முத்துச் சிப்பி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 30, 2024
பார்வையிட்டோர்: 244 
 
 

2.21-2.30 | 2.31-2.39

2.31.உள்ளத்துக்கு வைத்தியன்!

ராதாவின் வாழ்க்கையில் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்தன. திறந்த வெளியிலே சிறகடித்துப் பறக்கும் வானம்பாடியைப் போல அவள் தன் கல்லூரி நாட்களில் இருந்து வந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டாள். படிப்பு முடிந்த பிறகு கூட அவள் படித்து வந்த கல்லூரி யோடு அவளுக்குத் தொடர்பு இருந்து கொண்டே வந்தது. கலை விழா, நாடகம், சொற் பொழிவு யாவற்றிலும் ராதா முதன்மையாக நின்று உழைத்து வந்தாள். அவளை மணந்து கொள்ள எவ்வளவோ வாலிபர்கள் தவம் கிடந்தார்கள். அழகும், படிப்பும். செல்வமும் நிரம்பிய அந்தப் பெண்ணிடம் அவர்களுக் கெல்லாம் ஒரு பிரமை: ஸ்ரீதரனும் அவளை நல்ல இடத் தில் வாழ்க்கைப்படுத்த வேண்டும் என்றுதான் விரும்பினார். படித்தவனாகவும் சொத்துள்ளவனாகவும் மருமகன் தேட இருந்தார்.

ஆனால், விதியின் செயல் வேறாக இருந்தது. அவள் பார்வையில் பட்ட மற்றவர்களைவிட. மூர்த்தி அவளுக்குச் சிறந்தவனாகத் தோன்றினான். அவனிடத் தில் தன் மனதைப் பறிகொடுத்தாள். அவனிடமிருந்து அவள் செல்வத்தையோ, போக பாக்கியங்களையோ எதிர்பார்க்கவில்லை. உண்மையான அன்பு ஒன்றைத் தான் எதிர்பார்த்தாள். கணவனும் மனைவியும் அன்பிலே லயித்து விட்டால் மற்ற சிறு பூசல்கள் யாவும் மறைந்து விடும். அந்தப் பிடிப்பு – அதாவது காதல்– அவர் களிடம் ஏற்படவில்லை .

ராதாவுக்கு தனிமை உணர்ச்சி ஏற்பட்டது. உலகத்தில் தான் தனியாக இருப்பது போல் தோன்றியது. நெஞ்சில் சுமக்க முடியாமல் துயரச் சுமைகளைச் சுமந்து கொண்டு இருந்தாள். அவற்றைக் கீழே இறக்க அன்புள்ளம் கொண்டவர் யாராவது தேவை. அது யார்? யாருமே இல்லை என்று தான் அவள் மனம் விடை பகர்ந்தது.

அன்று வழக்கம் போலத்தான் சூரியோதயம் ஆயிற்று. வாள் வெளியில் களங்கம் இல்லை. நிர்மலமான ஆகாயத்தில் பொன்னிறம் காட்டிக் கொண்டு கதிரவன் விசையாக எழும்பி வந்தான். வாழ்த்தி வரவேற்க வேண்டிய காலைப் பொழுது. இளமையும் இன்பமும் ததும்பும் அக்காலை வேளையில். ராதா மெல்லக் கண் களை விழித்துப் பார்த்தாள். அவள் மனசில்- அதாவது தூங்கும்போது – ஒரு சலனம் ஏற்பட்டது. திடீரென்று விழித்துக் கொள்வாளாம் ராதா. அவள் படுக்கை அருகில் மூர்த்தி அமர்ந்து அவள் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பானாம். ‘வந்து விட்டீர்களா? எங்கே என் மேல் கோபித்துக் கொண்டு , வராமல் இருந்து விடுவீர்களோ என்று பயந்தேன்! ‘ என்று கேட்டுக் கொண்டே எழுவாளாம் ராதா. அப்புறம் அவனுடன் இல்லறம் நடத்துவது. அதன் பிறகு இடுப் பிலே ஒரு தங்கக் குழந்தை !

ராதா புன் முறுவல் பூத்துக்கொண்டே கண் விழித்தாள். நினைக்கும் போது இனிக்கும் நினைவுகள் நடக்காமற் போனால் கசக்கத் தானே செய்யும்?

அவள் எதிரில் வெற்று நாற்காலி கிடந்தது. பல இரவுகள். அநேக நாட்கள் அந்த நாற்காலிக்கு வேலையே இல்லை. மூர்த்தி அதில் தான் உட்காருவான். அவன் வெளியூர் போன பிறகு அதில் யாருமே உட்காரு வதில்லை. கணவன் திரும்பவும் அதில் வந்து உட்கார வேண்டும் என்று அந்தப் பேதைக்கு ஆசை.

கீழே இறங்கி வந்து தன் அலுவல்களை முடித்துக் கொண்ட ராதா. சுவாமி நாதனின் இருப்பிடத்துக்கு வந்தாள். அந்தக் கிழவர் அன்று என்றுமில்லாத உற்சாகத்துடன் காலையி லேயே குளித்து விட்டு, திருநீறு அணிந்து உட்கார்ந்திருந்தார்.

”என்ன இதற்குள்ளாகவே குளித்து விட்டீர்களா?’” என்று விசாரித்தவாறு ராதா அவர் அருகில் சென்று அடர்ந்தாள்.

”குளித்து விட்டேன் அம்மா. நேற்றிலிருந்து எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது…”

”அப்படியா? என்ன அது?”

”இந்த உடம்பை இத்தனை காலம் காப்பாற்றியாகி விட்டது. ஜலதோஷம் பிடித்தாலும் ஆயிரம் மாத்திரைகளை விழுங்கி உயிரைப் பிடித்து வைத்துக் கொள்ள முயற்சி செய்தாயிற்று. அதைப் பற்றிக் கவனிக்கவே உன் அண்ணன் இருக்கிறார். உள்ளத்துக்கு ஒரு வைத்தியனைத் தேட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. அவனை இனிமேல் நினைத்து அதற்கு வேண்டியதைச் செய்து கொள்ள வேண்டும். மருந்து சாப்பிடுவதைக் கூட நேற்றிலிருந்து நிறுத்தி விட்டேன் அம்மா…” என்றார் அவர்.

”அடடா! உங்களுக்கு மருந்தை நிறுத்தினால் கிறு கிறுப்பு அதிகமாகி விடாதா? அண்ணாவுக்குத் தெரிந்தால் கோபித்துக் கொள்வாரே……’

சுவாமி நாதன் வறட்சியாகச் சிரித்தார்.

”கோபித்துக் கொள்ளட்டும். ஒரு தினம் இரண்டு தினங்கள் கோபம் வரும். அப்புறம் சரியாகி விடும்.” ராதா மேலும் பேசவில்லை. ரத்த அழுத்தம் உள்ளவ ரிடம் அதிகமாகப் பேசி அயர்வைத் தரக் கூடாது என்று நினைத்து அங்கிருந்து சென்று விட்டாள்.

ஸ்ரீதரன் அன்று பகல் வைத்தியசாலையிலிருந்து சீக்கிரமே திரும்பி விட்டார். என்றுமில்லாமல் அவர் அன்று ராதாவையும் தம்முடன் சாப்பிட அழைத்தார். இருவரும் சாப்பிடும் இடத்தை அடைவதற்கு முன் தபால்காரர் ராதாவின் பெயருக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்து விட்டுப் போனார். கடிதத்தின் மேலுறையில் இருந்த முத்திரையில் ’கல்கத்தா’ என்று இருப்பதைப் பார்த்த ராதாவின் உள்ளம் ஒரு கணம் மகிழ்ச்சியால் துள்ளியது. அவசரமாக மாடிக்குச் சென்று கடிதத்தைப் பார்த்தாள். முதல் வரியில் ’அன்புள்ள ராதாவுக்கு’ என்றிருந்தது. தன் வாழ்வில் அன்றே அன்பு உதயமாகி விட்டதாகக் கருதினாள் அந்தப் பேதை.

’இந்தக் கடிதம் உன்னை வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்தக் கூடும். நான் எவ்வளவோ பாவங்கள் செய்திருக்கிறேன். செய்யும் போது அவை அற்பமாக இருந்தன. அவை எனக்கு இன்பத்தையும் அளித்தன. ஆனால், அதன் விளைவுகள் இப்பொழுது பிரும்மாண்டமாகப் பேய் உருக்கொண்டு என் முன் நிற்கும்போது நான் நரக வேதனையை அனுபவிக்கிறேன். சுருங்கச் சொல்லி விடுகிறேன். நான் என்னை ஏமாற்றிக் கொண்டதல்லாமல், உன்னையும் ஏமாற்றிவிட்டேன் ராதா! நான் ஒரு கடன்காரன். அதுவும் அற்ப சொற்ப மான குற்றத்தை நான் செய்யவில்லை. என்னை முழுவதுமாக நம்பி என் காரியாலயத்தினர் அளித்த பெருந் தொகையைக் கையாடி விட்டேன். இன்னும் சில மணி நேரங்களிலே நான் சட்டத்தின் முன்பு நிற்க வேண்டி இருக்கும் ………..’

ராதாவின் கண்கள் இருண்டன. கடிதத்தில் இருந்த எழுத்துக்கள் மங்கி மறைந்து கொண்டே வந்தன. கல்கத்தாவில் பிரும்மாண்டமான தெருக்களில் மூர்த்தி
கை விலங்கிடப்பட்டு இழுத்துச் செல்லப்படுவதை அவள் மனம் கண்டது. உயர் நீதி மன்றத்தில் தன் கணவன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டு இருப்பதையும் கற்பனை செய்து பார்த்தாள்.

பெண்ணின் மனத்தை மிருதுவான மலருக்கு உவமையாகக் கூறுவார்கள். ஆனால் தாங்க முடியாத துயரம், நடக்க முடியாத சம்பவம். கேட்கத் தகாத சொற்கள் இவற்றை அவள் தாங்கியும் கேட்டும் பார்த்தும் அனு பவிக்கும்போது உறுதிவாய்ந்த கற்பாறையாக அவள் மனம் மாறிவிடுகிறது.

ராதா கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டே அப்படியே உட்கார்ந்து விட்டாள். கீழே ஸ்ரீதரன் தம் சாப்பாட்டை முடித்துக் கொண்டு மாடிக்கு வந்தார். நேராக ராதாவின் அறைக்குச் சென்று உள்ளே எட்டிப் பார்த்தார்,

கையில் கடிதத்துடன் எங்கோ பார்த்துக் கொண்டிருந்த அவளைப் பார்த்ததும் அருகில் சென்று ”என்ன அம்மா அது? யார் எழுதி இருக்கிறார்கள்? உன் புருஷன் சௌக்கியம் தானே?” என்று விசாரித்தார். அந்த விநாடியில் ராதாவின் உள்ளத்தில் பல யோசனைகள் தோன்றின. ‘இது நாள் வரையில் தன் கணவனைப் பற்றி அவரிடம் கூறாமலே இருந்து விட்டு, திடீரென்று இந்தச் செய்தியைப் பற்றிச் சொன்னால் அவர் தன்னைப் பற்றி என்ன நினைக்க மாட்டார்?’ என்று ராதாவுக்குத் தோன்றியது. கையில் இருக்கும் கடிதமோ, நடக்கக் கூடாத விஷயத்தைத் தாங்கி இருக்கும் கடிதம். அதைப் பிறர் படிப்பதற்காகக் கொடுப்பதும் நல்லதல்ல. ஆத்திரப்பட்டுத் தான் தேடிக் கொண்ட வினையின் விளைவைத் தானே அனு பவிக்க உறுதி கொண்டாள் அந்தப் பேதை.

தன் மனப் பாரத்தை மறைத்துக் கொண்டு சட்டென்று அவர் பக்கம் திரும்பி, ‘அவர்தான் எழுதி யிருக்கிறார் அண்ணா . இத்தனை நாட்கள் அவர் ஹிமாசலப் பிரதேசத்தில் இருந்தாராம். அங்கே ‘காம்ப்’ சென்றிருந்தவருக்கு மலைக்காய்ச்சல் வந்து விட்டதாம் இப்பொழுது குணமாகி இருப்பதாக எழுதி இருக்கிறார்” என்றாள்.

”இது என்ன அம்மா வேலை? சாப்பாடு வேளைக்கில்லாமல் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டு தேக ஆரோக்கியத்தையும் குறைத்துக் கொள்வது ஒன்று தான் லாபம் . பேசாமல் வேலையை ராஜிநாமா செய்து விட்டு இங்கே வந்து விடச் சொல். நான் நல்ல வேலையாகப் பார்த்துக் கொடுக்கிறேன்.”

ராதா சரியென்று தலை யசைத்தாள். மறுபடியும் அவள் அண்ணாவின் முன்பு அவள் கணவன் ஒரு கௌரவ மனிதனாக வருவானா என்பது அவளுக்கே தெரியாது.

ஸ்ரீதரன் அங்கிருந்து சென்றதும் ராதா அக்கடிதத்தை மறுபடியும் படித்தாள். எவ்வளவோ கெளரவமும், கண்ணியமும் வாய்ந்த மனிதருக்கு அவள் சகோதரியாக இருந்தாலும், அவருடைய பெருங் குணங்கள் இவளை அடையவில்லை. சிப்பியின் வயிற்றில் முத்துக் கள் விளைகின்றன. பளபள வென்று மின்னும் கருநாக மும் தன்னுள நஞ்சை வைத்துக் கொண்டிருக்கிறது. வெறும் சிப்பியாயிற்றே, இதனுள் என்ன பிரமாதமாக இருக்கப் போகிறது என்று அதை நாம் உதாசீனம் செய்ய முடியாது. மென்மையும், பளபளப்பும் கொண்ட கருநாகத்தின் அழகை மெச்சி அதை அணைத்துக் கொள்ளவும் முடியாது . நற்குணங்கள் ஒவ்வொரு வருக்கும் பிறவியிலேயே அமையவேண்டும்.

ராதா ஆரம்பத்திலிருந்தே தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறாதவள். மூர்த்தியைப் பற்றியும் தன் தமையனிடம் கூறவில்லை. தன் விரும்பம் போல் செய்து கொண்ட மணம் ஆயிற்றே; கணவரிடம் இருக்கும் குறைபாடுகளை அம்பலப்படுத்தினால் இகழ்ச்சியில் வந்து முடிந்துவிடுமே என்கிற பலவீனம் தான் இதற்குக் காரணமாக அமைந்தது. இந்தப் பலவீனம் நாளடைவில் வளர்ந்து, எதையும் மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் ஆற்றலை அவளுக்கு அளித்தது.

கடிதத்தை எடுத்துப் பத்திரமாகப் பீரோவில் வைத்துப் பூட்டிய ராதா, அங்கே உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் தோட்டத்துக்குள் சென்றாள்.

2.32.குற்றச்சாட்டு

கதையின் முதல் பாகத்தில் முக்கிய இடம் பெற்ற பசுமலை கிராமத்தைப் பற்றி நாம் நினைவுபடுத்திக் கொள்வோம். மப்பும் மந்தாரமும் நிறைந்த மத்தியான வேளை: கல்யாணராமனும், பார்வதியும் முன்னைவிட வயது சென்றவர்களாக இருந்தார்கள். இருவரிடமும் எந்தவிதமான மாறுதல்களும் ஏற்படவில்லை. அன்று அவர்கள் வீட்டில் ஏதோ விசேஷம் நடந்தது. சாப்பாட் டுக்குப் பிறகு வெற்றிலைத் தட்டை எடுத்து வந்து கூடத்தில் உட்கார்ந்திருந்த தன் கணவரின் அருகில் வைத்து விட்டு உட்கார்ந்தாள் பார்வதி. கணவரிடம் வெற்றிலையை மடித்துக் கொடுத்துக்கொண்டே “எனக்கு என்னவோ இந்த மாதிரி தனியாக இருப்பது பிடிக்கவில்லை. எங்காவது நாலு ஊர்களுக்குப் போய் வரலாமே?” என்று கேட்டாள்.

கல்யாணம் மெதுவாகச் சிரித்தார்.

“ஊர் ஊராகப் போகிற வயசா நமக்கு? தலையைக் காலை வலித்தால், முன் பின் தெரியாத ஊர்களில் உன்னையும் என்னையும் யார் கவனிப்பார்கள்?”

“போகிற இடத்தில் நமக்கு வியாதி வரவேண்டுமா என்ன? முதலில் பட்டணம் போகலாம். அங்கே நம் மூர்த்தியையும், அவன் மனைவியையும் பார்த்துவிட்டு அப்புறம் எங்காவது போகலாம்.

கல்யாணம், பார்வதியை உற்றுப் பார்த்தார்.

”ஏன்? மூர்த்தியும் ராதாவும் தான் உனக்கு உயர்வாகப் போய்விட்டார்களா? பவானியையும் பாலுவை யும் மறந்து விட்டாயாக்கும்?” என்றார்.

”அவளை நான் மறந்தா போனேன்? வாரம் தவறினாலும் பவானி எனக்குக் கடிதம் போடத் தவறுவதில்லையே! பாலு பெரியவனாக வளர்ந்து விட்டானாம். பசுமலைக்கு வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறானாம்….”

“அதெல்லாம் சரி. மூர்த்தியைப் பற்றி ஏழெட்டு மாசங்களாக ஒரு தகவலும் தெரியவில்லையே! அவன் ஊரில் இல்லை என்றும் அவன் மனைவி மாத்திரம் அங்கே இருப்பதாகவும் யாரோ சொன்னார்கள். சேஷாத்திரியின் பிள்ளை ராமு வந்திருக்கிறானே கல்கத்தாவிலிருந்து. அவனைக் கேட்டால் விவரம் ஏதாவது தெரியும்.”

பார்வதி வெற்றிலைத் தட்டை நகர்த்தி வைத்து விட்டு எழுந்தாள்.

”எனக்கு வேலைகள் முடிந்துவிட்டன. நானே போய்த் தகவல் கேட்டு வருகிறேன்” என்று சொல்லியவாறு சேஷாத்திரியின் வீட்டுக்குப் போனாள் பார்வதி.

அவள் அங்கிருந்து திரும்ப அரைமணி நேரமே பிடித்தது. இவ்வளவு சடுதியில் திரும்பிவிட்ட தன் மனைவியைப் பார்த்த கல்யாணம் திகைப்பு மேலிட “என்ன அவசரமாக வந்து விட்டாய்? வீட்டில் ராமு இல்லையா?” என்று கேட்டார்.

”இருந்தான். இல்லாமல் என்ன?”

“ஏதாவது சொன்னானா? கேட்டாயா?”

”சொன்னான். உங்கள் தங்கைக்கு இந்த மாதிரி ஒரு பிள்ளை பிறந்திருக்க வேண்டாம். அவள் புண்ணிய சாலி. இதையெல்லாம் கேட்டும் பார்த்தும் கஷ்டப் படாமல் கண்ணை மூடிவிட்டாள்.”

கல்யாணம் பதட்டமே அடையவில்லை. பொறுமையுடன் உட்கார்ந்திருந்தார்.

”மூர்த்திக்கு வேலை போய்விட்டதாம். அதோடு இல்லை. சொல்லவே மானக் கேடாக இருக்கிறது . ஆபீஸ் பணத்தைக் கையாண்டு விட்டதாக அவனைப் போலீசில் பிடித்து அடைத்து வைத்தார்களாம்.”

பார்வதி வளர்த்த பாசத்தினால் மளமளவென்று கண்ணீர் பெருக்கினாள்.

“ஹும்………. ஈசுவரா!” என்று பெருமூச்சு விட்டார் கல்யாணராமன்.

”சம்பந்தி வீட்டார் இதை நமக்குத் தெரிவிக்க வில்லை பார்த்தீர்களா? எனக்கு அப்பொழுதே தெரியும். ரொம்பப் பெரிய இடத்தில் கல்யாணம் செய்திருக்கிறான். இவனை அவர்கள் மதிக்கமாட்டார்கள் என் பது எனக்குத் தெரியும்.” பெண்களின் சுபாவப்படி பார்வதி சம்பந்தி வீட்டார் மீது குற்றம் சாட்டிப் பேச ஆரம்பித்தாள்.

”கொஞ்சம் பேசாமல் இரு. தனக்கு இருக்கும் கஷ்ட சுகங்களைப் பிறரிடம் சொல்லி அதை நீக்கிக் கொள்ள அவன் முனைந்திருக்க மாட்டான். டாக்டருக்கே இதைப்பற்றித் தெரிந்திருக்காது. தெரிந்திருந் தால் கூடப் பிறந்தவளுக்காகவாவது அவர் ஏதாவது செய்திருக்க மாட்டாரா? விட்டுக் கொடுப்பாரா?”

“ஆமாம் தாயும் தகப்பனும் இருக்கிற மாதிரி வருமா இதெல்லாம்?” என்று சலித்தவாறு பேசினாள் பார்வதி. அவளுடன் பேச்சுக் கொடுப்பதில் பலனில்லை என்று தெரிந்த கல்யாணம் தாமே விவரங்களை அறிந்து வர ராமுவைத் தேடிப் போனார்.

ராமு கூறியவற்றைக் கேட்ட பிறகு வீட்டுக்குத் திரும்பியதும் அவர் அன்றே தபாலில் ஸ்ரீதரனுக்கு இதைப்பற்றி விசாரித்துக் கடிதம் எழுதினார்.

2.33.அவள் செய்த பாக்கியம்

பிறருடைய வாழ்க்கையில் நேரிடும் இன்னல்கள் நம்மை அவ்வளவாக வருத்துவதில்லை. அப்படிச் சிறிது கலக்கம் ஏற்பட்டாலும் அது நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிவதில்லை; ஸ்ரீதரன் தம் கண்களால் எத்தனையோ துயரங்களைப் பார்த்தவர். எவ்வளவோ அவமானங் களைப் பற்றிக் கேட்டவர். ஆனால் அவரை அவை அவ்வளவாக வருத்தவில்லை.

அன்று வைத்திய சாலையில் அவர் பெயருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. வீட்டுக்குப் புறப்படும் போது அதை ஜேபியில் வைத்துக் கொண்டு கிளம்பினார். வீட்டிற்கு வந்ததும். தம் ஜேபியில் இருந்த கடிதத்தைப் பற்றி மறந்து விட்டார். சாப்பிட்டு விட்டு ஓய்வு பெறும் போதுதான் காலையில் ஜேபியில் வைத்த கடிதத்தைப் பற்றி நினைவு வந்து அதை எடுத்துப் படித்தார். அவர் முகபாவம். சட்டென்று மாறிக் கொண்டே வந்தது. மிகுந்த வேதனையுடன் அப்படியே சமைந்து உட்கார்ந்து விட்டார் அவர்.

விஷயம் முற்றிப் போகும் வரை அசட்டுத் தைரியத் துடன் தன்னிடம் யாவற்றையும் மறைத்து வைத்த ராதாவைக் குற்றம் சொல்வதா? இம்மாதிரி ஒரு கணவனைத் தேர்ந்தெடுத்து மணந்து கொண்டவளை பற்றி என்ன சொல்வது?

விதியின் கொடூரமான பிடிக்குள் அகப்பட்டுத் தன் சகோதரி தவிப்பதைக் கண்ட ஸ்ரீதரன். அவளிடமிருந்து உண்மையை அறிய அவளைத் தேடிச் சென்றார்.

அவள் மிகவும் இளைத்திருப்பதை அன்றுதான் ஸ்ரீதரன் கவனித்தார். கையில் கடிதத்துடன் பரபரப் படைந்து காணப்பட்ட தமையனைக் கவனித்த ராதா ஒன்றும் பேசாமல் இருக்கவே, ”ராதா! உன் புருஷன் வேலையில் இருப்பதாக என்னிடம் நீ சொன்னதெல்லாம் பொய்தானே?” என்று கேட்டார் வருத்தம் தொனிக்கும் குரலில்.

அவருக்கு உண்மை தெரிந்து விட்டது என்பதை அறிந்த அவள் ”ஆமாம் அண்ணா ! அவரைப் பற்றி சமீப காலத்து விவரங்கள் எனக்குத் தெரியாது. உங்களுக்கு ஏதாவது கடிதம் எழுதினாரா?” என்று கேட்டாள் கண்களில் கண்ணீர் பெருக.

“எனக்கு ஏன் அவன் கடிதம் போடப் போகிறான்? அவனைப்பற்றி இன்று வரையில் எனக்கு ஏதாவது தெரிந்திருந்தால் தானே? நீதான் எல்லாவற்றையும் மறைத்து விட்டாயே, அவன் சிறைக்குப் போவதைக் கூடப் பார்த்துக் கொண்டு இருந்து விட்டாய், அவ்வளவு தன் மானம் உடையவள் நீ. உடன் பிறந்தவனிடம் கூட விஷயமெல்லாவற்றையும் ஒளித்து விட்டாயே?” மூர்த்தி யால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சகிக்க முடியாமல் வெறுப்புடன் தன் சகோதரியைச் சுட்டுப் பொசுக்குவது போல் பார்த்தார் ஸ்ரீதரன்.

”அண்ணா! என்னை ஒன்றும் சொல்லாதீர்கள். தாய் தந்தையின் முகம் தெரியாமல் இருந்த பாவியை தாயும், தந்தையுமாக இருந்து வளர்த்த உங்களிடம் நான் நடந்து கொண்ட முறையை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அண்ணா! அவர் எத்தனையோ தவறுகள் செய்திருக்கிறார். அவருக்கு எத்தனையோ பெண்களிடம் நட்பு. அதற்காக பணம் தேவைப்பட்டது. என் நகைகளைக் கூட விற்று எடுத்துக் கொண்டிருக்கிறார். என் நகைப் பெட்டியை என் அனுமதி இல்லாமல் திறந்து எடுத்துப் போயிருக்கிறார். இதைத் திருட்டு என்றுகூடச் சொல்லலாம்?” ராதா ஸ்ரீதரின் கரங்களைத் தன் கண்களில் புதைத்துக் கொண்டு கோவென்று கதறினாள்.

அந்தப் பிரபல டாக்டர் தம் கடமையே கண்ணாகக் கருதுபவர். சமூகத்தில் மிக உயர்ந்தவராக எல்லோராலும் மதிக்கப் பெற்றவர். எப்பொழுதும் மனதில் உயர்வான எண்ணங்களையே வைத்திருப்பவர், யாரோ ஒருவன் புரிந்த குற்றத்திற்கு அவர் தலை குனிய வேண்டி இருந்தது. உண்மையிலேயே டாக்டர் ஸ்ரீதரன் தம் தலையைக் குனிந்து கொண்டார். நீதிபதியின் முன்பு மூர்த்தி தலை குனிந்தானோ இல்லையோ. ஸ்ரீதரன் இப்போது தம் வீட்டில் தலை குனிந்து உட்கார்ந்து சிந்தனையில் மூழ்கி இருந்தார்.

ஆத்திரம் அடங்கியவுடன் ஸ்ரீதரன், ‘இனிமேல் நான் என்ன அம்மா செய்ய முடியும்? விசாரணைக்கு முன்பாவது ஏதாவது செய்திருக்கலாம். விசாரணை யெல்லாம் முடிந்து விட்டதாம். குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டானாம் உன் புருஷன். தண்டனையும் சற்றுக் கடுமையாகத்தான் இயக்கும் என்று அவன் மாமா கல்யாணராமன் தகவல் விசாரித்து எனக்கு எழுதியிருக்கிறார். ‘ விஷயத்தை இவ்வளவு தூரத்துக்குக் கொண்டு வந்து விட்டீர்களே! உங்கள் செல்வாக்கைப் பயன் படுத்தி இருக்கலாமே. ஒரு வேளை உங்களுக்கே தெரியாதோ?’ என்று கேட்டிருக்கிறார். என் செல்வாக்கை நான் உபயோகிப்பதா? பணக்காரர்கள் எல்லாம் செல்வாக்கை உபயோகித்துக் கொண்டே இருந்தால், நீதியின் முனை மழுங்க வேண்டியது தான். அவன் தலை யெழுத்து! நீ செய்த பாக்கியம் இப்படி இருக்கிறது!” என்றார்.

ராதா சிலை மாதிரி நின்றிருந்தாள். அவள் எதுவுமே பேசவில்லை. பேச்சுக்கும் செயலுக்கும் அப்பாற்பட்ட நிலையில் அவள் இருந்தாள்.

2.34.தொழிலும் கடமையும்

“பார்த்தா ! மூன்றுலகத்திலும் எனக்கு யாதொரு கடமையுமில்லை. பெற்றிராத பேறுமில்லை: எனினும், நான் தொழிலிலே தான் இயங்குகிறேன், ஆதலால் எப் போதும் பற்று நீங்கிச் செய்யத்தக்க தொழிலைச் செய்து கொண்டிரு. பற்றில்லாடல் தொழில் செய்து கொண் டிருக்கும் மனிதன் பரம் பொருளை எய்துகிறான்.”

கீதையின் இந்த அரும்பெரும் உரை சுவாமி நாதனுக்கு மனப் பாடம். சுமார் இருபது. இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு ஸ்ரீதரனின் வீட்டை அடைந்த அவர் தம்முடன் பிரமாதமான மூட்டை முடிச்சுக்கள் ஒன்றும் கொண்டு வரவில்லை. பிரம்பால் ஆன பெட்டி ஒன்றில் மாற்றிக் கட்டுவதற்காக வேட்டி இரண்டும் துண்டுகள் இரண்டுமே இருந்தன. பழனி ஆண்டவன் திரு நீறு கமகமவென்று ஒரு பொட்டலத்தில் மணம் வீசிக் கொண்டு இருந்தது. சிறிய வால்மீகி ராமாயண புத்தகம் ஒன்றும், பகவத் கீதை மொழி பெயர்ப்பு ஒன்றும் இருந்தன. அப்பொழுது அவருக்கு வெள்ளெழுத்து ஆரம் டமாகி விட்டதால் வெள்ளெழுத்துக் கண்ணாடியும் வைத்திருந்தார்.

அன்று அவர் தனியாகத்தான் வந்தார். இன்றும் தனியாகத்தான் இருக்கிறார். நாளை தனியாகத்தான் போகப் போகிறார். ஸ்ரீதரன் தம் இளம் மனைவியுடன் இன்பமாக வாழ்ந்த சொற்ப காலத்தைப் பார்த்துப் பிரும்மானந்தம் கொண்டவர் அவர். கணவன் மனைவி முப்பது வருடங்கள் இருந்து வாழ்ந்து காண வேண்டிய மன ஒற்றுமையை, அன்பை அவர்களிடம் மிகக் குறுகிய காலத்தில் கண்டவர். ராதா சிறு பெண்ணாக மிகச் சிறியவளாக பாவாடை கட்டுவதிலிருந்து படுக்கை போடு வது வரை அவர் துணையால், உழைப்பால் வளர்ந்தவள். ஜெயஸ்ரீக்குப் பால் புகட்டியதே அவர் தான். அவளும் பெரியவளாக வளர்ந்து விட்டாள். தாயைப் போன்ற குணங்களும், தந்தையைப் போன்ற கல்வி அறிவும் அவளுக்கு ஏற்பட்டு வருவதை மிக மகிழ்ச்சி யுடன் பார்த்தவர் கிழவர். இந்த மனிதர் தனக்கென்று அந்த வீட்டில் ஒரு விதமான உரிமையையும் ஸ்தாபித்துக் கொண்டவர் அல்ல.

அவர் வந்து முதல் மாதம் முடிந்ததும், டாக்டர் ஸ்ரீதரன் அவரிடம் முப்பது ரூபாய்களை மாதச் சம்பளம் என்று சொல்லிக் கொடுக்கப் போனார்.

”உங்களிடம்தான் இருக்கட்டும்? தேவைப்பட்ட போது வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறி விட்டார் சுவாமிநாதன்.

ஏதோ ஒன்றிரண்டு தடவைகள் சில நூறு ரூபாய்கள் வாங்கி எங்கோ ஆதரவு இல்லாமல் தவிக்கும் தன் ஒன்றுவிட்ட சகோதரிக்கு அனுப்பி வைத்தார். பிறகு அவர் ஒன்றும் கேட்கவில்லை. ஸ்ரீதரன் மட்டும் சுவாமிநாதன் பேரில் பாங்கில் மாதா மாதம் பணம் கட்டி வந்தார். சில ஆயிரங்கள் அவர் பேரில் சேர்ந்திருந்தன.

சில நாட்களுக்கு முன்பு வீட்டில் நடந்த நிகழ்ச்சிகள் யாவையும் சுவாமிநாதன் ஒரு வரும் கூறாமலேயே அறிந்து கொண்டார்.

“என்ன ஐயா ஊரெல்லாம் பேசிக்கறாங்களே. நம்ப மூர்த்தி ஐயா ஏதோ தண்டாவில் மாட்டிக் கிட்டா ராமே…” என்று தோட்டக்காரன் ராமையா அவரை விசாரித்தான்.

“எனக்கு ஒன்றும் தெரியாதப்பா…” என்றார் அவர். தமது கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.

“இந்த மாதிரி கவுரவம் வாய்ந்த மனிதருக்கு வந்து வாய்த்தானே! எங்கே பார்த்தாலும் அவனைப் பற்றித் தான் பேச்சு” என்றார் புது சமையற்காரர்.

அப்புறம் கார் டிரைவர் அவரிடம் தன் மனத்தாங்கலை வெளியிட்டார். வைத்தியசாலை – கம்பவுண்டர்’ வந்து கூறி அலுத்துக் கொண்டார்.

டாக்டர் மட்டும் ஏதும் கூறவில்லை . ஆனால் அவர் உள்ளம் குமுறிக்கொண்டு இருக்கிறது என்பது சுவாமி நாதனுக்குத் தெரிந்து விட்டது.

ராதா தன் எதிரில் வரும் போதெல்லாம் சுவாமிநாதன் கோபமும், வருத்தமும் அடைந்தார். ஒரு பெண்ணால் ஒரு குடும்பத்துக்கு எவ்வளவோ நன்மைகள் விளைய வேண்டியிருக்க, அவமானம் நேர்ந்து விட்டதே என்பதுதான் அவர் வருத்தத்துக்குக் காரணம்.

அந்தக் குடும்பத்தின் நலன் ஒன்றிலேயே கருத் துடைய சுவாமி நாதனுக்கு மூர்த்தியைப் பற்றித் தெரிந்ததும், ஏதோ எக்கச்சக்கமாக நடக்கப் போகிறது என்பதை முன்பே அறிந்தவர் போல் வாய் திறவாமல் மௌனமாக இருந்தார்.

அவராகவே ஏதாவது கேட்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். . எனக்கு இனிமேல் எதுவும் புதிதாகத் தெரியவேண்டாம்’ என்று சொல்வது போல் இருந்தது அவர் மௌனம்.

தோட்டக்கார ராமையா மட்டும், “என்ன ஐயா இப்படி ஆகிவிட்டது? நம்ப ஐயா குணத்துக்கும். ராதா அம்மாவின் செல்வாக்குக்கும் இப்படி ஒரு தலை குனிவு ஏற்பட வேண்டுமா!” என்று அவரிடம் கூறி அங்கலாய்த்தான்.

”ராமையா! எனக்கு அப்பவே தெரியும். கண்ணைத் திறந்து கொண்டு கிணற்றில் விழுகிற மாதிரி இந்தப் பெண் தானாகத் தேடிக் கொண்ட வினை அப்பா இது. இனிமேல் சட்டியா பானையா மாற்றிக் கொள்வதற்கு? ஆயுள் பூராவும் அவதிப்பட வேண்டியது தான் போ …”

“ஐயா! உங்க வாயால் அப்படிச் சொல்லாதீங்க. ராதா அம்மா வளர நீங்க எவ்ளவோ கஷ்டப்பட்டீங்க. மனம் நிறைஞ்ச வார்த்தையா ஏதாவது சொல்லுங்க. பாவம்! பின்னாலாவது அந்தப் பெண் சுகமாக இருக்கட்டும்” என்றான் ராமையா. ”படித்த பெண் தவறி நடக்கமாட்டாள். அவள் சுதந்திரத்தில் தலையிடக் கூடாதென்று டாக்டர் அவளைக் கவனிக்காமல் விட்டு விட்டார் அப்பா. பவானி அம்மாவை உனக்குத் தெரியாதா? அந்தப் பெண். பாவம் எப்படியெல்லாம் இருக்க வேண்டியவள். அவளுக்கு நல்ல முறையில் வாழ யாரப்பா சொல்லிக் கொடுத்தார்கள்? இந்த வருஷம் படிப்பு முடிந்து விடுமாம். பாலுவும் படிக்கிறான். இனி மேல் அவர்களைப் பற்றிக் கவலை இல்லை.”

அவர்கள் அந்த வீட்டின் உப்பைத் தின்று உடலை வளர்த்தவர்கள். ஆகவே தங்களுக்குள்ளேயே குமைந்து போய் பேசிக் கொண்டார்கள். வெளியாரிடம் ஒரு வார்த்தை கூட மூச்சு விடவில்லை. வேலைக்காரர் களில் இப்படி ஒரு ரகம் உண்டு. நடக்காத விஷயங்களைக் கயிறு திரித்துக் கூறி கதை பேசுபவர்களும் உண்டு. இதில் எஜமானர்களுக்கும், ஊழியர்களுக்கும் இருக்கும் நல்ல அபிப்பிராயமும் அடங்கி இருக்கிறது.

ஸ்ரீதரனின் குடும்பத்தில் வேலை பார்ப்பவர் ஒவ் வொருவரையும் அந்தக் குடும்பத்தினர் மாதிரியே அவர் பாவித்து வந்தார். இதனால் தான் அவர்களிடையே நல்ல அபிப்பிராயமே நிலவி வந்தது.

2.35.இருளுக்குப் பின் ஒளி

உள்ளத்துக்கும் வைத்தியம் அவசியம் என்று சுவாமிநாதன் ராதாவிடம் கூறினார் அல்லவா? கடந்த சில மாதங்களாக, அவர் தம் மனத்தைப் புற விஷயங்களில் அதிகம் செலுத்தாமலேயே இருந்து வந்தார். கடலின் அலைகளைப் போல உலகத்தில் நடக்கும் விஷயங்களுக்கு ஓய்ச்சல் ஒழிவு இருப்பதில்லை. பிறப்பு, இறப்பு, பருவங்கள். பண்டிகைகள், உதயம். அஸ்தமனம் யாவும் இந்த உலகில் நடப்பவை. யார் இருந்தாலும் இல்லாவிடினும் அவற்றிற்கு அதைப்பற்றிக் கவலை கிடையாது. தம்முடைய கடமைகளைச் செய்து கொண்டே இருக்கும். சுவாமிநாதன். சதா ராம தாயத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார். தாரக மந்திரமாகிய அந்த நாம அவருக்கு உடல் வலிமையை அளிக்காவிடினும், உள்ளத்துக்கு ஒளியும் தைரியமும் அளித்து வந்தது. உட்காரும் போதும் நிற்கும் போதும், நடக்கும் போதும் “ஹரே! ராமா!” என்று அழைத்து ஆறுதல் அடைந்தார். உலகில் இருப்பவர்கள் யாவரினும் இனியனாகிய ஒருவன் அவர் “ராமா!” என்று அழைத்தவுடன் தம் அருகில் வந்து நின்று ‘ஏன்?’ என்று இதமாகக் கேட்பது போன்ற அமைதியை அவர் உள்ளம் அடைந்தது. அதனால் தான் மூர்த்தியைப் பற்றி அவர் கேள்விப் பட்டதும் அந்த உள்ளம் அதிகமாகத் துயர் அடைய வில்லை. ‘ஹே! ராமா! இதுவும் உன் செயல்தான் அப்பா’ என்று ஒரு வார்த்தையில் உள்ளத்துக்கு ஆறுதல் தேடித் தந்தார். இருந்தாலும் உலக பந்தங்களிலிருந்து சாமானியமாக மனம் விடுதலை அடைவதில்லை. அந்தச் செய்தி அவர் உடல் நலத்தை வெகுவாகப் பாதித்து விட்டது. சில தினங்கள் வரையில் உட்காரும் சக்தியைப் பெற்றிருந்தவர் அந்தச் சக்தியையும் இழந்து விட்டார்.

அதிகாலையில் எழுந்து பிறருக்குச் சிரமம் தராமல் தன் வேலைகளைத் தானே செய்து வந்த சுவாமிநாதன் அன்று விடிந்ததிலிருந்து தம் படுக்கையை விட்டு எழவே இல்லை. காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அவரைப் பார்க்க வந்த ஸ்ரீதரன் நொடியில் விஷயத்தைப் புரிந்து கொண்டார். சுவாமிநாதன் இனி அதிக நேரம் இருக்க மாட்டார் என்பது தெரிந்து போயிற்று.

மெல்லக் கண்களைத் திறந்து தன்னைப் பார்க்கும் அவரைப் பார்த்து, ”உங்களுக்கு என்ன வேண்டும் ஏதாவது சாப்பிடுகிறீர்களா?” என்று விசாரித்தார் ஸ்ரீதரன்.

”வேண்டாம் வேண்டியதை சாப்பிட்டு விட்டேன்…” ஸ்ரீதரன் அவர் அருகில் தம் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தார்.

”உங்கள் ஒன்று விட்ட தங்கைக்குத் தந்தி அடிக்கவா? உங்கள் பணத்தை அவர்களுக்கு அனுப்பி விடுகிறேன்…”

சுவாமிநாதன் மிகுந்த வேதனையுடன் முகத்தைச் சுளித்துக் கொண்டார்.

”அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ராதாவைக் கூப்பிடுங்கள்…” திணறிக் கொண்டே பேசினார் அவர்.

ராதா ஏதோ குற்றம் புரிந்தவளைப் போல அவர் அருகில் வந்து உட்கார்ந்தாள். நடுங்கும் தன் கரங்களால் அவள் மிருதுவான கைகளைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டார் சுவாமிநாதன்.

“அம்மா! இனிமேல் நீ நன்றாக இருப்பாய். உலகத்தில் இன்பமும் துன்பமும் மாறி மாறித்தான் வரும். இருளுக்கு அப்புறம் ஒளிதானே? நீ உன் புருஷனுடன் ஆனந்தமாக இருக்கும் போது நான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. அவன் இனிமேல் திருந்தி விடுவான். எல்லோரும் சந்தோஷமாக இருப்பீர்கள் …..”

சுவாமிநாதன் அதற்கு மேல் பேசவில்லை . அவர் வாய் உலக விஷயங்களைப் பேச மறந்தது போல் அசையாமல் இருந்தது. அவர் முகத்தில் துயரம், துன்பம் ஒன்றும் இல்லை. அசாதாரணமான ஓர் அமைதி. புன்னகை நிரம்பி இருந்தது. சுவாமிநாதன் தம் கடமை களைச் சரிவரச் செய்த நிம்மதியில் அவர் இடையறாது துதித்து வந்த ஸ்ரீராமனது திருவடிகளை அடைந்து விட்டார்.

டாக்டர் ஸ்ரீதரனின் கண்களிலிருந்து அருவி போலக் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. தேம்பியும் புலம்பியும் தன் சகோதரியை அணைத்தவாறு டாக்டர் வெளியே சென்றார்.

2.36.நம்பிக்கை

நல்ல மனசுடன் அன்று சுவாமிநாதன் செய்த ஆசியிலே அந்தக் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவருடைய பிரம்புப் பெட்டி ராமாயணப்புத்தகம் மூக்குக் கண்ணாடி விபூதிப்பை யாவும் அவருடைய அறையிலே வைக்கப்பட்டன. அந்தக் கிழவர் எப்பொழுதோ தெரியாமல் காமிராவின் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்ட போது எடுத்த போட்டோவைப் பெரிதாக்கி அறையில் மாட்டி வைத்தார்கள்.

ஸ்ரீதரனின் உள்ளமும் இனி மூர்த்தி விடுதலை அடைந்து வந்து விட்டால் திருத்தி விடுவான் என்று சொல்லியது. ராதாவும் அவ்விதமே நம்பினாள்.

ஒரு நாள் மாலை பவானி டாக்டர் ஸ்ரீதரனின் வீட்டுக்கு வந்தாள். சமீபத்தில் அவள் பரீட்சையில் தேர்வு பெற்று விட்டாள். அதை ஸ்ரீதரனிடம் கூறி ஏதாவது ஆலோசனை கேட்டுப் போகலாம் என்று வந்திருந்தாள் பவானி.

இடையில் அந்தக் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சிகள் யாவையும் அறிந்தவள் அவள். எதிலும் அக்கறை காண்பித்துக் கொள்ளாத அவள் தமையன் நாகராஜன், திடும் என்று மூர்த்தியைப் பற்றி வீட்டில் வந்து கூறியதும் பவானிக்குப் பெரிதும் வருத்தம் ஏற்பட்டது. மூர்த்தியின் குணங்களைப் பற்றிப் படிப்படியாக அவள் நினைத்துப் பார்த்தாள். ஒருத்தியை மணந்து கொண்ட பிறகும் மாறாதவன். அன்று அவளிடம் எப்படியெல்லாம் நடந்து கொண்டான்.

”கோவிலுக்கா போகிறீர்கள்?’ என்று அவன் கேட்டுச் சிரித்ததும், தன்னையும் பாலுவையும் தொடர்ந்து டவுன் பஸ்ஸில் அவன் வந்ததும் பிறகு ஒரு நாள் சேஷாத்ரியுடன் அவன் சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசி, அவரிடம் ‘வாங்கிக் கட்டிக்’ கொண்டதையும், கடைசியாக ரயிலடிக்குவந்து தன்னிடம் நயவஞ்சகமாக விலாசம் கேட்டதையும் நினைத்துப் பார்த்து ஆச்சரியம் அடைந்தாள் பவானி.

இப்படிப்பட்டவனிடம் ஓர் அணுவளவு தான் பிசகி நடந்திருந்தாலும், என்னவெல்லாம் நேர்ந்திருக்குமோ என்கிற கலக்கம் அவள் மனத்தில் ஏற்பட்டது . ராதாவிடம் அவளுக்கு அனுதாபம் ஏற்பட்டது. நாடகத்துக்கு அவள் டிக்கட் விற்க வந்தபோது இருந்த நிலைமையை யும் இப்பொழுது இருந்த நிலைமையையும் நினைத்துப் பார்த்து வருந்தினாள் அவள். இதைப்பற்றி அனுதாபத் துடன் அவள் தன் மன்னி கோமதியிடம் கூறியபோது ‘ஆமாம். நீதான் அவளுக்காகக் கரைந்து போகிறாய். நல்ல இடமாக ”டாக்டர் பார்த்துக் கல்யாணம்பண்ணி வைத்திருக்க மாட்டாரா? எத்தனை பிள்ளைகள் கண்ணியமாக, கௌரவமாக இல்லை . அவனுடன் சுற்றி அவள் தன் பெயரைக் கெடுத்துக் கொண்டாள். விஷயம் மிஞ்சிப்போன பிறகு என்ன செய்ய முடியும்? அவனுக்கே கல்யாணத்தைப் பண்ணிவைத்தார். அப்புறமாவது புருஷனைக் கவனித்துக் கொஞ்சமாவது திருத்தி இருக்கலாம். ஒருத்தர் விவகாரங்களில் இன்னொருத்தர் தலையிடக்கூடாது என்கிற நாகரிகம் புருஷன் மனைவி வரையில் பரவி விட்டதாக்கும். ராதா அவன் போகிற வழிக் கெல்லாம் வளைந்து கொடுத்து அவனுக்கு உடந்தையாக அவளும் ஆடி இருக்கிறாள். அவள் அண்ணா கொடுத்த வைர வளையல்களை விற்கிற வரையில் அவளுக்கே தெரியவில்லை பார்!” என்று கோமதி ராதாவின் பேரில் குற்றத்தைச் சுமத்திப் பேசினாள்.

மன்னியின் கடுமையான வார்த்தைகளைக் கேட்ட பவானியின் மனம் ராதாவுக்காக மேலும் இரங்கியது. அவளைத் தனிமையில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்று நினைத்திருந்தாள். அதற்காக அவர்கள் வீட்டுக் குப்போய்ப் பேசுவதும் சிறந்த முறையாகப் பவானிக்குத் தோன்றவில்லை. ஆகவே சில நாட்கள் வரையில் சும்மா இருந்து விட்டாள். இடையில் சுவாமிநாதன் காலமாகி விட்டார் என்கிற செய்தி தெரியவந்தது. டாக்டரின் குடும்பத்தைத் தாங்கிவந்த பெரிய தூண் ஒன்று நிலை பெயர்ந்த மாதிரி இருந்தது அந்தச் செய்தி.

“ராதா, ராதா என்று அவள் மீது உயிராக இருந்தார் அந்த மனிதர். அவள் சுகத்தோடு வாழ்வதை அவர் இருந்து பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை! பாவம்…” என்று நாகராஜனும் கோமதியும் வருந்தினார்கள்.

கோமதி இப்பொழுது நோயாளி அல்ல. தன் குடும்பத்தைத்தானே நிர்வகிக்கும் பொறுப்பு அவளிடம் ஏற்பட்டிருந்தது. அத்தை வராவிட்டால் நீ எப்பொழு தும் படுக்கையில் தான் இருந்திருப்பாய். நாத்திக்குப் பயந்துகொண்டு குடும்ப வேலைகளைக் கவனிக்கவே வலிவும் உற்சாகமும் உனக்கு ஏற்பட்டு விட்டது” என்று கேலி செய்தாள் சுமதி.

”நீ இவ்வளவு கெட்டிக்காரியாக இருப்பதும் உன் அத்தையால் தான். அதை மறந்து விடாதே” என்றாள் கோமதி.

”என் சயன்ஸ் நோட்டுப் புஸ்தகம் எங்கே சுமதி? நீ எடுத்தாயா அதை?” என்று கேட்டுக்கொண்டே வந்தான் பாலு.

“நான் எதற்கப்பா அதையெல்லாம் எடுக்கிறேன்? நீ தானே நேற்று ஜெயஸ்ரீயிடம் கொடுத்தாய்! துரைக்கு மறந்து போச்சு போலிருக்கு. அவ்வளவு மயக்கம் இப் பொழுதிலிருந்தே” என்றாள் சிரித்துக்கொண்டே சுமதி.

பாலு சுமதியைக் கோபத்துடன் பார்த்தான்.

”எங்கே மறுபடியும் என்னைப்பற்றி – குரங்கு மூஞ்சி பாலு’ என்று எழுதியிருப்பாயோ என்கிற சந்தேகம் வந்துவிட்டது!”

பவானி இவர்கள் இருவரும் விளையாட்டாகச் சண்டையிடுவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தவள் திடீரென்று, ‘பாலு! நான் டாக்டர் ஸ்ரீதரனின் வீட்டுக்குப் போகிறேன். அப்படியே உன் நோட்டுப் புஸ்தகத்தை வாங்கி வருகிறேன” என்று கூறிவிட்டுக் கிளம்பினாள்.

அவள் டாக்டர் வீட்டுக்கு வந்ததும் வீடு வெறிச் சென்று கிடந்தது. முன்பிருந்த களையும், அழகும் அந்த வீட்டில் காணப்படவில்லை. கூடத்தில் ஒருவரும் இராமற் போகவே, பவானி இரண்டாங் கட்டுக்குச் சென்றாள்.

அங்கே உட்கார்ந்திருந்த ராதாவைப் பார்த்ததும் அவள் திடுக்கிட்டுப் போனாள். இளமையின் எழிலோடு விளங்கிய அந்தப் பெண் இப்போது நிறம்மாறி இளைத் துப் போய் இருப்பதைப் பார்த்ததும் அவளுக்குத் துயரம் ஏற்பட்டது.

”வாருங்கள். அண்ணா சற்றைக்கெல்லாம் வந்து விடுவார். உங்களுக்குப் பரீட்சை ’பாஸ்’ ஆகிவிட்டதாமே! டாக்டர் காமாட்சி நேற்று வந்திருந்தார். அவர் தான் சொன்னார். மேலே என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டாள் ராதா.

மனதுக்குள் குவிந்து போயிருக்கும் துயரச் சுமையை மறைத்துக்கொண்டு பேசும் ராதாவின் அருகில் உட்கார்ந்தாள் பவானி.

சிறிது நேரம் வரையில் இருவரும் ஒன்றுமே பேச வில்லை. பிறகு பவானியே பேச ஆரம்பித்தாள்.

”சுவாமிநாதன் போன பிறகு உன்னை நான் பார்க்கவே இல்லை. பாவம். நல்ல மனுஷர்….” என்று அனுதாபம் தெரிவித்தாள்.

ராதா மள மளவென்று கண்ணீர் பெருக்கினாள்.

”நல்ல மனிதர் என்பதை நான் அன்றே புரிந்து கொண்டு. அவர் சொன்னபடி கேட்டிருந்தால் என் நிலையே வேறாக இருக்கும். அவரை நான் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. நம்மை வளர்த்த பாசத்தினால் நம்மிடம் அளவுக்கு மீறிய சலுகை காண்பிக்கிறார், வேண்டாத விஷயங்களில் தலையிடுகிறார் என்று நினைத்து அவர் மீது எனக்கு வெறுப்பும் கோபமும் தான் அப்போது உண்டாயிற்று.”

பவானி அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இனிமேல் எனக்கு என்ன கௌரவம் இருக்கிறது? படித்த படிப்பும், மற்றவைகளில் இருந்த சாமர்த்தியமும் வீணாகிப்போன மாதிரிதான். நான் வெளியிலேயே போகிறதில்லை. வெறுமனே வேதாந்த புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.”
பவானி லேசாகச் சிரித்தாள்.

”ராதா, எனக்கு விவரங்கள் யாவும் தெரியும். வெறுமனே வேதாந்தப் புத்தகங்களைப் படித்துவிட் டால் நீயும் நானும் ஞானிகள் ஆகிவிட முடியுமா? ஆசா பாசங்களை லவலேசமும் துறக்க முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். அன்று உன் கணவன் வைர வளை யல்களை விற்றதும் நீ வெகுண்டு அழுதாயாம், ‘என்னுடைய பிறந்த வீட்டாரால் கொடுக்கப்பட்ட நகை ஆயிற்றே’ என்றாயாம். உன்னுடையது என்கிற அகங்காரம் உன்னை விட்டு மறையாமல் இருக்கும்போது வேதாந்த புத்தகங்களைப் படித்துவிட்டால் மட்டும் மனத்திலே தெளிவு வந்து விடுமா? எல்லோரும் ஞானிகளாகவும், வேதாந்திகளாகவும் மாறிவிடுவது அவ்வளவு எளிதல்ல. கூடுமானவரையில் உலகத்தோடு ஒட்டிய வாழ்க்கையைத்தான் நாம் வாழ முடியும்…”

பவானி தன்னைப்பற்றிய விவரங்கள் யாவும் அறிந் திருக்கிறாள் என்பதை உணர்ந்ததும் ராதாவுக்கு வெட்கமும் துயரமும் ஏற்பட்டன.

ராதா மனத்துக்குள் வருந்துகிறாள் என்பது தெரிந் ததும் பவானி பேச்சை வேறு வழிகளில் மாற்றினாள்.

2.37.மகிழ்ச்சி வெள்ளம்

பவானி அன்று ஸ்ரீதரனைச் சந்திக்க முடியாமல், வீட்டுக்குப் புறப்பட்டாள். அவள் அங்கு வந்திருந்த சிலமணி நேரங்கள் ராதாவுக்கு எவ்வளவோ நிம்மதியையும் இன்பத்தையும் அளித்தன! வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே தோல்வியைக் கண்ட பவானி, அந்தத்தோல்வியை உதறித் தள்ளி மிதித்து. வெற்றிப் பாதையில் போவதைக் கண்ட ராதாவின் உள்ளம் பவானியைப் பற்றி உயர்வாக மதிப்பிட்டது.

மாலையில் வீடு திரும்பிய ஸ்ரீதரனிடம் ராதா பவானி வந்து போனதை அறிவித்தாள். “வந்தவளை நான் வரும் வரை இருக்கச் சொல்லக்கூடாதா? முக்கியமான ஒரு விஷயம் பற்றிப் பேச அவர்கள் வீட்டுக்கே நான் செல்ல இருந்தேன்…” என்றார் ஸ்ரீதரன்.

”என்ன அண்ணா” என்று கேட்டாள் ராதா.

”முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பசுமலையில் காச நோய் வைத்தியசாலை-யொன்று கட்டி முடித்து, சமீபத்தில் நமது பிரதம மந்திரி ஆரம்பித்து வைத்தார். அதில் கூடிய விரைவில் பவானி நர்ஸாகப் பணி புரியச் செல்ல வேண்டி இருக்கும் என்று என் நண்பர் ஒருவர் கூறினார்.”

”மறுபடியும் பவானி பசுமலைக்குப் போக விரும்புவாளா அண்ணா ? அவள் நெஞ்சில் ஆறாத கனலை மூட்டி விட்ட ஊர் அல்லவா அது?”

ஸ்ரீதரன் சிரித்தார். “ராதா! இங்கே தான் நீ பவானியைத் தவறாக மதிப்பிட்டிருக்கிறாய். நீறு பூத்த நெருப்பு மாதிரி, அவள் தன் துயரங்களைப் பல வருஷங்களுக்கு முன்பே மனத்தின் அடித்தளத்தில் புதைத்து விட்டாள். அதை ஊதி எரியச் செய்ய மாட்டாள் அவள். நடந்து போன துயரங்களைப் பற்றி நினைப்பதும் அதை பற்றியே பேசுவதும் மனத்தை எவ்வளவு தூரம் கெடுத்து விடுகிறது என்பது உனக்குத் தெரியாது. பவானி தன் துயரங்களுக்கு ஓர் உருவம் கொடுக்க முயற்சிக்க வில்லை’ ‘ என்றார். ராதாவுக்குப் பவானியைப் பற்றிய செய்திகள் யாவுமே வியப்பை அளித்தன.

அதன் பிறகு பவானி ஊருக்குக் கிளம்புவதற்கு முன்பாக அவளுக்கு அவர்கள் வீட்டில் விருந்தளிக்க வேண்டும் என்று அண்ணனும் தங்கையும் தீர்மானித்தார்கள்.

பவானி, பசுமலைக்குச் செல்ல வேண்டும் என்கிற செய்தியை நாகராஜன் வீட்டில் யாருமே வரவேற்க வில்லை.

சர்க்கார் உத்தரவைப் பவானி நாகராஜனிடம் காண்பித்ததும் அவன் பெரிய குரலில், “கோமதி இங்கே வாயேன். நீயும் மூட்டை முடிச்சுகளைக் கட்டு” என்று அழைத்துக் கூறினான்.

”எதற்கு? எங்கே போவதற்கு என்று சொல்ல வில்லையே? இனிமேல் துரை மிஸஸ் இல்லாமல் வெளியே கிளம்பமாட்டீர்களோ?” என்று கேலி செய்தாள்.

”உன் நாத்தனார் ஊருக்குக் கிளம்புகிறாளாம். அவள் இல்லாமல் நீ இந்த வீட்டில் இருந்தால் தலை சுற்றல், மயக்கம், அஜீரணம் எல்லாம் உனக்கு வந்து விடுமே! அப்பா! உன்னோடும், உன் வியாதிகளோடும் மருந்துப் பட்டியல்களோடும் நான் பட்டபாடு எனக்கல்லவா தெரியும்?” என்று சொல்லிப் பெரிதாகச் சிரித்தான். ”என்ன அண்ணா இது? என்னால் தான் உலகமே நடக்கிற மாதிரி நீ பேசுகிறாய்?” என்று கேட்டாள் பவானி சிரித்துக் கொண்டே.

“மாமா. அம்மா பசுமலைக்குப் போனாலும், நான் இங்கேதான் இருந்தாக வேண்டும். இந்த ஊரில் விசிறிகளுக்கெல்லாம் காம்புகள் நீளம்’ ‘ என்று கூறியவாறே பாலு தன் முதுகைத் தடவிக் கொண்டான்.

”இது ஒரு நொண்டிச் சாக்கு இவனுக்கு. நீ சென்னையை விட்டுப் போகமாட்டாய் அப்பா. தினம் ஜெயஸ்ரீயை காலேஜ் பஸ்ஸில் ஏற்றிவிட்டுத்தான் நீ காலேஜுக்குப் போகிறாயாமே?….’ ‘சுமதி சமயம் பார்த்து குட்டை உடைத்து விட்டாள்.

என்ன பேசுவது என்று புரிமாமல் பாலு திகைத்தான். அங்கிருந்த பெரியவர்கள் யாவரும் அர்த்த புஷ்டியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பவானியின் உள்ளத்திலே மகிழ்ச்சி வெள்ளம் அலைமோதியது.

அச்சமயம் தோட்டக்கார கோபாலன் டாக்டர் ஸ்ரீதரனும் ஜெயஸ்ரீயும் வந்திருப்பதை அறிவித்தான்.

டாக்டரைக் கண்ட பவானி தன் இரு கைகளையும் கூப்பி வணங்கினாள்.

”நாகராஜன் நீங்கள் அதிர்ஷ்டசாலி , உங்கள் தங்கைக்கு ஆரம்பத்திலேயே நல்ல சான்ஸ் கிடைத்து விட்டது. பலர் பணிபுரியும் ஓர் ஆஸ்பத்திரியில் ஒருவர் எவ்வளவுதான் திறமையாகச் சேவை செய்தாலும் அவர்களுடைய திறமை வெளிப்பட நாளாகும். ஒரு குடும்பத்தில் இருக்கும் மருமகள் எவ்வளவு தான் குடும்ப நிர்வாகத்தில் திறமைசாலியாக இருந்தாலும், அங்கிருக்கும் மாமியார். நாத்திகள். ஓரகத்திகள் இவர்களை மீறி அவள் திறமை வெளியாகப் பல வருஷங்கள் ஆகும்.

“அதே மருமகள் தனிக்குடித்தனம் நடத்தினால் சில மாதங்களில் அவளுடைய சாமர்த்தியத்தை மாமியாரே மெச்சுவாள். பசுமலை ஆஸ்பத்திரியில் தற்சமயம் அதிகமான நர்ஸ்கள் கிடையாது. அங்கிருப்பவர்களுக்குப் பவானி தலைவியாகப் போகிறாள். என்ன அம்மா பவானி? நீங்கள் ஒன்றுமே பேசவில்லை?” , என்று கேட்டார் ஸ்ரீதரன்.

எப்பொழுதுமே படபடவென்று பேசத் தெரியாத பவானி மிகவும் விநயமாக, ”உங்களுக்கு எல்லாம் தெரியும். நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது?” என்று கூறினாள்,

டாக்டர் ஸ்ரீதரன் அவளையும் மற்றவர்களையும் அடுத்த நாள் தமது வீட்டில் நடக்கும் விருந்துக்கு வரும்படி அழைத்தார். ”ஜெயஸ்ரீ! சுமதியை நீயே கூப்பிட்டு விடு அம்மா!’ ‘ என்றார் ஸ்ரீதரன் வீட்டுக்குக் கிளம்பும் போது.

சுமதி அவசரமாக அவர் எதிரில் வந்து நின்றாள். பிறகு கணீரென்ற குரலில். ”டாக்டர் மாமா! அவள் என்னை அழைக்க இங்கே வரவில்லை” என்றாள்.

அங்கு நின்றிருந்தவர்கள் மனத்தில் பலவித குழப்பங்கள் ஏற்பட்டன. எல்லோரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீதரனும் அவளை வியப்புடன் பார்த்தார்.

”அவள்…. வந்து… அவள்… பாலுவை பர்ஸனலாக அழைக்க வந்திருக்கிறாள்!” என்று கூறி விட்டு ஓட்டமாக மாடிப்படிகளில் ஏறிச் சென்றுவிட்டாள் சுமதி.

கன்னம் சிவக்க, உதடுகள் துடிக்க, கண்கள் மருள ஜெயஸ்ரீ தன் தந்தையை ஏறிட்டுப் பார்த்தாள் .டாக்டர் ஸ்ரீதரன் ஆசையுடன் தம் மகளை அணைத்தவாறு காருக்குள் சென்று உட்கார்ந்தார்.

அவர் மனம் காதலைப் பற்றி தீவிரமாக நினைக்க ஆரம்பித்தது. இப்படித்தான் ஒரு நாள் ராதாவும் – மூர்த்தியைக் காதலிப்பதாகச் சொன்னாள். அந்தக் காதல் எப்பொழுது. எந்த இடத்தில், எந்தச் சமயத்தில் உதயமாகிறது என்பதை யாராலும் கண்டு பிடிக்க முடி யாது போலும் என்று நகைத்தார் அவர். ‘தகாத இடத் தில் ஒரு ஜோடிக்கு முடிச்சுப்போட்டு வேடிக்கை பார்ப் பதில் பிரும்மாவுக்கு ஆசை. தகுந்த இடத்தில் காதலை வளர்த்துப் பிரித்து வைப்பதில் அவனுக்கு ஓர் ஆனந்தம். காதல் பாதையிலே வெற்றி கண்டவர்கள் அபூர்வம். ரோமியோவும். ஜுலியட்டும். சகுந்தலையும் துஷ்யந்த னும், லைலாவும் கயஸும் அந்தப் பாதையின் கரடுமுரடு களை அனுபவித்து வெற்றியையும் கண்டவர்கள். ராதா முதலில் வெற்றியைக் காணவில்லை. தோல்வியைத்தான் கண்டிருக்கிறாள். ஜெயஸ்ரீ எப்படியோ?’ என்று நினைத் துக் கொண்டே காரைச் செலுத்திக் கொண்டு வந்தார்.

பேசாமல் திகைத்துப் போய் அருகில் உட்கார்ந்திருக்கும் தமது மகளைப் பார்த்து, ‘அம்மா! ஜெயஸ்ரீ! பாலுவை உனக்குப் பிடித்திருக்கிறதா? அவன் படிப்பு முடிய இன்னும் இரண்டு வருஷங்கள் பாக்கி இருக்கின் றதே. அதன் பிறகு உங்கள் கல்யாணத்தை முடித்து விடலாம் என்று இருக்கிறேன்” என்றார்.

ஜெயஸ்ரீ பதில் ஒன்றும் கூறவில்லை. மிகுந்த நாணத் துடன் தன் புடவைத் தலைப்பை முறுக்கியபடி உட்கார்ந் திருந்தாள்.

இப்படித்தான் ஸ்ரீதரனின் மனைவி பத்மா முதலில் அவருடன் பேசவும் தயங்கித் தலை குனிந்து நின்றிருந் தாள் . அவர் மனம் பல வருஷங்களுக்கு முன்பு அவருடன் பழகிய மனைவியை மனக்கண் முன்பு கொண்டு வந்து நிறுத்தியது. அந்த நிகழ்ச்சி, அந்த நாள், யாவுமே அவர் மனத்துள் பதிந்து போன அழியா ஓவியமாகத் திகழ்ந்தது.

2.38.கல்யாணப் பேச்சு

நிலவின் அமுத வெள்ளத்தில் மூழ்கியிருந்த தோட்டத்தில் விருந்து நடைபெற்றது. அங்கங்கே வர்ணவிளக்குகள் சுடர் விட்டன. ஆனால் கூட்டம் – அதாவது விருந்தினர்கள் – அதிகம் இல்லை. பவானியுடன் படித்தவர்கள் டாக்டர் காமாட்சி. இன்னும் சில முக்கியமான நண்பர்கள் மட்டுமே வந்திருந்தனர். ராதாதான் பெண்களை வரவேற்க நின்றிருந்தாள். உள்ளத்தில் கொண்டிருந்த துயரத் தீயை அணைக்க முயன்று கொண்டிருந்தாள் என்றும் சொல்லலாம். அந்தப் பெண் ஊராருக்குப் பயந்து கொண்டு சில மாதங்கள் வெளியில் எங்குமே போகாமலிருந்தாள். படிப்படியாக அவள் மனம் மாற ஆரம்பித்தது. அவள் அப்படி வீட்டோடு அடைபட்டுக் கிடப்பதால், மூர்த்தியின் தரம் சமூகத்தின் கண்களில் உயர்ந்து காணப்படாது என்கிற உண்மையை ராதா புரிந்து கொண்டாள். அவன் புரிந்த குற்றங்கள் எல்லோருக்கும் தெரியும். இனி தான் மட்டும் வீட்டி னுள் பதுங்கிக் கிடப்பதில் என்ன லாபம் என்று தீர்மானித்து ராதா அவ்வப் போது வெளியில் போய் வர ஆரம்பித்தாள். பவானிக்காக விருந்து நடப்பதை எண்ணி ராதா அகமலர்ச்சியுடன் அதில் கலந்து கொண்டாள்.

விருந்து அமர்க்களமாக நடந்தது. பவானிக்கு இவை யாவுமே புதுமையாக இருந்தன. சங்கோஜத்தினால் அவள் குன்றிப் போனாள்.

கூட்டத்தைப் பார்த்துப் பிரமித்து உட்கார்ந்திருந்த அவள் அருகில் காமாட்சி வந்தாள். அன்புடன் அருகில் உட்கார்ந்து, ‘பவானி! நீங்களும் டாக்டரும் சம்பந்திகள் ஆகப் போகிறீர்களாமே?” என்று விசாரித்தாள்.

”ஆமாம் டாக்டர். எனக்கு நேற்று வரையில் ஒன்று தெரியாது! நேற்று ராத்திரி அண்ணா வெளியே போய்விட்டு வந்ததும், விஷயத்தை என்னிடம் சொன்னார்” என்றாள் பவானி.

பெண்மணிகள் இருவர் முகத்திலும் சந்தோஷம் நியாபியிருந்தது. விருந்து முடிந்ததும், முக்கியஸ்தர்கள் வீட்டாரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றார்கள். மிஞ்சியிருந்தவர்கள் மிகச் சிலரே. தோட்டத்தில் ஒரு கல் பெஞ்சியில் நான்கைந்து பேர்கள் உட்கார்ந்தார்கள். நாகராஜன் அருகில் கிடந்த மேஜை இருந்த வெற்றிலைத் தட்டிலிருந்து ’பீடா’ ஒன்றை வாயில் போட்டுக் கொண்டான். அவன் பீடாவை கையில் எடுத்ததும் டாக்டர் காமாட்சி அவனைப் பாடத்துச் சிரித்தாள்.

”மிஸ்டர் நாகராஜன்! நீங்கள் இத்துடன் ஆறு தடவைகள் பீடாவை மென்று விட்டீர்கள்” என்றாள்.

”எப்படி அவ்வளவு கணக்காகச் சொல்லுகிறீர்கள்?” என்று ஸ்ரீதரன் கேட்டார்.

”இங்கு இருக்கும் ஒவ்வொருவரையும் நான் கவனித்து வருகிறேன். பவானி இந்த விருந்தில் சரியாகவே சாப்பிடவில்லை. ராதா இலையில் உட்கார்ந்ததைப் பார்த்தேன். மறுபடியும் திரும்பிப் பார்ப்பதற்குள் அவள் கை அலம்பிக் கொண்டு வந்து விட்டாள். நாகராஜ்ன் வெறுமனே பீடாவை மென்றே வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கிறார். ஜெயஸ்ரீதான் கல்யாணப் பெண் ஆயிற்றே! அவளுக்குச் சாப்பாட்டின் மீது நினைவே இல்லை. கோமதிக்கு எதிலுமே மனம் செல்லவில்லை. நாத்தி ஊருக்குப் போவதைப் பற்றிக் கவலையில் மூழ்கி இருக்கிறாள்” என்றாள் காமாட்சி.

பவானி ஊருக்குப் போவதைப் பற்றி கோமதி ஒருத்திக்கு மட்டும் துயரம் ஏற்பட வில்லை. எல்லாருமே மனம் வருந்தினர்.

கடைசியாக பவானி, டாக்டர் ஸ்ரீதரனிடம் தான் ஊருக்குப் போய் வருவதாக அறிவித்துக் கொண்டாள்.

ஸ்ரீதரன் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தார். ஒரு விநாடிக்குள் அவர் தன்னைச் சுற்றி இருப்பவர்களை மறந்தார். ஆழ்கடலுக்குள்ளே முழுகி எழுந்து முத்துக் குளிப்பவன் கையில் பலரகச் சிப்பிகள் கிடைக்கின்றன. அவற்றிலே ஒரு சிப்பிக்குள்ளிருந்து அழகிய முத்தைக் கண்டு பிடிக்கிறார்கள். அப்புறம் அந்த முத்து சமூகத்திலே ஓர் உயர்ந்த ஸ்தானத்தை அடைகிறது. சமூகத்தில் கணவனை இழந்தவர்கள், கணவனால் புறக்கணிக்கப்பட்டவர்கள், வாழ வகை தெரியாத வர்கள், வாழ்க்கைச் சூதில் தம்மையே சூதாட்டக் காய் களாக வைத்து இழந்தவர்கள் என்று எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களும் இந்த உலகத்தில் வாழ வேண்டியவர்கள் தாம்.

அவர்களுக்கு உலக வாழ்வு இருண்டு போகாமல் இருக்க அநேக உழைப்பாளிகள் தேவை. அந்தத் தொண்டர்களின் உள்ளம் மாசு மருவற்று இருக்க வேண்டும். தன்னுடையது என்கிற பற்று நீங்க வேண் டும். அவளுடைய கண்ணீரைத் துடைக்க அவர்கள் உள்ளம் பண்பட்டிருக்க வேண்டும். நோயிலும் துன்பத் திலும் இன்னல்களிலும் பங்கெடுத்துக்கொண்டு ஆற்றும் பணியே கடவுள் பணி என்னும் உண்மையை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அத்தகைய பல நல்முத்துக்களை இந்தப் பாரத நாடு ஈன்றிருக் கிறது. அவர்கள் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளாமல் ஆழ் கடலின் கீழ் ஒளிந்து வாழும் முத்துச் சிப்பிகளைப் போல மறைந்து கிடக்கிறார்கள். அவர்களில் ஒரு முத்துச்சிப்பியைத் தான் ஸ்ரீதரன் கண்டெடுத்து உலகப் பணிக்கு அர்ப்பணிக்க முன் வந்தார்.

அந்த ஆனந்தத்தில் லயித்து அவர் தம்மையே மறந்திருந்தார்.

”டாக்டர்! நாளைக்கு நான் பசுமலைக்குக் கிளம்புறேன்…” பவானி உள்ளம் நெகிழ மறுபடியும் டாக்டரிடம் பேசினாள்.

”போய் வருகிறீர்களா? சற்று முன் நீங்கள் என்னிடம் சொல்லிக்கொண்டபோது நான் ஏதோ யோசனையில் மூழ்கி இருந்தேன்” என்றார் அவர்.

ராதா அவர் அருகில் வந்து நின்றாள்.

“அண்ணா ! நானும் பவானியுடன் பசுமலைக்குப் போகிறேன். சில வருஷங்கள் அங்கே இருக்கிறேன்” என்றாள்.

“ஏன் அப்படி?” என்று கேட்டார் அவர்.

“இல்லை அண்ணா ! அவர் இல்லாமல் இந்த வீட்டில் எனக்கு இருக்கப் பிடிக்கவில்லை. சில காலம் நான் என்னை மறந்து இருக்க ஆசைப்படுகிறேன்.”

ஸ்ரீதரன் அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. விருந்தினர் யாவரும் தத்தம் வீடுகளுக்குச் சென்று விட்டார்கள். ஸ்ரீதரனும் ராதாவும் அன்று இரவு வெகு நேரம் வரை தூங்கவில்லை. பவானியின் சிறப்பான குணங்களைப்பற்றி அவர் தம் தங்கையிடம் கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்.

“ராதா அவளை என் மனம் ஓர் உயர்ந்த முத்துக்கு ஒப்பிட்டுப் பார்க்கிறது. இத்தகைய நற்குணங்கள் நிரம்பிய பெண்மணிகள் எத்தனை பேர் நம் சமூகத்தில் இருக்கிறார்கள் தெரியுமா?” என்று சிலாகித்துப் பேசினார் அவர்.

ராதா வாய் திறவாமல் அவர் கூறுவதையே கேட்டுக் கொண்டிருந்தாள்.

2.39.முத்துச்சிப்பி

ரயிலில் பவானியும், ராதாவும் உட்கார்ந்திருந்தார்கள். நானும் மதுரை செல்வதற்காக அன்று அதே ரயிலில் பிரயாணப்பட்டேன். எழும்பூர் ரயில் நிலையத்தில் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் ஒரு சிறு கூட்டம் என் பெட்டியின் அருகில் வந்து நின்றது. தூய வெள்ளை ஆடை உடுத்திய இரு பெண்கள் வண்டியில் ஏறிக்கொண்டார்கள். நடுத்தர வயதை உடைய ஒருத்தி மங்கலத்தை இழந்தவள் என்பதை அவள் நெற்றியே எனக்குக் காட்டி விட்டது. இன்னொருத்தி இளம் பெண்: வந்திருந்த கூட்டம் குதூகலமாகச் சிரித்து அவர் களுடன் பேசியது . சுருண்ட கேசமும் அகன்ற விழிகளும் உடைய வாலிபன் ஒருவன் நடுத்தர வயதினனான பெண் மணியிடம், “அம்மா அடிக்கடி கடிதம் போடு” என்று கேட்டுக் கொண்டான்.

”அத்தை ! திரும்பவும் நீங்கள் சமீபத்தில் இங்கு வராவிட்டால், நான் பசுமலைக்கே வந்து விடுவேன்” என்று ஒரு பெண் பயமுறுத்தினாள்.

”பவானி! கல்யாணராமனையும், பார்வதியையும் நாங்கள் மிகவும் விசாரித்ததாகச் சொல் அம்மா” என்று தம்பதி இருவர் கேட்டுக் கொண்டனர். டாக்டரைப் போல் தோற்றமளித்த பெண்மணி ஒருத்தி. பவானி யிடம் ஒரு புத்தகத்தை அளித்தாள். ‘ஆசிய ஜோதி’ என்னும் தலைப்பு புத்தகத்தின் மீது அழகாக அச்சிடப் பட்டிருந்தது. அவள் இடுப்பில் இருந்த இரண்டு வயதுப் பெண் குழந்தை, உலகத்தின் இன்பங்களை-யெல்லாம் தன் பொக்கை வாய்ச் சிரிப்பால் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

சென்னையில் பிரபல டாக்டரான ஸ்ரீதரன் தம் மகளுடன் காரிலேயே ரயில் நிலையத்துக்குள் அவசரமாக வந்தார்.

“என்ன அம்மா ! நீங்கள் எந்த மட்டும்?” என்று அன்னை விசாரித்தார்.

”மதுரைக்குப் போகிறேன்…” என்றேன்.

”அப்போது உங்களுக்குப் பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்து விட்டது” என்றார் அவர். வண்டிக்குள் உட்கார்ந்திருந்த இரு பெண்களையும் பார்த்து.

”இவள் உங்கள் பெண் ஜெயஸ்ரீதானே? பார்த்து நாள் ஆயிற்று.”

”ஆமாம், பெரியவளாக வளர்ந்து விட்டாள். கல்யாணம் பண்ணிவிட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் …”

“அப்படியா? மிகவும் சந்தோஷம். வரன் தகைந்து விட்டதா?” என்றேன்.

”அநேகமாகத் தகைந்த மாதிரிதான்” என்று கூறி விட்டு .. போலு! இங்கே வா” என்று அழைத்தார் அவர்.

சுருண்ட கேசத்தையுடைய அந்த அழகிய வாலிபன் பெட்டிக்குள் வந்தான்.

“இவன் தான் அம்மா எனக்கு வரப்போகும் மருமகன். அந்த அம்மாள் தான் இவன் தாய். அந்தப் பெண் என் தங்கை” என்று அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார் டாக்டர்.

ரயில் கிளம்புவதற்கு அறிகுறியாக கார்டு பச்சைக் கொடியை உயர்த்திப் பிடித்து ஆட்டினார். வெளியே நின்றிருந்தவர்களின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந் தது. பவானி தன் கைகள் இரண்டையும் கூப்பி அனைவ ரிடமும் விடைபெற்றுக் கொண்டிருந்தாள்.

ரயில் வேகமாக நகரத் தொடங்கியது. மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை என்று ஊர்கள் நகர்ந்து கொண்டே வந்தன. தாம்பரத்தையும் தாண்டி ரயில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது.

என் எதிரில் உட்கார்ந்திருந்த பவானி என்னைப் பார்த்து “ஏதாவது பள்ளிக்கூடத்தில் வேலையாக இருக்கிறீர்களா? கையில் ஏகப்பட்ட காகிதங்களை வைத்துக் கொண்டிருக்கிறீர்களே! பரீட்சை விடைத்தாள்களா அவை?” என்று கேட்டாள்.

நான் லேசாகச் சிரித்தேன்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. ஏதாவது இப்படி மனசில் தோன்றுவதை எழுதப் பார்க்கிறேன்” என்றேன்.

பவானி சிறிது நேரம் ஏதோ யோசித்தாள். பிறகு அவன் அருகில் வந்து உட்கார்ந்து, அம்மா! எனக்குத் தெரிந்த ஓர் அனுபவத்தைக் கூறுகிறேன். எழுதிப் பாருங்கள்” என்றாள்.

பவானியை முந்திக்கொண்டு அந்த இளம் பெண் ராதா கதை சொல்ல ஆரம்பித்தாள். கதை வளர்ந்து கொண்டே வந்தது. இருவரும் மாறிமாறிக் கூறினார்கள்.

பசுமலையின் அழகிய கோபுரம் என் கண் முன்னே தெரிந்தது.

சீறி எழுந்து அலைமோதும் கடலுக்குள் பாய்ந்து சென்ற ஒருவன் கடலின் அடித்தளத்தில் துழாவித் துருவிக் கண்டு பிடித்தான் ஒரு முத்துச் சிப்பியை. முத்தை வெளியில் எடுத்தான். பசுமையும் நீலமும் வெண்மையும் கலந்த அந்த முத்துக்குத்தான் எவ்வளவு ஒளி? அதைப் பத்திரமாகக் கையில் எடுத்துக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்தான் அவன்.

குருக்கள் கர்ப்பூரம் காட்டிக்கொண்டிருந்தார் இறைவனுக்கு. தகதகவென்று அவன் அளித்த முத்து இறைவனின் நெற்றியில் துலங்கிக் கொண்டிருந்தது. கடலின் ஆழத்தில் ஒளிந்திருந்து அது செய்த தவம் அன்று பலித்தது.

பொழுது விடிந்தது. சொக்கநாதர்- மீனாட்சியின் ஆலயம் தெரிந்தது.

பவானியும், ராதாவும் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.இளம்பரிதியில் பவானியின் முகம் முத்தைப் பாலப் பிரகாசித்தது.

கற்பனையில் நான் கண்ட முத்துச் சிப்பி முழு பருவத்துடன் என் முன் துயின்று கொண்டிருந்தாள்

(முற்றும்)

– முத்துச் சிப்பி (நாவல்), முதற் பதிப்பு: அக்டோபர் 1986, சமுதாயம் பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *