மெழுகுவர்த்திகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 7,651 
 
 

தீர்த்தா புடவைக்கு இஸ்திரிப் போட்டுக் கொண்டிருந்தாள்.

அம்மா, தெரு வாயிற்படியிலிருந்து கத்தினாள். “தீர்த்தா, சீக்கிரம் இங்கு வந்து பார், யார் வந்திருக்கிறார்கள் என்று!”

தீர்த்தா அவசரமாக வெளியில் வந்து பார்த்தபோது சுஜா நின்றிருந்தாள், தலை நிறையப் பூவும் வாய் நிறையச் சிரிப்புமாய்!

நமக்குத் தெரிஞ்சு, கவுன் போட்டுக் கொண்டு குறுக்கும், நெடுக்குமாய் ஓடிக்கொண்டிருந்த பெண்ணா இவள்? என்னமாய் வளர்ந்து விட்டாள்! பெண்ணின் வளர்த்தியை அதனால்தான் பீர்க்கங்காயுடன் ஒப்பிடுகிறார்களோ? “மலைத்தவாறே, “உட்காரம்மா!” என்றாள்.

“இல்லை மேடம், நான் அவசரமாகப் போக வேண்டும்.” “முகம் நிறைய வெட்கத்தோடு தன் கல்யாணப் பத்திரிக்கையை நீட்டினாள் சுஜா.

“உனக்கா திருமணம்? பாராட்டுக்கள்!”

“நான் வரேன் மேடம்.” வெட்கத்தோடு ஓடிப் போனாள் சுஜா.

“இவளுக்கா கல்யாணம்? வயது பதினாறுகூட இருக்காது போலிருக்கிறதே அதுக்குள்ள கல்யாணமா?” அம்மா அதிசயத்தோடு கேட்டாள்.

“பின்னே, நம்மை மாதிரி நாற்பது வயசுக்கா செய்வாங்க?” அடக்கிவைத்திருந்த உணர்ச்சிகள் வார்த்தைகளாக வெளி வந்தன தீர்த்தாவுக்கு.

அம்மா இந்தத் திடீர்த் தாக்குதலைத் தாங்கமுடியாமல் முகம் வெளிறத் தலையைக் குனிந்து கொண்டாள்.

தன்னை மீறிவார்த்தைகளைப் பிரயோகித்து விட்டோமோ? அம்மாவைப் பார்க்க மனம் இல்லாமல் அறையினுள் புகுந்து கொண்டாள்.

“கொஞ்ச நாட்களாக ஏன் இப்படிப் பேசுகிறோம்? இப்படியொரு விசித்திர உணர்வு இதுவரை ஏற்பட்டதில்லையே? ஏன் இப்பொழுது மட்டும்!…” எண்ணியபடியே துhங்கிப் போனாள்.

“தீர்த்தா, பொழுது விடிந்துவிட்டது. எழுந்திருக்கலே?” அம்மாவின் குரல் விழிப்பை உண்டாக்கியது.

“தினம், தினம் வேதனைகளையும், வெறுப்புகளையும் வளர்க்கவா பொழுது விடிகிறது? நானும் வாழ்க்கையிலே ஒரு நாளாவது எனக்காக வாழ்வேனா? என் எதிர்காலம் இருளாக நின்று பயமுறுத்துகிறதே! எனக்கு மட்டும் விடிவு காலம் வரவே வராதா?”

அவளுடைய நிலவு முகத்தில் கவலைமேகங்கள் மூடி மறைந்து எதிர் காலத்தையே இருளாக்கின.

“எப்படியோ முப்பத்தைந்து வருடங்கள் ஓடிவிட்டன. இனி நமக்குத் திருமணம் நடைபெறுமா? அது சுலபமா?” தீர்த்தாவின் சிந்தனைகள் நீண்ட எதிர் காலத்துக்குள்ளும் நுழைந்து விரிந்தன.

“நம்முடன் படித்த, நம்மிடம் படித்த பெண்கள் எல்லாம் திருமணம் செய்துகொண்டு உல்லாசமாக வாழ்க்கையில் பூவும் பொட்டுமாய் இருக்கிறார்கள்! எனக்கு மட்டும் இன்னும் திருமணமே ஆகாமல் இந்த வீட்டுக்கு உழைத்து, உழைத்து… உருமாறிப்போய்த் தலையில் நரை தோன்றிவிட்டது.

பொழுது விடிந்துவிட்டதாம்! அம்மா சொல்கிறாள் எனக்கு விடிவு எப்போது? உணர்வுகளை உதறிவிட்டு எழுந்தாள்.

எழுந்து பள்ளிக்குத் தயாரானாள். அம்மா ஞாபகப் படுத்தினாள்.

“தீர்த்தா, அந்தப்பொண்ணு சுஜா கல்யாணக்கடிதாசு கொடுத்தாளே, நீ போகலையா?” அன்றைய சம்பவத்தால் நிலைகுலைந்து போயிருந்ததால் தயங்கியபடியே சொன்னாள்.

“நான் போகலை. எனக்காக நீ போயிட்டுவா”

“என்ன இருந்தாலும் நீ போகிறது மாதிரி இருக்குமா? நீ போனால் அவள் சந்தோஷப்படுவாள்!”

“அவ சந்தோஷத்துக்காக, நான் கஷ்டப்படக் கூடாதில்லே. அதனால் தான் சொல்றேன்” கடுப்பு வார்த்தைகளில் தெறித்தது.

“நீ அங்கே போறதிலே என்ன சங்கடம்?” அம்மா வியப்போடு கேட்டாள்.

“கல்யாணச் சாப்பாடு சாப்பிட வந்திருக்கியே, நீ எப்பப் போடப்போறேன்னு இங்கிதமில்லாமல் கேட்கிறவர்களுக்கு என்ன பதில் சொல்றது?”

“போட்டால் போச்சு. நேரம் வந்தால் கூடிவரும் என்று சொல்லவேண்டியது தானே?”

“அப்படிச் சொல்றதுக்கு எனக்குப் பதினாறோ பதினெட்டோ இல்லையம்மா, முப்பத்தைந்து வயசாச்சு!”

“அதற்கு என்ன செய்வது? மாப்பிள்ளை கிடைக்க வேண்டாமா?”

“மாப்பிள்ளை வாசலில் வந்து நிற்க மாட்டார். நாம் தேட முயற்சி செய்தால் தானே?” வெடுக்கென்று சொல்லி வேதனையும், விரக்தியும் சேர உதைத்துத் தள்ளப்பட்ட நாயைப்போல் செருப்பை மாட்டிக்கொண்டு வெளியே நடந்தாள். வீட்டைவிட்டுக் கிளம்பி நிதானமான நடையுடன் சாலைக்கு வந்தாள். தனக்கே உரிய வேகத்துடனும், கலகலப்புடனும் மெயின் ரோடு இயங்கிக்கொண்டிருந்தது. பெண்ணாகப் பிறந்தாலே பாவம். அதுவும் ஒரு நடுத்தரக் குடும்பத்தில், மூத்தவளாய்ப் பிறக்கவே கூடாது. பாவப்பட்ட ஜென்மம் தன்னைத்தானே நினைத்து இரக்கப்பட்டவளாய், வருத்தப்பட்டவளாய்ப் பள்ளிக்குப் போய்ச் சேர்ந்தாள்.

வகுப்பு ஆரம்பிக்க இன்னும் நேரம் இருந்தது. சக ஆசிரியர்கள் தங்களின் கணவனைப்பற்றியும், மாமியார் குழந்தைகளின் குறும்புபற்றியும் பேசி அரட்டை அடித்துக் கொண்டிருக்க, இவள் மட்டும் தனிமையில் அமர்ந்திருந்தாள்.

இப்போது எல்லாம் தனிமை ஒன்று தான் உற்ற தோழியாய் இருந்தது தன்னை எல்லாருமே வித்தியாசப் படுத்துவதாய் உணர்ந்தாள். ஆசிரியைகள் மட்டுமல்ல சக ஆசிரியர் கூடத் தன்னை மதிக்காமல் இருப்பதுபோல் பட்டது. தனக்காக இல்லாவிட்டாலும் இவர்களுக்காகவாவது திருமணம் செய்துகொண்டால்தான் மதிப்பு கிடைக்குமோ? இது பெற்றவர்களுக்கு எங்கே புரிகிறது? பெண்ணுக்கு ஆசைகளும் உணர்வுகளும் இருப்பதாகவே அவர்கள் உணரவில்லையே? விழிக்கொடியில் நீர் மலர்கள் மெல்லச் சுண்டியெறிந்தாள். கடமை வென்றது. கவலை மறந்தது. இந்தப்பள்ளி வேலையும் இல்லாமல் இருந்திருந்தால்… நினைக்கவே பயமாக இருந்தது.

மாலையில் அவள் வீடு திரும்பியபோது ரேழியில் அமர்ந்திருக்கும் அப்பாவைக்காணோம். அவளுக்கு வியப்பாக இருந்தது அவள் சம்பாதிக்க ஆரம்பித்ததிலிருந்து அப்பா வெளியில் கிளம்பியதே இல்லை. பெண்ணின் சம்பாத்தியத்திலேயே பணக்குறை இல்லாமல் மனநிறை கண்டுவிட்டார் போலும்.

இவளைப் பார்த்ததும் தங்கை சுமிதா காபி கொண்டு வந்து வைத்துவிட்டுப்போனாள். அவள் பத்தாவது படித்துக் கொண்டிருந்தாள் அக்காவிடம் ஆழ்ந்த அன்பும் பரிதாபமும் உண்டு அவளுக்கு,
அம்மா எங்கே போயிருப்பாள்? ஒன்று அடுக்களையில் இருப்பாள்; இல்லையெனில் அடுத்த வீட்டில் வம்பளந்து கொண்டிருப்பாள். வயது ஓடிக்கொண்டிருக்கிறதே. நாலு பேர் எப்படியெல்லாம் இடித்துரைக்கிறார்கள் என்பதெல்லாம் புரியாமல், அடுத்தவரைப்பற்றி அழகாக வம்பளப்பாள். தீர்த்தாவுக்குத் தெரிந்து அம்மா வேறு எதையும் செய்ததில்லை.

இரவு சாப்பாட்டு நேரத்துக்குத்தான் தன்அறையை விட்டுத் தீர்த்தா வெளியில் வந்தாள். சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்து பேருக்குக்கொறித்தாள்.

அப்பா தயக்கத்தோடு எதையோ சொல்ல வாயெடுத்துப் பின் அம்மாவைத் துணைக்கு அழைத்தார்.

“தீர்த்தா, அப்பா உனக்காக ஒரு வரன் பார்த்து வந்திருக்கிறார். ஐம்பத்தைந்து வயசாகிறதாம். ஏதோ கம்பெனியில் வேலை பார்க்கிறாராம். அம்மா மொழிபெயர்த்தாள்.

வாயிற்குள் வைத்தசோறு உள்ளே இறங்க மறுத்தது தீர்த்தாவுக்கு.

“முதல் தாரம் என்ன பண்ணுகிறதாம்?” கசப்பை விழுங்கிவிட்டு வெளிவந்தது கிண்டல்.

“அவ சீக்காளியாம். அவளாலே தொந்தரவு கிடையாதாம். அவளே இரண்டாம் தாரம் பண்ணிக் கொள்ளச் சொல்லிக் கையெழுத்து போட்டுக்கொடுத்திட்டாளாம்”

“போதும் அம்மா! உனக்கு மனசாட்சியே கிடையாதா? எண்பது வயசிலே வரன் பார்க்கக் கூடாது?” ஆத்திரத்தோடு தீர்த்தா கத்தினாள்.
அப்பா மெதுவாய் இழுத்தார். “அது… வந்து தீர்த்தா உனக்கு வயசாயி…” இடைமறித்தாள் அம்மா. “நீங்க சும்மா இருங்க, ஏண்டி, உனக்கு என்ன வயசு, சின்னப் பொண்ணுன்னு நினைப்போ? உன் வயசிற்குக் கிழவனா இல்லாமல் குமரனா வருவான்?” அம்மாவின் குரலில் கேலி தொனித்தது.

அதிர்ச்சியோடு, ஆத்திரமும் சேர, “ஏன் இளமையிலேயே எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்கிறதை நானா வேண்டாம் என்று தடுத்தேன்? உங்களுக்கு அதுக்கு ஏது வக்கு? உங்களுக்காகவே உழைச்சுத்தான் நான் வயசையும் தாண்டிட்டேன் ஆசைகளும் மரத்துப் போச்சு. இப்படி நான் நிற்கிறதுக்குக் காரணமே நீங்கதான்?” பேச்சில் சோகம் இயலாமை, வெறுப்பு, ஆத்திரம் அனைத்தும் தெரிந்தன.

“சும்மா நிறுத்தடி. எங்களைக்காரணம் சொல்லாதே அது உன் தலையெழுத்து. சின்ன வயசிலே கல்யாணம் பேசினப்பவெல்லாம், ஏதோ குடும்பத்துக்கு உழைச்சுக் கொட்டுற பெருமையிலே கல்யாணம் வேண்டாம்னே. நீ சம்பாதிக்கக் கிளம்பாமல் இருந்தால் உங்கப்பாவும் பொறுப்பாக் கல்யாணத்தைச் செய்திருப்பார். உன் பணத்திமிறினாலே நீயும் கெட்டு, அப்பாவையும் பொறுப்பற்றவராக்கி விட்டு இப்படி உருகுகிறாயே! அதுதாண்டி உன் தலையெழுத்து!”

இரக்கம் இல்லாமல் பேசும் அம்மாவை வெறித்துப் பார்த்துவிட்டுத் தன் அறையில் படுக்கையில் போய் விழுந்தாள் தீர்த்தா.

கட்டிலில் விழுந்து அழுதாள். தன்னை உணராத இதயங்களை நினைத்து! இரண்டு நாட்கள் மனசு போராடியது. இரண்டு நாட்கள் சாப்பிடப் பிடிக்காமல், தூக்கம் வராமல், யாரோடும் பேசப் பிடிக்காமல், உடம்பு மட்டுமல்ல மனசும் ஓய்ந்தபோயிருந்தது. தலையெழுத்தாமே! எது தலையெழுத்து? குடும்பக் கௌரவம் அது இது என்று ஏன் பயப்பட்டேன்! நான் நினைச்சிருந்தால் என் தலையெழுத்தை அன்றே மாற்றியிருக்கமுடியும். இப்பொழுதுதான் என்ன, எங்கேயாவது அநாதை விடுதியில் சேர்ந்து விட்டால் அம்மா என்ன செய்வாள்? சும்மா இருந்து விடுவாளா? நிச்சயம் மாட்டாள். குடும்பச் சக்கரம் எப்படி ஓடும்? வீட்டு வாடகைக்கும், பாலுக்கும் எங்கே போவாள்? பாவம். சுமிதாவை அடுத்த பலிகடாவாக்கிவிடுவாள்! வேண்டாம்! இந்தச் சின்னஞ்சிறு வயசிலே அவளுடைய கனவுகளாவது பலிக்கட்டும்! நெஞ்சுக்குள் எதுவோ அடங்கித் தணிய ஆறுதல் நிதானமாக மூளையில் ஏறியது. பின்பு எதையோ தீர்மானம் பண்ணின மாதிரி, அந்தத் தீர்மானத்தை வெளிப்படுத்துகிற முடிவோடு எழுந்தாள்.
அவள் முடிவு அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இனிக்கத்தான் செய்தது.

வழக்கம் போல் அப்பா யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார். “என் மூத்த பெண்தான் இந்தக் குடும்பத்துக்கே தூண்மாதிரி. பிள்ளைகளாக இருந்தாலும் கல்யாணமானதும் பெண்டாட்டி முந்தானையைப் பிடித்துக் கொண்டு ஓடிவிடுவான்கள். என் பெண் தங்கக்கட்டி.”

“ஆமாம். தங்கக்கட்டி இல்லே, மெழுகுவர்த்தி! தான் தியாகம் செய்தால்தான் தங்கையாவது சுகமாக வாழ முடியும். அப்பா சொல்வது போல் நான் உணர்ச்சிகள் இல்லாத கல்தூண்தான்” அந்தச் சோக நிலையிலும் அவளுக்குச் சிரிப்பு வந்தது.

தீர்த்தாவின் அடக்கப்பட்ட கண்ணீரும், ஒடுக்கப்பட்ட அபிலாட்சைகளும் மெழுகுவர்த்தியாய்த் தன்னை அழித்துக்கொண்டு அந்த குடும்பத்தை வெளிச்சமாக்கிக் கொண்டிருந்தன.

– கலைமகள் – 1985, ஏப்ரல்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *