மேகா அழகிய மனைவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2019
பார்வையிட்டோர்: 7,197 
 
 

ராம்குமாருக்கு வேலைபோய் மூன்று மாதங்களாகின்றன. அவன் இழந்தது மந்திரிப்பதவியோ, அல்லது அவன் ஒரு நிலப்பிரபுவின் பிள்ளையோ அல்ல. ஒரு சாதாரண உயிரணிகச் சாரதி (ஆம்புலன்ஸ்). அவனது மாதாந்த ஊதியமே அவன் குடும்பம் வதியும் இரண்டறை வீட்டின் வாடகைக்கும், அரிசி காய்கறி, உப்புப்புளி, குழம்புக்கும், குழந்தைகளின் உடுப்பு, லக்ரோஜன் / செறியல் (தானிய) உணவுகள், மருத்துவச் செலவுகளுக்குந்தான் அத்தாப்பத்தியமாயிருக்கும். (மட்டுமட்டாயிருக்கும்.) அந்த ஒரே வருமானத்தையும் இழப்பதென்பது அவஸ்த்தையிலிருக்கும் ஒரு நோயாளியின் உயிர்வளிக்குழாயைப் பிடுங்குவதைப்போல.

அவன் சகி மேகா அழகி, அப்பா சிவசங்கரன் அவளுக்கு வரன்தேட ஆரம்பிக்கவும் நிறைய ஜாதகங்கள் வந்து சேர்ந்தன. அவற்றுள் உறவிலும் ஒரு பையன் இருந்தான், இவளை அவனுக்கு நன்றாகவே தெரியும், அழகி என்பதால் மேகாவைக்கட்ட ஆசை இருந்தும் அவன் அவளது அப்பாவை ஆயுளுக்கும் நுகத்தடியில் மாட்டிவிடக்கூடியதொரு தொகையை சீதனமாகக்கேட்டதோடு 25 சவரன் நகையும் கேட்டான். உறவு என்கிற உரிமையோடு சமைலறை வரைக்கும் வந்தவனை அவன் முகத்துக்கு நேரேயே ‘போய்யா………..போ, எவளாவது மந்திரிவீட்டுப் பெண்ணாய்ப்பாரு’ என்று விரட்டிவிட்டாள்!

வேறும் ஒரு வரன் வந்தது, அவன் அம்மாவும் அப்பாவும் சீர்திருத்தத் திருமணம் புரிந்துகொண்டவர்கள். சாதிய அடுக்கில் அப்பா இடைநிலை, அம்மா தலித்தாகவிருந்தும் அப்பா ‘தன் பையன் தாய்மாமன் மகளை விரும்புகிறான் என்றும் அதைத்தடுத்திடணும். தயவுசெய்து உங்க பொண்ணை என்மகனுக்குக் கொடுங்க’ என்றும் அவள் அப்பாவிடம் மன்றாடினார். அதையும் மேகா மனசு ஏற்கவில்லை. நிர்த்தாக்ஷண்யமாய் “நோ” சொல்லிவிட்டாள். ராம்குமார் பி.ஏ. படித்திருப்பதாகவும் அடர் முடியோடு துல்கர் சல்மானின் சாயலிலிருக்கச் சம்மதித்துவிட்டாள். ‘ தப்பாகத்தேர்வு செய்திடோமே’ என்று இப்போதான் கலங்கிறாள். என்ன இலக்கியத்தோழமைகளோடு சேர்ந்தால் கொஞ்சம் பீர் குடிப்பான், பாக்கெட்டில் சில்லறை கனத்தால் 2 சிகரெட் வாங்கி வீட்டுக்குவெளியே நின்று புகைப்பான், தவிர வேறுவிதமான தீவிர குடிப்பழக்கமோ, கூடாத சகவாசங்களோ இல்லைத்தான்…….. பயபுள்ள தன் கிராப்பில, கவிதை இலக்கியம் காப்பியம், திறனாய்வு, இலக்கியச்சந்திப்புகளில் குவிக்கிற கவனத்தை தனக்கு நல்லதொரு வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும் என்கிற கரிசனையிலோ, தன் குடும்பத்தின் முன்னேற்றம், எதிர்காலம் பற்றியசிந்தனையிலோ வைக்காமல் விட்டேத்தியாய் இருகிறானே என்பதுதான் மேகாவின் ஆதங்கமும் கவலையும்.

“ இந்த இலக்கியச்சந்திப்புகள் எல்லாம் எம் குடும்பத்துக்குச்சோறு போடுமாங்க………” என்றால் “ கவிதையும் இலக்கியமும் உலோகாயத விஷயங்கள் அல்லம்மா, அததன் சுவை அறிந்தவர்களுக்குத்தான் அதன் அருமைபுரியும்…….. இப்போ சாளம்பன்கோவில்ல உண்டக்கட்டி உருட்டிறசாமிக்கு விரால்குளம்பின் டேஸ்டை புரியவைக்கமுடியுமா……….. ஏன்டி ஒரு சராசரிப் பொண்ணாகவே இருந்து என் இரசனைகளைப்புரிய புரியமாட்டேங்கறே……….. ” என்பான்.

இத்தனைக்கும் மேகாவும் அச்சுப்பிச்சல்ல, அவளும் இளங்கலை (வர்த்தகமுகாமைத்துவம்) முடித்தவள்தான். “ நான் இலக்கிய ஈடுபாடே வேண்டாங்கல………. குடும்பப் பொருளாதாரநிலையில கொஞ்சம் ஸ்திரமாய்க் கால்களை ஊன்றிவைச்சப்புறம் அதுகளைப் பாத்துக்குங்களேன் ” என்பாள்.

கல்யாணம் முடிந்து இந்த நாலரைஆண்டுகள் தாம்பத்யத்தில இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டாயிற்று. கூத்தனுக்கு மூணரைவயசு, சின்னப்பாப்பா மாயாவுக்கு 10 மாதங்கள். அவள் பிறந்தநாளுக்குகூட பத்துப்பேரை அழைத்து விருந்தாடாவிட்டாலும், ஒரு கட்டிகையாவது (கேக்) அனுப்பாணையில் எடுப்பித்து அயற்குழந்தைகளுடனாவது பகிர்ந்து கொண்டாட முடியுதோ என்னவோ.

*

மேகாவின் அப்பா சிவசங்கரன் கடல்கடந்த தொலைத்தொடர்புத்துறையில் தொலைத்தொடர்பாளராகப் (றேடியோ-டெலிகிறாபிஸ்ட்) பணிபுரிந்து இளைப்பாறியவர். இவர்களுடன் வாழ்ந்திருந்த காலத்தில் அவரின் ஓய்வூதியத்தில் அங்கே அடுப்புக்கள் தடையின்றிப் புகைந்தன. அப்பாவே இன்னும் பிள்ளைகளுக்குச் சட்டைகளும் மேகாவுக்கு வருடத்துக்கு குறைந்தது 3 சேலைகளாவது வாங்கித்தருவார். இப்போவெல்லாம் புடவை துணி வருஷம் தீபாவளி விஷேசங்களுக்கு வாங்குவதே வல்லையென்றாகிவிட்டது. அப்பாவும் அவர் செல்லமகள் படப்போகும் கஷ்டங்களைப் பார்க்கவேண்டமென்றோ என்னவோ ஒரு இரவிலான தன் தூக்கத்தை மீளாததாக்கிக்கொண்டுவிட்டார்.

*

தரையில் வாழ எத்தனிக்கும் தாவரங்களில் காற்று, கனிமவளமின்மை, வரட்சி, இடநெருக்கடியென்று அனைத்துச் சூழல் உற்பாதங்களையும் எதிர்நின்று ஓங்கிவளரக்கூடியது சவுக்குமரம்.

சிவசங்கரனின் நண்பரான ஒரு அரசுபள்ளியாசிரியர், அவர் மனதில் என்ன தோன்றியதோ, பேரூராகவிருந்து சிறுநகரமாகவே மாறிக்கொண்டிருக்கும் ஜெயந்திபுரத்தின் நடுவில் ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் ‘சவுக்கு களஞ்சியம்’ என்கிற பெயரில் ஒரு மளிகைக்கடையை ஆரம்பித்திருந்தார். போட்டிகளில்லாத அவ் வியாபாரம் விரைவில் ஒஹோவென்று பெருகியொரு பல்பொருள் அங்காடி கணக்காக மிளிரவும் அவரும் ஆசிரியப்பணி நீங்கி ஒரு முழுநேர வணிகராகிவிட்டார். அம்முதலாளியின் அறிமுகத்தைப் பயன்செய்து ராம்குமாரின் குடும்பம் கொப்பியில் கணக்கு வைத்துக்கொண்டு மாதம் முழுவதுக்கும் அங்கே மளிகைச்சாமான்களை வாங்குவதும், பின் மாதஇறுதியில் சம்பளம் வந்தானதும் அவர்களின் நிலுவையை அடைத்துவிடுவதும் வழக்கம்.

இப்போதும், மளிகைப்பொருட்கள் யாவும் தீர்ந்துபோச்சு, கடை நிலுவையும் எகிறிவிட்டிருக்கிறது, ‘சும்மா வீட்டில் முடங்கிக்கொண்டு இருக்காமல் கடைக்காரரிடம்போய் நிலமையை எடுத்துச்சொன்னால்ப் புரிஞ்சுப்பார், தேவையான சாமான்களை வாங்கிவாங்க’ என்று மேகா ராம்குமாரை விரட்டிக்கொண்டிருக்கிறாள். அவன் சாரத்துக்குள் அரணை புகுந்தாலே பிறகு விரட்டலாம் என்றிருக்கக்கூடியவன் அவள் கூச்சலைக் காதிலேயே போடாமல் அசமந்தமாய் புதிதாக வெளிவந்திருக்கும் ‘கூடாக்காமம்’ கவிதைப்புத்தகத்தில் திளைத்துப்போயிருக்கிறான்.

“ அட………புத்தகத்தை வெச்சிட்டுப்போங்கப்பா………… மாயாவைக் குளிப்பாட்டித் தூங்கவைச்சிருக்கேன், லக்டோஜன் நேற்றே காலி, பால்க்காரரும் இன்னிக்குக் கையைவிரிச்சிட்டார். இப்போ அரைமணிக்குள்ள குழந்தை எந்திருச்ச உடனே பால் குடுகலைன்னா சன்னதமாடுவாள்……… பிறகு எனக்கு அவளைத் தாக்காட்டேலா………..”

“ சரி ஒரு காப்பி கொடு, குடிச்சிட்டுப் போறேன் ”

“ காப்பி தரேன்…….. வெல்லமில்லாமத்தான் ஓகேவா……”

வெல்லம் இல்லாத காப்பி அவனது தொண்டையால் இறங்காது, ஷேர்ட்டை எடுத்துப்போட்டுக்கொண்டு மாயா எழும்பிவிடாமல் மேகாவின் ஸ்கூட்டியை ஐம்பது மீட்டருக்குத்தள்ளிக்கொண்டுபோய் அதைஉயிர்ப்பித்துப் போனவன் பத்து நிமிஷத்தில் அதேவேகத்தில் வெறும்பையோடு திரும்பிவந்தான்.

“ஏன்னா………என்னாச்சு”

“அங்கே முதலாளியில்லை……… பாங்குக்குப் போயிருக்கிறாராம், கடையில ஒரு புதுப்பையன்தான் நிற்கிறான், நாங்க எக்கவுண்ட் வைச்சிருக்கிற மேட்டர் அவனுக்குத்தெரியுமோ என்னவோ, கடன் என்றுசொல்லிக் கேட்கச் சங்கோஜமாய் இருந்திச்சு வந்துட்டன்.”

ஆத்திரத்தோடு “ பையை இப்படிக்கொடுங்க…… ” என்று அவனிடமிருந்து பிடுங்கியவள் ” மாயாவைப் பாத்துக்குங்க” என்றுவிட்டு ஸ்கூட்டியில் தலையணி அணியாமலே பறந்துபோய் வேண்டிய சாமான்களோடு கால்மணி நேரத்தில் வந்திறங்கினாள்.

*

ராம்குமார் கடைப்பையன் என்றது ஒன்றும் அரைக்களிசான் பையனல்ல. இருபத்திரெண்டோ, மூன்றோ, வயசிருக்கும், பி.கொம் இறுதி எழுதிவிட்டு முடிவுகள் வரும்வரையில் மாமாவுக்கு உதவியாளனாக அங்கே ஸ்டோரில் நின்றிருந்தான். மேகா கடைக்குள் நுழைந்ததும் அவன் முகத்தில் ஒரு விகசிப்பு விரவும். அவள் தனியாகப்போகும் சமயங்களில் களவாக அளவெடுப்பதுபோல அவளை இரசித்துப்பார்ப்பான். அதில் அவனுள்ளான தகிப்பும் தாபமும் தெரியும். குற்றமில்லை இயற்கைதான், அவனுக்கும் தூண்டுமுட்சுரப்பிகள் (Hormones) குதிச்சுப்பாய்கிற வயசு. ஆனாலும் என்றைக்கேனும் அவளிடம் சில்மிஷம், சீண்டல், கிண்டல்மாதிரியோ எதுவும் அவன் பேசியதில்லை. பேசும் சில வார்த்தைகளிலும் கண்ணியமாக இருந்தான். ஒருமுறை மாத்திரம் மிஸிஸ்.ராம்குமார் என்று கௌரவமாக அழைத்து “ இஃப் யூ டோன்ட் மைன்ட்……….. நான் ஒரு கொம்பிளிமென்ட் சொல்லலாமா ” என்றவன் அவள் சுதாகரிப்பதற்கிடையில் “ கடைக்குவாற எங்கள் பெண் கஸ்டமர்களில்…… நீங்கதான் அழகி…….” என்றான்.

அவனது நுண்ணயமான உபசாரவார்த்தைகளால் அவளுக்கு உள்ளூரக்குளிர்ந்தாலும் அதற்கு எப்படி எதிர்வினையாற்றுதென்று தெரியவில்லை. புன்னகைத்துவிட்டு “ ஏதேது…… உங்க வேலைகளோட கஸ்டமர் பெண்களின் அழகுகளைக் கவனித்து வைக்கிறதுக்கும் மாமா தனியாகச் சம்பளம் போட்டுத்தாறாப்பல………..” என்று பதிலுக்குக் கலாய்த்துவிட்டு வந்தாள். ஆனால் வீடு திரும்புகையில்த்தான் ‘தான் வெறுமனே ஒரு புன்னகையுடன் விலகிவந்திருக்கலாமோ’வென்று சிந்தித்தாள். அவன் சொன்னதிலும் தப்பில்லை, நிஜந்தான் மேகா அழகாகத் தன்னை வெளிகிடுத்தி வந்தாளாயின் சதைபோடாமல் வார்ந்துவைத்ததுபோல் இருக்கும் அவளை இரண்டுகுழந்தைகளின் தாயென்று எவரும் கணிக்க முடியாது, அத்தனை அம்சமாகத்தான் இருப்பாள். அழகும் சீனாவின் ஹாடி எறிகணையைப்போலத்தான்……….. மத்தாப்பாய் எல்லா ஆரையன்களிலும் (Radians) சிதறி யாரை எவரையென்றில்லாமல் கண்மூடித் தாக்கும்.

ராம்குமாரது அரசமருத்துவமனை உயிரணிகம் (ஆம்புலன்ஸ்) ஓட்டுனர்கள் சங்கம் ஊதியவுயர்வும், பணிநேரக்குறைப்பும் கேட்டு பணிநிறுத்தம் செய்ததால் பணி இழந்தவர்களில் அவனும் ஒருவன். என்பதை எப்படியோ அந்தக் கடை யுவனும் அறிந்திருந்தான். அவள் கொடுத்த பொருட்களின் நிரலிலிருந்த அத்தனை பொருட்களையும் நொடியில் எடுத்துவந்து அவள் பையை நிரப்பி அனுப்பிவைத்தான்.

மேகாவுக்குத்தான் இப்போது கஷ்டதசை. அவளைத்திருமணம் செய்தவேளையிலும் ராம்குமாருக்கு வேலை எதுவுமில்லை என்பது தெரிந்ததுதான், ஆனால் அவன் தான் படிச்சஇளங்கலையிலும் அரியேர்ஸ் வைச்சிருக்கேன் இன்னும் முடிக்கவில்லை என்றபோது லேசாக அதிர்ந்தாள். ஆனாலும் அவர் தன் அரியேர்ஸை விரைவில் முடித்துக்கொண்டு சின்னதாகவேனும் ஒரு வேலையில் நுழைந்துவிடுவான் என்று நம்பிக்கை தளராமல் இருந்தாள். திருமணத்தின்பின் முதல் ஆறுமாதங்கள் வேலையில்லாமல் அவளைச்சுற்றிக்கொண்டு வீட்டிலேயே இருந்தான். கூத்தன் வயிற்றில் உண்டாகிவிட்டான். ‘உத்தியோகம் புருஷ லட்ஷணம்’ என்றல்ல அப்பாவின் நுகத்தடியில் பாரத்தை இலகுவாக்கவேனும் அவன் ஏதாவது பணிக்குப்போயே ஆகவேண்டும் என்று மேகா அழுத்தியபோது…….. ஒரு தனியார் போக்குவரத்துக்கழகத்தில் நடத்துனர்களை எடுக்கிறார்களாம், நானும் போய்ச்சேரட்டுமா என்றான். அப்போது அவளது சிவசங்கரன்தான் “ கொஞ்சம் பொறுங்க தம்பி………… எனக்குத்தெரிந்தவர் ஒருவரிடம் உங்களுக்காக ஏதாவது வேலைக்குக் கேட்டுவைச்சிருந்தேன்…….. அவரு கவர்ண்மேன்ட் ஹொஸ்பிட்டல்ல ஆம்புலன்ஸ் டிறைவேஸைச் சேர்க்கறாங்களாம், அவரு போவாரான்னு கேட்டார். பஸ்கண்டருக்கு ஆம்புலன்ஸ் டிறைவிங் எவ்ளோமேல்” எனவும் ராம்குமார் மனம்மாறி அப்பணியில் சேர்ந்து இரண்டுமாதம் பயிற்சியும் பெற்று அதில் நிரந்தமானான். பணியில் சேர்ந்தபின்னால் தன் பாடப்புத்தகங்களை ஷெல்ஃபில் உயரத்தில் வைத்துவிட்டவனின் கவனங்கள் கவிதைகள், சிறுகதைப்பயிலரங்கம் என்றிருந்தனவே தவிரத் தன் அரியேர்ஸ் பக்கமாகவில்லை. இப்போது அவன் தனக்கென வாங்குவதெல்லாம் கவிதையும் நாவல்களுந்தான், பாடப்புத்தகங்களல்ல.

அவனது சம்பளத்தில் தனியாகக் குடும்பவண்டி நகரத்தள்ளாடிய வேளைகளில் மேகாவும் இளங்கலையோடு கணினியும் கற்றிருந்ததால் அவளும் தாங்கமாட்டாமல் “ஏனுங்க நானும் ஏதாவது வேலைக்குப்போகட்டா………….” என்பாள்.

“ நான் என்ன வேணான்னா சொன்னேன்………… அப்போ குழந்தைகளை யாரு கவனிச்சுப்பா, ஆயா கையில வளர்ற குழந்தைகள் வளர்கையில் அவர்கள் மனநிலை மோசமாய் பாதிக்கப்படுதுன்னு உளவியலாய்வுகள் சொல்லுது” என்று தடுத்துவிட்டான்.

இப்போ பணி எதுவும் இல்லாமல் இருக்கிறபோதும் கவிதை ஆய்வுகளில் இருக்கிற கவனுமும், ஈடுபாடும் தனக்கொரு பணி தேடுவதில் இல்லை.

“ எப்பிடியுங்க உங்களால இப்படி இருக்கமுடியுது…..” என்று கேட்டால் “ பாரதிகூட செல்லம்மா பக்கத்து வீடுகளில் அரிசி வாங்கியாந்து சாதம் வடிக்கிற கஷ்டத்தில் இருந்தப்போதான் “எத்தனைகோடி இன்பம். வைத்தாய் இறைவா” போன்ற தன் உயர்ந்த கவிதைகளை எல்லாம் எழுதினாங்கறது உனக்குத்தெரியுமா” என்றுவிட்டு “எங்க கஷ்டமெல்லாம் சீக்கிரம் வடிஞ்சுடும் பார்த்துக்கோ’ என்று அவளைச்சேர்த்து அணைத்துக்கொஞ்சுவான்.

கொஞ்சினால் போதுமா வயிறு என்று ஒன்றிருக்கில்லை?

‘சரி………. கடனாகவாவது அரிசி, கறி, புளி வாங்கிவா’ என்று அனுப்பினால் ‘கடைக்கார முதலாளி அங்கில்லை டவுணுக்குப்போய்விட்டார், சாயந்தரம் வந்ததும்போய் வாங்கியாரேன்’ என்று வெறும் பையுடன் திரும்பிவருவான், சாமர்த்தியம் போதாது.

வெறும் ரொட்டியையே திரும்பத்திரும்பச்சாப்பிட்டு அலுத்துப்போன கூத்தன் “ அம்மா சாதம் வேணும்” என்று அழுகிறபோது மேகா ஈரல்க்குலை நடுங்கத் துடித்துப்போவாள். மாயாவுக்கான லக்டோஜனும் தீர்ந்து போய் டின்னுள் இன்றைக்கு மட்டுந்தான்போதும் என்றிருந்தபோது மேகாவே பையை எடுத்துக்கொண்டு கடைக்குப்போனாள்.

கடை முதலாளியுடன் ராம்குமார் ஒரு சீட்டுப்பிடித்திருந்தான். சீட்டு இருக்கு என்கிற தென்பில் முன்பு முதலாளி தாராளமாகவே தேவையான பண்டங்களைக் கணக்கு வைத்துக்கொண்டு வாரி வழங்கினார். ராம்குமார் வேலைபோனபோது சீட்டையும் எடுத்துக்கொண்டுவிட்டான். அதனால் அவருக்கு இப்போ கடன் வழங்கச் சற்றே சுணங்கித் தயங்கலானார். மேகா கடைக்குப்போனபோது முதலாளி இருக்கவில்லைத்தான். என்ன இருந்தால் கொஞ்சம் முனகியிருப்பார். அவர்களின் பொருளாதாரநிலையை அறிந்தவன்போல் தாராளமாக அவள் கேட்டபொருட்களான அரிசி, சர்க்கரை, மாவு, லக்டோஜன் டின்கள் எல்லாம் கொடுத்தான். அன்று அவள் வாங்கிய அரிசிப்பையின் அடியில் ஒரு 500 கிராம் பூஸ்ட் போத்தல் ஒன்றும் மேலதிகமாக இருந்தது, அதற்கான கணக்கும் கொப்பியில் எழுதப்படவில்லை.

அவளுக்கு அதை ஒளித்துவைக்கவேண்டிய தேவை இருக்கவில்லை. பூஸ்ட் போத்தலைப்பார்த்த ராம்குமார் “நாம குழந்தைகளுக்கு லக்டோஜனுக்கே திண்டாடும்போது பூஸ்ட்டெல்லாம் எதுக்கம்மா …………..” என்றான்.

“ எல்லாம் உங்களுக்காத்தான்………….. இப்போதெல்லாம் சரியான போஷாக்கான சாப்பாடு உங்களுக்கில்லை………. இரவெல்லாம் தூக்கத்தில் இருமுறேள்…….. அதுதான் கொஞ்சம் சத்தாக இருக்குமேன்னு வாங்கினேன்” ஒரு பொய்யை மனசறிஞ்சு சொன்னாள்.

இவ்வளவு சீக்கிரம் திருமணம் பண்ணிக்கொண்டிருக்க வேண்டாமேயென்றும், திருமணமே பண்ணிக்கொண்டிருக்க வேண்டாமே என்றெல்லாம் இப்போது நினைக்கும்படி வாழ்வு ஒரு விலங்கைப்போல அவளைப்பொறிபோட்டு வீழ்த்திக் கைதியாக்கிவிட்டிருக்கிறது. அப்பா இருந்திருந்தால் ஜீவிதம் இத்தனை கஷ்டமாக இருந்திருக்காது. அவர்தான் முன்னே பறந்துட்டாரே…….. சிக்கலானவற்றையும் விளங்கமுடியாதவற்றையும் பார்த்துச் சிரிப்பதைத்தவிர அவளால் வேறொன்றும் பண்ணமுடிவதில்லை.

முல்லை, முசுட்டை, முருங்கையிலைபோட்டுப் புளிக்கஞ்சிதான் காய்ச்சிக்கொடுத்தாலும் குடித்துவிட்டுக் ராம்குமார் கவிதைபற்றித்தான் பேசுறான், ஆய்வுசெய்யுறான். நாளைக்கு அடுப்பில்வைக்க என்ன இருக்குதென்கிற கவலை அவனுக்கில்லை. இவனைக் கையாலாகாதவன் என்பதா, முட்டாள் என்பதா அவளுக்குத் தெரியவில்லை.

அந்த சவுக்கு களஞ்சியம் கடையை நினைத்தாலே தாபம் வழியப்பார்க்கும் அவ் இளைஞனின் ஏக்கப்பார்வைதான் முதலில் கண்முன்னாடுகிறது. ஒருவன் தாபத்தை ஏக்கத்தைக் கருவியாய் வைத்து நான் காரியம் சாதிப்பது எவ்வகையில் ஒழுக்கம் தர்மம்.

அடுத்தமுறை கடைக்குப் பார்க்கப்போனபோது “ ப்றோ…… இனிமேல் அப்படி எல்லாம் செய்யாதீங்க……….. அது தர்மமில்லை, ஆபத்தானது, எங்காவதுகொண்டுபோய் புதுவம்பில மாட்டிடும், தயவுசெய்து அவற்றுக்கான பில்லை போட்டு எங்க கணக்கில சேர்த்திடுங்க” என்றுதான் அவனிடம் சொல்ல நினைத்தாள். ஆனாலும் அவனைக்கண்டபோது அவன் முகத்துக்கு நேரே அப்படியெல்லாம் சொல்லிவிடமுடியவில்லை. அவன் மனதை நோகடிப்பதாகிவிடுமோ என்று தயங்கினாள்.

அன்றும் “ உங்களமாதிரி யாருக்குமே அழகா சாரிகட்டவராது மாம், அதுக்குன்னு ஒரு போட்டி வைத்தா நீங்கதான் ஃபெர்ஸ்ட்.” என்றான். மேகாவுக்கும் “ தாங்ஸ் ஃபோர் யுவர் கைன்ட் கொம்பிளிமென்ட் “ என்றுமட்டும் சொல்ல முடிந்தது. ஆனாலும் அவளுக்கு உள்ளே கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது.

யுவன் பின்னர் குரலைத்தாழ்த்திக்கொண்டு “ மாம் நேரமிருக்கறப்போ மிஸ்டர். ராம்குமாரை மாமா….. தன்னைவந்து ஒருதரம் பார்க்கச்சொன்னார்.” என்றான்.

காரணம் அவளுக்குத்தெரிந்ததுதான், என்ன நிலுவைத்தொகை நாற்பதினாயிரத்தைத் தொட்டிருக்கும். ‘பாதியையாவது அடைத்திடுங்க’ என்று சொல்லப்போறார்.

“ சரி……… சொல்லி அவரை அனுப்பிடறேன் ” என்றுவிட்டு வந்தாள்.

வீட்டுக்கு வந்ததும் விஷயத்தைச்சொன்னாள். பிறகும் “ எதுக்கு வரச்சொன்னாராம் ” என்றான்.

“ம்ம்ம்ம்ம்ம்ம் உங்க இலக்கியசேவையையும், தமிழ்பணியையும் பாராட்டி ஒரு விருந்துவைக்கவும், பொற்கிழி வழங்கவும் தீர்மானிச்சு ஏற்பாடு பண்றாங்களாம்………… அது உங்களுக்குச்சம்மதந்தானா என்று விசாரிக்கக் கூப்பிடிறாப்பல” என்று நொடித்தாள்.

பத்துநாளா அவன் எங்கும் புறப்படவேயில்லை. பம்மிக்கொண்டு வீட்டுக்குள்ளேயே கிடந்தான்.

“ ஏங்க……. என்னதான் பிரச்சனையாயிருந்தாலும் அதை நேருக்கு நேர் எதிர்கொள்றவன்தான் மனுஷன். இப்படி கோழைமாதிரி வீட்டுக்குள்ளேயே உட்காந்திருக்கப்படாது, அந்த மனுஷன் அப்பாவின் அறிமுகத்துக்காக பொறுமை காத்திட்டிருக்கார், ஒரு நாள் முற்றத்தில வந்து நின்று சத்தம்போட்டால் யாருடைய மரியாதை போகும்…….. அஞ்சு பத்தென்றால் பரவாயில்லை இப்படி நாப்பது ஐம்பது என்று கடனைத்தந்திட்டு அந்தத்தொகைக்கு வட்டியுமில்லாம முதலுமில்லாம இருக்கிறதுன்னா அவங்க என்ன அத்தனை மாங்காய் மடையன்களா…..” என்று சத்தம்போட்டாள். ‘அவனோ அரணையை நாளைக்கு விரட்டினாப்போச்சு’ என்கிறமாதிரி உடலை நெளித்துவிட்டுஇருந்தான்.

அடுத்து மாயாவின் பிறந்தநாளும் வந்தது, அதற்காகக் கடனேதும் படாமல் வீட்டிலேயே கொஞ்சம் கேசரியும் வடையும்பண்ணி அயல்வீட்டுக்குழந்தைகளுடன் கொண்டாடினார்கள்.

தினமும் பாலூத்தும் பால்க்காரரும் அவனுக்கு வேலைபோன விபரம் தெரிஞ்சிருந்தும் “ ஏம்மா…………இப்படி மாசக்கணக்கில் பாக்கிவைச்சீங்கன்னா ஆதிரவுகெட்ட ஏழைகள் நாங்க, புள்ளகுட்டிக்காரங்க எங்கேபோவோம் ஊவாவுக்கு என்று ஒருபாட்டம் முனகிவிட்டுப்போனார். அவள் குழந்தைகளைப் பட்டினிபோடாமல் காத்ததில் அவருக்கும் பெரும்பங்குண்டு. இவ்வாரம் தன் சங்கிலியை இருபத்தையாயிரத்துக்காக அடைவு வைத்து பால்க்காரரின் பாக்கியையும், சவுக்கு களஞ்சியத்தின் பாதிக்கடனையாவது அடைப்பதான முடிவுடன் மேகா இருந்தாள். ராம்குமாருக்கு ஏதாவது சிறிலக்கியப் பத்திரிகைகள் அஞ்சலில் வந்தாலொழிய இந்நாட்களில் யாரும் அவர்களுக்கு கடிதங்கள் அனுப்புவதில்லை,

வழக்கமாக வழியில் எப்போதாவது எதிர்ப்பட்டால் ‘சௌக்கியமாம்மா’ என்று விசாரித்துவிட்டுப்போகும் தபாற்காரர் இன்றுகாலை மிதிவண்டி நிறுத்தியை மடித்து நிறுத்திவிட்டு ஒரு நீளமான ஒருகடிதத்துடன் “ சார்……..” என்று சத்தமாக அழைத்தபடி வீட்டினுள்ளே வந்தார்.

உயிரணிக சாரதிகள் சங்கம் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வைத்த வழக்கின் விசாரணைக்கு தீர்ப்பாயம் கொடுத்துள்ளதேதியை ஒவ்வொரு ஊழியருக்கும் சங்கம் அறிவிப்பதான கடிதம் அது. இரண்டு வாரங்களில் வழக்கு விசாரிக்கப்பட்டு சாரதிகளுக்குச் சாதகமான தீர்ப்பும் வந்தது. இனி திரும்பவும் பணியும் திரட்டிய மூன்று மாதச்சம்பளமும் எல்லோருக்கும் கிடைத்துவிடும். வீட்டில் மீண்டும் ஆனந்தம்.

மளிகைப்பொருட்களும் வாங்குவதற்கான பைகளை எடுத்துக்கொண்டு ‘கணவனைப் பிள்ளைகளைக் கவனமாகப் பார்த்துக்க’ச்சொல்லி உத்தரவு போட்டாள். உட்கிளர்த்துமொரு பரவசத்தோடு முதுகு இறக்கமானதும் முத்துகள் வைத்ததுத் தைத்ததுமான அழகான சோளியைத் தேர்ந்து, அதற்குப் பொருத்தமான துளிர்நீல ஷிஃபோன்-டிஸு சேலையொன்றையும் எடுத்துக்கொண்டு கண்ணாடிமுன்நின்று உடுத்தியபின், சுழன்று சுழன்று முன், பின், பக்க அழகுகளைக் கவனித்தாள். பின் மேலும் கொஞ்சம் சேலையை நெகிழ்த்தித் தளைச்சுச் ‘சிக்’கென்று உடுத்தினாள், சேலையின் நிறத்துக்குப் பொருத்தமானதாய் வேறொரு செருப்பைத் தேர்ந்து மாட்டினாள். அப்போது மேம்படுத்தியதொரு புதிய உடல்மொழியின் நளினநடையில் செல்லமாய் அசைந்துபோய் ஸ்கூட்டியை உயிர்ப்பித்தாள். லேசாக வெய்யில் ஏற ஆரம்பித்திருந்தது.

– அம்ருதா, பெப்ரவரி. 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *