலத்தின் கால் பாதரசங்கள் கலீர் கலீரென்று ஒலித்தது,”ராஜாத்தி வருகிறாள்; எச்சரிக்கை, பராக்கு”என்று கட்டியங் கூறின. அந்த ஓசையைக் கேட்க சாமாவையரது உரோமம் சிலிர்த்தது; வந்தாள் வந்தாள் அருகில் நெருங்கி வந்து விட்டாள். அவளது கையில் விளக்கில்லை. கமலம் இருளில் வந்து தனது இடக்கரத்தால் ஐயரது கன்னத்தைத் தடவினாள். வலக்கரத்தில் பால் இருந்தது. வந்தவள் அவள்தானோ வென்பதை உணர நினைத்த ஐயரும் தமது கையை நீட்டினார். கமலம், “பால் கொட்டிப்போகும்; விஷமம் ஒன்றும் செய்ய வேண்டாம். வாயைத் திறவுங்கள்; நான் பாத்திரத்தை வாயில் வைக்கிறேன். அப்படியே பாலை குடித்துவிடுங்கள்’ என்றாள்.இடக்கரத்தால் அவரது சிரத்தை மேல்நோக்கித் திருப்பி சிறிதளவு பாலை வாயில் விடுத்து, “பால் வாயில் விழுகிறதா?” என்றாள். ஐயர் “விழுகிறது” என்றார். “நன்றாக திறவுங்கள்” என்றாள் கமலம். அவர் அப்படியே செய்தார். அப்போது அவளது கைகளினிடையில் இன்னொருவரது கை நுழைந்தது. கமலம் மெல்ல ஒரு புறமாக நகர்ந்தாள். ஐயரின் வாயில் பாலுக்கு பதில் ஒரு துணி பந்து (Ball) நுழைக்கப்பட்டது. அவர் உடனே திடுக்கிட்டுக் கூச்சலிட முயன்றார். அதற்குள் துணிப்பந்து வலுவாக வாய்க்குள் நுழைந்துகொண்ட தாகையால் சத்தம் வெளிப்படவில்லை. கமலம் அப்பால் போய்விட்டாள். உடனே ஏழெட்டு முரட்டுக் கைகள் ஐயருடைய கால்களையும் கைகளையும் இறுக்கப்பிடித்துக் கயிற்றினால் கட்டிவிட்டன. இரும்புப் பொறியில் அகப்பட்ட எலியைப்போல ஐயரது தேகம் நடுங்குகிறது. மூச்சு விட மாட்டாமல் ஐயர் தத்தளித்து. பிரம்மாநந்த சுகமநுபவிக்கிறார். அப்போது ஒருவன் விளக்குடன் உள்ளே நுழைந்தான். என்ன விந்தை! கமலம் காணப்படவில்லை. பனமரங்களைப்போலக் கருத்துப் பெருத்த தேகங்களைக் கொண்ட நான்கு மனிதர் தனக்கருகில் நின்றுகொண்டிருந்ததைக் காண, ஐயருக்குக் குலை நடுக்க மெடுத்தது. அப்போது சிறிதும் அசையமாட்டாமல் மூட்டையைப் போலத் தரையிற் கிடந்தார். அவர் மீதிருந்த ஆடையாபரணங்கள் யாவும் விலக்கப்பட்டன. அவரது கோவணத்தை மாத்திரம் திருடர்கள் மிகுதியாக விடுத்தார்கள். இருவர் ஒரு பெருத்த கோணிப்பையை விரித்தனர். மூட்டையைப் போலக்கிடந்த சாமாவையரை வேறிருவர் தூக்கி அதற்குள் புகுத்திக் கயிற்றைக் கொண்டு நன்றாக கட்டினர். அடுத்த நிமிஷம் ஐயரவர்கள் இரண்டு மனிதர்களின் கைகளின் மீது ஆரோகணித்தவராய் ஊர்வலம் செல்ல எழுந்தார். கொல்லைப்புற வாசலின் வழியாக விரைந்து சென்று, சிறிது தூரத்தில் குறுக்கிட்ட ஓடம்போக்கி ஆற்றை அடைந்தனர். அதில் தண்ணீர் இடுப்பளவு ஓடிக் கொண்டிருந்தது. திருடர்கள் மூட்டையை அதில் போட்டுவிட நினைத்தனர். அப்போது அவர்களில் ஒருவன் ஆற்றில் போட்டால், ஒரு வேளை கரையில் ஒதுக்கப்பட்டு அவன் பிழைத்துக் கொள்வானென்றும், அதனால் கமலத்துக்குத் துன்பமுண்டாகுமென்றும், ஆகையால் அருகிலிருந்த ரயில் பாதையில் தண்டவாளத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டால் மனிதன் நிச்சயமாக துகையலாய் விடுவானென்றும் கூற, மற்றவர் அதுவே சரியென்று ஒப்புக்கொண்டனர். அடுத்த நிமிஷம் அவர்கள் ரயில் பாதையை யடைந்து மூட்டையை ஒரு தண்டவாளத்தினடியில் விடப்பட்டிருந்த இடைவெளியில் ஒரு கயிற்றைக் கொடுத்து அதனால் மூட்டையைத் தண்டவாளத் தோடு சேர்த்து இறுக்கிக் கட்டிவிட்டு திருடர்கள் போயினர். 

ஐயர் மூச்சுவிட மாட்டாமல் தத்தளித்து மரண வேதனையடைந்து தண்டவாளத்தின் மீது கிடந்தார். கை கால்களில் இரத்த ஓட்டம் நின்று போனதாகையால் பெருந்துன்பம் அநுபவித்தார். அப்போது நெடுந்தூரத்திற் கப்பால் ரயில் வருவதைப்போல ஓசை உண்டானதைக் கேட்டார். அவருடைய மனோ மெய்களின் அப்போதைய நிலைமை எப்படி இருந்திருக்கும். இன்னம் சில நிமிஷங்களில் தாம் ரயிலில் அகப்பட்டுத் துகையலாய் விடுவோமென்று நினைத்துப் பேரச்சங்கொண்டு நரகவேதனை அனுபவித்தார். 

அதிகாரம் 20 – சமயசஞ்சீவி ஐயர் 

மைலாப்பூரில் கடற்கரையின் ஓரத்தில் சென்ற அகன்ற சாலையில் அழகிய பெருத்த பல பங்களாக்கள் அடுத்தடுத்து அமைந்திருந்தன. அவற்றின் வாயில்கள் கடல்முகமாய் இருந்தமையின், இனிய காற்று, பங்களாக்களின் உட்புறத்தில் எப்போதும் ஜிலுஜிலென்று வீசி, அவற்றில் வசிப்போரை ஆநந்த சாகரத்தில் ஆழ்த்தி வந்தது. இத்தகைய உன்னதமான பங்களாக்கள் ஒன்றிலேதான் பெண்ணரசியான நமது நூர்ஜஹானுடைய தந்தை கான் பகதூர் பெரிய தம்பி மரக்காயர் வசித்து வந்தார். அவர் தலைமுறை தலைமுறையாகப் பெருத்த செல்வந்தராக இருந்தவர்களின் குடும்பத்தில் தோன்றிய சீமான்; நற்குணம், நல்லொழுக்கம், திறமை, கல்வி முதலிய சிறப்புகள் வாய்ந்த உண்மையான பெரிய மனிதர்; முன்னரே கூறப்பட்டபடி அவர் சென்னை துரைத்தனத் தாரின் நிருவாக சபையில் ஒரு அங்கத்தினராவர்; அவர் அதற்குமுன் பல ஜில்லாக்களில் கலெக்டர் உத்தியோகம் செய்து யாவராலும் நன்கு மதிக்கப் பெற்றவர். அவருக்கு வயது ஐம்பதிருக்கலாம். கட்டுத்தளர்வடையாத தடித்த உடம் பையும் சிவப்பு நிறத்தையும் கொண்டவர். பதற்ற மில்லாத நிதானகுணமும் உண்மையான மனவுருக்கமும் வாய்ந்தவர். அவருக்கு ஆண்மக்கள் பிறக்கவில்லை. அலிமாபீவி, நூர்ஜஹான் என்னும் இரண்டு அரிய பெண் மக்களையே அவர் பெற்றிருந்தார். அவர்களை அவர் இரண்டு உலகங்களாக மதித்து, தமது உயிரையே அவர்களின்மீது வைத்திருந்தார். அவர்களை ஊட்டி வளர்த்து, கல்வி, நல்லொழுக்கம் முதலியவற்றில் பயிற்றி, இரண்டு ஒப்பற்ற நட்சத்திரச் சுடர்களைப்போல் மதித்துப் பாதுகாத்து வந்ததன்றி, அவர்கள்தான் தமது மேலான பாக்கியமென்று நினைத்து நினைத்து அளவளாவி யிருந்தார். 

இருவரையும் நெருங்கிய உறவினர்களின் புத்திரருக்கு மணம் புரிவித்தனர். ஆனால், அலிமாபீபியின் கணவன் இறந்து போயினன். அவர் அதைக் குறித்துப் பெரிதும் விசனத்தில் ஆழ்ந்தாராயினும், இளைய குமாரியான நூர்ஜஹானும் நைனா முகம்மதுவும் மனமொத்த காதலோடு வாழ்ந்து வருவதாக நினைத்து ஒருவாறு ஆறுதலடைந்தார். நைனா முகம்மது மிகவும் யோக்கியமான நடத்தை வாய்ந்த வனென்றும், தமது புதல்வி அவனிடம் இன்புற்று வாழ்ந்து வருகிறாள் என்றும் நினைத்துப் பெருமகிழ் வடைந்து வந்தார். 

அந்த நிலையில் மேனகாவின் விஷயம் அவர் செவிகளில் பேரிடியைப் போல வந்து தாக்கியது. அவளை அவன் தன் வீட்டிற்கு வரவழைத்து வற்புறுத்தியதையும், அன்று அவன் வாயினாலேயே வெளிவந்த பல இரகசியங்களையும் அலிமா பீவி சொல்லக் கேட்டபோது, அவர் அவற்றை உண்மை யென்று நம்பவில்லை; ஏதோ தவறுதலாக, அவள் அந்தச் செய்தியைத் தெரிவிப்பதாக நினைத்தார். ஆனால், தமது பங்களாவில், மேனகா நோய் கொண்டு கிடந்ததையும், டாக்டர் துரைஸானி வந்து வைத்தியம் செய்ததையும் கண்ட பிறகே அவர் மனதில் அச்செய்தி உண்மையானதென்று பட்டது. பெருத்த வியாகுலத்தில் ஆழ்ந்தார். தாம் எல்லாவற்றிலும் சிறந்த பாக்கியமாக மதித்துப் பாராட்டி வந்த தமது செல்வப் பெண்கள் இருவரும் கணவன் விஷயத்தில் துர்பாக்கிய முடையவர்களாய்ப் போனதை நினைத்து நினைத்து உருகி உட்கார்ந்துபோனார். பெருத்த விசனத்தினால் புண்பட்ட அவரது மனம் தமது உத்தியோகத்திலும் செல்லவில்லை; அவர் வேறு எத்தகைய சௌகரியத்தையும் தேடவில்லை. 

மேனகாவைப் பற்றியும் பெருத்த கவலைகொண்டு தமது மனதை முற்றிலும் அதே விஷயத்தில் செலுத்தினார்; கவரிமானிலும் சிறந்த மானத்தையும், புருஷனிடம் வைத்த காதலையும் கொண்டவளான தமது புதல்வி தன் உயிருக்கு ஏதேனும் தீங்கு செய்து கொள்வாளோவென நினைத்தவராய், தாம் மூன்று நாட்கள் வரை துரைத்தன உத்தியோக சாலைக்கு வரக்கூடவில்லை. ஆகையால், தமது உத்தரவுபெற வேண்டிய காகிதங்களைப் பங்களாவுக்கே அனுப்பும்படி கவர்னருக்குச் செய்தியனுப்பினார். நூர்ஜஹானை பந்தோபஸ்தாக பாதுகாத்து அவள் மீதிலேயே கண்ணாக இருந்தார். தாம் நேரிலும் தமது முதிய புத்திரியின் மூலமாயும், அவளுக்குத் தேவையான ஆறுதல்களைச் சொல்லி வந்தார். 

சாம்பசிவம், கனகம்மாள் ஆகிய இருவரும் சென்னைக்கு வந்து பல துன்பங்களிற் பட்டு, தஞ்சைக்குத் திரும்பச் சென்ற அன்றைய தினம் இரவு எட்டு மணி நேரமாயிற்று; பெரியதம்பி மரக்காயர் தமது பங்களாவின் மேன்மாடியிலிருந்த ஒரு சிங்காரமான அறையில் சோபாவின்மீது உட்கார்ந்திருந்தார்; பெருத்த ஹுக்கா வொன்று நெடுந்தூரத்திற்கப்பால் இருந்தது. பட்டுத் துணியால் அமைக்கப்பட்ட அந்த ஹுக்காவின் காம்பு அநுமாரின் வாலைப்போல வளர்ந்து சுருண்டு சுருண்டு அவரிருந்த சோபாவிற்கு வந்திருந்தது; பங்களாவிலிருந்த சம்பங்கி, ரோஜா, முதலிய புஷ்பங்களின் பரிமள காந்தத்தைச் சுமந்து உட்புறம் நுழைந்து வீசிய கடற்காற்றின் இனிமை யினால் பரவச மடைந்திருந்த மரக்காயர், அப்போதைக்கப் போது ஹுக்காவின் காம்பை வாயில் வைத்துக்கொண்டு குடுகுடு குளுகுளு குடுகுடு குளுகுளு வென்று ஓசை செய்து, பிரம்மாநந்த சாகரத்தில் மிதந்து கொண்டிருந்தார். அவருடைய கண்கள் சொக்கிப்போய் ஆநந்த சாகரத்தில் நீந்துவன போலத் தோன்றின; வெளித் தோற்றத்திற்கு அவர் இன்பத்தில் ஆழ்ந்திருப்பதாய்த் தோன்றினும், உண்மையில் அவர் மனது பெருத்த அல்லல்களின் திரள்களினால் உலப்பப்பட்டு மிக்க சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தது. மாறி மாறி ஹுக்காவுடன் சம்பாஷணை செய்வதும், எதிரிலிருந்த ஒரு நாற்காலியில் துயரமே வடிவாக உட்கார்ந்திருந்த நூர்ஜஹானிடம் ஏதோ விஷயங்களைப் பற்றி மொழிவதுமாய் இருந்தார். 

பெரிய தம்பி மரக்காயர்:- எல்லாம் சரிதான்; வி. பி. ஹாலில் நாடகம் பார்க்க அழைத்துக்கொண்டு போவதாய் குமாஸ்தா சாமாவையரும், வக்கீலின் அக்காளும் பாசாங்கு செய்து, அங்கப்பநாயக்கன் தெருவிலுள்ள நமது வீட்டிற்குத் தன்னை அழைத்துக்கொணர்ந்து, இரகசியமான ஒரு அறையில் விட்டதாக இந்தப் பெண் சொன்னாள் என்றாயே, இ வள் அங்கு வந்ததை நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்? 

நூர்:- அறையில் விட்டபிறகு குமாஸ்தாவும், வக்கீலின் அக்காளும் மிகவும் அவசரமாக அறைகளின் வழியாய் நுழைந்து வெளிப்பட்டதை தற்செயலாக அக்காள் பார்த்துவிட்டாள். உடனே அவளுக்குப் பெருத்த சந்தேகம் தோன்றிவிட்டது. விஷயத்தை என்னிடம் வெளியிட்டாள். நான் முதலில் இதைப் பற்றி எவ்விதமான கெட்ட யூகமும் செய்யவில்லை. என்றாலும் அன்னியரான அவர்கள் இரவு ஒன்பது மணிக்கு நமது வீட்டிற்குள் வந்ததும், மிகவும் அச்சங் கொண்டவரைப்போல விரைந்தோடியதும் ஆச்சரியத்தை உண்டாக்கின. ஆகையால், நானும் அக்காளும் மெல்ல நடந்து உட்புறத்திலுள்ள அறைகளை யெல்லாம் பார்த்துக்கொண்டு போனோம். ஓர் அறையின் கதவுகள், யாவும் வெளிப்புறத்தில் தாளிடப் பட்டிருந்தன. ஆனால், அதற்குள் வெளிச்சமும் மனிதர் சம்பாஷித்த குரலும் உண்டாயின. நாங்கள் சந்தேகப்பட்டு கதவுகளின் இடுக்கால் உட்புறம் பார்த்தோம். இந்தப் பெண் தனிமையில் நின்று தவித்துக்கொண்டிருந்தாள். உங்களுடைய மருமகப்பிள்ளை இவளிடத்தில் தகாத சொற்களைக் கூறிக்கொண்டிருந்தார். அப்புறந்தான் மற்ற சங்கதிகள் வெளிவந்தன. 

பெரிய:- நடந்த காரியங்களை நினைக்க நினைக்க வைகளெல்லாம் எனக்குப் பெருத்த அதிசயமாகவே இருக்கின்றன. இந்த குமாஸ்தாவும், வக்கீலின் அக்காளும் சேர்ந்து கொண்டு எவ்வளவு சாமர்த்தியமாகக் காரியம் செய்திருக்கிறார்கள்! நாடகம் பார்க்கப் பெண்ணை அழைத்துக் கொண்டு போவதாகச் சொல்லி, பெண்ணை ஏமாற்றி நம்முடைய வீட்டில் கொணர்ந்து விட்டதும், புருஷன் உண்மையை அறிந்துகொள்ளாமல் இருக்கும்படி நாடகக் காரன் எழுதியதைப் போலப் பொய்க் கடிதம் எழுதி பெட்டியில் வைத்திருந்ததும் சாதாரணமான ஜனங்கள் செய்யத் தகுந்த காரியங்களா! அவர்கள் எதற்கும் துணிந்த பெருத்த ஆசாமிகள்! ஆகா! கடிதத்தைப் பற்றிய விஷயங்களையெல்லாம் டாக்டர் துரைஸானி சொன்னாள் என்றாயே! அவளுக்கு இந்த ரகசிய மெல்லாம் எப்படித் தெரிந்தது? 

நூர்:- துரைஸானி நேற்று மாலை 7மணிக்கு இங்கே வந்தாள்.மோட்டார் வண்டியில் அறைபட்ட மனிதரைப்பற்றி அப்போது பிரஸ்தாபம் ஏற்பட்டது; அந்த மனிதரே இந்தப் பெண்ணின் புருஷன் என்பது உடனே தெரியவந்தது; தனது புருஷனுக்கு நேர்ந்த விபத்தைக் கண்டு பொறாமல், இந்தப் பெண் மூர்ச்சித்து விழுந்தாள். இவளுக்குத் தேவையான மருந்தைக் கொடுத்துவிட்டு துரைஸானி அவசரமாக வைத்திய சாலைக்குப் போய்விட்டாள். இன்று காலையில், இந்தப் பெண்ணின் தகப்பனாரான தஞ்சாவூர் டிப்டி கலெக்டரும் அவருடைய தாயாரும் சாமாவையரும் அங்கே வந்து வண்டியில் அறைபட்டவரைப் பார்த்தார்களாம். 

பெரிய:- ஆ! என்ன ஆச்சரியம்! இவள் சாம்பசிவையங் காருடைய பெண்ணா? 

நூர்:-ஆம். 

பெரிய அவர் யாரென்பது உனக்குத் தெரியுமா? நான் சேலத்தில் கஜானா டிப்டி கலெக்டராக யிருந்தபோது, அவரும் சேலத்தில் டிப்டி கலெக்டரா யிருந்தவர்; ஆகா! அவர் மகா யோக்கியரல்லவா! அவரைப்போன்ற பரிசுத்தமான மனிதர் ஒருவரும் கிடைக்க மாட்டார்களே! அவர் என்னுடைய அந்தரங்க நண்பரல்லவா! அடாடா! அவருடைய பெண்ணா இந்தக் குழந்தை! என்ன துர்பாக்கியம்! நான் சேலத்திலிருக்கும் போது அவருடைய வீட்டில் இந்தக் குழந்தையைப் பார்த்திருக் கிறேன்; அவர் இந்தக் குழந்தையை எவ்வளவோ அருமையாக வளர்த்தாரே! கடைசியில் இந்த துஷ்டர் வீட்டிலா கொண்டுவந்து கொடுத்தார்! ஆகா! அவருடைய தாயாரைப் போல நல்ல பெண்பிள்ளை உலகத்திலிருப்பது சந்தேகம்! அந்த அம்மாள் மகா விவேகி! அப்படியானால், அவர்கள் இந்த ஊருக்கு வந்திருந்தார்களா? 

நூர்:- அவர்கள் இன்று காலையில் வைத்தியசாலைக்கு வந்து மாப்பிள்ளையைப் பார்த்தார்களாம்; அவர்களுக்குப் பதினைந்து நிமிஷ நேரம் சாவகாசம் கொடுக்கப்பட்டதாம்; அவ்வளவு நேரமும் விசனித்து அழுதே தீர்த்தார்களாம்; கூடவிருந்த குமாஸ்தா சாமாவையர், மாப்பிள்ளை நேற்று அணிந்திருந்த சட்டையிலிருந்து இரண்டு கடிதங்களை எடுத்து டிப்டி கலெக்டரிடம் கொடுக்க, அவரும் அம்மாளும் படித்தார்களாம். உடனே இருவரும் மிகவும் ஆத்திரமடைந்து பைத்தியம் கொண்டவர்களைப்போல மாறி, அவ்விடத்தை விட்டு வெளியில் போய்விட்டார்களாம்; அங்கே நியமிக்கப் பட்டிருந்த வெள்ளைக்கார தாதி இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தாளாம்; டாக்டர் துரைஸானி வந்ததும் அவளிடம் விஷயத்தைத் தெரிவித்தாளாம்; உடனே துரைஸானி அந்தக் கடிதங்களை எடுத்து அவற்றில் எழுதப்பட்டிருந்த விவரங்களை அறிந்து கொண்டாளாம்; இன்று மாலையில் சாமாவையர் திரும்பவும் வைத்திய சாலைக்கு வந்தாராம்; துரைஸானி அவரைத் தனிமையான ஓரிடத்திற்கு அழைத்துப்போய் தந்திரமாக விசாரித்தாளாம்; அவர் முதலில் சரியான மறுமொழி கொடாமல் தயங்கினாராம்; பிறகு துரைஸானி கடிதங்களைக் காட்டிக் கேட்க, அவர் எல்லா விஷயங்களையும் தெரிவித்தாராம்; கடிதங்களில் எழுதப்பட்டிருந்த சங்கதிகள் நிஜமானவை யென்றும், இந்தப் பெண் நாடகக்காரனோடு ஓடிப்போய் விட்டாளென்றும், கடிதங்களை இவளுடைய பெட்டியிலிருந்து எடுத்த புருஷன் அவமானத்தினால் தற்கொலை செய்துகொள்ள வேண்டு மென்னும் எண்ணத்துடன் மோட்டார் வண்டியின் கீழ் தாமே போய் வீழ்ந்தாரென்றும் சாமாவையர் சொன்னாராம். 

பெரிய:- ஆகா! என்ன தந்திரம் என்ன தந்திரம்! அவர்களே எல்லாவற்றையும் செய்துவிட்டு பெண்ணின் மேல் பழியைப் போட்டு விட்டார்களே! அப்பா மகா மோசக்காரர்கள்! பெண் இங்கிருக்கும் சங்கதியைத் துரைஸானி ஒரு வேளை சாமாவையருக்குச் சொல்லியிருப்பாளா? 

நூர்:- இல்லை இல்லை. அதை எவரிடமும் சொல்ல வேண்டாமென்று நானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எவரிடமும் அவள் சொல்லவே மாட்டாள். 

பெரிய:- அவர் பிழைப்பாரா? துரைஸானி என்ன சொன்னாள்? 

நூர்:- அவர் இன்னும் கண்ணைக் கூடத் திறக்கவில்லை யாம். அங்கே அவருடைய நிலைமை அப்படி இருக்கிறது; அங்கே இந்தப்பெண்ணிருக்கும் நிலைமையோ பரிதாபகரமாக இருக்கிறது; உட்கார நினைத்துப் படுக்கையை விட்டு எழுவாளானால் மயங்கிக் குப்புற விழுந்து விடுகிறாள். இவளுடைய நிலைமையைக் காண கல்லும் கரைந்துருகும்; கட்டைகளும் வாய்விட்டுப் புலம்பும். தன் புருஷனே வண்டியில் அறைபட்டவர் என்பதை யறிந்தவுடன் இவ ளுடைய உயிர் அநேகமாய்ப் போய்விட்டது. துரைஸானியின் பெருமுயற்சியால் உயிர் நிற்கிறது. இந்த நிலைமையில் இவள் தன்னுடைய புருஷனைப் பார்க்கவேண்டுமென்று பதறுகிறாள்; தான் பார்ப்பதற்குள் அவர் உயிர் துறந்து விடுவாரோ என்று துடிதுடிக்கிறாள். அதே பித்தாக நிமிஷத்துக்கு நிமிஷம் வேண்டிக் கெஞ்சுகிறாள். கடிதங்களைப்பற்றிய விவரங்களை நாங்கள் இவளிடம் தெரிவித்தோம். புருஷன் இவள் மேல் அருவருப்புக் கொண்டிருப்பதாயும், இப்போது அவரைப் பார்த்தால் அவர் ஆத்திரப்படுவார் என்றும், அதனால் இந்த ஹீனஸ்திதியில் அவருடைய உயிருக்கே மோசம் வந்துவிடு மென்றும் துரைஸானி சொன்னாள். கடிதங்களின் வரலாற்றைக் கேட்க, அவள் இடியோசையைக்கேட்ட நாகமென்ன திடுக்கிட்டு கலங்கினாள்; இந்த அபவாதத்திற்கு ஆளானபின், தான் உயிரை வைத்துக் கொண்டிருக்கக் கூடாதென்றும், அவரை ஒருமுறை பார்த்துவிட்டு அவருடைய காலடியிலேயே விழுந்து உயிரை விட்டுவிடவேண்டுமென்றும், தன்னை அவரிடம் அழைத்துப் போகும்படியும் சொல்லி மன்றாடு கிறாள். இவளைக் கண்டால் அவர் பிழைக்கமாட்டாரென்றும், இல்லையானால் பிழைத்துக் கொள்ளலாமென்றும், வீணில் ஆத்திரப்பட்டு அவரைக் கொல்லக்கூடா தென்றும் துரைஸானி வற்புறுத்திச் சொல்லுகிறாள்; நோயாளியான தன்னையும் கொண்டுபோய் அவருக்கருகில் ஒரு படுக்கையில் விட்டு வைத்தால், அவரைப் பார்த்துக்கொண்டு அருகிலாயினும் இருப்பேனென்று இவள் சொல்லுகிறாள்; அப்படிச் செய்வது இருவருக்கும் ஆபத்தானதென்றும், இன்னம் ஒரு வாரமாகிலும் கழியுமுன் இவளை அழைத்துப்போவது பிசகென்றும் துரைஸானி முடிவாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவள் மிகவும் ஏங்கிப்போய்ச் சோர்ந்து படுக்கையில் வீழ்ந்துவிட்டாள்; என்ன செய்வதென்பது தோன்றவில்லை; அது சசிக்க முடியாத காட்சியாக இருக்கிறது – என்றாள். 

அப்போது தந்தை, மகள் ஆகிய இருவரது தேகங்களும் பதறின. இருவரது கண்களினின்றும் கண்ணீர் வழிந்தது; மேலும் பேச மாட்டாமல் விசனத்தினால் உருகி இருவரும் உட்கார்ந்து போயினர். 

பெரிய:- (மிகவும் வருந்திய குரலில்) ஆகா! காதால் கேட்கவே சகிக்கவில்லையே! மனிதருக்கு இப்படியும் ஆபத்து வருமோ! இன்னதைச் செய்வ தென்பது தோன்றவில்லையே!- என்றார். உடனே யோசனையில் ஆழ்ந்தார்; பிறகு நூர்ஜஹானை நோக்கி, ”அம்மா! நாம் ஒரு காரியம் செய்யலாம்; இன்று வந்த டிப்டி கலெக்டர் எந்த இடத்தில் தங்கியிருக்கிறார் என்பதை நாளைக்குக் காலையில் சாமாவையர் மூலமாக அறிந்துகொண்டு, அவரிடம் போய் விஷயங்களைச் சொல்லி பெண்ணையும் அவரிடம் ஒப்புவித்து விடுவோம்; அதுதான் சரியான காரியம்.” 

நூர்- (மிகுந்த விசனத்தோடு) அவரைப்பற்றியும் ம் துரைஸானி சாமாவையரிடம் கேட்டாளாம். அவர் திரும்பி ஊருக்குப் போய்விட்டாராம்; இன்று காலையிலே தான் அவர் இந்த ஊருக்கு வந்தாராம்; அவருக்கு உத்தியோக விஷயத்தில் பெருத்த ஆபத்து வந்து விட்டதாம்; அவர் இன்று வைத்திய சாலைக்கு வரும்போது, நடுவழியிலிருந்த போலீஸ் ஸ்டேஷனில் அவரை இறங்கச் செய்து உள்ளே அழைத்துப் போனார்களாம்; கமிஷனர் துரை தஞ்சை கலெக்டர் துரையிடத்திலிருந்து வந்திருந்த தந்தி உத்தரவை அவரிடம் கொடுத்தாராம்; அதில் அவரை வேலையிலிருந்து நீக்கி வைத்திருப்பதாக உத்தரவு செய்யப்பட்டிருந்ததாம்; அதை வாங்கிக்கொண்டபின் அவர் வைத்தியசாலை, நாடகக்காரன் வீடு முதலிய இடங்களுக்குப் போனாராம்; நேற்று இராத்திரி அவருடைய வீட்டில் பெருத்த கொள்ளை நடந்ததாகவும், அவருடைய மனைவி கடுமையாக அடிபட்டுக் கிடப்பதாகவும் தந்தி வந்ததாம்; உடனே அவரும் அவருடைய தாயாரும் புறப்பட்டுப் போய்விட்டார்களாம் – என்றாள். 

அதைக் கேட்ட பெரிய தம்பி மரக்காயரது தேகம் கிடுகிடென்று ஆடியது; அவர் பெருத்த வியப்பும் திகைப்பும் அடைந்தார். “ஆ! என்ன ஆச்சரியம்! இது உண்மைதானா! ஒரு மனிதருடைய தலையின் மேல் இத்தனை இடிகள் விழுமோ! அவருக்காவது வேலைபோகவாவது! அவர் எவ்விதமான குற்றமும் செய்யமாட்டாரே! எந்தப் போலீஸ் ஸ்டேஷனில் உத்தரவு கொடுத்தார்களாம்?” 

நூர் பீட்டர் சாலையிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்தார்களாம்; அதன் விவரம் தெரியவில்லை – என்றாள். 

அதைக் கேட்ட பெரியதம்பி மரக்காயர் மிகவும் ஆழ்ந்து யோசனை செய்தார்; தமது ஹுக்காவின் காம்பை வாயில் வைத்து வலுவாக நாலைந்து முறை இழுத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு ஐந்து நிமிஷநேரம் நிஷ்டையில் இருந்தார். பிறகு ஏதோ நினைவைக் கொண்டு திடுக்கென்று எழுந்து எதிரிலிருந்த ஒரு மேஜைக்குச் சென்றார்; டெலிபோன் (Telephone) என்னும் செய்தியனுப்பும் கருவி அதன் மீதிருந்தது; அதை எடுத்து வாயிலும் செவியிலும் வைத்துக்கொண்டு பீட்டர்சாலைப் போலீஸ் ஸ்டேஷனிலிருந்த சமய சஞ்சீவி ஐயருடன் பேசினார். உடனே புறப்பட்டு தமது பங்களாவுக்கு வரும்படி ஐயரிடம் சொல்லிவிட்டுத் திரும்பவும் வந்து தமது ஆசனத்தை அடைந்தார்; “என்ன செய்வ தென்பது தோன்றவில்லை. இந்தப் பெண்ணின் தகப்பனார் இங்கிருந்தால்; அவரிடம் பெண்ணை ஒப்புவித்து விடலாம்; நம்முடைய கவலையெல்லாம் தீர்ந்துபோகும். அவரோ ஊருக்குப்போய் விட்டார்; இவளுடைய புருஷன் வீட்டில் கொண்டுபோய் விடுவோமானால், இவளுடைய நாத்திமார்கள் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்; ஒருக்கால் சேர்த்துக் கொண்டாலும் இந்த நிலைமையில் விஷமிட்டுக்கொன்றாலும் கொன்று விடுவார்கள்; வைத்தியசாலையிலுள்ள புருஷனோ இன்னும் கண்ணைக்கூடத் திறக்கவில்லை; பிழைப்பதே சந்தேகமாக யிருக்கிறது. அவர் கொஞ்சம் தேறி குணமடைந் தாலும், இவளைப் பார்த்தால் அவருக்குப் பெருத்த ஆத்திரமுண்டாவது நிச்சயம். அது அவருடைய தேகத்திற்குத் தீங்கை விளைவிக்கும்; இப்போது நாம் என்ன செய்வ தென்பது தோன்றவில்லை” என்றார் பெரியவர். 

நூர்:- இவள் இதற்கு முன் பாலையாகிலும் கொஞ்சம் குடித்தாள்.இப்போது தன்னுடைய புருஷனைக் காண வேண்டு மென்னும் கவலையில் பாலும் வேண்டாமென்றும் விலக்கி விட்டாள். இவள் இப்படியே இரண்டொரு நாள்களிருந்தால் இவ்விடத்திலேயே உயிரை விட்டுவிடுவாள் போலிருக்கிறது. இது நமக்குப் பெருத்த வதையாக இருக்கிறது. பார்க்கச் சகிக்க வில்லை. என்னைக் காணும்போதெல்லாம் இவள் கெஞ்சி மன்றாடுவாள்; என் மோவாயைப் பிடித்து வேண்டிக் கொள்ளுகிறாள்.எப்படியாகிலும் தான் தன்னுடைய புருஷனைப் பார்க்கவேண்டும் என்கிறாள். பைத்தியங் கொண்டவளைப்போலப் பிதற்றுகிறாள் – என்றாள். 

பிறகு இருவரும் சிந்தனையில் ஆழ்ந்து தம்மை மறந்து பத்து நிமிஷ நேரம் மௌனமாக இருந்தனர். 

அப்போது ஒரு வேலைக்காரி அவ்விடத்திற்கு வந்து, வெளியில் பைசைக்கிலில் யாரோ ஒருவர் வந்திருப்பதாகவும், அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று சொன்னதாகவும் கூறினாள். மரக்காயர், “அவரைக் கச்சேரி மண்டபத்துக்கு அழைத்துக்கொண்டு வா!” என்று கூறி அவளை அனுப்பிவிட்டு, எழுந்து வெளியிற்சென்று தாம் கச்சேரி செய்யும் உத்தியோக மண்டபத்திற்குப் போய் நாற்காலியில் அமர்ந்துகொண்டார். அடுத்த நிமிஷம் சமய சஞ்சீவி ஐயர் தோன்றி மரக்காயருக்கு வணக்க வொடுக்கமாக சலாம் செய்து மரியாதையாக நின்றார். உடனே மரக்காயர் நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளும்படி அன்போடு ஐயரை உபசரிக்க, அவர் மிகவும் தயங்கிகடைசியில் ஒரு விசிப்பலகையின்மீது உட்கார்ந்துகொண்டார். மரக்காயர், சென்னைத் துரைத்தனத்தில் யாவற்றையும் படைத்துக் காத்தழிக்கும் மும்மூர்த்திகளான பெருந் தெய்வங்களில் ஒருவராதலால், அற்ப உத்தியோகஸ்தரான தம்மை அவர் அவ்வளவு தூரம் மதித்து அழைப்பதன் காரணமென்னமோ வென்று ஐயமுற்று சஞ்சீவி ஐயர் பெரிதும் கலக்கமும், அச்சமு மடைந்து வந்திருந்தார்; தாம் ஏதாகிலும் குற்றம் செய்து விட்டோமோ என்று கவலைகொண்டார். அப்படி யிருந்தால் தமது மேலதிகாரியின் மூலமாக வன்றோ அத்தகைய உத்தரவு அனுப்பப்பட வேண்டுமென்று நினைத்து, குழப்பமும் பலவாறான சஞ்சலங்களையும் அடைந்து மரக்காயர் எந்த விஷயத்தைப்பற்றி பேசப்போகிறாரோ வென்று ஆவல் கொண்டு, அவரது வாயைப் பார்த்தவண்ண மிருந்தார்; முதலில் அவர் தம்மைக் காணும்போதே தம்மீது விழுந்து கடிந்து விடப் போகிறாரென்று நினைத்து வந்தார். ஆனால், அவர் தம்மை நாற்காலியில் அமரும்படி அன்போடு உபசரித்ததைக் காண, சஞ்சீவி ஐயரின் மனது ஒருவாறு அமரிக்கை யடைந்தது. என்றாலும், அவ்வளவு உயர்வான பதவியிலிருக்கும் பெரிய மனிதர் தம்மை ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தின் பொருட்டே வரவழைத்திருக்க வேண்டுமென்று நினைத்தார். 

அடுத்த நிமிஷத்தில் மரக்காயர், “ஐயரே! இன்று காலையில் தஞ்சாவூர் டிப்டி கலெக்டர் சாம்பசிவையங்கார் உம்முடைய ஸ்டேஷனுக்கு வந்தாரா?” என்றார். 

அதை கேட்ட சஞ்சீவி ஐயர் மேலும் துணிவடைந்தவராய், “ஆம் வந்தார்” என்றார். 

பெரிய:- என்ன காரியமாக வந்தார்? 

சஞ்சீ:- நேற்று ராத்திரி தஞ்சாவூர் கலெக்டரிடமிருந்து போலீஸ் கமிஷனருக்கு ஒரு தந்தி வந்தது; டிப்டி கலெக்டர் சாம்பசிவையங்கார் இன்று காலையில் எழும்பூரில் இறங்கி, தொளசிங்கபெருமாள் கோவில் தெருவிலுள்ள வக்கீல் வராகசாமி ஐயங்கார் வீட்டிற்கு வருவாரென்றும், அவர் ரஜா இல்லாமல் இரண்டு முறை பட்டினத்திற்கு வந்த குற்றத்திற்காகவும், பொய்யான செலவுப் பட்டி தயாரித்து சர்க்கார் பணத்தை வாங்கிக்கொண்ட குற்றத்திற்காகவும், லஞ்சம் வாங்கின குற்றத்திற்காகவும், தமது விசாரணை முடியும் வரையில் அவரை வேலையிலிருந்து நீக்கி வைப்பதாகவும் அவர் உடனே தஞ்சாவூருக்கு வந்து தமது சீல் முகர் முதலியவற்றை கஜானா டிப்டி கலெக்டரிடம் ஒப்புவிக்க வேண்டுமென்றும், இந்தச் செய்தியை கமிஷனரே நேரில் அவருக்கு அறிவித்து அவரிடம் கையெழுத்துப் பெறவேண்டு மென்றும் அந்தத் தந்தியில் கலெக்டர் எழுதியிருந்தார். நான்கு நாள்களுக்கு முன் அவர் இந்த ஊருக்கு வந்து தம்முடைய பெண்ணை ரகசியமாக அழைத்துப் போனாராம்; அதன் விவரத்தைப் பற்றி வக்கீல் வீட்டிலும் விசாரணை செய்து; கிடைக்கக் கூடிய சாட்சியத்தையும் அனுப்பும்படி தந்தியில் கமிஷனருக்குத் தனியாக கலெக்டர் எழுதியிருந்தார். நான் இன்று காலையில் அவர்களுடைய வீட்டில் போய் விசாரணை செய்தேன். டிப்டி கலெக்டர் நான்கு நாள்களுக்கு முன் வந்தது உண்மைதானென்று வக்கீலின் அக்காள் சொனாள்; அவர்களுக்கு நண்பரான அடுத்த வீட்டு சாமாவையரும் அதற்கு அநுகூலமாக வாக்குமூலம் கொடுத்தார். இருவரின் வாக்குமூலங்களையும் டிப்டி கலெக்டர் கையெழுத்தையும் இன்று நாங்கள் தஞ்சாவூர் கலெக்டருக்கு அனுப்பிவிட்டோம். 

பெரிய:-(பெரிதும் வியப்படைந்து) என்ன ஆச்சரியம்! ஒரே அம்பினால் இரண்டு பட்சிகளைக் கொன்றிருக்கிறார்களே! மூளை இருந்தாலும் இப்படியல்லவா இருக்கவேண்டும்; கடிதங்களை எழுதி இங்கே வைத்துவிட்டு, தஞ்சாவூர் கலெக்டருக்கும் எழுதி யிருக்கிறார்கள் போலிருக்கிறது! இந்த மாதிரியான அற்புதத்தை நான் இதுவரையில் காதாலும் கேட்டதில்லை; பலே! பலே! (சிறிது மௌனம்) அதிருக்கட்டும்; வராகசாமி ஐயங்கார் மோட்டார் வண்டியில் அறைபட்டு வைத்தியசாலையிலிருப்பது உமக்குத் தெரியுமா? 

சஞ்சீ:- தெரியும், அதையும் சாமாவையரிடம் கேள்விப் பட்டேன்.மாமனாரின்மேல் கோபமாக வக்கீல் கடற்கரைக்குப் போனபோது வண்டி ஏறிவிட்டதென்று சாமாவையர் சொன்னார். 

பெரிய: ஓகோ ! உம்மிடம் ஒருவிதமாகவும், டாக்டர் துரைஸானியிடம் வேறுவிதமாகவும் சொல்லி யிருக்கிறாரோ! சரிதான்; எல்லாம் பொருத்தமாகத் தானிருக்கிறது. அது ருக்கட்டும். உம்மிடம் நான் சில ரகசியங்களைத் தெரிவிக் கிறேன்; ஆனால், நான் உத்தியோக முறையில் அவைகளைத் தெரிவிக்கவில்லை. உம்மை ஒரு நண்பராக மதித்து உம்மிடம் விஷயங்களைச் சொல்லுகிறேன். நீர் எனக்குச் சில உதவிகள் செய்ய வேண்டும். செய்வீரா? 

சஞ்சீ:- கேவலம் சேவகனான என்னைத் தாங்கள் இவ்வளவு தூரம் மதித்து அழைத்து, சரிசமமாக உட்காரவைத்து உத்தரவு கொடுப்பதைப் பெருத்த அதிர்ஷ்டமாகவே நான் நினைக்கிறேன். விஷயங்களை நீங்கள் சொல்லலாம்; என்னால் என்ன காரியம் ஆக வேண்டுமோ, அதை நான் உடனே செய்து முடிக்கிறேன். தங்களுக்குப் புலிப்பால் தேவையானாலும் உடனே கொண்டு வருவேன்-என்று உறுதியாகக் கூறினார். 

அந்த உறுதியான மொழியைக் கேட்ட பெரிய தம்பி மரக்காயர் மிகவும் நம்பிக்கையடைந்தார்; சஞ்சீவி ஐயரோடு அரைநாழிகை வரையில் இரகசியமாகப் பேசி, மேனகாவின் பெட்டியிலிருந்து அகப்பட்ட கடிதங்கள் முதலிய பல விஷயங்களை அவரிடம் தெரிவித்து, மேல் ஆகவேண்டிய வற்றிற்கு அவரது யோசனைகளைக் கேட்டும், தமது எண்ணங்களை வெளியிட்டு மிருந்தார். முடிவாக சஞ்சீவி ஐயர், “கவலை வேண்டாம்; தாங்கள் சொன்னபடி காரியத்தை நான் நிறைவேற்றுகிறேன்” என்று உறுதியாகக் கூறிவிட்டு சலாம் செய்து விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். பெரிய தம்பி மரக்காயர் எழுந்து நூர்ஜஹானிடம் விரைவாகச் சென்றார். 

அதிகாரம் 21 – முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ? 

தஞ்சை போலீஸ் இன்ஸ்பெக்டரான புளுகுமலைப் பிள்ளையும் தாந்தோனி ராயரைப்போலவே, சாம்பசிவத்தின் மீது பெருத்த பகைமை கொண்டிருந்தார். அதன் காரணமென்ன வென்பதை இரண்டொரு சொற்களில் சொல்லிவிடுவோம்; பிள்ளையவர்கள் பெருத்த படிப்பாளியல்லர்; என்றாலும் அவரது கற்பனா சக்தியோ அபாரமானது; அவரது மூளையோ மயன், விசுவகருமன் முதலிய தெய்வலோகத்தின் ஞ்சினீர்களது நிருமாணச் சக்தியைக் கொண்டது. அவர் கட்டும் கதைகளோ அரபிக் கதைகளிலும் அற்புதமான காற்று மூட்டைகள்; அவரது புத்தியும் விவேகமும், மகா தீவிரமும் கூர்மையும் பொருந்தியவை. நூலாசிரியர்கள் தமது மனோ வல்லமையால் பலவகைப்பட்ட மனிதரையும்,விஷயங் களையும் சம்பவங்களையும் நிஜம்போல நிருமாணித்துக் காகிதத்தில் காட்டுவதைப் போல, பிள்ளையவர்கள் உண்மை மனிதரை எடுத்துக் கொண்டு பொய்யான விஷயங்களை சிருஷ்டித்து அதனால் பல திருவிளையாடல்கள் செய்து வந்தார்.உண்மையான குற்றவாளி கச்சேரிக்கே வருவதில்லை. அவனிடம் பெருத்த அபராதத்தொகையை அவரே வசூலித்து எடுத்துக்கொள்வார். வேறு மனிதரைக் கொணர்ந்து சாம்பசிவத்தின் கச்சேரியில் நிறுத்துவார். அவரிடம் கொண்டு வரப்படும் ஆயிரம் பொய்க் கேஸ்களில் ஒன்றாகிலும் ஊத்துக்கு நிற்பதில்லை. யாவும் பொய்யாகவே புகைந்துபோம். சாம்பசிவத்தின் பகுத்தறிவின் முன் அவரது புளுகு மூட்டைகள், நீர்க்குமிழிகளைப் போல உடைந்து வெறுமையாய்ப் போவதே வழக்கமா யிருந்தது; குற்றமற்றவர்கள் யாவரும் விடுபட்டு சாம்பசிவத்தை வாழ்த்திக் கொண்டுசென்றனர். அதனால் பிள்ளையவர்கள் மேலதிகாரிகளிடத்தில் கடுமையான கண்டனங்கள் பெற்று வந்தார்; அவருக்குக் கிடைத்திருந்த கரும்புள்ளிகள் (Black Marks) சோளக்கொல்லைப்பானைகளின் புள்ளிகளிலும் அதிகமாக இருந்தன. அவரது சம்பளமோ ரூபாய் இரு நூறிலிருந்து நூற்றைம்பதாகச் சுருங்கி விட்டது. இவ்வாறு அவர் டிப்டி கலெக்டரால் பெருத்த துன்பங்களுக்கு ஆளாய் வேலையை இழக்கும் நிலைமையிலிருந்தார். ஆகையால் அவர் சாம்பசிவத்தின் மீது கடும்பகைமை கொண்டிருந்தார். பிள்ளையவர்களின் ஆத்திரம் வடவாமுகாக் கினிக்கும், நரகத்தீய்க்கும் ஒப்பிடத்தக்கதாயிருந்தது. சாம்பசிவத்திற்கும் அவரது குடும்பத்தாருக்கும் எவ்வளவு கொடுந் துன்பங்கள் இழைக்கக் கூடுமோ, அவ்வளவையும் செய்ய பிள்ளையவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார். தமக்குத் தகுந்த துணைவரான தாந்தோனி ராயருடன் சேர்ந்துகொண்டு பல சூழ்ச்சிகளைச் செய்ய ஆரம்பித்தார். ராயர் கலெக்டர் துரையின் மனதில் பகைமையை மூட்டி சாம்பசிவத்திற்குத் துன்பங்களை உண்டாக்கினது முன்னரே தெரிந்த விஷயம். டிப்டி கலெக்டர் அவரது மைத்துனனான கிட்டன் மூலமாகவும் பலரிடம் லஞ்சம் வாங்கினா ரென்று அநேகம் சாட்சிகளைத் தயாரித்து அவர்களிடம் வாக்குமூலமும் பெற்று பெரிய கலெக்டரிடம் கொடுத்திருந்தார். கிட்டனது அறியாமையினால், கேஸ்களின் தீர்மானங்களை உணர்ந்த சேவகர்களிற் சிலர் சாம்பசிவத்தின் பெயரைச்சொல்லிப் பணம் வாங்கினதாக முன்னரே சொல்லப்பட்ட தல்லவா. அவ்வாறு பணம் கொடுத்தவர்களில் சிலரும் சாட்சி சொல்லத் தயாராக இருந்தனர். 

அந்த நிலைமையில் சாம்பசிவமும் கனகம்மாளும் பெண் காணாமல் போனதுபற்றி தந்தி வந்தவுடன் சென்னைக்குப் போன தினத்தன்று பிள்ளையவர்கள் ராயருடன் அவசரமாகத் தனிமையில் பேசவேண்டு மென்று செய்தி அனுப்பினார். ராயர் இரவு 8மணிக்கு வருவதாகச் சேவகன் மூலமாகச் செய்தி சொல்லி அனுப்பினாரல்லவா. அவ்வாறே காலந் தவறாமல் ராயர் பிள்ளை அவர்களின் வீட்டிற்குச் சென்று, அன்று நிகழ்ந்த சம்பவங்களையும்,தாம் சாம்பசிவத்தின் விஷயத்தில் சொன்ன கோள்களையும், அதனாலுண்டான பலன்களையும் விரித்துக் கூற, புளுகுமலைப் பிள்ளையின் மனம் குளிர்ந்தது. தங்களது பகைவரின் வீழ்ச்சியைக் குறித்து இருவரும் கரைகடந்த மகிழ்வெய்தி, அவரையும் அவரது குடும்பத்தினரையும் மிகவும் பழித்து ஏளனம் செய்து பலவாறு தூற்றி நகைத்துக் கொண்டிருந்தனர். சாம்பசிவத்தை வேலையினின்று நீக்கி அவரைச் சிறைச்சாலைக்கு அனுப்புவது போதுமென்பது தாந்தோனி ராயரின் கொள்ளை. அந்தத் தண்டனை போதாதென்பது இன்ஸ்பெக்டரின் எண்ணம். சாம்பசிவத்தின் வீட்டிலிருந்த பொருளை யெல்லாம் எடுத்துக்கொண்டு போய்விடவும், அவரையும் அவரது வீட்டிலுள்ளதாய் மனைவி முதலியோரையும் நன்றாக அடித்து, கால்களையும் கைகளையும் ஒடித்துவிடவும் தக்க ஆட்களைத் தயாரித்து அன்றிரவு அவர்கள் அந்தக் காரியத்தை முடிக்க வேண்டுமென்று உறுதி செய்து கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர். தெற்குச் சீமையின் பிரபலக் கள்ளர்களான சங்கிலி, கட்டாரி என்ற கொள்ளைக்காரர்களே அதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். அவர்களது பெயரைக் கேட்ட மாத்திரத்தில் ஜனங்கள் உளறி யடித்துக்கொண்டு ஒளிந்துபோவார்கள். உடனே ஜுரமும், சீதபேதியும் உண்டாய்விடும். அவ்விருவரும் அவ்வளவு மகா கொடிய பாதகர்கள். அவர்கள் வீட்டிற்குள்ளிருக்கும் மாடுகளை யெல்லாம் மூட்டையாகக் கட்டி கூரையின் வழியாகவே ஏற்றி வெளிப்படுத்திவிடக்கூடிய அவ்வளவு திறமை வாய்ந்த அரக்கர்கள். சமயம் நேர்ந்தால் தமது. தாய்களையும், பிள்ளைகளையும், மனைவிமாரையும் ஆடுகளைப்போல வெட்டி பலியிடக் கூடியவர்கள். அவர்களிடம் தாம் செய்திருந்த ஒப்பந்தத்தை பிள்ளையவர்கள் ராயரிடம் கூற, அவர் மிகவும் சந்தோஷமடைந்து அதை ஆமோதித்தார். ஆனால், அந்தப் பெருத்த மண்டகப்படியில் சாம்பசிவத்திற்கு நிவேதன மில்லாமல் போகிறதே என்பது மாத்திரம் அவரது மனதிற்குக் குறையாக இருந்தது. என்றாலும், ராயரும் இன்ஸ்பெக்டரும் பெருமகிழ்வடைந்து அன்றிரவு இன்பக் கனவு கண்டு நன்றாக துயின்றனர். 

அன்று விடியற்காலம் முன்று மணிக்கே தாந்தோனி ராயர் எழுந்து தமது குதிரை வண்டியில் ஏறிக்கொண்டு பத்து மைல் தூரத்திற்கப்பாலுள்ள சாலியமங்கலம் என்ற ஊருக்கு சர்க்கியூட் போய்விட்டார். பொழுது விடிந்தது. டிப்டி கெலெக்டர் வீட்டில் நடந்த பயங்கரமான கொள்ளையைப்பற்றி செய்தி மிகவும் சீக்கிரமாக ஊர் முற்றிலும் பரவியது. தமது ஸ்டேஷனிலிருந்த இன்ஸ்பெக்டர் புளுகுமலைப் பிள்ளை கொள்ளை நடந்ததென்பதைக் கேட்டு, வியப்பும் திகைப்பும் விசனமு மடைந்து, உடனே புறப்பட்டு டிப்டி கலெக்டருடைய வீட்டிற்கு ஓடோடியும் வந்தார்; வீட்டின் உட்புறத்தையெல்லாம் ஆராய்ந்து பார்த்தார். வாசலிலிருந்த காலடிச் சுவடுகளின் மீது காகிதங்களை வைத்து அவற்றின் வடிவத்தை அப்படியே சித்திரமாக எழுதிக்கொண்டார். எதிர்த்த வீட்டு ஏகப்பன், நடுவீட்டு நாகப்பன், அடுத்தவீட்டு அங்கப்பன் முதலியோரிடம் வாக்கு மூலங்களை வாங்கினார். வைத்தியசாலையிலிருந்த கிட்டன், தங்கம்மாள் முதலியோரிடம் சென்று கிட்டனிடம் வாக்குமூலம் வாங்கிக் கொண்டார். அவனது உடம்பிலும் தங்கம்மாளது உடம்பிலுமிருந்த காயங்களைப் பற்றிய விவரங்களை யெல்லாம் டிப்டி கலெக்டர் வீட்டில் நடந்த கொடிய கொள்ளையைப் பற்றி வருந்திப் பேசி வாய்ச் சொற்களாலும், கண்ணீரின் ரூபமாகவும் மிகுந்த அனுதாபத்தை ஓட விட்டார். அங்கு மிங்கும் ஓடினார். மாஜிஸ்டிரேட்டிடம் சென்று அவரைக் கட்டிக்கொண்டழுதார்; டிப்டி கலெக்டர் ஊரில் இல்லை யென்னும் சங்கதியை அறிந்த உள்ளாளின் உளவினால் அந்தக் கொள்ளை நடந்திருப்பதாகக் கூறினார். டிப்டி கலெக்டர் ரஜா வாங்கிக் கொண்டு போன விஷயம், அவரது சேவகர்களுக்கு மாத்திரமே தெரிந்ததென்றும், அவர்கள் மீது தாம் சந்தேகங்கொள்வதாகவும் கூறி சேவகர்கள் ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று விசாரணை செய்தார். சேவக ரெங்கராஜுவின் வீட்டிற் கெதிரில் அன்று பகலில் சில பள்ளர்கள் மீன் விற்றுக்கொண்டிருந்ததாக அவரது விசாரணையில் இரகசியம் வெளியாயிற்று; தஞ்சாவூர் கீழ்க்கோட்டை வாசலிலிருந்து மாரியம்மன் கோவிலுக்குப் போகும் பாதையிலுள்ள பள்ளத் தெருவில் குடியிருந்த பதினைந்து பள்ளர்களைக் கைதி செய்து, தமது ஸ்டேஷனில் சிறைப்படுத்தி, உண்மையைச் சொல்லும்படி குட்டைத் தடியால் அவர்களது மண்டையில் மொத்தி வாயாலும் மூக்காலும் இரத்தம் கக்கும்படி அவர்களை அன்று பகல் முழுதும் மர்த்தனம் செய்து கொண்டிருந்தார். டிப்டி கலெக்டர் பலரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு எவ்வித அனுகூலமும் செய்யாமையால், அவர்மீது ஆத்திரமடைந்த கட்சிக்காரர்கள் பள்ளர்களை விட்டு அந்தக் கொள்ளையை நடத்தி இருக்கிறார்கள் என்றும், தாம் அதற்குத் தக்க நடவடிக்கை களைச் செய்து வருவதாகவும் பெரிய கலெக்டருக்குத் தமது சப் இன்ஸ்பெக்டர் மூலமாகச் செய்தி சொல்லியனுப்பினார். 

கொள்ளையின் விவரங்களையும், தங்கம்மாள் படு வதை செய்யப்பட்டதையும் கேட்ட பெரிய கலெக்டர் துரை மிகவும் விசனித்து இரங்கினார். சாம்பசிவையங்கார் அவரது அபிப்பிராயத்தில் மிகவும் பொல்லாததுஷ்டராகத் தோன்றினா ராயினும், தமது கீழ் உத்தியோகஸ்தரான அவருக்குப் பிறர் அத்தகைய தீங்கு செய்ததைப் பொறாமல் பதைபதைத்து பறந்தார். வெள்ளைக்காரர் பெண் மக்களிடம் உண்மை யிலேயே அதிகமதிப்பும், அன்பும் வைப்பது இயல் பாதலால், தங்கம்மாளுக்கு நேர்ந்த விபத்தைக் கேட்டு துரை டிப்டி கலெக்டர் விஷயத்தில் பச்சாதாபமும், க்ஷமையும் கொண்டார். உடனே தமது பைசைக்கிலில் ஏறிக்கொண்டு வைத்திய சாலைக்குப் பறந்து சென்று, வேடனால் சுடப்பட்ட பஞ்சவர்ணக்கிளிபோல மிகவும் பரிதாபமான நிலையில் அங்கு கிடந்த வடிவழகியான தங்கம்மாளைப் பார்த்தார். அவரது மனதும் கண்களும் கலங்கின. அந்தத் துயரமான சம்பவம் அவருடைய மனதில் மாறாமல் நிரந்தரமாக பதிந்துபோனது. மிகவும் ஜாக்கிரதையாக வைத்தியம் செய்து காப்பாத்தும்படி கிட்டனிடம் வற்புறுத்திச் சொல்லிவிட்டு அவர், தமது பங்களாவை யடைந்தார். அவர் மனதில் இரக்கமும், தயாளமும், அநுதாபமும் நிறைந்திருந்தன. அந்த நிலையில் அவர் தமது காலைத் தபால்களை உடைத்துப் பார்த்தார். தபால்களில், சென்னை போலீஸ் கமிஷனரால் அனுப்பப் பட்டிருந்த, சாமாவையர் பெருந்தேவியம்மாள் ஆகிய இருவரது வாக்குமூலமும், தந்தி உத்தரவைப் பெற்றுக் கொண்டதற்குச் சாம்பசிவம் கையெழுத்திட்ட காகிதம் முதலியவை ஒரு உறையில் இருந்தன. துரை அவற்றைப் படித்தார்; அப்போது சாம்பசிவத்தின் மீது அவ்வளவு கோபமும் அருவருப்பும் தோன்றவில்லை. அவர்மீது தாம் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தி விடலாமா வென்று நெடுநேரம் எண்ணமிட்டார். ஆனால், தாம் முதல் நாள் இரவிலேயே சென்னை துரைத்தனத்தாருக்கு ஒரு தந்தி அனுப்பி, அதில் டிப்டி கலெக்டர் செய்துள்ள குற்றங்களையும், அதற்காக அவரைத் தாம் வேலையினின்று நீக்கி வைத்திருப்பதையும், விசாரணைகள் தீர்ந்த பின் முடிவான அறிக்கை யொன்றை அனுப்புவதாயும் எழுதி யிருந்தார். ஆகையால், இப்போது பரோபகாரத்தைக் கருதி திடீரென்று நடவடிக்கைகளை நிறுத்தி விட்டால், அது தமக்கே துன்பமாய் முடியுமென்று நினைத்தார். மிகவும் அயோக்கியமான நடத்தையுள்ள சாம்பசிவம், தாம் செய்யும் நன்மையை நினையாமல், தம்மீது திருப்பிப் பாணம் தொடுப்பாரென்றும் கலெக்டர் நினைத்து அஞ்சினார். அவர் குற்றங்களைச் செய்யும் துஷ்ட மனிதரென்பதை கலெக்டர் உறுதியாக நம்பி யிருந்தார். என்றாலும், அவருக்குண்டான பயங்கரமான ஆபத்தை நினைக்க, அவரது விஷயத்தில் பெருங்கருணை தோன்றியது. சாம்பசிவத்தின் பொல்லாத வேளையில், அவர் ரூ.200,300 தம்மிடம் பெற்றுக் கொள்ளுவதாயினும், அதைக் கொடுத்து உதவத் தயாராக இருந்தார். வேறுவிதமான எத்தகைய உதவியையும் செய்ய ஆயத்தமாக இருந்தார். ஆனால், சென்னை துரைத்தனத்தாருக்கு எழுதிவிட்ட விஷயத்தில் பொய்சொல்லி அதை முற்றிலும் மாற்ற அவர் விரும்ப வில்லை. மாற்றுவதும் தமக்குத் தீங்காய் முடியுமென்று நினைத்தார்; மின்னற்கொடியான தங்கம்மாளின் பொன்னைப் பழித்த மேனியில் உண்டாயிருந்த காயங்கள் யாவும் வாய் திறந்து அவருடன் பேசிக் கெஞ்சி மன்றாடி அவளது கணவனை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்வதைப் போல கலெக்டரது மனதில் தோன்றி அவரை வதைத்தமையால், தாம் அவருக்கு ஏதாகிலும் உதவி செய்ய வேண்டுமென்னும் இரக்கமும் ஒருபுறம் வதைத்தது. அவ்வாறு அன்றைய பகலையும் இரவையும் அவர் சிந்தனை செய்வதிலேயே போக்கி மறுநாள் ஒருவித முடிவுடன் விழித் தெழுந்தார். சாம்பசிவையங்காரோ கொடிய பாவங்களையும், குற்றங்களையும் செய்தவர். அவற்றின் பொருட்டு கடவுள் அவரை அந்தக் கொள்ளை யினால் மிகவும் கடுமையாகத் தண்டித்துவிட்டார். ஒரு மனிதன் அதைவிட அதிகக் கடுமையான தண்டனையை அடைய முடியாது. ஆகையால், தாம் அவரது விஷயத்தில் தம்மாலான கருணையைக் காட்டி உதவி செய்வது அவசியமென்று நினைத்தார். லஞ்சம் வாங்கின கேஸ்கள் ருஜுவாக்கப் பட்டால், அது அவரைச் சிறைச்சாலைக்கு அனுப்பத்தக்க பெரிய குற்றமாகும். ரஜா இல்லாமல் ஊரை விட்டுப் போனதும், பொய்யான செலவுப் பட்டி தயாரித்ததும், அதன்படி பணம் வாங்கியதும் அவரை வேலையினின்று விலக்கப் போதுமான குற்றங்கள்; ஆகையால், அவரைச் சிறைச்சாலைக்கு அனுப்பாமல் வேலையிலிருந்து நீக்குவதோடு விட்டுவிடத் தீர்மானித்தார். தவிர, அவரைச் சிறைச்சாலைக்கு அனுப்பி விட்டால், அவருடைய மனைவியின் பரிதாபகரமான நிலைமையில் அவளை ஆதரித்துக் காப்பாற்ற மனிதரில்லாது போவதைக் கருதியும், அவரை வேலையினின்று நீக்குவதோடு விட்டு விடத் தீர்மானித்தார். கெலெக்டர், துரைத்தனத்தாருக்கு எழுதி அனுப்பிய தந்தியில் சாம்பசிவையங்கார் லஞ்சம் வாங்கியதாக யூகிக்க இடமிருக்கிறதென்று சந்தேகமாக எழுதி யிருந்தாரேயன்றி அதை உறுதியாக எழுதவில்லை; ஆகையால், அது மாத்திரம் ருஜுவாகவில்லை யென்று நழுவ விட்டுவிடுவது அவருக்கு எளிதாகத் தோன்றியது. இந்நினைவுகளுக்கிணங்க, சாம்பசிவத்தின் மீது முடிவான குற்றப்பத்திரிகையைத் துரை உடனே தயாரித்தார். அதில் அடியிற் காணப்பட்ட குற்றங்களைக் குறித்தார்: 

1) நான்கு நாட்களுக்கு முன் அவர் ரஜா இல்லாமல் சென்னைக்குப் போனது. (இதற்குச் சாட்சியம்; பெண்ணை அழைத்து வந்ததாக சென்னையிலிருந்து வந்த தந்தி, பெருந்தேவியம்மாள் சாமாவையர் ஆகிய இருவரது வாக்குமுலம்) 

2) அன்றைய தினம் அம்பாள் சமுத்திரம் முதலிய ஊர்களில் இருந்ததாக பொய்யான செலவுப்பட்டி தயாரித்து சர்க்கார் பணத்தைப் பெற்றுக்கொண்டது. (இதற்குச் சாட்சியம்; செலவுப்பட்டியும் மேற்கண்ட தஸ்தாவேஜுகளும்) 

3) முதல்நாள் தாம் ரஜாக் கொடுக்க மறுத்திருந்தும், அந்த உத்தரவை மீறி சென்னைக்குப் போனது. (இதற்குச் சாட்சியம்; சென்னையில் போலீஸ் கமிஷனர் முன் கையெழுத்திட்ட காகிதம்) 

இம் மூன்று குற்றங்களுக்காகவும் சாம்பசிவத்தை ஏன் வேலையிலிருந்து அறவே நீக்கிவிடக் கூடாதென்பதற்குத் தக்க முகாந்திரங்களை இரண்டு நாட்களுக்குள் அவர் எழுதி யனுப்ப வேண்டிய தென்று கலெக்டர் குற்றப்பத்திரிகை தயாரித்து வைத்துக்கொண்டு சென்னையிலிருந்து சாம்பசிவத்தின் வருகையை எதிர்பார்த்திருந்தார். 

இங்கு நிலைமை இப்படியிருக்க, சென்னையிலிருந்து புறப்பட்ட சாம்பசிவமும் கனகம்மாளும் பித்தமும் பேயும் கொண்டவரைப் போல தலைவிரிகோலமாக தஞ்சை ரயிலடியி லிறங்கி, ஒரு குதிரை வண்டியி லேறிக்கொண்டு காற்றாகப் பறந்து ஓடிவந்து தமது வீட்டை யடைந்தனர்; அவர்கள் தங்களது உடம்பையும், மற்ற எல்லாவிதமான கவலைகளையும், உலகத்தையும் மறந்தவர்களாய், தங்கம்மாள் 

உயிருட னிருக்கிறாளோ, அன்றி இறந்து போய்விட்டாளோ என்ற ஒரே கவலையைக் கொண்டு அவளைப் பார்க்கவேண்டு மென்னும் ஆவலொன்றினாலேயே தள்ளப்பட்டு வந்து சேர்ந்து வீட்டின் வாசலில் வண்டியைவிட்டிறங்கினர். திண்ணையில் சேவகர் ஒருவரேனும் காணப்படவில்லை. வெளிக்கதவு தாளிடப் படாமல் வெறுமையாக மூடப்பட்டிருந்தது. அதைத் திறந்து கொண்டு அவர்கள் உள்ளே நுழைந்து தாழ்வாரம்,கூடம், அறைகள், மேன்மாடி முதலிய எல்லா இடங்களிலும் புகுந்து புகுந்து தேடினர். மனிதருக்குப் பதிலாக கம்பங்களும், சாமான்களுக்குப் பதிலாக வெறுவெளியும் காணப்பட்டன் வன்றி அசையும் பொருட்கள் ஒன்றும் காணப்படவில்லை. அது ஒழித்து விடப்பட்ட காலி வீட்டைப்போலிருந்தது. எங்கும் இரத்தக் குறிகள் காணப்பட்டன; அவைகளைக் காண இருவருக்கும் மூளை குழம்பியது. பெருங் கலக்க மடைந்து செய்யவேண்டுவதை அறிய மாட்டாமல் திகைத்து வாசலி லிருந்த வண்டியடியில் வந்து நின்றனர். அவர்களைக் கண்டு இரக்கங்கொண்ட எதிர்த்த கடையின் சொந்தக்காரன் எழுந்து ஓடிவந்து அவர்களிடம் விவரங்களைச் சொல்லி, தங்கம்மாள் வைத்தியசாலையில் இருப்பதாகக் கூற, அவர்கள் உடனே வண்டியில் ஏறிக்கொண்டு வைத்தியசாலையை யடைந்து, வண்டியை விட்டிறங்கி உட்புறம் நுழைந்தனர். அங்கிருந்த ஓரறையின் வாசலில் கிட்டனும், ரெங்கராஜும் மிகுந்த விசனத்தோடு இருக்கக் கண்டனர். அப்போது அவர்கள் தாம் எந்த உலகத்தில் இருக்கின்றோம் என்பதை மறந்தனர்; இருதிறத்தார்களும் ஒருவரை ஒருவர் கண்ட காட்சி, பிரிந்து போன கன்றும் தாயும் கூடியதைப் போல இருந்தது. இருதிறத்தாரின் தேகங்களும் பதறின; இருதிறத்தாரும் கண்ணீர்விட்டு விம்மி விம்மிப் பொருமினர். 

சாம்பசிவம் தஞ்சைக்கு வந்த தொடக்கத்தில் ரெங்கராஜுவை வைததும், அடித்ததும், தெரிந்த விஷயம். அதன் பிறகும் அவர் முன் கோபத்தைக் காட்டிப் பேசுவதே வழக்கம். என்றாலும், ரெங்கராஜு மிகவும் நற்குணமும் விவேகமும் உள்ள மனிதன். அவன் டிப்டி கலெக்டரது குடும்பத்தில் பழகப் பழக அவர்களது பெருந்தன்மை, உள்ளார்ந்த குணம், அன்பு, நீதிநெறி தவறாத சீலம் முதலியவற்றைக் காணக் காண அவன் சாம்பசிவத்தினிடமும் மற்றையோரிடமும் ஆழ்ந்த அபிமானமும், வாஞ்சையும் வைத்து அவர்கள் பொருட்டு தனது உயிரையும் கொடுக்கக் கூடிய நிலைமையில் இருந்தான். திடீரென்று கொள்ளை நடந்ததையும், டிப்டி கலெக்டர் வேலையிலிருந்து நீக்கப் பட்டதையும் கேட்ட ஏனைய சேவகர்களும் ஜனங்களும் டிப்டி கலெக்டரைப்பற்றி பலவாறு தூற்றிப் பேசிப் புரளி செய்தனர். அவரது வீட்டில் காவல் காத்திருந்த சேவகர்கள் யாவரும் அதை விட்டுக் கச்சேரிக்குப் போய்ச் சேர்ந்தனர்.ரெங்கராஜு ஒருவனே, கிட்டன் தங்கம்மாள் முதலியோரது காயங்களைக் கட்டி, அவர்களுக்குரிய அவசர சிகிச்சைகளைச் செய்தான்; உடனே தனது வீட்டிற்கு ஓடி தனது மனைவியின் தாலிக்கு இரு புறங்களிலுமிருந்த மணிகளைக் கழற்றி அடகு வைத்துப் பணம் வாங்கி வந்து தந்தியடித்ததன்றி, அவர்களுக்குத் தேவையான உடைகளையும் கொணர்ந்து கொடுத்தான்; தங்கம்மாளை வைத்தியசாலைக்கு எடுத்து வந்து சிகிச்சை செய்வித்து, தண்ணீர் கூட அருந்த மனமற்றவனாய் பதைபதைத்து கிட்டனுடன் கூட வாசலிலேயே இருந்தான்; சாம்பசிவம், கனகம்மாள் ஆகிய இருவரையும் கண்டவுடன் பதறி எழுந்து கண்ணீர் விடுத்தான்; கனகம்மாளைப் பார்த்து, “பாவிப்பயங்க எஜமானியம்மாளே அடிச்சுப்புட்டாங்க, பெரியம்மா!” என்று வீறிட்டுக் கூற, அவனது பரிதாபகரமான குரலானது, அவர்களது மனதில் அம்பைப்போல சுருக்கென்று தைத்தது. இருவரும் நெருப்பின் மீதிருப்பவரைப்போல தத்தளித்தனர். உடனே கனகம்மாள், “அவள் எங்கே இருக்கிறாள்?” என்ற கேட்க, அவன் அவ்விருவரையும் அருகிலிருந்த அறைக்குள் அழைத்துச் சென்றான். அங்கு தங்கம்மாள் ஒரு கட்டிலின் மீது கிடத்தப் பெற்றிருந்தாள். செவிகள், நாசி, சிரம், கைகள், கால்கள் முதலிய இடங்களில் பெருத்த இரணக்கட்டு களிருந்தன. அவள் கண்களைத் திறவாமல் உணர்வற்று, அசைவற்றுக் கிடந்தாள். அவளைக் கண்ட இருவரும் ஆவலோடு பாய்ந்து ஓடிக் கட்டிலையடைந்து அவளை உற்று நோக்கினர். அதற்குள் கிட்டன் தனது வாயில் கையை வைத்து மூடி தங்கத்திற்கருகில் பேசவேண்டாமென்று சைகை செய்தான்; டாக்டர் துரை அவ்வாறு உத்தரவு செய்திருப்பதாகத் தாழ்ந்த குரலில் இரகசியமாகக் கூறினான். என்றாலும், கனகம்மாள் தனது ஆத்திரத்தில் எதையும் கவனியாமல், தங்கம்மாளின் மார்பு, கை, கால் முதலிய இடங்களை அன்போடு தடவிப் பார்த்தாள். உடம்பில் சூடுமில்லை, குளிர்ச்சியுமில்லை, ஹிருதயத்தின் அடிப்பும் காணப்படவில்லை, சுவாசம் வெளிப்பட்டதும், உட்சென்றும் புலப்படவில்லை. அவளது உடம்பில் உயிரிருந்ததா இல்லையா என்பது தோன்ற வில்லை; மிகவும் சந்தேகித்த கனகம்மாள் கிட்டனைப் பார்த்துத் தணிவான குரலில், “இவள் பேசவே இல்லையா?” என்றாள்; “ஆம்; ராத்திரி அடிபட்ட முதல் இப்படியே இருக்கிறாள்; கண்ணைத் திறக்கவுமில்லை; பேசவுமில்லை; அசையவுமில்லை; மூச்சு விடவுமில்லை” என்றான் கிட்டன். அதைக் கேட்ட அவ்விருவரும் திகைத்து அப்படியே திக்பிரமை கொண்டனர். மூன்று நாட்களாக ஆகாரம், தண்ணீர், துயில், ஓய்வு முதலிய எதையும் கொள்ளாமையாலும், சென்னையில் பயங்கரமான பல சம்பவங்களிற் பட்டு தத்தளித்து வந்தமையாலும், அவர்களது நிலைமை விவரிக்க வொண்ணாததாயும், மனிதரால் ஒரு நொடியேனும் சகிக்க வொண்ணாததாயும் இருந்தது.மனமோ பெரும் புண்ணாக இருந்தது. தேகமோ கட்டிற் கடங்காமல் பறந்தது. கீழே குனிந்து நிமிர்வார் களானால், கண்கள் இருண்டன; மயங்கி விழுந்து தட்டுத் தடுமாறி சுவரைப் பிடித்துக் கொள்ளும் நிலைமையிலிருந்தனர். தங்கம்மாளின் கோரமான தோற்றத்தைக் காண, இருவரும் தள்ளாடிக் கீழே வீழ்ந்துவிடும் தருணத்தில் இருந்தனர். கனகம்மாள் மாத்திரம் தமது அன்பின் பெருக்கினால் சிறிது சமாளித்துக் கொண்டாள். சாம்பசிவம் இடுப்பொடிபட்ட வரைப்போல கீழே உட்கார்ந்துவிட்டார்; உட்கார்ந்தவர் பேசும் வல்லமையற்று ஊமையனைப்போல மாறி உருட்டி உருட்டி விழித்துக்கொண்டு பைத்தியக்காரனோவென்னும்படி யிருந்தார். தேகம் நெருப்புக் குவியலானது. தாம் இருந்தது ஆகாயமோ பூமியோவென்பது தோன்றவில்லை. கனகம் மாளோ தன்னையும் தானிருக்கும் இடத்தையும் மறந்து நாட்டுப்பெண்ணின் உடம்பை அன்போடு தடவிக்கொடுத்த வண்ணம் கண்ணீர் பெய்து கரைந்து பிரலாபித்து அழத் தொடங்கினாள். “ஐயோ! என் கண்ணே! உனக்கும் இந்த கதி வந்ததா! என் குடியை விளக்க வந்த மஹா லக்ஷுமியல்லவா நீ! உன்னைப் போன்ற நாட்டுப் பெண்ணை நான் இனி பெறுவேனா! என் தங்கமே! உன் வாயை இனி திறப்பாயோ திறக்க மாட்டாயோ! அத்தனையும் தங்கமல்லவா நீ! என் ராஜாத்தி! உன்னை அருந்ததி யென்றாலும் தகுமே! அடி உத்தமியே! உன்னை அடித்தவன் வீடு இந்நேரம் பாழாய்ப் போயிராதா! அவன் குடும்பம் ஏழேழு தலைமுறைக்கும் நசித்து நரகத்தில் வசிக்காதா? ஆகாசத்திலுள்ள இடிகளெல்லாம் அவர்கள் தலையில் விழாதா? என் கண்ணே! என்னப்பா! என் துரை சிங்கத்துக்கு வந்து வாய்த்த மகா லக்ஷ்மியே! ஐயோ! என் குடியைக் கெடுத்து வடுவாயோ! என் வீட்டு விளக்கை அவித்து விடுவாயோ! என் பாக்கிய லக்ஷுமியை அழைத்துக் கொண்டுபோய் விடுவாயோ! என் பிள்ளை கூட என்னிடத்தில் அவ்வளவு பிரியமும் மரியாதையும் வைக்கவில்லையே! எத்தனை ஜென்மமெடுத்தாலும், என்ன தவம் செய்தாலும் உன்னைப் போன்ற நாட்டுப் பெண் எனக்கு வருவாளா! பாவியாகிய எனக்கு நல்லது நிலைக்காதோ! கிழவியான என்னை அந்த எமன் கொண்டு போகக்கூடாதா! பட்டணத்தில் குழந்தையைப் பறி கொடுத்தோம்! இங்கே உன்னைப் பறி கொடுத்தோம்! இனி நாங்கள் ஒரு நிமிஷமும் உயிரோ டிருப்போ மென்று நினைக்காதே!” என்று பிரலாபித்து தேம்பித்தேம்பி யழுது அனலிடு மெழுகாய் உருகினாள். அதைக் கண்ட சாம்பசிவம், கிட்டன், ரெங்கராஜு முதலிய யாவரும் தம்மை மறந்து ஓவெனக் கதறி அழத்தொடங்கினர். அது வைத்தியசாலை யென்பதையே அவர்கள் மறந்து விட்டனர். அந்தப் பெருத்த கூக்குரல் நெடுந்தூரம் கேட்டது. 

அடுத்த நிமிஷத்தில் பெரிய டாக்டர் துரை, “என்ன இது? என்ன இது?” என்று சொல்லிக் கொண்டு உள்ளே நுழைந்து, அவர்களது அழுகைக்கு சடக்கென்று முற்றுப்புள்ளி வைத்தார்; என்றாலும் டிப்டி கலெக்டர் அவ்வூரில் முக்கியமான உத்தியோகஸ்தராதலாலும், அவரது துக்ககரமான விபத்தைக் கருதியும் டாக்டர் அவர்களைக் கண்டியாமல் டிப்டி கலெக்டருக்கு வந்தனம் செலுத்தினார். சாம்பசிவமும் டாக்டருக்கு வந்தனம் செய்து, தமது மனைவியின் கதி எப்படி முடியுமென்று கேட்டார். துரை மிக்க இரக்கமான குரலில், ‘ஐயா! தங்களுக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி நான் மிகவும் விசனமடைகிறேன். தங்கள் மனைவியின் தேகநிலைமை முற்றிலும் நம்பிக்கையற்றதாயிருக்கிறது. திருடர் முரட்டுத் தனமாகப் பல விடங்களில் அடித்துவிட்டார்கள். அதனால் மார்பில் இரண்டு எலும்புகள் முறிந்துபோய் ஹிருதயத்தில் குத்திக்கொண்டிருக்கின்றன. மார்பைக் கீறி ஆபரேஷன் செய்து அந்த எலும்புகளை மிகவும் சாமர்த்தியமாக எடுத்தாலன்றி, தங்களுடைய சம்சாரம் பிழைப்பது கடினம். இன்று மாலைக்குள் ஸ்மரணையை நான் திரும்பித்தருகிறேன். மார்பைக் கீறி உட்புறத்தை ஒழுங்குபடுத்தி,திரும்பவும் தைப்பது எளிய காரியமல்ல. அதில் அற்பமான தவறு ஏற்பட்டாலும் உடனே மரணம் நேருவது திண்ணம். அந்த அபாயகரமான வேலை எல்லோராலும் செய்யத்தக்கதல்ல. கைதேர்ந்த நிபுணர்களாலேயே அதை நாம் செய்விக்க வேண்டும். உண்மையை மறைப்பதில் பயனில்லை. அந்த அரிய காரியத்தைச் செய்வதில் எனக்கு அவ்வளவாக பழக்க மில்லை. இங்கே எனக்குக் கீழிருக்கும் இரண வைத்தியர்கள் ஆட்டை அறுப்பதற்கே தக்கவர்கள். அந்த அபாயகரமான காரியத்தை அவர்களிடம் ஒப்படைப்பது ஆபத்தாகும்; சென்னை புரசைப் பாக்கத்தில் டாக்டர் வில்லியம்ஸ் என்ற பெயருடைய துரை ஒருவர் இருக்கிறார். அவர் இந்த விஷயத்தில் மிகவும் தேர்ச்சி பெற்ற மேதாவி; வேறு பலரிடத்திற்குப் போய் வீண் காலதாமதம் செய்ய வேண்டாம். உடனே அவரிடம் கொண்டு போவீர்களானால், அவர் ஒரு நொடியில் குணப்படுத்தி விடுவார். ஆனால் அவர் அதிகமாகப் பணம் கேட்கக் கூடியவர். இந்தக் காரியத்துக்கு அவர் குறைந்தது முன்னூறு ரூபா கேட்பார். அவருக்கு நான் ஒரு கடிதம் எழுதித் தருகிறேன். அதை அவரிடம் சேர்ப்பித்தால், அவர் அதிகமான சிரத்தை எடுத்துக் கொண்டு இந்தக் காரியத்தை முடிப்பார்; இருநூறு ரூபாய் பெற்றுக்கொள்வார்” என்றார்.அப்படியே செய்வதாக சாம்பசிவம் ஒப்புக்கொண்டார்; உடனேடாக்டர், ‘சரி; மாலையில் ஏழு மணிக்குப் புறப்படும் வண்டியில் இன்றைக்கே போங்கள். போகும்போது நான் கடிதம் தருகிறேன்; நீங்கள் இவ்விடத்திலிருந்து நோயாளியை அலட்டுதல் கூடாது. சாயுங்காலம் வரையில் வெளியிலே போயிருங்கள்” என்று அழுத்தமாகக் கூறிவிட்டு அப்புறம் சென்றுவிட்டார். பிறகு சேவகன் ஒருவன் வந்து, “சுவாமிகளே! தயவு செய்து வெளியில் வந்துவிடுங்கள்; கதவை மூடவேண்டும்” என்று நயமாகக் கூறினான். நால்வரும் அரை மனதோடு வெளியில் வந்தனர்; உடனே கதவும் சாத்தி மூடப்பட்டது. 

வெளியில் போடப்பட்டிருந்த ஒரு விசிப்பலகையில் சாம்பசிவம் ஓய்ந்து உட்கார்ந்து கொண்டார். கனகம்மாள் தரையில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்து கொண்டாள். கிட்டனும், ரெங்கராஜுவும் சிறிது தூரத்தில் நின்றார்கள். யாவரும் கால் நாழிகை நேரம்வரையில் என்ன பேசுவதென்பதையறியாமல் ஏக்கங்கொண்டு திகைத்து உட்கார்ந்து விட்டனர். எதற்கும் அஞ்சாத தீரரான சாம்பசிவம் செயலற்று தமது பெருமையை இழந்து ஒரே நாளில் சாதாரண மனிதராய் மாறி, பெருத்த துன்பங்களுக்கும் துயரத்திற்கும் ஆளாய், ஓய்ந்து பரதேசியைப் போல உட்கார்ந்திருந்ததைக் காண, ரெங்கராஜுவின் மனம் பதறியது. அவன் உள்ளத்திலிருந்து பொங்கி யெழுந்த பல உணர்ச்சிகளால் அவனது கண்ணிமைகள் உதடுகள் முதலியவை காற்றிலசையும் மாந்தளிர்போலத் துடித்தன. சாம்பசிவமும் கனகம்மாளும், பல நாட்களாக போஜனம் செய்யவில்லை யென்பதை அவர்களது விகாரமான தோற்றமே எளிதில் காண்பித்தது. ரெங்கராஜுகனகம்மாளை நோக்கிப் பணிவாக, “பெரியம்மா! பட்டணத்தில் குழந்தை சவுக்கியமா?” என்று அந்தரங்கமான அபிமானத்தோடு கேட்டான். அவன் அன்பின் பெருக்கினால் கேட்ட கேள்வி அவர்களுக்குப் பெருத்த துன்பமாய் முடிந்தது. சிலநாழிகையாக மறந்திருந்த சென்னையின் நினைவு அவர்களிருவரது மனதிலும் உடனே திரும்பிவிட்டது; முதல் நாள் சம்பவித்த விஷயங்கள் யாவும் அப்போதே கண்ணெதிரில் நடப்பனபோல் அவர்களுக்குத் தோன்றின; அப்படியே மெய்ம்மறந்து கல்லாய்ச் சமைந்து போயினர்; தனது கேள்விக்கு மறுமொழி இல்லாது போனதைக் கண்ட ரெங்கராஜு, சென்னையில் பெண்ணின் நிலைமையும் சரியாக இல்லையென்று யூகித்துக் கொண்டான். அவர்களது முகவாட்டத்தையும், மிதமிஞ்சிய அயர்வையுங் கண்ட நற்குணம் பெற்ற அந்தச் சேவகன், அவர்கள் போஜனம் செய்யவில்லை யென்பதை கிட்டனிடம் சைகையின் மூலமாகக் காட்டினான். கிட்டன், “பாட்டீ! நீங்கள் இன்னம் பல்கூடத் தேய்க்கவில்லைபோலிருக்கிறதே. நாம் அகத்துக்குப் போய்விட்டு வருவோமே. சாயுங்காலம் வரையில் தான் நம்மை உள்ளே விடமாட்டார்களே. இங்கே நாமென்ன செய்யப்போகிறோம்?” என்றான். அவர்களிருவரும் அப்போது ஆகாரத்தையும், தமது உடம்பையும், உலகத்தையும் மறந்து, தங்கம்மாள், மேனகா, வராகசாமி ஆகிய மூவரின் வடிவங்களையே மனதில் கொண்டிருந்தனர். ரெங்கராஜுவின் கேள்விக்கும், கிட்டனது பிரரேபணைக்கும் கால் நாழிகை வரையில், எவ்விதமான மறுமொழியும் கிடைக்கவில்லை. பிறகு கனகம்மாள் திடீரென்று தனது சுய உணர்வைப் பெற்று சாம்பசிவத்தை நோக்கி, “ஏனடா! உன் கையில் எவ்வளவு பணம் மிகுதி இருக்கிறது?” என்றாள். அவர்தமது பையிலிருந்த பணத்தை எடுத்து எண்ணிப்பார்த்து ரூபா 87-5-0 இருக்கிற தென்றார். உடனே கனகம்மாள், “சரி; இன்று நாம் ரயிலேறுவதற்குள் ரூபா முன்னூறாவது வேண்டுமே; அதற்கென்ன வழி?” என்றாள். தலையை நிமிர்த்திய சாம்பசிவம் உடனே கீழே குனிந்து யோசனை செய்தார். மூன்றாம் நாள் மாலையில் அவருடைய வீட்டில் இருந்த பணம், நகைகள், உடைகள், சாமான்கள் முதலியவற்றின் பெறுமானம் இருபதினாயிரத்திற்கு மேலிருக்கும். அவ்வளவு பொருட்களும் கொள்ளைகாரர்களால் அபகரிக்கப்பட்டுப் போயின. அவரது தகப்பனாரது காலத்திலிருந்த நிலம் வீடு முதலியவற்றை விற்று, அவற்றைக் கொண்டே அவர் கல்வி கற்றுக்கொண்டாராதலின், அவருக்குப் புராதன பொருள் ஒன்றும் கிடையாது. ஆனால், ஒரு ஜீவாதாரநிதியில் (Life Insurance Fund) அவர் பணம் செலுத்திக்கொண்டு வந்திருந்தார். அவருக்கு 50-வயதாகும் போது அதிலிருந்து முப்பதினாயிரம் ரூபா கிடைக்கும். ஆனால், அவருடைய வயது இன்னம் அவ்வளவு ஆகவில்லை. அந்த நிதியிலிருந்து அவசர நிமித்தம் ஏதாவது சொற்பத் தொகையைக் கடனாக வாங்க அவருக்கு உரிமை யிருந்தது. ஆனால், அந்த நிதியின் நிருவாகஸ்தரால் அவருக்குக் கொடுக்கப்பட்ட பத்திரமும் மற்றப் பொருட்களுடன் களவாடப்பட்டுப் போனமையால், அதை அடமானம் வைத்துக் கடன் வாங்குவதும் கூடாமல் போய்விட்டது. ஆகையால், சாம்பசிவையங்காரின் அப்போதைய பெறுமானம் ரூபா 87-5-0 தான். அவ்வளவு சொற்ப காலத்தில் தாம் ஏழையிலும் பரம ஏழையாய்ப் போனதை நினைத்து, “ஆகா! பண மில்லாதவன் பிண மென்பது இப்போது நன்றாகத் தெரிந்தது. பொருளில்லார்க்கு வ்வுலகமில்லை, அருளில் லார்க்கு அவ்வுலகமில்லை என்றவர் பரமஞானி யல்லவா; அவர் சொன்னது ஒரு நாளும் பொய்யாகாது” என்று நினைத்து ஏங்கி உட்கார்ந்துவிட்டார். ஆனால், உண்மையில் அவரது நிலைமை அவ்வளவு கேவலமான தன்று, கனகம்மாளுக்கு அவளது தந்தையால் மஞ்சற் காணியாகக் கொடுக்கப்பட்ட நிலமும் வீடும் இருந்தன. அவை இரண்டும் எண்ணாயிரம் ரூபா பெறும். ஆனால், அவை செங்கற்பட்டிற்கு மேற்கில் பதினைந்து மைல் தூரத்திற்கு அப்பாலிருந்த பகற் கொள்ளைப்பாக்கம் என்னும் ஊரிலிருந்தன. அவை தமக்குச் சொந்த மல்ல வாதலால் சாம்பசிவத்திற்கு அவற்றின் நினைவு உண்டாக வில்லை. தாம் செய்ய வேண்டுவதைப்பற்றி கனகம்மாளது மனதில் முன்னரே தீர்மானம் ஏற்பட்டு விட்டது. தனது நிலத்தையும் வீட்டையும் அந்த அவசரத்திற்கு விற்க முடியாதாயினும், அவற்றை அடமானம் வைத்தாகிலும் ஆயிரம் ரூபா வாங்கித் தமது அவசரமான செலவுகளுக்கு வைத்துக்கொள்ள வேண்டுமென்று அவள் தீர்மானம் செய்து கொண்டாள். ஆனால், சாம்பசிவம் அதை நினைக்காமல், வேறு எவரிடமாயினும் கைமாற்றாக வாங்கலாமா என்று நினைத்துப் பார்த்தார். அவருக்குப் பணம் கொடுக்கக் கூடியவராக ஒருவரும் காணப்படவில்லை. அந்த நிலையில் அவருக்கு அவரது மாமனாரின் நினைவு வந்தது. அவர் தஞ்சைக்கு ஐந்தாறு மைல் வடக்கிலிருந்த தில்லை ஸ்தானம் என்னும் ஊரிலிருந்த ஒரு வைதிகப் பிராம்மணர். அவரது புத்திரனான கிட்டன் நெடுங்காலமாக இவர்களது வீட்டில் வளர்ந்து வந்தா னென்பது தெரிந்த விஷயமல்லவா? அந்த வைதிகரிடம் நிலத்தைத் தவிர பணமாகவும் நகைகளாகவும் ரூபா இரண்டாயிரத்திற்குச் சொத்து இருந்தது சாம்பசிவம், கிட்டன் முதலிய யாவருக்கும் தெரியும்; பொதுவாக தமது பெண்ணான தங்கம்மாளிடம் அவருக்கு அவ்வளவு உள்ளார்ந்த அபிமானம் இருந்ததாக அவர் அது வரையில் காட்டிக் கொண்டதில்லை; பெண்வீட்டிலிருந்து ஏதாகிலும் பொருளை அப்போதைக்கப்போது அபகரித்துக் கொண்டு போவதில் அவர் கண்ணுங்கருத்துமா யிருந்தாரன்றி, பெண்ணிடத்தில் ஒரு அன்பான மொழியையும் வழங்கி யறிந்தவரன்று. என்றாலும் தமது பெண்ணுக்கு வந்துள்ள பிராணாபாயமான அந்தப் பெருத்த ஆபத்துக்காலத்தில் அவர் அவசியம் இரக்கங்கொள்வாரென்று சாம்பசிவம் நினைத்தவராய், கிட்டனை நோக்கி, “ஏனடா இந்தச் சங்கதியைப் பற்றி தில்லை ஸ்தானத்துக்கு எழுதினாயா என்றார். “ஆம்; உடனே புறப்பட்டு வரும்படி கடிதமெழுதி ஓர் ஆளிடம் நேற்றைக்கே அனுப்பினேன்; என்னவோ அவர் ன்னம் வரவில்லை; வேண்டுமானால் நான் நேரில் போய் அவரையும் அழைத்துக்கொண்டு நானூறோ, ஐந்நூறோ கிடைக்கக்கூடிய பணத்தையும் வாங்கிக்கொண்டு வருகிறேன்” என்றான். சாம்பசிவம் அதில் உண்மையில் நம்பிக்கை வைத்தார். கனகம்மாளுக்கு அந்தக் கிழவரது குணம் நன்றாகத் தெரியும்; அந்த ஆபத்துக் காலத்தில் பணச்செலவாகுமென்று கருதியே அவர் வரவில்லையென்று கனகம்மாள் யூகித்துக் கொண்டாள்; எனினும் அவள் தனது மனதை வெளியிட வில்லை. ஏனெனில், அவரிடமிருந்து ஒருகால் தெய்வச் செயலாகப் பணம் கிடைத்துவிடுமானால், தங்கம்மாளது காரியத்தைத் தாமதமின்றி நடத்தலாமென்று நினைத்தே மெளனம் சாதித்தாள். அவர்களிருவரும் தனது பிரரேபணையை ஆமோதிப்பதாக நினைத்த கிட்டன், தான் போய் விட்டு வருவதாகக் கூறிவிட்டு வெளியிற் சென்று ஒரு குதிரை வண்டியை அமர்த்திக் கொண்டு வேகமாய் போய்விட்டான். உடனே ரெங்கராஜு, “பெரியம்மா! எஜமான் ரொம்பவும் களைப்பா யிருக்கிறாங்க; இங்கே நாம்ப சும்மாத்தானே இருக்கப்போறோம்; ஊட்டுக்குப் போயி பூசையை முடிச்சுக்கிட்டு வந்துடலாமே; எஜமான் பசி தாங்க மாட்டாங்கம்மா!” என்று உருக்கமாக மிருதுவாய்க் கூறினான். அதைக் கேட்ட கனகம்மாளின் மனதிலும் இனி சாம்பசிவத்தைப் பட்டினியா யிருக்க விடுவது தவறென்பது தோன்றியது; “சரி; நாம் அகத்துக்குப் போய்விட்டு வந்து விடுவோம்; குதிரை வண்டி கொண்டுவா!” என்றாள். அடுத்த நிமிஷம் வண்டி வந்து நின்றது; மூவரும் அதில் ஏறிக்கொண்டு வீட்டை அடைந்தனர். உடனே வேலைக்காரி புரோகிதர் முதலியோர் வரவழைக்கப் பட்டனர்; வேலைக்காரி வீட்டை மெழுகிச் சுத்தி செய்தாள்; புரோகிதர் புண்ணியாகவாசனம் செய்தார்; அதற்குள் சாம்பசிவத்தினிடம் ரூபா பத்தை பெற்றுக்கொண்டு போன ரெங்கராஜு தேவையான பாத்திரங்கள், சாமான்கள் முதலியவற்றைக் கொணர்ந்து நிரப்பினான். இருவரும் ஸ்நானம் செய்து கொண்டனர். கால்நாழிகையில் சமையல் சாப்பாடு முதலியவை முடிந்தன; இருவரும் சிறிது நேரம் ஓய்ந்து உட்கார்ந்தனர். அப்போது பகல் மணி இரண்டாயிற்று; கிட்டன் வியர்த்து விருவிருத்த மேனியோடு விரைவாக உட்புறம் நுழைந்தான். இருவரும் அவனது முகத்தை நோக்கினர். அது விசனத்தையும், வெட்கத்தையும் காட்டியது. கனகம்மாள், “என்ன சங்கதி?” என்றாள். கிட்டன், ‘பணமில்லை” என்று உதட்டைப் பிதுக்கினான். ‘அவர் வரவில்லையா?” என்றார் சாம்பசிவம்.”அவர் ஏன் வருவார்? பணத்தாசை பிடித்த மனிதனுக்குப் பெண்ணேது? பிள்ளையேது? இங்கே பெண் ஏதாவது கொடுப்பதனால் வாங்கிக் கொண்டு போக வருவார்” என்றான். அதைக் கேட்ட சாம்பசிவம், “பெண்ணைப் பெற்ற தகப்பன் அப்படியும் கிராதகனா யிருப்பானோ!” என்று நினைத்து வியப்பும் திகைப்பும் அடைந்து அசைவற்று, சித்திரப் பதுமைபோல அப்படியே உட்கார்ந்து போனார். கனகம்மாள் அதைப்பற்றி ஒரு சிறிதும் கவலைகொள்ளாமல்,”போனால் போகிறது; நீ குளித்துவிட்டு சாப்பிட வா!” என்று கூறினாள். அவனும் முதல் நாளிலிருந்து பட்டினியிருந்தவனாதலால் உடனே ஸ்நானத்திற்குச் சென்றான், சிறிது நேரத்தில் அவனுடைய சாப்பாடும் முடிந்தது. 

உடனே கனகம்மாள் சாம்பசிவத்தைப் பார்த்து,”அப்பா! ஏன் கவலைப் படுகிறாய்? தலைக்குமேல் வெள்ளம் போகுமானால், முழம் போனாலென்ன? சாண் போனாலென்ன? எல்லாம் போய்விட்டது; இனி ஏன் கவலை? என் பேரிலிருக்கும் நிலத்தையும் வீட்டையும் அடமானம் வைத்து ரூபா ஆயிரம் வாங்கிக்கொண்டு வா; உத்தியோகம் இனி திரும்ப வரும் வரையில் நம்முடைய செலவுக்குப் பணம் வேண்டும்; பட்டணத்தில் வைத்தியச் செலவு, படிச் செலவு எவ்வளவு ஆகுமோ; எல்லாவற்றிற்கும் கையில் ரூபா ஆயிரம் இருக்க வேண்டும்” என்றாள். சாம்பசிவம் திகைத்து, “எப்போது ஊருக்குப் போகிறது? கடன் வாங்க சாவகாசம் எங்கே இருக்கிறது?” என்றார். 

கனகம்மாள்:- நாமெல்லோரும் தங்கம்மாளை எடுத்துக் கொண்டு சாயுங்கால வண்டியில் பட்டணம் போவோம். நீ செங்கற்பட்டில் இறங்கி, பொழுது விடியுமுன் கிராமத்துக்குப் போய் நாட்டுக்கோட்டை நீலகண்ட செட்டியாரிடம் அடமானம் வைத்து உடனே பணத்தை வாங்கிக்கொண்டு நாளை சாயுங்காலம் பட்டணத்துக்கு வந்துவிடு. நான் டாக்டரிடம் தங்கம்மாளைக் கொண்டுபோய், “இதோ பணம் வருகிறது” என்று சொல்லி ஆபரேஷன் செய்யச் சொல்லுகிறேன். 

சாம்ப:- அது நல்ல யோசனைதான். ஆனால், அதில் ஒரு டைஞ்சல் இருக்கிறது. 

கனக: என்ன இடைஞ்சல்? 

சாம்ப:- நிலம் வீடு முதலியவை உன் பேரிலல்லவா ருக்கின்றன. நான் எப்படி அடமானப் பத்திரம் எழுதிக் கொடுக்கிறது? (சிறிது யோசனை செய்து) இருக்கட்டும். அதற்கு ஒரு காரியம் செய்வோம். உன்பேரில் இருக்கும் நிலத்தையும் வீட்டையும், அடமானம் வைக்க நீ எனக்கு ஒரு அதிகாரப் பத்திரம் எழுதிக் கொடுத்ததாக இப்போதே ஒரு தஸ்தாவேஜு எழுதி ரிஜிஸ்டர் செய்து கொள்வோம்-என்றார். 

கனக:- சரி; சீக்கிரம் ஆகட்டும்; ரெங்கராஜுவை அனுப்பி முத்திரைக் காகிதம் வாங்கிக்கொண்டு வரச்சொல்- என்றாள். அவ்வாறே முத்திரைக் காகிதம் வரவழைக்கப்பட்டது. அதிகாரப் பத்திரம் தயாராய் ரிஜிஸ்டர் கச்சேரியில் பதியவும் செய்யப்பட்டது. அதற்குள் மாலை ஐந்து மணி சமயம் ஆய்விட்டது. 

சேவக ரெங்கராஜு அவர்களுடன் சென்னைக்கு வரவேண்டு மென்னும் ஆசை கொண்டவனாய் கச்சேரிக்குப் போய் மானேஜரைக் கண்டு தனக்கு எட்டு நாளைக்கு ரஜா வேண்டு மென்று கேட்டான். அவனுக்கு ரஜா கொடுத்தால், தாமும் சாம்பசிவத்திற்கு உளவாக இருப்பதாய் பெரிய கலெக்டர் நினைத்து, தமக்கும் ஏதாகிலும் கெடுதல் செய்வாரோ வென்று நினைத்து மானேஜர் சுப்பிரமணிய ஐயங்கார் ரஜா கொடுக்க மறுத்துவிட்டார். சாம்பசிவம் தங்கம்மாள் முதலியோரை அந்த ஆபத்துக்காலத்தில் கைவிட்டு தனது உத்தியோகமே பெரிதென்று இருந்துவிட ரெங்கராஜு விரும்பவில்லை; ஆகையால், முன்பின் யோசனை செய்யாமல் அவன் ஒரே நொடியில் ஒருவித முடிவிற்கு வந்தான். தனது வேலையை ராஜிநாமா செய்துவிட்டதாக ஒரு கடிதத்தில் எழுதி மானேஜரிடம் கொடுத்துவிட்டு சாம்பசிவத்தினிடம் வந்து சேர்ந்தான். 

உடனே யாவரும் சென்னைக்குப் போக ஆயத்தமாய் குதிரை வண்டியில் ஏறிக்கொண்டு வைத்தியசாலையில் வந்திறங்கி டாக்டர் துரைக்குச் செய்தி சொல்லி யனுப்பிவிட்டு தங்கம்மாளைப் பார்க்கவும் அவளது அப்போதைய நிலைமையை அறியவும் ஆவல்கொண்டு துடிதுடித்து நின்றனர். அப்போது டாக்டர் தங்கம்மாளுக்குச் சிகிச்சைகளைச் செய்துகொண்டிருந்தார். கால் நாழிகைக்குப் பிறகு அவர் வெளியில் வந்து சாம்பசிவத்தினிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து, ‘இதைப் பட்டணம் டாக்டரிடம் சேர்ப்பித்து ரூபா இறுநூறு கொடுங்கள். அவர் ஆகவேண்டியதைச் செய்வார். கொஞ்சமும் தாமதமானால், அது ஆபத்தாய்முடியும். கையில் சில மருந்துகளையும் தருகிறேன். அவற்றைப் பிரயோகித்துக் கொண்டே போங்கள்; நாளைக் காலையில் நீங்கள் தவறாமல் வைத்தியரிடம் போய்ச் சேர வேண்டும்; ஜாக்கிரதை” என்றார். 

அப்படியே செய்வதாக சாம்பசிவம் ஒப்புக்கொண்டார். 

டாக்டர்,”சரியாக ஆறரை மணிக்கு நோயாளியை அனுப்புகிறோம்; அதுவரையில் இவ்விடத்திலேயே இருங்கள்” என்று சொல்லிவிட்டு உட்புறம் போய்விட்டார். 

அவர்கள் நால்வரும் வெளியிலேயே நின்றனர். டாக்டரது சொற்களிலிருந்து தங்கம்மாளின் தேக நிலைமையில் முன்னிலும் அதிகமான கெடுதல் ஏற்படவில்லை யென்று ஊகித்துக்கொண்டவரா யிருந்தனர்; கால்நாழிகை வரையில் எவரும் வாய்திறக்க வில்லை. பிறகு கனகம்மாள், “அடே ரெங்கராஜு! நீ எங்களுடனேயே இருக்கிறாயே! கச்சேரிக்கு வரும்படி உனக்கு உத்தரவு வரவில்லையா?’ என்றாள். ரெங்கராஜு,தான் வேலையிலிருந்து விலகிக்கொண்டதை அப்போது தெரிவித்தால் அவர்கள் தன்மீது கோபமுற்று, தன்னை சென்னைக்கு அழைத்துப் போகாமல் விட்டு விடுவார்களோ வென்று அஞ்சி உடனே ஒரு பொய்மொழி கூறினான்; “நான் நேத்து காலையிலேயே கச்சேரிக்குப் போயி ஒரு வாரத்துக்கு ரஜா வாங்கிப்புட்டேன்; பட்டணத்துக்கு நானும் வாரேனுங்க; என் மனது தாளல்லீங்க” என்று உருக்கமாகக் கூறினான்; அவனது உண்மையான அன்பையும், ஆபத்தில் உதவும் நற்குணத்தையும் காண, சாம்பசிவம் கனகம்மாள் ஆகிய இருவரது மனமும் பொங்கிப் பூரித்தது. தமது கண்களில் துளிர்த்த நீரைத் துடைத்துக் கொண்டனர். 

உடனே கனகம்மாள் சாம்பசிவத்தினிடமிருந்து ஐந்து ரூபா நோட்டொன்றை வாங்கி ரெங்கராஜுவிடம் நீட்டி, “நீ எங்களோடு வந்துவிட்டால், உன்னுடைய வீட்டில் பெண்டாட்டி பிள்ளைகளுக்கு ஒரு வாரத்துக்கு வேண்டிய சாமான்களுக்கு என்ன செய்வார்கள்; இந்தப் பணத்தையாவது கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வா!” என்றாள். 

ரெங்கராஜு நோட்டை வாங்காமல், “சாமங்க நிறைய இருக்குதுங்க; இப்பதான் சம்பளம் வந்துச்சு; வாங்கிப் போட்டேன். அதைப்பத்தி கவலையில்லீங்க;  சாமி புண்ணியத்துலே தங்கம்மாளும் பொழைச்சு ஒங்க கலியும் நீங்கினா அதுவே போதுங்க” என்றான். தங்களுக்கு நேர்ந்த அத்தனை துன்பங்களிலும் அவ்வளவு ஆழ்ந்த அபிமானமுள்ள ஒரு மனிதன் தமக்கு உதவி செய்ய மிகுதி யிருப்பதை நினைத்து பெருமகிழ்வடைந்து பேசமாட்டாமல் இருவரும் மௌன மாயிருந்தனர். 

அப்போது பெரிய கலெக்டர் துரையின் சேவகனொருவன் டிப்டி கலெக்டரிடம் வந்து மரியாதையாக வணங்கி நின்று ஒரு கடிதத்தை நீட்டினான். சாம்பசிவம் திடுக்கிட்டு நிமிர்ந்து, “என்ன இது?” என்று கேட்க, அவன், “தொரெ குடுக்கச் சொன்னாங்க” என்றான். உடனே சாம்பசிவம் அதை வாங்கிப் பிரித்துப் படித்து அது குற்றப்பத்திரிகை என்று உணர்ந்தார்; முன் குறிக்கப்பட்ட மூன்று குற்றங்களும் அதில் விவரிக்கப் பட்டிருந்தன; பிறகு அதில் அடியில் வரும் வாக்கியங்களும் எழுதப்பட்டிருந்தன. 

இம் மூன்று குற்றங்களையும் நீங்கள் செய்ததாக நன்றாக ருஜுவா யிருக்கிறது. நீங்கள் மிகவும் பொறுப்பு வாய்ந்த பெருத்த உத்தியோகஸ்தர். நாதனில்லாமல் உங்களுடைய கச்சேரியையும், அதிகார எல்லையையும் விடுத்துப் போவதும், பொய்க் கணக்குத் தயாரிப்பதும், துரைத்தனத்தார் பணத்தை அபகரிப்பதும் உத்தியோகத்தை இழந்து, சிறைச்சாலைக்குப் போகத்தக்க குற்றங்களாகின்றன. இவற்றிற்காக உங்களை ஏன் வேலையிலிருந்து விலக்கக் கூடாதென்பதற்கு முகாந்திர மெழுதி நாளை மாலைக்குள் அனுப்ப வேண்டியது. அனுப்பத் தவறுவீர்களானால் சொல்லிக்கொள்ள யாதொரு சமா தானமும் இல்லையென்றும், குற்றங்களைச் செய்ததாக நீங்கள் ஒப்புக்கொள்வதாயும் கருதப்படும். நிற்க; உங்களிடமுள்ள சர்க்கார் சீல், முகர் முதலியவற்றை கஜானா டிப்டி கலெக்டரிடம் ஒப்புவிக்க வேண்டியது.” 

என்று எழுதப்பட்டிருந்த பத்திரிகையை சாம்பசிவம் படித்தார். கருத்தை கனகம்மாளிடம் கூறினார். அதற்குள் அந்தச் சேவகன் ஒரு புஸ்தகத்தைக் காட்டி அதில் கையெழுத்துச் செய்யும்படி கூறி பௌண்டன் பேனா (Fountain Pen) வை நீட்டினான்.சாம்பசிவம் அதை வாங்கிக்கொண்டார். ஆனால், உடனே கையெழுத்துச் செய்யவில்லை. தாம் மறுநாள் எங்கிருக்க வேண்டுமோ, எப்பாடு பட நேருமோ என்பதை அறியக் கூடவில்லை. ஆகையால், தமது சமாதானத்தை உடனே எழுதிக் கொடுத்துவிட நினைத்தார். அருகிலிருந்த கடையில் ஒரு காகிதம் வாங்கிவரச் செய்து, அதில் அடியில் வருமாறு மறுமொழி எழுதினார்:- 

“ஐயா! தங்களுடைய உத்தரவைப் பெற்றுக்கொண்டேன். அதில் எழுதப்பட்டுள்ள விஷயங்கள் வியப்பை உண்டாக்கு கின்றன. அதில் குறிப்பிட்டுள்ள குற்றங்களில் ஒன்றையேனும் நான் செய்யவில்லை. முதலாவது பகுதியில் கூறப்பட்டபடி நான் சென்னைக்குப் போனதே இல்லை. நான் போனதாகக் கிடைத்திருக்கும் சாட்சியும் உண்மையானதல்ல. இரண்டாவது பகுதியில் கண்டபடி, நான் அனுப்பியது பொய்க் கணக்கன்று; அதில் சொல்லப்பட்டபடி நான் அம்பாள் சமுத்திரம் முதலிய இடங்களிலேதான் முகாம் செய்திருந்தேன். மூன்றாவது பகுதியில் குறிப்பிட்டபடி நான் நேற்று சென்னையி லிருந்தது உண்மையே; முந்திய நாள் நான் ரஜா கேட்டதும் தாங்கள் மறுத்ததும் உண்மையே. ஆனால், அதன் பிறகு நான் வேறு மனு எழுதி தாசில்தார் தாந்தோனிராயர் மூலமாகத் தங்களுக்கு அனுப்பி, எனக்கு ரஜா கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். அந்த மனுவைத் தங்களிடம் எடுத்துவந்த தாசில்தார், தாங்கள் எனக்கு ரஜா கொடுத்து விட்டீர்களென்று செய்தியனுப்பினார். என்னுடைய அவசரத்தில் அதை உண்மையென்று நம்பி நான் போய்விட்டேன். தாந்தோனிராயர் கண்ணியமான மனிதர்; பொறுப்பு வாய்ந்த உத்தியோகஸ்தர்; ஆதலால், அவருடைய சொல்லை நிஜமென்று மதித்தேன். அவரை நீங்கள் கேட்பீர்களானால், அவர் இதை உண்மையென்றே ஒப்புக் கொள்வார். அவர் ஒப்புக்கொள்ளா விடில், இதன் பொருட்டு நான் எவ்வித சிட்சைக்கும் உடன்படுகிறேன். நிற்க, என் வீட்டிலிருந்த சீல்,முகர் முதலியவை நேற்று என் வீட்டில் நடந்த கொள்ளையில் களவு போய்விட்டன. ஆகையால், நான் ஒப்புக்கொடுக்கக்கூடிய சர்க்கார் சாமான்கள் ஒன்றும் என்னிடமில்லை. கச்சேரி வேலையை கஜானா டிப்டி கலெக்டரே பார்த்துக்கொள்ளலாம்” என்று மறுமொழி எழுதி அதைச் சேவகனிடம் கொடுத்து புஸ்தகத்திலும் கையெழுத்துச் செய்து சேவகனை அனுப்பினர். 

அப்போது மணி ஆறரை ஆயிற்று; ரயிலுக்குப் புறப்பட வேண்டிய காலம் வந்தது. அறையின் கதவு திறக்கப்பட்டது. மெத்தை, தலையணைகள் முதலியவற்றைக் கொண்ட ஒரு அடக்கமான நீண்ட தொட்டிலில் தங்கம்மாள் விடப்பட்டிருந் தாள். நான்கு வேலைக்காரர்கள் அந்தத் தொட்டிலோடு தங்கம்மாளை அசையாமல் தூக்கி வந்து வாசலில் நின்ற ஒரு மோட்டார் வண்டியில் தொட்டிலோடு வைத்தனர். சில மருந்துகளும் சாம்பசிவத்தினிடம் கொடுக்கப்பட்டன. உடனே அவர்கள் நால்வரும் வேறொரு குதிரை வண்டியில் ஏறிக்கொண்டனர். இரண்டு வண்டிகளும் புறப்பட்டு மெல்லச் சென்று’ரயிலடியை அடைந்தன. ஐந்து நிமிஷ நேரத்தில் ரயிலும் வந்தது. வேலைக்காரர்கள் தங்கம்மாளை தொட்டிலோடு கொணர்ந்து இரண்டாவது வகுப்பு வண்டியொன்றில் வைத்துவிட்டுச் சென்றனர். சாம்பசிவம், வேலைக்காரருக்கும், மோட்டார் வண்டிக்கும் உரிய பணத்தைக் கொடுத்துவிட்டு டிக்கெட்டுகள் வாங்கிக்கொண்டார். அவரும் கனகம்மாளும் தங்கம்மாளிருந்த இரண்டாவது வகுப்பில் உட்கார்ந்து கொண்டனர். கிட்டனும், ரெங்கராஜுவும் பக்கத்திலிருந்த மூன்றாவது வகுப்பு வண்டியில் உட்கார்ந்து கொண்டனர்; ரயில் புறப்பட்டது. 

பெருந்தேவி அம்மாள்கலெக்டருக்கு ஏதோ கடிதமெழுதி யிருக்கிறாளென்றும், அதைக்கொண்டே கலெக்டர் அவ்வாறு உத்தரவு செய்திருக்கிறா ரென்றும், அதுவரையில் சாம்பசிவமும், கனகம்மாளும் நினைத்திருந்தனர். நிற்க, தந்தி உத்தரவு தாம் சென்னைக்கு வந்ததைக் குறித்தோ அல்லது வேறு எந்த விடத்திற்கேனும் போனதைக் குறித்தோ வென்பது அவர்களுக்கு அதுவரையில் சந்தேகமாகயிருந்தது. இப்போது தாந்தோனிராயர்மீதும் சந்தேகம் உதித்தது. அவர் தம்மீது பகைமை கொண்டு அவ்வளவு தூரம் தீம்பு செய்யக் காரணமென்ன வென்று நினைத்துப் பெரிதும் வியப்படைந் தனர். கலகம் முற்றிலும் தாந்தோனிராயரால் செய்யப் பட்டதாகவும் தோன்றவில்லை; ஏனெனில் முதல்தடவை தாம் சென்னைக்கு வந்து பெண்ணை அழைத்து வந்ததாக ஏற்பட்ட அபவாதம் தாந்தோனிராயருக்குத் தெரியாது; ஒருக்கால் அது பெருந்தேவியால் எழுதப்பட்டிருக்கலாம்; அல்லது தமக்கு வந்த தந்தியை தாந்தோனிராயர் பார்த்திருக்க வேண்டும் என்று பலவாறு சிந்தித்தனர். இருவரும் ஆட்சேபனை செய்து ஒருவர்க்கொருவர் சமாதானம் சொல்லிக்கொண்டனர்; லஞ்சம் வாங்கினதாக ஏற்பட்ட குற்றம் இப்போது ஏன் எடுபட்டுப் போன தென்பது தெரியவில்லை. தமக்கு நேர்ந்த எதிர்பாராத எத்தனையோ கொடிய தீங்குகளில் சாம்பசிவத்திற்குச் சிறைச்சாலைப் பிரவேசம் இல்லாமல் போனதைப் பற்றி இருவரும் பெருத்த சந்தோஷமும் ஒருவகையான ஆறுதலும் அடைந்தனர். தமது சொத்துக்கள் போனதற்காகவும், உத்தி யோகம் போனதற்காகவும் அவர்கள் வருந்தவில்லை; தமது புத்திரியான மேனகா, தமக்கு அவமானம் உண்டாக்காத நிலைமையில், எவ்விதமான களங்கமும் அற்றவளாகத் திரும்பி வரவேண்டுமே என்றும், தமது மருமகப்பிள்ளையும் தங்கம்மாளும் பிழைக்கவேண்டுமே யென்றும், மேனகா திரும்பவும் தனது கணவருடன் சுகமாக வாழவேண்டுமே என்றும் பெரிதும் கவலையும் ஏக்கமும் கொண்டவர்களாய், தலையில் வைத்த கையும், தங்கத்தையே இமை கொட்டாமல் நோக்கிய விழியுமாக துயரமே வடிவெடுத்ததைப்போல அசைவற்று இருவரும் தொட்டிலிற் கருகில் உட்கார்ந்திருந்தனர். 

தங்கம்மாள் உயிருடனிருப்பவள் போலத் தோன்ற வில்லை. கண்கள் மூடப்பட்டே இருந்தன. எவ்வித அசைவும் மூச்சும் தோன்றவில்லை. அதைக் கண்டு பெரிதும் அஞ்சிய கனகம்மாள் அப்போதைக்கப்போது தங்கம்மாளின் மார்பில் கையைவைத்து ஹிருதயம் அடித்துக் கொள்ளுகிறதோ வென்பதைப் பார்த்தாள். உடம்பில் சூடு சிறிது புலப்பட்டது. பிறகு கனகம்மாள் கைபிடித்து நாடி பார்த்தாள். நிற்கப்போகும் கடியாரத்தைப்போல, நாடி நெடுநேரத்திற் கொருதரம் மெல்ல அடித்துக்கொண்டது. உயிரிருப்பதாக நினைத்து இருவரும் ஒரு சிறிது துணிவடைந்தனர். 

அவர்கள் ரயிலில் அவ்வாறு இருக்க, சாம்பசிவத்தின் மறு மொழிக் கடிதத்தை எடுத்துச் சென்ற சேவகன், அதை பெரிய கலெக்டர் துரையிடம் சேர்த்தான். துரை கடிதத்தை வாங்கிப் படித்துப் பார்த்து மிகவும் ஆச்சரியமடைந்தார்; குற்றப் பத்திரிகையிற் கண்ட மூன்றாவது குற்றத்திற்கு டிப்டி கலெக்டர் எழுதியிருந்த சமாதானத்தை இன்னொரு முறை படித்தார். முந்திய நாள் தாம் ரஜா கொடுக்க மறுத்த பிறகு சாம்பசிவம் திரும்ப ஒரு மனு எழுதி தாந்தோனிராயரிடம் கொடுத்த தாகவும், அதை எடுத்து வந்த ராயர், ரஜா கிடைத்து விட்டதாகச் சொல்லியனுப்பினதாகவும் சாம்பசிவம் எழுதியிருந்த விஷயம் துரையின் மனதைக் கலக்கியது. ஒரு கால் அது உண்மையா யிருக்குமோ வென்று அவர் சந்தேகித்தார். அப்படி இருந்தால் ரஜா கொடுக்கப்பட்டதாக தாந்தோனிராயர் பொய்யான செய்தி சொல்லி செய்தி யனுப்ப முகாந்தரமென்ன வென்று யோசித்தார். தாந்தோனிராயர் சாம்பசிவத்தின்மீது கொண்ட அருவருப்பினால் ஒருகால் அவ்வாறு செய்திருப்பாரோ என்றும் நினைத்தார். உடனே தாந்தோனியை வரவழைத்து உண்மையை அறிந்து கொள்வதே நல்லதென்று நினைத்து, அவரை உடனே அழைத்து வரும்படி துரை சேவகனை அனுப்பினார். சாலியமங்கலத்திலிருந்து அப்போதே வீட்டிற்கு வந்த ராயர் டிப்டி கலெக்டருடைய சங்கதிகளை தமது சேவகர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார். சாம்பசிவம் தங்கம்மாளை சென்னைக்கு அழைத்துச் சென்றது முதலிய செய்தியனைத்தையும் உணர்ந்து, “இன்றோடு ஒழிந்தான் சனியன்” என்று உல்லாசமாக அவர் தமது சாய்மான நாற்காலியிற் படுத்தார். அப்போது கலெக்டருடைய சேவகன் வந்து துரை அழைத்துவரச் சொன்னதாகக் கூறினான். என்ன சம்பவித்ததோ, எந்த ரகசியம் வெளியானதோ என்று சந்தேகித்துக் கலங்கிய ராயர்,உடனே எழுந்து உத்தியோக உடைகளையணிந்து கொண்டு, ஓடோடியும் சென்று பங்களாவை யடைந்து குனிந்து துரைக்கு சலாம் செய்தார். துரை உடனே சாம்பசிவத்தின் சமாதானத்தின்மேல் தமக்குண்டான சந்தேகத்தை தெரிவிக்க, ராயர் மிகவும் வியப்படைந்தவரைப்போல காண்பித்து, “அடாடா! இது முழுப் புரட்டாயிருக்கிறதே! நானாவது மனுவை வாங்கி வரவாவது! ரஜா கொடுக்கவில்லை யென்று அவரும் அவருடைய தாயாரும் தங்களை மிகவும் இழிவாகப் பேசினார்கள். சர்க்கியூட் போவதாகச் சொல்லிவிட்டு பட்டணம் போகப் போகிறோ மென்று சொன்னார்கள். எனக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை; நான் எழுந்து நேராக தங்களிடம் வந்துவிட்டேன். பிறகு நாம் இருவரும் ரயிலடிக்குப் போய், அவர்கள் பட்டணத்துக்குப் போனதைப் பார்த்தோம். ரஜா கொடுக்கப்பட்ட தென்று அவருக்கு நான் சொல்லி யனுப்ப எனக்குச் சாவகாசமேது? தாங்கள் ரஜா கொடுக்க மறுத்ததை நான் அறிந்தவன். அப்படி இருக்க, மறுபடியும், அவர் மனுக் கொடுத்தால், அதை வாங்கிக்கொண்டுவர நான்தான் துணிவேனா? இந்த மனிதன் ஜெகஜாலப்புரட்டனா யிருக்கிறானே! கிட்ட நெருங்குவோர் மேலெல்லாம் பழி போடுகிறானே! அப்பப்பா! இது பெருத்த மோசடியா யிருக்கிறதே! அவர் என்னிடம் மனுவும் கொடுக்கவில்லை; ரஜா கொடுக்கப்பட்டதென்று நான் செய்தியும் அனுப்ப வில்லை; உத்தரவானால், அப்படியே நான் காகிதத்தில் வாக்குமூலம் எழுதித் தருகிறேன். அதை மற்ற காகிதத்தோடு ஆதாரமாக சேர்த்துக்கொள்ளுங்கள்” என்றார். “பொய்யுடை யொருவன் சொல் வன்மையினால் மெய் போலும்மே” என்றபடி, ராயர் அழுத்தந் திருத்தமாகச் சொன்னதைக் கேட்ட துரை அதை உண்மை யென்று நம்பி விட்டார். அவ்வாறே ஒரு காகிதத்தில் அவரிடம் வாக்குமூலம் எழுதி வாங்கிக்கொண்டு, குற்றப்பத்திரிகையின் நகலொன்றை யும், எல்லா வாக்கு மூலங்களையும், சாம்பசிவத்தின் சமாதானத்தையும் துரை சேர்த்துத் தைத்து, அதனுடன் ஒரு அறிக்கையும் எழுதி, யாவற்றையும் சென்னை துரைத்தனத் தாருக்கு அனுப்பி விட்டார். அந்த அறிக்கையில் சாம்பசிவம் தாம் அறிந்த வரையில் அயோக்கியதை, அகம்பாவம், பொய், சூது முதலிய வற்றிற்கு இருப்பிடமானவ ரென்றும் கீழ் அதிகாரிகளையும், சிப்பந்திகளையும் நடத்தும் திறமை யற்ற முட்டாளென்றும், முன்கோபத்தால் தாசில்தார் முதல் தலையாரி வரையிலுள்ள யாவரையும் அடித்தும் திட்டியும் கொடுமை செய்வாரென்றும், மேம்பட்ட பதவியான டிப்டி கலெக்டர் உத்தியோகத்தை வகிக்கும் கண்ணியமற்ற அற்ப மனிதரென்றும், அக்கிரமங்களைச் செய்ய அஞ்சாதவரென்றும் துரை விரிவாக எழுதினார். அவர் லஞ்சம் வாங்குவதில் மகா சமர்த்தரென்றும், அதைப்பற்றி ஊர் முற்றிலும் பெருத்த புரளியாக இருப்பதாயும், ஆனால், அதை ருஜுப்படுத்தப் போதுமான அளவில் சாட்சிகள் இன்னும் முன் வரவில்லை யென்றும் எழுதினார். அவர் வீட்டில் நடந்த பயங்கரமான கொள்ளையும், அவரது மனைவிக்கு நேர்ந்த பெருந் துன்பத்தையும் பற்றி, விரிவாக எழுதினார். இவ்வாறு அவருக்கு நேர்ந்த விபத்துக்களைக் கருதி துரைத்தனத்தார் அவர் மீது கருணை கூர்ந்து அவரைச் சிறைச்சாலைக்கு அனுப்பாமல், வேலையிலிருந்து விலக்குவ தோடு விடவேண்டுமென்று பலமாக சிபாரிசு செய்து எழுதி அதை ராயருக்குப் படித்துக் காட்டினார். அவர் துரையின் காருண்ணிய குணத்தைக் குறித்துப் புகழ்ந்து பேசிவிட்டு விடைபெற்றுக்கொண்டு, வெளியிற் சென்று நிகழ்ந்த விஷயங்களை புளுகுமலைப் பிள்ளையிடம் கூறி மகிழ்வடைய நினைத்து ஓடோடியும் சென்றார். 

இவ்வளவோடு நாம் அவரை விடுத்து ரயிலிற் சென்ற அதிர்ஷ்ட ஹீனர்களான சாம்பசிவம், கனகம்மாள் முதலி யோரைப் பின்பற்றிச் செல்வோம். அன்றிரவு முற்றிலும் அவ்விருவரும் கண்ணிமைக்காமலும், தலையைச் சாய்க்கா மலும் ஒரே நிலையில் சுவரிலெழுதப்பட்ட உயிரற்ற சித்திரங்களைப்போல இருந்தனர். தங்கம்மாள் படுத்த சவம்போலவும், மற்றவரும் உட்காந்திருந்த சவங்களைப் போலவும் காணப்பட்டனரென்று சொல்வதைத் தவிர, வேறு கூறுதல் பொருந்தாது; அந்த இரவோ குறுகாத இரவாயும், தூரமோ தொலையாத் தூரமாயு மிருந்தது சகிக்க வொண்ணா வேதனை செய்து அவர்களை வதைத்தன. மாறி, மாறி மேனகா தங்கம்மாள் வராகசாமி ஆகிய மூவரையும் நினைத்து நினைத்து, அவர்களது மனம் தாமரை இலையின் நீரைப்போலத் தத்தளித்தவண்ண மிருந்தது. மயக்கத்தினால் அவர்களது தேகம் கிரு கிரென்று சுழன்று ஆகாயத்திற்குப் போய் திரும்புவதாய்த் தோன்றியது. அவர்களது உடம்பிலிருந்த நீரெல்லாம் கண்ணீராய் வெளிப்பட்டுப் போனமையால், நாவறண்டு போயிற்று, தேகம் நெருப்பாய்ப் பற்றி எரிந்தது. இனி அழுது சிந்துவதற்குக் கண்ணீரும் இல்லாமல் போனது. தலைநோய் ஒருபுறம் கொன்றுகொண்டிருந்தது. அத்தகைய கோரமான நிலைமையில் விடியற்காலம் ஐந்தரை மணிக்கு வண்டி செங்கற் பட்டை யடைந்தது. போர்ட்டர் தலையில் கையை வைத்துக் கொண்டு, “செங்கல்பட்டு, செங்கல்பட்டு” என்று தூக்கத்தில் அழுதுகொண்டு வந்ததைக் கேட்டு தமது உணர்வைப் பெற்ற சாம்பசிவம், “சரி; நான் போய்விட்டு வருகிறேன். இன்று சாயுங்காலத்துக்குள் தவறாமல் பட்டணம் வந்து சேருகிறேன். கட்டாயமாக வந்து விடுகிறேன். ஜாக்கிரதையாகக் கொண்டுபோய் சேருங்கள். சர். சவலை இராமசாமி முதலியார் சத்திரத்தில் ஒரு அறையை வாடகைக்குப் பேசி அதில் ஜாகை செய்துகொள்ளுங்கள். பணம் அடுத்த இரயிலில் வருவதாக டாக்டரிடம் சொல்லி, காரியத்தை முடிக்கும்படி செய்; இந்தப் பணத்தை யெல்லாம் நீ கொண்டுபோ; எனக்கு ரூபா இரண்டு போதும்; ஜாக்கிரதை ஜாக்கிரதை” என்று சொல்லி இரண்டு ரூபாயை எடுத்துக்கொண்டு மிகுதிப்பணத்தை தாயினிடம் கொடுத்து விட்டு வண்டியிலிருந்து கிழே இறங்கினார். கனகம்மாள் அவருக்கு ஆயிரம் முறை, “ஜாக்கிரதை” சொல்லி அனுப்பினாள். கீழே இறங்கிய சாம்பசிவம் அடுத்த வண்டிக்குச் சென்று கிட்டனுக்கும் ரெங்கராஜுவுக்கும் சொல்ல வேண்டியதைச் சொல்லிக் கொண்டிருக்கையில் வண்டி சென்னையை நோக்கி நகர்ந்தது. வண்டியிலிருந்த தமது மனைவியின் வடிவத்திலேயே தமது முழுமனதையும் செலுத்தி யிருந்த சாம்பசிவம் யாவற்றையும் மறந்து பைத்தியக்காரனைப் போல ரயில் போன திக்கைப் பார்த்துக்கொண்டே நெடுநேரம் நின்றார். 

தங்கம்மாளை எடுத்துச் சென்ற வண்டியோ காலை ஏழரை மணிக்குச் சென்னை எழும்பூர் வந்து சேர்ந்தது. உடனே, ரெங்கராஜு, சில கூலியாட்களை அமர்த்தி அவர்களது உதவியால் தங்கம்மாளைத் தொட்டிலோடு கீழே இறக்க, தொட்டில் பிளாட்பாரத்தில் மறைவான ஓரிடத்தில் வைக்கப்பட்டது. கூலிக்கு மோட்டார் வண்டி யொன்றை அமர்த்தும்படி ரெங்கராஜு அங்கு மிங்கும் தலைதெறிக்க ஓடினான். அதற்குள் நூற்றுக்கணக்கான பிரயாணிகள், அதென்ன காட்சியோ வென்று வேடிக்கை பார்க்க வந்து தொட்டிலைச் சுற்றிக் கூடிவிட்டனர். அதில் மயிலோ மடவன்னமோவெனப் படுத்திருந்த சுவர்ண விக்கிரகத்தைக் கண்டவுடன், ஜனங்களின் வியப்பும் திகைப்பும் நிரம்பவும் பெருகின. அதிலிருந்த மாதரசி மூச்சுப் பேச்சின்றி கண் திறவாமல் படுத்திருந்ததையும், அவளது சுந்தர மேனியில் ஏராளமான இரணக்கட்டுக ளிருப்பதையும் காண அவர்களது மனமிளகியது; ஒவ்வொருவரும் கனகம்மாளிடம் கேட்டு நிகழ்ந்ததை அறிந்தனர்; உடனே கண்ணீர் விடுவோரும், “இந்த அம்மாளுக்கு என்ன காலகதி வந்ததப்பா” என்போரும், “ஐயோ பாவம்! அழகுவழிகிறதே! இந்த மஹாலக்ஷ- அடிக்க அந்தக் கொலைகாரப் பயல்களுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ?” என்போரும், அதைக் காணப் பொறாமல் லபோ லபோ என்று வாயிலடித்துக்கொண்டு, “அட பாவி! இந்தப் பச்சைக்கிளியை இப்படி கொல்வானா! அவன் வீடு குட்டிச்சுவராய்ப் போக” என்போரும் “அந்த டாக்டரிடம் கொண்டுபோங்கள்” என்போரும், “இந்த டாக்டரிடம் கொண்டுபோங்கள்” என்போரும், “இந்த நிலைமையில் இவ்வளவு தூரம் கொண்டுவந்திருக்கக் கூடாது” என்போரும்,  தாம் ஒருகால் கச்சேரிக்குச் சாட்சியாகப் போக நேரிடுமோவென்று, அஞ்சி நெடுந்தூரத்திற்கு அப்பா லிருந்தபடியே முகத்தை வேறு பக்கமாகத் திரும்பிக்கொண்டு. குடுகுடென்று ஓடுவோருமா யிருந்தனர். அந்தச் சமயத்தில் தமது அதிகாரத்தைக் காட்டினால் ஏதாகினும் பணம் பெயருமென்று நினைத்து ரயில்வே சிப்பந்திகளிற் பழைய பெருச்சாளிகளான சிலரும் போலீஸாரும், “இங்கே என்ன இவ்வளவு கூட்டம்? போங்கள், போங்கள். தொட்டிலை ஏன் இங்கே வைத்திருக்கி றீர்கள்? சீக்கிரம் எடுத்துக்கொண்டு போங்கள். இங்கே வைக்க வேண்டாம்” என்று அதட்டி, பிணம் பிடுங்கிப் பருந்தைப்போல வட்ட மிட்டனர். ஐந்து நிமிஷத்தில் ரெங்கராஜு மோட்டார் வண்டி யொன்றில் வந்து சேர்ந்தான்; பரோபகார குணம் நிறைந்த ஜனங்கள் தொட்டிலைத் தூக்கி வைக்க, “நான் நீ” என்று முன்னுக்கு வந்தனர். அடுத்த நிமிஷம் தொட்டில் மோட்டாரில் வைக்கப்பட்டது. மற்ற மூவரும் அதிலேயே தொற்றிக்கொள்ள, வண்டி மெல்ல நகர ஆரம்பித்தது. தொட்டில் அசையுமோ வென்று அஞ்சிய ரெங்கராஜு, “மெதுவாகப் போகட்டும்; மெதுவாகப் போகட்டும்” என்று நிமிஷத்திற்கு நிமிஷம் வண்டிக்காரனிடம் கட்டியம் கூறிக் கொண்டே யிருந்தான்.கால் நாழிகை நேரத்தில் வண்டி புரசைப் பாக்கத்திலுள்ள டாக்டர் வில்லியம்ஸ் துரை வீட்டின் வாசலில் வந்து நின்றது. 

வில்லியம்ஸ் என்னும் பெயரைக் கொண்ட அந்த துரை சுத்தமான ஐரோப்பியரல்லர். ஐரோப்பியத் தந்தைக்கும், இந்திய தாய்க்கும் பிறந்தவர்களான யூரேஷிய ரென்னும் வகுப்பைச் சார்ந்தவர். அந்த வகுப்பினரை ஜனங்கள் சட்டைக் காரரென்று குறிப்பது வழக்கம். வில்லியம்ஸ் துரையிடத்தில் இந்திய அம்சத்தைக் காட்டிலும் ஐரோப்பிய அம்சம் அதிகமா யிருந்தமையால், அவர் இரண வைத்தியத்தில் மகா நிபுணரா யிருந்தார். பணம் வாங்குவதிலோ அதற்குமேல் நிபுணர். அவரது பிடிவாதத்தைக் குரங்கின் பிடிக்கே ஒப்பிடவேண்டும். அவர் எதைச் சொன்னாலும் அது முடிவு. யுகமே மாறினாலும், ஜெகமே பிறந்தாலும், அவருடைய தீர்மானம் மாத்திரம் மாறாது. பிறர் அதைப்பற்றி ஏதாகிலும் ஆட்சேபனை கூறினால், அவருக்கு உடனே மூக்கின் மேல் கோபம் பிறந்துவிடும். எழுந்து அடிக்கப்போய்விடுவார். குரங்கினிடம் பூமாலை அகப்பட்டுக்கொண்டதைப்போல, அவரிடம், அந்த அருமையான வித்தை அகப்பட்டுக்கொண்டு விழித்தது. ஜனங்கள் அவரிடம் வைத்தியம் செய்து கொள்ளவருவதற்கு அஞ்சி நடுங்குவார்கள். என்றாலும், இரண வைத்தியத்தில்; அவரை விட்டால், வேறுகதியில்லாமல் இருந்தது. அத்தகைய மனிதரான வில்லியம்ஸ் துரை வீட்டின் வாசலில் மோட்டார் வண்டி வந்து நின்றது. உடனே கிட்டனும், ரெங்கராஜுவும் வண்டியினின்று இறங்கி உட்புறம் நுழைந்து, கடிதத்தை துரையினிடம் நீட்டினார். துரை மூக்குக் கண்ணாடி பளபளவென்று மின்னிய தமது பறங்கிப்பழ முகத்தால் அவர்களை ஏற இறங்கப் பார்த்தார். பிறகு கடிதத்தை வாங்கி அதை அலட்சியமாகத் திறந்து படித்தார். ஆனால் அவரது முகத்தில் எவ்வித மாறுபாடேனும், இரக்கமேனும் துடிப்பேனும், கவலையேனும் காணப்படவில்லை. கடிதத்தை அருகிலிருந்த மேஜையின் மீது அலட்சியமாக எறிந்தார். வேறுதிசையில் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டு, “அடே நடேசா! வண்டி தயாராக இருக்கிறதா?” என்றார். அவரது நடேசன், “தயாரா யிருக்கிறது; புறப் படலாம்” என்றான். உண்மையில், அவர் அப்போது ஒரு அவசர காரியத்தின் பொருட்டு வெளியே போக ஆயத்தமாக இருந்தார். அந்தச் சமயத்தில் நம்மவர்கள் வந்து தோன்றியது, அவருக்கு மிகுந்த ஆத்திரத்தை உண்டாக்கியது. என்றாலும் தஞ்சையிலிருந்து வந்த கடிதத்தை மதித்து தமது கோபத்தை ஒரு சிறிது அடக்கிக் கொண்டு கிட்டனை நோக்கி, “அந்த அம்மாள் எங்கே இருக்கிறாள்?” என்று கேட்டார்; வாசலில் மோட்டாரில் இருப்பதாக அவன் கூற, உடனே அழைத்து வரும்படி துரை உத்தரவளித்தார். அடுத்த நிமிஷம், தங்கம்மாளிருந்த தொட்டிலை கிட்டன், ரெங்கராஜு, கனகம்மாள், மோட்டார் வண்டிக்காரன் ஆகிய நால்வரும் தூக்கிக்கொண்டு வந்து உட்புறத்தில் வைத்தனர்.உடனே துரை அவர்கள் நால்வரையும் வெளியில் இருக்கச்செய்து கதவை மூடித் தாளிட்டுக்கொண்டு கால் நாழிகை நேரம் தங்கம்மாளின் உடம்பைச் சோதனை செய்து பார்த்தார்; தமது சிப்பந்தியை அழைத்து, காயங்களை அலம்பிச் சுத்தி செய்து மருந்துகள் வைத்துக் கட்டச் செய்தார்; ஏதோ ஒருவகையான திராவகத்தைத் தயாரித்து மூக்கின் வழியாக பீச்சாங்குழல் வைத்து அம்மருந்தை உட்புறம் செலுத்தினார். இன்னம் பல முக்கிய சிகிச்சைகளைச் செய்தார்; வெளியிலிருந்த கிட்டன் முதலியோரை உள்ளே வரவழைத்தார்; தங்கம்மாள் முன்னிருந்த மாதிரியே தொட்டிலில் எவ்வித மாறுபாடின்றியே கிடந்தாள். துரை அவர்களைப் பார்த்து, “சரி; பணமெங்கே?” என்றார். உடனே கனகம்மாள், “நாங்கள் மிகவும் அவசரமாக முன்னால் வந்துவிட்டோம். இதோ அடுத்த வண்டியில், இந்தப் பெண்ணின் புருஷன் பணத்தோடு வருவார். அவசரமாகச் செய்ய வேண்டிய காரியங்கள் நடக்கட்டும்; பணத்தைப் பற்றிக் கொஞ்சமும் யோசனை செய்ய வேண்டாம். இதோ, வருகிறது” என்றாள். அதைக் கேட்ட துரைக்குப் பெருத்த கோப மூண்டது. “நல்ல காரியம் செய்தீர்கள்! பெண்ணின் புருஷனில்லாமல் நீங்கள் மாத்திரமா வந்தீர்கள்! மார்பைக் கீறி ஆபரேஷன் செய்யவேண்டும். இன்று சாயுங்காலத்திற்குள் இதைச் சரிப்படுத்தாவிட்டால், உயிர் போய்விடும்; உடம்பு மிகவும் அபாயகரமான நிலைமையில் இருக்கிறது. எலும்புத் துண்டுகள் ஹிருதயத்தில் குத்திக்கொண் டிருக்கின்றன. ஹிருதயத்திலிருந்து வரும் இரத்த ஓட்டம் தாறுமாறா யிருக்கிறது; ன்று சாயுங்காலத்துக்குள் இரத்த ஓட்டமே நின்றுபோம்; உடனே மார்பைக் கீறி எலும்பை எடுக்க வேண்டும்; மார்பைக் கீறுவதில் உயிர் போனாலும் போய்விடும். அப்படி உயிர் போனால் என்னை உத்திரவாதி யாக ஆக்குவதில்லை யென்று பெண்ணின் புருஷன் முதலில் எனக்கு ஒரு பத்திரம் எழுதிக்கொடுக்க வேண்டும். பணத்தையும் நீங்கள் உடனே கொடுக்கவேண்டும். பெண்ணின் புருஷனில்லாமல் நீங்கள் ஏன் வந்தீர்கள்? பெண்ணை எடுத்துக்கொண்டு போங்கள்” என்று ஆத்திரத்கோடு மொழிந்தார். கனகம்மாள் திகைப்பும் அச்சமு மடைந்து, “ஐயா! அவர் அடுத்த வண்டியில் அவசியம் வருவார். நான் இந்தப் பெண்ணின் மாமியார்; அவசரமாக ஆபரேஷன் ஆகவேண்டு மானால், நான் பத்திரம் எழுதிக்கொடுக்கிறேன்; தயவு செய்து வேலையை நடத்துங்கள்” என்று நயந்து கூறி வேண்டிக் கொண்டாள். துரைக்குப் பொறுக்கக்கூடாத ஆத்திரம் உண்டாயிற்று.”Damn nonsense; you talk bloody rot. இதென்ன புத்தியில்லாத பேச்சு! நீ பத்திரம் எழுதிக்கொடுத்தால், அது குப்பையில் போடத்தான் உபயோகப்படும்; அவர் எழுதிக் கொடுக்காவிட்டால் நான் ஆபரேஷன் செய்யத் தயாராக இல்லை. சாயுங்காலத்துக்குள் அவரையும் அழைத்துக்கொண்டு வந்து சேருங்கள். நான் அவசரமாக வெளியில் போக வேண்டும்” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டு, ஏதோ ஒருவகையான மருந்தைத் தயாரித்து, அதைத் தங்கம்மாளது மூக்கின் வழியாக உட்புறம் செலுத்தி விட்டு, “சரி; எடுத்துக்கொண்டு போங்கள்” என்று மூர்க்கமாகப் பேசிவிட்டு வெளியில் நடந்தார்; அவரிடம் இனி நயப்பதில் பயனுண் டாகா தென்பது நன்றாக விளங்கியது. தொட்டில் உடனே வண்டிக்குப் போய்ச் சேர்ந்தது; அதே காலத்தில் தமது வண்டியில் ஏறிக்கொண்ட துரை கிட்டனைப் பார்த்து, “ஏன் ஐயா! நீங்கள் எந்த இடத்தில் இறங்கி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். கிட்டன், “சர். சவலை இராமசாமி முதலியார் சத்திரத்தில் இறங்கப்போகிறோம்” என்றான். அதைக் கேட்டுக்கொண்ட துரை அலட்சியமாகப் போய்விட்டார்; மோட்டார் வண்டி, சர். சவலை இராமசாமி முதலியார் சத்திரத்திற்குச் சென்றது. அதில் வசதியான இரண்டு அறைகள் வாடகைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அந்த ஜாகையில் தொட்டில் வைக்கப்பட்டது. கனகம்மாள், கிட்டன், ரெங்கராஜு ஆகிய மூவரும் என்ன செய்வது என்பதை அறியமாட்டாமல் ஏங்கி பெருங் கவலையால் பீடிக்கப்பட்டு மூலைக்கொருவராக உட்கார்ந்து விட்டனர். எவருக்கும் சாப்பாட்டிலும், வேறு எந்த விஷயத்திலும் புத்தி செல்லவில்லை; அன்று சாயுங்காலத்திற்குள் சாம்பசிவம் வரவேண்டுமே என்றும், அவர் பணத்துடன் வரவேண்டுமே என்றும் அவர்கள் எண்ணி எண்ணி ஆவல் கொண்டு ஓய்ந்து உட்கார்ந்து விட்டார்கள். அப்போது கிட்டன், “ஏன் பாட்டீ, இந்த டாக்டர் கொஞ்சமும் இரக்கமற்ற பாவியா யிருக்கிறானே; வேறு யாரிடத்திலாவது கொண்டுபோனால் என்ன?” என்றான். 

உடனே கனகம்மாள், “சேச்சே! அது பிசகு; இந்த ஆபரேஷன் செய்வதில் இவரைப்போல சாமர்த்தியமாகச் செய்பவர் எவருமில்லையாம். இவருக்குச் சிபாரிசுக் கடிதம் கொண்டுவந்தோம்; இவரே இவ்வளவு அலட்சியம் செய் கிறாரே; இன்னும் மற்றவர்கள் வாயைத் திறந்து பேச கூடமாட்டார்கள்; இருக்கட்டும்; சாயுங்காலத்துக்குள் அவன் வந்து விடுவான்; துரையும் ஏதோ மருந்து கொடுத்திருக்கிறாரே; பார்ப்போம்” என்று கூறினாள். அன்று பகற்பொழுது முற்றிலும், சாம்பசிவம் இந்த வண்டியில் வருவார், அடுத்த வண்டியில் வருவார் என்று சொல்லிச் சொல்லி வழிபார்த்துக் கொண்டே அவர்கள் இருந்தனர். பார்க் என்னும் ரயில்வே ஸ்டேஷன், சத்திரத்திற்குப் பின்புறத்தில் இருப்பதால், ஒவ்வொரு வண்டியும் வந்தபோதெல்லாம், ரெங்கராஜு ஸ்டேஷனுக்குப் போய்விட்டு ஏங்கிய முகத்தோடு திரும்பினான். இரவு மாத்திரம் வந்தது; சாம்பசிவம் வரவில்லை. கனகம்மாள், கிட்டன், ரெங்கராஜு ஆகிய மூவரும் நெருப்பின்மேற் புழுவெனத் துடிக்கின்றனர். கைகளைப் பிசைந்து கொள்ளுகின்றனர். அன்று மாலைக்குள் ஆபரேஷன் செய்யாவிடில் தங்கத்தின் உயிர் நின்று போய்விடுமோ வென்று அஞ்சித் தவித்தனர். அப்போதைக்கப் போது தங்கம்மாளின் நாடியை கனகம்மாள் பிடித்துப் பிடித்துப் பார்த்தாள்; வரவர நாடி தடதடவென்று அடித்துக் கொண்டது; மரணகாலத்திலிருப்போரது நாடி அவ்வாறு விசையாக அடித்துக்கொள்வது வழக்கமென்று கனகம்மாள் கேள்வி யுற்றிருந்தாள் ஆதலின், அவளது மனம் பட்டபாட்டையும், அதன் தவிப்பையும் விவரித்துக் கூறுதல் எளிய காரியமல்ல. அவள் அனுபவித்த துன்பத்தை நரக வேதனை என்றே சொல்ல வேண்டும். அந்த நிலைமையில் பொழுதும் விடிந்தது; சாம்பசிவமோ வருவதாகத் தோன்றவில்லை. ஒவ்வொரு ரயிலும் மோசம் செய்துவிட்டது. ஆனால், தங்கம்மாளின் உயிர் இன்னும் தேகத்தில் நின்றது; இனி தாமதமின்றி ஆபரேஷன் செய்யாவிடில் அன்று தங்கம்மாளது உயிர் போவது நிச்சயமென்று கனகம்மாள் நினைத்தாள். அன்று மாலைக்குள் தங்கம்மாள் பிழைப்பாளோ அல்லது பட்டணத்து மண்ணுக்கு இரையாவாளோ என்று அவள் நினைத்து நினைத்து மனமாழ்கினாள், தங்களது எதிர்காலத்து சந்தோஷமும், துயரமும் அந்த ஒருநாளிலேதான் தெரிய விருந்ததாக எண்ணி யெண்ணிப் பரிதபித்தாள். அந்த நிலைமையில் கதவைத் திறந்துகொண்டு டாக்டர் வில்லியம்ஸ் உள்ளே நுழைந்தார். உள்ளே யிருந்த மூவரும் திடுக் கிட்டெழுந்து நின்றனர். கிட்டன் துரைக்கு வந்தனம் செலுத்தினான். உடனே டாக்டர், “நேற்று சாயுங்காலமே இந்தப் பெண்ணின் புருஷன் வருவதாகப் பொய் சொன்னீர்களே; என்னை ஏமாற்றத்தானே பார்த்தீர்கள்?” என்றார். அதற்கு மறு மொழி கூற எவருக்கும் ஒன்றும் தோன்றவில்லை. கனகம்மாள் சிறிது தத்தளித்த பிறகு, “ஐயா! எங்களுக்கு இது பொல்லாத காலமாயிருக்கிறது; நினைக்காத ஆபத்துகளெல்லாம் வருகின்றன. பணத்தோடு நேற்று சாயுங்காலத்துக்குள் வருவதாகச் சொன்ன பையன் வரவில்லை. அவனுக்கு என்ன துன்பம் சம்பவித்ததோ தெரியவில்லை. அவனைத் தேடிப் பார்த்து அழைத்து வரும்படி மனிதரை அனுப்புகிறேன். பெண்ணுக்கு அதற்குள் உயிர் போய்விடுமோ வென்று பயமாக இருக்கிறது. பெரிய மனதோடு நீங்கள் வளுடைய உயிரைக் காப்பாற்ற வேண்டும். உங்களுக்கும், உங்களுடைய பெண்டு பிள்ளைகளுக்கும் ஆயிரம்கோடி புண்ணியம் உண்டாகும். ஈசுவரன் உங்களைக் காப்பாற்றுவார். நாங்கள் உங்களுக்குச் சேரவேண்டிய பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட மாட்டோம். நாங்கள் நன்றி கெட்டவர்களன்று, தயவு செய்யுங்கள்” என்று கூறி மன்றாடினாள். அதைக் காதில் வாங்காதவரைப்போலத் தோன்றிய துரை தொட்டிலினருகில் சென்று தங்கம்மாளது நாடி முதலியவற்றின் நிலைமையை ஆராய்ந்து பார்த்தார். அதற்குள் அவரது வேலைக்கார னொருவன் அங்கு தோன்றி தங்கம்மாளின் கட்டுகளை அவிழ்த்துவிட்டு, காயங்களை அலம்பி மருந்து வைத்துத் திரும்பவும் கட்டினான். உடனே துரைகனகம்மாளைப் பார்த்து, “என்னவோ தெய்வச் செயலாக உயிர் இதுவரையில் நின்றிருக்கிறது. நேற்று சாயுங்காலத்துக்குள் பிராணன் போயிருக்க வேண்டும். நான் உள்ளுக்குக் கொடுத்த மருந்தின் ஆதாரத்தினால் உயிர் நின்றது. அதே மருந்தை இப்போது ஒரு முறை உள்ளே செலுத்துகிறேன். அந்த மனிதர் வந்து பத்திரம் எழுதிக் கொடுத்துப் பணமும் செலுத்துமுன் ஆபரேஷன் செய்வது என் மேல் குற்றமாகும். ஆகையால் ஓர் ஆளை அனுப்பி அவரை உடனே வரவழையுங்கள்” என்று சொல்லி விட்டு, முதல்நாள் மூக்கின் வழியாக உட்செலுத்திய மருந்தை இன்னொருமுறை உட்புறம் செலுத்தி விட்டு எழுந்து சென்றார். கதவிற் கருகில் போனவர் முகத்தைத் திருப்பி, “அலட்சியமா யிருப்பீர்களானால், இன்று சாயுங்காலத்துக்குள் உயிர் போய்விடும்; கண்டிப்பான விஷயம், விளையாட்டல்ல, ஜாக்கிரதை; நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன்; பிறகு என்மேல் குறை சொல்லக்கூடாது; என்னுடைய மருந்தினால் கூட இனிமேல் உயிர் நிற்பது சந்தேகம்” என்று சொல்லிவிட்டு வெளியிற் போய்விட்டார். 

துரையின் விஷயத்தில் கனகம்மாளுக்கு இருந்த அரு வருப்பு ஒருவாறு குறைந்தது. முதல்நாள் இரக்கமற்றவராய்த் தோன்றிய அவர், அன்று தமது இருப்பிடத்திற்கு வந்ததைப்பற்றி அவள் சந்தோஷ மடைந்தாள். ஆபரேஷனைத் தவிர, மற்ற சிகிச்சைகளை யெல்லாம் செய்ததை நினைத்து, அவர் முற்றிலும் இரக்கமில்லாத மனிதரல்ல ரென்றும், மனிதரிடத்தில் உண்டாகும் இரக்கத்தை அவர் வெளியில் காட்டாமல் காரியத்தைச் செய்பவரென்றும், பத்திரமில்லாமல் ஆபரேஷன் செய்ய அவர் உண்மையில் அஞ்சுகிறாரென்றும் நினைத்தாள்.அன்றைய பகலிற்குள்ளாகிலும் சாம்பசிவம் வந்து விடுவாரென்று நிச்சயமாக நினைத்திருந்தாள். அவரோ வரவில்லை. அப்பொழுது ரெங்கராஜு, “அம்மா! இது என்னவோ சந்தேகமா யிருக்கிறது. நான் உடனே ரயிலேறி செங்கற்பட்டுக்குப் போய் எஜமானை அழைத்துக் கொண்டு வருகிறேன்” என்றான். கனகம்மாள் அதை ஆமோதித்து அவனை அடுத்த வண்டியில் செங்கற்பட்டுக்கு அனுப்பினாள். அவன் சென்ற ரயில் பகல் மூன்று மணிக்குச் செங்கற்பட்டை அடைந்தது. வழியில் எதிர்ப்பட்ட வண்டிகளில் அவர் வருகிறாரோவென்று எச்சரிக்கையாகப் பார்த்துக்கொண்டே ரெங்கராஜு சென்றான். எந்த வண்டியிலும் சாம்பசிவம் காணப்படவில்லை. செங்கற்பட்டில் இறங்கி, ரயிலடியில் ஜனங்கள் தங்குமிடங்களிலெல்லாம் போய் அவன் தேடினான். பிறகு ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொண்டு அவர்களது சிற்றூருக்கு மாலை ஆறு மணிக்குப் போய்ச் சேர்ந்தான். கனகம்மாளால் குறிக்கப்பட்ட நீலகண்டம் செட்டியாரிடம் சென்று, டிப்டி கலெக்டர் சாம்பசிவையங்கார் பணம் வாங்க வந்தாரா வென்றும் அவர் எங்கிருக்கிறார் என்றும் விசாரிக்க, செட்டியார், “நீ யார்?” என்று கேட்டார். “நான் அவருடைய சேவகன். அவரை அவசரமாக அழைத்துக்கொண்டு போகவேண்டும்” என்றான் ரெங்கராஜு. உடனே செட்டியார், ‘அவர் பணம் வாங்கிக்கொண்டு நேற்றைக்குச் சாயுங்காலமே புறப்பட்டு பட்டணம் போய்விட்டாரே! நீ எங்கிருந்து வருகிறாய்?” என்றார். அதைக் கேட்ட ரெங்கராஜு பெருத்த திகைப்படைந்தவனாய், “நான் பட்டணத்திலிருந்துதானே வருகிறேன். அவர் அங்கே வரவில்லையே! இங்கே யிருந்து எத்தனை மணிக்குப் புறப்பட்டார்?” என்றான். ”அவர் சாயுங்காலம் ஐந்து மணிக்கு குதிரை வண்டி வைத்துக்கொண்டு போய்விட்டார்; பட்டணத்துக்குப் போவதாகச் சொன்னார்; எங்கே போனாரோ எனக்குத் தெரியாது” என்றார் செட்டியார். ரெங்கராஜுவின் மனதில் இன்னதென்று விவரிக்கக் கூடாத பல சந்தேகங்களும், திகிலும், கவலையும் குடிகொண்டன. சாம்பசிவம் எங்கு சென்றாரோ, அவருக்கு என்ன ஆபத்து நேர்ந்ததோ, குதிரை வண்டியில் போகும்போது வழிப்பறி ஏதேனும் நடந்திருக்குமோ வென்று பலவாறு நினைத்து, வந்த வண்டியிலேயே ஏறிக்கொண்டு செங்கற்பட்டை நோக்கித் திரும்பினான். 

கனகம்மாள் முதலியோருடன் வந்து முந்திய நாள் விடியற் காலையில் செங்கற்பட்டில் இறங்கிய சாம்பசிவம் எங்கு சென்றார், என்ன செய்தார் என்பனவற்றைக் கவனிப் போம். தங்கம்மாளை எடுத்துச் சென்ற வண்டி மறைந்து போன பின்னரும் நெடுநேரம் வரை ஒரே நிலையில் நின்றிருந்த சாம்பசிவத்தின் மனதில், தாம் சீக்கிரம் போய் பணம் வாங்கி வாராவிடில், தமது மனைவியின் ஆபரேஷன் ஒழுங்காக நடைபெறா தென்னும் நினைவு தோன்றியது. அவர் விரைவில் பணத்தை வாங்கிவர தமது ஊருக்குப் போய் வேண்டுமென்னும் ஆவல் கொண்டவராய் ஸ்டேஷனைவிட்டு வெளியில் வந்து, குதிரை வண்டியில் ஏறிக்கொண்டு பதினைந்து மையிலுக்கப்பாலிருந்த பகற் கொள்ளைப்பாக்கம் என்னும் சிற்றூரை அடைந்தார். அவ்வூரில் பணம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்த நீலகண்டம் செட்டியாரிடம் சென்று தமது வரலாறுகளைச் சுருங்கக் கூறி, தமக்கு ரூபாய் ஆயிரம் அப்போதே வேண்டுமென்றும், ரூபா மூவாயிரம் பெறத்தக்க தமது வீட்டை அடமானம் வைப்பதாகவும் தெரிவித்தார். அந்த நிஷ்டகண்டகம் செட்டியார் மேலும் கீழும் பார்த்தார்; மொட்டைத் தலையைத் தடவிக்கொண்டார்; மிகவும் அமர்த்த லாகத் திண்டில் சாய்ந்தவண்ணம், ‘பணமாவது காசாவது! இப்போ காலம் இருக்கிற இருப்பு ஒங்களுக் கென்ன தெரியும். பணத்தைக் கண்ட மூளியாரையா? எங்கேயும் இப்ப சுணக்கமா இருக்குது; பணம் பெறுகிறது குதிரைக் கொம்பாயிருக்கிறது எளவு; ஒங்களுக்கு ஒடனே வேணும். எங்க வூட்டுல பணம் காச்சா தொங்குது. இப்போ சரிப்படாதுங்க. அடுத்த மாஷம் சிங்கப்பூரிலே யிருந்து ஊண்டியல் வருதுங்க; அதுக்குப் பொறவால வாங்க; பார்த்துக்கிடலாம்” என்றார். அதைக் கேட்ட சாம்பசிவம் தமது அவசரத்தை மென்மேலும் திரும்பத் திரும்ப விளக்கி செட்டியாரிடம் கெஞ்சி மன்றாடினார். அதிகமான வட்டி தேவையானலும் கொடுப்பதாகக் கூறினார். உடனே செட்டியார், “இதென்ன ஐயா எளவு! தொல்லையா போச்சு; பணமில்லேன்னா விடமாட்டேங்கிரே! அந்த முள்ளிக்கா யத்ததென வூட்டுக்கு எவன் ஐயா ஆயிரம் ரூவா கொடுப்பான். மூணுகாசுகூட அது தாளாதையா; வேலெயப் பாரையா’ என்றார். உடனே சாம்பசிவம் வீடு, நிலம் முதலிய எல்லாவற்றையும் அடமானம் வைப்பதாகவும் இரண்டு வட்டி கொடுப்பதாகவும் ஆயிரத்துக்கு இரண்டாயிரமாக எழுதிக் கொடுப்பதாகவும் ஒப்புக்கொள்ள, செட்டியார் அரை மனதோடு அதற்கு இணங்கினார். பிறகு அதற்குத் தேவையான தஸ்தாவேஜு எழுதப்பட்டது. அந்த ஊருக்கு நான்கு மயிலுக்கப்பாலுள்ள சப்ரிஜிஸ்டரார் கச்சேரியில் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. மாலை 5-மணிக்கு, செட்டியார் ரூபா ஆயிரத்தையும் பணமாக எண்ணிவிட்டார்; சாம்பசிவம் அதை எடுத்து பெருத்த மூட்டையாகக் கட்டிக் கொண்டு குதிரை வண்டியில் உட்கார்ந்தார். இரவு ஒன்பது மணிக்கு வண்டி செங்கற்பட்டு வந்து சேர்ந்தது. சாம்பசிவம் கீழே இறங்கி பணமூட்டையையும் கையிலெடுத்துக்கொண்டு ரயில் ஸ்டேஷனுக்குள் போய், சென்னைக்குப் போக டிக்கெட் கேட்டார். உள்ளே இருந்த குமாஸ்தா சாம்பசிவையங்காரைப் பார்த்து நகைத்து ஏளனம் செய்து, “அதோ அடுத்த அறையில் டிக்கெட்டு கொடுக்கிறார்கள்; போய் வாங்கிக்கொள்ளும்” என்றார். அதை உண்மையென்று நம்பிய சாம்பசிவம் அடுத்த அறைக்குப் போய் பார்க்க, அதற்குள் மனிதரே காணப்பட வில்லை, 

அதில் விளக்குகள், எண்ணெய், கயிறுகள், கடப்பாரைகள் முதலிய பலவகைப்பட்ட சாமான்கள் நிறைந்திருந்தன. அவர் அதை பார்த்துவிட்டுத் திரும்பிவந்து ஸ்டேஷன் மாஸ்டரிருந்த அறைக்குப்போய் கேட்க, அவர் இனிமேல் நாளைக்குத்தான் வண்டி. சென்னைக்குப் போகும் வண்டி விடியற்காலம் ஐந்தரை மணிக்கு இங்கே வரும்” என்று சொல்லிவிட்டு ஜன்னல்கள், கதவு முதலியவற்றை மூடி உட்புறம் தாளிட்டுக்கொண்டார். அந்த மறுமொழியைக் கேட்ட சாம்பசிவம் தவிக்கிறார்; உடனே இரண்டு இறகுகள் தமது புஜங்களில் முளைத்திருந்தால், அப்போதே பறந்து போய்விடலாமே என்று நினைக்கிறார். அப்போது தமது மனைவி, உயிருடன் இருக்கிறாளோ, அல்லது விண்ணுலக மடைந்தாளோ; டாக்டர் துரை மார்பைக் கீறி எலும்புகளை எடுத்தாரோ இல்லையோ என்று பலவாறு நினைத்து வண்டிக்காரர்களிடம் கேட்டார். அங்கிருந்து சென்னை நெடுந்தூரமாதலால், ஒருவரும் வரத் துணியவில்லை. அவ்வூரில் வாடைகைக்கு மோட்டார் வண்டி அகப்படுமோ என்று விசாரித்தார். அது மருந்துக்கும் அகப்படாது என்னும் மறுமொழி கிடைத்தது. என்ன செய்வார்! இன்னதைத்தான் செய்வதென்று அறியமாட்டாமல் நெடுநேரம் அங்கு தமது பளுவான மூட்டையைத் தூக்கிக்கொண்டே அலைந்தார். விடியற்காலம் ஐந்தரை மணிவரையில் ஸ்டேஷனில் இருப்பதைத் தவிர வேறு வழி எதுவும் தோன்றவில்லை. அவர் தமது பண மூட்டையை ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாற்றும்போது ரூபாய்கள் கலகலவென்று ஓசை செய்ததைப் பலர் கேட்டு, யாரோ பெரிய மனிதர் பெருத்த பண மூட்டையோடு ஏதோ வியாபாரத்தின் பொருட்டு செல்கிறா ரென்று நினைத்துக்கொண்டனர். கடைசியில் சாம்பசிவம் கீழே உட்கார்ந்துகொள்ள நினைத்தார். அவர் முதல்நாட் பகலில் போஜனம் செய்தவர்; மூன்று நாட்களாக கண்களையே மூடி யறியாதவர்; பெண்ணையும், மனைவியையும் மருமகப்பிள்ளையையும் நினைத்து நினைத்துச் சோர்வடைந்திருந்தார். அவரது மூளை முற்றிலும் குழம்பிக் போயிருந்தது. அப்போதைக்கப்போது அவரது தெளிந்த அறிவும் பிறழ்ந்துகொண்டே வந்தது. தேகமும், மனமும் கட்டினில் நில்லாமல் தவித்தன. அந்த நிலைமையில் அவர் மூன்றாவது வகுப்பு வழிப்போக்கர்கள் தங்கும் இடத்திற்குச் சென்று கீழே உட்கார்ந்து கொண்டார். அந்த இடமோ மாட்டுக் கொட்டிலைப்போல இருந்தது. அதில் குப்பை, செத்தை, வெற்றிலைப் பாக்குத் தாம்பூலம், வாழைப்பழத்தோல், பட்டாணிக் கடலைத் தோல் முதலிய சாமான்கள் நிறைந்திருந்தன. மேலே ஆறுபட்டை லாந்தலொன்று முணுக்கு முணுக்கென்று எரிந்து கொண்டிருந்தது. அதில் எரிந்துகொண்டிருந்த சுடர் எங்கிருந்த தென்பதை இன்னொரு விளக்கின் உதவியாலேயே அறிதல் வேண்டும்; அங்கு அப்போது வேறு எவரும் ருக்கவில்லை. சாம்பசிவம் கீழே உட்காந்தவுடன், அவரது தேகத்தில் களைப்பு மேலிட்டது. ஆகையால், படுத்துக்கொள்ள வேண்டுமென்னும் விருப்ப முண்டாயிற்று; தலையணையைப் போல மிகவும் பருமனாயிருந்த பண மூட்டையைத் தலையின் கீழ் வைத்துக்கொண்டு படுத்தார். அந்தப்பணமே தங்களது உயிராதலால் அதை ஜாக்கிரதையாகக் கொண்டுபோக வேண்டுமே யென்னும் கவலை கொண்டவராய்,படுத்தபடியே தமது இரண்டு கைகளாலும் மூட்டையை அணைத்து இரு கைகளின் விரல்களையும் ஒன்றாகப் பின்னிக்கொண்டார். 

உடனே ஐந்து நிமிஷத்தில் துயில்வந்து அவரை அழுத்தியது. என்றாலும், அவர் மிகவும் வருந்திச் சமாளித்துக் கொண்டு,துயிலாமல் அன்றிரவு முற்றிலும் அவ்வாறே கண்விழித்து இருக்க வேண்டு மென்று உறுதி செய்து கொண்டிருந்தார். அவ்வாறு கால் நாழிகை கழிந்தது. அப்போது ஒரு பெண்பிள்ளை ஒரு சிறிய மூட்டையை எடுத்துக்கொண்டு அங்கு வந்து, சாம்பசிவத்தின் காலடிக் கருகில் உட்கார்ந்து வெற்றிலைபாக்குப் போட்டுக் கொண்ட வண்ணம், “சாமி! கூடுவாஞ்சேரிக்கு வண்டி எப்ப வரும்?” என்றாள். சாம்பசிவம் “விடியற்காலையில் வரும்” என்றார். அவள் வெற்றிலைப் பாக்கைப்போட்டுக்கொண்டு அவரது காலடிக்கருகில் படுத்துக்கொண்டாள். அதன் பிறகு கால்நாழிகை கழிந்தது. அவள் அந்த ஊரையே பெயர்த்தெறியும் படியான குறட்டைகளை தன் நாசிகளின் வழியாக வெளிப்படுத்த ஆரம்பித்தாள். அப்போது பிரயாணியைப் போலக் காணப்பட்ட ஒருவன் அங்கு வந்து, சாம்ப சிவத்தினருகில் வலப்பக்கமாக உட்கார்ந்து பட்டாணிக்கடலை தின்ன ஆரம்பித்தான். அவன் அந்த வேலையை கால் நாழிகை வரையில் செய்துவிட்டு அவரது தலைப்பக்கத்தில் இரண்டு முழத்திற்கப்பால் படுத்துக்கொண்டு பாட்டுப் பாட ஆரம்பித்தான். தேவாரம், திருப்புகழ், இந்துஸ்தானி, கெஜல் முதலிய பாட்டுகளை ஒரு நாழிகை நேரம் பாடிய பின் அவன் கடைசியில் ஓய்ந்து போய் குறட்டை விடத்தொடங்கினான். 

அப்போது இரவு மணி ஒன்றாயிற்று; சாம்பசிவம் மூன்றாம் ஜாமம் நித்திரையி லாழ்ந்திருந்தார். பட்டினியாலும், நெடுநாட்கள் துயிலாமையாலும், அலட்டலினாலும், அயர்ந்திருந்த மனிதராதலின், அவர் ஆழ்ந்த நித்திரையில் பிரம்மாநந்தமாக அழுந்திக் கிடந்தார். ஆனால், அவர் துயிலுவதாக எவருக்கும் தெரியவில்லை. அவரது ஆழ்ந்த துயில் சிறுகக் சிறுகக் கலைய வாரம்பித்தது. அரைத்துயிலும் அரை உணர்வுமாக விருந்தது. அப்போது வலது உள்ளங்காலில் ஒருவகையான குறுகுறுப்பு உண்டாயிற்று; ஒரு நாய் தனது நாக்கால் நக்குவதால் உண்டாகும் குறுகுறுப்பும் கூச்சமும் ஒருவகையான இன்பமும் துன்பமும் கலந்து தோன்றின. அதனாலேயே அவரது ஆழ்ந்த துயில் கலைந்தது. மேன்மேலும் அந்த இன்பகரமான உணர்ச்சி அதிகரித்துத் தோன்றியது. அது கனவோ என்று அவர் நினைத்தார்; அதனாலுண்டான குறுகுறுப்பைத் தாங்கமாட்டாது அவர் சிறிது நேரம் தவித்தார். ஏதோ நாய்தான் அவ்வாறு தமது காலை நக்குவதாக நினைத்து சூ” என்று அதட்டிக்கொண்டு சடக்கென்று எழுந்து உட்கார்ந்து தமது கண்களைத் துடைத்துக் கொண்டு கால்பக்கம் பார்த்தார். நாய் காணப்படவில்லை. அவரது காலடியில் படுத்திருந்த ஸ்திரீ குறட்டை விட்டுத் துயின்றுகொண்டிருந்தாள். ஒருகால் நாய் ஓடிப்போயிருக்குமோ வென்று அவர் நினைத்தார். ஆனால், அவ்வளவு சீக்கிரமாக அது ஓடி மறைந்து போனதைப் பற்றி வியப்படைந்த வராய் முன்போலவே படுத்துக்கொண்டார். அவர் மூட்டையின் மேல் வைக்கப்போன தலை கருங்கல் தரையில் படேரென்று மொத்துண்டது. மூட்டை அப்பால் நழுவி போயிருக்குமோ வென்று கைகளால் தரையைத் தடவி மூட்டையைத் தேடினார். அது கைகளில் தட்டுப்படவில்லை. திடுக்கிட்டு, பெரிதும் வியப்படைந்தவராய் சாம்பசிவம் எழுந்து தலைப் பக்கம் பார்த்தார். பணமூட்டையும் காணப்பட வில்லை, அங்கு படுத்திருந்த மனிதரும் காணப்படவில்லை. நாற்புறங்களையும் சுற்றிப்பார்த்தார். எங்கும் ஒரு மனிதராகிலும் காணப்படவில்லை. மூட்டை போன விடமும் தெரியவில்லை. தமது காலடியில் பெண்பிள்ளை மாத்திரம் குறட்டை விட்டு நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளிடமும் பணமூட்டை காணப்படவில்லை. தாம் கனவிலிருக்கிறோமோ, அல்லது விழித்திருக்கிறோமோ வென்று சந்தேகப்பட்டார். இரண்டொரு நிமிஷ நேரம் வரையில் உருட்டி உருட்டி விழித்து நாற்புறங்களையும் பார்த்தார்.மிகவும் குழம்பி சிதறிப்போய்க்கிடந்த அவருடைய மூளையை அந்தப் பயங்கரமான அதிர்ச்சி வலுவாகத் தாக்கி சின்னாபின்னமாக்கிவிட்டது. அது எந்த இடம் என்பதும், தாம் யாரென்பதும், எங்கிருக்கிறோ மென்பதும் அவருக்குத் தோன்றவில்லை. அவரது பழைய நினைவுகளே மறைந்து போய், புத்தியும் பேதுற்றது; அவர் உண்மையில் சித்தப்பிரமை கொண்டுவிட்டார். கீழே விரிக்கப்பட்டிருந்த அங்க வஸ்திரத்தையும் எடுக்காமல் எழுந்து இடுப்புத் துணியோடு வெளியில் நடந்தார்; எங்கும் இருள் சூழ்ந்திருந்தது; அந்த ஊருக்கு வடக்குத் திசையில் சென்னை இருந்தது. அவர் அந்த ஊருக்குத் தெற்குத் திசையாக நடந்து வயல்களிலும் வரப்புகளிலும் விழுந்தெழுந்து போக ஆரம்பித்தார்; தாம் இன்னவிடத்திற்குத் தான் போகி றோமென்பதை அறியாமல் பைத்தியங்கொண்டு போய்விட்டார். 

அவரது காலடியிற் படுத்திருந்தவளே நாயைப்போல அவரது உள்ளங்காலை நக்கிவிட்டு, அவர் எழுந்திருக்கும் சமயத்தில் அப்பால் நகர்ந்து படுத்துக் குறட்டை விடுவதாகப் பாசாங்கு செய்தாள். அவர் எழுந்து கால்பக்கம் பார்த்தபோது, தலைப்பாகத்தில் தயாராக இருந்த மனிதன் மூட்டையை எடுத்துக்கொண்டு ஓசையின்றி விரைவாகப் போய்விட்டான்; ஸ்டேஷன் மாஸ்டர் சென்னைக்கு இப்போது வண்டி கிடையாதென்று சாம்பசிவத்தினிடம் சொன்ன பிறகு அவர் பணமூட்டையைத் தூக்கிக்கொண்டு வண்டிக்காக அலைந்த போது, பணம் கலகலவென்று ஓசை செய்ததென்று சொன்னோமல்லவா? அப்போது அதைக் கவனித்திருந்த ஒரு போர்ட்டரே தன் மனைவியின் உதவியால் அவ்வளவு சாமர்த்தியமாகத் திருடிக்கொண்டு போனவன்.

– தொடரும்…

– மனோரஞ்சிதம் என்னும் இதழில் இந்நாவல் வெளிவந்தது. மேனகா நாவலை ஒட்டி 1935-ம் ஆண்டு மேனகா என்னும் திரைப்படம் எடுக்கப்பட்டது

– மேனகா (நாவல்) – இரண்டாம் பாகம், முதற் பதிப்பு: 2004, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email
வடுவூர் துரைசாமி ஐயங்கார் (1880-1942) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய வணிகக் கேளிக்கைப் படைப்புகளை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். திகம்பரச் சாமியார் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கியவர். 1942-ல் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் காலமானார். தமிழில் பிரிட்டிஷாரால் நவீன காவல்துறையும், நீதிமுறையும் உருவாக்கப்பட்டதை ஒட்டி குற்றங்களை காவலர் நவீன முறையில் துப்பறிவதன் மீது வாசகர்களின் ஆர்வம் உருவாகியது. தொடக்ககால தமிழ் பொதுவாசிப்பு எழுத்துக்கள் பெரும்பாலும் துப்பறியும் மர்மக் கதைகளாகவே அமைந்தன.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *