மேடைக்கு வரலியா?

0
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 9,080 
 

பன்னீர் வாசத்துடனும், மங்கள வாத்தியத்துடனும் களைகட்டியிருந்தது திருமண மண்டபம். அறை முழுவதும் ஒரு விதப் பூ வாசம் வீசிற்று. மண மேடையில் ஏதோ சடங்குகள் நடந்த வண்ணம் இருந்தன. அமர்ந்திருப்பவர்களையும் அவர்களது தோற்ற பாவனைகளையும் நோட்டம் விட்டபடி அமர்ந்திருந்தேன். மெல்ல சுழன்று கொண்டிருந்த என் கண்கள் அந்தப் பெண்ணில் நிலைத்தது. “இவள் ரமாவின் ஓர்ப்படிதானே? இந்தத் திருமணத்தில் இவள் எப்படி?’ எனக்குள் குழப்பமாய்க் கேள்வி.

மேடைக்கு வரலியாஅலுவலகத்தில் சக தோழியின் மகள் திருமணம். சென்னை அலுவலகம் வந்து சில மாதங்கள்தான் ஆகியிருந்தது என்றாலும் இந்த கலா மிகவும் இனிமையாய்ப் பழகுபவள். அவள் மகள் திருமணம், வராமலா இருக்க முடியும். ஆனால் இந்த ரமாவின் ஓர்ப்படிக்கும் கலாவுக்கும் என்ன தொடர்பு? எனக்குப் பதில் தெரியாவிட்டால் மண்டை வெடித்துவிடும்போல இருந்தது.
அருகிலிருந்து ராணியைக் கேட்டேன். “ஏய்.. அந்தச் சிவப்புப் பட்டுப்புடவை யாருப்பா? உனக்குத் தெரியுமா? கலாவுக்குச் சொந்தமா என்ன?’ ராணியும், கலாவும் பல வருடமாய் நெருக்கம்.
“சொந்தம் இல்லப்பா, ஆனா ஏற்கெனவே சேலத்தில இருந்தப்போ, கலா இவங்க வீட்டு மாடியிலதான் குடியிருந்தா. அந்தப் பழக்கம். அதான் வந்திருக்காங்க. அதோட அவங்க பேரனுக்காக, கலா ரொம்ப ஹெல்ப் பண்ணியிருக்காப்பா. மனவளர்ச்சி இல்லாத குழந்தை. இரு வந்துடறேன்.’ என்று எழுந்து போனாள் ராணி.

நான் இப்போது இன்னும் கவனமாய் அந்தப் பக்கம் பார்த்தேன். ரமாவின் ஓர்ப்படி, அருகிலே அவளது மகள். மடியில் மகளின் குழந்தை. மூவரும் எனக்கு முன்னால் இரண்டு வரிசை தாண்டி அமர்ந்திருந்தனர். ராணி சொன்ன செய்தியில் எனக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது. கடவுள் எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு வைத்திருக்கிறார்.

ரமா என் பிரியத்துக்குரிய தோழி. ரொம்ப சாதுவானவள். மென்மையான அவளது சுபாவத்துக்கு, கொஞ்சமும் பொருந்தாத அவள் கணவனைச் சிரமப்பட்டு அனுசரித்துதான் போனாள். கொஞ்சம் அவரைத் தம் பக்கமாய் அவள் திரும்ப வைக்க யத்தனித்த அந்த காலத்தில் அவளுக்கு வில்லியாய் இருந்தாள் அவளது ஓர்ப்படி. தாயில்லாத ரமாவின் கணவனுக்கு அண்ணி சொல்தான் வேதவாக்கு. பத்து நாட்கள் ரமாவுடன் நல்லபடியாய் இபுருக்கும் அவள் புருஷன், ஒரு நாள் போய் அண்ணியைப் பார்த்துவிட்டு வந்தால் பத்து வாரத்துக்குச் சண்டை போடுவான். புதுப்புது கேள்விகளைக் கொண்டு வருவான் அண்ணியிடமிருந்து. அந்தக் கேள்விகளால் ரமா திண்டாடிதான் போவாள்.

ஒருநாள் என்னிடம் சொல்லி அழுதது இப்போதும் நினைவில் இருக்கிறது. “எந்தத் தப்பும் செய்யாத என்னை இப்படிஅழ வைக்கிறாங்க. புதுசா புதுசா ஏதாவது சொல்லிக் கொடுத்து தினமும் சண்டை மூட்டி விடறாங்க. இவங்களும் ஒரு நாள் அழுவாங்க பாரு. தீர்க்க முடியாத அழுகையா இவங்க அழ வேண்டியிருக்கும். என்னால் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு தானே இப்படி ஆடறாங்க. என் கண்ணீருக்கு அவங்க பதில் சொல்ல வேண்டியிருக்கும் பாரு..’ பிழியப் பிழிய அழுது, மூக்கை உறிஞ்சித் துடைத்தபடி ரமா அன்று சொன்னது இன்று இதோ நிஜமாய்.

