மெல்லினம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 2, 2014
பார்வையிட்டோர்: 12,675 
 
 

பக்கத்து வீட்டு வினோத் மட்டுமா சொன்னான்?. எதிர்த்த வீட்டு அஞ்சலையும் தான் சொன்னாள்.அவளுடன்சேர்ந்த ரெங்கம்மாளும்தான் சொன்னாள். “ எனக்கு கல்யாணம் நடக்கவே நடக்காதாம்”.
“ கல்யாணம் நான் பண்ணிக்கிட்டால் நீங்களெல்லாம் என்ன செஞ்சிக்கிறீங்க?“ என்று நான்கேட்டேன். அத்தனைப்பேருமே வாயைப் பொத்திக்கிட்டு நின்றாங்க. ரெங்கம்மாள் மட்டும் நெஞ்சை நிமிர்த்துக்கிட்டு சொன்னாள். “ ஒரு பக்கக் காதை அறுத்துக்கிறேனு“. அவள் வாய்ப்பந்தல் போடுகிறவள். ரொம்பகூட காதைஅறுத்துக்கிறுவாளே…..!
ரெங்கம்மாளை விடு . அவளுக்கு உடம்பெல்லாம் வாய். தொனத்தொனத்த பேர்வழி. எந்நேரமும் என்னிடம் வம்புக்கு நிற்கிறவள் . மதுமதிக்கு எங்கே போய்விட்டதாம் புத்தி. அவளும் நானும்தானேஒன்றாக பள்ளிக்கூடத்திற்கு போய் வருவோம். என் வீட்டுக்கணக்குகளை பார்த்து எழுதி மேரி டீச்சரிடம் வெரி குட் வாங்கி கொண்டவளாச்சே.அவளுக்கு நான் என்ன குற்றம் செய்தேன். அவளும்தான் சொன்னாள். “ எனக்கு கல்யாணமே ஆகாதாம் “
அவள்முகம் பார்க்கச் சகிக்காது. பெங்களுர் கத்திரிக்காய் மாதிரி இருப்பாள் கரடு முரடாக.தேவலோகத்தில் உள்ள முப்பத்தி மூன்று கோடி தேவர்கள் இருப்பதை விடவும் அதிகப்படியான முகப்பருக்கள்அவளுக்கு . போதாக்குறைக்கு ஊசியால்குத்தியதைப்போலமுகமெங்கும் தழும்புகள். ஒருநாள் பள்ளிக்கூடம் விட்டு திரும்பி வருகையில் அவள்சொன்னாள். என் முகத்தைப் பார்த்துதான் சொன்னாள். “ எனக்கு ஒரு சோடினு கிடைச்சால் செவ்வாய் கிரகத்திலதான் கிடைக்குமாம்”. இது எப்படி இருக்கு! எனக்கும் ஓர் உயிர் இருக்கு. இப்படியெல்லாம் பேசினாலும் என் மனது நோகுமென்று அவளுக்கு அந்த இடத்தில தெரியவில்லை தானே!. என்ன மனுசிஅவள். ச்சீச்சீ.! அவளெல்லாம் எனக்கு ஒருதோஸ்த்?
என்கூட படித்தசோமன்ஒருநாள் கைகளை இப்படியும் அப்படியுமாகஆட்டி தலுக் , புலுக்கெனநடந்தான். “ ஏன்டா இப்படி நடக்கே? “ என்று கேட்டேன். அதுக்கு அவன்சொன்னான். “ என்ன மாதிரி நடந்து பார்த்தேனு “. சொல்ல மட்டுமாச்செய்தான். பல்லெல்லாம் கழண்டு விழுகிற மாதிரிகெக்கே , கெக்கேனு சிரிக்கவும் செய்தான். அப்பொழுதேஅவனதுபல்லைபெயர்த்துஅவன் கையில் கொடுத்திருக்கணும். போனால் போகுதென்று விட்டுவிட்டேன். அவனுக்கு எத்தனை கொழுப்பு இருந்திருந்தால்அந்த வார்த்தையை அவன்சொல்லிருப்பான்..?
பத்தாம் வகுப்பில்இரண்டு தடவை அட்டெம்ப்ட் அடித்தவன் சேது மாமாமகன் மாதவன். அவன் பத்தாம் வகுப்பில்தேர்வான் என்றுயார் நம்பினார்?. நான்தான் அவனை பாஸ் பண்ணவைத்தேன். அந்த நன்றி கூட அவனுக்கு இல்லை. என்னை பார்க்கும் பொழுதெல்லாம் பட்டப்பெயர் வைத்து கூப்பிடுகிறான் .நிலத்திற்கு உச்ச வரம்பு வைக்கிற மாதிரி கேலி , கிண்டலுக்கும் உச்ச வரம்பு வைக்கணும். அதுக்கு மேல்பண்ணினால் சப்பானி மாதிரி சப் என்றுஅறைகிறஉரிமையையும் கொடுக்கணும். அப்பொழுதான் இந்த மாதிரி பையன்கள் அடங்குவார்கள்.
எனக்கு என்ன குறையாம் ? என் உயரத்திற்கு ஈடு கொடுக்க இந்த ஊரில்யார் இருக்கா ? என் அம்மா சொல்கிற மாதிரி, ஒரு வட்டத்துக்குள் அடங்கும் முகம்.தேய்த்து கழுவியதைப்போல பளபளப்பு. பரந்த நெற்றி. வளைந்த நாசி. வெள்ளொளி வீசும் கண்கள்.வாட்டச்சாட்டமான உடல்வாகு. எலுமிச்சம்பழம் நிறம்.நான்பஞ்சத்திற்கு அடிப்பட்ட பரதேசி மாதிரியாகவா இருக்கேன்?. இல்லை தின்னுக்கொழுத்த காட்டெருமை மாதிரி இருக்கேனா? ஒரு மனுசா எப்படி இருக்கணுமோ அப்படித்தானே இருக்கேன். எல்லாப் பானைக்கும் ஒரு மூடி இருக்கிற மாதிரி எனக்கும் ஒரு சோடி இருந்திருக்குத்தானே! அதனால் தானே எனக்குகல்யாணம் நடக்கயிருக்கிறது!
நான் என் கல்யாணத்தை அப்பா , அம்மா விரும்புகிறப்படிதான் பண்ணிருந்திருக்கணும். அப்பாக்கிட்ட சொன்னால் அவர் சம்மதிக்கவா செய்வார்? குலம் கேட்பார். கோத்திரம் கேட்பார். சாதி கேட்கிறத்தோடு இல்லாமல்சாதிக்குள் இருக்கின்ற பட்டத்தையும் கேட்பார். அப்பாவைக்கூட ஒரு ரகத்தில் சேர்க்கலாம். நான் எப்படியோ போய் தொலையட்டுமென தலை மூழ்கிட்டு போயிடுவார். அம்மா இருக்கிறாளே………..அப்பப்பா! அழுது புரண்டு ஊரைக்கூட்டி ரணகளம் அல்லவா பண்ணிவிடுவாள்!. அதான் என் முடிவுக்கு இந்தக் கல்யாணத்தை நானே பண்ணிக்கிறேன்.
அம்மாவுக்கு என் மீது எப்பொழுதும் ஒரு கண்ணுதான் . என்னோட நடை, உடை, பேச்சு அத்தனையையும் வைத்தக்கண் எடுக்காமல் பார்ப்பாள். அப்பா………. ? ஊகூம். நான் குழந்தையாக இருந்த பொழுது என்னை தூக்கிக் கொஞ்சினாரோ என்னவோ?
நான் கடந்தவருடம்தான் பள்ளிப்படிப்பை முடித்தேன். பனிரெண்டாம் வகுப்பில் நான் எவ்வளவு மார்க் தெரியுமா? தொள்ளாயிரத்து எண்பது. அப்பா என்னோட மார்க்கைப் பார்த்து கொஞ்சமாவது மெச்சிருக்கணுமே…..?. ஊகூம்.என்னை பாராட்டுவதற்கு அவரிடம் ஏது வார்த்தைகள். ஒன்று சொன்னார். “ நீ படிச்சது போதும் “ .
அப்பாகால்களில்விழுந்து அழுது கெஞ்சினேன். அப்பா இளகி திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு வருவதாக இல்லை. ஒரு நாள் அப்பாவைப் பார்த்து கேட்டேன். கேட்க வேண்டுமென்றுதான் கேட்டேன். முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சம் கோபத்தை செயற்கையா வர வைத்துக்கொண்டு கேட்டேன். “ என்னை இதுக்கு மேலே படிக்க வைக்க முடியலைனா என்னதுக்கு என்னை பெத்தியாம்? ”.நான் கேட்டக்கேள்வியை அவரால்பொறுத்துகொள்ள முடியவில்லை. மூக்கு விடைக்க, கண்கள் சிவக்க அம்மாவை சொல்லித் திட்டுகிற அதே அசிங்க வார்த்தையைச் சொல்லி என் கன்னத்தில்ஒர் அறை விட்டார். ஊறவைத்த துணியைப்போல கூனிக்குறுகி குந்திப்போனேன். எனக்கு அழுகை விக்கி விக்கி அடைத்தது . குந்திப்போனால் குலைந்துப்போயிடுவேனாக்கும்……?
அவர் என்ன என்னை படிக்க வைக்கிறது? . நானே படித்துக்கொள்கிறேன் என கிளம்பினேன் . வளர்ந்த வீட்டை விட்டு, விளையாண்டுத்திரிந்தரோட்டை விட்டு, ஊரைவிட்டு, அண்ணன் , அக்கா , அப்பா , அம்மா கண்களில் படாமல்சென்னைக்குச் சென்றேன்.
நான் இல்லாதவீடு , ஊர் எப்படி இருந்திருக்கும்…….? என்னால் கணிக்க முடியவில்லை. அம்மாஅடிக்கடி சொல்வாளே “ முத்து …………. நீ ஏன் இவ்ளோ அழகா இருக்கேனு தெரியுமா? எங்களையெல்லாம் படைச்சவர் பிரம்மன். உன்னை படைச்சவர் கிருஷ்ணன்.“என்னைப்படைத்தஅந்த கிருஷ்ணனுக்குத்தான் அது தெரியும்.
நான் கொஞ்ச நாட்கள் சென்னையில் தங்கியிருந்தேன். கிடைக்கின்ற வேலைகளை பார்த்துக்கொண்டு வயிற்றை கழுவிக்கொண்டிருந்தேன். விடிந்தால் , இருட்டினால் வீட்டு ஞாபகங்கள் என் முன்பு நிழலாடும். அப்பா மீதான நினைவுகளைக்கூட என்னால்மென்றுவிழுங்கிக்கொள்ள முடிந்தது. ஆனால் அம்மா, அண்ணன், அக்கா ஞாபகங்கள் கண்களுக்குள்ளே மிதந்தன. அங்கு இருக்கின்ற பொழுது நான் பட்ட இன்னல்கள் சொல்லி மாளாது. ஒன்று மட்டும் புரிந்துக்கொண்டேன். பூமி சூரியனைச்சுற்றி வரவில்லை. ஆண்களைத்தான்சுற்றி வருகிறதென்று.
ஒரு நாள் எக்மோர் ரயில்வே ஸ்டேசன்க்கு அருகில் கையேந்தி கடையில சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் சுயம்புவை பார்க்க நேரிட்டது. நான் உதவி என்று கேட்காமல் எனக்கு உதவி செய்தார் அவர். “ என் கூடவே வந்திடுறியா….? “ என்று கேட்டார். அவரைநான் முழுவதுமாக நம்பினேன். அவர் கண்களில் தெரிந்த ஈரம், இரக்கம் அதற்கு முன்நான் எங்கேயும் அனுபவிக்காத ஒன்று.
அவர் கூட நான் விழுப்புரத்திற்கு வந்தேன். வந்ததும் அப்பாவிற்கு கடிதம் எழுதினேன். நான் எழுதிய கடிதத்திற்கு பதில் வராதா……….? என்று தினந்தோறும் ஏங்கினேன். அப்பாவிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. போனில் பேசலாமா……? என்று கூட யோசித்தேன். சுயம்புவிடம் கிடைத்த அரவணைப்பு என் வீட்டு நினைவுகளை முழுவதுமாக மறக்கடித்து விட்டது.
ஒரு நாள் என்னைத்தேடி அப்பா வந்தார். அப்பாவைக்கண்டதும் எனக்கு கைகால்கள் புரியவில்லை. வந்ததும் என்னை கட்டிப்பிடித்து அழுதார். என்னை மன்னித்து விடு ! என விசும்பினார். என்னை அவர் கூடவே கூட்டிக்கொண்டு போவார் என நினைத்தேன். அந்த நினைப்பில் மண்தான் விழுந்தது. “ முத்து…………. எனக்கொரு காரியம் பண்றீயா………? “ எனக்கேட்டார். “ என்னதுப்பா….? “ என்று ஆவலோடு கேட்டேன். “ அக்காவுக்கு கல்யாணம் நடக்க இருக்கு. அது நல்லபடியாக முடிகிற வரைக்கும் நீ வீட்டுக்கு வர வேண்டாம் “ எனச்சொன்னார். அந்த ஒரு நொடியில் நான் சிதைந்துப்போனேன். உதடுகளில் முட்டிய அழுகையை மெல்ல விழுங்கிக்கொண்டேன். “ ஏனப்பா….?“ என்று கேட்டேன். “ உன்னை மாதிரியே அக்காளும்இருப்பாளோ என மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சந்தேகப்படுறாங்க“ என்று சொன்னார். அதற்கு பிறகு அப்பா , அம்மா எல்லாமே எனக்கு சுயம்புதான்.
இப்பொழுது நான் விழுப்புரத்தில் சுயம்பு கூட தங்கியிருக்கேன். ஒரு தொண்டு நிறுவனத்தில் பகுதி நேரம் வேலைப்பார்த்துக்கொண்டு ஒரு யுனிவர்சிட்டியில்அஞ்சல் வழிக்கல்வியில் பி.எ இங்கிலீஸ் படித்துக்கொண்டிருக்கிறேன். நான் படிக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. இன்று எனக்கென்று ஒரு தனி உலகம் இயங்குவதாக உணர்கிறேன். என்னைச்சுற்றியும் நிறைய நல விரும்பிகள் இருக்கிறார்கள். அவர்கள் தான் என்னை படிக்க வைக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் நான் படித்துக்கொண்டிருக்கிறேன். இந்தப்படிப்பு முடிந்ததும் அடுத்ததாக பி.எட் படிக்கப்போகிறேன் . பிறகு போட்டித்தேர்வு எழுதி டீச்சர் போஸ்டிங்க் வாங்கத்தான் போகிறேன். இது என்னுடைய ஏழடுக்கு கனவு.
என்னைக் கேலிச் செய்த அத்தனை பையன்களும் , பெண்களும் அவரவர் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்து “ என் பிள்ளைக்கு நல்லாப் பாடம் சொல்லிக்கொடு“ என்று கெஞ்சுகின்றக்காலம்மிக விரைவில் வரத்தான் போகிறது. அப்பொழுது தெரியும் இந்த முத்து யார் என்று !கண்ணுக்குத் தெரிந்த பகலும் கண்ணுக்குத் தெரியாத இரவுக்குள்ளே அடங்கித்தான் ஆகணும் என்கிறஉண்மையைஅன்றைக்கு எல்லாரும் தெரிந்துக்கொள்வார்கள்.
என்னுடன் கல்லூரியில் படிக்கின்ற சுகந்தி ஒரு நாள் தேர்வு எழுதுகின்ற பொழுது என் பரீட்சை தாளை காட்டச்சொல்லி கெஞ்சினாள். நானும் பாவமென்று காட்டினேன் . தேர்வு முடிந்ததும் பேச்சுக்கிடையில் சொன்னாள். “ என்னோட அறிவுக்கு நான் கலெக்டர் கூட ஆவேனாம். ஆனால் எனக்கு கல்யாணம் மட்டும் ஆகவே ஆகாதாம் ”. நான் அவளிடம் இதைக் கேட்டேனா? அவளாகவே சொல்லிவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் சென்றுவிட்டாள்.
இதோ சற்று நேரத்தில் எனக்கு கல்யாணம் நடக்கப்போகிறது. எனக்கு மட்டுமல்ல. என்னைப்போல இன்னும் எத்தனையோ பேருக்கு இந்தக் கோயிலில் கல்யாணம் நடக்கப்போகிறது. ரெங்கம்மாள் என்ன செய்வாளாம்………? காதை அறுத்துக்கொள்வாளா……? வினோத் என்ன செய்வானாம்…..? சுகந்தி என்ன செய்வாளாம்………? என்னைச்சுற்றிலும் எத்தனையோமணப்பெண்கள் இருக்கிறார்கள் . இதையெல்லாம் பார்க்கயாருக்கும் கொடுத்து வைக்கவில்லை.
நான் உடுத்திருக்கின்ற இந்தக் காஞ்சிப்பட்டு எவ்வளவு தெரியுமா? இருபதாயிரம் ரூபாய். சுயம்புஎனக்கு கிப்ட்டா வாங்கிக்கொடுத்தது. இதோ என் காலில் வெள்ளிக் கொலுசு. விரல்களில் மிஞ்சி, பீலி, பில்லணை .கையில் நாகவந்து, வளைவி .இடுப்பில் ஒட்டியாணம் .கழுத்தில் அட்டியல், கண்டரசம், காசுமாலை. மூக்கில் பேசரி, தொறட்டி. காதில் முருகு, அலுக்கு, ஒன்னப்பு, மாட்டில். தலையில் நெத்தி சுட்டி, சுத்திப்பரிஞ்சி, உச்சி ராக்கடி. முடியில் ஜடை நாகம் .எல்லாமே வாடகை நகைகள்தான். இருந்திட்டு போகட்டுமே . எனக்கு வேலை கிடைத்ததற்குப்பிறகு தங்கத்தில் வாங்கி அணிந்துக்கொள்கிறேன்.
எனக்கு தெரிந்தவரைக்கும் யாருக்கும் இத்தனை நகை நட்டுகளோடு இப்படியொரு கல்யாணம் நடந்ததே இல்லை. யாருக்கு இவ்வளவு கூட்டம் கூடியிருக்கிறது?குப்பத்து மக்கள் தேங்காய் பழத்தட்டுகளோடு கூடி வருகிறார்கள்.ஆயிரம் தலைகள் கொண்ட அதிசயப்பிறவியைப்போல மனிதக்கூட்டம். பேச்சைக்குறைக்காத உருமி மேளம், டோலக் தளம்.இது போதாதென்று கையை நீட்டி நீட்டி, தட்டித் தட்டி கைத்தாளம். .
கெட்டி மேளம், கெட்டி மேளம். ………………..
இதோ என் கழுத்தில் தாலி ஏறிவிட்டது. தாலியை எடுத்து கண்களில் ஒற்றி உள்ளுர ரசிக்கிறேன்.என்னுடைய நீண்ட நாள் ஆசைகள் மெல்ல அடங்குகின்றன. அந்தக்காலத்து அணு ஆயுதம் போல வான வேடிக்கைகள். காற்றைக்கிழிக்கும் சிவகாசி வெடிகள். இதோ என் கணவர் கல்யாணம் முடிந்து ஊர்வலத்தில் வருகிறார். ஊர்வலத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் . கைகளை நீட்டி நீட்டி , தட்டித் தட்டிப் போர்ப்பரணி பாடுகிறார்கள் . மேடும் பள்ளமுமான ராகம். உடைவும் குடைவுமான பாட்டு.
எனக்கு கல்யாணம் என்பது தூக்குனாங்குருவி கூடு மாதிரி அதிசயமான ஒன்றுதான். அம்மா , அப்பா, அக்கா , அண்ணன் உட்பட என்னைக் கேலிச்செய்த அத்தனைப் பேர் முகங்களையும் மனதிற்குள் நிறுத்தி கர்வம் கொள்ளப்பார்க்கிறேன். நான்உயர , உயர போகிறேன். ஆகாயத்தில் அந்தரத்தில் மிதக்கிறேன் . இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். என்னுடையகல்யாண நாள் அல்லவா!
.திடீரென இரைச்சலோடு கூடிய மழை விட்டது மாதிரியான அமைதி கோயிலில் நிலவத் தொடங்குகிறது. ஊர்,பெயர் தெரியாத ஒரு நபர் ஓடி வந்து என் தாலியை அறுக்கிறாள்.என் தலையில் அடித்து முடிகளை பிய்க்கிறாள். நெற்றிப்பொட்டை அழிக்கிறாள்.என் ஆத்ம உலகம் சூன்யமாகி விட்டதைப் போல உணர்கிறேன்“ என் புருசனுக்கு என்ன ஆச்சு?“ எல்லோரையும் போல பதறியடித்துக்கொண்டு கேட்கிறேன். “ உன் புருசனைவெட்டி காளிக்கு காவிக்கொடுத்திட்டாங்க “ என்றவாறுஒரு கை என் வளையல்களைஉடைக்கின்றது.
என் சகவாசிகள் உடம்பே துண்டானதைப்போலதுடிக்கிறார்கள். சற்று முன் கட்டிக்கொண்ட தாலிகளை அறுத்து எறிகிறார்கள்.ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுகிறார்கள். முடிச்சு , முடிச்சாக உட்கார்ந்துக்கொண்டு ஒப்பாரி வைக்கிறார்கள். மாரடைப்பு வருவதைப் போல வயிற்றிலும் மார்பில் அடித்துக்கொண்டு , கைகளை ஒன்றோடு ஒன்று மோதி வளையல்களை உடைத்துக்கொண்டு, முடிகளை பிய்த்து மலர்ச்சரங்களை கசக்கி எறிகிறார்கள்.கூத்தாண்டவர் கோயில் திருவிழா கடைசிக்கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
பகல் மெல்ல சுருண்டு இருட்டின் மடிக்குள் அடங்குகின்ற நேரத்திற்கு வந்தாகி விட்டது. மாங்கல்யத்தை இழந்து பூ , பொட்டுகளை இழந்து திருவிழாவை வேடிக்கைப் பார்த்தபடி தனி மரமாக நிற்கிறேன். சட்டென ஆடவர் கூட்டம் என்னை மொய்க்கிறது. சில கைகள் என் கன்னங்களை வருடுகிறது. பிச்சிப்பூவை பிய்ப்பதைப்போல என் தசைகளை பிய்க்கிறது.என்ஆடைகளை வேகமாக களைகிறது. மின்சாரம் ஒழுகும் சுவிட்சைத் தொட்டவள் போல திடுக்கிடுகிறேன். என் விசும்பலை மீறி சிலகைகள் என் அங்கங்களை நெறிக்கிறது . முள்ளம்பன்றியின் சிலிர்த்துப்போன முடிகள் போன்ற பலரின் மீசைகள் என் கன்னங்களில்குத்துகின்றன .பம்பரமாக சுற்றி தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்கிறேன். ஆண்களின் அகோரப்பிடிக்குள் நான். என் அங்கங்களில் காயம் என்பது போல உணர முடிகிறது.வலி பிராணன் வாங்குவதைப்போல ரணமெடுக்கிறது.பூனையின் கால் நகங்களில் சிக்கிய அணிலாகிப் போனேன் நான்.
வியூகங்களை உடைத்துக்கொண்டு அபிமன்யூ மாதிரி வெளியே வர முயற்சிக்கிறேன்.முழுப்பலத்தையும் ஒன்றுத்திரட்டி ஒரு விசும்பு விசும்புகிறேன். கீழே விழுந்து ,புரண்டு, விக்கித்துகதறுகிறேன். மல்லாக்கத் தூக்கிப்போட்ட கரப்பான்பூச்சி எப்படி தவிக்குமோ அப்படியாக கைகால்களை உதறிக்கொண்டு தவிக்கிறேன். “ அம்மா……அப்பா……….. சுயம்பு……….“ ஓலமிடுகிறேன். என்னை மொய்த்தக்கூட்டம் பதறியடித்துக்கொண்டு விலகி ஓடுகிறது.
நான் தன்னிலை மறந்து மயக்கத்தின் ஆழத்திற்குச் செல்கிறேன். யார் யாரோ ஒடிவந்து என்னை தூக்குகிறார்கள். அவர்கள் பேசிக்கொள்வதுஎன் காதுகளில் விழுகிறது. “ இந்த அரவாணி ( திருநங்கை ) திருவிழாவிற்கு புதுசு போல. அதான் கூத்தாண்டவருக்காக இப்படி அழுது , அழுது மயக்கம் போட்டிருக்கு “ .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *