முத்தையா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 124 
 
 

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சோ சூ கான் வட்டாரம்; பிரதான சாலையில் நின்று பிரியும் ஓர் குறுஞ்சாலை! செம்மண் சாலை! அது செல்லும் பாதை…. அதிக ஜனநடமாட்டமில்லாத ஓர் ஒதுக்குப்புரமான ஆனால் வளமான நிலப்பகுதி; செடி கொடி மரங்கள் அடர்ந்த ஓர் பசுமையான… பகுதி! பண்ணைகள் நிறைந்தப் பகுதி. அங்கு அன்று தோன்றிய மீன், கோழி, பன்றிப் பண்ணைகள் இன்றும் வளமாக வளர்ந்து நிற்கின்றன.

அதோ ! ஆலமரம் போல் வளர்ந்து படர்ந்து தரையில் கிளைகளை தவழவிட்டு வரிசைப்பிடித்து நிற்கும்… ‘ புவா-சேரி…’ போச்சேரி மரங்களுக்கு ஊடே ஓர் நீண்ட கட்டிடம் சுமார் இருநூறு மீட்டர் நீளமிருக்கும்; பலகையிலான கட்டிடம். மேற்கூரை… அத்தாப்பிலானது அந்த மேற்கூரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலைக்காட்டி நிற்கும் மீனாச் செடிகளும்… கோரைப் புற்களும் காட்டுச் செடிகளும் கூரையில் திட்டுத்திட்டாக பச்சை பளுப்பு வண்ணத்தில் படர்ந்திருந்த பாசியும் அந்த கட்டிடத்தின் வயதை சொல்லாமல் சொல்கின்றன பழமை மணம் வீசம் அப்பகுதியில் காட்சியளிக்கும் எல்லா கட்டிடங்களும் ஐம்பது வயதை எட்டிப்பிடித்தவை! பழமை வாய்ந்த அந்த நீண்ட கட்டிடத்தின் தலைவாசலை ஒட்டிநின்ற அந்த பரந்த போஃச்சேரி மரத்தடியில் ஓர் சாய்வு நாற்காலி! அந்தக் காலத்து கயிற்று நாற்காலி! அது ஒர் பழுத்த பழத்தை தாங்கிக் கொண்டு நிற்கிறது. அந்த பழுத்த பழம் முத்தையா அந்தக் கோழிப்பண்ணையின் உரிமையாளர். அந்த சாய்வு நாற்காலிக்கு முன்னால் இரண்டடி உயரத்தில் ஓர் சிறிய மேசை! அந்த மேசையின் மீது தன்னிரு கால்களையும் தூக்கி போட்டுக்கொண்டு சாய்வு நாற்காலியில் அவர் சாய்ந்திருக்கிறார். அவரது தலை போஃச்சேரி மரத்தில் பதிந்திருக்கிறது. அடர்ந்த வெண்மயிர் புருவங்களுக்கு கீழ் இமைகள்…. விழிகளுக்கு திரையிட்டிருக்கின்றன. காண்போர் விழிகளை கவரும் எழிலான…. கிளிமூக்கு. சற்று பருத்த செந்நிற உதடுகள்… உதடுகளுக்கு மேல் அடர்த்தியான வெண்மையும் கருமையும் கலந்துற வாடும்…. மீசை! அவரது சதைப்பற்று முகத்துக்கு அது கம்பீர தோற்றத்தை பிரதிபளிக்கிறது. மரத்தடியில படுத்துறங்கும் சிங்கத்தைப்போல் அவரது தோற்றம். கொர்ர்…..! கொர்…..! தாமரைப் மொட்டுப்போல் குவிந்து நிற்கும் அவரது உதடுகளின் வலக்கோடி முனையை துளைத்துக் கொண்டு வெளியேறும் காற்று… குறட்டை ஒலி! ஆம்! அவர் உறங்குகிறார்; நிம்மதியாக உறங்குகிறார். அந்த பிரபலமான கோழிப்பண்ணையின் உரிமையாளர்… குளிர்சாதன வசதிக் கொண்ட எழில் அறையில் பஞ்சு மெத்தையில் படுத்துறங்க வேண்டியவர் ஓர் சாதாரண மனிதரைப்போல் அந்த போஃச்சேரி மரத்தடியில் உறங்குகிறார். அவர் பல லட்சங்களுக்கு அதிபதி; பணத்தால் அவர் எதையும் எந்த பொருளையும் வாங்க முடியும். ஆனால் மனநிம்மதியை…நிம்மதியான உறக்கத்தை பணத்தால் வாங்கிவிட முடியுமா? அவர் அந்த போஃச்சேரி மரத்தடியில் இன்று நேற்றல்ல…. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக உறங்கி பழக்கப் பட்டவர். அதை ‘தொட்டில் பழக்கம்’ என்றும் சொல்லலாம்.

இக்கோழிப்பண்ணையை உருவாக்கியவர் அவரது தந்தை பசுபதி. எதிர்ப்புகளையும் சவால்களையும் கண்டு மனம் தளராது விடாமுயற்சியோடு அவரது தந்தை இக்கோழிப்பண்ணையை உருவாக்கினார். போஃச்சேரி மரங்கள் சூழ்ந்தப் பகுதியில் இக்கோழிப்பண்ணையை உருவாக்கிய சமயத்தில் முத்தையா ஆரம்பப்பள்ளியில் முதல் வகுப்பில் காலடி எடுத்து வைத்திருந்தார். பள்ளி முடிந்து வந்த கையோடு புத்தகப்பையை ஓர் மூலையில் போட்டுவிட்டு… பள்ளி சீருடைகளையும் களைந்தெறிந்து விட்டு தாய் ஊட்டும் உணவை ‘லபக்! லபக்’ என்று வயிற்றுக்குள்ளே தள்ளிவிட்டு…. இந்த போஃச்சேரி மரத்தடித்கு ஓர் பாயோடு வந்து மரத்தடியில் படுத்திடுவார். அந்த பழக்கம் தொடர்கதையானது. அவர் கல்லூரி படிப்பை முடித்து தந்தைக்கு உதவிக்கரம் நீட்டிய சமயத்தில்தான் கடைசி காலத்தை தமிழகத்தில் கழிக்க விரும்பிய அவரது பெற்றோர் கோழிப்பண்ணையை முத்தையாவிடம் ஒப்படைத்துவிட்டு தமிழகத்துக்கு மூட்டைக் கட்டினார். முத்தையாவின் அயராத உழைப்பால்…. வியாபாரம் பெருகியது. இந்த முப்பதாண்டுக் காலக்கட்டத்தில் எவ்வளவோ மாறுதல்கள்….’ மாற்றங்கள்….! இப்போது முத்தையா … கோழிப்பண்ணைக்கு மட்டும் முதலாளியல்ல; இன்று சிங்கையில் புகழ்பெற்று விளங்கும் நான்கு உணவு விடுதிகளுக்கும் அவர் அதிபதி. தன் தலையில்… உச்சந்தலையில்… ஏதோ விழுந்தது போல் ஓர் உணர்வு அவரது உள்ளத்தை உருத்த….. குவிந்து நின்ற அவரது இமைகள் கண் இமைகள் மெல்ல மலருகின்றன. கீச்!கீச்! கீச்! கீச்! கொர்ர்! கொர்ர்| பறவைகளின் பன்னிசை! இன்னிசை! அவரது செவிகளில் தேனாகப்பாய அவரது விழிகள் அந்த போஃச்சேரி மரத்தை மெல்ல விழுங்குகின்றன அவரது விழிகளில் புன்னகை ஒளிர் கின்றது. சிங்கையை போலவே அந்த மரத்தில் படர்ந்த கிளைகளில் பல இன பறவைகள் உல்லாசமாய் விளையாடியபடி அந்த சின்னஞ்சிறு போஃச்சேரி பழங்களை உண்டு மகிழ்ந்துக் கொண்டிருக்கின்றன கீ…கீச்…கீ…கீ…ச்! என்று கீக்சிட்டப்படி தேன் சிட்டுகள் மஞ்சளும் இளம் கருமை நிற இறகுகளைக் கொண்ட சின்னஞ்சிறு சிட்டுகள் ஒன்றை ஒன்று சீண்டியபடி கிளைக்கு கிளை தாவி கண்ணாம் மூச்சு விளையாடுவதை அவரது விழிகள் ஆர்வத்தோடு பருகுகின்றன. ஆர்வம் மிளிர்ந்த விழிகளிலே ஏக்கம் சுடர்விடுகிறது ‘கடவுளே! இந்த சின்னஞ்சிறு சிட்டுகளைப் போல் என்னையும் நீ படைச்சிருக்கக் கூடாதா? நானும் இதுங்களோடு சேர்ந்து இந்த போஃசசேரி மரங்களை சுற்றி… சுற்றி பறந்து மகிழ்வேனே…! மின்னல் வேகத்தில் ஓர் ஏக்க பெருமூச்சு அவரது இதயத்தில் தோன்றி மறைய அவரது எண்ணத்தில் சறுக்கள்! தலையிலே ஏதோ விழுந்த மாதிரி இருந்துச்சே? ஒரு வேளை ஏந்… தலையிலே விழுந்தது… இங்கே கூத்தடிக்கும் குருவிகளின் எச்சமாக இருக்குமோ? எனும் கேள்வி அவரது முகத்தை சுளிக்கவைக்க அவரது வலக்கரம் தலைக்கு தாவுகிறது. வலக்கை விரல்கள் அவரது தலைமுடியை ஊடுறுவி ஆராய்ச்சி செய்ய.. அவரது விழிகளிலே மலர்ச்சி.

‘ஹும்! தலையிலே ஒண்ணுமில்லையே! ஆனா ஏதோ ஒண்ணு தலையிலே விழுந்த மாதிரி இருந்துச்சே…? என்னாவாக இருக்கும்? ஒருவேளை… அவரது உதடுகள் முணுமுணுக்க அவரது விழிகள் மெல்ல அவரது மடிக்கு இறங்குகின்றன. வேஷ்டி கட்டியிருந்த அவரது மடியை அவரது விழிகள் ஆராய்கின்றன. அவரது சற்று பருத்த வயிற்றுக்கு மேலே வேஷ்டியின் முடிச்சில் ஏதோ ஒன்று அவரது விழிகளை உருத்த அவரது விழிகள் கூர்மையாகின்றன… விழிகளிலே மலர்ச்சி! ‘அடே! போஃச்சேரிப் பழம்! இதுதான் தலையிலே விழுந்து மடியிலே கிடக்கா? நல்லவேளை! இதுவே தென்னை மரமாகவோ… டுரியான் மரமாகவோ இருந்திருந்தால் நம்பகதி அதோகதிதான்! அவரது உதடுகள் முணுமுணுக்க… உள்ளம் சிரித்துக் கொள்கிறது ஆம்! அவரது மடியிலே அழகான செக்கச் சிவந்த போஃச்சேரிப் பழம்! காம்புடன் அவரைப் பார்த்து சிரிக்கிறது. சுண்டைக்காய் அளவே…. உண்ண அந்த செக்கச் சிவந்த போஃச்சேரி பழத்தை அவரது விழிகள் அர்த்தத் தோடு நோக்குகின்றன; முகத்திலே புன்னகை மணக்கிறது. அந்த போஃச்சேரி பழத்தை பற்றியிருந்த கொக்கிப் போன்ற காம்பை அவரது வலக்கை விரல்கள் பற்றி அவரது முகத்தருகே கொண்டு வர விழிகளால் அந்த போஃச்சேரிப் பழத்தை முத்தையா மெல்ல சுவைக்க ஆரம்பிக்கிறார்.

“உம்ம்…ம்ம்!” அந்த போஃச்சேரி பழத்தின் இதமான மணத்தை அவர் ஆழமாக நுகர… அந்த மணம் அவரது மனக்கடலில் எண்ண அலைகளை தோற்றுவிக்கின்றன. பள்ளிப் பருவத்தில் அவருக்கு கதி… போஃச்சேரி மரங்கள் தானே! எங்கும் இயற்கையாக வளரக்கூடிய போஃச்சேரி மரங்கள் அன்று அவர்களது வீட்டுக் கோழிப் பண்ணையை சுற்றி ‘தோப்பாய் ‘ வளர்ந்து கிடந்தன. பள்ளிப்பருவத்தி லேயே போஃச்சேரி மரங்களோடு ஓர் பாசப்பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டவர் முத்தையா அதோ! தன் விழிகளை மூடிக் கொண்டு அவர் அந்த நாள் நினைவுகளை மெல்ல மெல்லுகிறார்.

போஃச்சேரி மரங்களில் ஏறி விளையாடியது. தன் காற்சட்டைப் பைகளில் போஃச்சேரி பழங்களை பறித்து நிரப்பிக் கொண்டது; தன் நண்பர்களோடு சேர்ந்து போஃச்சேரிக் காய்களில் பம்பரம் ஆடியது… போஃச்சேரிக் காய்களை நறுக்…நறுக்கென்று கடித்து துப்பியது…. மிருதுவான ஈரப்பசைக் கொண்ட போஃச்சேரி மரத்தின் இளம் இலைகளை கொத்தாகப் பறித்து உள்ளங்கைக்குள் வைத்து கசக்கி சாரெடுத்து எறிந்தது, சாரெடுத்து உள்ளங்கைகளில் வீசிய அந்த சாரின் மணம் எல்லாமே அவரது நினைவுகளில் நிழலாட ஆரம்பிக்கின்றன. கடந்து வந்த பாதையை, அது கல்லும் முள்ளும் நிறைந்த பாதையாக இருந்தாலும் நினைத்துப் பார்க்கும்போது மனதுக்கு அது இதமான சுகத்தையல்லவா அளிக்கிறது! பள்ளிப்பருவத்தில் தான் செய்த சுட்டித் தனத்தை எண்ணி அவர் சிரித்துக் கொள்கிறார். பள்ளி வாழ்க்கை மனித வாழ்க்கையில் ஓர் இன்றியமையாத பகுதியாயிற்றே? வானவில்லின் வர்ண ஜாலங்களை அந்த வாழ்க்கையில்தானே கண்டு களிக்கிறோம். தன் விரல்களுக்கிடையில் சிக்கியிருந்த அந்த செக்கச் சிவந்த போஃச்சேரிப் பழத்தை அவர் ஆவல் பொங்க நோக்குகிறார் ‘ உம்மம்!’ அதன் மணத்தை அவர் ஆழமாக நுகர்கிறார், ‘அதே மனம்! அதே போஃச்சேரியின் மணம்!’ அவரது உதடுகள் முணுமுணுக்கின்றன. ஏதோ ஓர் ஆவல்…அவரை தூண்ட அந்த பழத்தை தன் வாயிக்குள் போட்டுக் கொள்கிறார் முத்தையா. அவரது பற்கள் அந்த பழத்தை நசுக்க… அவரது நாக்கு மெல்ல…மெல்ல அந்தப் பழத்தின் சுவையை அவருக்கு ஊட்டுகிறது.

“தேவாமிருதம்’ என்பார்களே… அது இதுவாக இருக்குமோ? அந்தப் பழத்தின் சுவைக்கு அவரது மனம் நற்சான்றிதழ் வழங்க… இன்னும் சில பழங்களை சுவைத்துப் பார்க்க அவரது மனம் விரும்புகிறது. தனது வலப்புர தோள்பட்டையை உரசிக் கொண்டு நின்ற அந்த சிறு கிளையை அவரது விழிகள் நோட்டமிடுகின்றன. பச்சைக் காய்களுக்கு இடையில் மஞ்சளும் சிகப்புமாக சில பழங்கள் ,காட்சித்தர அவற்றில் சிலவற்றை பறித்து அவர் வாயில் போட்டுக் கொள்கிறார். அவரது நாக்கு அந்த போஃச்சேரிப் பழங்களின் சுவையை அவருக்கு மீண்டும் ஊட்ட, அவர் மெய்மறந்து கண்களை மூடிக் கொள்கிறார்.

கீ…க்!…கீ…க்…கீக்… கொ….க்…! கோக்….கொக்! கோழிக் குஞ்சுவின் அலறல் தொடர்ந்து தாய்கோழியின் கதறல்! போஃச்சேரிப் பழங்களின் சுவையில் மெய்மறந்திருந்த முத்தையா… விழித்துக் கொள்கிறார். அதோ அவரது விழிகள் கோழிப்பண்ணையின் தலை வாசல் பக்கம்… இல்லை… இல்லை! அதையும் தாண்டி கோழிப்பணையின் வலக்கோடிக்கு செல்கிறது; அங்கு அந்தப் பகுதியில் ஓர் இயற்கை நீர் ஊற்று! அந்த இயற்கை நீரூற்றைப் பார்த்துதான் அவரது தந்தை அந்த நிலத்தை வாங்கி கோழிப்பண்ணையை அமைத்தார். கண்னை இமை காப்பாது போல் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக அந்த நீரூற்றை முத்தையா பாதுகாத்து வருகிறார். அந்த நீருற்றை சுற்றி தான் ஓர் அழகிய சிறு பூந்தோட்டத்தை அவர் உருவாக்கியிருந்தார். பொதுவாக கோழிகள் தன் குஞ்சுகளோடு இயற்கை சூழ்நிலையில் பொழுதை கழிப்பதற்காக. .. அவர் உருவாக்கிய தோட்டம் அது! காலையில் நூற்றுக்கதிகமான கோழிகள் தன் குஞ்சுகளோடு அங்கு களித்திருப்பதைக் காணலாம். மாலை வேளையில் கோழிகள் தன் குஞ்சுகளோடு பண்ணைக்குள் அடைக்கலமாகிவிடும்! தன் வாழ்க்கையை வளமாக்கிய கோழிகள் மீது அவருக்கு தனிப்பற்று! கொக்..! கொக்! கோக்! தாய்கோழியின் அபயக்குரல் முத்தையாவின் செவிகளை குத்துகிறது. தனது குஞ்சுகளுக்கு ஆபத்து என்றால்தான் தாய்கோழி அபயக் குரல் எழுப்பும்! என்பது முத்தையாவுக்கு தெரியும். ‘அப்படியானால்… என் பேரன் வழக்கம் போல கோழிக் குஞ்சுகளிடம் குறும்புத்தனம் காட்டுகிறானா?’ அவர் எண்ணி முடிப்பதற்குள்… ‘தாத்தா…! தாத்தா! என்று கூவியபடி கோழிக்குஞ்சும் கையுமாக அவரது பேரனும்… பேரனைத் துரத்திக் கொண்டு ‘வேணாம் சரவணா! பாவம்! விட்டு… டு….! விட்டு….டு! என்று கூக்குரலிட்டபடி மருமகளும் மருமகளின் பின்னால் அபயக்குரல் எழுப்பிக் கொண்டு கோழியும் அந்த வலக்கோடி மூலையில் காட்சிதர முத்தையாவின் உள்ளம் சிரித்துக் கொள்கிறது. கோழிக் குஞ்சுகளிடம் தன் பேரன் காட்டும் குறும்புத்தனத்தை அவர் நன்கறிவார் “பற…! பற…!” என்று ஆணையிட்டப்படி அவற்றை பிடித்து மேலே தூக்கிப் போடுவதும், பறக்கும் திறனின்றி கீழே விழுந்து தவிக்கும் குஞ்சை உள்ளங்கையில் எடுத்து வைத்துக் கொண்டு ‘ஷேம்…! ஷேம்! உனக்கு பறக்கத் தெரியலேயே! என்று கேலி செய்து அதன் சின்னஞ் சிறு தலையை… ஆள்காட்டி விரலால் தட்டுவதும்… தனது காற்சட்டைப் பையில் திணித்துக் கொள்வதும் தாயோடு சென்று கொண்டிருக்கும் ‘குஞ்சை லபக்கென்று பற்றி… ஓடி மறைந்து கொண்டு தாய் கோழியிடம் கண்ணாமூச்சு விளையாடுவதையும் அவர் நன்கறிவார்ர். தன் பேரனால் கோழிக்குஞ்சுகள் அடையும் சிறு வேதனையைக் கண்டு அவர் மனம் வருந்தவே செய்தது. ஆனால் அதேசமயம் பேரன் பால் கொண்ட பாசம் அவரை மெளனம் கொள்ளச் செய்தது.

அதோ! விரட்டிக் கொண்டு வரும் தாயின் பிடியில் சிக்காமல், வலது கையில் கோழிக்குஞ்சை இறுகப் பற்றியபடி தாத்தா..! தாத்தா! என்று கூவிக் கொண்டு வரும் பேரனை அரவணைத்துக் கொள்ள தன்னிரு கரங்களையும் நீட்டி, முத்தையா தயாராகிறார், ஓடிவந்த பேரன் அவரது கரங்களுக்குள் தஞ்சம் அடைய அவனை வாரியணைத்து தூக்கிக் கொள்கிறார் அவர்!

“மாமா! அவன் கையிலே பாருங்க கோழிக்குஞ்சு! வழக்கம் போலே தாயிக்கிட்டேயிருந்து தூக்கிட்டு வந்துட்டான்! அந்த கோழியை பாருங்க! ‘ஏ பிள்ளையை… விட்டு.. டுன்னு எப்படி கெஞ்சுது! கோழிங்களை வேதனைப்படுத்துறதே இவனுக்கு வேலையாய் போச்சு! எல்லாம் நீங்க… கொடுக்கிற செல்லம்…மாமா! “அவரது மருமகள்தான் குற்றப்பத்திரிகை வாசிக்கிறாள்; நமட்டுச் சிரிப்போடு பேரனை நோக்குகிறார் முத்தையா, உதட்டை பிதுக்கியபடி அவரை குறும்போடு நோக்குகிறான் பேரன்! ‘பேரனின் பார்வை அவரது உள்ளத்தை ஈர்க்கிறது. “சின்னப் பிளளை! அவனுக்கு என்னா.. ம்மா தெரியும்? விடு…ம்மா!” மருமகளை சமாதானப்படுத்தியபடி, பேரனை உச்சி முகர்கிறார் முத்தையா. கீக்…! கீக்… கீக்! கோழிக்குஞ்சியின் வேதனைக்குரல் அவரது உள்ளத்தை உருத்த… அவரது விழிகள் கருணையோடு அக்கோழிக்குஞ்சை நோக்குகின்றன. ‘சரவணா! நீ நல்ல பிள்ளை…ன்னு தாத்தாவுக்குத் தெரியும்! கோழிக்குஞ்சு பாவம்! அதை கீழே விட்டு…டுப்பா! பேரனை அவர் தாஜா பண்ணுகிறார்!

“ஊஹும்! மாட்டேன்! இது எனக்கு லேணும்! இதுகூட நா விளையாடப் போறேன்!’ பேரன் அவரது முகத்தில் கரியை பூசுகிறான்.

“உனக்கு விளையாடத்தான் தாத்தா… நாய்குட்டி… பூனைக்குட்டி முயல் குட்டி எல்லாம் வாங்கிக் கொடுத்துருக்கேன்! அதுங்ககூட விளையாடுப்பா! நீ நல்ல பிள்ளை.. யில்லே! “மீண்டும் தாஜா பண்ணுகிறார்.

“போங்க… தாத்தா! அதுங்க ரொம்ப நோட்டி! கட்டிலுக்கு அடியிலே… காடிக்கடியிலே… அல்லூருக் குள்ளே தூம்புக்குள்ளே… எல்லாம் போயி புகுந்துக்குதுங்க! அதுங்கக்கூட விளையாட கஸ்ட்டமாயிருக்கு தாத்தா! இதுக்கூட விளையாடத் தான் எனக்கு ரொம்ப ஆசை! ‘‘அந்த கோழிக்குஞ்சியை மெல்ல தடவிக் கொடுத்தப்படி அவன் கூறுகிறான்.

“அதுங்க ரொம்ப நோட்டிங்கன்னு தாத்தாவுக்கும் தெரியும் அதனாலேதான் தாத்தா உனக்கு ஜீரோங்குலே ஓர் மெழுகு பொம்மை தொழிற்சாலையை உருவாக்கியிருக்கேன்! அங்கே கோழி… ஈத்தே நாயி… பூனை புலி, கரடி…பன்றி எல்லாம் மெழுகு பொம்மைகளாய் உலாவரப் போகுது! அதுங்கக்கூட நீ விருப்பம் போல விளையாடலாம்! அதுங்க உன் பேச்சை கேட்டு நடக்கும். தான் ஆரம்பிக்கவிருக்கும் தொழிற்சாலையைப் பற்றி தன் பேரனுக்கு தெரிவிக்கிறார் முத்தையா. பேரனின் விழிகளிலே வியப்பு.

“ஹாய்! புலி… கரடிங்க எல்லாம் இருக்கா..? அதுங்க ஏம் பேச்சை கேட்டு நடக்குங்களா நெசமாகவா தாத்தா சொல்லுறீங்க? ஆவல் பொங்க பேரன் கேட்க…! ‘நிஜம்தான் என்பதற்கடையாளமாக தலையை ஆட்டுகிறார் முத்தையா.

“அப்படின்னா… இந்த கோழிக்குஞ்சு எனக்கு வேணாம் தாத்தா! இந்தாங்க! இதை நீங்க வச்சுக்கங்க! தன் கையிலிருந்த கோழிக்குஞ்சியை பேரன் அவரிடம் நீட்ட அதை வாங்கி… களங்கி நிற்கும் தாய் கோழியிடம் ஒப்படைக்கிறார் முத்தையா… கொக்…கொக் கோக்! தன் பாஷையில் அவருக்கு நன்றி கூறிவிட்டு… தன் குஞ்சை அரவணைத்தப்படி அக்கோழி அங்கிருந்து நகருகிறது. தன் குஞ்சோடு செல்லும் அக்கோழியை அனுதாபத்தோடு நோக்குகிறார் முத்தையா. அவரது இதயத்தன் ஆழத்திலிருந்து ஓர் ஏக்க பெருமூச்சு வெளிப்படுகிறது. அந்த பெருமூச்சுக்கான காரணத்தை அறிந்துக் கொள்ள, மருமகள் அவரது முகத்தை நோக்குகிறார். முத்தையாவின் முகத்திலே விரக்திப் புன்னகை மின்னலென தோன்றி மறைகிறது.

“அந்தக் காலத்துலே மருத்துவராலே கண்டுபிடிக்க முடியாத நோயாலே ஒருவர் இறந்து போயிட்டால் செய்வினை கோளாரு என்றும்… பேய் அடிச்சிடுச்சு… பிசாசு அடிச்சிடுச்சுன்னு சொல்லி இறந்தவரை அடக்கம் செஞ்சுடு வாங்க! அத்தோடு அந்த விஷயத்தை விட்டு…டு…வாங்க! பேயையோ பிசாசையோ கூண்டோடு ஒழித்துக்கட்ட முயன்றதில்லை! ஆனால் இந்த நவீன உலகத்தில்.. நவநாகரீக மனிதன் எவ்வளவு சுயநலவாதியாக மாறிவிட்டான்… இனம் கண்டு கொள்ள முடியாத நோயினால் ஒருவர் இறந்துவிட்டால்… அதற்கு பறவைகள் மீதும் மிருகங்கள் மீதும் பழியை போட்டு… கூண்டோடு அவற்றை அழிக்க முயலுறது எவ்வளவு பெரிய அநியாயம்! ஓர் பானை சோற்றுக்கு ஓர் சோறு பதமாக இருக்கலாம்! ஆனா… ஓர் கோழியிடமோ… பன்றியிடமோ நோய் கிருமி இருக்குதுன்னு தெரிஞ்சால், அந்த இனத்தையே ஒழித்துக்கட்ட, மனித இனமே ஒன்றுகூடி குரல் கொடுக்கிறது ! இதை என்னாலே ஜீரணித்துக்க முடியலே… ம்மா! நோய் கிருமி இருக்குதுன்னா… மற்ற உயிரினங்களுக்கு பரவாமல் இருக்க அந்தநோய் கிருமி கொண்ட உயிரை போக்கிறதை வேணுமுன்னா ஒரு வழியிலே நியாயப்படுத்தலாம்

ஆனா அந்த உயிரினங்களையே கூண்டோடு அழிக்க முயலுறது அநியாயம் என்றுதா… ம்மா சொல்லணும்! மனிதனை அண்டி வாழும் உயிரினங்களை தன் சுயநலத்துக்காக மனிதன் அழிக்க முயலுகிறான்; எதிர்காலத்தில் எந்த உயிரினமும் மனிதனை அண்டி வாழாது; இது உறுதி; அதே சமயம் காலதேவனும் இந்த மனித இனத்தை தண்டிக்காமல் இருக்க மாட்டான்!” வேதனையின் விளம்பில் நின்று முத்தையா கொட்டிய வார்த்தைகள், மருமகளின் உள்ளத்தை ஈரமாக்குகின்றன.

பிற உயிர்களிடம் பரிவு காட்டும் அவரது உள்ளம் உண்மையிலேயே வெந்து போயிருந்தது. பறவைக் காய்ச்சல் பரவுகிறது என்று கூறி… கோழிகளையும் வாத்துகளையும் அநியாயமாய் படுகொலை செய்வதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! அவரது பண்ணையிலிருந்தும் ஆயிரக்கணக்கான கோழிகள் அகற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டன. பறவைக் காய்ச்சலால் கோழிகள் கொல்லப்படுவது சிறுகதையல்ல…. அது தொடர்கதை என்பதை நன்கு உணர்ந்தப் பிறகுதான்.. முத்தையா மேலாக… தான் பேணிகாத்து வந்த கோழிப்பண்ணையை… தன் வாழ்வை வளமாக்கிய கோழிப் பண்ணையை விற்க முடிவெடுக்க… மலேசிய நாட்டு வணிகர்… ஒருவர் அதை வாங்க முன் வந்தார். ஆம்! இன்னும் ஓரிரு வாரத்தில் அவரது கோழிப்பண்ணை வேறொருவருக்கு கைமாறிவிடும்!

‘பொம்…! பொம்! பொம்!’ காரின் ஹாரன் ஒலி; ஓர் நீல வண்ண மெர்சிடீஸ் கார் கோழிப்பண்ணையின் தலை வாசலுக்கருகில் வந்து நிற்கிறது. முத்தையாவின் அணைப்பில் இருந்த பேரன் “ஹாய்! அப்பா!” என்னை இறக்கிவிடுங்க! தாத்தா! என்று கூவியபடி, அவரது அணைப்பிலிருந்து விடுபட்டு காரை நோக்கி ஓட, முத்தையாவும் அவரது மருமகளும் காரை நோக்கி நடக்கின்றனர். முகமெல்லாம் பல்லாக காரைவிட்டு இறங்கிய அவரது மகன் சங்கர் ‘அப்பா! போன காரியம் வெற்றி! ஆகஸ்ட் ஒன்றாம் தேதி எட்டு லட்சம் வெள்ளியில் வருவான நமது ‘மெழுகு-பொம்மை தொழிற்சாலையை ‘ திறந்து வைக்க, நமது அமைச்சர் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார். கோழிப்பண்ணையில் வேலை செய்த 160 தொழிலாளர்கள் புதிய தொழிற்சாலையில் வேலை செய்ய விருப்பதையும் மேலும் இருநூறு புதிய தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ள விருப்பதையும் அறிந்து… அவர் மிகவும் பாராட்டினார். உலக அளவில் நமது தொழிற்சாலை பேரும் புகழும் பாராட்டிய அவர்… எந்த உதவியும் செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக கூறினார் அப்பா! என்று, மகன் மகிழிச்சிப் பெருக்கோடு கூற… உள்ளம் பூரித்துப் போகிறார்… முத்தையா! “முருகா! எல்லாம் உன் செயல்!’ மனதுக்குள் முருகக் கடவுளுக்கு நன்றி கூறிய முத்தையா, தன் மகன் மருமகள் பேரனோடு கோழிப் பண்ணைக்குள் நுழைகிறார்… நிறைந்த மனதோடு.

– புது அப்பா!, முதற்பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்

அமரர் கா.சங்கையா 1950இல் சிங்கப்பூரில் பிறந்தார். கலைமகள் பாடசாலையில் தனது ஆரம்பப் பள்ளி வாழ்க்கையைத் தொடங்கி அதன் பின்னர் உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் பயின்று தமிழ்மொழியில் தேர்ச்சி பெற்றார். மாணவ பருவத்திலேயே தம் தூவலைத் தூரிகையாக்கித் தாளில் தடம் பதித்தவர். 1965இலிருந்து வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய படைப்புகளுக்கு வரவேற்பு இருந்தன. சிறுவர் நிகழ்ச்சிகளிலும் சிறு வயதிலேயே சிறகடித்தவர். சிறுவர் இலக்கியத்திற்கு இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழ் மலர், தமிழ்முரசு,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *