கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 12,042 
 

சரவணன் சீமான் வீட்டுப் பிள்ளை. சிறுவயசிலிருந்தே ஜாலியாக இருந்து பழகி விட்டான். அதே சமயம் படிப்பில் ஸ்கூல் பஸ்ட்.

அதனால் பெற்றோர் அவன் விஷயத்தில் அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் அவன் இஷ்டப்படி விட்டு விட்டார்கள்! பிளஸ் டூ முடித்தவுடன் அவன் விருப்படி சென்னை பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கொள்ள பெற்றோர் தடை சொல்லவில்லை!

பி.இ. முடித்தவுடன் எம்..பி.ஏ. படிப்பையும் சென்னையிலேயே அவன் தொடர்ந்தான். .சரவணனின் அப்பா மோகன சுந்தரமும் அதைத் தான் எதிர் பார்த்தார்.

மோகன சுந்தரத்தின் மோட்டர் பம்ப் செட் தயாரிப்பு நிறுவனம் கோவையில் செயல் பட்டாலும், அவர்கள் வியாபாரத் தொடர்பு பல நாடுகளில் பரவியிருந்தது.

தனக்கு பிறகு தன் கம்பெனியை நிர்வகிக்க சரவணனுக்கு மெக்கானிக்கல் இன்ஜினீரிங் பட்டமும், எம்.பி.ஏ. பட்டமும் தேவை என அவர் ஆசைப் பட்டார். அவருக்கு எந்த சிரமமும் கொடுக்காமல் அவர் ஆசைப் பட்ட படிப்புகளை சுலபமாக முடித்து விட்டு, கோவை வந்த தன் மகனைப் பார்த்து பூரித்துப் போனார் மோகன சுந்தரம்.

காதல் மன்னன் திரைப் படத்தில் வரும் அஜீத் போல் இருந்த சரவணனுக்கு அவன் தாய் திருஷ்டி சுற்றிப் போட்டாள். சரவணன் இப்பொழுதெல்லாம் பொறுமையாகவும், அதிகம் பேசாமல் அடக்கமாகவும் இருந்தான்.

“ சரவணா!…நம் சொந்தமெல்லாம் உன் கல்யாண விஷயமாக தொந்தரவு செய்யறாங்க!…..உனக்கும் படிப்பு முடிந்து விட்டது!…நாலைந்து இடங்களில் போய் பெண் பார்க்கலாம்!…உனக்கு எந்த பெண்ணைப் பிடிக்கிறதோ அதையே முடிவு செய்திடலாம்!..”என்று ஒரு நாள் அவன் கல்யாணப் பேச்சை எடுத்தார் அப்பா மோகன சுந்தரம்.

“ சரிங்கப்பா!…ஒரு சின்ன விஷயம் அதை என் கல்யாணத்திற்கு முன்பே நீங்க சரி செய்து கொடுத்திட்டா….எனக்கு நிம்மதியா இருக்கும்!…”

“ உனக்கு செய்யாம வேறு யாருக்கடா செய்யப் போறோம்!…… சொல்லு உடனே செய்திடறேன்!..”

“அப்பா!… நான் பி.இ. படிக்கும் பொழுது கூடப் படித்த வந்தனாவும், நானும் காதலித்தோம்!.. இரண்டு வீட்டிலும் சம்மதம் கிடைக்காது என்று நினைத்துக் கொண்டு இருவரும் முன் ஜாக்கிரதையா பதிவு திருமணம் செய்து கொண்டோம்!…கொஞ்ச நாளிலேயே எங்கள் இருவருக்கும் ஒத்துப் போக வில்லை!..அதனால் நாங்களே ஒருவரை விட்டு ஒருவர் விலகி விட்டோம்!… அவள் பி.இ. முடித்தவுடன் பம்பாயில் ஒரு வேலை கிடைத்துப் போய் விட்டாள்!..எங்களுக்குள் இப்ப எந்த தொடர்பும் இல்லை!..இருந்தாலும் எதிர் காலத்தில் சட்டச் சிக்கல் வர கூடாது…இல்லையா? ..அவள் முகவரி இருக்கு!….நீங்க ஒருமுறை பாம்பே போய் விபரம் சொல்லி ‘டைவர்ஸ்’க்கு அனுமதி வாங்கிட்டு வந்திடுங்க!…நாம எதையும் முறையா செய்திடலாம்!…”

மோகன சுந்தரத்திற்கு கிடைத்த இந்த வேலை இதுவரை வேறு எந்த பெற்ற தந்தைக்கும் கிடைக்காத புத்தம் புதுசு!

– குங்குமம் 8-2-2016 இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *