மூன்றாவது அண்ணன்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 14,808 
 
 

துளசி சித்ரா கைக்குழந்தையுடன் இறங்கும்போதே பஸ் நிலையத்தின் மூலையைத்தான் பார்த்தாள். அவன் அழுக்கு லுங்கியும், மாராப்புத் துணியுமாய் பெரிய இரும்புச் சட்டியில் மணலையும், கடலையையும் வறுக்கும் ஒலி, பஸ் அரு

துளசி சித்ரா கைக்குழந்தையுடன் இறங்கும்போதே பஸ் நிலையத்தின் மூலையைத்தான் பார்த்தாள். அவன் அழுக்கு லுங்கியும், மாராப்புத் துணியுமாய் பெரிய இரும்புச் சட்டியில் மணலையும், கடலையையும் வறுக்கும் ஒலி, பஸ் அருகே கேட்டது. அவன் எங்கே பார்த்துவிடுவானோ என்று பஸ்ஸிலிருந்து இறங்கிய கூட்டத்துடன் கலந்து பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்தாள்.

மூன்றாவது அண்ணன்கைக்குழந்தையுடன், சூட்கேûஸத் தூக்கிக் கொண்டு பஸ்ஸில் பயணம் செய்ய இயலாது. ஆட்டோ பிடித்து இடம் சொன்னாள். பஸ் ஸ்டாண்டுக்கு நான்கு கி.மீ. தூரத்தில் செவ்வாய்ப்பேட்டையில்தான் அவள் இரண்டாவது அண்ணன் வீடு. இப்போது அண்ணனும் வீட்டில்தான் இருப்பான். ஆபிஸ் போகும் அண்ணியும் இருப்பாள். இவளென்றால் கொள்ளைப் பிரியம் அவர்களுக்கு. இவள் கணவனின் தம்பிக்கு அண்ணியின் தங்கையைக் கொடுக்க எத்தனை ஆசைப்பட்டார்கள். ஆனால் இவள் கணவன்தான்… ச்ச்சூ… இந்தப் பயணமே அதனால்தானே…

அவள் கணவன் சாரதி இத்தனை நாட்கள் வீட்டுக்கு வெளியேதான் தன் லீலைகளை வைத்துக் கொண்டிருந்தான். நேற்றிரவு வீட்டுக்கே யாரோ ஒரு பெண்ணை அழைத்து வந்தபோது இவள் பொங்கிவிட்டாள். “நீயா? நானா?’ என்கிற சண்டையில் இவளைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி… மழையில் கையில் குழந்தையும், சூட்கேஸýமாய் கோவையிலிருந்து புறப்பட்டேவிட்டாள் துளசி சித்ரா.

அவளுக்கு மூன்று அண்ணன்மார்கள். ஒருவர் இல்லாவிட்டாலும் இன்னொருவர் அடைக்கலம் கொடுத்து ஆதரிப்பார்கள். ஊம்… இவளுக்குப் பெரியவனும் மூன்றாவது அண்ணனுமான கந்தசாமிதான் “அப்படிப்’ போய்விட்டான். இதோ ஓடுகிற இந்த ஆட்டோவிலிருந்து பார்க்கும்போதே வெற்றிலைக் காவி படிந்த பற்களுடன் மாராப்பை இழுத்துவிட்டபடி யாரோ ஒருவருடன் பஸ் நிலையத்து மூலையில் குத்துக் காலிட்டு அமர்ந்து அவன் பேசுவது தெரிகிறது.

அவளும், அவனும் ஓடிப்பிடித்து விளையாடியதெல்லாம் பழங்கதை. இவளுக்குப் பத்து வயதும், அவனுக்கு இருபது வயதும் ஆகின்றபோதுதான் அது நடந்தது. அதை விபத்து என்றுதான் உயிரோடிருந்த இவள் அப்பா, அம்மா சொன்னார்கள். எங்கோ போய் ஆபரேஷன் செய்து கொண்டு வந்துவிட்டான் கந்தசாமி என அவனைக் கடிந்து வீட்டை விட்டே துரத்திவிட்டார்கள். ஏன்… நடந்து முடிந்த மூன்று கல்யாணங்களுக்கும் அவனை அழைக்கவே இல்லை.

திருமண ஊர்வலத்தின் போது அவன் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று யாரோ போல் பார்ப்பதை இவளும் பார்த்தாள். கண்கள் பனிக்கத்தான் செய்தன. ஆனால் கண் கலங்கினால் பக்கத்தில் இருப்பவர்கள் – ஊர்வலத்தில் வரும் மற்றவர்கள் – கேட்கமாட்டார்களா? தன் துக்கத்தைத் தொண்டையிலேயே புதைத்துக் கொண்டாள் துளசி சித்ரா.

அதன்பின் கந்தசாமியை அவள் பார்க்கவே இல்லை. ஏன், அப்படி ஓர் அண்ணன் இருப்பதாகவே யாரும் பேசுவதில்லை. அவர்கள் வீட்டைப் பொறுத்தவரை அவன் ஓர் இறந்த மனிதன். இவள் தாய், தந்தை அடுத்தடுத்துப் போனபோது கூட கந்தசாமிக்குச் செய்தி சொல்லி அனுப்பவேயில்லை.

ச்ச்சூ… வாழ்க்கையே இப்படி நட்டாற்றில் நிற்கையில் அவனைப் பற்றி என்ன யோசனை? ஆட்டோவை நிறுத்திவிட்டு, குழந்தையையும் சூட்கேûஸயும் எடுத்துக் கொண்டு சிரிப்புடன் இரண்டாவது அண்ணன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தாள். குறுக்காய்ப் போய்க் கொண்டிருந்த அண்ணன் இவள் வாசலருகே நிற்பதைக் கவனியாதவன் போல போனான். சமையலறை உள்ளிருந்து அண்ணியின் தலை தெரிந்து மறைந்தது. சலனம் எதுவுமே இல்லை. வீட்டிற்குள் குழந்தையை விட்டு வெளியே போய் ஆட்டோவுக்குப் பணம் கொடுத்து அனுப்பினாள்.

வீட்டிற்குள் போனபோது அண்ணன் இவள் குழந்தையை எடுத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான். எல்லாம் இவள் பிரமை! அண்ணனாவது உதாசீனப்படுத்துவதாவது… அண்ணி சிரிப்புடன் வெளிப்பட்டாள்.

“”வாம்மா… துளசி சித்ரா… எங்கே மாப்பிள்ளையைக் காணோம்?”

இதற்காகவே காத்திருந்தவள் போல கோடை மழை போல கொட்டித் தீர்த்தாள் துளசி சித்ரா. “”வர வர அவர் செயல்கள் தாங்கலை… அண்ணா… இன்னிக்கு இவ குழந்தை.. நாளை வளர்ந்துட்டா. அவர் இப்படியே யாராவது ஒரு பெண்ணோட வீட்டுக்கு வந்தா நல்லா இருக்கா? என்னாலே அதை எப்படி ஏத்துக்க முடியும்? புறப்பட்டு வந்துட்டேன். இனிமே அவர் மூஞ்சியில் முழிக்கிறதா இல்லை”

துளசி சித்ரா மூக்கைச் சிந்திப் போட்டு, கண்களைத் துடைத்துக் கொண்டாள். அண்ணனும்,அண்ணியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டது தெரிந்தது. அண்ணன் இவளைவிடப் பதினைந்து வயது மூத்தவன். இதுவரை பிள்ளைப் பேறு எதுவும் இல்லை. இவள் குழந்தையைப் பாசமுடன் பார்த்து வளர்க்கமாட்டார்களா என்ன? அண்ணனும், அண்ணியும் வேலைக்குப் போனால் இவள் வீட்டைப் பார்த்துக் கொண்டு….

“”சித்ரா…. நான் சொல்றேன்னு நினைக்காதே… ஆனாலும் நீ செஞ்சது ரொம்பத் தப்பு ”

“”என்னண்ணா சொல்றே? எனக்கு ஒண்ணும் புரியலியே?”

“”நீ அவசரப்பட்டுப் புறப்பட்டு வந்திருக்கக் கூடாதும்மா. நீ வந்திட்டதாலே உன் கணவர் திருந்திடப் போறாரா என்ன? அதிகமாப் போயிடும்

அவனோட ஆட்டம். அங்கிருந்தே நீ அவனைத் திருத்தப் பார்த்திருக்கணும். இதைத்தான் உங்கண்ணா சொல்ல வர்றார்”

“”ஆமாம் துளசி சித்ரா… உன் அண்ணி சொல்றது ரொம்பச் சரி. நீ வந்திருக்கவே கூடாது. அதனாலே மாப்பிள்ளையோட பொறுப்பு சுத்தமாப் போயிடும்”

“”அண்ணா… ” கலக்கத்துடன் அவர்களை ஏறிட்டாள் துளசிசித்ரா. இந்த இரண்டாவது அண்ணனும் அண்ணியும் இவள் மீது பாசமானவர்கள் ஆயிற்றே.. அவர்களா இப்படிப் பேசுகிறார்கள்?

“”ஆமாம்… சித்ரா..நீ அவசரப்பட்டுப் புறப்பட்டு வந்திருக்கக் கூடாது. இப்ப என்ன கெட்டுப் போச்சு? உன்னை உங்கண்ணா அழைச்சுப் போய் பஸ் ஏத்தி விடுவார். போய்ச்சேர். அதுவும் இல்லாம… ”

தயங்கிவிட்டு அண்ணியே சொன்னாள்.

“”நானும் உங்கண்ணாவும் எங்கம்மா ஊருக்குப் போறோம். இப்ப நாலுமணி ரயிலுக்குப் போறதா இருக்கோம். அதான் நீ இப்பம் போய்… ”

புரிந்தது துளசிசித்ராவுக்கு. இவள் வரவு அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவளையும் அவள் குழந்தையையும் அவர்கள் பராமரிக்கத் தயாராயில்லை. ஏன் ஒரு நேரச் சாப்பாடு கூடப் போடத் தயாராயில்லை. கனத்த இதயத்துடன் பசிக்கு அழும் குழந்தையை எடுத்துத் தோளில் சாத்திக் கொண்டாள். சூட்கேûஸ எடுத்துக் கொண்டாள்.

அண்ணன் எழுந்து ஷர்ட் எடுக்கப் போனான். “”வேண்டாம்… நீ வர வேண்டாம். தெரு மூலையிலே ஆட்டோ இருக்கு. நான் பிடிச்சுப் போயிக்கிறேன். நீ ஊருக்குப் புறப்படத் தயார் பண்ணணும் இல்லையா? வரேன் அண்ணி…வரட்டுமா அண்ணா? ”

பசிக்கு அழுத குழந்தையுடன் தெருக்கோடிக்கு வந்து ஆட்டோ பிடித்தாள். ஆட்டோவில் அமர்ந்து காந்தி நகரில் இருக்கும் பெரிய அண்ணன் விலாசம் சொன்னாள். பசியில் அழும் குழந்தைக்குப் பாலூட்டினாள்.

பெரிய அண்ணன் இவளிடமிருந்து எப்போதும் ஒதுங்கியே இருப்பான். ஆனால் பெரிய இடம் என்று இந்த சம்பந்தத்தை அவன் இவளுக்குத் தேர்ந்தெடுத்தவன். உள்ளூர இவள் மீது அன்பு உண்டு. இவளுக்குக் குழந்தை பிறந்தபோது ஒரு சவரன் சங்கிலி போட்டவன் பெரிய அண்ணன்.

காந்தி நகரில் மூன்றாவது கிராஸ் பதினேழாம் வீடு தேடிப் போன போது அந்த வீட்டின் வாசலில் பூட்டுதான் வரவேற்றது. துளசி சித்ராவுக்கு இதயம் ஒருவினாடி நின்றே விட்டது. குழந்தை ஓயாமல் அழ ஆரம்பித்தது. வெயில் நேரம், அதற்கு நீண்ட தொலைவு பயணம் சலிப்பைக் கொடுத்ததோ என்னமோ? அடுத்த பங்களாப் பெண்மணி தலை அசைத்து அழைத்தாள்.

“”தாகம் போல இருக்கு. குழந்தைக்குத் தண்ணீர் கொடுங்கோ ”

ஆட்டோக்காரர் மனிதாபிமானத்துடன் இவளை அவசரப்படுத்தாமல் வேடிக்கை பார்த்திருந்தார்.

துளசி சித்ரா அங்கே போனாள். அந்தப் பெண்மணி கொடுத்த தண்ணீர் டம்ளரைக் குழந்தையின் வாயருகே கொண்டு போனாள். அது நிறையத் தண்ணீர் குடித்தது.

“”நீங்க பக்கத்து வீட்டுக்காரருக்குத் தங்கையா? ”

அந்தக் கேள்வி இவளை வியக்க வைத்தது. அண்ணன் இந்த வீட்டை வாங்கிக் குடியேறி, இவள் இந்தப் பக்கமே வந்தவளில்லை. எப்படி இவளைத் தெரியும்? அண்ணன் வீட்டுச் சுவரில் என் புகைப்படம் மாட்டியிருக்கலாமோ?

“”என்ன அப்படி பார்க்கறீங்க? உங்க சின்ன அண்ணனிடமிருந்து நீங்க வந்திருக்கிறதா சற்று முன்னர்தான் எங்க வீட்டுக்குப் போன் வந்தது. உங்க பெரிய அண்ணன் வந்து பேசினார். “ஐயோ.. என்னால இந்தக் கஷ்ட காலத்திலே… அதுவும் வீடு வாங்கின கடன் ஏராளமா இருக்கிறப்ப… ஒருத்தருக்கு இரண்டு பேரை வச்சுக் காப்பாற்ற முடியாது. நான் எங்காவது போயிடறேன்னு’ பேசிட்டிருந்தார். நான் கேட்டுட்டு இருந்தேன்”

கண்களில் அவளைக் கேளாமலே கண்ணீர். அந்தப் பெண்மணி இதமாய்ச் சொன்னாள்.

“”வேணுமானா எங்க வீட்ல வந்து உட்காருங்க. சாப்பிட்டுப் போங்க. ரொம்ப டயர்டா இருக்கீங்க…”

கொஞ்சம் கூடச் சொந்தமில்லாத ஒரு பெண்ணுக்கு இருக்கும் பாசமும் பரிவும்கூட அவளுடன் பிறந்த அண்ணன்களுக்கு இல்லை. இவள் வந்த செய்தியைச் சொல்லி இரண்டாவது அண்ணன் மனத்தை எப்படிக் கலைத்திருக்கிறான். உம்… திருமணம் ஆகி வீட்டைவிட்டுப் போனாலே அவளுக்கும் அந்த வீட்டிற்கும் சம்பந்தம் இல்லையோ…?

“”பரவாயில்லைங்க அம்மா… நீங்க உண்மையைச் சொல்லிட்டதாலே நான் தெரிஞ்சுக்கிட்டேன். இல்லைன்னா, காத்திருந்து ஏமாந்திருப்பேன். வரேங்கம்மா. நான் வந்ததையும் போனதையும் எங்கண்ணனிடமோ அல்லது அண்ணியிடமோ சொல்லாதீங்கம்மா”

அவள் சொல்லமாட்டேன் என்று தலை அசைத்தாள். விஷயத்தைப் புரிந்து கொண்ட ஆட்டோக்காரர் இவள் அண்ணன்களையும், உலக நடப்புகளையும் வழி நெடுகத் திட்டிக் கொண்டே வந்தார்.

மீண்டும் பஸ் நிலையத்தில் கோவை போகும் அடுத்த பஸ்ûஸத் தேடியபோது, பழக்கப்பட்ட அந்தக் குரல் தடுத்தது. “பெரிய அண்ணன் மனம்மாறி அழைத்துப் போக வந்துவிட்டாரா?’

“”தங்கச்சி… நான்தான் கந்தசாமி. பெரிய அண்ணனை இப்பதான் இங்கே பார்த்தேன். எல்லாத்தையும் சொல்லி வருத்தப்பட்டான். அவனாலே உன்னை வச்சுக் காப்பாத்த முடியாதாம்”

இவள் உடன்பிறப்பான கந்தசாமி இவளிடமிருந்து குழந்தையை வாங்கி உச்சி முகர்ந்து வெற்றிலைக் காவி படிந்த இதழ்களால் முத்தமிட்டுத் தோளில் சாய்த்துக் கொண்டான். இவள் கையிலிருந்த சூட்கேûஸயும் சொந்தமாய்ப் பிடுங்கிக் கொண்டான்.

“”இங்கே பாரும்மா.. அவனுங்க மட்டும்தான் உனக்கு அண்ணன்களா? நானில்லையா? நான் ஏழைதான். ஆனா உன்னை வச்சுக் காப்பாத்தமாட்டேனா? என் மருமகளை வளர்க்க நான் மூட்டை சுமப்பேன். வா. வந்து என் வீட்லே இரு. கோர்ட்லே உன் புருஷன் மேலே கேசு போடு. இல்ல, சமரசமாப் போகணும்னாலும் அதுவரை என் வீட்ல இரு. அது நிரந்தரமாவா அல்லது தற்காலிகமாவா என்பது உன் விருப்பம். வா, துளசி சித்ரா. ஏன் அப்படித் திகைச்சு நின்னுட்டே. என் கடை பாட்டுக்கு எப்படியாவது நடக்கும்”

கடலைக் கடை வியாபாரம் மும்முரமாய் நடக்க, அங்கே உட்கார்ந்திருப்பது யார் என்று புரியவில்லை.

மலையாக எண்ணி வந்த இரண்டு அண்ணன்களும் கைவிட்டுவிட, இவளால் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்த அண்ணன் கந்தசாமிதான் இப்போது முழு மனிதனாக அவள் கண்முன் நின்றான்.

–  மே 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *