ஆபிரகாம் பண்டிதரின் ” கருணாமிர்த சாகரம் ” நூல் எனக்கு இப்போது தேவைப்படுகிறது. என்னிடம் இருந்த நூலை யாரோ “சுட்டுவிட்டார்கள்”. யாரிடம் இப்போது இருக்கும் ? உடனடியாய் வேணுமே..
மனதில் நண்பர்கள் வரிசையாய் தோன்றினார்கள்.
அப்துல்லா, ஸ்ரீதர், ராமகிருஷ்ணன், அபிநயா, சிவராமன்…
ஆங்..சிவராமனிடம் உண்டு. லேனா குமாரிடம் நாங்கள் இருவரும் தான் வாங்கினோம். நன்றாக ஞாபகம் இருக்கிறது. சிவராமனிடம் ஒரு பழக்கம் உண்டு. எந்த நூலை வாங்கினாலும், உடனேயே தனது பெயரை நூலின் முதல் பக்கத்தில், நூலின் நடுப்பக்கத்தில், கடைசி பக்கத்தில் எழுதி விடுவான். முதல் பக்கத்தில் மாத்திரம் பெயருக்குக்கீழ் வாங்கிய தேதியையும் எழுதுவான். எழுதி விட்டு அழகாய் ஒரு சிரிப்பு சிரிப்பான்.
ஒரு மழை நாளில் தான் நாங்கள் அதனை வாங்கிய நினைவு.
நூலை ஒரு நெகிழிப்பையில் வைத்து சுற்றி, தனது சைக்கிளின் கேரியரில் வைத்து சிட்டாய் பறந்து போனது கூட நன்றாக ஞாபகம் இருக்கிறது. அப்போது வாடாமல்லிக்கலரில் கட்டம் போட்ட சட்டை போட்டிருந்தான். அவன் சட்டை தேர்வுகள் எல்லாமே விசித்திரமாகவே இருக்கும். அவன் வாழ்க்கையே அப்படித்தானே..
சிவராமன் வீடு டவுணில் இருக்கிறது. எனது இரு சக்கர வாகனத்தில் உடனே கிளம்பி விட்டேன். வண்டியில் போகும்போதே உங்களிடம் ஆபிரகாம் பண்டிதரைப்பற்றி சொல்லி விடுகிறேன். ஆபிரகாம் பண்டிதர் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?
தஞ்சை ஆபிரகாம் பண்டிதரா என்று நீங்கள் முணங்குவது எனக்கும் கேட்கிறது. அவரேதான் ஐயா..அவரேதான். அதில் எனக்கு நிறைய வருத்தங்கள் உண்டு. எங்க திருநெல்வேலி மாவட்டம் சாம்பவர்வடகரையில் பிறந்த அவருக்கு தஞ்சை என்ற முன்னொட்டு சேர்ந்திருப்பதில் தான். பங்களா சுரண்டையில் படித்து திண்டுக்கல் சென்று ஆசிரியர் பயிற்சி பெற்று தஞ்சை சென்று சித்த வைத்தியம் படித்து மூலிகை தோட்டம் போட்டு பெரிய சித்த வைத்தியர் என்று புகழ் பெற்றதெல்லாம் இருக்கட்டும். தமிழிசை ஆய்வுகள் செய்து, இந்த கருணாமிர்த சாகரம் நூலை பல ஆண்டுகளாய் எழுதியவர் என்பதுதான் மிகவும் சிறப்பு. அந்த நூலைத்தான் இப்போது வாங்க செல்கிறேன்.
டவுண் காட்சி மண்டபம் அருகில் உள்ள தடி வீரன் கோவில் தெருவில் இருக்கும் சிவராமனின் வீட்டுக்கு சென்று பல வருடங்கள் ஆகி விட்டன.
சிவராமனின் அம்மா, அவன் தங்கை மாலதி..நினைவில் தோன்றி மறைந்தார்கள். சிவராமனின் அம்மாவிற்கு குரல் கணீரென்று இருக்கும்.ரேடியோவில் அக்காலத்தில் செய்தி வாசிக்கும் சரோஜ் நாராயணசாமி குரல் போலவே இருக்கிறதே என்று சொன்னபோது அவன் அம்மா சிரித்தது கூட இன்னமும் நினைவில் இருக்கிறது.
நான் இருக்கும் பாளையங்கோட்டையில் இருந்து பத்து கிமீ தொலைவில் இருக்கும் இந்த காட்சி மண்டபம் வருவதற்குள் முதுகு ஒடிந்து விடும் போல..அப்படி ஒரு மேடு பள்ளமான சாலைகள்..
இருட்டுக்கடை அல்வா கடையில் நீண்ட வரிசை நின்றது.
நெல்லையப்பர் கோவிலில் கூட்டத்திற்கு குறைச்சல் இல்லை..சிவராமன் எப்போதுமே காந்திமதி அம்பாள் கோவில் என்றே சொல்வான். அது ஏனோ தெரியவில்லை. அப்படி சொல்லவே விரும்புவான் அவன்.
சந்திப்பிள்ளையார் கோவில் முக்கு அருகில் கடும் போக்குவரத்து நெரிசல்..கோவில் அருகே இருக்கும் பெயர் இல்லாத சுக்கு வெந்நீர் கடை உண்டு. கந்தையா பிள்ளை நடத்தி வரும் அந்திக்கடை அது. பாசிப்பயறு சுண்டல், தட்டாம்பயறு சுண்டல் சாப்பிட்டு விட்டு, சூடாய் சுக்கு காப்பி குடிக்க ஒரு கூட்டம் காத்திருக்கும். சிவராமன் என்னை பெரும்பாலும் அங்கே தான் அழைத்துச்செல்வான். உள்ளே இருக்கும் மர பெஞ்சில் உட்கார்ந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். வெளிச்சம் கம்மியாய் இருக்கும் அவ்வளவுதான். பழைய காத்தாடி ஒன்று லேசாய் சத்தமிட்டபடி சுழலும் மேலே. வண்ணநிலவனின் ” கம்பா நதி ” நாவலைப்பற்றி ஒருமுறை மூன்று மணி நேரம் சுக்கு காப்பி மட்டுமே குடித்து விட்டு பேசியிருக்கிறோம். இடையிடையே நான் மட்டும் சிகரெட் குடிக்க எழுந்து செல்ல முயற்சிக்கும்போதெல்லாம், “சும்மா..இங்கனயே குடியேம்ல..அண்ணாச்சி ஒன்னும் சொல்ல மாட்டாரு ” என்பான் சிவராமன். அவனுக்கு இந்த கொள்ளிக்கட்டை பழக்கம் எல்லாம் இல்லை. புத்தகம் பற்றிப்பேசும்போது ஒரு சின்ன இடைவெளி கூட பேச்சு ரசனையை குலைத்துவிடும் என்று நினைப்பான்.
சிவராமன் புத்தகப்புழு என்றெல்லாம் சொல்ல மாட்டேன். புத்தகப்பிசாசு என்றே சொல்ல வேண்டும். சென்னை புத்தகக்கண்காட்சி சென்றால், குறைந்தது பத்தாயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கி வருவான்.
மூன்று நாட்கள் லீவு போட்டு விட்டு சாவதானமாக சென்று, புத்தகங்கள், நூல் ஆசிரியர்கள் சந்திப்பு என்று முடித்து விட்டுத்தான் வருவான்.
வந்தவுடன் வாங்கிய புத்தகங்களை தி.க.சி. அவர்களிடம் காண்பித்து ஒப்புதல் வாங்குவான். என் செலக்சன் சரிதானா என்பதுபோல.
மூர்ச்சை போட்டு விடாதீர்கள்..அவனிடம் இருபதாயிரம் புத்தகங்களுக்கு குறையாமல் இருக்கும். அவன் வீட்டு புத்தக அலமாரியில் சிறுகதைகள், நாவல்கள்,கட்டுரைகள், கவிதைகள் என்று ரகம் வாரியாக பிரித்து வைத்திருப்பதே பார்க்க அழகாய் இருக்கும்.
அக்காலத்தில் வந்த ராணிமுத்து, தாய், பாக்யா இதழ்கள் கூட அந்த வரிசையில் உண்டு. சிரிக்காமல் இருந்தால் இன்னொன்றும் சொல்வேன். இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ், டேவிட், போன்ற கதாபாத்திரங்கள் கொண்ட காமிக்ஸ் புத்தகங்களை கீழ் வரிசையில் அடுக்கி வைத்திருப்பான் சிவராமன்.
இப்போது சிவராமனைப்பற்றி ஓரளவு நீங்கள் யூகிக்க முடியும் என்று நினைக்கிறேன். இவ்வளவு நெருக்கமாய் இருக்கிறீர்கள்..சிவராமன் வீட்டுக்கு சென்று பல வருடங்கள் ஆகி விட்டன என்று ஏன் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள்.. உங்களுக்குள் ஏதும் சண்டையா என்று நீங்கள் நினைக்கக்கூடும். அப்படியெல்லாம் இல்லை ஐயா..
இப்போது உங்களுக்கு விடை கிடைத்து விடும். அவன் வீட்டுக்கு வந்து விட்டேன்.
கொஞ்சம் தடுமாறிப்போனேன் என்றும் சொல்ல வேண்டும்.
தண்ணீர் டேங்க் தான் எப்போதும் அடையாளம். அவன் வீட்டின் முன்பு ஒரு பெரிய மைதானம் உண்டு. இப்போது அங்கே அம்மா உணவகம் புதிதாய் முளைத்திருக்கிறது. அங்கே ஆண்களும்,பெண்களும் தூக்கு வாளியோடு நின்றுகொண்டிருந்தார்கள். சிவராமனின் வீடு திக்கு மஞ்சள் கலரில் இருக்கும். இப்போது வெளிறிப்போய் சொல்ல முடியாத நிறத்தில் இருந்ததும் என்னுடைய தடுமாற்றத்திற்குக் காரணம்.
எனினும் அந்த பவள மல்லி மரம் அவன் வீட்டை உறுதிப்படுத்த உதவியது. பவளமல்லி கன்றை எங்களோடு வேலைபார்த்த கிருஷ்ணவேணி மேடம் வீட்டில் இருந்து வாங்கி வந்து வைத்திருந்தான் சிவராமன். நாங்கள் இருவரும் ஒரே அலுவலகம் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இரும்பு கதவுகளை திறந்து விட்டு உள்ளே நுழைந்தேன். அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருந்தேன். வலது புற தூணில் தான் வீட்டின் பெயர் இருந்தது. குயில்தோப்பு. கருப்பு நிற கடப்பைக்கல்லில் பொறிக்கப்பட்டிருந்த பெயரில் காக்கை எச்சம் வடிந்து சற்றே மங்கிப்போயிருந்தது. போயிருக்கும் தானே?
மீண்டும் ஒருமுறை பெல்லை அழுத்தவா வேண்டாமா என்று யோசித்தபடியே உள்ளே பார்த்தேன். டிவியில் கந்த சஷ்டி கவசம் கேட்டுக்கொண்டிருந்தது. சிவராமனின் அம்மா கேட்கிறார்களோ என்னவோ..? மாலதி அடுக்களையில் கூட இருக்கலாம்.
“சிவராமன்..”
என்று குரல் கொடுத்தேன். முன்பெல்லாம் அப்படிதான் குரல் கொடுப்பது வழக்கம். இல்லை என்பதால், மாற்றி கூப்பிட முடியாது அல்லவா?
இதோ கதவு திறந்து விட்டது. மாலதி தான்..சற்று சதைப் போட்டிருந்த மாலதி..
“அட..யாரோ புது விருந்தாளி வந்த மாதிரி இருக்கு.. இப்ப தான் வீட்டுக்கு வழி தெரிஞ்சதா..”
குரலில் அதே கலகலப்பு.. கிண்டல்.. முன் நெற்றியில் நாலைந்து நரை முடிகள்…
உள்ளே சென்றேன். ஹால் மத்தியில் டிவி ஓடிக்கொண்டிருந்தது.
மேலே சிவராமன் சட்டமிட்ட பிரேமில் அடங்கிப்போயிருந்தான். காய்ந்துபோன மாலை ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது.
பிடரி நிறைய கத்தை முடிகளுடன் சிவராமன் “வாடா” என்று அழைப்பது போல இருந்தது.
“மாலதி எப்படி இருக்கே..” என்றபடி அங்கிருந்த எஸ் டைப் நாற்காலியில் அமர்ந்தேன்.
“எங்களுக்கென்ன குறைச்சல்..நல்லாத்தான் இருக்கோம்..”
என்று சிரித்தாள். சிரிப்பு வெறுமையாய் இருந்தது. “நல்லாத்தான்” என்பதிலேயே அத்தனை உணர்வுகளையும் என்னுள் கடத்தி விட்டாள்.
பாவிப்பயல்..எத்தனை மாப்பிள்ளைகள் பார்த்து கொடுத்தேன்.. எல்லாவற்றையும் நொள்ளை சொல்லியே கழித்து விட்டானே.. ஸ்டேட் கவர்மெண்ட் உத்தியோகம் பார்க்கிற மாப்பிள்ளை வேண்டாம் என்றான். பிரைவேட் கம்பெனி வேலையும் சரி வராது என்று ஒருமுறை சொன்னான். இருவருக்கும் ஐந்து வயதாவது வித்தியாசம் இருக்கணும் என்று சொல்லி ஒரு சென்ட்ரல் எஸ்சைஸ் இன்ஸ்பெக்டர் மாப்பிள்ளையை ஒதுக்கினான். ஆறு வயது வித்தியாசத்தில் இருந்த ஸ்பிக் நிறுவனத்தில் பணிபுரிந்த கணேசனுக்கு லேசாய் தலை வழுக்கை என்று சொல்லி தட்டிக்கழித்தான்.. பாவி..பாவி.. இப்போ முதிர்கன்னியாய் நிற்கிறாளே…
“வீட்டில் மதினி நல்லா இருக்காங்களா..பொண்ணு காலேஜ் போயிட்டாளா..? இங்கே டவுணில் உங்களுக்கு ஏதாவது வேலை இருந்திருக்கும். அதான் வந்திருக்கீக ..சரிதானே?”
சிரித்தாள் நாற்பதைக் கடந்து போன மாலதி.
“அதெல்லாம் இல்லை.. உங்களைப் பார்த்துட்டுப்போகத்தான் வந்தேன்.. அம்மா எங்கே” என்றேன்.
“அம்மா உள்ளே கட்டிலில் படுத்திருக்கா.. எழுந்திருக்கிற நேரம் தான்.. உங்களைப் பார்த்தா ரொம்ப சந்தோசப்படுவா.. காப்பிக்கு சீனி போடலாம்ல.. சுகர் லாம் வரலியே” என்றபடியே அடுத்திருந்த அடுக்களையில் நுழைந்தாள்.
சிவராமனின் குடும்பக்கதையே பெரிய கதை. அந்தக்காலத்தில் அவனோட அப்பாவும் அம்மாவும் கலப்பு திருமணம் செய்துகொண்டதை ரொம்ப வருத்தப்பட்டு சொல்வான். இதில் வருத்தப்பட என்ன இருக்கு.. ஐம்பது வருடங்களுக்கு முன்பே காதல் திருமணம் செய்துகொண்டது எவ்வளவு பெரிய விஷயம் என்றால்,
“உனக்கென்னல தெரியும்.. தங்கச்சிக்கு மாப்பிள்ளை கிடைக்காம தள்ளிப்போவதுக்கு இதும்தான் காரணம்” என்று சொல்வான். எந்த ஜாதியில் மாப்பிள்ளை பார்க்க என்பதில் குழப்பம் இருந்தது உண்மைதான். மாலதி பேட்டையில் இருந்த ராணி அண்ணா கல்லூரியில் பி.ஏ.படித்தவள். டைப் ஹையர் பாஸ் பண்ணியிருக்கிறாள்.
முப்பதை தொடும் காலங்களில் எல்லாம் அவள் காந்திமதி அம்பாள் சந்நிதியில் கொடிமரத்தின் முன்பு உள்ள கட்டத்தில் கை பரப்பி உட்கார்ந்திருப்பதை பலரும் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன்.. அம்பாளை நினைத்தபடி மனதுருகி வேண்டினால், கட்டத்தில் இருக்கும் வலது கையும் இடது கையும் அருகருகே நெருங்கி சேருமாம். நினைத்த காரியங்கள் நடக்கும் என்று சொல்வாள் மாலதி. அப்போது என்ன வேண்டுதல் இருந்திருக்கும்… நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்பதைத்தவிர.
காந்திமதி அம்பாள் கோவில் தெப்பக்குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து நானும், சிவராமனும் பேசிக்கொண்டிருக்கும்போது அவன் ஒருமுறை சொன்னான் : “இவ யாரையாச்சும் லவ் பண்ணிட்டு ஓடிப்போனாகூட நிம்மதியாய் இருப்பேன்..”
குளத்தில் இருந்த மீன்களுக்கு பொறியை அள்ளி அள்ளி போட்டான்.
“ஏன் ஓடிப்போகணும்..நீயே கல்யாணம் பண்ணி வச்சால்தான் என்ன” என்றபோதும் அவன் பதில் சொல்லாமல் எங்கேயோ வெறித்துப்பார்த்தபடி இருந்தான்.
சிவராமனின் புத்தகங்கள் அடுக்கி இருக்கும் அறைக்குள் நுழைந்தேன். சிவராமனின் வாசனை அடித்தது.
அந்த அறையின் மூலையில் இருந்த நார்க்கட்டிலில் தான் சிவராமனின் அம்மா படுத்திருந்தார். மெலிந்த தேகத்தில் இருந்து மூச்சுக்காற்று சீராக வந்து கொண்டிருந்தது. புத்தகங்கள் இருந்த மேல் அடுக்கில் நூலாம்படை படர்ந்திருந்தது. கண்ணில் பளிச் சென பட்ட தோப்பில் முகமது மீரானின் “கடலோரக் கிராமத்தின் கதை” நூலை எடுத்தேன். நூலை புரட்டியபோது முதல் பக்கத்தில் தோப்பில் மீரானின் கையெழுத்து தெரிந்தது. அதன் கீழ் சிவராமன், 10 .2 .1997 என்று அவன் எழுதியிருந்ததும் கண்ணில் பட்டது.
சிவராமனின் அம்மா லேசாய் புரண்டு படுத்தார்.
“யம்மா..யார் வந்திருக்கான்னு பாரு..”
மாலதி சத்தம் கொடுத்தபடியே காப்பியோடு அறைக்குள் நுழைந்தாள்.
சிவராமனின் அம்மா கண் விழித்துப்பார்ப்பது தெரிந்தது. கண்கள் பொங்கியிருந்தன. சேலைத்தலைப்பால் துடைத்தபடியே மெதுவாய் எழுந்து உட்கார்ந்தார்.
கண்களை சுருக்கிப் பார்த்தபடியே “யாரு தெய்வா?” என்று கேட்டபோது கட்டிலின் அருகே போய் உட்கார்ந்தேன்.
தெய்வநாயகம் என்ற பெயரை தெய்வு என்றுதான் எப்போதும் அம்மா கூப்பிடுவார். திருநெல்வேலி பழக்கமும் அதுதான்.
“நல்லா இருக்கீங்களா அம்மா” அவரது பழுத்த கைகளை பிடித்தேன். குளிர்ந்த கைகள்.. அடுத்த கணம், அம்மாவின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் கொட்டியது.
“நான் இருக்கேன்..அவன் போயிட்டான்யா..” விசும்ப தொடங்கினார்.
ஒரு இறுக்கமான சூழல் அறையை கவ்வியிருந்தது.
“அப்பவே வந்துட்டியா..” என்று கேட்டபடி எழுந்து உள்ளேயே இருந்த பாத்ரூம் நோக்கி நடந்தார். நார்க்கட்டிலின் முன்பு இருந்த மர ஸ்டூலில் வண்ணதாசனின் “கலைக்க முடியாத ஒப்பனைகள்” நூல் இருந்ததைப்பார்த்து கொஞ்சம் வியப்பாய் இருந்தது. யார் இதை எடுத்துக் படித்திருப்பார்கள்?
சங்கரோஜித பண்டிதர் தெருவில் சிவராமன் வாடகைக்கு இருந்தபோது அவன் அம்மா பலமுறை ஏசுவதை கேட்டிருக்கிறேன்.
“வாங்குற சம்பளத்துல இப்படி பொஸ்தகமா வாங்கிக்கிட்டு இருந்தா உருப்படுமா ..இந்தப் பொட்டைப்பிள்ளைக்கு ஒரு கம்மலை வாங்கினோம், ஒரு செயினை வாங்கினோம்னு இருக்கா..வீடு நிறைய்ய புஸ்தகம் தான்..வாங்கியதை படிச்சிட்டு விலைக்காவது போடலாம்ல..அதும் கிடையாது..ஒரு ரூமு நிறைய புஸ்தகம்தான்..மேலே ஆழங்கால் பலகை முழுக்க புஸ்தகமா அடுக்கி வச்சிருக்கான்..உள்ளே ஒரு அலமாரி இருக்கு..அதுலே இருந்த இவ சேலை, உள்பாவாடை எல்லாத்தையும் எடுத்து ஜாதிக்காய் பெட்டியில் போட்டுட்டு அங்கேயும் ஊர்லாம்ப்ட்ட புஸ்தகங்களை அடஞ்சு வச்சிருக்கான்…இவனுக்கு மண்டையில் ஏறுற மாதிரி புத்திமதி சொல்லுய்யா..”
ஒரு பாட்டம் அழுது தீர்த்த அம்மா,
“வீட்டுல ஒரு நாதஸ்வர சத்தம் கேக்க வழியிருக்கா..என்ன பாவம் பண்ணினேனோ” என்றபடி சேலைத்தலைப்பால் முகத்தில் வழியும் கண்ணீரைத்துடைத்துக்கொண்டார்.
நாதஸ்வர சத்தம் அந்த வீட்டில் கேட்கத்தான் செய்தது. அது சிவராமனின் கல்யாணம். தென்காசிப்பக்கம் பொண்ணு. என்ன நடந்தது ஏது நடந்தது என்று தெரியவில்லை..நாலே மாதத்தில் இவனோடு கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றவள் வீடு திரும்பவில்லை.
அது பற்றி சிவராமன் யாரிடமும் மனம் விட்டுப்பேசியதில்லை.
அந்த பேச்சை எடுத்தாலே அவன் முகம் மாறிப்போய் விடும். இவன் ஒரு முன்கோபி என்பது தெரிந்தது தான். அது தான் காரணமா என்பதும் தெரியவில்லை. அவன் புஸ்தகத்திற்கே தனது சம்பாத்தியத்தை பெருமளவில் செலவு செய்தான். ஒரு சாதாரண அரசு குமாஸ்தா வாழ்க்கையை அவன் வாழவில்லை..அவனிடம் ஒரு சைக்கிள் மட்டுமே இருந்தது. எங்கே சென்றாலும் சைக்கிளில்தான். டவுணில் இருந்து பாளையங்கோட்டைக்கு சைக்கிளில் தான் வருவான். மின்னல் வேகத்தில் அவன் செல்வதை பலரும் பார்த்திருப்பார்கள்.
பின்கழுத்தில் முடிகள் புரள அவன் சைக்கிளில் செல்லும் அழகே தனி.
சிவராமன் கம்பீரமான அழகன். அவன் அப்பா சாடை என்று அவன் அம்மா அடிக்கடி பெருமைப்பட்டுக்கொள்வாள். பெருமைப்பட்டு என்ன செய்ய ? சிறுநீர்ப்பை அடைத்துக்கொண்டு வயிறு வீங்கி ஒரே நாளில் இறந்து போவான் என்று யார் தான் எதிர்பார்த்தார்கள்?
கண்ணாடிப்பெட்டியில் அவன் உடலைப்பார்த்தபோது, ஆழ்ந்த நித்திரையில் இருந்ததுபோலதான் தெரிந்தது.
“ஒங்களுக்குத்தெரியுமா..இப்பல்லாம் அம்மா தினம் ரெண்டு நாவல் வாசிக்கிறாங்க..” மாலதி மேற்கு சுவரில் சாய்ந்து உட்கார்ந்தபடி சொன்னாள்.
பாத்ரூமில் இருந்து வந்தபடியே ” இவனாப்பிலே என்ன..இவளும் தினமும் ஏதாச்சும் வாசிச்சுட்டுதானே இருக்கா ..” என்றார் சிவராமனின் அம்மா.
எனக்கு வியப்பாய் இருந்தது. அவன் இருக்கும் வரை அவன் புஸ்தகங்கள் வாங்குவதை திட்டிக்கொண்டிருந்த இருவரும் இப்போது போட்டிபோட்டுக்கொண்டு படிக்கிறார்களா..இதென்ன அதிசயமா இருக்கு..
“மோகமுள் கூட படிச்சுட்டேன் தெரியுமா..” விளக்கு திரி போட்டபடியே சொன்னாள் மாலதி.
“யமுனா கதாபாத்திரம் புடிச்சிருக்கா ” என்றேன்.
“ம்ம்..புடிச்சிருக்கு..அந்த நாவலை அவரு வேற மாதிரி முடிச்சிருக்கலாமோன்னு நினைச்சேன்..” என்று என்னைப்பார்த்து திரும்பி சொன்னவள், “அது என்னமாதிரின்னு என்றெல்லாம் கேட்கக்கூடாது” என்று சத்தமாய் சிரித்தாள்.
“தெய்வு…இந்த அறைக்குளேயே தாம்பா நான் எப்பவும் இருக்கேன்…..இந்த புஸ்தகங்களில் தான் சிவராமின் மூச்சுக்காற்று இருப்பதுபோல இப்பெல்லாம் தோணுது..அவன் வாங்கி அடுக்கி இருக்கிற இந்த புஸ்தகங்களை புரட்டும்போதெல்லாம் அவனோடு பேசுவது போலவே இருக்கு..அவன் கை பட்ட புஸ்தகங்களை தொடும்போது அவனை தொட்டுப்பேசுவது போல இருக்கு..
ஒரு வெறிகொண்டு எல்லா புஸ்தகத்தையும் வாசிச்சு முடிக்கணும் போல இருக்கு..அப்போ நான் என்னையே மறந்துருவேன்..”
சிவராமனின் அம்மா மூச்சுவிடாமல் பேசிக்கொண்டிருந்தார்.
விளக்கில் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்த மாலதி “என்னடா அம்மா உளறுறாளான்னு நினைக்கீங்களா..போன வருஷம் அம்மன் சன்னதியில் இருந்த மீனாட்சி வந்து கேட்டான்..அண்ணனோட புஸ்தகங்களை எல்லாம் நான் ஒரு விலை போட்டு எடுத்துக்கறேன்னு..அம்மா அவனை நல்லா ஏசி அனுப்பி விட்டாள்..”
“இந்த புஸ்தக அடுக்கில் இருந்து ஒரு புஸ்தகத்தை எடுத்து விட்டாலும்கூட எனக்கு மூச்சு திணறல் வந்து விடும் போல உணர்வு இப்ப அடிக்கடி வருது..பைத்தியக்காரத்தனம் போல தெரியும்..”
என்று சொன்ன அம்மாவின் தலையணை அருகே “வல்லிக்கண்ணன் சிறுகதைகள் ” இருந்தது.
வாசலில் இருந்து விளக்கு சரத்தை எடுத்து வந்து குத்துவிளக்கில் போட்டாள் மாலதி.
“நான் தினமும் அவன் போட்டோ முன்னாடி நின்னு அவனை திட்டி தீர்ப்பேன்..எங்களை அனாதையாக்கிட்டு போயிட்டியேடா.. நொண்டியோ முடமோ எவனுக்காவது என்னை கட்டி வச்சிட்டு போயிருக்க வேண்டியதுதானே..வயசான இந்த ஜீவனை என்கிட்டே கொடுத்துட்டு போயிட்டியேன்னு தினம் தினம் திட்டுவேன்.. அமாவாசை அன்னைக்கு மொத்தமாய் மன்னிப்பு கேட்டுக்குவேன்..”
என்று மாலதி சொல்லும்போது அவள் கண்கள் கலங்கியிருந்தன.
சிவராமனின் அம்மா எழுந்து வந்து ” ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கே.. உனக்குப்பிடிச்ச முழு உளுந்து தோசை சுடுறேன்.. சாப்பிட்டு விட்டுப்போ..” என்றபடியே அடுக்களைக்கு சென்றார்.
சாப்பிட்ட பிறகும் அம்மாவும், மாலதியும் என்னென்னவோ கேட்டார்கள்.
ஒரு கட்டத்தில் அவர்கள் நிதானத்திற்கு வந்து விட்டார்கள். என்னால் வர இயலவில்லை.
முன்பெல்லாம் கிளம்பும்போது சிவராமனின் அம்மா வாசல் வரை வந்து
“ஏதாச்சும் நல்ல வரன் வந்தா சொல்லுய்யா..” என்பார்.
இன்று கிளம்பும்போது “இந்தப்பக்கம் வந்தேன்னா ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போய்யா..” என்று சொன்னபோது மனசு புழுங்கியது.
வலதுபுறத்தில் இரண்டாவது அடுக்கில் நான்காவது நூலாய் இருந்த “கருணாமிர்த சாகரத்தை” நான் பார்த்துவிட்டபோதும், அதை எடுக்காமல் தான் வீடு திரும்பினேன்.
– நவம்பர் 15 , 2020
அம்மாவசை அன்று மொத்தமாய் மன்னிப்பு கேட்பேன்.என்று வாசிக்கும் இடத்தில் அந்த முதிர்கன்னியின் பாசம் தெரிந்து ஆசீர்வதிக்கட்டும் சிவராமன்