ஒரேயொரு பெண், சீராட்டிப் பாராட்டி வளர்த்து, கல்யாணம் செய்து கொடுத்து பேரப்பிள்ளைக்கு மூளை சரியில்லையா? எனக்கு“ சத்தம் போட்டுச் சிரிக்க வேண்டும் போலத் தோன்றியது.
திரும்ப வந்து அருகில் அமர்ந்த ராணியிடம் கேட்டேன்; “அந்தக் குழந்தைக்கு என்னப்பா பிரச்னை?’

“அதை ஏன் கேக்கற போ… சொந்தக்கார பையனுக்குத்தான் கட்டி வச்சாங்க அவங்க பொண்ணை. ஆனா மாப்பிள்ளை சரியில்லை. அடிக்கடி சண்டை. பொண்ணு மாசமா இருக்குன்னு தெரிஞ்சதும் போய் கூப்பிட்டுட்டு வந்துட்டாங்க. அவன் அடிக்கடி இங்க வந்து சண்டை போடுவானாம். இந்தப் பொண்ணு எப்ப பார்த்தாலும் அழுகைதான். கடைசியில ஆண் பிள்ளை பிறந்துச்சுன்னு சந்தோஷப் பட்டாங்க. ஆனா அது இயல்பா இல்ல. சரியான வயசுக்கு உக்காரல, நடக்கல, என்னமோ டாக்டரெல்லாம் பாத்தாங்க. என்னென்னமோ காரணம் சொல்றாங்க. ஆக மொத்தம் அந்தப் பிள்ளைக்கு இப்போ அஞ்சு வயசாகுது. இன்னும் நடக்காது. தனக்கா ஒண்ணும் பண்ணிக்காது; பாவம். பொண்ணு வேலைக்காவது போகட்டும்னு இப்போ அவளை வேலைக்கு அனுப்பிட்டு இவங்கதான் பேரனைப் பாத்துக்குறாங்க. பேரனை நெனச்சு தினமும் அவங்க அழுவறத பாத்தா பாவமா இருக்கும். யார் செய்த பாவமோ! இந்தப் பிள்ளை தலையெழுத்து இப்படியாயிடுச்சு,’ ஒரேடியாகப் புலம்பினாள் ராணி.

எனக்குள் ஒரு குரூரம் நிறைந்த சந்தோஷம் பரவிற்று. ரமா அன்று அழுதபடியே கொடுத்த சாபம் பலித்துவிட்டது. தீர்க்க முடியாத அழுகை வாய்த்து விட்டது. பல வருடம் கழித்து என்றாலும் ரமாவுக்கு நியாயம் கிடைத்த மாதிரி ஒரு ஆசுவாசம் ஏற்பட்டது எனக்கு. அருகில் போய் அந்த நொந்த முகத்தைப் பார்க்க ஆசையாய் இருந்தது.

மணமக்களை வாழ்த்த வரிசையாக எல்லோரும் மேடை ஏறிக் கொண்டிருந்தார்கள். நானும் எழுந்தேன். “நாம கடைசியாப் போலாமேப்பா,’ என்றாள் ராணி. “சும்மா போய் அங்கே நிக்கறேன். அப்புறமா மேடைக்குச் சேந்து போலாம்’ என்றபடி நடந்தேன்.

அவர்கள் அருகில் போய் ஓரப்பார்வையுடன் நிற்பதற்குள், “சித்ராக்கா’ என்று உற்சாகமான குரல். திரும்பப் பார்த்தால், ரமாவின் ஓர்ப்படி மகள்தான். எழுந்து என் அருகில் வந்து என் கரம் பற்றி கொண்டாள். சுரீரென்றது எனக்கு. என்னை நினைவு வைத்திருக்கிறாளா? நான் சுதாரிப்பதற்குள். “என்னை ஞாபகம் இருக்க? ரமா சித்தியோட ஃப்ரெண்ட் தானே நீங்க? எப்படி இருக்கீங்க? இங்கே எப்படி? பொண்ணு வீடா? மாப்பிள்ளை வீடா? நாங்க பொண்ணு வீட்டுக் காரங்க…’ படபடவென்று பேசிக் கொண்டே போனவள், என்னை இழுத்து அவள் அம்மாவின் முன் நிறுத்தினாள். “அம்மா இவங்களைத் தெரியல? ரமா சித்தி ஃப்ரெண்ட்ம்மா. நம்ம வீட்டுக்குக் கூட வந்திருக்காங்களே?’ என்றாள்.

ஒரேயொரு முறை ரமாவோடு அவர்கள் வீட்டுக்குப் போயிருக்கிறேன். அப்போது சின்னப் பெண் இவள். ரமாவையே பற்றிப் பக்கம் பக்கமாய் இவள் அம்மா குற்றப் பத்திரிகை வாசிக்க, கூட வந்த ரமாவின் அம்மா அழுதுகொண்டே, “என்னங்க இப்படிப் பேசறீங்க? அவ சின்னப் பொண்ணு. நீங்க தானே நல்லது கெட்டது சொல்லித் தரணும்’ என்று புலம்பியது நினைவுக்கு வந்தது. கதவு ஓரத்தில் ஒளிந்தபடி நடந்ததை வேடிக்கை பார்த்த பத்து வயது பெண் என்னை இப்படி நினைவு வைத்திருக்கிறதே…! கொஞ்சம் வியப்பும் அவளது படபடவென்ற அன்பான பேச்சில் அப்படியே நின்றேன்.

“நல்லா இருக்கீங்களா,’ என்றாள் அந்த அம்மா. களையிழந்து, ஆனாலும் ஒரு பக்குவத்தில் மிளிர்ந்தது முகம்.

“ரமா சித்தி வீட்டுக்கு இப்போ வர்றதில்லையா நீங்க?’

“இல்லம்மா நான் அந்த ஊரிலேர்ந்து மாறுதலாகி ரொம்ப வருஷம் ஆச்சு. உன் பேர் என்ன?’ வஞ்சம் மறந்து சிரிக்க முயன்றேன்.

“பத்மினிக்கா. இது என் பையன். கண்ணா, இது சித்ரா ஆண்டிடா. வணக்கம் சொல்லு பார்க்கலாம்,’ என்று குழந்தைக்கு அருகில் குனிந்தாள்.

அப்போதுதான் அந்தக் குழந்தையைப் பார்த்தேன். வாயில் எச்சில் ஒழுக சாய்ந்திருந்த தலையை அசைத்தபடியே கண்களால் பளிச்சென்று சிரித்தான். பத்மினி அவன் கைகளை எடுத்துக் குவிக்க, குழறலாய் வணக்கம் சொன்னான்.

அடுப்பில் ஏற்றப்பட்ட காலிப் பாத்திரம் போல என் மனதுக்குள் அனல் ஏறிற்று. “இந்தக் குழந்தையின் துயரமா எனக்குள் திருப்தியைத் தந்தது’ என்று நடுக்கம் வந்தது. என்னையறியாமல் கால்கள் மடங்கி மண்டியிட்டு, குழந்தையின் முன் நின்றேன். இடுப்பில் செருகி இருந்த கைக்குட்டையை எடுத்து அவன் வாயில் வடிந்த எச்சிலைத் துடைத்தேன். அவனிடம் என் முகத்தை நெருக்கி, இரு கைகளாலும் அவன் முகத்தை இழுத்து என் முகத்துடன் அணைத்துக் கொண்டேன்.

“பேர் என்னடா செல்லம்.’

“ராஜா’ என்றான் என் அணைப்பில் அர்த்தம் புரியாதவனாய். எழுந்த என்னை ரமாவின் ஓர்ப்படி கண்கலங்கிப் பார்த்தாள். அவள் கண்களும், உடல்மொழியும் பல விஷயங்களை என்னிடம் சொல்லிற்று. கலங்கிய என் கண்களைப் பார்த்த பத்மினி என்னை தொட்டாள். “நானே தேத்திக்கிட்டேன். நீங்க ஏன் அக்கா இப்படிக் கலங்குறீங்க? அவன் கடவுள் எனக்கு கொடுத்த பரிசுக்கா. நான் அவனை நல்லா பாத்துப்பேன்னுதான் என்கிட்டே கொடுத்திருக்கார். கடவுள் செய்யற எல்லாத்திலும் ஓர் அர்த்தம் இருக்கும்க்கா,’ தெளிவாய்ப் பேசினாள். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. நான் கடவுளை எப்படிப் பார்த்தேன். இந்தச் சின்னப் பெண் என்ன அழகாய்ப் பார்க்கிறாள். பத்மினியின் அம்மா என் கரங்களை அழுத்திப் பிடித்தாள். அவள் கை நடுங்குவதை என்னால் உணர முடிந்தது.
நான் திரும்பி நடந்தேன். “மேடைக்கு வரலியா?’ என்ற ராணியில் குரலுக்கு, “இருப்பா, பாத்ரூம் போயிட்டு வர்றேன்,’ என்றபடி முகம் கழுவ பாத்ரூமுக்குள் நுழைந்தேன். நீரை அள்ளியடித்து முகம் கழுவியபோது மனசையும் கழுவிக் கொண்டேன்.

– கிருஷ்ணப்ரியா (டிசம்பர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *