கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 10,887 
 
 

“ஸ்… ஆ ஆ!” மெலிதாய் கூவினாள் கவிதா.

ஹாலில் முகச்சவரம் செய்துகொண்டிருந்த ரமேஷ், அவளது குரல் கேட்டு பதட்டமாய்ச் சமையலறைக்கு விரைந்தான்.

“என்ன ஆச்சு கவி?!”

“ஒண்ணுமில்லேப்பா, இட்லி குக்கர் திறக்கும்போது ஆவி கைல பட்டுடுச்சி” விரலை ஊதியவாறே சொன்னாள் கவிதா.

“ஹையோ, என்னம்மா இது, பார்த்து வேலை செய்யக் கூடாதா? இனிமே நீ சமையல் வேலையெல்லாம் செய்ய வேண்டாம். பேசாம ஒரு ஆளைப் போட்டுக்கலாம். முதல்ல கையைக் காட்டு, பர்னால் போட்டு விடறேன். சாயந்திரம் சரியாகலைன்னா டாக்டர் கிட்ட போகலாம். பரபரத்தான் ரமேஷ்.

“என்னங்க இது, சமையலறைல இதெல்லாம் ரொம்பச் சாதாரணம். ஒரு சின்னக் கடுகு சைஸ் கொப்பளம், அதுக்குப் போய் இவ்ளொ ஆர்ப்பாட்டமா? தானே சரியாகிடும். சும்மா இருங்க. யாராவது கேட்டா சிரிக்கப் போறாங்க” தண்ணீர்க்குழாயில் விரலைக் காட்டியவாறே சிரித்தாள் கவிதா.

ரமேஷுக்கும், கவிதாவிற்கும் திருமணமாகி இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. பெற்றோர் பார்த்து வைத்த திருமணம்தான். ஆனால் பார்த்த முதல் கணமே ஒருவரை ஒருவருக்குப் பிடித்துப் போய் இந்த இரண்டு மாதங்களில் உயிருக்குயிராய் ஆகி விட்டார்கள். கவிதாவுக்கு தலைவலி, காய்ச்சல் என்று வந்தால் அவள் அவஸ்தைப் படுகிறாளோ என்னமோ! ரமேஷ் ஆர்ப்பாட்டம் பண்ணி விடுவான்.

ரமேஷின் பெற்றோர் ஊரில் பெரிய மகனிடம் இருக்கிறார்கள். மருமகளை மகள் போலப் பாவிப்பவர்கள். தங்கள் ஒரே பேரன் குமாரை அருமையாகப் பார்த்துக் கொள்வார்கள். சென்னையில் இவர்கள் இருவரும்தான். இருவருமே தனியார் அலுவலகங்களில் பணி புரிகிறார்கள். திருமணமான முதல் வாரத்தில் இருந்தே மாமியாரையும் மாமனாரையும் தங்களுடன் வந்து தங்கி விடுமாறு வற்புறுத்திக் கொண்டே இருக்கிறாள் கவிதா. “இப்போதானே கல்யாணம் ஆகி இருக்கு. கொஞ்ச நாள் போகட்டும். உனக்குத் துணை தேவைப்படற காலத்துல கண்டிப்பா நாங்க வந்துடுவோம்” என்று கூறிச் சிரித்தார் லஷ்மி அம்மாள்.

அவர் கூறிய “துணை தேவைப்படும் காலம்” கூடிய விரைவில் வந்தது. இருவருமாகப் பெண் மருத்துவரிடம் சென்று கர்ப்பத்தை உறுதிப்படுத்திக் கொண்டு வந்ததும் முதல் வேலையாக மாமியாருக்குத்தான் போன் செய்தாள் கவிதா. அவருக்கு மிகவும் சந்தோஷம். “எனக்கு உடனே வந்து உனக்கு வாய்க்கு வகையா செஞ்சி போடணும்னுதான் இருக்கு, ஆனா இங்க குமாருக்கு அம்மை போட்டிருக்கு, ரமேஷோட அண்ணாவுக்கு இந்த நேரம் பார்த்து வெளியூர் போற வேலை வந்துட்டுது, அதனால உடனே வரமுடியாதும்மா, நிலைமை சரியானதும் உடனே புறப்பட்டு வர்றோம்” என்று சற்றே வருத்தத்துடன் கூறினார்.

சொன்னாற்போல் நாற்பது நாட்களில் முகமெல்லாம் பூரிப்புடன் வந்து சேர்ந்தார். அதற்குள் கவிதாவை மசக்கை படுத்தி எடுக்க ஆரம்பித்து விட்டது. முணுக்கென்றால் பதறி விடும் ரமேஷ் இந்த நாற்பது நாட்களில் ஆர்ப்பாட்டம் செய்து விட்டான். மகனைப் பார்த்த லஷ்மி திடுக்கிட்டார்.

“ஏன்டா! உனக்கு என்னடா ஆச்சு? உடம்பு சரியில்லேன்னா சொல்லக் கூடாதா? அப்பாவையாவது துணைக்கு அனுப்பி இருப்பேனில்லெ, இப்படி இளைச்சிப் போயிட்டியே”,

“ஏம்மா! அவன்தான் சொல்லலைன்னா, நீயாவது போன்ல பேசும்போது சொல்லி இருக்கலாமில்லே” என்று கவிதாவிடம் ஆதங்கப்பட்டார்.

கவிதாவிடம் தர்ம சங்கடத்துடன் கூடிய புன்னகை. “அம்மா! உங்க பிள்ளையைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா? என்னோட மசக்கை என்னைப் படுத்தினதை விட இவரை ரொம்பப் படுத்திடுச்சி. 2-3 நாளா ஷேவ் கூடப் பண்ணாம என்னமோ எனக்குப் பெரிய வியாதி வந்துட்ட மாதிரி சோகமா சுத்திச் சுத்தி வர்றார். நீங்களாவது சொல்லுங்கம்மா”

“அடப்பாவி, கல்யாணமானா மாறிடுவேன்னு நினைச்சேன், நீ இன்னமும் அப்படியேதான்டா இருக்கே!” அவரும் சிரிக்க ஆரம்பித்தார்.

“சின்ன வயசுல இருந்தே இப்படித்தான்மா, எனக்கு உடம்பு சரியில்லேன்னா துடிச்சிப் போயிடுவான், பின்னாடியே சுத்திச் சுத்தி வருவான். அவனுக்காகவாவது நான் சீக்கிரம் தேறணும்னு நினைச்சிக்குவேன்”.

“அம்மா!” நெகிழ்ந்தாள் கவிதா. “இதே வேற மாமியாரா இருந்தா தன்மேல பிரியம் வெச்ச மகன், தன் பெண்டாட்டிக்கிட்ட அதே மாதிரி பிரியம் காண்பிச்சா தாங்க மாட்டாங்க, ஆனா நீங்க..”

“நல்லா இருக்கே! வம்சம் பெருகணும், உறவு வளரணும்னுதான் கல்யாணம் பண்றது. அப்படி வீட்டுக்கு வர்ற மருமகக்கிட்டப் பிரியம் காட்டாம பொறாமைப் படறது சின்னத்தனம்” என்று அதைச் சாதாரணமாக்கினார்.

“போதும், போதும்.. மாமியாரும் மருமகளும் கொஞ்சிக் குலாவினது! மனுஷன் படற பாடு தெரியுதா உங்களுக்கு, கிண்டலடிச்சிட்டிருக்கீங்க. அம்மா என்னம்மா நீங்களும் அவளோட சேர்ந்துகிட்டு” கடுப்பானான் ரமேஷ்.

“டேய், போடா, போய் ஒழுங்கா ஷேவ் பண்ணிக் குளிச்சிட்டு வாடா. அதான் நாங்க வந்துட்டோமில்லே! இனிமே உன் பொண்டாட்டியைப் பத்திரமா பார்த்துக்கறோம். நீ கவலைப்படாம ஆபிஸுக்குப் போயிட்டு வா!” மகனை விரட்டினார் அன்னை.

நாட்கள் பறந்தன. அம்மா இல்லாத கவிதாவைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பாமல் தானே அன்னையாய் இருந்து பார்த்துக் கொண்டார் லஷ்மி.

கவிதாவிற்கு மசக்கை நின்று விட்டது. ஆனால் கை கால் குடைச்சல் படுத்தி எடுத்தது. இதற்கிடையில் ரமேஷின் நடவடிக்கை அவளுக்குப் புதிராய் இருந்தது. அது வேறு மனதைக் கலக்கியது. இப்போதெல்லாம் அவளுக்கு உடம்பு சரியில்லை என்றால் முன்பு போல பதட்டப்படுவதில்லை. “அம்மாவோட டாக்டர் கிட்ட போயிட்டு வா” என்றான். அவளுக்கு வேண்டிய மருந்து, மாத்திரை, டானிக் என்று வாங்கிக் குவிப்பதிலோ, முடிந்த போதெல்லாம் மருத்துவரைப் பார்க்க அழைத்துப் போனதிலோ, இன்னது சாப்பிட வேண்டும் என்று சொன்னால் உடனே வாங்கி வந்து தருவதிலோ குறை இல்லை. ஆனாலும் ஏதோ ஒன்று முரணாய்த் தோன்றியது கவிதாவிற்கு. இது கவலைப்பட வேண்டிய விஷயம்தானாவென்றே சந்தேகம் கூட வந்தது.

டாக்டர் சொன்ன தேதிக்கு இன்னும் பத்து நாட்கள் தான் இருந்தது. அன்று எழுந்ததிலிருந்தே ஏதோ தவிப்பாக இருந்தது கவிதாவிற்கு. உட்கார முடியாமல், நிற்கவும் முடியாமல் ஏதோ செய்தது. கணவனுக்குக் காலை உணவை மேசை மீது எடுத்து வைத்துக் கொண்டிருந்த கவிதாவை சுளீரென்று இடுப்பில் வலி தாக்கியது!

“அம்மா…” என்று சத்தமாகவே அலறிவிட்டாள். அலுவலகத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த ரமேஷ் எட்டிப் பார்த்தான். இவள் வலியில் அவதிப் படுவதைப் பார்த்து நேராகச் சமையலறையிலிருந்த அம்மாவிடம் போய்ச் சொன்னான்.

கைவேலையை அப்படியே போட்டு விட்டு முந்தானையில் கையைத் துடைத்தவாறு பரபரப்பாக வந்தார்.

“என்னம்மா, இடுப்பு வலிக்குதா? நல்லா மூச்சை ஆழமா இழுத்து விடு. நான் கொஞ்சம் கஷாயம் எடுத்துட்டு வர்றேன். பொய் வலியா இருந்தா நின்னுடும்” என்று கஷாயம் போட்டுக் கொடுத்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் கஷாயத்துக்கோ, ஒத்தடத்துக்கோ கட்டுப்படாமல் பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை விட்டு விட்டுக் கடுமையான வலி வரவே, இது பொய் வலியில்லை என்று நிச்சயித்துக்கொண்டார் லஷ்மி.

“ரமேஷ்! நான் போய் ஆஸ்பத்திரிக்கு வேண்டியதெல்லாம் எடுத்து வெச்சிக்கறேன். நீ கால் டாக்சிக்கு போன் பண்ணு, ஆபிஸுக்கு லீவு சொல்லிடு. கவிதாவை ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போயிடலாம். ரொம்ப நேரம் தாங்காது. சீக்கிரமே பிரசவமாகிடும். நான் வர வரைக்கும் அவ பக்கத்துல உட்கார்ந்திரு” மளமளவென்று உத்தரவிட்டார்.

அம்மா சொன்ன மாதிரி போன் செய்து விட்டுக் கவிதாவின் பக்கத்தில் வந்தமர்ந்தான் ரமேஷ். அவன் பக்கத்தில் அமர்ந்ததே ஆறுதலாய் இருந்த கவிதாவிற்கு அவன் முகத்தைப் பார்த்ததும் ‘திடுக்’கென்றது. தவிப்பு, பரபரப்பிற்குப் பதில் இறுக்கமாய் இருந்த அந்த முகத்திலிருந்து அவளால் எதையும் கண்டு கொள்ள முடியவில்லை.

“சில மாதங்களுக்கு முன் இத்துனூண்டு கொப்பளத்திற்கு ஆர்பாட்டம் செய்தவரா இவர்? என் மேல் என்ன கோபம்? ஏன் இத்தனை இறுக்கம் இவர் முகத்தில்? ஒரு வேளை பெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற கவலையா? ஆனால் அவர்கள் வீட்டில் யாருமே இதுவரை ஆண் குழந்தைதான் வேண்டுமென்றோ, பெண் குழந்தை என்றால் மட்டம் என்றோ நினைத்ததில்லையே!” குழம்பித் தவித்த அவளை சாட்டையால் சொடுக்கியது போன்ற வலி நினைவிற்குக் கொண்டு வந்தது. கண்களில் லேசாகக் கலக்கம் தெரிந்தாலும் முகத்திலிருந்த இறுக்கம் குறையவில்லை ரமேஷுக்கு.

ரமேஷின் தொடுகையை உணர்ந்து கண் விழித்த கவிதா, மிகவும் சோர்வாக இருந்தாள். “கவி! கவி ஏதாவது குடிக்கறியா? எப்படிடா இருக்கே” ஆறுதலான ரமேஷின் குரலைக் கேட்டதும் கவிதாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“என்னம்மா! ஏன் அழறே? பச்சை உடம்பு, அழுதாக் காய்ச்சல் வந்திடும்னு சொல்வாங்களே. அழாதேடா ப்ளீஸ்! என்ன பண்ணுதுன்னு சொல்லேன், டாக்டரைக் கூப்பிடட்டுமா?”

“இத்தனை நாளா என் மேல என்ன கோபம்? நான் என்ன தப்பு பண்ணேன்?” அழுதுகொண்டே கேட்டாள் கவிதா.

“கோபமா? உன் மேலயா? என்னடா சொல்றே?” ஆச்சரியமானான் ரமேஷ்.

“பின்னே.. பின்னே.. முதல்ல எல்லாம் எனக்கு ஒரு தலைவலி வந்தாக் கூடத் தாங்க மாட்டீங்க. ஆனா இந்த ஐந்து மாசமா நான் உடம்பு முடியாம கஷ்டப் பட்டப்போ எல்லாம் நீங்க பக்கத்துல இல்லாம, அம்மா கிட்ட சொல்லு, அம்மா கூட ஹாஸ்பிடலுக்குப் போ”ன்னு சொல்லிட்டு போயிட்டீங்களே? கடைசியாக் கார்த்தால நான் வலியில துடிச்சப்போக்கூட நீங்க ஒரு மாதிரியா.. கோபமா..” மேலே சொல்ல முடியாமல் அழுகை பீறிட்டது.

“சே! என்னம்மா இது! நீயா என்னவெல்லாமோ கற்பனை பண்ணிக்கிட்டு கஷ்டப்பட்டிருக்கே. எனக்கு மட்டும் உன்னோட வலி கஷ்டத்தைக் குடுக்கலையா என்ன? அம்மா ஊர்ல இருந்து வந்து நம்ப கூட இருக்க ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லே என்கிட்ட “டேய் ரமேஷ், நீ பாட்டுக்கு சின்னச் சின்னத் தலைவலி, காய்ச்சலுக்கெல்லாம் ஆர்ப்பாட்டம் பண்றே. அவ என்னடான்னா உன்னோட கலாட்டாவுக்குப் பயந்துகிட்டே உடம்பு சரியில்லைன்னா கூட வெளிய சொல்லப் பயப்படறா. கர்ப்பமாயிருக்கற பொண்ணு, அவ பாட்டுக்கு சீரியஸ்னெஸ் தெரியாம எதையும் வெளிய சொல்லாம இழுத்துப் போட்டுக்கப் போறா. நீ படுத்தற பாட்டுல வலி வந்தாக் கூட வெளியே சொல்ல மாட்டா போல இருக்கு. அப்படி ஏதாவது பண்ணினா ரொம்ப ஆபத்தாயிடும். நீ கொஞ்சம் அடக்கி வாசின்னு” சொல்லி பயமுறுத்திட்டாங்க. அதனாலதான் மனசுக்குள்ளே எவ்வளவு தவிப்பிருந்தாலும் வெளியே காண்பிச்சிக்காம இருந்தேன். கார்த்தால நீ வலியில துடிச்சப்போ எனக்கு அழுகையே வந்துடுச்சி தெரியுமா?”

மனது லேசானாற்போல் இருந்தது கவிதாவிற்கு. இந்த ஐந்து மாதங்களில் என்னவெல்லாம் நினைத்துக் கஷ்டப்பட்டு விட்டாள்!

“என்னம்மா கவிதா, மயக்கம் தெளிஞ்சிடுச்சா. இப்போ எப்படி இருக்கு? பாரு என் பேத்தி உன்னாட்டமே அழகா இருக்கா” வெளியே நின்றிருந்த கணவரிடம் குழந்தையைக் காண்பித்து விட்டு வந்த லஷ்மியின் குரல் கேட்டது.

தனது நன்மைக்காக யோசிக்கும் அன்பான மாமியார், ஒதுங்கியிருந்தே இவளது தேவைகளைக் கவனித்துக் கொள்ளும் மாமனார், தனக்கு ஒன்று என்றால் தாங்காமல் தவித்துப் போகும் கணவன், போதாக்குறைக்கு அழகான, புதுப்பூவாய், திருமகளாய் ஒரு மகள். இதற்கு மேல் என்ன வேண்டும் என்ற நிறைவுடன் புன்னகைத்தாள்.

– செப்டம்பர் 2007

Print Friendly, PDF & Email

1 thought on “முரண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *