மேகங்கருக்கையிலே…புள்ளே!, தேகங்குளிருதடி!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2024
பார்வையிட்டோர்: 2,928 
 
 

மனிதனுக்கு மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை. ஆதிமனிதனின் ஆரம்பம்முதல், கலியுகத்தின் கடைசி மனிதன் வரை ஆசைக் கரையைக் கடந்ததாக ஆரையும் சொல்ல முடியாது!.

எல்லாப் பொறுப்புகளும் முடிந்து விட்டன. ஆண்டு அனுபவித்த வயதுதான் என்றாலும்.. ‘புந்திக்கிலேசமும் காயகிலேசமும்’ போக மாட்டேன் என்கிறதே?!. என்ன செய்ய?!!

பத்து மணிநேரம் டிராவல் பண்ணி அந்த நிச்சயதார்தத்துக்குப் போகணும்!. போகணுமா?! என்றால், போகணும்தான்!. நெருங்கிய உறவுக்காரங்க கல்யாண நிச்சயதார்த்தம். அதே நாளில் உள்ளூரில் ஒரு மேரேஜ் வந்தும் அதைத் தவிர்த்து இதுக்குப் போக அனுமானித்தான் ஆனந்தன்.

காரணம், வேறொன்றுமில்லை!. அது நடப்பது நெல்லையில்.. போகிற போக்கில அப்படியே காகர்கோயிலோ கன்யாகுமரியோ போய்வரலாமில்லே!? யோசித்தார்கள். நாகர்கோயிலில் பார்க்க என்ன இருக்கு?! சுசீந்தரம் கோயில்., வேண்டாம்! திற்பரப்பு அருவி! அங்க குளிக்க விடறானோ இல்லையோ? போறது வேஸ்ட்டாயிடா?!

குற்றாலத்திலயும் அதே கதைதான். குற்றாலம் சீசன் ஆரம்பிச்சுட்டதா சொல்றாங்க!. எல்லாத்தடவையும் ஒரே மெயினருவில குளிக்காம ஒரு முறையாவது, தேனருவி, ஐந்தருவி உலக்கையருவி இப்படி மாறுபட்ட எதிலாவது மனங்குளிரக் குளித்தால் என்ன?! மசாஞ்ச் வேற பண்ணலாம்.. அடிச்சுப் போட்டாபுல இருக்கற ஒடம்ப்புக்கு அது இதமா இருக்குமில்லே?!

வேண்டாம்! அங்கமட்டுமென்ன?! திடீர்னு வெள்ளம்னு குளிக்க தடை விதிச்சுட்டா குத்தாலத்துல கொராங்கா குத்தவச்சு மலையைப் பார்த்துட்டுத் திரும்ப வேண்டிவரும். ஒரு முடிவுக்கு வந்து, கனியாகுமரியே போலாம். முடிவு செய்தார்கள் ஆனந்தனும் அவன் மனைவியும். ரூம்போடும் செலவு மிச்சமாகுமா..?! டிராவல்ல அதை ஈடுகட்டிடலாம்!

‘மேகங்கருக்கையிலே புள்ளே தேகங்குளிருதடி.. ஆத்தக் கடந்துடலாம் புள்ள ஆசையை என்ன சொல்ல?! மனசுக்குள் மரித்திருந்த இளமை உயிர்த்தெழ ஒரு வழியாய்க் கன்யாகுமரி காலை உதயம் பார்ப்பதென கருதொருமித்தார்கள்.

கருத்தொருமித்துக் காதல்புரிவது இல்லறமோ இல்லை, கடும்போர் புரிவது இல்லறமோ யாருக்குத் தெரியும்??. முடிவாயிற்று.,! நெல்லை என்று! இறங்கி, ரூம்கீம் போட்டா வெத்து செலவு..! பேசாம பஸ்புடிச்சுப் போய் குமரியிலிறங்கி, காலாற கடற்கரையில் உலாவி ஐந்து மணிமுதல் மெல்ல மெல்ல உதிக்கும் சூரியனை இமைபிசகாமல் பார்த்துத் திருமப முடிவெடுத்துப் போனார்கள்.

சூரியன் உதயமாவது போலவே மனதின் ஆழத்தில் வாழ்வில் சுருக்கி வைக்கப்படிருந்த ஆசைகள் ஸ்பிரிங்க் சுருள் விரிவதுமாதிரி விரியத் தொடங்க வீதியில் உலாத்தியபடியே கூட்டமில்லா இடத்தைத் தேட எங்கும் கூட்டம்!. என்னதான் வேலையிருக்கும் இவங்களுக்கு?! இப்படி எங்கு பார்த்தாலும் பிதுங்கி வழிகிறதே கூட்டம்?! எண்ணும் எண்ணிக்கையில் இவனைச் சேர்க்க விட்டுவிட்டான்.

பொழுது விடிவதற்கான சமிக்கைகள் தெரிந்தன. நல்ல இடமாய் பார்த்து இருவரும் அருகருகே நெருங்கி நிற்க, ஆதவன் உதயத்துக்கான அறிகுறி தெரியலானது.

மனைவியை இழுத்து அணைக்க…! அவள் !உஸ். என்ன இது?! இந்த வயதில் இத்தனைபேர் பார்க்க, பேசாம. உதயத்தைப் பாருங்கள் என்றாள்..!

கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்து விரிந்து விரிவடைய இருந்த ஸ்பிரிங்க் டபக்குனு விரிந்து கம்பியாய் தலை கவிழ்ந்து கொண்டது! சூரியனைப் பார்க்க ஆசைப்பட்டபோது…..!

எங்கிருந்தோ மேகங்கள் உதயமாகும் சூரியனைச் சூழ்ந்து கொள்ள இருட்டைக் கவிழ்த்தன! ஒன்றும் தெரியவில்லை. கூடிய கூட்டம் கூவியது வருத்தத்தில்… ‘உச்! உச்! உச் அச்சச்சோ!!! உச்சுக் கொட்டி ஓய்ந்து வருந்தியது!

நமக்கு எமன் குற்றாலத்தில் வெள்ளமாய்.. திற்பரப்பில் மொழியும் மழையாய், கன்னியாகுமரியில் கழுத்தறுக்கும் கருத்த மேகமாய்…!

மேகங்கருக்கையிலே… புள்ளே தேகங்குளிருதடி…! ஆற்றைக் கடந்திடலாம் புள்ளை ஆசையை என்ன சொல்ல? அக்கரைச்சீமையிலே ஆசையைச் சொல்ல நினைத்தவனுக்கு.. இக்கரைக்கு அக்கரை பச்சையானது டிரிப்!

குற்றாலத்திலாவது பேசாம மசாஞ்ச் பண்ணி மல்லாந்திருக்கலாம்.

எங்ககிருந்தால் என்ன நமக்குன்னு என்ன விதிச்சிருக்கோ அதான் நடக்கும்!!. நிச்சயதார்த்த தம்பதிக்காவது இப்படி நிகழாமலிருக்கட்டும்!! வேண்டிக் கொண்டான் கன்னியா குமரியை!

இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *