மெல்லச் சிரித்தது அல்லிக்குளம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 7,803 
 
 

கொட்டும் மழையில் மெட்டியில்லாத இரு பாதங்கள் மெல்லத் தண்ணீர் அதிகம் இல்லாத இடங்களாகப் பார்த்துப் பார்த்து நடக்க, மாலை இளம் இருட்டு, ஒதுங்கிநிற்க ஒத்துழைக்காத காரணத்தால் நனைந்துகொண்டே வீட்டை அடைந்தாள் வித்யா. “ஏம்மா இப்படி நனைஞ்சிட்டு வர்றியே போகும்போதே குடை கொண்டு போகக்கூடாதா?” – சிவகாமி. “காலைல போகும்போது நல்ல வெயில் அடிச்சுது, மழை வர்ற மாதிரியே தெரியல அத்தை” என்றபடி தன் அறைக்குச் சென்று தலைதுவட்டி உடை மாற்றி மோகனின் படத்தின் முன் சென்று, விபூதிக் கீற்று இட்டுக்கொண்டு படத்தையே பார்த்து ஒருநிமிடம் தியானித்தாள். கணவனின் அன்பை, பாசத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளும்முன் வித்யாவிடமிருந்து அவனைத் தன்வசம் ஆக்கிக்கொண்டான் அந்த இறைவன்.

அடுப்படிக்குள் சென்ற வித்தியாவிற்கு காபி தயாராக இருந்தது. அவள் தாயாக மதிக்கும் அத்தை சிவகாமிதான் அவளுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் தானே எல்லாவற்றையும் செய்வாள். காரணம் தன் மகனைப் பிரிந்த சோகமே அவளுக்குப் பெரிய சுமையாக இருக்கும் என்று எண்ணினாள், மேலும் மாமியார் மாமனார் இருவரின் அன்பிற்கும் பாத்திரமானவள் வித்யா.

“கிளினிக் போயிட்டு வந்தியா, டாக்டர் அம்மா என்ன சொன்னாங்க” – சிவகாமி.

“கன்பார்ம்தான்னு சொன்னாங்க… மூணு மாசம்…” என்ற வித்யாவின் கண்கள் தன்னையறியாமல் சிந்திய துளிகள் கன்னங்களை ஈரமாக்கின.

தூக்கம் கண்களைத் தழுவாத காரணத்தால் புரண்டு படுத்தாள் வித்யா, இது பழக்கமாகிவிட்டது. சில நாட்கள் ஜன்னலோரம் அமர்ந்து அந்தச்சிறு குளத்தில், நிலவொளியில் சிரிக்கும் அல்லிகளைக் கண்டும் அவள் தன்னை மறப்பதுண்டு. “அது சரி ஏன் இவ்வளவு கோபம்… கடைக்காரர் பில் எழுதும்போது தவறுதலாகக்கூட எழுதியிருக்கலாம்….” – மோகன். “அதெப்படி பணம் வாங்கும்போது தவறுதலாக எண்ணிக்கையில் விட்டார்களா …” – வித்யா. “சரி போகட்டும் அதற்குத்தான் அவரை உண்டு இல்லையென்று செய்துவிட்டாயே…” சிரித்துக்கொண்டே மோகன் கூற மௌனமாய் நடந்தாள் வித்யா. “இந்த நீதி காக்கும் கோபம் உன்னுடன் பிறந்ததா…. இல்லை நடுவில் வந்ததா….” – மோகன். “ம்… இது புதுசு…” சொல்லிவிட்டு மெல்லச் சிரித்தாள் வித்யா, உண்மையைச் சொல்லவேண்டுமெனில் மோகனின் அருகாமைதான் அன்று அவளைக் கடைக்காரரிடம் தைரியமாகப் பேச வைத்தது… கணவனோடு வாழ்ந்த நான்குமாத நினைவுகளின் அரவணைப்பில் உறக்கம் எப்போது அவளின் கண்களை சுற்றும் என்பதை அறியாமலேயே உறங்கிப்போவாள், இன்றும் அப்படித்தான்… உறங்கிவிட்டாள்.

ராஜராஜன் தன்னுடைய வேலைக்கு சாதகம் செய்வதாகவே வித்தியாவிற்குச் சிலநாட்களாகத் தோன்றிவருகிறது. நேற்று ஏற்பட்ட ஒரு பிழையை பின்னர் தான் வித்யா அறிந்தாள், தன் மேலாளர் ராஜராஜன் அழைத்துக் கேட்பார் தவறுதனை ஒப்புக்கொண்டு சரிசெய்து கொடுக்க வேண்டும் என்றிருந்தவளுக்கு ஆச்சரியம். ராஜராஜன் அழைப்பை ஏற்று அவனது அறைக்குச்சென்றாள், “மன்னிக்கணும் சார்… என்ட்ரி தவறானதை பின்னர்தான் கவனித்தேன்…” – வித்யா. “தட்ஸ் நார்மல்… நோ இஷ்யூஸ்… ” சொல்லிவிட்டுத் தொடர்ந்தான் ராஜராஜன் “நான் நாளைக்கு உங்க மாமா மாமியை பார்க்க வரணும்… யு ஹேவ் அப்ஜெக்க்ஷன்?”.

“நோ சார்… நீங்க வரலாம்…. வெல்கம்… நான் என் மாமா அத்தைகிட்ட சொல்லிடறேன்…” – வித்யா. “தேங்க்ஸ்…. நீங்க போகலாம்…” – ராஜராஜன். எதற்காக இவர் நம்வீட்டுக்கு வரவேண்டும் என்று எண்ணிக்கொண்டே விடை தெரியாத குழப்பத்தில் தன் இருக்கையை அடைந்தாள் வித்யா.

இந்தக் கணினி யுகத்தில் காலம் கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்துவிடுகிறதே. ஆம் இது ஒன்பதாவது மாதம். அன்றொருநாள் ராஜராஜன் வித்யாவின் மாமனார் மாமியாரைச் சந்தித்து வித்யாவை மணந்துகொள்வதாகச் சொல்லி அவளின் சம்மதத்தை கேட்டுச் சென்றபின் மாமா அத்தை இருவரும் தீர ஆலோசித்து இந்தத் திருமணத்தால் வித்தியாவிற்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்குமென்று எண்ணினார்கள்.

“ஏம்மா வித்யா, அந்தத் தம்பிக்கு என்ன பதில் சொல்லுறது… நீ இன்னமும் மௌனமா இருக்கியே…” – சிவகாமி. “எம்மா நான் உங்களுக்கு பாரமா இருக்கேனா ” – வித்யா. “சீச் சீ, அசடு என்ன வார்த்தை சொல்லீட்ட… உனக்கொரு நல்ல வாழ்க்கை கிடைக்குமேன்னுதான்…” – சிவகாமி.

“இதோ பாரும்மா, இன்னைக்கு நாங்க இருக்கோம், உன்னை கவனிச்சுக்கறோம், உன் புருஷனுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை எங்களுக்கும் ஏற்படாதுன்னு என்ன நிச்சயம். உனக்கு ஒரு குழந்தை பிறந்து பின்னால அது உன்னை கவனிச்சுக்கற வரை உனக்கு என்ன பாத்துகாப்பு… புதுமைப்பெண் புரட்சிப்பெண் அப்படின்னு கதைகள்ல படிக்க நல்லாருக்கும் ஆனா இந்த சமூகத்தில் ஒரு பொண்ணு தனியா வாழறது சாத்தியமில்லைம்மா… உன் அப்பா ஸ்தானத்துல இருந்து எனக்கு தெரிஞ்சதை சொல்லிட்டேன் உனக்கு எது நல்ல வழின்னு தெரியுதோ, அதை நீயே தேர்ந்தெடுத்துக்கோ ” – மாமனார் சதாசிவம்.

பெண்மனம் சிந்திக்கத் தொடங்கியது, வித்யா… அவள் செய்த குற்றம்தான் என்ன… சீக்கிரமே கணவனைப் பிரிந்தது இறைவன் செய்த குற்றம்… முகத்தைக்கூட நினைவில் வைத்துக்கொள்ள முடியாத அந்த நான்கு மாத வாழ்க்கையை நினைவில் கொண்டு அவள் காலத்தைக் கடத்தவேண்டும் என்பது எந்தவிதத்தில் நியாயம். கணவன் என்ற அந்த உறவின் அன்பிற்கும், பாசத்திற்கும் அவள்மட்டும் என்ன விதிவிலக்கா…? இன்றைய நிலையில் அவள் மறுமணம் செய்துகொண்டால் இந்த சமூகம் அதைத் தவறாகப் பேசுமா? பேசட்டும். அதற்காக அவள் வருந்தத் தேவையில்லை. அவள் செய்தது தவறில்லையே. இந்த நிலையிலும் அவளை மணக்க ஒருவன் முன்வருகிறான் என்றால் அவன் உண்மையில் உலகம் புரிந்தவனாகத்தான் இருக்கவேண்டும். நிச்சயம் அவனால் அவளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் உண்டு. நிலவொளியில் சிரித்த அந்த அல்லிகள் வித்யாவின் கேள்விகளை ஆமோதித்துத் தலையசைப்பதாகவே தோன்றியது.

மறுநாள், “அம்மா, இந்தக் கல்யாணத்திற்கு சம்மதிக்கிறேன், ஆனா கல்யாணத்திற்குப் பிறகும் நீங்க ரெண்டுபேரும் என்கூடத்தான் இருக்கணும் ” – வித்யா.

மாமா அத்தை இருவருக்கும் ஏதோ ஒரு கவலை பறந்துவிட்டதுபோல் நிம்மதி. இரவு மணி 10:10 வித்யாவிற்கு இடுப்புவலி ஆரம்பமாகியது. இனிமேலும் தாமதிக்கக்கூடாது என்று எண்ணி இருவரும் அவளை டாக்சியில் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்கள்… டாக்டர் பரிசோதித்துவிட்டு “கவலைப் படாதீங்க, காலை நாலு மணிக்குள்ள குழந்தை பிறந்துடும்…. சுகப்பிரசவமாகத்தான் இருக்கும்” என்றார். நேரம் கரையக் கரைய வித்யாவின் முனகல் சத்தம் அதிகரித்து பின் கத்தும் நிலைக்கே வந்துவிட்டாள். மணி 3:15 சுகமாக ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்த வித்யா மயக்க நிலைக்குச் சென்றாள்.

காலை மணி ஆறு வித்யா மயக்கம் தெளிந்து எழுந்தாள், அருகே மாமியார் “ஆண்குழந்தை பிறந்திருக்கும்மா…” என்றாள் சற்றே கலங்கிய கண்களோடு. “இதைப் பாக்க என் பிள்ளைதான் இல்லாமப் போய்ட்டான்…” என்று அத்தை சொன்னதைக் கேட்டு ஏதோ ஒரு இனம்புரியாத பயம் அவள் மனதில் பரவ அது கண்ணீராய் உருவெடுத்தது. அவள் அழத்துவங்கினாள். கண்ணீர் வற்றிக் கண்கள் சிவக்கும் வரை அழுதவள் தூங்கிப்போனாள். மீண்டும் அவள் விழித்து எழும்போது ஏதோ ஒரு மாயையிலிருந்து விடுபட்டவள் போல் காணப்பட்டாள். தன் குழந்தையைப் பார்க்கும்போது ஏதோ ஆயிரம் காலம் தன் கணவனோடு வாழ்ந்துவிட்டது போல் அவள் உணர்ந்தாள். பிஞ்சுக் கரங்களின் மென் பரிசத்தில் அந்த வாசம் மீண்டும் நாசியைத்தொட்டது… சன்னக் குரல் சிணுங்கலில் “வித்யா” என மோகனின் குரல் தட்டி எழுப்பியது… மோகனின் அருகாமையில் அன்று அவள் கண்ட தைரியம் மீண்டும் துளிர்த்ததாக உணர்ந்தாள்…

“அம்மா நான் பொட்டு வச்சுக்கலாமா…” – வித்யா

“என்ன இது கேள்வி… நெத்திப் பொட்டுங்கறது உன்னோட பொறந்தது… நாங்க சொன்னா நீ எப்படி எடுத்துக்குவியோன்னு நினைச்சோம்… அதனால இதப்பத்தி நாங்க இதுவரை பேசல… எங்களுக்கு நீ இப்படிக் கேட்டது மகிழ்ச்சியா இருக்கு …” – சிவகாமி

“அம்மா… இனி நான் பழைய ஆபீசுக்கு போக வேண்டாமுன்னு நினைக்கிறேன்…. புது வேலை தேடிக்கப்போறேன்…” வித்யாவின் தீர்க்கமான பார்வையும் ஆழமான குரலும் சிவகாமிக்கு புதுமையாக இருந்தது… ஆனாலும் பிடித்திருந்தது.

வித்யாவின் மடியில் புதிதாகப் புன்னகைத்த அந்தச்சிசு, தவறு செய்ய இருந்தவளை தடுத்து நிறுத்த வந்த தெய்வமாய் அவளுக்குத் தோன்றியது. ஆம் அமைதியாக இருந்த குளத்தில் யாரோ கல்லெறிந்து சற்று கலக்கம் ஏற்படுத்திவிட்டனர். இதோ ஒரு புதிய அரும்பின் பிறப்பால் அந்தக்குளம் மீண்டும் அமைதியானது…. விட்டுப்போன அத்தியாயத்தைத் தொடரக் கிளம்பிவிட்டாள் வித்யா தெளிவாக…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *