குழந்தை விர்…விர்… விர் என்று அழுதது.
விக்கி விக்கி அழுதது
ஏங்கி… ஏங்கி அழுதது.
அதன் அழுகையை யாராலும் நிற்பாட்ட முடியவில்லை. மேனிக் காம்மே சத்தத்தில் உறைந்து போனது.
இந்தக் குழந்தையின் அழுகை புதுமையானதுமல்ல, புதியதுமல்ல, அடிக்கடி இப்படித்தான் கத்தும், கத்தத் தொடங்கினால் நிப்பாட்டவே முடியாது!
அது மூன்று வயதுக் குழந்தை. அதுக்கு உலகமே தெரியாது!
எட்டு மாதமாக முடங்கிப் போன வாழ்க்கை.
அதுதான் அந்தக் குழந்தைக்கு வெறுப்போ என்னவோ……! சுதந்திரமாகச் சுற்றித் திரிய வேண்டிய பிள்ளையை இந்த சிறைக்குள் கொண்டு வந்து போட்டா… என்ன செய்யும்? வாழ்வே வெறுத்து அழத்தானே செய்யும்!
ஒருநாளா… இரண்டுநாளா…. எத்தின நாளைக்குத்தான் பொலித்தீன் பையால் முளைத்துப் போயிருக்கிற அகதிக் குடிசைக்குள்ள முடங்கிப் போய்க் கிடக்கின்றது.
வெயிலடிச்சாப் புழுக்கம்! மழை பெஞ்சா சதுக்குப் புதுக்கென்று….! ஊரில உள்ள நுளம்பெல்லாம் ஆக்களிலதான்… மனுஷ வெட்க வேற…
ஆன… மான… சோறா? கறியா?
ஏதோ அவிச்சுப் போடுறத திண்டு துலைக்க வேணும். நாத்தம் நெத்திலிக் கருவாடும் கோறா அரிசிச் சோறும்!
வெளியில ஒண்டும் சொல்லேலா வெட்கம் கெட்ட வாழ்க்கை.
அது நம்மட தலைவிதி வாழ்ந்து தான் ஆகனுமெண்டா….. இந்தப் பிஞ்சுக் குழந்தைகள்தான் என்னசெய்யும்….. அதுகள் என்ன பாவம் செய்ததுகளோ தெரியா… நம்மட…. வயித்தில வந்து புறந்துத்துகள்.
தாயிட வயித்தில புறந்தத விட… நாயிட… வயித்தில புறந்திருந்தாலும் கொஞ்சம் சுதந்திரமாக திரியுங்கள்…. நாசமாப் போன சண்டையில் எல்லாத்தையும் இழந்து போட்டு வந்து இப்படிச் சாக வேண்டிக் கிடக்குது…..
ஆரிட்டச் சொல்லி அழுற… ஆண்டவனிட்ட சொல்லி அழுறத்திற்கு ஆண்டவனும் செத்துப் பொயித்தான். குழந்தைக்கு இதுதான் ஓரே வெறுப்பு போல…. சினம் பிடிச்ச குழந்தை போல் அழுதது.
குழந்தையின் நீண்ட அழுகையை அந்த இளந்தாயினால் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஒரே அழுத அழுகைதான்!
தனிமரமாய் ஒடிந்து போயிருக்கும் அவளினால் அந்தக் குழந்தையின் பலத்திற்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஏதேதோ தாலாட்டுப் படித்தாள்.. இம்…இம்…
தோளோடு சேர்த்து போட்டு அமத்திப்பார்த்தாள்.. தோள் சூட்டுக்கு கொஞ்சமாவது படுக்குமெண்டு… அது எங்க அழுகையை விட்டாத்தானே!
பால கொஞ்சம் அடிச்சுக் குடிச்சுப் பார்க்கலாமென்று பார்த்தா பால் மாவக்கண்டு பத்துமாதம்.
சரி… சரி.. என்று போட்டு நெஞ்சப் பிதுக்கி வெளிய எடுத்து விட்டா அது பால்வத்தி றப்பர் குழாய் போல சுருண்டு போய்க் கிடந்தது.
பரிதாபம் பொறுக்க முடியாத பக்கத்துக் குடிசை பார்வதியக்கா ஓடி வந்து பால் கொஞ்சம் அடிச்சுக் கொடுத்தா.. குடிக்க மறுத்து அடம்பிடித்தது குழந்தை.
பொலித்தீன் கொட்டிலின் வெக்கையும் ஆக்களின் வெக்கையும்… குழந்தை புழுங்கிப் போய் வியர்த்து வடிந்தது. ஆத்திரம் தாங்காது அழாத அழாத என்று இரண்டு மூன்று அடிகள் போட்டாள். பச்சை மேனியில் விரல்கள் பதிந்து போயிருந்தன பலன் இல்லை.
ஐயோ!… பிஞ்சுக் குழந்தைக்கு அடிச்சுப் போட்டனே! தாயின் வயிறு பற்றி எரிந்தது.
நெஞ்சுக்குள்ளே வெடித்து வெடித்து அழுதாள்.
சட்டையைக் கழற்றி எறிந்து போட்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.
குழந்தையின் அழகை தொடரவே செய்தது.
எரிச்சல்…. எரிச்சலாகக் குமைந்தது.
தொட்டில் இருக்கா…. பாவைப் பிள்ளையிருக்கா…. பொம்மை இருக்கா….. அவள் குழந்தைக்கு விளையாடக் கொடுத்து பிராக்குக் காட்ட…… குழந்தைக்கு வேடிக்கை காட்டுறத்துக்கு அங்க பிண வைச்சி….. இஞ்ச பாஸ் எடுத்து கொழும்புக்குப் போய் வந்திருக்கிறாள்.
அங்க றோட்டோரத்தில் பொலித்தீன் கூடாரத்திற்குள்ள வாழ்கிற சனங்களைப் பாத்து வேதனப்பட்டிருக்கிறாள்.
அண்டைக்கு அந்த அவல வாழ்க்கை அவளுக்கும் வரும் எண்டு கனவிலயும் நினைச்சுப் பார்கவேயில்லை.
ஆனா… இண்டைக்கு அதவிட கேவலமாக….
தெகிவள மிருக்கக் காட்சிச் சாலைக்குள்ள போய் அடைபட்டுப் போய்க் கிடக்கிற பறவைகளையும் மிருகங்களையும் குழந்தைக்கு காட்டும் பொழுது அது கை கொட்டிச் சிரிக்கும் ஆனா… அவளுக்கு ஏனோ நெஞ்சு சுளீர்;…சுளீர்… என்று வலிக்கும்.
இண்டைக்கு… அவர்கள் இந்தக் கூண்டுக்குள்!
அடிக்கடி கொழும்பில் இருந்து வந்து அவர்களைப் பார்த்துப் போகிறார்கள். சிலவேளைகளில் வெளிநாட்டு வெள்ளைக்காரர்களும் வந்து பார்த்து விட்டுப் போகிறார்கள்….
குழந்தைக்கு எதை வேடிக்கை காட்டுவதென்றே தெரியவில்லை.
ஒரு தண்ணீர்ப் பைப்படியில் ஒரு நூறு நூற்றியைம்பது பேர் தண்ணீர்க் குடங்களையும் வாளியையும் வைத்துக் கொண்டு தண்ணிக்காகக் காத்துக் கொண்டு நின்றனர்.
அங்கையாவது கொண்டு போய் பிராக்குக் காட்டுவோம் என்றெண்ணிக் கொண்டு அங்கேயோடிப்போனாள்.
நாலைஞ்சு சின்னப் பிள்ளைகளும் தண்ணிக் குடத்தோட நிண்டாங்கள்.
‘இஞ்ச பார்…. அக்கா தண்ணிக் குடத்தோட நிக்கிறாங்க… அங்க பார்….. அந்த அண்ணா தண்ணி வாளியோட நிக்குறார்…’ அவள் எவ்வளவோ சொல்லிப்பாத்தாள்.
குழந்தை மசியவேயில்லை.
அழுகின்ற குழந்தையின் பரிதாபம் பொறுக்க முடியாமலும்… அந்தக் தாய் படுகின்ற அவஸ்தையைப் பார்க்க முடியாமலும் தண்ணியெடுக்க பைப்படியில் நிண்ட ஒரு பொம்பிள, ‘பிள்ள இதில வைச்சித்திரியாம அங்கால பின் பக்கம் கொண்டு போய் பிராக்குக் காட்டு புள்ள…’ என்றாள்.
சரி… சரி… அங்கேயாவது கொண்டு போய் என்னத்தையாவது காட்டிப் பாப்பம்…. வெறுப்போடு குழந்தையைத் தூக்கிக் கொண்டு பின் பக்கம் போனாள்.
அங்க என்னத்தக் காட்டுற… அங்க காட்டுறத்திற்கு ஒண்டுமில்லை. ஒரு கக்கூஸ்… அதில கக்காக்குப் போறத்துக்கு வயித்தப் பொத்தித்து வரிசையில பத்துப் பதினைஞ்சு பேர்.
அவங்க வரிசையில முகஞ் சுழிச்சுக் கொண்டு நின்று படுகிற அவஸ்தயப் பாத்தா… குழந்தைக்கு பிராக்குக் காட்டினமாதிரித்தான்!
வரிசையில நிற்கும் ஆண்களின் பார்வை முழுவதும் அவள் மீது நிலைக்க தொலை தூரத்தில் பார்வையை வெறித்தாள். முகாமின் எல்லையில் நாலைந்து பங்கர்கள் முளைத்து நின்றன. அந்த பங்கர்களுக்குள்ளே சில சிப்பாய்கள் நடமாடுவது தெளிவாகவே தெரிகின்றது.
குழந்தை அழுவதை நிறுத்துவதாக இல்லை. கக்கூசுக்காக வரிசையில் நின்றவர்கள் ஒவ்வொன்றாகக் கரைய…. அவளுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. தனிமையில் விடப்பட்டது போல ஒரு பய உணர்வு. குழந்தையின் கரைச்சல் வேறு.
தனிமையில் ஆப்பிட்டுப் போனால் வில்லங்கத்துக்குள்ள மாட்டிக் கொள்ள வேண்டிவரும் என்று அவளுக்குத் தெரியும். கேட்டு – பார்த்து – அனுபவித்தும் பழக்கப்பட்டவர்கள் அவர்கள். செம்மணிப் புதைகுழியிலிருந்து தொடரும் புதைகுழிப்பாராம்பரிய நினைவுகள் நெஞ்சில் அலை அலையாக வந்து மோதின.
எதையும் இழக்க அவள் தயார். ஆனால் அதை மட்டும் இழக்க அவள் தயாராக இல்லை.
மண்ணும் – பண்பாடும் அவளுடன் ஒட்டிப் பிறந்த இரணைக் குழந்தைகள். குழந்தை பெரிய சத்தம் போட்டு அழுது ஊரைக் கூட்டியது.
குழந்தையின் சத்தம் முகாமின் எல்லை வரை கேட்டிருக்க வேண்டும்!
பங்கரில் இருந்த தொலை நோக்கிக் கண்ணாடி அவள் மேலே விழுவது தெரிகிறது.
அபாயச் சமிக்கை!
ஆணிவேரை இழந்த மரமானாள்.
இனி ஒரு கணம் கூட அங்கு நிற்க முடியாது.
பொழுதும் விடைபெற்றுக் கொண்டிருந்தது. கருக்கல் பொழுது! ஆத்திரம் எல்லாம் சேர்த்து பிள்ளையைப் போட்டுக்குத்த வேண்டும் போல இருந்தது.
பேசாத… பேசாமப்படு… பல்லைக் கடித்து பின்பக்கத்தில் ஆத்திரத்தில நாலு அடி அடித்து குழந்தையை இறுக்கி அணைத்துக் கொண்டு முன் வாசலுக்கு வந்தாள்.
அடி வாங்கிய குழந்தை அழுவதை நிறுத்துவதாக இல்லை. சிணுங்கித் கொண்டேயிருந்தது.
வாசலில் நின்றபடி அதைக் காட்டினாள். இதைக் காட்டினாள். குழந்தை அழுகையை நிறுத்துவதாக இல்லை.
நீண்ட நேரம் நின்றாள்.
குழந்தை அழுதழுது களைத்துப் போனது.
இவ்வளவு நேரமும் வாசலில் கல்லாய் நின்ற இராணுவச் சிப்பாயின் மனதை குழந்தையின் அழுகை கரைத்திருக்க வேணும்!
அவர்களை நோக்கி வந்தான்.
இவ்வளவு நேரமுமாக ஒவ்வொன்றா – ஒவ்வொருகதையாக – குழந்தைக்குச் சொல்லி சொல்லி பயனில்லாமல் அலுத்துப் போனவள் ஏதோ வேண்டா வெறுப்பாக ஆ… இந்த மாமா வாறார்… என்றாள்.
இவ்வளவு நேரமுமாக… தோளின் பின்பக்கம் திரும்பியபடி அழுதுகொண்டிருந்த குழந்தை திடீரென தலையைத் திருப்பி ஆ…. எங்கம்மா… என்றது.
தீராத நோய்க்கு மருந்து கிடைத்தது போல இருந்தது அந்தத் தாய்க்கு.
அந்தா வாறார்….
அவர்களை நோக்கி நடந்துவரும் சிப்பாயைக் காட்டினாள்.
அவன் துவக்கைத் தோளிலே தொங்கப் போட்டபடி அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
ஆரு நம்மட மாமாவா…?
குழந்தை மீண்டும் கேட்டது.
குழந்தையின் அழுகை அடங்கியிருந்தது. ஆனால் முற்றாக ஓயவில்லை ஓம்… நம்மட மாமாதான்…..!
குழந்தை அவனைப் பார்த்துச் சிரித்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்தக் குழந்தையின் முகத்தில் மலர்ந்த சிரிப்பது அது!
அவன் ஏதோ சொன்னான் குழந்தையைப் பார்த்து.
அவன் சொன்னது என்னவென்றே அவளுக்குப் புரியவில்லை.
ஆனால்…
அந்த குழந்தையை அந்த வார்த்தைகள் சுட்டிருக்க வேணும்.
இது எங்கட மாமா இல்லை….
மீண்டும் குழந்தை அழ ஆரம்பித்தது.
அவள் வார்த்தைகளைத் தொலைத்து நின்றான்.
அவளுக்கு ஒன்றுமட்டும் புரிந்தது.
குழந்தை அழுது தானாக தீரும்வரை விடுவதனைத் தவிர வேறு வழியில்லை. குழந்தை அழுது தீரட்டும் என்று அதன்பாட்டில் விட்டு விட்டாள்.
நீண்ட நேரம் அழுது அழுது அலுத்துக் களைத்து ஒய்ந்தது. தோளிலே துவண்டு கிடந்தது.
மெதுவாக தோளை வருடினாள்.
பிள்ளைக்கு என்ன வேணும்…?
மௌனங்கள் இடைவெளிகளாயின.
மீண்டும்…
பிள்ளைக்கு என்ன வேணும்…?
ர்pப்பி….. ரிப்பி…வேணும்……
சரி…. வாங்கித்தாறன்….
எந்தக் கடையில வாங்கித் தருவீங்க…
மாமா கடையில….
சரி…. வாங்க போவம்……
குழந்தை கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.
பாபு மாமாட கடைக்குப் போனா நம்மட வீட்டுக்கும் போகலாம் என்ன அம்மா…
ஓம் போகலாம்…!
நம்ம வீடு இருக்குமா….?
தெரியா….!
அப்ப… நான் விளையாடுற பப்பி நாய்க் குட்டி….
எங்கயும் ஓடியிருக்கும்….
அப்ப….. தாத்தா… பாட்டி எல்லோரும்….
அவங்களும் ஓடியிருப்பினம்….
எங்க ஓடியிருப்பினம்…. எங்களைப் போலையா…? பாவம் அம்மா, எங்களைப் போல தாத்தாவையும் பாட்டியாலயும் ஓடேலாதே!
….
வீட்டுக்குப் போய் விறாந்தையில இருந்து பப்பியோடயும்… தாத்தாவோடயும்.. பாட்டியயோடயும் விளையாடுவன்…..
…
வெடிச் சத்தம் கேக்குமா அம்மா…..
….இம் தெரியாது……
சரி…. வாங்களனம்மா வீட்ட போவம்….
தோளில் இருந்த குழந்தை கீழே இறங்கி விட்டது.
நடந்தார்கள்.
அவர்களுக்கே அவர்கள் எங்கே நடக்கிறார்கள் என்று தெரியாது.
எங்கும் நெருக்கி அடித்த பல பட்டுக் கம்பிகளின் முள்வேளி. சுற்றிச் சுற்றி நடந்தார்கள்.
எங்கும் ஒரே முள்வெளி.
நீண்ட தூர நடையின் பின்பு மௌனத்தைப் கலைத்துக் கொண்டு குழந்தை கேட்டது.
அம்மா, வீட்ட போனதும் அப்பா வருவார்தானே…..!
அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
அந்தக் கேள்வி….!
அவளின் உயிரை வேரோடு கிள்ளி எறிவது போல இருந்தது நினைவுகள்! எழுதப்படாத கல்லரையைத்தேடி எங்கே போவது……