அதிகாரம் 22-24 | அதிகாரம் 25-28
அதிகாரம் 25 – பேய்க் கூத்து
பெருந்தேவியம்மாளும் கோமளமும் சாமாவையர் சமேதராக தென்னை, கமுகு, மா, பலா, மாதுளை முதலிய மரங்களும், பூத்தொட்டிகளும், வாவிகளும், மணல் மேடுகளும், சலவைக்கல் மேடைகளும், சம்பங்கிக் கொடிகள் நிறைந்த பன்னக சாலைகளும், சவுக்கண்டிகளும், விளையாடும் டங்களும், மண்டபங்களும், மாடங்களும் பிறவும் நிறைந்த உன்னதமான அந்த மாளிகைக்குள் காலடி வைத்தவுடன், அவர்கள் தமது பழைய நிலைமையை முற்றிலும் மறந்து எப்போதும் பங்களாவிலேயே பிறந்து வளர்ந்து வந்தோரைப் போலவும், புராதனமாக மகா மேன்மையான நிலைமையில் இருந்தோரைப் போலவும் மாறிவிட்டனர். அழகிய இரமணீய மான அந்த வனமாளிகைக்குத் தாங்கள் எஜமான ரானதை அவர்களது மனதே ஒரு சிறிதும் நம்பவில்லை; பெருந் தேவியம்மாளும், கோமளமும் விக்கிரயப் பத்திரத்தைப் படித்துப் பார்த்துக் கொண்டனர்; பங்களாவின் ஒவ்வோர் இண்டு, இடுக்கு, மூலை முடுக்குகளையும், விடாமல் ஓடியோடிப் பார்த்து, அப்போதே கண் பெற்ற பிறவிக் குருடன் உலகத்தைப் புதிதாய்ப் பார்ப்பதைப்போல பெரிதும் வியப்படைந்து பார்த்துப் பெருமகிழ்வடைந்து, உணவையும் துயிலையும் நினையாமல், ஆநந்தப்பரவசமடைந்து சுவர்க்க லோகத்தில் அப்போதே நுழைந்தவரைப்போலக் காணப்பட்டனர். மாம்ச மலை போல விருந்த பெருந் தேவியம்மாள் மான் குட்டியைப்போலப் பூஞ்சோலைக் குள்ளும், மணல் மேட்டிலும், ஓடித் துள்ளி விளையாடினாள்; அவர்களது வயதிலும் பத்து பத்து வருஷங்கள் குறைந்து போனதாகத் தோன்றின; அங்கு வந்தபின் இரண்டு மூன்று நாட்கள் வரையில் அவர்களுக்குப் பசியென்பதே தோன்ற வில்லை. இரவிலும் பகலிலும் சோலைகளில் உலாவுவதிலும், மாடியிலிருந்த மின்சார விசிறிகளைச்சுழற்றிவிட்டு அடியிலுள்ள சோபாக்களில் சாய்ந்து உல்லாசமாக இருந்து கதை பேசுவதிலும் அவர்கள் தங்களது பொழுதைப் போக்கினர்; பார்க்கு மிடமெல்லாம் பொருத்தப்பட்டிருந்த மின்சார விளக்குகளைப் பகற் பொழுதிலும் கொளுத்தி வைத்து வேடிக்கை பார்த்தனர். உட்புறத்தில் அழகாக அமைக்கப் பட்டிருந்த கட்டில்கள், சோபாக்கள், மேஜைகள், நாற்காலிகள் முதலியவற்றில் அவர்கள் உட்கார்ந்து உட்கார்ந்து சுகம் அனுபவித்தனர். சாமாவையரும் சில நாட்கள் தமது வீட்டுக்கே போகாமல் அவர்களோடிருந்து அவர்களுக்கு ஒரு விளையாட்டுக் கருவியா யமைந்து உல்லாசமாகப் பொழுதைப் போக்கினார். அவர் வெளிக்கு மாத்திரம் சந்தோஷமாக விளையாடினார் எனினும், அந்தப் பங்களாவில் இருப்பது நெருப்புத்தணலில் இருப்பது போல அவரை வருத்தியது. கடைசியாகப் பொய்ப் பத்திரம் தயாரித்துப் பதிவு செய்ததனால் அவர் அவர்களிட மிருந்து இன்னொரு ஆயிரம் ரூபாயை அபகரித்துக் கொண்டார். எவ்வாறெனில், பங்களாவை தமது பேரில் வாங்கினால் அது 9500 ரூபாய்க்குக் கிடைக்குமென்று அவர் முன்னரே சொல்லி யிருந்தார். அது இப்போது பெருந்தேவி யம்மாளின் பேரில் வாங்கப்பட்ட தாகையால், அதனால் கப்பல்கார சாய்பு இன்னொரு ஆயிரம் ரூபாய் அதிகமாகக் கேட்பதாகச் சொல்லி மேனகாவின் பெட்டியிலிருந்த நகைகளில் சிலவற்றை விற்கச் செய்து மேலும் ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு பத்திரத்தை 10,500 ரூபாய்க்கு எழுதி முடித்தார். கப்பல்கார சாயபுவைப் போல் வேஷம் போட்ட முகம்மதியனுக்கு அந்தப் பணத்திலிருந்தே அவர் சன்மானம் வழங்கினார். நிற்க, அந்தப் பங்களாவின் வாடகைக்காக நூற்றைம்பது ரூபாயை நாகைப்பட்டணத்துக்கு இரகசியமாக மணியார்டரும் அனுப்பிவிட்டார். மிகுதிப் பணத்தை அவர் தமது செலவுக்காகப் பத்திரமாக வைத்துக் கொண்டார். வராகசாமியை அழைத்துவந்து, கும்பகோணம் வரதாச்சாரியாரின் பெண்ணை அவனுக்கு மணம்புரிந்து வைத்துவிட்டு, மறுநாளே எங்கேயாகிலும் ஓடிப்போக நினைத்து ஐயர் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். தாம் மேனகாவை விற்றதும், ஒரே இரவில் பதினாயிரம் ரூபாயைப் பறிகொடுத்ததும், தண்டவாளத்தில் இரவு முற்றிலும் நரகவேதனை அநுபவித்ததும், தெய்வ ரம்பையைப் போலத் தோன்றிய தாசி கமலத்தை அடைய விருந்த பெரும் பாக்கியம் தமக்குக் கிட்டாமல் தடைப்பட்டுப் போனதும், தாம் பிறகு பொய்ப் பத்திரம் செய்ய நேர்ந்ததும் ஒன்றன் பின்னொன்றாக அவரது மனத்தில் தோன்றி அவரை ஓயாமல் வதைத்தன வேனும், அவர் அவற்றை ஒரு சிறிதும் வெளிக்காட்டாமல், அவர்களோடு கூடவிருந்து நாட்டியமாடும் தேவடியாள் களுக்குப்பின்னால் தொடர்ந்து சென்று பாட்டுப்பாடித் தாளம்போடும் நட்டுவனைப்போல நடித்து வந்தார்; பெருந்தேவியம்மாள், கோமளம் ஆகிய இருவருடன் “நிலாப்பூச்சி”, “நிழல் பூச்சி”, “ஒளிந்து பிடித்தல்” முதலிய விளையாட்டுகளை நடத்தினார். பெருந்தேவியம்மாள் தன்னை முற்றிலும் மறந்தவளாய் வாய் ஓயாமல் ஜாவளிப் பாட்டுகளை வாரி வாரி, சண்டமாருதமாய் வீசிக் கொண்டே இருந்தாள். கோமளம்,தனக்குத் தென்னை மரத்தில் ஏறத் தெரியுமென்பதை மற்ற இருவருக்கும் எதிரில் நிதரிசனமாகச் செய்து காட்டி தோள் தட்டினாள். தாமே பெரியவ ரென்றும், தமது புத்திசாலித்தனத்தினால், பெருத்த தந்திரம் செய்து, ஒரு நிமிஷத்தில் தாம் அபாரமான பணக்காரராக மாறிவிட்டதை நினைத்தும் அவர்களிருவரும் கரைகடந்த பெருமை பாராட்டிக் கொண்டனர்.
அவ்வளவு விசாலமான மாளிகையில் தாம் மாத்திரம் தனிமையாக இருப்பதில் சுகமில்லையென்று நினைத்து, சாமாவையரையும் அவரது மனைவியோடு அங்கு வந்து லவசமாகக் குடியிருக்கும்படி அவர்கள் அநுமதி கொடுத்து விட்டனர்.
அவர்கள் அங்கே குடிபுகுந்த பிறகு நான்கு நாட்களில் ஒரு முகூர்த்த நாள் இருந்தது. வரதாச்சாரி முதலியோரை வரவழைத்து அன்றைய தினம் நிச்சயதார்த்தம் நடத்துவ தென்றும், அதற்கு மூன்றாம் நாள் திருப்பதியில் கலியாணத்தை முடித்துவிட வேண்டு மென்றும் அவர்கள் நிச்சயித்தனர். அதற்காக, உடனே வராகசாமியை வைத்தியசாலையிலிருந்து வரவழைக்க நினைத்து டாக்டரிடம் சாமாவையரும், பெருந்தேவியம்மாளும், இரண்டு நாட்களுக்கு முன்னரே . சென்று விட்டனர்; தாம் கடற்கரையோரத்தில் பங்களா வாங்கி யிருப்பதால், அதற்குள் வீசும் நல்ல காற்றினால் வராகசாமி பங்களாவில் சீக்கிரம் குணமடைவானென்று தெரிவித்துக் கொண்டனர். வராகசாமியின் முழங்காற் புண் அப்போதும் ஆறாது இருந்தமையாலும், அவனது உடம்பில் இரத்தமே இல்லாமையால் அவன் அப்போதும் மெலிந்த நிலைமையில் இருந்தமையாலும், அவனோடு இரவு பகலாய் வெள்ளைக் காரப் பணிமகளிருந்து மருந்துகள் கொடுத்துவர வேண்டியது அவசியமாக இருந்தது. ஆதலால், டாக்டர் அவனை அனுப்ப மறுத்து விட்டார். இவர்கள் அவ்வளவோடு விடாமல் மேலும் வற்புறுத்தினர். மறுநாள் வராகசாமியின் தகப்பனாருக்குச் சிரார்த்த தினமென்றும், அதற்கு அவன் வந்தே தீர வேண்டு மென்றும் அவர்கள் உடனே பொய்யுரை மொழிந்தனர்; வராகசாமி முழுவதும் குணப்படும் வரையில் அந்த வெள்ளைக்காரப் பணிப்பெண் தமது பங்களாவில் அவனோடுகூட விருக்கலாமென்றும், அவளுக்காகும் செலவைத் தாமே கொடுத்து விடுவதாகவும் ஒப்புக் கொண்டனர். துரையும் அதற்கு இணங்கினார். பெருந்தேவி, கோமளம், சாமாவையர் ஆகிய மூவரும் பங்களாவில் குடி புகுந்த தினத்திற்கு நான்காம் நாளே, வராகசாமியை அழைத்து வரக் குறிக்கப்பட்ட தினம். அன்று பகலிலேதான் சாமாவை யருக்குப் பெருத்த விருந்து நடந்தது.
அன்று அம்மூவரும் விலாப்புடைக்கத் தின்றபின் சோபாக்களில் உல்லாசமாக உட்கார்ந்துகொண்டனர். மின்சார விசிறிகள் யாவும் சுழன்று ஜிலு ஜிலென்று குளிர்ந்த கடற் காற்றை இறைத்து தேவியம்மாள் சாமாவையரைப் பார்த்து “இவ்வளவு பெரிய பங்களா இருப்பதற்கு, ஒரு மோட்டார் வண்டி இல்லாமற் போனால், கெளரவப்படாது. அடேசாமா! போனால் போகிறது. சம்பந்தி ஐயங்கார் கொடுக்கப்போகிற பதினாயிரம் ரூபாயில், ஐயாயிரம் ரூபாயில் ஒரு மோட்டார் வண்டி வாங்கி விடுவோம். நீ இப்போதே நல்ல வண்டியாகப் பார்த்துப் பொறுக்கி வை.கலியாணத்தை முடித்துக் கொண்டு நாம் திருப்பதியிலிருந்து வந்தவுடன், மோட்டார் வண்டியும் வந்து சேரவேண்டும்; நாம் உலாவப்போன வேளைகள் தவிர மற்ற வேளைகளில் வராகசாமியும், பங்கஜவல்லியும் சவாரி போய் சுகப்படட்டும். அவளுடைய அப்பா கொடுக்கும் பணத்தால் வாங்கும் மோட்டார் வண்டியை அவள்தான் முதலில் அநுபவிக்க வேண்டும்” என்றாள்.
கோமளம்:- ஏனடி அக்கா! நாம் ஒரு காரியம் செய்வோமே? நாம் இரவில் வந்திறங்கின உடனே பெண்ணையும் பிள்ளை யையும் நம்முடைய மோட்டார் வண்டியிலேயே வைத்து சின்ன மேளம், பெரிய மேளம், பாண்டு வாத்தியம், வாண வேடிக்கை முதலியவைகளுடன், ஊர்வலமாக அழைத்து வந்தால், அது எவ்வளவு அழகாயிருக்கும்! அப்படிச் செய்வோமே?
பெருந்தேவி:- (சந்தோஷத்தோடு) ஆமாடா சாமா! அப்படியே செய்துவிடுவோம். சம்பந்தி ஐயங்கார் நிச்சயதாம் பூலத்தின் போது பணத்தை இங்கேயே கொடுக்க மாட்டாரோ?
சாமா:- அவர் பெருத்த லக்ஷாதிபதி; எந்த நிமிஷத்திலும் அவரிடம் இருபதினாயிரம் முப்பதினாயிரம் கையிருப்பு இருந்து கொண்டே இருக்கும். ஆனால், அவர் முகூர்த்தத்தின் போதுதான் பணத்தைச் சம்பாவனை செய்து கொடுப்பார். அதுதான் ஒழுங்கு; அதற்கு முன் கேட்பது மரியாதைக் குறைவு. அவர்கள் நம்மைப் பற்றி இழிவாக நினைத்துக் கொள்வார்கள். ஆனால், நாம் ஒரு காரியம் செய்யலாம். நமக்கு ஒரு மோட்டார் வண்டி வேண்டுமென்று கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்து விடுவோம்; நாம் வரும் தேதியில், அதை இரயிலடியில் கொண்டு ஒப்புவித்துவிட்டு அவ்விடத்திலேயே பணத்தை வாங்கிக்கொள்ளும்படி அவர்களுக்கு எழுதி ஏற்பாடு செய்து கொள்வோம். முன் பணம் வேண்டுமானால் நூறு ஐம்பது கொடுத்து வைப்போம்.
பெரு:- அதுவும் நல்ல யோசனைதான். சம்பந்தி ஐயங்கார் ஒரு வேளை பணம் கொண்டுவரத் தவறிவிட்டால். நாம் கொடுக்கும் முன் பணம் போய்விடுமோ?
சாமா:-சரி; நல்ல பேச்சு! பணமில்லாமல் அவர் ஏன் வருவார்? சூரியன் தெற்கு வடக்காகப் போனாலும், அவர் சொன்ன சொல்லை மீறி நடக்கமாட்டார். அவர் நம்மைப்போல் நித்திய தரித்திரமா! (சாமாவையர் கண்ணைச் சிமிட்டிப் புன்னகை செய்துகொண்டு) ஆனால், இனிமேல் உங்களை நான் நித்திய தரித்திரமென்று சொல்லக் கூடாது. நீங்கள் பெருத்த பணக்கார ராய்விட்டீர்கள். என்னைப் போல நித்தியத் தரித்திரமா என்று சொல்வதே சரியானது; பெருந்தேவியம்மாள் மோட்டார்வண்டி வாங்கி விட்டால், தினந்தினம் சவாரிதான்; தானும், தங்கையும், நாட்டுப் பெண்ணுமாக, ஊரை இரண்டாக்கி விட்டு வருவாள். அவளை அப்புறம் கையால் பிடிக்க முடியுமா? ஒரு நாளைக்கு நம்மை இந்த மோட்டார் வண்டியில் உட்கார வைப்பாளா? வைக்கவே மாட்டாள். கோமளம் எங்களோடெல்லாம் பேசக் கூட மாட்டாள்; பெருமை யடித்துக் கொள்ளுவாள்.
கோமளம்:- (மிகவும் சந்தோஷமாகவும் உற்சாகத் தோடும்) அடே சாமா! நீ எப்போதும் உன்னுடைய அற்ப புத்தியை விடுகிறதே இல்லை. இப்போது பங்களாவை வாங்கியவுடனே முதலில் யாரைச் சரிசமானமாக அழைத்துக் கொண்டு வந்தோம்? யாருக்கு விருந்து நடத்தினோம்? அதை நீ நினைக்கவில்லையே? நீ இல்லாமல் ஒரு நிமிஷம்கூட எங்களுக்குப் பொழுது போகுமாடா? போடா பைத்தியக் காரா! அதென்ன சின்னச் சின்னப் பேச்சு சிங்காரப் பேச்சுப் பேசுகிறாயே! எங்களுக்கு வ்வளவு ஐசுவரியம் வந்து விட்டதே என்று பொறாமைப் படுகிறாயோடா?
பெரு:- சேச்சே! சாமாவை அப்படி நினைக்காதேடி! ஆயிரம் பேர் இருந்தாலும் நம்முடைய சாமாவைப்போல் ஆவார்களா? அசட்டுத்தனமாக உளறாதே! அடே சாமா; உனக்கேன் இந்தச் சந்தேகம்? பங்களாவை வாங்கினால் என்ன? மோட்டாரை வாங்கினால் என்ன? எல்லாம் யாரால் வந்தது? நீ இல்லாதிருந்தால் இதெல்லாம் எப்படி வரும்? உன்னை மறந்தால் சாப்பாடு அகப்படுமா? நாங்கள் நன்றி கெட்ட பன்றிக ளென்று நினைக்காதே; நாங்களுமென்ன டிப்டி கலெக்டர் வீட்டாரைப்போல அற்பர்களா, அகம்பாவம் கொண்டவர்களா?
கோமளம்:- அதனாலேதான் ஈசுவரன் டிப்டி கலெக்டர் வாயில் பக்காச் சேர் மண்ணை வாரிப் போட்டுக் குத்தி விட்டான். அவனுடைய உத்தியோகம் போய்விட்டது. வாய்க்கரிசிக்குக்கூட வழியில்லாமல் திருடன், வீட்டைத் துடைத்துக்கொண்டு போய்விட்டான். தான் அழகிலே சிறந்த பவளக்கொடி என்று கருவங்கொண்டு மினுக்கிய தேவடியாள் முண்டையான தங்கத்தின் காது மூக்குகளை யெல்லாம் அறுத்து சூர்ப்பனகா பங்கம் செய்துவிட்டான். என்ன இருந்தாலும் மனிதருக்கு இவ்வளவு அகம்பாவம் உதவாது.
பெரு:- அவள் இத்தனை நாள் பிழைத்தாளோ? மாண்டு போனாளோ? நீ இதைக் கொண்டு திருப்தி யடைகிறாயே! எனக்கு மாத்திரம் இன்னமும் திருப்தி யுண்டாகவில்லை. நடந்ததெல்லாம் சரிதான். அந்தக் கனகி முண்டை திருடன் கையில் அகப்படாமல் தப்பித்துக் கொண்டாளே. அதுதான் என் மனசுக்குப் பெருத்த குறையாக இருக்கிறது. திருடன் அந்தக் கனகி முண்டையின் புடவையைப் பிடுங்கிக் கொண்டு திரௌபதி வஸ்திராபஹரணம் செய்து அப்படியே திகம்பரமாக நாற்சந்தியில் லாந்தர் கம்பத்தில் கட்டிவிட்டுப் போயிருந்தால் எனக்குப் பரம சந்தோஷமாக இருக்கும்! ஜனங்கள் வந்து வேடிக்கை பார்ப்பார்கள்.
கோம:- அந்தச் சமயத்தில், நான் போகவேண்டும்; காரி எச்சிலை அவளுடைய முகத்தில் துப்பிவிட்டு வரவேண்டும். ஏனடா சாமா! அவனுக்கு டிப்டி கலெக்டர் உத்தியோகம் தொலைந்து போய்விட்டது. இடுப்பிற்குத் துணிகூட வைக்கா மல் திருடன் மழுங்கச்சிரைத்து விட்டானே; இனிமேல் பிண்டத்துக்கு அவன் என்னடா செய்வான்?
சாமா:- அந்த வேலை நமக்கெதற்கு? அவர்களுடைய சம்பந்தம் ஒழிந்துபோய்விட்டது. உடனே நமக்கு நல்ல காலமும் வந்து விட்டது. அவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன?
பெரு:- அந்தக் கனகி முண்டையின் அகம்பாவம் இன்னம் குறைந்திருக்காது. அவளும் அவனும் இந்த ஊருக்கு வர வேண்டும்; நம்முடைய பங்களா வாசலில் நின்று பிச்சை கேட்க வேண்டும். என் கையாலேயே ஒரு பிடி அரிசி போட்டுவிட்டு, சம்பந்திகளே! சௌக்கியமா? எங்கள் வாசல் பெருக்க ஒரு வேலைக்காரியும் மோட்டார்துடைக்க ஒரு ஆளும் வேண்டும். நீங்கள் வருகிறீர்களா என்று வயிற்றெரிச்சல் தீரக் கேட்டுவிட்டு வருவேன்.
கோம்:- மேனகா ருந்தாலாகிலும் அவர்கள் பட்டணத்துக்கு வருவார்கள். னிமேல் அவர்கள் இந்த ஊருக்கே வரமாட்டார்கள்.
பெரு :- மேனகா சிங்கப்பூரிலிருக்கிறாளோ, அல்லது கப்பலில் போய்க்கொண்டிருக்கிறாளோ? அவளை இப்போது பார்த்தால் நன்றாயிருக்கும். அவள் துலுக்கச்சியைப்போல துப்படியால் மூடிக்கொண்டிருப்பாள்.
கோம:- (சந்தோஷத்தினால் குதித்து) ஆமடா சாமா! அவளைத் துலுக்கச்சியாக்கினால், என்ன பெயர்வைத்து அவளைக் கூப்பிடுவான்?
பெரு:- அவளுக்கு துடப்பக்கட்டை பீபீ என்று பெயர் வைத்தால், அதுதான் அழகா யிருக்கும்; நைனாமுகம்மதுவின் மேல் விலாசம் உனக்குத் தெரிந்தால், அவனுக்குக் கடிதமெழுதி அவளுக்கு இந்தப் பெயரை வைக்கச் சொல்.
கோம்:- ஆமா! அவள் இத்தனை நாள் துலுக்கன் வீட்டில் இருக்கிறாளே; ஆட்டுக்கறி, மாட்டுக்கறி யெல்லாம் தின்று தானே இருப்பாள்!
பெரு:- சந்தேகமென்ன! இத்தனை நாள் அவளுடைய ஜென்மம் கெட்டுப்பாழாய்ப் போயிருக்கும். நானாயிருந்தால் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு முதல் நாளே உயிரை விட்டிருப்பேன். அந்த மானங்கெட்ட முண்டை பறையன் வீட்டில் கூட சோறு தின்று விட்டு வந்து விடுவாள்.
கோம:- அவள் இனி மேல் எப்படியாவது போகட்டும். வராகசாமியைப் பிடித்த சனியன் ஒழிந்தது; நமக்குப் பங்களா வந்தது. நல்ல காலமும் பிறக்கப்போகிறது. புதிய நாட்டுப் பெண் வரப்போகிறாள். அவளால் பெருத்த சொத்தும் கிடைக்கப் போகிறது.
கோம:- புதிதாய் வரப்போகிறவள் எப்படி இருப்பாளோ! பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதையாய்ப் போகாமல், அவளாவது சரியாக இருக்க வேண்டுமே. இதுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது.
பெரு:ஏனடா சாமா! எனக்கு ஒரு யோசனை தோன்று கிறது. அப்படியே செய்துவிடுவோமே? நம்முடைய வராகசாமியோ இப்போது முன்மாதிரி இல்லை. தானே வீட்டுக்கு எஜமான் என்பதை அவன் இப்போது காட்ட ஆரம்பித்து விட்டான். அதற்கு அநுகூலமாக புதுப் பெண்டாட்டியும் அவனுக்குத் தலையணை மந்திரோபதேசம் செய்பவளாயிருந்தால், நம்முடைய ஆட்டம் ஒடுங்கிப் போகும். ஆகையால், அவர்கள் இரண்டு பேரையும் நாம் மருந்தினாலாவது, மந்திரத்தினாலாவது வசியப்படுத்தி விடுவோம். நைனா முகம்மது வீட்டுக்கு வந்த மலையாளத்து மந்திரவாதியை அழைத்துக் கொண்டு வருகிறாயா? அவனுக்கு நூறு ருநூறு கொடுத்துக் காரியத்தை முடித்துக்கொள்வோம்.
கோம- (சந்தோஷமடைந்து) ஆமடி; அதுதான் நல்ல யோசனை; அப்படியே செய்துவிடுவோம். பின்னால் மேனகாவின் சங்கதி வெளியானால்கூட வராகசாமி நம்மை ஒன்றும் செய்யமாட்டான். நாம் சொல்வதைப்போல அடங்கி நடப்பான்.
சாமா:- இந்த யோசனை எனக்கு இரண்டு நாளைக்கு முன்னதாகவே தோன்றியது. உடனே நான் நைனா முகம்மதுவின் வீட்டுக்குப் போயிருந்தேன்; அவன் வீட்டில் இல்லையென்று சொல்லிவிட்டார்கள். மந்திரவாதி அங்கே காணப்படவில்லை. வேறு எங்கே இருக்கிறானென்பதும் தெரியவில்லை; இன்னொரு தரம் போய் விசாரித்துப் பார்க் கிறேன். இனிமேல் வராகசாமி வந்துவிடப் போகிறான்.நாம் எந்தக் காரியத்தையும் ஜாக்கிரதையாகச் செய்யவேண்டும். கோமளம்! மணி எவ்வளவு என்று பார்; என்னைச் சரியாக ஐந்து மணிக்கு டாக்டர் வரச் சொன்னார்.
கோம்:- ஏனடா சாமா! இப்போது வராகசாமி வரும்போது, கூடவே அந்த வெள்ளைக்காரத் தாதியும் வருவா?
சாமா:- ஆம்.
கோம:- அவளுக்கு நாம்தான் சாதம் போடவேண்டுமா?
பெரு- அந்தப் பறைக்கழுதைக்கு நாமேன் சாதம் போடுகிறது? கூடப்பிறந்தவர்களான நமக்கில்லாத அக்கறையும், பொறுப்பும் வழியில் போகிற சிறுக்கிக்கு வந்து விட்டதோ? என்னவோ நமக்குக் காரியம் ஆகவேண்டுமே என்று அதற்கு ஒப்புக்கொண்டேன். அவள் வந்தால் இரண்டு நாளைக்கு ஒரு மூலையில் விழுந்து கிடந்து விட்டுத் தொலையட்டும். போன ஜென்மத்தில் அவளிடம் நாம் கடன் பட்டிருக்கிறோம். அதை அவள் வாங்கிக் காண்டு போகட்டும்.
கோம்:- அடே சாமா! மணி 4.30 ஆகிறது.
சாமா:- சரி; நான் போய் வராகசாமியை அழைத்துக் கொண்டு இன்னம் அரைமணியில் வருகிறேன்- என்று சொல்லி விட்டு வெளிப்பட்டார். அதன் பிறகு பெண்டீருவரும் மிகவும் ஆவலோடு வழி பார்த்திருந்தனர். சரியாக ஐந்தேகால் மணியாற்று. வாசலில் மோட்டார் வண்டி வந்த ஓசை கேட்டது.உடனே சகோதரிமாரிருவரும் குதித்துக் கொண்டு வெளியில் ஓடினர்.
அதிகாரம் 26 – பழம் நழுவி பாலில் விழுந்தது!
வாசலில் வந்து நின்ற மோட்டார் வண்டியில் வைக்கப் பட்டிருந்த ஒரு தொட்டிலில் வராகசாமி படுத்திருந்தான். சாமாவையர் வண்டி ஓட்டுகிறவனுக்கருகில் உட்கார்ந் திருந்தார். பின் புறத்திலிருந்த முக்கியமான ஆசனத்தில் டாக்டர் துரைஸானியும், வெள்ளைக்காரப் பணிமகளும் உட்கார்ந் திருந்தனர். வண்டி உள்ளே வந்து நின்றவுடன் அவர்கள் யாவரும் கீழே இறங்கினார்கள். வராகசாமி இருந்த தொட்டில் உடனே கீழே இறக்கப்பட்டு உட்புறத்திலிருந்த ஒரு வசதியான அறைக்குக் கொண்டு போகப்பட்டது. அங்கிருந்த ஒரு கட்டிலில் வராகசாமி மெல்ல விடப்பட்டான். அவர்களோடு ஏராளமான மருந்துகளும் வந்து சேர்ந்தன. அப்போது டாக்டர் துரைஸானி வராகசாமியின் நாடியைப் பிடித்துப் பார்த்தபின் சில மருந்துகளைத் தயாரித்துப் பருகுவித்தாள். அவனுடன் எவரும் அதிகமாகப் பேசக்கூடா தென்று கண்டிப்பாகக் கூறினாள். பணிமகளை நோக்கி, சாப்பாட்டுக்குப் போகும் வேளைகள் நிற்க, மற்ற வேளைகளில் வராகசாமியை விட்டு அகலாமலிருந்து மணிக் கணக்கின்படி மருந்துகளைப் பிரயோகித்துக் கொண்டிருக்கும் படி அவளிடம் கூறிவிட்டு சாமாவையர், சகோதரிகள் ஆகிய மூவரையும் அவ்வறையி லிருந்து வெளியேற்றிவிட்டு வைத்தியசாலைக்குச் சென்றனள்.
வராகசாமியின் உணர்வு, இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே நன்றாகத் தெளிவடைந்திருந்தமையாயினும், முழங்காலில் எலும்பு முறிந்துபோன இடத்தில் இன்னமும் புண் ஆறாமலிருந்தது. அவனது தேகத்தில் இரத்தமே சிறிதும் இல்லாமற் போயிருந்தமையால், அவன் தனது தலையை நிமிர்த்தவும் வல்லமையற்றுச் சோர்ந்து சோர்ந்து படுத்தான். அத்தகைய கேவலமான நிலைமையில் அவன் வைத்திய சாலையில் கட்டிலிலிருந்து தொட்டிலுக்கு நகர்த்தப் பட்டும், பங்களாவுக்கு வந்தவுடன் தொட்டிலி லிருந்து கட்டிலிற்கு நகர்த்தப்பட்டும், வண்டியின் ஓட்டத்தினால் அசைக்கப் பட்டும் மிகவும் அதிர்ச்சி யடைந்தமையால், டாக்டர் துரைஸானி பங்களாவைவிட்டுப் போன போது அவன் கண்களை மூடி உறங்கிக்கொண்டிருந்தான். தாங்கள் தாராளமாக வராகசாமி யுடன் பேசலாமென்னும் ஆவலோடு ஓடிவந்த சகோதரிமார் இருவரும், இரண்டு வெள்ளைக் காரிகளும் அவனைக் கட்டிக்காத்துத் தம்மை அருகில் நெருங்கவிடாமல் அதிகாரம் செய்ததைக் கண்டு கோபமடைந்து முகத்தைச் சுளித்துக் கொண்டு அப்புறம் போய்விட்டனர். வராகசாமி யோடு கூட தனிமையில் விடப்பட்டிருந்த வெள்ளைக்காரப் பணிமகள் ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, மிகவும் கவலையோடும் சிரத்தையாகவும் வராகசாமியைக் கவனித்துக் கொண்டும், அவனது கைகளையும் கால்களையும் அன்பாக வருடிக் கொண்டும், அவன் விழித்தபோது அவனுடன் இனிமையாகப் பேசிக்கொண்டும் இருந்தாள். அவள் சிறிதும் கூசாமல் வராகசாமியின் உடம்பைத் தொட்டுத் தடவிக் கொடுத்துக் பெண்டாட்டியைப் போல அவனுக்குரிய காரியங்களை யெல்லாம் செய்ததையும், அவன் சிறிதும் வெறுப்பின்றி அவைகளை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டதையும், அவள் அதிரூபலாவணியம் வாய்ந்த கந்தருவ ஸ்திரீயாயிருந்ததையும் கண்ட சகோதரிகள் இருவரின் மனதிலும் பொறாமைத்தீ மூண்டது. யாவற்றிற்கும் உரிமையுடைய தாங்கள் தூரத்தில் நிற்பதும், எவளோ அன்னியப் பெண்ணொருத்தி அவனோடு நிரம்பவும் அன்னியோன்னியமாகப் பழகி இணைபிரியாதிருப்பதையும் காண, அவர்களது வயிறு பற்றி எரிந்தது. எவ்வாறாயினும், அந்த வெள்ளைக்காரியை அதிசீக்கிரமாக வெளியில் ஓட்டிவிட வேண்டு மென்று தீர்மானித்துக் கொண்ட சகோதரிமார் இருவரும், அவர்களிருந்த அறைக்கு அடிக்கடி வந்து அவர்கள் என்ன செய்கிறார்களென்று பார்ப்பதும், கூடிக்கூடித் தமக்குள் இரகசியம் பேசுவதும், கதவிற்கு வெளியில் மறைந்திருந்து அவர்கள் பேசுவதை உற்றுக் கேட்பதும், வெள்ளைக்காரப் பெண்ணிடம் கடுகடுத்துப் பேசுவதுமா யிருந்தனர். வராகசாமி பங்களாவுக்கு வந்தபிறகு, அவனுக்கு வீட்டு உணவு கொடுக்கப் பட்டது. பெருந்தேவியும், கோமளமும், அவனுக்கு ஆகாரம் கொடுத்தபோது வெள்ளைக்காரப் பெண் வெளியில் அனுப்பப் பட்டாள். ஆதலின், அவள் அந்தச் சொற்ப காலத்திற்குள் தனது இருப்பிடத்திற்குச் சென்று தனது போஜனம் முதலியவற்றை முடித்துக் கொண்டு வந்துவிடுவாள். அப்புறம் அவள் இரவு பகலாக வராகசாமிக்கு அருகிலிருந்து அவனது நோயை யாற்றி இன்புறுத்திய வண்ண மிருந்தாள். உலகிலுள்ள பெண்டீர் யாவருமே வஞ்சகரென்றும், விபசாரகுணம் உள்ளவரென்றும் நினைத்து வெறுப்படைந்து, பெண் வாடையே தன்மேல் வீசலாகாதென்று நினைத்திருந்த வராகசாமியின் மனதை அந்த அழகிய மடமங்கை தனது நற்குணத்தாலும், மனமார்ந்த உபசரணைகளாலும் முற்றிலும் மாற்றி அவனைப் புதிய மனிதனாக்கி விட்டிருந்தாள். அவனது மனைவி மேனகா நாடகக்காரனோடு ஓடிப்போனாளென்று அவன் நினைத் திருந்த எண்ணத்தையும் அவள் மாற்றிவிட்டாள். மேனகா எப்படிக் காணாமல் போனாளோ என்னும் ஒரு சந்தேகமே அவன் மனதிலிருக்கும்படி பணிப்பெண் செய்திருந்தாள். மேனகா காணாமற் போனதற்குச் சகோதரிகள் உத்திர வாதிகளோ, அல்லது மேனகாவே உத்திரவாதியோ, அல்லது வேறு யாராகிலும் உத்திரவாதியோ என்பதை அவன் தகுந்த சாட்சியமின்றி அவசரப்பட்டு நிச்சயிக்காம லிருக்கும்படி கூறி நீதி போதித்து, அவனது எண்ணத்தைப் பணிப்பெண் மாற்றிவிட்டாள். அந்த நிலைமையில், வராகசாமி, தனது மனைவி காணாமற் போனதைப் பற்றி உண்மையான விவரம் எப்போது கிடைக்குமோ வென்றும், அவள் பிரிந்ததைப்பற்றி பெரிதும் வருந்தியும் மிகுந்த ஆவல் கொண்டிருந்தான். அந்த வெள்ளைக்கார மங்கையினிடம் ஆழ்ந்த பிரியமும் பட்சமும் அவனது மனதில் உண்டாகி, அது படிப்படியாக வேர் ஊன்றி விட்டன. அவள் நல்ல உத்தமி யென்றும், வெள்ளைக்கார ஜாதியில் பிறந்தவளானாலும் அருமையான குணம் வாய்ந்த பத்தினிஜாதிப் பெண்ணென்றும் வராகசாமி நினைத்தான். அவளது ஜாஜ்வல்லியமான அழகும் அவனது மனத்தை உருக்கி நெகிழ்வித்தது. ஒரு நிமிஷ நேரம் அவளைக் காணாவிடில் அவனது மனம் சலிக்காது. தான் போஜனம் செய்த காலத்திலும், அவள் தன்னுடன்கூட இல்லாமல் போய் விடுகிறாளே என்று அவன் நினைத்து வருந்தினான். தனது ஆபத்துக் காலத்தில் தன்னைக் காப்பாற்ற வந்த தெய்வப் பெண்ணென்றே அவளை அவன் மதித்தான். அவளில்லாவிடில் தான் அத்தனை நாளைக்குள் வைத்தியசாலையிலேயே மாண்டுபோ யிருக்க வேண்டு மென்று அவன் நினைத்தான். டாக்டர் துரைஸானி, முன்னோர் அதிகாரத்தில், அந்தப் பெண்ணைக் கடிந்து வேறு அறைக்கு அவளை மாற்றுவதாக வெருட்டியபோது வராகசாமி அதைப் பற்றி மிகவும் துன்புற்றதாகச் சொல்லப்பட்ட தல்லவா ; அதன் பிறகு அவள் துரைஸானியிடம் போய், அவளது கோபத்தைத் தணித்து அவனுடனிருப்பதற்கு அநுமதி பெற்று வந்தாள். அந்த நாள் முதல் அவர்களது நட்பு நிமிஷத்துக்கு நிமிஷம் கனிந்துகெண்டே வந்தது. கடைசியில் அவர்கள் பங்களாவிற்கு வந்தபோது இணைபிரியாத அந்தரங்க சகாக்களாக ஆயினர். அவளுடன் இருப்பதே அவனுக்குப் பரமபதமாக இருந்தது. அவனுக்கு உபசரணை செய்வதே அவளுக்கு ஆனந்தமாக இருந்தது. தவிர, டாக்டர் துரைஸானி மேனகாவைப்பற்றிய விவரங்களை எப்படியோ அறிந்திருந்ததாக வராகசாமிக்குத் தோன்றியது ஆகையால், அந்தப் பெண்ணின் உதவியால் அந்த வரலாற்றைத் தான் கிரகிக்கலாமென்பதும் அவனது கருத்து; அவர்கள் பங்களாவுக்கு வந்து மூன்று நாட்களாயின. அந்த வடிவழகியின் விடாமுயற்சியால் அவனது புண்களும் அநேகமாக ஆறிப்போயிருந்தன. அவன் கட்டிலிலேயே எழுந்து உட்கார்ந்து ஒத்திகை பார்த்ததன்றி தரையில் காலை ஊன்றி நின்றும் பார்த்தான். முழங்காலில் இன்னமும் சிறிது நோவிருந்த தனால், அவன் படுக்கையை அதற்குள் விலக்கி விடக்கூடாம லிருந்தது; டாக்டர் துரையும், டாக்டர் துரைஸானியும் நாளுக்கொரு முறை அங்கு வந்து, அவனது நிலைமையை ஆராய்ந்து பார்த்து விட்டு, பணிமகளுக்குரிய உத்தரவுகளைச் செய்தும் போயினர்.
மூன்றாம் நாள் வராகசாமி ஆகாரம் உட்கொண்ட சமயத்தில், அந்தப் பணிப்பெண் தனது இருப்பிடத்திற்குப் போய்த் தனது போஜனத்தை முடித்துக்கொண்டு திரும்பி வந்தாள். அவளது அழகிய முகம் வழக்கப்படி, அன்றலர்ந்த தாமரை மலரைப்போல இருந்தது. ஆனால், வராகசாமியின் நிலைமையில் ஒருவகையான மாறுபாடு உண்டாயிருந்தது. அவனது முகத்தில் பெருத்த விசனமும், கவலையும், ஆத்திரமும் காணப்பட்டன. அவனது தேகம் படபடத்துக் காணப்பட்டது. அந்தக்குறிகளை நுட்பமாக உணர்ந்து கொண்ட அந்தப் பெண்மணி அவன் மேனகாவைப்பற்றி நினைத்து வருந்து கிறான் என்று நினைத்துக் கொண்டு மெல்ல அருகில் நெருங்கி, அவனது நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு, “நாளுக்கு நாள் உங்களுடைய உடம்பு குணமடைவதைக்கண்டு சந்தோஷப்பட்டு வந்தேன். இன்று உடம்பு நிரம்பவும் படபடத்துத் தோன்றுகிறதே! காரணமென்ன?” என்று விநயமாகக் கேட்க, வராகசாமி மிகவும் துயர மடைந்தவனாய், “என்னுடைய உடம்பு குணமடைவதைக் கண்டு எவ்வளவு சந்தோஷப் படுகிறாயோ, அவ்வளவுக்கவ்வளவு நான் விசனப்படுகிறேன். என்னுடைய வியாதி அதிகரிக்கக் கூடாதா என்று நா ன் சுவாமியை வேண்டுகிறேன்” என்றான்.
அதைக் கேட்ட பேதையான அந்த நங்கை தான் இல்லாத காலத்தில் சகோதரிகள் அவனிடம் ஏதோ கலகம் விளைந் திருப்பதாக உடனே நிச்சயித்துக்கொண்டு புன்னகை செய்தவளாய் அவனிடம் நெருங்கி, “சீக்கிரமாக உடம்பு குணமடைந்து போனால், உங்களுடைய மனைவியைத் தேடி, அவள் காணாமல் போன விவரத்தை ஆராய்ந்தறிய வேண்டு மென்று இதுவரையில் சொல்லிக் கொண்டிருந்த நீங்கள், இப்போது அதற்கு மாறாகப் பேசுகிறீர்களே! காணாமல் போனவளைப்பற்றி ஏதாகிலும் செய்தி கிடைக்காதா? ஏன் இப்படி வருந்தவேண்டும்? உடம்பு நன்றாகச் செவ்வைப் படும் சமயத்தில், இப்படி அலட்டிக்கெள்ளலாமா?” என்று கேட்டவண்ணம் அவனது காலைத் தொட்டு வருடினாள்.
அதைக்கண்ட வராகசாமியின் துக்கம் அதிகரிக்க, கண்களிலும் கண்ணீர் பொங்கி யெழுந்தது; “ஆகா! விஷயத்தை நான் என்ன வென்று சொல்லுவேன்! நினைக்க நினைக்க எனக்கே சகிக்கவில்லை. நீ அதைக் கேட்டால் ஆச்சரியமடைவாய்” என்றான்.
பணிப்பெண்:- அது, காணாமற் போன மனைவியைப் பற்றிய விஷயமா?
வராக:- இல்லை இல்லை; இவர்கள் எனக்கு வேறு கலியாணம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். நாளைக்கு நிச்சய தாம்பூலம் நடக்கப்போகிறதாம். இன்னும் ஐந்தாறு நாட்களில் திருப்பதியில் கலியாணம் நடக்குமாம்; இன்றைக்குச் சம்பந்தி வீட்டாரும் பெண்ணும் வந்து விடுவார்களாம். இதற்காகவே வ்வளவு அவசரமாக என்னைப் பங்களாவுக்கு இவர்கள் அழைத்துக் கொண்டு வந்தார்களாம் -என்றான்.
அதைக் கேட்ட பணிப்பெண் திடுக்கிட்டு திகைப்பும் வியப்புமடைந்தாள். பூரணச்சந்திர பிம்பத்தை மேகம் மறைப்பதைப்போல அவளது முகக்களை மறைந்தது. மனம் கொதித்தெழுந்ததாகத் தோன்றியது. என்றாலும், அவள் தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டவளாய், “உங்க ளுடைய உடம்பு இன்னும் சௌக்கியமாக வில்லையே. இதற்குள் உங்களைத் திருப்பதிக்கு எப்படி அழைத்துக் கொண்டு போகிறது? திரும்பவும் உடம்பு கெட்டுப் போகுமே; இந்தக் காரியத்தை இப்போது செய்யலாமா வென்பதை நீங்கள் முதலில் டாக்டர் துரையிடம் யோசனை செய்வது அவசிய மாகத் தோன்றுகிறது. சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும். உங்களுடைய உடம்பைத் தேற்றிக் கொண்டல்லவா கலியாணம் செய்து கொண்ட பின் நீங்கள் சுகமா யிருக்கலாம்” என்றாள்.
வராக:- எனக்குக் கலியாணம் செய்துகொள்ள விருப்ப மிருந்தாலல்லவா, டாக்டர் துரையைக் கேட்கவேண்டும் என்கிற அவசியம் ஏற்படும். நான் இருக்கும் நிலைமை யென்ன! முதல் பெண்டாட்டி காணமற்போய் பதினைந்து நாளாகவில்லை. அவள் உயிரோடிருக்கிறாளோ, மாண்டு போனாளோ வென்பது தெரியவில்லை. அவள் மாண்டு போனதாக வைத்துக் கொண்டாலும், அந்தத் தீட்டுக் கூட
ன்னம் கழிந்திருக்காது. தவிர, முதல் பெண்டாட்டியால் எனக்கு நேர்ந்த துன்பமே இன்னம் நீங்காமல், நான் உயிருக்கு மன்றாடும் போது எனக்கு இன்னொரு பெண்டாட்டி வேண்டியிருக்கிறதா? என்னுடைய மேனகாவைப்போல எனக்குப் பெண்டாட்டி வரப்போகிறது மில்லை; அவளால் நான் படும் பாட்டைப்போலவும் எவரும் அநுபவிக்கப்போறதுமில்லை; இந்த நிலைமையில் எந்த மூடன் கலியாணம் செய்து கொள்வான்?- என்றான்.
அதைக் கேட்ட பணிமகள் பலவகையான எண்ணங் களால் வதைபட்டவளாய் அவனை நோக்கிப் புன்முறுவல் செய்து, ”காணாமல் போன மேனகாவின் விஷயத்தில் உங்களுக்கு இவ்வளவு இரக்கமும், தயையும், தருமநினைவும் இருப்பதைக்காண சந்தோஷத்தினால் என் மனம் உண்மையில் அப்படியே பொங்கி யெழுகிறது. பெண் பிள்ளைகள் விஷயமாக நீங்கள் முன்பு கொண்டிருந்த நினைவுக்கு மாறாக நீங்கள் இப்போது பேசுவதைக் காண நான் அடையும் ஆநந்தத்துக்கு அளவே இல்லை. நான் இத்தனை நாள் உழைத்தது வீணாக வில்லை. மேனகாவுக்குப் பதிலாக நான் உங்களுக்கு மனமார்ந்த நன்றியறிதல் செலுத்துகிறேன். அப்படித்தங்களுக்கு மணம் வேண்டாமென்று தோன்றுமாகில், தங்களுடைய கருத்தைச் சகோதரிமாரிடம் தெரிவித்து விடுகிறதுதானே; இதைப்பற்றி வருந்தி உடம்பை ஏன் கெடுத்துக் கொள்கிறீர்கள்?” என்று மிகவும் நயமாகவும், அந்தரங்கமான அபிமானத்தோடும், அவன் ஆயாசப்படா விதமாகவும் கூறினாள்.
வராக:- அப்படி நான் சொல்லிக் கலியாணத்தை எளிதில் தடுத்துவிடக் கூடுமானால், நான் இவ்வளவு தூரம் கவலை அடைவேனா? இவர்கள் இன்னும் சில காரியங்கள் செய்திருக் கிறார்கள். இவர்களே பெண்ணைப் பார்த்துக் கலியாணத்தை நிச்சயித்து தேதியையும் குறித்ததன்றி, பெண் வீட்டாரிடம் வரதட்சணை ரூபாய் பதினாயிரம் வாங்கி அதைக் கொண்டு இந்தப் பங்களாவை விலைக்கு வாங்கிவிட்டார்களாம். இப்போது இவர்கள் கலியாணம் செய்ய இணங்கா விட்டால், வாங்கின பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; எங்களிடம் அவ்வளவு பணம் கிடையாது – என்றான்.
அதைக் கேட்ட வெள்ளை மடவன்னம் மேன்மேலும் அதிகரித்த ஆச்சரிய மடைந்தவளாய், “நீங்கள் இல்லாத காலத்தில் உங்களுடைய அநுமதியின்றி இவர்கள் இவ்வளவு பெருத்த காரியங்களை யெல்லாம் செய்திருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. வெள்கைக்காரியாகிய நாங்கள் பெண்ணும் பிள்ளையும் ஒருவரையொருவர் கண்டு மனதாரக் கலியாணம் செய்ய காதலித்துச் சம்மதித்த பிறகே, எத்தினிப்போம். நீங்கள் பெண்ணைப் பார்க்கக்கூட இல்லை. உங்களுடைய சகோதரிமார்களாகிலும் பெண்ணைப் பார்த்தார்களா இல்லையோ! ஒருவேளை இந்தப் பதினாயிரம் ரூபாய் வருவதற்காகவே இதைச் செய்கிறார்கள் போ லிருக்கிறது. அப்படியானால், நீங்கள் பதினாயிரம் ரூபாயைக் கலியாணம் செய்து கொள்வதாக அருத்த மாகிறதன்றி, ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளுவதாக அருத்தமாக வில்லை; இவர்களுடைய சொல்லுக்கு நீங்கள் கட்டாயமாக இணங்குவீர்களென்றே செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது” என்றாள்.
வராக:- ஆம்; அப்படித்தான் நினைத்துச் செய்திருக் கிறார்கள். அவர்கள் உண்மையில் என்னுடைய நன்மையை நாடியே இப்படிச் செய்திருக்கிறார்கள். அதைப்பற்றி சந்தேகமில்லை; அவர்களுடைய விருப்பப்படி நான் இதுவரையில் எந்த விஷயத்தையும் செய்து வந்தேன். ஆனால், இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம், என்னுடைய எண்ணம் வேறாக இருக்கிறது. எனக்கு வேறு கலியாணம் செய்து கொள்ளவே ஆசை இல்லை. தவிர, இவ்வளவு சீக்கிரத்தில் கலியாணம் என்ற சொல்லைக் காதால் கேட்கவும் கூசுகிறது. முதற் பெண்டாட்டி போன இடந் தெரியவில்லை. பதினைந்து நாளைக்குள் வேறே கலியாணம் செய்து விட்டார்களென்று ஊரார் சிரிக்க மாட்டர்களா?
பணிமகள்:- ஆம்; உண்மையான விஷயம்; அதுவும் தவிர, உங்களுடைய முதல் மனைவி, எவ்விதமான களங்கமும் அடையாமல் திடீரென்று உங்களிடம் வந்து சேருவாளானால், அவளை நீங்கள் வேண்டாமென்று சொல்லுவது தரும மாகுமா? அல்லது இரண்டு பெண்டாட்டிகளை வைத்துக் கொண்டு எமவாதைப் படத்தான் உங்களால் முடியுமா?
வராக:- இத்தனை நாள் கழிந்தபின் அவள் இனிமேலா வரப்போகிறாள். அவள் போனவள் போனவளே! எனக்கும் பெண்டாட்டி இருந்தாளா என்பது சொப்பனமாக அல்லவா போய்விட்டது. அவள் வருவாளென்கிற சந்தேகத்தினால், கலியாணம் வேண்டாமென்று நான் சொல்லவில்லை. அப்படி அவள் வருவாளென்பது எனக்குத் தோன்றவில்லை.
பணிமகள்:- அடுத்த நிமிஷத்தில் என்ன நடக்கப் போகிற தென்பது நமக்குத் தெரியுமா ? எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் ஈசுவரன் மனது வைத்தால் இந்த அண்டமே ஒரு நொடியில் புரண்டுபோகுமே. உங்கள் மனைவி திரும்பி வருவதுதானா ஓர் அருமையான காரியம்; அவளும் நல்ல பதிவிரதையின் வயிற்றில் பிறந்த உத்தமியா யிருந்து, நீங்களும் நல்லகுணமுடைய மனிதரா யிருந்தால், ஈசுவரன் உங்கள் இரண்டு பேரையும் ஒரு க்ஷணநேரத்தில் கூட்டிவைப்பான். எனக்கு எப்போதும் மனிதர் சகாயத்தில் நம்பிக்கையே கிடையாது. ஈசுவரன் எல்லாவற்றையும் நமக்குத் தெரியாமல் நடத்திவைக்கிறா னென்பதே என்னுடைய நம்பிக்கை என்றாள்.
அப்போது அவர்களிருந்த அறையின் கதவு திடீரென்று திறக்கப்பட்டது. முதலில் சாமாவையர் வந்தார்; பிறகு வரதாச்சாரியாரும், இன்னும் மூன்று மனிதரும் வந்தார்கள். கடைசியில் பெருந்தேவியம்மாள் வாசற்படியில் நாணிக் கோணி நின்று, “அடே வராகசாமி! சம்பந்திகள் வந்துவிட்டார்கள்; உன்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள்” என்றாள். வெள்ளைக்காரப் பணிப்பெண் திடுக்கிட்டெழுந்து தூரத்தில் மறைந்து நின்றாள்; வராகசாமிக்கருகில் நெருங்கிய சாமாவையர், “வராகசாமி! இதோ இவர்தான் உன்னுடைய மாமனார், மற்றவர்கள் இவருடைய பந்துக்கள். நிச்சய தாம்பூலத்துக்காக வந்திருக்கிறார்கள்” என்றார். அதைக் கேட்ட வராகசாமியின் மனதில் கூரிய அம்பு பாய்ந்ததைப்போல இருந்தது. அவன் கண்களை மூடிக்கொண்டு மயங்கித் தலையணையில் சாய்ந்து விட்டான். சாமாவையர் மேலும் இரண்டொருதரம் கூப்பிட்டு பார்த்தார். அவன் பேசவில்லை. சரி பையன் அலுப்பாக தூங்குகிறான் போலிருக்கிறது. கொஞ்ச நாழிகை கழித்து வருவோம்” என்று சாமாவையர் மற்றவர்களை அழைத்துக் கொண்டு வெளியில் போய் விட்டார். அந்த வெள்ளைக்காரப் பணிப்பெண் திரும்பவும் வராகசாமியின் கட்டிலண்டை வந்து அவனது மயக்கத்தைத் தெளிவிக்க, அவன் கண்களைத் திறந்து, “போய் விட்டார்களா?” என்றான்; “போய்விட்டார்கள்” என்றாள் பணிமகள்.
வராகசாமி மிகவும் விசனமடைந்தவனாய், “அடுத்த நிமிஷம் என்ன சம்பவிக்குமோ வென்று நீ சந்தேகித்தாயே! இப்போது என்ன சம்பவித்தது பார்த்தாயா? இவர்கள் ஏற்பாடு செய்தபடிதான் காரியம் நடக்கிறது. இந்தக் கலியாணத்தை எப்படி நிறுத்துவதென்பது தெரியவில்லை. நான் சொன்னால், இவர்கள் கேட்காமல் பிடிவாதம் செய்வார்கள். என்ன செய்வதென்பதே தோன்றவில்லை” என்றான்.
அதைக் கேட்ட அப் பெண்மணியும் சிறிது சிந்தனையி லாழ்ந்தவளாய், இவர்கள் வந்து விட்டதனாலேயே கலியாணம் நடந்துபோகு மென்பது என்ன நிச்சயம்; கைக்கெட்டியது வாய்க்கு எட்டாது போவதில்லையா? ஈசுவரனே துணை என்று அவனை நாம் முற்றிலும் நம்பி நல்ல வழியில் முயற்சிசெய்தால், அவன் நம்மை எப்படியும் காப்பான். நீங்கள் இதற்குள் நம்பிக்கையை இழக்க வேண்டாம்.தைரியமாக இருங்கள்; இந்த விஷயத்தில் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நமது டாக்டர் துரைஸானிக்கு உங்களிடம் அந்தரங்கமான அன்பும் அபிமானமும் உண்டு. அவர்களை உடனே வரவழைத்து, விஷயத்தைத் தெரிவித்து, அவர்களுடைய உதவியை நாம் நாடுவோமானால், அவர்கள் ஏதாகிலும் தக்கயோசனை செய்து கலியாணத்தை நிறுத்தி வைக்கும்படி செய்வார்கள். உங்களுடைய குடும்ப விஷயங்கள் எல்லாம் அவர்களுக்குத் தெரியும். அவர்களிடம் நீங்கள் பேசவேண்டாம். நானே பேசி காரியத்தை முடிக்கிறேன். அவர்களால் இந்தக் காரியம் முடியுமென்று எனக்குப் பூரண நம்பிக்கை யிருக்கிறது” என்றாள்.
வராக:- அது நல்ல யோசனைதான்; ஆனால் துரை ஸானியை இப்போது யார் போய் அழைத்துக் கொண்டு வருகிறது?
பணிப்பெண்:- இதோ டெலிபோன் (Telephone) இருக் கிறதே! இந்த வழியாக நான் கூப்பிட்டு இப்போதே பேசுகிறேன்- என்றாள்.
அந்த இன்பவல்லியின் சமயோசிதமான கூரிய புத்தி யைப் பற்றி அவன் மிகவும் மகிழ்ந்தவனாய், அப்படியே செய்யும்படி அநுமதித்தான்; அந்தப் பணிமங்கை, உடனே எழுந்துபோய் டெலிபோன் வாயிலாக டாக்டர் துரை ஸானியுடன் பேசிவிட்டு வந்தாள்.
அப்போது அவர்களிருந்த அறையின் கதவு திறக்கப் பட்டது. “அண்ணா! அண்ணா!” என்று மெல்ல அழைத்துக் கொண்டு கோமளம் உள்ளே நுழைந்தாள். அவளது கையில் ஒரு தபாற் கடிதம் இருந்தது; வலது கையில் மைக்கூடும் பேனாவும் இருந்தன. வராகசாமி அவளைப் பார்த்து,”என்ன செய்தி?” என்றான்.
கோமளம், “இந்தத் தபாற் கடிதம் உனக்கு வந்திருக்கிறது. து ரிஜிஸ்டர் செய்யப்பட்டதாம். தபால்காரன் உன்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு வரச் சொல்லுகிறான்” என்று கடிதத்தை அவனிடம் நீட்டினாள். அதைக் கேட்ட வராகசாமி, தனக்கு யாரிடத்திலிருந்து ரிஜிஸ்டர் கடிதம் வந்திருக்குமென்று யோசனை செய்து ஒரு சிறிது திகைப்படைந்தான். விபர மொன்றும் விளங்கவில்லை. அதை வாங்கி மேல் விலாசத்தைப் பார்த்தான். அது ஏதோ போலீஸ் ஸ்டேஷனி லிருந்து வந்திருப்பதாகத் தெரிந்தது. வராகசாமியின் ஆச்சரியம் கரைகடந்த தாயிற்று. அது எதைக் குறித்த கடிதம் என்பதை அறிய அவன் மிகவும் ஆவல் கொண்டான்; ரசீதில் அவன் உடனே கையெழுத்திட்டு அதை கோமளத்தினிடம் கொடுத்து அவளை அனுப்பியபின் கடிதத்தின் உறையைக் கிழித்து, உட்புறத்திலிருந்த காகிதத்தை விரைவாக வெளியில் எடுத்தான்; வெள்ளைக்கார மடந்தையும் அதிகரித்த வியப்பும் திகைப்பும் அடைந்து, கடிதத்தையும் அவனது முகத்தையும் மாறிமாறிக் கவனித்துக் கொண்டு அவனுக்கருகில் பணிவாக நின்று கொண்டிருந்தாள். அந்த உறைக்குள் ஒரு கற்றைக் காகிதங்கள் நூலில் வரிசையாகக் கோர்க்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. அதை வராகசாமி பரபரப்போடு எடுத்துப் பிரித்து எல்லாவற்றிற்கும் மேலே இருந்த காகிதத்தைப் பார்த்தான்; அதன் தலைப்பில் அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:-
திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்சமயசஞ்சீவி ஐயர், வக்கீல் வராகசாமி ஐயங்கார் அவர்களுக்குக் கடிதம் – என்றிருந்தது.
அந்தக் கடிதம் தனக்கே வந்ததென்று தீர்மானித்துக் கொண்ட வராகசாமி அதிகரித்த வியப்போடு, மேலே என்ன எழுதப்பட்டிருக்கிறதென்று அறிய ஆவல் கொண்டு படிக்க வாரம்பித்தான்.
கடிதம்
ஐயா!
பெருத்த கற்றையாக அனுப்பப்பட்டிருக்கும் இந்தக் காகிதத்தைக்கண்டவுடன் உங்களுக்கு நிச்சயமாக ஆச்சரியமும் திகைப்பும் உண்டாகுமென்று நான் நம்புகிறேன். இது உங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த முக்கியமான விஷயமா கையால், இதை அசட்டை செய்யாமலும் முற்றிலும் வாசித்து எனக்கு மறுமொழி எழுதுவீர்களென்று நம்புகிறேன். கீழே குறிக்கப்பட்டிருக்கும் விஷயங்களை நான் அறிந்து கொண்டது தெய்வத்தின் செய லென்றே தோன்றுகிறது. இந்த விஷயங்களை உங்களுக்குத் தெரிவித்தால், நீங்கள் இதனால் பெருத்த நன்மைகளை அடைவீர்களென்று நினைத்தே இதை நான் உங்களுக்கு அனுப்புகிறேன்.
ஐந்து நாட்களுக்கு முன் நான் என்னுடைய சொந்த அலுவலின் நிமிர்த்தமாய் தொளசிங்கப் பெருமாள் கோவில் தெருவிற்குப் போனேன்; உங்கள் வீட்டிற்குள்ளிருந்து ஒரு முகம்மதியன் வெளியில் வந்ததைக் கண்டேன். அவனுடைய வேஷமும், கபடப்பார்வையும் என் மனதில் உடனே ஒரு வகையான சந்தேகத்தை உண்டாக்கின. அவன் வாசலில் வந்தவுடன் திருடனைப்போல அங்கு மிங்கும் பார்த்துக் கொண்டு தன்னுடைய கையிலிருந்த ஏதோ ஒரு காகிதத்தை மடித்து, சட்டைப்பைக்குள் இரகசியமாகச் சொருகி மறைத்துக் கொண்டான்; அந்தக் கண்டவுடன் என்னுடைய சந்தேகம் வலுத்தது; முற்றிலும் பிரம்மண ஜாதியார் வசிக்கும் அந்தத் தெருவில் அவன் எதற்காக அந்த வீட்டிற்குள் நுழைந்திருப்பா னென்ற சந்தேகம் உண்டாயிற்று. அவன் ஒருவேளை பிச்சை கேட்கப்போய், ஏதாகிலும் நோட்டுகளை அபகரித்துக் கொண்டு வந்துவிட்டானோ என்னும் சந்தேகம் தோன்றியது. நான் அவனிடம் சென்று, “உள்ளே யாரைத் தேடிவிட்டு வருகிறீர்?” என்று கேட்டேன். அவன் தனக்கு அந்த வீட்டிலுள்ள வர்கள் அறிமுக மானவர்களென்றும், அவர்களிடம் ஒரு காரியமாக வந்து விட்டுப் போவதாயும் கூறினான். நான் உடனே அவனை என்னுடன் கூட அழைத்துக் கொண்டு உட்புறம் சென்றேன். அங்கே உங்களுடைய சகோதரிகளும் சாமாவையரும் இருந்தனர். அந்த முகம்மதியன் யாவனென்று அவர்களிடம் கேட்டேன். அவர்கள் அவன் யாவரோ பிச்சைக்காரன் என்றும், அவனைத் தங்களுக்குத் தெரியா தென்றும் சொல்லிவிட்டனர். என்னுடைய சந்தேகம் பெருத்த சந்தேகமாக மாறிவிட்டது. நான் உடனே அவனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போய், அவனுடைய மூட்டை முதலியவற்றைச் சோதனை செய்து பார்த்ததில், அவன் ஒரு மந்திரவாதி என்பது வெளியாயிற்று. உங்களுடைய வீட்டிலிருந்து வந்தபோது அவன் சட்டைப் பையில் மறைத்துக் கொண்ட காகிதம் என்ன வென்று எடுத்துப் பார்த்தேன். அதில் இரண்டு கடிதங்கள் அகப்பட்டன. அந்தக் கடிதங்களை நாங்கள் படிக்கக்கூடாதென்று அவன் தடுத்தான். அதனால் என்னுடைய சந்தேகம் மிகவும் அதிகரித்தமையால், நான் அந்த இரண்டு கடிதங்களையும் உடனே படித்துப் பார்த்தேன். ஆகா! அவைகளைப் படித்தவுடன் என்னுடைய மனதில் உண்டான ஆச்சரியம் சொல்லிலடங்காததாய் விட்டது. அந்த ரண்டு கடிதங்களையும் இத்துடன் கோர்த்து உங்களுடைய பார்வைக்கு அனுப்பியிருக்கிறேன். இரண்டு கடிதங்களி லொன்று, அங்கப்ப நாயக்கன் தெருவிலுள்ள ஜவுளி வர்த்தகம் நைனாமுகம்மது மரைக்காயரால் அவருடைய குமாஸ்தாவான உங்கள் அண்டை வீட்டு சாமாவையருக்கு எழுதப்பட்டது. இரண்டாவது கடிதம், சாமாவையர், பெருந்தேவியம்மாள் ஆகிய இருவராலும் மேற்படி நைனாமுகம்மது மரைக்காயருக்கு எழுதப்பட்ட கடிதம்; இந்த இரண்டு கடிதங்களைப் படித்ததில், மேனகா என்னும் பிராமணப் பெண்ணை சாமாவையர், பெருந்தேவியம்மாள் ஆகிய இருவரும் மேற்படி நைனா முகம்மது மரைக்காயருக்கு விற்றுவிட்டு அவரிடம் பணம் வாங்கிக் கொண்டு வந்ததாகவும், அந்தப் பெண், அந்த முகம்மதியருடைய விருப்பத்திற்கு இணங்காமல் அவருடைய மனைவியின் உதவியால் தப்பித்து வேறொரு இடத்துக்கு வந்து விட்டதாகவும், அவளை அந்த மந்திரவாதியின் உதவியால் வசியப்படுத்தித் திரும்பவும் அழைத்துக்கொண்டு மரைக்காயர் சிங்கப்பூருக்குப் போய்விட வேண்டுமென்று முயன்றதாகவும் தெரிந்தன. அந்தப் பெண் பெருந்தேவியம்மாளுக்கு மகளென்பதும், சாமாவையருக்கு சகோதரி யென்பதும் குறிக் கப்பட்டிருந்தன. அவர்களிருவரும் வெவ்வேறு ஜாதி யாராகையால், அவர்கள் குறித்த உறவு முறைமை பொய்யான தென்று நான் உடனே நிச்சயித்துக் கொண்டேன். உண்மையில் அந்தப் பெண் யாவ ளென்பதை அறிந்துகொள்ள ஒருவகையான ஆசை உதித்தது. உங்களுடைய வீட்டிற்கு அடுத்த வீடுகளில் தந்திரமாக விசாரித்து உங்கள் மனைவியின் பெயர் மேனகாவென்று அறிந்து கொண்டேன். அப்போது எனக்கு இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்தது. சில நாட்களுக்கு முன் தஞ்சை டிப்டி கலெக்டர் துரையினிடத்திலிருந்து எங்களுக்கு ஒரு தந்தி வந்தது. அதில் தஞ்சை டிப்டி கலெக்டரான சாம்பசிவையங்கார் என்பவர் ரஜா இல்லாமல் இந்த ஊருக்கு வந்து உங்களுடைய மனைவியான அவருடைய பெண்ணை அழைத்துக் கொண்டு போனதாகவும், அது உண்மைதானா, வென்பதை இரகசியமாக விசாரித்துத் தெரிவிக்க வேண்டு மென்று எழுதி உத்தரவு செய்திருந்தார். அன்றைக்கு மறுநாள் சாம்பசிவையங்காரே இந்த ஊருக்கு வந்திருந்தார். அவரிடம் மேற்படி தந்தியின் விஷயமாக நாங்கள் பேசியதிலிருந்து, அவர் சென்னைக்கு வரவில்லை யென்றும் பெண்ணை அழைத்துக் கொண்டு போகவில்லை என்றும் நாங்கள் உணர்ந்து கொண்டோம். அந்த விஷயமும் என்னுடைய நினைவுக்கு வந்தது. இவர்கள் மரைக்காயருக்கு விற்ற பெண், உங்களுடைய மனைவிதான் என்று நான் உடனே நிச்சயித்துக் கொண்டேன். அதன் பிறகு மேற்படி மரைக்காயர் வீட்டுக்குப் போனேன். அவர் நாகைப்பட்டணத்துக்குப் போயிருப்பதாக அங்கிருந்த வேலைக்காரன் கூறினான். அந்த மரைக்காயரின் மாமனார் சென்னைத் துரைத்தனத்தின் நிருவாக அங்கத்தினர்களில் ஒருவரான பெரியதம்பி மரைக்காயர் என்பதைக் கேள்விப் பட்டு அவரிடம் சென்றேன். அவரைக்கண்டு அவரிடம் இந்தக் கடிதங்களிற் குறிக்கப்பட்ட விஷயங்களைத் தெரிவித்து அவருடைய வீட்டில் உங்களுடைய மனைவி இருக்கிறாளா வென்று விசாரித்தேன். அவர் இந்தக் கடிதங்களில் காணப்பட்ட விஷயங்கள் உண்மையானவை யென்று சொன்னார். அவருடைய மகள், மேனகா வென்னும் பெண்ணை நடு இரவில் தமது பங்களாவுக்கு அழைத்து வந்தாள் என்றும், அவள் சில நாட்கள் வரையில் நோய் கொண்டு படுத்த படுக்கையாக தமது பங்களாவில் இருந்தாளென்றும், இராயப்பேட்டை வைத்தியசாலையின் டாக்டர் துரைஸானி அடிக்கடி வந்து சிகிச்சை செய்துவந்தாள் என்றும், துரைஸானியின் அனுமதிப்படி அவளும் தமது மகளான கோஷா ஸ்திரீயும் கடல் காற்று வாங்கும்படி மோட்டார் வண்டியில் கடற்கரைக்குப் போனார்களென்றும், அங்கே தற்செயலாக ஒருவர் மீது மோட்டார் வண்டி ஏறியதைக் கண்டு மேனகா மயக்கமடைந்தாளென்றும், அதன் காரணத்தை கேட்டறிந்த துரைஸானி நீங்களே மோட்டாரில் அறைபட்டவர்களென்று மேனகாவுக்குச் சொன்னதாகவும், அடுத்த தடவை துரைஸானி வந்தபோது உங்களுடைய சட்டைப்பையிலிருந்த இரண்டு கடிதங்களைக் கொணர்ந்து மேனகாவினிடம் கொடுத்ததாகவும், அவற்றில் தான் நாடகக்காரனோடு ஓடிப்போய்விட்டதாக பொய் எழுதப்பட்டிருந்ததைக் கண்டவுடன் உங்களுடைய மனைவி விவரிக்க முடியாத ஆத்திரமும், விசனமும் அடைந்தவளாகவும் கூறினார். உங்களுடைய மனைவி தனக்கு இவ்வளவு அவமானமும் அபகீர்த்தியும் வந்த பிறகு, தான் உங்களுடைய முகத்திலேயே விழிக்கக் கூடாதென்று நினைத்துக் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி வைத்துவிட்டு ஒருநாளிரவு அவருடைய பங்களாவை விட்டு ஒருவருக்கும் தெரியாமல் வெளியில் போய்விட்டார்களாம். பெரியதம்பி மரைக்காயர் பிறகு தமது ஆட்கள் பலரை விடுத்து கடற்கரை முதலிய இடங்களிலெல்லாம் தேடச் செய்தாராம். உங்களுடைய மனைவி அகப்படவில்லையாம். இந்த விஷயங்களை என்னிடம் தெரிவித்த மரைக்காயர், நாடகக்காரனால் எழுதப்பட்ட இரண்டு கடிதங்களையும், உங்களுடைய மனைவியால் கடைசியாக எழுதி வைக்கப்பட்ட துண்டுக் காகிதத்தையும் என்னிடம் கொடுத்து, அவற்றின் மேல் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படிக்கும் தங்களுடைய மனைவியை இன்னும் தேடிப் பார்க்கும்படிக்கும் உத்தரவு செய்தார்; உங்களுடைய மனைவியின் அங்க அடையாளங் களை நான் நன்றாக அறிந்துகொண்டு பட்டணம் முழுவதிலும் தேடச் செய்தேன்; அவள் எங்கும் காணப்படவில்லை. துண்டுக் கடிதத்தில் காணப்பட்டபடி கடலில் விழுந்து இறந்து போய் விட்டாளோ வென்னும் சந்தேகமே எனக்குத் தோன்றுகிறது. நாடகக்காரனால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் இரண்டு கடிதங்களையும், உங்கள் மனைவியால் எழுதப்பட்ட துண்டுக் காகிதத்தையும் இதில் இணைத்திருக்கிறேன்.
இந்த விஷயத்தை நியாய ஸ்தலத்தில் விசாரணைக்குக் கொண்டுபோக உங்களுக்கு விருப்பமானால் தயவு செய்து எழுதுங்கள். நான் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளுகிறேன். இதனால் உங்களுடைய சகோதரிக்கும் தண்டனை கிடைப்பதன்றி உங்களுக்கும் பெருத்த அவமானம் ஏற்படும். இப்போது சிலருக்கே தெரிந்த இந்த இழிவான காரியம் பத்திரிகைகளில் அடிபட்டு ஊரூராய்ப் பரவும்; இதனால் உங்களுக்கு அவமானம் ஏற்படுமன்றி, எவ்விதமான அநுகூலமும், உண்டாகப் போகிறதில்லை. ஆனால், குற்றிவாளிகளைத் தண்டித்தோமென்னும் ஒரு திருப்தி உண்டாகும் என்பதில் ஆக்ஷேப்பணையில்லை. நைனா முகம்மது மரைக்காயர் என்பவர் ஒன்றும் அறியாத சிறுவர்; துர்மந்திரியான சாமாவையருடைய போதனையால் அவர் இந்தக் காரியத் திற்கு உடன் பட்டார். என்றாலும், அவரைத் தண்டனைக்குக் கொண்டு வருவது நியாயமான காரியமே. ஆனால் அவரைத் தண்டனைக்குக் கொண்டு வருவதில், உங்களுடைய சகோதரியும் சிறைச்சாலைக்குப் போக நேரிடும்; உங்களுக்கு இழிவும் உண்டாகும். இவைகளைக் கருதி அவரைத் தண்டனைக்குக் கொண்டு வருவதற்கு நீங்கள் விரும்பமாட்டீர் களென்று நினைத்தே, உங்களுடைய அபிப்பிராயத்திற்கு இதை விட்டிருக்கிறேன். உங்களுக்கு விருப்பமானால், நான் உடனே நடவடிக்கை தொடங்குகிறேன்.
இந்த விஷயங்களைப்பற்றி நான் ரகசியமாகவே விசாரணை செய்தேன். செய்தபோது இன்னும் இரண்டொரு விஷயங்கள் வெளியாயின. அவற்றையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுவது அவசியம்.
நாடகக்காரனான மாயாண்டிப்பிள்ளை இந்த விஷயத்தில் உண்மையில் சம்பந்தப்பட்டிருக்கிறானா வென்பதைக் கண்டு பிடிக்கும் நோக்கத்துடன், நான் வீராச்சாமிநாயுடு கம்பெனிக்குப் போய் விசாரணை செய்தேன். மாயாண்டிப்பிள்ளை தஞ்சையிலிருந்து ஒரு பெண்ணை இரகசியமாக அழைத்துக் கொண்டு போனது உண்மைதான் என்பதும், அவனுக்கும் இதற்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்பதும் வெளியாயின. அந்த மாயாண்டிப்பிள்ளை வீராச்சாமிநாயுடு கம்பெனியின் வேலைக்கு வந்தபோது நாயுடுவுக்கு ஓர் ஒப்பந்தம் எழுதிக்கொடுத்திருக்கிறான். அந்த ஒப்பந்தம் மாயாண்டிப்பிள்ளையின் கையால் எழுதப்பட்டு ரிஜிஸ்டர் கச்சேரியில் பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தப் பத்திரத்தை வாங்கி அதிலுள்ள எழுத்துக்களையும், உங்கள் மனைவியின் பெட்டியிலிருந்து அகப்பட்ட இரண்டு கடிதங்களிலுள்ள எழுத்துக்களையும் ஒத்திட்டுப் பார்த்தேன். இரண்டும் வெவ்வேறு மனிதரின் எழுத்தென்பது எளிதில் தெரிகிறது. இந்தக் கடிதங்கள் சாமாவையரால் சிருஷ்டிக்கப் பட்ட பொய்க் கடிதங்கள் என்னும் எண்ணம் என் மனத்தில் உண்டாயிற்று; ஓர் ஆளை அனுப்பி சாமாவையரைக் கொண்டு ஒரு கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு வரச் செய்தேன். அவருடைய எழுத்தும் வேறுமாதிரியாக இருந்தது. அவருடைய வீட்டில் ன்னம் வேறு ஆண்பிள்ளைகள் இருக்கிறார்களோ வென்று விசாரித்துப் பார்த்தேன். அவருடைய தம்பி ஒருவன் உத்தியோகமில்லாமல் இருப்பதாக உணர்ந்து, அவனைத் தந்திரமாக வரவழைத்து, அவனுக்குப் போலீசாபீசில் குமாஸ்தா வேலை செய்து கொடுப்பதாகச் சொல்லி, ஒரு மனு எழுதச் செய்து அதை வாங்கிக் கொண்டேன். அந்த மனுவின் எழுத்தும் உங்களுடைய மனைவியின் பெட்டியிலிருந்த கடிதங்களின் எழுத்தும் ஒன்றா யிருக்கின்றன. அவனே இந்தப் பொய்க் கடிதங்களை எழுதினவன் என்பது நிச்சயமாகத் தெரிகிறது; அந்த மனுவையும் இதனுடன் கோர்த்திருக்கிறேன். இந்த விவரங்களை அறியவும்; இவற்றிலிருந்து, சாமாவையரும், உங்கள் சகோதரிமாரும் இவ்விதமான பொய்க் கடிதங்களைத் தயாரித்துப் பெட்டியில் வைத்துவிட்டு, உங்களுடைய மனைவியை மரைக்காயரிடம் விற்றார்கள் என்பதும், கடைசி வரையில் உங்கள் மனைவி குற்றமற்றவளா யிருந்து காணாமற் போயிருக்கிறாள் என்பதும் நிச்சயமாக விளங்குகின்றன. உங்கள் மனைவி நைனா முகம்மது மரைக்காயர் வீட்டிலிருந்து தப்பித்துக் கொண்டு போனது முதல் கடைசியில் தற்கொலை செய்துகொள்ளப் போனது வரையில், நடந்த விஷயங்க ளெல்லாம் இராயப்பேட்டை வைத்தியசாலையிலுள்ள டாக்டர் துரைஸானிக்கு நன்றாகத் தெரியும்; இந்த விசனகரமான விஷயத்தில், உங்களுக்கு என்னால் எவ்விதமான உதவி தேவையாயிருந்தாலும், அதை நான் சந்தோஷமாகச் செய்யத் தயாராக இருக்கிறேன். தேவையானவற்றிற்கு எழுதுங்கள்.
சஞ்சீவி ஐயர்.
என்று எழுதப்பட்டிருந்த நீண்ட கடிதத்தை வராகசாமி இரண்டே நிமிஷத்தில் படித்து முடித்தான். அவனது உடம்பும் கைகால்களும் ஆத்திரத்தினாலே வெடவெடவென்று நடுங்கின. அது கனவோ நினைவோவென்றே சந்தேகம் உண்டாயிற்று. அவன் தனது கண்களை நம்பாமல் அவற்றைத் துடைத்துக்கொண்டு கடிதத்தை இன்னொரு முறை படித்தான். அவனது முகம் உடனே மாறுபட்டது; கண்கள் கோவைப் பழம்போலச்சிவக்க, அவற்றிலிருந்து தீப்பொறியும் இரத்தத் துளியும் தெறித்தன. திக்பிரமை கொண்டான்; அது ஆகாயமோ பூமியோ வென்பது தோன்றவில்லை. மனதில் சண்ட மாருதத்தைக் காட்டிலும் அதிகமான வன்மையுடைய எண்ணிறந்த உணர்ச்சிகள் தோன்றி உலகத்தையே போர்த்தன. ரௌத்திராகாரமான கோபம் பொங்கி யெழுந்து கொந்தளித்தது; உடனே உலக்கையை எடுத்து பெருந்தேவி, கோமளம், சாமாவையர் ஆகிய மூவரின் மண்டைகளையும் ஒரே அடியாக அடித்துச் சுக்கல் சுக்கலாகப் பிளந்து காற்றில் தூற்றிவிடலாமா வென்று அவன் நினைத்தான். முற்றிலும் களங்கமற்றவளும் நிரபராதியுமான தனது மனைவி அநியாயமாகத் தற்கொலை செய்துகொண்டாளே என்ற ஆத்திரமும், துக்கமும், அழுகையும், பொங்கி யெழுந்தன; வீராவேசத்தோடு எழுந்த பலவகை உணர்ச்சிகளால் அவன் முற்றிலும் மேற்கொள்ளப் பட்டவனாய், என்ன செய்வ தென்பதை அறியமாட்டாமல் துடிதுடித்து சிம்மகர்ச்சனை செய்தான். ஹிரணியனது குடலைக் கிழித்து மாலையாக அணிந்து கொள்ளும் எண்ணத்தோடு தூணைப் பிளந்து கொண்டெழுந்த உக்கிர நரசிம்ம மூர்த்தியைப்போல படபடத்து அவன் கோபமே உருவாகக் கட்டிலைவிட்டு எழுந்திருக்க முயன்றான்; முதலில் அக்காள் முதலியோரிடம் சென்று அவர்களது வஞ்சகத்தை வெளியிட்டு யாவரையும் ஒரே வெட்டாக வெட்டிவிட நினைத்தான். அதே நிமிஷத்தில் எழுந்துபோய் புனிதவதியான மேனகாவைத் தேடலாமா வென்னும் எண்ணம் தோன்றியது. ஆனால், பலர் அதற்கு முன் தேடிப் பயனில்லாமல் போயிருக்க, தான் இன்னமும் தேடினால் மாத்திரம் தற்கொலை செய்து கொண்டவள் திரும்பி வருவாளோவென்று நினைத்து அவன் நம்பிக்கையையும் தைரியத்தையும் இழந்தான்; கட்டிலை விட்டு எழுந்திருக்க இரண்டொரு முறை முயன்றான்; ஆனால், அவன் தனது முழங்காலை ஊன்றக் கூடவில்லை யாகையால், மிகவும் தத்தளித்தவனாய் மெத்தையில் சாய்ந்தான்; கடிதத்தைத் திரும்பவும் நோக்கினான்; கடிதத்தில் கோர்க்கப்பட்டிருந்த மற்ற கடிதங்களையெல்லாம் படித்தான்; மேனகாவை மரைக்காயருக்கு விற்றுவிட்டதாக எழுதப்பட்டிருந்த கடிதம் தன் தங்கை கோமளத்தினால் எழுதப்பட்டிருந்ததையும், அதன் அடியில் சாமாவையரும், பெருந்தேவியும் கையெழுத்திட் டிருந்ததைக் கண்டான்; மேனகாவின் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட கடிதங்களின் எழுத்தும், சாமாவையரது தம்பியால் எழுதப்பட்டிருந்த மனுவின் எழுத்தும் ஒன்றாக மாயாண்டிப் பிள்ளையால் இருந்ததைக் கண்டான்; நாடகக்கார வீராச்சாமிநாயுடுக்கு எழுதிக் கொடுக்கப் பட்டிருந்த ஒப்பந்தப் பத்திரத்தின் எழுத்து முற்றிலும் வேறு மாதிரியாக இருந்ததையும் கண்டான். என்ன செய்வான்! அது இந்திர ஜாலமோ அல்லது உண்மைத் தோற்றமோ வென்ற சந்தேகம் அடிக்கடி எழுந்தது. அவனது சிரம் சுழன்றது; மூளை குழம்பியது. நெஞ்சம் பதறியது. கோபத்தினால் ஹா, ஹூ என உலப்பிப் பெருமூச்சு விடுத்தான்.
அவனது நிலைமை அப்படி இருக்க, ஏதோ கடிதம் வந்ததையும் அதைப் படித்தவுடன் அவன் இவ்வாறு விபரீதமான நிலைமையை அடைந்ததையும், கட்டிலைவிட்டு எழுந்திருக்க முயன்றதையும் கண்ட அந்த வெள்ளைக்கார மடந்தை விவரிக்க இயலாத பெருத்த கவலை கொண்டு மிகுந்த அச்சத்தோடு அவனிடம் நெருங்கி, அவனை அவ்வாறு ஒரு நிமிஷத்தில் மாற்றிய அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருப்பது என்ன விஷயமோ வென்று யோசனை செய்து பார்த்தாள். ஒன்றும் புலப்படவில்லை. அன்றலர்ந்த தாமரை மலரினும் அதிகரித்த குளிர்ச்சியும் இனிமையும் வீசிய சுந்தர முகத்தோடு அவள் பணிவாகக் கட்டிலின் அருகில் நின்று, “உங்களுடைய உடம்பு மிகவும் கேவலமான நிலைமையில் இருக்கிறது. இரத்தமே கிடையாது; நீங்கள் இப்படி ஆத்திரப்படலாமா? எழுந்திருக்கலாமா? இன்னம் நாலைந்து நாட்களில் நன்றாக எழுந்திருக்கக் கூடியவர்கள் இதனால் இன்னம் ஒரு மாசத்துக்கு மேல் படுக்கையில் இருக்க நேருமே; ஐயோ! கொஞ்சம் சகித்துக் கொள்ளுங்கள். அது தலைபோகும் விஷயமாயிருந்தாலும் சரி, நீங்கள் இப்போது அதைப் பாராட்டினால் உங்களுடைய உயிருக்கே ஒரு வேளை ஆபத்து வந்தாலும் வந்துவிடும். வேண்டாம், வேண்டாம்; படுத்துக் கொள்ளுங்கள்’ என்று சாந்தமாகவும் அன்போடும் கெஞ்சி மன்றாடினாள். ஆனால், விஷயம் என்னவென்பதைக் கேட்க அவள் துணியவில்லை. அவளது இங்கிதமான கனிமொழி யைக் கேட்டும் அவனது கோபம் சிறிதும் தணிவடையவில்லை. என்றாலும், முழங்காலில் நோயுண்டானமையால் அவன் தலையணை களிற் சாய்ந்து படுத்துக் கொண்டான். ஆனால், கைகளும், கால்களும், உதடுகளும் கண்களும் துடித்துக் கொண்டிருந்தன. ஒரே நொடியில் அவன் ஆயிரங் ரியங்களைச் செய்ய நினைத்தான்; ஆனால், எழுந்திருக்க மாட்டாமையால் இடுப்பொடிபட்ட நாகப்பாம்பைப்போல அவன் இருந்த இடத்திலிருந்தே சீறினான். “ஆகா! கடைசியில் நீ சொன்னபடியே காரியம் முடிந்திருக்கிறது! இதைப் படித்துப் பார்’ என்று கூறிய வண்ணம் அந்தக் காகிதக் கற்றையை எடுத்து அவள்மீது வீசி எறிந்தான். அவள் அதை விரைவாக எடுத்தாள். எடுக்கும் போதே அவளது கைகால்களும் உடம்பும் நடுங்கின. பணிமகள் கடிதத்தையும் மற்ற காகிதங்களையும் ஐந்து நிமிஷத்தில் படித்து முடித்தாள். அவளது முகம் உடனே மாறுபட்டது. ஆனால், அவள் அப்போதும் சந்தோஷமடைந் தாளோ, அல்லது வருந்தினாளோ வென்பது அவளது முகத்தோற்றத்தினால் அறிந்துகொள்ளக் கூடாமலிருந்தது; அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது. என்றாலும், அவள் பணிவாகவும் நயமாகவும் பேசி அவனது ஆவேசத்தையும் ஆத்திரத்தையும் தணிக்க முயன்றாள். “நான் நினைத்தபடியே விஷயம் முடிந்தாலும் இதைப்பற்றி ஒரே காலத்தில் என் மனதில் இன்பமும் துன்பமும் உண்டாகின்றன. உங்களுடைய மனைவி கடைசி வரையில், மாசற்ற கற்புடையவளாயிருந்தா ளென்பதை உங்கள் மனம் திருப்தி யடையும்படி ஈசுவரனே ருஜுப்படுத்தி யிருப்பதற்காக, நான் அடையும் ஆநந்தம் என் மனதில் அடங்கவே ல்லை. இதற்காக நான் அந்தக் கருணைவள்ளலை என் மனதார வாழ்த்துகிறேன். ஆனால், உங்களுடைய பல ஹீனமான நிலைமையில் இந்த ரகசியங்கள் வெளிப்பட்டு, உங்களைப் பொறுக்க முடியாத வாதைக்கு உள்ளாக்கிவிட்டதே என்பதே பெருத்த விசனமாக இருக்கிறது. தயவு செய்து கோபத்தை அடக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய மனைவி தற்கொலை செய்து கொண்டது சரியான காரிய மாகையால், அதைப்பற்றி நீங்கள் விசனப்பட நியாயமில்லை. இப்போது உங்களுடைய வீட்டில் அன்னியர் பலர் வந்திருக்கின்றனர். அவர்கள் முன்பு இந்த அசங்கியமான விஷயங்கள் வெளியாவது உங்களுக்கு அவமானமல்லவா; அதையும் உங்களுடைய தேக நிலைமையையும் கருதி நீங்கள் இப்போது ஆத்திரத்தை அடக்கிக் கொள்ளுங்கள். இன்னம் நாலைந்து நாட்கள் பொறுப்பதனால், காரியம் கெட்டுப் போகாது. நீங்கள் செய்ய வேண்டுவதை அப்புறம் செய்து கொள்ளலாம். செய்ததை என்னவோ செய்து விட்டார்கள்; உங்களுடைய மனைவியோ திரும்பாமல் போய்விட்டாள். இப்போது நீங்கள் சண்டையிடுவதினால் போனவள் வரப்போகிறதில்லை. வீணில் உடம்பைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்.நான் சொல்வதைத் தயவு செய்து கேளுங்கள். என் மேல் உங்களுக்கு உண்மையில் அன்பிருக்குமானால், என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, அதை மெய்ப்பிக்க வேண்டும்” என்று மிகவும் உருக்கமாகக் கூறி அவனது மோவாயைப் பிடித்து வேண்டினாள்.
அந்த மோகனாங்கியின் வலையில் முற்றிலும் வீழ்ந்து கிடந்த வராகசாமியின் மன நிலைமை அதனால் ஒருவாறு தளர்வடைந்தது. என்றாலும், அவனது ஆத்திரம் இன்னமும் அப்படியே இருந்தது. “ஆகா! என்ன காரியம் செய்து விட்டார்கள் கொலை பாதகர்கள்! அந்தக் கிராதகன் சாமாவையனாலல்லவா இவ்வளவும் நடந்திருக்கிறது! இது வரையில் அவனை யோக்கியன் என்றல்லவா நினைத்து மோசம் போனேன்! அடாடா! என்னுடன் கூடப்பிறந்தவர்கள் இப்படியும் செய்வார்களா! என்ன ஆச்சரியம்! என்ன ஆச்சரியம்! உலகத்தில் இப்படியும் நடக்குமா!” என்ற கூறித் தனது விழியையும் மனதையும் ஒரே நிலையில் நிறுத்தி அப்படியே வியப்படைந்து வெறுவெளியை நோக்கினான். கால் நாழிகை வரையில் அவன் அப்படியே ஓவியம் போல் அசைவற்றிருந்தான். அவனது மனைவியின் கலியாண குணங்களும், அருமை பெருமைகளும், அவளது அற்புத வடிவமும் அவனது அகக்கண்ணில் தோன்றின. அவனது நினைவு முற்றிலும் மனைவியின் மீது திரும்பியது. அவன் வாய்விட்டுப் பிதற்ற ஆரம்பித்தான். ஆ மேனகா! என் கண்ணே! என் பாக்கியமே! பரிசுத்த ஸ்வரூபிணியான உன்னை அடைய நான் யோக்கியதை அற்றறவனென்று நினைத்து நீ தற்கொலை செய்து கொண்டாயோ! ஐயோ! உன்னுடைய வயிற்றெரிச்சல் வீணாகுமோ! உன்னுடைய சாபம் ஏழேழு தலை முறைக்கும் விலகுமே! நான் எத்தனை ஜென்ம மெடுத்து எவ்வளவு தவம் செய்தாலும், உன்னைப் போன்ற விலையில்லா மாணிக்கத்தை நான் பெறுவேனோ! என்னைப் போன்ற பாதகன், துர்பாக்கிய சிகாமணி, தரித்திர மூதேவி இந்த உலகத்திலேயே ஒருவனும் இருக்க மாட்டான். கேவலம் நாயினும் கடையவனான என்னிடத்தில் மகா லக்ஷமியைப் போன்ற உத்தமி ஏன் நிலைத்து நிற்பாள்” என்று கூறினான். அவனது விசனம் காட்டாற்று வெள்ளம்போலப் பொங்கி யெழுந்து அவனை அழுத்தியது; மூர்ச்சித்து அப்படியே விழுந்து விட்டான். அப்போது அருகில் நின்ற அருங்குண அணங்கு அதைக் கண்டு பெரிதும் கலக்க மடைந்து துடிதுடித்து, அவனது மூர்ச்சையைத் தெளிவிக்கத் தேவையானவற்றைச் செய்தாள்; அதனால் அவனுக்கு என்ன கெடுதல் சம்பவிக்குமோ வென்று கவலை கொண்டு தவித்தாள்; பலவகையான சிகிச்சைகளை அவன் அரைநாழிகை நேரம் வரையில் அவள் செய்ய, அ திரும்பவும் விழித்துக் கொண்டான். அந்த மடந்தை அருகில் உட்கார்ந்து அவனைத் தன் மீது சார்த்திக்கொண்டு ஏதோ ஒரு மருந்தைப் பருகுவித்தாள். அவன் அப்போதும் குழம்பிய மனதோடு வெறு வெளியையும், தனக்கருகிலிருந்த பெண்மணியையும் நோக்கினான். கண்ணீர் வழிந்தது. “ஐயோ! மேனகா! உன்னை மேனகா என்று லக்ஷம் தடவை இனி நான் கூப்பிட்டாலும் உன்னுடைய அழகான முகத்தை இனி நீ காட்டுவாயோ; ஆகா! உன்னைப் பெண்தெய்வமென்றே சால்லவேண்டும்! உன்னைக் கோவில் வைத்து வணங்கினாலும் தகும். பூலோகத்தில் மனிதன் அடையக்கூடிய பெரும் பேற்றை யெல்லாம் எனக்கு உதவிய கற்பகத் தருவாகிய உன்னையடைந்தும், சுகப்படக் கொடுத்துவைக்காத அதிர்ஷ்ட ஹீனனான எனக்கு இனி உன்னைக் காட்டிலும் மேலான எந்தப் பொருள் கிடைக்கப்போகிறது? நீ என்னை விட்டுப்போன பின், இனிமேல் நானும் உயிரோடிருந்தால், எனக்கு ஓயா விசனமே மிச்சமாகும். நானும் உயிரை விடுவதே இத்தனை விசனங்களுக்கும் மருந்து; என் உயிரே; என் கண்மணியே! என் கட்டிக்கரும்பே! கிளியைப்போலக் கொஞ்சுவாயே! நினைப்பதை யெல்லாம் காமதேனுவைப்போலக் கொடுப் பாயே! படித்தவள், கெட்டிக்காரி, பெரிய மனிதருடைய புத்திரி, என்ற அகம்பாவம் கொஞ்சமாகிலும் உண்டா! அதிர்ந்த சொல்லுண்டா! என் அதிர்ஷ்ட லக்ஷுமியாகிய நீ என்னைவிட்டுப் போக மனங்கொண்டாயோ! எல்லா வற்றையும் நன்றாக அறிந்த நீ தற்கொலை செய்து கொள்ள நினைத்தது ஆச்சரியமாக இருக்கிறதே! எத்தனையோ துன்பங்களுக் குள்ளாகியும் உன்னுடைய கற்பைக் காத்துக் கொண்ட நீ என்னிடம் வந்து சேரக்கூடாதா? நான் உன்மேல் சந்தேகங் கொள்வேனென்று நினைத்தாயோ? நீ நேராக என்னிடம் வந்து உண்மையைச் சொல்லியிருந்தால், நான் கோபம் கொள்வேனா! ஒருநாளும் கொள்ளமாட்டேனே! என்னுடைய உண்மையான பிரியத்தை உள்ளபடி அறியா மலல்லவா நீ இப்படிச் செய்து விட்டாய்! அடி! மேனகா! என் வாயில் மண்ணைப் போட்டுவிட்டாயே! இந்தச் சண்டாளர் செய்ததைக் காட்டிலும் நீ செய்ததே பெருத்த கொடுமையாக வதைக்கிறதே!” என்று பிரலாபித்துக் கண்ணீர் சொரிந்து விம்மிவிம்மி அழுதான். தேற்றினும் தேறாமல் மிக்க பரிதாபகரமான நிலைமையிலிருந்து அவன் தவித்ததைக் காணச் சகியாமல் அந்த வெள்ளை மடவன்னம் பதறினாள். அவளது கண்கள் மழைபோலக் கண்ணீர் பெய்தன. அவள் அவனை மிகுந்த அன்போடும் பணிவோடும் குழந்தைபோலத் தடவிக் கொடுத்து, “விசனப்படவேண்டாம்; இது உங்களுடைய தேகத்துக்கு அவசியம் கெடுதல் செய்யும்; நாங்கள் இத்தனை நாட்கள் பட்டப்பாடெல்லாம வீணாய்ப் போகும். உங்களுடைய சம்சாரம் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டது உண்மையானால், அவளுடைய பிரேதம் கரையில் ஒதுக்கப்பட்டிருக்கவேண்டும். அதைச் செம்படவர்கள் இதற்குள் எப்படியும் கண்டுபிடித் திருப்பார்கள். அப்படி ஒன்றும் நடக்காதிருப்பதால், அவள் உயிரை விட்டிருக்க மாட்டா ளென்று தோன்றுகிறது. நீங்கள் மோட்டார் வண்டியில் அறைபட்டு வைத்தியசாலையில் கிடந்ததை அவள் டாக்டர் துரைஸானியின் மூலமாக அறிந்ததாகத் தெரிகிறது. நீங்கள் இப்படிக் கிடக்கையில், அவள் உங்களை விட்டு இறந்துபோக நினைப்பாளா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. யாவற்றிற்கும் நீங்கள் இன்னும் மூன்று நான்கு நாட்கள் உடம்பை அலட்டிக் கொள்ளாமல் இருங்கள். அதற்குள் ஒருகால் உங்களுடைய சம்சாரத்தைப்பற்றி செய்தி ஏதாயினும் கிடைக்கலாம். இந்த விஷயங்களைப்பற்றி உங்களுடைய சகோதரிமார்களிடத்திலும் அப்புறம் பேசிக்கொள்ளலாம். இப்போது நீங்கள் அவர்களுடன் பேசுவதே கூடாது. நான் சொல்வதைத் தயவு செய்து கேளுங்கள்” என்று உருக்கமாகக் கூறி வேண்டினாள். மிகவும் ளகிய மனதையும், குழந்தையைப் போன்ற கபடமற்ற குணத்தையும் உடையவனான வராகசாமி தனக்குப் பேருபகாரம் செய்து வந்த அந்த வசீகர மங்கையின் சொல்லை மீற மாட்டாமல் சிறிது தணிவடைந்து திண்டில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு உள்ளூற வருந்திப் பாகாய் உருகி ஓய்ந்து போனான். அவள் மேன்மேலும் அவனைத் தேற்றிக் கொண்டே இருக்க, அவன் கால் நாழிகையில், உணர்வற்று அப்படியே உறங்கிப்போய் கடுந்துயிலில் ஆழ்ந்தான். அவ்வாறு ஒருமணி நேரம் கழிந்தது. அவன் திரும்பவும் விழித்துக் கொண்டான். பணிப்பெண் ஈரத்துணியால் அவனது முகத்தைத் துடைத்து நன்றாகச் சுத்தி செய்துவிட்டவளாய், “உடம்பு எப்படி இருக்கிறது? சொல்லுங்கள்; வைத்திய சாலையிலிருந்து நல்ல மருந்துகளை வரவழைக்கிறேன்” என்று கூறினாள். வராகசாமியோ அவளது சொல்லைக் காதில் வாங்கவில்லை. அவனது மனது முற்றிலும் மேனகாவின் மீதே சென்றிருந்தது. கண்கள் வெற்றிடத்தை உற்று நோக்கியவண்ண மிருந்தன. அவனது மனதில் பலவகைப்பட்ட நினைவுகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. கண்களில் கண்ணீர் ஊறி ஊறிப் பெருக்கெடுத்தது. அவன் கைகளால் தனது முகத்தைப் புதைத்துக் கொண்டவனாய், “மேனகா! மேனகா!” வென்று பிதற்றிக் கோவெனக் கதறியழத் தொடங்கினான்; சிரசிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு புலம்பி அழ ஆரம்பித்தான்; அடுத்த நிமிஷம் பற்களை நறநறவென்று கடித்து, “ஆகா! ப்படியா செய்தீர்கள்!” என்று கர்ச்சிக்கிறான். அவனிருந்த அறையின் கதவுகள் மூடப்பட்டிருந்தமையால், அவன் செய்த ஓசை அப்புறம் கேட்கவில்லை. அவனது பரிதாபகரமான நிலைமையைக் கண்டு அச்சமும் நடுக்கமும் கொண்ட அந்த ளநங்கை, தன்னாலியன்ற வரை பெருமுயற்சி செய்து அவனது துயரத்தையும், கோபத்தையும் மாற்றிய வண்ணம் ருந்தாள்; அவன் ஆறுதலே அடையாமல், தன்னையும் உலகையும் தனக்கருகிலிருந்த அந்த இன்பவல்லியையும் மறந்து தனது வேதனைகளிலேயே மூழ்கிக் கிடந்தான். அப்போது, அவனுக்கு ஆகாரம் கொடுக்கும் வேளை வந்தது; பெருந்தேவியும், கோமளமும் வழக்கப்படி ஆகாரம் ஜலம் முதலியவற்றை எடுத்துக் கொண்டு கதவைத் திறந்தனர். அதைக் கண்ட பணிமகள் அவர்களை வராகசாமியிடம் அப்போது விடக்கூடாதென்று நினைத்து, விரைவாக எழுந்து கதவண்டையில் ஓடி, வழிமறைத்து நின்று, “உடம்பு சரியான நிலைமையில்லை; இப்போது ஆகாரம் சாப்பிடமாட்டார்; இன்னம் அரைமணியில் நானே வந்து சொல்லுகிறேன். அப்போது கொண்டுவரலாம்” என்றாள். அதைக் கேட்ட பெருந்தேவியம்மாள் ஒருவாறு ஆத்திர மடைந்தவளாய், “கொஞ்ச நாழிகைக்குமுன் கோமளம் கடுதாசியைக் கொடுத்தபோது சரியாயிருந்த உடம்பில் இதற்குள் என்ன வந்துவிட்டது! உன்னுடைய அதிகாரம் கண்டிப்பா யிருக்கிறதே. புது மணியக்காரன்வந்து நெருப்பைக் கட்டிக் கொளுத்தி னானாம் என்பார்கள். அதைப்போல யாரோ வழியில் போகிறவளான நீ வந்து எங்களை அதிகாரம் செய்கிறாயே! எங்கள் வீட்டுப் பையனுக்கு உடம்பு சரியாக இல்லாவிட்டால் அதை நாங்கள் வந்து பார்க்கவேண்டாமா! எல்லாவற்றிற்கும் நீதான் அதிகாரி போலிருக்கிறதே! காணாமற்போன பெண்டாட்டிக்குமேல் நீ பெரும் பெண்டாட்டியாய் விட்டாய் போலிருக்கிறதே! விடிந்தால் நிச்சய தாம்பூலம்; இதுவரையில் சரியாயிருந்த உடம்பை நீதான் எப்படியோ கெடுத்திருக்கிறாய். இதற்குத்தான் வெள்ளைக் காரருடைய வைத்தியமே உதவாதென்று சொல்லுகிறது. வியாதியாயிருக்கிற பையனுடன் கதவைச் சாத்திக் கொண்டு சிறு பெண்ணாகிய நீ ஓயாமல் இருப்பதனாலேதான் அவனுடைய உடம்பு கெட்டுப் போய்விட்டது. முன்னால் நீ பங்களாவை விட்டுப்போனால் அவனுடைய உடம்பு ஒரு நிமிஷத்தில் சரியாய்ப்போகும். பையனுக்கு நல்ல பாலிய வயசு. அவனைக் கட்டிப் பிடிக்கவும், அவனைத் தொடவும் அன்னியப் பெண்ணாகிய உனக்குக் கொஞ்சமும் லஜ்ஜையே இல்லையே! இதுதான் என்ன ஜென்மம்!” என்று பெருந்தேவியம்மாள் குறும்பாகவும் அதட்டியும் மொழிந்தாள். அந்த கன்னக்கொடூரமான மொழியைக் கேட்ட பெண்மணி வராகசாமியின் அபாயகரமான நிலையைக் கருதி, தனது கோபப் பெருக்கை அடக்கிக்கொண்டு புன்னகை செய்து, ” அம்மா! என்மேல் உங்களுக்கு எவ்வளவு கோபமிருந்தாலும் அதை அப்புறம் காட்டுங்கள்; சொல்வதை எல்லாம் அப்புறம் சொல்லுங்கள்; இப்போது உங்களுடைய தம்பியின் உடம்பு சரியான நிலைமையில்லை. சற்று நேரத்துக்குமுன் ஏதோ கடிதம் வந்ததே; அதைப் பார்த்த முதல் அவர் பெருத்த கோபத்தோடு படுத்துக் கொண்டிருக்கிறார். என்னோடும்கூட அவர் சரியாகப் பேசவில்லை. நீங்கள் அவரிடம் இப்போது போனால் பெருத்த கலகம் உண்டாகுமென்று தோன்றுகிறது. உங்களுக்கு இஷ்டமானால் போய்ப்பாருங்கள். ஏன் வந்தோமென்று பிறகு நீங்களே விசனப்படுவீர்கள்; எனக்கென்ன அதிகாரமிருக்கிறது. நான் கூலிக்காரி; உங்களுடைய நன்மைக்காக வேலை செய்கிறவள். உங்கள் மனம் போலச் செய்யுங்கள்” என்று பணிவாகக் கூறினாள்.
அதைக் கேட்ட பெருந்தேவியம்மாள், “அந்தக் கடிதம் யாரிடத்திலிருந்து வந்தது? இப்படி அவன் கோபிக்கும்படி அதில் என்ன சங்கதி இருந்தது?” என்றாள்.
அதைக்கேட்ட பணிமகள், “விவரமொன்றும் எனக்குத் தெரியாது. காணாமல்போன சம்சாரத்தைப்பற்றிய சங்கதியாயிருக்கலாமென்று தோன்றுகிறது. நீங்களே நேரில் போய்க் கேட்டுப்பாருங்கள்” என்றாள்.
அதைக் கேட்ட பெருந்தேவியம்மாள் மிகுந்த திகைப்பும் அச்சமு மடைந்து, ஒருக்கால் இரகசியம் வெளியா யிருக்குமோ வென்று சந்தேகித்தாள்; அவளது உடம்பு கிடுகிடென்று தானாக நடுங்கியது; என்றாலும், இரகசியம் ஒருக்காலும் வெளிவரா தென்று அவள் நினைத்து அடுத்த நிமிஷம் துணிவடைந்து, சிறிது யோசனை செய்தாள். பணிமகள் சொன்னபடி சிறிது நேரத்துக்குப் பிறகு வருவதே நல்லதென்று நினைத்து கதவைச் சாத்திக்கொண்டு கோமளத்தோடு வெளியிற் சென்றாள். பணிப்பெண் உடனே திரும்பி வராகசாமி இருந்த இடத்தை அடைந்தாள். அப்போது அவன் திரும்பவும் கண்களை மூடிக் கொண்டு துவண்டு கிடந்தான். தாயை நினைத்து உயிரழிந்து சோர்ந்து கிடக்கும் கன்றைப்போல ஏங்கி யிருந்த வராகசாமியின் முகத்தை, அந்த மடந்தை இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டே நெருங்கி நின்றாள். அவ்வாறு நெடுநேரம் கழிய அவன் விழித்துக் கொண்டான். அவனது முகம் விகாரப் பட்டுத் தோன்றி அவனது மனதிற்குள் நடக்கும் பெரும் போரைத் தெள்ளிதில் காட்டியது; களைப்பும், துக்கமும், ஆத்திரமும் வந்து மூடிக்கொண்ட அவன் முதல் நாளே உணவருந்தினவனாதலின் பெண்மணி அவனை நோக்கி, “நிரம்பவும் களைப்பாக இருக்கிறதே! சாப்பிடுகிறீர்களா?” என்று மெல்லக் கேட்டாள். அவன் மிகவும் வெறுப்பாக,”ஆம்; பெண்டாட்டியைத் தின்ற சண்டாளனுக்குச் சாப்பாடு வேண்டுமா? நான் இனிமேல் இந்த உடம்பை வளர்த்து உலகில் வாழவும் வேண்டுமா? எனக்கு ஆகாரமும் வேண்டாம்; மருந்தும் வேண்டாம்; பேசாமல் விட்டு விடுங்கள். உங்களுடைய வைத்திய சாலையில் விஷமிருந்தால் சிறிதளவு வாங்கிக் கொடுப்பாயானால் ஒரு நிமிஷத்தில் என்னுடைய துன்பங்களையும், உங்களுடைய சிரமத்தையும், என்னுடைய உயிரையும் ஒழித்து விடுகிறேன்” என்று மிகுந்த ஏக்கத்தோடு கூறினான். அதைக் கேட்ட பெண்ணரசி திரும்பவும் அவனைத் தேற்ற ஆரம்பித்தாள், “நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறதே! உங்களுடைய ஜாதியில் புருஷன் இறந்தால், பெண்கள் மறு கலியாணம் செய்து கொள்ள முடியாது. ஆகையால் அவர்கள் விசனப்படுவது நியாயமே. நீங்களோ புருஷ சிங்கம். ஆயிரம் மனையாட்டிகள் வேண்டுமானாலும் கலியாணம் செய்து கொள்ளலாம். உங்களுடைய சம்சாரம் மிகவும் நற்குணமுள்ளவள் என்பது, நீங்கள் சொல்லுவதிலிருந்து நன்றாக வெளியாகிறது. அவள் அநியாயமாக வஞ்சிக்கப்பட்டு, அதனால் தற்கொலை செய்து கொண்டது சகிக்க முடியாத துக்க சங்கதிதான். அதைப்பற்றி சந்தேகமில்லை. ஆனால், நீங்கள் அதன் பொருட்டு, உயிரை விட்டுவிடுவதாகச் சொல்லுவது சரியல்ல. உலகத்தில் அவள் ஒருத்திதானா நற்குண முடையவள்? அழகுடையவள்? ஈசுவர ருஷ்டியில் எவ்வளவோ அற்புதமான அமைப்புகள் இருக்கின்றன. ஒருத்தியை ஒருத்தி மீறிய அழகும், நற்குணமும், வாய்ந்த ஸ்திரீ ரத்னங்கள் கோடாநு கோடியாக உலகில் நிறைந்திருக்கின்றனர். மேனகாவோடு சுகித்திருக்க இவ்வளவு தான் கொடுத்துவைத்த தென்று நீங்கள் மனதைத் தேற்றிக் கொண்டு, சிறந்தவளாகப் பார்த்து இன்னொரு பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டு, சந்தோஷமாக வாழ்வதே சரியான காரியம். உலகத்தில் சாவும் வாழ்வும் ஒவ்வொரு நாளும் ஏற்படும் விஷயம்; அதை மகா கொடிய ஆபத்தைப் போலவும்,எங்கும் நடக்காத அசம்பாவிதமான தீங்கைப் போலவும் மதித்து அதற்காக நாமும் உயிரை விடுவது உலக வழக்கத்தில் சேர்ந்ததல்ல. இந்த விஷயத்தில் உங்களுடைய முக்கியமான சந்தேகம் நிவர்த்தியாகி விட்டது. அவள் மனதார தானே வீட்டை விட்டுப் போகவுமில்லை; அவளுடைய கற்பும் கெடவில்லை. அவ்வளவோடு நீங்கள் திருப்தி அடையுங்கள்; நாளைக்கு நிச்சயதாம்பூலம் மாற்றப்போகிறார்கள். சம்பந்தி, புதிய பெண் முதலியோர் வந்திருக்கிறார்கள். உங்களுடைய சம்சாரத்தின் முடிவு இதற்கு முன் தெரியாதிருந்தமையால், கலியாணத்தைத் தடுக்க நினைத்தீர்கள். இப்போதோ மேனகா இறந்து போய்விட்டாள். இனி நீங்கள் எப்படியும் வேறு கலியாணம் செய்து கொண்டே தீரவேண்டும். இவர்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்கள். இதை நீங்கள ஏன் கெடுக்க வேண்டும்? கலியாணத்தை முடித்துக் கொள்ளுங்கள். இந்த முகூர்த்தத்தில் அதை நடத்த, உங்களுடைய தேகஸ்திதி டங்கொடுக்காவிட்டால், இன்னும் சில நாட்களுக்குப் பிறகாகிலும், இந்தப் பெண்ணையே கட்டிக் கொள்ளுங்கள்; இந்தப் பெண்ணும் எல்லா விஷயங்களிலும் தகுந்தவளாகவே ருப்பாள். உங்களுடைய சகோதரிமார்கள் நன்றாகப் பார்த்துத்தான் பொறுக்கி யிருப்பார்கள். அவள் லக்ஷப் பிரபுவின் மகளாம். அவளுடைய சொத்து முழுவதும் உங்களுக்கே வரப்போகிறதாம். கலியாணம் செய்துகொண்டு பங்களாவில் சுகமாக இருந்து இன்பம் அனுபவியுங்கள். நீங்கள் இப்படி அபரிமிதமாகத் துயரப்படுவதற்குக் கொஞ்சமும் நியாயம் இல்லை” என்றாள்.
அவள் அவ்வாறு அவனிடம் அந்தரங்கமான அபிமானத்தோடு உருக்கமாகப் பேசினாளெனினும் அவளது சொற்கள், எரியும் நெருப்பில் எண்ணெயை வார்ப்பதைப் போல, அவனது ஆத்திரத்தையும் விசனத்தையும் பெருக்கின என்றாலும், தன்மீது ஆழ்ந்த பிரியத்தைக் கொண்டவளாய், பிரதிபலனைக் கருதாமல் ஓயாக் கவலைக்கொண்டு தனது உயிரைக் காப்பாற்றிவரும் அந்த உத்தமியிடத்தில் சிறிதும் கடுமையாக மொழிய மனமற்றவனாய் அவன் சிறிது தயங்கி ஒரு நிமிஷம் மௌனமா யிருந்த பின், “எத்தனை லட்ச ரூபாய் வந்தாலும், எந்தப் பங்களா வந்தாலும், தெய்வ ரம்பையே எனக்குப் பெண்டாட்டியாக வர இணங்கினாலும், என் மனம் மாறி அவற்றில் விருப்பங் கொள்ளுமா? பதிவிரதா சிரோ மணியான என் மேனகாவைக்கண்ட கண்கள் இனி இன்னொரு பெண்ணைக் காணுமா? என் உயிருக்குயிரான அந்த அருங்குண உத்தமியைத் தொட்டணைத்த கைகள் இன்னொரு ஸ்திரீயைத் தீண்டுமோ? வேறு கலியாணம் என்ற சங்கதியையே, தயவு செய்து என்னிடம் பேச வேண்டாம்; இத்தனை நாட்கள் நீ இரவு பகலாய் ஒரு நிமிஷமும் என்னை விட்டகலாமல் என்னோடிருந்து நொடிக்கொருதரம் எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்து உதவின தெய்வமாகிய உன்னுடைய மனம் புண்ணாகும்படி நான் பேசுவது கூடாது. எவ்வளவோ பாடுபட்டு நீ காப்பாற்றிய உயிரை நான் ஒரு நிமிஷத்தில் விட்டுவிட நினைப்பது உன் மனசுக்குப் பெருத்த துன்பத்தைச் செய்யுமென்பது நிச்சயம். நான் இனிமேல் சுகப்படு வேனென்று நினைத்து நீ என்னைக் காப்பாற்றி விட்டாய். என் மேனகாவை இழந்த பிறகு நான் இனி ஆயுட் காலம் முழுதும் ஓயா வேதனைக்கே ஆளாயிருப்பேன். ஆகையால், அப்படி வேதனைப் படுவதைவிட, உயிரை விடுவதே மேலானது. நான் இதுவரையில் இந்த உலகத்திலுள்ள பெண்களில் மேனகா ஒருத்தி யிடத்திலேயே ஆசை வைத்தேன்; வேறு ஸ்திரீகளையே நான் மனதாலும் நினைத்ததில்லை. அவள் தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக்கொள்ள எப்படி உயிரை விட்டாளோ அம்மாதிரியே, நான் அவளை இழந்ததற்காக உயிரை விடவேண்டுமல்லவா? என்மேல் அவள் வைத்த பிரியத்துக்கு இந்த உலகமும் ஈடாகுமா? அவள் எனக்குத் தெய்வமாக வன்றோ இருந்தாள். அவளைப்போல என்மேல் யாராகிலும் பிரியம் வைப்பார்களா? ஒரு நாளுமில்லை” என்றான். அதைக் கேட்ட பணிமகள் புன்னகை செய்து, “அப்படியானால், நான் உங்கள் மேல் ஆழ்ந்த பிரியம் வைத்திருக்கிறேனென்றும், என்னைவிட்டு ஒரு நிமிஷங்கூடப் பிரிந்திருக்க உங்களால் முடியவில்லை யென்றும் இதுவரையில் நீங்கள் சொல்லிக்கொண்டு வந்ததெல்லாம் பொய்தானே? என்மேல் அவ்வளவு வாஞ்சை வைத்தவர்களானால், என்னை விட்டு இறந்துபோக நினைப்பீர்களா? இப்படிச் செய்வதுதான் நியாயமா? நானும் இத்தனை நாட்கள் உங்களோடு இருந்து பழகினேன். உங்களுடைய மேன்மையான குணத்தையும், கபடமற்ற அன்பையும் காணக்காண, என்னுடைய மனதிலும் ஒரு வகையான வாத்சல்யம் உண்டாகிவிட்டது. உங்களுடைய நோய் நீங்கின பிறகு உங்களை விட்டு எப்படிப் பிரிந்து போகிற தென்னும் கவலையும் விசனமும் சென்ற சில நாட்களாக என்னை வதைத்துக் கொண்டிருக்கின்றன. பல வருஷங்களுக்கு முன் விட்டுப் பிரிந்த நண்பர் ஒருவரை யொருவர் கண்டு கூடியதைப்போல, நாமிருவரும் ஒருவரை யொருவர் கண்ட நேரம் முதல், இருவர் மனதிலும் ஆசையும், அன்பும்,பற்றும் சுரந்து கொண்டே ருக்கின்றன. சென்ற இரண்டொரு நாட்களாக என் மனதின் நிலைமையை நான் ஊன்றிப் பார்த்தேன். அது விபரீதமாகத் தோன்றுகிறது. அதை வெளியிட நான் இதுவரையில் வெட்கப்பட்டுக்கொண்டிருந்தேன். இப்போது உங்களுடைய சம்சாரம் இறந்து போய்விட்டாள் என்ற செய்தியை அறிந்த பிறகு என்னுடைய மனதை வெளியிடத் துணிவு கொண்டேன். உத்தரவானால் சொல்லுகிறேன்” என்று மகிழ்ச்சி தவழ்ந்த முகத்தோடு விநயமாகக் கூறினாள். அதைக் கேட்ட வராகசாமி முற்றிலும் திகைப்படைந்தவனாய்ச் சிறிது மயங்கி, “உன் மனதை வெளியிடு” என்றான். அதைக்கேட்டு வெள்ளை மடமங்கை மகிழ்வோடு அவனது முகத்தை நோக்கி கேட்ட வண்ணம், “என் மனதை நீங்கள் இன்னமும் அறிந்துகொள்ள வில்லையா? அதை என் வாயாலேயே வெளியிடவும் வேண்டுமா? நான் கேட்கப்போவதை நீங்களே சொல்லிவிட்டீர்களே! மேனகாவுக்குப் பிறகு என் மேலேதான் நீங்கள் பிரியம் வைத்ததாகவும், என்னை விட்டுப் பிரிய சகிக்க வில்லை யென்றும் சொன்னீர்களே! அப்படி யிருக்க, அவளுடைய ஸ்தானத்தில் என்னை ஏற்றுக்கொள்ளும்படி நான் வாய்விட்டுக் கேட்கவும் வேண்டுமா? அந்தப் பாக்கியத்தைப் பெறுவதற்கு என்னைக் காட்டிலும் உயர்வானவள் எவளிருக்கப் போகிறாள்! என்னைக் காட்டிலும் அதிகமாக உங்களைக் காதலிப்பவள் மேனகாவுக்குப் பிறகு வேறு ஒருத்தியும் இருக்கமாட்டாளென்பது நிச்சயம். உங்களுடைய ஆபத்துக் காலத்தில் என்னைத் துணையாக வைத்துக் கொள்ள ணங்கின நீங்கள், உங்களுடைய சந்தோஷ காலத்திலும் என்னைத் துணையாக ஏற்றுக்கொள்வதே நியாயமல்லவா?” என்றாள்.
எதிர்பாராத அவளது சொல்லைக் கேட்ட வராகசாமியின் மனம் குழம்பியது; அவன் பெரிதும் வியப்படைந்தவனாய் தனது செவிகள் கேட்டது உண்மைதானோ வென்று சந்தேக மடைந்தான்; ஒருகால் அவள் வேசையோ என்றும், தான் அவளை உத்தமியென்று நினைத்தது தவறோ என்றும் நினைத்தான். ஒரு வெள்ளைக்காரி இந்திய ஜாதியனைக் கலியாணம் செய்து கொள்ள எளிதில் விரும்ப மாட்டாள் ஆகையால், அவள் திருட்டு நட்புக்கு ஆசைப்படுகிறா ளென்றும், அவள் ஒரு வேசையென்றும், அவன் அவளிடம் கொண்ட அன்பினால் அதை மறைத்து, “நீ கூட என்னைப் புரளி செய்ய ஆரம்பித்து விட்டாயா? என்னுடைய உயிர்போகும் நிலைமையில் காப்பாற்றிய மகா பேருபகாரியும் உத்தமியாகிய நீயே என்னிடம் பரிகாசமாகப் பேசி என் மனதை வருத்த நினைத்தால், நிச்சயமாக இது எனக்குப் பொல்லாத காலமென்பதற்குத் தடையே இல்லை; இதைவிடக் கெட்ட காலம் எனக்கு இனி நேரப் போகிறதே இல்லை” என்று மிகவும் வருந்திக் கூறினான்.
அதைக் கேட்ட அந்தப் பூங்கொடி தனது ஸாகஸங்களை யெல்லாம் உபயோகித்து, “நான் புரளியாகச் சொல்லு வதாகவா நினைத்து விட்டீர்கள்! அப்படி நினைக்க வேண்டாம், நான் சொல்வது சத்தியமான விஷயம்; நான் பிறந்த முதல் இதுவரையில் உங்கள் ஒருவரைத்தான் காதலித்தேன். எத்தனையோ துரை மக்கள் என்னை மணக்க விரும்பினார் களானாலும், நான் அவர்களை மனதிலும் நினைக்கவில்லை. உங்கள் மேலேதான் என் முழுக் காதலும் ஏற்பட்டு விட்டது. ஆ னால், வெள்ளைக்காரியாகிய என்னை எப்படி நீங்கள் மணப்பதென்று யோசிக்கலாம். அந்த ஆட்சேபத்தை விலக்குவது அரிதல்ல. என்னுடைய தந்தை பெருத்த உத்தியோகத்தில் இருக்கிறார். நான் அவருக்கு ஒரே பெண். அவருக்கு லட்ச லட்சமாகப் பொருளிருக்கிறது; அவ்வளவு செல்வமும் உங்களுக்கே வந்துவிடும். அவர் சிபார்சு செய்து உங்களுக்கு ஜட்ஜி உத்தியோகம் செய்துவைப்பார். உங்கள் விஷயத்தில் பெருத்த வஞ்சகம் செய்த சகோதரிகளின் முகத்தில் இனி விழிக்கமாட்டேனென்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். அவர்களைத் தவிர உங்களுக்கு வேறு உறவினர்கள் இல்லையென்றும் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் உடனே கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து கொள்ளுங்கள்; உடனே நான் உங்களை மணந்து கொள்கிறேன்; உங்களை நான் இந்திர போகத்தில் அமர்த்துகிறேன்; மனிதருக்கு வேறு என்ன வேண்டும்? பெருத்த செல்வம், உன்னதமான உத்தியோகம், இருப்பதற்கு இரமணீயமான மாளிகை, இணைபிரியாதிருந்து சுவர்க்கபோக மளிப்பதற்கு அந்தரங்கமான வாஞ்சையுள்ள காதலி; இவற்றைத் தவிர, வேறு எவ்விதமான சுகத்தை நீங்கள் பெறப்போகிறீர்கள்? என்னை மணப்பதால் இத்தனையும் ஒரு நொடியில் உங்களுக்குச் சித்திக்கும். ஏராளமான செல்வத்துடன் நாம் இரதியும் மன்மதனும்போல சகலவிதமான செல்வ போகங்களுடன் காலங் கழிக்கலாம். அப்படியே ஆகட்டுமென்று ஒரு வார்த்தை சொல்லி அந்த ஒப்பந்தம் முடிவான தென்பதை, ஒரு முத்தத்தினால் முத்திரை வைத்து உறுதிப் படுத்துங்கள்” என்று கூறி நாணிக் கீழே குனிந்தாள். அப்போது அந்தப் பைங்கிளியின் அழகு முன்னிலும் ஆயிரமடங்கு அதிகரித்துத் தோன்றியது. அவளது முகத்தில் யௌவன காலத்தின் களை ஜ்வலித்தது. வராகசாமியின் மனம் தத்தளித்தது. அவளது வசீகரமான இனிய சொற்களால் முற்றிலும் கவரப்பட்ட வராகசாமி, என்ன மறுமொழி சொல்வ தென்பதை அறியாமல் சிறிது நேரம் மௌனம் சாதித்தான்; திரும்பவும் அந்தக் கிள்ளை மொழியாள் அவனை நோக்கி, “தாங்களுக்கு என்மேல் கோபம் போலிருக்கிறது? ஆசை வெட்கமறியாது என்பார்கள். அதைப்போலத்தான் துணிந்து என் மனதை வெளியிட்டு விட்டேன். என்னை ஆக்குவதும் அழிப்பதும் உங்கள் கையில் இருக்கிறது. நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளா விட்டால், நான் உங்களுடைய காலடியிலேயே உயிரை விடுவேனேயன்றி உங்களை விட்டு ஒரு நிமிஷமும் பிரிந்து உயிர் வாழமாட்டேன்” என்றாள். அதைக் கேட்ட வராகசாமியின் மனம் பதறியது; உரை தடுமாறியது; கண்களில் கண்ணீர் துளித்தது. “பெண்மணி! என் மனம் படும் பாட்டை நான் என்ன வென்று சொல்வேன்! ஆகா! அதிர்ஷ்டஹீனனாகிய என்மேல் வாஞ்சையை வைத்ததனால், மேனகா இறந்தது போதாதா! என் விஷயத்தில் அந்தரங்கமான அன்பைச் சொரிந்து எனக்கு அமுத சஞ்சீவி போல அமைந்த பேருபகாரியான நீயும் என் பொருட்டு உயிரை விட வேண்டுமா? இதுவும் ஈசுவரனுடைய சோதனை போலிருக்கிறது. எனக்கு எவ்வளவோ அருமையான மனைவி வந்து வாய்த்தாள். அவளை வைத்துக் கொண்டு சுகமாக வாழ நான் கொடுத்து வைக்க வில்லை. அதன் பயனாக நான் எத்தனையோ வேதனைகளை அடைந்து இன்னமும் தவிக்கிறேன். என்னால் அவளுக்கும் சகிக்க முடியாத இடர்களெல்லாம் வந்தன. கடைசியில் அவள் தன்னுடைய உயிரையே என் பொருட்டு தத்தம் செய்து விட்டாள். என் உயிர்போனாலன்றி இந்தப் பெருத்த விசனம் என் மனதை விட்டு அகலுமா? அருமையான மனைவியை இழந்த துக்கமும், சகோதரிகளான துஷ்ட முண்டைகள் எனக்குச் சகோதரி மார்களாக வந்து வாய்த்த துக்கமும் என் மனதை வாளைப் போல அறுக்க, நான் இரத்தக் கண்ணீர் விடும் சமயத்தில், எனக்கு வேறு கலியாணம் வேண்டுமா? இனி என் ஆயுட் காலத்தில் எந்த நிமிஷத்திலாகிலும் என் மனம் சந்தோஷம் என்பதை அறியுமா? நீயோ மகா பாக்கிய சாலியைப் போலத் தோன்றுகிறாய். உன்னுடைய மேன்மைக்குத் தகுந்தபடி, ஒருபோதும் துன்பத்தையே அடையாதவனும் அதிர்ஷ்டசாலியுமான நல்ல புருஷனை நீ அடைந்து சம்பூரண மான சுகத்தையடைய வேண்டும்; அதுவே என்னுடைய பிரார்த்தனை. நான் உன்மேல் கொண்டது, ஒரு குழந்தை தாயினிடம் வைக்கும் வாஞ்சையேயன்றி வேறுவிதமான ஆசையை நான் உன் விஷயத்தில் கொள்ளவே இல்லை. என்னுடைய நிலைமை முறிந்துபோன பாலின் நிலைமையைப் போலவிருக்கிறது. இனி நான் ஒரு நாளும் சுகப்படப்போகிறதில்லை. என்னைக் குபேர சம்பத்தில் கொண்டுபோய் வைத்தாலும், என் மனம் சந்தோஷப்படப் போகிறதில்லை. இத்தனை நாழிகை மேல் உலகத்தில் தெய்வமாக விளங்கும் என்னுடைய மேனகாவே திரும்பி பூலோகத்துக்கு வந்து என் மனதைத் தேற்றினாலன்றி இந்த விசனம் மாறக்கூடியதல்ல. தயவு செய்து கலியாண விஷயத்தைப் பற்றி இப்போது பேசவேண்டாம். என் மனம் பதறுகிறது என்று கூறி அவளிடம் நயந்து வேண்டினான்.
அவனது அப்போதைய நிலைமை கல்லையும் கரைக்கத் தக்கதாகிய மிக்க பரிதாபகரமாக இருந்தது. அவனது உருக்கமான சொற்களைக் கேட்ட அந்த மடந்தை, “ஆகா! மேனகாவின் பாக்கியமே பாக்கியம்! இவ்வளவு உறுதியும், அருமையான குணமும் வாய்ந்த ஏகபத்தினி விரதரான உங்களைப் புருஷனாக அடைந்த மேனகாவுக்கு அந்த ஈசுவரனும் நிகரில்லை; சுவர்க்கமும் நிகரில்லை. அவளுக்கு இதைப் பார்க்கிலும் பிரம்மாநந்தம் வேறுண்டோ! நீங்கள் சொல்வதெல்லம் சரியான நியாயந்தான். அவள் இப்போது உயிரோடிருந்தால், அவள் மேல் எவ்விதமான தோஷமும் கற்பியாமலும், அவளிடம் கொஞ்சமும் அருவருப் பில்லாமலும் அவளைச் சம்சாரமாக ஒப்புக் கொள்வீர்களா? அல்லது, இராமன் சீதையை நெருப்பில் விழுந்து விட்டு வரச் சொன்னதைப்போல நீங்களும் ஏதாவது ஆட்சேபனை சொல்லுவீர்களா?” என்றாள்.
அதைக் கேட்ட வராகசாமி; அடாடா! அவளை உயிரோடு காணும் அதிர்ஷ்டம் இனிமேல் எனக்கு உண்டாகுமா? அவளைத் தான் உயிரோடு அள்ளிக் கொடுத்து விட்டேனே! அவளை அழைத்துக் கொள்வேனா என்ற சந்தேகங்கூடவா கொள்ள வேண்டும்! அவள் மாத்திரம் திரும்பி வருவாளானால், அவளை என் குல தெய்வமாக வல்லவா வைத்து வணங்குவேன். மாசற்ற பத்தரைமாற்றுத் தங்கமாகிய என்னுடைய மேனகாவை இந்த ஜென்மத்தில் நான் இனிமேல் காணப்போகிறேனா!” என்று கரைகடந்த ஏக்கமும் விசனமும் அடைந்தவனாய் வருந்திக் கூறினான்; அதைக் கேட்ட அந்த மடமங்கை மிகவும் புன்னகைக் கொண்டு, “அப்படியானால் மேனகாவை ஏற்றுக் கொள்ளுங்கள். அவள் இந்த வெள்ளைக் காரியின் உடைக்குள் மறைந்து கொண்டிருக்கிறாள். அவள் இதுவரையில் எமலோகத்தில் இருந்தாள்; இப்போது சுவர்க்கலோகத்துக்கு வந்து விட்டாள்” என்று கூறிய வண்ணம், அதுவரையில் கழற்றாத வெள்ளைக்காரத் தொப்பியைக் கழற்றிக் கீழே வைத்துவிட்டு ஆசையோடு அவனுக்கருகில் நெருங்கினாள். அவளது சொல்லைக் கேட்ட வராகசாமி திக்பிரமை கொண்டவனாய் அவளது முகத்தை உற்று நோக்கினான். அவளது சிரத்தின் கேசம், வெள்ளைக் காரியின் கேசத்தைப்போலப் பலவகையாக வரையப் பட்டிருந்தது. முகத்தில் வெள்ளை மா பூசப்பட்டிருந்தது. பல நாட்களாக அவளது குரலைக் கேட்கும் போதெல்லாம் அது அதற்குமுன் பழக்கமான குரலென்று அவனது மனதில் ஓர் எண்ணம் உதித்துக் கொண்டே இருந்தது; அவளது குரல் மேனகாவின் குரலைப் போல இருப்பதாக ஒவ்வொரு சமயத்தில் அவனது மனதில் பட்டதுண்டு. இப்போது தானே மேனகா வென்று அவள் சொன்னவுடன் அவளது குரலே அதைச் சந்தேகமற நிச்சயப் படுத்தியது; பலவகையான தலைமயிர்ப் பின்னலுக்குள்ளும், மேலே பூசப்பெற்ற மாவிற்குள்ளும் மறைந்து வேறுபட்டுத் தோன்றிய தனது மனைவியின் முகத்தை அவன் உடனே கண்டு கொண்டான். அவனது அப்போதைய நிலைமையை வருணிக்க யாராலாகும்! உச்சி முதல் உள்ளங்கால் வரையில் உரோமம் சிலிர்த்தது; ஆநந்தம் பரவியது; அவன் தன்னை மறந்து துள்ளிப் பாய்ந்து அவளை இழுத்துக் கட்டிலில் உட்காரவைத்து ஆவலோடு கட்டியணைத்து முத்தமிட்டு, “மேனகா! என் கண்ணே! என்னால் நீ எவ்வளவு கஷ்டத்துக்கு ஆளானாய்! ஆகா! என்னகாலம்! என்ன கோலம்!” என்று கூறிக் கண்ணீரைச் சொரிய, அவள் கரைகடந்த இன்பத்திலும் துன்பத்திலும் பொங்கிப் பொறுமி விம்மி விம்மி யழ, இருவரும் தம்மை மறந்தவராய் வாய்திறந்து பேசமாட்டாமல் ஊமைகளைப் போல அந்த ஆலிங்கனத்திலேயே பிணைக்கப்பட்டு அசை வற்று ஆநந்தவாரிதியில் ஆழ்ந்துவிட்டனர்.
“மருங்கில்லா மங்கையும் வசையில் ஐயனும்
ஒருங்கிய இரண்டுடற் குயிரொன் றாயினர்;
கருங்கடற் பள்ளியிற் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினாற் பேசலும் வேண்டுமோ?”
என்றபடி அவர்களிருவரும் பேசலும் வேண்டுமோ? ருவர் மனதிலும் கரைகடந்து பொங்கி வழிந்த உவகை வெள்ளத்தில் புதைபட்டு லயித்து அரை நாழிகை வரையில் அவர்கள் அப்படியே கல்லாய்ச் சமைந்திருந்தனர்.
அந்தச் சமயத்தில், அவர்களிருந்த அறைக்கு வெளியில் ஏதோ பெரிய கூக்குரல் உண்டாயிற்று. பெருந்தேவியம்மாள் கோபமாக யாருடனோ உரக்கப் பேசி சண்டை யிடுவதாய்த் தோன்றியது; வரவர அந்த இரைச்சல் அதிகரித்தது. அவர்களிருந்த அறையின் வாசற்படிக்கருகில் நெருங்கி வருவதாகத் தோன்றியது; அந்தக் கூக்குரலில் கனகம்மாளின் குரலும் உண்டாயிற்று.
அப்போது பெருந்தேவியம்மாள், ‘அடி கனகி! நீ மானமுள்ளவளா யிருந்தால், திரும்பவும் என்னுடைய வீட்டுக்குள் அடி வைப்பாயா? என்னவோ செய்துவிடுவதாகப் பயமுறுத்திவிட்டுப் போனாயே? என்னடி செய்தாய்? கெட்ட கேட்டுக்குக் கொண்டைபோட்ட முண்டாசம்; உன்னுடைய பேத்திதான் நாடகக்காரப் பயலோடு ஓடிப்போய் விட்டாளே! அவளுக்கும் நாடகக்காரனுக்கும் குழந்தை பிறந்திருக்கிறதாம்; உன்னுடைய கொள்ளுப்பேரனுக்கு ஜாதகரணம் நாமகரணம் பண்ணிவைக்கப் போடி; இனிமேலே இங்கே உனக்கு என்ன வேலை? மாப்பிள்ளையை நீ பார்க்காவிட்டால், அவன் செத்துப் போய்விடமாட்டான்; போ வெளியில்; நாங்கள் நிச்சயதாம்பூலம் செய்யப் போகிறோம்;மொட்டை முண்டை யான நீ அபசகுனமாய்க் குறுக்கே வருகிறாயா? எடு துடைப்பக் கட்டையை” என்றாள்.
என்றாள். அதைக் கேட்ட கனகம்மாள் பொறுமையோடு, “பெருந்தேவியம்மா! என்னை எவ்வளவு வேண்டுமானாலும் வைதுகொள். பெண்ணைக் கொடுத்ததற் காக இந்த மரியாதைகளை நாங்கள் அடைய வேண்டியது அவசியந்தான். கடைசியாக எங்களுடைய மாப்பிள்ளையை ஒருதரம் பார்த்துவிட்டுப் போகிறோம். அவர் செத்துப் பிழைத்தாரென்று நாங்கள் வைத்தியசாலையில் கேள்விப்பட்டோம்! பார்த்துவிட்டுப் போக வேண்டு மென்று வந்தோம்; பார்த்துவிட்டு உடனே போய்விடுகிறோம்” என்று நயமாக மறுமொழி கூறினாள்.
அதற்குள் சாமாவையர், “பெருந்தேவியம்மா! புதிய சம்பந்திகளுக்கெதிரில் சண்டை போடவேண்டாம்; இவர்கள், மாப்பிள்ளையைப் பார்த்துவிட்டுப் போகட்டுமே; அதனால் உனக்கு நஷ்டமென்ன?” என்றார்.
அதைக் கேட்ட பெருந்தேவி, “சரி; அப்படியானால் பார்த்து விட்டுப் போடி; இதோ இருக்கிறான். ஆனால் நீ அவனோடு பேச்சுக் கொடுப்பாயானால், பார்த்துக்கொள்; தலையைச் சிரைத்துக் கழுதை மேல் வைத்து வெளியில் ஓட்டிவிடுவேன்” என்று கூறியவண்ணம் வராகசாமி யிருந்த அறையின் கதவை படே ரென்று திறந்தாள்.
அப்போதே தமது உணர்வைப் பெற்ற வராகசாமியும் மேனகாவும் திடுக்கிட்டுத் தமது ஆலிங்கனத்தைத் தளர்த்தினர். உடனே மேனகா கட்டிலிலிருந்து விரைவில் எழுந்து தனது தொப்பியை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு, வெட்கமும், நாணமும் அடைந்தவளாய் ஒரு மூலையில் ஒதுங்கினாள். அறையின் வாசற்படியில் பெருந்தேவியம்மாள், கோமளம், சாமாவையர், கனகம்மாள், தங்கம்மாள், கிட்டன், வரதாச்சாரியார், இன்னம் அவரது பந்துக்களான ஏழெட்டு ஆண் பெண் பாலர் ஆகிய எல்லோரும் இருந்தனர். நோயாளியாயிருந்த வராகசாமியும், பணிப்பெண்ணான
{missing page 288}
அதிகாரம் 27 – கூ! கூ! திருடன்! திருடன்!
யினும், விபச்சாரத்தில் மாத்திரம் நாட்டமில்லாத சுத்தனென்பதை அவர்கள் சந்தேகமற உணர்ந்தவராதலின், அப்படிப் பட்ட நிர்ணயமுள்ள மனிதன் தனது தேகம் கேவலமான நிலைமையில் இருக்கும்போது வெள்ளைக்காரப் பெண்ணோடு சரச சல்லாபம் செய்துகொண்டிருப்பானோ வென்று அவர்கள் பெரிதும் திகைப்படைந்தனர்; பெருந் தேவியும், கோமளமும் வெள்ளைக்காரப் பெண்ணின் மீது கரைகடந்த ஆத்திர மடைந்து அவளைத் தண்டிக்கப்போனது நியாயமென்றே நினைத்து அவர்களும் ஆத்திரத்தோடு வாளா நின்றுகொண்டிருந்தனர். பெருத்த பேய்களைப்போல பணிமகளின் மீது பாய்ந்த சகோதரிகள் இருவரும் பேரிடி முழக்கம் செய்து அவளைத் தாறுமாறாக வைது வருத்த முயன்றனர். அவளது சிரசிலிருந்த தொப்பியை கோமளம் தட்டி விடவே, அது நெடுந்தூரத்திற் கப்பால் போய் விழுந்தது. பெருந்தேவியம்மாள் கையை ஓங்கி அந்தப் பெண்ணின் கன்னத்தில் இடித்துவிட்டு, மெல்லிய மஸ்லின் துணியால் அழகாகத் தைக்கப்பட்டிருந்த அவளது வெள்ளைக்கார உடையைக் கையால் பிடித்திழுத்து, அவளை உதைக்கத் காலைத் தூக்கினாள்.
அவ்வாறு அவள் செய்த கொடுமையைக் கண்ட வராகசாமி அடக்க இயலாத ஆத்திரமும் வீராவேசமுங் கொண்டு, “அடி கோமளம்! அவளிடம் போகாதேயுங்கள். அவளைத் தொட்டால் கையை வாங்கி விடுவேன்; போகவேண்டாம்; வாருங்கள் இப்படி” என்று ஓங்கி அதட்டிக் கூச்சலிட்டவனாய்த் தனது சயனத்தை விட்டு எழுந்திருக்க முயன்றான். ஆனால், அவனால் எழுந்திருக்கக் கூடவில்லை. சகோதரிகளோ அவனது சொல்லைக் காதில் வாங்காமல் பணிப்பெண்ணை மேன் மேலும் வருத்தியதைக் கண்ட வராகசாமியின் கோபமும் ஆவேசமும் ஒன்றுக்கு நூறாய்ப் பெருகின. அவன் தனது சகோதரிகளைத் தாறுமாறாக வையத் தொடங்கினான். “அடீ போக்கிரி முண்டைகளா! அவளைத் தொடவேண்டா மென்கிறேன்; அவளை அடிக்கிறீர்களா! இதோ உங்களுடைய மண்டையைப் பிளந்து விடுகிறேன். கொலை பாதகிகளா! அவளை யாரென்று நினைத்தீர்கள்? மேனகாவல்லவா அவள்; இனிமேல் அவளைத் தொட்டால், உங்களுடைய உயிரை வாங்கிவிடுவேன்” என்று பெருங்கூச்சலிட்டு அதட்டிக் கூறினான். அதற்குள் பணிமகளின் மேலிருந்த வெள்ளைக்கார உடைகளை யெல்லாம் சகோதரிகள் கிழித்தெறிந்து விட்டனர்.
அப்போது கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக, வெள்ளைக்கார உடைக்குள்ளிருந்து மேனகா வெளிப்பட்டாள். அவள் தனது அழகிய பட்டுப் புடவையை உட்புறத்தில் உடம்போடு உடம்பாக இறுக்கிக் கட்டிக்கொண்டிருந்த காட்சி; கண்கொள்ளாத அற்புதக் காட்சியாக இருந்தது. அவ்விரு சகோதரிகளால் மேனகா மிகவும் வருத்தப்பட்டபோது, அவளது முகத்திலிருந்து வியர்வை ஒழுகிய தாகையால், அது அவளது முகத்திலிருந்த வெள்ளை மாவை முற்றிலும் கலைத்து அலம்பிவிட்டது. தலையின் பின்னல்களைத் தவிர, மற்ற பாகங்களிலிருந்து, அவள் மேனகாதான் என்பது எல்லோர்க்கும் தத்ரூபமாக உடனே தெரிந்தது; அவ்வாறு வெள்ளைக் காரிக் குள்ளிருந்து மேனகா தோன்றியது பீதாம்பரய்யர் ஜாலத்தைப்போல விருந்தது. அவள் மேனகா வென்பது தெரிந்தவுடன், சகோதரிகள் அவளை விட்டு விட்டனர். மேனகாவோ, தான் அடிபடுவதைச் சிறிதும் பொருட் படுத்தாமல், தனது கணவன் கட்டிலை விட்டு எழுந்து வந்து கீழே வீழ்ந்து விடுவானோ வென்று பெரிதும் கவலையும் அச்சமுங்கொண்டு கட்டிலண்டை ஓடி வராகசாமியை அமர்த்தினாள். எதிர்பாராத அந்த மாறுதலைக் கண்ட சகோதரி களிருவரும் திகைத்து, திக்பிரமை கொண்டு ஒன்றும் தோன்றப் பெறாதவராய் பேச்சு மூச்சற்று ஒரு நிமிஷ நேரம் ஸ்தம்பித்து நின்றனர். மேனகாவைக் கண்ட கனகம்மாளோ கன்றைப் பிரிந்து கண்ட தாயைப்போல, “ஆ! மேனகா!” என்று வீரிட்டுக் கத்திக் கொண்டு அம்பு பாய்வதைப் போல ஒரே பாய்ச்சலில் பாய்ந்து மேனகாவைப் பிடித்து இறுகத் தழுவி யெடுத்தாள். தங்கம்மாள், இன்னமும் தளர்வடைந்த நிலைமையி லிருந்தாளே அவள் தன்னை முற்றிலும் மறந்து கனகம்மாளைத் தொடர்ந்தோடி மேனகா, கனகம்மாள் ஆகிய இருவரையும் ஒன்றாகச் சேர்த்து ஆவலோடு ஆலிங்கனம் செய்தவளாய்,” என் கண்ணே! உனக்கு என்னென்ன கஷ்டம் வந்ததம்மா!” என்று கூறி வாய்விட்டுக் கதறினாள். அவர்கள் மூவரும் அணைத்துக் கொண்டு அழுது ஆநந்தக் கண்ணீர் விடுத்துப் பாகாய் உருகிய காட்சி கல்லையும் கரையச் செய்யும் பரிதாபகரமான காட்சியாக இருந்தது. கனகம்மாளும், தங்கம்மாளும் குழந்தையை எடுப்பதைப்போல மாறி மாறி மேனகாவை எடுத்தணைத்து முத்தமிட்டு பிரலா பித்ததைக் கண்ட வராகசாமி விம்மி விம்மி யழுது தனது படுக்கையில் கிடந்து தத்தளித்தான்; அவனது மனதில் சகோதரிமாரின் மீது மிகுந்த கோபமும், ஆத்திரமும் பொங்கி யெழுந்தன; அவர்களது பெருத்த வஞ்சகத்தை அத்தனை மனிதருக்கும் முன்பாக வெளியிட்டு அவர்களை அவமானப்படுத்தி, தக்கவாறு தண்டிக்க வேண்டுமென்னும் எண்ணம் தோன்றி வதைத்தது.
திடீரென்று பெருத்த திகைப்படைந்த பெருந்தேவி ரண்டொரு நிமிஷத்தில் துணிவடைந்தாள். இரகசியம் முற்றிலும் வராகசாமிக்குத் தெரிந்துவிட்ட தென்பது அவளது மனதில் நிச்சயமாய்ப் பட்டதேனும் தான் துணிந்து வாயடி யடித்துத் தப்பித்துக் கொள்ள வேண்டுமென்று அவள் ஒருவாறு உறுதி செய்துகொண்டாள். தமக்கு விஷயம் ஒன்றுமே தெரியா தென்று சொல்லிவிடவும், மேனகா நாடகக்காரனோடு சென்றவளென்றே அழுத்தந்திருத்தமாகக் கூறவும் தீர்மானித்துக் கொண்டவளாய், அவள் மிகுந்த ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் காண்பித்து, “அடே வராகசாமி! என்ன காரியம் செய்தாய்! உன்னுடைய புத்தி இப்படிப் போகுமா! இவள் செய்த காரியத்தைப் பார்த்து ஊர் சிரிக்கிறதே! இந்தக் கூத்தாடிச்சியை நம்முடைய வீட்டில் சேர்க்கலாமா? நம்முடைய வீட்டில் இனிமேல் நாய்கூட ஜலபானம் செய்யாதே; முன்னால் இவர்களை யெல்லாம் வெளியில் போகச்சொல்; என்னுடைய பங்களாவில் இவர்கள் ஒரு நிமிஷமும் இருக்கக்கூடாது. போகச் சொல்” என்று பெருத்த கூச்சலிட்டு அதிகாரமாகக் கூறி வராகசாமியை அதட்டினாள். அதற்குமுன் அவன் தங்களது சொல்லை வேதவாக்கியமாக மதித்து அதன்படியே செய்து வந்ததைப் போல அப்போதும் அடங்கிப்போவானென்று பெருந்தேவியம்மாள் நினைத்தே அவ்வாறு கூறினாள். ஆனால், அந்த மருந்து இப்போது பலிக்காமல் போயிற்று. அவளது சொற்கள் எரியும் நெருப்பில் எண்ணெயை வார்ப்பதைப்போல அவனது கோபத்தைக் கிளப்பி விட்டன; அவன் கோபங்கொண்ட ஆண் சிங்கத்தைப் போலானான். அவனது தேகமும் சொற்களும் படபடத்துத் தோன்றின; அவன் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு ‘அடி துஷ்டை! வாயை மூடு!! இனிமேல் இவர்களைப் பற்றி அவமரியாதையாகப் பேசினால், நாக்கை யறுத்துவிடுவேன்; வீணாக என்னுடைய கோபத்தைக் கிளப்பிவிட்டு அவமானப் படாதே; நடந்த சங்கதி யெல்லாம் எனக்குத் தெரியும். என்னிடம் இனிமேல் வாலையாட்டாதே. என் முன்னால் நிற்காதே!போ வெளியில்; உன்னைப்பார்க்க கண் கூசுகிறது; துரோகி!” என்று உரக்கக் கூவினான்.
அதைக் கேட்ட பெருந்தேவியம்மாள் உடனே நரசிம்மாவ தாரமெடுத்தவளாய், “என்ன கொலை சங்கதியடா நீ தெரிந்து கொண்டாய்? நாடகக்காரப் பயலோடு கெட்டலைந்து விட்டு வந்த விபசாரி நாய்க்கு வேஷம்போட்டு என்னுடைய வீட்டுக்குள்ளே சேர்த்துக் கொண்டதுமன்றி, எங்களைத் தாறுமாறாகப் பேசி அதட்டுகிறாயா! என்னடா உன் புத்தி ப்படிக் கெட்டுப்போய்விட்டது. இவள் உன்னோடு கூட ருந்து மருந்துதான் போட்டுவிட்டாள். அதனாலே தான் நீ ப்படித் துணிந்து பேசுகிறாய்; தலைகால் தெரியாமல் ஆடுகிறாய்; மரியாதையாக இவர்கள் மூன்றுபேரையும் இந்தப் பங்களாவை விட்டுப் போகச் சொல்லுகிறாயா? இல்லாவிட்டால் நானே செருப்பாலடித்து ஓட்டட்டுமா? நம்முடைய குலமென்ன! கோத்திரமென்ன! நாடக்காரப் பயல் வீட்டில் பலநாள் இருந்து, சோறு தின்று, கட்டிப்புரண்டு விட்டு வந்திருக்கிறவளை மானமுள்ளவள் கையாலும் தொடுவானா? அநியாயமாய் ஜென்மத்தைக் கெடுத்துக் கொண்டாயேடா? போனது போகட்டும், உடனே இவர்களை வெளியில் போகச் சொல்; நீ பிராயச்சித்தம் செய்து கொண்டு விடலாம். இல்லாவிட்டால் புது சம்பந்திகள் பெண் கொடுக்க மாட்டார்கள்” என்று சடசடவென்று புளியம்பழங்களை உதிர்ப்பதைப் போலப் பேசி, கைகால்களை எல்லாம் நீட்டி நீட்டி நாடக மாடினாள்.
அதைக் கேட்ட வராகசாமிக்கு ரௌத்திராகாரமாகக் கோபம் பொங்கி யெழுந்தது. அவனது உடம்பு படபட வென்று துடித்தது. கண்களில் தீப்பொறி பறந்தது. அவன் மிகவும் மூர்க்கங் கொண்டவனாய் உடனே எழுந்து அக்காளது பற்களை உடைத்து விட வேண்டு மென்று நினைத்தான்; தனது கையிலிருந்த கடிதங்களை எடுத்துப் படித்து, இரகசியங்களை யெல்லாம் வெளியிட்டு அவளது இறுமாப்பை அடக்க எண்ணி அதைப் பிரித்தான். அந்தக் குறிப்பை நுட்பமாக உணர்ந்த மேனகா, கட்டிலுக்கருகில் அன்போடு நெருங்கி மற்றவர் செவிகளில் படாவிதமாக இரகசியமாகவும் வணக்கமாகவும் பேசக்தொடங்கி, “கோபம் வேண்டாம்; அக்காளுக்கு அவமானம் வந்தாலென்ன? நமக்கு அவமானம் வந்தாலென்ன? வேண்டாம் பொறுத்துக் கொள்ளுங்கள்.” மகா பாதகியான பெருந்தேவியின் விஷயத்தில் மேனகா அவ்வாறு பரிந்து பேசியது வராகசாமியின் மனதிற்கு அருவருப்பைத் தந்தது. அவன் அவளைப் பாராமல் அதிருப்தியாக இன்னொரு பக்கம் திரும்பினான். அப்போது மேனகா, வராகசாமியிடத்தில் தன்னைக்குறித்து ஏதோ கோள் சொல்லுகிறாளென்று நினைத்துக்கொண்ட பெருந்தேவியம்மாள் மிகுந்த கோபத்தோடு மேனகாவைப் பார்த்து, “குடியைக் கெடுத்த ராக்ஷசி! என்னடி அவனுடைய காதில் மந்திரம் ஓதுகிறாய்? சட்டைக்காரி வேஷமா போட்டுக் கொண்டு வந்தாய்! இந்த வேஷம் போட, நாடகக்காரப் பயலிடத்தில் கற்றுக் கொண்டாயா? நீ எல்லா வேஷமும் போடுவாய்! நல்ல மானமுள்ள குடும்பத்தில் பிறந்தவள் இந்த மாதிரி வேஷம் போட்டுக் கொள்ளுவாளா? அவனுடைய காதிலே என்னடி குசுகுசு மந்திரம் ஓதுகிறாய்? மானங்கெட்ட நாயே! போ வெளியிலே; என்னுடைய பங்களாவிலே ஏனடி வந்தாய்? ஜாதி கெட்ட பஜாரி! ; கறுத்த மூளி!” என்று மிகவும் இழிவாக அவளை வைது, தூரத்திலிருந்தபடி காலையும் கையையும் தூக்கி நீட்டி நீட்டி,உதைப்பதாகவும், அடிப்பதாகவும் காட்டினாள். கனகம்மாள் தங்கம்மாள் ஆகிய இருவரது தேகமும் துடிதுடித்தன; அவர்கள் அவமானத்தில் குன்றிப் போய் அசைவற்று நின்றனர். மேனகா, பெருந்தேவிக்குப் பரிந்து பேசியதற்குப் பதிலாக பெருந்தேவி அவளை வைததைக் காண, வராகசாமியின் மனம் கொதித்தெழுந்தது. அவனது கோபம் அப்போது உச்சி நிலையை அடைந்தது. தேகம் முற்றிலும் வியர்த்து, வெடவெடவென்று ஆடியது. அந்த நிலைமையில் அவன் அக்காளை உருட்டி உருட்டி விழித்துப் பார்த்தான்; தனது கையிலிருந்த கடிதத்தை நோக்கினான். அதைக் கண்ட மேனகா திரும்பவும் அவனுக்கருகில் நெருங்கி முன்னிலும் அதிக உருக்கமாக, “அக்காள் சொல்வதை யெல்லாம் சொல்லிக் கொள்ளட்டும். நீங்கள் பதிலே பேசவேண்டாம். இந்தச் சாமாவையருக்கும், புது சம்பந்தி முதலியோருக்கும் இனிமேல் இங்கே என்ன வேலை இருக்கிறது? போகச் சொல்லுங்கள். எல்லாவற்றையும் நாம் அப்புறம் கேட்டுக் கொள்ளலாம்” என்று கூறி இரகசியமாக நயந்து வேண்டினாள். அப்போது திகைப்படைந்து நடுநடுங்கி ஒரு பக்கத்தில் நின்ற சாமாவையரை வராகசாமி பார்த்து, ”அடே சாமா! இதுவரையில் உன்னை நான் மிகவும் யோக்கியனென்று நினைத்தேன். நீ செய்ததெல்லாம் வெளியாய்விட்டது. உன்னுடைய முகத்தைப் பார்க்கவும் கூசுகிறது. என் முன்னால் நிற்காதே, போய்விடு; இனிமேல் நீ எங்களுடைய வீட்டில் அடி வைக்கக்கூடாது. உன்னுடைய சிநேகிதர்களான சம்பந்தி களையும் அழைத்துக் கொண்டுபோ; நீங்கள் எனக்குக் கலியாணம் செய்து வைத்தது போதும்; நட வெளியில்” என்று கண்டிப்பாகவும் மிகுந்த அருவருப்போடும் கூறினான். அதைக் கேட்ட வரதாச்சாரியாரும் அவரது பந்துக்களும் வெட்கிக் கீழே குனிந்து கொண்டனர்; சாமாவையரோ சகிக்க இயலாத அவமானம் அடைந்தார். எனினும், ஏதோ விஷயத்தைச் சொல்லுவதற்காக தமது வாயைத் திறந்து கனைத்துக் கொண்டார். சாமாவையரையும் சம்பந்திகளையும் வெளியிற் போகும்படி வராகசாமி சொன்னதைக் கேட்ட பெருந்தேவியம்மாளது கோபம் முன்னிலும் பெருகியது.
அவள் சாமாவையரைப் பார்த்து அழுத்தமாக, “அடே சாமா! நீ போக வேண்டாம்; சம்பந்திகளும் போகவேண்டாம். என்னுடைய பங்களாவிலிருக்கும் உங்களை வெளியிலே போகச் சொல்ல யாருக்கு அதிகாரம் இருக்கிறது? வராகசாமிக் கென்ன தெரியும்? இந்த தேவடியாள் சிறுக்கியின் சொக்குப் பொடியில் மயங்கி இவன் இப்படி உளறுகிறான். இவன் சம்பந்தியைப் போகச்சொன்னால், அவரிடம் வாங்கின பதினாயிரம் ரூபாயை எந்தப் பாட்டன் கொடுப்பான்! இந்தக் கழுதை முண்டை நாடகக்காரனிடம் பணம் வாங்கிக்கொண்டு வந்து வராகசாமியிடம் கொடுத்திருக்கிறாளோ! அடே வராகசாமி! உனக்கென்ன பைத்தியமாடா! சூத்திரனோடு ஓடிப்போனவளை அழைத்துக் கொண்டுவந்து நடு வீட்டிலே வைத்துக் கொண்டாயே! என்ன மானக் கேடடா இது ? ஓடிவிடு வெளியில்; இல்லாவிட்டால், நானே கழுத்தைப் பிடித்து இதோ தள்ளப்போகிறேன்” என்று அதட்டிக் கூறினாள்.
அவளது சொற்கள் வராகசாமி பொறுக்கக்கூடிய வரம்பைக் கடந்தனவாய்ப் போயின. கோபத்தினால் சிவந்த அவனது முகம் படீரென்று வெடிக்கும்போலத் தோன்றியது. அவன் மேனகாவின் வேண்டுகோளையும் மறந்தவனாய், “அடி! அக்காள்! சே! உன்னை இனி அக்காள் என்று சொன்னால் என்னுடைய நாக்கு அழுகிப்போகும். – நீங்கள் செய்த காரியமெல்லாம் எவருக்கும் தெரியாதென்று நினைத்து நீ ஆட்டம் போடுகிறாயா? உன்னை அவமானப் படுத்த வேண்டாமென்று என்னிடம் கேட்டுக் கொள்ளும் மேனகாவை நீ தாறுமாறாகத் தூஷிக்கிறாயா? விஷப்பாம்பே! இதோ பார்த்தாயா! கோமளம் எழுதிய இந்தக் கடிதம் என்னிடம் வந்திருக்கிறது. அதில் நீயும், சாமாவும் கையெழுத்துப் போட்டிருக்கின்றீர்கள். இதோ படிக்கிறேன் கேள்” என்று கடிதத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். அதற்குள் மேனகா அவனது காலைப் பிடித்துக்கொண்டு, “படிக்கவேண்டாம்; படிக்கவேண்டாம்; க்ஷமித்துக்கொள்ளுங்கள்; அக்காள் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். எனக்கு அவமானம் வந்தால் அதைப் பற்றி விசனமில்லை. அக்காளுக்கு அவமானம் வரக்கூடாது” என்று கெஞ்சி மன்றாடினாள்.
தாம் நைனாமுகம்மது மரைக்காயனுக்கு எழுதிக் கொடுத்த கடிதம் வராகசாமியிடம் வந்துவிட்டது என்ற சங்கதியை உணர்ந்தவுடன் பெருந்தேவியம்மாள் இடி யோசையைக் கேட்ட நாகத்தைப்போல நடுநடுங்கிப் பின் வாங்கினாள். முகம் கீழே கவிழ்ந்தது; அவள் சுவரில் சாய்ந்தாள். கோமளம் சாமாவையர் ஆகிய இருவரும் முக்காற்பாகம் உயிரை இழந்தவர்களாகக் கீழே கவிழ்ந்த சிரத்தோடு அசைவற்று நின்றனர். தாங்கள் செய்ததை இனி மறைக்க முடியாதென்று கண்டவுடன், அம்மூவரும் குலை நடுக்கமும் பெருந்திகிலும் கொண்டு நெருப்பின் மீது நிற்போரைப் போல மிகவும் தத்தளித்து நின்றனர். அந்த ஒரு நொடியும் ஒருயுகத்தின் நரகவேதனையை அவர்களது மனதில் உண்டாக்கியது. பெருத்த ஜனக் கும்பலுக்குமுன் நிருவாணமாக நிறுத்தப்படுவோர் எவ்வாறு வெட்கத்தினால் வதைப் படுவார்களோ அவ்வாறு அம்மூவரும் பெருவேதனை அடைந்தனர். அவர்களது தேகங்கள் ஒரு சாணளவாய்க் குன்றின. என்ன செய்வதென்பதை அறிய மாட்டாமல் அவர்கள் அடங்கிப் போயினர். அப்போது அவ்விடத்தில் அற்பமான ஓசையுமின்றி நிசப்தமே குடிகொண்டிருந்தது.
அதே நிலைமையில் அவர்களிருந்த அறைக்கு வெளியில் யாரோ மனிதர் வந்த காலடியோசை மிகுதியா யுண்டாயிற்று; அடுத்த நொடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சமயசஞ்சீவி ஐயரும், போலீஸ் ஜெவான்கள் நால்வரும் போலீஸ் உடையில் பிரசன்ன மாயினர். சமய சஞ்சீவி ஐயர் ஒன்றையும் அறியாத பரம சாதுவைப்போல வராகசாமிக் கெதிரில் வந்து விறைப்பாக நின்று சலாம் செய்தார். அவ்வாறு செந்தலைப் பூச்சிகள் திடீரென்று அங்கே தோன்றியதைக் கண்ட ஆண் பெண்பாலர் யாவரும் திடுக்கிட்டு அச்சமும் திகைப்பும் அடைந்தனர். மேனகா, கனகம்மாள், தங்கம்மாள் ஆகிய மூவரும் நாணமுற்று ஒரு பக்கமாக விலகிக்கொண்டனர். காக்கை உட்கார்ந்ததும் பனம்பழம் விழுந்ததும் ஒத்ததைப் போல தமது குற்றம் வெளியான அதே நிமிஷத்தில் நாடகக் காட்சியைப் போல போலீஸார் வந்ததைக் கண்ட பெருந்தேவி, கோமளம், சாமாவையர் ஆகிய மூவருக்கும் அடி வயிற்றில் நெருப்பு விழுந்தது. போலீஸார் தம்மைப் பிடித்துக் கொண்டு போகவே வந்திருப்பதாக அவர்கள் நினைத்து விட்டனர். பேரச்சத்தினால் அவர்களது தேகங்கள் முற்றிலும் வியர்த்து வெடவெடவென்று நடுங்கின; அசைவற்று நடைப் பிணங்களைப்போலச் செயலற்று நின்றனர். அவர்கள் எதற்காக அப்போது வந்தார்களோவென்று பெரிதும் வியப்பும், திகைப்பும் அடைந்த வராகசாமியோ படுக்கையை விட்டு நிமிர்ந்து உட்கார்ந்து, “சஞ்சீவி ஐயர்வாள்! வாருங்கள், வாருங்கள்; இந்த நாற்காலியில் உட்காருங்கள்!” என்று மிகுந்த அன்போடு வரவேற்று சற்று தூரத்திலிருந்த ஒரு நாற்காலியைக் காட்டி உபசரித்தான். தனது விஷயத்தில் தெய்வம்போலத் தோன்றி பெரிதும் உழைத்துத் தனது கற்பை நிலை நிறுத்திய மகாநுபாவர் அவரே என்பதை ஒரு நொடியிற் கண்டு கொண்ட பெண்மணியான மேனகா உடனே விரைவாக நடந்து சற்று தூரத்தில் கிடந்த ஒரு நாற்காலியை எடுத்து வந்து வராகசாமிக் கருகில் போட்டு விட்டு அப்பாற் சென்றாள். அவளது நடையுடை பாவனைகள் அவளது மனதில் பொங்கி எழுந்த நன்றியறிவின் பெருக்கை ஆயிரம் நாக்குகள் கொண்டு வெளியிட்டு அவருக்கு மனப்பூர்வமான வந்தனம் செலுத்துவதைப்போலத் தெற்றெனக் காண்பித்தன. அவளே மேனகா வென்பதை நுட்பமாக உணர்ந்து கொண்ட சஞ்சீவி ஐயர் பரம சாதுவும் குற்றமற்றவளுமான அந்தக் கற்புக்கரசி அப்போதடைந்த பிரம்மானந்தமே, தாம் அவள் பொருட்டு எவ்வளவோ பாடுபட்டு முயற்சிகள் செய்ததற்குப் போதுமான கைமாறென நினைத்து மனங்கொள்ளா மகிழ்ச்சியை அடைந்தார். என்றாலும், அவர் தமது முகக்குறியை முற்றிலும் மறைத்துக் கொண்டவராய் வராகசாமியை நோக்கி, “எனக்கு உட்கார நேரமில்லை. வந்த காரியத்தை உடனே முடித்துக் கொண்டு போகவேண்டும்” என்றார்.
உடனே வராகசாமி அந்தரங்க அன்போடு, “அண்ணா! நீங்கள் அனுப்பிய கடிதம் இப்போதுதான் வந்தது. உங்களுக்கு பதில் நாளைய தினம் எழுதலாமென்று நினைத்தேன்.என் விஷயத்தில் நீங்கள் செய்த பேருதவிக்கு நான் என்ன பதிலுபகாரம் செய்யப்போகிறேன்! இந்தக் கடிதம் வந்திராவிட்டால், நானும் என்னுடைய சம்சாரமும், மற்றவரும் உயிரை விட்டிருப்போம். எங்களுடைய குடும்பமே சீர்குலைந்து அழிந்துபோயிருக்கும். நீங்கள்தான் ஈசுவரனைப் போல வந்து எங்களை யெல்லாம் காப்பாற்றினீர்கள். உங்களுடைய பெயருக்குத் தகுந்தபடியே நீங்கள் எங்களுடைய விஷயத்தில் அமிர்த சஞ்சீவிபோல வந்து உதவினீர்கள்” என்று கூறிய வண்ணம் கண்ணீர் விடுத்தான்.
சஞ்சீவி ஐயர் அதைப்பற்றி எவ்விதமான சலனமும் அடைந்ததாய்க் காட்டாமல் அலட்சியமாக, “நாங்கள் புண்ணியத்துக்கா செய்கிறோம்! சம்பளம் வாங்க வில்லையா! நான் செய்த காரியத்துக்காக சன்மானம் வாங்கவேண்டுமென்று எதிர்பார்க்கவே இல்லை. நீங்கள் அதைப்பற்றி ஏன் கவலைப் படுகிறீர்கள்? எனக்கு நாழிகையாகிறது” என்றார்.
வராகசாமி,”அப்படியானால் உங்களுக்கு என்ன காரியம் ஆகவேண்டும்? இந்தக் கடிதத்தின் சம்பந்தமாகத்தானே நீங்கள் வந்தது?” என்றான்.
சஞ்சீவி ஐயர் புன்னகை செய்து, “இல்லை, இல்லை; நம்முடைய சாமாவையரிடம் வராமல் நான் வேறு யாரிடத்துக்கு வரப்போகிறேன். உங்களிடத்திலெல்லாம் எனக்கு என்ன வேலை இருக்கிறது? வக்கீலும் போலீசாரும் எப்போதும் எதிர்க்கட்சிகாரர்களல்லவா! நாங்கள் ஒரு குற்றவாளியை நியாய ஸ்தலத்துக்குக் கொண்டுபோய் அவனைத் தண்டிக்கவேண்டு மென்றால், நீங்கள் அவனை விட்டுவிடவேண்டுமென்று எதிர் வாதாடுகிறவர்கள் அல்லவா; உங்களிடம் எனக்கு வேலை இல்லை” என்று வேடிக்கையாகப் பேசியவண்ணம் சாமாவையரது பக்கம் திரும்பி, “ஐயரவாள்! நாங்கள் தங்களுடைய பேட்டிக்காக வந்திருக்கிறோம். தாங்கள் செய்த காரியத்துக்காக துரைத்தனத்தார் தங்களை மிகவும் மெச்சி தங்களுடைய கைக்கு ஒரு மெடல் அனுப்பி யிருக்கிறார்கள். தயவு செய்து கையை நீட்டுங்கள்” என்று கூறிய வண்ணம் ஜெவான்களை நோக்கி சைகை செய்ய, அவர்கள் நால்வரும் சாமாவையரைச் சூழ்ந்து கொண்டனர். ஐயரோ கையும் களவுமாய்ப் பிடிபட்ட கள்ளனைப்போலத் திருட்டு விழி விழித்து, “எதற்காக விலங்கு போடுகிறீர்கள்?” என்று மெதுவாகக் கேட்க, சமயசஞ்சீவி ஐயர், “என்ன ஐயரவாள்! தங்களுக்குத் தெரியாத காரியமுண்டா? எத்தனையோ திறமையான காரியங்களையெல்லாம் செய்த தாங்கள் இதன் காரணத்தை அறிந்து கொள்ள முடியவில்லையா? தங்களுடைய நண்பரான வராகசாமி ஐயங்காருக்குத் தாங்கள் செய்த காரியம் அற்பமானதா? ஆனால், அதற்காகத் தங்களுக்கு இந்தச் சன்மானம் கிடைக்க வில்லை. அதற்கு வராகசாமி ஐயங்கார் மனது வைத்துச் சன்மானம் செய்ய வேண்டும்” என்று சொல்லிவிட்டு வராகசாமியைப் பார்த்து, “இவர் உங்களுக்குச் செய்ததை மாத்திரந்தானே நீங்கள் அறிவீர்கள்; அதைத் தவிர எவ்வளவோ அருமையான காரியங்களை யெல்லாம் இந்த மகான் செய்திருக்கிறார். இவருடைய சக்தி நரியைப் பரியாக்கின ஈசுவரனுக்குக் கூட வராது. இவர் அன்னியர் வீட்டு மனிதரை விற்பதில் மாத்திரம் தேர்ந்தவரென்று நினைத் தீர்களா? இல்லை இல்லை? அன்னியருடைய பங்களா முதலியவற்றையும் சொந்தக்காரருக்குத் தெரியாமல் விக்கிரயம் செய்வதிலும் இவர் மகா சமர்த்தர். பிச்சைக்கார சாயப்புவை இவர் ஒரு நிமிஷத்தில் கப்பல்கார சாயப்புவாக மாற்றி விடுவார்; அப்பனைப் பிள்ளையாகவும், பிள்ளையை அப்பனாகவும் மாற்றுவார்; தம்முடைய தம்பியை நாடகக்காரனாக மாற்றுவார். இவருடைய அபார சக்தி யாருக்கு வரும்! இவர் என்ன செய்தார் தெரியுமா? இந்தப் பங்களாவை வாங்கியதாக உங்களுடைய அக்காளிடம் எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டாரோ தெரியவில்லை. அந்தப் பணத்தை இவரே எடுத்துக் கொண்டார்; தீத்தாரப்ப முதலி தெருவிலிருக்கும் கருவாட்டு வியாபாரியான ஒரு சாயப்புவிடம் போய் நூறு ரூபாய் கொடுத்தார்; அவரைக் கப்பல்கார சாயப்புவாக மாற்றினார்; விக்கிரயப் பத்திரம் தயாரித்தார்; மகாலிங்கையர் பிள்ளை சாமாவையர் என்பதற்குப் பதிலாக சாமாவையர் பிள்ளை மகாலிங்கையர் என்று தம்மை மாற்றிக் கொண்டு சப் ரிஜிஸ்டிரார் கச்சேரியில் சாட்சியாக ஆஜராயினார்; பங்களாவை வாங்கி விட்டதாகப் பொய்ப்பத்திரம் தயாரித்துப் பதிவு செய்து உங்களுடைய சகோதரியிடம் கொடுத்து விட்டார். பங்களாவின் உண்மை யான சொந்தக்காரர் நாகைப்பட்டணத்தில் இருக்கிறார். அவருக்கு ஒரு மாசத்து வாடகைப் பணத்தை ரகசியமாக அனுப்பி விட்டு, பங்களாவைத் தமது வசப்படுத்திக் கொண்டு அதில் உங்களைக் குடிவைத்தார். இத்தனை திருவிளை யாடல்களையும் செய்த இவர் ஒரு விஷயத்தை மாத்திரம் கவனிக்க மறந்து விட்டாரோ அல்லது அதைப் பிறர் கவனிக்க மாட்டார்களென்று நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை. சப் ரிஜிஸ்டிரார் கச்சேரியில் தம்முடைய கையின் ரேகை அடையாளம் இருக்குமே யென்பதையும், அதனால் பிறர் இந்த ரகசியத்தைக் கண்டு கொள்வார்களே என்பதையும் மறந்து விட்டார். இருந்தாலும் இவருடைய அபார வல்லமையை நாங்கள் மனதார மெச்சுகிறோம்; அதன் பொருட்டே நாங்கள் இந்த மரியாதையை நடத்த வந்தோம். அடே! ஜெவான்! ஐயரவாளுடைய கையில் தோடாவைப் பூட்டி விடுங்கள்! ஊர்வலமாக மேளதாளத்துடன் ஜாம்ஜாமென்று ஐயரவாள் பவனி புறப்படட்டும்” என்றார். அதைக் கேட்கவே, இடி வீழ்ந்த கட்டிடத்தைப்போல சாமாவையருடைய மனமும் தேகமும் மீளா விதமாய் கலகலத்துப் போயின; அவர் சித்தப்பிரமை கொண்டவரைப்போல மருண்டு மருண்டு விழித்து, ஓய்ந்து நின்று தவிக்கிறார்; வராகசாமி தம்மைக் காப்பாற்றுவானோ வென்று அவனை நோக்குகிறார். தாம் செய்ததெல்லாம் தவறென்றும் அவனிடம் கெஞ்சி மன்றாடுவதைப் போல அவரது பரிதாபகரமான முகம் தோன்றியது. பங்களா விஷயத்தில் தாம் முழுவதும் வஞ்சிக்கப்பட்டுப் போனதையும் எவ்வளவோ பாடுபட்டு நியாய வழியிலும் அநியாய வழியிலும் தேடிச் சேர்த்த ரூபாய் பதினாயிரத்தைந்நூறும் கூண்டோடு கைலாசம் போனதையும் கண்ட பெருந்தேவியும் கோமளமும் உப்புக்கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தியைப் போல விழித்து பட்ட மரங்களோ வென்ன உணர்வு, பேச்சு மூச்சு முதலியவின்றி அசையாது நின்றனர்.
சமய சஞ்சீவி ஐயர் புன்முறுவலோடு வராகசாமியைப் பார்த்து, “நான் உத்தரவு வாங்கிக் கொள்ளுகிறேன். உங்களுடைய தீர்மானத்தைச் சீக்கிரம் தெரிவியுங்கள்” என்றார்.
அதைக் கேட்ட வராகசாமி, “நான் என்ன முடிவைத் தெரிவிக்கப்போகிறேன்? கடைசியில் என்னுடைய சம்சாரம் தற்கொலை செய்துகொள்ள வில்லை; டாக்டர்துரைஸானியின் உதவியால் என்னிடம் வந்து சேர்ந்துவிட்டாள். நியாய ஸ்தலத்துக்குப் போவதானால், நீங்கள் எழுதி யிருக்கிறபடி, எனக்குப் பெருத்த அவமானம்தான் உண்டாகும்; ஆகையால், நியாயஸ்தலத்துக்குப் போகாமலிருப்பதே நல்லதென்று தோன்றுகிறது” என்றான்.
சமய சஞ்சீவி ஐயர், “அப்படியா! நிரம்ப சந்தோஷம்! பழம் நழுவிப் பாலில் விழுந்தது! நெடுநாட்களாக விட்டுப் பிரிந்த சம்சாரத்தினிடம் தனிமையில் இரகசியமான பல விஷயங்களைப்பற்றிப் பேச நீங்கள் ஆவல்கொண்டிருப்பீர்கள்; ஆகையால், நான் உங்களுடைய சந்தோஷத்துக்கு இ டைஞ் சலாக இன்னமும் இங்கே நிற்பது பாவம். நான் போய்விட்டு வருகிறேன்; நற்குண முடையவர்களை ஈசுவரன் காப்பாற்று வான்’ என்று கூறிவிட்டு வெளியில் நடந்தார். ஜெவான்கள் வெளியில் நடக்கும்படி சாமாவையரைத் தூண்ட, அவர் அசையாமல் ஈயக் குண்டைப்போல அப்படியே நின்றார். அதைக்கண்ட இரண்டு ஜெவான்கள் உடனே தமது குட்டைத் தடிகளை எடுத்து இரண்டு விலாக்களிலுமுள்ள எலும்புகள் நொறுங்கும்படி நன்றாய் இடிக்க, ஐயர் அதைப் பொறுக்க மாட்டாமல், “ஐயோ! அப்பா!’ என்று வீரிட்டு ஓசை செய்து மான்குட்டியைப்போலத் துள்ளி அறைக்கு வெளியில் அம்புபோலப் பாய்ந்தார்.
அதே நொடியில், அடுத்த பொக்கிஷ அறையிலிருந்து, கூ! கூ! திருடன்! திருடன்! பெருந்தேவியம்மா! கோமளம்மா! திருடன்! திருடன்! வாருங்கள்! வாருங்கள்! ஓடுகிறான்! ஓடுகிறான்!’என்ற பெருத்த ஆரவார முண்டாயிற்று.அப்போது திடுதிடென்று சிலர் ஓடிய ஓசை உண்டாயிற்று; அதைக் கேட்டவுடன் அங்கிருந்தோர் யாவரும் பெருத்த அச்சமும் திகைப்பும் அடைந்தனர். வராகசாமியின் அறையிலிருந்து தப்பித்து அப்பால் போவதற்கு அதுவே சமயமென்று நினைத்த பெருந்தேவியம்மாளும் கோமளமும் ஓடினர்; கனகம்மாள், தங்கம்மாள், மேனகா ஆகிய மூவரும், வேடனைக் கண்ட மான்களைப்போல நடுநடுங்கி விழித்துக்கொண்டு நின்றனர். ஜெவான்கள் நால்வரும் சாமாவையரைச் சமயசஞ்சீவி ஐயரிடம் ஒப்புவித்துவிட்டு, ஓசையுண்டான இடத்தை நோக்கி யோடினர்; பங்களாவை விட்டு வெளியிற் போகும் நினைவோடு காலை யெடுத்து வைத்த வரதாச்சாரியார் முதலியோர், திகைப்படைந்தவராய் திருடனைக் கண்டு பிடிக்கும் வரையில் தாம் வெளியிற் போகக் கூடாதென்று நினைத்து அவமானத்தினால் குன்றிப்போய் நின்றனர். சரியான பகல்வேளையில் திருடன் வருவானோ வென்ற வியப்பும் ஐயமும் அங்கிருந்த ஒவ்வொருவர் மனதிலும் குடிகொண்டு வதைத்தன.
இரண்டு நிமிஷ நேரத்தில் போலீஸ் ஜெவான்கள் நால்வரும், திருடனைப் போலக் காணப்பட்ட ஒரு முரட்டு வந்தனர். பின்னால் மனிதனை இழுத்துக் கொண்டு வந்தவளான பங்களாப் பெருக்கும் வேலைக்காரி, “என்ன அதிசியங்கறேன்! பட்டப்பகல்லே திருடன் பங்களாக்குள்ளாற வருவானோ! பனமரம் கணக்கா எம்பிட்டு ஒசரங்கறேன்! நல்லா இடுப்ப முறிங்க! என்று வியப்போடு உரக்கக் கூவிக்கொண்டு ஓடிவந்தாள்..அவளோடு கூட வந்த தோட்டக் காரன், “பணம் நவை உடுப்பு எல்லாம் வச்சிக்கிற அறையப் பாத்துல்ல நொௗஞ்சுக்கினான்! நாங்க கூச்சப் போட்ட ஒடனே பூத்தொட்டி மறவுலேல்ல ஒளியறான். நானா உட்றவன்! தடியாலே நல்லா மொத்திட்டேன்” என்று கூறி தனது கையிலிருந்த மூங்கில் தடியைத் தூக்கி, இன்னமும் அடிக்க நினைப்பவனைப்போலக் காட்டினான். அவ்வாறு அவர்களிருவரும் தங்களது கீர்த்தியை வெளியிட்டபோது, அந்தத் திருடன் சஞ்சீவி ஐயருக்கு முன்னால் கொணர்ந்து நிறுத்தப்பட்டான். அவனை யாவரும் வலுவாக அடித்து. விட்டன ராதலின், அவனது தேகத்திற் பலவிடங்களி லிருந்து இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. அவன் மயக்கங் கொண்டு துவண்டு விழுந்து தத்தளித்தவனாய், தனக்கு ன்னமும் எவ்விதமான தண்டணை கிடைக்குமோ வென்று பயந்து அச்சத்தினால் மருண்டு மருண்டு விழித்தான். சஞ்சீவி ஐயரைக் கண்டவுடன் அவன் மிகவும் பரிதாபகரமான குரலில், “சாமி! மொதல்லே கொஞ்சுண்டு தண்ணி வேணும்; நான் திருடவல்லீங்க; என்னை அடிச்சுக் கொன்னுபுட்டாங்க” என்று தடுமாற்றத் தோடு கூறி மன்றாடிய வண்ணம் கீழே சாய்ந்துவிட்டான்.
அந்தப் பரிதாபகரமான காட்சியைக் கண்ட சஞ்சீவி ஐயர் இரக்கங்கொண்டு தண்ணீர் வரவழைத்து அவனுக்கு உடனே கொடுத்துப் பருகுவிக்கும்படி செய்தார். ஐந்து நிமிஷத்தில் அவனது மூர்ச்சை தெளிந்தது; அவன் உடனே எழுந்து சஞ்சீவி ஐயரைப் பார்த்துக் கைகுவித்து, ”சாமி! எசமாங்களே! ஒங்க புள்ளெகுட்டிங்க சொகமாயிருக்கணும்; என் உசிரெக் காப்பாத்தினீங்க; மவராசா! நான் திருடவல்லீங்க, நான் இருக்குறது செங்கப்பட்டுங்க” என்றான்.
சஞ்சீவி ஐயர், “அடே! பொய் சொல்லாதே; பொய் சொன்னால் இந்தப் பயல்கள் உன்மேல் நாயைப்போல விழுந்து கடித்து விடுவார்கள்; செங்கல்பட்டிலிருந்து இந்தப் பங்களாவுக்கு என்ன காரியமாக வந்தாய்? பங்களாவுக்கு வந்தவன் மற்ற இடங்களுக்குப் போகாமல், பொக்கிஷம் வைக்கும் அறைக்குப் போன காரணமென்ன?’ என்றார். உடனே அந்த மனிதன், “நான் ஒரு அம்மாளுக்குக் கடுதாசி கொண்டாந்திருக்கிறேனுங்க. அந்த அம்மா இஞ்கே இருக்றாங் கன்னு சொன்னாங்க. வளிதெரியாமே உள்ளற வந்து புட்டேனுங்க: என்னெக்கண்டு திருடன் திருடன்னு ஆரோ கூவினாங்க. எனக்கு பயமா இந்திச்சு; ஓடினேனுங்க” என்றான். அதைக் கேட்ட யாவரும் ஆச்சரியமும் இரக்கமுங் கொண்டனர்.
உடனே சமய சஞ்சீவி ஐயர், “அடே! எந்த அம்மாளுக்கு கடுதாசி கொண்டுவந்தாய்? எடு அதை” என்றார்.
அதைக் கேட்ட அந்த மனிதன் தனது துணியிலிருந்த ஒரு முடிப்பை அவிழ்த்தவண்ணம், காலையில் இருந்து எங்கெங்கே அலெஞ்சேனுங்க! அந்த அம்மாளேக் கண்டுபிடிக்க முடியல்லிங்க. ரயிலடியில் இக்குதே ராமசாமி முதலி சத்தரம்; அந்த சத்திரத்துலே இருப்பாங்க, கடுதாசியைக் குடுன்னு, அந்த ஐயா சொன்னாரு. அங்கே போனேன், ல்லே. அங்கே இருந்த காவக்காரன், யாராச்சும் தேடிக்கிட்டு வந்தா தொளசிங்கப் பெருமா கோயிலு தெருவுலே சாமா ஐயருன்னு ஒரு ஐயரு இருக்கறாரு; அவரு வூட்டுக்கு அனுப்பச் சொன்னாங்கன்னு சான்னான். அங்கே போயிப் பாத்தேனுங்க தெரியுமா! இந்தக் கடுதாசியைப் பாருங்க. எல்லா வங்களாலேயும் தொரை மாரும், துலுக்கரும் இருக்காங்க. இந்த ஒரு வங்களாலேதான் ஐயமாரு இருக்கறாங்கன்னு கேள்விப்பட்டேன். இத்தேப் பாருங்க” என்று துணி முடிப்பிற்குள் துகையலாய்ப் போயிருந்த ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினான். சஞ்சீவி ஐயர் அதை வாங்கிப் பார்த்தார். அதன் மேல்விலாசம் அடியில் கண்டபடி எழுதப் பட்டிருந்தது.
“சென்னை பட்டணம் பார்க்கு ஸ்டேஷனுக் கருகிலுள்ள சர் சவலை இராமசாமி முதலியார் சத்திரத்தில் இறங்கி யிருக்கும், தஞ்சாவூர்டிப்டி கலெக்டர் சுவாமிகளுடைய தாயார் கனகம்மாள் அவர்களுக்கு. அனுப்பும் செங்கற்பட்டிலிருக்கும் ரெங்கராஜு”
என்று எழுதப்பட்டிருந்ததைப் படித்த சஞ்சீவி ஐயர் வராகசாமி இருந்த அறைக்குள் புன்னகை செய்தவண்ணம் நுழைந்து, “செங்கற்பட்டிலிருந்து ஒருவன் கடிதம் கொண்டு வந்திருக்கிறான். அவன் வழிதெரியாமல் பங்களாவுக்குள் நுழைந்துவிட்டான். அதற்குள், எல்லாரும் திருடன் திருடனென்று கூக்குரலிட்டு அவனை அடித்து முட்டாள்தனமான காரியம் செய்து விட்டார்கள். டிப்டி கலெக்டருடைய தாயார் கனகம்மாளுக்கு செங்கல்பட்டி லிருந்து ரெங்கராஜு என்ற ஒருவன் அனுப்பி யிருக்கிறான்; அந்த அம்மாளிடம் இதைச் சேர்த்துவிடுங்கள்’ என்று கூறியவண்ணம் கடிதத்தை வராகசாமியிடம் கொடுத்தார். “அந்த அம்மாள் இதோ ருக்கிறார்கள். நான் கொடுத்து விடுகிறேன்; இந்த ஆளை ருக்கச் சொல்லுங்கள்” என்று கூறியவண்ணம் வராகசாமி அதை வாங்கிக் கொள்ள, சஞ்சீவி ஐயர் வெளியிற் போய்விட்டார். வராகசாமி இருந்த அறையில் அப்போது கனகம்மாள், தங்கம்மாள், மேனகா ஆகிய மூவருமே ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றமையால், சஞ்சீவி ஐயர் போனவுடன் மேனகா விரைவாக ஓடிவந்து வராகசாமி இடத்திலிருந்து கடிதத்தை வாங்கினாள். செங்கற்பட்டிலிருந்து ரெங்கராஜு வால் எழுதப்பட்ட கடிதமென்பதைக் கேட்ட முதல் அதைப் பார்க்க ஆவல் கொண்டு துடிதுடித்து நின்ற கனகம்மாள், தங்கம்மாள் ஆகிய இருவரும், அதைப் படிக்கும்படி மேனகாவையே கேட்டுக்கொள்ள, அவள் வீணா நாதம் போன்ற தனது தீங்குரல் இனிமையைச் சொரிய அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தைப் படித்தாள்:-
கடிதம்
“பெரியம்மாள் பாதங்களில் சேவக ரெங்கராஜு அநேக கோடி தெண்டனிட்டு எழுதும் செய்தி:- நான் இதற்கு முன் செய்கற்பட்டு ரயிலடியிலிருந்து எழுதி யனுப்பிய கடிதம் தங்ளிடம் வந்திருக்கலாம். நான் பகற்கொள்ளைப் பாக்கத்துக்குப் போனதையும், செட்டியாரிடம் சங்கதிகளை யறிந்துகொண்டு மறுபடியும் செங்கற்பட்டிற்கு வந்ததையும், எஜமானரின் அங்கவஸ்திரம் மாத்திரம் அகப்பட்டதையும், போலீஸார் தக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டு எஜமானரைத் தேடிக்கொண்டிருந்த விஷயங்களையும் அந்தக் கடிதத்திலிருந்து தாங்கள் அறிந்து கொண்டிருக்கலாம். எஜமானர் கடன் வாங்கிவந்த பணம் முற்றிலும் போய்விட்ட தென்றே அப்போது நான் நிச்சயித்துக் கொண்டேன். அவரைப் வீணில் அங்கே போலீஸார் தேடியபடியால், நான் காத்திருப்பதில் பயனில்லை யென்று நினைத்தேன். பணமில்லாமையால் ஆபரேஷனின்றி எஜமானி யம்மாளின் உயிர் போய்விடுமோ வென்று மிகவும் அச்சமும் கவலையுங் கொண்டவனாய் நான் உடனே தஞ்சாவூருக்குப் போய் பணத்திற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய நினைத்தேன்; எஜமானரைத் தேடிப் பிடித்துப் பட்டணத்தில் நீங்களிருக்கும் சத்திரத்தில் கொண்டு ஒப்புவிக்கும்படி போலீஸாரிடம் கேட்டுக் கொண்டேன்; எஜமானருடைய உத்தியோகம், அங்க அடையாளங்கள் முதலியவற்றை விரைவாக அவர்களுக்குத் தெரிவித்தேன். அவர்களும் மிகுந்த இரக்கமும் விசனமும் அடைந்தனர்; எஜமானரை மிகுந்த சிரத்தையோடு தேடிப் பிடித்துக்கொண்டு போய் ஒப்புவிப்பதாக போலீஸார் எனக்கு வாக்குறுதி செய்தனர். நான் உடனே ரயிலேறி தஞ்சாவூருக்குப் போனேன். பணத்தை எப்படியாவது சேகரம் செய்தனுப்ப வேண்டுமென்று என்னாலானவரையில் முயன்று பார்த்தேன்; நான் பரம ஏழை யென்பது தங்களுக்குத் தெரிந்த விஷயம். நான் இருக்கும் வீடோ வாடகை வீடு. வீட்டிலுள்ள பாத்திரங்களோ மண் பாத்திரங்கள்; என்னுடைய பெண்டாட்டியின் காது மூக்குகளில் வெறுந் துளைகளே ஆபரணங்களா யிருக்கின்றன. அவ்வளவு பெருத்த பிரபுவாகிய எனக்கும் இரு நூறு ரூபாய்க்கும் எவ்வளவு தூரம்! எனக்கு இந்த உலகில் இருபது காசு கூட பெறுமானமில்லை. கடன் வாங்கலாமென்று நினைத்து பலரிடம் போய் முயன்று பார்த்தேன். அவர்கள், உதவியற்ற பொன்னையும், வெள்ளியையும், மண்ணையும், கல்லையும் மதிக்கிறார்களே யன்றி உபயோகப்படும் மனிதனாகிய என்னை ஒரு பைசாவுக்கும் மதிக்கவில்லை; பணம் எஜமானருடைய அவசரத்திற்கு வேண்டி யிருக்கிறது; ஒன்றுக்கு மூன்றாக அவரிடம் வாங்கிக் கொடுத்து விடுகிறே னென்று சொல்லிப்பார்த்தேன். என் சொல் செவிடன் காதில் சங்கை ஊதியதைப் போலாயிற்று. அதன் பிறகு நான் என்ன செய்வேன்; எனக்கு ஒரு யோசனையும் தோன்றவில்லை. எப்படியாவது பணம் வாங்கி யனுப்ப வேண்டுமென்று என்னைக்காட்டிலும் என்னுடைய பெண்டாட்டியே அதிக கவலைப்பட்டாள். சும்மாவிருக்க எங்களுக்குச் சகிக்கவில்லை. தலையை அடகு வைத்தாவது பணம் வாங்கி இந்த ஆபத்தில் உதவ வேண்டு மென்று என் சம்சாரம் இரவு பகலாய் என்னை இடித்தாள். என் மனது அதற்குமேல் உள்ளூற இடித்துக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் கூடிப் பேசிப் பேசிக் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தோம். எங்களுடைய ஒரே மகளான பத்மாவதிபாயி ருதுவாய் இரண்டு வருஷமாகிற தென்பதும், அவள் மிகுந்த அழகுடையவளென்பதும், நன்றாகப் படித்தவ ளென்பதும், அவளை நாங்கள் செல்வக் குழந்தையாக வளர்த்து வந்தோம் என்பதும் தங்களுக்குத் தெரியும். எத்தனையோ பெரிய மனிதர்கள் தங்களுடைய பிள்ளைக்கு அவளைக் கலியாணம் செய்து கொடுக்கும்படி கேட்டிருந்தனர். தவிர, எங்களுடைய எதிர்த்த வீட்டில் ஹீராசாமிராவ் என்னும் பெயருடைய ஒரு வியாபாரி இருக்கிறான். அவனுக்கு மூன்று சம்சாரங்கள் இறந்து போய் விட்டார்கள். அவனுக்குப் பெண்களும், பிள்ளைகளும் மொத்தத்தில் பதினேழு பேரிருக்கிறார்கள். இப்போது அவனுக்கு வயது அறுபதாகிறது. அவன் எங்களுடைய பெண்ணை நான்காவது சம்சாரமாகக் கலியாணம் செய்து கொடுத்தால், ஆயிரம் ரூபாய் எங்களுக்குத் தருவதாகச் சில மாதங்களுக்கு முன் செய்தி சொல்லியனுப்பிய தன்றி, அதைப் பற்றி அடிக்கடி ஆள் மூலமாகத் தூண்டிக் கொண்டிருந்தான். கிளியைப்போல நாங்கள் வளர்த்து வரும் குழந்தையை அவனுக்கு பலியிடுவதைக்காட்டிலும் அதை உயிருடன் கிணற்றில் தள்ளிவிடுவதே நல்லதென்று நினைத்து நாங்கள் அதற்கு இணங்க மாட்டோமென்று சொல்லிவிட்டோம். இப்போது எங்களுக்கு அந்த மனிதருடைய நினைவு வந்தது. அவனுக்கே பெண்ணைக் கொடுத்துவிட நாங்கள் தீர்மானித் தோம். எங்களுடைய குழந்தை பத்மாவதியை அழைத்து அவளிடம் எஜமானருக்கும் எஜமானியம்மாளுக்கும் வந்துள்ள ஆபத்துக்களை யெல்லாம் விவரமாய்த் தெரிவித்தோம். இருநூறு ரூபாய் இல்லாமையால் எஜமானியம்மாளின் உயிர்போகும் நிலைமையி லிருப்பதையும், அதற்காக நாங்கள் செய்துள்ள கலியாண ஏற்பாட்டையும் அவளிடம் வெளி யிட்டோம்; விவரங்களைக் கேட்ட பத்மாவதி எஜமானியம் மாளின் நிலைமையைப் பற்றி மிகவும் வருந்தினவளாய் அவர்களுடைய உயிரைக் காப்பாற்றும் பொருட்டு, தான் கிழவனாகிய ஹீராசாமிராவைக் கலியாணம் செய்து கொள்ளுவதாக முழுமனதோடு ஒப்புக்கொண்டாள். உடனே நான் அவனிடம் போய்; முதலிலே எங்களுடைய தீர்மானத்தை வெளியிடாமல், கடனாக இரு நூறு ரூபாய் கொடுக்கும்படி கேட்டேன்; அவன் கடன் கொடுக்க முடியாதென்று சொல்லியதன்றி, என் மகளைக் கலியாணம் செய்துகொடுப்ப தானால் உடனே இரு நூறுக்கு நாநூறு ரூபாய் தருவதாயும், கலியாணத்தின்போது இன்னும் ஆயிரம் ரூபாய் தருவதாயும் கூறினான்.மேலே பேச்சை வளர்க்காமல், அதற்கு நான் உடனே இணங்கினேன். ரூபாய் நாநூறை வாங்கி உங்களுக்கு ரூபாய் முன்னூறை தந்தி மணியார்டராக அனுப்பி விட்டு மிகுதி நூறு ரூபாயை எஜமானரைத் தேடும் செலவுக்காகக் கையில் ஜாக்கிரதையாக வைத்துக் கொண்டேன்.”
என்று படித்த மேனகா, மேலே படிக்க மாட்டாமல் அவ்வளவோடு நிறுத்தினாள். ரெங்கராஜுவின் உண்மையான அன்பையும், இரக்கத்தையும், தயாள குணத்தையும், தங்கள் பொருட்டு அவனும் அவனது மகளும் செய்த பெருத்த தியாகத்தையும் காண, மேனகா, தங்கம்மாள், கனகம்மாள், வராகசாமி ஆகிய நால்வரது மனமும் பாகாயுருக நன்றியறிவின் வெள்ளம் பொங்கியது. தேகம் பூரித்துப் புளகாங்கித மடைந்தது. உடனே கனகம்மாள் மிகவும் உருக்கமாக, “ஐயோ! பாவம்! ரெங்கராஜுவைப் போல வேறு மனிதன் உலகத்தில் கிடைப்பானா! அடாடா! என்ன குணம்! என்ன குணம்! கேவலம் சேவகனென்றும், படிக்காத முட்டா ளென்றும் ஜனங்கள் இழிவாக மதிக்கிறார்களே! படித்த முட்டாள்களிடம் இம்மாதிரியான உண்மைப் பரோபகாரமும், தியாக குணமும், வள்ளலின் தன்மையும் இருக்குமா? அவனுக்கு நாம் இந்த ராஜ்யத்தையே சன்மானம் செய்தாலும் அது ஈடாகுமா? ஆகா! மனிதனிருந்தாலும் இப்படியல்லவா இருக்க வேண்டும்! இப்படிப்பட்ட உத்தமனான புத்திரனை எந்தப் புண்ணிய வதியின் வயிறு தாங்கிப் பெற்றதோ?” என்று கூறிப் பெ ரு விம்மிதம் அடைந்தாள்.
அதைக் கேட்ட மேனகா, “அவனுடைய சம்சாரமும், பெண்ணும் நல்ல குணத்தில் அவனை மீறியவர்களாக இருக்கிறார்களே! புருஷன், பெண்ஜாதி, மகள் ஆகிய மூவரும் ஒரே மனதை உடையவராயும் நற்குணம் உடையவராயும் அமைவதைவிட, மனிதர் அடையும் பாக்கியம் வேறுண்டா! அப்படிப்பட்டவர்களுடைய வாழ்க்கைக்குச் சுவர்க்கபோகமும் ஈடாகாது” என்றாள்.
தங்கம்மாள்- இவர்களுக்கு ஈசுவரன் ஒரு நாளும் குறைவு வைக்க மாட்டான்-என்று மிருதுவாகக் கூறித் தனது மனமார்ந்த நன்றியறிவைக் காட்டினாள்.
கனகம்மாள்:- சரி; மேனகா! மேலே படியம்மா! அவன் இன்னும் என்னென்ன காரியங்களைச் செய்திருக்கிறானென்று பார்க்கலாம்- என்றாள்.
மேனகா மேலே படிக்கிறாள்:-“நான் உடனே வீட்டுக்குப் போய், விஷயங்களையெல்லாம், என் சம்சாரம், பெண் ஆகிய இருவரிடமும் தெரிவிக்க, அவர்களும் நானும் பெரிதும் சந்தோஷம் அடைந்தோம். எஜமானியம்மாளுக்கு உடனே ஆபரேஷன் நடைபெறு மென்றும், அவர்கள் பிழைத்துக் கொண்டோம். கொள்வார்க ளென்றும் நினைத்துக் போலீஸாரும் எஜமானரை எப்படியும் கண்டுபிடித்து விடுவார்களென்ற ஒரு துணிவும் என் மனதில் உண்டாயிற்று.
அதன் பிறகு நான், நம்முடைய எஜமானரை என்ன குற்றத்திற்காக துரைத்தனத்தார் வேலையிலிருந்து நீக்கினார்க ளென்பதைப் பற்றி நன்றாக விசாரணை செய்யத் தொடங் கினேன். எஜமானர் உத்தரவில்லாமல் இரண்டு தடவை பட்டணத்துக்கு வந்ததற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக அறிந்தேன். அவற்றில் முதல் தடவை அம்பாள் சத்திரத்தில் எஜமானர் முகாம் செய்திருந்த போது நானும் கூட இருந்தேனாகையால், அன்று அவர் பட்டணத்துக்குப் போனதாகச் சொன்னது அபாண்டமான கட்டுப்பாடென்பது நிச்சயமாயிற்று. நான் உடனே புறப்பட்டு அம்பாள் சத்திரத்துக்குப் போனேன். எஜமானர் அன்றைய தினம் அவ்வூர் கிராம முன்சீப்பு, கர்ணம் முதலியோரிடமுள்ள. கணக்குகளிலும் அவ்வூர் தரும சத்திரத்திலுள்ள கணக்குகளிலும் கையெழுத்துச் செய்து தேதியும் போட்டிருந்தார். தவிர, அன்று போலீசாரால் பிடித்துக் கொண்டு வந்து ஆஜர் செய்யப்பட்ட ஒரு திருடனைச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கும்படி ரிமாண்டு உத்தரவும் கொடுத்திருந்தார். அத்தனை விவரங்களையும் சந்தேகமற அறிந்து கொண்டு திரும்பி தஞ்சாவூருக்கு வந்தேன்.
எஜமானர் இரண்டாவது தடவை, பட்டணத்துக்கு வந்தது உண்மையே. ஆனால், அதற்குமுன் பெரிய கலெக்டர் ரஜா கொடுத்திருப்பதாக தாதில்தார் தாந்தோனிராயர் சேவகப் பக்கிரியின் மூலமாகச் செய்தி சொல்லி யனுப்பியதை, நானும், நம்முடைய வீட்டிலிருந்த பல சேவகர்களும், தாசில்தார் வீட்டிலிருந்த சேவகர்களும் அறிந்தோம். நான் மற்ற சேவகர்களை ஒன்றாய்க் கூட்டிக் கொண்டு பக்கிரியிடம் போனேன்; அநியாயமாகப் பொய்சொல்லி ஒரு பெருத்த அதிகாரியைக் கெடுத்துவிட்டதைப்பற்றி அவனை நாங்கள் எல்லோரும் தூஷித்தோம்; அவன்; தான் தாசில்தாரின் உத்தரவின்மேல் அப்படிச் சொன்னதாயும், அவ்வாறே பெரிய கலெக்டரிடத்திலும் சொல்லத்தயாராக இருப்பதாகவும் ஒப்புக் கொண்டான்.மற்ற சேவகர்களும் எஜமானரிடம் பக்கிரி வந்து சொன்னது தமக்குத் தெரியுமென்று பெரிய கலெக்டரிடம் சொல்ல இணங்கினார்கள். உடனே நான், இந்த விவரங்களை யெல்லாம் குறித்து, பெரிய கலெக்டருக்கு உடனே ஒரு மனு எழுதி அதைக் கையிலெடுத்துக் கொண்டு போய் துரையைக் கண்டு அவரிடம் அதைக் கொடுத்தேன்; முதலில் அவர் என் சொல்லை நம்பாமல் என்மீது சீறி விழுந்தார். கடிதத்திற் கண்ட விஷயங்களை நான் திருப்திகரமாக ருஜுப்படுத்துகிறே னென்று விடாமல் மேன்மேலும் வற்புறுத்திச் சொன்ன பிறகு, அவர் நம்பிக்கை கொண்டவராய் அன்றைய தினமே புறப்பட்டு அம்பாள் சத்திரத்துக்குப் போனார்; கணக்குகளைச் சோதனை செய்தார்; டிப்டி கலெக்டர் உண்மையில் அன்றையதினம் அங்கு வந்திருந்தார் என்பதைச் சந்தேகமற அறிந்து கொண்டார்; உடனே தஞ்சாவூருக்கு வந்தார்; பக்கிரி முதலிய சேவகர்களை விசாரித்தார்; எஜமானரின் மேல் தாசில்தார் பெரும் பகை கொண்டவரென்பதையும் தாம் ரஜா கொடுத்துவிட்டதாக தாசில்தார் பக்கிரியின் மூலமாகப் பொய் சொல்லி அனுப்பினார் என்பதையும் உணர்ந்து கொண்டார்; எஜமானர் விஷயத்தில் தாம் பெருத்த தவறையும் கொடுமையையும் செய்துவிட்டதைக் கண்டுகொண்ட கலெக்டர் துரை மிகவும் ரக்கங்கொண்டு மனநொந்து விசனித்து வருந்தினார். அதனால் தமக்கு எவ்விதமாக தீங்கு வரினும் வரட்டுமென்று அவர் துணிவு கொண்டு துரைத்தனத்தாருக்கு இன்னொரு அறிக்கை யெழுதி உடனே அனுப்பினார். அதில், தாம் தாசில்தாருடைய வஞ்சகத்தால் ஏமாறிப்போய், இந்த விஷயங்களை யெல்லாம் அறிந்துகொள்ளாமல் டிப்டி கலெக்டரின் மேல் எழுதியதைப் பற்றி வருந்துவதாயும், டிப்டி கலெக்டருக்கு உடனே வேலையைக் கொடுத்து விடவும் சிபார்சு செய்து எழுதியதன்றி, தாம் சீமைக்கு அவசரமான ஒரு காரியத்தின் நிமித்தம் போக வேண்டியிருப்பதால், தமக்கு ஆறுமாத காலம் ரஜா கொடுக்கும்படியாகவும் எழுதிக் கொண்டார். அந்த அறிக்கையின்மேல் துரைத்தனத்தாரின் உத்தரவு பிறக்க சில நாட்களாகுமென்று தோன்றியது ஆகையால், அதற்குள் நான் எஜமானரைத் தேடிப் பிடிக்க எண்ணங்கொண்டேன். துரைத்தனத்தாரிடத்திலிருந்து அநு கூலமாக உத்தரவு வந்தால், செங்கற்பட்டுப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அதை அனுப்பும்படி பெரிய கலெக்டர் துரையிடம் சொல்லிவிட்டு அன்றிரவே தஞ்சாவூரை விட்டுப் புறப்பட்டேன்” என்று படித்த மேனகாவின் கண்களில் ஆநந்தக் கண்ணீர் பொங்கி இரு கன்னங்களின் வழியாக வழிந்தமை யால், எழுத்துக்கள் கண்களிற் படவில்லை; மேலே படிக்க மாட்டாமல் அவள் உடனே நிறுத்திவிட்டாள். அங்கிருந்த நால்வரும் ரெங்கராஜுவின் அரிய காரியங்களையும் பேருதவியையும் ஒப்பற்ற நாயக விசுவாசத்தையும் கண்டு மனங்கொள்ளா ஆநந்த மடைந்துகொண்டு விம்மி விம்மி யழுதனர்.
அப்போது வராகசாமி, ‘ஆகா! இந்தச் சொற்ப காலத்தில், எத்தனை விநோதமான காரியங்கள் நடந்திருக்கின்றன! ஒன்றை யொன்று தோற்கச் செய்கிறதே! எத்தனை ஆபத்துக்கள்! எத்தனை அவமானங்கள்! அடாடா! கேட்கச் சகிக்கவில்லையே!” என்றான்.
கனகம்மாள்:- என்ன ஆச்சரியம்! இத்தனையும் அந்தத் தாந்தோனிராயன் செய்த காரியமா! அடே சதிகாரா! உனக்கு என் பிள்ளை என்ன தீங்கையடா செய்தான்! எங்களைக் கெடுத்து விட்டு நீ எப்படியாவது பெண்டுபிள்ளைகளோடு சுகமாய் வாழப்பா! நாங்கள் கெட்டால் கெட்டுப் போகிறோம்- என்று மிகவும் வருந்திக் கூறினாள்.
அதற்குள் தங்கம்மாள் மேனகாவின் முகத்தில் துளித்த வியர்வை முத்துக்களை அன்போடு துடைத்துவிட்டு, “அம்மா! மேலே படி; உன்னுடைய அப்பாவைக் கண்டு பிடித்தானோ இல்லையோ அது தெரியவில்லையே; சீக்கிரமாகப் படி” என்று ஆவலோடு கூறி அவளை ஊக்கினாள். மேனகா மேலும் படிக்கிறாள்:-
“மறுநாள் விடியற்காலம் நான் செங்கற்பட்டுக்கு வந்து சேர்ந்து, நேராகப் போலீஸ் ஸ்டேஷனுக்குப்போய், ன்ஸ்பெக்டரைக் கண்டு, எஜமானரைப் பற்றி விசாரித்தேன். நான் அங்கிருந்து தஞ்சாவூருக்குப் போன மறுநாளே எஜமானர் அகப்பட்டுவிட்டாரென்று அவர் தெரிவித்தார். நான் அதைக் கேட்டு கரைகடந்த சந்தோஷ மடைந்தேனாயினும், அவர் சொன்ன மற்ற விவரங்களைக் கேட்க, என் மனம் பதறியது. என்னவென்றால், எஜமானர் பணத்தை இழந்ததற்கு மறுநாள் காலையில் பைத்தியம் பிடித்தவரைப் போலப் பிதற்றிக்கொண்டு செங்கற்பட்டுக்கு அருகிலிருக்கும் பாலாற்றங்கரைக்குப் போனதாயும், மிகவும் ஆழமாகப் போய்க்கொண்டிருந்த தண்ணீரில் அவர் அலட்சியமாக இறங்கியதாயும், உடனே தண்ணீரால் இழுபட்டு நிலைதப்பி ஆற்றோடு புரண்டு கொண்டு போனதாயும், அங்கிருந்த வழிப்போக்கர்களிற் சிலர் அவரை உடனே எடுத்துக் கரை யேற்றி மூர்ச்சைதெளிவித்து அவர் யாரென்று கேட்டதாயும், அவர். மேன்மேலும் பிதற்றியதாயும், அவர்கள் உடனே அவரைப் போலீஸ் ஸ்டேஷனில் கொணர்ந்து ஒப்பு வித்ததாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறினார். அந்த விவரத்தைக் கேட்கவே விவரிக்க முடியாமல் மனம் பதறியது. மேல் நடந்ததை அறிய ஆவல்கொண்டு நான் கேட்க, போலீஸார் உடனே அவரை வைத்தியசாலைக்கு அனுப்பி விட்டதாகவும், அங்கே அவர் சிகிச்சையில் இருப்பதாகவும் கேள்விப்பட்டு, உடனே நான் வைத்தியசாலைக்கு ஓடினேன்; என்னைக் கண்ட எஜமானர், “நீ யாரடா? ஏன் நிற்கிறாய்? போ அப்பால்” என்று முன்பின் தெரியாதவனைப் போலப் பேசிப் பிதற்றி என்மீது எச்சிலை உமிழ்ந்தார்; எல்லோரையும் அடிக்கவும் உதைக்கவும் ஓடினார்; வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டார். நானும் அங்கிருந்த சிப்பந்திகளும் எதற்கும் மனந்தளர்வடையாமல் இரவு பகலாய் அவரை விட்டு அகலாமல் இருந்தோம். டாக்டர் மிகவும் தேர்ந்த நிபுணராதலால், அவர் அதற்குத் தக்க மருந்துகளை உபயோகித்து மிகவும் சிரத்தையோடும் அன்போடும் சிகிச்சை செய்து வந்தார். நான் கொண்டுபோயிருந்த பணத்திலும் ஐம்பது ரூபாய் அவரிடம் கொடுத்து நன்றாகக் கவனித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் அவ்வாறே நன்கு கவனித்துப் பார்த்து வந்தார். என்னுடைய உயிரும் நினைவும் எஜமானரிடத்தில் பாதியும் எஜமானியம்மாளிடத்தில் பாதியுமாக தடுமாறிக் கொண்டிருந்தன; ஆனால் பட்டணத்தில் ஆபரேஷன் முடிந்திருக்கு மென்றும், எஜமானியம்மாள் சௌக்கிய மடைந்திருப்பார்களென்றும் நினைத்து தைரியங் கொண்டு இத்தனை நாள் நான் எஜமானரோடு கூட இருந்தேன். உங்களுக்கு ஒரு கடிதம் எழுதக்கூட இதுவரையில் எனக்குச் சாவகாசம் கிடைக்காமல் போயிற்று; எஜமானருடைய உணர்வு படிப்படியாகத் தெளிவடைந்து வந்தது. நேற்றிரவு எஜமானர் முற்றிலும் தெளிவடைந்து நமது வரலாற்றை யெல்லாம் கேட்டார். அதைக் கண்டு நான் ஆநந்தப்பரவச மடைந்தவனாய் பட்டணத்திலும் தஞ்சாவூரிலும் நடந்த விஷயங்களைச் சொன்னேன். எஜமானர் திடீரென்று எழுந்து என்னை அப்படியே பிடித்து அணைத்துக் கொண்டு என்னைப் பலவாறு புகழ்ந்தார்; பட்டணத்துக்கு உடனே பட்சியைப் போல பறந்து வந்துவிட நினைத்துத் துடித்தார். ஆனால், இன்னம் இரண்டு நாளைக்கு முன் வைத்தியசாலையை விட்டுப் போகக்கூடாதென்று டாக்டர் சொல்லித் தடுத்து விட்டார். ஆகையால், எஜமானர் இன்று காலையில் ஆளை அனுப்பச் சொன்னார்கள்; அதற்குள் ன்று காலையில் தஞ்சையிலிருந்து எஜமானருக்கு ஒரு பெருத்த சந்தோஷ சமாச்சாரம் வந்தது. துரைத்தனத்தார் பெரிய கலெக்டர் துரைக்கு ஆறுமாச காலத்துக்கு ரஜா கொடுத்து விட்டு, அவருக்குப் பதிலாக நம்முடைய எஜமானரையே தஞ்சாவூர் ஜில்லாவுக்கு பெரிய கலெக்டராக மாதம் முவ்வாயிரம் சம்பளத்தில் நியமித்திருக்கிறார்களென்றும், மறு நாளே வந்து வேலையை ஒப்புக்கொள்ளும்படியாயும் அதனால் தெரியவந்தது. அதைக் கேட்டவுடனே நான் அடைந்த குதூகலத்தையும் பிரம்மாநந்தத் தையும் சொல்லவும் கூடுமா! நான் அப்படியே எழுந்து ஆநந்தக்கூத்தாடி ஒரு நாழிகை வரையில் சந்தோஷத்தினால் பூரித்துப் பொங்கிப்போய் விட்டேன்; தெய்வங்களுக்கெல்லாம் வேண்டுதல் செய்துகொண்டு வாயாரத் துதித்தேன்; எஜமானரிடம் ஆயிரம் தடவை சொல்லிச் சொல்லி மகிழ்வுண்டாக்கினேன். ஆனால் எஜமானர் அவ்வளவு சந்தோஷ மடைந்தவராகத் தோன்றவில்லை. எஜமானி யம்மாள், குழந்தை மேனகா, மாப்பிள்ளை ஆகிய மூவர் க்ஷேமத்தைப் பற்றி ஒரு செய்தியும் தெரியாமலிருப்பதால், எஜமானருடைய மனசு பட்டணத்திலேயே நாட்டமுடையதா யிருந்தது; உங்களுக்கு உடனே தந்தி யனுப்ப நினைத்தோம்; ஆனால் விலாசம் நிச்சயமாகத் தெரியவில்லை. ஆகையால், இந்த ஆளையே அனுப்பினோம். அவ்விடத்து விஷயங்களை அறிய வேண்டு மென்று எங்களுடைய மனம் துடிப்பது அளவிலடங்காது; எங்களுடைய ஆவல் சகிக்கக்கூட வில்லை. எங்கள் மேல் அன்பு கூர்ந்து உடனே விஷயங்களைத் தெரிவிக்க வேண்டுமாய் தங்கள் பாதங்களில் சாஷ்டாங்க தெண்டனிட்டுக் கேட்டுக் கொள்ளும் தங்கள் நிரந்தரமான சேவகன் ரெங்கராஜு.”
என்று மேனகா கடிதத்தை முற்றிலும் மிகவும் பாடுபட்டுப் படித்து முடித்தாள். எத்தகைய கல் நெஞ்சரது மனத்தையும் இளக்கி உருக்கத்தக்க அத்தனை விஷயங்களைக் கொண்ட கடிதத்தை எவரும் படித்திருக்க மாட்டார்களென்பது மிகைப்படக் கூறிய தாகாது. கடிதத்தின் முடிவிலிருந்த விஷயங்களை உணர்ந்த வராகசாமி, மேனகா, கனகம்மாள், தங்கம்மாள் ஆகிய நால்வரும் எப்படிப்பட்ட நிலைமையில் இருந்தார்களென்பதை விவரித்துரைப்பதும் தேவையோ! அவர்கள் நால்வரும் தங்களுடைய பூத உடம்போடு அப்படியே சொர்க்க லோகத்தை யடைந்தவரைப்போலாயினர். சாம்பசிவத்திற்கு நேர்ந்த துன்பங்களையும், ரெங்கராஜுவின் நிகரற்ற ஜீவகாருணிச் செயல்களையும், இறுதியில், கருணைவள்ளலாராகிய ஜெகதீசனது அருள் நோக்கால், தமது பேரிடர்களெல்லாம் சூரியன் முன் இருளெனப் பறந்து போனதையும் மாறி மாறி நினைத்து நினைத்து நெக்குநெக் குருகி வாய்பேசா மங்கையராய் இன்பத்திலும் துன்பத்திலும் ஆழ்ந்து மிதந்து போயினர்.
சில நிமிஷங்களுக்குப் பிறகு தெளிவடைந்த வராகசாமி, கனகம்மாளை அன்போடு, “பாட்டீ! எனக்கு உடம்பு சௌக்கியமாகி விட்டது. நாமெல்லோரும் இப்போதே புறப்பட்டு செங்கற்பட்டுக்குப் போவோம்” என்று கரை கடந்த மகிழ்ச்சியோடு கூறினான். அதைக் கேட்ட மேனகா, தன் கணவனது இணையற்ற அன்பையும், பற்றையும் கண்டு பெருங்களிப்பும் புன்னகையும் கொண்டு, “சரிதான்; காலைக் கீழே ஊன்றினால், முழங்காலில் இன்னமும் வலி உண்டாகிறதே. இந்த நிலைமையில் அவ்வளவு தூரம் பிரயாணம் செய்யலாமா? டாக்டர் துரைஸானியைக் கேட்டுக் கொண்டு நாளைக்காவது மறுநாளாவது போகலாம். உங்களுக்கும் அம்மாவுக்கும் உடம்பு செளக்கியமாய் விட்ட தென்று ஒரு தந்தியனுப்புவோம்; அது போனால் அவர்களுக்கு ஆறுதலா யிருக்கும்” என்றாள். அதைக்கேட்ட வராகசாமி ல்லை இல்லை; முழங்காலில் எனக்கு அவ்வளவு வலி உண்டாக வில்லை; இங்கிருந்து வாடகை மோட்டார் வண்டி அமர்த்திக் கொண்டு ரயிலுக்குப் போவோம். என்னை மெதுவாக ரயிலில் கொண்டுபோய் விட்டு விடுங்கள். நாம் எல்லோரும் முதல் வகுப்பு வண்டியில் ஏறிப் போவோம்; இந்தப் பிரயாணம் கொஞ்சமும் கஷ்டமாயிருக்குமென்பது தோன்றவில்லை. எனக்கு, மாமாவை உடனே பார்க்கவேண்டு மென்னும் ஆவல் துடிக்கிறது; இங்கே இருப்பதும் நெருப்பின் மேலிருப்பதைப்போல இருக்கிறது; வைத்தியத்தில் கைதேர்ந்த பெரிய டாக்டர் துரைஸானியாகிய நீயே என்னோடு கூட வரும் போது, எனக்கு என்ன கெடுதல் உண்டாகப் போகிறது. உடனே போவதே சரி” என்று மகிழ்ச்சியோடும் நயமாகவும் வற்புறுத்தியும் கூறினான்.
அதைக் கேட்ட மேனகா புன்னகை பூத்த முகத்தோடு, “அப்படியானால் தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம். தங்களுடைய உத்தரவுக்குமேல் இனி அப்பீல் ஏது? இங்குமில்லை அங்குமில்லை; பாட்டீ! நம்முடைய கிட்டன் எங்கே காணோமே?” என்றாள்.
அதைக் கேட்ட கனகம்மாள், “அவன் முன் கோபி; மகா முரடன்; இந்தக் கலகத்தில், அவன் ஏதாவது முரட்டுத்தனமான காரியம் செயது விடப்போகிறானே என்று பயந்து நான் அவனைப் பங்களாவுக்கு வெளியில் போயிருக்கும்படி அனுப்பிவிட்டேன். அவனை அழைத்து மோட்டார் வண்டி கொண்டுவரும்படி சொல்லுகிறேன்” என்று கூறியவண்ணம், வெளியிற் சென்று அங்கிருந்த கிட்டனைக் கண்டு, உள்ளே நிகழ்ந்த சம்பவங்களை அவனிடம் சுருக்கமாகக் கூறி மோட்டார் வண்டி யொன்று கொண்டு வரும்படி அவனை அனுப்பி உள்ளே வந்தாள்.
அவன் மோட்டார் வண்டி கொண்டு திருப்பிவர அரை நாழிகை நேரமாயிற்று. அதற்குள், மேனகா, நிகழ்ந்த விஷயங்களை யெல்லாம் சுருக்கமாக இரண்டு கடிதங்களில் எழுதி ஒன்றில் நூர்ஜஹானது விலாசமும், மற்றொன்றில் டாக்டர் துரைஸானியின் விலாசமும் எழுதி அவற்றை உடனே தபாலில் போடும்படி பங்களாவின் வேலைக்காரியிடம் கொடுத்தனுப்பினாள்.
அதன் பிறகு சிறிது நேரத்தில், வராகசாமி,கிட்டன், கனகம்மாள், தங்கம்மாள், மேனகா முதலிய யாவரும் மோட்டார் வண்டியில் அமர்ந்து குதூகலமாக எழும்பூர் ஸ்டேஷனை நோக்கிச் சென்றனர்.
அதிகாரம் 28 – கண்டு முதல்
அதன்பிறகு மூன்று மாதகாலம் சென்றது. தஞ்சையில் ரயிலடிக்கருகில் ஒரு பெருத்த பங்களா விருந்தது. அது அரைக்கால் மயில் நீள அகலமுள்ள மதில்களால் சூழப்பட் டிருந்தது. தென்னை, கமுகு, மா, பலா, மாதுளை முதலிய தருக்கள் அடர்ந்த சோலையில் மயில்களும், மான்களும், குரங்குகளும் துள்ளி விளையாடின. குயில்கள் ஓயாமல் தமது தீங்குரலைக் கிளப்பி வீணாகானம் செய்து கொண்டிருந்தன. வரிசை வரிசையாக வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்த பூந்தொட்டி களும், இங்கிலீஷ் குரோடன்களும் இரமணீயமாக அமைந்து காண்போர் கண்களையும் மனதையும் குளிர்வித்தன; எங்கும் வெண்கலச் சிலைகளின் வழியாக வெளிப்பட்டதண்ணீர், மழை பெய்தலைப்போல, புல்லடர்ந்த தலையிலும், பூஞ்செடிகளிலும் தாரை தாரையாக வீழ்ந்து குளிர்ச்சி செய்துகொண்டிருந்தது. பல்லாண்டுகளாக உயர்ந்து வளர்ந்த விழுதுகளை ஆயிரக்கால் மண்டபம் போல விடுத்து கம்பீரமாக நின்ற ஆலமரங்கள் எண்ணிறந்தவை, ஆங்காங்கு நின்று அந்த பங்களாவுக்குள் சூரிய வெப்பம் நுழையாதவாறு தடுத்துக் கொண்டிருந்தன. அந்த ஸ்தலம் ஒரு பெருத்த ரிஷியாசிரமம் போல அமைந்து, அதற்குள் செல்வோரைப் பரவசப்படுத்தி அவர்களது மனதில் பிரம்மானந்தத்தையும் சாந்தியையும் உண்டாக்கியது. அந்த உன்னதமான பங்களாவின் வாசலில் மதிட்சுவரின் இரண்டு பக்கங்களிலும் பளபளவென மின்னிய ரண்டு பித்தளைத் தகடுகள் அடிக்கப்பட்டிருந்தன. வலது பக்கத்திலிருந்த தகட்டில், ”தஞ்சை ஜில்லா கலெக்டர் சாம்பசிவம்” என்ற விலாசமும், இடது பக்கத்திலிருந்த தகட்டில், “தஞ்சை சப் ஜட்ஜ் வராகசாமி ஐயங்கார்” என்ற விலாசமும் காணப்பட்டன. அங்கு வருவோரைப் புன்னகை செய்து வரவேற்பவைபோல எதிரில் தோன்றிய பூந்தொட்டி களின் அணிவகுப்பு அமைக்கப்பட்டிருந்த அழகிய மூன்றடுக்கு மெத்தையுள்ள மாளிகை கம்பீரமாக நின்றது. அதன் வாசலில் வெள்ளிவில்லை, டாலி, டவாலி முதலிய அலங்காரங்களுடன் எண்ணிறந்த சேவகர்களும் போலீஸ் ஜெவான்களும் ஓசை செய்யாமல் பயபக்தியோடு நின்றும் உட்கார்ந்தும் காணப்பட்டனர்.
அந்த மாளிகையின் இரண்டாவது மெத்தையில் மிகவும் சிங்காரமாக அழகுபடுத்தப்பட்டிருந்த ஒரு கூடத்தில் சாம்பசிவையங்கார் சாய்மான நாற்காலி யொன்றில் படுத்திருந்தார். சுவர்ண விக்கிரகம்போல வொளிர்ந்த தங்கம்மாள் அவருக்குப் பின்புறத்தில் மறைவாக உட்கார்ந்துகொண்டு சிறிதளவு கிழிந்துபோயிருந்த தனது பட்டு ரவிக்கையைத் தைத்துக் கொண்டிருந்தாள். சாம்பசிவத்திற்கு எதிரில் கொஞ்சதூரத்திற்கப்பால், வெள்ளிக் குமிழ்கள் வைக்கப்பட்ட அகன்ற வழுவழுப்பான கருங்காலி மணைப் பலகையொன்றின் மேல் நார்மடிப்புடவை, துளசிமணி மாலை, மூக்குக்கண்ணாடி முதலிய அலங்காரங்களுடன் கனகம்மாள் மிகவும் ஆசாரமாக உட்கார்ந்திருந்தாள். அவளது கையில் பழைய காலத்துப் புஸ்தகமொன்று இருந்தது. அதன் முதல் பக்கத்தில், “துலா காவேரிப் புராணம்” என்ற எழுத்துகள் காணப்பட்டன. சற்று தூரத்திலிருந்த ஒரு புஸ்தக பீரோவின் மறைவில் ரெங்கராஜு அடக்கவொடுக்கமாக நின்று கொண்டிருந்தான்; அவனது உடம்பில் அப்போது சேவகன் உடைகள் காணப்படவில்லை. அவனும் ஒரு உத்தியோகஸ் தனைப் போலக் காணப்பட்டான்.
அவர்கள் நால்வரும் கபடமின்றி, மனத்தை விட்டு ஒருவரோடொருவர் அந்தரங்கமான அன்போடு ஏதோ விஷயங்களைப் பற்றி சந்தோஷமாகப் பேசி மகிழ்வடைந் திருந்தனர்.
அந்தச் சமயத்தில் சாம்பசிவம் கனகம்மாளைப் பார்த்து, “ரெங்கராஜுவுக்கு மாத்திரம் இங்கிலீஷ் தெரிந்திருந்தால், அவனுக்கு நான் ஒரு தாசில் வேலை செய்து வைத்திருப்பேன். அவனும் அந்த வேலையைத் திறமையாகப் பார்ப்பான். அந்த வேலை பார்ப்பதில் என்ன கஷ்டமிருக்கிறது. ஒன்றுமில்லை. வெறும் மிரட்டல்தான்” என்றார்.
அதைக் கேட்ட கனகம்மாள், “அவன் வேறே எந்த உத்தியோகத்துக்கும் போகவேண்டாம்; நம்முடைய பங்களாவுக்கே அவன் தாசில்தாராக இருக்கட்டும்; இந்தத் தாசிலுக்கு உங்களுடைய இங்கிலீஷ் பாஷையே வேண்டாம்; சர்க்காரில் தாசில்தாருக்குக் கொடுக்கும் சம்பளம் எவ்வளவோ அதை நீ கொடுத்துவிடு” என்று கூறினாள். சாம்பசிவம் “அப்படியே செய்வோம்” என்று ஒப்புக்கொண்டார்.
பிறகு கனகம்மாள் ரெங்கராஜுவைப் பார்த்து, “அப்பா ரெங்கராஜு!அப்படியே உட்கார்ந்துகொள்; எத்தனை நாழிகை நிற்கிறது பாவம்!” என்று நிரம்பவும் உருக்கமாகக் கூறினாள்.
அதைக் கேட்ட ரெங்கராஜு சிறிது லஜ்ஜை அடைந்து பணிவாகத் தனது இரு கைகளையும் கூப்பி, “அம்மா! தாங்கள் பிரம்மகுலம்; நான் எவ்வளவு தங்களுடைய அபிமானத்தை யடைந்தாலும், நான் சேவகன்தானே; தங்களுக்கு நான் தொண்டு செய்யவே பிறந்தவன். எனக்கேன் அவ்வளவு பெருமை!” என்றான். அவனது உண்மையான பணிவையும் நற்குணத்தையும் கண்ட சாம்பசிவம், கனகம்மாள் ஆகிய இருவரது உள்ளமும் பூரித்துப் பொங்கியது.
கனகம்மாள், “அப்பா! ரெங்கராஜு! உன்னை நாங்கள் அன்னியனாகவே பாவிக்கவில்லை. நீ வேறென்றும் சாம்பசிவம் வேறென்றும் நான் எண்ணவே இல்லை. நீ முதற் பிள்ளை, சாம்பசிவம் இரண்டாவது பிள்ளை” என்று அன்பொழுகிய மொழிகளால் கூற, அவன் பெரிதும் நாணமடைந்து உட்காராமல் நின்று கொண்டே இருந்தான்.
பிறகு சில நிமிஷங்கள் வரையில் பேசாமலிருந்த சாம்பசிவம் கனைத்துக் கொண்டு, “நான் கலெக்டராக வந்த இந்த மூன்று மாச காலத்துக்குள் இந்த ஊரில் எத்தனை மாறுதல்கள்! பழைய உத்தியோகஸ்தர்கள் எல்லோரும் போய்விட்டார்களே! இப்போது எல்லாம் புது முகமாகவே இருக்கிறதே!” என்று வியப்போடு கூறினார்.
கனகம்மாள்:- அப்படி யார் போய்விட்டார்கள்?
சாம்பசிவம்:- பெரிய கலெக்டர் துரை சீமைக்குப் போய்விட்டார். கஜானா டிப்டி கலெக்டர் விளக்கெண்ணெய் சுப்பராய ஐயர் உபகாரச் சம்பளம் வாங்கிக் கொண்டு போய் விட்டார். போலீஸ் சூபரின்டெண்டெண்டோ திருச்சிக்கு மாற்றலாகி போய்விட்டார்; போலீஸ் இன்ஸ்பெக்டர் புளுகுமலைப் பிள்ளையோ போலீஸ் ஸ்டேஷனில் அடைக்கப்பட்டிருந்த ஒரு திருடனை முரட்டுத் தனமாக அடித்துக் கொன்றதற்காக தீவாந்திர சிட்சை யடைந்து அநியாயமாகக் கெட்டுப்போய்விட்டார். நம்முடைய தாசில்தார் தாந்தோனிராயர் தான், நான் பெரிய கலெக்டராக வரப்போகிறேன் என்பதைக் கேட்டவுடன் ரஜா வாங்கிச் கொண்டு தம்முடைய சொந்த ஊராகிய நாமக்கல்லுக்குப் போய் விபரீதமான நிலைமையி லிருக்கிறார். இந்த மாதிரி எல்லோரும் போய்விட்டார்கள்.
கனகம்மாள்:- எனக்கு மற்றவரைப்பற்றியெல்லாம் அவ்வளவு விசனமில்லை. ஊருக்குப் போன இடத்தில் தாந்தோனிராயருக்கு வந்த ஆபத்தை நினைக்க நினைக்க எனக்கு நிரம்பவும் விசனமாக இருக்கிறது. ஏனடா! ரெங்கராஜு! அவருக்குச் சொத்து ஏராளமாக உண்டா? அவருக்குப் பக்கவாதம் (பாரிசவாதம்) வந்து கைகால் களெல்லாம் இழுத்துக் கொண்டு போய்விட்டதாம்; அதற்கு எல்லாப் பணமும் செலவாய் விட்டதாம். அந்த நோயும் தீராதாம். இந்த நிலைமையில் அவருடைய பெண்டு பிள்ளைகள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்?
ரெங்க:- நாங்கூட அப்பிடித்தான் கேள்விப்பட்டேன். அவுரு இருந்தவரையிலே பணத்தை யெல்லாம் சேத்து சேத்து மொத்தமாகத் தேவிடியாளுக்குக் கொடுத்து வந்தாரு. இப்போ ஊட்டிலே ஒரு காசுக்குக் கூட வழியில்லை. அவரோட பெண்சாதி பிள்ளைங்களெல்லாம் பெரிய மனிசரிடத்தி லெல்லாம் போயி யாசகம் வாங்கி வந்து அவருக்குக் கஞ்சி வாக்கிறாங்களாம்.
கனக: ஆகா என்ன உலகம் இது! என்ன தலைவிதி! அடுத்த நிமிஷத்தில் நமக்கு எவ்விதமான கேவல நிலைமை உண்டாகும் என்பது தெரிகிறதே இல்லையே; என்ன உத்தியோகம்! என்ன வீண் பெருமை! எனக்கு ஒன்றும் பிடிக்கவில்லை – என்றாள்.
அதைக் கேட்டு சிறிது நேரம் பேசாம லிருந்த சாம்பசிவம், “எனக்கு இதெல்லாம் ஆச்சரியமாகத் தோன்றவில்லை. ரெங்கராஜுவுக்கு நாநூறு ரூபாய் கொடுத்த கிழவனாகிய ஹீராசாமி ராவ் ஒரு நாளைய ஜுரத்தில் திடீரென்று செத்துப் போனதை நினைக்க நினைக்க, என் மனம் சந்தோஷத்தினால் பூரித்துப் போகிறது” என்று கூறி குழந்தையைப்போல சந்தோஷங் காட்டிப் புன் முறுவல் செய்தார்.
அதைக் கேட்ட கனகம்மாள் அன்பொழுக, “தெய்வ மில்லாமலா உலகத்தின் காரிய மெல்லாம் நடக்கிறது. எவ்வளவோ அருமையான குணமும், தயாள மனசையும் உடைய நம்முடைய ரெங்கராஜுக்கு ஈசுவரன் ஒருநாளும் குறைவு வைக்கமாட்டான். பத்மாவதிபாயின் புருஷன் திருச்சிராப்பள்ளியில் இருக்கும்போது, ஹீராசாமிராவ் பணத்தைக் கொடுத்து விட்டதனால் மாத்திரம், அவனுக்கு அவள் கிடைத்துவிடுவாளா! நல்ல அழகான வாலிபனுமான படித்தவனுமான சுந்தரராவ் காத்துக்கொண்டிருக்கையில், ஹீராசாமிராவல்ல, இன்னும் இந்த தேசத்து மகாராஜா ஆசைப்பட்டாலும் காரியம் பலிக்குமா? பத்மாவதிபாயி குழந்தையா யிருந்தாலும், அவளுடைய பெரும் புத்தியும், ஜீவகாருண்யமும் பெரியவர்களுக்குக்கூட வராது. அப்பேர்ப் பட்ட தங்கமான பெண் கலங்கியழும்படி ஈசுவரன் விடு வானோ? ஒருநாளும் விடமாட்டான். உலகத்தை யெல்லாம் படைத்துக் காத்தருள்பவனும் எல்லா வற்றையும் மறைவாக இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் சர்வக்ஞனுமான பகவானுக்கு நல்லவர்களைக் காத்து ரக்ஷிக்கத் தெரியாதா?” என்று மிகவும் உருக்கமாகக் கூறினாள்.
உடனே சாம்பசிவம் ரெங்கராஜுவை நோக்கி “இந்த சுந்தரராவ் உன்னுடைய அத்தை பிள்ளையா” என்றார்.
ரெங்க:- ஆமாங்க.
கனக:- பெண்ணுக்கு அவனைக் கலியாணம் செய்து கொள்ள ஆசைதானே?
ரெங்க:- ரொம்ப ஆசை. அவனை இங்கேயே கொண்டாந்து வச்சுக்கணும். அவுங்க ரெண்டுபேரும் சந்தோஷ மாக இருக்கணுமுன்னுதான், எஜமான் கலியாணத்துக்காகக் குடுத்த ரெண்டாயிர ரூபாயிக்கும் நல்ல ஒரு மச்சு வீடு வாங்கினேன்.
கனக: நல்ல யோசனைதான். அவனுக்கு இங்கேயே ஏதாவது உத்தியோகமும் செய்து வைத்து விடலாம் – என்றாள்.
அப்போது அந்த அறையின் வாசற்படியில் ஓசையின்றி ன்னொரு சேவகன் வந்து நின்று, ரெங்கராஜுவைப் பார்த்து ஒரு தபாற்கடிதத்தை நீட்டினான்; அதைக் கண்ட ரெங்கராஜு விரைவாகப் போய் அந்தக் கடிதத்தை வாங்கி, சாம்பசிவத் தினிடம் சென்று பணிவாக நீட்டினான். அதை அவர் வாங்கி மேல் விலாசத்தைப் பார்த்து விட்டு, “குழந்தை மேனகாவுக்கு வந்திருக்கிறது; கொண்டுபோய்க் கொடுத்து விட்டு வா!” என்றார். அதைக் கேட்ட கனகம்மாள், “எந்த ஊர் முத்திரை போட்டிருக்கிறது பார்!” என்றாள்.
சாம்பசிவம் அதைப் பார்த்து, ”பட்டணத்திலிருந்து வந்திருக்கிறது” என்றார்.
கனகம்மாள், “நூர்ஜஹான் எழுதியிருப்பாள்; சரி; சீக்கிரமாய்க் கொண்டுபோய்க் கொடு. மாப்பிள்ளையும் உள்ளே இருக்கிறார். வெளியிலிருந்தே கூப்பிட்டுக் கொடு” என்று கூறினாள்.
உடனே ரெங்கராஜு அதை வாங்கிக்கொண்டு மூன்றாவது மாடிக்கு ஏறிச் சென்றான்.
மூன்றாவது மாடத்தில் இந்திர விமானம் போலவும், மன்மதனது சயனக்கிரகம் போலவும் கட்டில்கள், மெத்தைகள், ஸோபாக்கள், படங்கள், நிலைக்கண்ணாடிகள், மின்சார விசிறிகள், முதலிய எண்ணிறந்த பொருட்களால் அலங்கரிக்கப் பட்டிருந்த கூடத்தில் ஸோபாவைப்போல மெத்தை தைத்த பெருத்த நாற்காலி யொன்றில் வராகசாமி சந்தோஷமாய் சாய்ந்து கொண்டிருந்தான். அவனது காதிலும், கைகளிலும் வைரங்கள் ஜிலுஜிலென்று மின்னின. இரத்தின கம்பளம் விரிக்கப்பட்ட சுத்தமான தரையில் கோமளாங்கியான மேனகா உட்கார்ந்துகொண்டு, வராகசாமியின் காலை எடுத்துத் தனது மடியின்மீது வைத்துக்கொண்டு விரல்களோடு ஏதோ விஷமம் செய்துகொண்டும், அவனை நோக்கி சல்லாப வார்த்தைகளை மொழிந்துகொண்டும் இருந்தாள். அன்பும், பணிவும் வடிவெடுத்த இன்பக் களஞ்சியமென உட்கார்ந்திருந்த அந்தப் பெண் பாவையின் மேனி முழுதிலும் வைரங்கள் நட்சத்திரங் களைப்போல சுடர்விட் டெரிந்தன. அவ்விரு யௌவனப் பருவத்தினரும் விண்ணுலகத்தைச் சார்ந்த கந்தருவ வகுப்பாரோ வென ஐயுறும்படி அற்புத ஜோதியாக விளங்கினர். அவர்கள் எவ்விதமான துன்பத்தையும் அடையாதவரைப்போல முழு மகிழ்வடைந்தவராகக் காணப் பட்டனர். மேனகாவின் வனப்போ முன்னிலும் ஆயிரம் மடங்கு அதிகரித்துத் தோன்றின தாயினும், அவளது நடத்தை மாத்திரம் மாறுபடாமலே இருந்தது. அதற்குமுன் அவள் தனது கணவனோடிருக்கையில் குதூகலமாகவும், ஹாஸ்யமாகவும், அடிக்கடி பேசி, அவனை மகிழ்விக்க முயலுவாள். இப்போதோ, எதிர்பாராத பெருத்த விபத்திற்பட்டு மீண்ட பிறகு, அவள் ஹாஸ்யமாகப் பேசுவதையே அடக்கிக் கொண்டாள். ஏனெனில் தன்னை தனது கணவன் பெருத்த ஸாகவஸி என்ற நினைத்துவிடுவானோ என்ற அச்சத்தினால் அவ்வாறு தனது நடத்தையை மாற்றிக் கொண்டாள். எப்போதும், அவனிடம் பணிவு, அந்தரங்கமான வாஞ்சை, கபட மின்மை, மனதிற் குகந்தவிதம் ஒழுகுதல் முதலிய குணங்களையே கொண்டவளாய், நாராயணனோடு கூட இருந்து அவனுக்குத் தேவையானவாறு அமைந்து சுகங் கொடுக்கும் ஆதிசேஷனைப்போலவும், உயிரோடு ஒன்றுபடும் உடல் போலவும், உடலோடு பொருந்தி நிற்கும் நிழல் போலவும் அவள் தனது கணவனிடம் ஒழுகினாள். அவளை வராகசாமி மனதென்றே சொல்லலாம். அவனுக்கு எது இன்பகரமானதோ அதுவே அவளுக்கும் இன்பகரமானது. அவனை மகிழ்விப்பதையே அவள் பெருத்த பாக்கியமாக மதித்தாள்; கதை சொல்லச் சொன்னால் கதை சொல்லுவாள்; காலைப்பிடி என்றால் அப்படியே செய்வாள். அவனுக்கு சேவை செய்வதில் எத்தனை இரவு பகல்கள் கழியினும் அவளுக்குச் சலிப்பென்பதே கிடையாது. அவனும் அவளைத் தனது உயிர் நிலையாகவும், எவருக்கும் கிடைக்காத ஒப்பற்ற பெருத்த பாக்கியமாகவும் மதித்தான். அவன் கச்சேரியில் வேலை செய்யும்போதுகூட மேனகாவின் இங்கித வடிவமே அவனது கண்களின் முன்பு தாண்டவமாடி நிற்கும்; அவ்வாறு அவர்கள் நொடியேனும் இ ணைபிரியாத ஜோடிப் புறாக்களைப்போலவும், நாகணவாய்ப் புட்களைப்போலவும், அன்றிலிணையைப் போலவும், ஓயாமல் ஒன்று பட்டிருந்தன ரெனினும், பழகப் பழக பாலும் புளிக்கு மென்னும் பழ மொழிக்கு மாறாக அவர்களிருவரது ஜீவனும் மனமும் காந்தமும் இரும்பும்போல ஒன்றுபட்டு ஓருருக் கொண்டன. அவர்களது நட்பு கரும்பை நுனியிலிருந்து தின்று கொண்டு அடிக்குப்போவதைப்போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் அதிகரிக்கும் இன்பம் பயப்பதாயும், சுவையுடைய தாயும் வளர்ந்து வந்தது. மேனகாவோ தான் ஜில்லா கலெக்டரது ஒரே பெண்ணென்பதையும், சப் ஜட்ஜியின் மனைவி யென்பதையும் சிறிதேனும் பாராட்டாமலும், செருக்கடையாமலும், தான் கணவனுக்கு உகந்தவிதம் நடக்க வேண்டிய மனைவி யென்பதையே கடைப்பிடித் தொழுகி வந்தாள். தற்காலத்தில் திடீரென்று பெரிய பதவிகளுக்கு வருபவரது மாளிகையி லுள்ள சில பெண்டீரைப்போல தனிமையில் சேவகர்களோடும் மோட்டார் வண்டிகளில் அமர்ந்து உவாவுவதும், சாமான்கள் வாங்கப் போகிறதும், சமையற்காரர் சேவகர் முதலியோருடன் லஜ்ஜையின்றிப்பேசி ஆண்பிள்ளைகளைப்போல அதிகாரம் செலுத்தி பிறர் சந்தேகமும் கொள்ளத் தகுந்த விதத்தில் ஒழுகுவதும் மேனகாவுக்குச் சிறிதும் பழக்கமில்லை. துலையில் கனமுள்ள தட்டு தாழும், கனமில்லாதது உயரும் என்பதைப்போல, அடங்கி வொடுங்கி, இன்பங் கொடுப்பதாம் இன்பமடைந்து, அன்போடு வாழ்வதே அழகிய வாழ்வென நினைத்து, அவள் படிதாண்டாப் பத்தினியாக இருந்து, கண்டோர் வியக்கும் வண்ணம் நடந்து, பெண் தெய்வம் போல இருந்து வந்தாள்.
இத்தகைய அரிய இளங்காதலர் ருவரும் முன் சொன்னவாறு மகிழ்வே உருவாக உட்கார்ந்திருந்தபோது, ரெங்கராஜு வாசற்கதவை மெதுவாகத் தட்டி, “அம்மா! அம்மா!” என்று கூப்பிட்டான்.
அவனது குரலை அறிந்த மேனகா திடுக்கிட்டெழுந்து வந்து கதவைத் திறக்க, சென்னையிலிருந்து வந்த கடிதத்தை அவன் மரியாதையாக அவளிடம் கொடுத்துவிட்டு அப்பாற் சென்றான்; அது தனது கணவனுக்கு வந்ததோ வென்று ஐயமுற்று அவள் உடனே மேல் விலாசத்தைப் பார்த்தாள். அதில் தனது பெயரே இருந்ததையும், அது நூர்ஜஹானது கையெழுத்தாக இருந்ததையும் காணவே, அவளது முகத்தில் அன்பும் ஆநந்தமும் பூத்தன; ‘நூர்ஜஹான் கடிதம் எழுதி யிருக்கிறாள்” என்று குயில்போல இனிமையாகக் கூறிய வண்ணம் அவனுக்கருகில் வந்தாள்; சமீபத்தில் வந்த அப்பொற்கொடியை வராகசாமி கரைகடந்த அன்போடு இழுத்து, தான் உட்கார்ந்திருந்த நாற்காலியில் தனது பக்கத்தில் உட்கார வைத்து, இடது கரத்தால் அவளை அணைத்துக் கொண்டு, “எங்கே வாசி: என்ன எழுதியிருக்காள் என்று பார்க்கலாம்” என்று கூற, மேனகா கடிதத்தைப் பிரித்து, அடியில் வருமாறு படிக்கலானாள்:-
‘அரிய சகோதரீ! மேனகா! நீ மிகுந்த அன்போடு எனக் கெழுதிய கடைசி கடிதம் வந்தது. பார்த்து நிரம்பவும் மகிழ்வடைந்தேன். நான் இதுவரையில் எத்தனையோ புஸ்தகங்களில் கதைகள் படித்திருக்கிறேன்; அநுபவத்திலும் எத்தனையோ ஸ்திரீகளைக் கண்டிருக்கிறேன். ஆனால், உன்னுடைய நற்குணத்தைப் பெற்றிருந்த பெண்களை நான் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை” என்று மேனகா முதல் வாக்கியத்தைப் படித்தாள். அதைக் கேட்ட வராகசாமி கரை கடந்த மகிழ்வடைந்து, “ஆம்! உண்மையான விஷயம்” என்று கூறி மேனகாவின் கன்னத்தில் ஆசையோடு முத்தமிட்டு மேலே படிக்கும்படி தூண்டினான். மேனகா மேலும் படிக்கிறாள், ”என்றாலும், நானும் என்னுடைய தகப்பனாரும் செய்த அற்ப உதவியை மலையாக வளர்த்து, அதைப் பெரிதும் பாராட்டி நீ எழுதியிருப்பது என் மனதிற்கு நிரம்பவும் கஷ்டமாக இருந்தது; இனிமேல் அந்த விஷயத்தைப் பற்றி எழுதாமலிருக்கக் கோருகிறேன்.
இன்னொரு முக்கியமான விஷயத்தை உனக்குத் தெரிவிக்க நான் விரும்புகிறேன். போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சீவி ஐயரென்பவர் செய்த சில அருமையான தந்திரங்களினால் என்னுடைய புருஷர் தமது பழைய நினைவுகளை யெல்லாம் சுத்தமாக விடுத்து இப்போது புதிய மனிதராக மாறிவிட்டார். அவர் இப்போது என்னிடத்தில் உண்மையான அன்பையும், காதலையும் கொண்டு நற்குணப் புருஷராக ஒழுகி வருகிறார். நாங்கள் இருவரும் திரும்பவும் சந்தோஷமாக காலம் கழித்து வருகிறோம். ஆண்டவன் அருளால் இனி எப்போதும் நாங்கள் இப்படியே இருப்போமென்று நிச்சயமாக நான் நினைக்கிறேன்; நேற்றிரவு என்னுடைய தகப்பனாரின் பங்களாவுக்கு நான் போயிருந்தேன். அப்போது உங்களுடைய யோகக்ஷேமங் களைக் கேட்டு என் தகப்பனார் மிகவும் ஆநந்த மடைந்தார்; உன்னுடைய புருஷனுக்குத் திடீரென்று தானாக சப் ஜட்ஜி உத்தியோகம் ஆனதாகவும், அது யாருடைய சிபார்சினால் ஆனதென்பதைப்பற்றி என்னுடைய தகப்பனாரிடம் கேட்டெழுதும்படி நீ எழுதியிருந்தா யல்லவா? அதைப்பற்றி நான் அவரிடம் கேட்டேன். அவர் தாமே கவர்னரிடம் சிபார்சு செய்து அந்தவேலை கொடுக்கும்படி செய்ததாகவும், அந்த விஷயத்தை ரகசியமாக வைத்துக் கொள்ளும்படியாகவும் என்னிடம் தெரிவித்தார். இதை உன்னுடைய பர்த்தாவிடம் சொல்லவும்.
நான் இன்றைய காலையில் இன்னொரு விஷயம் என் புருஷனிடம் கேள்விப்பட்டேன். அதுவும் உனக்கு அவசியம் தெரியவேண்டியதே. எங்களுடைய கடையில் குமாஸ் தாவாவும்,என் புருஷனுக்கு துர்மந்திரியாகவு மிருந்து உன் விஷயத்தில் வஞ்சகம் செய்தவரான சாமாவையருடைய கேஸ் நேற்றோடு முடிவடைந்ததாம். அவர் பங்களாவை விற்ற விஷயத்தில் பொய்யான பத்திரம் தயார்ப் படுத்தியதற்காகவும், ஆள் மாறாட்டத்திற்காகவும் ஐந்து வருஷம் கடினக் காவல் தண்டனை அடைந்தாராம். அதைக் கேட்க, நிரம்பவும் விசன முண்டாகிறது. அவருடைய கதி, கெடுவான் கேடு நினைப்பான் என்றபடி யானது.
தவிர, உன் விஷயத்திலும், என் விஷயத்திலும் கைம்மாறு கருதாது எவ்வளவோ பாடுபட்டு உதவி செய்த போலீஸ் ன்ஸ்பெக்டருக்கு சமீப காலத்தில் போலீஸ் கமிஷனர் உத்தியோகம் கிடைத்திருக்கிறது; அவருடைய நற்குணத்திற்கும் சாமர்த்தியத்திற்கும் அந்தப் பதவி ஒரு பெருத்த சன்மானமா காது. ஆனால், அதிசீக்கிரம் அவர் இன்னம் உயர்ந்த பதவிக்கு வருவாரென்று என்னுடைய தகப்பனார் சொல்லுகிறார். நீ உன்னுடைய கடிதத்தில் கேட்டுக் கொண்டபடி என்னுடைய தகப்பனார் இந்த சஞ்சீவி ஐயரை விடுத்து உன்னுடைய நாத்திமார்களைத் தேடச் செய்தார்; அவர் அவர்களைத் தேடிப்பாராத இடமே சென்னையில் இல்லை; அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அவமானத்தைச் சகிக்க மாட்டாமல் அவர்கள் கிணற்றில், குளத்தில் விழுந்து உயிரை விட்டார்களோ, அல்லது தூரதேசத்திற்குப் போய் ஒளிந்து கொண்டிருக்கிறார்களோ ஒன்றும் தெரியவில்லை. பிறவியி லேயே துர்புத்தியைக் கொண்டு அதிலேயே பழகிவந்தார்கள். எப்போதும் அதன் படியேதான் நடந்து கொண்டிருப்பார்கள். பிறர் எவ்வளவு நற்புத்தி புகட்டினாலும், வருந்தினாலும் அவர்களது மனமும் குணமும் நடத்தையும் மாறவே மாறா தென்பது உலக அநுபவ மல்லவா! தவிர நீயோ மிகவும் தயாள குணமுடையவள்; உன்னுடைய நாத்திமார்கள் திரும்பி வந்தாலும் அவர்களைச் சிறிதும் துன்பப் படுத்த உனக்கு மனமிராது. நிற்க, அப்படிப்பட்ட கொடிய துஷ்டர்களை நீங்கள் உங்களோடு கூடவைத்துக் கொள்ளுவதும் தவறு, ஆதலால், அவர்கள் இவ்வாறு காணாமற் போனதே அனுகூலமான காரிய மென்பது என்னுடைய நினைவு; நடப்ப தெல்லாம் நன்மைக்கே என்பது பொய்யாகாதல்லவா!
ஆனால், என்னுடைய எஜமானர் மறுபடியும் இவ்வளவு நல்லவராக மாறுவாரென்று நான் கனவிலும் நினைக்க வில்லை. ஆண்டவனருளால் நான் இப்போது மிகவும் சந்தோஷமாக இருந்து வருகிறேன். உன்னை இன்னொரு முறை எப்போது பார்ப்போ மென்னும் ஆவல் ஒன்றே என் மனத்தை வதைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கும் ஆண்ட வனுடைய அருள் எப்போது உண்டாகுமோ தெரியவில்லை.
நான் இன்று காலையில் நமது டாக்டர் துரைஸானியைப் பார்த்து, நீ அனுப்பிய சன்மானமாகிய ரூபாய் ஆயிரத்தையும் அந்த அம்மாளிடம் சேர்ப்பித்தேன். அதைப் பெற்றுக் கொள்ளவே அவர்கள் சம்மதிக்கவில்லை. ஆனால், உன் விஷயத்தில் அவர்கள் வைத்திருக்கும் அந்தரங்கமான அன்பை என்னவென்று சொல்வேன்! நீயும் புருஷனுமாக நீடுழி சந்தோஷித்து வாழ, தாம் கடவுளை வேண்டிக் கொள்வதாக எழுதச் சொன்னார்கள். ஆகா! அவர்கள் மாத்திரம் இல்லா திருந்தால், உன்னுடைய கதி எப்படியா யிருக்கு மென்பதை நினைக்க இன்னமும் என் மனம் பதறுகிறது. சர்க்கார் வைத்திய சாலைக்குள் அன்னிய மாதாகிய உன்னைப் பணிப்பெண்ணைப் போல பொய் வேஷம் தரித்துக் கொண்டு போய் வைப்பது எவ்வளவு துணிகரமான காரியம்! அது மேலதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தால், அவர்களுடைய உத்தியோகமே போய்விடு மல்லவா! மகா துன்பகரமான விபத்தில் நீ இருந்தது பற்றி, தங்களுக்கு நேரக்கூடிய தீங்கையும் மதியாமல்; அவர்கள் இப்படிப்பட்ட மகா துணிகரமான காரியத்தைச் செய்தார்கள். அப்படிப்பட்ட அரிய பேருப காரியான அந்த அம்மாளை மாத்திரம் நாம் நமது உயிருள்ளளவும் நன்றி யறிதலோடு நினைத்தே தீரவேண்டும்.
என்னுடைய அன்பையும், ஆசையையும் கொள்ளை கொண்ட அருங்குண சகோதரியே! உங்களுடைய க்ஷேமத்தை அப்போதைக் கப்போது எழுதி யனுப்பும்படி பன் முறையும் வேண்டுகிறேன்; உனக்கு சமஸ்த சாதனமும், சர்வ மங்களமும் உண்டாவதாக.
இங்கனம்
பிரியமான சகோதரி நூர்ஜஹான்
- என்றிருந்த கடிதத்தை மேனகா படித்து முடித்து வராக சாமியை நோக்கினாள்.
அவன் ஆநந்த சாகரத்தில் ஆழ்ந்து மிதந்தவனாய் மிகுந்த பிரேமையோடு அவளை நோக்கி, “அடாடா! என்ன பிரியம்! என்ன அன்பு! ஜாதியாவது மதமாவது! அன்பின் பெருக்குக்கு எதுதான் தடையாக நிற்கும்! எல்லா உயிர்களிடத்தில் சமமான இரக்கமும், பூத தயையும் எவர்கள் காட்டுகிறார்களோ அவர்களே தெய்வங்களைப் போன்றவர்கள்;அவர்களே உறவினர்; அவர்களே நண்பர்கள்; அவர்களே தாய் தந்தை சகோதரிகள்; அவர்களே உண்மையான விவேகிகள். என்னோடு கூடப்பிறந்த சகோதரி என் விஷயத்தில் மகா கொடியவளாக மாறிப் போனாள். யாரோ ஒரு மகம்மதியப் பெண் வேறு மதத்தினளான உன் விஷயத்தில் கொண்டுள்ள கரைகடந்த அன்பும் சகோதரி வாஞ்சையும் எப்படி இருக்கின்றன பார்த்தாயா? எனக்கு வாய்த்த சகோதரியைக் காட்டிலும் உனக்கு வாய்த்த சகோதரியே இணையற்றவள்; எந்த மதத்தினராலும் தெய்வமாக வைத்து வணங்கத் தக்கவள். நீ எப்போதும் அதிர்ஷ்டசாலிதான்!” என்று பெருத்த மகிழ்வோடு கூறி, அவளைக் கரைகடந்த பிரேமையோடு அணைத்துக் கொண்டான்; அவள் ஆநந்த பரவச மடைந்தவளாய், “தடையில்லாமல் நான் அதிர்ஷ்டசாலிதான்; இப்பேர்ப்பட்ட புருஷ உத்தமரை நாதனாக அடைந்ததை விட நான் அடையக்கூடிய அதிர்ஷ்டம் வேறு என்ன இருக்கிறது” என்று கூறி மனங் கொள்ளா வாத்சல்யத்தோடு வராகசாமியை அணைத்து முத்தமிட்டு ஸரச ஸல்லாபம் புரியத் தொடங்கினாள்.
சுபம்! சுபம்!! சுபம்!!!
நிறைந்தது.
– மனோரஞ்சிதம் என்னும் இதழில் இந்நாவல் வெளிவந்தது. மேனகா நாவலை ஒட்டி 1935-ம் ஆண்டு மேனகா என்னும் திரைப்படம் எடுக்கப்பட்டது
– மேனகா (நாவல்) – இரண்டாம் பாகம், முதற் பதிப்பு: 2004, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.