(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பத்துப் பன்னிரண்டு வயது வரைக்கும் இளைப்பு வந்து கொண்டி ருந்தது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரும். முக்கியவாறும் அம்மாசியை இழுத்துக்கொண்டு அல்லது தள்ளிக் கொண்டு. உயிரை வான வெளியில் தேடுவதைப் போல மூச்சிரைக்கும். ஏழெட்டு எலிக் குஞ்சுகள் சேர்ந்தாற்போல நூதனமான ஒலிக் கலவை. சாப்பிட்டுச் சிவனே என்று படுக்க ஒட்டாது. நட்டக்குத்தற உட்கார்ந்தோ சற்றுச் சாய்ந்தோ இருந்தால் ஆசுவாசமாக இருக்கும். வீட்டுப் புறவாசலில் இருக்கும் ஆற்றங்கரைக்குப் போனால் இரண்டு முறை நின்று தளர்ச்சி ஆற்றிக்கொள்ள வேண்டும். ஒருநாள், கைத்தடி கிடைத்தால் நல்லது என்று பேசியபோது சித்தி அடிக்க வந்துவிட்டாள்.
ஒன்றரை வயது முதல் வருகிறதாம். மண்டை முற்றினால் தானாகச் சரியாகிவிடும் என்று அம்மா சொன்னாள். மண்டை எத்தனை வயதில் முற்றும் என்று கேட்கத் தோன்றவில்லை. நடு முடுக்கு பொன்னம்மை அக்காளுக்கு அம்மாவைவிட இரண்டு வயது தான் குறைவு. அவளுக்கு ஏன் இன்னும் மண்டை முற்றவில்லை என்று தெரியவில்லை. சில சமயம் சுவரைப்பிடித்தபடி, குறுமூச்சு வாங்கி, விலா ஒடுங்க அவள் நடப்பதைக் காண ஈரற்குலை பதறும். இந்தக்கூறில் அவளும் பிள்ளைகுட்டிகளுக்குப் பொங்கிப்போட்டு, மாமனார்மாமியாருக்குப் பண்டுவம் பார்த்து, துணி துவைத்து, பாத்திரம் கழுவி, ரைஸ் மில்லுக்குப் போய்ப் புழுங்கல் குத்தி, வயலுக்குக் களை பறிக்கப் போய்…
பொன்னம்மக்காளை நினைத்தால் பயம் பிய்த்துக்கொண்டு வரும். ஒரேயொரு அனுகூலம், இளைப்பு வரும் நாட்களில் சுடுகஞ்சி வைத்துத் தருவாள் அம்மா. ஒன்றிரண்டு நாட்கள் பள்ளிக்கூடம் முடங்கும்.
மூன்று வயதிருக்கும்போது ஒருநாள், “கீறுபூறுண்ணு இளுத்துக் கிட்டு முழி பிதுங்கி பய ஒரு மாரியாவாறான்!” என்று கோபாலவிள்ளை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கொண்டு போன கதையை இன்னும் சொல் வாள். ”ஒரு ஊசி போட்ட பொறவுதான் சரியாச்சு… திரும்பி வாற வழி யிலே ஒண்ணரை அணாவுக்கு ஒரு பெரிய ஒட்டு மாம்பழம் வாங்கி வாழை இலையிலே துண்டு போட்டுத் தந்தாம் பாரு… நீ திண்ணு நா திண்ணுன்னு ஆயிப்போச்சு!” என்பாள்.
இளைப்பு வந்தவுடன் தெற்குத் தெரு வைத்தியனார் பாட்டாவிடம் கூட்டிக்கொண்டு போனாள் அம்மா. வைத்தியனாருக்குப் பிள்ளைகள் கிடையாது. புராணக் கதாபாத்திரம்போல இருந்தார். காதில் வெள்ளைக் கல் கடுக்கன், முன்தலை சிரைத்த குடுமி, வெள்ளை உடம்பெல்லாம் வெள்ளை ரோமம், சிறிய தொந்திக்கு மேல் கட்டிய அகலக்கரை வேட்டி, தோளில் துவர்த்து, மூக்குப் பொடி வாசம் வீசும் மீசையற்ற முகம், கைத்தடி, மருந்துப் பெட்டி… கொண்டுபோன ஆறவுன்சு குப்பியில் ‘முள்ளெலித் தைலம்’ என்று ஒரு சொந்தத் தயாரிப்பை நான்கு அவுன்ஸ் ஊற்றிக் கொடுத்தார்.
இளைப்பாவது பரவாயில்லை. அந்த முள்ளெலித் தைலம் ஒரு மோசமான விஷயம். தெலுங்கு டப்பிங் படம் ஒன்றில் பெரிய சீனிச்சட்டி யில் நாலைந்து குழந்தைகளைப் போட்டு எண்ணெய் இறக்கிக் கொண்டி ருந்ததைப் பார்த்ததுபோல் ஒரு குமட்டல்.
வீட்டுக்கு வந்து புறவாசல் மணலில் பூத்து வைத்திருந்த இஞ்சிக் கொத்து ஒன்றை எடுத்து, கழுவி, வெள்ளைப் பூண்டுடன் சேர்த்து அரைப்பாள் அம்மா. வீடெல்லாம் ‘பிள்ளை பெத்த மணம்.’ கொத்த மல்லித்துகையல்போல் அரைத்து உருட்டியதைத் தண்ணீரில் நன்றாய்க் கரைத்து, கிழிந்த வேட்டியின் துணி வைத்து வடிகட்டுவாள். ஆழாக்குப் போல் இருக்கும். அதன் மேல் முள்ளெலித் தைலத்தில் அரை அவுன்ஸ். இஞ்சிச் சாற்றின் மீது கரும்பச்சை நிறத்தில் தைலம் அடர்வாகப் பரவி நிற்கையில் பார்த்தால் கொடுங்கோன்மை போலத் தோன்றும்.
வேண்டாம் என்றால் யார் கேட்டார்கள். “குடிச்சிரு மக்கா! கண்ணை மூடிக்கிட்டு ஒரு மடக்கிலே குடிச்சிரு. இன்னா கருப்பட்டித் துண்டை கையிலே வச்சுக்கோ. குடிச்சு முடிஞ்சதும் வாயிலே போட்டிரு…”
இடது கையில் ஒரு குத்து அவல் அல்லது துண்டுக் கருப்பட்டி தயாராக வைத்துக்கொண்டு, மடக்கென்று, ஒரு மடக்கில் தீருமாசனியன், விழுங்கி முடிக்கையில் முகம் எத்திசை எல்லாம் கோணும் என்று சொல்லிவிடமுடியாது. அதுதான் போகட்டும் என்றால் முதல்முறையாக வெளிவரும் ஏப்பத்தைத் தாண்டுமுன் அது எப்பம் வந்து தொலைக்கும் என்ற எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு.
பொன்னமக்காளின் இளைப்பு முள்ளெலித் தைலத்துக்கும் கட்டுப் படவில்லை. அவள் வீட்டுக்காரன் ஒரு சின்ன நாட்டு வைத்தியக் குஞ்சு. பல நோய்களுக்கு கடைசியாகப் பிரயோகித்துப் பார்க்கும் மருந்து ஒன்று உண்டு. ‘ஓந்தான் இருக்குல்லா ஓந்தான், அதைப் பிடிச்சுக்கிட்டு வந்து உரல்ல போட்டு நல்ல சதைச்சு கசாயம் போட்டுக் குடுத்தா சரியாகிப் போகும்’ என்பது.
”பொன்னம்மை கொஞ்சம்ணாலும் நடமாடித் திரியாண்ணா அதுக்கு காரணம் ஓந்தான் கசாயம் தான். இல்லேண்ணா இதுக்குள்ளே கண்ட மூட்டுக்குப் போயிருப்பா!” என்பான்.
கண்டமூட்டுக் கரையில்தான் வேளாளர்களுக்கான சுடுகாடு புன்னைமரக் கூட்டத்தின் நடுவில் இருந்தது.
முள்ளெலித் தைலம் குடிக்காமல் முரண்டு பிடித்தால் அம்மா மிரட்டுவது, “இல்லேண்ணா ஓந்தான் கசாயம் குடி.”
வேலிகளில் ஓடித்திரியும் ஒன்றுமறியா ஓணான்களைப் பிடித்து, கழுத்தில் கயிறு மாட்டி, நீள் முக்கோணக் கல்லைச் சுடலையாய் நட்டு, எருக்கலம் பூ மாலை சாத்தி, வாயினால் ‘ஜஞ்சணக்கு, ஜஞ்சணக்கு’ அடித்து, வானத்துக்கும் பூமிக்குமாய் பீப்பீ ஊதி, ஓணானின் தலையில் வரிசையாய் எல்லோரும் சிறுநீர் தெளித்து, கூரான வெட்டாங்கல்லால் பலி செய்து, கொடை கழித்து விளையாடியதைப் பழி வாங்குதல் போலப் பயமுறுத்தியது ஒந்தான் கசாயம்.
எனவே எப்போது தென்பட்டாலும் முள்ளெலித் தைலத்தின் பீதி கிளப்புகிற முகமாக இருந்தது வைத்தியனார் பாட்டாவின் முகம்.
பெரும்பாலும் காலையில் குளித்து ஈர உடையுடன் கைத்தடி ஊன்றி ஒரு பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்து வருவார்.
வெயில் சாய்ந்த பிறகு கையில் வேருடன் பிடுங்கிய செடிகள் காணும்; மரப்பட்டைகள் காணும்; பச்சிலைகள் காணும். சில சமயம் குறுந்தட்டி, சித்திரப்பாலை, கீழா நெல்லி, நாயுருவி ஆடாதோடை, கருநொச்சி என்று ஏதாவது தேடிக் கொண்டிருப்பார்.
எல்லோருடனும் கலகலப்பாய்ப் பேசிப்புழங்கும் மனிதர் அல்ல. சிடுமூஞ்சியும் அல்ல. யாராவது எதையாவது கேட்டால் மட்டும் மலரும் முகம். ஆனால் பேச்சில் எப்போதும் ஒரு கறார்த்தனம்.
பரம்பரை பரம்பரையாய் அந்த ஊரில் வாழ்ந்த குடும்பம் அல்ல. ஆரல்வாய் மொழிக் கோட்டைக்குக் கிழக்கே தாமிரபரணியின் விரல்கள் நீள முடியாத வறண்டு கறண்ட பூமியில் இருந்து பண்டே புறப்பட்டு வந்தவராக இருக்க வேண்டும்.
ஊரில் சமுதாயக் கோயிலில் அவருக்கு வரி உண்டு. ஆனால் உறவென்று வேறு யாரும் காணக் கிடைத்தது இல்லை.
அவர் பாலித்து வந்தது சித்த வைத்தியமா ஆயுர்வேதமா என்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை.
மிகவும் பத்தியம் காப்பது போல் ஒதுக்கம். கல்யாண வீடுகளில், சடங்கு வீடுகளில், இழவு அடியந்திர வீடுகளில் அவரைக் காண முடியாது. சாவுக்கு போய் வந்தால் மூன்று நாட்கள் தீட்டு. மருந்து எதுவும் செய்யக்கூடாது.
ஒரு தொழில் போல் அதைச் செய்ததாகத் தெரியவில்லை. மருந்துக்குப் பகரமாய் எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். அது சக்கரமாக இருந்தாலும் சரி, காய்கறிகளாக இருந்தாலும் சரி, குறுணி அல்லது பதக்கு நெல்லாக இருந்தாலும் சரி.
வேறேதும் வருமானம் கிடையாது. வயதாகி, நடை தள்ளம்பாட ஆரம்பித்த பின்பு வைத்தியனாருக்குத் துணையாக அவர் மனைவியும் உடன் போனாள். வெயிலுக்கு முன் புறப்பட்டுப் பக்கத்து ஊர்களுக்கு நடந்து போய்த் திரும்புகையில் வெயில் சாயத் தலைப்பட்டிருக்கும். மாலையில் மூலிகைகள் சேகரம், அரைத்தல், காய்ச்சுதல். சில சமயம் வெட்டு மருந்து வாங்க வடசேரிக்குப் போய்த் திரும்புவார்.
இளைப்பு வருவது எப்போது நின்றுபோனது என்று நினைவில் இல்லை. ஆனால் சுவடற்று நின்று போனது. உண்மையில் மண்டை முற்றிவிட்டதா அல்லது வைத்தியனார் பாட்டாவின் முள்ளெலித் தைல மகிமையா என்று தெரியவில்லை.
பின்னாளில் ஊரில் நோய்கள் குறையாவிட்டாலும் நாட்டு மருந்துக்கு மவுசு குறைந்து போனது.
முதுமை வைத்தியனாரின் கண் பார்வையை மங்கச் செய்தது. வறுமை, சுவற்று மூலைக்கு நெருக்கி, இளக்காரத்துடன் முன்னங்காலால் எற்றியது.
யாரிடமும் கடன் கேட்டு, இரந்து கையேந்தும் சீவன்கள் இல்லை. விற்பதற்கென்று தாலிக்கொடியும் பாம்படமும் போனபின் வேறு எதுவும் இல்லை. குடி இருந்தது வாடகை இல்லா ஊர்வகை வீடு.
எண்பத்து நான்கு வயதுப் பாட்டாவும் ஆச்சியும் ஒரு நாள் காலையில் கடும் பாஷாணம் தின்று இறந்து கிடந்தனர்.
அதன் பிறகு அந்தப் பக்கம் யாரும் முள்ளெலித் தைலம் குடித்திருக்க மாட்டார்கள்.
– நிகழ், 1994.
நன்றி: https://nanjilnadan.com/2011/07/09/முள்ளெலித்தைலம்/