மூடிய கதவுக்குள்ளே திறந்த உள்ளம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 13, 2024
பார்வையிட்டோர்: 186 
 
 

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று ஆகஸ்டு ஒன்பதாம் நாள். நம் நாடு சுதந்திரம் பெற்ற தினம். வீதியெங்கும் நம் தேசிய கொடி பட்டொளி வீசிக் கொண்டிருந்தது. விழாக்கோலம் பூண்ட நங்கையாய் நம் நாடு புதுப் பொழிவுடன் காட்சியளித்தது. சுதந்திர விழாவில் கலந்து கொள்ள முடியாத பலர், தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் இடம் பெறவிருக்கும் அணிவகுப்பைக் காணும் ஆவலில் வீட்டில் காத்திருந்தனர். ”அம்மா தேசிய தின அணிவகுப்பு தொடங்க இன்னும் ஐந்தே நிமிடம் தான் இருக்கிறது” என்ற அன்புமணியின் குரல் வரவேற்பறையிலிருந்து கேட்டது. சமையலறையில் வேலையாய் இருந்த சாரதா “இதோட வந்துட்டேன்” எனக் கூறியபடி தனது வேலையைத் துரிதமாக முடித்தாள்.

கூடத்தை நோக்கி விரைந்து வந்த அவள் தொலைக்காட்சியின் முன்னே தன் கணவர் பார்த்திபனும் மகன் அன்புமணியும் தேசிய தின அணிவகுப்பைக் காணும் ஆவலில் அமர்ந்திருப்பதைக் வண்ணத்திரையில் அணியணியாகச் சீருடைப் படையினர்கள் அதிபரின் வருகைக்காகத் காத்திருந்த கம்பீரத் தோற்றம். ஒரு கணம் சாரதாவை மெய்ச் சிலிர்க்க வைத்தது. வைத்த கண் வாங்காமல் அவர்களைப் பார்த்த வண்ணம் சோபாவில் அமர்ந்தாள் சாரதா.

“டாண்…டாண்….டாண்…” சரியாக மாலை மணி ஆறு என்பதை நாடாளுமன்ற கட்டிடத்திற்கு எதிரே இருந்த மணிக்கூண்டு பறைசாற்றியது. அதிபர் வருவதற்கு அறிகுறியாக மோட்டார் சைக்கிளில் காவலர்கள் மிடுக்குடன் முன்னே வர, அதிபரின் வண்டி பின்னே தொடர்ந்தது. அதிபர் வந்திறங்கினார். அவருக்குரிய மரியாதை செலுத்தப்பட்டது. இப்படியே ஒவ்வொரு அங்கமாக நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் சாரதாவின் மனமோ “போன வருடமும் இப்படி அணிவகுப்பைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது தானே அந்தச் சம்பவம நடந்தது” என எதையோ நினைத்துக் கொண்டது. அவள் பார்வை எதிர் வீட்டின் மீது நோட்டமிட்டது.

வழக்கம்போல் வாசல் கதவு மூடியிருந்தது வீட்டில் ஆள் இருக்கின்றனர் என்பதற்கு அடையாளமாக உள்ளிருந்து எரிந்த விளக்கொளி சன்னல் வழியே மெல்ல எட்டிப் பார்த்தது. மற்றச் சமயமாக இருந்திருந்தால் “விளக்கு வைக்கிற நேரமும் அதுவுமா இப்படியா கதவை அடைச்சி வைக்கிறது” எனச் பொறிந்து தள்ளியிருப்பாள். ஆனால் இன்று அவள் முகத்தில் எந்தக் கடுகடுப்பும் இல்லை. முகச் சுளிப்பும் இல்லை. அதற்கு மாறாக இதமான புன்சிரிப்பு அவள் முகத்தில் இழையோடியது.

அந்தப் புன்சிரிப்புக்கான அர்த்தத்தைப் புரிந்து கொண்ட பார்த்திபன் ”என்ன சாரதா, பழைய ஞாபகமா?’ எனக் கேள்விக்கணையைத் தொடுத்தான். “ஆமாங்க” எனத் தலையை ஆட்டினாள் சாரதா. அவள் பார்வை மீண்டும் எதிர் வீட்டுப்பக்கம் சென்றது. அங்குக் கதவு மூடியே இருந்தது. ஆனால் சாரதாவின் மனக்கதவோ கடந்தகால தேசிய தினத்தன்று நிகழ்ந்த சம்பவத்தைத் திறந்து பார்த்தது.

“சாரதா… சாரதா…” எனச் செல்லமாக அழைத்தபடி வீட்டினுள் நுழைந்தாள் மேரி. குளியலறையில் சாரதா அன்புமணியைக் குளிப்பாட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு வந்த விஷயத்தைச் சொல்ல மறந்தவளாய் “டேய்போக்கிரிப்பயலே குளிக்கிறியா?” என அன்புமணியின் தாடையைத்தட்டிக் கொஞ்சினாள். அன்புமணியும் தன் பொக்கை வாயைத் திறந்து மெல்ல சிரித்தான். “சாரதா நீ போ. நான் இவனைக் குளிப்பாட்டிட்டு அழைச்சிட்ட வரேன்” என உரிமையுடன் சாரதாவிடமிருந்து குழந்தையை வாங்கிக் குளிப்பாட்டினாள். அதன் பிறகு அவளே அவனுக்குப் பவுடர் பூசி, நெப்கினை மாட்டி, சட்டையை அணிவித்து, அழகாக திருஷ்டி பொட்டும் சூட்டி அழகுபடுத்தினாள். அதற்குள் சாரதாவும் பால் கலக்கி ரெடியாகக் காத்திருந்தாள்.

மேரி குளித்துவிட்டுப் பசியோடு இருந்த அன்புமணிக்காகக் கலக்கி வைத்திருந்த புட்டிப்பாலைக் கொடுக்கத் தொடங்கினாள். “என்ன மேரிக்கா வந்த விஷயத்தைச் சொல்லாம பையனோட ஐக்கியமாயிட்டீங்களே” எனச் சாரதா கேட்ட பிறகு தான் மேரிக்கே தான் அங்கே வந்த விஷயம் நினைவுக்கு வந்தது. “ஆமாடியம்மா மறந்தே போயிட்டேன். நானும் ஜார்சும் டிக்கெட் விஷயமா ஏஜெண்டைப் போய் பார்க்கனும். ஸ்டெல்லா வந்தா இந்த வீட்டுச்சாவியைக் கொடுத்திடு” என்று கூறியவாறு மேரி சாவிக்கொத்தை நீட்டினாள். அதை வாங்க ஏந்திய சாரதாவின் கை ஏனோ நடுங்கியது. அதனைத் தொடர்ந்து “மேரியக்கா… வந்து… வந்து….” என நாத் தழுதழுத்தது. விழியோரத்தில் கண்ணீர்த்துளி வழிந்தோடியது. ‘என்ன சாரதா இது? சின்ன குழந்தை மாதிரி. ம் கண்ணைத் துடைச்சுக்க…” என்றபடி விழியோரம் வழிந்த நீரைத் துடைத்தாள் மேரி.

அவள் கையைப் பற்றியபடி “மேரியக்கா இந்த ஆறுதலான வார்த்தையை இனிமேல் நான் எப்போ கேட்கப் போறேன். உங்க அன்பு முகத்தை நான்….” அதற்கு மேல் பேச முடியாதவளாய்ச் சாரதா விக்கி விக்கி அழுதாள். “அட அசடே! சிட்னி என்ன நீ வர முடியாத தூரத்திலேயா இருக்கு? இல்லை நாங்க தான் இங்கே வர மாட்டோமா? பிளேன் எடுத்தா ஒரே நாளுல இங்கே வந்திடலாம். அடிக்கடி போன்றல பேசலாம்” எனப் பாசத்தோடு அவளை அணைத்துக் கொண்டாள். அந்த அரவணைப்பில் சாரதா ஆறுதலடைந்தாள்.

திருமணமான புதிதில் மற்ற இளம் ஜோடிகளைப் போல தனிக்குடித்தனம் நடந்தத பார்த்திபனும் சாரதாவும் முடிவெடுத்தனர். யீசூன் வட்டாரத்தைத் தேர்ந்தெடுத்து மறு விற்பனை வீடுகளையெல்லாம் வலம் வந்தனர். இறுதியில் அவர்கள் எதிர்பார்த்த அத்தனை வசதிகளும் நிறைந்த ஒரு போயிண்ட் புளோக்கைத் தேர்ந்தெடுத்தனர். அது போயிண்ட் புளோக்காக இருந்தால் எதிரெதிரே இரு வீடுகள். ஒன்று பார்த்திபனுடையது. மற்றது ஜார்ச் குடும்பத்தினருக்குரியது.

“அண்டை வீட்டார் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, ஜார்ச் குடும்பத்தினர் உற்ற துணையாகப் பார்த்திபன் சாரதா தம்பதிகளுக்கு விளங்கினர். இரு குடும்பத்தினர்களுக்கிடையே இருந்த அணுக்கமான உறவு அவர்களை உடன்பிறப்புகளோ என எண்ணத் தோன்றியது. இந்த நெருக்கம் பார்த்திபனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. ஆம்! வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்றுவரும் பார்த்திபனுக்கு இது அனுகூலமாக இருந்தது. பார்த்திபனின் மனபாரமும் நீங்கியது.

மறு ஆண்டு அன்புமணி பிறந்தான். அன்புமணியின் பிறப்புக்குப் பிறகு அவர்களின் உறவில் மேலும் நெருக்கம் ஏற்பட்டது. யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை. இவர்களுக்கிடையே பிரிவு என்ற பெருஞ்சுவர் ஜார்ச் ரூபத்தில் வந்தது. ஜார்ச் வேலை செய்யும் கம்பெனியின் கிளை நிறுவனம் ஒன்று சிட்னியில் உள்ளது. பதவி உயர்வு பெற்ற ஜார்ச் சிட்னிக்கு மாற்றலாகிப் போகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. ஜார்ச்சுடன் மேரியும் ஸ்டெல்லாவும் செல்ல வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாயினர். பிறகு என்ன? வீடு விற்கப்பட்டது. மூட்டை முடிச்சுகள் கட்டப்பட்டன. ஜார்ச் குடும்பத்திற்கும் சிட்னிக்குச் சென்றுவிட்டனர்.

கண் மூடிக் கண் திறப்பதற்குள் எல்லா காரியங்களும் நடந்து முடிந்தன. மேரியின் பிரிவைச் சாரதாவால் அவ்வளவு எளிதில் ஜீரணிக்க முடியவில்லை. பல சமயங்களில் அவர்களை எண்ணிக் கண்ணீர் விடுவாள். காலம் யாருக்கும் காத்திராமல் தன் கடமையைச் செவ்வனே ஆற்றியது. மூன்று மாதம் கழித்து ஜார்ச் வீட்டுக்குத் திரு.லீ குடும்பத்தினர் குடியேறினர்.

மேரியின் பிரிவைத் திருமதி.லீ மூலம் ஈடுகட்ட நினைத்தாள் சாரதா. ஆனால் அதற்கு நேர்மாறாக எல்லாமே நடந்தது. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வத்தை நாம் மறந்துவிடுவோம் அல்லவா, அப்படியே எல்லாமே தலைகீழாக நடந்தது. திரு.லீ, திருமதி.லீ அவர்களின் இரு குமாரர்கள் ஆக மொத்தம் நான்கே நான்கு பேர் அடங்கிய கச்சிதமான குடும்பம். குடி வந்த புதிதில் தெரிந்து கொண்ட விவரம் இது. அதன் பிறகு அவர்களைப் பார்ப்பதே அரிதாக இருந்தது.

வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர் திரு.லீ. அவர் மனைவி டான் டோக் செங் மருத்துவமனையில் குமாஸ்தாவாக வேலை பார்க்கிறார். பிள்ளைகளில் ஒருவன் தேசிய சேவை புரிகிறான். சின்னவன் தொழில் நுட்பப் பிரிவில் படிக்கிறான். இதுவே அவர்களைப் பற்றிய விவரம். வந்த புதிதில் வழிய வழியப் போய் சாரதாவே துப்பு துலக்கியதில் கிடைத்த விவரங்கள் இவை. மற்றபடி இரு வீட்டாருக்கும் இடையே எவ்வித ஒட்டும் இல்லை; உறவும் இல்லை.

ஜார்ச் குடும்பத்தினரைப் போல இவர்களும் சீனர்கள். எல்லா சீனர்களும் ஜார்ச் குடும்பத்தினர் போல் நட்புடன் பழகுவர் என நம்பியிருந்த சாரதாவுக்கு இது பெரும் ஏமாற்றமாக இருந்தது. லீ வீட்டு வாசல் கதவு எப்போதும் மூடியே இருந்தது. தப்பித் தவறி அக்கதவு திறந்திருந்து அன்புமணி அப்பக்கமாக எட்டிப் பார்த்தால் “ஹலோ பாய்” என்ற குரல் கேட்கும். அதனைத் தொடர்ந்து “ஆண்டி குழந்தை விழுந்திடப் போறான். உள்ளே அழைத்துச் செல்லுங்கள்” எனச் சாரதாவைக் கூப்பிட்டு மகனை அவள் கையில் ஒப்படைத்துவிட்டுச் செல்வார்கள். இந்த வம்பே வேண்டாம் என எண்ணி அவர்கள் எப்பொழுதும் கதவை மூடியே வைத்திருப்பர்.

ஆரம்பத்தில் இது சாரதாவுக்குப் பெருங்குறையாக இருந்தது. கணவர் பார்த்திபனிடம் சொல்லிக் குறைபட்டுக் கொள்வாள். காலப்போக்கில் அது பழகிப் போய்விட்டது. இருப்பினும் ஏதோ ஒரு குறை அவள் உள்மனத்தை ஆட்கொண்டது. “ஏன் இவர்கள் இப்படி ஒட்டாமல் இருக்கிறார்கள். நமக்கு ஏதாவது ஒன்னு ஆனால் கூட கேட்பதற்கு நாதி இல்லையே? புறாக் கூண்டில் அடைப்பட்டு இருப்பது போல் வாழ்கிறோமே” என எண்ணி வருந்துவாள். அவள் வருத்தம் விசுவரூபம் எடுக்கும் என அவள் எதிர்பார்க்கவே இல்லை.

அன்று ஆகஸ்டு ஒன்பதாம் நாள். நம் நாடடின் சுதந்திர தினம். நாடே குதூகலக் கொண்டாட்டத்தில் மிதந்து கொண்டிருந்தது. சாரதாவும் தேசிய தின அணிவகுப்பைக் காணத் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து கொண்டிருந்தாள். அப்போது “ம்மா…ம்மா…” என்ற முணுகல் ஒலியுடன் அன்புமணி பேச முடியாமல் தடுமாறினான்! அவன் கண்களின் கருமணிகள் மேல் நோக்கிச் சென்று கொண்டிருந்தன. “அன்பு என்னடா… என்ன செய்யுது? ஐயோ! அவரும் ஊருல இல்லையே? நான் என்ன செய்வேன்?’ எனப் பதறினாள் சாரதா. லொக்… லொக்…! என அன்புமணி இறுமினான். வாயிலிருந்து நுரை தள்ளியது.

அப்போது தான் அன்புமணியின் கையிலிருந்த வண்டியைக் கவனித்தாள். பொம்மை வண்டியிலிருந்த சக்கரத்தைக் காணவில்லை. அது அவன் தொண்டையில் சிக்கி இருப்பதை அறிந்தாள். அதற்கு மேல் அவளால் எதையும் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. மகனின் உயிர் ஊசலாடும் நிலை. உள்ளம் தடுமாறியது. கை வெட வெடத்தது. உடல் நடுங்கியது. “ஆண்டவா! என் மகனைக் காப்பாற்று” எனக் கத்தியபடி வாசல் பக்கம் வந்தாள். படபட எனக் கை ஓயும் வரை பலமாகப் பக்கத்து வீட்டுக் கதவை வெறி கொண்டு தட்டினாள்.

இப்படி ஒரு தட்டலை அவர்கள் கேட்டிருக்க மாட்டார்கள். என்றுமில்லாத திருநாளாகச் சாரதா கதவைத் தட்டியதில்லை. இல்லை கதவை உடைத்த விதம் திரு.லீக்குப் புதுமையாக இருந்தது. அதைவிடச் சாரதாவின் தோற்றம் ஏதோ விபரீதம் ஒன்று நடந்துள்ளது என்பதைப் பறை சாற்றியது.

விஷயத்தை அறிந்த அவர் தாமதிக்காமல் டாக்ஸியைப் பிடித்து மருத்துவமனைக்கு ஓடிய வேகமும் அவர் மனைவி சாரதாவுக்கு ஆறுதல் வார்த்தை கூறிய விதமும் சாரதாவுக்கு ஜார்ச் தம்பதிகளை மீண்டும் நினைவு படுத்தியது. லீ குடும்பத்தினர் ஜார்ச் குடும்பத்தினர்போல் இல்லையே என்ற குறை அன்று தான் நிவர்த்தியானது. ஜார்ச் மேரி தம்பதியினரை நேரில் பார்ப்பது போன்றதோர் உணர்வை அவள் அப்போதுதான் பெற்றாள்.

“கடவுள் எல்லா இடத்திலும் இருக்க முடியாது” என்பதற்காகத்தான் தாயைப் படைத்தார் என அவள் படித்திருக்கிறாள். ஆனால் அந்த அன்பு கொண்ட உள்ளம் சில நல்லவர்கள் மத்தியிலும் இருக்கக்கூடும் என்ற உண்மையை அன்று தான் உணர்ந்து கொண்டாள். அன்புமணியைப் பெற்றவள் அவளாக இருக்கலாம். ஆனால் அவனுக்கு மறுஜென்மம் கொடுத்தவர்கள் லீ குடும்பத்தினர். இந்த நினைப்பு அவள் உயிர் உள்ள வரை நிலைத்திருக்கும். “பேசிப் பழகினால்தான் நல்ல அண்டை வீட்டுக்காரர்களா? ஆபத்து வேளைகளில் உதவுபவர்களே நல்ல அண்டை வீட்டார் என்பதை உணர்ந்து கொண்டாள்.

“வீ ஆர் சிங்கப்போ. வீ ஆர் சிங்கப்போ. வீ ஆர் சிங்கப்போரியன்” என்று அன்புமணி உரக்க பாடியதைக் கேட்ட சாரதா தன் பழைய நினைவிலிருந்து மீண்டு வந்தாள். தொலைக்காட்சியில் இடம் பெற்ற அப்பாடல் காட்சியில் தேசிய அரங்கத்தில் இருந்த அனைவரும் தங்கள் கைகளைக் கோர்த்து அசைத்து அசைத்துப் பாடிப் பரவசமூட்டினர். ஓரினமாயச் சகோதர உணர்வுடன் அவர்கள் பாடி அபிநயம் பிடித்தது. சாரதாவுக்குப புத்துணர்வை ஏற்படுத்தியது.

அன்புமணியும் தந்தையின் கையைப் பிடித்துப் பாடிய அழகில் சாரதா தன்னை மறந்தாள். பார்த்திபனும் மகனுக்கு ஈடு கொடுத்துத் தாளம் போட்டான். கணவர், மகன் இருவரின் குதூகலக் கொண்டாட்டத்தில் சாரதாவும் பங்கு கொண்டாள். அவள் பார்வை வாசல் பக்கம் திரும்பியது. அங்கே திரு.லீயின் கதவு மூடியிருந்தது. மூடிய கதவுக்குள்ளே இருந்த திறந்த பரந்த உள்ளத்தை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் சாரதா.

– தேடிய சொர்க்கம், முதற்பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *