கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: April 23, 2024
பார்வையிட்டோர்: 2,775 
 
 

(1924ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  

ஒரு பிராமணப்பெண் சுவசரிதை

“தொன்முறை மாறித் துலங்கும் புதுமுறை;
நன்முறை ஒன்றினே ஞாலம் அழுங்காமே
பன்முறையின் ஆளும் பரன். ”

இது பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம், குசிகர் குட்டிக் கதைகள், உதயலன், திருமலைசேதுபதி, சித்தார்த்தன், புத்தசரிதை, பாலராமாயணம், பாலவிநோதக் கதைகள், பொதுதர்மசத்கீதமஞ்சரி, புதுமாதிரிக் கலியாணப் பாட்டு, ஆசாரச் சீர்திருத்தம், பாரிஸ்டர் பஞ்சநதம், தில்லைக் கோவிந்தன் முதலிய பல பிரபலமான நூல் களின் ஆசிரியரும், பஞ்சாமிர்தம் பத்திராதிபருமான அ.மாதவையர் இயற்றியது.

திருத்திய இரண்டாம் பதிப்பு
சென்னை, ஆசிரியர் அச்சுப்பிரசுராலயம் புஸ்தகசாலை எட்வர்டு எலியட் ரோடு-மயிலாப்பூர்
[எட்டணா] 1924 [காபிரைட்]


அதிகாரம் 1-5 | அதிகாரம் 6-10

முதலாம் அதிகாரம் 

பாண்டிய நாட்டிலே, இராமாபுர மென்னும் கிரா மத்திலே, சங்கரையருக்கும் பார்வதியம்மாளுக்கும் இரண்டாவது பெண்ணாகவும் மூன்றாவது குழந்தையாகவும் நான் பிறந்தேன். என் தமையன் சுப்பிரமணியன், எனக்கு ஏழெட்டு வருஷங்களுக்குமுன் பிறந்தவன். எங் களுக்கிடையே பிறந்த பெண் குழந்தை, பிரசவக்கிரகத்திலேயே கைதவறிப் போயிற்று. 

சுப்பிரமணியன் முதற் குமாரனானதினாலும், அவர்களுடைய கலியாணத்துக்கு அநேக வருஷங்களுக்குப் பிற்பாடு ஜனித்தவனானதினாலும், என் தாய் தந்தையர், அவனை மிக்க அருமை பாராட்டி வளர்த்துவந்தார்கள். நான் பிறந்தவுடன், அவர்கள், முதலிற் சிறிது பயந்து, பின்பு ஆநந்தத்தையடைந்து, முத்து மீனாக்ஷக்ஷி யென்னும் என் பாராட்டியாரின் பெயரை எனக்கிட்டு, அப்பாட்டியாரைப்போல் மிக்க செல்வத்தில் வெகு நாள் வாழும்படி என்னை ஆசிர்வதித்ததுமன்றி, என் மாமனாகிய சுந்தரமையரின் புத்திரன் இராமனுக்கு என்னை விவாகம் செய்து கொடுப்பதாகவும் தீர்மானஞ் செய்துவிட்டார்கள். அந்தோ! தாயாரின்னாயென்றறியாப் பெண்ணுக்கு மாப்பிள்ளை தயாராயிருந்தான். 

என் குழந்தைப் பருவத்தைப்பற்றி நினைத்துப் பார்க் கும் பொழுது, எனக்கு முதல் முதல் ஞாபகத்துக்கு வருகிறது துக்ககரமானதாகவே யிருக்கிறது. என் நாலாவது வயதில் என் தாயார் இறந்துபோய் விட்டாள். அவள் குணத்தைப்பற்றிக் கேள்வியே யன்றி நானறியேன். இவ்வளவு வருஷங்களுக்குப்பின் நினைத்துப் பார்க்கும் பொழுது, அவள் பிரேதத்தை மயானத்துக்குத் தூக்கிக் கொண்டு போகையில், தூக்குபவர்களின் காலைக் கட்டிக் கொண்டு நான் அழுததும், என் தகப்பனார், கண்ணீர் பெருக, அவள் ஊருக்குப் போவதாயும், எனக்குப் பிரியமாயுள்ள பக்ஷக்ஷிணங்கள் வாங்கிக்கொண்டு சீக்கிரம் வந்து விடுவாளென்றும் சொல்லி, என் கண்ணீரைத் துடைத்து, எனக்கு வாழைப்பழம் கற்கண்டு முதலியன வாங்கிக் கொடுக்கும்படி ஒருத்தியிடத்து விட்டுவிட்டுப் போனதும், ஞாபகத்துக்கு வருகின்றன. நான், அவள் வரவை யெதிர் பார்த்து, மயானத்துக்குப் போகிற வழியிலுள்ள ஆலமரத்தடியில், அடிக்கடிபோ யுட்கார்ந்துக் கொண்டிருப்பேனாம். பிற்பாடு, பிறர் சொல்வதைக் கேட்டு, நானும்,” அம்மாள் செத்துப்போய் விட்டாள் ” என்று சொல்லத் தொடங்கி விட்டேன். அவ்வயதிலேயே தாயாரை யிழந்தமையால் நான் பட்ட கஷ்டங்களைப்பற்றி நினைக்கையில், என் மனம் பதைபதைக்கின்றது. 

என் தாயார் இறக்கும் பொழுது, என் தகப்பனாருக்கு ஐம்பது வயது. அவர், இருபது வயதுள்ள வாலிபரா யிருக்கும்பொழுது நான்கு வயதுள்ள ஒருபெண்ணை விவாகஞ் செய்துகொண்டாராம். அப்பெண், பத்தாவது வயதில் வைசூரியினா லிறந்துபோய் விட்டாளாம். பிற்பாடு, அவர், என் தாயாரை மணம்புரிந்து கொண்டாராம். அவர்களிருவரும் மிகப் பிரியமுள்ளவர்களா யிருந்ததாக எங்கள் பந்துக்கள் சொல்வதுண்டு. 

என் தாயாரிறந்த மறு வருஷத்தில், அவர் மற்றொரு பெண்ணைக் கலியாணம் செய்துகொண்டார். அவ்விளாகத்தைப்பற்றி, என் ஞாபகத்திலிருந்தும், பிறர் சொல்வதிலிருந்தும் விவரித்துக் கூறுகிறேன். என் தமையனாகிய சுப்பிரமணியனுக்கு விவாகம் செய்ய வேண்டு மென்று தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு பெண்ணை ஒப்பந்தஞ் செய்தார்கள். அப்பெண்ணின் தாய் தந்தையர், தாங்கள் பத்துப் பன்னிரண்டு வருஷங்களாகப் பேணி வளர்த்ததற்குக் கூலி கிடைக்கக் காலம் வந்துவிட்ட தென்று நினைத்து, நகைகளும் பணமுமாக ஆயிர ரூபா கொடுத்து விட்டால், தங்கள் பெண்ணை விற்றுவிடுவதாகச் சொன் னார்கள். என் தகப்பனார் அதற்குச் சம்மதித்து, முகூர்த்தம் வைத்தபின், தனக்கானால் பெண்விலை யென்ன வென்று கேட்க, அவர்கள், சமயத்தைத் தப்பவிடக்கூடா தென்றெண்ணி, விசனத்தையடைந்த தங்கள் பெண் மனதைத்தேற்றித், தங்களுக்கு இரண்டாயிர ரூபா கொடுத்து விடவேண்டு மென்றும், தங்கள் பெண் பெயருக்கு அவ்வளவு விலையுள்ள நிலங்களை யெழுதிவைத்துவிட வேண்டு மென்றும் சொல்ல, அப்படியே, அதே முகூர்த்தத்தில், மருமகளாக விருந்தவள் மனைவியாகி விட்டாள். இதைச் சொல்லும் பொழுது எனக்கு விசனமும் வெட்கமும் பொறுக்க முடியவில்லை. 

அதே வருஷத்தில், எனக்கும் என் தமையனுக்கும் கலியாணம் செய்துவிடுவதாக யோசித்து, அவனுக்கு வேறொரு பெண்ணைத் திட்டஞ்செய்து, முகூர்த்த தினத்தைக் குறித்தான பின், கலியாணத்துக்கு வேண்டிய முயற்சிக ளெல்லாஞ் செய்து கொண்டிருக்கையில், என் கணவனாக நியமிக்கப்பட்டிருந்த இராமன் என்பவன், ஆற்றில் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று வந்த வெள்ளத்தா விழுத்துக்கொண்டு போகப்பட்டு, இறந்ததாகக் கடிதம் வந்தது. எனக்கு அதைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் மனம் பதறுகிறது. 

கலியாணம் நடக்கவில்லை. என் தமையனும் வரியூருக்குப் படிக்கப் போய் விட்டான். 

எனக்கு ஆறு வயதாகும் பொழுது, என் மாற்றுத் தாயாராகிய தஞ்சாவூர்ப்பெண் எங்கள் வீட்டுக்கு வந்தாள். அவளுக்கு அப்பொழுது பதின்மூன்று வயது. 

அவள் அழகுள்ள பெண்; தணிந்த விலையுள்ள சீலைகள் கட்டிக் கொள்ள மாட்டாள். தன்னைச் சிங்காரஞ் செய்து கொள்வதில் மிக்க விருப்ப முடையவள். நடையுடை பாவனைக ளெல்லாம் புதுமாதிரியாகவே யிருந்தன. அவளுக்கு எழுத வாசிக்கத் தெரியும். வந்து சில நாள்களுக்குள் அவள் குணம் வெளிப்பட்டது. தானே வீட்டில் ஏகாந்தமாய் ஆளவேண்டு மென்ற எண்ணத்துடன், என் தாய் இறந்த நாள் முதல் வீட்டுவேலைகளைப் பார்த்துக் கொண்டு என்னை அன்புடன் வளர்த்து வந்த என் அத்தையைப்பற்றித் தன் புருஷனிடத்திற் கோட்சொல்லத் தொடங்கி, சில நாட்களில் அவளைத் துரத்திவிட்டாள். அப்புண்ணியவதி, வெகு விசனத்துடன், நான் அழுவதைக் காணப்பிரியமின்றி, வெளியே விளையாடப் போயிருக்கும் பொழுது, தன்னூருக்குப் போய்விட்டாள். நான் வீட்டுக்கு வந்தவுடன், “அத்தையம்மாள் எங்கே?” என்று கேட்டேன். அதற்கு என் மாற்றுத்தாயாகிய குட்டியம்மாள் “அத்தையுமில்லை, பாட்டியுமில்லை! முண்டையொழிந்தாள்; சனியன் தொலைந்தது” என்றாள். நான் கோவென்றலறி அழுதேன். அதற்கு அவள், “என் காலின் கீழ் முட்டாதே. நீயும் எங்கேயாவது ஒழி” என்று சொல்லிக் கொண்டே என்னைப் பிடித்திழுத்து முதுகிலடித்து, வெளியே தள்ளிவிட்டாள். நான் தெருவில் விம்மி விம்மி அழுகொண்டு நின்றேன். அப்பொழுது என் தகப்பனார் வந்தார்.அவர் ஒன்றும் கேட்கவில்லை. திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. என் துக்கம் அதிகரித்தது. அப்பொழுது தான் நான் அனாதை யென்பதை யறிந்தேன். ”அம்மா செத்துப்போனாள்” என்பதின் பொருள், அப்பொழுது தான் தெரிந்தது. குளத்திற் போய் விழுந்து இறக்கலா மென்று நினைத்தேன். ஆனால் தவளை கடிக்குமே. கிணத்திற்போய் விழுந்துவிடுவோ மென்றால், ஆமை கடிக்குமே. ஒரு விஷயமும் தெரியாது; என்ன செய்கிறது? இவ்வித யோசனைகளில் அழு கை மாறிவிட்டது. பிற்பாடு என் தோழியாகிய நாணி தம்பிக்கு வைசூரி கண்டிருந்ததனால் அவள் வீட்டுக்குப் போகக் கூடாதென்று என் அத்தை யம்மாள் எனக்குச் சொல்லி யிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. வைசூரியினா லிறக்கலா மென்று நினைத்து, அங்கே போகப் புறப்பட்டேன். நாணி வீட்டு வாசலிற் போனவுடன், வேப்பிலைகள் சிதறிக் கிடப்பதைக் கண்டு பயந்து திரும்பி விட்டேன். சாயங்காலம் சாப்பாட்டு வேளை வந்தவுடன், பசி முன்னிழுக்க, வெட்கம் பின்னிழுக்க, மெள்ள மெள்ள வீட்டருகே சென்றேன். தெருத் திண்ணையில் வீற்றிருந்த என் தகப்பனார், “முத்து! உள்ளே போய்ச் சாப்பிடு” என்றார். நான் தலையைக் கவிழ்ந்து கொண்டே வீட்டுட் சென்றேன். உடனே, என் மாற்றுத் தாய், “எடுத்துப் போட்டுக் கொண்டு தின்னு” என்றாள். என் கண்களிற் கண்ணீர் தளும்பிற்று. ஒன்றுஞ் சொல்லாமல் சோற்றுப் பானையிலிருந்து எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட்டபின், எச்சிலைச் சுத்தி செய்து விட்டுத் திகைத்து நின்றேன். பிற்பாடு குட்டியம்மாள் கோபத்துடன் சொன்னதாவது:- “வயிற்றை நிரப்பிக் கொண்டு மண்ணுருப் போல் நிற்கின்றாயே! சும்மா கள்ளக் காளை போல் திரிய நினைக்கிறாயோ? அது நடவாது. குடத்தை யெடுத்துக் கொண்டு போய் வாய்க்காலி லிருந்து தண்ணீர் மொண்டுவா” என்றாள். 

நான் அதுவரை செல்வப் பெண்ணாகவே வளர்ந்து வந்தேன். தாயில்லாப் பெண்ணானதால் யாவரும் தாய் போலிருந்தார்கள். வேலை செய்தறியேன். ஆயினும், அவளைக் கோப மூட்டப் பயந்து, குடத்தை யெடுத்துக் கொண்டு வாய்க்காலுக்குச் சென்றேன். தண்ணீர் மொண்டானவுடன், குடத்தைத் தூக்க முடியவில்லை. வயதான பெண்பிள்ளை யொருத்தி யிரக்கப் பட்டுக் குடத்தை யிடுப்பில் தூக்கி வைத்தாள். நான் அடிமேலடிவைத்து வருத்தத் துடன் நடந்து வரும் பொழுது, அத்தை யம்மாளைப் பற்றி நினைக்கக், குடம் கைதவறிக் கீழே விழுந்து விட்டது. 

திரும்பவும் வாய்க்காலுக்குச் சென்று நீர் மொண்டு கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். குட்டியம்மாள் “இவ்வளவு நேர மென்ன?” என்று வினவ, நான் நடந்ததைச் சொன்னேன். உடனே, அவள், ஆவலுடன் குடத்தைத் திருப்பிப் பார்க்க, அது அடியில் அதுங்கி யிருந்தது. நானதைப் பார்க்கவில்லை. அதற்காக அவளென்னை யடித்துத் திட்டினாள். நான் மனத்திற்குள் வைது கொண்டேனே யொழிய, ஒன்றுஞ் சொல்ல வில்லை. அன்று முதல், வர வர, அடிகளும் குட்டுக்களும் கிள்ளுக் களும் வசவுகளும் சகசமாய் விட்டன. 

அவையில்லா நாள் அரிதாய் விட்டது. நான் கஷ்டப் பட்டதோடு தீர்ந்து விட்டதா? அவள் மூலமாய் என் தகப்பனார் பட்ட கஷ்டத்தை என்னென்று சொல்லுவேன். 

என் அத்தையம்மாளைத் துரத்தியான பின், குட்டியம்மாள் ஊருக்குக் கடிதம் எழுதினாள். அடுத்த வாரத்தில், அவளுடைய தாய் தந்தையர்களும், உடன் பிறந்தவர்களும் வந்து சேர்ந்தார்கள். அவள் தாய் ஒரு கொடிய நீலி. பொல்லாத சூதுக்காரி. ஒருவருக்கும் பயப்பட மாட்டாள். அவள் நினைத்ததை எதிர்க்க ஒருவரும் துணிய மாட்டார்கள். சாந்த குணமுள்ள அவளுடைய கணவர், அவள் முன்பு, பூனையைக் கண்ட எலிபோற் பதறி நடப்பார். அவளுடைய குழந்தைகளோ, அம்மா சொல் தட்ட மாட்டார்கள். அவர்கள் தங்கள் மகளைப் பார்த்துப் போக வந்தார்க ளென்று, நான் நினைத்திருந்தேன். அப்படியன்று; மறுநாள் நடந்த சம்பாஷணையால், வந்த கருத்து வெளிப் பட்டது. 

சாயங்காலம் நாங்கள் எல்லோரும் சமையல் அறைப் பக்கத்தில் தலை வாரிக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். என் தகப்பனாரும்,குட்டியம்மாளின் தகப்பனாரும், நாங்கள் இருந்த இடத்திலிருந்தே அவர்களுடன் பேசும் படிக்கு, நடையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். குட்டியம்மாளின் தாயாகிய விசாலாக்ஷி அம்மாள் பேசத் தொடங்கினாள்:- 

“ஏன் காணும் மாப்பிள்ளை! இப்பொழுது தங்கம் விலை யென்ன?”

“பவுன் பதினைந்து ரூபா; விலை உயரலாம்; இறங்குவதற்கு இடமில்லை ” என்றார், என் தகப்பனார். 

விசாலாக்ஷி:- “ஆனால் உயர்வதற்கு முன்பாக நம்ம குட்டிக்கு ஒரு பவுன் மாலை செய்து போடவேண்டும். வெறும் கழுத்து விகாரமா யிருக்கிறது, எங்கள் ஊர்த் தட்டான் நல்ல வேலைக்காரன். நகைகள் வெகு நேர்த்தியாய்ச் செய்கிறான். சங்கரையர் பெண் காமாக்ஷிக்கு அறுநூறு ரூபாவுக்கு ஒரு பவுன் மாலை அவள் புருஷன் செய்து போட்டிருக்கிறான். அவனுக்கு மாதம் முந்நூறு ரூபா கிடைக்கிறது.” பெரு மூச்சு விட்டுக் கொண்டு: “இம்! இவளை முதலில் அவனுக்குக் கேட்டார்கள். அதிர்ஷ்டம் வேண்டாமா? இனி மேற் சொல்லிக் கதை என்ன? என்னிடத்தில் அறுநூறு ரூபா கொடும், நான் செய்து அனுப்புகிறேன்.”

என் தகப்பனார்:- “இரண்டு மூன்று வருஷம் கழித்துப் பார்ப்போம். முத்துவுக்கும் சுப்பிர மணியனுக்கும் கலியாணம் செய்ய வேண்டியிருக்கிறது. பணமோ கையிலில்லை. இந்தச் சமயத்தில் நான் அறுநூறு ரூபாவுக்கு எங்கே போகட்டும்? அன்றியும்,என் தரத்துக்கு, அறுநூறு ரூபாவுக்குப் பவுன் மாலை செய்தால் ஊரார் கை தட்டிச் சிரிப்பார்கள். பண்ணைக் கேசவையர் பெண்ணுக்குக் கூட மொத்தம் அறுநூறு ரூபாவுக்கு நகையில்லையே. அப்படி யிருக்க” 

விசாலாக்ஷி:- “அப்படியு மிருந்தது, இப்படியு மிருந்தது! கிடக்கிறான் கைம் பெண்டாட்டி! பண்ணையா ரென்றால் எனக்கென்ன? இவனைப் போல் நூறு பண்ணை யாரை நான் பார்த்திருக்கிறேன். என் குழந்தை குட்டி யை விட இவன் பெண் உயர்த்தியோ? என் குழந்தை இந்த வயதில் நகையில்லாம லிருப்பதோ சரி? உம்முடைய குழந்தைகளுக்குக் கலியாணம் செய்தாலும் செய்யாமற் போனாலும் எனக்கென்ன? பவுன் மாலை இப்பொழுது செய்து தீர வேண்டும். ” 

என் தகப்பனார் :- “பவுன் மாலை செய்வதற்குத் தடை யொன்று மில்லை. இப்பொழுது முடியாதென்று தான் சொன்னேன். சர்க்கார்த் தீர்வை கூடச் செலுத்தி யாக வில்லை” என்றார்.

உடனே குட்டி யம்மாளின் தமக்கை யொருத்தி சொன்னதாவது:- “அம்மா; வீண் பேச்சுப் பேசுவதேன்? நான் அப்பொழுதே சொல்ல வில்லையா? இவர்கள் வீட்டுக்குக் காளை போல் உழைப்பதற்கு நம்ம குட்டியை விட்டு விட்டோம். அவளுக்கேது நகை? சோறு போட்டாற் போதாதா? செல்லக் குழந்தை சுப்பிரமணியனுக்கு அருமைக் கலியாணம் செய்ய வேண்டாமா?” என்று கொடுமையாய்ச் சொன்னாள். 

என் தமயனைத் தூஷித்தவுடன், அடங்காக் கண்ணீர் பெருக, நான், கோபத்துடன், முன்பின் யோசியாமற் சொன்னதாவது:- “சுப்பிரமணியன் எங்களுக்கு அருமை தான். அவன் எங்கேயோ போய் வாசித்துக் கொண்டிருக்கிறான். அவனைப் பற்றி யேன் பேசுகிறீர்கள்? ” என்றேன். உடனே விசாலாக்ஷி யம்மாள், அன்பாய்ப் பேசுவது போல், “அம்மா! தங்கப் பெண்ணே! முத்து மீனாக்ஷி! நீயும் அருமை தானே ?” யென்று கேட்க, குட்டியம்மாள், “சீ! சீ! அவள் எருமை” என்றாள். எனக்குக் கோபமும் வெட்கமும் அதிகரிக்க, நான் சொன்னதாவது:- “நானும் அருமையாய்த்தான் வளர்ந்து வந்தேன். உங்கள் பெண் இந்த வீட்டுள் காலெடுத்து வைத்த நாள் முதல், கலகமே தவிர வேறில்லை. அவள் தான் என் அத்தையம்மாளையும் துரத்தி, என் அருமையையும் கெடுத்தாள். அவளை விட அருமையாகத் தான் என்னை வளர்த்து வந்தார்கள். தேவடியாள் மினுக்கு மினுக்கிப் பெண்களை விற்பது எங்களுக்குத் தெரியாது.” என் தகப்பனார், “வாயை மூடிக் கொண்டிரு” என்று கோபமாய்ச் சொன்னார். மற்றவர்கள் எல்லோரும், “முத்தம்மாளை விற்றால் உழக்குத் தவிடு கூடக் கிடைக்காது” என்றும், “மாட்டுக்குப் புல்லறுக்கக் கூட உதவ மாட்டாள்” என்றும், “அவளேன் புல்லறுக்க வேணும்? இராணி மகன் அவளைத் தான் கலியாணம் செய்து கொள்ள விரும்புவதாக இன்று கடிதம் வந்திருக்கிறது” என்றும், “சீ! உனக்குத் தெரியாது, இராணி மகனுக்குக் கலியாணம் ஆய்விட்டது, பொய் சொல்லாதே; இராணி பேரனுக்குத் தான் இவளைக் கலியாணம் செய்து கொடுக்கப் போகிறார்கள்” என்றும், பல விதமாய்க் கேலி பண்ணிக் கொண்டிருந்தார்கள். நானோ ஒரு மூலையில் அழுது கொண்டு நின்றேன். என் தகப்பனார் தலையைக் கவிழ்ந்து கொண்டு உட்கார்ந்திருந்தார். 

கொஞ்ச நேரத்துக்குப் பின், விசாலாக்ஷி யம்மாள் மறுபடியுஞ் சொன்னதாவது:-“மாப்பிள்ளை! இதெல்லா மிருக்கட்டும்; நீர் பணம் தர வேண்டாம். கலியாணத்துக்கு முன், என் பெண் பெயருக்கு இரண்டாயிர ரூபா விலையுள்ள நிலம் எழுதி வைத்தீரே; அந்த நிலத்தின் இது வரை யுள்ள வருமானத்தைக் கொடும். அதைக் கொண்டு பவுன் மாலை செய்து கொள்ளுகிறோம்.” 

என் தகப்பனார்:- “அந்த நில வருமானத்தை நீக்கி விட்டால், சோற்றுக்குக் கூடப் போதாதே” என்று, கண்ணீர் தளும்பச் சொன்னார். 

விசாலாக்ஷி:- அடி செருப்பாலே, ஆற்றுக்கு அப்பாலே! நன்றாய்ச் சொன்னாய்! சோற்றுக் கில்லாத கைம் பெண்டாட்டிக்கு மூன்றாம் கவியாணம் ஏனோ? இவனுக்கோ என் பெண்மணியைக் கொடுத்தேன்! கழுதைக்குத் தெரியுமோ கற்பூர வாசனை? என் பெண் உனக்குச் சோ றும் போட்டுக் கொண்டு, அடியும் பட்டுக்கொண்டிருப்பா ளென்று நினைத்தாயோ? சென்ற செவ்வாய்க் கிழமை இராத்திரி ஏன் அடித்தாய்?” என்று கேட்டாள். 

(அடித்த சங்கதி எனக்கு அதுவரையும் தெரியாது.]

என் தகப்பனார் :- உங்கள் பெண்ணிடத்திலேயே கேளுங்கள். நான் சாயங்காலம் கொல்லை வழியாய் வரும் பொழுது, கீரைப் பாத்திக்குப் பக்கத்தில் இவள் இராமையருடன் பேசிக்கொண்டிருந்தாள். இராமையருடைய குணம் உங்களுக்குத் தெரியாது. அவர் கெட்ட நடத்தையுள்ள துஷ்டர். இந்த ஊர்க் குலப் பெண்கள் ஒருவரும் அவருடன் பேச மாட்டார்கள். யோக்கியர்கள் அவரைத் தங்கள் வீட்டுக்குள் வரவொட்டார்கள். அப்படிப் பட்ட மனிதனிடத்தில், அயலூர்ப் பெண்ணாகிய இவள் பேசிக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டவுடன், இராமையர் திடுக்கிட்டு ஓடிப்போய் விட்டார். நான் இவளைக் கேட்க இராமையருக்கும் தன் தமயன் சாமிநாதனுக்கும் இஷ்டமென்றும், ஆகையால் தஞ்சாவூரி லிருந்து கடிதம் வந்ததோ வென்று கேட்டுக்கொண்டிருந்ததாயும் சொன்னாள். நான் அதெல்லாம் கூடாதென்று சொல்ல, அவள் கேட்காமல் தகாதபடி பேசினதினால் அடித்தேன். 

விசாலாக்ஷி:- “இந்தக் கிழட்டுப் பிணத்தைக் கட்டி யழவும் வேண்டாம்; அடிபடவும் வேண்டாம். ஒரு வேளையில்லா விட்டால் ஒரு வேளை கொன்று விடுவன். குட்டி, உன் நிலத்தை விற்றுவிட்டு நம்மூருக்குப் போவோம் வா. இவன் எக்கேடு கெட்டாவது இரந்து குடிக்கட்டும்” என்று சொல்லிக் கொண்டே யெழுந்திருந்தாள். 

விசனகர மானதை விவரித்துக் கூற வேண்டாம். என் தகப்பனார் வியாபாரத்திற் சம்பாதித்த பொருளைக் கொண்டு வாங்கின நிலமானதால், அவர்கள் விற்றதைத் தடுக்க முடியவில்லை. சமாதானஞ் செய்யும் பொருட்டுத் தன்னிடத்தில் வந்த ஊர்க் கிரகஸ்தர்களுக் கெல்லாம், விசாலாக்ஷி யம்மாள், தன் மகளை விட்டு விட்டுப் போனால் என் தகப்பனார் அவளைக் கொன்றுவிடுவாரென்று போக்குச் சொல்லி விட்டு, நிலம் விற்ற பணத்தை யெடுத்துக் கொண்டு, தன் மகளையுங் கூட்டிக் கொண்டு, தஞ்சாவூர் போய்ச் சேர்ந்தாள். 

குட்டியம்மாள் போகவே, என் அத்தையம்மாள் வந்தாள். அவள் வந்தவுடன் என்னை மார்போடணைத்துக் கொண்டு அழுகையில், எனக்கு ஆநந்தக் கண்ணீர் பெருகிற்று. ஆனால், என் தகப்பனாரோ, அது முதல் தீராத துக்கத்தில் ஆழ்ந்திருந்தார். வெளியே போகிறதே யில்லை. தாம் பாடு பட்டுத் தேடிய பொருளும், தாம் ஆசைப் பட்ட பெண்டாட்டியும் போனது மன்றி, அவமானமும் தரித்திரமும் வந்து சேர்ந்தன. அவர் முக்காடு போட்டுக் கொண்டு படுத்திருக்கும் பொழுதாவது, அல்லது தலையைக் கவிழ்ந்து கொண்டு பெருமூச் செறியும் பொழுதாவது அவரைப் பார்த்தால், எனக்குக் கண்ணீர் தாரை தாரை யாய்ப் பெருகிவிடும். ஐயோ! இறந்து போன தாயாருக்குத் துக்கப் பட்டதைப் பார்க்கிலும், உயிரோடிருந்த தகப்பனாருக்கு நான் அதிகமாய்த் துக்கப்பட்டேன். 
 
குட்டியம்மாள் வந்து கொஞ்ச நாள் முதல், அவர் என்னிடத்தில் அதிகமாய்ப் பேசுகிற தில்லை. அவள் போன பின்பும், துக்கத்தினாலும், அவளால் நான் பட்ட கஷ்டங்களை நினைத்தும், முன் போலவே, கொஞ்சி விளையாடிப் பேசாம லிருந்தார். ஒரு நாள் அவருக்கு ஒரு கடிதம் வந்தது.நான் தபாற்காரனிடத்திலிருந்து அதை வாங்கி அவர் கையிற் கொடுத்து விட்டு, மூக்குக் கண்ணாடி யுங்கொண்டு வந்து கொடுத்தேன். அவர் அதை வாசித்து விட்டுக் கீழே யெறிந்தார். நான் பதறிக் கொஞ்ச தூரத்தில் நின்றேன். அவர் அதை மறுபடியும் எடுத்து வாசித்து, முன் போலவே யெறிந்து விட்டு, கைகளால் தலையைத் தாங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். நான் அவருக்குக் கண்ணீர் பெருகுவதை யறிந்தேன். எனக்கும் கண்ணீர் பெருகிற்று. அவர் பெருமூச்சு விடுவதை நான் கடிதத்தை யென்னாற் பொறுக்க முடிய வில்லை. மறந்து விட்டேன். அவரைக் கட்டிக் கொண்டால் துக்கம் தணியு மென்று நினைத்தேன். உடனே ஓடிப் போய் அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டேன். இருவரும் ஒன்றுஞ் சொல்லாமல் விசித்து விசித்து அழுதோம். அவர் தம் மார்போடு என்னை யிறுகத் தழுவிக்கொண்டார். கொஞ்ச நேரத்துக்குப் பின் நான் அழுது கொண்டே சொன்னதாவது:- “அப்பா! நீர் ஏன் விசனப் படுகிறீர்? நீரே விசனப்பட்டால் நான் என்ன செய்வேன்? அத்தையம்மாள், குட்டியம்மாளால் தரித்திரம் வந்த தென்று சொன்னாள். நமக்குச் சாப்பாட்டுக்குக் காணாதா? கொல்லம் வியாபாரத்திற் கிடைக்கும் பணம் நமக்குப் போதுமே. எங்கள் கலியாணத்திற் கென்ன; என்னைக் கன்னிகா தானம் செய்ய வேண்டாம்; எனக்கு ரூபா வாங்கினால், அதுவே என் கலியாணச் செலவுக்கும், அண்ணா கலியாணத்திற்கும் போதும். பிற்பாடு அவன் சம்பாதிக்க மாட்டானா? நீர் வீணாய் மனதைப் புண்படுத்திக் கொள்ள வேண்டாம்” என்றேன். அவர் என்னை முன்னிலும் இறுகத் தழுவிக் கொண்டு அதிகமாய் அழுதாரே யொழிய, ஒன்றுஞ் சொல்ல வில்லை. அதற்குள் அத்தை யம்மாள் வாய்க்காலி லிருந்து வந்து சேர்ந்தாள். அவள் எங்களிருவரையும் பார்த்தவுடன் மனம் நடுங்கி, “அப்பா! சங்கரா! என்ன விசேஷம்? ஏது கடிதம்? குழந்தை மணியன் சௌக்கியமோ?” என்று கேட்டாள். எனக்கு அப்பொழுது தான் கடிதம் ஞாபகத்திற்கு வந்தது. தகப்பனார் பதிற் சொல்வதற்கு முன், ஒரு நிமிஷத்தில் என் மனம் பட்ட துன்பம் சொல்ல முடியாது. அவர் மறுமொழி, நடுக்காட்டில் தாகத்தினாற் களைத்து விழுந்த பிரயாணிக்குத் தண்ணீர் எப்படி யிருக்குமோ, அப்படி யெனக் கிருந்தது. அவர் சொன்னதாவது :- “குழந்தை சௌக்கியமா யிருக்கிறான். கொல்லம் வியாபாரம் முழுகிப் போய் விட்டதாய்க் கடிதம் வந்திருக்கிறது. சொற்ப வருமானமும் போயிற்று. இந்த வீடும், ஒரு சிறு வயலுந் தான் மிச்சம். ஐயோ! என் குழந்தைகள் என்ன செய்வார்கள்?” என்று நெற்றியிற் புடைத்துக் கொண்டு, கீழே சாய்ந்து விழுந்து விட்டார். 

இரண்டாம் அதிகாரம் 

என் கொல்லத்துக் கடிதம் வந்து நாலு வாரத்திற்குள் நாங்கள் இராமாபுரத்தை விட்டு வரியூருக்கு வந்து விட் டோம்: எங்கள் குடும்பத்துக்கு அவ்வூரில் நேர்ந்த பல துர்ப் பாக்கியங்களினாலும், என் தமையன் கல்விப் பயிற்சிக்கும் எங்கள் விவாகத்துக்கும் வேண்டிய பணத்தை யெவ்விதமாவது தேட விரும்பியும், என் தந்தை வெளியூர் சேர நிச்சயித்தார். அவருக்குச் சுபாவமாகவேயுள்ள கர்வம் அதிஷ்டக் கேட்டால் அதிகரித்துத், தமக்கு ஆறுதல் சொல்ல வந்து இஷ்டர்களைத், தம்மைக் கேலி பண்ண வந்தவர்களாக வெறுக்கத் தொடங்கினார். இவ்விதக் கோபம் வரவரப்பொறுக்க முடியாததாக, எவ்விதமேனும் பணஞ் சம்பாதிக்க வேண்டு மென்ற பேராசை அவர் மனத்திற் குடி கொண்டது. அவர் எங்களுடன் சரியான படி பேசுகிறதில்லை; நன்றாய்ச் சாப்பிடுகிறது மில்லை. எப்பொழுதும் தலையுங் கையுமாய் ஆலோசனையி லாழ்ந்திருந்தார். 

இவ்விதம் இரண்டு வாரங் கழிந்த பின்பு, அவர், ஒரு நாள் என் அத்தை பிடத்திற் சொன்னதாவது:-“சங்கரீ! நான் சொல்வதை ஊடே தடுக்காமற் கேள். இந்த வீட்டையும், மீந்த வயலையும் விற்று விடப் போகிறேன். இவ்வூரில் இனிமேல் என்னால் இருக்க முடியாது. குழந்தைகள் உன்னுடன் வரியூரி லிருக்கட்டும். அவர்களுடைய சாப்பாட்டுச் செலவுக்கு நான் பணமனுப்புகிறேன். மணியனுக்குப் பள்ளிக்கூடச் சம்பளம் இல்லாமற் செய்ய முயற்சிக்க வேண்டும். ஆனால் ”நீர் எங்கே போகிறீர்?” என்று நான் கேட்டேன். அவர் உடனே:- “பேசாதே, முத்து! சங்கரீ கேள் : நான் திருவனந்தபுரத்துக்குப் போகிறேன். நிலம் விற்ற பணம் உன்னிட மிருக்கட்டும். அதைக் கொண்டு எப்படியாவது முத்துவுக்குக் கலியாணத்தை முடித்து விடு: மணியனுக்குப் பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம்” என்றார். என் அத்தையம்மாள், தன்னாலான மட்டும் அவர் திருவனந்தபுரத்திற்குப் போகக் கூடா தென்றும்,பிள்ளை யிருக்கும்பொழுது வயலை விற்றாலும் வீட்டை விற்கக் கூடாதென்றும், அவர் விருத்தாப்பிய காலத்தில் ஓரிடத்திற்கும் போகாமல், தன் கஞ்சியைப் பங்கிட்டுக் குடித்துக் கொண்டிருக்க வேண்டுமென்றும், பலவிதமாய்ச் சொல்லியும், கான் கூடத் திருவநந்தபுரத்திற்குப் போவேனென்றழுதும், ஒன்றும் பயன்படவில்லை. அவர் வீட்டையும் வயலையும் விற்றுப் பணத்தை என் அத்தை கையிற் கொடுத்து, என்னை யவளுடன் அனுப்பி விட்டுத், தாம் வரியூருக்கு எங்களுடன் வந்து என் தமயனைக் கூடப் பாராமல், நேராகத் திருவனந்தபுரத்திற்குப் போய் விட்டார். 

எங்கள் குடும்பத்துக்கு வந்த துர்ப்பாக்கியம், எனக்கு நல்லதாகவே யிருந்தது. என் அத்தையம்மாள் என்னையும் என் தமயனையும் மிக்க அன்புடன் நடத்தி வந்தாள். என் தமயன் கூட இருந்ததனால் நான் அளவற்ற மன மகிழ்ச்சியை யடைந்தேன். என் சிறிய இருதயத்திலுள்ள ஆசையை யெல்லாம் அவன் பேரிலும், என் அத்தை பேரிலுஞ் செலுத்தினேன். அத்தை யம்மாளிடத்தில் வீட்டு வேலை கற்றுக் கொள்வதிலும், என் தமயன் வாசிப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதிலும், நான் சந்தோஷத்தை யடைந்தேன்.என் அத்தையம்மாளை விட அன்புள்ளவர்களும்,என் தமயனிலும் படிப்பில் தேர்ந்தவர்களும், எங்கும் கிடையாரென்பது என் எண்ணம். கதைப் புஸ்தகங்களைத் தான் வாசித்த பின், மணியன் எனக்குச் சொல்லுங் கதைகளைக் கேட்டு, எனக்குப் படிப்பில் ஆசையுண்டாயிற்று. ஆனால், பெண்கள் படிப்பதை நான் அப்பொழுது பார்த்ததில்லை. 

மணியனுக்குச் சுந்தரேசன் என்றொரு சிநேகிதனிருந்தான். அவனும் மணியனும் பள்ளிக் கூடத்தில் ஒரே வகுபபைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பிரிகிறதே யில்லை. அவர்களிருவரு மொன்றாய் வாசித்து, எங்கள் வீட்டிலேயே படுத்துக் கொள்வது வழக்கம். அவனுக் குக் கலியாண ம் முடிய வில்லை. என் அத்தை யம்மாள், என்னை அவனுக்குக் கலியாணஞ் செய்யலா மென்று வேடிக்கையாய்ச் சொல்வ துண்டு. அவனும், வேடிக்கையாய், என்னைப் “பெண்டாட்டி” என்றழைப்பான். அவனுக்கும் மணியனுக்குஞ் சமவயது. ஒருநாள் அவர்கள் ஒரு இங்கிலீஷ் புஸ்தகம் வாசித்துக் கொண்டிருந்தார் கள். அவர்களுடைய சந்தோஷத்தையும், சிரிப்பையும்; அவர்கள் சில பாகங்களைக் கோபத் தொனியிலுஞ், சில பாகங்களை இரக்கத் தொனியிலுஞ், சில பாகங்களை உரத்துப் பிரசங்கிப்பது போலும், வாசிப்பதையும்; சில சமயங்களில் அப்புஸ்தக மெழுதினவரைப் பற்றிப் புகழ்வதையும் பார்த்து, நான் திறந்த வாயுடனும் விரிந்த கண்களுடனும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் கொஞ்சம் நிறுத்தினவுடன், “என்ன வாசிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். உடனே சுந்தரேசன் சொன்னதாவது:- “நீங்களும் பெண்களென் றிருக்கிறீர்களே! நன்றாய்ச் சட்டி சுறண்டுவீர்கள். அதற்குத் தான் பிரயோசனப் படுவீர்கள். பெண்ணென் றிருந்தால் ஐடாவைப்போலிருக்க வேண்டும். ஓ! ஐடா! ஐடா! – முத்து மீனாக்ஷீ! நானினிமேல் உன்னைப் ‘பெண்டாட்டி’ என்று கூப்பிட மாட்டேன். நீயும் ஐடா வைப் போல் ஆனால் தான் நானுன்னைக் கலியாணஞ் செய்து கொள்வேன்” என்று என் முதுகில் தட்டினான். அவன் கலியாணம் என்று சொல்வது வேடிக்கையாகத் தானென்று எனக்குத் தெரியும். ஆனால், அவன் வழக்கம் போது அழையாமல், என் பெயரா லழைத்தது என் காதுக்கு விநோதமா யிருந்தது. எனக்குத் தன்னை யறியாமல் துக்க முண்டாயிற்று. மணம் புரிந்திருந்த புருஷனை யிழந்தது போல் நினைத்தேன். அடங்காத துக்கத்துடன், “ஐடாவென்றா லென்ன?” என்று கேட்டேன். அதற்கு அவன் பதிற் சொன்னதாவது:- 

“ஓர் அரசனுக்கு ஐடா என்றொரு புத்திரியிருந் தாள். உன்னைப்போலிருக்கும் பொழுதே, அவளை அயல் தேசத்து இராச புத்திரனுக்குப் பிற்பாடு கலியாணஞ் செய்து கொடுப்பதாக, அவ்வரசன் வாக்குக் கொடுத்திருந்தான். உன் அத்தை எனக்குச் சொல்வது போலன்று. கள்ளச் சிறுக்கி! உன்னை எவன் கலியாணஞ் செய்து கொள்ளப் போகிறானோ ஒருவன் வருகிறவரையுமாவது, நான் பெண்டாட்டி யென்று கூப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால், ஐடா வை நிச்சயமாக அவ் விராசகுமாரனுக்கே கொடுப்பதாகத் தீர்மானிக்கப் பட்டிருந்தது. ஐடா கல்வியில் தேர்ச்சியடைந்தாள். தக்க வயது வந்தவுடன், அந்தக் கலியாணத்துக் கிசையாமல், பெண்பிள்ளைகளைப் புருஷர்கள் தங்கள் அடிமைகளைப் போல நடத்துவதை வெறுத்து, அவ் விழிவான நிலைமையினின்றும் மாதர்களை விடுவிக்கும் பொருட்டு ஒரு சர்வகலாசாலையை யேற்படுத்தினாள். அப்பள்ளிக் கூடத்துக்குள் புருஷர்களை விடுகிறதே யில்லை. வாத்தியார் வேலை முதல் நிலம் உழுகிற வேலை வரையும்,எல்லாவற்றையும் பெண்பிள்ளைகளே பார்த்து வந்தார்கள். ஆனால் அவ்விராசகுமாரனோ, பாலிய மோகத்தால் வருத்தமடைந்து, வேறு வழி யின்றி, இரண்டு சிநேகிதர்களுடன் பெண் வேஷம் பூண்டு, கற்க விரும்புவார் போல் அப்பள்ளிக் கூடத்துக்குட் சென்றான். ஐடாவைக் கண்ட மாத்திரத்தில், அவன் ஆசை அளவின்றிப் பெருகிற்று. கடைசியாய், மூவர்களுடைய பாசாங்குங் கண்டு பிடிக்கப்பட்டு, அவர்கள் வெளியே துரத்தப்பட்டார்கள். அதன் பின், ஐடாவைத் தொந்தரவு செய்ததற்காக, அவளுடைய சகோதரர் புரிந்த சண்டையில், அவ்விராசகுமாரன் காயங்களான மூர்ச்சித்தான். வெட்டுண்டவர்கள் பள்ளிக் கூடத்துக்குள் எடுத்துக் கொண்டு போகப் பட்டு, அங்கேயே சொஸ்தப் படுத்தப் பட்டார்கள். இராசகுமாரனை, ஐடாவே சொஸ்தப் படுத்தினாள். ஐடா, புருஷரை முற்றிலும் வேறாகப் பிரித்தது இயற்கைக்கு விரோதமான தென்றும், பெண்களின் நிலைமை யை விருத்தி செய்ய வேண்டியது முக்கியமா யிருந்தா லும், அதன் பொருட்டுக் காதலைப் பழித்தல் சரியல்ல வென்றும், பெண்களின் நிலைமையை விருத்தி செய்யாமல் புருஷர்கள் மாத்திரம் விருத்தி யடைவது முடியாத காரிய மென்றும், அக்காலத்தில் தான் அறிந்தாள். அவ்விராச குமாரன் பிழைக்கும் பொருட்டு, அவனுக்கு ஓர் அமிர்த சஞ்சீவி கொடுத்தாள். அதென்ன வெனில், அவள் அவனைக் கலியாணஞ் செய்து கொண்டாள். பெண்டாட்டி! நான் சொல்லுகிறது அவ்வளவு நன்றாயிராது. இங்கிலீஷில் வாசித்தால், இக்கதையின் அழகு வெளிப்படும். இந்த ஜன்மத்தில் நீ யிதைப் போன்ற புஸ்தகங் களின் இன்பத்தை அநுபவிக்கப் போகிறதில்லை. நீ கொடுத்து வைத்தது இவ்வளவு தான்” என்று, விசனத்துடன் சொன்னான். 

உடனே நான்:- “தமிழே தெரியாது. நீங்கள் சொல்லிக் கொடுக்கா விட்டால் எங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றேன. 

அதற்கு அவன்:-“இன்று முதல் நீ படிக்கிறதா யிருந்தால் நான் சொல்லித் தருகிறேன்” என்றான். 

என் தமயன்:- சுந்து ! நேற்று நீ சிறுவர் சங்கத்’துக்கு வரவில்லையே. ‘பெண் கல்வி’யைப் பற்றி ஒரு தர்க்கம் நடந்தது. பெண்களைக் கற்பித்தால் அவர்கள் கடித மூலமாய்ச் சோர நாயகர்களைத் தேடுவார்க ளென்றும், தங்கள் கணவர்களுக்குக் கீழ்ப் படிந்து நடக்க மாட்டார்களென்றும், வீட்டு வேலை செய்ய மாட்டார்களென்றும், உத்தியோகஞ் செய்யப் போகாதவர்களுக்குப் படிப்பு ஆவசியக மில்லை யென்றும், நம்முடைய பாட்டியார்கள் படிக்கவில்லை யென்றும் கணபதி வாதாடினான். அதற்கு நீ யென்ன சொல்லுகிறாய்? 

சுந்தரேசன்:- ஓகோ! அப்படியா? நானில்லாமற் போனெனே. நான் சொல்வதைக் கேள். பெண்டாட்டி! நீயுங் கேள். கற்றிருந்தால் சோர நாயர்களைத் தேடுவார்கலென்பது வீண் பேச்சு. தங்கள் நாயகர்கள்மேல் இஷ்டமில்லாத பெண்கள், மூடர்களா யிருந்தால், ஒரு வேளை வேறு புருஷர்களைத் தேடுவார்கள். ஆனால், சரியாய்க் கற்றுணர்ந்தவர்கள் ஒரு பொழுதும் அப்படிச் செய்ய மாட்டார்கள். கல்வியும் நாணத்தைப் போல் ஒரு கவசமாகிவிடும். அன்றியும், எழுதத் தெரியாத ஒரு குறையினால் மாத்திரம் வேறு நாயகளைத் தேடாமலிருக்கும் மனைவி இருந்தென்ன, இறந்தென்ன? அது வீண் முகாந்தரமே. கற்றிருந்தால் வீட்டு வேலை செய்யக் கூடாதா? தன் வீட்டில் வேலை செய்தல் ஊழியமாகுமோ? அவ் வெண்ணம் அற்பப் படிப்பைச் சேர்ந்தது. கல்வி, பணம் சம்பாதிக்கும் பொருட்டுத்தா னென்பது மூடத்தனம். பணத்திலும் கல்வி சிறந்ததல்லவா? அன்றியும், புத்திரர்கள் சிறந்த புத்தி யுள்ளவர்களா யிருக்க வேண்டுமாயின், தாய் தந்தையர்களும் அப்படி யிருந்தாலன்றோ கூடும்? பாறையின் மேல் நெல் விளையுமோ? உழுது உரமிடப்பட்ட நிலமன்றோ வேண்டும்? 

மணியன்:- சரி; மற்ற முகாந்தரங்களுக்கு என்ன சொல்கிறாய்? 

சுந்தரேசன்: -“பெண்கள் கீழ்ப்படிய மாட்டார்களே என்பது வீண். சரியான காதலிருந்தால் அவ்வெண்ணமே யுண்டாகாது. அவர்களென்ன அடிமைகளா? இருவர் மனமும் ஒத்தலன்றோ சரி? அதற்குக் கல்வி முக்கியமானது. அதில்லாம அண்டாகும் கீழ்ப்படிதல், பயத்தினாலும், வழக்கத்தினாலு முண்டாவதே; மன விருப்பத்தினா லுண்டாவதன்று. புருஷனும் தக்கவனாயிருக்க வேண்டும். நேசமிருந்தால் மற்றவை யெல்லாம் தானே வரும். நமது பாட்டியார் படிக்கவில்லை யென்பதைக் கேட்க எனக்குச் சிரிப்பு வருகிறது. முற்காலத்திற் பெண்கள் கல்வித் தேர்ச்சியடைந்திருந்தார்களென்பதற்கு அநேக ஆதாரங்க ளிருக்கின்றன. அப்படி யில்லாவிட்டாலுந்தா னென்ன? மூன்னோர்கள் மூடர்களா யிருந்தால் நாமும் அப்படியே யிருக்க வேண்டுமா? இதென்ன புதுமை! 

“தம்மில் தம்மக்கள் அறிவுடைமை, மா நிலத்து 
மன்னுயிர்க் கெல்லாம் இனிது” 

என்று குறளிற் சொல்லி யிருப்பதாக நம் தமிழ் வாத்தியார் அன்று சொல்ல வில்லையா? அது பெண்களுக்கும் பொருந்தாதா? அவ்வெண்ண மிருந்தால் ‘அபிவிருத்தி’ யென்ற சொல்லே வேண்டாம்” என்றான். 

அன்று முதல், சுந்தரேசன் எனக்குத் தமிழும் கணக்கும் கற்பித்து வந்தான். அது கூடாதென்று என் அத்தை முரண்டவில்லை. முதலில் படிப்பது வருத்தமா யிருந்தது. என் தமயன், “உனக்கு மூளையில்லை. அதற்குப் பதிலாய்க் களிமண்தானிருக்கிறது” என்று அடிக்கடி சொல்லுவான். நான் சரியானபடி பாடஞ் சொல்லாவிட்டால், அவனுக்குக் கோபம் வந்துவிடும். புஸ்தகத்தை யெறிந்து விட்டுப் போய் விடுவான். ஆனால்,சுந்தரேசன் அப்படிச் செய்கிறதில்லை. வெகு பொறுமையுடன் சொல்லித் தருவான். அவனுக்குக் கோபமே வராது. நான் இவ் விதமாய்ப் படித்து வந்தேன். 

மேற்கூறியவற்றை, நான் அவ்வயதிலேயே முழுதும் உணர்ந்ததாகக் கொள்ளக் கூடாது. பிற்பாடு பல முறை கேட்டுணர்ந்தவற்றைத் தான் எழுதியிருக்கிறேன். ஒரு நாட் கூடத் தவறாமல், சுந்தரேசன் எனக்குப் படிப்புச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு வந்தான். அக்காலத்தில் நான் அடைந்த திருப்தியையும் மன மகிழ்ச்சியையும் பற்றி எந்த வேளையில் நினைத்தாலும் எளக்குச் சந்தோஷம் உண்டாகின்றது; துக்கமெல்லாம் மாறிப் போய் விடுகிறது. அப்பொழுது, நான் காலையி லெழுந்தவுடன், வீட்டில் நித்தியமாய் உபயோகிக்கப் படும் பாத்திரங்களை யெடுத்துக் கொண்டு வாய்க்காலுக்குப் போய், அவைகளைச் சுத்தி செய்து, நானும் பல் தேய்த்து முகங் கழுவியான பின், வீட்டுக்குத் திரும்பி வருவேன். நான் சுத்திசெய்ததில், அந்தப் பாத்திரங்கள் எவ்வளவுக் கெவ்வளவு பிரகாசத்தை யடைந்தனவோ, அவ்வளவுக் கவ்வளவு எனக்கும் சந்தோஷ முண்டாகும். வீட்டுக்கு வந்து சாப்பிட்டுத் தலையை வாரிப் பின்னிக் கொண்டான பின், என் அத்தை யம்மாளுடன் வாய்க்காலி லிருந்து நீர் மொண்டு கொண்டு வருவேன். நான் பெரிய குடத்தில் ஐனங் கொண்டு வருவதைப் பற்றிக் கர்வத்தை யடைந்திருந்தேன். நான் குதித்துக் குதித்து நடப்பதாக, என் தோழிகள் பரிகாசஞ் செய்வதுண்டு. பிற்பாடு, புஸ்தகமும் ‘சிலேட்’ பலகையும் எடுத்துக் கொண்டு, மாடியில் மணியனும் சுந்தரேசனும் வாசிக்கும் இடத்துக்குப் போவேன். சுந்தரேசன் எனக்கு ஒருமணி நேரம் பாடஞ் சொல்லித் தருவான். சில நாள்களில் மணியன் சொல்லித் தருவான். முந்தினநாட் பாடத்தைச் சரியாய் ஒப்புவித்து விட்ட நாள்களில், எனக்குண்டான கர்வத்தைப் பற்றி நினைக்கும் பொழுது, சிரிப்பு வருகிறது. ஒரு நாள், என் தமயன் போட்ட ஐந்து கணக்கு வினாக்களுக்கும் பிசகாமல் பதிற் சொல்லி விட்டேன். உடனே அடங்காச் சந்தோஷத்துடன் கண்டபடி குதிக்கத் தொடங்கினேன். அவன் விளையாட்டாக: ‘முத்து துள்ளின மாடு பொதி சுமக்கும்.’ அதிகமாய்த் துள்ளாதே. கணக்கு மட்டுந் தெரிந்தாற் போதுமா? இன்னும் ‘கொன்றைவேந்தன்’ ஒப்புவிக்க வில்லையே? நீ இந்தப் படிப்புக்கு இவ்வளவு துள்ளுகிறாயே; அதிகமாய்ப் படித்து விட்டால் என்னமாய் முடியுமோ தெரியவில்லை. உன் சித்தியைப் போல் ஆகமாட்டாயே?” என்றான். குட்டியம்மாளைப் பற்றிக் சொன்னவுடன், வெட்கத்தினால் எனக்குக் கண்ணீர்ப் பெருகிற்று. அவனுக்கு அவளை நன்றாய்த் தெரியாது. நானோ, அவளை முற்றிலும் அறிந்திருந்தேன்.அவள் பெரிய புஸ்தங்களை வைத்து வாசிப்பதை நான் பார்த்திருந்தேன். அவ்வளவு கல்வியோடு அவள் செய்த விஷயங்களைப் பற்றி யோசித்தவுடன், என் கர்வம் எல்லாம் குன்றிப் போய் விட்டது. அப்பொழுது தான், இராமாபுரத்தில் சிலர், ‘குட்டியம்மாள் தனக்கு அர்த்தமாகாத புஸ்தகங்களை வாசித்துத் தெரிந்து கொள்வது போல் பாசாங்கு பண்ணுகிறாள்,’ என்று சொன்னது, மெய்யாயிருக்கலா மென்று நானெண்ணினேன். படித்து விட்டால் வேறொன்றும் வேண்டா மென்ற எண்ணம் என் மனத்திற் குடிகொண்டிருந்தது. கல்வியைப் பார்க்கிலும் சிறந்தது கிடையா தென்று நினைத்திருந்தேன். என் தமயனுடைய வாத்தியாருக்குத் தெரிந்த மட்டும் நானும் படிக்க வேண்டு மென்பது, என் பேராசையா யிருந்தது. அவ்வளவு வாசித்து விட்டால், பிறந்ததன் பயன் பெற்றாய் விடும் என்பது என் எண்ணம். பெரிய புஸ்தகங் களைப் பார்க்கும் பொழுதெல்லாம், நான் பெரு மூச்சு விடுவதுண்டு. இந்த எண்ணத்துடன் நான் சொன்னதாவது:- “அண்ணா! சித்தி மிகப் படித்தவ ளென்று நீ நினையாதே. நம்மூரார் அநேகர், அவளைப் பாசாங்குக்காரி யென்று சொன்னார்கள். மிகப் படித்தவளா யிருந்தால், அவள் அப்படி நடப்பாளா?” என்றேன். உடனே சுந்தரேசன், வாசித்துக் கொண்டிருந்த புஸ்தகத்தை மேசை மேல் எறிந்து விட்டுச் சொன்னதாவது :- 

“ஒகோ! பெண்டாட்டி! உன் எண்ணம் அப்படியோ? இதற்கு முன்பும் இரண்டு மூன்று தடவை பார்த்தேன். படித்து விட்டால் சகல நற்குணங்களும் வந்து விடு மென்று நினைத்திருக்கிறாய். நம்மை யாளும் ஆங்கிலேயர் தேசத்தில் பேக்கன் என்றொரு பிரபு விருந்தார். அவர், கல்வித் தேர்ச்சியிலும் சுயபுத்தியிலும் யாவரிலுஞ் சிறந்தவரா யிருந்தார். உலகத்தில் இதுவரையும் தோன் றிய புத்திமான்கள் ஒருவரும் அவருக்கு ஈடாகா ரென்று சொல்வ துண்டு. அப் பிரபு,தம் புத்தி வல்லமையினால், சிரேஷ்ட நியாயாதிபதியின் ஸ்தானத்தை யடைந்திருந்தார். அவர் அநேக பிரபந்தங்கள் இயற்றியிருக்கிறார். ஆங்கிலேய தத்துவ சாஸ்திரத்துக்கு மூலகர்த்தராக அவரை மதிப்பதுண்டு, அவர் சந்மார்க்க நடைகளைப் பற்றி ஒரு சிறந்த பிரபந்த மெழுதியிருக்கிறார். ஆனால் அப்பிரபுவே, இழிவாயும் அயோக்கியத் தனமாயும் நடந்ததற்காக, நியாயாதிபதி உத்தியோகத்திலிருந்து தள்ளப்பட்டு, அபராதமும் போடப் பட்டார். பார்த்தாயா! அந்த மகாபண்டிதரின் கல்வியெல்லாம் பிரயோசனப் படவில்லை. செல்வம் பொழியும் சிரேஷ்ட நியாயாதிபதி, உத்தியோகத்திலிருந்து கொண்டே லஞ்சம் வாங்கினார். அவர் விஷயத்தில் அவரியற்றிய சந்மார்க்கப் பிரபந்தங்க வெல்லாம் ‘ஏட்டுச் சுரைக்காய்’ ஆய் விட்டன. அவருடைய கல்வித் திறமையையும் புத்தி விசாலத்தையும் பற்றி யோசிக்கும் பொழுது, உன் படிப்பும் என் படிப்பும் எம்மட்டு? அப்படி யிருந்தும், தாழ்ந்த ஸ்திதியிலிருக்கும் கல்விப பயிற்சி யில்லாத அநேகர், தங்கள் நாணயமான செய்கைகளால், அவரை மிஞ்சி விட்டார்கள். படிக்கிறோ மென்று கர்வங் கொள்ளாதே. சற்குணம் கல்வியிலுஞ் சிறந்தது. அதைத் தான் எவ்விதமாவது தேட வேண்டும். மணியா! ஒன்பது மணியாய் விட்டது. இனிமேல் ஸ்நர்நம் பண்ணிச் சாப்பிட்டு விட்டுப் பள்ளிக் கூடத்துக்குப் போக வேண்டாமா? வாய்க்காலுக்குப் போவோம் வா” என்று சொல்லிக் கொண்டே சுந்தரேசன் எழுந்திருந்தான். 

அவர்கள் பள்ளிக் கூடத்துக்குப் போயிருக்கும் வேளைகளில், நான்,என் தோழிகளுடன் ‘பல்லாங்குழி,’ கட்டம், ‘சோகி,’கழச்சி, முதலியவை விளையாடு வேன்; அல்லது, என் அத்தை யம்மாளிடத்தில், ‘அல்லியரசானி மாலை’, ‘புரந்தரன்களவு மாலை, ‘வள்ளியம்மன் சோபனம்’ முதலிய பாட்டுக்களைச் சொல்லிக் கொள்வேன்; அல்லது, என் பாடங்களைப் படிப்பேன். இவ்விதமாய்க் கவலையற்று வாசித்துக் கொண்டிருந்தேன். 

ஐயோ! அக்காலத்தில், அற்ப விஷயங்களுக் கெல் லாம் தன்னை யறியாமற் பொங்கின சந்தோஷத்தை, இனி மேல் அடையும் நாளும் வருமோ? இனிமேல் ஒரு நாளா வது, அப்படிக் கவலை யற்றிருக்கக் கிடைக்குமோ? அப் பொழுதுங்கூட, முற்றிலும் கவலையற் றிருக்க வில்லை. அண்ணாவாவது, அத்தையாவது, நான் செய்யுந் தப்பிதங் களுக்காகக் கோபித்துப் பேசினால், அன்று முழுவதும் விசனமாகவே யிருக்கும். அதுவும் ஒரு விசனமோ? உடனே கொஞ்சிப் பேசுவார்கள்: மனம் குளிர்ந்து விடும். வீட்டு வேலைகளிலும், பாடங்கள் படிப்பதிலும் உண்டா கும் கவலைக ளெல்லாம், அவை செய்தானவுடன் மாறி விடும். சில சமயங்களில் என் தகப்பனாரைப் பற்றி நினைப்பேன். குட்டி யம்மாளின் தாயார் சொன்ன சொற் களும், அவர் பிற்பாடு பட்ட மனவருத்தமும், கொல்லத் துக் கடிதம் வந்தவுடன் அவரும் நானும் அழுததும், உடனே ஞாபகத்துக்கு வரும கொல்லையில் கிணத்தருகி லாவது, அல்லது மாடியில் ஒரு மூலையிலாவது போயிருந்து கொண்டு விசித்துவிசித் தழுவேன். துக்கம் மூச்சு விட முடியாமல் நெஞ்சை யடைக்கும். கொஞ்ச நேரத்தில் அழுவதின் காரணம் மறந்து போய் விடும்; எதாவது சேஷ்டை செய்து கொண்டே விசித்துக் கொண்டிருப் பேன்; பிற்பாடு அதுவும் தானாகவே நின்று விடும்; விளை யாடவாவது படிக்கவாவது போய் விடுவேன். இவ்வித மாய் இரண்டு மூன்று மாதம் படித்தவுடன், எனக்குத் தமிழ் எழுதக் கொஞ்சம் தெரிந்தது. உடனே என் தகப்பனாருக்குக் கடிதம் எழுத வேண்டு மென்று யோசித்தேன். என் தமயனும் சுந்தரேசனும். நானெழுதிய கடிதத்தைத் திருத்தாமல் அப்படியே அனுப்புவதாகச் சொன்னார்கள். முதற் கடித மெழுத, எனக்கு இரண்டு நாள் பிடித்தது. அது இப்பொழுது என் கைவச மிருக்கி றது. அதைக் கீழே வரைகிறேன். அதில் ஏராளமாய் மைப் பொட்டுக்க ளிருக்கின்றன. எவ்வளவோ எழுத் துக்களை அடித்திருக்கிறேன். அடிக்குத் தப்பின எழுத்துக்களில் அநேகம், கோழி கிண்டினாற் போல் சொரூபம் தெரியாம லிருக்கின்றன. இவற்றை யெல்லாம் அச்சிற் பதிப்பது வருத்தமா யிருப்பதால், கணக்கிட முடியாத அடிகளும் பொட்டுக்களும் இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டும்:- 

கடிதம். 

*யெந்நோட அப்பாவுக்கு சேவுக்குறேன் னாங்கயெ ல்லாரும் சௌக்கியமாய் எருக்கரும் னீற். ஷெ மமாய் எருப்பத்தற்கு யெழுதுணம்னா வாசிக்கரது உமக்கு தெரியாதே என்துசொ ல்லித்ரான் அவன் அண்ணா யிஷ்க்ஷ் டங்கணக்கும் படிக்க ரேந்வேறு. விசக்ஷ மிலை யிப் 

படிகு உம்முடை
யகுழந்தைமுத்
துமீனாக்ஷி.” 

இந்தக் கடிதத்தை அனுப்பும்படி நான் அண்ணா வசம் கொடுத்தவுடன், அவனும் சுந்தரேசனும் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள். நான் அதை அனுப்பக் கூடாதென்று சொன்னேன். அவர்கள் அதைக் கேட்காமல் அனுப்பிவிட்டார்கள். அவர்கள் மறுபடியும் அதிகமாய்ச் சிரித்ததைக் கண்டு நானும் காரணமின்றிச் சிரிக்கத் தொடங்கினேன். அன்று முழுவதும் சிரிப்பாகவே யிருந்தது. 

நான் கடித மெழுதி யொருவார மாகுமுன், என் தகப்பனார் அண்ணாவுக்குக் கடிதமெழுதினார். அந்தக் கடிதத்தையும் கீழே வரைகிறேன்:- 

திருவனந்தபுரம், 

ஆவணிமீ 12.

சிரஞ்சீவி குழந்தை சுப்பிரமணியனுக்கு ஸர்வாபீஷ் டமும் உண்டாவதாக அநேக ஆசிர்வாதம். 

இவடம் க்ஷேமம். அவடத்தில் நீயும் முத்துவும் சங்கரியும் க்ஷேமமா யிருக்கிற விபரத்துக்கு உடனே பதி லெழுத வேண்டியது, நீயும் முத்துவும் எழுதிய லிகிதங் கள் வந்து சேர்ந்தது. பள்ளிக்கூடச் சம்பளம் இல்லாமற் செய்ய முடியவில்லை யென்றும், மிஷன் பாதிரி துரை தய வின் பேரில் அரைச் சம்பளம் கொடுத்து வருகிறதாகவும் எழுதி யிருக்கிறாய். அப்படியே செய்யவும். நான் இன் னும் இரண்டு வாரத்தில் இருபதுஙு உண்டில் அனுப்பு கிறேன். உனக்கு வேண்டிய புஸ்தகங்கள் இரவல் வாங்க வேண்டிய தில்லை. விலைக்கே வாங்கிக் கொள். எப்படி யாவது இந்த வருஷம் பரீக்ஷையை ஒப்பேற்றி விடு. 

யாராவது அவடம் வரும்பொழுது, நல்ல பலாப் பழம் ஒன்று அலுப்புகிறேன். நீ அமிதமாய் கண் முழித்துப் படிக்க வேண்டாம். தேகத்தை சௌக்கிய மாய்ப் பார்த்துக் கொள். 

முத்துவை யார் வாசிக்கச் சொன்னது. பெண்கள் வாசித்தால் கெட்டுப் போவார்கள். அவள் வாசிப்பதை உடனே நிறுத்தவும். சுந்து என்பவன் யார். அவன் வர்த்தமான மென்ன. இது விஷயங்களுக்கும் அவடத்து க்ஷேயாதிசயங்களுக்கும் உடனே பதிலெழுதவும்.நீ உயர்ந்த கிளாஸில் ஒப்பேறினால், மேல் பரீக்ஷைக்கு சம் பல மில்லாமல் வாசிக்கலா மென்று கேள்விப் படுகிறேன். அதற்கு வேண்டிய முயற்சி பண்ணவும். 

வேணும் அநேக ஆசீர்வாதம். 
பத்மநாபஸ்வாமி சகாயம், 
சு.சங்கரய்யர். 

இந்தக் கடிதம் வந்தவுடன், எனக்கு விசனம் இவ் வளவென் றில்லை. குட்டி யம்மாளின் செய்கைகளுக்காக, நான் படிப்பை நிறுத்த வேண்டிய தாயிற்று. 

என் தகப்பனார் கடிதம் வந்தவுடன் நான் படிப்பை நிறுத்த வில்லை. அவரெழுதியதைப் பற்றி எனக்கு விச னம் இருந்ததைப் பார்க்கிலும் சுந்தரேசனுக்கு அதிக மாகவே இருந்தது. படிப்பு வருகிற சயைத்தில் நிறுத்தி விட்டால், பிற்பாடு எல்லாம் மறந்து போமென்று அவன் சொன்னான். என் தமயன், உடனே படிப்பை நிறுத்தி விட வேண்டு மென்று சொன்ன போதிலும், சுந்தரேசன், அவனுக்குப் போதித்து, என் தகப்பனாருக்குச் சரியான படி கடிதமெழுதி அவருடைய சம்மதத்தைப் பெற்றுக் கொள்ளலா மென்று சொல்லி, எனக்கு வழக்கம் போல் படிப்புச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு வந்தான். நாங் கள், ஒரு வாரத்திற்குப் பிற்பாடு, என் தகப்பனாருக்குக் கடிதங்க ளெழுதினோம். அண்ணா எழுதிய கடிதத்தில், நான் கொஞ்சம் எழுதினேன். என் தகப்பனாரைத் தெரி யாத போதிலும், சுந்தரேசனும் அவருக்கு ஒரு கடித மெழுதினான். அவன் எழுகியது அந்தச் சமயத்தில் எங்களுக்குத் தெரியாது. பிற்பாடு தான் நாங்கள் அறிந் தோம். அந்தக் கடிதங்கள் இரண்டையும் கீழே வரைகி றேன்:- 

1.என் தமயன் கடிதம். 

வரியூர்,
ஆவணிமீ 21௨. 

ஸ்ரீமது அப்பா அவர்களுடைய திவ்ய ஸ்ரீ பாதபத் மங்களிலே குழந்தை சுப்பிரமணியன் சாஷ்டாங்க பூர்வீக மாக நமஸ்கரித்து விஜ்ஞாபனம். இவ்விடத்தில் முத்து அத்தை முதலிய யாவரும் சேமம். அவ்விடத் தில் தாங்கள் க்ஷேமமாயிருக்கிற விபரத்துக்கு எழுதி யனுப் பும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். தாங்க ளெழுதிய கடிதம் வந்து சேர்ந்தது. இப் பொழுது 20 ரூபா வேண்டிய தில்லை. இந்த மாதத்தில் 15 ரூபா அனுப்பினால், பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம். எனக்கு எப்.ஏ. பரீக்ஷை இந்த வருஷ மில்லை. அடுத்த வருஷந் தான் பணம் கட்ட வேண்டும். நான் சிரத்தை யுடன் வாசித்துக் கொண்டு வருகிறேன். தேகத்தை சௌக்கியமாய்ப் பார்த்துக் கொள்ளுகிறேன். தாங்கள் உண்டில் அனுப்புவதை இராவுத்தர் கடைக்கு அனுப்பி விட்டால் நான் பெற்றுக் கொள்ளுகிறேன். 

தாங்கள் முத்து படிப்பைப் பற்றி யெழுதினதைக் கேட்டு, அவள் மிகவும் விசனப்படுகிறாள். அவள் படிக்க வேண்டு மென்று ஆசைப் பட்டதினால், நானும் சுந்த ரேசனும் அவளுக்குச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கி னோம். தங்களைக் கேளாமல் அப்படிச் செய்ததைத் தயவு செய்து மன்னிக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். இன்னும் படிப்பு நிறுத்த வில்லை. அவளே இதன் கீழ் எழுதுகிறாள். 

தாங்கள் சுந்தரேசனைப் பற்றி யெழுதி யிருந்தீர்கள்: அவனுக்கு மதுரை. அவன் தமயனார் இவ்விடத்தில் நூறு ரூபா சம்பள முள்ள கச்சேரி உத்தியோகத்தி லிருப்பதால், அவன் இரண்டு வருஷமாய் இவ்விடத்தில் வாசித்துக்கொண் டிருக்கிறான். அவன் தான் என்னுடைய முக்கிய இஷ்டன். எங்கள் வகுப்பில் முதலாவது பையனாயிருக்கிறான். அவன் பந்துக்களில் அநே கர், உயர்ந்த சர்க்கார் வேலைகளி லிருக்கிறார்களாம். நானும் அவனும் ஒன்றாய்ப் படித்துக் கொண்டு வருகி றோம். வேறு விசேஷ மில்லை. 

இப்படிக்கு 
தங்கள் பணிவும் அன்புள்ள 
குழந்தை சுப்பிரமணியன். 

என்நோ டஅப்பாக்கு னமஸ்காரம் பன்றேன் னீ, ற்யெழுதின காகிதம் வ ந்துயெ னக்கு ரொம்ப விஸா மாயிருக்கு நெக்கு வாசிக்க ஆசை யா இருக்குநா ந் கெட்டுப் போகமா ட்டேன்னீற் சம்மதிக்கனம் யெனக்கு யிதை யெழு தரபோ து அழுகைவரது. 

உம்மோடுகு 
ழந்தைமுத் 
துமீனாக்ஷி 

2.சுந்தரேசன் கடிதம். 

ஸ்ரீமது மாமா அவர்களுக்கு அநேக நமஸ்காரம்; இவ்விடத்தில் யாவரும் க்ஷேமம். தங்கள் க்ஷேமத்துக்கு எழுதி யனுப்பக் கேட்டுக் கொள்ளுகிறேன். 

இந்தக் கடிதத்தைப் பார்க்கத் தங்களுக்கு ஆச்சரியமாக  இருக்கும். தங்கள் குமாரன் சுப்பிரமணியன் எழுதி யிருப்பதால், என்னைப் பற்றி நான் ஒன்றும் விசேஷமாய்ச் சொல்ல வேண்டிய தில்லை. தங்கள் கடி தத்தை சுப்பிரமணியன் காட்டிய வுடன், எனக்கு மிக வும் விசனமா யிருந்தது. நான் அந்த விஷயத்தைப் பற்றி என் தமயனாரவர்க ளிடத்திற் சொன்னேன். முத்து மீனாக்ஷி முக்கியமாய் என் மூலம் படிக்க ஆரம் பித்ததினாலும், அதனால் தங்களுக்கு விசன முண்டான் னாலும், நான் தங்களிடத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டு மென்று அவர்கள் சொன்னார்கள். அதன் பேரில் இந்தக் கடிதம் எழுதலானேன். நான் இதை எழுதுவது அவர்க ளொருவருக்கும் தெரியாது. தாங்கள் என்னை மன்னிக்கும்படி வணக்கமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன். 

நான் கொஞ்சமும் பாத்தியப் படாதவனா யிருந்த போதிலும், இன்னும் ஒரு விஷயம் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். தங்கள் குழந்தை படிப்பதை, தாங்கள் தடுக்காம லிருக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். அவ ளுடைய புத்திசாலித்தனத்தையும் படிப்பின் பேரிலுள்ள ஆசையையும் பார்த்துத் தான், நான் படிப்புச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினேன். அதைப் பற்றித் தாங்கள் சுப்பிரமணியன் பேரில் கோபித்துக் கொள்ள வேண்டாம். என் பேரில் தான் கோபித்துக் கொள்ள வேண்டும். என் சகோதரிகள் மதுரையில் படிப்பது போலவே முத்துவுக்கும் படிப்புச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். பிற்பாடு தங்கள் இஷ்டம். தங்களுக்குத் தெரியாததில்லை. அவளுக்குப் படிப்பின்மே லிருக்கும் ஆசையைப் பார்த் தால், நீங்களே சொல்லிக் கொடுப்பீர்க ளென்பது நிச் சயம். நான் அவர்களுடன் அதிகமாய்ப் பழகி விட்ட தால் இவ்வளவு சொல்ல நேரிட்டது. நான் ஏதாவது பிழை செய்திருந்தால், பொறுத்துக் கொள்ளும்படி கேட் டுக் கொள்ளுகிறேன். 

வரியூர், ஆவணிமீ 22. 
இப்படிக்கு தங்கள் பணிவுள்ள 
சுந்தரேசன். 

நாங்கள் கடித மெழுதி யொரு வாரத்திற்குள், என் னிஷ்டப்படி வாசிக்கும்படி என் தகப்பனார் பதிலெழுதி விட்டார். அவர் கடிதத்தில் சுந்தரேசன் கடிதத்தைப் பற்றி யெழுதி யிருந்தபடியால், நான் அவன் வந்தவுடன் அதைப் பற்றிக் கேட்டேன். அவன் பதிற் சொன்ன தாவது:–“ஆமாம், பெண்டாட்டி! நானும் ஒரு கடிதம் எழுதினேன். ஒரு வேடிக்கை கேள். முதலில் எழு தின : கடிதத்தில் உன் பெயர் வரும்பொழுது, ‘பெண் டாட்டி’ யென்று எழுதி விட்டேன். பிற்பாடு அதைக் கிழித்து விட்டு வேறு கடிதம் எழுதினேன். எப்படி யாவது அவர்கள் சம்மதித்ததே பெரிய காரியம். “

அவன் முதற் கடிதத்தை நினைத்து, நாங்கள் எல் லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். அப்பொழுது இராத்திரி போஜன காலம் ஆய்விட்டபடியால், “சுந்து! நீ யெனக்குப் படிக்கும்படி அனுமதி வாங்கித் தந்ததற் காக, இன்றைக்கு எங்களுடன் சாப்பிட வேண்டும். அன்று மத்தியானத்தைப் போல் வீண் முகாந்தரஞ் சொல்லக்கூடாது” என்றேன். உடனே அண்ணாவும், அத்தையம்மாளும் என்னுடன் சேர்ந்து அவனை வேண்ட வே, நாங்கள் எல்லோரும் அன்று இரவை உல்லாசமாய்க் கழித்தோம்.

மூன்றாம் அதிகாரம். 

இவ்வதிகாரத்தில் : நான் சுந்தரேசன் வீட்டுக்கார ரைப் பற்றிச் சொல்லுகிறேன். அவர்களும் எங்களைப் போல் ‘சந்நிதித் தெரு’வில்தான் இருந்தார்கள். ஆனால், அவர்கள் இருந்த வீடு மிகவும் பெரிது. என் அத்தை யம்மாள் ஒருநாள் சொன்னபடி, எங்கள் வரும்படி அந்த வீட்டுக்கு விளக்குப் போடத்தான். சரியா யிருக்கும். அப்படி யிருந்தபோதிலும், சுந்தரேசன், அதை விட்டு விட்டு, எங்கள் வீட்டுக்குப் படிக்க வந்துவிடுவான். எங்கள் தெருவில், அந்த வீட்டு வாசலில் மாத்திரந்தான் ‘லாந்தர்’ போட்டிருக்கும். அது உத்தியோகஸ்தர் வீடு என்று பார்த்தவுடன் அறிந்து கொள்ளலாம்; ஒரு வேளை சந்தேகம் கொஞ்ச மிருந்தால், மாடியில் வைத்திருக்கும் பூச் செடிகளைப் பார்த்தவுடன், அது நீங்கி விடும். 

சுந்தரேசன் தமயனார் பெயர் இராமபத்ர சாஸ்திரி கள். நான் முதலில் அவர் பெயரைக் கேட்டவுடன், அவர் சாஸ்திரங்களில் தேர்ச்சி யடைந்த வைதீகரென்று நினைத் திருந்தேன். பிற்பாடுதான், அவருக்குக் கிரந்த எழுத்துக்களே தெரியா தென்றும், ஆவணியவிட்டத் தன்று கூட அவர் சந்திபண்ண மாட்டாரென்றும், அவர் பாட்டனார் சாஸ்திரியா யிருந்ததால் அவரும் அப் பட்டத் தை வைத்துக் கொண்டா ரென்றும்,அண்ணா எனக்குச் சொன்னான். அவர் மனைவி பெயர் காமாக்ஷி. நானும் என் தமயனும், சுந்தரேசனைப் போல், அவளை ‘மன்னி’ யென்று கூப்பிடுவது வழக்கம். அவளுடைய கணவர், அவளைக் ‘காமு’ என்று வழக்கமாய் அழைப்பார். அவர் களுக்கு மூன்று வயதுள்ள ஓர் ஆண் குழந்தையும், ஒரு வயதுள்ள ஒரு பெண் குழ்ந்தையும் இருந்தன. அவர்களுடன் இலக்ஷமியும் இருந்தாள். அவள் சுந்தரேசனுடைய மூத்த சகோதரி. ஒன்பது வயதாயிருக்கும் பொழுதே புருஷனை யிழந்தவள், அவளுக்கு அப் பொழுது இருபது வயதாயிருக்கலாம். அவள் வேறு  போக்கின்றி ‘மன்னி’க்குத் துணையாக இருந்தாள். அவளைப் பற்றி எனக்கு ஒன்றும் எழுதத் தோன்ற வில்லை. இவர்களைத் தவிர, ஒரு பிராமண வேலைக்காரப் பையனும், இரண்டு சூத்திர வேலைக்காரர்களு மிருந்தார்கள். நான் முதல் முதல் அவர்கள் வீட்டுக்குப் போனபொழுது நடந்த சமாசாரங்கள் நன்றாய் ஞாபகத்தி லிருக்கிறபடியால், அவற்றைக் கூறுகிறேன். 

நான் வரியூருக்கு வந்த தினத்திலேயே, நானும் சுந்தரேசனும் இஷ்டர்க ளாய்விட்டோம். இரண்டு நாள் களுக்குப் பிற்பாடு, நான் என் அத்தையுடன் ஒரு மத்தி யானம் அவன் வீட்டுக்குப் போனேன். அன்றைக்குச் சனிக்கிழமையா யிருந்ததால் அவன் தமயனார் ‘கச்சேரி’க் குப்போயிருந்தார். நாங்கள் போகும் பொழுது, காமாக்ஷி யம்மாள் வாசித்துக் கொண்டிருந்தாள். இலக்ஷமி தோ சைக்கு அரைத்துக் கொண்டிருந்தாள். 

காமாக்ஷி:- வாருங்கள்! வாருங்கள்! அடே! பையா! சங்கரியம்மாள் வந்திருக்கிறார்கள். மணை யெடுத்துப் போட்டா. 

என் அத்தை:- எதற்கு? வேண்டாம். தரையில் குப்பை யில்லையே. கீழேயே உட்காருகிறேன். 

நான், காமாக்ஷியம்மாளையும், இலக்ஷமி யம்மாளை யும் சேவித்து விட்டு, என் அத்தை பக்கத்தில் உட் கார்ந்து கொண்டேன். 

காமாக்ஷி :- புதன்கிழமை யன்று வந்தீர்களாக்கும். சுந்தரேசன் சொன்னான். இந்தக் குட்டிதான் உங்கள் மருமாளோ? 

என் அத்தை:- ஆமாம், அம்மா! அந்தக் கடன்காரி, மூன்று வயதிலேயே விட்டு விட்டுப் போய் விட்டாள்.- காமாக்ஷி :- நாமென்ன செய்யலாம்? தெய்வச் செயல். குட்டி! உன் பேரென்னடி? 

நான் :– என் பேர், முத்துமீனாக்ஷி. 

காமாக்ஷி:- (இலக்ஷமி யம்மாளைப் பார்த்து) நீங்க ளேன் வாய் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? இன்னும் 

இரண்டுவழி மாவுக்கு அரிசி யிருக்கிறதே? பிற்பாடு ஜலம் கொண்டு வர வேண்டாமா? இப்படி வாய் பார்த்தால் எப்படி? 

உடனே இலக்ஷமி யம்மாள்,தலையைக் கவிழ்ந்து கொண்டு, விரைவாய் அரைக்கத் தொடங்கினாள். 

பிற்பாடு கொஞ்ச நேரத்துக்கு ஒருவரும் பேச வில்லை. என்னவோ போலிருந்தது. எனக்கு, எங்கேயோ பிடித்துக் கொண்டு போய் விட்டாற் போலிருந்தது. கடைசியாக, ஏதாவது பேசும் பொருட்டு, என் அத்தை, காமாக்ஷியம்மாளைப் பார்த்து, ‘”அதென்ன புஸ்தகம் ?” என்று கேட்டாள். 

காமாக்ஷி :- இதா? ‘இராமநாட்சம்.’ 

அத்தை :- அதென்ன ? 

காமாக்ஷி :- இராமாயணக் கதையைக் கீர்த்தனங் களில் பாடி யிருக்கிறது. அடே பையா! சுந்தரேசனைப் பார்த்துக் கூட்டிக் கொண்டுவா. இந்தக் கீர்த்தனத்துக்கு இராகந் தெரியவில்லை. இந்தக் குட்டிக்கு எங்கே பார்த் திருக்கிறீர்கள்? 

அத்தை:- எங்களுக்குள் தகுந்த பிள்ளைகளைக் காணோம். எவனுக்கு மாலையிடப் போகிறாளோ? இன் னும் ஒன்றும் நிச்சய மாக வில்லை. 

காமாக்ஷி :- இனிமேல் பிறக்கப் போகிற தில்லையே? குட்டி, எங்கள் சுந்தரேசனைக் கலியாணம் பண்ணிக் கொள்கிறாயா? இங்கிலீஷ் வாசிக்கிறான் ; அழகா யிருக் கிறான். 

அத்தை:- அவனுக்கு எந்தப் பாக்கியவதி மாலையும் கையுமாய்க் காத்துக்கொண் டிருக்கிறாளோ? நேற்று நான் விளையாட்டாக நீங்கள் சொன்னதையே சொன் னேன். சுந்தரேசன், என்னுடைய பவழ மாலையை யெடுத்து இவள் கழுத்திற்பூட்டி, இவள் கையைப் பிடித் துக் கொண்டு என்னை வந்து நமஸ்கார பண்ணினதுந் தவிர, அது முதல், இவளைப் பரிகாசமாகப் பெண் டாட்டி யென்று கூப்பிடுகிறான். 

என் அத்தை யம்மாள் பேசி முடிய, சுந்தரேசனும் வந்து விட்டான்.உடனே அவனைப் பார்த்துக் காமாக்ஷி யம்மாள் சிரித்துக் கொண்டு சொன்னதாவது:- 

”சுந்தரம்! நீ வெகு யோக்கியன் போலிருக்கிறதே? நாங்களெல்லாம் என் அம்மங்காரை உனக்குக் கலியாணஞ் செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்க, நீயாக வேறொரு குட்டியைச் சம்பாதித்துக் கொண்டு, இப் பொழுதே முதல் பெண்டாட்டி’ யென்று கூப்பிடவும் ஆரம்பித்து விட்டாயே? இது சரியா?” 

சுந்தரேசன் தலையைக் கவிழ்ந்து புன்சிரிப்புச் சிரித் த்துக் கொண்டு, ”மன்னீ! எதற்குக் கூப்பிட்டாய் ? ” என்று கேட்டான். உடனே காமாக்ஷி யம்மாள், தான் கூப்பிட்ட விஷயத்தைச் சொல்ல, அவன், “ஒ! இந்தக் கீர்த்தனமா? இதை பைரவி ராகத்தில் இப்படிப் பாட வேண்டும்” என்று சொல்லிக், கொஞ்சம் பாடிக் காட்டி விட்டு, 

“நான் போகிறேன். மணியன் காத்துக் கொண் டிருப்பான். இரசமாய் வாசித்துக் கொண்டிருந்தோம்” என்று புறப்பட்டான். 

என் அத்தை யம்மாளும், “அம்மா! நாங்களும் போக வேண்டும். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. தோ சைக்கு நனைத்து வைத்திருக்கிறது” என்று சொன்னாள். 

காமாக்ஷியம்மாள், “ஆனால் சரி” என்றாள். 

அத்தை :- இலக்ஷமி யம்மா! நான் வரட்டுமா?

இக்ஷுமி:- போகிறீர்களா? போய்விட்டு வாருங் கள்’ என்று, மெதுவாய்த் தலையைக் கவிழ்ந்து கொண்டே சொன்னாள். உடனே நாங்கள் சுந்தரேசனுடன் வீட் டுக்கு வந்து விட்டோம். 

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, இலக்ஷுமி யம்மாள் கன்னங்களில் கண்ணீர் பெருகுவதை நான் பார்த்ததால், அதைப் பற்றி நினைத்துக் கொண்டே வந்தேன். எனக்கும், தன்னை யறியாமல், துக்கம் நெஞ் சை யடைத்தது. நான் பொறுக்க முடியாமல், “அத்தை யம்மா! இலக்ஷமி யம்மாள் ஏன் அழுதுக் கொண்டே யிருந்தார்கள்?” என்றேன். 

அத்தை:-“அவர்கள் அழுதார்களா? நான் பார்க்கவில்லையே.” 

”ஆம் ஆம். ஏன் அழுதார்கள்?” என்று மறுபடியுங் கேட்டேன். 

அத்தை:- எதற்கோ அம்மா: எனக்குத் தெரியு மா? காமாக்ஷியம்மாள் ஏதாவது சொன்னார்களாக்கும். சுந்தரேசன் :–” அக்காள் அழுததை நானும் பார்த் தேன். அத்தையம்மா! நீங்கள் தான் எனக்குத் தாயார். நான் வேறு தாயாரை யறியேன். உங்களிடத்தில் சொல்லுவதில் எனக்கு வெட்கமில்லை. மன்னி எங்களைக் கொடூரமாய் நடத்துகிறாள். அண்ணா அவர்களாவது, வேறு அந்நியராவது இருக்கும் பொழுது, என்னை வெகு பக்ஷமாய்த்தான் நடத்துகிறாள். தனித்திருந்தாலுங் கூட, அவள் அம்மங்காரை நான் கலியாணஞ் செய்து கொள்ளப் போகிறதாக, எனக்குக் கொடுமை செய்கிறதில்லை. அக்காளுக்கோ, அப்படிக் கூடவில்லை; எப்பொழுதும் கஷ்டந்தான். சகல வேலைகளும் அவள் தான் செய்ய வேண்டும். மன்னி புடைவைகளைக் கூட, அவள் தான் தோய்த்துப் போடவேண்டும். இதுவும் தவிர, அண்ணா அவர்களிடத்தில், இல்லாத கோள்களை யெல்லாம் சொல்லுகிறாள். அவர்களைப் போல் எங்களுக்கு அன் புள்ள தமயனார் கிடையாது: மன்னி வருவதற்கு முன், அக்காளுக்கு நேர்ந்த கொடுங் கஷ்டத்தை அவள் சிறிதும் உணரக் கூடாதென்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாய், தாயை விட அருமையாய், நடத்தி வந்தார்கள். அவர் களுக்குக் கூட இப்பொழுது சில சமயங்களில் கோபம் வந்துவிடுகிறது. மன்னி பேரிலுள்ள இஷ்டத்தால், அவள் சொல்லையே வேத வாக்காக மதிக்கிறார்கள். உண்மை தெரிந்தால், அண்ணா அவர்கள் மிகவும் விசனப் படுவார்களே யென்று நான் பயப்படுகிறேன். அன்றியும், அவர்களிடத்தில் மன்னியைப் பற்றிக் கோட் சொல்ல, 

எனக்கு நாக் கெழவில்லை. நான் சில சமயங்களில் கொடூரத் துக் குள்ளாவதை மறைத்துச் சகித்துக் கொண்டு, அக் காள் மனத்தையும் தேற்றிக் கொண்டே வருகிறேன். மற்றப் பிள்ளைகள் கவலையின்றி விளையாடித் திரியும் பாலிய வயதில், தாயில்லாக் குற்றத்தால், நான் இவ்வளவு கஷ்டங்களுக்கும் மன விசாரங்களுக்கும் உள்ளாகவேண்டு மென்று, பிர்ம்மா என் தலையில் எழுதினான். அநுபவித் துத் தான் தீரவேண்டும் ” என்று சொன்னான். 

அவனுக்குக் கண்ணீர் தாரை தாரையாய்ப் பெரு கிற்று. எனக்கும் கண்ணீர் பெருகிற்று. என் அத்தை யம்மாளுக்கும் கண்ணீர் பெருகிற்று. அண்ணா மாடியி லிருந்து “சுந்தரேசா! சுந்தரேசா” என்று கூப்பிட் டான். உடனே அவன், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு போய்விட்டான். 

நான்காம் அதிகாரம்

என் சரித்திரத்தில் அடுத்த விஷயம், எனக்கு ஒன்ப தாவது வயதில் நடந்த என் கலியாணம். அதற்கு என் தகப்பனார் வரவில்லை. இப்பொழுது நினைத்துப் பார்க்கை யில், அவர், அமிதமான மான வுணர்ச்சியும் மனமுரண் டும் உள்ளவராகத் தோன்றுகிறது. அந்த நாட்களில், பெண்களுக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரர் பணங் கொடுப்ப தன்றி, மாப்பிள்ளைக்குப் பெண் வீட்டுக்காரர் நகைகள் செய்து போட்டும், படிப்புச் செலவுக்குப் பணமுதவியும், துவிசக்கர வண்டிகள் வாங்கிக் கொடுத்தும், பணங் கொடுப்பது கிடையாது. நான் துவிதீயமாக வாழ்க்கைப் பட்டேன். எனக்கு முந்நூறு ரூபாவுக்கு நகை செய்து போட்டது மன்றி, எழுநூறு ரூபா கட்டணமாகவும் கொடுத்தார்கள். இந்தப்பணத்தில் இருநூறு ரூபாவரை
 
கலியாணத்திற் செலவாய் விட்டது; மிகுந்ததை என் தமயன் கலியாணத்துக்காக அத்தை யம்மாள் வட்டிக் குப் போட்டிருந்தாள். எங்கள் சமீப பந்துவில் ஒருவர், என்னைத் தாரைவார்த்துக் கொடுத்து, சம்மந்தி ஸ்தானத்தி லிருந்து விவாகத்தை நிறைவேற்றினார். என் புருஷருக்கு முப்பது வயது. முன் வருஷத்தில் இறந்து போன அவர் மூத்த தாரம், என்னைப்போல ஒரு பெண்ணையும், இரண்டு சிறு பெண் குழந்தைகளையும் விட்டுப் போயிருந் தாள். அந்தப்பெண்ணுக்கும் என்னுடன் ஒரே பந்தலில் தான் கலியாணமாயிற்று. அந்தப் பெண்ணுக்கு அவள் மாமனார் கொடுத்த நானூறு ரூபாவுடன், இன்னும் முந் நூறு ரூபா சேர்த்து, எனக்குத் தந்ததாகவே சொல்லிக் கொண்டார்கள். அவள் புருஷன் சிறுவனா யிருந்ததால் அவளுக்குச் சொற்பப் பணமும், என் புருஷர் பெரியவரா யிருந்ததால் எனக்கு அதிகப் பணமும் கிடைத்தன. ஆயி னும், கலியாணத்தில்,அவளையும் அவள் புருஷனையும் மட்டும் தோளி லெடுத்தும், பல்லக்கி லேற்றியும், அடிக் கடி நலுங்கிடச் செய்தும் சீராட்டினார்கள். எனக்கு அப்படி யொன்றும் நடக்கவில்லை; அதனால் நான் அதிக மன வருத்தத்தை அடைந்தேன். கலியாண மென்றால், புதிய பட்டுப் புடவை கட்டிக் கொண்டு, இரவலோ சொந்த மோ ஏராளமான நகைகள் அணிந்து கொள்வது மாத்திர மன்றி, பாட்டும் கூத்தும் பல்லக்கும் நலுங்கும் பரிகாச மும் விளையாட்டுமா யிருக்குமென்று, நான் எண்ணி யிருந்தேன். ஆகவே, எனக்கு மட்டும் அப்படி யொன்று மின்றி, அதே பந்தலில், என்னைப் போன்ற மற்றொரு பெண்ணுக்கு அவை யெல்லாம் நடப்பதைக் காண என் மனம் பொறுக்கவில்லை. இந்த உண்மையை அறியாமல், என் விசனத்தைக் கண்டமணியனும் அத்தையம்மாளும், என்னிஷ்டப்படி சுந்தரேசனைக் கலியாணஞ் செய்து கொள்ள முடியாமற் போனதே என் விசனத்துக்குக் காரணமென் றெண்ணினார்கள். அந்தக் குழந்தைப் பருவத்தில், மாப்பிள்ளையைப் பற்றி எனக்கு மன விசாரம் இல்லவே யில்லை. 

என் கலியாணம் நிறைவேறிய வுடன், சூட்டோடு சூடாய் மணியனுக்கும் கலியாணஞ் செய்துவிட வேண்டு மென்று என் அத்தை பிரயத்தனஞ் செய்தாள். ஆனால், தக்க பெண் கிடைக்கவில்லை; பதினொரு வயதுக்குத் தாழ்ந்த பெண் மணியனுக்குத் தரம் போதாதென்பது அவள் அபிப்பிராயம்; அவனும், தனக் கப்பொழுது கலியாணம் வேண்டாமென்று தடுத்தான். 

அடுத்த வருஷத்தில், அவன் தமயனார் வேறூருக்கு மாற்றப் பட்டதால், சுந்தரேசன் வரியூரை விட்டுப் போய் விட்டான். அவனைப் பிரியும் பொழுது நாங்கள் பட்ட மனத் துயரம் சொல்லி முடியாது. அவன் போன பின்பு, என் படிப்பு மும்மரம் அடங்கி விட்டது. என் தமயன் பரீக்ஷைக்கு வாசிப்பதில் தன் முழுக் கவனத் தையும் செலுத்தினாள்; அன்றியும், ஒரு நாளுமே, பொறுமையுடன் அவனால் எனக்குப் பாடம் சொல்லித் தரமுடியாது. ஆகவே, நானாகச் சிறிது சிறிது வாசித்து வந்ததைத் தவிர வேறில்லை. அந்த அற்ப சொற்பத்தை யும் கூட, நான் புஸ்தகமும் கையுமா யிருப்பதை எங்கள் வீட்டுக்கு வந்திருந்த என் கணவர் ஒரு நாள் கண்ட வுடன், நிறுத்தி விடும்படி கட்டளை யிட்டதுமன்றி, சுந்தரேசன் எனக்குத் தந்திருந்த தமிழ்ப் புத்தகங்களை யும் கிழித்தெறிந்து விட்டார். புஸ்தகங்கள் போய், மரப்பாச்சி, அம்மானை, சோகி, கழச்சிகளும், பானை, சட்டி, பாத்திரங்களுமே, அஸ்த பூஷணங்களாய்விட்டன. 

என் தமயன் சுப்பிரமணியன், எப்.ஏ. பரீக்ஷை கொடுத்து விட்டுப் பலனை எதிர் நோக்கி இருக்கையில், ஒரு நாள், அவனை உடனே புறப்பட்டு வரும்படி, திருவநந்த புரத்திலிருந்து என் தகப்பனார் ஒரு தந்தி அனுப்பினார். விஷயம் இன்னதென்று குறிப்பிடப் படாமையால், எங்களுக்கு அதிக விசாரமா யிருந்தது. ஆகவே, நான், மணியன், அத்தை ஆகிய மூவரும் அன்று மாலையில் பிரயாணமானோம். நாங்கள் திருவனந்தபுரம் சேரும் முன்னமே, என் தகப்பனார் இறந்துபோய், தகன கிரியைகளும் முடிந்து விட்டன. 

அதை யறிந்தவுடன் நாங்கள் துயர்க் கடலில் ஆழ்ந் தோம். நானும் அத்தையுமாவது அவர் செல்லு முன் அவரை ஒரு முறை பார்த்திருந்தோம்; மணியனோ, அவரை இரண்டு வருஷங்களாகப் பார்க்கவே இல்லை. என் அருமைத் தந்தையே! நாலு வயதிலேயே தாயை இழந்து விட்ட பாவியாகிய எனக்குப், பத்து வயதுக்குமுன் உம் மையும் இழக்க நேர்ந்ததே! அந்தோ!அவளை நான் நன் கறியேன்; ஆனால், உம்முடைய அன்பையும் பக்ஷத்தை யும் சிலநாள் அநுபவித் திருக்கிறேன்; அந்த நினைப்பி னாலும், உமது அகால மரணத்தால் எனக்குற்ற கஷ்ட நிஷ்டூரங்களின் நினைப்பினாலும், என் ஆவியுள்ள மட்டும் உம்மை யொரு பொழுதும் மறவேன். உம்மருமை மக்களது சுக வாழ்க்கையைக் கண்குளிர ஒரு நாளேனும் கண்டு ஆனந்தித்து, அவர்களை ஆசிர்வதியாது நீர் இறந்தீ ரே, அதே என் மனத்தைப் புண்படுத்துகின்றது. 

அபரகிரியைகளை நடத்திக் கொண்டிருக்கும் பொழு தே, மணியனுக்கு எப்.ஏ. பரீக்ஷை தேறிற்றென்று தெரியவந்தது. ஐயோ! எங்கள் தகப்பனார், அதையே னும் காது குளிரக் கேட்ட பின் இறந்திருந்தா லாகாதா!

என் தகப்பனார் செய்து கொண்டிருந்த வியாபாரத் தை ஒதுக்கிக் கணக்குப் பார்த்ததில், ஐந்நூறு ரூபா கிடைத்தது. அவர் சிநேகிதரிற் சிலர், அதைக் கை முதலாகக் கொண்டு, திருவனந்தபுரத்திலே பி.ஏ.  பரீக்ஷைக்கு வாசிக்கும்படி கூறிய புத்தியை அநுசரித்து, மணியன் அப்படியே செய்யத் தொடங்கினான். அவன் மட்டும் வரியூருக்குச் சென்று, அங்கிருந்த சாமான்களை எடுத்துக்கொண்டு வந்து விட்டான். திருவனந்தபுரத்தி லுள்ள பெண்கள் பாடசாலையிற் சேர்ந்து படிக்கவேண்டு மென்று எனக்கு ஆசையா யிருந்தது. இதைப் பற்றி, மணியன், என் புக்ககத்துக்கு எழுதிக் கேட்டான். ஆனால், என் புருஷர் அநுமதி கொடுக்கவில்லை. வீட்டு வேலையையும் விளையாட்டையும் தவிர, கோவிலுக்கு அடிக்கடி போவதும், ஒத்த தோழிமாருடன் சென்று விழாத் தினங்களில் ஊட்டுப் புரையில் சாப்பிடுவதும், அச்சிமாருடன் பேசிப் பேசி மலையாளம் பழகுவதும், பட்டண விநோதங்களைப் பார்ப்பதுமே என் முக்கிய காரியங்களா யிருந்தன. எனக்கு அதிகச் சந்தோஷத் தைக் கொடுக்கத்தக்க தொன்றும் நேர்ந்தது: அதாவது, என் தலைமயிர், நாளுக்குநாள், கறுத்துப் பளபளத்து அடர்ந்து நீண்டு வளர்ந்து வந்தது. 

இவ் வண்ணம் விநோதமாய் நாலைந்து மாதம் கழியு முன், எப்பொழுதும் கண்டிராத விநோதங்கள் என் சரீரத் திலும் காணத் தலைப்பட்டன : முதலில் மேலெங்கும் சொறியும் சிரங்கும் மூடிக்கொண்டது; பின்பு நீர் வைத்து, உடம்பு, செத்தமாடு போல, ஊதிப் பருத்துவிட்டது. துடையோடு துடை உராய்ந்து புண்ணாவதால் நடப்பதே அருமையாய் விட்டது. முன்னணிந்திருந்த வளையல் கள் வெடித்துடைந்து விட்டன. கால் காப்பைக் கழற்றி விட்டேன். கண்ணாடியிற் பார்த்தால் என் முகம் எனக்கே அடையாளந் தெரியவில்லை. ‘முத்து, சீப்புப்போ லிருக்காள்’ என்பது போய், ‘முத்து, செக்குப்போ லிருக்காள்’ என்ற வார்த்தை பிறந்து விட்டது. நான் குடித்த கஷாயங்களும், விழுங்கிய மருந்துகளும், பயன் படவில்லை. கடைசியில், ஆகாரத்தில் தேட்ட மற்று, ஆளுக்கே மோசம் வந்துவிடும்போ லாயிற்று. நன்றாய்ப் பழுத்த வெள்ளிரிப் பழத்தைப் போல ஒரு நாள் உடம்பு வெடித்து உயிர் போய்விடுமோ என்று, நானே பயந்தேன். மருந்தொன்றும் பயன்படாமையைக் கண்டு பயந்து, என் தேக ஸ்திதியை விவரித்துக் கூறி, என்னை உடனே வந்து அழைத்துப் போகும்படி,மணியன், என் புக்ககத்தாருக் குக் கடிதம் அனுப்பினான். ஆயிரம் ரூபா கொடுத்துக் கொண்ட கிடாரியைச் சாசுவிட, யாருக்குத்தான் மனம் வரும்? அவ்வளவு, யாருக்குத்தான் பணம் செழித்துக் கிடக்கிறது? கடிதத்தைக் கண்டவுடன், என் மூத்த மைத்துனர் புறப்பட்டு வந்து, என்னை, என் புக்ககத்தூ ருக்கு அழைத்துப் போனார். 

ஐந்தாம் அதிகாரம்

பிறந்தகத்தை நீங்கிப் புக்ககத்துக்குச் செல்லும் சிறிய பெண்கள், பலி பீடத்துக்குச் செல்லும் கடாயைப் போற் செல்வதே வழக்கம். புக்ககத்துக்குச் சென்று உயிர் பிழைப்பதினும், என் அத்தையம்மாளும் அண்ணா வும் இருந்த வீட்டிலேயே இருந்து சாவதே எனக்கும் பிரியமா யிருந்தது. ஆனால், என் அபிப்பிராயத்தை ஒருவரும் கேட்கவில்லை. என் புக்ககத்துக் காரரை அது வரையிலும் எனக்கு நன்றாய்த் தெரியாது. அவ்வீட்டில், கைம்பெண் கிழவியாகிய என் மாமியாரும், என் மூத்த மைத்துனரும், அவர் மனைவியும் நாலு குழந்தைகளும், என் புருஷரும் அவர் பெண்கள் மூவரும், இளங் கைம் பெண்களாகிய நாத்திமார் இருவரும், என் கணவருக்கு இளையவராகிய மூன்று மைத்துனருமே இருந்தார்கள். இத்தனை பேருக்கும் ஜீவனோபாயம், சொற்ப நிலமும், தீக வரும்படியுமே. வீட்டிற் கூட்டம் காணாமைக்கு, ஏழெட்டு வித்தியார்த்திகள் தினந்தோறும் வந்து, காலையிலும் மாலையிலும் பஞ்சாதி சொல்லிக்கொண்டு போனார் கள். வியாதிக்காரி யாகையால், எனக்கு, முதலில், உப சாரமாய்க் கிடந்தது. மெய்யன்பினாலும் ஜீவகாருண்யத் தினாலும் அவ்வாறு செய்கிறார்களோ என்று, நான் ஒரு வேளை எண்ணுவதற் கிடமின்றி, என் மாமியார், தினம் பத்து முறைக்குக் குறையாமல், “இரண்டாயிரம் ரூபா யைக் கொண்டு போய்க் கொட்டி யிருக்கிறது: அந்தச் சனியனுக்குக் கஞ்சி கொடு’ என்றும்; “அவள் (என் மூத்தாள்) ஒருத்தி போனாள், இந்தப் பணமும் முழுகிப் போய் விட்டால், ஏழைக் குடும்பத்திலே இனி யென்ன செய்கிறது?” என்றும் சொல்லி, என் விலைமதிப்பை எனக்கு நினைப்பூட்டிக்கொண்டே இருந்தாள். முன் கொட் டிக் கொடுத்த பணம் போதும்; இன்னும், பாலென்றும், பழமென்றும், சருக்கரையென்றும், சவ்வரிசி யென்றும் காசை வீணாக்க வேண்டாமென்று, அவர்களுக்குச் சகா யம் செய்பவன்போல, வைத்தியனும்,உப்பு,புளி, உறைப்பு, முதலியவற்றின் வாசனையே யின்றி, வெறும் கஞ்சித் தெளிவே ஆகாரமாக, என்னைக் கொல்லாத வண்ணம் கொன்றான். ஊரிலும் காடுகளிலு முள்ள மரஞ் செடிகளின் வேரொன்றுமே பாக்கி யின்றி, எல்லா வற்றையும் கஷாயம் வைத்துக் குடித்தேன். தேகத்தின் வீக்கம் நாளுக்கு நாள் வடிந்து, கடைசியில், எலும்பை யும் தோலையும் தவிர, வேறொன்றுமே இன்றி வற்றிப் போயிற்று. சுவரையேனும் ஊன்று கோலையேனும் பிடித்துக்கொண்டு நடப்பதே அரிதாய்விட்டது. புது வெள்ளம் வந்து பழைய நீரையும் அடித்துக்கொண்டு போவதுபோல, முன்னிருந்த தலை மயிரும் கழிந்துபோய் விட்டது. உப்புப் புளி யுறைப்புக்கு நாக்குச் செத்து, யாரும் காணாமல் பண்டங்களைத் திருட்டுத்தனமாய் எடுத் துத் தின்னத் தலைப்பட்டேன்; இவ்விதத் தீனியே என்னைப் பட்டினியாற் சாவதினின்றும் காப்பாற்றிய தென்று, நான் இன்றைக்கும் மனப் பூர்வமாய் நம்புகிறேன். 

என் உடம்பு சுகப்பட்ட பின்பு, அவ்வீட்டில் எனக் குள்ள சுதந்தரத்தையும் என் கடமைகளையும் அறிந்து கொண்டேன். என் மாமியார் மிகப் பொல்லாத வாயாடி; என் சித்தி குட்டி யம்மாளின் தாயாகிய விசாலாக்ஷி யம்மாளும், அவளுக் கெதிராகாள். என் கணவரும், மைத்துனரும், அவள் கீறியவரையைக் கடவார்கள். எவ் விஷயத்திலும் அவள் இட்டதே சட்டம். அவள் கீழே நான் பட்ட கஷ்டங்களை நினைக்கும்பொழுது, அம்மம்ம! இன்றைக்கும் என் நெஞ்சம் பதறுகிறது. ஒருக்கால் அவள் சுவர்க்கத்தி லிருப்பின், நான் செத்த பின்பு நரக கத் துக்குப் போவதே எனக்கிஷ்டம். 

நம்மவருக்குள் கைம்பெண்கள் படும் கஷ்டங்களைப் பற்றிப் பலர் பலவாறு கூறுகிறார்கள். என்னைக் கேட்டால், என் மாமியின்கீழே சுமங்கிலி மருமகளாய் வாழ்வதிலும், அவள் புத்திரிகளாகிய கைம்பெண்கள் இருவரில் ஒருத் தியா யிருப்பதே உத்தமமென்று சொல்வேன். ஆனால், அம்மாமியின் கீழேயே கைம்பெண் மருமகளா யிருக்க நேர்ந்து விட்டாலோ, சிவ! சிவ’ மனம் நடுங்குகின்றது. யான் போகும்வரை, வீட்டுக்கு மூத்த நாட்டுப் பெண்ணா கிய என் ஓர்ப்படி பார்வதியே குடும்ப வேலையைப் பொறுத்துப் பார்த்து வந்தாள். என் தேகம் சௌக்கிய மானபின், அவள், தன் பாரத்தை மெதுவாய் என் தோள்மேலிறக்கத் தொடங்கினாள். குழவி முதற் கிழவி வரையும், ஆண் பெண் யாவருக்கும், நான் ஊழியக்காரி ஆய்விட்டேன். விடியற்காலம் நாலரை அல்லது ஐந்து மணிக்கு எழுந்தால், இரவு பத்துமணி வரையும் மூச்சு விட நேரமின்றி உழைக்க வேண்டியதா யிருந்தது. என் மாற்றுத்தாய் குட்டியம்மாளின் கீழ் வாழ்ந்து வந்தது சுவர்க்க போசும்போல் தோன்றிற்று. வட்டி முடக்கமாக  இரண்டாயிர ரூபாயையும் பாழாக்கி, தினம் மூன்று வேளை வயிறு நிறையச் சோறும் போட்டு, என் மாமியோ என்னைச் சும்மா திரிய விடுவாள்? அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? அழுதாலும், சிரித்தாலும், பசித் தாலும், புசித்தாலும், இட்ட வேலைகளைச் செய்தே தீர வேண்டியதாயிற்று. ஆகாரமோ, காலையிலும் இரவிலும் முழுவதும், பகவில் மோருக்கும், உடம்புக்குக் குளிர்மை யாகப் பழைய சாதமே. இரண்டுவேளை சுடு சாதம் சாப் பிடும் என்வீட்டு வழக்கமெல்லாம் பறந்துபோய் விட்டது. இதுவுமன்றி, என் புருஷர் முப்பது வயதுக் காளையாய்த் தடிபோலிருக்க, பத்து வயதுக்கு மேலாயும் நான் இன்னும் பெரியவ ளாகவில்லை யென்று, என் மாமி, என்னை அடிக்கடி திட்டுவதும் சூளுரைப்பதும் தவிர, கலைக்கொம்பைத் தேய்த்துப் பாலிற் கலக்கிக் குடிக்கத் தந்தும், இலந்தையிலையை எருமைத் தயிரிற் கலக்கித் தந்தும், பலவாறாக என்னைச் சீக்கிரம் பெரியவளாக்க முயன்றாள். என் புருஷர், அவளுக்கு எல்லாப் பிள்ளை களிலும் அருமையாம். ஆகவே, தான் சாகுமுன் அவருக் கொரு பிள்ளைக் குழந்தை பிறந்து, தானதைக் கண்டு களிக்கவேண்டு மென்பது, அவள் பேராசை. 

எனக்குப் பன்னிரண்டாவது வயது நடந்துக் கொண் டிருந்தது. அன்று ஏதோ சுபதினம். என் மாமியார், சாயங்காலம் தன் கடைசிப் பிள்ளையிடத்திற் சொல்லிக் கொஞ்சம் சந்தனம் அரைப்பித்தாள். இராப் போசனம் ஆனபின், என் கணவர், வழக்கம்போல் ஒரு பாயையும் தலைக்கணையையும் எடுத்துக்கொண்டு வாசற் றிண்ணைக்குப் படுக்கப் போனார்.என்னைத் தவிர மற்றக் குழந்தைக ளெல்லாம் தூங்கி விட்டார்கள். என் மாமியார் என் கணவரை அழைத்து, “குழந்தாய்! வாசலிலே பனி ஜாஸ்தியா யிருக்கிறது. உடம்புக்காகாது. இன்று பாவுள் ளிற் படுத்துக்கொள்” என்றாள். ஒருநாளு மில்லாத பனி அன்று மட்டும் என்னவென்று நான் சிறிது ஆச்சரி யப் பட்டேன். என் கணவர் ஏதோ முணுமுணுத்தார். “இல்லை; என் சொல்லைத் தட்டாதே. உள்ளே படுத்துக் கொள்” என்றாள், என் மாமியார். கையிலெடுத்த பாயை யும் தலையணையையும் கீழே வைத்துவிட்டு, என் கணவர் வெளியே போய் விட்டார். என் மாமியார் என்னை நோக்கி, “முத்தம்மா! அவன் பாயை எடுத்துக்கொண்டு போய்ப் பாவுளில் போடு” என்றாள். 

இதென்ன மழை பெய்யுமோ? முதேவி, ‘சனியன்” எல்லாம்போக, எனக்கு ‘அம்மாள்’ பட்டம் வந்து விட்டது! அப்படியே செய்தேன். அந்தப் பாவுள்ளுக்கு ஒரே வாசல்; சன்னல்களொன்றுமே கிடையாது. அது எட்டடி நீளமும் நாலடி அகலமும் ஐந்தடி உயரமு மிருக்கலாம். நிமிர்ந்து நின்றால் எனக்குக்கூடத் தலை யிலிடிக்கும். சாமான்கள் வைப்பதற்காக, மூன்று பக்கங் களில் சுவர்க்குச் சுவர் பரண்விட்டங்கள் ஒன்றின்மே லொன்றாய்க் கொழுவப்பட்டிருந்தன. இவ் விட்டங்கள் ள சாமான் பானைகளாலும், வெங்கலப் பாத்திரங்களாலும், பெட்டி கூடைகளாலும், நிறைந்திருந்தன. கதவைத் திறப் பதும் மூடுவதுமே ஜாலவித்தையா யிருந்தது. ஆகவே, இவ்வறைக்குள் ஒரு பாயை விரிப்பது மிகவும் கஷ்டமா யிருந்தது. எப்படியோ பாயைத் திணித்து விரித்துத் தலையணையையும் ஒரு பக்கத்திற் போட்டேன். பின்பு நானும் பார்வதியும் சாப்பிட்டோம். எங்கள் மாமியாரும் நாத்திமார்களும் புருஷர்கள் சாப்பிடும் பொழுதே பல காரஞ்செய்து விட்டார்கள். நாங்கள் சாப்பிடும் பொழுது, பார்வதி, என்ன என்னவோ சொல்லிச் சிரித்து என்னைப் பரிகாசம் பண்ணினாள். ஆனால் எனக்கு அவள் சொன்ன தொன்றும் தெரியவில்லை. எங்கள் சாப்பாடு முடிந்து நான் பாத்திரங்களைச் சுத்தி செய்துக் கொண்டிருக்கையில், என் நாத்திமாரில் ஒருத்தி ஒரு கிண்ணத்தில் சாயங்காலம் அரைத்த சந்தனத்தைக் கரைத்து, வழக்கம்போல் வாடிய வெற்றிலை யின்றிக் கொஞ்சம் நல்ல வெற்றிலையையும் பாக்கு இலவங்கம் சுண்ணாம்பு முதலியவற்றையும் ஒரு தாம்பாளத்தில் எடுத்து வைத்தாள். நான் வேலையை முடித்துவிட்டு வந்து, வழக்கம்போல், “இன்னும் ஏதா வது செய்யவேண்டுமா?” என்று என் மாமியைக் கேட்ட தற்கு. “அந்தத் தாம்பளத்தையும், சந்தனக் கும்பாவை யும், ஒரு. கைத் தீபத்தையும் பாவுள்ளுக்குள் கொண்டு போய் வை” என்றாள். என் கணவருக்கு ஒருநாளு மில்லாத உபசாரங்களும்,எனக்கு அம்மாள்’பட்டமும் நேர்ந்ததின் காரணம் தெரியாமல் பிரமித்துக் கொண்டு, சொன்ன வண்ணம் செய்தேன். வைப்பதற்கு வேறிட மின்றி வெற்றிலைத் தாம்பாளத்தையும் சந்தனக் கிண்ணத் தையும் பாயின் மேலும், விளக்கை வெகு பத்திரமாய் ஒரு பரண் விட்டத்தின் மேலும் வைத்தேன். பின்பு, என் பாயை எடுத்துக்கொண்டு வழக்கம்போல் அடுக்களையிற் படுத்துக் கொள்ளப் புறப்படுகையில், என் மாமியார், “ஒரு இழவும் தெரியவில்லை இந்த ஜடத்துக்கு. குதிர்போல வயதானதுக்கு ஒன்றையுங் காணேன். நீ இன்று அடுக் களையில் படுத்துக்கொள்ள வேண்டாம்; அவன் வருவன் இப்பொழுது; பாவுள்ளில் போய்ப் படுத்துக்கொள்” என்றாள். முன் வாசகங்களில் ‘குதிர்’ ‘ஐடம்’ என்று என்னைக் குறிப்பிட்டிரா விட்டால், இது, பார்வதியை நோக்கிக் கூறிய மொழியென்றே நான் நினைத்திருப்பேன். ஏனெனின், மிக அருமையான சில நாட்களில், அவள் கணவர் படுக்கைக்குப் போகும்படி, என் மாமியார் பார்வதிக்கு அநுமதி யருளுவதை நான் கேட்டதுண்டு. இப்பொழுதோ, ஒருவனைத் திடீரென்று பறந்து போய் அம்புலியைப் பிடித்துவா என்று சொன்னால் எவ்வாறு திகைப்பானோ, அப்படியே திகைத்து நின்றேன். “போஜடமே, போ: பாவுளுக்குள்ளே போ. நான் சொல்லு கிறேன், விழித்துக்கொண்டு நிற்கிறா யென்ன?” என்று, சினக்குறி தோன்ற என் மாமி பறுபடியும் சொன்னாள். கையில் எடுத்த பாயைக் கீழே வைத்துவிட்டு, மறுமொழி பேசாமல் பாவுள்ளை யடைந்தேன். 

நான் உள்ளே போனபின், மற்றவர்கள், என்னவோ பேசிச் சிரித்துவிட்டுப் படுத்துக் கொண்டார்கள். வெகு நேரமான பின், என் கணவர் பாவுள்ளுக்குள் நுழைந்து, கதவைத் தாழிட்டார். இப்பொழுது நினைத்துப் பார்க் கையில், என் கணவரையும் மாமியையும் நான் அவ்வளவு அதிகம் வெறுத்துப் பகைத்ததற்கு, அன்றென்னைச் செய்த குரூரமான இமிசையும் அவமானமுமே முக்கிய காரணம் என் று தோன்றுகின்றது. நான் உயிரோ டிருக்க வேண்டுமானால் என்னைத் தக்ஷணமே வந்து அழைத்துப் போகும்படி, மறு நாளே, யாரும் அறியாமல், என் தமயனுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். ‘லேபல் ‘கார்டு’ ‘காசு’ ஒன்றும் இல்லாமையால், அவனே ஒரு அணாவைக் கொடுத்து வாங்கிக் கொள்ளும்படி அனுப்பி னேன். அடுத்த வாரத்தில் என் அத்தையம்மாள் வந்து சேர்ந்து, பெண் பெரியவளாகும் பொழுது செய்யவேண் டிய விசேஷச் சடங்குகளெல்லாம் பிறந்த வீட்டிற் செய்ய வேண்டி யிருக்க, அத் தருணத்தில் நான் புக்ககத்தில் இருப்பது சரியல்லவென்று சொல்லி, என்னைத் தன்னூ ருக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டாள். நாங்கள் போகும்பொழுது, என் மாமியார், எனக்கான மருந்து களும் பக்குவங்களும் என் அத்தைக்கு உபதேசித்தது மன்றி, ஒரு துண்டு கலைக்கொம்பையும் கொடுத்தனுப்பினாள்.

– தொடரும்

– முத்து மீனாக்ஷி (நாவல்), இரண்டாம் பதிப்பு: 1924, அச்சுப்பிரசுராலயம் புஸ்தகசாலை எட்வர்டு எலியட் ரோடு-மயிலாப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *