முத்துப்பிள்ளை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 12, 2024
பார்வையிட்டோர்: 3,755 
 
 

ராமசாமி நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர். பள்ளியில் இறுதி படிப்பை முடித்தவருக்கு மேற் கொண்டு தொடர்ந்து கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதி இல்லாததால் ஒரு தனியார் துறையில் கிளார்க்காக பணியில் சேர்ந்தார். கொஞ்ச நாள் கழித்து பார்வதியை மணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பையன்கள். மூத்தவன் சாரங்கன். இளையவன் ரவி. சிக்கனமாக செலவு செய்து வாழ பழகிக் கொண்டதால் கடன் தொல்லை இல்லாமல் இருந்தது. அதே சமயம் சிறுக சிறுக சேமித்தும் வந்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் மகன்கள் இருவரையும் கஷ்டப்பட்டு கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார். படிப்பு முடிந்த சில நாட்களில் வேலை கிடைத்தது. பிறகு பையன்கள் திருமணமும் ஆகி குழந்தை குட்டிகளுடன் தனித் தனியாக குடித்தனம் செய்கிறார்கள்!

அன்று பணியிலிருந்து ஓய்வு கிடைத்தது ராமசாமிக்கு. இனி தங்கள் வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்கப் போகிறதோ என நினைக்கையில் பகீரென்று இருந்தது. வசித்து வந்தது வாடகை வீட்டில்தான், வேலையில் இருந்த வரை தன் சம்பாத்தியத்திலேயே வாழ்க்கையை நடத்தி வந்தார். தனிக்குடித்தனம் செய்யும் பிள்ளைகளிடம் கை நீட்டி ஒரு பைசா வாங்கியது கிடையாது. அதற்கு அவசியமும் ஏற்பட்டது இல்லை. இப்போது பணி இல்லை. சம்பளம் கிடையாது. அவருக்கு ஓய்வூதியமும் கிடையாது. ஃபைனல் செட்டில்மண்ட்டாக கிடைத்த சில லட்சங்கள் கொண்ட காசோலைகளை போஸ்ட் ஆஃபிஸில் தன் கணக்கில் போட வேண்டும் என எண்ணினார். அதற்கு மாதா மாதம் வட்டித் தொகை சில ஆயிரங்கள் கிடைக்கும். ஆனால் அந்தத் தொகை வாடகை, மற்ற மாதச் செலவுகளுக்கு ஏணி வைத்தால் கூட எட்டாது. அதனால் இனி பையன்களுடன் சேர்ந்து இருக்க வேண்டிய நிலைமை! தங்களை வைத்துக் கொள்ளும் மகனுக்கு கிடைக்கும் மாத வட்டிப் பணத்தை கொடுத்து விடுவது என்று தீர்மானம் செய்து கொண்டார் ராமசாமி.

அன்று பையன்கள் இருவரும் வீட்டுக்கு வந்திருந்தனர். ஹாலில் தனித் தனியாக இருக்கைகளில் அமர்ந்து கொண்டிருந்தனர். சிறிது நேரம் நிலவிய மெளனத்தை கலைக்கும் விதத்தில் இளையவன் ரவி மெதுவாக வாய் திறந்தான்.

“அண்ணா, அப்பா ரிட்டையராகிவிட்டார். சம்பாத்யம் கிடையாது. இனி அப்பாவும் அம்மாவும் வாடகை வீட்டில் வசிக்க முடியாது. அதோடு அவங்களோட மற்ற செலவுகளுக்கும் நாமதான் பொறுப்பேத்துக்கணும், அதனால அவங்களை நம்மோடு வெச்சுக்க வேண்டிய கட்டாயம் இல்லையா?”

“ஆமாம், அதிலென்ன சந்தேகம்? நம்மளை விட்டா அவங்களுக்கு வேற கதி ஏது?”

“நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?”

“சொல்லு.”

“வந்து…நாம இருக்கற போர்ஷன்கள் ரொம்பவும் சின்னது. ஒரே ஒரு படுக்கை அறைதான். உனக்கும் எனக்கும் மூத்தது பெண்கள். அப்புறம் உனக்கு ஒரு பையன்..என் பெண்டாட்டி இப்போ கர்ப்பமாயிருக்காள். அடுத்து என்ன குழுந்தை பிறக்கப் போகிறதோ.. தெரியாது. ” என இழுத்தான் ரவி.

அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்பதை கேட்க கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சாரங்கன்.

ரவி தொடர்ந்தான்.

“நான் ஒரு சஜஷன் சொல்றேன். அது சரியான்னு சொல்லு. அப்பா, அம்மா ரெண்டு பேரையும் ஒண்ணா வெச்சுக்க நம் இருவராலும் முடியாது. அப்பாவை நீயும் அம்மாவை நானும் மாசா மாசம் மாறி மாறி வெச்சுப்போம். நமக்கும் பர்டன் குறையும். என்ன சொல்றே?”

“இல்ல ரவி! ரெண்டு பேரையும் இந்த வயசான காலத்துல பிரிக்கணுமாங்குறதை நினைக்கறபோது மனசுக்கு கஷ்டமாயிருக்கு!”

“அப்ப, ஒண்ணு செய். ரெண்டு பேரையும் நீயே வெச்சுக்கோ.” படாரென்று தேங்காய் உடைத்தது போல் சொன்னான் ரவி.

மூத்தவன் என்ன சொல்லப் போகிறான் என எதிர்பார்த்து விறைப்புடன் அறைக்குள் இருந்தவாறு காத்துக் கொண்டிருந்தனர் ராமசாமியும் பார்வதியும்.

சாரங்கன் பதில் சொன்னான்.

“ரவி, நம்மை பெற்று நல்ல படியாக வளர்த்து, படிக்க வெச்சு, கல்யாணமும் பண்ணி வெச்சாங்க பெற்றோர். நம் தேவைகள் விஷயத்தில் ஒரு குறையும் வைக்கல்ல. அதே மாதிரி நாமும் அவங்களை குறையில்லாமல் பார்த்துக்க வேண்டாமா? அவங்களப் பிரிக்கறதே குறைதானே! அப்படி அவங்களைப் பிரிக்கறதில் எனக்கு துளிக்கூட இஷ்டமில்லை ரவி. அதனால இருக்கற இடத்தில் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு அவங்களை என்னோடு சேர்த்து வெச்சிக்கப் போறேன். நீ விசனப்படாதே!”

சாரங்கன் மூத்த பிள்ளைங்குற பொறுப்போடு இளையவனுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் இப்படி பேசினான். அவனுக்கு மூத்தப் பிள்ளைங்குற அந்தஸ்து கிடைத்த விதம்…

ராமசாமிக்கும் பார்வதிக்கும் மணமாகி நான்கு வருடங்கள் ஆகியும் குழந்தைப் பேறே உண்டாகவில்லை. அதனால் குழந்தை காப்பகத்தில் இருந்து ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்து அதற்கு சாரங்கன் என பெயரிட்டனர். இரண்டு வருடங்கள் கழித்து பார்வதி ஆண் குழந்தை பெற்றாள். குழந்தைக்கு ரவி என பெயரிட்டார்கள்.

ஆனால் இரண்டு பேரையும் தங்களின் இரண்டு கண்களாக பாவித்து பாசமும் அன்பும் கொட்டி வளர்த்தார்கள். மூத்தவன் தத்துப் பிள்ளைங்குற ரகசியத்தை இருவரும் மனதுக்குள் பூட்டி வைத்தனர்.

இப்போது சாரங்கனின் பேச்சைக் கேட்ட ராமசாமி தன் மனைவியை அர்த்த புஷ்டியுடன் பார்த்தார்.

‘பாரு ! நாம் பெற்றது நம்மைப் பிரிக்க ஆசைப்படறது. பெறாதது ஒண்ணா வெச்சுக்க பிரியப்படறது. தத்துப் பிள்ளைக்குதான் நம் மீது நிறைய பாசம் இருக்கு. பெற்ற பிள்ளைக்கு அவ்வளவாக இல்லாதது நம் துரதிர்ஷ்டம்தான்’ மனதில் வேதனையுடன் எண்ணிக் கொண்டார் ராமசாமி. ஏற்கனவே முடிவு செய்தபடி மாத வட்டிப் பணத்தை மூத்தவனுக்கே கொடுத்து விட வேண்டும் என்ற உறுதியும் அவர் மனதில் எழுந்தது. ஆனால் நற்குணம் கொண்ட சாரங்கன் அதை நிச்சயமாக வாங்க மாட்டான் என்பது ராமசாமிக்கு அப்போது தெரியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *