”என்னங்க… இன்னும் எவ்வளவு தூரம்?..” 35 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலை தாண்டினோம். கையில் அட்ரஸ் இருந்தது.
”இந்த வீடுதான் நினைக்கிறேன். நம்ம கல்யாணத்துக்கு முந்தி ஒருவாட்டி வந்திருக்கேன்”
அதே வீடுதான். வாசலில் எஸ். ராமச்சந்திரன் என்று பெரிதாய் போர்டு இருந்தது. என் காலேஜ் நண்பன். உள்ளே நுழைந்தோம்.
”இது யாருங்க? சமையல்காரர் வச்சிருக்கீங்களா?” என் காதில் மனைவி மெதுவாய் கிசுகிசுத்தாள்.
“ஸ்ஸ்.. கொஞ்சம் சும்மா வரமாட்டே.! அவர் அவனோட அப்பா.”
எங்களை கவனித்து விட்ட அவன் அப்பா, தண்ணீர் பைப்பை செடியின் அடியில் போட்டு விட்டு ஓடி வந்தார். “ வாங்க.. வாங்க. ராமச்சந்திரன் வீட்லதான் இருக்கான்”.
இப்போது வாசலுக்கு வந்து பார்த்த ராமச்சந்திரன் முகத்தில் ஆச்சரியம். “வாய்யா சீனு. இப்பதான் வழி தெரிந்ததா? வாங்க மேடம். பரவாயில்லை, செருப்போடவே வரலாம். சும்மா வாங்க..”
பின்பு உள்ளே பார்த்தபடி, “லதா இங்க வா. யாரு வந்திருக்கா பாரு” என்றான்.
மடிப்புக் கலையாத காட்டன் சாரியில், அப்போதுதான் டிரஸ் பண்ணிக்கொண்டது போல சுத்தமாய் வந்தார்கள், ராமச்சந்திரனின் மனைவி.
ஹாலில் அமர்ந்தபடி, நானும் ராமச்சந்திரனும் எங்கள் ஆபீஸ் விவகாரங்கள், அரசியல், ஷேர் மார்க்கெட் என்று பேசிக் கொண்டிருக்க, எங்கள் மனைவிமார்கள் அவர்களுக்குள் பேசிக் கொள்ளத் துவங்கினார்கள். ராமச்சந்திரன்தான் கேட்டான், “ காப்பியா? வேறு எதுவுமா?”
“ஒண்ணும் வேணாம். ஜஸ்ட் இப்பத்தான் கிளம்பும்போது..”
”கரெக்ட். நீ தேனாம்பேட்டையில் இருந்தில்ல வர்ற… டிபன் ஏதாவது சாப்பிடு”
“அட! என்னப்பா நீ! நான் காப்பியே வேண்டாங்குறேன். நீ டிபன் எல்லாம் ..”
”நோ.. நோ. இங்க பக்கத்துல பேக்கரியில் இருந்து கேக் காவது, பப் ஆவது வாங்கியாந்திரலாம்”
”கடையிலிருந்து வாங்கிக்கலாமா?”
”ஆமாம். நான் இவளை வீட்ல ரொம்பப் பண்ண விடுறதில்லை. பாவம், அவளே ஆபீஸ்ல அல்லாடிட்டு வர்றா. எதுவும் வேணும்னா, ரெடியா கடையில் கிடைக்கிற போது..”
“எஸ். எஸ்” நான்.
“ஆமா, பாவம் நீங்க ஆபிஸ் போய்ட்டு வந்தாலே அக்கடான்னு ஆயிடும். அதுவும் இந்த பஸ் கூட்டத்தில..”
“பஸ்ஸா! சேச்சே!! யார் ஏறுவா? நான் மொபெட்டுல போய் விடுவேன். மூணாவது தெருவில தான் ஸ்கூல்”
”அப்படியா! நீங்க மொபெட் ஓட்டுவீங்களா?”
”என்னங்க அப்படி கேட்டுட்டீங்க! அவளுக்கு ஸ்கூட்டரே ஓட்ட தெரியும். அவ அப்பாதான் வேணாம்னு மொபெட் வாங்கிக் கொடுத்திட்டார். ஆரம்பித்த விஷயத்தையே மறந்துட்டேன் பாருங்க. அப்பா… அப்பா”
அவர் வாசலில் இருந்து எட்டிப் பார்த்தார்.
”கொஞ்சம் கடைக்கு போய் கேக் வாங்கி வந்திடேன்”
”என்னது..”
“அங்கிருந்து கேட்டா, எப்படி காதில விழும்? இங்க வா”
அவர் உள்ளே வந்தார். என் பக்கம் திரும்பி, ”வர வர இவருக்கு காதும் கேட்க மாட்டேங்குது” என்றான்.
அவர் ஒரு பையும் பணமும் வாங்கிக் கொண்டு வெளியே கிளம்பினார். ”சீக்கிரம் வந்திடு. நீ உன் லைப்ரரிக்கு அப்புறம் போய்க்கலாம்”
என் மனைவி பக்கம் பார்த்து லதா சொன்னார்கள், “ஆமாங்க. சொல்லலைன்னா, அவர் பாட்டுக்கு லைப்ரரியில் ஒரு புஸ்தகம் உடாமா படிச்சிட்டு மெதுவாகதான் வருவார். எல்லாம் சொல்லி அனுப்பனும். அப்பப்பா இவங்களோட ரொம்ப கஷ்டம்”.
இப்பொழுது நாங்கள் நால்வரும் ஒன்றாக பேசிக்கொண்டிருந்தோம். லதாவை பற்றி ராமச்சந்திரன் புகழ்ந்து தள்ளினான். அவர்களுக்கு டான்ஸ் தெரியுமாம். கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டு, இந்த ’அல்ப’ நர்ஸரி டீச்சர் வேலையை விட்டுவிட்டு, சீக்கிரமே ஆபீஸ் போகப் போகிறார்களாம். இன்னும் நிறைய சிறப்புகள் உண்டாம். தயங்கி தயங்கி என் மனைவி கேட்டாள், ”உங்களுக்கு ஒரு புள்ளைன்னாரே. எங்க?”
”புள்ள இல்ல. பொண்ணு. கொல்லைப்பக்கம் பாட்டியோட அரட்டை அடிச்சிட்டிருப்பா.. இருங்க கூப்பிடுறேன். அச்சு.. அர்ச்சனா.. இங்க வா”
”நான் வல்ல. பாட்டி கிட்ட கதை கேட்டுகிட்டு இருக்கேன்.”
”அத்த.. அவளை அனுப்புங்கோ. வராது சனியன். சதா பாட்டிதான் அவளுக்கு”
“உங்க அம்மாவா?” என் மனைவிக்கு ஆர்வம்.
”எங்கம்மா ஏன் இங்கெல்லாம் வந்திருக்கா! எல்லாம் இவர் அம்மாதான்” நான் கவனிக்காதது போல பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன். அப்பப்பா என்னமாய் கழுத்தை நொடித்துக் கொள்கிறார்கள்.!
குழந்தை ஓடி வந்தது. நல்ல புஷ்டியாக இருந்தது. ராமச்சந்திரனிடம் ஒட்டிக்கொண்டு எங்களையே ஓரக் கண்ணால் பார்த்தது. ஹால் கதவை ஒட்டி உள்பக்கம் மாமியின் தலை தெரிந்தது.
”இது யார் தெரியுமா? சீனு மாமா.. சொல்லு”
“சீ..னு… மா..மா” நிதானித்து மழலையாய் என் பெயரை உச்சரித்தது. சீனு மாமா என்று சொல்லிவிட்டு, “ இது..?” என்று குட்டி விரலால் என் மனைவியை காட்டிக் கேட்டது.
”இது சீனு மாமி”
“குவிக்கா பேசிடுவா. வெரி போல்ட். அவ அம்மா மாதிரி” என்றான் ராமச்சந்திரன்.
என் மனைவி அழைத்தாள். “வா . இங்க வா ..உன் பேர் என்ன சொல்லு”
”சொல்லு. ஆண்டிக்குச் சொல்லு பார்க்கலாம்”
”ஆர். அர்ச்சனா..”
“ஒரு ரைம் சொல்லு பார்க்கலாம்”
“………………”
எல்லோரையும் ஒரு சுற்று பார்த்தது.
”ஏதாவது ஒன்னு சொல்லு.” மாமிதான் இப்போது ஹாலுக்கு வந்து குழந்தையை சொல்லச் சொன்னார்கள். குழந்தை அவரிடம் ஓடிச் சென்று அவர்கள் காலை கட்டியபடி சேலையை பிடித்துக்கொண்டு விருவிருவென்று ஒப்பித்தது. “டிம்பிள் சின். ரோசி லிப்ஸ்..”
வாசலில் சத்தம் கேட்க, திரும்பி பார்த்தோம். அவன் அப்பா வந்துவிட்டார். பையை வாங்கிக்கொண்ட ராமச்சந்திரன், அவர் நகர்ந்ததும் மீண்டும் அழைத்தான். மிச்சம் எங்கே என்று கேட்டவன், என் பக்கம் திரும்பி, ”பொடிப் போடுவார்” என்றான்.
”காபி போடவா?” மாமி லதாவை கேட்க, “மூணு போடுங்க எனக்கு வேண்டாம்” என்றார்கள் உட்கார்ந்தவாறே. ”சும்மா சாப்பிடேன்” என்ற ராமச்சந்திரனை பார்வையிலேயே அடக்கியது போல் இருந்தது அவன் மனைவியின் பார்வை.
கேக்கை சாப்பிட்டோம். காப்பியுடன் மாமி வந்தார்கள். மாமி சேலையை பிடித்து கொண்டே குழந்தை அர்ச்சனா. ஒவ்வொருக்காய் மாமி டபராவில் ஆற்றிக் கொடுக்கையில், குழந்தை அச்சு குறுக்கே வர, காப்பித் தம்ளர் தவறி, என் மனைவி சேலையில் கொட்டியது. அவள் பதறி எழ, குழந்தை பயந்து கத்தியது.
“அய்யய்யோ.. தெரியாம தவறிடுச்சு. அடடா! சுட்டிடுச்சா? சேலையெல்லாம்…” மாமி பதறினார்கள்.
கொட்டிட்டு, என்ன சுட்டிடுச்சான்னு கேள்வி! ஒரு காபி போட்டுக் கொடுக்கிறதுக்குள்ள..” சலித்துக்கொண்ட லதா, ராமச்சந்திரனை பார்க்க, “ப்சு..என்னம்மா இது! பார்த்துக்கொண்டாரக் கூடாது? அவங்க சேலை எல்லாம் கொட்டி நாசமாக்கி, கருமம் கருமம்.. பாத்ரூம் அழைச்சிண்டு போ. அலம்பிவிடு..”
”ஒண்ணும் இல்ல மாமி. விடுங்கோ. எங்க வீட்ல கொட்டாததா? இதென்ன பெரிய விஷயமா? இது சாதா புடவைதான். அடடா! நீங்க பெரியவங்க. என் புடவை எல்லாம் தொடைச்சுக்கிட்டு! எழுந்திருங்க..” என் மனைவி பதறி விட்டாள்.
அந்த மாமி மிரட்சியுடன் மகனையும் மருமகளையும் பார்த்துக்கொண்டே புறங்கை விரல்களால் சரட் சரரெட்டெனத் தள்ள, என் மனைவி அவர்களை விலக்கிக்கொண்டு எழுந்து, பின்பக்கம் போய் பைப்பில் கழுவிக்கொண்டு வந்தாள்.
நாங்கள் மீண்டும் சோபாக்களில் மீது அமர்ந்து பேசத் துவங்க, மெதுவாய் ராமச்சந்திரன் அப்பா எங்களை கடந்து ஹால் வழியாக பின்புறம் சென்றார். அவர் போவதை கண்களால் லதா, ராமச்சந்திரனுக்கு ஜாடை காட்டினார்கள். அதை நானும் கவனித்தேன்.
”எங்க பின்னாடி போறீங்க அப்பா?”
“தண்ணி குடிக்கணும். தாகமா இருக்கு”
அதற்கு மேல் என்ன கேட்பது என்று புரியாமல் ராமச்சந்திரன் விழிக்க, அவன் மனைவி, ’க்கும்’ என்று கனைத்து கண்களை உருட்டினார்கள். அதை ராமச்சந்திரன் கவனியாமல் விட்டு விட்டான். அவர் உள்ளே போனதும் என் மனைவியிடம் திரும்பி,
“ அவர் ஒய்ப்பை, பையன் கோச்சுக்கிட்ராலில்ல, காப்பி கொட்டினதுக்கு. அதை விசாரிக்க போறார்”. ஒண்ணு சொல்லிடக்கூடாது. தப்பின்னாலும் பேசாம வாய மூடிக்கிட்டு இருக்கணும். இல்லன்னா, கூடி கூடி பேசிக்குவாங்க. என்னடா! நம்மளை இவ்வளவு தூரம் வைச்சிருக்காங்களேன்னு தோணாது”.
”ஆமாம். ஆமாம். வாஸ்தவம்தான்”
என் மனைவி இப்படி கூறினாளே தவிர, அவள் குரலில் சுரத்தில்லை.
“இந்த காலத்தில் எந்தப் பிள்ளை இப்படி வச்சுக்குது? இதோ இவர் மாதிரி ஏமாந்தாங்கோலிதான் வச்சிக்கும். இவர் தம்பிங்க பாருங்க. அவனவன் பாட்டுக்கு வேலைக்குப் போறானுங்க.. செலவழிக்கிறானுங்க. இவரை மாதிரியா?”
’உண்மைதான்’ என்பது போல என் மனைவி தலையாட்டினாள். ராமச்சந்திரன் என் பக்கம் திரும்பி, ”இவங்களுக்கு மட்டும்… அன்னிக்கு ஒர்கவுட் பண்ணிப் பார்த்தேன், மாசம் ஆயிரம் ரூபாயாவுது, சீனு. ஏதோ ரெண்டு பேரும் சம்பாதிக்கிறோம், முடியுது. ஆனா, ’பாவம்! ரெண்டு பேரும் உழைச்சுக் கொட்டுறோம்ன்னும் ஒரு ஃபீலிங் கூட இவங்ளுக்கு கிடையாது.”
நானும் ஒப்புக்குத் தலையாட்டினேன். மணியைப் பார்த்தோம். எட்டே முக்கால். சொல்லிக் கொண்டு கிளம்பினோம்.
”குங்குமம் எடுத்துக்கொண்டு போம்மா..” மாமி எடுத்து நீட்ட, “என்கிட்ட கொடுங்க. நான் கொடுக்கிறேன். புறக்கடையில் அச்சு இருக்கா. போய்ப் பாருங்கோ” ராமச்சந்திரன் மனைவி மாமியை உள்ளே அனுப்பினார்கள். என் மனைவி குங்குமம் எடுத்துக்கொள்ள சொல்லிக்கொண்டு வீதியில் இறங்கினோம்.
தெருவில் அதிக வெளிச்சம் இல்லை. இருட்டாய் இருந்தது. பஸ் ஸ்டாண்டுக்கு நடந்தோம். மவுனம். இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மனசு இறுக்கமாய் இருந்தது. நிலைமையை சகஜமாக்க நான்தான் பேசினேன்.
”அந்தக் குழந்தை நல்லா பாடுது இல்லை?”
அவளிடமிருந்து பதிலில்லை. “ என்ன நான் சொல்றது, கேக்குதா?”
டக்கென்று நின்று, அவள் தோள்பட்டையை பிடித்து நிறுத்தி, லேசான வெளிச்சத்தில் முகத்தை கூர்ந்து பார்த்தேன். அழுகிறாளா என்ன!
”என்னம்மா… என்ன ஆச்சு?” எனக்கு பதற்றமாகிவிட்டது. கலங்கிய கண்களுடன் என்னைப் பார்த்துக் கேட்டாள்
”அவங்களை நம்ம வீட்டுக்கு கூட்டி வந்து வச்சுக்கலாமா?”
(29 நவம்பர் 1996ல் மங்கையர் மலரில் வெளிவந்தது)