மூன்றாம் திருநாள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 8,643 
 
 

‘‘அவனை ஏன்டே கூட்டிட்டு வந்தீங்க… படிக்கிற புள்ளைக்கு இதெல்லாம் என்னத்துக்கு..?’’ என்னோடு வந்த முத்துக்குமாரையும் சுப்பிரமணியையும் கடிந்துகொண்டார் சித்தப்பா.

எல்லோரும் திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டு இருந்தோம்.

எங்கள் ஊர் அம்மன் கோயிலில் கொடைவிழாவுக்கு காப்புக்கட்டி யிருந்தார்கள். ‘‘இந்த வருஷம் மூணு நாள் கொடை போட்டு அசத்திரணும்டே…’’ என்று நாட்டாண்மை தாத்தா சொன்னதற்கு, எல்லாரும் தலையாட்டிவிட்டார்கள். அதில் முதல் நாள் இளைஞர் சங்கத்துக்குக் கொடுத்துவிடுவது என்று தீர்மானம் ஆகியது.

பெரியவர்களைத் தொடர்ந்து கூட்டம் போட்ட இளைஞர்கள்அந்த திருவிழாவுக்கு என்ன செய்வது என்ற விவாதத்தை ஆரம்பித்தார்கள். ஏதேதோ பேசி, கடைசியில் பாட்டுக் கச்சேரி வைப்பது என்று ஏகோபித்து முடிவு செய்தார்கள்.

‘‘மாப்ளே… உனக்குதான் திருநெல் வேலியில் பல பழக்கங்கள் இருக்கே… பாட்டுக் கச்சேரி ஆளைப் புடிச்சுக் கொண்டு வாயேன்’’ என்று சங்கத் தலைவர் சுடலைமுத்து சொல்ல, என் தலைமையில் செயலாளர் முத்துக் குமாரும், உபதலைவர் சுப்பிரமணியனும் கச்சேரி புக் பண்ணச் செல்வது என்று முடிவானது. அப்படிப் போன நேரத்தில்தான் சித்தப்பா கண்ணில் மாட்டிக்கொண்டோம்.

‘‘இல்ல மாமா… இவனுக்கு இங்க நல்ல பழக்கம் இருக்கு. அதான், கச்சேரிக்கு புக் பண்ண இவனையும் கூட்டிட்டு வந்தோம். அது சரி, நீங்க எங்க இந்தப் பக்கம்?’’ என்றான் சுப்பிரமணி.

‘‘நாங்க ஆட்டக்காரிக்கு அட்வான்ஸ் குடுக்க வந்தோம்’’ என்றார் எங்க சித்தப்பாவுடன் வந்திருந்த பெரிசு ஒருவர்.

அடுத்த கணம் முத்துக்குமாரின் கண்கள் அகலமாக விரிந்தன. சடசடவென்று மனதுக்குள் திட்டம் போட்டவனைப் போல, ‘‘மாமா…என்னதான் நாங்களா கிளம்பி வந்துட் டாலும் பெரியவங்க நீங்க பார்த்து முடிவு சொல்றாப்புல இருக்காது. அதனால, ராத்திரிக்கு ஒரு கச்சேரி இருக்கு… நீங்களும் கேட்டுட்டு நல்லாயிருக்குன்னு சொன்னா அட்வான்ஸைக் கொடுத்துடலாம். பெரியவங்க சொன்னாபெருமை யாத்தானே இருக்கும்…’’ என்றான்.

இத்தனைப் பாராட்டில் சித்தப்பா உச்சி குளிர்ந்துபோனார்.

‘‘அதுக்கென்னடே, இருந்து உங்க கதையும் முடிச்சிட்டே போவோம். ராத்திரி வரைக்கும் என்னடே செய்யப் போறிய? எங்க கூட வாங்க, ஆட்டகாரிகளப் பார்த்து அட்வான்ஸைக் குடுத் துட்டு உங்க சோலிக்குப் போவோம்’’ என்ற சித்தப்பா நடையை எட்டிப் போட்டார். முகத்துக்கு முன்னால் தழையைக் கட்டிய ஆடு போல முத்துக்குமார் ஓட்டமும் நடையு மாகப் பின் தொடர்ந்தான்.

‘‘மாமா… ஆளை நல்லாப் பார்த்து புக் பண்ணணும். கிடாரினு சொல்லிட்டு கிழவியைக் கூட்டிட்டு வந்துடப்படாது. போன வருஷம் ஆட்டத்துக்கு புக் பண்ணப் போனவங்க எட்டாம் பூசை வரைக் கும் தலைமறைவா அலைஞ்ச மாதிரி ஆகிடப்படாது நம்ம நிலைமை’’ என்று வளவளவென்று பேசிக்கொண்டே நடந்தான். ஊரில் திருவிழா நடந்தால், கரகாட் டக்காரிகளின் ஜாக்கெட்டில் குத்துவதற்காகவே பத்து ரூபாய் நோட்டுகளாக மாற்றி வைத்துக் கொண்டு அலையும் ஆசாமி அவன்.

பஸ் ஸ்டாண்ட் தாண்டி குறுக்குத் துறை பாதையில் போய் ஒரு சந்துக்குள் பிரிந்து வளைந்து நெளிந்து நடந்தபோது, பளீரென்று மைதானமாக விரிந்தது அந்த இடம். சின்னச் சின்னதாக குடிசைகளும், கொஞ்சம் வசதியான ஓட்டு வீடுகளும் இருந்த அந்த ஏரியா ஒரு ரோடு போல தெளிவாக இல்லாமல் மைதானத்தில் வீடுகளைச் சிதறிவிட்டது போல அங்கொன்றும் இங்கொன்று மாகக் கிடந்தது. சித்தப்பா தயக்க மில்லாமல் நடைபோட்டு, ஒரு ஓட்டு வீட்டின் கதவைத் தட்டினார்.

‘‘ஏடே எம்ஜியாரு…’’ என்றபடி அவர் கதவைத் தட்ட, தலையை மட்டும் நீட்டினான் ஒருவன். அடுத்த கணம், ‘‘முதலாளி… நீங்களா! தை பொறந்துருச்சே, உங்ககிட்ட இருந்து தாக்கல் ஏதும் வரலையேனு கவலை யோட யோசிச்சுக்கிட்டு இருந்தேன்’’ என்று சித்தப்பாவைப் பார்த்து பேசிக் கொண்டே இருந்தான். தலையைத் தவிர உடம்பை வெளியே நீட்டவில்லை.

‘‘பேச்செல்லாம் இருக்கட்டும்… முதல்ல வேட்டியைக் கட்டிட்டு வெளியே வா!’’ என்று அதட்டல் போட்டார் சித்தப்பா. வெட்கத்தோடு தலையை உள்ளே இழுத்துக்கொண்டவன், அடுத்த சில நிமிடங்களில் வலை பனியனும் வாழைக்காய் கறை படிந்த வேட்டியுமாக வெளியே வந்தான்.

அவனுக்கு எம்ஜியார் என்று யார் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை… கறுப்பாக இருப்பவனுக்கு வெள்ளைச் சாமி என்று பெயர் வைத்தது போல அப்படி ஒரு பொருத் தத்தில் இருந்தான். ஆளுக்கொரு நாற்காலியும் நடுவில் ஒரு ஸ்டூலையும் கொண்டு வந்து வீட்டுக்கு வெளியே இருந்த முற்றத்தில் போட்டான். அவன் வீட்டின் வாசல்படியில் உட்கார்ந்துகொண்டான். வீட்டின் கதவு மூடியே இருந்தது. முத்துக்குமார் கொஞ்சம் பதற்றமாக இருந்தான்.

‘‘வழக்கம் போல நாலாஞ் செவ்வாய் தான் கொடை. இந்த வருஷம் மூணு நாள் கொடை… ரெண்டாம் நாளும் மூணாம் நாளும் நம்ம நிகழ்ச்சி. உன்கிட்டே ரெண்டு செட் இருக்கும்ல… ஒரே முகத்தை ரெண்டு நாளும் பார்த்தா நல்லாயிருக்காது… என்ன சொல்றே?’’ என்றார் சித்தப்பா.

‘‘சரியாச் சொன்னீங்க முதலாளி… நம்மகிட்டே இருக்கிற புள்ளைக எல்லாம் நமீதா, அசினு கணக்கா விண்ணுனு இருக்கும். நீங்க ஆல்பம் பாருங்க…’’ என்றான்.

‘‘ஆல்பமெல்லாம் இருக்கட்டும்… ஆளைக் காட்டுங்க, வெளிச்சத்தோடு பார்த்து ஓ.கே. பண்ணிடலாம்…’’ என்றான் முத்துக்குமார், எம்ஜியாரின் முகத்தைத் தாண்டி மூடிய கதவு களைப் பார்த்தபடி.

‘‘நம்ம புள்ளைக கிளி மாதிரி… எங்கே போயிடப் போவுது..! நீங்க இதைப் பார்த்துக்கிட்டு இருங்க…’’ என்று கதவை லேசாகத் திறந்து ஆல்பத்தை வெளியே எடுத்தான். பல ஊர் திருவிழாக்களில் நிகழ்ச்சி நடத்திய சமயத்தில் எடுத்த புகைப் படங்களை ஆல்பமாக்கி இருந்தார்கள். இடையிடையே ஃபுல் மேக்&அப்பில் க்ளோஸப் புகைப்படங்களும் இருந்தன.

‘‘நம்ம வீட்டு சொம்புல தண்ணி குடிச்சா அத்தனை சரியா இருக்காது’’ என்றபடியே வெளியே போன எம்ஜியார், திரும்பியபோது தலா ஒரு தண்ணீர் பாக்கெட்டும், சோடா கலரையும் கையில் பிடித்திருந்தான்.

வாட்சைப் பார்த்த முத்துக்குமார், ‘‘மாமா… லேசா பொழுது மசங்கு றாப்புல இருக்கு… வரச் சொல்லுங்க… பார்த்து முடிவெடுத்துடலாம்’’ என்றான்.

‘‘ஏடே எம்ஜியாரு… பார்ட்டியைக் காட்டப்பா…’’ என்றார் சித்தப்பா அதட்டலான குரலில்.

அவனோ அது பற்றித் துளியும் கவலைப்படாமல், ‘‘ஆல்பம் பார்த்தீங்களா முதலாளி… அத்தனையும் புதுசு! நான் கட்டிக்கிட்ட புள்ளை யைத்தான் போனவருஷத்துக்கு முந்தின வருஷம் கூட்டியாந்தேன். கழுதை… ஆட்டத்திலே கொஞ்சம் சுணங்கிருச்சு. இந்த வருஷம் நீங்க காட்டுத புள்ளையோட வந்திடறேன். கலக்கிடலாம்’’ என்றான்.

இந்த நேரத்தில் ஆல்பம் என் கையில் இருந்தது. சும்மா புரட்டிக் கொண்டிருந்தவன் கண்களில் அந்த ஜோடி விழுந்தது. இருவருமே நெருக் கமாக இருந்தாலும் விரசமில்லாமல் இருந்தார்கள். என் கையில் இருந்த ஆல்பத்தை எட்டிப் பார்த்த முத்துக் குமார், ‘‘மாப்ளே… சும்மா கும்முனு இருக்காளே… ரெண்டு நாளுக்கும் புக் பண்ணி ராத்திரி தங்க வெச்சிரலாம், என்ன சொல்றே..?’’ என்றபடி, அந்தப் படத்தை எம்ஜியாரிடம் காட்டினான். லேசாக எட்டிப் பார்த்த சித்தப்பா, ‘‘என்னடே… எங்க ஊரு எளந்தாரிக செலக்ஷன் எப்படி? அந்த ஜோடி யையே புக் பண்ணிரலாமா…’’ என்றார்.

‘‘முதலாளி… உங்க சொல்லுக்கு அப்பீல் ஏது? ஆனால், அதிலே ஒரு சிக்கல் இருக்கு. அந்தப் பய கொஞ்சம் கோக்குமாக்கானவன். ‘ஆட்டத்தை மட்டும் பார்க்காம கொஞ்சம் அப்படி இப்படி திரியறான்’னு எங்க கூட்டத்தைவிட்டே தள்ளி வெச்சுட் டோம். ரெக்கார்ட் டான்ஸ் ஆடிக்கிட்டு திரியுது மூதேவி… அந்த புஷ்பா புள்ளை நம்மகிட்டேதான் இருக்கு. என் பொஞ்சாதியும் இப்போ நல்லா மெருகேறி அம்சமா ஆடுறா! நாங்க மூணு பேருமா வந்து நல்லபடியா நடத்திக் குடுத்திருதோம்’’ என்றான்.

சித்தப்பா எங்கள் பக்கம் திரும்பி னார். ‘‘நீங்க என்னடே சொல்றிய?’’ என்றார்.

முத்துக்குமார், ‘‘ஓகேதான்… ஒரு தடவை பார்த்திடலாமே…’’ என்றான். அவனுக்கு போட்டோவில் பார்த்த புஷ்பாவை நேரில் பார்த்துவிட வேண்டும்!

இதற்கு மேலும் காத்திருக்கப் பொறுமை இருக்காது என்பதை உணர்ந்துகொண்ட எம்ஜியார், ‘‘ஏட்டி… முகம் தெரியாத அளவுக்கு இருட்டுன பிறகுதான் அந்த விளக்கை ஏத்தணும்னு சட்டமா? கொண்டா அதை…’’ என்றபடி உள்ளே போய் பெட்ரோமாக்ஸ் விளக்கை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

‘‘வாசப்படியில் ஒரு லைட் போட ணும்னு நானும் நினைச்சுக்கிட்டே இருக்கேன். எங்க..?’’ என்றபடியே விளக்கைத் துடைக்க ஆரம்பித் தான்.

‘‘கதையக் கெடுத்தான்… பகல்ல பார்க்கறதைவிட பெட்ரமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் பார்த்தா காக்காகூட கலராத் தெரியும். அதான், இந்த ஆட்டக்காரிக எல்லாம் பெட்ர மாக்ஸ் வெளிச்சத்திலேயே திரிய றாளுக…’’ என்று சலித்துக்கொண்டான் முத்துக்குமார்.

எம்ஜியார் விளக்கைத் துடைத்து ஏற்றிய சில நொடிகளில் பிரசன்ன மானாள் புஷ்பா. கொஞ்சமாக பவுடர் பூசி, பளிச்சென்று பொட்டு வைத்து வந்தவள், ஒவ்வொருவரையாக பார்த்து தனித்தனியே வணக்கம் சொல்லிக்கொண்டே வந்தாள். வணக்கம் சொல்லும்போதுதான் கவனித்தேன், புஷ்பாவின் கைகளில் மின்னிய மோதிரம் ஆல்பத்தில் அவளுடன் இருந்த இளைஞனின் கைகளில் பார்த்த ஞாபகமாக இருந்தது. ஆல்பத்தை வாங்கி மீண்டும் ஒருமுறை பார்த்தேன். நிஜம்தான்… மோதிரம் மட்டுமல்ல… இருவருக்கும் பொதுவாக இன்னும் ஏதோ இருப்பது போலத் தெரிந்தது.

புஷ்பாவைப் பார்த்த பிறகு, என் சித்தப்பா உட்பட யாருக்குமே எந்த தயக்கமும் வரவில்லை. ஏகமனதாக, புஷ்பா, எம்ஜியார், அவன் மனைவி மூவரையும் இரண்டு நாட்களுக்கு புக் பண்ணிவிட்டார்கள்.

பின் அங்கிருந்து கிளம்பி, பாட்டுக் கச்சேரி நடந்த இடத்துக்குப் போனோம். கச்சேரி ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. அட்வான்ஸைக் கொடுத்துவிட்டு வெளியே வந்த நேரத்தில், ‘‘வெறும் கச்சேரியைவிட இப்போ ஆடல் பாடல்தானே ஃபேமஸ்… ஐந்நூறு ரூபாய் அதிக மாகும். சேர்த்து புக் பண்ணிரலாமா?’’ என்றார் கச்சேரி பார்ட்டி. அந்த நேரத்தில் மேடையில் ‘சகலகலா வல்லவன்’ பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தான் எம்ஜியாரின் ஆல்பத்தில் புஷ்பாவுடன் இருந்தவன். ‘‘இந்த செட்டை புக் பண்ணிடுங்க’’ என்றேன்.

முதல் நாள் திருவிழாவுக்குக் கூட்டம் பின்னியெடுத்தது. முத்துக் குமார் மேடைக்குப் பின்னால் இருந்த நடனக் கலைஞர்கள் உடை மாற்றும் அறைக்கு அருகில் நாற்காலி போட்டு உட்கார்ந்துகொண்டு அந்நியர்கள் யாரும் உள்ளே போய் விடாமல் கண்காணிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டான். அதற்குச் சம்பளமாக அவன் மட்டும் அவர்கள் உடைமாற்றுவதை ரசித்துக்கொண்டு இருந்தான்.

புஷ்பாவுடன் போட்டோவில் இருந்தவனைத் தனியாக அழைத்து, ‘‘உன் பெயர் என்ன?’’ என்றேன். ‘‘ரவி… கமல் ரவினு சொன்னால் எல்லோ ருக்கும் தெரியும்’’ என்றான்.

‘‘நாளைக்கு திருவிழாவுக்கு புஷ்பா ஆட வரப் போகுது…’’ என்றேன். மொத்தத் திருவிழா வெளிச்சமும் அவன் முகத்தில் தெரிந்தது. அடுத்த கணமே, இவர்களின் காதலுக்கு எம்ஜியார், நம்பியாராகச் செயல்பட்ட கதையெல்லாம் சொல்லி அழுதான்.

இரண்டாம் நாள் மாலை சுழன்று சுழன்று ஆடி இளசுகளைக் கிறங்கடித் தாள் புஷ்பா. அவளிடம் தனியாகப் போய், ‘‘நேத்து எங்க ஊர்ல ஆடல் பாடல் நடந்தது. யாரோ ரவியாம்… கமல் பாட்டுக்கு அத்தனை பிரமாதமா ஆடித் தள்ளிட்டான்’’ என்றேன். பளிச்சென்று மலர்ந்த கண்களில், அடுத்த கணம் நீர் துளிர்த்தது.

‘‘அந்த ரவி இப்ப எங்க தோட்டத் துலதான் இருக்கான்’’ என்றேன்.

மூன்றாம் நாள் சப்பரத்தின் முன்னால் ஆடுவதற்காக கரகாட்ட குரூப்பைத் தேடியபோது எம்ஜியாரும் அவன் மனைவியும்தான் இருந் தார்கள். புஷ்பாவைக் காணவில்லை. எம்ஜியாரைவிட முத்துக்குமாரைப் போன்ற கலாரசிகர்களுக்குதான் மிகுந்த அதிர்ச்சி.

சப்பரத்தில் அம்மனை அமர்த்தும் பூஜைக்காக நையாண்டி மேளம் ரண்டக்க ரண்டக்க என்று ஒலித்துக் கொண்டு இருந்தது!

– 21st மார்ச் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *