(1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஊரே அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது. எங்கும் அதே பேச்சு! இரண்டு பேர் கூடினாலும் திரும்பத் திரும்ப அதையே பேசிக் கொண்டிருந்தனர். குறிப்பாக அவ்வூரில் அது பரப்பரப்பான செய்தியாக இருந்தது.
“கரீம் காக்கா….. இதற்கு நல்லதொரு முடிவு காண வேணும்….. எங்கள் ஊரில் என்றுமே நடக்காததல்லவா நடந்திருக்கிறது…..” என்றவாறே செயின் நாநா அடுத்த வீட்டுக் கரீம் காக்காவிடம் அன்றைய உள்ளூர் செய்தியைக் கூறுகிறார்.
“உண்மைதான்….. செயின் நாநா, எவ்வளவு பெரிய கேவலம் என்று பாருங்க…..” என அலுத்துக் கொள்கிறார் அவர்.
“இந்நேரம்…. நீங்க இரண்டு பேரும் எதைப்பற்றி இப்படி காரசாரமாகப் பேசிக் கொண்டிருக்கிறீங்க…?” என்று கேட்டபடி அத்தர் பாஷா அவ்விடம் வருகிறார்.
“வாங்க…. வாங்க…. உங்களுக்குத் தெரியாதா செய்தி? அந்த ஹாமித் நாநாவின் மகள் சரீனாவுக்கு மூனுமாசமாம்.”
ஆ… அப்படியா செய்தி! ஊரில் நடக்காத செய்தி…. சே…. சே…. குமரிப் பிள்ள புள்ள உண்டாகியிருக்கிறாள்…. சீரழிவு….. சரி…. யாரு ஆள்…?
“அந்த மொம்ம லெப்பையின் மகன் சனூன்…. அவன் தான் பொடியன்….
அது மட்டுமல்ல; நேற்று ராத்திரி விஷயம் வெட்ட வெளிச்சமாகி விட்டது. உடனடியாக லெப்பையும், ஹாஜியாரும் வந்து காவினையும் எழுதிட்டாங்க” என இடைமறித்த கரீம் காக்கா பேசினார்.
“இது அதைவிடப் பெரிய பஸாது. இந்த லெப்பையும், ஹாஜியாரும் சல்லி எங்கே என்று வாயைத் திறந்து பார்த்துக் கொண்டு இருப்பாங்க; கிடைத்த இடத்தில் கள்ளக் காவின் எழுதுவாங்க…. இவங்களுக்கு நல்லதொரு பாடம் படிச்சிக் காட்டனும்….. என்கிறார் அத்தர் பாஷா.
“அதைப்பற்றித்தான் நானும் பேச வந்தன், 1 கட்டாயம் முடிவு தேடணும். இதற்கு நல்லஆள் சுபைர் மரிக்கார். அவரைப் பார்த்துப் பேசி…. பள்ளிக்கு ஒரு முறைப்பாடு போடுவோம். இந்த விஷயத்தை இப்பவே செய்திட வேணும்…. இந்தப் பஸாதுகளப் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.”
‘ஓ…. இப்பவே செய்திட்டாப் போச்சு….. வாங்க, சுபைர் மரிக்கார் வீட்டுக்குப் போவோம்.”
“எனக்கு வீட்டிலே கொஞ்சம் அவசர வேலை. இன்றிரவே முடித்திட வேண்டும். நீங்க இரண்டு பேரும் போங்க….. நான் வாரன் என செயின் நாநா வழி விட்டுப் போய்விடுகிறார்.
“அப்படியா…. சரி… இப்பவே போவோம்.” கரீம் காக்காவும், அத்தர் பாஷாவும், சுபைர் மரிக்கார் இல்லம் நோக்கி ஏகுகின்றனர்.
“வாங்க…. வாங்க….. நான் கேள்விப்பட்ட செய்தி உண்மைதானா….?” என்று கேட்டவாறே சுபைர் மரிக்கார் அவர்களை வரவேற்கிறார்.
“அதைப் பற்றிப் பேசவே நாங்கள் வந்தோம்….
“பாருங்க மரிக்கார்….. இப்படியான பஸாதுகளைப் பார்த்துக்கொண்டு நாங்க ஏன் இருக்க வேணும்? இப்பவே பள்ளியில் முறைப்பாடு போட வேணும். அதற்காக வந்தோம்.”
“நான்…. அறியாப் பூச்சி. எனக்கு எழுதத் தெரியாது. நீங்களே ஒரு முடிவிற்கு வாங்க.
“அப்படித்தான் மரிக்கார்….. நீங்களே ஒரு முடிவிற்கு வாங்க……”
“அப்படியென்றா… இப்படி எழுதுவோம்….”
“எப்படி…?
“கனம் கதீப் கலீபா ரெஸ்டி அவர்களுக்கு, ஹாமித் நாநாவின் மகளாலும், மொம்மலெப்பையின் மகனாலும் எங்கள் ஊரில் நடக்கக் கூடாத பஸாது நடந்துவிட்டது. இவர்களைப் பற்றி நடவடிக்கை எடுத்து பள்ளியிலிருந்து விலக்கி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் ரிஜிஸ்டர் ஹாஜியாரையும், பள்ளி லெப்பையையும் கள்ளக் காவின் எழுதியுள்ள படியால் பள்ளியிலிருந்து நீக்கி வைக்கும்படி வேண்டிக் கொள்கிறோம்.”
“ஆஹா….. பேஷ்…. அத்துடன் இவர்களை ஊரிலிருந்து வேறாக வைக்கும்படி எழுத வேண்டும்.”
மூவரும் சேர்ந்து குற்றப் பத்திரிக்கையைத் தயாரிக்கின்றனர். –
அடுத்த நாள்…..விடிந்ததும் விடியாமலும் பள்ளிவாசல் டிரஸ்டியின் வீட்டின் முன் மூவரும் நிற்கின்றனர்.
டிரஸ்டி புன்சிரிப்புடன் ஸலாம் கூறி அவர்களை வரவேற்கிறார். டிரஸ்டி ம.’மூத் அவ்வூரில் தனித்தன்மையான தலைவர். மார்க்கக் கல்வி படித்த மௌலவி மட்டுமல்ல; ஒரு பட்டதாரியும் கூட. பலமுறை தீனின் வழியில் மக்கா யாத்திரை சென்றவர். எல்லாருக்கும் உண்மை வழி கூறி நேர்மை வழி நடப்பதனால் அவ்வூர் மக்கள் அவரை டிரஸ்டியாக மட்டுமன்றி… கலீபாவாகவும் நியமித்துக் கொண்டனர். மார்க்கத் தீர்ப்புக் கூறுவதில் அவருக்கு நிகர் அவரேதான். – எனவே தன்னிடம் முறைப்பாட்டுக்கு வந்துள்ள பிரச்சினையை அவர் கூர்ந்து கவனித்தார். கy 2
“சுபைர் மரிக்கார், கரீம் காக்க, அத்தர் பாஷா, நீங்கள் மூவரும் கொண்டு வந்துள்ள இந்த முறைப்பாடு நல்லதுதான். உங்கள் முறையீட்டைக் கொண்டு எனக்கு மட்டும் தக்க பதில் தரமுடியாது. பரிபாலனக் கமிட்டியிடம் சமர்ப்பித்து, இன்னும் உலமாக்களைக் கூட்டி
ஆலோசித்து பகிரங்கத் தீர்ப்பு அளிக்கிறேன். அதற்கு முன் தனிப்பட்ட முறையில் உங்களிடம் கேள்விகள் கேட்க வேண்டும்.
“கேளுங்கள் ஹாஜியார்… கேளுங்கள்…..”
“கேட்கத்தான் போகிறேன்…. ஆனால் நீங்கள் ஒருவரும் மன வருத்தமோ, கோபமோ படக்கூடாது. ஏனெனில் சமூகப் பிரச்சினைகளை ஆராயச் சொல்லும் நீங்களும் சமூகத்தின் அங்கம்தானே? உங்களிடமும் சிறு குறைபாடுகள் இருக்கலாம் அல்லவா…..?”
“வாஸ்தவம்தான்….. நிச்சயமாக நாங்கள் கோபப்பட மாட்டோம். நீங்கள் எதைக் கேட்டாலும் பதில் தருவோம்.” என்றனர் ஒரேயடியாக மூவரும்….
“மரிக்கார். மைமூனா உங்களுடைய யார்?”
டிரஸ்டியின் இக்கேள்வி சுபைர் மரிக்காரை திகைப்பில் ஆழ்த்துகிறது. அமைதியாக “என் சகோதரி…..” என்கிறார்.
“அப்படியா….. அவளுக்கு நீங்கள் சிறப்பாக, சீரும் சிறப்புடன் திருமணம் செய்து வைத்தீர்கள். இரண்டு மூன்று குழந்தைக்கு தாயாகிய பிறகு அவள் இன்னொருவருடன் சிநேகிதமாகி கட்டிய கணவனைப் புறக்கணித்து விட்டு ஓடிப்போனாளல்லவா? இப்பொழுது திரும்ப இந்த ஊருக்கே வந்து வாழ்கிறாள். ஓடிப்போன இரண்டாம் கணவனும் தலாக் கூறிவிட்டான். சரிதானே…”
“தலாக் கூறிய அவனும் வேறொரு பெண்ணை நிக்காஹ் செய்துகொண்டான். ஆனால் அவன் ஏன் உங்கள் தங்கை வீட்டுக்கு இப்பொழுதும் வரவேண்டும்?”
கபைர் மரிக்கார் மௌனம் சாதிக்கிறார்.
“கரீம் காக்கா…சுபைர் மரிக்காரின் தங்கச்சியுடன் ஓடிப்போன நிலாம் உங்கள் யாரு…’
“என்…. நாநா….
“அப்படியானால் இதுவும் பெரிய பஸாதல்லவா? இவைகளுக்கும் சேர்த்து நடவடிக்கை எடுத்திருக்கலாமே….!”
அவரும் மௌனம் சாதிக்கிறார்.
“அத்தர் பாஷா, உங்களைப் பற்றியும் இப்படி நான் கூறுகிறேன் என மனமழிய வேண்டாம். நீங்கள் வட்டிக்கு பணம் கொடுப்பதாக கேள்வி….!”
“இல்லை….ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டு பணம் கொடுக்கிறேன்….. இது வட்டியல்ல; ஆதாயம்…” என இழுத்தவாறே அசடாகச் சிரித்தபடி கூறுகிறார்.
“அப்படியா…. சரி… நீங்கள் சாராய தவரணை, ரேஸ்-புக்கி வைத்து நடத்துகிறீர்களே… இதற்கு என்ன சொல்கிறீர்கள்? நீதியின் சன்னிதானத்தில் எல்லோரும் சமம். இளைத்தவன் வலுத்தவன் என்ற பாகுபாடு கிடையாது. உங்களுக்கொரு நீதி, ஊருக்கொரு நீதியா?”
அத்தர் பாஷா திடுக்கிட்டு, செயலற்று நிற்கிறார். அவர்களுள் நீண்ட அமைதி குடிகொண்டது. – மனச்சாட்சி ஆவேசத்தோடு அவர்களை சாடிக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக மூவரினதும் அரை டஜன் கண்களும் தாழ்ந்து விட்டன. இருண்ட முகத்துடன் எழுந்து நின்ற அவர்கள் மௌனமாக வெளியேறுகின்றனர். டிரஸ்டியின் கையில் முறையீட்டுக் காகிதம் ஆடிக்கொண்டிருந்தது.
– இன்ஸான் -1968. செப்டம்பர், மூன்றாம் தலாக் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மே 2007, முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம், பாணந்துறை.