மூக்குத்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 13, 2024
பார்வையிட்டோர்: 24 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பக்கத்து வீட்டில் ஒரு ‘பெண்’ இருக்கிறாள். பெண் என்ற சொல்லுக்கு வயது குறிப்பு எல்லை இருபதுக்குள் தான் இருக்கவேண்டும் என்று மனது சட்டம் வைக்கிறது. மாது என்றால் பொருளாதார வழியில், மேல்வர்க்க அந்தஸ்தின் வாசனை அடிக்கிறது. ‘நல்லாள்’ என்று குறிப்பிடலாமோ என்றால் புத்தக சாலையில் புத்தகம் இல்லாத இடங்களில் மரப்புத்தகம் அடுக்கி வைப்பது போல் ஆகிவிடும். ஒரு அம்மையார் இருக்கிறாள். (அம்மையார் ஒளவையாரை ஒட்டிய சொல்லா?) 

வயது- இந்த நாளில் வயது சொல்வதே கடினமாகி விட்டதே. அதிலும் குடும்பக் கட்டுப்பாடு வந்துவிட்ட பிறகு ஊருக்கு முன்பு பெண்களின் தலைமயிர் வெள்ளி ஓட ஆரம்பித்து விடுகிறது. உடல் கனத்து விடுகிறது. முற்றிப் போன தோற்றம் வழுகிறது. எந்த அனுமானமும் காய்த்த மரத்தில் கல்லெறிவதைப் போலத்தான். அந்த ஸ்திரீக்கு வயது நாற்பத்தி ஐந்து இருக்கலாம். 

தாளைப் போல நெற்றி வெறுமையாக இருக்கும் – கணவர் காலமாகி விட்டதால். ஆனால் கலங்கரை விளக்கு திரும்புவது போன்ற ஒளி ஒன்று வந்து அடிக்கும். இந்த கவர்ச்சிக்குப் பிறப்பிடம் நெற்றி அல்ல என்பது வெகு நாள் கழித்துத்தான் மனதில் உதித்தது. நெற்றிக்கு மேல் மயிர்ச் சுருள் இருபுறமும் அமைந்திருந்ததுதான் இதற்குக் காரணம் என்று ஏனோ பட்டது. கத்திரிக்கோல் சம்பந்தமிருக்குமா என்ற ஆராய்ச்சிக்கு இப்பொழுது பொழுதில்லை. கண்களைப் பன்றிக்கண் வகை என்றுதான் சொல்ல வேண்டும். கழுத்துக்குக் கீழ் உடல் முழுதையும் சேர்த்துச் சொன்னால் தேர் போன்ற உருவம். இந்த உருவம் முடிந்த விதம்தான் எனக்கென்னவோ வினோதமாகத் தோன்றிற்று. பாதங்கள் ஒவ்வொன்றும் பெரிய பெங்களூராவின் கொட்டைபோல சப்பையாக இருந்தது. 

தேர் போன்ற உருவம் என்றால் இழிவு படுத்தும் தொனி இருக்கலாம். அதற்கு நாமென்ன செய்யலாம்? இடையன் பூச்சி மாதிரி ஏணி மாதிரி இருந்துவிட்டால் மட்டும் இழி வில்லையா? வியக்தி என்று சொல்லும்படி சிறப்பிருப்பதுதான் முக்யமே ஒழிய உருவத்தில் அழகு அழகின்மை என்பதுகூட அவ்வளவு முக்யமில்லை. அந்த ஸ்திரீயின் தோற்றம் எப்படியும் ஒருவர் கவனத்தை கவர்ந்துதான் தீரும்- அதாவது தேர் நிலையில் இருக்கும் வரையில். 

அசைய ஆரம்பித்தால்? அன்னநடை என்று கவிகள் எழுதுவார்கள். பாலையும் நீரையும் பிரிக்கும் அன்னம் என்பதே ஒரு கட்டுக்கதை என்று பறவைகள் நிபுணர் கூறு கிறார்கள். அந்த விஷயங்களெல்லாம் எனக்குத் தெரியாது. வாத்து நடை எனக்குத் தெரியும். மாங்கொட்டைக் கால் களுடன் தேர் நகரும் பொழுது வாத்து நடை பிறக்கிறது. பெரிய அலையில் படகு பக்கத்துக்குப் பக்கம் உருளுவதைப் போன்ற ஒரு ஆட்டம் தெரிகிறது. சில தசைப் பகுதிகளும் இந்த ஆட்டத்தில் தாறுமாறாக நிலைகுனிவதும் வாத்து நடையை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சும் என்ன இருந்தாலும் அந்த நடை வெறுப்பாகத்தான் இருக்கிறது. 

சாமுத்ரிகா லக்ஷணம் பற்றி கூறினால் தலை முதல் கால் வரை (புலவர் சொல்வது போல் பாதாதி கேசபரியந்தம் கேசாதி பாத பரியந்தம்) கூற வேண்டும் என்று கூறப்பட் டிருப்பதாகச் சொல்வார்கள்: நான் இலக்கணப்படி ஒரு குற்றம் செய்து விட்டேன் என்று தெரிகிறது. ஆனால் இலக்கணத்தை மீறவேண்டும் என்ற வீராப்பில் இதைச் செய்யவில்லை. மூக்குக்குப் போதிய முக்யத்வமும் விஸ்தார மும் தரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வைக்கோல் போரில் ஊசியைப் பத்திரப்படுத்தும் காரியத்தை செய்யாமல் இந்த கட்டத்திற்கு வந்திருக்கிறேன். தனித்து நிற்கும் முந்திரி கொட்டைக்கு ஒரு மகத்துவம் உண்டல்லவா? நிரந் தரமான ஒருவித மன இயலுக்கு அது அறிகுறி ஆகிவிட வில்லையா? 

உண்மையிலேயே அழகான மூக்கு. மூக்கு எவ்வளவு அழகோ அதைவிட அழகான மூக்குத்தி. வெள்ளை மூக்குத்தி, புஷ்பராகத்தையும் வைரத்தையும் பிரித்தறியக் கூடிய திறமை எனக்கில்லை. மூக்குத்திக்கு ஒத்தபடி காதில் வெள்ளைத்தோடு. 

அவள் வீட்டை விட்டுக் கிளம்புவது எனக்கு எப்பொழு தும் திரையைத் தள்ளினால் போன்ற வெளிச்சம் தருகிறது. ஆகையால் அந்தக் காட்சியைப் பார்க்க நான் முடிந்த வரையில் தவறுவதில்லை. வியாக்கிழமை கோவில் குளக் கரை ஓரம் நின்றுகொண்டு வானில் வரும் கருடனுக்காக ஏங்கிக் கிடப்பார்களே அதுபோலகூட இருந்திருக்கிறேன் 

வீட்டு வாசல்படியிலிருந்து ஒரு காலை வைத்து இறங்கு வாள். அந்த நிமிஷத்தில் வலது கை புடவை முன் தலைப்பை எடுத்து காது தோடுகள் இரண்டையும் மூக்குத்தி யையும் வௌவால் இறகால் அடிக்கும் வேகத்தில் துடைத்து விடும். இந்த சடங்கு அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் நடந்து முடிந்துவிடும். (இதை எல்லாம் உள்ளே முடித்துக் கொண்டிருக்கலாமே என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் அவள் என்ன கருத்தில் செய்கிறாள் என்று நமக்கென்ன தெரியும்?) வெறும் கைசோஷ்டிடையாகக்கூட இருக்கலாம். ஒருநாள் கூட இந்த சடங்கு தவறியதில்லை. முன்பின் என்ற முறை மாற்றமும் கண்டதில்லை. அதற்குப் பிறகு அசைந் தாடும் நடை… 

மின்னல் அடிக்கும் நேரத்தில் மின்னல் போல் பிறரைக் குருடாக்கி கல் நகைகளை அவர் அழுக்கெடுப்பதைப் போன்ற சாதுர்யத்தை நான் எங்கும் கண்டதில்லை. அந்த அம்மையாரைப் பற்றி தவறாக நான் சொல்வதாக நினைத்தால் தலைவெடித்துப் போகும். ஆகையால்தான் தோட் டிலோ மூக்குத்தியிலோ அழுக்கு இருந்துவிட்டால் என்ன குடிமுழுகிப் போகும் என்ற பிரச்னை இயற்கையாக எழுகிறது. யார் கண்ணை அதுபோய் குத்திவிட முடியும்? எந்தப் படி அளப்பதை யார் நிறுத்தி விடுவார்கள்? 

பெரிய தத்வவாதிகள், இலக்கிய கர்த்தாக்கள் அரசியல் அறிஞர்கள் முதற்கொண்டு எவ்வளவு சுலபமாக ஹிமாலயத் தவறுகள் செய்கிறார்கள்! தனி ஜீவன் தனி ஜீவனின் ஆதார உரிமைகள் என்றெல்லாம் எவ்வளவு பொய் ஆணி அடிக் கிறார்கள்! கருப்பைக்குள் வேணுமானால் தனி ஜீவன் எனலாம். அங்கு கூட தொப்புள் கொடி உறவில் தாயுடன் ஒன்றிய தனிமைதான் இருக்கிறது. வெளியே வந்த பிறகு – சுதந்திரமேது? பரதந்திரம் இல்லாத எது உண்டு? மூச்சுக் காற்றே வெளியே இருந்து வாங்கவேண்டும். இந்த பர தந்திரத்தின் உருவம் தானே சமூகம் – அதனுடைய சட்ட திட்டங்கள், எழுதாத சம்பிரதாயங்கள்,மௌன எச்சரிக்கை கள், பயமுறுத்தல்கள்? 

இந்தப் பேருண்மைக்கு அந்த அம்மையாருக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். ஜாக்ரதையாகவோ அலட்சிய மாகவோ வாழ்வை ஏமாற்றி விடலாம் என்று கருதுவது மனிதனின் மன்னிக்க முடியாத குற்றம். ஜீவாதாரமான மனிதப் பொறுப்பு இதுதான். இந்தப் பொறுப்பை உணராத தால் ஏற்படும் சிக்கல்களை விரிப்பதென்றால் ஆயிரம் நாப் படைத்த ஆதிசேஷனாலும் (அவர் எங்கு இருக்கிறாரோ) இயலாது வாணியன் பிடிதுணியைப்போல் கட்டிக்கொண்டு கண்ணில் படுபவனுக்கு தண்டனை கொடுக்கவேண்டு மென்று அம்மையாரைப் பார்த்தால் தோன்றுகிறது. எண்ணை இறங்கிய தோட்டை விடாமல் ஒரு பெண் போட்டுக் கொண் டிருந்தால் அவளைப்பற்றியும் அவளுடைய குடும்பத்தைப் பற்றியும் பல விஷயங்கள் தெரிவதுபோல் எனக்குத் தோன்றுகிறது, என்ன கிழமை என்று கேட்டால் காலண்டரைப் பார்க்க ஓடுபவனைப் பற்றி தாங்காத வருத்தம் பிறக் கிறது. பொறுப்புணர்ச்சி இல்லாதவர்கள். 

பொறுப்புணர்ச்சி இருப்பதன் விளைவாகத்தான் கல்நகைக்கு அம்மையார் கை ‘பாலீஷ்’ போட விரைகிறதோ என்னவோ! மழைக் கால வானத்தில் எழும் பரவு மின்னல் புதிய உலகம் ஒன்றைக் காட்டுகிறது. அம்மையார் கையும் அத்தகைய வேறெரு உலகைக் காட்டுகிறது… 

தனிஜீவன், தனி உரிமைகள் என்று உலகத்தை பயமுறுத்தக் கூடாது. அலட்சியப்படுத்தக் கூடாது. உலகை வணங்கியே ஆகவேண்டும் என்ற மூல வைப்புகளைக திறந்து காட்டுவது போல் இருக்கிறது. 

அப்படித்தான் இருக்கட்டுமே. வாத்து நடை ஆரம்ப மாகிவிட்டது.

– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.

வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *