முறைப் பையன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 3, 2024
பார்வையிட்டோர்: 1,432 
 
 

(கதை நிகழும் காலம் – இந்தியா  – ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த காலகட்டம் – 1940 ஆம் ஆண்டு )

சேலம் அருகே உள்ள விஜயபுரி ஜமீன் அரண்மணை மாடியறையில் மதிய நேரத்தில் இரண்டு பதின் பருவப் பெண்கள், தங்களுக்குள் பேசிக் கொண்டே தாயம் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்கள் – வசந்தாவும் சாந்தாவும். வசந்தா, ஜமீன்தார் விஜயகுமாரன் – சுசீலா தேவி தம்பதியின் மகள். மற்றொரு வளர் இளம் பெண் சாந்தா , சுசீலா தேவியின் சிநேகிதி ஷீலாவின் மகள். சாந்தாவும் அவளுடைய அன்னையும் இந்த ஜமீன் அரண்மணைக்கு வந்து வசிக்க நேரிட்டது ஒரு தனிக் கதை.

சாந்தாவின் தாய் ஷீலா, சேலத்தில் இருந்த  பரம்பரை செல்வந்தரான ராஜசேகரனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அவளுடைய  கணவன் பணம் ஈட்டுவதில் நாட்டம்  காட்டாமல் முன்னோர் கொடுத்து வைத்த செல்வத்தை ஊதாரித்தனமாக உட்கார்ந்து  செலவழித்து வந்தான். ஷீலா , பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். பெண் குழந்தை பிறந்திருப்பதால்  திருந்துவான் என்று பார்த்தால் திருந்தவில்லை. அவளுடைய குழந்தை சாந்தா பிறந்த நான்கைந்து ஆண்டுகளில் அவனது சூதாட்டம் போன்ற தீய ஒழுக்கத்தால்  பெரிய கடனாளியாகி விட்டான். கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி தாங்காமல்,  நம்பி வந்த மனைவியையும்  பெற்ற குழந்தையையும் நட்டாற்றில் தவிக்க விட்டு அவன் தலைமறைவாகி விட்டான். கணவன் வாங்கிய கடன்களால் வீடு வாசல் , ஆஸ்தி எல்லாவற்றையும் இழந்த ஷீலா , அரிச்சந்திர மகாராஜா , திடீரென ஏழையானது போல் , நடுத் தெருவுக்கு வந்து விட்டாள். அக்கம் பக்கத்து ஜனங்கள் , இவள் மீது இரக்கப்பட்டு அமைத்துக் கொடுத்த ஜாகையில் இருந்து கொண்டு , அந்தப் பகுதியில் உள்ள  சிறுவர் சிறுமிகளுக்கு அரிச்சுவடியும் எண்ணும் எழுத்தும் கற்றுக் கொடுத்து ஜனங்கள் கொடுக்கும் காணிக்கையைக் கொண்டு கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தாள் .  இளமைக் காலத்தில் நடன வகுப்பு மூலம் இவளுக்கு சிநேகிதியான ஜமீன்தாரின்  மனைவி சுசீலா தேவி , இவளுடைய நிலைமையைப் பற்றிக் கேள்விப்பட்டு , நேரில் வந்து சந்தித்தாள். ஆதரவு அளிக்க முன் வந்தாள்.  இங்கு செய்யும் ஆசிரியை பணியை ஜமீன் பணியாளர்களுக்காவும்  ஜமீன் பகுதியில் வசிக்கும் ஜனங்களின் பிள்ளைகளுக்காகவும் செய்யும்படி கேட்டுக் கொண்டாள். ஜமீன் அரண்மணையின் பின்பக்கத்தில் உள்ள சிறிய வீட்டில்  தங்கிக் கொள்ளலாம் என்றாள். ஊர் மக்களும் ஜமீன்தார் அம்மா சொல்வதை ஏற்கும்படி அவளைக் கேட்டுக்கொண்டனர்.  இப்படித்தான் சிறுமியான சாந்தாவுடன் விஜயபுரி ஜமீன் அரண்மணைக்குள் வந்தாள் ஷீலா. சிநேகிதியின் கணவர் தவறான பார்வை பார்க்காதவராக இருந்த தால் , நல்ல காலம் வரும் வரை இங்கு இருக்கலாம் என்று இருந்தாள் ஷீலா. ஜமீன் அரண்மணைக்கு அருகில் உள்ள சிறிய பாடசாலையில் , வருகிற சிறுவர் சிறுமிகளுக்கும் பணியாளர்களுக்கும் எண்ணும் எழுத்தும் இலக்கியப் பாடல்களும் போதித்து வந்தாள்.

வசந்தாவும் சாந்தாவும் ஒன்றாக  இருப்பார்கள் . இருந்தாலும்   பல  சமயங்களில் வசந்தா, சாந்தாவிடம் எங்களால் தான்  நீங்கள் இருக்கிறீர்கள் என்பது போல் குத்தலாகப் பேசி  மனம் நோகச் செய்து  விடுவாள். புத்திக் கூர்மையும் கருத்தும்  பொறுப்பும் உள்ள சாந்தா , அம்மாவின் நிலையை எண்ணி சண்டை போடாமல் அமைதியாக இருந்து விடுவாள்.

வசந்தா என்று அவளுடைய தாய் கீழே இருந்து குரல் கொடுக்க, இரண்டு வளர் இளம் பெண்களும்  ஆட்டத்தை முடித்துக் கொண்டு கீழே சென்றனர்.

மறு நாள் காலை. வசந்தா பூக்கூடையுடன் தோட்டத்தில் பூ பறிக்க வந்தவள் , சாந்தாவின்  வீட்டுக்கு வந்தாள். சாந்தாவின் காதில் அணிந்திருந்த ஜிமிக்கி அவளுடைய முக அழகை கூட்டியதாக வசந்தா நினைத்தாள். ‘இது எங்கள் அம்மா கொடுத்த ஆபரணம் தானே’ என்றாள். சாந்தா தலையை அசைக்க , வசந்தா, ‘உனக்கு என்று சொந்தமான பொருள் ஏதாவது எனக்கு  கொடுப்பாயா, கொடுக்க முடியுமா?‘ என்று கேட்டாள். சாந்தா இப்போது வாயை மூடிக்  கொண்டு  அமைதியாக  இல்லாமல் ‘யார் கண்டது அப்படி ஒரு நிலை வந்தாலும் வரலாம்’ என்றாள். ‘என்ன’ என்று வசந்தா அதிர்ந்த போது, தாயின் கண்ஜாடையைப் புரிந்து கொண்டு ‘அப்படி ஒரு வசதி சந்தர்ப்பம் வாய்த்தால் செய்வேன்  செய்வதில் மகிழ்ச்சி அடைவேன் என்று சொல்ல வந்தேன்’ என்றாள் சாந்தா . வசந்தா  இவளுடைய  பதிலைக் காதில் வாங்கிக் கொள்ளாதது போல் அங்கிருந்து  வெளியே சென்றாள்.

சில நாட்கள் கழித்து பட்டினத்திலிருந்து சேலத்திற்கு வர்த்தகம்  புரிய வந்திருந்த பார்த்திபன் என்ற செல்வந்தருடன் ஜமீன்தார் நட்பு ஏற்படுத்திக் கொண்டார். குறுகிய காலத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். பார்த்திபனின் மகன் இளைஞன் சுகுமாரன், ஜமீன்தாரின் மனத்தைக் கவர்ந்தான்.  காலம் தாழ்த்த வேண்டாம் என்று நினைத்த ஜமீன்தார், தன் மகள் வசந்தாவுக்கு சுகுமாரனை மணம் முடிக்க பார்த்திபனுடன் பேசினார். அப்பாவும் மகனும் பெண்ணைப் பார்க்காமல் இசைவு தெரிவித்தனர். காதும் காதும் வைத்தாற் போல், இரு தரப்பு உறவினர்களுக்கு எல்லாம் தெரிவிக்காமல் , பார்த்திபனிடம்  கணக்குப் பிள்ளையாகப் பணிபுரியும் பெரியவர் புருஷாத்தமன் முன்னிலையில்  ஒரு நல்ல நாளில் இரு வீட்டாரும் நிச்சய தட்டு மாற்றிக் கொண்டனர். அது முதல் சுகுமாரன், வில் வண்டியில் , மாலை நேரங்களில் ஜமீன் அரண்மணைக்கு வந்து ஜமீன்தார்  தம்பதியினரையும் வசந்தாவையும் பார்த்துப் பேசி விட்டுச் செல்வதை  வாடிக்கையாக கொண்டிருந்தான். அவன் வரும் வேளைகளில் சாந்தாவும் அவளுடைய அம்மாவும் வசந்தாவின் வருங்கால மாப்பிள்ளையின் கண்களில் படுவதைத் தவிர்க்க மாலை நேரங்களில் கோயிலுக்குச் சென்று விடுவார்கள் .

ஒரு நாள் காலை நேரம். வசந்தாவின் அப்பாவும் அம்மாவும் உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் சென்று இருந்தனர். மாளிகையே அமைதியாக இருந்தது.

மாடியறையில் இருந்த வசந்தாவின் காதுகளில்  திடீர் என தோட்டத்து வீட்டிலிருந்து  இளம் ஆண் குரல் கேட்டது. இவர்கள் வீட்டுக்கு வந்த ஆண்மகன் யார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் வசந்தா கீழே இறங்கி வந்தாள். சாந்தாவின் வீட்டுக்குள் சென்றாள். அங்கே அவளுடைய வருங்காலக் கணவன் சிறிய ஆசனத்தில் அமர்ந்து மோர் பருகிக் கொண்டிருந்தான்.

வசந்தாவைப் பார்த்து சுகுமாரன் புன்னகை செய்தான். ‘இவர்களை உங்களுக்குத் தெரியுமா?‘ கண்களில் குழப்பத்துடன் கேட்டாள் வசந்தா .

‘நல்ல கேள்வி கேட்டீர்கள் வசந்தா அவர்களே. இவர்கள் எனக்கு நெருங்கிய சொந்தம் . என்ன விட்டுப் போன சொந்தம் என்னைப் பெற்ற தாய் தான் போய் விட்டாளே தாயின் தம்பி என் தாய்மாமன் ராஜசேகரன் என்ற பெரிய மனிதர் இந்த ஊரில் தானே இருந்தார் அவர்களைப் பற்றி தகவல் கண்டுபிடித்துச் சொல்லுங்கள் என்று கணக்குப் பிள்ளை தாத்தாவிடம் கோரிக்கை வைத்திருந்தேன் . அவர் மாமா பற்றி தெரியவில்லை மாமியும் அவரது மகளும் இந்த ஜமீன் அரண்மணையில் தான் இருக்கிறார்கள் என்று சேதி சொன்னார். சேதி அறிந்த உடனே  துள்ளிக் குதித்து இவர்களைப் பார்க்க வந்தேன்.‘ என்று முடித்தான் சுகுமாரன். சாந்தா குறுக்கிட்டாள் ‘இவர் என்னுடைய அத்தைப் பிள்ளை எனக்கே உரிய அத்தான் முறைப் பிள்ளை’ என்று உரக்க கூறினாள். ‘உனக்கு என்று உரியதை எனக்கு கொடுப்பாயா’ என்று  தான் முன்பு பேசியதை மனதில் வைத்துக் கொண்டு சாந்தா பேசுகிறாள் என்பதைப் புரிந்து கொண்ட வசந்தா, முகத்தில் பாவங்களைக் காட்டிக் கொள்ளாமல் ‘அப்பா இப்போது வந்து விடுவார் . மாளிகைக்கு வாருங்கள்’ என்று  சுகுமாரனிடம் கூறி விட்டு அங்கிருந்து விடுவிடுவென வெளியேறினாள் வசந்தா. சாந்தாவின் முகத்தில் அவளுடைய இயல்புக்கு மாறான ஒரு குரூரப் புன்னகை.

குறிப்பு – சவால் என்பதை  அடிநாதமாக கொண்டு சவால் கதைகள் 10 என்ற இந்த சின்னஞ்சிறு புனைகதைகளைப் படைத்துள்ளேன். இந்தப் புனைகதைகளில் , சமூக கதைகளில் விவரிக்கப்படும் சூழல்கள் , பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.

Print Friendly, PDF & Email
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *