(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பெற்றோர் அவனுக்கு வைத்த பெயரும், பள்ளிக்கூடத்தில் துலங்கிய பெயரும் மீனாட்சி சுந்தரம். அவன் சிறுபயலாய் இருந்த போது, “மக்காலேய்… மக்கா மீனாச்சி… எலே அய்யா…” என்றுவெகு பிரியத்தோடு அவன் அப்பா அழைப்பார். மீனாட்சி சுந்தரம் என்பது மாமனார் பெயராதலால், அவன் அம்மா, “மக்களே அய்யாக்குட்டி” என்று விளிப்பாள். ஆனால் விபரம் தெரிந்த நாள் முதலாய் அவனுக்கு ‘டப்புச் சுந்தரம் என்ற பெயர்தான் ஊராராலும் நண்பர்களாலும் வழங்கப் பட்டது. அவனது சொந்தப் பெயரைக் கவித்து மூடி இந்தப் பட்டப்பெயர் நிலைத்தது.
‘டப்புச் சுந்தரம் என்று பெயர் வருவதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. முக்கியக் காரணம், சுந்தரத்தின் மூளைக்கப்பல் எப்போது ஆழ் கடலில் பயணம் செய்யும், எப்போது தரை தட்டி நிற்கும் என்று யாருக் கும் தெரியாது. பெரும்பாலும் தரைதட்டி நிற்கும் நேரங்களே அதிகம்.
நிரம்ப சட்டதிட்டங்கள் போட்டுச் சுந்தரத்தை வளர்த்தார்கள். வீட்டில் ஒரே பிள்ளை. நெடுங்காலம் தவசிருந்து பெற்ற பிள்ளை. குமார கோயில் முருகனுக்குப் பால் காவடி எடுப்பதாய் நேர்ந்து, வெள்ளி மலையில் முடி கொடுப்பதாய் வேண்டி, மண்டைக்காட்டு அம்மனுக்குப் பட்டுப்பாவாடை எடுத்துச் சாத்துவதாய் நினைத்து, முப்பந்தரத்து இசக்கி அம்மனுக்கு மூன்று கைப்பிடி பணம் போடுவதாய் மனதில் கொண்டு, பாலத்துச் சுடலை மாடனுக்கு பொங்கல் இட்டுச் சேவல் அறுப்பதாய் ஏற்று….
மற்ற பிள்ளைகளோடு சேர விடமாட்டார்கள். அங்கே இங்கே என்று ஓடியாடி விளையாட முடியாது. வீட்டுத் தெரு நடையில் உட் கார்ந்து பனையோலைப் பெட்டியில் அவலோ கடலையோ, அவித்த காணம் பயறோ போட்டுத் தின்றபடி, மற்ற பிள்ளைகள் விளையாடு. வதைப் பார்த்துக்கொண்டிருப்பான். ஊரைச்சுற்றி ஆறு ஓடினாலும் வீட்டில் அம்மாதான் குளிப்பாட்டி விடுவது. புதன் சனிகளில் தலை நிறைய, உடம்பு வழிய எண்ணெய் தேய்த்து கோவணத்தைக் கட்டிக் கொண்டு, கொதிக்கும் வெந்நீர் ஆறுவதற்கு அவன் காத்து நிற்கும் காட்சி…
பள்ளிக்கூடம் போகும் நேரங்கள்தவிர, மீதி நேரங்களில் தகப்பனார் பின்னாலேயே திரிவான். முன்னிரவுகளில் அவன் பாடம் படிக்கும் காட்சி ஊர்ப்பிரசித்தம். விளக்கு வைத்ததும், கைகால் முகம் கழுவி, நெற்றியில் துலக்கமாய் நிறணிந்து, திருவிளக்கின் முன் சம்மணம் போட்டு அமர்ந்து கை கூப்பி, கண்மூடி, “ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம….” என்று அரிசி அரைப்பு ஆலை தொடர்ச்சியாய் ஓடுவது போன்ற கதியில் சத்தம் போட்டுச் சொல்வான். அவ்வப்போது இருக்கும் மன உற்சாகத்துக்குத் தகுந்தபடி, கற்பனைக்கு ஏற்றபடி, ராகத் தின் கதி ஏறும், இறங்கும், மிதக்கும்…
“சரி போரும்லே…. பாட பொஸ்தகத்தை எடுத்துப் படி” என்று தகப்பனார் கட்டளை கேட்கும்.
பாதுகாப்புக் கருதி ஜன்னலே இல்லாமல் கட்டப் பட்டிருந்த அந்த வீட்டில், கண் கெட்டு விடும் என்ற காரணத்துக்காக மின்சார விளக்கும் கிடையாது. வீட்டின் கீழ்ப் படிப்புரையில் தெற்குப் பக்கம், சுந்தரத்தின் தகப்பனார் தூணில் சாய்ந்து மகன் படிப்பதைக் கவனிப்பார். மேலே தாழ்வார உத்தரத்தில் கொக்கியில் தொங்கும் அரிக்கேன் விளக்கு வெளிச் சத்தில் சுந்தரம் படிக்கத்துவங்குவான்.
‘ப…ட.. ம்.. படம் ப… ப் ப ட ம். பப்படம்…எப்பா! நம்ம பட்டங்கோயில்லே எப்பம்பா கொடை?”
“மாசி மாசம்லே…”
‘ம….ர.. ம் மரம்.ர…ம்…ப…ம்… ரம்பம்… எப்பா! கொடைக்கு எசக்கி முத்து முரசு உண்டும்லா?”
”உண்டு உண்டு…நீ படி…”
”பாடம் ரெண்டு. நாய் குரைக்கும்… கோளி கொக்கரிக்கும்…கிளி கூவும்.. எப்பா! கொடைக்கு நம்ம செவாமி அத்தை வருவாள்ளா…”
”வருவா…”
“ம்… பாடம் மூணு… பாலின் நெறம் வெள்ளை. காக்காவின் நெறம் கறுப்பு… இலை பச்சை நெறமாய் இருக்கும். எப்பா எப்போவ்… கொடைக்கு உனக்கு ஆராசனை வருமா? நீ ஆடுவியா?”
“ஆடுவம்லே…நீ படிடே…”
”ஒரு ஊரில் ஓர் காகம் இருந்தது. ஒரு நாள் அதற்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. எப்பா! கொடைக்கு… கொடைக்கு நானும் உங்கூட ஆடட்டா…”
“அது அப்பம்லா பாக்கணும். நீ படிலே… அந்த வாய்ப்பாட்டை எடுத்துப் படி.”
“ஒரேளு ஏளு ஈரேளு பதினாலு மூவேளு இருவத்தொண்ணு..நாலேளு இருவத்தெட்டு. ஐயேளு நுப்பத்தஞ்சு… எம்மா… எம்மோவ்! கறி வச்சாச்சா? வயிறு பசிக்கில்லா…” அன்றைய பாடம் ஒப்பேறும்.
பகலும் இரவும் கால்மாற்றிக் கால்மாற்றி நடந்ததில் சுந்தரம் வளர்த் தான் திடகாத்திரமாய். மார்பில், முகத்தில், கைக்கிடையில் முடி வளர்ந் தது. அப்பாவுக்குத் தெரியாமல் பீடி குடித்தான். இருபத்தி ஒன்றாவது வயதில் மணவாளக்குறிச்சியிலிருந்து பொன்னம்மாளைக் கல்யாணமும் செய்துகொண்டான்.
அது ஒரு அற்புதமான ஜோடி என்று பேசிக்கொண்டார்கள். இப்படி யொரு பொருத்தம் எப்படி வாய்த்தது என்று வியந்தார்கள். டப்புச் சுந்தரத் தைப் போல் சாதுவாக, கைக்கு அடக்கமாக, மங்கல் புத்தியுடனான வளர்ப்பு மிருகம்… தினசரி காலையில் பதினோரு மணிக்கு, வாசல் படிப் புரையில் உட்கார்ந்து ஈர்கோலால் தலைமுடியை உருவும் மாமியாரிடம் கேட்பாள், ‘எத்தே! தோசைக்கு எத்தின விடி அரிசி போட?”
“நிதம் இது என்ன கேள்வியம்மா? போடு நாளி அரிசி… போரும்… நமக்குண்ணு மருமக வாச்சா… எப்பிடித்தான் பிள்ளை வளத்தாளோவ்?”
பொன்னம்மாள் யாரிடமும் பேசுவது கிடையாது. முகத்தில் சிரிப்புக் கிடையாது. பிராந்து பிடித்தது போல் கண்களில் ஒரு வெளிறல். மாப்பிள்ளை டப்புச் சுந்தரத்தைக் கண்டால் மட்டும் சிரமப்பட்டு ஒரு சிரிப்பு
மாடுபோல் வளர்ந்திருந்தும் கோளாறான வேலை தெரியாது சுந்தரத்துக்கு. ஏரைப் பூட்டி கலப்பை மேழியைக் கையில் கொடுத்தால் வயிறு பசிப்பது வரைக்கும் உழுவான். ஒன்பது மணி தாண்டியும் காலை ஆகாரம் வராவிட்டால், வேலித் தொண்டில் பெண்டாட்டி தலை தட்டுப் படுகிறதா என்று திரும்பித் திரும்பிப் பார்ப்பான். காலையில் ஆகாரம் ஆனபிறகு, மேலும் உழுவாள். இரண்டு சாலுக்கு மேல் மூன்றாவது சால் அடிக்கத் தெரியாது. கணக்குத் தப்பிப் போகும்.
வாய்மடையில் காத்திருந்து நிரப்பாக வெள்ளம் அடைக்கத் தெரியும். வயல் வரப்பிலிருந்து கீழே பாயும் போடுகளைக் கண்டுபிடித்து அடைக்கத் தெரியாது. எனவே எப்போதும் அவனுடன் தகப்பனார் நிற்க வேண்டியிருந்தது. வியாழக் கிழமை தோறும் காய்கறி, வெஞ்சனம் வாங்க வாரச்சந்தைக்கு வடசேரி போக வேண்டுமானாலும் தகப்பனும் மகனும்தான்.
திருமணமாகி ஏழெட்டு ஆண்டுகள் ஆகியும் சுந்தரத்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை. தாயார் தகப்பனாருக்கு மாளாத கவலை. நாளாக ஆகக் கவலை எரிச்சலாக, கோபமாக, புறுபுறுப்பாகப் பல நிறங்கள் காட்டியது. சுந்தரம் ஆன வித்தையெல்லாம் பயின்று பார்த்தான்.பொன்னம்மாள் விதம்விதமாய் விரதம் காத்தாள். ஒன்றும் நடப்பில்லை.
திடீரென ஓர்நாள், சுந்தரத்தின் அம்மா, சாப்பாட்டு வேளையில்தன் குடும்பக் கொள்கையை அறிவித்தாள். அதன்படி, குழந்தை வேண்டு மென்பதற்காகச் சுந்தரத்துக்கு மாமன் மகள் செல்லம்மாளை இரண்டாந் தாரம் கட்டி வைப்பது. பொன்னம்மாள் வீட்டார் பராதி சொல்லாமல் இருப்பதற்காக, அவள் பெயரில் ஒரு கோட்டை விதைப்பாடு வயல் எழுதி வைப்பது. அவள் காலத்துக்குப் பிறகு நிலம் சுந்தரத்துக்குப் பிறக்கப் போகும் பிள்ளைக்குச் சேர வேண்டியது…
சேதி கேட்டது முதல், பொன்னம்மாள் முகத்தில் சோகம் கலந்த மந்தம். சுந்தரத்தின் செயல்களில் முரட்டுத்தனம். உழவு வயலில் மாடுகள் அடி வாங்கின. பெண்டாட்டி ஏதோ சொன்னாள் என்பதற்காக உழவுக் கம்பால் சாத்து நடந்தது. பெண்டாட்டி வீட்டு விலக்காகிய நாட்களில் அம்மாகொண்டுபோன ஆகாரம் வயலில் இருந்து திரும்பியது. முகம் எப் போதும் குளிர்ந்த இரும்பாய் இறுகிக் கறுத்துக் கிடந்தது.
நாலைந்து நாட்கள் பொறுத்துத் தகப்பனார் கேட்டார். “உனக்கு என்னலே ஆச்சு?”
“எனக்கு ஒண்ணும் ஆகல்லே!”
“பின்னே என்ன எளவுக்கு வெளத்தைப் போட்டு உடைக்கே? மாமனுக்கு மகளைக் கெட்டினாப்பிலே, இவளை வீட்டிலேருந்து வெரட்டவா போறோம்? செல்லமும் நல்ல சாதுக் கொணந்தானே… அக்கா தங்கச்சியாட்டம் ஆளுக்கு ஒரு பக்கம் இருந்திட்டுப் போறா…”
“எனக்குக் கலியாணமும் வேண்டாம். காடாத்தும் வேண்டாம்…”
“ஒனக்கு வேண்டாம்ணு விட்டிர முடியுமா? வம்சம் வௌங்கதுக்கு ஒரு பிள்ளை வேண்டாமா?”
”பிள்ளை பொறக்கல்லேண்ணா நான் என்ன செய்யட்டு?” “அதுக்குத்தான் செல்லம்மையைக் கட்டிக்கிடச் சொல்லுகேன்…”
”நம்மைக் கொண்டு ஆகாது.”
”ஆகாதா? நாய்க்குப் பொறந்த பயலே, எதுத்தா பேசுகே? நான் சொன்ன பேச்சைக் கேக்கல்லெண்ணா வீட்டு நடையிலே ஏறப்பிடாது. பொண்டாட்டியையும் கூட்டிக்கிட்டு எங்கயாம் போ போக்ககளிஞ்சு…” “என்ன பங்கைப் பிரிச்சுக் குடு போறேன்..”
“பங்கா… உங்க அம்மைக்கு சின்ன ஆமக்கனுக்கு சொத்தா கெடக்கு இங்கே? எல்லாம் எனக்க சொந்தச் சம்பாத்தியமாக்கும். மரியாதையாச் சொன்னதைக் கேளு. இல்லேண்ணா சொத்து பூராவையும் தர்மத்துக்கு எளுதி வச்சிருவேன்.”
”என்னுண்ணாங் கொண்டாடுங்கோ. நான் செத்து ஒளிஞ்சு போறேன்…”
சுந்தரத்தின் முரண்டுத்தனங்கள் ஒன்றும் செல்லுபடியாகவில்லை. கல்யாணத்துக்கு நாள் பார்த்து ஏற்பாடுகள் நடந்தன. கண்ணைக் கசக்கிக் கொண்டு மூக்கைச் சிந்திக்கொண்டு, புறுபுறுத்துக்கொண்டு, பொன்னம் மாள் கல்யாண வேலைகளில் கூடமாட இருந்தாள். அதிகச் செலவில் லாமல், ஆர்ப்பாட்டமில்லாமல், அடக்கமாய் கல்யாணம் நடத்தும் ஆலோசனைகளில் சுந்தரத்தின் பெற்றோர் மூழ்கி இருந்தனர்.
கல்யாணத்துக்கு நான்கு நாட்கள் முன்பு “இந்தப் பய எங்க ஒளிஞ்சு போனான்? மாடுகளுக்குத் தண்ணி காட்டல்லே.. அளியிலே ஒரு துரும்பு வைக்கலில்லே…’ என்று வீட்டு முற்றத்தில் நின்று தகப்பனார் கைகால் கழுவும்போது, சோர்ந்ததோர் நடையில் சுந்தரம் படியேறி வந்து படிப் புரையில் அமர்ந்தான்.
“ஏட்டி, குடிக்கத் தண்ணி கொண்டா!”
சுந்தரத்தின் அம்மா, பித்தளைப் போணி நிறைய கருப்புக்கட்டிக் காப்பியில் பாலுற்றி ஆற்றிக் கொண்டுவந்து வைத்தாள். செல்லக் கோபத் துடன் மகனைக் கேட்டாள். “எங்கலே போனே?”
“எங்கயாம் போவேன். உனக்கு என்னா?”
“என்ன எளவுக்கு நாயை அவுத்து விடுகே? இந்த வேனா வெயில்ல எங்கே அலையேண்ணுதாம்பா கேட்டேன்…”
”நான் ஒறண்டையும் அலையல்லே.. ஆசுத்திரிக்குப் போனேன்…”
“ஆசுத்திரிக்கா? யாரைப் பார்க்க?”
“யாரையும் பாக்கில்லே. எனக்குத்தான்”
”உனக்கா? உனக்கு என்ன கொள்ளை… விடியக் காலம் ஒம்பது இட்டிலி திண்ணியே….”
“ஆப்பரேசன் செய்யதுக்கு போனேன்…”
“ஆப்பரேசனா? என்ன தீனம் எளகீட்டு?”
“கௌட்டு எளவுக்கு எல்லாத்தையும் பச்சையாச் சொன்னாத்தான் மனசிலாகும்.. நரம்பு வெட்டீட்டு வந்திருக்கேன். போருமா? இனி ஒனக்கு பேரன் பொறக்கதைப் பாத்திருவோம்…”
– தீபம், 1979, இலக்கியச் சிந்தனை பரிசு.
நன்றி: https://nanjilnadan.com/2011/04/13/முரண்டு/